கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Baby you're my good thing!

Tuesday, September 08, 2020

நேற்று மாலை Jazz & Blues festivalற்குப் போயிருந்தேன். பூங்காவிற்குள் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு திறந்தவெளி அரங்குகளில் பாடகர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் முரே போர்ட்டர்  (Murray Porter) பாடிக்கொண்டிருந்தார். 'காதல் அதற்கான வழியைக் கண்டுபிடிக்கும்' என்ற பாடல் ஒருபக்கம் கரையவைக்க, முன்னாள் காதலன்/காதலி/துணைகளுக்காய் பாடுவதாய் முரே சொல்லிப் பாடிய 'அப்படியே போய்விடு, திரும்பிவராதே' (Stay Gone) என்ற பாடல் நமக்குள் ஏதேனும் கோபமிருந்தால் அதையும் வழிந்தோடச் செய்யவைத்தது. முரே போர்ட்டர் பூர்வீகக்குடிகளின் Mohawk tribesஐச் சேர்ந்தவர். காதலை மட்டுமில்லாது 'நெடுஞ்சாலை-16' என்ற பாடலில்  நெடுஞ்சாலைகளில் காணாமற்போன பெண்களுக்காகவும், 'இந்த மன்னிப்புப் போதுமா?' என்று நமது அரசு இங்குள்ள பூர்வக்குடிகளுக்குச் செய்த அநியாயங்களுக்கு  'மன்னியுங்கள்' என்று கேட்பது மட்டும் போதுமா என்றும் சில அரசியல்மயமாக்கப்பட்ட பாடல்களையும் உருக்கமாகப் பாடினார். 


பாடல்களுக்கிடையில் பேசும்போது, யாராவது தமது கலையாக்கங்களில் working செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்ளாதீர்கள். கலை என்பது playing. எம்மை நாம் மறந்து அதில் ஈடுபடுவது. அப்போதே அது அற்புதமான கலையாகின்றது எனவும் சொன்னார். கலையைச் செய்நேர்த்தியோடு ஒருவகை நுட்பமாக யாராலும் செய்துவிடமுடியும், ஆனால் அதை ஒரு விளையாட்டாக, கலை நிகழ்கின்றது என்பதை நாம் அறியாமல் அதை நிகழ்த்திக்காட்டுபவர்களே அரிய கலைஞர்களாக மிஞ்சுகின்றார்கள் என்பது காலம் நமக்குக் கற்றுத்தரும் பாடமாகும்.


அன்பே, என்னுடைய நல்லதொரு பொருள் நீ. உன்னை ஒருபோதும் போக விடப்போவதில்லை. நானொரு முரட்டு மனிதனாக இருந்தேன். எனக்கு இதயம் ஒரு கல்லாக இருந்தது. இப்போது எல்லாம் மாறிவிட்டதென 'Baby you're a good thing' என்ற பாடலை முரே பாடியபோது நாம் உற்சாகத்தின் நிலைக்கு வந்திருந்தோம். நிறையச் சோடிகள் அந்த அழகிய மாலையை நடனமாடி அழகாக்கத் தொடங்கியிருந்தனர். 


இன்று எழுத்துக்கு மட்டுமில்லை, இசை, ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கும் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நம்மால் பொறுமையாக நின்று நிதானித்து இரசிக்கமுடியாமல் இருப்பதாகும். கலை என்பது உடனே எங்களுக்குள் தங்களை உள்ளிழுத்துக்கொள்ளாது. நிறையப் பரிசோதனை செய்யும், பரீட்சித்துப் பார்க்கும், சிலவேளை குழப்பமடையவும் செய்யும். பின்னர்தான் தனது கதவுகளைத் திறந்து உள்ளிழுத்துக்கொள்ளும். முதலில் சாதாரணமாகக் கேட்கத் தொடங்கிய முரேயின் இசையினுள் உள்ளிறங்கியபோது காதலியின் கரம்பற்றி நடப்பது போன்று இதமாய்த் தோன்றியது. மேலே  வானத்தில் நிலவும் அரைவாசியாக காலித்தபடி கூடவே நமக்குத் துணையிருந்தது.


நேற்றைய அழகிய மாலைக்கு நன்றி செலுத்த ஞாயிறு  காலை சைக்கிளை எடுத்து ஓடத்தொடங்கினேன். மெல்லிய குளிராக இருந்தாலும் உற்சாகமாக சைக்கிளை ஓடமுடிந்தது. இன்றைய காலை நமது தமிழாக்கள் நிதி சேகரிப்பிற்காய் ஏதோ ஒரு வருடாந்த நடைபவனி செய்துவிட்டு, பூங்காவில் Mr Local பாட்டுக்குச் சின்னப்பிள்ளைகளை விட்டு ஆடவைப்பதைப் புன்னகையுடன் கடந்துவந்தபோது முத்துராசா குமாரின் இந்தக் கவிதைதான் நிகழ்வுக்கு வந்தது.


டிஸ்கோ

.........................


இன்று இரவுதான்

கடைசிநாள் மண்டகப்படி

இறுதிப்படையலாக

டிஸ்கோ டான்ஸ் ஆரம்பித்துவிட்டது.

மேடைக்கு அருகிலேயே

சீரியல் பல்பு சாரத்தில் நிற்கிறார்

சங்கிலி கருப்புசாமி.

வீச்சரிவாளில் பல்புகள் எரியாமல் போக

ஆயுதமற்று நிற்கும் கருப்புவினால்

தெருவின் போர்த்திறனுக்கு 

இழுக்கென்று குதித்த படைவீரர்கள்

மைக்செட்காரனை வீழ்த்தக் கிளம்புகையில்

ஊமைவிழிகளிலிருந்து ஒலித்த

' ராத்திரி நேரத்துப்பூஜை' பாடலுக்கு

சினம் மறந்து ஆர்ப்பரிக்கத்தொடங்கினர்

நீண்ட காலம் கழித்து வெறுங்கைகளை

சொடக்கு முறித்த சங்கிலி கருப்பு

பாடலுக்கு முரட்டு விசிலாக அடித்தார்.

...............

(Sept, 2019)

மெக்ஸிக்கோ - செல்வரஞ்சினி

Thursday, September 03, 2020

வாழ்வியலின் எண்ணற்ற பிரச்சனைகளில் மனம் ஆழ்ந்து அமிழும் போதெல்லாம் காதலின் மெல்லுணர்வுகள் மட்டுமே கைதூக்கி கரைசேர்த்து விடுகின்றன. அல்லாடும் மனதை ஹீலியம் நிரப்பிய பலூனாக காற்று வெளியிடை அழைத்துச் செல்கின்றன.அப்படி ஒரு எண்ணப் பயணத்தை எனக்குள் விதைத்தவள் மெக்ஸிகோவின் அவள். படர்க்கையில் விளிக்கப் பட்டாலும் கூட படைப்பின் முன்னிலையில் விஸ்வரூபம் எடுப்பவள் அவள்தான்.


உலகில் ரசிப்புக்கு உரிய எதனையும் அதன் சோகத்தின் பக்கங்களோடும், எதிர்மறை எண்ணங்களோடும் எதிர்கொள்ளும் கதைசொல்லியான அவன் வளர்புப்பிராணிபோல வெறுமை ஒன்றையே கூட வைத்திருந்தாலும் கூட , பயணங்களிலும் வாசிப்பிலும் தன்னை மறந்தும் மறவாமலும் தேடலை விரும்புகின்றவன். அவனால் அதிகம் நேசிக்கப்பட்டவர்கள் ஆளுமையின் வசீகரமும், இயல்பாகவே மனஉறுதியும் கொண்ட இரு பெண்கள். இவர்களே தமது உரையாடல்களின் மூலம் வாசகருடன் நெருக்கமாகும் கதைமாந்தர்.


பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல, சந்தர்ப்பங்களைப் பொறுத்து எதிர்நிற்பவரை வீழ்த்தும் சாகசமும் வல்லமையும் படைத்தவர்கள் என்கிறார் இளங்கோ.உண்மைதான். இயற்கையையும், வாழ்க்கையையும் புரிந்து கொள்ளும் விதமும் , "இந்தக்_கணத்து_வாழ்வு_அழகானது" எனவே நிகழ்காலத்தில் வாழ்ந்து மகிழ் கொள்ளுங்கள் என்கிற அவர்களது அற்புதமான வெளிப்பாடும் ஒரு பெண்ணாக எனக்கும் பெருமிதத்தினை அளிக்கின்றன. அதே சமயம் இனிதான வாழ்வியல் இன்பங்களை எல்லாம் எமது ஆக்கிரமிப்பு எண்ணங்களாலும், உணர்வுகளினாலுமே சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்ற பேருண்மையானது வாசகருக்கு மனத்தெளிவினையும் தந்து நிற்பது சிறப்பானது.


பதினாறாவது பக்கத்தில் கடலில் அவளால் வீசப்பட்ட வலையில் மீனாகப் போனதென்னவோ கதைசொல்லியான ஆண்மகன்தான்.ஆனால் கதையில் ஆசிரியரது எழுத்து வன்மையெனும் மாயவலையில் சிக்கியது வாசகராக நானும்தான்.ஒரு ஆணால் எழுதப்பட்ட இந்த படைப்பு ஆணின் தன்முனைப்பையும், ஆதிக்கத்தையும் முன்னிறுத்துவதை விட பெண்மையின் கம்பீரத்தையும், கருணையையும் வெளிக்காட்டும் ஒன்றாக இருப்பது மனதுக்கு இதமானது. 


மெக்ஸிக்கோவின் இயற்கை வனப்பும், றொறண்டோ பனியின் கனதியும், தாயகத்தின் கடந்தகால கசப்பான நினைவுகளும், புத்தர்பெருமானின் தத்துவ முத்துக்களும், மாயன்களின் வாழ்க்கை வனப்பும் கதையின் பாதை எங்கும் ஆங்காங்கே சிதறிச் சிரித்துக் கொண்டிருக்கிறன. இது போதாதென்று புன்னகை தரும் இளங்கோவின் இதமான நகைச்சுவை மலர்களும், வரையறை தாண்டாத எழுத்தில் காதலின் காமரசங்களும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கின்றன.காதல் என்பதே வாழ்வாக வேண்டுமா அன்றி வாழ்வின் பகுதியாக வேண்டுமா என்ற கேள்வி கதையின் இறுதியில் எழுவது தவிர்க்க முடியாதது.


கதையை வாசிக்கும் போது மனதைக் கவர்ந்த பல வரிகளுக்கு பென்சிலால் மெலிதாக அடிக்கோடு இட்டுக் கொண்டே வந்தேன். பக்கங்கள் செல்லச்செல்ல கோடுகளும் கூடிக்கொண்டே சென்றன. இறுதி அத்தியாயங்களை நெருங்கிய போது வலிதான எண்ணங்கள் தந்த திக்பிரமையுடன் இயல்பாகவே கோடிடுவதைக் கைகள் நிறுத்திக் கொண்டன. 


நிஜம் எது நிழல் எது என்ற மயக்கத்தில் மனது மரத்துப் போன அந்தக் கணங்களில். "நெஞ்சுக்குள்_பெய்திடும்_மாமழை..." என்ற பாடல் வரிகள் அலைகளாய் மனதில் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. இதன் அர்த்தம் என்னவென்று கதையை முதலில் இருந்து இறுதிவரை அர்ப்பணிப்போடும், உள்ளார்ந்த அன்பின் வழிநின்றும் வாசித்தவர்களுக்குப் புரியும். வாழ்த்துக்கள் இளங்கோ. அருமை.


அடிக்கோடிட்ட_அழகிய_வரிகளில்_மிகச்சில


தற்செயல்களின் அழகியல் தருணங்கள்......


காதல் ஒரு சாம்பல் பறவை........


இலையுதிர் காலமென்பது இலைகள் மலர்களாகும் இன்னொரு வசந்த காலம்.........


பனியில் உறைந்த நதி ஒன்று உறைநிலை விலத்தி வசந்தத்தில் பாயத் தொடங்குவது போல......


விழுவதும் எழுவதும் வாழ்க்கையில் இயல்பு.ஆனால் நான் ஒரே இடத்தில் விழுந்து விழுந்து கொண்டிருக்கிறேன்.......


ஒருகாதல் எப்படி முகிழ்கிறதோ அது போலவே எந்தப்புள்ளியில் அது முற்றுப் பெறுகிறது என்பதை எளிதாக அறிய முடியுமா........?


பிரியும் நாளோடு பிரிதல் நிகழ்ந்து முடிந்து விடுவதில்லை......


இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் நிற்கும் ஒருவருக்கு ஒரேயொரு அணைப்பு போதும்.அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்........


எவ்வளவு காயங்கள் வாழ்வில் வந்தாலும் பெண்கள் இல்லாத வாழ்வு சாத்தியப்படாதென ஆசீர்வாதிக்கப் பட்டிருக்கிறேன்.........


எத்தனையோ மழைத்துளிகளுக்கிடையிலும் அவள் கூந்தலில் இருந்து இறங்கி என் நெஞ்சு நனைத்த துளியை எனக்குரிய துளியெனப் பத்திரப் படுத்திக் கொண்டேன்


மனம் நெய்யப் போகும் எல்லாப் புதிர்களில் இருந்தும் என்னைக் காப்பாற்றுபவளாக அவள் இருப்பாள்.....

........................................