கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

On the Road

Sunday, November 22, 2015


சாலி என்கின்ற ஓர் இளம் எழுத்தாளனின் எல்லையற்ற பயணமே இத்திரைப்படம். எழுதுவதற்கான அனுபவங்ளுக்காய் 'ஒழுக்கம்' எனச்சொல்லப்படும் எல்லாவற்றையும் மீறி, தெருக்களில் பயணிக்கின்ற குறிப்புகளின் வழியே காட்சிகள் படிமங்களாகின்றன. ஒரு எதிர்பாராத சந்திப்பில் சாலி, டீனைச் சந்திக்க கூடவே அவர் ஒரு பயணத் தோழமை ஆகின்றார். சாலி, தான் தெருக்களில் கடந்துபோகும் அனைத்து அனுபவங்களையும் -டீனின் சொந்த வாழ்க்கை உட்பட- பதிவுசெய்கின்றார். அளவற்ற குடி, எல்லையற்ற போதைப்பொருள் பாவனை, தற்பால், கூட்டுக்கலவி உள்ளிட்ட கட்டுக்கடங்கா காமமென 'ஒழுக்கம்' என வரையறுக்கப்பட்ட அனைத்து மதிப்பீடுகளையும் மீறுகின்றதாய் அனுபவங்கள் விரிகின்றன. தோழமையிற்காய் தன் மனைவியின் அன்பை நிராகரிக்கின்ற, தன் காதலி விரும்புகிறார் என்பதற்காய் நண்பனையும் படுக்கையறைக்குள் அழைக்கின்ற, நம் கற்பனையிற்கும் அப்பால் இருக்கின்ற மனிதர்கள் இத்திரைப்படத்தில் வந்துகொண்டேயிருக்கின்றார்கள்.

அப்படியிருந்ததும் ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் இந்த நட்பு மெக்ஸிக்கோப் பயணத்தில் நிராகரிக்கப்படுவதும், அதை இன்னொருவிதமாய் சாலி நியூ யோர்க்கில் வைத்து நுட்பமாய் பழிவாங்குவதும், கட்டுக்கடங்காத இளமை வாழ்வு ஒரு 'பக்குவமான' நிலையை நோக்கிச் சென்றடைகின்ற தருணங்கள் அவை. ஆனால் அந்தக் குற்றவுணர்வே சாலியை 'பேய்த்தனமாய்' ஒரு நாவலை எழுதவைக்கிறது. அது இன்னொருவகையில் நண்பனின் கடந்தகாலத் தோழமையிற்கு மனம் கனிந்து நன்றி கூறுகின்ற நிகழ்வு எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஜாக்கின் (Jack Kerouac) சொந்தவாழ்வின் இன்னொரு தெறிப்பாகவே சாலி என்னும் எழுத்தாளன் இருக்கிறார். தனக்கு இயல்பாய் ஏற்படும் தற்பால் விருப்பைக் கண்டுகொண்டு, நண்பனுடன் பகிர்கின்ற அலன் கிங்ஸ்பெக்கும் இதில் வருகிறார். ஜாக்கின் நண்பனான டீனின் மீது அளவற்ற காதல் வைக்கும் அலன் கிங்ஸ்பெக்கின் காதல் நிராகரிக்கப்படுகிறது. 'தற்கொலையின் எல்லைவரை சென்று வாழ்வின் அழகான தருணங்களை விரும்புவதால் மீளவும் வாழ வந்திருக்கின்றேன்' என அலன் சொல்கின்ற இடம் அற்புதமானது. 21 வயதிலிருக்கும் அலன் உலகைத் திரும்ப வைக்கின்ற கவிதையை தன் 23ம் வயதில் எழுதிவிடுவேன் என்கின்ற அவரின் தன்னம்பிக்கை அவ்வளவு எளிதில் எவருக்கும் வாய்த்தும் விடாது.
ஜாக்கிற்கு அலனோடு இருந்த நட்பைப் போல, வில்லியம் பாரோஸோடு இருந்த தோழமையும் பலரும் அறிந்ததே. 'பீட் ஜெனரேசனில்' இவர்கள் மூவரின் பங்களிப்பும் முக்கியமானது. ஜாக்கின் On the Road போல, வில்லியம் பாரோசின் Naked Lunchம், அலன் கிங்ஸ்பெக்கின் Howlம் 'அடிக்கடி 'பீட் ஜெனரேசனிற்கு' உதாரணம் காட்டப்படுபவை.
எப்போதும் Road movie எனப்படும் genre என்னை வசீகரிப்பவை. அதிலும் ஒரு எழுத்தாளனாய் வரத் துடிப்பவனின் பயணம் இன்னும் கவரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மேலதிகமாய் இந்தத் திரைப்படத்தை இதே genre ஜச் சேர்ந்த 'மோட்டார் சைக்கிள் குறிப்பு'களை இயக்கிய வால்டர் சாலிஸ்சே திரைப்படமாக ஆக்கியுமிருக்கின்றார் என்பதால் இன்னும் உற்சாகத்துடன் பார்க்க முடிந்தது. சாலியினதும், டீனினதும் தெருப்பயணங்களில் கூடவே பயணிக்கின்ற மரிலூவாக நடித்திருக்கின்ற Kristen Stewart அப்படி அசத்துகிறார். Twilight போன்ற வகைப்படங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்கின்ற விம்பத்தை மிக எளிதாக Kristen இதில் உடைத்தும் விடுகிறார்.
ஜாக் தொடர்ச்சியாக எழுதிய மூலப்பிரதி பல்வேறு திருத்தங்களின் பின்னரே, முதன்முதலாக நூலாக அச்சிடப்பட்டது. அண்மையில் இந்நாவலின் 50வது வருட நிறைவு ஆண்டில், அசல் பிரதி வெளியிடப்பட்டிருக்கிறது. மூலப்பிரதியில் விலத்தப்பட்ட காமம் சார்ந்த பகுதிகளும், உண்மையான நபர்கள் (முதற்பதிப்பில் மாற்றப்பட்டிருக்கின்றன) விபரங்களும் இப்போது எல்லோரின் பார்வையிற்கும் பொதுவில் வெளிவந்திருக்கின்றன. இப்படமும் அந்த மூலப்பிரதியை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கின்றது. Bernardo Bertolucciயின் 'The Dreamers' ற்குப் பிறகு இந்தளவு காமம் ததும்பும் காட்சிகளை இந்தப் படத்திலேயே பார்க்கின்றேன்.
எழுதுவதற்காய், எழுத்தாளனாய் மாறுவதற்காய் இப்படி முழு வாழ்க்கையையும் பணயம் வைக்கவேண்டுமா எனக் கேள்விகள் நமக்குள் எழலாம். ஜாக் போன்றவர்களின் சொந்த வாழ்க்கையை விட, அவர்கள் தம்மை அழித்தெழுதிய பிரதிகள் நாம் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாதவை. அதுவே நம்மை ஜாக் போன்றவர்களை வியப்புடன் பார்க்க வைக்கிறது; மனம் நெகிழ்ந்து அவர்கள் மீது இன்னும் காதல் கொள்ளச் செய்கிறது.

பயணக்குறிப்புகள்- 10 (India)

Thursday, November 19, 2015

-முரண்களுக்குள் விரியும் அழகிய தருணங்கள்

நானும் ஹசீனும் குடநாட்டு உணவகமொன்றில் பொளிச்சமீனையும் புட்டையும் உருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்தார், ஷோபா சக்தியோடு நிற்கின்றோம் வருகின்றீர்களாவென்று. ஷோபாவும், ஹசீனோடும் என்னோடும் பேசினார். அடுத்தநாள் காலையே இராமேஸ்வரம் பக்கமாய் அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் படப்படிப்பிற்குப் போகவேண்டியிருக்கிறது என்றார். சிலநாட்களில் ஹசீன் இலங்கையிற்கும், ஓரிரு வாரங்களில் நான் கனடாவிற்கும் திரும்பவேண்டியிருந்ததால் இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாதென்று புறப்பட்டோம். நாங்கள் நின்றது இன்னொரு முனையில். ஒருமாதிரியாக திசைகளைத் துழாவித் துழாவி எக்மோர் பக்கமாய்ப் போய்ச் சேர்ந்தோம்.

நீலகண்டன், அமுதா, சித்தார்த் தவிர்த்து அங்கே ஏஞ்சல் கிளாடி, லிவிங் ஸ்மைல் வித்யா, கவின்மலர், சுகுணா திவாகர் என நிறைய நண்பர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். வழமைபோல ஷோபாவோடு அரசியலே பேசினேன். 'ஆயுத எழுத்து' வாசித்துவிட்டீர்களா?' என்றேன். அதுகுறித்து சற்று விரிவாகப் பேசினோம். நாமிருந்த 'நிலை' அப்படியென்பதால் அவற்றை இங்கே இப்போது பகிர்வதும் அவ்வளவு நல்லதுமல்ல. அ.முத்துலிங்கம் ஒருகதையில் கிரனைட்டின் கிளிப்பைக் கழற்றிவிட்டு எறிந்துவிளையாடியதை எழுதியதில் ஒரு 'லொஜிக்' இருக்கிறது என்றார் ஷோபா. தனது முகநூலில் இதுகுறித்து ஒருவிவாதத்தில் -ராகவனைத் தவிர- வேறு யாரும் விளக்கம் சொல்லலாம் என தான் எழுதியதையும் ஷோபா நினைவுபடுத்தினார்.

நல்லவேளையாக நான் அப்பொழுது 'பதினொராவது பேயை' வாசித்திருக்கவில்லை. தனக்கும் அ.முத்துலிங்கத்திற்கும் 'கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார்' நட்பு இருப்பதாகச் சொல்லும் ஷோபா இந்தக் கதையிற்கும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கலாம், யார் கண்டார்? அ.முத்துலிங்கத்தை ஒருகாலத்தில் ஏன் எங்களின் பிரச்சினைகள் பற்றி எழுதுவதில்லை என்று அவர்மீது நிறைய விமர்சனக்கல்லெறிந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், அவரின் 'பதினொராவது பேயை' வாசித்தபின், எறிந்த கற்களையெல்லாம் பொறுக்கியெடுத்து எனக்கு நானே எறிந்துகொள்கிறேன், தயவு செய்து எங்களின் பிரச்சினைகள் பற்றி கொஞ்சக்காலம் எழுதாமல் இருங்களேனென இறைஞ்சலாம் போலிருக்கிறது.

ஷோபா, பழைய இயக்கக் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். சில இயக்க ஆட்களின் பெயரைச் சொல்லிக் கேட்டபோது எனக்குத் தெரியாமல் இருக்கிறதெனச் சொன்னேன். 'இவன் இப்படித்தான் அந்தக்காலத்தில் நாங்கள் சின்ன ஆட்களாய் இருந்தோம் எனச் சொல்லித் தப்பிவிடுவான்' எனச் சொன்னார். நான் ஒருபோதும் எந்த விவாதத்திலும் இப்படிச் சொன்னதேயில்லை. நீங்கள் யாரோ சொன்னதை நான் கூறியதாய் நினைத்துக்கொண்டிருக்கின்றீர்கள் என மறுத்தேன். இதையே ஒரு 'சாட்டாக' ச் சொன்னால், ஷோபாவிடமும் இந்திய இராணுவத்திற்குப் பிறகு ஈழத்தில் இல்லாத உங்களைவிட எங்களுக்கு நிறையத் தெரியுமென அவர் கூறுவதையே நாங்கள் மறுக்கமுடியும். நான் இதையும் செய்யப்போவதில்லை.

இடையில் ஷோபா தொடர்ந்து நிறையப் பேசிக்கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த ஒரு நண்பர் 'என்ன ஆகாசவாணி முடிந்து ரூபவாஹினி தொடங்கிவிட்டதா?' என நகைச்சுவையாகத்தான் சொன்னார் என்றாலும் நான் அவரை இடைமறித்து, 'நாம் தமிழர் போன்ற எங்கள் அரசியலைக் குத்தகையிற்கு எடுத்த தமிழகத்து ஆட்கள் எதைக் கதைத்தாலும் கேட்கின்றீர்கள், ஏன் எங்களின் சொந்தக்குரலிலேயே நமது கதைகளைக் கேட்கக் கஷ்டமாயிருக்கிறது? எனக் கேட்டதும் நினைவிலிருக்கிறது..

அரசியல் கதைத்தால் இறுதியில் போகுமிடம் வெறுமையானதே என்று தோன்றியதாலோ என்னவோ நான் ஏஞ்சல் கிளாடி பக்கம்போய் அவரின் நாடக/திரைப்பட அனுபவங்களைக் கேட்கத் தொடங்கினேன். என்னை யாரென்று தெரியாமலே, நான் அவர் கொரியாவிற்குப் போனது, வாடகையிற்கு வீடு கிடைத்துவிட்டதா என ஏற்கனவே அறிமுகமானவர் போல நிறையக் கேட்க அவருக்குச் சற்று வியப்பாயிருந்தது.

கிளாடி, மிஷ்கினின் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் நடித்த தன் அனுபவங்களைச் சொல்லத் தொடங்கினார். தான் சந்தித்தவர்களில் அற்புதமான இயக்குநர் மிஷ்கின் எனவும், தன்னைத் தொடர்ந்து நிறையப் புத்தகங்களை வாசிக்க உற்சாகப்படுத்தியவர் அவர் எனவும் சொன்னார். எனினும் தான் அப்படியொரு புத்தகப்பிரியை இல்லை என்று சற்று கவலைப்பட்டார். புத்தகங்களை பெருமளவு வாசிக்காதிருப்பது ஒரு பிரச்சினையேயல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிடயங்களில் விருப்பம் இருக்கும். நீங்களொரு performer,அது உங்களுக்கு மகிழ்ச்சி தருமெனில் அந்தத் திசையிலே நீங்கள் பயணிக்கலாம்தான் அல்லவா எனச் சொன்னேன்.

தொடர்ந்து மிஷ்கினின் படங்கள் பற்றி உரையாடியபோது, நீலகண்டன் மிஷ்கினின் படங்கள் என்கவுண்டருக்கு ஆதரவானது போன்ற நிலைப்பாட்டை உடையவை. 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' என்பவற்றைப் பார்த்த மக்களிற்கு அது இததகைய நிலைப்பாட்டுக்கு இன்னும் ஊக்கமளித்திருக்கும் எனச் சொன்னார். அது, ஒரளவு சாத்தியம் உள்ளதென்றாலும் என்கவுண்டருக்கு ஆதரவான அவற்றைவிட மோசமான திரைப்படங்கள் தமிழ்ச்சூழலில் இருக்கினறதெனச் சொன்னேன். ஏதோ ஒருவகையில் கருணையை நம்மிடம் கோரும் மிஷ்கினின் கதாபாத்திரங்களினூடாக மிஷ்கின் என்கவுண்டருக்கு ஆதரவானவர் என்ற விம்பத்தை உருவாக்கிக்கொள்ள இப்போதும் என் மனது இடங்கொடுக்கவில்லை.

ஆனால், நேற்று 'என்னை அறிந்தால்' பார்த்தபோது,'பெரும் நடிகர்கள்' நடிக்கும் இதுபோன்ற படங்களே மிகவும் ஆபத்தானவை. இவை குறித்த எல்லாம் நாம் உடனே எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டும் என்றே தோன்றியது. கெளதம் வாசுதேவன் எடுத்த படங்களில் தெரியும் பொலிஸ்/இராணுவம் மீதான பெருமிதங்கள் எல்லாம் சகித்துக்கொள்ளத்தக்கவையல்ல. கெளதம் வாசுதேவன் இன்னொரு மணி ரத்தினம் போன்றவர். இருவரும் நம்மை நெகிழ வைக்கக்கூடிய காதல் கதைகளை மிகுந்த அழகியலாக எடுக்கக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் இப்படி அரசு/இராணுவம்/தேசியப் பெருமிதங்களில் திளைத்து எடுக்கும் படங்கள் அருவருக்கச் செய்பவை மட்டுமல்ல, கோபத்தை வரச்செய்பவை.

அதிலும் நான் மிகவும் மதிக்கும் ஒரு நண்பர், 'என்னை அறிந்தால்' பார்த்துவிட்டு 'இது காக்க காக்கவிற்கும் வேட்டையாடு விளையாடுவிற்கும் நடுவில், அடித்துத் தூள் பரப்புகின்றார் கெளதம்' என்று எழுதியபோது இந்தப்படத்தைப் பார்க்காமலே யோசிததேன்; ஏற்கனவே வந்த இந்த இரண்டு படங்களுமே ஆபத்தானவை. இந்த இரண்டு படங்களுக்கு இடையில் வருகின்ற 'என்னை அறிந்தால்' இன்னும் மிக ஆபத்தாக அல்லவா இருக்கும் என்று. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என்கவுண்டரை மிகமோசமாய் ஆதரித்த படம் என்பதோடு வேட்டையாடு விளையாடு, விளிம்புநிலையினரான தற்பாலினரையும் வில்லன்களாய் சித்தரித்தமையை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.

அழகியலை ஒரு காரணமாய்க் கொண்டு, நாம் அவை மூடிமறைக்கும் அரசியல் தவறுகளை மன்னிக்கவோ மறந்துவிடவோ முடியாது. அது நமக்கு நெருக்கமாய் இருக்கும் அ.முத்துலிங்கமாய் இருந்தாலென்ன, கெளதம் வாசுதேவனாய் இருந்தாலென்ன, நமது எதிர்ப்புக்களைப் பதிவு செய்தாகத்தான் வேண்டும்.

ஹொட்டலில் மதுபானவிடுதியை மூடும் நேரம் நெருங்கிவிட்டதென்றனர். இன்னும் சாப்பிடவில்லை என புகாரி ஹொட்டலுக்கு சாப்பிடச் சென்றோம். அங்கேயும் பொலிஸ் எப்போது உணவகத்தை மூடுவார்கள் என வெளியில் குழுமி நின்றார்கள். நான் பாஸ்போர்ட்டை எடுத்துவரவில்லை. கூட வந்த நண்பருக்கோ இந்தியாவில் நிற்பதற்கான ஒழுங்கான பத்திரங்களே இல்லை. தன் வாழ்நாளில் இப்படி நேரம் பிந்திச் செல்வது இதுதான் முதல் தடவை என்றார் பதற்றத்துடன். பொலிஸ் சைரன்களோடு நிற்கும் தெருக்களை விலத்தி விலத்தி சந்துகளுக்குள்ளால் போய்க்கொண்டிருந்தோம். அப்படி வழிமறித்தால் சூட்டிங் முடிந்து போகின்றோம். பாதை தவறிவிட்டதெனச் சொல்லச் சொன்னார். எனக்கு முன்பு இந்திய இராணுவ நேரம் இப்படித்தான் இயக்கக்காரர் மோட்டார்சைக்கிள்களில் குச்சொழுங்கைகளில் புகுந்து பாய்வது நினைவுக்கு வந்தது. ஆகக்குறைந்து அப்போது போலல்லாது , இப்போது சிறைக்குள் போட்டாலும், மண்டையில் போட்டுத் தள்ளமாட்டார்கள் என்கின்ற சிறு நிம்மதி இருந்தது.

ஷோபா என்னை தன் பிற நண்பர்களிடம் அறிமுகப்படுத்தியபோது, நானும் இவனும் (ஃபேஸ்புக்கில்) முரண்பட்டுக் கொண்டேயிருப்போம். ஆனால் இவனில் மதிப்பிருக்கிறது என்றே அறிமுகப்படுத்தினார். முரணியக்கமே நம்மை வாழ்வில் ஏதோ ஒருவகையில் முன்னகர்த்துகின்றது மட்டுமின்றி முரண் உரையாடல்களின் பின் ஒரு மெல்லிய நேசம் இருப்பதை நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுகொண்டிருக்கின்றேன்.

நான் ஏற்கனவே பொளிச்சமீனை புட்டோடு சாப்பிட்டிருந்தாலும் இன்னொருமுறை புகாரியிலும் சாப்பிட்டேன். நாங்கள் சாப்பிடச்சொல்லி வற்புறுத்தியபோதும் ஷோபா அப்போதும் சாப்பிடாமலே இருந்தார். பார்சல் கட்டிக்கொண்ட ஷோபா நிற்குமிடத்திற்குப் போயாவது சாப்பிட்டிருப்பாரா என்று சற்று கவலை வந்தபோது எந்த முரண் உரையாடலும் எனக்கு நினைவுக்கு வரவில்லை.

அலைந்து திரிந்தவனின் கதை

Friday, November 13, 2015

-டிசே தமிழன்

லெக்ஸ், மகிழ்ச்சியென்பது மனித உறவுகளால் மட்டும் ஏற்படுவதில்லையெனச் சொல்லியபடி, ஆபத்துக்கள் பற்றி  எதுவும் அஞ்சாது இயற்கையின் அடியாழத்தை நோக்கி  தேடிச் சென்றவன் நீ. இனி தப்புவதற்கு எந்த வழியுமில்லையென மரணத்தை துளித்துளியாக வரவேற்றபோதும் உன்னருகில் இருந்த தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டுக்கொல்லாது, உனக்கு மிக விருப்பமான இயற்கையைப் போலவே சாவையும் இயல்பாகவே ஏற்றுக்கொண்டாய். இறுதியில் கூட, இந்த வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன் எனத்தான் உன்னை 24 வயதில் மரணம் தழுவியபோது வாக்குமூலமாய் விட்டுச் சென்றாய். எந்தப்பொழுதிலும் வாழ்வின் மீதான அவநம்பிக்கையைப் பற்றி நீ பேசவில்லையென்பதால்தான் இன்னும் என் மனதிற்குள் ஆழப்பதியமாகிப் போகின்றாய்.

வசதியான குடும்பப் பின்னணி, பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பெறுபேறு என எல்லாம் கிடைத்தபோதும்,  ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் வாழ விரும்பியதில்லை. நீ விரும்பியது இயற்கையோடு ஒன்றித்து வாழும் ஒரு நாடோடி வாழ்க்கை. இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில், எல்லாவற்றையும் தமது உடமைகளாக்கும் காலத்தில் - முக்கியமாய் அமெரிக்கா போன்ற மேற்கு நாட்டில்- இது அவ்வளவு சாத்தியமானதுமல்ல. அறுபதுகளில் உச்சமும் ஈர்ப்பும் கொண்ட ஹிப்பிகளின் வாழ்தல் முறை எப்போதோ முடிந்துவிட,  நீ தொண்ணூறுகளில்தான்  உன்  அலைதலை ஆரம்பிக்கின்றாய்.

தேரோவும், ஜாக் லண்டனும், தால்ஸ்தோயும் உனக்கு மிக நெருக்கமானவர்கள் என்றாலும்,  'இளம் பயலே உன் வாழ்வில் செய்வதற்கு ஏதேதோ எல்லாம் இருக்கும்போது ஏன் இப்படி பாலைவனங்களில் அலைகிறாய்?' என ஒருவர் கேட்கும்போது, 'இந்த degree, career,  எல்லாம் 20 நூற்றாண்டின் கண்டுபிடிப்புக்கள், இவை எல்லாவற்றுக்கும் முன்னர் நமக்கு வேறொரு வாழ்விருந்தது' எனச் சிரித்தபடி சொல்வதற்கு நீ கற்ற புத்தகங்கள் மட்டும் காரணமாயிருக்காது.  நீ அவற்றைத் தாண்டியும் உன் சிறகுகளை விரிக்கத்தொடங்கி விட்டிருந்தாய் என்பதை எங்களுக்கு ஆழமாய் உணர்த்துகின்ற இடம் அது.

லெக்ஸ், நீ வனாந்தரங்களையும், பாலைவனங்களையும், ஆறுகளையும் தேடி எந்த இலக்குமில்லாது அலைவதற்கு முன், உனது சேமிப்பிலிருந்த 24,000 டொலர்களையும் ஒரு உதவி நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டு போனவன் என்பது மட்டுமின்றி, உனது கார் ஒரு ஆற்றுக்குள் சிக்குகின்றபோது காரை மட்டுமில்லை, உன்னிடமிருந்து எஞ்சிய காசையும் எரித்துவிட்டே செல்கின்றாய். பணம் என்பது மனிதர்கள் உருவாக்கிக்கொண்டதே அன்றி, அது எப்போதும் எம்மை தொந்தரவுபடுத்தியபடி, பிற மனிதர்களை புரிந்துகொள்ள தடங்கலாக இருக்குமென மிகத்தெளிவாகப் புரிந்து பணம் என்பதையே நிராகரித்தவன். எனினும் ஒருபோதும் நீயுனது நாடோடி வாழ்க்கையில் கிடைத்த எந்த வேலையைச் செய்ய மறுத்தவனுமில்லை. ஒருவகையில் கூட்டுழைப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடியவனும் கூட.

உன் பயணங்களில் சந்தித்த மனிதர்கள் எவருமே உன் இந்த இயல்பான நிலையை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ளவே இல்லை. ஆனால் அவர்களுடன் நீ பழகிய சொற்ப காலங்களுக்குள் -உனக்கு இயற்கையோடு இருக்கும் அளவற்ற காதலை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் கூட- உனது குதூகலமான நடத்தைகளால் கவர்ந்திழுக்கப்படவே செய்திருக்கின்றார்கள். ஆகவேதான் பாலைவனத்தில் தற்செயலாய் சந்திக்கும் ஒருவர், நீ அலாஸ்காவிற்கான உனது பயணத்தைத் தொடரும்போது, உன்னைத் தத்தெடுக்கின்றேன் என்கின்றார். உனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், அலாஸ்கா பயணம் முடிந்தபின் வந்தபின் இதுகுறித்து யோசிக்கின்றேன் எனப் புன்னகைக்கிறாய். உண்மையில் நீ அலாஸ்காவில் இருந்து திரும்பிவந்தாலும் இந்தத் 'தத்தெடுத்தலை' ஏற்கப்போவதில்லையென நாமனைவரும் அறிவோம்.

மிகுந்த வசதியான பெற்றோரை, உனக்கு மிக நெருக்கமான சகோதரியைப் பிரிந்துவந்து, அவர்களையே மாதக்கணக்கில் தொடர்பே கொள்ளாது காற்றைப் போல வீசும் திசைக்கேற்ப அலைந்துகொண்டிருந்த நீ எப்படி ஒரு தத்தெடுத்தலை, அதன் மூலம் உனக்கு வரப்போகும் சொத்தை ஏற்றுக்கொள்வாய்? எதையும் உடைமையாக்கக்கூடாது எனத்தானே, இருந்த சொற்ப பணத்தையே அலட்சியமாய் எரித்துவிட்டு நடந்துகொண்டிருந்தவன் என்பதை அவர் அறியார் அல்லவா? உனக்கு சொத்தென இருந்தவற்றை மட்டுமல்ல, உனது அடையாளங்கள் எல்லாவற்றையும் உதறித்தள்ளியவன். கடனட்டைகளிலிருந்து உன்னை யாரென காட்டக்கூடிய அடையாள அட்டைகள் வரை எல்லாவற்றையும் கிழித்தும் நெருப்பில் போட்டும் எரித்து கடந்தகாலச் சுவடுகளை உதறித்தள்ளியவன். சந்திக்கும் எவரும் உன் பெயரிலிருந்து உனது பூர்வீகத்தைக் கண்டுவிடக்கூடாதென்பதற்காய் அலெக்ஸ் என்ற புதிய பெயரைக் கூட நீயாகத்தானே தேர்ந்தெடுத்துக்கொண்டாய்.

னது இந்த அலைச்சலையும், இயற்கையின் மீதான பெருவிருப்பையும்,  நீ வழியில் சந்தித்த ஹிப்பிகளால் கூட முற்றுமுழுதாக விளங்கிக்கொள்ள முடியவில்லை அல்லவா? சிலவேளைகளில் உனது இளவயதும், எல்லாவற்றையும் முற்றுந் துறந்த நிலையும்,  அவர்களைக் கூட யோசிக்க வைத்திருக்கவும் கூடும். உனது வாழ்க்கையைப் பின் தொடர்ந்து பார்க்க விரும்பிய சிலர், நீயுன் சிறுவயதுகளில் பிணக்குப்பட்ட பெற்றோரையும், அவர்களின் பொய்களையும் கண்டுதான் இத்தகைய விளிம்பிற்குப் போயிருக்கலாமெனச் சொல்கின்றார்கள். அது ஒரு காரணமாய் இருக்கலாமெனினும், அது மட்டுமே இப்படி உந்தித்தள்ளியிருக்காதென நம்புகின்றேன். உன்னைவிட இன்னும் ஆழமான பாதிப்பிற்குப் பெற்றோரினால் உள்ளாக்கப்பட்ட எல்லோருமா இப்படி காசு, அடையாள அட்டையென எல்லாவற்றையும் எரித்துவிட்டு அடையாளமின்றி இயற்கையோடு ஒன்றிக்க விரும்புகின்றனர்? நிச்சயம் இதைத்தாண்டிய வேறு காரணங்கள் இருந்திருக்கவேண்டும். இயற்கையின் மர்மச்சுழல் உனக்குள் சுழித்தோடியிருக்கவேண்டும். அது உன்னை எதையும் கவலைப்படாது தன்போக்கில் இழுத்துச் சென்றிருக்கவேண்டும்.

அலெக்ஸ், நீ அலாஸ்காவில் இருந்து ஒருவேளை தப்பி வந்திருந்தால் நிச்சயம் உனது பெற்றோரை அவர்கள் செய்த தவறுகளைக்கூட மன்னித்து அரவணைத்திருப்பாய். உனக்கு நெருக்கமான தங்கை விழிகள் விரிய விரிய உனது அலைச்சலைப் பற்றி கேட்க இரவிரவாய் இருந்து விபரித்திருத்துமிருப்பாய். எனெனில் உனது பயணங்களோடு நீ ஒரு முதிர்ச்சியான ஆணாக வளர்ந்துகொண்டேயிருந்தாய். எல்லாவற்றையும் சகிக்க மட்டுமில்லை, எல்லோரையும் நேசிக்கவும் கற்றுக்கொண்டிருந்தாய். நீ மெக்ஸிக்கோ எல்லையைக் கள்ளமாய்த்தாண்டி திரும்பி வரும்போது பொலிஸ் உன்னை ரெயினிலிருந்து உதைத்து எறிந்தபோதும் அவர்களை மன்னித்துவிடக்கூடியவனாகவே இருந்தாய்.

ஆனால் எல்லாவற்றையும் உதறித்தள்ளியெறிந்த உனக்கு அதிகாரத்தைச் சுழித்துவிட்டுப் போகவும் தெரியும். ஆகவேதான் ஒரு நதியைக் கடப்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டுமென பொலிஸ் கூறும்போது, ஒரு நதியைக் கடப்பதற்கும் அனுமதி  வேண்டுமா என நம்பமுடியாதபடி திரும்பத் திரும்பக் கேட்கின்றாய். பின்னர் அவர்களின் அனுமதியைப் பெறாமல், நதியைப் படகில் உன்பாட்டில் கடக்கவும் செய்கின்றாய். இயற்கையைக் கூட தன் அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அரசுக்கு எதிராய் எறிந்த கல்தானன்றோ இந்த நதி கடத்தல்?

னது மென்மனதை அறிந்தவர் எவரும் உன்னை அவ்வளவு எளிதில் பிரிந்துசெல்லவும் விடமாட்டார்கள். பாலைவனத்தில் அலைகையில் ஒரு பெண்ணுக்கு உன்மீது காதல் வருகிறது. என்னையே முழுதாகத் தருகிறேன் என ஒரு கிறிஸ்மஸ் நாளில் அவள் கூறுகின்றபோது, 'பதினெட்டு வயதே தாண்டாத ஒரு சின்னப் பெண் நீ, இது நல்லதல்லவென' மறுக்கவே செய்கின்றாய். நாடோடிகளாய் அலைபவர்கள் எல்லோரும் உடல்/உடலுறவு போன்றவற்றில் தறிகெட்டுத்தான் இருப்பார்கள் என்ற பொதுப்புத்தியை இந்தச் செய்கையின் மூலம் நிராகரிக்கவே செய்கின்றாய். ஆனால் அந்தப் பெண்ணை அப்படியே மனமொடிந்துபோக விடவும் நீ விரும்பவில்லை. ஆகவேதான் அவளோடு சேர்ந்து அந்த நள்ளிரவில் எல்லோருக்கும் முன்னிலையில் உங்களிருவருக்கும் பிடித்த பாடல்களைப் பாடுகின்றாய். அவள் என்றேனும் ஒருநாள், இன்னொரு ஆணுடன் உறவில் இருக்கும்போது உன்னை நெகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்ளாமலா போகப்போகின்றாள் அலெக்ஸ்?

அலாஸ்காவில் மூன்று மாதங்களுக்கு மேல் கழித்தபின் உனக்கான உணவெல்லாம் தீர்ந்தும் விடுகின்றன. வேட்டையாடுவதற்கான விலங்குகளும் குறைந்துவிட்டன. நீ திரும்புவதற்கான வழிகளும் அடைபட்டுவிட்டன. பசி, உன் வாழ்வைக் கொஞ்சம் கொஞ்சமாய் தின்னவும் தொடங்கிவிட்டது. நீ பசிக்காய் சாப்பிட்ட அலாஸ்கா உருளைகிழங்கெனப்படும் ஒருவகை செடியிலிருக்கும் விஷம், நீ சாப்பிடும் எதையும் சமிபாடு அடைவதையும் தடுக்கின்றது.

மரணம் நிச்சயமான நிலைமையில் நீ எடுத்துக்கொள்கின்ற ஒரு புகைப்படத்தையும் இறுதியில் எழுதிய வாக்கியங்களையும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவும் முடியாது. இன்றும் அலாஸ்காவில் நீயொரு காலத்தில் தங்குவதற்கெனத் தேர்ந்தெடுத்த பஸ்ஸையும், நீ சென்ற வழித்தடங்களைத் தேடியும் பல நூற்றுக்கணக்கானவர்கள் சென்று கொண்டேயிருக்கின்றார்கள். ஒருவகையினருக்கு உன் வாழ்வு முட்டாள்தனமானதாகவும், இன்னொரு சாராருக்கு உன் வாழ்வு ஒரு வியத்தகு சாகசமாகவும் இருக்கின்றது. ஆனால் இந்த எல்லா வகையினரையும் தாண்டி உனது சகோதரி ஓரிடத்தில் குறிப்பிடுவதுபோல, சிலருக்கு 80 வயதிருந்தால் கூட சாத்தியமாகாத வாழ்வை, நீ 24 வயதிற்குள்ளேயே சாத்தியமாக்கிவிட்டுப் போயிருக்கின்றாய் என்பதல்லவா உண்மை.

எதையும் மேனிலையாகம் செய்வது எனக்குப் பிடித்தமானது அல்ல, அவ்வாறே நீ தேர்ந்தெடுத்த வழியையும் நான் மேனிலை செய்யப்போவதில்லை. வாழ்க்கை என்பதை எந்தவகையானது என்றாலும், ஒருவர் அவருக்குப் பிடித்தமாதிரி வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதே என்னளவில் முக்கியமானது. அந்தவகையில் உனக்குப் பிடித்த வாழ்க்கையை நீ வாழ்ந்திருப்பாய் என்றே எண்ணுகின்றேன். இயற்கையை நேசிப்பவன் அவ்வளவு எளிதில் தற்கொலையை நாடமாட்டானென -பட்டினியால் அணுஅணுவாய் வேதனைப்பட்டுத்தான் இறந்திருப்பாய் என்றபோதும்- உன்னை நீயே சுட்டுக்கொல்லவில்லை என்பது வாழ்வில் எதன்பொருட்டும் நம்பிக்கையை இழந்துவிடாதீர்களென நீ  பிறருக்குக் கற்றுத்தருகின்ற  ஒரு பாடம்.

என்றோ ஒருநாள் அலைந்து திரியும் ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுப்பேன் எனவே என் மனம் எப்போதும் சொல்லிக்கொண்டேயிருக்கின்றது. அது சாத்தியமாகுமா இல்லையா என்பதை நானறியேன். அப்படி சாத்தியமாகின், அலெக்ஸ் உன்னையும் என்னை வழிநடத்தும் ஒரு முன்னோடியாக எனக்குள் இருத்திக்கொள்வேன். உன் கதையை அறிந்துபோகின்ற வழித்தடங்கள் எங்கும் என் கண்களிலும் ஈரம் கசிந்துகொண்டிருந்ததை நீ மட்டுமே அறிவாய் அலெக்ஸ்.


(அலெக்ஸ் எனப்படும் Christopher McCandless பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபின் தனது நாடோடி வாழ்வைத் தொடங்குகின்றார். பயணத்தின் நீட்சியில் அலாஸ்காவில் பட்டினியின் நிமித்தம் மரணத்தை தழுவிக்கொள்கிறார். அவரது உடல் சிலவாரங்களின் பின் காட்டுமான் வேட்டைக்காய்ச் சென்றவர்களால் கண்டுபிடிக்கப்படுகின்றது. இவரைப் பற்றி  'Into the wild' என்ற தலைப்பில் முதலில் நூலாகவும், பின்னர் அதேபெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது)


(நன்றி: 'ஆக்காட்டி' -  இதழ் 08)