கனடிய
தேசிய ஊடகங்களில் இலங்கை வெள்ள அனர்த்தம் குறித்து ஏதும் தகவல்கள் வந்தனவா
என்று துழாவிக் கொண்டிருந்தேன். தென்கிழக்காசியா நாடுகளைப் பதம் பார்த்து
அழிவுகளை செய்த புயல் இப்போது இலங்கையைக் கடந்து கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே நூறுக்கு மேற்பட்ட மக்கள் இலங்கையில் இறந்துவிட்டனர் என செய்திகள்
வருகின்றன. மிகுந்த துயரமான காலம்!
மழையோ, புயலோ எது வந்தாலும் உடனே பாதிப்புறும் இடங்களாக இலங்கையில் மலையகமும், தென்னிந்தியாவில் கேரளாவும் இருப்பதை பல பொழுதுகளில் கண்டிருக்கின்றேன். இரண்டுமே எனக்கு மிக நெருக்கமான இடங்கள்.
இவ்வாறான சோர்வான காலங்களில் மனது எதையாவது நம்பிக்கையை கொழுகொம்பாகப் பற்றிக் கொள்ள அவாவும். அப்படி தற்செயலாக ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் 3,599 நூல்களை வாசித்திருக்கின்றார் என்கின்ற ஒரு செய்தியை வாசித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்த டான் (Dan Pelzer), அண்மையில்தான் தனது 92 வயதில் காலமாகியிருக்கின்றார். ஒரு சமாதான (?) நடவடிக்கைக்காக நேபாளத்திற்கு 1962இற்கு சென்றபோது வாசிக்கத் தொடங்கிய புத்தகங்களிலிருந்து கிட்டத்தட்ட 60 வருடங்களாக அவர் வாசித்த புத்தகங்கள் ஒவ்வொன்றின் பெயரையும் எழுதி வைத்திருக்கின்றார்.
நல்லவேளையாக அவர் வாசகராக மட்டும் இருந்திருக்கின்றார். எழுத்தாளராக ஆகவேண்டும் என்று முயலவேயில்லை. இல்லையெனில் நம்மிடையே இருக்கும் சிலரைப் போல தொடக்கத்தில் கொஞ்சப் புத்தகங்களை மட்டும் வாசித்துவிட்டு, எழுத்தாளராகி எமது தலையில் தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று சம்பல் அரைத்திருப்பார். அந்தத் தவறெல்லாம் இந்த நல்வாசகரான டான் செய்யவில்லை. அது அவரது நல்லூழ்.
சில மாதங்களுக்கு முன்னர்தான் இவர் காலமாகியிருக்கின்றார். அவரின் மகளுக்கே 20 வருடங்களுக்கு முன்னர்தான் தனது தகப்பன் இப்படி வாசித்த புத்தகங்களின் பட்டியலை அவரின் கையெழுத்தில் எழுதி வைத்திருக்கின்றார் என்பது தெரிந்திருக்கின்றது. இந்த வாசகர் இந்தப் பட்டியலை வேறு எவருக்கும் காட்டவேண்டும் என்றோ அல்லது இவ்வளவு நூல்களை வாசித்திருக்கின்றேனோ என்பதற்காகவோ தயாரிக்கவில்லை. அவருடைய தனிப்பட்ட விருப்புக்காக தான் வாசித்த நூல்களைப் பட்டியலிட்டு வைத்திருக்கின்றார்.
கவனிக்கவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், டான் தான் எழுதி வைத்திருக்கும் நூல்களின் பட்டியலில் உள்ள நூல்களை முழுமையாக வாசித்திருக்கின்றார் என்பதாகும் . நமது சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி, 'எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றியும் நான் எழுதுவதில்லை' என்று சொன்னதுபோல, டானும் அவர் வாசித்து முடிக்காத நூல்கள் பற்றிய பெயர்களை தனது பட்டியலில் சேர்த்தவர் இல்லை எனலாம். டானின் பட்டியலில் 1962 இல் முதல் வாசித்த முதல் நாவல் The Blue Nile ஆக இருக்கின்றது, இறுதி நாவலாக 2023 இல் வாசித்தது சார்ள்ஸ் டிக்கன்ஸின் David Copperfield.
*
தமது தகப்பனின் மரண வீட்டின்போது, இந்தப் பட்டியலை அந்நிகழ்வுக்கு வருகின்றவர்களுக்கு கொடுக்கலாம் என்று பிள்ளைகள் விரும்பியபோது அந்த நூல்களின் பட்டியலே நூறு பக்கங்களுக்கு மேல் வருவதால், அப்படி கொடுக்க முடியாது, தந்தை வாசித்த நூல்களின் பட்டியலை அனைவரும் வாசிக்கும்படி இணையத்தில் பிரசுரித்திருக்கின்றனர்.
இவ்வளவு நூல்களை ஒருவர் வாசித்திருக்கின்றாரா என்று பலர் வியந்து டானின் பிள்ளைகளுக்கு நிறைய மின்னஞ்சல்/தொலைபேசிகள் பேசியிருக்கின்றனர். டான் அடிக்கடி செல்லும் நூலகம் அவருக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி டான் வாசித்த நூல்களின் பட்டியலைக் கொடுத்து, அந்த நூல்களுக்கான இணைப்புக்களையும், அந்த புத்தகங்களுக்கான சிறியதான நூல் சுருக்கத்தையும் கொடுத்திருக்கின்றனர்.
அது மட்டுமில்லை நூலகத்தில் வருபவர் கண்ணுக்கு முன்னே தெரிவதற்காக, 'டான் வாசித்த நூல்கள்' என்றொரு நூலக அடுக்கையும் வைத்து மூவாயிரம் நூல்களை வாசித்த டானைப் பெருமைப்படுத்தியிருக்கின்றனர். . மேலும் இப்போது பல அமெரிக்கன் நூலகங்களில் டானின் பெயரோடு அவர் வாசித்த நூல்கள் காட்சிப்படுத்துமளவுக்கு டானின் வாசிப்பு பிரபல்யமாகிவிட்டது. பல தொலைக்காட்சி நிறுவனங்கள் அவரின் புத்தக வாசிப்பைப் பற்றி சிலாகித்துப் பேசத் தொடங்கியிருக்கின்றன.
டான், அவரின் இயல்பு வாழ்க்கையில் எப்படி இருப்பார் என்று அவரின் மகளிடம் கேட்டபோது, அவர் வேலை இடைவெளிகளின்போதும், பஸ்சில் பயணிக்கும்போதும் வாசிப்பவர் என்று அறிந்திருக்கின்றனர். பின்னர் அவர் வேலையில் இருந்து ஓய்வுபெற்றபோது, ஒவ்வொரு நாளும் எப்படியாயினும் நூறு பக்கங்களை வாசிக்காமல் தூங்கப் போகமாட்டார் என்று கூறியிருக்கின்றார்.
ஒருவர் தன் வாழ்க்கைக்காலத்தில் 3,500 இற்கு மேற்பட்ட நூல்களை வாசிப்பது என்பது எளிதல்ல. அதிலும் டான், ஜேம்ஸ் ஜாய்ஸின் 'யுலிஸிஸ்' உட்பட பல பெரும் புத்தகங்களை வாசித்திருக்கின்றார். டானுக்கு எத்தகைய புத்தகங்கள்/எழுத்தாளர்கள் மீது விருப்பமிருந்தது என்று கேட்கப்படும்போது, அடுத்த பக்கத்தில் என்ன இருக்கின்றது என்று சுவாரசியமாக பக்கங்களைப் புரட்ட வைக்கும் நூல்களே அவருக்கு அதிகம் பிடித்தது என்று சொல்லியிருக்கின்றார். ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸிஸை வாசித்து முடித்தாலும் அதற்காக கடும் உழைப்பு தேவையாக இருந்தது என்று டான் மகளிடம் கூறியிருக்கின்றார்.
இவ்வளவு புத்தகங்களை டான் வாசித்தவர் என்பதை விட, எனக்கு அவர் தன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தவர் என்பதை அறிய ஆவலாக இருந்தது. ஏனெனில் எங்களில் பலருக்கு எத்தனை புத்தகங்களை வாசித்தாலும் 'அறிவு' வளர்வதில்லை. டான் ஒரு அமைதியானவராக, புத்தகங்களை மேற்கோள் காட்டி பேசுபவராக/மற்றவர்களையும் புத்தகங்களை வாசிக்க உற்சாகமூட்டுபவராக, இவையெல்லாவற்றையும் விட பிறரின் மீது சகிப்புத்தன்மையுடையவராகவும், ஆன்மீகத்தில் (கிறிஸ்தவம்) ஆர்வமுள்ளவராகவும் இருந்ததாக மகள் சொல்வதே எனக்கு முக்கியமானதாகத் தெரிந்தது. இப்படி புத்தகங்களை டான் வாசித்ததால் அவர் தன்னியல்பிலே நல்லதொரு உரையாடல்காரராக, பிறரை தன் வசம் பேச்சில் கவரக்கூடியவராக இருந்தார் எனவும் பிள்ளைகள் சொல்கின்றனர்.
டானின் மனைவி இறப்பதற்கு முன்னர், மூன்று வருடங்கள் வயதானவர்களைப் பராமரிக்கும் விடுதியில் இருந்திருக்கின்றார். 50 வருடமாக வாழ்ந்த தன் மனைவியை அந்த விடுதியில் பார்த்துவிட்டு, தனது தனிமையான வீட்டுக்குத் திரும்பும் டான், அப்போதும் வீட்டில் வாசித்துக் கொண்டிருப்பவராக இருந்தவரெனச் சொல்கின்றனர். மனைவி இறந்த ஓரு வருடத்தில் டானும் இறந்திருக்கின்றார்.
*
டானின் இந்த புத்தகப் பைத்தியத்தைப் பார்த்தபின், நானும் சாவதற்குள் அவரளவுக்கு இல்லையென்றாலும் ஒரு இரண்டாயிரம் நூல்களை வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென யோசித்தேன். டான் எழுதிய பட்டியல் அவர் தனது 29 வயதில் வாசிக்க தொடங்கிய நூல்களிலிருந்து தொடங்குகின்றது.
நானும் இதுவரை காலம் எவ்வளவு நூல்களை வாசித்திருப்பேன் என யோசித்துப் பார்த்தேன். இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட நூல்களுக்கு விரிவான வாசிப்புக்களை எழுதியதாக என் வலைப்பதிவு காட்டுகின்றது (வாசிப்பு(239)). அவை என் 20 வயதுகளின் பின் எழுதத் தொடங்கியது.
எப்படியும் பதினொரு/பன்னிரெண்டு வயதிலே பாலகுமாரனையும், சாண்டியல்யனையும் வாசிக்கத் தொடங்கிவிட்டேன் என்பதால் ஒரு நூறு புத்தகங்களுக்கு மேலாக என் 20 வயதுக்குள்ளே வாசித்திருப்பேன். இதுவரை எப்படியோ திக்கித்திணறி ஒரு 700/800 நூல்களையாவது முழுமையாக வாசித்திருப்பேன் என நினைக்கின்றேன்.
எனது இலக்கையடைய இன்னும் 1,200 புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதற்குள் வாழ்க்கையின் தினசரிச் சிக்கல்கள், காதலியை ஆரத்தழுவுதல், ஆஸ்மாவோடு அல்லாடுதல், இலக்கிய எதிரிகளுக்கு எதிர்வினை செய்தல் என்றெல்லாம் எவ்வளவு நேரத்தைக் கொடுக்கவேண்டும் என்று பெருமூச்சும் வருகின்றது.
'நான் சொர்க்கத்தை ஒரு நூலகம் போல கற்பனை செய்கின்றேன்' என்று போர்ஹேஸ் சொல்லியிருக்கின்றார். எனக்கென்னவோ போர்ஹேஸோடு இப்போது அருகில் அமர்ந்து இந்த டானும் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பார் என்றுதான் கனவு காணத் தோன்றுகின்றது.
***

0 comments:
Post a Comment