கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கார்காலக் குறிப்புகள் - 02

Thursday, March 23, 2023


பனி பொழிந்து வெண்மை மூடிய நிலத்தை, காலையில் மழை கரைத்துக் கொண்டிருந்தது. பெருங்காற்றுடன் பெய்த உறைபனிமழை புற்களை சற்று விலத்த பசுமை தெரிந்தது. அந்தக் காட்சி அவ்வளவு நீடிக்கவுமில்லை. மீண்டும் பனி சடுதியாகப் பொழிந்து வெள்ளை முகில்களால் போர்த்தியது போலத் தரை கண்முன்னே மாறியது.


எல்லாமே சில மணித்தியாலங்களுக்குள்! 

இந்தக் குறுகிய நேரத்திற்குள்ளே ஒரு 'நிரந்தரமின்மை'யைப் பார்க்கின்றேன். வியட்னாமில் போர் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது, தாயிடம் (Thich Nhat Hanh) இந்தப் போர் எப்போது முடியும் என்று மக்கள் ஆறுதல் தேடி வருகின்றனர். எப்போது போர் முடியும் என்று தெரியாவிட்டாலும், புத்தரை நான் நன்கறிவேன் என்பதால், 'எல்லாமே ஒருநாள் மாறும்' என்பதில் நம்பிக்கை வையுங்கள் என அந்த மக்களிடம் கூறியதாகத் தாய் கூறுகின்றார். 

ஆம். எதுவுமே நிரந்தரமில்லாதவை;  எப்போதுமே மாறிக் கொண்டேயிருப்பவை!

தாயிடம், பின்னர் இந்த உலகம் போர்கள்/காலநிலை மாற்றம்/சுரண்டல் என இவ்வளவு கொடுமையாக இருக்கின்றதே உங்கள் பதில் என்ன என்கின்றபோது தாய் இதையே ஒரு பத்திரிகையாளரிடம் -அவரின் 70வயதுகளில்- 'எல்லாமே மாறக்கூடியவை' என மீண்டும் நினைவுபடுத்துகின்றார். ஆனால் நம்மால் செய்யக்கூடியது, நல்லவை விளையக்கூடிய உகந்த காரணிகளை (Right Conditions) தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருப்பது என்கின்றார்.


தாயை, 1960களில் வியட்னாமிய அரசு சொந்த நாட்டுக்குத் திரும்ப வரக்கூடாது என்கின்றது. அதன்பின்னர் கிட்டத்தட்ட 40 வருடங்களின் பின் முதன்முதலாக மீண்டும் வியட்னாமுக்குப் போய் சங்காவை அவர் அமைக்கின்றார். ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே நூற்றுக்கணக்கானவர்கள் அந்தச் சங்காவில் சேர, வியட்னாமிய அரசு தம் இறையாண்மையை அச்சுறுத்தும் சக்தி தாயினது சங்காவிற்குள்ளதோவென அச்சமுறுகின்றது. எனவே தாய் நாம் சங்காவை இங்கே நடத்துவதற்கான  உகந்த காரணிகள் இன்னமும் உருவாகவில்லையெனச் சொல்லி, அதை முற்றாகக் கலைத்து விடுகின்றார். ஆனால் அவ்வாறு வந்துசேர்ந்த பிக்குகளுக்கும், பிக்குணிகளுக்காவும் அருகில் தாய்லாந்தில் ஒரு சங்கா புதிதாகத் தொடங்கப்படுகின்றது.

இதையேன் தாயோ அல்லது அவரைப் பின் தொடர்பவர்களோ தொடர்ந்து நமக்கு நினைவூட்டுகின்றனர் என்றால், சில விடயங்களுக்கு சரியான காரணிகள் இல்லாதபோது பொறுமையாகக் காத்திருப்பதில் எவ்வித தவறுமில்லை என்பதற்காகவே.

ஆகவேதான் இப்போது பெரும் பனிக்காலம் தொடங்கிவிட்டபின், பெரும் பனிப்பொழிவு நடந்தேறி, தெருவில் பயணிக்க வேண்டாம் என்றும், விமானங்கள் வானில் ஏறமுடியாத ஒரு சூழலும் இருக்கும்போது, நாமெல்லோரும் சரியான காரணிக்காய்க் காத்திருக்கத்தான் வேண்டும். 

எதையும் நமக்கேற்றமாதிரி எல்லாப் பொழுதும் மாற்றிவிடமுடியாது என்பது பிரபஞ்ச யதார்த்தம்!

000000000000

நான் அவ்வப்போது பேசும் நண்பரொருவர் அடிக்கடி தனது நண்பர்கள் மாறிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் புரிந்துகொள்ளாமல் பழகிவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு நான் என் வாழ்விலிருந்து சில உதாரணங்களைச் சொல்லிக் கொண்டிருப்பேன். அவரைப் போல எனக்கு நிறைய நண்பர்கள் இல்லாதுவிட்டாலும், நானும் பல நண்பர்களுக்கு மெளனமாக விடை கொடுத்திருக்கின்றேன். அது நண்பர்களோ, காதலிகளோ எந்த ஒருவரிடம் நம்மால் மனம் திறந்து பேசும் வெளி இல்லாமல் போகின்றதோ அப்போதே அவர்களுக்கு விடைகொடுத்து விடுவது இரு தரப்பினர்க்கும் நல்லது என்றேன்.

இந்தப் பிரபஞ்சம் நமக்கான அரிய விடயங்களை இழக்க வைத்தாலும், அதைவிட இன்னும் பெறுமதி மிக்க மனிதர்களைக் கொண்டு நம் வாழ்வை நிரப்பும். அதை நண்பர்களை விட, காதலிகளின் விடயத்தில் நான் பார்த்திருக்கின்றேன் என நண்பருக்குச் சொன்னேன். இவ்வளவு நாளும் எங்கிருந்தார்கள் இவர்கள் என்று வியக்குமளவுக்கு சட்டென்று நம்மிடையே தோன்றி நம்மைப் பலர் புதிதாக வியக்க வைப்பார்கள்.

ஒரு காதலின் பெரும் பிரிவில் தனக்குள் உழன்று கொண்டு, 'இவ்வளவு காதலை வைத்துக் கொண்டு என்ன செய்வது' என்று மறுகிக் கொண்டவனுக்கு, பின்னர் ஒரு காலத்தில் ஒரே சமயத்தில் நான்கு பெண்கள் காதலிக்க வந்தார்கள் என்பதை காதலின் துயரத்தில் இருந்தபோது அந்த ஒருவன் நம்பியிருக்கத்தான் முடியுமா என்ன?

வாழ்க்கை அப்படி விசித்திரமானதுதான். நம்மை எந்தளவுக்கு நமது பலவீனங்களோடு இன்னொருவரின் முன்னால் வைக்கமுடியுமோ, அந்தளவுக்கு அந்தளவு நமக்கு தோழமையோ/நேசமோ கிடைக்கும். அதேபோல திறந்த மனதுடன் நேசத்துக்குப் பிரியாவிடை வேண்டியபோது கொடுக்கவும் முடியும்.

இந்த நண்பருக்கு நேற்றிரவு நகுலனைப் பற்றி சுகுமாரன் எழுதிய 'நகுலன் விட்டுச் சென்ற வழிகள்' பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். மலையாளக் கவிஞர்களும், தமிழ்க் கவிஞர்களும் பங்குபற்றிய ஒரு நிகழ்வில் நகுலனும் மேடையில் உட்கார்ந்திருக்கின்றார். அப்போது ஒவ்வொரு கவிஞர்களும் கவிதை வாசிக்கும்போது நகுலனையும் அழைக்கின்றனர். நகுலன், 'கவிதை உரக்க வாசிப்பதற்கானதல்ல; மனதால் வாசிப்பதற்கானது என்று ஒலிபெருக்கியில் அறிவித்து விட்டு வந்து மெளனமாக உட்கார்ந்து விட்டார். நெருங்கிய நண்பரான அய்யப்பப் பணிக்கர் வற்புறுத்தியும் நகுலன் இசையவில்லை.' என்று சுகுமாரன் அந்த நிகழ்வை நேரில் பார்த்து எழுதியிருக்கின்றார்.

அவ்வாறு ஒரு கவிஞர் ஒருவரின் நூல் அறிமுக நிகழ்வுக்கு, தமிழ்நாட்டில் நின்றபோது சென்றிருந்தபோது, சிறுகூட்டம் என்பதால் ஒவ்வொருத்தரும் அந்தக் கவிஞரின் தொகுப்பிலிருந்து ஏதோ ஒரு கவிதையை வாசித்தபோது, நான் கவிதைகள் மெளன வாசிப்பிற்குரியது என்று மறுத்திருந்ததை (ப்யூகோவ்ஸ்கியின் தமிழாக்கத்திற்கான முன்னுரையிலும் குறிப்பிட்டிருப்பேன்) நண்பருக்கு நினைவூட்டினேன். 'அப்படியெனில் நான் ஒரு நிகழ்வில் கவிதைகளை உரத்து வாசித்ததை மறுதலிக்கத்தான், இவற்றை எனக்குச் சொல்கின்றாயா' எனக் கேட்டார். அப்படி என்றெல்லாம் இல்லை. நான் உணர்ந்ததைப் போல நகுலன் உணர்ந்திருக்கின்றார் என்பது நினைவுக்கு வந்ததென்று கதையை வேறு திசைக்கு மடை மாற்றினேன்.

அத்தோடு இருந்தால் பரவாயில்லை. வெளிக் குளிர் எனக்கு கலக மனோபாவத்தைத் தந்ததோ என்னதோ, அதே கட்டுரையில் நகுலன் சுகுமாரனுக்கு ஒரு எழுத்தாளராக ஆகவேண்டும் என்று விரும்பினால், திருமணம் செய்யாது இருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கின்றார் என்று வாயைத் திறந்து சொல்லிவிட்டேன். சரி இப்போது என்ன சொல்ல வருகின்றாய் அலுப்பான, உடல் நோவிருக்கும் நாளொன்றில், நல்ல மனோநிலையை எனக்குத் தருவாய் என்று உன்னிடம் வந்தால், கவிதைகள் மெளன வாசிப்புக்குரியவை, எழுதப்போவது என்றால் பிரம்மசாரியாய் இருக்கவேண்டும் என்றெல்லாம் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது 'பனி' போலக் கதைக்கிறாய் எனச் சலித்துக்கொண்டார் நண்பர்.

நகுலன், பிரமிள், ஏ.ஜே.கனகரட்ன, (ஓவியர்) கருணா என்று தனித்திருந்து தம்போக்கில் வாழ்ந்து, இவ்வுலகிலிருந்து உதிர்ந்து போனவர்கள் மீது ஏனோ பனிக்காலங்களில் இன்னும் பிரியம் கூடிவிடுகின்றது. அந்த ஆன்மாக்கள் எங்கிருந்தாலும் ஒன்று சேர்ந்து - தற்சமயம் எனக்குப் பிடித்த ஆர்ஜெண்டீனா Santa Julia என்கின்ற செம்மதுக்காரியோடு- காதல் நடனமாடி கள்வெறி கொள்ளட்டுமாக.

பெண்களின் அரவணைப்பின்றி ஒருகணமும் இருக்கவே முடியாத என்னைப் ஒருவனுக்கு இவர்களின் வாழ்வு என்றும் தீரா வியப்புத்தான். அதை அருகிலிருந்து பார்த்தபின்னும் இப்படிக் கோபிக்கக்கூடாது, நண்பரே!

00000000000000000000

(Dec 22, 2022)

புலம்பெயர் X புகலிட X அகதி இலக்கியம்

Wednesday, March 22, 2023

-சிறு குறிப்புகள்-

*******************

இற்றைக்கு 20 வருடங்ளுக்கு முன்னரே புலம்பெயர் X புகலிட வேறுபாடுகள் தீவிரமாகப் பேசப்பட்டிருக்கின்றது. பல்வேறு நிலைகள்/விடயங்கள் இடைவெட்டும் மிக சிக்கலான ஈழத்தமிழர்களின் அந்நிய நாட்டு வாழ்வை தெளிவாக வரையறுத்தும் விட முடியாது. 1983 இனக்கலவரத்தை ஒரு முக்கிய புள்ளியாக வைத்து புலம்பெயர் X புகலிடம் என்பது உரையாடப்பட்டிருக்கின்றது. 80களுக்கு முன் இலங்கையில் இருந்த படித்த உயர்வர்க்கத்தினர் பொருளாதார வசதிக்காய் புலம்பெயர்ந்தனர். முக்கியமான யாழ், கொழும்பு ஆதிக்கசாதியினருக்கு இந்த வாய்ப்புக்கள் எளிதாகக் கிடைத்து அவர்கள் புலம்பெயர்ந்தனர்.

83இல் நிகழ்ந்த படுகொலைகளும், இலங்கை/இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்களும், நம் இயக்கங்களுக்குள் நிகழ்ந்த உட்படுகொலைகளும் சாதி, மத, ஊர் பாகுபாடில்லாது எல்லோரையும் வெளிநாடுகளுக்கு எப்படியெனினும் உயிரைத் தக்கவைப்பதற்காய் அத்தனை ஆபத்துக்களுக்குமிடையில் 80களில் இருந்து அனுப்பி வைக்கத் தொடங்கியது.

இவ்வாறு நிகழ்ந்த விடயங்களை -80களின் பிற்பகுதியில் இருந்து 90களின் முடிவுவரை- புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து வந்த சிறுசஞ்சிகைகளின் எண்ணிக்கையையும், அவற்றின் பேசுபொருள்களையும் வைத்துப் பார்த்தாலே இந்த வரலாறு  நமக்கு எளிதாகப் புரியும். அந்தக் காலத்தில் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களில் சிலர், ஏற்கனவே பொருளாதார வசதிக்காய் வந்தவர்களையும், அகதிகளாய் உயிர் தப்பி வந்தவர்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தல் நியாயமில்லையென்று நினைக்கத் தொடங்கினர். எனவே பின்னமைப்பியல்/பின் நவீனத்துவம் கூறும் வித்தியாசங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினர். இந்த வித்தியாசங்கள் யாழில் இருந்து இலக்கியம் பேசுபவர்க்கும், மலையகத்தில் இருந்து இலக்கியம் பேசுபவர்க்கும் இருக்கும் வித்தியாசத்தைப் போன்றது அல்லது வடபகுதியில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கும், கிழக்கில் அந்தளவுக்குப் பாதிக்கப்படாத முஸ்லிம்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தைப் போன்றது என  ஒரு எளிய உதாரணத்துக்குச் சொல்லலாம்.

இதன் நிமித்தமே பொருளாதார வசதி காரணமாக வெளிநாடுகளுக்கு வந்தவர்களைப் புலம்பெயர்ந்தவர்கள் என்றும், ஊரில் இருக்க முடியாத நிலையில் உயிர்தப்பி வந்தவர்களை புகலிடத்தவர் என்ற வகைமைக்குள்ளும் பலர் வைத்துப் பார்க்கத் தொடங்கினர்.

முன்னவர்கள் தம் படிப்பின் நிமித்தம் ஒரளவு வசதியாகத் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள, 80களின் பின் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் ஒரு விளிம்புநிலை வாழ்வுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த புலம்பெயர்வுக்குள்ளும் இன்னும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இலங்கையில் ஆங்கிலத்தை ஒரளவு கற்று இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்க்கும், ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் மற்றும் ஸ்கண்டிநேவியன் நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும் இடையிலான வாழ்வியல் முறையே முற்றும் வேறுவிதமானமை. புதிய நாட்டில் புதிய காலநிலையில் புதிய ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதென்பது எவ்வளவு கடினமென்பது சொல்லாமலே நமக்குப் புரியக் கூடியவை.

2.

இப்போது புலம்பெயர்ந்த இலக்கியத்திற்குள் வருவோம். இவர்கள் 83 கலவரத்துக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள் என்றாலும் நாம் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களையும், 'காலம்' செல்வத்தின் எழுத்துக்களையும் ஒன்றாக மதிப்பிட முடியாது என்பதை அறிவோம். செல்வத்தின் எழுத்துக்களை வாசிக்கும்போது அவர் தொடர்ச்சியான தனது இலங்கை வாழ்வில் அவரும், அவரது பெற்றோரும் எப்படி ஒடுக்கப்பட்டிருக்கின்றனர் என்று நேரடியாகப் பதிவு செய்து வந்திருக்கின்றார். அப்படியெனில் செல்வத்துக்கு போர் பற்றிய அனுபவங்கள் அவ்வளவு இல்லையென்று இந்த ஒடுக்கப்பட்ட விடயங்களை நாம் ஒதுக்கிவிட்டுப் போகமுடியுமா? இல்லைத்தானே. அவ்வாறே புலம்பெயர் எழுத்துக்களிலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. நாம் பாரதி புத்தகலாயத்தை அடையாளப்படுத்தும் சிராஜ் இப்போது கூறும் 'யாழ் வெள்ளாள மேட்டிமை' வாதத்திற்குள் செல்வத்தின் ஒடுக்கபட்ட எழுத்துக்களை அடக்கி, கடந்து போனால் அவ்வளவு அபத்தமாக இருக்குமல்லவா? இதையேன் குறிப்பிடுகின்றேன் என்றால் இவ்வாறான விடயங்களை எளிதில் பொதுமைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே.

இப்போது புகலிட இலக்கியத்துக்கு வருவோம். 83 இற்கு பின் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள், அனைவரையும் சாதி, மத, பிரதேச பேதமின்றி வெளிநாடுகளுக்கு துரத்தி வைத்தது. அவர்களின் அநேகர் உணவகங்களில் கோப்பை கழுவியும், சமையலறைகளில் வெந்தும், தொழிற்சாலைகளில் கடைநிலை ஊழியர்களாக தேய்ந்தும், இவற்றிற்கிடையில் இருந்து கலை இலக்கியங்களை வளர்க்கத் தொடங்கினர். அந்த புகலிட இலக்கியவாதிகளில் அனைத்துச் சாதியினரும் இருந்தனர். விளிம்புநிலை வாழ்க்கையை வாழ்ந்தனர். பின்னரான காலத்தில் குடும்பம், பிள்ளைகள் என்று பலர் தமது சொந்தசாதி/மதப் பெருமிதங்களில் திளைத்தாலும், புகலிட இலக்கியம் என்பது விளிம்புகளின் உரையாடலாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றது.

3.

இந்த புலம்பெயர் X புகலிட இலக்கிய வேறுபாடுகள் 2000களின் பின் மெல்ல மெல்லக் கரைந்து போயிருந்தது. ஏனெனில் பொருளாதாரவசதி காரணமாக புலம்பெயர்ந்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 1990/2000 பின்னரான காலம் ஈழத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஈழத்தமிழரையும் அகதிகளாக்கியுமிருந்தது. போரால் பாதிக்கப்படாத தமிழர்கள் இல்லை என்னுமளவுக்கு எல்லோரையும் யுத்தம் அலைய வைத்தது. ஆக 2000 பிறகான காலத்தில் அவரவர் விரும்பியமாதிரி புலம்பெயர், புகலிட இலக்கியம் என்று இதன் வரலாற்றை அவ்வளவு முக்கியப்படுத்தாது தம் விருப்பின்போக்கில் பாவிக்கத் தொடங்கினர்.

80களில் நடந்த இன்னொரு பெரும் புலம்பெயர்வு இந்தியாவை நோக்கியது. அதற்கு முன்னர் சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம் நம்மோடு ஒன்றாக நூற்றாண்டுகளாக வாழ்ந்த மலையகத்தமிழர்களை நாடற்றவர்களாகியது. அவர்களின் ஒருபகுதியை இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தது. அந்தத் துயருக்கு நமது சில ஈழத்தமிழ்த்தலைவர்களும் காரணமாக இருந்தார்கள் என்பதை வரலாறு என்றும் மன்னிக்கவும் போவதில்லை.

அதற்குப் பின் 80களில் இலங்கையின் எல்லாப் பகுதியிலிருந்தும் பலரை இந்தியாவுக்கு அகதிகளாக யுத்தம் அனுப்பிவைத்தது. அங்கிருந்து வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி சிலர் மேற்குலகிற்குத் தப்பியோட, பெரும்பான்மையினர் அகதி முகாமிற்குள்ளும் எவ்வித அடிப்படை வசதியோ, தனி மனித சுதந்திரமோ கிடைக்காமலே வாழவேண்டி வந்தது. இதன் உச்சக் கொடுநிலை ராஜீவ்காந்தியின் மரணத்தோடு வந்து சேர்ந்தது. இன்று எந்த மேற்கு நாடாயினும் நாம் அங்கே அகதியாகப் போனால் ஆகக்குறைந்தது அடிப்படை மனித வசதிகளுடன் வாழமுடியும். ஆனால் கணத்துக்கு கணம், தொப்பூழ்கொடி என்று உருகுகின்ற தமிழக மக்களாலோ, அரசாலோ இவர்கள் சக இந்தியர்களாக வாழ்வதற்கான எந்த வசதியும் ராஜீவ்காந்தியின் மரணம் முடிந்து 30 ஆண்டுகள் கடந்தபின்னும் செய்யமுடியாது இருப்பதென்பதுதான் எவ்வளவு துயரமானது.

இத்தனைக்கும் திபெத்திய மக்களையும், பங்களாதேச மக்களையும் குறிப்பிட்ட ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்தபின் தம்மைப் போன்ற சக இந்தியர்களாக மாற வாய்ப்புக்கள் கொடுக்கும் இந்திய ஒன்றிய அரசு, அகதிகளுக்கான அடிப்படை உரிமையைக் கூட ஈழத்தமிழ் அகதிகளுக்கு இன்னமும் கொடுக்கத் தயாரில்லை. இப்போதும்  இந்திய உளவுத்துறையின் விசாரிப்புக்களும், கண்காணிப்புக்களும் இருக்கும் அகதி முகாமில் இருந்து எவர் நிம்மதியாக எழுத முடியும்? முகாமை விட்டு வெளியில் வந்தால் கூட உரிய எந்த ஆவணங்களுமின்றி 'தலைமறைவு' அகதிகளாகவே அவர்கள் வாழவும் வேண்டியிருக்கின்றது.

இதுகுறித்து யார் வெட்கப்படவேண்டும்? யார் அவமானப்பட வேண்டும்? நமது நிலத்தில் நமது சகோதரர்களை, நம்மைப் போன்று சரிநிகராக வாழவேண்டிய ஈழத்தமிழர்களை இப்படி நாம் நடத்தவேண்டி இருக்கிறதே என்று தமிழகத்தவர்கள் அல்லவா தலைகுனிய வேண்டும். கனடாவில் ஆதிக்குடிகளை எப்படி வெள்ளையினத்தவரும், பிரெஞ்சுக்காரர்களும் நடத்தினர் என்று வெட்கப்படவேண்டியது நம்மைப் போன்ற கனடிய குடிமக்களே தவிர அந்தப் பூர்வீகக் குடிகள் அல்ல.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது. தமிழகத்தில் இருக்கும் சிலர் இதுகுறித்து எந்த அவமானமும் வெட்கமும் அடையாது புலம்பெயர்ந்த நமக்கு பாடங் கற்பிக்க 'புதிய தீர்க்கதரிசிகளாக' வருகின்றார்கள். புலம்பெயர் இலக்கியமா, அகதி இலக்கியமா என்று மயிர்பிளக்கும் விவாதங்களை நடத்தி நம்மையின்னும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். போரின் எந்தத் துளியும் தீண்டிப் பார்த்திராத, அதன் மனவடுக்களை அறியாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை சொல்ல வருவது எவ்வளவு கேவலமானது என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா?

ஆதிக்கசாதிக்காரனாக இருந்துகொண்டு அந்த privilegeகள் அறியாது , ஒரு தலித்துக்குப் பாடஞ் சொல்ல வந்தால், நீங்கள் பேசும் மானிடத்தின் எந்த மேன்மையையும் பேசத் தகுதியற்றவரே. அதுபோலவே இதுவும் உங்களின் privileges உங்களுக்குத் தரப்பட்ட உரிமைகளல்ல.

இத்தனை காலமும் ஒடுக்கப்பட்ட அகதி முகாம் குரல்கள் (யார் ஒடுக்கியது? நீங்களேதான்) இப்போது பொதுவெளிக்கு வரத் தொடங்கியிருக்கிறது. முகாங்களிலிருந்து வரும் குரல்களை தொடக்க கால பத்தினாதனின் எடிட் செய்யப்படாத பனுவல்களிலிருந்து, அண்மைக்கால விஜிதரனின் எழுத்துக்கள் வரை பெரும்பாலானவற்றை என்னைப் போன்றவர்கள் கவனித்துக்கொண்டே வருகின்றோம். அவை குறித்து அவ்வப்போது எழுதியும் இருக்கின்றோம்.

இனியான காலத்தில் அதிகம் ஒலிக்கவேண்டிய இந்த முகாம் வாழ்க்கைக் குரல்களை, யாரேனும் புலம்பெயர்ந்தவரோ, புகலிடத்தவரோ வரவேற்காதவிடத்து அவர்களையும் நாம் கேள்வி கேட்போம், தள்ளிவைப்போம். ஒருகாலத்தில் சிறுபான்மையினர் என்றும், ஒடுக்கப்பட்டோர் என்றும் பஞ்சமர் என்றும் அழைக்கப்பட்டுக் கேவலப்பட்டவர்கள் தமது குரல்களை உயர்த்தியபோது எல்லா ஆதிக்கசாதிகளும் பம்மிப் பதுங்கின அல்லவா. அவ்வாறே இந்த அகதிமுகாமின் குரல்களும் ஓங்கி ஒலிக்கட்டும். குரலற்றவர்களின் குரலான அவர்களுக்குத் துணையாக இருப்பதை விட நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு வேறு எது நிம்மதியைத் தரப்போகின்றது. ஆனால் வெளியில் இருந்து கொண்டு எங்களுக்குப் பாடங்கற்பித்தால், முதலில் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி, அகதி என்று சொல்ல இன்றும் அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்க்கும், என்னைப் போன்று போரின் நிமித்தம் அலைந்தவர்க்கும் மட்டுமே உரிமை இருக்கின்றதே தவிர, தமிழ்நாட்டில் சொகுசாக இருந்துகொண்டு, உங்கள் அரசியல் சுயநலங்களுக்காய் நம்மைப் பாவித்துக்கொண்டிருக்கும் உங்கள் எவருக்கும் நம்மை அகதி என்று அழைக்க உரிமையில்லை என்றும் தெளிவாகச் சொல்லி வைப்போம்.

நாளை இந்தியாவின் அகதி முகாங்களில் இருந்து வெளிவரும் குரல்கள், தம்மை அகதிக் குரல்களாக அடையாளப்படுத்த விரும்பினால் என்ன, இல்லை புகலிடக் குரலாக அடையாளப்படுத்த விரும்பினால் என்ன, அவர்களுக்கான தோழமையுணர்வைக் கொடுக்க நாம் என்றும் துணையிருப்போம். அதில் எந்த மறுபேச்சுக்கும் இடமில்லை.

*********************

(Jan 21, 2022)