‘உலக வரைப்படம் எங்கும்’ (All over the map) எனும் பயணப் புத்தகத்தை பத்திரிகையாளராக இருக்கும் 40 வயதான லோரா எழுதியிருக்கின்றார். தனித்திருக்கும் அவர், தனது வயதை ஒத்த மற்றவர்களைப் போல கணவன், பிள்ளை போன்ற உறவுகளுக்கு ஆசைப்பட்டு அதைத் தேடுகின்றதாய் இந்தப் பயண நூல் ஆரம்பிக்கின்றது. அவர் இதற்கு முன் அவரது முப்பதுகளில் விவாகரத்தாகி இத்தாலிக்குப் போய், அங்கு சந்திக்கும் பிரான்சு பேராசிரியருடன் வரும் காதலும் காமமும், உணவுவகைகள் பற்றியும் ‘இத்தாலியன் விவகாரம்’ (An Italian Affair) என்ற நூலில் எழுதியிருப்பார்.
‘உலக வரைப்படம் எங்கும்’ நூல் லோராவின் 40 களில் தொடங்கினாலும் 45 வயதுக்கு அப்பாலும் அது நீண்டு செல்கின்றது. ஓரிடத்திலும் அமைதி காணமுடியாது ஒவ்வொரு இடமாக அலைந்துசென்று அங்கு நடப்பதை லோரா எழுதிக்கொண்டிருக்கின்றார். உண்மையில் இது பயண நூல் போலத் தோற்றம் அளித்தாலும், ஒரு மத்தியவயதுடைய பெண்ணின் தேடலும் அலைச்சலும் எனத் துணிந்து சொல்லலாம். அவர் தனது 45 வயதுக்கு வரும்போதோ ஒருவகையில் தனது நிம்மதியைக் கண்டடைகின்றார். எப்படியெனில், ஒரு குழந்தையைத் தன்னால் இயல்பாய் இனிப் பெறமுடியாது என்பதைத் தனது உடல் மாற்றங்களினூடாக விளங்கிக்கொள்வதுடன், அவரது 45வது பிறந்தநாளின்போது, அதுவரை சில வருடங்களாக அவர் டேட்டிங் செய்துகொண்டிருக்கின்ற காதலனும் லோறாவுடனான உறவை முறித்துக்கொள்கின்ற புள்ளிகளிலாகும்.
நாற்பதில் ஒரு ஆண் துணையைக் கண்டுபிடிக்கவேண்டும் என பதற்றங்களுடன் இருக்கின்ற லோரா பின்னர் 45ஆனபின், எவையெவை எப்போது நிகழுமோ அப்போது நிகழட்டுமென நினைக்கின்றார்.இத்தாலி அவருக்குப் பிடித்த இடமென்றாலும், அங்கேதான் அவரது அழகிய காதல் பிரான்ஸுப் பேராசிரியருடன் நிகழ்ந்ததென்றாலும், பத்துவருடங்களுக்குப் பிறகு வேறொரு ப்ரொஜக்ட்டுக்காய் ப்ளோரென்ஸ், ரோம், நேபிள்ஸ் என அலைகின்றார். ஆபிரிக்கா நாடுகளிலிருந்தும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வேலைகளைப் பெற்றுத்தருகின்றோம் என வரவழைக்கப்படும் பெண்கள் பாலியல் தொழில் செய்ய இத்தாலியில் நிர்ப்பந்திக்கபபடுவதை லோரா ஆய்வு செய்து எழுத இத்தாலி போகின்றார்.
அந்தப் பெண்கள் கடந்து வாழ்ந்து வாழ்வையும், இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் துயரங்களையும் பார்க்கும்போது, லோராவிற்கு தனக்களிக்கப்பட்டிருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வின் அருமை புரிகிறது. வயதாகின்றது என்பதால், ஆண் துணையைத் தேடுகின்ற தனது முயற்சி இவற்றுக்கு முன் எவ்வளவு அற்பமான சிறுவிடயம் எனப் புரிந்துகொள்கின்றார். இவ்வாறு பல்வேறு இடங்களுக்கு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதிக்கொடுக்கும் நிமித்தம் போகும்போது, பசுபிக் சமுத்திரத்தில் சமோகாவில் லோராவிற்கு ஒரு கொடும் நிகழ்வு நடக்கின்றது. அவர் அங்கே திருநங்கைகள் எப்படி வாழ்கின்றனர் என எழுதப்போகும்போது, ஒருநாள் மது அருந்தி, தன் வயமிழந்த வேளையில் ஒரு ஆணால் பாலியல் வன்புணர்வு செய்யப்படுகின்றார். அத்துடன் அவரது அந்த அழகிய தீவிற்கான பயணமே வேறு நிறத்தைப் பூசிக்கொள்கின்றது.
பாலியல் வன்முறைக்குள்ளாகும் எல்லாப் பெண்களையும் போல தனக்கு நிகழ்ந்ததை மூடிமறைக்கின்றார். தன்னில்தான் பிழை என்று தன்னைத்தானே குற்றஞ்சாட்டுகின்றார். அந்த நிகழ்விலிருந்து அவருக்கு முற்றுமுழுதாக வெளியே வர பல வருடங்கள் எடுக்கின்றன. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாலும், அவர் விரும்பிய ஆண் துணை கிடைக்காததாலும், அவரால் தொடர்ந்து எதிலும் முழுக்கவனத்தையும் செலுத்த முடியாதிருக்கின்றது. அவர் சிறுவயதிலிருந்தே தன்னுடைய பெரு விருப்பென நினைக்கும் எழுத்தைக் கூட தொடரமுடியாது அல்லறுகின்றார்.
எனினும் பொறுமையாக இருக்கும்போது, காலம் எல்லோருக்கும் கனிந்து வரவே செய்கிறது. அந்தப் பொறுமை இல்லாதபோது இருப்பதை இன்னுமின்னும் சிக்கலாக்கி, அரிய விடயங்கள் வரும்போது, அதை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டுவிடுகின்றோம்.
லோரா, மெக்ஸிக்கோவில் சான் மிகைல் டீ அலெண்டே நகருக்கு கிட்டத்தட்ட 35 வருடங்களுக்குப் பிறகு போகின்றார். அவர் பத்து வயதாக இருக்கும்போது அவரையும், அவரது சகோதரிகளையும் தாய் இந்த நகருக்குக் கோடைகாலத்தில் அழைத்துச் சென்று ஒரு மாதத்திற்கு மேலாகத் தங்க வைத்திருக்கின்றார். அவர் அங்கே தனது சிறிய வயது ஞாபகங்களைத் தேடுகின்றார். சிலவற்றைக் கண்டும் கொள்கின்றார்.
சான் மிகேல் டீ அலெண்டா - கலைகளையும், மாற்று வாழ்வையும் தேடுபவர்க்கு ஒரு சொர்க்கபுரியாக இருக்கின்றது. அதிலும் முக்கியமாய் பெண்களுக்கு. நாளாந்த வாழ்வில் சலிப்பையும், விவாகரத்துப் பெற்றவர்களும், புது வாழ்வைக் கட்டியெழுப்ப விரும்புகின்றவர்களும் இந்நகருக்கு வந்து கொண்டேயிருக்கின்றனர். லோரா அங்கே சந்திக்கும் பெண்கள் அவருக்கு திருமண வாழ்வு முக்கியமில்லை, வாழ்வதுதான் அருமையானது என தத்தமது வாழ்வினூடாகக் கற்றுக்கொடுக்கின்றனர்.
தனது ஆண்துணை இல்லாத வாழ்வை அல்லது இப்போது அது முக்கியமில்லையென நினைக்கு லோரா இந்நகரில் ஒரு பழைய வீட்டை வாங்கி, தனக்கு விரும்பியவாறு திருத்தியமைக்கின்றார். அது சில வருடங்களை எடுத்துக்கொண்டாலும், ஈற்றில் அது ஒரு பெரும் மன அமைதியை லோராவிற்குக் கொடுக்கின்றது. பிறகு மெக்ஸிக்கோவிற்கும், அமெரிக்காவின் கலிபோர்ணியாவிற்குமென தனது வாழ்வை அமைத்துக்கொள்கின்றார்.
மெக்ஸிக்கோவிலிருக்கும்போது லோராவின் விவாகரத்து வாழ்வின் பின், அவரை ஒளியூட்டிய இத்தாலியில் சந்தித்த பிரான்சுப் பேராசிரியருக்கு நோயொன்று வந்திருப்பதை அறிகின்றார். லோரா தொலைபேசியில் அவரோடு பேசுகின்றபோது, இன்னமும் லோரா தனித்தே இருக்கின்றாரா எனக் கேட்கின்றார். ஆம், எது எப்படி இந்தக்கணத்தில் இருக்கவேண்டுமோ அப்படியே இருக்கின்றேன் என்கின்றார்.
பின்னர் லோரா பாரிஸ் போகும்போது ஒருமுறை பேராசிரியரைச் சந்திக்கின்றார். அவர் நோய் முற்றி அவரின் கடைசிக்காலத்தில் இருக்கின்றார். பழைய நினைவுகள் இருவருக்குள்ளும் பீறிட, வாழ்வின் ஓட்டம்பற்றி ஒரு திகைப்பு வருகின்றது. பேராசிரியர், ‘நாம் ஒருகாலம் அழகிய வாழ்வை வாழ்ந்தோம்' என்கிறார். லோரா விடைபெற்றுச் சென்ற சில வாரங்களில் பேராசிரியர் இறந்துபோவதுடன் இந்தப் பயணப் புத்தகம் முடிகின்றது.
இருபது வருடங்களுக்கு முன் காதலையும் காமத்தையும் காட்டிய ஒருவர் முற்றுமுழுதாக இந்தப் பூமியிலிருந்து நீங்கிப்போகின்றார் என்பது எவ்வளவு துயரமானது. ஆனால் நாமெல்லோருமே ஒருநாள் இல்லாமற்போகின்றவர்கள் என்கின்ற வாழ்வின் நிலையாமை நம்மை இவ்வாறான துயரங்களிலிருந்து நம்மை உந்தித்தள்ளி மீதமுள்ள வாழ்வை வாழச் செய்கின்றது. ஒருவகையில் கடந்த காலத்தில் ஒருவரோடு இருந்த அழகியகாலத்துக்கு நன்றி செலுத்துவதாய் நிகழ்காலமோ எதிர்காலமோ தனக்கான தருணங்களைப் புதைத்து வைத்து நமக்காய்க் காத்திருக்கவும் கூடும் என்பதை லோராவின் இந்தப் பயண நூல் நமக்குத் தெரிவிக்கின்றது.
பயணம் பற்றி எந்த நூலாயினும் அது பயணத்தை மட்டும் பேசுவதில்லை, பயணம் செய்யும் ஒவ்வொரு தனிமனிதர்களுடைய உள்மனத்தேடல்களையும் அல்லாடல்களையும் முன்வைக்கின்றது. ஒருவகையில் இதை வாசிக்கும்போது மெல்லிய துயரமும், மன அழுத்தமும் வருவதை லோராவைப் போல நம்மாலும் உணரமுடியும். அழகான ஒரு வாழ்வை, அதை இல்லாத சிக்கல்களால் தேவையில்லாது நிரப்பிக்கொண்டிருந்த ஒரு பெண், தனக்கான அமைதியை பயணங்களினூடாகக் கண்டடைவதை இந்நூலை வாசித்து முடிக்கும்போது நாம் அறிகின்றோம்.
---------------------------------------------
(நன்றி: 'அம்ருதா' வைகாசி, 2019)