கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'வடு' - வீழ்ச்சி': பகிர்வுக்குறிப்புகள்

Monday, July 30, 2007

-இரண்டு புதினங்களை முன்வைத்து-

நாம் இன்று மிக மோசமான அரசியல் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருக்கின்றோம். சென்ற நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு நம்பிக்கை தந்த புரட்சிகள் கூட இந்த நூற்றாண்டில் ஏகாதிபத்தியங்களின் உலகமயமாக்கங்களால் பொடிப்பொடியாக தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் காலங்காலமாய் இருந்துவரும் ஒடுக்கப்பட்டவர்களின் துயரமோ இன்னும் தனது எல்லைகளை விரிவுபடுத்தியபடியிருக்கின்றது. நம்பிக்கை தரும் ஒளிக்கீற்று எதுவும் அண்மையில் தென்படாதபோதும் தமது வாழ்க்கையை ஒடுக்கப்பட்டவர்கள் பதிவுசெய்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான பதிவுகளில் ஒளித்து வைக்கப்படும் தீக்குச்சியளவு வெடிமருந்திலிருந்து தமது அடுத்த சந்ததி பெரும் ஒளிப்பந்தங்களை ஏந்திக்கொண்டு தமது சந்ததிகளை எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடச்செய்வார்கள் என்ற நம்பிக்கையை தமது எழுத்துக்களில் புதைத்துவைக்கின்றார்கள். அவ்வாறு மேலாதிக்கச் சாதிகளால் ஒடுக்கப்படும் ஒரு தலித்தின் சுயசரிதையை கே. ஏ.குணசேகரனின் வடுவும், காலனித்துவத்தால் ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தின் உட்கட்ட வாழ்வியலை சினுவா ஆச்சுபேயின் வீழ்ச்சியும் (No Longer at Ease) வாசகர்களுக்கு விரித்து வைக்கின்றது.

2.
கே.ஏ.குணசேகரனின் வடு ஒரு சுயசரிதை நாவல். மராட்டி, கன்னடம் போன்றவற்றில் மிக வீரியமாய் பதிவுசெய்யப்பட்ட தலித் சுயசரிதை நாவல்கள் போன்றல்லாது மிகக்குறைவாகவே தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப் புதினத்தில் கே.ஏ.குணசேகரனின் பதினம்வயதுவரை மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அவர் இதில், 'இடதுசாரி இயக்கங்களோடு என்னை ஈடுபடுத்திக்கொண்டு, கலைப்பயணம் மேற்கொண்ட காலம் தொட்டு இன்றுவரை என் வாழ்நாளில் நடந்த சம்பவங்களை இதில் இடம்பெறவில்லை' என்று முன்னுரையில் குறிப்பிடுகின்றார். அதையும் பதிவு செய்யும்போது இன்னும் வீரியமான தலித் ஒருவரின் வாழ்வு தொகுக்கப்படும் சாத்தியம் உண்டு. ஒரு சிறுவனாய் -அவர் பகுத்தறிந்து ஆராய முடியாத வயதிலேயே- எப்படி சாதிப்பேய் தனக்குள் புகுத்தப்படுகின்றது என்பதை வெகு நுட்பமாய் குணசேகரன் வடுவில் பதிவு செய்கின்றார். இதிலே குணசேகரனும் அவரது உறவினர்களும் ஆதிக்கசாதியால் அடிவாங்கிய சம்பவங்களையும், நிலத்தில் அவர்களின் காலில் விழுந்து கும்பிட்ட நிகழ்வுகளும் எண்ணிக்கையில் நீண்டவை. ஒவ்வொரு சம்பவங்களையும் குணசேகரன் விபரிக்கும்போது, இங்கேயும் அவர் அடிவாங்கிவிடுவாரோ அல்லது இவரது எதிர்ப்புக்காய் ஆதிக்கச்சாதியினரிடம் அவரது தாத்தா காலில் வீழ்ந்து கும்பிடப்போகின்றாரோ என்ற பதட்டம் ஒவ்வொருமுறையும் வாசிப்பவருக்கு வந்துகொண்டேயிருக்கும். தமது கிராமம் முஸ்லிம் சமூகத்தால் அதிகம் சூழப்பட்டதால் அவ்வளவு சாதியின் வீரியம் தெரியாமல் வளர்ந்திருந்தாலும் ஊரைவிட்டுபோகும்போது எப்படி சாதிப்பேய் தங்களை ஆட்டுவித்தது என்பதை குணசேகரன் வேதனையோடு பதிவுசெய்கின்றார். இன்னும் அவரது அண்ணா முறையான ஒருவரை அவரது தகப்பனும் சித்தப்பாவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்து வைத்தியராக ஆக்கும்போது, அவர் வேலைசெய்யும் நகரில் சிகிச்சை பெறும்போது மட்டும் ஒரளவு மதிப்புக்கொடுத்துவிட்டு ஊருக்கு வரும்போது அவ்வைத்தியரை ஒருமையில் அழைத்து நக்கலடித்து மதிப்புக்கொடுக்காத ஊரின் ஆதிக்கச்சாதியினர் பற்றிக்கூறும்போது, பொருளாதார ஏற்றத்தால்கூட இந்தச் சாதிப்பேய் அழிந்துவிடாது என்பது நமக்கு உறைக்கத்தான் செய்கின்றது. மேலும் தலித்துக்களின் குடியிருப்புக்களை நோக்கிச் செல்லும் பாதைகளைக்கூட் ஆதிக்கச் சாதிகள் எப்படி வழிமறித்து பயணிக்கவிடாது அழிச்சாட்சியம் செய்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது நமக்கு ஒடுக்குபவர்கள் மீது வெறுப்பு வராதிருந்தால் மனிதர்களாய் இருக்கமுடியாது. ஆசிரியப்பணியில் இருக்கும் இருவர் திருமணம் செய்து மாட்டுவண்டியில் வரும்போது கூட, கீழே இறங்கி நடந்துதான் தமது தெருக்களால் போகவேண்டும் என்று சண்டைக்குத் தயாராகும் ஆதிக்கசாதியின்ரைப் பார்க்கும்போது நாம் எந்த நூற்றாண்டில் வசித்துக்கொண்டிருக்கின்றோம் என்று யோசிக்கவேண்டியிருக்கின்றது. ஆதிக்கச் சாதியில் பிறந்த சிறுவர்கள் கூட வயது வந்த தலித்துக்களை பெயர் சொல்லி அழைப்பதும், ஒருமையில் அழைத்து நக்கலடிப்பதும் மிகச்சாதாரணமாய் இருக்கிறது.

ஒரு சம்பவத்தில், கதைசொல்லியை ஒரு ஆதிக்கச்சாதிப் பையன் வேண்டுமென்று அடித்துவிட்டு 'பறப்பயலே' என்று திட்டிவிட்டு ஓடிவிடுகின்றான். வந்த கோபத்தில் திருப்ப அவனைத் துரத்திச்சென்று ஆதிக்கச்சாதி பையனின் வீட்டடியில் வைத்து கதைசொல்லி திருப்பி அடித்துவிடுகின்றான். இப்படியொரு சம்பவம் நடந்தால் ஆதிககச்சாதிப்ப்பேய்கள் சும்மாயிருக்குமா?

'சாதி தெரியாம வந்து வூட்டுக்குள்ள நொழைச்சிருக்கான்னா அந்தப் பயலுக்கு என்ன திமிரு இருக்கும். எங்க? அவனைக் கையையும் காலையும் கட்டித் தூக்கிட்டுப் போகணும்'ன்னு சத்தம் போட்டாங்க. எனக்கு திக் திக்குன்னு இருந்திச்சு. காலனி ஆளுகளும் வாசல் முன்னாடிக் கூட்டமாக் கூடிட்டாங்க. அப்பாடா ஒருவழியா அமைதியாக திருப்பிப் போனாங்க. அவன் அடிச்சதப் பத்தியாரும் பெரிசாப் பேசல. சாதி தெரியாம தெருவுக்குள்ள பறையன் போனதும் வூடு நொழைஞ்சதையும்தான் எல்லோரும் பெருசாகப் பேசினாக' (ப 52) என்கின்றார்.

இதேமாதிரி இன்னொரு இடத்தில், கதைசொல்லியின் வீட்டில் இருந்த மரஞ்செடிகளிலிருந்து 'பூவையும் பிஞ்சையும் இலையோட ஏன் அத்துபோடுற?' என்று ஆதிக்கச்சாதிப்பையனிடம் திரும்பிக் கேட்கும்போது அவன் கதைசொல்லியை அறைந்துவிட்டு ஓடிப்போய் நாலைஞ்சு பெரிய ஆட்களோடு திரும்பி வருகின்றான். நிலைமை விபரீதமாய்ப் போவதைக் கண்ட கதைசொல்லியின் தாத்தா, 'அவங்களைக் கும்பிட்டு, 'அய்யா! அய்யா! டவுன்ல இருந்து வந்த புள்ள, அதுக்கு நம்ம ஊரு வெவரம்லாம் புரியாது, தெரியாதுங்க.மன்னிச்சு விட்டுங்க அய்யா. அய்யா'ன்னு நெடுஞ்சாண்கெடையா விழுந்து கும்பிட்டாரு'(ப 80).

இப்படித்தான் பல சம்பவங்கள் இறுதியில் எதுவுமே செய்யமுடியாது அடிபணிவதோடு போய்விடுகின்றது. சிறுவர்களின் வயதிலே இப்படியான சாதிக்கொடுமைகள் அடையாளப்படுத்தப்படும்போது இப்படி வளர்கின்ற சிறுவர்கள் பின்னாட்களில் என்னவாறு இருப்பார்கள் நாம் கட்டங்கட்டி விபரிக்கத்தேவையில்லை. நகரங்களுக்கு நகர்வதுதான் ஒரளவு சாதியின் கொடுமையைக் குறைக்கும் என்றும் தனது அனுபவத்தினூடு குணசேகரன் குறிப்பிடவும் தவறவில்லை (பெரியாரும் இதை வலியுறுத்துகின்றார்). ஆனால் இவ்வாறான முடிவு தற்காலிக முடிவாய் இருக்குமே தவிர ஒரு நிரந்தரமான தீர்வாய் இருக்காது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவும் வேண்டும். அதேசமயம் நாட்டார் தெய்வங்களை இந்துத்துவத்திற்கு எதிராய் முன்வைக்கும் அவசியம் இருப்பினும், நாட்டார் தெய்வ வழிபாடுகள் கூட இன்னொருவிதத்தில் சாதியைக் கட்டிக்காத்துக்கொண்டிருக்கும் அபாயம் உள்ளதென்ற நுண்ணரசியலையும் நான் விளங்கிக் கொள்ளவேண்டும். சாதியின் நுண்ணரசியலை வெவ்வேறு தத்துவங்கள்/அரசியல் படிப்புகள் மூலம் நாம் விளங்கிக்கொள்ள முடியும் என்றாலும், நம்மிலிருந்து நாம் சாதியின் கூறுகளை விடுபடச்செய்வதென்பது நம் ஒவ்வொருத்தரின் அகத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். ஒவ்வொரு சிறு சிறுசெயல்களிலிருந்தும் சாதிய நீக்கம் செய்யவேண்டியிருக்கின்றது. ஆனால் யதார்த்தமோ (புலம்பெயர்சூழலில்கூட) ஜீன்களிலிருந்து கடத்தப்படுவதைப்போல, பெற்றோர் உறவுகளிடமிருந்து இங்கே பிறக்கும் பிள்ளைகளிடம் கூட சாதி அட்சரம் தவறாது பரப்பப்பட்டுக்கொண்டிருப்பதுதான் அவலமானது; அபாயகரமானது.

3.
சினுவா ஆச்சுபேயின் வீழ்ச்சி (No Longer at Ease) நாவல் காலனியத்துவத்தை கேள்விக்குட்ப்படுத்துவதில் ஆரம்பித்து, பின் அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தின் உள்கட்டுமானத்தைக் குறித்து அதிகம் கவலைப்படுவதுடன் முடிகின்றது. ஒடுக்கப்படும் ஒரு சமூகம் தன்னை ஒடுக்கும் சமூகத்தை நோக்கி கேள்விகள் எழுப்புகின்ற அதேவேளை தன்னையும் சுயவிமர்சனம் செய்கின்ற இடத்தையும் எவரும் மறுத்துவிடமுடியாது. நைஜீரியாவின் ஒக்கொங்கோ சமூகத்தைச் சேர்ந்த ஓபியின் பார்வையிலேயே இந்த நாவல் கூறப்படுகின்றது. காலனித்துவத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து இங்கிலாந்து சென்று படிப்பதற்காய் ஒபியை அந்தச்சமூக மக்கள் தங்கள் சொந்தப்பணத்தைச் சேர்ந்து அனுப்புகின்றார்கள். அங்கே படிப்பை முடித்துவரும் ஒபிக்கு மீண்டும் தனது சொந்தமக்களோடு ஒட்டமுடியாத அவதி மிக நுட்பமாய் இந்த நாவலில் பதிவு செய்யப்படுகின்றது (அமெரிக்கப்பூர்வீககுடிகளுக்கு தாங்கள் கல்வியறிவு புகட்டுகின்றோம் என்று வெள்ளையினத்தவர் அழைத்து படிப்பித்து விவிலியத்தையும் கொடுத்து -தமது பூர்வீகதொழிலோடும் மக்களோடும் ஒட்டமுடியாத- பூர்வீககுடிகளின் ஒரு புதிய தலைமுறையினர் தோன்றியதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்). இங்கிலாந்திலிருந்து திரும்பி வருகின்ற ஒபிக்கு பல்வேறு சிக்கல்கள் வருகின்றன. ஊழலும் இலஞ்சமும் நிரம்பியிருக்கும் நைஜீரியா அரச அமைப்போடு ஒத்துப்போகமுடியாத அவதி ஒபிக்கு வருகின்றது. மேலும் ஒபி தனது சமூகத்தை (சாதியை) சேராத ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைப் பெண்ணைக் காதலித்துக்கொண்டிருப்பதால் ஒபியின் சமூகம் அந்தக்காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. மேலும் தன்னை புரிந்துகொள்வார்கள் என்று நினைகின்ற அவரது பெற்றோர் கூட ஒபியின் காதலை நிராகரிக்கின்றார்கள்.

இப்படி ஒபியை தாங்கள் கஷ்டப்பட்டு பணஞ்சேகரித்து படிக்கவைத்ததால் தமது சமூகத்திற்கு பலவேறு வழிகளில் ஒபி உதவுவார் என்று அவரது சமூகம் அவரில் வைக்கும் நம்பிக்கையையும், ஒபி தானொரு நேர்மையாளராய் இருக்கும் விருப்புக்கேற்ப (இலஞ்சம் வாங்காத, சிபார்சு செய்யாத குணங்களால்) அதையும் செய்யமுடியாது போகின்றது. இறுதியில் ஒபியின் காதல் நிறைவேறாது, தனது காதலியின் வயிற்றில் வளரும் குழந்தையை -காதலின் முறிவால்- கருச்சிதைவு செய்யவேண்டிய நிலை ஒபிக்கு வருகின்றது. அதன் நீட்சியில், தாம் மிகவும் நேசிக்கும் தாய் இறந்தும்கூட -இன்னொரு நகரில் வேலை செய்யும் ஒபியால்- தாயின் இறுதிச்சடங்கைப் பார்க்க விரும்பதாதவளவுக்கு தனது கிராமத்தின் மீது அதிக வெறுப்பு வளர்கின்றது. தாய், காதலி எல்லோரும் போய்விட்டதால் தன்னைச் சுற்றிய இறுக்கமான் இழைகள் அகற்றபட்டு, தானொரு செட்டை கழட்டி மீண்டும் புத்துயிரான பாம்பு என ஒபி நினைக்கின்றார். ஆனால் இதுவரை இலஞ்சம் வாங்காத, புலமைப்பரிசில் சிபார்சுகடிதத்திற்கு வரும் பெண்களை கட்டிலுக்கு அழைக்காத ஒபி என்ற நேர்மையாளன், காலப்போக்கில் இல்லாமற் சிதைந்து போகின்றார். புலமைப்பரிசிலுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு சிபார்சுக்கடிதம் கொடுப்பதற்காய் அவர்களின் உடல்கள் ஒபிக்க காணிக்கை செய்யப்படுகின்றது. அவ்வாறு காணிக்கை செய்யமுடியாத ஆண்களிடம்/பெண்களிடமும் நிறைய இலஞ்சம் வாங்குகின்றார். எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும் என்பதுபோல ஒருநாள் இலஞ்சம் வாங்கும்போது ஒபி கைதாகின்றார். எப்படியிருந்த ஒபி இப்படியாகப் போய்விட்டாரே என்று எல்லோரும் வியக்கும்படியாக் ஒபி ஜெயிலுக்குப் போவதுடன் புதினம் முடிகின்றது.

இந்நாவலை வாசித்து முடியும்போது, இந்தப் படிப்பு, வசதி போன்றவற்றால் என்ன பயன் என்ற வாழ்வின் அபத்தமான் கேள்வி நம்முன் வந்து விழுவதை நாம் தவிர்க்கமுடியாது. இன்றும் காலனித்துவம் முடிந்தபின்னும், காலனித்துவம் எப்படி மூன்றாம் உலக நாடுகளின் தனது கண்காணிப்பை வைத்திருக்கின்றது என்பதை உய்த்துணர அவ்வளவு கஷ்டப்படத்தேவையில்லை. ஒருகாலத்தில் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் இப்போது எப்படி உலகமயமாக்கங்கள் மூலம் ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வைச் சீரழிக்கின்றார்கள் என்பதைச் சொல்லத்தேவையில்லை. (வேண்டும் என்றால் John Perkins எழுதிய Confessions of an Economic Hit Man என்று 2004ல் வந்த நூலைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம்). இதனால்தான் நாமின்று NGO என்றும் இன்னபிற பெயர்களிலும் நம் நாடுகளிலும் வந்திறங்கும் 'கருணைபொங்கும்' அமைப்புக்கள் மீது சந்தேகப்படவேண்டியிருக்கின்றது. மிக நுட்பமாய் அவர்கள் நமது சமூகத்தில், கலாசாரத்தில் ஊடுருவும் புள்ளிகள் குறித்து அதிக கேள்விகள் எழுப்பவேண்டியுமிருக்கின்றது.

4.
வடு, ஒரு தலித்தின் பார்வையில் எழுதப்பட்ட சுயசரிதை என்றாலும் அது நம்மைப்போன்ற பலர் அனுபவித்துணரமுடியாத ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகின்றது. பதின்மவயதோடு இச்சுயசரிதை முடிவது ஒருவிதத்தில் பலவீனம் என்றும் சொல்லவேண்டும். என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் தலித்துக்கள்/ ஒடுக்கப்பட்ட பெண்கள் போன்றோரை தன்னுடைய சிறகுகளால் அடைக்கலம் கொடுக்கும் இடதுசாரிகளை நாம் நன்றியுடன் இத்தருணத்தில் நினைவுகூரவேண்டும். ஆனால் அதேசமயம் அடைக்கலம் கொடுக்கப்பட்ட குஞ்சுகள் சிறகுகள் வளர்ந்து தமக்கான் சொந்தப்பாதையைத் தேர்ந்தெடுத்து பறக்கத் தொடங்கும்போது கையசைத்து விடைகொடுக்கவேண்டுமே தவிர துரோகிகள்/எதிரிகள் என்ற அடையாளப்படுத்துவதை இடதுசாரிகள் தவிர்ப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். இதே சமயத்தில், குணசேகரன் போன்ற ஒரு தலித் ஏன் காலச்சுவடை தனது பதிப்பாளாராகத் தேர்ந்தெடுத்தார் என்று நாம் கேள்வி எழுப்புவதையும் தவிர்க்கமுடியாது. இதுவரை குணசேகரனின் புத்தகங்கள் எதுவுமே காலச்சுவடால் வராதபோது இந்த சுயசரிதையை எழுதிவிட்டு தான் காலச்சுவடுக்கே பிரசுரிக்க முதலில் அனுப்பினேன் என்று ஒருவித 'பெருமிதத்துடன்' குணசேகரன் குறிப்பிடுவதன் அரசியல் குறித்தும் நாம் கேள்விகேட்கவேண்டியிருக்கின்றது (தலித்துக்கள்/விளிம்புநிலைமனிதர்கள் மீது அக்கறையெடுத்து புத்தகம் போடும் பிற பதிப்பகங்கள் குணசேகரனின் கண்களில் தென்படாதது பெரும் வியப்புத்தான்).

சினுவா ஆச்சுபேயின் நாவலை தமிழில் கே.மகாலிங்கம் நல்லதொருவிதமாய் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். ஆனால் தலைப்பை இப்படிச் சுருக்கவேண்டுமா என்ற கேள்வியும் உண்டு. அது மொழிபெயர்ப்பு என்பதாய் அன்றி மொழித்தழுவலாய் போய்விடும் அபாயமுண்டு. ஏற்கனவே மொழிபெயர்த்த 'சிதைவு'களுக்கும் (Things Fall Apart) இவ்வாறான சர்ச்சை வந்ததை மகாலிங்கம் அறியாதவரல்ல அல்லது அந்த விமர்சனத்துக்காய் ஒரு எதிரொலியாகத்தான் இதையும் செய்தாரா என்பதும் தெரியவில்லை. எதுவெனினும் நல்லதொரு மொழிபெயர்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது என்பதற்காய் இவ்வாறான சின்னச்சின்ன விடயங்கள் குறித்து மறந்துவிடலாம். ஆனால் வழமைபோல இங்கேயும் ஜெயமோகன் முன்னுரையில் அரசியல் செய்வதை நாம் அவ்வளவு இல்குவாய் கடந்துபோக முடியாது....'சினுவா ஆச்செபியின் நாவல் கிட்டத்தட்ட ஒரு இந்திய-தமிழ் நாவல் மாதிரியே உள்ளது' (ஏன் ஈழ-தமிழ் நாவலாய் இருக்கமுடியாது?)என்பதில் ஜெயமோகன் எதனைக் கூறவருகின்றார்? ஏன் அவரால் இதையொரு தமிழ் நாவல் என்றோ மூன்றாமுலக நாடுகளின் நாவல் என்றோ பொதுவாய்ச் சொல்லமுடியவில்லை? இந்தியா என்ற அடையாளம் ஏன் இங்கு தேவைப்படுகின்றது? இந்நாவல் இந்தியா, இலங்கை மட்டுமில்லை; காலனியத்துவத்தால் பாதிக்கப்பட்ட எல்லா மூன்றாமுலக நாடுகளுக்கும் பொருத்தமானதே. அதைவிட அடுத்த வரியில் ஜெயமோகன் சொல்லவருவதுதான் அவர் எந்தப்புள்ளியில் நிற்கின்றார் என்பது புரியவரும். 'இங்குள்ள ஊழல், சாதிய ஏற்றத்தாழ்வு, சிவப்பு நாடா அனைத்துமே அங்கும் உள்ளன'. இதை இன்னொரு வாசிப்பாய், இந்தியாவில் மட்டுமில்லை நைஜீரியா போன்ற ஆபிரிக்கா நாடுகளில் கூட சாதி இருக்கின்றது என்று எங்களை நியாயப்படுத்துவது போன்ற வாசிப்பு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. எங்கோ ஒரு விவாதத்தில் இந்தியா (ஈழம்) போன்றவற்றில் இருக்கும் சாதியக்கொடுமைகளை விபரித்தபோது படித்த சில அறிவுஜீவிகள் ஆபிரிக்கா நாடுகளிலும் சாதி இருக்கின்றன என்று புலம்பியபடி ஓடிவந்தது நினைவுக்கு வருகின்றது. ஒன்றைப் பற்றிப்பேசும்போது அதைப்பற்றி மட்டும் முதலில் பேசுங்கள், எங்களுக்குள் சாதி இருந்தால் அதை எப்படி அரசியல் நீக்கம் செய்வது என்று பேசுவதைவிட்டுவிட்டு, அங்கேயுமிருக்கின்றது அதனால் நாங்கள் -மட்டும்- அவ்வளவு கெட்டவர்களல்ல என்ற தொனியில் வரும் உரையாடல்கள் அலுப்பையல்ல, கோபத்தை வரச்செய்பவை.

நாம் நவீன உலகில் எல்லா வசதிகளோடும் எல்லோரையும் மதித்தபடி இருக்கின்றோம் என்று நமக்குள் கூறியபடி இருக்கின்றோம். ஆனால் இவ்வாறான புதினங்கள் நாம் நினைத்துக்கொள்கின்ற அனைத்தையும் அதிர்வுக்குட்படுத்துகின்றது. மேலும் சாதியைப் பற்றியோ அல்லது ஏகாதிபத்தியம் பற்றியோ நாம் உரையாடும்போது யார் அதிகம் பதட்டம் அடைகின்றார்களோ அவர்களே இன்னும் இந்த அடையாளங்களில் தங்களை தேக்கிவைத்துக்கொள்ள விரும்புகின்றார்கள் என்பதை இலகுவில் கண்டுபிடித்துவிடவும் முடியும். நாம் நம்மிலிருந்து சாதியை இல்லாமற்செய்ய மிகுந்த சகிப்புத்தன்மையும் விசாலமான மனமுமே வேண்டும், மேலும் வர்க்க அழிப்பாலும், படிப்பாலும், பொருளாதார ஏற்றங்களாலும், சாதி முற்றாக அழிந்துவிடும் என்று கூறுபவர்களை நோக்கி நாம் புன்னகையை வீசியபடி எம்மை நாமே சுயவிமர்சனத்திற்கு உட்படுத்துவதே நியாயமாகவிருக்கும்; அதுவே நாமின்னும் மனிதத்தன்மையுடன் வாழ்கின்றோம் என்பதைச் சாட்சிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.

(ஆபிரிக்காக் கலாசாரத்தின் மீது பெருவிருப்புக்கொண்டவளுக்கு)

வாளின் நுனியில் சிதறும் வாழ்வு

Wednesday, July 25, 2007

(யூலை நினைவுகளுக்கு - மீள்பதிவு)

அப்போது எனக்கு ஜந்து வயதிருக்கும். நேர்சரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஆடி மாதத்தின் ஒரு நாளில், அண்ணாவின் சைக்கிளின் handle barல் ஒரு கையையும், மறுகையில் பை நிறைய இனிப்புக்களுடன் நேர்சரி வகுப்புக்கு போகின்றேன். வகுப்பு, மாணவர்கள் எதுவுமற்று வெறுமையாக இருக்கின்றது. ஆசிரியர் தொலைவில் வருவது தெரிகின்றது. 'இன்றைக்கு ஹர்த்தால் எல்லோ. வகுப்பு இல்லை என்று உங்களுக்கு முதலே தெரியுந்தானே' என்று அண்ணாவிடம் கூறுகின்றார். 'ஓம் தெரியும், இவன் தான் சிலநேரம் நேர்சரி வகுப்பு நடக்குமென்டு கூட்டிக்கொண்டு வந்தவன்' என்கிறார் அண்ணா. எனது முகத்தில் கவலையும் மனதில் வெறுமையும் நிரம்ப திரும்புகின்றேன். அன்று எனது பிறந்ததினம்.எங்கள் வீட்டு வரவேற்பறையில் வள்ளுவரும், அண்ணாவும், கலைஞரும்தான் எப்போதும் காட்சி தந்தபடி இருப்பார்கள். ஈழத்தில் இருந்தவரைக்கும் அப்பா ஒரு தீவிர நாத்திகராக இருந்திருக்கின்றார். திராவிடக் கட்சிகளின் மீது மிகுந்த அபிமானமும் நம்பிக்கை உடையவராக ஒரு காலத்தில் இருந்திருக்கவேண்டும். ஊரில் இருந்த வரைக்கும் (இப்போதும் கூட) தைப்பொங்கலையோ, வருடப்பிறப்பையோ அயலவர்கள் கொண்டாடியமாதிரி நாங்கள் கொண்டாடியதில்லை. அதற்குக் காரணம் அப்பா நாத்திகராக இருந்தது அல்ல. வேலையின் நிமிர்த்தம் எமது தந்தையார் மட்டக்களப்பு, வன்னி, தீவுப்பகுதிகள் என்று மாறி மாறி அலைந்தபடி இருந்தவர். எல்லைக் கிராமங்களில் சிங்கள இனவாதிகளால் அந்த மக்கள்படும் துயரைக் கண்டதால், 'அவர்கள் அங்கே துன்பப்படுகையில் இங்கே எங்களுக்கு என்ன கொண்டாட்டம் குதூகலம் வேண்டிக்கிடக்கிறது' என்று கூறி விழாக்களைக் கொண்டாடும் எமது ஆசைகளை இல்லாமற்செய்துவிடுவார். அந்தக்காலத்தில், போரின் எந்தத் துளியும் தீண்டாது எங்கள் கிராமம் மிக இயல்பாயிருந்தது. பொங்கலுக்கு, வருடப்பிறப்புக்கு என்று பக்கத்து வீட்டுக்காரர்கள், கோலம் போட்டு வாழைகள் நாட்டி, வெளி முற்றத்தில் பொங்கிப் படைக்கும்போது அப்பாவை மனதுக்குள் திட்டியிருக்கின்றேன். கொண்டாட்டங்களின்போது அயல் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குதூகலத்தைக் கண்டு பொறாமைப்பட்டிருக்கின்றேன். எனக்கும் எனது பெற்றோர் கைவிசேடம், புது ஆடைகள் விழாக்களின்போது தரமாட்டார்களா என்றும் ஏங்கியிருக்கின்றேன்.போர் தீண்டாத எந்த ஊரையும் இன்றைய பொழுதில் ஈழத்தில் பார்க்க முடியாது போலத்தான் தோன்றுகின்றது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஊரைவிட்டு முற்றாகவே வெளியேற வேண்டி நிலை வந்தது. அதுவரை, சிங்கள் இராணுவம் தனது முகாமைவிட்டு கொஞ்சம் முன்னேறும்போது, அவ்வவ்போது வேறு கிராமங்களுக்கு சென்று விட்டுத் தங்கித் திரும்பிவருவதுதான் வழமையாக இருந்தது. பிறகு சண்டைகொஞ்சம் கடுமையானபோது இரவுகளில் பக்கத்து ஊரில் போய் படுத்துவிட்டு பகல்பொழுதில் ஊரிற்குத் திரும்பி வருவதுமாயும் இருந்தோம். தமிழர் பிரதேசங்களை கைப்பற்றிக்கொள்ள இராணுவம் இரவுநேரங்களையே அந்தக்காலத்தில் தேர்ந்தெடுத்துக்கொள்வது வழமையாக இருந்ததால், அப்படி பகல்/இரவு என் இரண்டுவிதமான விக்கிரமாதித்திய வாழ்க்கை முறைக்கும் நாங்கள் பழக்கப்பட்டிருந்தோம். அதுவும் கார்த்திகை, மார்கழி போன்ற குளிரும் மழையும் கூடிய காலங்களில் விடிகாலையில் எழும்பி ஊருக்குத் திரும்பிப் போவது போல ஒரு அவதி கிடையாது.

என்றேனும் ஒருநாள் நான் படுத்திருக்கும் அறையின் துருப்பிடித்த யன்னல் கம்பிகளுக்குள்ளால் துப்பாக்கி நீட்டியபடி ஒரு இராணுவத்தினன் நிற்பான் என்ற பயத்தில்தான் பல இரவுகளில் தூங்கியிருக்கின்றேன். அந்தப் பீதி அதிகரித்து அதிகரித்து மரங்கள் காற்றில் அசையும் நிழலைக்கூடக் கண்டு பயந்து அம்மாவின் முதுகின் பின்னால் சிறுவயதில் முடங்கிப் படுத்துமிருக்கின்றேன். ஊரை விட்டு முற்றுமுழுதாக நீங்கிய நாள் நினைவுக்கு வருகின்றது. அகோரமான செல்லடிகளும், குண்டுத்த்தாக்குதலுடந்தான் ஆரம்பித்தது அன்றையபொழுது. இப்படி ஒரு பொழுது ஆரம்பிக்கிறது என்றால் நிச்சயம் எங்களுக்குத் தெரியும் ஆமிக்காரன் முன்னேறப்போகின்றான் என்று. இது ஒரு தாக்குதலுக்கான முன் ஆயத்தம் என்றும் சொல்லலாம். தடைகளை நீக்குவதற்கு இப்படி ஒரு கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெறும். அத்தோடு எதிர்த்துப் போரிடுபவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவற்கும் ஆகவும் இருக்கலாம். 'ஆரம்பமே இப்படி என்றால் உச்சக்கட்டம் எப்படி இருக்கும் என்று உனக்குக் காட்டத் தேவையில்லை, பின்வாங்கிப் போய்விடு' என்று போராளிகளைப் பார்த்து எகத்தாளமாகச் சிரிப்பதன் மறுவடிவம்தான் விமானத்தாக்குதல்களும், ஆட்லறித் தாக்குதல்களும்.

துப்பாக்கிச் சூட்டுக்கள் எல்லாம் நெருங்கி வருகின்றமாதிரி இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள் காற்றில் உரசிக்கொண்டு போகும் ஓசையெல்லாம் தெளிவாய்க் கேட்கின்றது. 'வீட்டை விட்டு போவோம் போவோம்' என்று பயத்தோடு அழுகை வரும் நிலையில் பெற்றோரிடம் நான் கெஞ்சுகிறேன். அவர்களுக்குப் புரிந்திருக்கக்கூடும், இதுதான் நாங்கள் எங்கள் ஊரில், வாழ்ந்த வீட்டில் கடைசியாக வாழப்ப்போகும் கணங்கள் என்று. அதனால் வீட்டைவிட்டு அவ்வளவு இலகுவில் நீங்கி வர பிரியப்படாதிருக்கின்றனர். 'சரி நீயும் அக்காவும் முதலில் போங்கோ, நாங்கள் பின்னாலை வாறோம்' என்று எங்களை அனுப்புகின்றனர் எமது பெற்றோர். ஒரு சைக்கிளின் பின் பாரில் கட்டப்பட்ட ஆடைப்பெட்டியுடன் நானும் அக்காவும் வீட்டினின்று நீங்குகின்றோம். வெளியே ஒழுங்காய் நடந்தே செல்லமுடியாத நிலை. நிமிர்ந்து நடந்தால் துப்பாக்கிச் சன்னங்கள் தலையைப் பதம் பார்த்துவிடும் போன்று அகோரமான யுத்தக்களம். சைக்கிளை உருட்டியபடி குனிந்து குனிந்து நடக்கின்றோம். ஒரு இரண்டு வீடு தாண்டி இருப்போம். பாரிய ஒலியுடன் ஒரு செல் விழுந்து வெடிக்கின்றது. எங்கள் வேலிக்கருகில் இருந்த பக்கத்து வீட்டு வைக்கோல் போரிலிருந்து தீ எழும்புகின்றது. 'அய்யோ வீட்டில் நின்ற அம்மா அப்பா ஏதாவது நடந்திருக்குமோ?' என்று எனக்கு அழுகை வருகின்றது. திரும்பிப் போய்ப் பார்க்கவும் முடியாத நிலை. அக்கா சொல்கிறாள் 'கொஞ்சம் தூரம் போய் சைக்கிளை நிறுத்தி ரவுண்ட்ஸ் அடி குறையும்போது திரும்பி வந்து பார்ப்போம் இப்போது வேண்டாம்' என்று.

நாங்கள் சைக்கிளை உருட்டுகிறோம். வைரவர் கோயில் தாண்டி, அதன் பக்கத்தில் இருந்த கள்ளுக்கொட்டில் தாண்டுகையில் தேவதூதர்களாய் போராளிகள் வருகின்றார்கள். நாங்கள் போரை விட்டு விலத்தி ஓட ஓட அவர்கள் போரைத் தேடி வருகின்றனர். பலரின் கால்களைப் பார்க்கின்றேன். ஒழுங்காய் செருப்புக்கூட அணியாமல் வெறுங்காலுடன் பலர் இருக்கின்றார்கள். பயத்தின் எந்த ரேகையும் அவர்களின் முகத்தில் இல்லை. யாரையோ சந்திக்கப் போகும் நிதானத்துடன் நடந்து வந்துக்கொண்டிருக்கின்றார்கள். எதிரியைக் காணும்வரை எந்தத் தோட்டாவும் உபயோகிப்பதில்லை என்பதுபோல துப்பாக்கிகள் முதுகில் தூங்கியபடி இருக்கின்றன. அடுத்த கிராமத்தை அடைந்தபோது கொஞ்ச நேரத்தில் எமது பெற்றோரும் வந்துவிடுகின்றனர். அவர்கள் முகத்திலும் பயம் பொங்கி வழிகின்றது. எல்லோரையும் மீண்டும் உயிருடன் பார்த்தவுடன், எல்லோர் மனதிலும் ஒருவித நிம்மதி வந்துவிடுகின்றது. ஆனால் எனது சொந்தக்கிராமம் கைப்பற்றப்படுகையிலும் உயிரைக்காக்க வேண்டும் என்று ஓடுகின்ற எனது சுயநலத்துக்கும், எங்கையோ ஒரிடத்தில் பிறந்து உறவுகளைத் துறந்து எந்தத் தமிழ்ப்பிரதேசமும் கைப்பற்றப்படவோ, தமிழ் மக்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்று 'மரணத்திலும் வாழ்வைத் தேடி' போகின்றவர்களுக்கும் இடையிலான உள்மனயுத்தம் ஆரம்பிக்கின்றது. அது இன்று வரைக்கும் தொடர்கிறது. சாகும்வரை இது குறித்த ஒரு குற்றவுணர்வுடன்தான் வாழ வேண்டியிருக்கவும் போகின்றது.

2.

ஈழத்தில் இருந்தவரைக்கும் எதிர்காலத்தில் மருத்துவம் படிப்பதே ஒரு கனவாக இருந்தது அல்லது அது திணிக்கப்பட்ட ஒன்றாகவும் இருந்திருக்கலாம். ஒரு முறை யாழ் வைத்தியசாலையில் நோயின் நிமித்தம், அனுமதிக்கப்பட்ட அண்ணாவைப் பார்ப்பதற்காய் நானும் அம்மாவும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தோம். அந்தச் சமயம் செல்லடிபட்டு சிதைவுற்ற ஒருவரை இரத்தம் கொட்ட கொட்டக் கைகளில் ஏந்திவருகின்றார்கள். முகம் எது வயிறு எது என்று பிரித்துணரமுடியாது இரத்த நிறம் உடலை ஆடை போல மூடியிருக்கின்றது. ஒரு மரணத்தை முதன் முதலாய் அருகிலிருந்த பார்த்த சந்தர்ப்பம் அது. இப்படியும் ஒரு மரணம் நிகழுமா எனச் சிந்திக்கமுடியாத ஏழெட்டு வயதில் அது நிகழ்ந்திருந்தது. அந்தச் சம்பவத்தைப் பார்த்தபின் ஒரு நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்திருக்கின்றேன். சத்தி வருகின்றமாதிரியான உணர்நிலையில் அந்த நாள் முழுதும் அலைந்திருக்கின்றேன். அந்தச் சம்பவத்தை பார்த்தபோது வாயில் வைத்திருந்த சூப்புத்தடி (Lollipop) அதற்குப் பிறகு பிடிக்காமல் போயிற்று அல்லது லொலிபாப்பை எப்போது பார்த்தாலும் அந்த சம்பவமே உடனே நினைவுக்கு வருவதாய் இருந்தது. அதன்பிறகு எனக்கு இரத்தம் என்பது மிகவும் பீதியடையும் ஒரு விடயமாகப் போய்விட்டது. ஒரு சில நொடிகளுக்கு மேல், இரத்தத்துடன் வரும் எந்தக் காட்சியையோ கதையையோ பார்க்கவோ கேட்கவோ என்னால் முடிவதில்லை. சிலவருடங்களுக்கு முன், கார் விபத்தில் சிக்கிக்கொண்ட நண்பன் அந்த விபத்துச்சம்பவத்தை விளக்கிக்கொண்டிருந்தபோது (காலில் பலமாய் அடிபட்டிருந்தான்) கிட்டத்தட்ட முழு மயக்கத்திற்கு அருகில் நான் போயிருந்தேன். இன்னமும் சிறுவயதில் நிகழ்ந்த சம்பவமும், இரத்தமும் எப்படி என்னைத் துரத்திக்கொண்டிருக்கின்றது என்பது வியப்பாக இருந்தது. அப்படியெனில் இதைவிட இன்னும் ஆழமான பாதிப்புக்களுக்கும், வன்முறைகளுக்கும், பாலியல் வன்புணர்ச்சிகளுக்கும் ஆளானவர்கள் எப்படியெல்லாம் இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருக்கின்றார்கள் என்ற வினா எழுவதைத் தவிர்க்கவும் முடிந்ததில்லை.

'In the name of Buddha' திரைப்படம் வந்தபோது தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்த்துக்கொண்டிருதேன். கிட்டத்தட்ட அரைவாசிக்கு மேல் கண்களை மூடித்தான் பார்த்தேன் (தேங்காய் உரிக்கும் அலவாங்கால் இராணுவம் ஒரு ஆணைக் கொல்வது, சிறுவர்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டு அரைகுறையுமாக புதைக்கப்பட்டிருப்பது, வீட்டுக்குள் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்குவது போன்ற காட்சிகள் ஆரம்பமானது மட்டும் தெரியும், பிறகு எனது உலகம் இருட்டாகிவிட்டது). கண்மூடி இருந்தவேளையில் எனது பின்சீட்டில் இருந்த ஒரு பதின்மவயதுப்பெண் தன் தாயிடம் கூறியது காதில் விழுந்தது. கிட்டத்தட்ட அழுகின்ற குரலில், 'அம்மா I can't watch this movie, I wanna go outside' என்கிறாள். தாயோ, 'பிள்ளை இப்படித்தான் எங்கட நாட்டில் நடக்கிறது. நீர் இதையெல்லாம் பார்க்கவேண்டும், அப்பத்தான் அங்கை நடக்கிறதெல்லாம் தெரியும்' என்கிறார். இந்தக் காட்சிகளைப் பார்க்கமுடியாத எனக்கு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வெளியே போகவேண்டும் போல இருக்கிறது அல்லது இப்படியான காட்சிகளைப் பார்க்கவிரும்பாத பிள்ளையை வற்புறுத்தி அவரது மனநிலையைச் சிதைக்காதீர்கள் என்று அந்தத் தாயிடம் கூறவாவது வேண்டும் போலக்கிடக்கிறது. இறுதியில் அந்தப் பிள்ளை கண்ணை மூடிக்கொண்டு தாயின் தோளில் சாய்ந்துவிடுகின்றார்.

3.
ஈழத்தை விட்டு வந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு, சென்ற வருடம் ஈழத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு வித அவசரமான திட்டமிடலில் நண்பர்களாய் செல்லவேண்டியிருந்ததால்தான் அது கூட சாத்தியமாயிருந்தது. இன்றும் ஊரைப் பார்க்கமுடியாது இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலையில் ஈழத்துக்குப் போவதற்கு என்ன காரணம் வேண்டிக்கிடக்கிறது? அதனால் யாழில் மூன்றே நாள்கள் மட்டுந்தான் தங்கியிருந்தேன். இதுவரை காலமும் காலடி வைக்காத வன்னியில் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியிருந்தது புதிய அனுபவமாயிருந்தது. அங்கே இருந்து கேட்ட விவாதித்த கதைகள் நாட்டைவிட்டு வெளியேறிய என் குற்றவுணர்வை இன்னும் பலமடங்காய் அதிகரிக்கச் செய்தன. அதுவும் பெண் போராளிகள் கூறிய கதைகளும் இடை நடுவில் மேலே சொல்ல முடியாது தவித்து அழுத கணங்களும் இன்னமும் கண்முன்னாலே நிற்கின்றது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கால் வைத்தபோது மூன்று வருடங்களுக்கு முன் உலகை வியக்க வைத்து போராளிகள் நடத்திய தாக்குதல் கண்முன் விரிந்தது. சனங்கள் ஆயிரக்கணக்கில் புழங்கும் (முக்கியமாய் வெளிநாட்டு மக்கள் மீது பாதிப்பு ஏற்பட்டால் எப்படி பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்று அனைவருக்கும் தெரிந்ததே) எந்த ஒரு பொதுசனத்துக்கும் பாதிப்பு இல்லாது மிகத்துல்லியமாய் இராணுவ, வர்த்தக விமானங்களைத் தகர்ந்திருந்தார்கள். குண்டு குண்டாய் போட்டு மக்களை கொல்வது முற்பகலில் செய்யின், உனது ஆணிவேருக்கே தீ கொளுத்துவோம் என பிற்பகலில் எதிரியை வினையறுக்கச் செய்தவர்கள் போராளிகள். 83ல் தமிழரைத் தலைநகரில் நூற்றுக்கணக்கில் குடல் உருவியும் கண்கள் பிடுங்கியும் கொன்றும், உயிரோடு ரயர்கள் போட்டு எரித்துக்காட்டியும் கெக்கலித்தது பேரினவாதம். ஒரு அரச இராணுவ அமைப்புக்கு நிகரான பலத்துடன் தமிழர்கள் ஒரு காலத்தில் நிமிர்ந்தபின், தமிழர்களை விட சிங்களப்பேரினவாதமே ஒவ்வொரு கறுப்பு ஜூலையும் நடுநடுங்கியபடி எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கத் தொடங்கியது. அவ்வாறான ஒரு கறுப்பு ஜீலையில் நடந்த பதிலடியே கட்டுநாயக்காவில் நிகழ்ந்த ஊடுருவல் தாக்குதல். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இறங்கியபோது இந்த இடந்தானே சென்றுபோன வருடத்தில் ஒரு நாள் உலகையே திரும்பிப்ப்பார்க்க வைத்ததென்ற பெருமை எனக்குள் பொங்கியது. ஆனால் அது தங்கி நின்றது கொஞ்ச நொடிகள்தான். சிதைந்த விமானத்தின் முன் மல்லாக்க விழுந்துகிடந்த போராளிகளின் முகங்கள்தான் பிறகு நினைவு முழுவதற்கும் பரவியது. அந்த இளைஞர்களில், சிறுவயதில் ஊரைவிட்டு அகன்ற நேரம் எதிர்ப்பட்ட போராளிகளின் முகங்களைக் கண்டேன். போரிற்குள் இருந்த எந்த ஒரு ஒருத்தனும்/ஒருத்தியும் போரை கொண்டாடிக் குதூகலிக்கமுடியாது. பிரியமான மனிதர்கள் இறக்க இறக்க இன்னும் கொல் கொல் என்று நரம்புக்கள் புடைக்க புடைக்க பேசிக்கொண்டிருப்பவர்கள் மனிதர்களாக இருக்கச் சாத்தியமற்றவர்கள்.எண்பத்து மூன்றில் கறுப்பு ஜீலையில் (ஆடி இருபத்தைந்து) தொடங்கிய மரணங்கள் இன்றும் அதே நாளில் நீண்டுகொண்டிருப்பதுதான் எவ்வளவு துயரமானது. 2001ல் தங்களையே விலையாகக் கொடுத்த அந்தத் தோழர்கள் மரணித்த நாளில் பிறந்தநாள் வரும் ஒருவன் மகிழ்வு கொள்ள என்ன வேண்டிக்கிடக்கிறது? மேலும் இன்றைய நாளில் ஒரு பிறப்பைப் பற்றிப் பேசுவதைவிடவும் மரணங்களைப்பற்றி பேசுவதுதான் நேர்மையாகவும் இருக்கும்.

நன்றி:புகைப்படங்கள்
கறுப்பு வெள்ளைப் படங்கள்:
ஆடிக்கலவரம் 1983
சைக்கிள் படம்:
ஈழவிஷன்
பெண்ணும் இராணுவமும்:
In the name of buddha

Wednesday, July 18, 2007

அவர்கள் இடைவிடாது பேசிக்கொண்டிருந்தார்கள்
கொட்டாவிவந்து அலுப்பு நெளிந்தது.
அவர்கள் அறிவைச் சுடச்சுட அடுப்பிலிருந்து பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்
மூளை கரியாகிக்கரியாகி சாம்பலாய் உதிர்ந்துகொண்டிருக்கிறது.
அவர்கள் இடைக்கிடை தண்ணீரையருந்தியபடி கைகளை ஆட்டி
தாம் சொல்வதே உண்மையென நம்பவைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்
மூத்திரப்பை நிரம்பி ஆசுவாசப்படமுடியாது குறுகிய அறைச்சுவர்கள் அடைத்துக்கொண்டிருக்கிறது.
ஜன்னலுக்கப்பால் விரியும் பெஞ்சில்

காதலியொருத்தியை முத்தமிட்டு முதுகைவருடியபடியிருக்கும் கரங்கள் நடுவிரலைக்காட்டிக் கேலிசெய்கிறது
நீயில்லாத உனதின் இருப்பை.

(ஒரு மாநாட்டு அரங்கில் இருந்தபொழுதில்)பதினைந்தாம் மாடியிலிருந்து குதித்துக்கொண்டிருக்கும்போது
ஒரு பறவையைப்போல தான் இறுதிக்கணத்தில் மேலெழும்ப முடியுமென நினைத்திருப்பானா
குதிக்கமுன்னர் குத்தப்பட்டிறந்த மற்றவனின் இதயத்திற்கு
பின்னேரம் மழைபெய்யுமென்பது தெரிந்திருக்குமா
பச்சைப்புல்வெளி எத்தனையாவது தற்கொலையைச் சந்திக்கின்றேனென
சூரியன் மறைந்தபொழுதில் கணக்கிட்டபடி தூங்கப்போயிருக்கும்
நான் தான் பல்லிகள் ஊரா மேற்சுவரை
நள்ளிரவில் வெறித்தபடி வளையங்களை உருவாக்கியபடியிருக்கிறேன்
இரண்டு கடல் மூன்று கண்டந்தாண்டி
அவசரமவசரமாய் உன்னையெழுப்பி பதட்டப்படுத்தாதிருந்திருக்கலாம்
என்ன செய்ய அகதியொருத்தனுக்கு பொழுதைத் தாரைவார்த்தவளாயிற்றே
சகித்தபடி புன்னகைக்க நீ கற்றுக்கொள்ளளத்தான் வேண்டும்
ஆமி
ஒருத்தனை நடுப்பகலில் மண்டையில் போட்டதைப்பார்த்தும்
அடுத்தநாள் புன்னகையோடு நானவனைக் கடந்துபோனதுபோல.

(murder-sucide இரட்டைக்கொலைகளின்பின்)

ம்..ஆமென்!

Friday, July 13, 2007

வர்க்கம் வகுத்தல் பெருக்கல் மூலதனம் உருப்பெருக்கம் நுண்ணரசியல் அறிந்தும் யதார்த்தச்சூழலிற்கு வர மறுப்பவர்க்கும். '...என்றாலும் அகதியாய் இருந்தல் கூட ஒரு பாஸிடிவ்தானே' என காலந்தோறும் சொக்கப்பனை எரிக்கும் தேசியர்களுக்கும்...

புலம்பெயர்ந்து வாழ்தல் பற்றியும் தோல்விகள் பற்றியும்

இல்லை.
சேனாவில் நான் கழித்த
மோசமான காலமோ
அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட
இராணுவ விசாரணைக் குழுக்கள் தொடுத்த
திடீர்க் குற்றச்சாட்டுகளோ
என் முதுகில் அழுத்திய துப்பாக்கிக் கட்டையோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை
புலன் விசாரணையின் திகிலூட்டும் கறுப்பு முகமூடியோ
பயங்கரத்தின் ஓலங்கள் ஒலித்த
விளையாட்டரங்கங்கள் என்னும் துன்ப நகரமோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை.
வாழ்க்கையிலிருந்து நம்மைத் துண்டித்த
ஜன்னலின் இரும்புக் கம்பிகளோ
எங்கள் வீட்டின்மீது குவிக்கப்பட்டிருந்த கண்காணிப்போ
பதுங்கி பதுங்கி வந்த காலடியோசைகளோ
பசியில் பிளந்த வாய்க்குள் நான் சரிந்து விழுந்ததோ
என்னை வீழ்த்தவில்லை.

இல்லை.
என்னை வீழ்த்தியது
நான் உரிமை கொண்டாட முடியாத தெரு
அவசரமாகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தினூடு
நான் கற்றுக்கொண்ட இரவல் மொழி.
எங்களுக்குத் சொந்தமில்லாத தீர்க்கரேகைகளில்
தனித்து நிற்கும் நிச்சயமற்ற உருவம்தான்
என்னை வீழ்த்தியது.
அது கிறீன்விச் தீர்க்கரேகை பூஜ்யம் டிகிரி
எதற்கும் அருகிலில்லை.

என்னை வீழ்த்தியது இந்த அந்நிய மழை
சொற்களை மறந்து
துழாவிச் செல்லும் நினைவு
வெகுதூரத்திலுள்ள நண்பர்கள்
எங்களுக்கிடையே உள்ள இந்த அடாத பெருங்கடல் -
எனக்கு வந்த சேராத
நான் எதிர்பார்த்திருந்த கடிதங்களை ஈரமாக்குகின்ற
இந்த அடாத பெருங்கடல்.

-Maria Eugenia Calderarara (Chile)

கண்டனம்

ஒரு புல்லின் இதழுக்கு
ஊறு விளைவிக்கும் உரிமையை
என் நாட்டின் போராளிகளுக்கு
மறுக்கிறேன்
ஒரு வெடிகுண்டைக் கையாளும் உரிமையை
குழந்தைக்கு - எல்லாக் குழந்தைகளுக்கும்
மறுக்கிறேன்
ஒரு துப்பாக்கியை ஏந்தும் உரிமையை
என் சகோதரிக்கு
மறுக்கிறேன்
நீங்கள் சொல்லும் எதை வேண்டுமானாலும்
என்னால் மறுக்க முடியும் - ஆனால்
அவர்களின் கண்கள்
கொலைகாரர்களின் குதிரைகள்
பாய்ந்தோடி வருவதைப் பார்க்கும்போது
இத்தனை இலட்சியங்களை
யாரால் உத்திரவாதம் செய்யமுடியும்?

பத்து வயதிலேயே ஒரு குழந்தை வீரனாவதை
எதிர்க்கிறேன்
மரங்களின் உடல்கள்
வெடிமருந்துக்குப் புகலிடமாவதை
எதிர்க்கிறேன்
எனது பழத்தோட்ட மரங்களின் கிளைகள்
தூக்குமரங்களாக்கப் பயன்படுத்தப்படுவதை
எதிர்க்கிறேன்
எனது தோட்டத்தின் ரோஜாப் பாத்திகள்
மரணதண்டனை நிறைவேற்றும்
துப்பாக்கிப் படையினரால் பயன்படுத்தப்படுவதை
எதிர்க்கிறேன்
நீங்கள் சொல்லும் எதை வேண்டுமானாலும்
என்னால் எதிர்க்கமுடியும் -ஆனால்
எனது நாடு
எனது நண்பர்களோடும்
எனது இளமையோடும்
சேர்ந்து எரியும்போது
எனது கவிதைகள் ஆயுதங்களாக மாறாமல்
இருக்கமுடியுமா?

- Rachid Hussein (Palestine)

எனது நாடு எவ்வளவு சிறியது

அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க
இரண்டாயிரம் காவலர்கள் போதும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

தனிப்பட்ட வாழ்வு
அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ
அல்லது எதிர்ப்பாகவோ இருக்குமளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது.

எங்கள் நாட்டு அதிபரே தெருச்சணடைகளைத்
தானே நேரில் வந்து தீர்க்குமளவிற்கு
எனது நாடு அத்தனை சிறியது.

காவலரின் துப்பாக்கியுடன்
எந்தவொரு மடையனும்
இந்த நாட்டை ஆளமுடியும் என்றளவுக்கு
எனது நாடு அத்தனை சிறியது

-எர்னஸ்ட்டோ க்யுட்டிரெஸ் (Nicargua)

தென்னாபிரிக்கக் குடியுரிமை பெற ஒரு விண்ணப்பம்


நாடே:
மலைத்தொடரில் விரியும் உனது நாட்கள்
எனது வருகையை அணைத்துக்கொள்ளுமா?
எதற்காகவோ காத்திருக்கும்
வெறுமையான சுவரில் உள்ளவொரு அறையில்
நான் காத்திருக்கிறேன்
கடலிடையே தெருக்களிடையே வானத்திடையே
செல்கிறேன்;
என்னுடன் உரையாட அவற்றுக்கு நேரமில்லை.

நாடே:
உனது நிலா வெளிச்சம் என்னைப் பருகுவதற்காக
நான் தூசியாக வேண்டுமா?
எனது ஜன்னலை திறப்பதில்லை.
ஜன்னல் கண்ணாடி மீது சாய்ந்துகொண்டிருக்கிறேன்
இரவு முழுவதும் கடல் காகங்களுடன்
நீ பேசிக்கொண்டிருப்பது
எனக்குக் கேட்கிறது;
நான் ஒளிமயமானவள்
ஒளியூடுருவ முடியாதவள்
உரத்துச் சொல்லப்படக் காத்திருக்கும்
ஒரு மந்திரச்சொல்

நாடே, எனது நிழலாக மாறு
நான் உனது உடலாக அமைவேன்.


-Karen Press (South Africa)

நன்றி: மண்ணும் சொல்லும் (மூன்றாம் உலகக் கவிதைகள்)
தமிழாக்கம்: வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை

துயரத்தை மீளவும் இசைத்தல்

Sunday, July 08, 2007

-பெலினியின் *Amarcordஐ முன்வைத்து-


பதின்மம் நம் எல்லோரிடமும் சிறகுகளுள்ள ஒரு பறவையைப் போல வந்தடைகிறது. பலர் அதன் சிறகுகளைக்கொண்டு இன்னும் உயர உயரப்பறந்துகொண்டும் வேறு பலர் அந்தச் சிறகுகள் முறிய இப்பருவத்தை எப்படிக் கடப்பதென்னும் கவலையுடனும் வாழ்வின் சாட்சிகளாகின்றனர். எப்படியெனினும் கடந்தபோனால் மீண்டும் வராத பதின்மம் நிறைய நனவிடை தோய்தலைகளைக் கொண்டுவருகின்றது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. பெலினியின் (Fedrico Fellini) Amarcord, ஒருவன் பதின்மத்திலிருந்து இளைஞனாக மாறும் பருவத்தைக் காட்சிப்படுத்துகின்றது. பதின்மங்களுக்கு ஒரு தொடர்ச்சி இருப்பதில்லை. கனவா நனவா என்று பிரித்தறிய முடியாத ஒரு குழப்பகரமான வாழ்விற்குள் நம்மைப் பதின்மம் தள்ளிவிடுவதை பெலினியும் ஒரு நேர்கோட்டுக் கதைசொல்லலில்லாது துண்டு துண்டுகளாய்க் காட்சிகளை நகரத்தபடியிருக்கின்றார்.
நகரத்தை விட்டு சற்று ஒதுக்கியுள்ள ஒரு கடற்கரை கிராமமே இப்படத்தின் பின்புலமாகின்றது. ரிற்றா என்ற பதின்ம வயதுடையவனே முக்கிய பாத்திரமாகின்றான். ஒரு கிராமத்து வாழ்வுக்குரிய அழகோடும் கசப்புகளோடும் வெகுளித்தனங்களோடும் இப்படம் விரிகின்றது. இறுக்கமுள்ள கத்தோலிக்கத் தேவாலயம் இக்கிராம மக்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றதெனினும், கத்தோலிக்கப் பாடசாலையில் படிக்கும் ரிற்றா முதலான பையன்கள் இந்த இறுக்கங்களைத் தமது குழப்படிகளால் கடந்து போய்விடுகின்றார்கள். பாடசாலையில் ஒழுக்கத்தையையும், பொறுமையையும் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கு அதை வைத்தே ஒழுங்கைக் குலைக்கச் செய்து அந்தமாதிரி நக்கலடிக்கின்றார்கள் ரிற்றாவும் அவரது நண்பர்களும்.

அநேக கிராமங்களில் வயது வித்தியாசமின்றி எல்லோர் மனதையுன் சுண்டியிழுக்கும் ஒரு சில பெண்கள் இருப்பார்கள். 'கன்னியிவள் கடைக்கண் காட்டிவிட்டால் வெண்ணிலவையும் தரைக்குக்கொண்டுவரும்' மிதப்போடு பல இளைஞர்கள் அந்தப்பெண்களின் பின்னால் அலைந்தபடியிருப்பார்கள். இப்படியாக இளைஞர்களைத் தாங்கள் தேவதைகளாகக் கவர்ந்திழுக்கின்றோம் என்று நன்று தெரிந்தும், தெரியாதபடி -எதற்கும் இடங்கொடுக்காமல்- தங்களைப்பற்றிய புனைவு வழிப்பட்ட இரகசியங்களைப் பெருக்கச் செய்தபடி குறும்புகளுடன் அந்தப்பெண்கள் நகர்ந்தபடி இருப்பர்கள். அவ்வாறான பெண ஒருத்தி (Gradisca) இப்படத்திலும் வருகின்றார். அவரில் இளைஞர்களுக்கு மட்டுமில்லை, ரிற்றாவிற்கும் மையலுண்டு. அவரோடு காதலுற்று களிப்பது போன்ற கனவுகள் எல்லாம் ரிற்றாவிற்கும் வந்துபோகின்றது.

பெலினி காட்டுகின்ற ரிற்றாவின் வீடென்பதுகூட நம்மைப்போன்ற பலருக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய ஒரு குடும்ப அமைப்புத்தான். தங்கள் பிள்ளைகள் மீது அளவிறந்து அன்பைக்காட்டும் பெற்றோர், எல்லோரையும் ஒருகாலத்தில் அதிகாரத்தில் மேய்த்து அந்தக் காலங்கள் வழக்கொழிந்து போய் தன் வார்த்தைகள் அம்பலத்தில் ஏறாததை நகைச்சுவையாக்கிபடி இருக்கும் ரிற்றாவின் தாத்தா, எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்தபடி/கேட்டபடி தனக்கான உலகில் இயங்கும் மாமா, வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் சேஷ்டைகள் செய்து வாங்கிக்கட்டிக்கொள்ளும் தாத்தா, அப்பாவின் மீதிருக்கும் கோபத்தில் திரைப்படம் பாரத்துக்கொண்டிருக்கும்போது அவரின் தொப்பிக்குள் சிறுநீர் கழிக்கும் ரிற்றா என்று இந்தப்படத்தின் குடும்ப அமைப்பும் அதன் உறுப்பினர்களும் நமக்கு நெருக்கமாகக்கூடியவர்கள். இப்படி இந்தப்பாத்திரங்களினூடாகவும், நிலப்பின்னணியினூடாகவும் ஒரு இத்தாலிய (கிராமத்தின்) வாழ்க்கை முறையை பெலினி மிக நேர்த்தியாக சித்தரிக்கின்றார்.


அதிலும் உணவருந்தும் ஒரு காட்சியில், அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ரிற்றாவின் பெற்றோருக்குள் சண்டை மூள்கிறது. பிள்ளைகள் மற்றும் குடுமப உறவுகள் -இவற்றையெல்லாம் கேட்டு மரத்துப்போன சூழ்நிலையில்- சண்டையினால் எந்தச் சலனமுமில்லாது தங்கள்பாட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 'இந்த மனுசனோடு என்னோடு வாழமுடியாது நான் சாகப்போகின்றேன்' என்று வேதனையோடு ரிற்றாவின் தாயார் குளிக்கும் அறைக்குள் சென்றுவிடுகின்றார். 'நீ செத்தால் நான் தனியே இருப்பேனா?' என்று ரிற்றாவின் தகப்பன் தன் வாயைக் கரங்களால் கிழித்து தற்கொலை செய்யப்போவதாய் அடம்பிடிப்பார் (மிகுந்த நகைச்சுவையுடன் பெலினி இதைக் காட்சிப்படுத்தியிருப்பார்). பிறகு தற்கொலை செய்து 'சாகமுடியாத' கொடுமையை தன் தலையில் கையால் அடி அடியென்று அடித்துக்கொண்டிருப்பார். திடீரென்று இதையெல்லாம் பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் என்ற உணர்வு வர, கோபத்துடன் மேசையிலிருக்கும் சாப்பாட்டை ரிற்றாவின் தகப்பன் தூக்கியெறிவார்.

எப்படி திருச்சபைகளின் மீதான தன் விமர்சனத்தை மெல்லிய நகைசுவையுடன் பெலினி காட்டினாரோ அதைப் போன்று குடும்பம் என்ற அமைப்பால் ஏற்படும் வன்முறையையும் இத்திரைப்படத்தில் வெளிப்படையாகக் காட்டுகின்றார். ரிற்றாவின் தகப்பனின் சகோதரர் ஒருவர் மனம்பிறழ்ந்தவராக இருப்பதும், அவரோடு சுற்றுலா போகின்ற வேளையில் மரம் ஒன்றில் ஏறி நின்றுகொண்டு ஒரு பெண் தனக்கு வேண்டும் என்று கேட்டு அவர் அடம்பிடித்து மரத்தை விட்டு இறங்காத இன்னொரு காட்சியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தனித்த ஒற்றை மரம், பின்னால் நீளும் வெறுமையான வானம், நீண்ட சமதரை என்று பல்வேறு குறியீடுகள் வரக்கூடியதாய் பெலினி அக்காட்சியை எடுத்திருப்பார்)

முஸோலினியின் பாஸிசக் காலத்திலேயே ரிற்றாவின் பதின்மம் இருக்கின்றது. குறிம்பிடும்படியான அரசியல்/இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடாமலே சும்மா சில வார்த்தைகள் முசோலினியைப் பற்றிப் பேசியதற்காகவே ரிற்றாவின் தந்தையார் சித்திரவதைக்குட்படுத்தப்படுகின்றார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நெடுநேரமாய் வீடு திரும்பாத கணவனை ரிற்றாவின் தாயார் தேடுவதும், சித்திரவதைக்குள்ளான அவரது உடலின் காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்து குளிக்கவைப்பதும் போன்ற காட்சிகள் -எத்தனை பிணக்குகள் இருந்தாலும்- அதற்கப்பாலிருக்கும் அற்புதமான மானுட நேசிப்பை ரிற்றாவின் பெற்றோரின் மூலம் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றது.


இப்படத்தில் பதின்ம வயதினருடைய வாழ்வியல்முறை இயல்புகெடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெடியங்கள் பாத்ரூமில் புகைபிடிப்பது, செக்ஸை பற்றி கிளுகிளுப்பாய் கதைப்பது, காரொன்றுக்குள் அமர்ந்துகொண்டு தமக்குப் பிடித்த பெண்களை நினைத்தபடி சுயமைத்துனம் செய்வது (அப்படி சுயமைத்துனம் செய்வதை அவர்கள் திருச்சபைக்குச் சென்று பாவமன்னிப்பு கேட்பது, அந்நிகழ்வை ஒருவித இன்பத்துடன் கேட்டு பாவமன்னிப்பு வழங்கும் மதகுரு போன்ற நுண்ணிய விமர்சனங்களும் அடங்கும்), தங்களை விட வயது கூடிய பெண்களின் உடல் அங்கங்களை விபரித்து தங்களுக்குள் மகிழ்ந்துகொள்வதென பதின்மர்களுடைய பருவம் இயல்பாய் விரித்து வைக்கப்படுகின்றது.

அவ்வூரில் எல்லோருடைய கனவுக்கன்னியாக இருக்கும் பெண் (Gradisca) முஸோலினியின் அதிகாரத்திலிருக்கும் அதிகாரியொருவருக்கு விடுதியொன்றில் தன்னைக் கொடுக்கின்றார். இறுதியில் அந்தப்பெண் அப்படியான ஒரு அதிகாரியைத் திருமணஞ்செய்து அவ்வூரைவிட்டே போகின்றார். அப்படிப் போகும்போது திரும்பி தன் ஊரைப் பார்த்து பூக்கொத்தை எறிவதும் அதையெடுக்கக்கூட ஒருவரும் இல்லாத தனிமையும், அந்தப்பெண் ஊரைவிட்டுப் போகும் காரை சின்னப்பையன்கள் மட்டுமே கொஞ்சத் தூரம் தூரத்திக்கொண்டிருக்கும் துயரமும் மனதை அசைத்துப் பார்க்கக்கூடியவை.

பெலினி, திருச்சபைகளையும், குடும்ப அமைப்பையும், முசோலினியின் பாஸிசத்தையும் ஒருவித எள்ளல்தொனியுடனே விமர்சிக்கின்றார். கடுமையான மொழியில்/காட்சிகளில் இவற்றை ஏன் முவைக்கவில்லை என்று பெலினியை நோக்கிக் கேட்கலாம் என்றாலும் இப்படம் ஒரு பதின்மனுடைய வயதில் விரிவதால் அவனுக்குள் எற்படும் பார்வைகளைத்தான் பெலினி காட்டுகின்றார் என்றும் வேறொருவர் பெலினியின் சார்பில் நின்று உரையாடவும்கூடும். படத்தில் பனி -பூக்களாய்- விழ ஆரம்பிக்கின்ற காட்சியும், அதுபோல வசந்தம் தொடங்குவதான காட்சியும் மிக அற்புதமானவை. 70 களில் எடுக்கப்பட்ட இப்படத்தில் இப்படி நுட்பமாக கமரா தன் கலைவண்ணத்தைக் காட்டுகின்றது என்று நினைக்கும்போது வியப்புத் தோன்றாமல் இருக்கமுடியாது.

படத்தின் ஆரம்பம், ஊரே சேர்ந்து ஒரு விழாவை உற்சாகமாய்க் கொண்டாடுவதில் ஆரம்பித்து, இறுதிக் காட்சி Gradiscaவின் திருமணம் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் மிகச்சொற்பானவர்கள் பங்குபற்றுவதுடன் முடிகின்றது. இங்கே Gradiscaவின் திருமணம் என்பதே வாழ்வின் வீழ்ச்சிக்கான குறியீடுதான். மெல்லியதாய் மழைவருவதும், ஒரு இசைஞன் இசைக்கும் வாத்திய இசை -அது- எவரும் அசட்டை செய்யாத நிசப்தத்தில் அமிழ்ந்துபோவதான இறுதிக்காட்சிகள் மனதைச் சலனமடையச்செய்பவை.

முக்கியமாய், எல்லோரும் தலையின் மேல் வைத்துக்கொண்டாடிக்கொண்டிருந்த பெண்ணை(Gradisca) முசோலினியின் ஆட்சியிலுள்ள அதிகாரி ஒருவர் திருமணம் செய்துகொண்டு அந்தப்பெண்ணை ஊரைவிட்டு அழைத்துச்செல்லும்போது, அந்த ஊரின் உயிர்ப்பும் மெல்ல மெல்லமாய் கரைந்துபோவதான உணர்வு எமக்கு வந்துவிடுகின்றது. மேலும், இதை இன்னொருவிதமாய் ரிற்றா தனது பதின்மத்திலிருந்து இளைஞனாக மாறுவதான காலத்துடன் இணைத்தும் பார்க்கக்கூடியது. பதின்மத்தைப் போல கொண்டாடக்கூடியதான ஒரு காலம் இனி இளைஞனாகையில் சாத்திமில்லை என்ற குறியீடாகவும் விளங்கிக்கொள்ளலாம்.

2.

என்னுடைய பதின்மம் ஓரிடத்தில் நிரந்தரமாய் கழியவில்லை. அப்படி ஓரிடத்தில் கழியாததால் பலதைத் தவறவிட்டிருக்கின்றேன் என்ற கவலையுமிருக்கிறது. பதின்மம் - யாழ், கொழும்பு, ரொரண்டோ என்று சிதறிப்போனதில், புதிய இடங்களுக்கு என்னைத் தயார்ப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடவே காலம் கழிந்ததால் பதின்மத்தைக் கொண்டாட முடியாமற்போய்விட்டது. அதைவிட பதின்மத்துக்குள் வருவதிற்குள்ளேயே போர் என்னைப்போன்றவர்களை பெரியவர்களாக அடித்து அடித்து பழுக்கச்செய்திருந்தது. போரே வாழ்வான காலத்தில் சுவாரசியமான விடயங்களுக்கும் ஊரில் (யாழில்) குறைவில்லைத்தான்.

எங்கள் ஊரிலும் எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தார். அவரின் பெற்றோர்கள் அப்போதே ஜரோப்பா நாடொன்றுக்கு குடிபெயர்ந்ததால் இவர் அவரின் தாத்தாவோடு வசித்துக்கொண்டிருந்தார். எங்கள் வீட்டிற்கு அருகில்தான் பாடசாலை. அங்கே பல்வேறு ஊர்களிலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார்கள். அப்படிப் படித்துக்கொண்டிருந்த ஒருவரோடு இவருக்கு காதல் முகிழ்ந்தது. எங்கள் வீடிருக்கும் ஒழுங்கையில் நின்று ஹொஸ்டலின் பின்பக்க மதிலால் இவர்களின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. இந்தப்பெண்ணுக்கு வெளிநாட்டுப் பயணம் சாத்தியமானபோது, காதலித்த பையனுடன் ஓடுவதற்குத் தீர்மானித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்தப்பெண் செமையாக அடிக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஒருநாள், நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது இவர் கிணற்றில் குதித்திருந்தார். நாங்களும் 'ஐயோ ...... அக்கா கிணற்றுக்குள் குதித்துவிட்டா, எல்லோரும் ஓடிவாங்கோ' என்று கத்தியபடி கிணற்றை நோக்கி ஓடியிருந்தோம். ஆனால் எங்கள் வீட்டுக்கருகில் இருந்த மற்றதொரு ஆழ்ப்பம் (ஆழம்) கூடவாயிருந்த கிணற்றுக்குள் விழாது ... அக்கா ஏன் இந்த ஆழம் குறைந்த கிணற்றில் குதிக்க முடிவுசெய்தார் என்பது விரிவாக விவாதிக்கக்கூடிய புள்ளிதான். பிறகு அந்த அக்கா கிணற்றிலிருந்து வெளியே வரமாட்டேன் என்று அடம்பிடித்ததும், கதிரையை எல்லாம் இறக்கி கயிறு கட்டி மேலே எடுத்தது என்று மிகவிரிவாகச் சிலாகிக்கக்கூடியவை (உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் வருகின்ற இதே கிணற்றில், வளாகத்தில் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் அண்மையில் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு மீட்கப்பட்டதையும் இங்கே சேர்த்து வாசிக்கவேண்டும்).

அதேபோன்று பதின்மம் ஆரம்பிக்க முன்னர் நடந்த நினைவில் என்றும் அகலமுடியாத சம்பவமும் ஒன்றுண்டு. இந்திய இராணுவ காலத்தில், இந்திய இராணுவமும், அதைச் சார்ந்து நின்று துணை (தமிழ்) இராணுவமும் எங்கள் அண்ணாவைக் கொண்டுபோய் சித்திரவதை செய்தது. அடியென்றால் செம அடி. அண்ணாவை எப்படி விடுவிப்பதென்று எல்லோரும் செய்வதறியாது திகைத்து நின்ற சமயம். ஒருமாதிரி ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்த எங்கள் உறவுக்காரர் மற்றும் சிலரின் முயற்சியால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். அண்ணா அடிகளுடன் திரும்பிவந்தபோதுதான், முதன்முதலாய் எனது பெற்றோர்கள் எங்களுக்கு முன்னால் அழுததைப் பார்த்திருந்தேன். உடலில் பட்ட சித்திரவதைகளுக்கு ஒழுங்காய் மருந்துகொடுக்க முடியாத காலம் அது. சாப்பிடுவற்காய் இருந்த சோற்றைச் சூடாக்கி துணித்துண்டுக்குள் கட்டி ஒத்தடம் கொடுத்ததாயும் நினைவு. அண்ணா எங்களுடன் தொடர்ந்திருந்தால், உயிருடன் பார்ப்பதே சாத்திமில்லை என்ற நிலையில், அவரை கஷ்டப்பட்டு பலாலியில் விமானம் ஏற்றி மாமியொருவர் வசித்துவந்த சிலாபத்திற்கு அனுப்பியிருந்தோம். அப்போதிருந்த பணநெருக்கடிக்காலத்தில் ஆயிரமோ ஆயிரத்து ஐநூறோ நாங்கள் சேகரிக்கப்பட்ட கஷ்டமும், அண்ணாவை பலாலி விமான நிலையத்திற்கு ஊரிலிருந்து எப்படி கவனமாய்க் காரொன்றில் கொண்டுபோய்ச் சேர்த்தோம் என்பதும் ஒரு சிறுகதையாக எழுதக்கூடிய சேதிகள்.

பெலினி சித்தரிக்கின்ற திரைப்படத்தைப்போலத்தான் எங்கள் பலரது பதின்மங்களும் துண்டு துண்டாக பல்வேறு திசைகளுக்குச் சிதறியிருந்தன. ஆனால் கொண்டாட்டத்தை விட, வேதனைகளும் வலிகளும் நிறைந்திருந்தவை அவை. இப்போதும் கூட பின் தொடரும் அத்துயரங்களிலிருந்து தப்பும் வழிதெரியாது அதை சாமர்த்தியமாய் வேறு விடயங்களில் புதைத்துவிட்டு புன்னகையைப் பலவந்தமாய் அணிந்திருப்பவர்கள் நாங்கள். ஆனால், எங்களைப்போன்ற பதினமங்களை கழிக்ககாதவர்கள், சொகுசான மேலைத்தேச இடங்களிலிருந்து (சிலவேளை இந்திய இராணுவத்தை அனுப்பிய தேசத்திலிருந்தும்) கறுப்பின மக்களுக்கு வெள்ளைக்காரர்கள் அறிவுரை கூறுவதுபோல மேலிடத்திலிருந்து 'மனிதர்களாகுங்கள்' என்று கீதாவுபதேசங்கள் தரும்போது, அடுத்த பிறப்பிலாவது(?) எங்களைப்போன்ற போர் நடக்கும் நாடுகளில் நீங்களும் பிறந்து உங்கள் வாழ்வைக் கழித்துப்பாருங்கள் என்று மனதிற்குள் சபித்துவிட்டு மெளனமாய் நகர்ந்து செல்வதைத் தவிர வேறு வழிகள் எங்களுக்கு இருப்பதேயில்லை.


*Amarcord - I remember என்று ஆங்கிலத்தில் அர்த்தம் வரக்கூடியது.