கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

Monday, July 25, 2005

அப்போது எனக்கு ஐந்து வயதிருக்கும். நேர்சரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஆடி மாதத்தின் ஒரு நாளில், அண்ணாவின் சைக்கிளின் handle barல் ஒரு கையையும், மறுகையில் பை நிறைய இனிப்புக்களுடன் நேர்சரி வகுப்புக்கு போகின்றேன். வகுப்பு, மாணவர்கள் எதுவுமற்று வெறுமையாக இருக்கின்றது. ஆசிரியர் தொலைவில் வருவது தெரிகின்றது. 'இன்றைக்கு ஹர்த்தால் எல்லோ. வகுப்பு இல்லை என்று உங்களுக்கு முதலே தெரியுந்தானே' என்று அண்ணாவிடம் கூறுகின்றார். 'ஓம் தெரியும், இவன் தான் சிலநேரம் நேர்சரி வகுப்பு நடக்குமென்டு கூட்டிக்கொண்டு வந்தவன்' என்கிறார் அண்ணா. எனது முகத்தில் கவலையும் மனதில் வெறுமையும் நிரம்ப திரும்புகின்றேன்.

எங்கள் வீட்டு வரவேற்பறையில் வள்ளுவரும், அண்ணாவும், கலைஞரும்தான் எப்போதும் காட்சி தந்தபடி இருப்பார்கள். ஈழத்தில் இருந்தவரைக்கும் அப்பா ஒரு தீவிர நாத்திகராக இருந்திருக்கின்றார். திராவிடக் கட்சிகளின் மீது மிகுந்த அபிமானமும் நம்பிக்கை உடையவராக ஒரு காலத்தில் இருந்திருக்கவேண்டும். ஊரில் இருந்த வரைக்கும் (இப்போதும் கூட) தைப்பொங்கலையோ, வருடப்பிறப்பையோ அயலவர்கள் கொண்டாடியமாதிரி நாங்கள் கொண்டாடியதில்லை. அதற்குக் காரணம் அப்பா நாத்திகராக இருந்தது அல்ல. வேலையின் நிமித்தம் எமது தந்தையார் மட்டக்களப்பு, வன்னி, தீவுப்பகுதிகள் என்று மாறி மாறி அலைந்தபடி இருந்தவர். எல்லைக் கிராமங்களில் சிங்கள இனவாதிகளால் அந்த மக்கள்படும் துயரைக் கண்டதால், 'அவர்கள் அங்கே துன்பப்படுகையில் இங்கே எங்களுக்கு என்ன கொண்டாட்டம் குதூகலம் வேண்டிக்கிடக்கிறது' என்று கூறி விழாக்களைக் கொண்டாடும் எமது ஆசைகளை இல்லாமற்செய்துவிடுவார். அந்தக்காலத்தில், போரின் எந்தத் துளியும் தீண்டாது எங்கள் கிராமம் மிக இயல்பாயிருந்தது. பொங்கலுக்கு, வருடப்பிறப்புக்கு என்று பக்கத்து வீட்டுக்காரர்கள், கோலம் போட்டு வாழைகள் நாட்டி, வெளி முற்றத்தில் பொங்கிப் படைக்கும்போது அப்பாவை மனதுக்குள் திட்டியிருக்கின்றேன். கொண்டாட்டங்களின்போது அயல் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குதூகலத்தைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கின்றேன். எனக்கும் எனது பெற்றோர் கைவிசேடம், புது ஆடைகள் விழாக்களின்போது தரமாட்டார்களா என்றும் ஏங்கியிருக்கின்றேன்.போர் தீண்டாத எந்த ஊரையும் இன்றைய பொழுதில் ஈழத்தில் பார்க்க முடியாது போலத்தான் தோன்றுகின்றது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஊரைவிட்டு முற்றாகவே வெளியேற வேண்டி நிலை வந்தது. அதுவரை, சிங்கள் இராணுவம் தனது முகாமைவிட்டு கொஞ்சம் முன்னேறும்போது, அவ்வவ்போது வேறு கிராமங்களுக்கு சென்று விட்டுத் தங்கித் திரும்பிவருவதுதான் வழமையாக இருந்தது. பிறகு சண்டைகொஞ்சம் கடுமையானபோது இரவுகளில் பக்கத்து ஊரில் போய் படுத்துவிட்டு பகல்பொழுதில் ஊரிற்குத் திரும்பி வருவதுமாயும் இருந்தோம். தமிழர் பிரதேசங்களை கைப்பற்றிக்கொள்ள இராணுவம் இரவுநேரங்களையே அந்தக்காலத்தில் தேர்ந்தெடுத்துக்கொள்வது வழமையாக இருந்ததால், அப்படி பகல்/இரவு என் இரண்டுவிதமான விக்கிரமாதித்திய வாழ்க்கை முறைக்கும் நாங்கள் பழக்கமாயிருந்தோம். அதுவும் கார்த்திகை, மார்கழி போன்ற குளிரும் மழையும் கூடிய காலங்களில் விடிகாலையில் எழும்பி ஊருக்குத் திரும்பிப் போவது போல ஒரு அவதி கிடையாது.

என்றேனும் ஒருநாள் நான் படுத்திருக்கும் அறையின் துருப்பிடித்த யன்னல் கம்பிகளுக்குள்ளால் துப்பாக்கி நீட்டியபடி ஒரு இராணுவத்தினன் நிற்பான் என்ற பயத்தில்தான் பல இரவுகளில் தூங்கியிருக்கின்றேன். அந்தப் பீதி அதிகரித்து அதிகரித்து மரங்கள் காற்றில் அசையும் நிழலைக்கூடக் கண்டு பயந்து அம்மாவின் முதுகின் பின்னால் சிறுவயதில் முடங்கிப் படுத்துமிருக்கின்றேன். ஊரை விட்டு முற்றுமுழுதாக நீங்கிய நாள் நினைவுக்கு வருகின்றது. அகோரமான செல்லடிகளும், குண்டுத்த்தாக்குதலுடந்தான் ஆரம்பித்தது அன்றையபொழுது. இப்படி ஒரு பொழுது ஆரம்பிக்கிறது என்றால் நிச்சயம் எங்களுக்குத் தெரியும் ஆமிக்காரன் முன்னேறப்போகின்றான் என்று. இது ஒரு தாக்குதலுக்கான முன் ஆயத்தம் என்றும் சொல்லலாம். தடைகளை நீக்குவதற்கு இப்படி ஒரு கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெறும். அத்தோடு எதிர்த்துப் போரிடுபவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவற்கும் ஆகவும் இருக்கலாம். 'ஆரம்பமே இப்படி என்றால் உச்சக்கட்டம் எப்படி இருக்கும் என்று உனக்குக் காட்டத் தேவையில்லை, பின்வாங்கிப் போய்விடு' என்று போராளிகளைப் பார்த்து எகத்தாளமாகச் சிரிப்பதன் மறுவடிவம்தான் விமானத்தாக்குதல்களும், ஆட்லறித் தாக்குதல்களும்.

துப்பாக்கிச் சூட்டுக்கள் எல்லாம் நெருங்கி வருகின்றமாதிரி இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள் காற்றில் உரசிக்கொண்டு போகும் ஓசையெல்லாம் தெளிவாய்க் கேட்கின்றது. 'வீட்டை விட்டு போவோம் போவோம்' என்று பயத்தோடு அழுகை வரும் நிலையில் பெற்றோரிடம் நான் கெஞ்சுகிறேன். அவர்களுக்குப் புரிந்திருக்கக்கூடும், இதுதான் நாங்கள் எங்கள் ஊரில், வாழ்ந்த வீட்டில் கடைசியாக வாழப்ப்போகும் கணங்கள் என்று. அதனால் வீட்டைவிட்டு அவ்வளவு இலகுவில் நீங்கி வர பிரியப்படாதிருக்கின்றனர். 'சரி நீயும் அக்காவும் முதலில் போங்கோ, நாங்கள் பின்னாலை வாறோம்' என்று எங்களை அனுப்புகின்றனர் எமது பெற்றோர். ஒரு சைக்கிளின் பின் பாரில் கட்டப்பட்ட ஆடைப்பெட்டியுடன் நானும் அக்காவும் வீட்டினின்று நீங்குகின்றோம். வெளியே ஒழுங்காய் நடந்தே செல்லமுடியாத நிலை. நிமிர்ந்து நடந்தால் துப்பாக்கிச் சன்னங்கள் தலையைப் பதம் பார்த்துவிடும் போன்று அகோரமான யுத்தக்களம். சைக்கிளை உருட்டியபடி குனிந்து குனிந்து நடக்கின்றோம். ஒரு இரண்டு வீடு தாண்டி இருப்போம். பாரிய ஒலியுடன் ஒரு செல் விழுந்து வெடிக்கின்றது. எங்கள் வேலிக்கருகில் இருந்த பக்கத்து வீட்டு வைக்கோல் போரிலிருந்து தீ எழும்புகின்றது. 'அய்யோ வீட்டில் நின்ற அம்மா அப்பா ஏதாவது நடந்திருக்குமோ?' என்று எனக்கு அழுகை வருகின்றது. திரும்பிப் போய்ப் பார்க்கவும் முடியாத நிலை. அக்கா சொல்கிறாள் கொஞ்சம் தூரம் போய் சைக்கிளை நிறுத்தி ரவுண்ட்ஸ் அடி குறையும்போது திரும்பி வந்து பார்ப்போம் இப்போது வேண்டாம் என்று.

நாங்கள் சைக்கிளை உருட்டுகிறோம். வைரவர் கோயில் தாண்டி, அதன் பக்கத்தில் இருந்த கள்ளுக்கொட்டில் தாண்டுகையில் தேவதூதர்களாய் போராளிகள் வருகின்றார்கள். நாங்கள் போரை விட்டு விலத்தி ஓட ஓட அவர்கள் போரைத் தேடி வருகின்றனர். பலரின் கால்களைப் பார்க்கின்றேன். ஒழுங்காய் செருப்புக்கூட அணியாமல் வெறுங்காலுடன் பலர் இருக்கின்றார்கள். பயத்தின் எந்த ரேகையும் அவர்களின் முகத்தில் இல்லை. யாரையோ சந்திக்கப் போகும் நிதானத்துடன் நடந்து வந்துக்கொண்டிருக்கின்றார்கள். எதிரியைக் காணும்வரை எந்தத் தோட்டாவும் உபயோகிப்பதில்லை என்பதுபோல துப்பாக்கிகள் முதுகில் தூங்கியபடி இருக்கின்றன. அடுத்த கிராமத்தை அடைந்தபோது கொஞ்ச நேரத்தில் எமது பெற்றோரும் வந்துவிடுகின்றனர். அவர்கள் முகத்திலும் பயம் பொங்கி வழிகின்றது. எல்லோரையும் மீண்டும் உயிருடன் பார்த்தவுடன், எல்லோர் மனதிலும் ஒருவித நிம்மதி வந்துவிடுகின்றது. ஆனால் எனது சொந்தக்கிராமம் கைப்பற்றப்படுகையிலும் உயிரைக்காக்க வேண்டும் என்று ஓடுகின்ற எனது சுயநலத்துக்கும், எங்கையோ ஒரிடத்தில் பிறந்து உறவுகளைத் துறந்து எந்தத் தமிழ்ப்பிரதேசமும் கைப்பற்றப்படவோ, தமிழ் மக்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்று 'மரணத்திலும் வாழ்வைத் தேடி' போகின்றவர்களுக்கும் இடையிலான உள்மனயுத்தம் ஆரம்பிக்கின்றது. அது இன்று வரைக்கும் தொடர்கிறது. சாகும்வரை இது குறித்த ஒரு குற்றவுணர்வுடன்தான் வாழ வேண்டியிருக்கவும் போகின்றது.

ஈழத்தில் இருந்தவரைக்கும் எதிர்காலத்தில் மருத்துவம் படிப்பதே ஒரு கனவாக இருந்தது அல்லது அது திணிக்கப்பட்ட ஒன்றாகவும் இருந்திருக்கலாம். ஒரு முறை யாழ் வைத்தியசாலையில் நோயின் நிமிர்த்தம், அனுமதிக்கப்பட்ட அண்ணாவைப் பார்ப்பதற்காய் நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தோம். அந்தச் சமயம் செல்லடிபட்டு சிதைவுற்ற ஒருவரை இரத்தம் கொட்ட கொட்டக் கைகளில் ஏந்திவருகின்றார்கள். முகம் எது வயிறு எது என்று பிரித்துணரமுடியாது இரத்த நிறம் உடலை ஆடை போல மூடியிருக்கின்றது. ஒரு மரணத்தை முதன் முதலாய் அருகிலிருந்த பார்த்த சந்தர்ப்பம் அது. இப்படியும் ஒரு மரணம் நிகழுமா எனச் சிந்திக்கமுடியாத ஏழெட்டு வயதில் அது நிகழ்ந்திருந்தது. அந்தச் சம்பவத்தைப் பார்த்தபின் ஒரு நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்திருக்கின்றேன். சத்தி வருகின்றமாதிரியான உணர்நிலையில் அந்த நாள் முழுதும் அலைந்திருக்கின்றேன். அந்தச் சம்பவத்தை பார்த்தபோது வாயில் வைத்திருந்த சூப்புத்தடி (Lollipop) அதற்குப் பிறகு பிடிக்காமல் போயிற்று அல்லது லொலிபாப்பை எப்போது பார்த்தாலும் அந்த சம்பவமே உடனே நினைவுக்கு வருவதாய் இருந்தது. அதன்பிறகு எனக்கு இரத்தம் என்பது மிகவும் பீதியடையும் ஒரு விடயமாகப் போய்விட்டது. ஒரு சில நொடிகளுக்கு மேல், இரத்தத்துடன் வரும் எந்தக் காட்சியையோ கதையையோ பார்க்கவோ கேட்கவோ என்னால் முடிவதில்லை. சிலவருடங்களுக்கு முன், கார் விபத்தில் சிக்கிக்கொண்ட நண்பன் அந்த விபத்துச்சம்பவத்தை விளக்கிக்கொண்டிருந்தபோது (காலில் பலமாய் அடிபட்டிருந்தான்) கிட்டத்தட்ட முழு மயக்கத்திற்கு அருகில் நான் போயிருந்தேன். இன்னமும் சிறுவயதில் நிகழ்ந்த சம்பவமும், இரத்தமும் எப்படி என்னைத் துரத்திக்கொண்டிருக்கின்றது என்பது வியப்பாக இருந்தது. அப்படியெனில் இதைவிட இன்னும் ஆழமான பாதிப்புக்களுக்கும், வன்முறைகளுக்கும், பாலியல் வன்புணர்ச்சிகளுக்கும் ஆளானவர்கள் எப்படியெல்லாம் இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்ற வினா எழுவதைத் தவிர்க்கவும் முடிந்ததில்லை.

'In the name of Buddha' திரைப்படம் வந்தபோது தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்த்துக்கொண்டிருதேன். கிட்டத்தட்ட அரைவாசிக்கு மேல் கண்களை மூடித்தான் பார்த்தேன் (தேங்காய் உரிக்கும் அலவாங்கால் இராணுவம் ஒரு ஆணைக் கொல்வது, சிறுவர்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டு அரைகுறையுமாக புதைக்கப்பட்டிருப்பது, வீட்டுக்குள் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்குவது போன்ற காட்சிகள் ஆரம்பமானது மட்டும் தெரியும், பிறகு எனது உலகம் இருட்டாகிவிட்டது). கண்மூடி இருந்தவேளையில் எனது பின்சீட்டில் இருந்த ஒரு பதின்மவயதுப்பெண் தன் தாயிடம் கூறியது காதில் விழுந்தது. கிட்டத்தட்ட அழுகின்ற குரலில், 'அம்மா I can't watch this movie, I wanna go outside' என்கிறாள். தாய், 'பிள்ளை இப்படித்தான் எங்கட நாட்டில் நடக்கிறது. நீர் இதையெல்லாம் பார்க்கவேண்டும், அப்பத்தான் அங்கை நடக்கிறதெல்லாம் தெரியும்' என்கிறார். இந்தக் காட்சிகளைப் பார்க்கமுடியாத எனக்கு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வெளியே போகவேண்டும் போல இருக்கிறது அல்லது இப்படியான காட்சிகளைப் பார்க்கவிரும்பாத பிள்ளையை வற்புறுத்தி அவரது மனநிலையைச் சிதைக்காதீர்கள் என்று அந்தத் தாயிடம் கூறவாவது வேண்டும் போலக்கிடக்கிறது. இறுதியில் அந்தப் பிள்ளை கண்ணை மூடிக்கொண்டு தாயின் தோளில் சாய்ந்துவிடுகின்றார்.

ஈழத்தை விட்டு வந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு, சென்ற வருடம் ஈழத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு வித அவசரமான திட்டமிடலில் நண்பர்களாய் செல்லவேண்டியிருந்ததால்தான் அது கூட சாத்தியமாயிருந்தது. இன்றும் ஊரைப் பார்க்கமுடியாது இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில் ஈழத்துக்குப் போவதற்கு என்ன காரணம் வேண்டிக்கிடக்கிறது? அதனால் யாழில் மூன்றே நாள்கள் மட்டுந்தான் தங்கியிருந்தேன். இதுவரை காலமும் காலடி வைக்காத வன்னியில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியிருந்தது புதிய அனுபவமாயிருந்தது. அங்கே இருந்து கேட்ட விவாதித்த கதைகள் நாட்டைவிட்டு வெளியேறிய என் குற்றவுணர்வை இன்னும் பலமடங்காய் அதிகரிக்கச் செய்தன. அதுவும் பெண் போராளிகள் கூறிய கதைகளும் இடை நடுவில் மேலே சொல்ல முடியாது தவித்து அழுத கணங்களும் இன்னமும் கண்முன்னாலே நிற்கின்றது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கால் வைத்தபோது மூன்று வருடங்களுக்கு முன் உலகை வியக்க வைத்து போராளிகள் நடத்திய தாக்குதல் கண்முன் விரிந்தது. சனங்கள் ஆயிரக்கணக்கில் புழங்கும் (முக்கியமாய் வெளிநாட்டு மக்கள் மீது பாதிப்பு ஏற்பட்டால் எப்படி பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்று அனைவருக்கும் தெரிந்ததே) எந்த ஒரு பொதுசனத்துக்கும் பாதிப்பு இல்லாது மிகத்துல்லியமாய் இராணுவ, வர்த்தக விமானங்களைத் தகர்ந்திருந்தார்கள். குண்டு குண்டாய் போட்டு மக்களை கொல்வது முற்பகலில் செய்யின், உனது ஆணிவேருக்கே தீ கொளுத்துவோம் என பிற்பகலில் எதிரியை வினையறுக்கச் செய்தவர்கள் போராளிகள். 83ல் தமிழரைத் தலைநகரில் நூற்றுக்கணக்கில் குடல் உருவியும் கண்கள் பிடுங்கியும் கொன்றும், உயிரோடு ரயர்கள் போட்டு எரித்துக்காட்டியும் கெக்கலித்தது பேரினவாதம். ஒரு அரச இராணுவ அமைப்புக்கு நிகரான பலத்துடன் தமிழர்கள் ஒரு காலத்தில் நிமிர்ந்தபின், தமிழர்களை விட சிங்களப்பேரினவாதமே ஒவ்வொரு கறுப்பு ஜூலையும் நடுநடுங்கியபடி எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கத் தொடங்கியது. அவ்வாறான ஒரு கறுப்பு ஜீலையில் நடந்த பதிலடியே கட்டுநாயக்காவில் நிகழ்ந்த ஊடுருவல் தாக்குதல். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கியபோது இந்த இடந்தானே சென்றுபோன வருடத்தில் ஒரு நாள் உலகையே திரும்பிப்ப்பார்க்க வைத்ததென்ற பெருமை எனக்குள் பொங்கியது. ஆனால் அது தங்கி நின்றது கொஞ்ச நொடிகள்தான். சிதைந்த விமானத்தின் முன் மல்லாக்க விழுந்துகிடந்த போராளிகளின் முகங்கள்தான் பிறகு நினைவு முழுவதற்கும் பரவியது. அந்த இளைஞர்களில், சிறுவயதில் ஊரைவிட்டு அகன்ற நேரம் எதிர்ப்பட்ட போராளிகளின் முகங்களைக் கண்டேன். போரிற்குள் இருந்த எந்த  ஒருத்தனும்/ஒருத்தியும் போரை கொண்டாடிக் குதூகலிக்கமுடியாது. பிரியமான மனிதர்கள் இறக்க இறக்க இன்னும் கொல் கொல் என்று நரம்புக்கள் புடைக்க புடைக்க பேசிக்கொண்டிருப்பவர்கள் மனிதர்களாக இருக்கச் சாத்தியமற்றவர்கள்.


எண்பத்து மூன்றில் கறுப்பு ஜீலையில் (ஆடி இருபத்தைந்து) தொடங்கிய மரணங்கள் இன்றும் அதே நாளில் நீண்டுகொண்டிருப்பதுதான் எவ்வளவு துயரமானது. 2001ல் தங்களையே விலையாகக் கொடுத்த அந்தத் தோழர்கள் மரணித்த நாளில் மகிழ்வு கொள்ள என்ன வேண்டிக்கிடக்கிறது? மேலும் இன்றைய நாளில் ஒரு பிறப்பைப் பற்றிப் பேசுவதைவிடவும் மரணங்களைப்பற்றி பேசுவதுதான் நேர்மையாகவும் இருக்கும்.

நன்றி:புகைப்படங்கள்
கறுப்பு வெள்ளைப் படங்கள்: ஆடிக்கலவரம் 1983
சைக்கிள் படம்: ஈழவிஷன்
பெண்ணும் இராணுவமும்: In the name of buddha

வறுமைக்கு எதிராய்...

Sunday, July 03, 2005

"These concerts are the start point for The Long Walk To Justice, the one way we can all make our voices heard in unison. "
-Bob Geldof


இன்று வரலாற்றில் ஒரு முக்கிய காலடியை எடுத்து வைத்துள்ளோம். இந்த நிகழ்வு எத்தனை ஆண்டுகளுக்குப் பின் மாற்றத்தைக் கொண்டுவருமோ தெரியாது. ஆனால் நாம் வாழும் காலத்தில் ஒரு மாற்றம் வேண்டி அனைவரும் எங்களால் இயன்ற எதையோ செய்ய முயன்றிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சிக்குரியது என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் Live8 நிகழ்வுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்தேறியுள்ளன. ஒரு இசைக்கலைஞன் கூறியதுமாதிரி, எனது காலத்தில் இல்லாவிட்டாலும் எனது குழந்தைகளின் குழந்தைகள் 'What is poverty?' என்று கேட்கும்போதாவது நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியுள்ளார்.

உலகமயமாதல்; மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சனநாயக நாடுகளின் 'சர்வாதிகாரத்திற்கு' எதிராக போராடுவது என்பது அவ்வளவு கடினமில்லை. இன்றைய காலகட்டத்தில் அதிகாரங்களுக்கெதிரான போராட்ட வடிவம் எது என்பதை அடையாளங்கொள்வதுகூட சரியான கடினம் போலத்தான் தோன்றுகின்றது. இந்த நம்பிக்கையீனங்களிடையே தம்மாலும் எதையாவது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் Live8 அமைப்பினர் முன்வந்துள்ளனர். வறிய நாடுகளின், முக்கியமாய் ஆபிரிக்காக் கண்டத்திலுள்ள நாடுகளின் வறுமையை உலகின் செல்வந்த நாடுகளின் மேலும் சுரண்டாமல் இருக்க, மிகப்பிரமாண்டமான இசைநிகழ்வுகள் மூலம் மக்களை ஒன்றுசேர்க்கின்றனர். அதிகார அரசாங்களுக்கெதிராய் நேரடியாக விமர்சனம் செய்து போராடவிட்டாலும், நியாயமான முறையில் வறுமையான நாடுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கவேண்டுமென இவர்கள் உலகின் செல்வந்த நாடுகளிடம் கோரிநிற்கின்றனர்.


வறுமையின் காரணமாக தினமும் 30, 000 குழந்தைகள் இறந்துகொண்டிருக்கின்றனர். வருகின்ற ஜூலை மாதம் ஆறாந்திகதி, இறுதிச் சந்தர்ப்பமாக இந்த அவலநிலையை நிறுத்துவதற்காக ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. உலகின் எட்டு (G8 countries) செல்வந்த நாடுகள் ஸ்கொட்லாண்டில் G8 மாநாட்டுக்காய் கூடவுள்ளனர். அவர்களிடம் வறுமையுள்ள நாடுகளுக்கு வழங்கும் உதவியை இரட்டிப்பாகச் செய்யவும், ஏற்கனவே அந்த நாடுகளுக்குள்ள கடன்களை முற்றுமுழுதாக இல்லாமற்செய்யவும், வறிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளில் நேர்த்தியாக இருக்கவும் Live8 என்ற அமைப்பு உலக மக்களின் குரல்களினூடாக இந்தக்கோரிக்கைகளை முன்வைக்கின்றது.. இதன் நோக்கம், வறிய நாடுகளின் மக்களின் ஏழ்மையை இல்லாமற்செய்ய உதவும்படி செல்வந்த நாடுகளுக்கு அதிக அழுத்தத்தை பிரயோகிப்பதாகும். அதற்காக உலகின் வெவ்வேறு பகுதியுள்ள நாடுகளில் ஒரே சமயத்தில் பல இசைநிகழ்ச்சிகளை ந்டத்தி, இந்த ஒரேயோரு செய்தியை இந்தச் செல்வந்த நாடுகளின் அரச பீடத்தில் அமர்ந்துள்ள கனவான்களுக்கு மில்லியன்கணக்கான மக்களின் குரல்களில் உரத்துக்கூறுவது!

Madonna
இன்று உலகின் பல்வேறு நாடுகளில் (அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, தென்னாபிரிகா, ஜப்பான், கிரீஸ்), இக்கோரிக்கைகளுக்காய் உலகமக்களின் ஆதரவு வேண்டி மிகப்பெரும் இசை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எங்களுக்கு பணம் தேவையில்லை. நீங்கள் தான் வேண்டும் என்ற வாசகத்துடன் தான் இந்த நண்பர்கள் நம்மிடம் உதவிக்கு வருகின்றனர். கனடாவில், ஒன்ராறியோ மாநிலத்தில், பெரியில்(Barrie) 35,000 மக்கள் பங்குபற்றி தமது ஆதரவை அளித்துள்ளனர். அந்த நிகழ்வில் கூறியதுமாதிரி, இங்கே வந்து இசைநிகழ்ச்சியை காசு கொடுத்து போவதால் உங்கள் குரல் கேட்கப்போவதில்லை. நீங்கள் உங்கள் ஆதரவை இணையத்தளத்திலோ அல்லது text message யிலோ கொடுப்பதுதான் முக்கியமானது. ஆகவே வீடு சென்றபின் அதைச் செய்ய மறந்துவிடாதீர்கள் என்று அடிக்கடி நினைவுபடுத்தினார்கள். நிகழ்ச்சியின் இடைநடுவில் 16 மில்லியன் குரல்கள் பதிவுசெய்யப்பட்டதாக கூறியதாய் நினைவு. ஒவ்வொரு மணித்தியாலத்திலும் அவை மில்லியன்களாய் அதிகரித்துக்கொண்டிருந்தது, இந்த நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்குபெற்றாவிட்டாலும் பலர் தமது ஆதரவை வெளியில் இருந்தும் அளித்துக்கொண்டிருந்தது நம்பிக்கை தருவதாக இருந்தது. இதை எழுதுகின்ற இந் நேரம் அது இரட்டிப்பாக மூன்று மடங்காக உயர்ந்திருக்கவேண்டும்; உயர்ந்திருக்கும்.
Will Smith
பல்வேறு நாடுகளில் நடந்த இசை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது, அனைத்து முக்கிய இசைக்கலைஞர்ளும் பங்குபெற்றியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. முக்கியமாய், பாடுவதை நிறுத்தி பொதுவாழ்வை விட்டு விலகிச்சென்றவர்கள் எல்லாம் இந்நிகழ்வுகளில் பங்குபெற்றி தமது குரலை வறுமைக்கெதிராய் பதிவுசெய்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, Popல் Madonna, Mariah Carey போன்றவர்களும், Rapல் Kanye West, Jay-z போன்றவர்களும், Rock n Rollல் Robbie Williams, Cold Play போன்றவர்களும் உருக்கமான பாடல்களை பாடி பலரது கவனத்தைக் கவர்ந்திருந்தனர். முக்கியமாய் மடோனாவின் Just a prayer பார்த்துக்கொண்டிருந்தபோது என்னை மிகவும் பாதித்தது.

இந்த இசைநிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென்னாபிரிக்கா ஜோகன்ஸ்பேர்க்கில் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை முக்கியமானது. முதுமையின் காரணமாய் சரியாக நடக்கக்கூட முடியாதுவிட்டாலும், பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற்று இருந்தாலும், இந்த நிகழ்வில் தானும் பங்குபெறுவது தனக்கு பெருமிதம் தருவதாகக் கூறியுள்ளார். ஆயுதங்களுக்கும், போரிற்கும் செலவிடும் பணத்தை வறுமைக்கும், HIV போன்ற நோய்களுக்கும் உதவிசெய்ய செல்வந்த நாடுகள் முன்வரவேண்டும் என்று கூறினார்.. இன்றைய நிகழ்ச்சி வருகின்ற ஜுலை மாதம் ஆறாந்திகதி கூடுகின்ற G8 நாடுகளின் தலைவர்களின் முன் தவிர்க்கமுடியாத ஒரு கேள்வியாக போய்ச்சேரப்போகின்றது என்றார். அதேவேளை இந்த நிகழ்வுடன் மட்டும் நிற்காமல் தொடர்ச்சியான நிகழ்வுகளாய் பல்வேறு தளங்களினூடாக இது எடுத்துச்செல்லப்படவேண்டும் என்று தனது ஆசையையும் பதிவுசெய்தார்.. நெல்சன் மண்டேலா ஒரு மிகப்பெரும் ஆளுமை என்பதற்கு சந்தேகமே இல்லை. நடமாடக் கடினப்பட்டு மேடையை வந்துவிட்டாலும், பேசத்தொடங்குகின்றபோது உறுதி தெறிக்கின்றது. Dear Comrades என்று ஆரம்பித்த உரையில், கைதட்டப்பட்ட ஒவ்வொரு பொழுதிலும், விழிகளை உயர்த்தி, புருவங்களால் அந்த ஆதரவுகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஒரு குழந்தைமாதிரி எனக்குத் தோன்றினார்.
Mariah Careyஏற்கனவே இந்த G8 ற்கெதிராய் பல்வேறு அரச நிறுவனமற்ற அமைப்புக்கள், மாணவர்கள் என்று பலர், இந்த நாடுகளின் தலைவர்கள் கூடுமிடங்களில் எல்லாம் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர். அந்த எதிர்ப்பையும் மீறி, அந்தந்த நாடுகளின் பொலிஸ், இராணுவம் போன்றவை கடுமையாய் இவர்களை தண்டித்துமிருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒட்டாவாவில் கூடிய G8 பிரதிநிதிகளுக்கெதிராய் எதிர்ப்புத் தெரிவித்த எங்கள் வளாக மாணவ தலைவன் மீது பொலிஸ் தங்கள் நாய்களை ஏவி தமது சட்டம் ஒழுங்கை சீராகக் கவனித்ததை அறிந்திருக்கின்றேன். இந்த இசை நிகழ்ச்சியினிடையே ஒரு விளம்பரம் செய்திருந்தனர். இந்த G8 நாடுகளின், எந்த நாட்டிலும் ஒரு நாள் 50,000 மக்கள் இறந்துபோகின்றார்கள் இந்த நாட்டு அரசாங்கங்கள் வாளாவிருக்கப்போவதில்லை. அப்படியெனில் அவர்களால் தினமும் மற்ற நாடுகளில் வறுமையால் இறந்துபோகின்ற 50,000 மக்களுக்காய் உருப்படியான விடயங்களை ஏன் செய்யமுடியவில்லை? என்றொரு கேள்வியை பார்ப்பவரிடையே எழுப்புவதாய் அது அமைந்திருந்தது. அதையேதான் உங்களிடமும் நானும் விட்டுச்செல்கின்றேன்.

நண்பர்களே, நீங்கள் செய்யவேண்டியது, உங்கள் பெயரையும் இணைத்து அவர்களுக்கு ஆதரவளிப்பது. நானும் எனது ஆதரவைத் தெரிவித்து அதனூடாக எனது தொகுதி எம்பிக்கும், கனடா பிரதம மந்திரிக்கும் ஒரு விண்ணப்பம் அவர்களின் தளத்தினூடாக அனுப்பியுள்ளேன். நீங்களும் உங்கள் குரலைப் பதிவுசெய்யலாமே!

பி.கு: இந்த விடயத்தை உடனடியாகக் கவனத்தில் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு. தவறுகள் இருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கின்றேன். படங்கள் இந்தத் தளத்திலிருந்து