கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label இலங்கைக்குறிப்புகள். Show all posts
Showing posts with label இலங்கைக்குறிப்புகள். Show all posts

இலங்கைக் குறிப்புகள் - 06

Thursday, April 12, 2018

சீன் அக்கரைப்பற்றிலிருந்து எனதும், றஷ்மியினதும் நூல் நிகழ்விற்காக கொழும்பு வந்திருந்தார்.  நிகழ்விற்கு அடுத்தநாள் -திங்கள் மாலை- ஊருக்குத் திரும்புவதாக இருந்த அவர் என்னையும் கூட வருகின்றீர்களா எனக்கேட்டார்.  சந்தர்ப்பங்கள் ஒருமுறையே தட்டும் (காதலிற்கு மட்டும் விதிவிலக்குக் கொடுக்கலாம்) என்பதால் சரி என ஹசீனோடு புறப்பட்டு விட்டேன். கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று ஏழெட்டு மணித்தியாலங்கள் நீளும் ஒரு பயணம். நாங்களே இறுதியாக அந்தப் பஸ்ஸிலிருந்து இறங்கினோம். காலைச் சாப்பாட்டை உண்டுவிட்டு, அக்கரைப்பற்றின் பெருந்தெருவில் நடந்துகொண்டிருந்தோம். ஹசீன்  நகரின்  கடந்தகால வரலாற்றை , வெயில் இன்னமும் உடலை வருத்தாத அந்தக் காலையில் கூடவே சொல்லிக்கொண்டு வந்தார்.

சற்று நேரத்தில் றியாஸ் குரானாவும் ஹசீனின் வீட்டுக்கு வந்திருந்தார். றியாஸின் கவிதைகள் எனக்கு எப்போதும் பிடித்தமானவை. கனடாவில் ஒரு நண்பர் றியாஸ் ஏனிப்படி கவிதைகளை எழுதிக் குவிக்கின்றார் என்று விமர்சிப்பார். நானோ கொஞ்சமோ, கூடவோ எப்படி எழுதினாலும் அவை நல்ல கவிதைகளாக வருகின்றதா என்பதைப் பார்ப்பதும்தான் முக்கியம் என்பவன். இன்று புதிதாக எழுத வருகின்ற சிலரில் றியாஸின் பாதிப்பு இருப்பதைப் பார்க்கமுடியும், அந்தளவிற்கு அவரொரு தனித்துவமான  கவிதை மொழியை உருவாக்க முயன்றுகொண்டிருப்பவர். அதேபோல றியாஸ் எழுதும் விமர்சன விடயங்களில் எனக்குச் சிலவேளைகளில் உடன்பாடின்மையும் இருப்பதால் நான் அவ்வப்போது அவர் எழுதுவதைப் பின் தொடர்வதையும் சடுதியாக நிறுத்திவிடுபவனாக இருக்கின்றவன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நாங்கள் அக்கரைப்பற்றில் சந்தித்தபொழுதில் பர்ஹானின் நேர்காணல் 'ஆக்காட்டி'யில் வெளிவந்து கத்னா விவகாரம் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஹசீன், றியாஸுக்கும், பர்ஹானுக்கும் நல்ல நண்பர் என்பதால் இரண்டு பக்கமும் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எனக்கு இதுகுறித்து பெரிதும் தெரியாததால் அநேகமான பொழுதுகளில் அமைதியாகவே இருந்தேன். எனினும் நானும் ஹசீனும், றியாஸிடம் அவர் வைக்கும் விமர்சனங்களின் தொனியை வேறொருவகையில் வைக்கவேண்டும் என்று வற்புறுத்தியிருந்தோம் என்பதாயும் நினைவிருக்கின்றது.

றியாஸின் விவாத வகையால், அவர் ஏதோ கத்னாவிற்கு எதிரானவர் என்ற விம்பம் வந்துவிட்டாலும், நானறிந்தவகையில் றியாஸூம் அதற்கு எதிரானவராக இருக்கின்றார் என்பதாகவே நினைக்கின்றேன். அதுமட்டுமில்லாது அவர் பள்ளிவாசல்கள் மீதும், பெண்களை ஒதுக்குகின்ற வெளிகளைப் பற்றியதுமான விமர்சனங்களை வெளிப்படையாகவே என்னோடு கதைத்திருந்தார். இந்த கத்னா விடயம் தொடர்பாக நடந்த விவாதத்தில் முஸ்லிம்கள் மூடப்பட்ட சமூகம் என்ற பொதுப்புத்திக்கு எதிராக அங்கே progressive ஆன நிறையப்பேர் இருக்கின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்தியதே ஒரு முக்கிய விடயம் என்று நினைக்கின்றேன். அதுவும் ஷர்மிளா, பாத்திமா மஜீதா, அனார் போன்ற பெண்கள் பலர் எவ்வளவு உறுதியாக இதில் நின்றார்கள், வெளிப்படையாகப் பேசினார்கள் என்பதை இந்த உரையாடலில் நாம் அவதானித்திருக்கமுடியும்.

டுத்தநாள் காலை அக்கரைப்பற்றை உள்ளே சுற்றிப் பார்ப்போம் என ஹசீனும் நானும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டோம். உள் ஒழுங்கைகளால் அக்கரைப்பற்றுக்குள் திரிந்துகொண்டு இருக்கும்போது அது ஏனோ ஒருவகையில் எனக்கு யாழ்ப்பாணத்து கிராம ஒழுங்கைகளை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. எங்களோடு றியாஸூம் இணைந்துகொள்ள ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு அக்கரைப்பற்றுக் கடற்கரைக்குப் போனோம். காலையானாலும் வெயில் அப்படி எரித்துக்கொண்டிருந்தது.

கரைவலை போட்டுப் பிடித்த மீன்களை  இழுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அருகில் போய் துடித்துக்கொண்டிருந்த மீன்களைப் பார்த்தோம். இப்படிப் பிடிபடும் மீன்களுக்கு உடனேயே ஏலம் எடுப்பதற்கு கரையில் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். அன்று மாலை மருதமுனைக்கு என்னை றியாஸ் கூட்டிக்கொண்டு நண்பர்களைச் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அங்கே நின்ற அந்த நாள்களில் இலங்கை பெட்ரோலிய நிறுவனம்(?), ஒரு இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கைக்குள் வருவதை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்திருந்தது. எனவே பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு வந்திருந்தது. ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் இடத்திலும் மக்கள் பெட்ரோலைப் பெறுவதற்கு அல்லாடிக்கொண்டு பெரும் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள்.

அன்றைய மாலை றியாஸோடு மோட்டார்பைக்கிள் ஒரு நெடும்பயணம் செய்து மருதமுனையை அடைந்தோம். தெருவில் இரண்டு புறமும் வயல்கள் சூழ்ந்த இடங்களினூடு பயணிப்பது அழகு. எதிர்க்காற்று முகத்தில் அடித்தாலும், ஹெல்மட் பேசும் வார்த்தைகளை அவ்வப்போது தின்று செமித்திருந்தாலும், றியாஸோடு இலக்கியம் சார்ந்து நிறைய விடயங்களை ஆறுதலாகப் பேசிக்கொண்டு போக இந்தப் பயணம் உதவியிருந்தது.

மருதமுனைக் கடற்கரையில் அம்ரிதா ஏயெம், குர்ஷித்,  மூஷா விஜிலி, டனீஸ்ஹரன் போன்ற நண்பர்கள் காத்துக்கொண்டு நின்றார்கள். அவர்கள் அடிக்கடி இப்படி இந்தக் கடற்கரையில் குழுமி இலக்கியம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். சற்று நேரத்தில் அலறியும், அப்தும் ஜமீலும் வந்துசேர்ந்தார்கள். நண்பர்கள் சிலர் தமது நூல்களைத் தந்தார்கள். இதுவரை இவர்கள் எவரையும் சந்திருக்கவில்லை என்பதால் வித்தியாசமாக அனுபவமாக இருந்தது.திரும்பிவரும் வழியில் புதிதாக எழுதும் நம்பிக்கை தரும் படைப்பாளிகள் பற்றி நானும் றியாஸும் கதைத்துக்கொண்டு வந்தோம். சிலரது கவிதைகள் தனியே எழுதும்போது நன்றாகவும், கவிதைத் தொகுப்பாகும்போது அந்த நம்பிக்கையை  தக்க வைத்துக்கொள்ள தத்தளிப்பதையும் றியாஸ் குறிப்பிட்டிருந்தார்.

அன்றிரவு திருக்கோவில் கவியுவனைச் சந்திப்பதாக இருந்தது. எட்டு மணியளவில் எங்களை கவியுவன் தனது காரில் அழைத்துக்கொண்டு சாப்பிடக்கூட்டிச் சென்றார். திருக்கோவில் கவியுவன், ஓட்டமாவடி அறபாத் போன்றவர்கள் என் பதின்மங்களின் ஆதர்சங்கள். அவர்களின் கதைகளைக் கொழும்பில் இருந்தபோது சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்தபோது வாசித்திருக்கின்றேன்.

வியுவன் ஒரு நெடும் உறங்குநிலைக்குப் போய்விட்டு மீண்டும் வந்திருக்கின்றார். இப்போது புதுப்புதுத்தலைமுறைகள் வந்ததன்பின், அவருக்குத் தனது இடம் எதுவென்பது குறித்த ஒருவகைப் பதற்றம் இருக்கின்றதோ என்பதுபோல அவரோடு கதைக்கும்போது எனக்குத் தோன்றியது. எனினும் அவருக்கான ஓரிடம் என்னைப்போன்றவர்களிடம் எப்போதும் இருக்கும், அது என்றுமே பறிபோய்விடாதெனவே நானிப்போதும் நம்புகிறேன்.

இரவுணவைச் சாப்பிட்டபின், அவர் எங்களைக் கடற்கரைக்குக் கூட்டிச் சென்றிருந்தார். பயங்கரமான இருட்டாக இருந்தது. ஏற்கனவே அந்த இடத்திற்கு வந்திருந்த கவியுவனால் கூட சரியான இடம் தேடி உள்ளே நடப்பது கஷ்டமாயிருந்தது. அருகில் பிள்ளையார் கோயிலோ எதுவோ சற்று வெளிச்சத்தோடு இருந்தது. செல்பேசியின் வெளிச்சத்தைக் கொண்டு பற்றைகளை விலத்தியபடி நடந்துபோனோம். நட்சத்திரங்கள் உமிழ்ந்துகொண்டிருந்த அந்த இரவு வேறுவகையான அழகைத் தனக்குள் கொண்டிருந்தது.  மணலில் அமர்ந்து நாங்கள் கதைத்துக்கொண்டிருந்தபொழுதில் இப்படித்தான் ஒருநாள் தனது சகோதரர் கடற்கரையில் இருந்து இழுத்துக்கொண்டு செல்லப்பட்டு காணாமற்போனார் என்றொரு துயரக் கதையைக் கவியுவன் சொல்லத் தொடங்கினார். நமது முகங்களே தெரியாத இருட்டாயினும், எம் எல்லோரின் முகமும் நிச்சயம் துயரத்தில் இறுகிப்போய்தான் இருக்கும்.

பேரழிவு நம் கண்களின் முன் நடந்தும் கூட,  நாம் இன்னும்  பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கூட, அதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் தேவை என்று சமாதானம் சொல்லி ஏற்றுக்கொள்ள முடிகின்றது. எனினும் சக மனிதர்கள் தமது இழப்பினூடாகப் பேசுவதைக் கூட, கேட்கும் பொறுமையற்றவர்களாக,  உடனேயே சரி /பிழை அரசியலை உக்கிரமாகப் பேசுகின்ற பலரைப் பார்க்கின்றபோது இத்தகைய மனோநிலை நம்மிடையே எங்கிருந்து வந்ததென மிகுந்த அச்சமாகவே இருக்கும். ஏன் கொஞ்சமாவது மற்றவர்களின் வலிகளைப் புரிந்துக்கொள்ள முயற்சிக்ககூடாதென இவ்வாறு தமது அரசியல் நிலைப்பாட்டை பொதுவெளியில் நிலைநிறுத்த முயற்சிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் தோன்றும்.

இழப்புக்கள் நம் காலத்தைய பெருஞ்சோகம்.  இலங்கையைச் சேர்ந்த அநேகர் தமது நெருக்கமானவர்களை இந்த யுத்தத்தில் இழந்திருக்கின்றார்கள், பலர் இன்னமும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள்.  முன்னைய தலைமுறையான எஸ்.பொ, சண்முகம் சிவலிங்கம் போன்றோர் தமது தனயர்களை இழந்ததுபோல, திருக்கோவில் கவியுவன் உள்ளிட்ட பலர் தமது
சகோதர்களையும் இழந்திருக்கின்றார்கள். என்றுமே நிலைத்து நிற்கும் இந்த வடுக்களோடு வாழ்வதும்/வாழ்ந்துகொண்டிருப்பதும் அவ்வளவு எளிதும் அல்ல.

அந்த இரவில் நட்சத்திரங்களைப் பார்த்தும், கடற்கரை காற்றை நுகர்ந்தபடியும், மணலில் கைகளை அளைந்து கொண்டிருந்த
நம் எல்லோருடைய இரவும், பிறகு துயரத்தில் மிதக்கும் ஒரு இரவு போல ஆயிற்று.

இலங்கைக் குறிப்புகள் - 05

Thursday, March 22, 2018

நான் கொழும்பில் சென்றிறங்கிய இரண்டாம் நாளில், யாழ் நூலகம் எரியூட்டப்பட்டதைப் பற்றி எடுக்கப்பட்ட 'எரியும் நினைவுகள்' திரையிடப்பட இருந்தது. ஆவணப்படத்தை எடுத்த சோமீயும், எனது மற்ற நண்பர்களும் யாழிலிருந்து கொழும்பிற்கு இதற்காய் வந்திருந்தனர்.
நான், போல், இரவி எல்லோரும் சேர்ந்து மாலைத் திரையிடலுக்காகப் போவதாய்த் தீர்மானித்திருந்தோம். இடையில் நண்பர் போல், லக்சலவில் சில பொருட்களை வாங்க வேண்டுமென்றார். அக்காவின் வீட்டில் நின்ற என்னைக் காரில் ஏற்றிக்கொண்டு வந்த டிரைவர் அங்கிளுக்கு, நெரிசலுக்குள் லக்சலவைக் கண்டுபிடிப்பது கஷ்டமாயிருந்தது. 'அக்காவிடம் சொல்லப்போவதில்லை, உண்மையைச் சொல்லும், எதிரேயிருந்த விஹாரமகாதேவிப் பூங்காவில் உமது பழைய சிங்களக்காதலியைத்தானே சந்திக்கப் போகின்றீர்' என்பதாய் அவரின் பார்வை கேட்பதுபோல எனக்குத் தோன்றியது.
முன்வாசலில் இருந்த கஃபேயில் காற்றில் கேசம் அலையப் பேசியபடி இருந்த சிங்களப்பெண்களைக் கண்டவுடன், லக்சலவைக் கண்டுபிடிக்க பட்டகஷ்டமெல்லாம் எங்கோ ஓடி ஒளிந்திற்று. போன கொஞ்சநேரத்தில் மழையும் பெய்யவும் தொடங்கியது. கொழும்பின் மொன்சூனை, இந்த அழகிய 'ஆம்பல்களு'டன் இரசிக்கின்றேன் என்றாலும், அதைச் செவிமடுக்காது கனடாவிற்குக் கொண்டுபோக ஒரு புத்தர் சிலை வாங்குவதற்காய் என்னை போல் உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
'எரியும் நினைவுகள்' ஒரு நிறைவான நிகழ்வாக நடந்துமுடிந்தது. தர்மசிறி பண்டாரநாயக்கா இதை ஒழுங்குசெய்திருந்தார். திரையிடல் முடிந்தபின் அவரோடு சற்று நேரம் உரையாட முடிந்திருந்தது இதமாக இருந்தது. எனது கவிதைத் தொகுப்பை கனடாவில் வெளியிட்டபோது அவரது குறும்படத்தையும் திரையிட்டேன் எனவும் அவருக்குக் கூறினேன். நாம் தொலைவிலிருந்து பார்க்கும் ஆளுமைகளை நேரில் பார்க்கும்போது பதற்றத்தில் சிலவேளைகளில் என்ன பேசுவது என்பதும் தெரிவதில்லை. இதே நிகழ்விலேதான் சோமீயின் நண்பனான வசந்தவையும் சந்தித்தேன். வசந்தவோடான நட்பு பிறகு நான் இலங்கையில் நின்றபோது கொழும்பைச் சுற்றிப் பார்த்தல், நீர்கொழும்பு, காலி போன்ற பல இடங்களுக்குச் சேர்ந்து பயணித்தல் என்று நீண்டது.
அடுத்தநாள் காலையில் யாழ்ப்பாணத்திற்குப் போவதாக திட்டமிடப்பட்டிருந்தது. போலும், இரவியும் எனக்கான ரெயின் ரிக்கெட்டை வரும்போதே வாங்கிக்கொண்டும் வந்திருந்தனர். திரையிடல் முடிந்தபின் வசந்த, சோமீ உள்ளிட எல்லோரும் ஒரு மதுபான விடுதியிற்குப் போயிருந்தோம். நள்ளிரவின் பின்னாலும் நாரஹன்பிட்டிச் சந்தியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தோம். அருகிலிருந்த பொலிஸ் ஸ்டேஷனை எல்லாம் முன்னொருகாலத்தில் எப்படியெல்லாம் பயத்தோடு கடந்திருக்கின்றேன் என யோசித்துப் பார்த்துக்கொண்டிருக்க, வசந்த தன் காதல் கதைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
விடிகாலையில் கோட்டையிலிருந்து வவுனியாவிற்கான ரெயினைப் பிடித்தோம். தற்செயலாய் ரெயின் ஸ்ரேஷனில் இங்கிலாந்திலிருந்து வந்திருந்த கீரனைச் சந்தித்தோம். ஏதோ ஒரு தடங்கலினால் இரெயின் வவுனியா வந்துசேரக் கொஞ்சத் தாமதம் ஆனாலும், நண்பர்களோடு கதைத்துக்கொண்டு வந்த இந்தப் பயணம் நிறைவாக இருந்தது. யாழுக்கு ரிக்கெட் வாங்கியிருந்தாலும் வவுனியாவில் இடைநடுவில் இறங்கியதற்கு, இரவி தனது இயக்ககால நண்பர் ஒருவரைச் சந்திக்க விரும்பியிருந்தார் என்பதே காரணம்.
ஒருவகையில் அது நல்லதாகப் போய்விட்டது, அவரோடு வவுனியாவில் 19வது நாளாக நடந்துகொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்ணாவிரதப் போராட்ட இடத்திற்குச் சென்றோம். இரவியும் அவரது தோழரும் அந்த மக்களின் துயரங்களை அருகில் இருந்து கேட்டார்கள். எதுவுமே செய்யவியலாத கையாலாகத்தன்மையுடன், இவ்வாறான விடயங்களைக் கேட்பது மிகுந்த அவதி தருமென்பதால் நானும், போலும் சற்றுத் தொலைவிலேயே நின்றோம்.
அப்போது பாடசாலை முடிந்து எங்களைக் கடந்துபோன சின்னப்பிள்ளைகள் போல் தமிழ் பேசுவதைக் கண்டுவிட்டு, 'இஞ்ச பாருங்களடா வெள்ளைக்காரன் தமிழ் பேசுகின்றான்' என்று வியந்தார்கள். நான் 'இல்லை இவரொரு தமிழாள்' என்று அவர்களுக்கு விளங்கப்படுத்தப் பெரும் கஷ்டமாய்ப் போய்விட்டது.
பிறகு நாங்கள் அந்தத் தோழரோடு முல்லைத்தீவில் நடந்துகொண்டிருந்த மற்றொரு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காய் போராட்டம் நடந்த இடத்திற்குப் போனோம். போகும் வழியில் தேக்குகளால்(?) அடர்ந்து இருபுறமும் நிரம்பியிருந்த காட்டைக் காட்டி, இது புலிகள் தங்கள் காலத்தில் வளர்ந்தவை என்றார். பிளாஸ்டிக்கை தடைசெய்வதிலிருந்து, மரங்களைத் தேவையில்லாது தறிக்காமை, வெட்டினாலும் மீள்நடுகை என்பவற்றில் புலிகள் இயக்கம் மிகுந்த கவனத்தில் இருந்தது எனச் சொன்னால் ஒரு கூட்டம் புலிகளா எனப் பாய்ந்துவரும். ஒவ்வொரு இயக்கமும் என்ன நல்லதல்லாதவற்றைச் செய்தார்களோ அப்படியே நிறைய நல்லதையும் செய்திருக்கின்றார்கள் என்று கூறவரும்போது, நிதானமாகக் கேட்க எவருக்கும் பொறுமையில்லை என்பதுதான் ஒருவகையில் நம்முடைய அவலம்.
ன்று மாலையே மன்னாருக்கு ஒரு கூட்டத்திற்கு அந்தத் தோழருக்குப் போகவேண்டியிருந்தது. இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியைக் காட்டுகின்றேன் என்று எங்களைக் கூட்டிச் சென்றார். எங்கள் எவருக்கும் அங்கே போவது உவப்பான விடயம் இல்லையென்றாலும் அவருக்காகச் சென்றோம். வட்டுவாகல் பாலத்தைக் கடந்தபோது மக்கள் எப்படி இந்தத் தண்ணீருக்குள்ளால் இறங்கிவந்தார்கள் எனச் சொன்னார். பின்னர் முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு அருகில் போகும்போது, எப்படி இந்தக் குறுகிய நிலப்பரப்பில் இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்தார்கள் என்று சுட்டிக்காட்டினார் . வெட்டவெளியாக, பனை வடலிகள் சிறிதாக இருந்த பிரதேசத்தில் மிக அண்மையில்தான் மாபெரும் ஒரு அழிவு நடந்ததை நினைக்கச் சில்லிட்டது. அங்கேயிருந்து வெளியேற வேண்டும் போல மனம் பரபரத்துக் கொண்டிருந்தது. வாகனத்தோடு உள்நுழைந்த நம்மை காவலுக்கு நின்ற இராணுவமும் நிறுத்தி வைத்து விசாரித்தது.
அங்கிருந்து பின்னர் இலங்கையின் மேற்குக்கரையான மன்னாரை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினோம். இரவிக்கும், அவரது தோழருக்குமாய் அவர்களது நண்பர்கள் காத்திருந்தார்கள். நானும் போலும் அவர்கள் எல்லோரையும் பேசவிட்டு, ரோட்டில் அந்த இரவில் நடக்கத் தொடங்கினோம். பசிக்கவும் தொடங்க அருகிலிருந்த கடையில் பிஸ்கெட்டும், வாழைப்பழத்தையும் வாங்கிக்கொண்டு வந்து மூடியிருந்த ஒரு கடையின் குந்திலிருந்து பேசிக்கொண்டிருந்தோம். ரோட்டால் போய்க்கொண்டிருந்த சனம், வீட்டை விட்டுத்துரத்தப்பட்ட இரண்டுபேர் இதில் குந்தியிருக்கின்றார்கள் போன்ற பார்வையுடன் எங்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
இரவு மீண்டும் வவுனியா திரும்பியவுடன் விடுதியில் பசியோடு கொத்துரொட்டிக்கு ஓடர் கொடுத்துவிட்டுக் காத்திருந்தோம். அவர்கள் கொத்துரொட்டிக்குள் ஒரு tomato sauce போத்தலையே கொட்டிவிட்டுக் கொண்டு வந்திருந்தார்கள். 'தம்பிமார் இப்படியா கொத்துரொட்டி செய்வது?' எனத் தந்தவர்களிடம் கேட்டோம். எனக்கு அப்படிப் பசி கொஞ்சம் சாப்பிட்டேன், மற்றவர்கள் பெரிதாக அதைச் சாப்பிடவில்லை.
அம்மாச்சி உணவகம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தோம். அடுத்தநாள் காலையில் எழுந்தவுடனேயே ஓட்டோ பிடித்துக்கொண்டு வவுனியா அம்மாச்சியில் சாப்பிட்டோம். மிக நன்றாக இருந்தது. பெண்களால் நடத்தப்ப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த உணவகம் நல்லதொரு முன்னுதாரணம். அதன்பிறகு கிளிநொச்சி நோக்கி சில நண்பர்களைச் சந்திக்கப் புறப்படத் தயாரானோம்.
(Jan 26, 2018)

இலங்கைக் குறிப்புகள் - 04

Saturday, February 10, 2018

கொழும்பில் றஷ்மியினதும், எனதும் நூல்களை அறிமுகப்படுத்த ஷர்மிளா ஏற்பாடு செய்த கூட்டத்தில்தான் ஷெரினை முதன் முதலில் சந்தித்திருக்கின்றேன். அவரோடு ஆஸ்திரேலியாவில்(?) இருந்து வந்து ஒரு படப்பிடிப்புக்குழு நின்றதால், அந்தக்குழுவை வழியனுப்பவேண்டியதால் அவர் நிகழ்வு முடியமுன்னரே போயிருந்தார்.

பின்னர் ஒருநாள் அவர் தொலைபேசியில் சந்திப்போமா என அழைத்தார். அதுவரை ஷெரினை அவ்வளவு அறிந்திருக்கவில்லை என்பது நான் சற்று வெட்கப்படவேண்டிய விடயந்தான். கனடாவில் நீண்டகாலம் வசித்த ஒருவர்; ஜக்கிய அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்புக்களைச் செய்துவிட்டு, ஒருகட்டத்தில் இலங்கைக்குப் போய் ஏதாவது செய்வோமென 90களின் பிற்பகுதியில் சென்றிருக்கின்றார். பிறகு அங்கேயே ஒருகட்டத்தில் அப்படியே தங்கிவிட்டார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்/முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்றில்(?) சில வருடங்கள் தங்கியிருந்து தனது ஆய்வுகளை மேற்கொண்டவர். அவ்வாறான ஒருவரிடமிருந்து இன்னும் ஆழமான விடயங்களை தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகளில் நான் அறிந்துகொள்ள முடிந்தது.

மனித உரிமைகள் சார்ந்து நிறைய வேலைகளை ஷெரின் இப்போது செய்துகொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்கின்றபோதும், யாழில் தங்கிநின்று ஏதாவது செய்வோம் என்று விரும்பியபோது அங்கிருந்த அரசியல்வாதிகளோடு ஏற்பட்ட முரண்களையும் விபரித்துக்கொண்டிருந்தார். முக்கியமாய் யாரோ ஒருவரை நேர்காணல் சென்றபோது தான் கால்மேல் போட்டுக்கொண்டிருந்து கேள்விகள் கேட்டது அந்த நபருக்குப் பிடிக்கவில்லை என்றும் அதன்பிறகு இவர்களோடு இருந்து அங்கே இயங்கமுடியாது என தெற்கிற்கு நகர்ந்துவிட்டேன் எனவும் சொன்னார்.

நான் சந்தித்த சில மாதங்களுக்கு முன்னர்தான் இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையில் ஏதோ ஓர் அமர்வு நடந்து ஷெரீனும் பங்குபற்றியிருந்தார். சிங்கள குழுக்களுக்கு முன்னர் நமது தமிழ்க் குழுக்கள் எவ்வித தயாரிப்போ, காத்திரமான விவாதங்களையோ உருவாக்காது ஏதோ வந்தோம்/பேசினோம்/சென்றோம் என இருந்தார்கள் என்ற கவலையையும் பகிர்ந்துகொண்டார்.

நான் ஷெரினைச் சந்தித்தபோது, அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்/முஸ்லிம்/சிங்களப் பாடசாலை மாணவர்கள் போர் பற்றி தமது அனுபவங்களை எழுதிய, ‘மெளன வலிகளின் வாக்குமூலம்’ என்ற ஒரு நூலைத் தொகுத்திருந்தனர். தமிழிலும் சிங்களத்திலும் தயாரிப்புக்கள் முடிந்து நூல் வெளியிடுவதற்கு ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. இதற்கான செலவை ஏற்றவர்கள் ஆங்கிலத்தில் முதலில் வெளியிடக்கேட்டபோது, தமிழிலும்/சிங்களத்திலுமே முதலில்வெளிவருவதே முக்கியமென அதை மறுத்தோம் எனவும் ஷெரின் சொல்லியிருந்தார். ஷெரினது வீட்டிலே இன்னொரு நண்பரான ராதிகாவையும் சந்தித்திருந்தேன். சிங்கள ஊடகவியலாரும், சட்டம் படித்தவருமான ராதிகா தமிழ்ப் பிரதேசங்கள் பலவற்றுக்குப் பிரயாணித்துக்கொண்டிருப்பவராகவும், சிங்கள ஊடகங்கள் சிலவற்றில் இருக்கும் இனவெறியையும் பகிர்ந்துகொண்டிருந்தார்.

ஷெரின் மனித உரிமை விடயங்களையும் மட்டுமில்லாது, தனது உறவினர்கள் செய்யும் மனதிற்கு உவப்பாக இல்லாத சில விடயங்களையும் வெளிப்படையாக விமர்சித்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் தனது குடும்பம்/பிள்ளைகளை விட்டுவிட்டு தனியே இலங்கையில் இருந்து அவர் தனக்குப் பிடித்ததைச் செய்து கொண்டிருந்த அவர், ‘நான் இங்கு இறந்தால் இந்த வீட்டிலிருக்கும் சமையல்கார அம்மாவும், பாதுகாப்பிற்கு நிற்கும் ஒரு ஐயாவும் மட்டுமே தனக்கான ‘சொந்தங்கள்’ என்றார்.

ஷெரினோடும், ராதிகாவோடும் இருந்து உணவருந்திக்கொண்டிருந்தபோது, அநேக புலம்பெயர்ந்தவர்களுக்கு இருக்கும் ‘கானல் கனவான’ எப்போதேனும் ஒருநாள் இலங்கைக்குத் திரும்பிவருவதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருந்தேன். ‘நீ வருவதென்றால் பயப்பிடாது வா, எங்கள் நிறுவனத்தில் ஒருவேலை (ஆகக்குறைந்தது மொழிபெயர்ப்புச் சார்ந்து) தருகின்றேன்’ என்றார் ஷெரின். இலங்கை போன்ற இன்னமும் இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கப்படாத சூழலில் ஒரு சிறு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது என்பதே கஷ்டமானது. ஷெரின் கூட சில நாள்களின் முன், நல்ல பணியாளர்கள் என்றாலும், இனத்துவேஷம் வெளிப்பட்ட இரண்டு பணியாளர்களை வேலை நிறுத்தவேண்டி வந்தது என்றார்.

மது இருவருக்கும் பழக்கமான ஒருவரைப் பற்றிய பேச்சொன்று இடையில் வந்தது. அவரின் மீது மதிப்பிருந்தாலும், அவர் போர்க்காலத்தின் இறுதிக்கட்டம்வரை நின்றவர் என்கின்றபோதும் தன்மீது சுயவிமர்சனம் இல்லாது பல்வேறு அரசியல் கிளைகளில் மாறிமாறிப்போய்க்கொண்டிருக்கின்றார் எனச் சொன்னேன். அவரோடும் இணைந்து ஒரு வேலைத்திட்டத்தில் இயங்கிய ஷெரீன், தானும் இதுகுறித்து கேள்விகேட்டபோது, அந்த நண்பர் மனம் உடைந்து அழத்தொடங்கியபோது தன்னால் அதற்குப் பிறகு எதுவுமே அது குறித்துப் பேசமுடியவில்லை என்றார். உண்மைதான், இவ்வாறான விடயங்கள் உணர்ச்சிகரமானது மட்டுமில்லை, மிகுந்த சிக்கலானதும் கூட.

இதுவரை அறிமுகம் இல்லாத ஒருவரோடு ஏற்படும் நட்பென்பது சிலவேளைகளில் அழகானது. சில மணித்தியாலங்கள் நிறைய விடயங்களை ஆறுதலாக இருந்து கதைத்துக்கொண்டிருந்தபோது, நமது உரிமைகள் பற்றியும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றியும் உண்மையான அக்கறையோடு இருக்கும் ஷெரீன் போன்றவர்களைப் பற்றி ஏன் நமது சமூகத்தில் பரவலான அறிமுகம் இல்லை என்பது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அவரைப் போன்றவர்களுக்குத் தம்மை ‘விளம்பரப்படுத்த’ விருப்பமில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடியுமெனினும், அவரை அறிந்தவர்கள் அவர்களின் பணியை பரவலாகக் கொண்டு செல்லலாம். முக்கியமாய் எல்லா இனங்களோடும் சேர்ந்து இயங்கியபடி,, தமிழர்களின் உரிமை குறித்தும் விட்டுக்கொடுக்காது பேசும் ஷெரீன் போன்றவர்கள் நமது சமூகத்திற்கு முக்கியமானவர்கள்.

ஷெரின் தனது பணிகளுக்கிடையில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிணக்குகள், மனஅழுத்தங்கள், பின்னடைவுகள் என்பவற்றைப் பகிர்ந்துகொண்டிருந்தபோது, இவ்வளவு எல்லாம் நிகழ்ந்தபின்னும், நீங்கள் நம்பும் விடயங்களுக்காய் அதை நோக்கி இயங்கிக்கொண்டிருக்கின்றீர்களே, இப்படி எங்களைப் போன்றவர்களால் தொடர்ந்து இதற்குள் இருந்திருக்கவே முடியாது என்று சொன்னேன். ஆகவேதான் ஷெரீன் போன்றவர்களை எனக்கு நெருக்கமானவர்களாகக் கொள்ளமுடிகிறது போலும்.


(Jan 19, 2018)

இலங்கைக் குறிப்புகள் - 03

Monday, January 15, 2018

1.
நானும், ஹஸீனும் அக்கரைப்பற்றிலிருந்து எஸ்.எல்.எம். ஹனீபாவைப் பார்ப்பதற்கு பஸ்ஸில் ஏறினோம். இடையில் விபுலானந்தர் அழகியல் கல்லூரியில் ஜெய்சங்கரைச் சந்திப்பதென்றும் தீர்மானித்திருந்தோம். எனினும் இன்னொரு நண்பரைச் சுகம் விசாரித்துவிட்டு பஸ் ஏறவேண்டியதால், ஜெய்சங்கரோடு சந்திப்பதற்கான நேரத்தைத் தவறவிட்டிருந்தோம். இடையில் காத்தான்குடியில் இறங்கி மதியவுணவைச் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் எங்களை ஆசுவாசப்படுத்திவிட்டு ஓட்டமாவடியிற்குப் புறப்பட்டோம்.

ஹனீபா என்கின்ற இளமை ததும்பும் அருமை நண்பர் எமக்காய் முக்கிய சந்தியொன்றில் காத்திருந்தார். முதன்முதலில் சந்திக்கும் மகிழ்ச்சியில் அவரை ஆரத்தழுவினேன். அன்று மாலையே ஓட்டமாவடி அறபாத்தின் 'வாடிவீட்டு'க்குப்போய் நமது பிரம்மச்சாரிய வாழ்வை மீண்டும் வாழ்ந்து பார்ப்பது என்பது ஹனீபாவின் ஏற்பாடு. அறபாத் தன் காரில் வந்து எங்களை அழைத்துப் போகும்வரை, நாங்கள் ஒரு கடைக்குள் கடிக்க/கொறிக்கப் போயிருந்தோம்.

அங்கே வருகின்றவர்கள், போகின்றவர்கள் எல்லாம் ஹனீபாவிடம் சுகம் விசாரித்தபடி இருந்தனர். அந்தளவிற்கு படைப்பாளியாக மட்டுமில்லாது அந்த மக்களோடும் ஒரு நெருங்கிய நபராக ஹனீபா இருந்தார். இது நமது தமிழ் இலக்கியவாதிகள் பலருக்குக் கிடைக்காத ஒரு நல்லூழ் எனத்தான் சொல்லவேண்டும். கடையை வைத்துக்கொண்டிருப்பவரே, 'மாமா(?) எங்கள் வீட்டில் ஒரு புதுமரம் காய் காய்க்கின்றது என்னவென்று தெரியவில்லை. எப்படிக் கண்டுபிடிக்கிறது' எனக்கேட்டுக்கொண்டிருந்தார். இரண்டு பேரும் அந்த மர்மத்தை அவிழ்ப்பதில் போட்டிபோட்டுத் தோற்று அடுத்த நாள் அந்த மரத்தின் கிளையை நேரே கொண்டுவருவது, பிறகு கண்டுபிடிக்கலாம் என்ற முடிவுக்கு இறுதியில் வந்திருந்தனர். அவ்வாறு ஹனீபாவிற்கு ஊரிலிருக்கும் மனிதர்களை மட்டுமில்லை, உலகிலிருக்கும் மரங்கள் பற்றியும் நல்ல அறிமுகம் இருந்தது.

ஹனீபா தொடர்ந்தும் கடைக்குள் இருந்தால், தெருவால் கடந்து போகின்ற மதினிமார்களுக்கும் ஏதாவது உதவிகள் செய்யப்போய் எங்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்த நேரத்தில், நல்லவேளையாக அறபாத் வந்து எங்களைக் காப்பாற்றினார். வாடிவீடு எங்களுக்காய்க் காத்திருந்தது. அங்கும் ஹனீபா அறபாத் நட்டு வைத்திருந்த மாங்கன்றுகளுக்கும், கொய்யாக்களுக்கும் எப்படி அதை ஆரோக்கியமாய் வளர்ப்பதென்று ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார்.

ப்படியே நாங்கள் கதைத்துக்கொண்டிருக்கையில் மலர்ச்செல்வன், சஃரி போன்ற நண்பர்களும் வந்து இணைந்தனர். பஸ்சில் நீண்ட நேரம் வந்த களைப்பிற்கு அங்கேயிருந்த கிணற்றில் தண்ணீரள்ளிக் குளிக்க, சொர்க்கமாய் இருந்தது. மலர்ச்செல்வன் போன்ற நண்பர்கள் பிறகு விடைபெற்றுச் செல்ல, அறபாத்தும் எங்களுக்கான இரவுணவை வாங்கிவரப் போக, நானும் ஹஸீனும், ஹனீபாவும் இருந்து இலக்கியம், இன்னபிற என கதைத்துக்கொண்டிருந்தோம்.

எல்லாவற்றையும் விட, இலக்கியம் தரும் முக்கிய ஓர் அனுகூலம் என்னவென்றால், நாம் அவரவர்களுடைய வயதைக் கடந்து, சமவயது ஒத்தவர்களாக நினைத்துக் கதைக்கலாம், விவாதிக்கலாம் என்பது. அதுவும் ஹனீபா போன்று எங்களைவிட இளமையான எண்ணங்களுடன் இருப்பவர்களுடன் கதைப்பது என்றால் இன்னும் சுவாரசியமாகும். கி.ராவும், களனியூரானும் தொகுத்த 'மறைவாய்ச் சொன்ன கதைகள்' போல ஹனீபா அவ்வப்போது சொல்லிக்கொண்டிருந்த கதைகளுக்கு நானொரு 'தாசனாகி'ப் போய்க்கொண்டிருந்தேன். அதுமட்டுமில்லை ஹனீபாவிற்கு இருக்கும் அரசியல், இலக்கிய அனுபவங்கள் என்பவை நெடும் வரலாறு கொண்டவை என்றபடியால் இன்னும் சுவாரசியமாக அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

இரவுணவையும் சாப்பிட்டுவிட்டு, ஹனீபா சாய்மணைக் கட்டிலில் இருந்தபடி அவர் எழுத விரும்பும் புனைவைச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் புனைவில் யானைகள் ஒரு முக்கிய பாத்திரம் என்பதாலோ அல்லது என்னவோ, சாய்மணைக் கதிரையில் இருந்த ஹனீபாவை நான் வைக்கம் முகமது பஷீர் போல கற்பனை செய்துகொன்டிருந்தேன். எப்படியெனினும் அவரது இந்தக்கதையை எழுத வைத்துவிடவேண்டும் என்ற துடிப்புடன் ஹஸீன் அதற்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார். நான் அதை எனது தொலைபேசியினூடு காணொளியாக பதிவாக்கிக் கொண்டிருந்தேன். இரவு இன்னும் இளமையாக எங்களுக்கிடையில் ஓடிவிளையாடிக் கொண்டிருந்தது.

2.
னீபாவின் பிரசித்திபெற்ற 'மக்கத்துச் சால்வை' கதையை அநேகமானவர்கள் வாசித்திருப்போம். அவரின் முதலாவது தொகுப்பும் அதன் பெயரிலேயே 1992ல் வெளியானது. ஹனீபாவின் கதைகளை உதிரிகளாக வாசித்திருந்தாலும், அவரின் முழுக் கதைகளையும் 'அவளும் ஒரு பாற்கடல்' என்ற புதிய தொகுப்பிலேயே வாசித்திருந்தேன். 'மக்கத்துச் சால்வை'யில் இருக்கும் 15 கதைகளோடு, மேலும் 10 புதிய கதைகளை இணைத்து இத்தொகுப்பு வெளிவந்திருந்தது.

தான் எழுதிய கதைகளில் எல்லோரும் 'மக்கத்துச் சால்வை' பிடிக்கும் என்கின்றபோது தனக்கு 'மருமக்கள் தாயம் பிடிக்கும்' என்றார் ஹனீபா. மருமக்கள் தாயத்தில் ஒரு முஸ்லிம் பெண்மணி, தமிழ் இயக்கமொன்றுக்கு அடைக்கலமும் தேநீரும் கொடுத்து பராமரிப்பவர். அவர் ஊரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, உடல்நலமின்றி இடம்பெயரும்போது எல்லோரும் கைவிட்டபோதும் இயக்கப்பொடியள் வந்து தனக்கு உதவுவார்கள் என நினைக்கின்றார். அவர்களும் அவரைக் கவனிக்காது சாதாரணமாய் ஜீப்பில் கடந்துபோகின்றதோடு கதை முடிகையில் தமிழ் - முஸ்லிம்களுக்கான பிளவின் முதல் சமிக்ஞை காட்டப்படுகின்றது, மருமக்கள் தாயத்தில்.

நான் ஹனீபாவின் முதல் கதையை என்னுடைய 16 வயதில் வாசித்திருக்கின்றேன், அது 'வெள்ளைக் காகம்' என்ற தலைப்பில் சரிநிகரில் வந்த கதை. சந்திரிக்காவின் ஆட்சிக்காலமும், அவர் சமாதானத்துக்காய் கொண்டுவந்திருந்த இயக்கத்தின் பெயர் வெண்புறா இயக்கம் என்பதாலும், வெள்ளைக்காகத்தை வெண்புறாவோடு தொடர்புபடுத்தி (என் அன்றைய வாசிப்பு அறிவுக்கேற்ப) சமாதானத்தைக் கிண்டலடித்த கதையாக தொடர்புபடுத்தி என் தமிழாசிரியரான அ.இரவியிடம்  இதுபற்றிக் கதைத்தபோது, அவர் இதுவொரு முஸ்லிம் தலைவரை எள்ளல் செய்யும் கதையெனத் திருத்தியது நினைவு இருக்கிறது. அன்று சரிநிகரில் அது ஹனீபா என்ற பெயரிலா அல்லது வேறு புனைபெயரிலா வந்தது என்பது ஞாபகமில்லை. அவ்வாறு விருப்புடன் வாசித்த ஒருவரை மீண்டும் நெடுங்காலத்தின் பின் அவரைத் தேடிச்சென்று அதைச் சிலாகிப்பது என்பதுதான் எத்தனை அழகானது.

லக்கியத்தால் என்ன பிரயோசம் என்றுதான் பலர் கேட்பார்கள். அதில் முக்கியமானது இப்படி வயது வித்தியாசமில்லாது ஆளுமையும் அனுபவமும் உள்ளவர்கள், எங்களை ஈர்ப்பார்கள் என்பதும் ஒன்று. இலக்கியம் எங்கள் எல்லோரையும் ஒரே தளத்தில் வைக்கும். இதை வேறு எதுவும் எங்களுக்கு அவ்வளவு இலகுவில் தராது. வாசிப்பு என்பதே வயதை, இடத்தை கடந்து ஹனீபா போன்றோர்களுடன் எங்களை நட்புப் பேணவும், அவரைத் தேடிப்போய்ப் பார்க்கவும் வைக்கின்றது.

இன்னும் ஒன்று உள்ளது. இன்றைய காலத்தில் தமிழ்- முஸ்லிம் உறவானது மிகவும் இறுக்கமான கட்டத்தில் இருக்கின்றது. அரசியலினூடாக செல்வதை விட, கலை- இலக்கியத்தினூடாக இந்த உறவின் இறுக்கத்தைத் தளர்த்த முடியும் என்று நம்புகின்றவன் நான். ஈழத்தில் வாழ்ந்த காலங்களில் எனக்கு எந்த முஸ்லிம் நண்பர்களும் இருந்ததில்லை. 13 அல்லது 14 வயதில் புலிகள் எங்கள் பாடசாலையில் ஒரு பிரச்சாரக் கூட்டம் வைத்த பேசியபொழுதில், 'முஸ்லிம்களை ஏன் வெளியேற்றினீர்கள்?' என துண்டெழுதிக் கேட்டதைத் தவிர வேறு எதுவும் முஸ்லிம் சமூகம் சார்ந்து எனக்கு எதுவும் நினைவினில்லை. பிற எந்த தனிப்பட்ட அனுபவங்களுமில்லை.

அவ்வாறான ஒருவனுக்கு, இன்று முஸ்லிம்களிலும் நண்பர்கள் இருப்பதும், அவர்களும் என்னை 'மற்றதாக' உணரவைக்காமல் பழகுவதும் என்பது இந்த வாசிப்பினூடாகவே எனக்குச் சாத்தியமாயிற்று. இன்று மிகப்பெரும் பிளவு தமிழ்-முஸ்லிம் சமூகத்திற்குள் வந்துவிட்டாலும், ஹனீபா, ஹஸீன் போன்றவர்கள் எவ்வளவு உண்மையான அக்கறையோடு தமிழ் மக்கள் மீதும் இருக்கின்றார்கள் என்பதை நேரே பார்த்திருக்கின்றேன். அதேபோல அவர்கள் ஒருபோதும் முஸ்லிம்கள் தமிழ்மக்களுக்குச் செய்த சில பாதிப்புக்களையும் மறைத்ததுமில்லை. ஹஸீனோடு அக்கரைப்பற்றில் அலைந்த திரிந்தபொழுதுகளிலெல்லாம், முன்னர் இருந்த தமிழ் மக்களின் இடங்கள் இப்போது இல்லையென வரலாற்றை உள்ளபடி எனக்குக் காட்டிக்கொண்டிருந்தார். கைவிடப் பட்ட ஒரு இந்துக்கோயிலின் சிதைபாடுகள் உட்பட.

3.
னீபா இரவு நேரத்திற்கான தொழுகையைச் செய்யப்போகின்றேன் என்றார். பிறகு தொழுகை முடிந்து, வெக்கை அதிகமாய் இருந்ததால் நாம் எல்லோரும் வெளி விறாந்தையில் பாயைப் போட்டு கதைத்தபடி தூங்கத்தொடங்கியிருந்தோம். காலையில் அருகிலிருந்த பள்ளிவாசலில் பாங்கொலி கேட்டு நான் விழித்தபோது ஹனீபா ஏற்கனவே எழும்பி தொழுகையைச் செய்துகொண்டிருந்தார். பள்ளியில் தொழுகையொலி முடிக்கின்றபோது ஏதோ ஒரு கோயிலில் இருந்து அம்மன் பாடல்கள் ஒலிக்கத்தொடங்கியது. நாம் மனிதர்களை, மதங்களைத் தாண்டி புரிந்துகொள்ள இந்தக் காலையைவிட ஒரு அருமையான சந்தர்ப்பம் இருக்காது போல எனக்குள் தோன்றியது.

அக்கரைப்பற்றில் மூன்று நாள்கள் தங்கி நின்ற நான், அடுத்த நாள் கொழும்பு போவதாகத் தீர்மானித்திருந்தேன். ஹனீபாவும் ஹஸீனும் என்னை இலங்கைப் போக்குவரத்து பஸ்ஸில் ஒன்றில் ஏற்றிவிட என்னோடு வந்து பெருந்தெருவில் காத்து நின்றனர். பஸ் வர ஏறியமர்ந்தேன். அவர்கள் இருவரும் புள்ளிகளாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத்தொடங்கினார்கள். அருமையான மனிதர்களையும், அனுபவங்களையும் எனக்குள் சேகரமாகிவிட்ட கதகதப்புடன், நான் அவர்கள் தந்த நூல்களில் ஒன்றை எடுத்து விரித்து வாசிக்கத் தொடங்கியிருந்தேன்.

(Dec 25, 2017)

இலங்கைக் குறிப்புகள் - 02

Saturday, December 23, 2017

ட்டநாதனைச் சந்திப்பதென்று நாங்கள் முடிவெடுத்தது, நல்லூரிலிருந்த லிங்கம் கூல்பாரில் ஸ்பெஷல் ஐஸ்கிறீமையும், ரோல்ஸையும் சுவைத்துக்கொண்டிருந்த பொழுதில் என்றுதான் நினைக்கின்றேன். கூடவே கனடாவில் இருந்து வந்திருந்த நண்பர்கள் ரவிக்கும், போலுக்கும் சட்டநாதன் கல்வி கற்பித்த ஒரு ஆசிரியருமாவார். அந்த நேரத்தில் சட்டநாதனின் தொலைபேசி இலக்கம் எதுவும் எங்களிடம் இருக்கவில்லை. நேரே போய் அவரின் வீட்டைத் தட்டுவோம் என நினைத்து நடக்கத் தொடங்கினோம்.
லிங்கத்திலிருந்து, நல்லூர் வீதியில் இடதுபக்கம் திரும்பினால் இலகுவாகப் போயிருக்கக்கூடிய சட்டநாதனின் வீட்டை, மறுபுறத்தில் 30-40 நிமிடங்களுக்கு மேலாய் நடந்து சட்டநாதர் கோயில், முத்திரைச் சந்தி(?) என எல்லாம் கடந்து சென்றடைந்திருந்தோம். எல்லாம் எங்கள் ரவியை முற்றுமுழுதாக நம்பியதால் வந்த வினை. அவர் சார்ந்திருந்த இயக்கம் காரைநகர் கடற்படையிற்கு நடத்திய 'அட்டாக்' பற்றிய கதையை, போல் மீண்டும் நினைவூட்டியதால், இப்படி நெடுந்தூரம் நடந்தபோதும் கோபப்படாது ரவியை மன்னித்துவிட்டோம். சட்டநாதனின் வீட்டுக் கேற்றடியில் நின்று இவர்கள் இருவரும் 'சேர், சேர்' என்று கூப்பிட, பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் எல்லாம் எட்டிப்பார்த்தனரே தவிர, சட்டநாதனைக் காணவில்லை. பாவம் அவர், அன்று இவர்களைப் படிப்பித்தே உருப்படியாக வரவில்லை, இப்போது இவர்களைச் சந்தித்து என்ன பிரயோசனம் என்று உறங்கிக்கொண்டிருந்திருக்கலாம். சட்டநாதன் வீட்டில் இல்லையோ என்ற சந்தேகத்தை அவரின் வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த சைக்கிள், அவர் உள்ளே தான் நிற்கின்றார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தது.
ஒருமாதிரி சட்டநாதன் வந்து கேற்றைத் திறந்தார். அறைக்குள்ளே இருந்ததால் நீங்கள் கூப்பிட்டது கேட்கவில்லையெனச் சொன்னார். சட்டநாதனை நான் நேரில் முதன்முறையாக இப்போதுதான் சந்திக்கின்றேன் என்கின்றபோதும், அவருடைய கதைகளையும், அவரைப் பற்றியும் நெடுங்காலத்துக்கு முன்னரே அறிந்திருக்கின்றேன். என்னோடு பல்கலைக்கழகத்தில் படித்த தோழியொருவர் சட்டநாதனின் வீட்டுக்கருகில்தான் வசித்திருந்தார். சட்டநாதன் பற்றியும், அவரது சைக்கிள் பற்றியும் நிறையக் கதைகள் சொல்லியபடி இருப்பார். யாழில் தானிருந்த காலங்களில், இப்படி சைக்கிளில் போகும் சிறியமனிதரா இவ்வாறு அருமையான கதைகள் எழுதியிருந்தாரா என அவர் வியப்பார்.

ருவர் தன் பெயரிலேயே இருக்கும், ஒரு தெருவில் வசிப்பது என்பது அதிசயமல்லவா? சட்டநாதர் கோயில் இருப்பதாலேயே அது சட்டநாதர் வீதியாக இருக்க, சட்டநாதனும் அந்தத் தெருவில் வசித்துக்கொண்டிருப்பது ஒருவகை வியப்புத்தான்.
கூட வந்திருந்த நண்பர்கள் அவரிடம் கற்ற நாட்களை நனவிடைதோய்ந்தபடி இருந்தனர். சட்டநாதனும், தான் எழுதிய சில கதைகளின் பின்னணியைச் சுவாரசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஜெயமோகனின் கதைகள் அவருக்குப் பிடித்ததென நினைக்கின்றேன். ஆனால் ஏன் ஜெயமோகன் இப்படி தேவையில்லாத கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளில் சிக்குகின்றார் எனவும் அவர் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். சட்டநாதனைச் சந்திக்கமுன்னரே, வெளிவந்த அவரது இறுதித்தொகுப்பான பொழிவை வாசித்திருந்தேன். அவரது 'உலா', 'சட்டநாதன் கதைகள்' மற்றும் 'புதியவர்கள்' போன்றவற்றோடு ஒப்பிடும்போது இப்புதிய தொகுப்பில் வந்த கதைகள் சற்று பின் தங்கிவிட்டனவோ போல என் வாசிப்பில் தோன்றியது.
க.சட்டநாதன், அ.யேசுராசா போன்றவர்களையெல்லாம் நேரில் சந்திக்காவரை, அவர்கள் சற்று இறுக்கமானவர்கள் என்றொரு விம்பத்தை - எப்படியெனத் தெரியவில்லை- வாசிப்பினூடாக எனக்குள் உருவாக்கி வைத்திருந்தேன். சட்டநாதன் மிக நகைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்தார் என்பதோடு நன்றாகச் சிரித்தபடி கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
வெளியே விடைபெற வந்தபோது அவரது 'பிரபல்யமான' சைக்கிள் எங்களை ஈர்த்துக்கொண்டிருந்தது. அதைப் பற்றியும் ஒரு கதை எழுதியதாகச் சொன்னார். நாற்பது வருடங்களுக்கும் மேலாய் அதொரு நல்லதொரு துணையாக தன்னோடு இருப்பதாகச் சிலாகித்தார்.
வீட்டு வாசலடியில், சைக்கிளடியில், கேற்றடியில் போகின்றோம் போகின்றோம் என விடைபெற்றபடி, அவரை விட்டு விலக விரும்பாது கதைத்தபடி இருந்தோம். வெளியே மாலை மங்கி இருளத்தொடங்கியிருந்தது.

(Oct 19, 2017)

இலங்கைக் குறிப்புகள் - 01

Saturday, December 02, 2017

சந்திப்பு 01 & 02
அ.யேசுராசாவின் படைப்புக்களைப் பற்றி நெடுங்காலத்திற்கு முன்னர் அறிந்திருந்தபோதும், அவரது 'குறிப்பேட்டிலிருந்து' என்கின்ற பத்தி எழுத்துக்களின் தொகுப்பு வெளிவந்தபோதுதான் முதன்முதலாக நாம் அறிமுகஞ்செய்து கொண்டிருக்கவேண்டும். கொழும்பிலிருந்து நண்பரொருவரினூடாக அவர் அந்த நூலை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
என்னைப் போன்ற நிறையப் பேர், எங்கள் வலைப்பதிவுகளில் உற்சாகமாய்த் தொடர்ந்து எழுதியும், உரையாடிக்கொண்டிருந்த ஒரு காலம் அது. 'தமிழ்மணம்' வலைதிரட்டி பிரபல்யமாய் இருந்து, எழுதும் எங்களை அந்த நாட்களில் ஒன்றிணைத்திருக்கின்றது. அப்போது நடந்த விவாதமொன்றில் நண்பரொருவர், 'நீ அலை யேசுராசாவின் வாரிசாக மட்டுமே வரக்கூடியவன்' என்று எரிச்சலில் ஒரு புதுப் பட்டஞ்சூட்டினார். வேறு ஒன்றுமில்லை, 'நீங்கள் புதிதாய் எதையும் கற்றுக்கொள்ள விரும்பாது, ஒரு வறட்டு மரபு மார்க்சியவாதியாக இருக்கின்றீர்கள்' என அந்த நண்பரோடு தனவியதுதான் இந்தப் பட்டஞ்சூட்டலுக்குக் காரணம். எழுத வரும்போது நாமே நமக்கு எத்தனையோ புனைபெயர்களை வைத்துக்கொள்கின்றோம். அதுபோல பிற நண்பர்களால் இப்படியாக கோபத்தில் சூட்டப்படும் பட்டப்பெயர்களையும் விருப்பி ஏற்கவேண்டியதுதான்.
அ.யேசுராசா எனக்கு தனிப்பட்டு அனுப்பிய தொகுப்பின் காரணமாக, நெகிழ்ந்து அன்றையகாலத்தில் எழுதிய ஏதோ ஒரு பதிவை அவருக்கு காணிக்கை செய்திருந்தேன். 'அ.யேசுராசாவிற்கு...' என்று எழுதியதோடு ஏதோ வேறு சிலவற்றையும் அந்தக் காணிக்கையில் எழுதியிருந்தேன். பிறகு சற்று அதிகப்படியாக இருப்பதாய் அந்தச் சிறுபகுதியை நீக்கியபோது, நம்மைவிட்டு இளவயதில் ஈழநாதன், டிசே அது என்னவென வியாக்கியானம் கேட்டு எழுதியதும், அந்த நாட்கள் நகைச்சுவையாகக் கழிந்ததும் இனிய நனவிடைதோய்தல். இன்றிருக்கும் 'நூலகம்' தொடங்குவதற்கு உந்துசக்தியாக ஈழநாதன் இருந்ததுபோல, அ.யேசுராசா நண்பர்களுடன் திரையிடல்கள் செய்தபோது அவர்களுக்கென சொந்தமாக வாங்கிய புரஜெக்டருக்கும் ஈழநாதன் உதவிபுரிந்ததாகவும் நினைவு இருக்கின்றது.

னடாவில் நண்பர்களுடன் சேர்ந்து இலக்கியம் சார்ந்து உரையாடுவதற்காய் 'சுடருள் இருள்' என்ற நிகழ்வை நாங்கள் தொடங்கியபோது, நிகழ்வில் அ.யேசுராசாவின் 'குறிப்பேட்டிலிருந்து' தொகுப்பை எடுத்துப் பேச நாங்கள் விரும்பினோம். அரசியல் தளத்தில் செயற்பட்டு சலிப்புற்று எல்லாவற்றிலுமிருந்து ஒதுங்கியிருந்த மீராபாரதியைக் கொண்டு அந்த அறிமுகத்தை நிகழ்த்தியுமிருந்தோம். பின்னர் இலங்கையிற்கு 2012ல் சென்றபோது, அ.யேசுராசாவைச் சந்திக்க விரும்பியபோதும், எனக்குத் தரப்பட்ட தொலைபேசி இலக்கத்திலிருந்து அவரைத் தொடர்புகொள்ள முடியாதிருந்தது. இறுதியில் யேசுராசா கனடா வந்துதான், நான் அவரைச் சந்திக்கவேண்டும் என்று விதியிருந்திருக்கின்றது போலும். ஒரு நிகழ்வின் பொருட்டு கனடா வந்திருந்த யேசுராசாவை, நண்பர்கள் நாங்கள் ஒருநாள் 'கடத்திக்கொண்டு' போய் பூங்காவில் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பின்னர் சென்றவருடம் இலங்கை சென்றபோது, எப்போதும் அவரது நூல்களில் வாசித்து என்னை ஈர்த்துக்கொண்டிருந்த அந்த அழகான பெயரான '1ம் இலக்க ஓடைக்கரை வீதி' வீட்டிற்குப் போயிருந்தேன். கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்களுக்கு மேலாய் உரையாடிக்கொண்டிருந்திருப்போம். பிற விடயங்கள் எதிலும் பூச்சியம் என்றாலும், ஓரளவு வாசிப்பவன், திரைப்படங்களைப் பார்ப்பவன் என்பதால் அவை பற்றி யாரோடும் கதைக்க முடியும் என்று நம்புகின்றவன் நான். அந்த நினைப்பும், அ.யேசுராசா தான் பார்த்த திரைப்படங்களையும், வாசித்த புத்தகங்களையும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியபோது கரைந்துபோகத்தொடங்கியது. 
இவ்வளவு நிறையத் தெரிந்தவர் முன் நிகராய்ப் பேசுவதற்கு எனக்கு எதுவுமே தெரியாதென்ற வெட்கமே என்னைச் சூழ்ந்துகொண்டது. தான் அனுபவித்ததைப் பகிர்ந்ததோடல்லாது கொழும்பில் எங்கு இந்தத் திரைப்படங்களை, புத்தகங்களை வாங்கலாமென்றும் திசைகளைக் காட்டிக்கொண்டிருந்தார். அன்றைய மாலை, எவரோ ஒருவரினது குறும்படம் பார்க்க வரச்சொல்லியிருந்ததாய் அவர் தன்னைத் தயார்ப்படுத்த, நான் புறப்படத் தொடங்கினேன்.

சந்திப்பு 03
இம்முறை யாழ்ப்பாணத்தில் எனது நூல் வெளியீட்டைச் செய்ய விரும்பியபோது, நூல் பற்றியல்லாது ஒரு பொதுவான உரையை எங்கள் முன்னோடிகளிலிருந்து கேட்கவேண்டுமென எனக்கு விருப்பமிருந்தது. அப்படி செய்வதற்குப் பொருத்தமானவர் யாரென்று யோசித்தபோது, உடனே நினைவுக்கு வந்தவர் அ.யேசுராசா. ஏதாவது ஒரு தலைப்பில் உங்களுக்குப் பிடித்தமான வகையில் உரையாற்றுங்கள் என கேட்டபோது, அவர் தற்போது இவ்வாறான நிகழ்வுகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகியிருக்கின்றேன் எனத் தெரிவித்தார். அவரது தெரிவை மதிக்கின்றேன் எனக்கூறிவிட்டு இயன்றால் நிகழ்விற்கு வந்தால் மகிழ்ச்சியெனச் சொன்னேன்.
யாழிற்கு வந்தபோது நாங்கள் தங்கியிருந்த விடுதியும் குருநகரிலேயே இருந்தது. வாழ்ந்த ஊர், (பாழடைந்த) வீடு இருக்கின்றபோதும் ஓர் அந்நிய இடமாகவே யாழ்ப்பாணம் இப்போது வந்துவிட்டது என்பது சோகமான விடயந்தான். அப்படி குருநகரில் தங்கிநின்றபோது அ.யேசுராசாவின் ஊரும் அதே என்பதால், எங்கேயாவது பேசப்போவோம் என அவர் தனது மோட்டார்சைக்கிளில் வந்தார். அவரின் வண்டியில் பின்னால் நானிருக்க, நாங்கள் பண்ணைக் கரைக்குப் போனோம். சென்ற வழியில் எப்படி முன்னர் இவையெல்லாம் இருந்தன், இப்போது இந்த இடங்களெல்லாம் எப்படி மாறிவிட்டதெனச் சொல்லிக்கொண்டு வந்தார். ஏ.ஜே, எம்.ஏ.நுஃமான் போன்ற நண்பர்களுடன் தான் பேசிக்கொண்டிருந்த பண்ணைக் கடற்கரையின் நினைவுகளென நனவிடைதோய்தலில் அவர் போய்க்கொண்டிருந்தார். எம்.ஏ.நுஃமானின் 'நேற்றைய மாலையும் இன்றைய காலையும்' எழுதப்பட்ட சூழலை, தேநீர் அருந்திக்கொண்டு அந்த நண்பர்களோடு நடது பேசித்திரிந்த காலங்களென யேசுராசா என்னோடு பகிர்ந்தவை இனிமையான நினைவுகள். இருட்டாகியபோது பண்ணைக் கடற்கரையிலிருந்து வெளிக்கிட்டு நான் நின்ற விடுதியில் இருந்தும் பேசினோம். கிட்டத்தட்ட நான்கைந்து மணித்தியாலங்களுக்கு மேலாய்ப் பேசியிருப்போம் என நினைக்கின்றேன்.
எனது நூல் வெளியீட்டு நிகழ்விற்கு வருவாரா இல்லையா எனத் தெரியாதபோது, அந்தக் காலையில் அங்கே அவர் வந்திருந்தது எதிர்பாராதது. அந்த மகிழ்ச்சியை, அவரைக் கொண்டு எனது நூலை வெளியிட்டு கொண்டாடிக் கொண்டேன்.
ஒரு கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராக, பத்தியெழுத்தாளராக யேசுராசாவின் பயணம் நீண்டது. அதுமட்டுமின்றி 'அலை', 'திசை' போன்றவற்றிலும், 'மரணத்துள் வாழ்வோம்', 'பதினொரு ஈழத்து கவிஞர்கள்' போன்ற நூல்களைத் தொகுத்தவர்களில் ஒருவராகவும், அவரது பங்களிப்பு மறக்கமுடியாதது. அவ்வப்போது உறங்குநிலைக்குப் போனாலும், தொடர்ச்சியாக தன்னை புதுப்பித்துக்கொண்டு இயங்கிக்கொண்டேயிருப்பவர். அண்மையில் அவரது 'நினைவுக் குறிப்புகள்' தொகுப்பு வெளிவந்தும் இருக்கின்றது.
சில விடயங்களில் கறாரானவர் என்றும், நெருங்குவதற்கு அவ்வளவு எளிதானவர் அல்ல என்றும் யேசுராசா பற்றி வெளியில் ஒரு பொதுவான அபிப்பிராயம் இருந்தாலும், அவரோடு பேசும் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம், அவ்வாறில்லை எளிதாய் நெருங்கி அவரோடு உரையாடலாம் என்ற எண்ணமே எனக்குள் வந்தது. தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிரவேண்டும் என்ற பெருவிருப்பமே அவரிடமே மேலோங்கியிருந்ததை ஒவ்வொருபொழுதிலும் நான் அவதானித்திருக்கின்றேன்.
எனதும், எனக்குப் பின்னும் இருக்கின்ற தலைமுறைகள், நிறையக் கற்பதற்கும், எப்படி சோர்வின்றி கலை/இலக்கியம் சார்ந்து செயற்படுவது என்பதற்கும் அவரிடம் நிறைய விடயங்கள் இருக்கின்றன. யேசுராசாவும், எங்களைப் போன்ற தலைமுறைகளிடம் அவ்வப்போது வெளிப்படும் பொறுமையின்மையை, மூத்தவர் என்றவகையில் சகித்துக்கொண்டு திரைகளை விலக்கி, எங்களை நோக்கி இன்னும் நெருங்கி வரவேண்டுமெனவும் பிரியப்படுகின்றேன்.
இறுதியாக எனக்கு பிடித்த அவரது கவிதைகளில் ஒன்று:

பிறகு...
பிறகென்ன, எல்லாம்முடிந்ததுதான்,
'எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி'
சிலுவையி லெழுந்த ஏசுவின்குரலாய்
அவளின் முன்னால்,
அவனின் முன்னால்
நினைவினி லெழுந்த குரலொலியெல்லாம்
இற்று இற்றே மறைவதும்காணாய்.
நீண்டுவிரிகிற பாலை வெளியில்
எந்தப்பசுந்தரை தேடியலைவாய்?
ஒதுங்கிக்கிடக்கிற தனித்த தீவில்
எந்தப்படகைக் காத்தும் இருக்கிறாய்?
'எல்லாம் எப்போ முடிந்த காரியம்.'
14.1.1975
(நன்றி: 'அறியப்படாதவர்கள் நினைவாக' தொகுப்பு)
----------------------

Oct 14, 2017.
(ஓவியம்: றஷ்மி)