கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'New Yorker' சஞ்சிகையில் சிறுகதை எழுதிய முதல் தமிழர்

Sunday, December 21, 2025

 

இன்றும் இலக்கிய உலகில் New Yorker சஞ்சிகையில் ஒரு படைப்பு வெளிவருவது என்பது மிகப் பெரும் விடயமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் இன்றைக்கு 70 வருடங்களுக்கு முன்னரே ஓர் ஈழத்தமிழரின் சிறுகதை வெளிவந்திருக்கின்றது என்பதை உங்களால் நம்பமுடியுமா? அதுவும் அந்தக் கதை புலம்பெயர் கதையாக இல்லாது, பூர்வீக மண்ணின் வாசம் வீசும் படைப்பாக இருந்ததும், அதை 'நியூ யோர்க்கர்' ஆசிரியர் குழு தெரிவு செய்து வெளியிட்டிருக்கின்றது என்பதும் அதிசயமானதுதான். 'மாதுளம் மரம்' ('The Pomegranate Tree'/1954) என்கின்ற இந்தக்கதை யாழ்ப்பாணத்தில் அச்சுவேலியில் நடக்கின்றது. அச்சுவேலி மட்டுமில்லை, கீரிமலை, கோப்பாய் என்று பல இடங்களும், தமிழ் வார்த்தைகள் சிலவும் இந்தக் கதையில் குறிப்பிடப்படுகின்றது.
Uploaded Image
இந்த 70 வருடங்களில், ஒரு தமிழரின் சொந்தப் படைப்பு அதன்பிறகு 'நியூ யோர்க்கரி'ல் வந்ததே இல்லையெனச் சொல்லலாம்(?). அண்மையில் அனுக் அருட்பிரகாசத்தின் 'Passage North' இற்கான மதிப்புரை, பெருமாள் முருகனின் 'மாதொருபாகனின்' சர்ச்சை குறித்து இன்னொரு எழுத்தாளர் எழுதிய கட்டுரை என்பவற்றைத்  தவிர எந்த ஒரு தமிழரின் சொந்தப்படைப்பும் (கதை/கவிதை) 'நியூ யோர்க்கர்' வரலாற்றில் இல்லை என்றே நினைக்கின்றேன்.

அப்படியெனில் எப்படி இப்படி ஒரு அதிசயம், 70 வருடங்களுக்கு முன் 'நியூ யோர்க்கரி'ல் நிகழ்ந்திருக்கின்றது? அந்தக் கதையை எழுதியவர் எம்.ஜே. தம்பிமுத்து. தம்பி என்று பலரால் சுருக்கி அழைக்கப்பட்ட தம்பிமுத்து இங்கிலாந்தில் இருந்து அன்று பிரபல்யமான  'Poetry London' சஞ்சிகையை அவரே  தொடக்கி தொடர்ச்சியாக 10 வருடங்கள் வெளியிட்டவர். அன்று மிகப் புகழில் இருந்த எழுத்தாளர்கள் பலரோடு நட்பாக இருந்தவர். எப்போது என்றாலும் T. S. Eliot ஐ சந்தித்துப் பேசக்கூடியவராக தம்பி இருந்திருக்கின்றார். தம்பிமுத்து திருமணமாகிய காலத்தில், எலியட் புதுமணத் தம்பதியினரை அழைத்து தேநீர் விருந்து கொடுக்குமளவுக்க்கு எலியட்டோடு தம்பிமுத்து நெருக்கமாக இருந்திருக்கின்றார். மேலும் அவர் பதிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், எடிட்டராகவும் பல நூல்களுக்கு இருந்திருக்கின்றார். அப்படி தம்பிமுத்து  பதிப்பாளராக இருந்த Poetry London மூலம் இங்கிலாந்தில்  விளாடிமீர் நபகோவ்வின் நாவலான 'The Real Life of Sebastian Knight' வெளியிட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

தம்பிமுத்து பின்னர் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குப் போய் நியூ யோர்க்கிலிருந்து, அதே சஞ்சிகையை ''Poetry London- New York' என்ற பெயரிலும் வெளியிட்டவர். அமெரிக்காவில் இருந்து இந்தச் சஞ்சிகையை வெளியிட்டபோது அன்றைய பீட் ஜெனரேஷனைச் சேர்ந்த Jack Kerouac, Allen Ginsberg போன்றவர்களின் படைப்புக்களை வெளியிட்டவர். அலன் கின்ஸ்பேர்க் போன்றவர்கள் தம்பிமுத்துவின் வீட்டு விருந்துகளில் கலந்துகொண்டு இலக்கியம் குறித்து விவாதிக்கின்றவர்களாக இருந்திருக்கின்றனர்.
Uploaded Image
இதைவிட எனக்கு வியப்பாக இருந்த ஒரு விடயம் தம்பிமுத்து அவரது வாழ்க்கைக்காலம் முழுதும் ஒரு முழுநேர இலக்கியவாதியாக இருந்தது. எழுத்தைத் தவிர வேறெந்தத் தொழிலையும் செய்யாது எழுத்தோடு பின்னிப்பிணைந்து கிடந்தவர் தம்பிமுத்து. இங்கிலாந்து/ அமெரிக்காவில் ஒரு முழுநேர எழுத்தாளராக, அதுவும் ஒரு புலம்பெயர் மண்ணிறக்காரர் அந்தக் காலத்தில் இருப்பதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ அங்கே பிறந்து வளர்ந்த ஒருவர் வேண்டுமெனில் முழுநேர எழுத்தாளராக இருக்கலாம், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய ஏதேனும் பூர்வீகச் சொத்துக்களாவது இருக்கும். ஆனால் தம்பிமுத்து போன்ற ஒருவர் எவருமே ஆதரவு கொடுக்காமல், எவ்வித பூர்வீகச் சொத்தும் இல்லாது, ஒரு முழுநேர எழுத்தாளராக தன் வாழ்க்கைக் காலம் முழுதும் இருந்திருக்கின்றார் .சிலவேளைகளில் ஒரே ஆடையை சில மாதங்களாக அணிந்து திரியுமளவுக்கு வறுமையின் அடிநிலைவரை போயிருக்கின்றார் என்றாலும், பூர்ஷூவா வாழ்க்கையை வெறுத்து, ஒருவகை போஹிமியன் வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர் தம்பிமுத்து என்பதால் அவருக்கு இது குறித்து எந்த முறைப்பாடுகளும் இருந்ததும் இல்லை.

தம்பிமுத்து அடிப்படையில் ஒரு கவிஞர். அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தபோதே அவர் கதைகளின் பக்கம் தீவிரமாக இறங்குகின்றார். ஒரு படைப்பாளி நான்கைந்து கதைகளை எழுதியவுடனேயே நியூ யோர்க்கர் அவரின் கதையொன்றைப் பிரசுரிக்க முன்வந்திருக்கின்றது என்பது திகைப்பைத் தரக்கூடியது. ஆனால் தம்பிமுத்து அந்தளவுக்கு திறமையானவராக இருந்திருக்கின்றார்.
Uploaded Image
நியூ யோர்க்கரிலும், ரிப்போர்ட்டரிலும் தம்பிமுத்துவின் ஐந்து கதைகள் வெளிவந்தவுடன், அவரை ஒரு பதிப்பகம் சிறுகதைத் தொகுப்பு வெளியிடுவதற்காக கையெழுத்திடுகின்றது. இன்னும் ஏழு கதைகள் எழுதியவுடன் 12 கதைகளுடன் ஒரு தொகுப்பு வெளியிடுவோம் என்று அந்தப் பதிப்பகம் முன்வருகின்றது. தம்பிமுத்துவின் எழுதப்பட்ட அநேக கதைகள் அச்சுவேலியைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டதால் அந்தச் செம்பாட்டு மண்ணை முன்வைத்து 'A handful of Red Earth' என்ற தலைப்புக் கூட தெரிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தம்பிமுத்துவுக்கு திரும்பவும் இங்கிலாந்தில் வெளியிட்ட கவிதை சஞ்சிகையை பதிப்பிக்கும் 'பைத்தியம்' பிடித்துவிட, தொடர்ந்து கதைகள் எழுதுவதைக் கைவிட்டு சஞ்சிகை வெளியிடும் வேலையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.

இறுதியில் அந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவராமலே போய்விட்டது. ஆனால் நியூ யோர்க்கரில் முதல் சிறுகதையை எழுதிய ஒரு தமிழர் என்ற பெருமையை தம்பிமுத்து அவரையறியாமலே செய்துவிட்டிருந்தார் என்பதுதான் நாம் பெருமைப்படக்கூடிய விடயம்.

***

(மூன்றாவது புகைப்படம்: தம்பிமுத்துவும், அலன் கின்ஸ்பேர்க்கும்)

நியூ யோர்க்கரில் வந்த தம்பிமுத்துவின் சிறுகதை

 

0 comments: