கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 41

Monday, July 08, 2024

 

'Star' படத்தை இப்போதுதான் பார்த்தேன். இது திரையங்கிற்கு வந்தபோது எழுதப்பட்ட எதிர்மறை விமர்சனங்களைப் போல, அவ்வளவு மோசமான ஒரு திரைப்படம் போலத் தெரியவில்லை. இதுவரை நான் கவினின் திரைப்படங்கள் (Dada, Lift உள்ளிட்ட) எதையும் பார்க்கவில்லை. தமிழ்த்திரைப்படங்கள் என்பதே இரத்தமும், கத்தியும், துப்பாக்கியுமென வன்முறைச் சுழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும்போது, இதில் கதை மட்டுமில்லை, திரைக்கதையும் நேர்த்தியாகக் கொண்டு வரப்பட்டது போலத் தெரிந்தது.


இது ஒரு சாதாரண மனிதனின் கனவுகளுக்கும், லெளதீக வாழ்க்கைக்கும் இருக்கும் இடைவெளியைப் பற்றிப் பேசுகின்றது. இப்படத்தில், பொதுவான நம் திரைப்படங்களுக்குரிய ஆண் பாத்திரமே மையமெனினும், உண்மையில் இந்தக் கனவுகள் கலைந்து போகின்றவர்கள் பெரும்பாலும் பெண்களேயாவர். நம்மோடு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்ற பெண்கள் பின்னர் திருமணம்/குடும்பம் என்று செல்கின்றபோது அவர்கள் முற்றிலும் வேறொருவராக மாறவேண்டியிருக்கும் என்பதைக் கண்டுகொள்கின்றோம். ஆகவே இந்தக் கனவுகள் ஒரு குறிப்பிட்ட பாலினத்துக்குரியது என்பதை மறந்து பார்த்தால், இத் நம் எல்லோரினதும் உள்மன உந்துதல்கள் எனலாம்.


என ஞாபகம் சரியென்றால், இந்தத் திரைப்படத்தில் வரும் நாயகன் தனது காதல் உறவுகளில் toxic ஆக இருக்கின்றார் என்கின்ற ஒரு முக்கிய குற்றச்சாட்டு முன்னர் வைக்கப்பட்டதென நினைக்கின்றேன். ஆனால் அது toxic ஆக இருந்தாலும் நாயகன் அதனைப் பின்னர் உணர்ந்து கொள்கின்றவராகக் காட்டப்படுகின்றது. அதன் நிமித்தம்தானே நாயகன் அவரில் அவ்வளவு பாசம் வைத்திருக்கும் தகப்பனிடம் கன்னத்தில் அறையும் வாங்குகின்றார். மகனின் கனவுகளுக்காய் சிறுவயது முதலே உந்துதலாக இருக்கும் தந்தையே கை நீட்டி அடிப்பது நாயகன் தன் இரண்டாவது காதலியைத் தனது கனவுகளில் நிமித்தம் அவளோடு இருக்க முடியாதென விட்டு விலகி வரும்போது அல்லவா? அது மட்டுமின்றி முதலாவது காதலியும் இவனை ஏதோ ஒருவகையில் புரிந்துகொள்வதால்தான், நாயகனின் இரண்டாவது காதலி தனது திருமணத்துக்கு நாயகனை அழைத்து வந்தற்காய் அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்கின்றாள்.

இந்த இரண்டு பெண்கள் மட்டுமில்லை, நாயகனின் கனவுகள் அடையமுடியாதவை யதார்த்தத்தில் காலூன்றி நிற்கின்றது என்று அடிக்கடி சொல்லும் தாயார் கூட ஒருவகையில் அவனைப் புரிந்துகொள்கின்றார். அவ்வாறுதானே பெரும்பாலான நமது அம்மாக்கள் நமது பலவீனங்களுக்கும், பொறுக்கித்தனங்களுக்கும் அப்பால் நம்மைப் புரிந்து கொள்கின்றனர். அந்தவகையில் இது கனவுகளோடு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனின் வாழ்வை 'நாயக' விம்பமாக்கி எல்லாவற்றையும் எளிதாக அடைந்துவிடுவதைக் காட்டுவதைத் தவிர்த்து இயன்றளவு யதார்த்ததுடன் ஒருவன் தனது கனவுப் பாதை நோக்கிச் செல்வதைக் காட்டுகின்றது எனச் சொல்லலாம்.

நட்சத்திரமாவது ஆவது கூட ஒரு பாவனைதான். அது எப்போதும் உதிர்ந்து போய் விடக்கூடியதென்று நம் எல்லோருக்குந் தெரியும். கடந்தகாலம், அப்படி வாழும் காலத்திலேயே உதிர்ந்து போன எத்தனையோ 'நட்சத்திரங்களை' நமக்கு அடையாளங் காட்டியிருக்கின்றது. இங்கும் ஒரு காட்சியில், நடிகராக ஒரு காலத்தில் பிரகாசித்து, பின்னர் ஜஸ்கிறிம் விற்பவராக ஒருவரைக் காட்டுவதன் மூலம் திரையுலகில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதைக் காட்டுகின்றார்கள்.

படத்தின் இறுதிக்காட்சிகளைக் கூட சற்று வித்தியாசமாகக் கொண்டு வந்திருக்கின்றார்கள். அந்தக் காட்சிகள் எடுக்கப்படும் திரைப்படத்தில் இல்லாத காட்சிகளாய் இருந்து (நாயகனின் யதார்த்த வாழ்வில் நடைபெறுவதாக இருந்தால்) அது அவ்வளவு அபத்தமாகப் போயிருக்கும். நான் கூட ஒரு வழமையான தமிழ்த் திரைப்படமாக இந்தக் காட்சிகளின் மூலம் இது ஆகிவிடக்கூடாதென எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்வாறு அந்த இறுதிக்காட்சிகளை, நாயகன் நடிக்கும் திரைப்படமொன்றின் காட்சிகளாய் ஆக்கியதன் மூலம் நுண்ணுணர்வுள்ள நெறியாளாராக இளன் இருக்கின்றார்.

இந்த படத்தின் முக்கியபாத்திரம் போல, தன் கனவுகளுக்க்காய் தமது காதல்களை/குடும்ப உறவுகளை விட்டு விலகி வந்த பலரை நாம் அறிந்திருப்போம். நேசமென்பது எமக்குரிய கனவுகளை இறுக்குகின்றது என்று நாமே தனிப்பட்டு சில காதல்களை விட்டு விலகி வந்திருக்கலாம். உண்மையில் அதற்கான காரணம் நமக்களிக்கப்பட்ட நேசமல்ல, நாம் நம் கனவுகளில் நம்பிக்கை இழக்கும்போது, ஏதோ ஒன்றில் பாரத்தைப் போட்டுவிட்டு நாம் தப்பி வருகின்றோம். அப்படியொரு காரணத்தைச் சொல்லி நம்மை நாமே சமாதானம் செய்துகொள்வது எம் ஆழ்மனதுக்கு நிம்மதியைத் தருகின்றது. ஆனால் அது மட்டும் உண்மையில்லை என்பது பிறகான காலத்தில் நாம் எல்லோரும் அறிந்துகொள்ளும் ஒரு கசப்பான வாழ்வியல் யதார்த்தமாகும்.

************

(July 01)

கார்காலக் குறிப்புகள் - ‍40

Thursday, July 04, 2024

 

ஷோக ஹந்தகமவின் புதிய திரைப்படமான 'ராணி'க்கு வெளியிடப்பட்ட போஸ்டரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இனித்தான் Trailer வெளிவரப் போகின்றதென்றாலும், இது ரிச்சர்ட் டீ ஸொய்சா பற்றிய திரைப்படம் என நினைக்கின்றேன். ரிச்சர்ட் டீ ஸொய்சா, தமிழ்த் தாயுக்கும், சிங்கள (பறங்கிய) தந்தைக்கும் பிறந்தவர். ஒரு பத்திரிகையாளராக இருந்து தனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தியதால், ஒரு இரவில் இலங்கைப் பொலிஸாரால் கடத்தபட்டு அடுத்தநாள் கொல்லப்பட்டு கடற்கரையில் வீசப்பட்டவர் ரிச்சர்ட் டீ ஸொய்சா.

90களில் இது நடக்கும்போது அவருக்கு வயது 31. தாயாருடன் வாழ்ந்து கொண்டிருந்த ஸொய்சாவை அன்று 'இனந்தெரியாத ஆயுதக்குழு' வந்து கடத்திக் கொண்டுபோய் கொலை செய்ததாகச் சொல்லப்படடாலும், அது அன்றைய இலங்கையரசு ஜேவிபி கிளர்ச்சியை அடக்குவதற்காய் உருவாக்கியிருந்த dead squad ஆலேயே அவர் கொல்லப்பட்டார் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கைப் பொலிஸில் இருந்த அந்தக் குற்றவாளிகள் யாரென்று 2005இல் அடையாளங் காட்டப்பட்டபோதும், அந்தக் குற்றவாளிகள் 'உரிய சாட்சிகள்' இல்லையென்ற காரணத்தால் ஒருபோதும் கைது செய்யப்படவோ, நீதியின் முன் நிறுத்தப்படவோ இல்லை. இவ்வாறு தனது மகன் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட துயரத்தோடு, மனோராணி அவர் இறக்கும்வரை (2004), இலங்கையில் இப்படிக் கடத்தப்பட்டு 'காணாமற் போனவர்களுக்கான' குரல் கொடுக்கும் ஒரு செயற்பாட்டாளாராக இருந்தவர்.

அண்மையில் மான் புக்கர் பரிசு பெற்ற ஷெகன் கருணாதிலகவின் 'மாலி அல்மெய்டாவின் ஏழு நிலாக்கள்' (The Seven Moons of Maali Almeida) நாவலில் முக்கிய பாத்திரம் ரிச்சர்ட் டீ ஸொய்சாவைப் பின்னணியாக வைத்து படைக்கப்பட்டிருப்பதை எளிதாக நாம் அறிந்துகொள்ள முடியும். 90களில் அன்றைய இலங்கை ஜனாதிபதியான பிரேமதாஸா ரிச்சர்ட் டீ ஸொய்சாவின் கொலையோடு தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார் என்பதை 90களில் இலங்கை அரசியல் சூழலை அவதானித்தவர்க்குத் தெரிந்திருக்கும்.

ரிச்சர்ட் டீ ஸொய்சாவின் கொல்லப்பட்ட உடலை கடற்கரையில் முதன்முதலில் அடையாளங்கண்டு சொன்னவர் தமிழ் ஊடகவிலாளரான தராகி சிவராம். ஒரு தசாப்தத்தின் பின் (2000களின் தொடக்கத்தில்) தராகியும், ரிச்சர்ட் டீ ஸொய்சாவைப் போல 'இனந்தெரியாதோரால்' கடத்தப்பட்டு கொல்லப்பட்டு கொழும்பின் ஆற்றங்கரையில் வீசப்பட்டவர் என்பதுதான் துயரமானது. நமது தீவு நாடு கடந்தகாலத்தில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பற்கு இவை மட்டும் உதாரணங்களில்லை. அதற்குப் பிறகு இப்படி இனந்தெரியாதரோல் ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொடவும் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

ந்தப் பாதிப்பில் நானெழுதியதுதான் 'அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்' என்கின்ற சிறுகதை. புனைவின் மூலம் கண்டடைந்து கொண்ட பிரகீத்தின் மனைவியான சந்தியாவை, கடந்தவருடம் கொழும்பில் 'முள்ளிவாய்க்கால் நினைவு' நிகழ்வு நடந்தபோது நேரே பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருந்தது. அவரிடம் இந்தக் கதையை சிங்களத்தில் மொழிபெயர்த்து, பிரகீத்தை நாம் மறக்கவில்லையெனச் சொல்லி, அதைக் கொடுத்துவிட வேண்டுமென மனம் அப்போது அவாவியது.

அஷோக ஹந்தகம 'ராணி'க்கு முன் எடுத்த திரைப்படம் 'Alborada'. அது பாப்லோ நெரூடா இலங்கையில் இருந்த காலத்தைப் பின்னணியாகவும், அப்போது அவர் வலிந்து பாலியல் உறவுகொண்ட தமிழ்ப்பெண்ணை முன்னிலைப்படுத்தியும் வந்திருந்தது. இந்தத் திரைப்படத்தின் பெயரான 'ராணி' என்பது ரிச்சர்ட் டீ ஸொய்சாவின் தாயான மனோராணிவின் பெயரில் இருந்தே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒருவகையில் ரிச்சர்ட் டீ ஸொய்சா கொல்லப்பட்டு 30 வருடங்களின் பின்னும் இன்னும் பலரின் நினைவுகளில் இருந்து மறைக்கப்படாது இருக்கின்றார் எனச் சொல்லவேண்டும். உண்மைகளை மறைக்கலாம், ஆனால் ஒருபோதும் புதைக்க முடியாது என்பதற்கு கலை ஒரு முக்கிய சாட்சியமாகின்றது. நமது கவிஞர் இளவாலை விஜயேந்திரனும் 91இல் 'றிச்சர்ட் டி சொய்சா; உதிரமுடியாத ஒரு நினைவு' என்று ஸொய்சாவிற்காக ஒரு கவிதை எழுதியிருக்கின்றார்.

கொலைகாரர்களும், கொலைசெய்ய ஏவியவர்களும் ஸொய்சாவைப் போலத்தான் மரணத்தை ஒருநாள் சந்தித்தார்கள் (மிஞ்சிய சிலர் சந்திக்கவும் போகின்றார்கள்). ஆனால் அவர்களுக்கு வரலாற்றில் எந்த இடமும் இல்லை. மேலும், விடுதலையையும், அறத்தையும் அவாவி நின்ற மானுட நேயர்களை கலை/இலக்கியங்கள் ஒருபோதும் கைவிடுவதில்லை.

ஆகவேதான் தாம் நம்பிய உண்மைகளுக்காக தமது உயிரைப் பலிபீடங்களில் வைத்த ரிச்சர்ட் டீ ஸொய்சா போன்றவர்களை, அஷோக ஹந்தகம, இளவாலை விஜயேந்திரன், ஷெகான் கருணாதிலக போன்ற கலைஞர்கள் தமது படைப்புக்களின் மூலம் என்றென்றைக்கும் மறக்கமுடியாதபடிக்கு நம்மிடம் மீள எடுத்து வருகின்றார்கள். நாம் அநியாயமாகப் பலியாகிப் போன அவர்களை கருணையுடன் நினைவுகூர்ந்து, நேசத்துடன் அரவணைத்துக் கொள்கின்றோம்.

******************


(Jun, 2024)

கார்காலக் குறிப்புகள் - ‍ 39

Tuesday, July 02, 2024

 ஓவியம்: குலராஜ் (மட்டக்களப்பு)


1.

நான் வேலை செய்யுமிடம் நகரின் மத்தியில் ஐம்பெரும் ஏரிகளில் ஒன்றையொட்டி (Lake Ontario) இருக்கின்றது. முக்கியமான ரெயின் நிறுத்தமான யூனியன் ஸ்ரேசனில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் அந்த அமைவிடம் இருக்கின்றது. நம் பெருநகரின் பேருந்து சேவையை விதந்து மாளாது. உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை வேலைக்குத் தாரை வார்த்து, மிகுதியை போக்குவரத்திற்குக் கொடுக்க வேண்டி வரும். இதனால் இங்கிருப்பவர்க்கு வாழ வீடே தேவையில்லை என்று கனடிய அரசும் வீடுகளை விலையை மில்லியனுக்குக் கொண்டு சென்றுவிட்டது. மக்களின் மனம் அறிந்த நல்லரசு வாழ்க!

இடமேயில்லாதபோதும், வாவியை ஒட்டியும்/வெட்டியும் பல அடுக்கங்கள் வானை நோக்கி எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அமைக்கப்பட்டிருந்த‌ தெருக்களோ இன்னுமின்னும் சுருங்கியபடி போகின்றன. அநேகமாக ரெயின் நிலையத்திலிருந்து 2 கிலோமீற்றர்களை நான் நடந்தே கடந்து போய்விடுவேன். ஏற்கனவே ஏற்றங்களில் ஏறும்போது கால்களில் வலியொன்று வந்து போவதுண்டு. அத்தோடு அண்மையில் ஆடவரோடும், பூவையரோடும் பூப்பந்து விளையாடத் தொடங்கியதாலோ என்னவோ கொஞ்சத்தூரம் நடந்தவுடனேயே வலி விண்விண்னென்று காலில் வலி ஏறி நீண்டதூரம் நடக்கமுடியாமல் செய்கிறது. கால்களே, என் காதல்களைப் போல ஏன் என்னைக் கஷ்டப்படுத்துகின்றீர் என அவற்றிடம் கெஞ்சினாலும் அவை என் குரலைக் கேட்பதில்லை. இருவருமே அவ்வளவு பிடிவாதக்காரர்கள்!


வாவியையொட்டி வேலைத்தளம் இருப்பதாலும், பேருந்துப் பயணம் அவ்வளவு எளிதில் இல்லாதிருப்பதாலும், அந்த கட்டடத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்க்குமென தனிப்பட்ட பேருந்து சேவையை எமக்கு வழங்குகின்றார்கள். அந்த பஸ் யூனியன் ஸ்ரேசனில் இருந்து எம்மை அழைத்துச் செல்லும்.

2.
அந்தப் பேருந்துச் சாரதிகள் அவர்களின் மனோநிலைக்கேற்ப இசையையோ அல்லது சமகாலச் செய்திகளையோ போடுவார்கள். நான் இவற்றைப் பெரிதும் ஊன்றிக் கவனிப்பதில்லை. இணையத்தில் சதுரங்கம் ஆடுவதிலோ அல்லது இன்றைக்கு எந்தப் பெண் அழகான ஆடை அணிந்திருக்கின்றார் என்று என் 'இரசனை'யை வளர்ப்பதிலோ என் பெரும்பாலான நேரங்கள் போய்விடும்.

இன்றைக்கு எமது நிறுவனத்துக்கு ஒரு முறைப்பாடு வந்திருந்தது. காலையில் இதமான மனதோடு பஸ் ஏறும் எங்களுக்கு சாரதிகள் மிகவும் 'சென்ஸிட்டிவான' செய்திகளை ஒலிபரப்புகின்றார்கள். முக்கியமான மத்திய கிழக்கில் நடக்கும் போர் பற்றிக் கேட்கும்போது எம்மை அவை trigger செய்கின்றது. இதற்கான பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என ஒருவர் கேட்டிருந்தார்.

இந்த முறைப்பாடை இரண்டு விதமாகப் பார்க்கலாம். போருக்குள் இருந்து வந்தவர்க்கோ அல்லது அதனோடு சம்பந்தப்பட்டவர்க்கோ உளவடுக்கள் இருந்து, ஆற்றுப்படுத்தும் காலத்தில் இருக்கும்போது, இவ்வாறான செய்திகள் துர்நினைவுகளை ஒருவருக்குள்
இழுத்துவிடும் ஆபத்து இருக்கின்றது. மற்றது, உலகில் என்ன நடந்தாலும், எங்கள் வாழ்வு நிம்மதியாக இருந்தால் போதும் இதையெல்லாம் கேட்க/பார்க்க முடியாது என்கின்ற மனோபாவம்.

உதாரணத்துக்கு இலங்கைக்குப் போகின்ற பெரும்பாலான இந்திய‌ தமிழ் எழுத்தாளர்க்கு, இலங்கையில் ஒரு கடும்போர் நெடுங்காலமாக நடந்ததென்ற சிறுதுளி நினைவுகூட‌ அவர்களுக்குள் இருக்காது, இலங்கையில் எனக்கு வாசகர் இல்லை என்றோ, இலங்கையில் தெருநாய்கள் அதிகம் என்று எதையெதையோ எழுதி தங்களைத்தான் முன்னிலைப்படுத்துவார்களே தவிர அங்கே ஒரு பாதிப்படைந்த தரப்பு அல்லாடிக் கொண்டிருக்கின்றதென்பது அவர்களின் 'ஊழ்கத்தில்' கூட எழாது. இவர்களால் நமது இலக்கியங்களை மட்டுமில்லை, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் எத்தகைய உளவடுக்களில் போர் நிமித்தம் சென்றோம்/இன்னும் பலர் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பதை மனதார அறிதல் கடினம்.


இவர்கள் இப்படி போரையும், போரின் பின்விளைவுகளையும் பற்றி அறிந்து இருக்க வேண்டும் என்கின்ற எந்தக் கட்டாயம் இல்லை. ஆனால் இந்த அறிதலினூடே இலங்கையிலிருக்கும் மக்களையும், கலை/கலாசாரங்களையும் அணுகவேண்டும். இவ்வாறுதான் தமிழகம் உள்ளிட்ட பல இடங்களிலிருந்து எழுதும் பெண்களுக்குமான பார்வையை நான் முன்வைப்பேன். இந்தப் பெண்கள் எந்தச் சலுகையையும் எதிர்பார்த்து எழுதப்போவதில்லை. ஆனால் நாம் பெண்கள் எழுதும் படைப்புக்கு ஒரு பார்வையை வைக்கின்றோம் என்றால், இந்த மனநிலை நமக்குப் பின் தளத்தில் மறைமுகமாக நிற்றல் அவசியம். பெண்களுக்கு மட்டுமில்லை, தற்பாலினர்,தலித்துக்கள், திருநங்கைகள் என அனைத்து விளிம்புநிலையினர்க்கும் பொருந்தக்கூடியதே. மேலும் ஒருவர் (ஆணாக இருப்பதால்/ஆதிக்க சாதியாக இருப்பதால்) தமக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய‌ சலுகைகள் (privileges) பற்றியும் யோசித்தாக வேண்டும்.

3.
இந்த முறைப்பாடு செய்த நபர், செய்திகளில் உக்ரேன்X ரஷ்யா போர் பற்றிய செய்திகள் கேட்கும்போது இதற்குமுன் இவ்வாறுதான் முறைப்பாடு செய்தாரா என்றும் தெரியவில்லை. அவருக்கு பாலஸ்தீனத்தில் நடக்கும் இனவழிப்பு மட்டும் மனதை நோகச் செய்கின்றது என்றால், ஏனென்று அவர்தான் யோசிக்கவேண்டும். எல்லாவற்றையும் வடிகட்டி அமைதிப் பூங்காவைக் கட்டியமைப்பது சரியா என்றும் அவர் வினாவவேண்டும்.

நாம் வாழும் மேற்கத்தைய நாடுகள் மட்டுமின்றி, வாழ்வில்/மகிழ்ச்சியில் உயரதரத்தில் இருக்கும் ஸ்கண்டிநேவிய நாடுகள் ஏன் ஆயுத உற்பத்திகளை செய்துகொண்டும், ஏற்றுமதி செய்துகொண்டுமிருக்கின்றதென்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்கு, தொடக்கத்தில் இந்தியாவோ, பின்னாளில் பிறநாடுகளோ எமது இயக்கங்களுக்கும் இலங்கை அரசுக்கும் ஆயுத விநியோகம் செய்யாவிட்டால், அந்தச் சின்னஞ்சிறு தீவு இந்தளவுக்கு போரில் சின்னாபின்னாமாகிப் போகாது இருந்திருக்கும் அல்லவா?

நான் வேலை முடிந்து மாலை நேர நிறுவன பஸ்சிற்காய்க் காத்துக் கொண்டு நின்றேன். போக்குவரத்து ஊர்ந்து கொண்டிருந்ததால் எமக்கான பஸ் நெடுநேரமாய் வந்து சேரவில்லை. அப்போது காரில் சென்ற ஒருவர் என்னை ஏற்றிக் கொண்டார்.

அவர் எங்கள் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளாராகப் பணிபுரிபவர். அவ்வப்போது சிறு அறிமுகம் செய்துகொண்டிருந்தாலும், ஆறுதலாக இருந்து நாம் இதற்கு முன் பேசவில்லை. போக்குவரத்து ஊர்ந்து ஊர்ந்து சென்றதால் 30 நிமிடங்களுக்கு மேலாக நமது 2 கிலோமீற்றர் பயணம் தொடர்ந்திருந்தது.

அதனால் எங்களுக்குப் பேச நிறைய நேரமிருந்தது. அவர் எரித்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். எரித்தியாவை இத்தாலி, இங்கிலாந்து என்பவை காலனிப்படுத்தியவை. 1990களில் எரித்திரியா எத்தியோப்பாவிலிருந்து கடைசியாக சுதந்திரம் பெற்று தனிநாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. நிறைய நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த ஜனாதிபதியோ பின்னாட்களில் சர்வாதிகாரியாக மாறிவிட்டார். அவரின் கட்சியைத் தவிர வேறெந்த கட்சிக்கும் அங்கே இப்போது இடமில்லை. எதிர்ப்புக் குரல் கொடுக்கும் மக்கள் எந்தக் கேள்விகளுமில்லாது ஒடுக்கப்படுகின்றார்கள். நண்பர்களாக இருந்தாலும் மனந்திறந்து எந்த அரசியலையும் எங்கு பேசமுடியாது. அந்தளவுக்கு மக்கள் கண்காணிக்கப்படுகின்றார்கள் என்றார்.


இந்த நண்பரோ ஒரு அரசியல் செயற்பாட்டாளராக அங்கே இருந்திருக்க வேண்டும் (அவர் அதை நேரடியாக்ச் சொல்லவில்லை என்றாலும் என்னால் ஊகிக்க முடிந்தது). கிட்டத்தட்ட 7 வருடங்கள் இன்னொருநாட்டில் அகதியாக அலைந்து, இப்போது கனடாவில் அஸைலம் (Asylum) அடித்திருக்கின்றார். தனது தாய் உள்ளிட்ட எவரையும் 10 வருடங்களுக்கு மேலாகப் பார்க்கவில்லை, தனது சொந்த நாட்டுக்குப் போனால் இனி தன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றார். மிகப்பெரும் உளவு அமைப்பை 30 வருடங்களாக எரித்திரியாவை ஆளும் ஜனாதிபதி கட்டியமைத்து விட்டார் எனச் சொன்னார். கடந்தவருடம் இப்பெருநகரில் எரித்தியாவின் ஒரு பகுதி மக்கள் அந்நாட்டு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து, நிதியும் சேகரித்தபோது, தானும் தன் நண்பர்களும் எதிர்ப்புத் தெரிவித்து, இறுதியில் அது வன்முறையாக மாறியது என்றும் ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிட்டார்.

இதெல்லாம் நாம் அனுபவித்து கடந்து வந்த பாதை. எனக்கு அவர் மேல் தோழமையுணர்வு தோன்றியது. அவரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, இதேதான் எமது நாட்டிலும் நடந்தது என்றேன். பாருங்கள், பெரும் போரை முடித்து வைத்தேன் என்ற பெருமிதத்தில் நின்ற ஒரு குடும்பத்து ஜனாதிபதியை, அந்நாட்டு பெரும்பான்மையின மக்களே நாட்டைவிட்டுத் துரத்தினர் என்றேன். சர்வாதிகரிகளால் அதிகாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கி அழிசாட்டியம் செய்ய முடியும். ஆனால் ஒருநாள் மக்கள் எழுச்சி கொள்வாரென்பதற்கு சிலியின் பினோச்சோவை உதாரணத்துக்குச் சொன்னேன். என்றாலும் இந்தக் கொடுங்கோலர்கள் செய்து முடித்துவிட்ட அழிவுக்கு நிவாரணிகள் கிடைப்பதில்லை. இவர்களின் அதிகார ஆசைகளுக்காக பலியிடப்பட்டவர்க‌ளும், காணாமற்போனவர்களும், தொலைத்துவிட்ட நம் வாழ்வும் மீள நம்மிடம் திரும்பி வரப்போவதில்லை என்பதுதான் மிகத் துயரமானது.


இப்போது சொல்லுங்கள், உலகம் இவ்வாறு இயங்கும்போது, நீங்கள் யுத்தம் பற்றிய செய்திகளைக் கேட்பதையே தவிர்க்கப் போகின்றீர்களென்றால், யுத்தத்திற்குள் இருப்பவர்களை/அதை நேரடிச் சாட்சியாகக் கண்டு கடந்து வந்தவர்களை/ ஒரு சொந்த நாடில்லாது அடைக்கலம் தேடி கடல்களாலும் பனிநிலங்களாலும் கள்ளமாக எல்லை கடப்பவர்களை எப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்?

***********

(June 2024)

கார்காலக் குறிப்புகள் - 38

Sunday, June 30, 2024

 ஓவியம்: பிருந்தாஜினி

 

ல்மான் ருஷ்டி தனது புதிய நூலில் (Knife) கவிஞர்கள், நாவலாசிரியர்கள் பற்றி எழுதியிருப்பார். அவரின் காதலியான எலிஸா (பின்னாளில் மனைவி/நாவலாசிரியை) கவிஞர் என்பதால் கவிஞர்களின் உலகைப் பற்றிச் சிலாகித்திருப்பார். கவிஞர்கள் மற்றவர்களின் கவிதைகளை வாசித்து உற்சாகமூட்டுபவர்கள் என்றும், கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் ஒன்றாகச் சேர்ந்து பங்குபற்றும் தோழமையுணர்வு உடையவர்கள் என்றும், தன்னைப் போன்ற உரைநடையாளர்களோ (நாவலாசிரியர்கள்) ஒரு தனித்துவிடப்பட்ட தீவில் எவருமில்லாது தனிமையில் சுழன்று கொண்டிருப்பவர்களாக இருக்கின்றோம் எனவும் சொல்லியிருப்பார். உரைநடையாளர்கள் போல, கவிஞர்கள் அவ்வளவு பணம் சம்பாதிக்காவிட்டாலும், அவர்களின் அச்சிறு உலகு, அவர்களை நெருக்கமானவர்களாகவும், உற்சாகமானவர்களாகவும் கவிதையுலகினுள் வைத்திருக்கின்றது என்கின்றார்.

இவ்வாறு விரும்பியோ?விரும்பாமலோ எழுத்துலகத் தனிமைக்குள் வாழ்வது குறித்து ஹருகி முரகாமி, ஒரான் பாமூக் போன்றவர்களும் எழுதியிருப்பார்கள். யார் தமது நூல்களை வாசிக்கின்றார்கள் என்று தெரியவில்லை என‌ இத்தனிமைக்குள் இருந்து அவர்கள் எண்ணியிருந்தாலும், ஒருபோதும் 'நானொரு எழுத்தாளர், என்னை இவ்வுலகு கொண்டாடவில்லை' என்று எங்கும் எழுதியதாகத் தெரியவில்லை. நிறைவான வாழ்வு வாழ்ந்து தனது வாழ்வை முடித்துக் கொண்ட மிலான் குந்தேரா தன்னைக் கடைசிவரை பொதுவுலகிலிருந்து மறைத்துக் கொண்டவர். சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கியோ 'எழுதும்போது மட்டுமே நானொரு படைப்பாளி, எழுதாதபோது ஒரு சாதாரணமானவன்' என்று ஒரு கவிதையில் வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்.

நம் தமிழ்ச்சூழலில் அசோகமித்திரனோ 'தான் ஒரு எழுத்தாளன் என்ற உணர்வு ஓர் எழுத்தாளனைச் சதாசர்வ காலமும் அழுத்துமாயின் அவனுடைய படைப்புகள் விசேஷப் பரிமாணங்கள் கொள்வது மிகவும் சிரமம். தன்னை இந்த உலகத்தின் முழுமையாகக் கருதாது இதிலுள்ள கணக்கற்றவரையும் தன்னைப் போல நினைக்க முடிவதற்குத் தளராத கற்பனை வேண்டும்' என்றிருக்கின்றார்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் போனதில் இருந்து முழுநேரப் படைப்பாளியாக, குடும்பம்/உறவுகள் அனைத்தையும் விலத்தி கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்த பிரமிள் கூட எங்கேயும் இந்தச் சமூகம் என்னைக் கொண்டாடவில்லை என்று ஒப்பாரி வைத்ததை எங்கேயும் எழுதியதாகக் காணவில்லை. இத்தனைக்கும் அவருக்குச் சிறு சிறு உதவிகள் செய்தோரைக் கூட, எழுத்தின் அறத்தின் நிமித்தம் அவர்களோடு முரண்பட்டு எதிரிகளாக்கி கொண்டதுதான் அவர் அதிகம்.

ண்மைக்காலமாக நம் சூழலில் 'எழுத்தாளனைக் கொண்டாவில்லை'. 'நான் உலக இலக்கியங்களை வாசித்தவன்', 'நான் படைப்பாளி, நீ சாதாரணமானவன்' என்ற அறைகூவல்களைப் பார்க்கின்றேன். இதுவரைகாலமும் இந்த 'வியாதி' அதிகம் தமிழ்நாட்டுப் பக்கமாய்த்தான் இருந்தது. இப்போது ஈழம்/புலம்பெயர்ந்த சூழலிலும் வந்துகொண்டு இருப்பதைப் பார்க்க இந்த 'கொரானா வைரஸை'க் கண்டு உலகின் இன்னொரு மூலைக்குச் சென்று அடைக்கலந் தேட வேண்டியிருக்கின்றதோவென அஞ்ச வேண்டியிருக்கின்றது

படைப்பு நிலை சார்ந்து அகத்தில் உருவாகும் நெகிழ்வான தருணங்களையும், அவை தனிப்பட்ட தன்னுணர்தலாக மாறுதலடையக் கூடுமென்பதையும் ஏற்கனவே பலவிடங்களில் எழுதியிருக்கின்றென். அது எழுத்துச் சார்ந்து மட்டுமில்லை, இசை, நடனம், சிற்பமென நுண்கலையின் எதற்கும் பொருந்தக்கூடியது. நமக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கு இருக்கின்றது என்பதையும் நினைவுகொள்வோம். இதை இன்னும் விரித்து பயணம்,தியானம், விளையாட்டு என வேறு புலங்களுக்கும் விரித்துப் பார்க்கலாம்.

படைப்பாளி X வாசகர் என்பதையே பின்நவீனத்துவம் எப்போதோ நிராகரித்துவிட்டதன் பின்பும், இப்போது படைப்பாளி X சாதாரணன் என்று பேசிக்கொண்டிருப்பதை விட அபத்தமொன்று இருக்காது. அதிலும் நமக்குத்தான் எல்லாம் தெரியும், உனது கடமை அமைதியாக இருந்து கேட்கவேண்டும் என்று எந்தப் படைப்பாளியோ/படைப்போ சொல்லத் தொடங்கும்போது அந்தப் படைப்பாளிக்கு/படைப்புக்கு தன் மீதே நம்பிக்கை இல்லை என்பதை ஒரு வாசகர் எளிதாகப் புரிந்துகொள்ளமாட்டாரா என்ன? ஒருவருக்குத் தனது எழுத்து மீது நம்பிக்கை இருந்தால் இவ்வாறான பிரகடனங்களே தேவையில்லை. அந்தப் படைப்பு/எழுத்து அவரை சிகரத்தில் தன்னியல்பிலே கொண்டுபோய் வைத்து ஒளிர வைக்கும்.


தன்னைப் பொதுவாழ்விலிருந்து உருமறைத்துக் கொண்ட குந்தேராவுக்கோ அல்லது தமிழ்ச்சூழலில் தன்னை மிகவும் எளிமையாக முன்வைத்த அசோகமித்திரனுக்கோ தமது படைப்புக்களினூடாக அவர்கள் அடைந்த தன்னுணர்தல்கள், இந்த புறவயமாக புகழ்/கொண்டாட்டம் என்பதைவிடப் பெரி‍து என்பது அவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். ஆனால் நானொரு எழுத்தாளன், நம்மைக் கொண்டாடவில்லை, நீங்களெல்லாம் சாதாரணமானவர்கள் என்பவர்கள் நிச்சயம் மன ஆழங்களின் மர்மங்களுக்கு எழுத்தினூடாகச் சென்றிருக்க வாய்ப்பு மிக அரிதே. தியானத்தில் மூழ்கும்போது ஒருவர் தியானம் செய்கின்றேன் என்று நினைத்துக்கொண்டாலே அது தியானம் இல்லை என்பதுபோல, ஒருவர் எழுத்தைப் புறவயமாகப் பார்த்து, அதற்கான பிரதிபலன்களையோ/பிரகடனங்களையோ எதிர்ப்பார்க்கும்போது அவர்களிடமிருந்து எழுத்தும்
பெரும்பாலும் விலகிப் போய்விடவே செய்கின்றது.

அதிலும் இன்னுஞ்சிலர் ‘நான் தான் இலக்கியங்களை அதிகம் வாசித்தவன்’ என்கின்றபோது அவர்களை நினைத்துச் சிரிப்புத்தான் வருகின்றது. இலக்கிய உலகில் இருந்தால் வாசித்தலும், எழுதுதலும் இயல்புதானே. இதிலென்ன நான் கூட வாசித்தவன், குறைய வாசித்தவன் என்ற தராதரங்கள் இருக்கப் போகின்றது. முன்பு உலகத்திரைப்படங்களைப் பார்ப்பது என்பது ஒரு 'மோஸ்தராக' இருந்ததைப் போல (அதன் அபத்தம் 'உலகநாயகன்' என்கின்ற பட்டங்கள்வரை போனது), இப்போது உலக இலக்கியங்களை வாசித்தவன் என்கின்ற 'லேபிள்'களையும் எழுத்தினூடாகப் பார்க்கின்றேன் ( sigh). அதைவிட அயோக்கியத்தனம், அப்படி வாசிப்பதால் நான் சொல்வதை நீங்கள் அனைவரும் கேட்கவேண்டும் என்கின்ற அதிகாரம். இதைத் திமிர் என்பதைவிட வேறெப்படி அழைக்க முடியும். மேலும் நாம் எழுதுவது என்பதே ஒருவகை உரையாடல் என்று எடுத்துக்கொண்டால் கூட, இப்படி அதிகாரத்தில் இருந்துகொண்டு யாரோடு உரையாடமுடியும் அல்லது எவரோடு உரையாடப் போகின்றோம்?

நா
ன் ஒருகாலத்தில் நம்பிக்கை வைத்த எங்களுக்கு அடுத்த தலைமுறையில் கூட, ஒவ்வொரு படைப்பிலும்/எழுத்திலும் இந்த அதிகாரம்/ஆணவத்தோடு பேசுக்கொள்வதைப் பார்க்கும்போது கோபம் வருவதைவிட அவர்களைப் பார்க்கக் கவலையாக இருக்கின்றது. இவ்வளவு காலமும் நீங்கள் வாசித்தது, உரையாடியதே எல்லாமே இப்படி 'நான்' என்கின்ற அதிகாரத்தை நோக்கி நகரத்தானா என அவர்கள் மீது சலிப்பே எஞ்சுகின்றது. எமக்கு முன்னோடிப் படைப்பாளிகளில் சிலரில் இவ்வாறு எழுத்தாளர் என்பதால் வரும் அதிகாரமும்/தன்னகங்காரமும் இருந்தால் கூட, அவர்கள் தொடர்ச்சியாக நீண்டகாலமாக எழுத்துலகில் இயங்கிக் கொண்டிருப்பதால் அதை ஏதோ ஒருவகையில் அவர்களின் படைப்பின் மீதான மரியாதையின் நிமித்தம் சகித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் நம் ஈழத்து/புலம்பெயர் புதிய தலைமுறையின் (பெரும்பாலானோர்) 'எமக்கு அனைத்தும் தெரியும்' என்ற பதாதைகளோடு தம்மை முன்னிறுத்தும்போது, போக வேண்டிய‌ பாதை இன்னும் நெடிது, பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதைத் தவிர வேறெதை அவர்களுக்குச் சொல்லிவிட முடியும்?


மேலும் நிறையச் சத்தம் இலக்கியத்துக்கு அவ்வளவு நல்லதல்ல, படைப்பின் பேரிரைச்சலுக்கு முன் படைப்பாளி ஒரு சிறுதுளி. அந்தச் சிறுதுளி, தன் படைப்பின் மூலம் பேரருவியாக மாறுவதை அனுபவித்திருந்தால், புறவயமான இந்தப் பிரகடனங்கள்/அறைகூவல்கள் எல்லாமே வெறும் தூசியென்பது நல்லதொரு படைப்புள்ளத்துக்குத் தெரியும்.

த‌ன் மனம், தான் செய்துவிட்ட‌ குற்றத்தில் வதங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும் என ''வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்/தான்அறி குற்றப் படின்' என்ற குறளில் வள்ளுவர் சொல்வதைப் போல‌, ஒரு படைப்புள்ளம் தன் படைப்பின் மூலம் அதிகாரத்தையும் ஆணவத்தையுந்தான் மேவுகின்றது என்றால், படைப்பாளி என்கின்ற நிலையால் வரும் 'ஞானந்தான்' என்னவாகி இருந்துவிடப் போகின்றது.

****************

(May, 2024) 

கார்காலக் குறிப்புகள் - 37

Monday, June 24, 2024

 

'எழுநா' இதழுக்கு எழுதுவதற்காக, ஷியாம் செல்வதுரையின் 'Hungry Ghosts' ஐ மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன். இந்த நாவல் 2013இல் வெளிவந்தபோதே வாசித்துவிட்டேன். ஷியாமின் Funny Boy, Cinnamon Gardens வெளிவந்த 15 வருடங்களுக்குப் பின் Hungry Ghosts வந்ததால் அதற்கு ஒரு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஷியாமும் இந்த நாவலே, தான் ஒரு எழுத்தாளன்தான் என்கின்ற நம்பிக்கையை முதன்முதலாகத் தனக்குத் தந்ததென்று ஒரு நேர்காணலில் கூறியுமிருந்தார். அவரின் கவனம் பெற்ற முதலாவது நாவலான 'விசித்திரமான சிறுவன்' வந்து 20 வருடங்களுக்குப் பின்னே, ஷியாம் தானொரு எழுத்தாளன் என்று நம்பிக்கை கொள்கின்றார் என்றால், நம் தமிழ்ச்சூழலில் 'எழுத்தாளர்கள்' என்று எழுத வந்தவுடனேயே பிரகடனம் செய்கின்றவர்களைப் பார்த்தால் நமக்குக் கொஞ்சம் திகைப்புத்தான் வரும்.

ஷியாமின் இந்த மூன்று நாவல்களின் பின்னணியும் கிட்டத்தட்ட ஒன்றே போலவே இருப்பவை. அவரின் நாவலின் முக்கிய பாத்திரம் இலங்கையில் தமிழ்-சிங்களப் பெற்றோருக்குப் பிறந்த ஒரு ஆணாகவும், அந்த ஆண் தற்பாலினராகவும் இருப்பார். இலங்கையில் தமிழர் என்ற அடையாளத்துடன் இருப்பது ஒரு விளிம்புநிலை என்றால், அந்த தமிழ் அடையாளத்தில் தற்பாலினராக இருப்பது இன்னும் விளிம்புநிலையானது. எனவே ஷியாமின் பாத்திரங்கள் அவ்வளவு சிலந்திவலைப் பின்னலாகவும், எளிதில் புரிந்துகொள்ள முடியாத அடையாளச் சிக்கல்களைகளைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இன்று ஆங்கிலத்தில் எழுதும் நமது புதிய தலைமுறைக்கு ஒரு பாதையை 30 வருடங்களுக்கு முன் புலம்பெயர் சூழலில் உருவாக்கித் தந்த முக்கியவராக ஷியாமைச் சொல்லலாம். புலம்பெயர்ந்த தமிழர் என்றவகையில் மட்டுமில்லாது, தற்பாலினர்க்கும் அவர் புதிய திசைகளை அறிமுகப்படுத்தியவர். மேற்கத்தைய சூழலில் விளிம்புநிலையினராக இருந்த (வெள்ளையின) தற்பாலினர் சமூகத்திலும், ஆசிய நாட்டவர்/மண்ணிறத்தவர் இன்னும் விளிம்புநிலையாகவே வைக்கப்பட்டிருக்கின்றனர் என்கின்ற குரல் ஷியாம் போன்றவர்களின் படைப்புக்களிலேயே தீவிரமாக முதன்முதலாக முன்வைக்கப்பட்டுமிருந்தன. 

 

'பசித்த பேய்கள்' 1983 இனக்கலவரத்தோடு கனடாவிற்கு வந்து சேரும் சிவனின் கதை. சிவன் 19 வயதில் இலங்கையில் உயர்தரப் பரிட்சை எடுத்த கையோடு கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அது 84 இல் நிகழ்கின்றது. சிங்களத் தாயுக்கும், தமிழ்த் தந்தைக்கும் பிறந்த சிவன், 83 கலவரத்தால் அச்சுறுத்தப்பட்டாலும், அவர்களைச் சிங்களக் கலப்பின அடையாளம் அந்தப் பொழுதில் காப்பாற்றுகின்றது.

கனடாவுக்கு வரமுன்னரே தானொரு Gay என்பதை உணர்கின்ற சிவனுக்கு, கனடாச் சூழல் ஒரளவு சுதந்திரமான உணர்வைத் தருகின்றது. ஆனால் இங்கேயும் அவர் தற்பாலினராக இருப்பதால் சுரண்டப்படுகின்றார்/ஒடுக்கப்படுகின்றார். யோர்க் பல்கலைக் கழகத்தில் படிக்கும் சிவன், பின்னர் நான்கு வருடங்களில் இலங்கைக்கு அவரது அம்மம்மாவைப் பார்க்கத் திரும்புகின்றார்.

அப்போது ஜேவிபியின் இரண்டாம் 'புரட்சி'க்காக ஆயுதப்போராட்டம் தெற்கில் நடைபெறுகின்றது. தமிழரின் பூர்வீக நிலமான வடக்கு கிழக்கில் இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடக்கின்றது. நாடு பூராவே கொந்தளிப்பில் இருக்கின்றது. இலங்கை திரும்பும் சிவன், தனது பதின்மக் காதலரான மிலி ஜெயசிங்கேயுடன் தனது காதலை மீளக் கண்டடைந்துகொள்கின்றார். காதலும், காமமும், குதூகலமாக இருக்கும் இந்த இணையின் உறவு ஒரு பெரும் அதிர்ச்சியான சம்பவத்துடன் முடிவுக்கு வருகின்றது.

அதன்பிறகு அதுவரைக்கும் மிகுந்த பாசத்துடன் இருக்கும் அம்மம்மாவைச் சிவனால் மன்னிக்க முடியாதிருக்கின்றது. மீண்டும் கதை கனடவுக்குப் புலம்பெயர்கின்றது. அது ரொறொண்டோ, பின்னர் கனடாவின் கிழக்குப் பகுதியான வன்கூவர், அங்கே புதிய காதலை சிவன் கண்டடைதல், காதல் பிரிவு, குடும்ப இரகசியங்கள் எனப் பல பதிவாகின்றன.

ஒருவகையில் ஷியாம் தனது கதைகளைத்தான் பல்வேறு பின்னணிகள்/ கதைமாந்தர்களினூடாகச் சொல்கின்றாரோ என அவரது மூன்று புதினங்களையும் வாசிக்கும்போது தோன்றுகின்றது. ஒரு குட்டித் தீவில், கிழக்கும் மேற்குமாகப் போனால் 250 கிலோமீற்றர்களும், வடக்கும் தெற்கும் போனால் 450 கிலோமீற்றர்களும் இருக்கும் ஒரு நாட்டில் இருந்த வந்த நமக்குத்தான் சொல்ல எத்தனையெத்தனை கதைகள் இருக்கின்றன. இந்தக் குட்டித்தீவில் என்ன வளந்தான் இல்லையென ஒரு பயணியாகப் பயணிக்கும்போது வியப்பு வருவதைப் போல, இதே நாட்டில்தான் இந்தளவு இரத்த ஆறு ஓடியிருக்கின்றதா என்கின்ற திகைப்பும் வருவதைத் தவிர்க்கவும் முடிவதில்லை.

இன்றைக்கு ஷியாமுக்கு பின்னர் எழுதவந்த அனுக்கோ, வாசுகியோ, சங்கரியோ, நயோமியோ யாராக இருப்பினும் ஷியாமின் எழுத்துக்களின் பாதிப்புக்கள் எங்கோ ஓரத்தில் அவர்களிடம் இருப்பதை நாங்கள் எளிதாக கண்டுகொள்ள முடியும். அந்தவகையில் ஷியாம் பலவகையில் ஒரு முன்னோடிதான். ஷியாமின் எழுத்துக்களைத் தாண்டிப் போவதுதான் புதிதாக இலங்கைச் சூழலையும், புலம்பெயர் சூழலையும் எழுத வருகின்ற ஆங்கிலத்தில் எழுதும் தலைமுறைக்கு இருக்கும் முக்கியமான சவாலாக இருக்கும். அதேசமயம் ஷியாம் தனது comfort zone ஐ தாண்டி எழுதும்போதுதான் அவரது அடுத்த கட்டத்துக்கு பாய்ச்சலைச் செய்வதாக அமையும். இல்லாவிட்டால் ஒன்றையே திரும்பத் திரும்ப எழுதுகின்றார் என்கின்ற விமர்சனக் குரல்களை கேட்கவேண்டிய நிலையும் அவருக்கு ஏற்படக்கூடும். அது தமிழில் எழுதும் பலருக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதையும், அது அவர்களின் வீழ்ச்சியாக சமகாலத்தில் மாறிக்கொண்டிருப்பதையும் நாமறிவோம்.

***************

(Jun 2024) 

கார்காலக் குறிப்புகள் ‍ 36

Thursday, June 13, 2024

 ஓவியம்: சுசிமன் நிர்மலவாசன்


சாம்பல் வானத்துப் பின்னணி என்பது இலையுதிர்காலத்துக்குரிய தனித்துவம், பசுமை போர்த்திய‌ இளவேனிலில் மழை அதே சாம்பல் பின்னணியில் பொழிகின்றது. இலைகள் உதிரும் காலத்தில்தான் மனது நெகிழும் என்றால், இப்போதும் ஏன் உள்ளம் குழைந்து கொள்கின்றது. வாவியின் மீது துளிகள் வீழ்கையில் நீரின் வர்ணமும் சாம்பலாகி விடுகின்றது. உயிர் விட்டுப் பிரியும் உடலங்களை எரித்து நீரில் விசிறும் மரபொன்று நமக்கு இருப்பதால், கடலை மழைத்துளிகள் முத்தமிடுகையில் எழும் கடும் சாம்பல்வர்ணத்தை மறைந்து போய்விட்ட ஆன்மாக்களின் அசைவுறுதல்களென‌ எடுத்துக் கொள்ளலாமோ? காட்டிற்கு நடுவில் இருக்கும் சுடலையின் பொடியைப் பூசி ஆடும் ஒருவன் உள்ளங்கவர் கள்வனாவது போல‌, கடலின் நடுவில் சாம்பல் வர்ணத்துளிகளைப் பூசி, காலமாகிவிட்ட நமக்கு நெருக்கமானவர்கள் எழுந்து வருதல் கூடுமோ?

துளித்துளியாய் கண்ணாடி யன்னலில் திரண்டு பின்னர் கரைந்துபோகும் மழையைப் பார்த்தபடி ஒருவன் இருக்கின்றான். காதல்கள் உருத்திரண்டு பின்னர் காதலிகள் பிரிந்து போவதுபோல இந்த மழைத்துளிகளை அவன் உவமித்துக் கொள்கின்றான். வாழ்வு என்பதே எப்போது தொட்டாலும் உடைந்துவிடக்கூடிய குமிழ் எனில் அதற்குள் உருந்திரளும் இந்த நேசத்துளிகளின் அர்த்தந்தான் என்ன? ஆனாலும் மனது காதலிக்கவே விரும்புகின்றது. கடந்தகாலத்து துயர் நினைவுகளை அன்றி, நெகிழ்ந்த கணங்களை அள்ளியெடுத்து எதிர்காலத்துக்குப் போகவும் அவாவுகின்றது.

சல்மான் ருஷ்டிக்கு ஒரு குடிகாரத் தந்தை இருந்திருக்கின்றார். சிறுவயதுகளில் இருந்தே அந்த வன்முறையான தகப்பனின் செயல்களைப் பார்த்து வளர்ந்தவர் ருஷ்டி. ஒருநாள் தாயோடு தனவுப்படும் தந்தையை, பதின்ம வயது ருஷ்டி கோபத்தில் அடித்துவிடுகின்றார். அதைச் செய்யும் துணிவு தனக்குள் எவ்வாறு நிகழ்ந்தது என்று ஆச்சரியப்படும் ருஷ்டி, தந்தை தன்னைத் திருப்பி அடிப்பார் என்று நினைத்தற்கு மாற்றாக, ஏன் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் என்பதற்கான கேள்வியை ருஷ்டி அவரது 70 வயதிலும் தேடிக் கொண்டிருக்கின்றார்.


அது மட்டுமின்றி ருஷ்டியின் நாவலொன்று வெளிவந்து அதில் தன்னைப் பற்றி மறைமுகமாய்ச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றதென்று ருஷ்டியின் தந்தையார் ஆவேசப்படுகின்றார். அதன் நிமித்தம் தனக்கு விவாகரத்து வேண்டுமென்று ருஷ்டியின் தாயாரிடம் அவரின் தந்தையார் மல்லுக்கட்டுகின்றார். எழுதிய நாவல், அதன் நிமித்தம் தந்தையின் விவாகாரத்து மன்றாடலால், வீட்டை விட்டு வெளியேறும் ருஷ்டி பின்ன்ர் ஒருபோதும் தன் வீடு திருப்புவதில்லை. அவரின் தந்தையாரின் இறப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே ருஷ்டி சொந்த வீட்டுக்குத் திரும்புகின்றார். அப்போது திரும்பும் ருஷ்டி, எந்த ருஷ்டி? அது இளமையில் வீட்டை விட்டு விலகிய‌ ருஷ்டியாக மட்டும் நிச்சயம் இருந்திருக்கவே முடியாது.

நாமும் நம் காதல் ஒவ்வொன்றுக்குள்ளும் நுழைந்து வெளியேறும்போது முன்னர் இருந்த நாங்களாக நாம் ஒருபோதும் இருப்பதில்லை. நம்மில் ஏதோ ஒரு பகுதியை அந்தக் காதல் எடுத்துச் சென்றுவிடுகின்றது. அது என்னவென்பதை நாமறிவதில்லை. வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் ஒரேயொரு விடயம் என்னவென்றால் நாம் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதானென‌ ஜேர்மனியத் தத்துவியலாளர் ஜோர்ஜ் ஹெகல் கூறியதைப் போல, நாங்களும் காதல்களிலிருந்து அறியும் ஒரு விடயம் என்னவென்றால், கடந்தகாலக் காதல்களிலிருந்து நாம் எதையும் கற்றுக் கொள்வதில்லை என்பதையேயாகும். ஆனால் நாம் வரலாற்றைச் சிரத்தையாக கற்றுக்கொள்வதான பாவனையில் இருப்பதைப் போல, காதலையும் நாம் கற்று அறிந்துவிட்டோம் என்று எண்ணிக் கொள்கின்றோம். அதனால் மீண்டும் மீண்டும் புதிய‌ காதல்களுக்குள் நுழைகின்றோம் அல்லது காதலிக்கும் ஆசைகளைப் பெருக்கியபடி இருக்கின்றோம்.

ர்னஸ்ட் ஹெமிங்வே, ஹென்றி மில்லர் மட்டுமில்லை, சல்மான் ருஷ்டியும் ஐந்து முறைக்கு மேலாகத் திருமணம் செய்தவர்கள். மிகுந்த அறிவும், ஆழ்ந்த அனுபவங்களும், எழுத்தில் தனித்தன்மையும் வாயக்கப் பெற்ற‌ இவர்கள் எப்படி இவ்வளவு திருமணம் செய்ய விரும்பினார்கள் என்பது ஆச்சரியமூட்டக்கூடியது. அதைவிட வியப்பு, இப்படி இவர்களின் திருமணங்கள் ஒவ்வொருபொழுதும் தோல்வியுற்றபோதும், அவர்களைத் தேடிப் புதிய பெண்கள் வந்துகொண்டிருந்தார்கள் என்பதாகும். ஹெமிங்வேயும், ஹென்றியும் தமது காதலிகள்/மனைவிகளை தமது புனைவுகளில் அவர்களின் அனுமதியோடோ/அனுமதியின்றியோ கொண்டுவந்திருந்தார்கள். இருபத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதிவிட்ட ருஷ்டி அப்படி நேரடியாக புனைவுகளில் கொண்டுவந்தற்கான ஆதாரங்கள் குறைவு. எனினும் அவரின் மாய யதார்த்த எழுத்துக்குள் அந்தப் பெண்கள் சிறகுகளை விரித்துப் பறந்தபடியிருக்கலாம்.

ருஷ்டிக்கு அவரது ஐந்தாவது மனைவியாகப் போகின்ற எலிஸாவைப் பார்த்தவுடனேயே பிடித்துவிட்டது. எலிஸாவை முதன்முதலில் சந்தித்து வீட்டுக்குப் போனவுடனேயே எலிஸாவின் அனைத்து கவிதைத் தொகுப்புக்களையும் இணையத்தில் ஓடரும் செய்துவிடுகின்றார். இத்தனைக்கும் அவர்கள் இருவருக்கும் 32 வயது வித்தியாசம். ருஷ்டியின் புதிய நூலில் எலிஸாவை அப்படிக் கிறங்க கிறங்கக் காதலிப்பவராகத்தான் எழுதுகின்றார். ருஷ்டி, பத்மா லக்ஷ்மியைப் பிரிந்தபோது, பத்மா ருஷ்டியை எச்சரித்திருக்கின்றார், நீ எதையும் என்னைப் பற்றி எழுதினால், நமது அந்தரங்கமான விடயங்களை எல்லாம் நான் பேசவேண்டியிருக்கும் கவனம் என்று. அந்தவகையில் எலிஸா சுதந்திரத்தைக் கொடுத்திருக்கின்றார் போலும். அது ருஷ்டிக்கு, மயிரிழையில் கத்திக்குத்துக்களால் தப்பிவந்துவிட்டதால் கிடைத்துவிட்ட ஓர் வெகுமதியெனலாம். ஆனால் ருஷ்டி அந்தக் காதலையும், கருணையையும் அவ்வளவு அழகாக சலிப்பு வராது எழுதிச் செல்கின்றார். காதலென்பது ஒருபோதும் முடிந்துவிடாத தீராத வியப்புத்தானோ?

இப்போது வெளியே மழை ஒய்ந்துவிட்டது. சாம்பல் வர்ணம் கரைந்துபோய் நீலவானம் விரிந்து கொண்டிருக்கின்றது. வாவியும் தன் இயல்பான நிறத்துக்குத் திரும்பி விட்டது. அவன் தன‌து காதலிகள் அள்ளிக் கொண்டுவந்து சேர்ந்த நேசத்தையும், அனுபவங்களையும் நினைத்துக் கொள்கின்றான். எல்லாக் காதலும் ஒருநாள் சலித்துப்போகும் அல்லது பிரிவு வந்து அனைத்தையும் வாரி அள்ளிப்போகும். ஆனாலும் என்ன எழுதுவதைப் போல இந்தக் காதல்களையும் ஆராதிக்கவே மனம் விரும்பும். அவை கொண்டு வரும் புத்துணர்வுக்காகவும், காதலிகள் தம் புருவம் உயர்த்திச் சொல்லும் வியப்புறு கதைகளுக்காகவும் நேசத்தை ஆரத்தழுவிக் கொள்ளவே செய்வான்.

ஒரு காதலைக் கண்டடைகின்றபோது இருவரின் இதயங்களையும் குத்திவிடக்கூடிய இருமுனை கொண்ட குறுவாள் காத்திருக்கின்றதென்றாலும், நாம் காட்டிலிருந்தோ, கடலிருந்தோ எழும் சாம்பலைப் பூசிய கடவுளரைப் போல, நமக்கு அருளப்பட்ட காலத்தில் காதலின் நடனத்தைக் கள்வெறி கொண்டு ஆடித்தீர்ப்போம்.

***********


(May, 2024)

குறிஞ்சித்திணை நேசம்

Wednesday, June 12, 2024


சந்தகாலத்தில் வந்திருக்கின்ற இந்தப் பனிப்பொழிவு உன்னை நினைப்பதற்காகத்தான் வந்திருக்கவேண்டும். நிலத்தையும் மரங்களையும் பனி, வெண்முகிலாய்ப் போர்த்தியிருக்க எல்லாமே நிசப்தத்தில் உறைந்திருக்கின்றன. பனி மூடிய மலையுச்சிகளிலும், மரங்கள் அடர்ந்த காடுகளிலும் புத்த மடாலயங்கள் அமைந்திருப்பதற்கு, அது மனதை எளிதாக அழைத்துச் செல்லும் அமைதியின் பாதைகளுக்கு எனலாம். பனியைப் பார்க்க உள்ளம் தன்னியல்பிலே நிரம்பும். இந்த வாழ்வே போதுமென மந்திரம் போல சொற்கள் விரியும். மனிதர்களை அவர்களின் அத்தனை தத்தளிப்புக்களோடு அள்ளியணைக்க நெஞ்சம் ததும்பவும் செய்யும்.


'நமக்கு இரண்டு வாழ்க்கை இருக்கின்றன. எமக்கு ஒரு வாழ்வுதான் இருக்கின்றது என்று உணரும்போது, நமது இரண்டாவது வாழ்க்கை ஆரம்பிக்கின்றது' என கன்பூஸியஸ் கூறியதைப் போல, எனக்காகத் தரப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பத்தில்தான் நானுனது நேசத்தை உணர்ந்து கொண்டேன். முதலாவது சந்தர்ப்பத்தில் காதல் என்ற பெயரில் தன்முனைப்பும், பொறாமையும், கோபமும் கொண்ட ஒருவனாக உன்னைச் சீண்டியபடி இருந்தேன். ஏன் இந்த நேசம் இவ்வளவு நம்மை காயப்படுத்துகின்றது என்று இருவரும் பிரிந்து போனோம்.


நமக்கான பாதைகள் கிளை விரித்து வெவ்வேறானது. காதல் இன்றி வாழ முடியா உயிரிகளென்பதால் அதன்பிறகு நாம் புதிய காதலர்களை அல்லது பழைய காதல்களைச் சந்தித்தபடி இருந்தோம். ஒருநாள் அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று எனக்கு நிகழ்ந்தபோது ஒரு புதிய நாட்டிலிருந்து உன்னைத் தொடர்புகொண்டேன். எதையுமே அடுத்து சிந்தித்துப் பார்க்க முடியாத உறைந்தநிலையில் இருந்த என்னை அடுத்தடுத்து என்ன செய்வதென்று தொலைவிலிருந்து நீ வழிகாட்டினாய். அன்று நான், நீ அருகிலிருந்தபோது கவனிக்கத் தவறிய. உனது இன்னொரு விசுவரூபத்தைக் கண்டேன்.

'உனக்கு ஒரு பெண்ணோடு இரண்டு காதல்கள் இருக்கின்றன. நீ அப்பெண்ணோடு ஒரேயொரு காதல் வாழ்க்கைதான் இருக்கின்றது என்று உணரும்போது, உனக்கான இரண்டாவது காதல் அவளோடு ஆரம்பிக்கின்றது' என்று கன்பூஸியஸ் எனக்கு மறைமுகமாகச் சொல்லியிருக்க வேண்டும். எனவே ஒரு புதிய பயணத்துக்குத் திட்டமிட்டபோது உன்னால் கூடவே வரமுடியுமா எனக் கேட்டேன். நீ மறுப்பேதுமின்றி வரச் சம்மதித்தாய்.

நீயொரு சகபயணி அதற்கு மேல் இந்தப் பயணத்தில் எமக்கிடையில் எதுவுமில்லை என்று நான் சொன்னது உன்னைக் காயப்படுத்தியிருக்கும். நீயுன் வாழ்க்கையில் என்னைப் போல எத்தனையோ அரைகுறை ஆண்களைச் சந்திருப்பாய். எனவே அந்த சொற்களைத் துடைத்தெறிந்து விட்டு என்னோடு பயணமானாய்.

ரு மலையுச்சி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தோம். விழிகள் அசையும் பக்கமெல்லாம் மலையும் அதன் பசுமையும். மாலையில் சூரியன் மறைகையில் யாரோ செம்மஞ்சளையும், சிவப்பையும் தெளித்துவிட்டால் போல வர்ணஜாலம். மலையிலிருந்து கொஞ்சம் எம்பிப் பறந்தால் முகில்களை எட்டிப் பிடித்துவிடலாம் போல அவ்வளவு அண்மையில் அவை மிதந்தன.

எம் உதவிக்கென்று நின்ற இளைஞனை ஓய்வெடுக்கச் சொல்லி ஒருநாள் அங்கே சமைத்தோம். நீ பிரியாணியும், நான் கோழிக்கறியும் செய்தோம். மலையின் குளிரில் சுடச்சுட எது சாப்பிட்டாலும் மதுரமாகும். உதவிக்கு நின்ற பையனின் கதை கேட்டோம். அம்மாவோடு சண்டைபிடித்து படிப்பை நிறுத்திவிட்டு நண்பனுக்கு உதவிக்கென வந்தவன், இங்கேயே மாதக்கணக்காக நிற்கின்றேன் என்றான். என்ன இருந்தாலும் அம்மா இல்லையா, அழைத்துப் பேசு என்றோம்.

மாதக்கணக்கில் இந்த மலையுச்சியில் தனிமை வாசத்தில் இருந்தவன், நாங்கள் அங்கிருந்து திரும்புவதற்குள் அம்மாவைக் காணவும், கல்லூரிப் படிப்பைத் தொடரவும் போகத் தயாரானான். 'நாங்கள் என்ன அவ்வளவு மோசமாகவா அவனுக்கு பிரியாணியும், கோழிக்கறியும் செய்து கொடுத்தோம், உடனேயே மலையிலிருந்து இறங்கிப் போகின்றானே' என அவனைப் பார்த்து நானும் நீயும் சொல்லிக் கொண்டிருந்தோம். கைகளில் அப்போதிருந்த கொஞ்சப் பணத்தை அவனது ஷேர்ட் பொக்கட்டிற்குள் திணித்தபோது வேண்டாமென்று அவன் மறுத்தபோதும் எங்களுக்கு தம்பி இருந்தால் என்ற 'சென்டிமெண்டால்' அவனை வாயடைக்கச் செய்தோம். தாயைக் காணும் பயணத்தின் இடைநடுவில் அண்ணா/அக்கா, உங்களோடு நான் சேர்ந்தெடுத்த புகைப்படத்தை அனுப்ப மறக்கவேண்டாம் எனத் திருப்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இப்படி மனிதர்களோடு நெருக்கமாகி, அவர்களை அறிந்து பிரிந்து போவதுதானே வாழ்க்கை. அதுபோலவே காதலும் என்ற புரிதல் சட்டென்று எட்டிப் பார்த்தபோது உன்னை அணைத்து கூந்தலைக் கோதிக் கொண்டேன். அப்போது நான் எம்.டி.வாசுதேவனின் 'மஞ்சு'வை வாசித்துக் கொண்டிருந்தேன். நீ மீராவின் 'யூதாஸின் நற்செய்தி'யை வாசித்து அதன் தாளமுடியாத பாரத்தால் அடிக்கடி பெருமூச்சுவிட்டு நிறுத்தி நிறுத்தி வாசித்தபடி இருந்தாய்.

'மஞ்சு'வில் விமலா ரீச்சர் தனது காதலனுக்காய் நீண்ட காலமாக காத்திருக்கின்றார். அவருக்கு அந்தக் காதலனடோடு கழித்த கொஞ்ச நாட்களே என்றென்றைக்குமாய்ப் போதுமாயிருக்கின்றது. விமலா ஆசிரியர் உணர்கின்ற அதே குளிரும், அவர் காதலனுடன் ஊடாடித் திளைத்த பொழுதுகளும் நமக்கு இப்போது வாய்த்திருக்கின்றது. நாம் இந்த மலையுச்சியில் வந்து இப்படி உணர்வோம் என்று முற்கூட்டியே எம்.டி.வாசுதேவன் உணர்ந்து எழுதியிருக்கின்றார் போலுமென நினைத்துக் கொள்கின்றேன்.

மாலையில் பறவைகள் கூடடையும் சத்தம் கேட்கின்றது. சூரியன் மெல்ல மெல்ல வர்ணங்களை இழந்து மலைகளுக்குள் காணாமற் போகின்றது. மலைகளின் வீடுகளின் சமையலறையில் இருந்து புகை எழும்புகின்றது. மனிதர்கள் தம் 'வீடு' அடைந்துவிட்டனர். எனது ஆசிரியரான தாய் அடிக்கடி கூறும் 'I've arrived, I'm home' ஐ என் மனம் தன்னியல்பிலே சொல்லிப் பார்க்கின்றது. 'நான் வந்துவிட்டேன்' என்பது, நான் நிகழில் கணங்களுக்கு வந்துவிட்டேன் என்பதாகும். ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு காலடியும், நாம் இங்கே இப்போது இருக்கின்றோம் என்பதை நினைவுபடுத்துகின்றது. அவ்வண்ணமே நாம் இவ்வாழ்வைச் சந்தித்து, புத்துணர்ச்சியையும், ஆற்றுப்படுதலையும் பெறுகின்றோம்' என்பதையே இந்த 'நான் வந்துவிட்டேன், நான் வீட்டில் (இருக்கின்றேன்)' என்பதன் அர்த்தமாகும்.

அந்தப் பொழுதில் நான் உணர்ந்தது, 'I've arrived, I'm home'! உன் கரங்களை எடுத்துக் கோர்த்தபடி, 'எம்மால் எவ்வளவு தூரம் இயல்பாகப் போக முடிகின்றதோ, அதுவரைக்கும் நீயென் காதலியாக இருக்கமுடியுமா?' எனக் கேட்கின்றேன்.

வியப்பில் விரிந்த உன் விழிகளில், அவ்வளவு புத்துணர்ச்சியான ஒரு சூரிய விடியலை அவ்விரவில் நான் தரிசித்தேன்.

******************** 


(Mar 23)

ஓவியம்: இணையம்

கார்காலக் குறிப்புகள் - 35

Sunday, June 09, 2024

 ஓவியம்: கோபிகிருஷ்ணன்

 

நேற்று அந்த ஒழுங்கைக்குள்ளால் போனபோது ஒரு மனிதர் தலை குப்புற விழுந்து கிடந்தார். இப்பெரு நகரின் நாகரிகமான இடங்களில் வீடற்ற மனிதர்கள் தெருக்களில் உருக்குலைந்து கிடப்பதைத் தினமும் பார்த்து எல்லோரையும் போலவும் வேலை நாட்களில் கடந்து போகின்ற ஒருவன்தான் நானும். ஆனாலும் இப்படி ஓர் ஒழுங்கைக்குள் ஒரு மனிதர் குப்புறக் கிடப்பதைப் பார்த்து காரில் சென்று கொண்டிருந்த எனக்கும், நண்பருக்கும் அந்தக் காட்சி மனச்சாட்சியைக் கொஞ்சம் உறுத்தியிருக்க வேண்டும்.

நாம் காரைத் திருப்பிக் கொண்டு வந்து அந்த முச்சந்தியில் வந்து நின்றோம். நண்பர் அந்த மனிதரைத் தேடிப் போக நான் காரை நிறுத்த இடந்தேடினேன். அதுவரை அப்படியொரு மனிதர் குப்புறக்கிடப்பதை காரிலும், நடந்தும் கவனிக்காத மாதிரி போனவர்கள் நாங்கள் போனதும் வந்து சேரத் தொடங்கினார்கள். அந்த மனிதருக்கு உதவி வேண்டுமா, வீட்டில் இருக்கும் யாரையேனும் அழைக்க வேண்டுமா என்று கேட்ட போதெல்லாம் வேண்டாம் என்றே முனகிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

தலைகுப்புற விழுந்ததில் நெற்றியில் காயமேற்பட்டு கொஞ்சம் இரத்தம் வந்து கொண்டிருந்தது. சற்றுத் தள்ளித்தான் வீடு போய்ச் சேர்ந்துவிடுவேன், என்னை தூக்கிவிடுங்கள் என்றார். அவரைத் தூக்கிவிட்டாலும் அவரால் நிற்க முடியவில்லை. கீழே இருத்தினாலும் அவரால் நிமிர்ந்து இருக்கக் கூட முடியவில்லை. அவரைப் பார்க்கும்போது எந்த போதைமருந்தும் எடுத்திருக்கமாட்டார் போலத் தோன்றியது. ஏதேனும் ஸ்டிரோக் வந்தோ அல்லது ஏதேனும் மருத்துவப் பிரச்சினைகளால் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை என்பது புரிந்தது. அவரது மறுப்பையும் தாண்டி, வேறு வழியில்லை என்று அவசர எண் 911இற்கு அழைத்தோம்.

எப்போதும் போல கண்டும் காணாதது போல தாண்டிச் செல்லாமல், நண்பரும் நானும் இப்படி ஒரு சிறு உதவியை யாரென்று தெரியாத ஒரு மனிதருக்குச் செய்தோம் என்று நிம்மதி ஏற்பட்டது. அவருக்குத் தேவையான உதவி வந்து சேர்ந்தவுடன் நாங்கள் அந்த இடத்திலிருந்து நீங்கினோம். இந்நிகழ்வுக்கு முன், என் மனம் லெளதீகப் பிரச்சினைகளில் சிக்குப்பட்டு எங்கெங்கோ எல்லாம் அலைந்து நிகழுக்கு வர கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு முழுநாளை வேலை உறிஞ்சியெடுத்துவிட்ட களைப்பும் எனக்குள் இருந்தது.

அவ்விடத்தை விட்டு நீங்கி, ஒரு சிறுகாட்டுக்குள் நடந்து கொண்டிருந்தபோது, இப்போது உன் மனோநிலை சரியாகிவிட்டதா என நண்பர் கேட்டார். 'மனிதர்களோடு இருக்கும்போது நான் மிருகமாகிவிடுகின்றேன். மரங்களோடு இருக்கும்போது மட்டுமே நான் மனிதனாகிவிடுகின்றேன்' என்றேன். மரங்கள், நான் என்ன மோசமான நிலையில் இருந்தாலும் என்னை எளிதில் இயல்புநிலைக்கு வரச் செய்வதைக் கண்டிருக்கின்றேன். காடுகளும், மலைகளும், நதிகளும் என்னை ஆற்றுப்படுத்தி வழியனுப்பும் அற்புதமான தோழமைகள் என்பேன்.

இப்படி குப்புற விழுந்து கிடந்து மனிதரைத் தாங்கி நின்றது
, எங்களுக்குப் பிறகு வந்து சேர்ந்த மாணவர்கள். உடனே 911 இலக்கத்துக்கு அழைத்தது குழந்தையைத் தள்ளுவண்டியில் தள்ளிக் கொண்டு வந்த ஒரு தாய். சாதாரணமாக சும்மா கடந்து போயிருக்க வேண்டிய நாமெல்லோரும் ஒரு இடத்தில் சகமனுசருக்கான உதவிக்கென கூடியிருந்தோம். இவைதான் நாமின்னும் மனுசத்தன்மையை இழக்கவில்லை என்பதை நம்மை நம்பச் செய்கின்ற விடயங்கள். இதற்குள்ளும் ஒருவர் தன் முனைப்பைக் காட்டிப் படங்காட்டிக் கொண்டிருந்தார். இடையில் வந்து தானே 'எல்லாம்' போல படங்காட்டிய அவர் அவசர உதவி வருவதற்குள் காணாமலும் போயிருந்தார். எல்லோரும் சேர்ந்துதான் இவ்வுலகு. நாம் காவிக் கொண்டு செல்லவேண்டியவை அந்தத் தாயினதும், மாணவர்களின் அரவணைப்பைத்தானின்றி இந்தப் படங்காட்டியவரை அல்ல. ஆக அவரை நினைவிலிருந்து மறப்போம்.

னடா என்ற நாட்டின் மீது கட்டியமைக்கப்படும் விம்பங்களை அனேகர் இந்த நாட்டிற்கு வந்தபிறகே நன்கு அறிவர். அப்படி வரலாற்றை அறிய விரும்புபவர்க்கு இங்கிருக்கும் பூர்வக்குடி மக்களின் இன்றைய வாழ்க்கையை அறிவதிலிருந்து வரலாற்றைப் பின்னோக்கியும் முன்னோக்கியும் அவதானித்துப் போகச் சொல்வேன். அதுபோல இன்றைய பெரும் நுகர்வும், பணமீட்டும் கனவும், இங்கே மத்தியதர வர்க்க வாழ்க்கையை இல்லாமற் செய்து கொண்டிருக்கின்றது என்பதையும் அறியலாம்.

என் நண்பபொருவர் சில மாணவர்களோடு ஒரு வீட்டைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றார். அவ்வீட்டில் ஓர் அறை காலியாக இருக்கின்றதென்று பார்ப்பதென்று ஒரு மாணவி வந்திருக்கின்றார். அவரோடு பேசியபோது அவர் பொருளாதார நெருக்கடியால், கடந்த நான்கைந்து மாதங்களாக ஒரு நேரச் சாப்பாட்டை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார் என அறிந்திருக்கின்றார். என் நண்பருக்கோ இதைக் கேட்டு மனம் அவதிக்குள்ளாயிருக்கின்றது. அந்த இரவு பதினொரு மணியிலும் எதையெதையோ செய்து அம்மாணவிக்கு கோழிக்குழம்போடு சாப்பாடு செய்து கொடுத்திருக்கின்றார். சாப்பிட்டு முடித்த அந்த மாணவி எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு கோழிக்கறி சாப்பிட்டிருக்கின்றேன் என நெகிழ்ந்து சொல்லியிருக்கின்றார். வெளியே காட்டும் ஜிகினாத்தனமான வாழ்க்கை மட்டுமில்லை கனடா, இப்படியும் பலருக்கு வாழ்க்கை இருக்கின்றது.

யுத்தகாலத்தில் இந்திய இராணுவம்
, பின்னர் இலங்கை அரசின் பொருளாதாரத் தடையால் பொருட்கள் இல்லாமை என்றெல்லாம் மூடப்பட்ட யாழில் வாழ்ந்தபோதும் நான் (இறுதியுத்த முள்ளிவாய்க்கால் வேறுகதை) ஒருவேளை உணவு மட்டும் சாப்பிட்டு பட்டினியால் இருந்ததாக நினைவில்லை, இப்படியெல்லாம் இந்தப் பிள்ளைகள் போதிய உணவில்லாது தவிக்கின்றார்கள் என்பது எவ்வளவு துயரமானது என்று நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இவையெல்லாம் சேர்ந்துதான் இந்தக் கனடா வாழ்க்கை. அதுவும் இந்தப் பிள்ளை இந்தியாவில் எனக்கு மிகப்பிடித்தமான இடுக்கியிலிருந்து வந்தவர். என் வாழ்க்கையில் அற்புத அனுபவங்களைத் தந்த ஒரு ஊரைச் சேர்ந்த பிள்ளை ஒரு நேர உணவோடு மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என்பது எவ்வளவு துயரம். இவ்வாறு ஊனையும் உணவையும் உருக்கித்தான் நான் கனடாவுக்கு வரமுன்னர் என் அண்ணாக்களைப் போன்ற தலைமுறையினர் இங்கு இருந்திருக்கின்றார்கள் என்பதையும் நானறிவேன். அப்படித்தான் இப்போதும் எத்தனையோ நாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு மக்கள் அலையலையாக ஏதோ ஒரு நம்பிக்கையின் நிமித்தம் வந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு நாம் உதவி செய்யாவிட்டால் கூட, அவர்களை ஏதோ ஒருவகையில் புரிந்து கொள்ள முயலலாம்.

இன்று கனடாவில் புதிய குடிவரவாளர்கள்/மாணவர்களுக்கு எதிரான எதிர்ப்பலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. கனடிய அரசும் அவர்களை நோக்கி புதிய விதிமுறைகளைக் கடுமையாக விதிக்கத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு வருபவர்கள் சிலர் வந்த 'ஊரோடு ஒத்து வாழாமல்', தாங்கள் இன்னும் நிலபிரபுத்துவ நிலையில் இருப்பதாய் அவ்வப்போது சில சம்பவங்களால் காட்டிக் கொண்டிருந்தாலும், நாம் இவற்றையெல்லாம் மீறி வரும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளவே வேண்டும். ஏனெனில் நாமும் அப்படித்தான் வந்தோம். நம்மை அன்று ஏற்கனவே இருந்தவர்கள், வெளியே துரத்தியிருந்தால் நாம் தஞ்சம் புகுவதற்கு எந்தத் தேசம் இருந்திருக்கும்?

வீட்டுப் பிரச்சினை, வேலைப் பிரச்சினை, சமூக ஒழுங்குப் பிரச்சினை, காலநிலை மாற்றப் பிரச்சினை என்று எத்தனையோ பிரச்சினைகளால் இப்பெரு நகரம் தத்தளித்துத்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் நமக்குக் கிடைக்கும் பலதை -உணவோ, வீடோ- பிறரோடு பகிர்ந்துகொள்வதால் நாம் எதையும் இழக்கப் போவதில்லை. நாம் இந்த நாடுகளுக்கு எதுவுமேயில்லாதுதான் வந்தோம். நம்மில் பலர் சொந்த நாட்டிலே ஒவ்வொரு இடமாய் அகதியாய் அலைந்து கடைசியில்தான் இங்கு வந்து அடைக்கலாமாயிருந்தோம். பழையதை எல்லாம் அப்படியே காவிக் கொண்டிருக்கவேண்டும் என்றில்லை. ஆனால் எங்கிருந்து வந்தோம் என்கின்ற வேர்களை மறக்காது இருப்பது, நாம் இன்னும் மகிழ்ச்சியாக பூத்துக் குலுங்கி, எஞ்சியுள்ள இவ்வாழ்வை பிறருடன் பகிர்ந்து நிம்மதியாக வாழ்ந்து முடித்துவிட துணை புரியக்கூடும்.

****************


(May 11)


கே.ஆர்.மீராவின் புதினங்கள்

Thursday, June 06, 2024

 

(கே.ஆர். மீராவின் புனைவுகளை வாசித்துவிட்டு எம்.டி.முத்துக்குமாரசுவாமி ஒரு பதிவைத் தனது முகநூல் பக்கத்தில் எழுதினார். அதன் தொடர்ச்சியாக மீராவின் நாவல்களை முன்வைத்து எழுதிய ஒரு பதிவு இது.)

 

எம். டி.முத்துக்குமாரசுவாமியின் பதிவை வாசிக்க.. 

 

1.


கடந்தவாரம் கே.ஆர்.மீராவின் 'தேவதையின் மச்சங்கள்/கருநீலம்' நூலை வாசித்துவிட்டு, 'இனி கொஞ்சக் காலத்துக்கு மீராவின் புனைவுகளை வாசிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்' என நினைக்கின்றேன் என நண்பருக்குச் சொன்னேன். என்னைப் போலவே மீராவின் இதுவரை தமிழில் வந்த அனைத்து நூல்களையும் வாசித்த நண்பருக்கு இப்படிச் சொன்னது சற்று ஆச்சரியமாக இருந்தது. 'இல்லை, அவர் ஒரு நல்ல எழுத்தாளராக எனக்குள் வந்துவிட்டார், அந்த நிலைப்பாடுடனேயே ஒரு இடைவெளி விட்டுக் கொள்ளலாம் என நினைக்கின்றேன்' என்றேன்.

 


மீராவின் புதினங்கள் குறித்து பகிர்ந்த ஒரு கட்டுரையில், 'அகநாழிகை' வாசுதேவன் 'மீராவின் அனைத்துப் படைப்புகளையும் தேடிப் பிடித்து வாசித்தேன். ஒன்றைக் கூட குறை சொல்ல முடியாது. சிறந்த எழுத்தாளர்கள் என நான் கருதும் பலரில் இந்தப் பண்பு காணக்கிடைத்ததில்லை' என்று கூறியிருந்தார். மீராவின் ('ஆராச்சார்') தவிர்த்த படைப்புக்களை வாசித்தவன் என்றவகையில் நானும் வாசுவின் கருத்துக்களோடு உடன்கின்றேன் என அங்கே சொல்லியிருந்தேன். ஒரு படைப்பாளியாக மீரா நீர்த்துப் போகாதபடைப்புக்களைத் தந்தாலும், இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அவர் இன்னொரு மொழியிலிருந்து தமிழுக்கு அறிமுகமாகின்றார். அதனால் அவரது சிறந்த படைப்புக்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் தெரிவு மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்கின்றது என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

 

இப்போது மீராவின் புனைவுகள் பற்றி எம்.டி.முத்துக்குமாரசுவாமி எழுதிய பதிவைப் பார்த்தேன். அநேகமானஎம்.டி.எம்மின் எழுத்துக்கள் எனக்கு நெருக்கமானவை. இதில் நான் பார்த்த பார்வையிலிருந்து வேறொரு கோணத்தில் எம்.டி.எம், மீராவை அணுகுகின்றார். பல்வேறு பார்வைகள்/ பல்வேறு கோணங்கள் இல்லாது உரையாடல்கள் சாத்தியமில்லை. எனவே எல்லா மாற்றுப் பார்வைகளும் வாசிக்கப்பட வேண்டியவையே.

 

முதலாவதாக எம்.டி.எம்மைப் போல நான் ஒரே தொடர்ச்சியில் மீராவின் நூல்களை வாசித்தவனில்லை. ஒவ்வொரு புதினத்தையும் அவை கைகளில் கிடைக்கும் வேளைகளில் வாசித்திருக்கின்றேன். அநேகமானவை என் பயணங்களில் வாசிக்கப்பட்டவை. எனவே ஒரு உற்சாகமான மனோநிலையில் (அல்லது அப்படி நம்பி) வாசிக்கப்பட்டதால் எம்.டி.எம் கூறுவதுபோல மீராவின் அதீத வாதைகளை நான் அவ்வளவாகத் தொடர்ந்து காவிச் செல்லவில்லை. ஒரு கவிதைத் தொகுப்பை ஒரே 'மூச்சில்' வாசிப்பதற்கும், அதை நாட்கள் எடுத்து ஆறுதலாக வாசிப்பதற்கும் இடையில் எனக்கு வாசிப்பில் வித்தியாசப்படுவதுண்டு.

 

எம்.டி.எம் குறிப்பிடுவதைப் போல, மீரா ஒரேவித படிமங்களை ஒரு புதினத்தில் அடிக்கடி பாவிப்பது சிலவேளைகளில் பலமாகவும், பலவீனமாகவும் இருக்கின்றது ("ஒரே படிமம் ஒரு கதையில் மீண்டும் மீண்டும் பலவகையில் சொல்லப்படுவது எனக்குப் பிடிக்கவில்லை" - எம்.டி.எம்). ஒரே படிமம் திருப்பத் திருப்ப மீரா பாவிக்கப்படும்போது, சில புதினங்களில் வெவ்வேறு விதமான அர்த்தங்கள் தரப்படும் இடங்களாக இருக்கும்போது அது பலமாக அமைகின்றது. அதேவேளை வாசகருக்கு ஒன்றையே திருப்பத் திருப்ப நினைவூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும்போது அது பலவீனமாகியும் மாறி விடுகின்றது.

 

 

2.

 

"அதீத வன்முறைகளின் சித்தரிப்புகளும் குரூரமான கதை சொல்லலும் நமக்கு ஒன்றும் புதிதல்ல. ஷோபாசக்தியின் சிறுகதைகளிலும், நாவல்களிலுமே நாம் அவற்றை வாசித்திருக்கிறோம். ஆனால் ஷோபாசக்தியின் கதைகளில் வரும் வன்முறை போரின் சித்தரிப்புகள். மீராவோ தினசரி வாழ்விலிருந்து வன்முறைகளை எழுதுகிறாரா இதயம் பலவீனமான எனக்குத் தாங்கமுடிவதில்லை. இதையே மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தனும் ஒரு நூலின் முன்னுரையில் வேறு வார்த்தைகளில் சொல்கிறார். மேலும் ஷோபாசக்தியின் விலகலான கதைசொல்லல் மீராவிடத்து இல்லை; சிவாஜிகணேசன் போல மிகை உணர்ச்சிக் கொந்தளிப்பில் கதை சொல்வதால் பலவகைகளிலும் பதற்றம் மேலிடுகிறது; அதில் ஒரு வகை அம்மா தாயே என்னை விட்டுவிடு என இறைஞ்சுவது; அது வாழ்க்கையோடும் இறைஞ்சுவது என்ற போதத்தை அடைவது.- எம்.டி.எம்

 

எம்.டி.எம், ஏன் இவ்வளவு வன்முறையாகவும், வாதையாகவும் மீரா எழுதுகின்றார் என ஒரு கேள்வியாக முன்வைக்கின்றார். வாழ்க்கையில் எத்தனையோ துயரமான விடயங்களோடு நாமெல்லோரும் அல்லாடிக் கொண்டிருக்கும்போது மேலதிக வாதைகள் தேவையா என நம் மனம் வினாவுவதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கின்றது. அப்படியெனில் Frida Kahloவின் படைப்புக்களை நாம் எப்படிப் பார்க்கின்றோம். அவர் தன் வாழ்வின் வாதைகளினால் வந்தவர் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை அறியும்போது தெரிந்தாலும், படைப்பாளியின் பின்புலம் தெரியாமல் அவரின் ஓவியங்களைப் பார்ப்பவர் என்ன நினைப்பார்? 'அம்மா, ஃபிரைடாவே என்னை விட்டுவிடுஎன்று சொன்னால் எவருக்கு இழப்பு?  ஒருமுறை இன்னொரு நகரில் ஒரு வேற்றினத்தவரின் வீட்டுக்குச் சென்றபோது அவரின் வீடு முழுதும் ஃபிரைடாவின் அதீத வாதை நிரம்பிய ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்ததைப் பார்த்து எனக்கு இயல்பாக மூச்சுவிடமுடியாத அவதி வந்திருந்தது. அதற்காக ஃபிரைடாவின் ஓவியங்கள் ஏன் இப்படி இருக்கின்றன எனக் கேட்டல் நியாயமற்றதே.

 

மேலும் எம்.டி.எம், ஷோபாசக்தியின் படைப்புக்களை மீராவின் ஆக்கங்களோடு ஒப்பிடுகின்றார். அவர் கூறும் அவதானங்களில் கூட எனக்கு மாற்றுக் கருத்துக்களுண்டு. போர் என்பது ஒரு பெரும் சமூகத்தைப் பாதிப்பது, அதனால் வரும் கூட்டு வன்முறை/ வாதை என்பது பலர் எளிதாக உணரக்கூடியவை. அதற்காய் ஒரு பெண் குடும்ப வன்முறையால் தனக்கு மூச்சுத்திணறல் வருவதாகச் சொன்னால் மறுத்துவிட முடியுமா என்ன? மேலும் அண்மையில் வரும் ஷோபாவின் புனைவெழுத்துக்களை வாசிக்கும்போது அவருடைய எழுத்து வாதைக்குள் சிக்கிக் கொண்டு தொடர்ந்து உழன்று கொண்டிருப்பதாகத்தான் தோன்றும். புலம்பெயர்ந்த கதைசொல்லிகளை/பாத்திரங்களை அநேகமாக எழுதும் ஷோபா எல்லோரையும் மனம்பிறழ்ந்தவர்களாக/ இயல்பு வாழ்க்கை வாழமுடியாதவர்களாகச் சித்தரிக்கும்போது, ‘போதும் ஷோபா நிறுத்துங்கள்என வாசிக்கும்போது  சிலவேளைகளில் எனக்குத் தோன்றுவதுண்டு.

 

புலம்பெயர்ந்த நாங்கள் எல்லோரும் அப்படியா இருக்கின்றோம். இவற்றையெல்லாம் தாண்டி எங்களுக்கு வேறொரு வாழ்வும் இங்கு இருக்கின்றது அல்லவா? பதின்மத்தில் இயக்கத்துக்குப் போய், 2-3 வருடங்களில் இயக்கத்தை விட்டு விலகியோ/விலத்தப்பட்டோ வெளிவந்த ஷோபாசக்தியின் போரில்லாதபுலம்பெயர் வாழ்வு 30 வருடங்களுக்கு மேலாக இருக்கும்போது, அதுவும் கிட்டத்தட்ட மூன்று புதிய தலைமுறைகள் வந்தபின்னும் ஏன் ஷோபாவின் புனைவுகளில் வாதைகள் இலலாத/ போர் அல்லாதஒரு புதினம் முழுமையாகத் தோன்றவில்லை என்று நாமும் கேட்கலாம். எம்.டி.எம் கூறுவதுபோலஷோபாவின் சிறுகதைகள் வேண்டுமெனில் இறுதியில் நம்பிக்கைகக் கீற்றுக்களோடு முடிந்தாலும், அவரின் நாவல்களில் அதீத வாதைகளுடன், அவநம்பிக்கையான முடிவுகளை நோக்கிப் போவதை நாம் தெளிவாகக் காணலாம். அதாவது ஒரு கடும் கையறு நிலை!

 

என்ன செய்ய, எம்.டி.எம், நீங்கள் மீராவை உணர்வதைப் போலத்தான், ஷோபாவை விடவும் போரின் கோரங்களை ஈழத்தில் இன்னும் இருந்து பார்த்து, வெளியில் வந்த நானும்/ எனக்குப் பின் வந்தவந்த தலைமுறையில் சிலரும் ஷோபாவின் எழுத்துக்களில் உணர்கின்றோம். அது கூடப் பரவாயில்லை, ஷோபாவின் பாதிப்பால் வந்த/வருகின்ற அடுத்த தலைமுறையும் ஷோபாவைப் போல அதீதமான வன்முறையையும்/வாதையையும் தான் எழுதிச் செல்கின்றது. எப்படி இந்த மூச்சுத்திணறல்களில் இருந்து வாசகராக நாம் தப்பித்துக் கொள்வது? மீராவிடமாவது ஒரு மோகினிப் பிசாசு இருந்தது, புளியமரத்தடியில் அதைக் கொண்டு பேய் ஆணியடிக்கலாம். நம்மிடம் இருக்கும் போர் அரக்கன்களுக்கு புளியமரங்களே போதாது. எங்களோடுதான் வாழ்விலும் எழுத்திலும் கூட வந்தபடி இருக்கின்றன.

 

3.

 

'யூதாஸின் நற்செய்தி'யில் வரும் பெண் போல, 'மீரா சாது'வில் பெரும் பெண் போல, ஏன்'தேவதையின் மச்ச'ங்களில்' அநியாயமாக இறந்துபோன ஏஞ்சலா போல எத்தனையோ பெண்களை நான் இன்றைக்கும் அறிவேன் (அண்மையில் கூட இங்கு தனது கணவனை விட்டுப் பிரிந்த இளம் தமிழ்ப்பெண், இந்த ஏஞ்சலாவைப் போலத்தான் கணவனால் வேலைக்குச் சென்று திரும்பும் வழியில் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றாள்). அவர்களில் பலர் சொல்லிக் கொண்டிருக்கின்ற கதைகளில் இருக்கும் வன்முறையை/வாதையைக் கேட்டு, சிலவேளைகளில் இதற்கு மேல் என்னால் கேட்கமுடியாது என்று தப்பியெல்லாம் ஓடி வந்திருக்கின்றேன். மனதில் மட்டுமில்லை, உடலிலும் இரணங்களோடு வாழ்கின்றவர்களை/அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் நினைவுபடுத்த இருக்கும் உடல் காயங்களை எல்லாம் கண்டிருக்கின்றேன்.

 

இத்தனைக்கும் ஒருகாலகட்டம் வரைக்கும் போரிற்குள் இருந்த என்னாலேயே இந்த வாதைகளின் கதைகளையே கேட்கமுடியாது போயிருக்கின்றது என்பதுதான் ஆச்சரியமானது. இறுதிப் போரில் 'அதிசயத்தக்கதாய்' தப்பிய ஒரு தோழி இன்று எங்கள் எவராலும் கற்பனையே செய்து பார்க்கமுடியாத குடும்ப வன்முறைக்குள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதை நான் அறிந்தும், எதையும் செய்யமுடியாத கழிவிரக்கத்தோடு பார்த்தபடி இருக்கின்றேன்.

 

இவை அனைத்துக்கும் முன் மீரா எழுத்தில் வைக்கும் வாதைகள் ஒன்றுமேயில்லை. இந்த நாளாந்த வன்முறை எப்படி ஓவ்வொருவரின் கழுத்தையும் இறுக்கின்றதென்பதை மீராவை வாசித்து மேலும் பலர் எழுத வரக்கூடும் அல்லது ஆகக்குறைந்தது மீராவின் எழுத்துக்கள் 'நாங்கள் தனித்திருக்கவில்லை' என்ற நம்பிக்கையையாவது கொடுக்கும். அதற்காகவேனும் மீராவை வாசிக்க வேண்டும் என்பேன். ஆனால் நான் இனி கொஞ்சக்காலத்துக்கு 'ஆராச்சார்' உள்ளிட்ட மீராவின் படைப்புக்களை வாசிக்கப் போவதில்லை. எல்லாவற்றும் ஓர் இடைவெளி இருப்பது அவசியந்தானில்லையா?

 

************



(Mar 20, 2024)