கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எனக்குப் பிடித்த சில புத்தகங்கள் - 2020

Saturday, January 23, 2021

(1) அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன் (நாவல்)


பிரியா இதை 2008/2009 காலங்களில் எழுதத் தொடங்கியபோது, யார் இவர் இவ்வளவு சுவாரசியமாக எழுதுகின்றாரே என ஒவ்வொரு அத்தியாயங்களையும் 'காட்சி' வலைப்பதிவில் வாசித்திருக்கின்றேன். அங்கே இந்த நாவல் இடைநடுவில் நின்றுபோனாலும், யார் இந்த யமுனா என்று (அப்போது யமுனா ராகவன் என்று புனைபெயரில் எழுதியிருந்தார்; அது அவரின் அம்மாவினதும் அப்பாவினதும் பெயர்களை இணைத்து வந்த புனைபெயர்) தேடியிருக்கின்றேன். அப்படி அவர் யாரெனத்தேடி அக்காலத்தில் அவர் இங்கிலாந்தில் இருக்கின்றார் என்பதையும் நானாகவே தேடிக் கண்டுபிடித்தேன். அது ஒரு வாசகர் தனக்குப் பிடித்த எழுத்தாளரைத் தேடுகின்ற சுவாரசியம் என்க. பிரியாவுக்கு இப்படி ஒரு வாசகர் அவரின் எழுத்துக்களில் இந்தளவுக்கு ஈர்ப்போடு இருந்தார் என்பதே தெரிந்திருக்காது. இதேயேன் இங்கே விரித்துச் சொல்கின்றேன் என்றால் பிரியாவின் எழுத்து அன்றைய காலத்தில்  என்னை அந்தளவு வியப்பிற்குள் ஆழ்த்தியது என்பதைச் சொல்வதற்காகும்.


இந்த நாவல் இதுவரை தமிழ்ச்சூழலில் பேசப்படாத சேய்ஷல்ஸைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. புதிய சூழல், புதிய கலாசாரம் என்ற திகைப்பை அதன் பதற்றங்கள் குறையாது பிரியா எழுதிச் சொல்கின்றார் என்றால் இன்னொருபக்கம் அங்கே ஆங்கிலேயர்களில் கொண்டுவரப்பட்ட இந்தியர்கள்(தமிழர்கள்) இன்னமும் சாதியிறுக்கத்தை விடாது வாழும் திகைப்பையும் சொல்கின்றார். தன்னை ஒரு தலித்தாக முன்வைக்கும் இந்த நாவலின் கதைசொல்லியான அஞ்சனா, தான் தமிழகத்தில் சந்தித்த சாதியக்கொடுமைகளையும் அசைபோடுகின்றார். இவ்வாறாக நாவல் அற்புதமாக பல்வேறுகிளைகளில் சடைத்துச் செழிக்கிறது. 


தமிழில் இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட சூழலுக்குள் ஒரேமாதிரியாகப்  பெருமளவு புனைவுகள் எழுதப்பட்டிருக்கும் நிலைமையில் பிரியாவின் இந்தப் புனைவு விதிவிலக்கானது.  இன்று பொருளாதார நிமித்தம் புலம்பெயர்ந்த பெருமளவான தமிழகத் தமிழர்கள் நாசூக்காக சாதி/பின்னபிற ஒடுக்குமுறைகளை மறைத்து அகமனத்தேடல்களை மட்டும் முன்வைத்து எழுதுகின்ற எழுத்துக்களை வாசித்துச் சலிக்கும் வேளையில் பிரியாவின் இந்த நாவல் கவனத்தில் கொள்ளவேண்டியது மட்டுமல்ல தமிழக புலம்பெயர்ந்ந்த தமிழர்க்கு முன்னோடியாக இருக்கவும் கூடியது. புலம்பெயர்ந்ததால் சந்திக்கும் புதிய கலாசாரம் பெரும் அதிர்வை மட்டுமின்றி அஞ்சனா என்ற கதைசொல்லிக்கு தன்னை இன்னும் ஆழமாக அறிய அவரின் அகமனதுப் பயணத்தையும்  புதிதாகத் தொடக்கிவைக்கின்றது. மேலும் பிரியா, அஞ்சனாவின் பாத்திரத்தினூடாக புதிய பண்பாட்டுச் சூழலை எவ்வித மேனிலையாக்கமோ கீழிறக்கமோ செய்யாது, அதையதை அதன் இயல்புகளோடு முன்வைப்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியது. 


பிரியாவின் 'அற்றவைகளால் நிரம்பியவளோடு' நான் வாசித்தவற்றில் எனக்குப் பிடித்த இன்னொரு நாவலாக ம.நவீனின் பேய்ச்சியையும் சேர்த்துக்கொள்வேன். அலுப்பே வராது மூன்று தலைமுறைக் கதைகளை நன்றாக  நவீன் இதில் எழுதிச் செல்கின்றார். இந்நாவலில் வலிந்து திணிக்கப்பட்டது போல என் வாசிப்பில் தோன்றும் பெரியாரிய/திராவிட எதிர்ப்பையும், மூன்றாம் தலைமுறையின் கதையையும்  சொல்லவேண்டுமென்ற எத்தனிப்பில் சேர்த்த இறுதிப்பகுதியையும் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மூன்றாம் தலைமுறைக் கதையைச் சொல்லும்போது, அதற்கென ஒரு தனி மொழிநடையை நவீன் தேர்ந்தெடுக்கையில், அதுவரை வந்த ஒரு செழுமையான தெள்ளிய மொழிநடை சற்றுத் தடைப்பட்டிருக்கின்றது. அந்தக் கடைசிப்பகுதியைச் சொல்லாமல் விட்டிருந்தால் கூட இந்நாவல் கவனத்திற்குரிய நாவலாகவே இருந்திருக்கும்


(2) பனைமரச் சாலை - காட்சன் சாமுவேல் (அபுனைவு)


இதையும் தமிழில் வித்தியாசமான சூழலில் எழுதப்பட்டதற்காக முக்கியமெனக் கொள்வேன். இது பனைமரங்களைப் பல்வேறு பகுதிகளில் தேடி மும்பாயிலிருந்து கன்னியாகுமரி வரை ஃபாதர் காட்சன் சாமுவேல் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்வதைப் பற்றிய அனுபவங்களின் தொகுப்பாகும். ஒருவகைய்ல் அவர் பனைமரங்களின் வரலாற்றை மட்டுமின்றி இன்று கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்ற பனையின் பயன்களை மீண்டும் மீள் உருவாக்கம் செய்ய விரும்பவும் செய்கின்றார். முக்கியமாய் இந்த நூலை, பனைமரங்களால் நிரம்பியிருக்கும் இலங்கைச் சேர்ந்த நம்மைப்  போன்றவர்கள் வாசிக்கவேண்டும் எனப் பரிந்துரைப்பேன். 


(3) நீண்ட காத்திருப்பு - அஜித் போயகொட (ஆங்கிலத்தில் சுனிலா கலப்பதி, தமிழில் - தேவா)


இலங்கை கடற்படையைச் சேர்ந்த அஜித் போயகொட, அவரின் கப்பல் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்படுகின்றபோது சிறைக்கைதியாகின்றார். புலிகளோடாடு இருந்த 9 வருட அனுபவங்களை எந்தக் காய்த்தல் உவத்தலுமின்றி இயன்றவரை உள்ளபடி போயகொட எழுதியிருக்கின்றார். இதனூடு அவர்  நாமறியாத புலிகளின் இன்னொருபக்கத்தைச் சொல்வதுடன், உள்ளே நடந்த பல சுவாரசியமான சம்பவங்களைச் சொல்கின்றார். கைதிகள் பரிமாற்றம் நிகழ்கின்றது என்பதை நாம் பத்திரிகைச் செய்திகளில் பார்க்கின்றோம். ஆனால் அது எவ்வாறு நடக்கின்றது என்பதை சிறைக்கைதியாக இருந்த ஒருவர் அவரது நிலையில் நின்று சொல்வது வித்தியாசமானது புலிகள் - இலங்கை அரசு கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்பட்ட பொயகோடவின் கதையை சுனிலா கலப்பதி கேட்டு ஆங்கிலத்தில் முதலில் எழுத, இதை பின்னர் தேவா அருமையாகத் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார்.


(4) நவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள்  - சி.மோகன் (கலை/ஓவியம்)


தமிழில் சிறந்த ஓவியர்கள் இருந்தாலும் ஓவியங்களைப் பற்றிய புரிந்துணர்வு குறைவு. இதனால் புதிதாய் ஓவியங்களை வரைய வருகின்றவர்களும் ஓவியம் என்பது வரைவது மட்டுமே என்ற புரிதலோடு இருக்கின்றார்கள். மேற்கத்தையத்தில் எப்படி ஓவியக்கலையிலிருந்து புதிய இஸங்கள் தோன்றியது என்பது மட்டுமின்றி சக ஓவியர்கள்/எழுத்தாளர்களுக்கிடையில் ஊடாடங்கள் எப்படி முக்கியமானது என்பதை அறிந்துகொள்வது குறைவு. ஸெஸானுக்கு எமிலி ஸோலாவுடன், டாலுக்கு புனுவலுடன், வான்கோவுக்கு காகினோடு எவ்வாறான நட்பு இருந்தது, எதையெல்லாம் விவாதித்தார்கள், எவற்றையெல்லாம் உருவாக்கினார்கள் என்பது ஓவியங்களைத் தமது துறையாகக் கொள்பவர்கள் அறிவது மிக முக்கியமானது. 


அதற்கான ஆரம்ப புள்ளிகளை சி.மோகன் மேற்கில் உதிர்த்த ஓவியர்களின் சில முக்கிய ஓவியங்களை முன்வைத்து எல்லோருக்கும் விளங்கும்  மொழியில் இந்நூலில் அதன் நுட்பங்களை விவரிக்கின்றார். அதனூடு அந்தந்தக் காலங்களில் தோன்றிய புதிய ஓவிய வகைமைகளையும்/ துறைகளையும் அறிமுகப்படுத்துகின்றார். ஓவியங்கள் வரைபவர்களுக்கு மட்டுமின்றி ஓவியங்களை இரசிப்பதில் ஆர்வமுள்ளவர்களும் வாசித்துப் பார்க்கவேண்டும்.


(5) மோகத்திரை - உமா வரதராஜன் (திரைப்படங்கள்)


உமா தனித்து திரைப்படங்களைப் பற்றி அல்லாது, சில ஆளுமைகளைப் பற்றி, அவர்களைச் சந்தித்த நினைவுகள், அவரது இளமைக்காலத்திலிருந்து இப்போதுவரை தியேட்டரில் படங்கள் பார்க்கின்ற அனுபவங்களில் நிகழ்ந்த மாற்றமென பல்வேறுபட்ட தகவல்களின் தொகுப்பாக இது இருப்பதே முக்கியமானது. தமிழகச் சூழலில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை,  தமிழ் இலக்கியவாதிகள் - முக்கியமாய் சிற்றிதழ்காரர்கள்- திரைப்படங்களையே கணக்கிலெடுக்காது இருந்திருக்கின்றார்கள். ஆனால் நம் இலங்கைச் சூழலில் அப்படி சினிமாவை விலத்தி ஒவ்வாமையுடன் இருந்த இலக்கியவாதிகள் அரிதென்றே சொல்லவேண்டும். .அ.யேசுராசா, உமா வரதராஜன், ரஞ்சகுமார், அ.இரவி போன்றவர்கள் அதற்கான எனக்குத்தெரிந்த சில உதாரணங்களாய்ச் சொல்லலாம். 


(6) அமரகாவியம் - எஸ்.பார்த்தசாரதி (தமிழில் சரஸ்வதி சுவாமிநாதன்)


விசிறி சாமியார் என அழைக்கப்பட்ட யோகி ராம்சுரத்குமார் எனக்கு என் பதின்மங்களில் நான் வாசித்த பாலகுமாரனால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அன்று பாலகுமாரன் எழுதிய 'விசிறி சாமியார்', 'குரு', 'ஆசைக்கடல்' போன்றவற்றினூடாக விசிறி சாமியார் எனக்கு நெருக்கமானவர். முதன்முதலாக திருவண்ணாமலைக்குப் போனபோது நான் பார்க்க விரும்பியது யோகி ராம்சுரத்குமாரின் சமாதியைத்தான். ஆனால் அப்போது அது நிகழாது போயிற்று. பின்னர் அண்மையில் ஐந்து நாட்கள் திருவண்ணாமலையில் நின்றபோது யோகி ராம்சுரத்குமாரின் ஆச்சிரமத்துக்குப் போனபோதும் எந்தக் கிளர்ச்சியும் ஏற்படவில்லை. அது ரமணருக்கு நிகழ்ந்ததுபோல, ராம்சுரத்குமாருக்கும் நிறுவனமயப்பட்டதில் நிகழ்ந்த சோகம் என நினைக்கின்றேன்.


இந்த நூல் எனக்கு மிக முக்கியமாக இருந்தது. ஏனெனில் இது யோகி ராம்சுரத்குமார் நிறுவனப்படாத அவரின் தொடக்க காலங்களில் அருகில் இருந்து பார்த்து பார்த்தசாரதி எழுதிய அனுபவங்களின் தொகுப்பாகும். எவ்வளவு எளிமையாகவும், தன்னைத் தேடி வருபவர்களை நாடுகின்ற ஒரு 'நாடோடியாக' புன்னை மரத்தடியில் பகல்வேளையிலும், இரவில் மூடப்பட்ட திருவண்ணாமலைக் கடைகளில் முன்வாசலிலும் உறங்கியெழுந்த ஒரு யோகியைக் காண்கின்றோம். அவர் திருவண்ணாமலைக்கு வரமுன்னர் கிட்டத்தட்ட 18 வருடங்கள் அலைந்து தன் ஞானத்தைத் தேடியது பற்றியும் இதில் துண்டுதுண்டாக கூறப்படுகின்றது. அதேவேளை இதில் பல்வேறுபட்ட முக்கிய நபர்களின் சந்திப்பபுக்கள் அல்ல, சாதாரண மக்களோடு ராம்சுரத்குமார் நடந்தகொண்டு விதங்கள் பற்றி எழுதியிருப்பதுதான் சிலாகித்துப் பேசவேண்டியது. 


தமிழ் அறிஞர் தொ.பொ.மீனாட்சி சுந்தரம், பெரியசாமி தூரன், கி.வா.ஜகன்னாதன் போன்றவர்கள் அவருக்கு ஒருகாலத்தில் நெருக்கமாக இருந்திருக்கின்றார்.  கிட்டத்தட்ட 500 பக்கங்களுள்ள இந்தப் புத்தகம், மதம், நிறுவனப்பட்ட அமைப்புக்களிலிருந்து வெளியேறி ஆன்மீகத்தேடலுள்ளவர்க்கு மிகுந்த ஆர்வங்கொடுக்கக் கூடியது.


(7) மீசை வரைந்த புகைப்படம் - என். ஸ்ரீராம் (சிறுகதை)


ஸ்ரீராமின் கிட்டத்தட்ட அனைத்துச் சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்திருக்கின்றேன். ஜே.பி.சாணக்யா, காலபைரவன், என். ஸ்ரீராம், எஸ்.செந்தில்குமார் போன்றோர்  தமிழ்ச்சூழலில் ஒரு புதிய அலையாக  ஒரு காலத்தில் வந்தவர்கள். ஸ்ரீராமின் கதைகளில் அநேகம் கிராமத்தில் நிகழ்பவை. ஆனால் பெரும்பாலான கதைகளில் ஒருவித அமானுஷ்யதன்மை கலந்திருக்கும். 


ஸ்ரீராமின் சில கதைகள் நமது தமிழ்சூழலின் பின்னணியில் வைத்து மாந்தீரிய யதார்த்தில் எழுதப்பட்ட கதைகளென்று சொல்வதற்கு சிறந்த உதாரணங்களாகும். இந்தத் தொகுப்பிலும் 'தேர்ப்பலி', 'நதிப்பிரவாகம்', 'மண் உருவாரங்கள்' என்பவை அத்தகைய அமானுஷ்யதன்மையில் எழுதப்பட்டவையாகும்.


(8) பஷிருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் - இளங்கோ கிருஷ்ணன் (கவிதை)


கவிதைகள்  நிறைய எழுதிக்கொண்டிருந்த காலத்தில், சில நண்பர்கள் தங்களால் கவிதைகளை வாசிக்கமுடியவில்லை என்பார்கள். எப்படி கவிதைகளை வாசிக்காமல் இருக்கமுடியுமென்று நான் வியப்பதுண்டு. ஆனால் இப்போது ஒருவகையில் கவிதைகளை வாசிப்பதற்கும், உணர்வதற்கும் கூட ஒருவகையான கவிதை 'மனோநிலை' வேண்டுமென விளங்கிகொள்கின்றேன். 


ஏனெனில் அன்று நிறையக் கவிதைகள் எழுதிய நானே,  இன்று மிகச்சில கவிதைத் தொகுப்புக்களையே வாங்குகின்றேன். அவற்றில் சிலதைத்தவிர, மற்ற தொகுப்புக்கள் என்னைப் பெரிதும் ஈர்ப்பதுமில்லை.


இளங்கோ கிருஷ்ணனின் இந்தத் தொகுப்பிலிருக்கும் பல கவிதைகள் எனக்கு நெருக்கமானவை. அதிலிருந்து ஒரு கவிதை..


துப்பாக்கி

.........

எதிர்க்காற்றில்

விரையும் பேருந்தில்

பொங்கும் கண்ணீரைத் துடைக்காமல்

உதடு கடித்து விசும்புகிறான் ஒருவன்

முன் இருக்கை சிறுவன்

விரல் துப்பாக்கியால் ஒவ்வொருவராய்

சுட்டுக் கொண்டேயிருக்கின்றான்


இதில் என்ன சொல்லப்படுகின்றது என்று நம்மால் உணரமுடிந்தால் இது ஒரு நல்ல கவிதை.  அந்த அனுபவம் நமக்குள் நிகழாதுவிடின் சொற்களின் குவியல். அவ்வளவே.

..........................................

(Dec 2020)