கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மைக்கல் ஒண்டாச்சியின் 'பூனையின் மேசை' -02

Sunday, May 06, 2012


புதிர்களின் பயணங்களும், திசைகள் தொலைத்த சிறார்களும் (தொடர்ச்சி)
The Cat's Table by Michael Ondaatjee


2.
கப்பல் சுயஸ் கால்வாயை அண்மிக்கும்போது இன்னும் திகிலான பல விடயங்கள் நிகழ்கின்றன. கொலைக் கைதியான நிமியார் தப்பிப்போகாமல் இருப்பதற்காய் இரண்டு சிஜடியினர் கப்பலிற்குள் இருப்பதை மைக்கல் கண்டுபிடிக்கின்றார். அதிலொருவர் ஹிக்ஸ் என்னும் ஒரு பிரித்தானியர். இன்னொருவர் பெரேரா என்பவர். ஆனால் பெரேரா என்ற பெயரைக் கொண்டவர் யாரென்று தெரியவில்லை. அவர் வேறொரு பெயரோடு கப்பலிற்குள் நடமாடிக் கொண்டிருக்கின்றார் என்பது மட்டும் சிறுவர்களுக்குத் தெரிகிறது. உளவாளிகள் இரண்டு வகையினர்; எல்லோருடனும் இலகுவாய்க் கதைத்து தங்களை ஜோவியலாக் காட்டிக்கொண்டு இரகசியங்களை அறிந்துகொள்பவர்கள் ஒரு வகையினர். மற்ற வகையினர் மிகவும் அமைதியாக இருந்து தங்கள் அடையாளங்களை மறைத்தபடி எல்லாவற்றையும் நோட்டமிட்டுக்கொண்டிருப்பவர்கள். இதில் பெரேரா எந்த வகையைச் சேர்ந்தவர் எனக் கண்டுபிடிப்பதில் தன் நேரத்தைச் செலவிடுகின்றார் மைக்கல்.

ஒருநாள் கும்மிருட்டில் சில குரல்கள் கதைத்துக் கொண்டிருப்பதை மைக்கல் கேட்கின்றார். அதில் ஒரு குரல் எமிலியினுடையதாக இருக்கின்றது. சிலருடைய உரையாடல்கள் நிகழ்கின்றன. சட்டென்று ஒருவர் கப்பல் தளத்தில் விழும் சத்தம் கேட்கின்றது. மைக்கலும் கஸிசியசும் நிசப்தமாக உறைந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எல்லாம் முடிந்து எல்லோரும் போனவுடன் சம்பவம் நடந்த இடத்துக்குப் போய் பார்க்கும்போது ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தபட்டு இறந்துகிடப்பதை இருளில் காண்கின்றனர். அதிர்ச்சியடையும் மைக்கலும், கஸிசியசும் தங்கள் அறைக்குள் அடைக்கலம் புகுகின்றனர்.

தங்களுக்கு எப்போதும் ஆறுதலாக இருக்கும் எமிலியும் இச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்டதால் மைக்கலுக்கு அவரிடமும் இதுபற்றிக் கதைக்கச் சங்கடமாக இருக்கிறது. இறுதியாய் ரமடீனின் அறிவுரையின்படி எமிலியுடன் கதைக்கும்போது அவருக்கு முதல் நாளிரவு நடந்தவை பற்றிக் குழப்பமான ஓரு சித்திரமே இருக்கின்றது. பின், இரவு இறந்துகிடந்த உடலைக் கண்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது உடலைக் காணவில்லை மட்டுமின்றி சிந்திய இரத்தத்துளிகள் கூட தடயமின்றி அழிக்கப்பட்டிருப்பதை மைக்கல் காண்கின்றார். பின்னாட்களில் தங்கள் பூனை மேசையில், அவ்வளவு அதிகம் பேசாத ரெயிலர் குணசேகராதான் இன்னொரு சிஜடியான பெரெரா என்பதை மைக்கல் கண்டறிகின்றார். இச்சம்பவத்தின் பின் ரெயிலர் குணசேகராவும் பூனை மேசையிலும், கப்பலிலும் இருந்தும் காணாமற் போய்விடுகின்றார். அவரைத்தான் அந்த நள்ளிரவில் யாரோ கொன்றிருக்கின்றார்கள்.

இதைவிட இன்னும் திகிலான சம்பவம் சுயஸ் கால்வாயைக் கப்பல் கடக்கின்றபோது நிகழ்கின்றது. அந்தச் சம்பவத்தினால் கப்பலில் இருந்த அனைவருமே ஆடிப்போகின்றனர். கைதியான நெமியார் தப்ப முயல்கின்றார். தன் தப்புதலுக்காய் அவர் ஒருவரைப் பயணக் கைதியாகின்றார். துப்பாக்கிகள் பல்வேறு கைகளில் முளைக்கின்றன. யாரை யார் கொல்கின்றனர், என்ன இறுதியில் நடக்கின்றன என்பது நாவலை வாசிப்பவருக்காய் விட்டுவிடலாம்.

இச்சம்பவம் நடந்தபின் கப்பல் சுயெஸ் கால்வாயைக் கடந்தபின் நாவலில் வளர்ந்த மைக்கலின் பார்வையில் கதை கூறப்படுகின்றது. மைக்கலினதும் நண்பர்களினதும் பிறகான இலண்டன் வாழ்வு கூறப்படுகின்றது. மைக்கலின் நெருக்கமான நண்பர் ரமடீன் நோயால் இறக்கின்றார். மைக்கலும் ரமடீனின் சகோதரியான மாஸியைத் திருமணம் செய்கின்றார். மைக்கல்-மாஸி இருவரின் திருமண வாழ்க்கை, எமிலியின் திருமணம் பற்றிய விரிவான சித்திரம் என நாவல் மேலும் நீளும்.

மாஸிதான் மைக்கலைச் சரியாகக் கண்டுபிடிக்கின்றார். இருவரினதும் திருமண உறவு நெருக்கடியாகும்போது, 'உனது கப்பல் பயணத்தில் நடந்த எதுவோதான் வளர்ந்த உன்னை மிகவும் பாதித்திருக்கின்றது' என மைக்கலைப் பார்த்து மாஸி கூறுகின்றார். அப்போதுதான் 'எதிர்மறையான விடயங்களைச் சிலர் எங்களுக்குள் ஏற்படுத்திவிட்டுப் போகின்றனர். அவர்கள் கட்டாயமாக எங்களுக்கு நன்கு தெரிந்தவர்களாக இருக்கவேண்டியதில்லை. ஒரு அந்நியராகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த எதிர்மறை விடயங்கள் எங்கள் வாழ்வை எப்போதும் பாதிக்கக்கூடியதாகக் கூட இருக்கலாம்' என்கின்ற புரிதலுக்கு மைக்கல் வந்தடைகின்றார். பின்னாட்களில் எமிலியை நீண்ட வருடங்களுக்குப் பின் மைக்கலுக்குச் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது. தங்கள் கப்பல் பயணத்தின்போது கண்டுபிடிக்க முடியாது தவறவிட்ட பஸில்களாய் இருந்த துண்டுகளைச் சேர்த்த முழுச் சித்திரத்தை உருவாக்க மைக்கல் முயல்கின்றார். அவர் தேடிய எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள் எமிலியிடமிருந்து வந்தனவா?

நாவலின் இறுதிப்பகுதி, மைக்கல் தன் தாயை இலண்டலின் சந்திக்கும்போது முடிகின்றது. அவரது தாய் மைக்கல் ஏழு வயதாக இருக்கும்போது இலங்கையிலிருந்து சென்றவர். கப்பல் கரையை அடையும்போது தன்னால் எப்படி தன் தாயை அடையாளங் காண்பதென்ற குழப்பம் ஏற்படுகின்றது. மைக்கல் கரையில் இறங்கிக் குழம்பித் தவிக்கும்போது, தாய் மைக்கலை அடையாளங் கண்டுகொள்கின்றார். எமிலியும் மைக்கலின் தாயோடு தனியே கதைக்கின்றார். மைக்கல் தாயிடம் எமிலி என்ன கூறினார் என்று கேட்கின்றார். எமிலி, 'இனி பாடசாலைக்குப் போவதற்கான நேரம்' என்று சொன்னதாய்த் தாய் கூறுகின்றார்.

3.
மைக்கல் ஒண்டாச்சியின் நாவல்கள் எப்போதும் மிக மெதுவாகவே தொடங்கும். சில பத்துப் பக்கங்களைத் தாண்டினாலே கதையைத் தொடர்ந்து வாசிக்கச் சுவாரசியம் வரும். ஆனால் 'கொழும்பில் இருந்து கப்பல் பயணம் தொடங்குகின்றது' என்று இந் நாவல் ஆரம்பிக்கும்போதே நமக்குத் தெரிந்த சூழலில் கதை நிகழ்கிறது என்பது இன்னும் நெருக்கமாய் உணர வைத்தது. சென்.தோமஸ் கல்லூரி பற்றிய விபரிப்பு, பொரலஸ்கமுகவில் மைக்கல் இருக்கின்ற வீட்டுச் சூழ்நிலை, சமையற்காரருடனும், அங்கே வீட்டுவேலைக்கு இருப்பவருடனும் இருக்கும் நெருக்கம், அவர்கள் மைக்கலுக்குக் காட்டும் புறவாழ்வியல்... என மைக்கல் ஒண்டாச்சி அழகாக விபரித்துச் சொல்கின்றார். மைனா என்கின்ற மைக்கலின் பாத்திரம், பதினொரு வயதில் இலங்கையை விட்டுச் சென்றாலும் தனக்கு இன்றும் எந்த நாட்டோடும் ஒட்டாத ஒரு நாடோடி வாழ்வே எஞ்சியிருக்கின்றது என்று கூறுகின்றது. இது தாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்த பலரும் தங்களுக்குள் பொருத்திப் பார்க்கக்கூடிய ஒரு முக்கிய செய்தியாகவும் இருக்கின்றது.

இந்நாவலுக்குள் திகிலூட்டும் பல விடயங்கள் நிகழ்ந்தாலும் இஃதொரு துப்பறியும் நாவலல்ல. சிறுவர்கள், எப்படி அவர்கள் அறிந்தோ அறியாமலோ பெரியவர்களின் உலகினுள் நுழைகின்றார்கள் என்பதே முக்கிய அம்சமாக இருக்கின்றது. சிலவேளைகளில் இந்தத் விடயங்கள் சிறுவர்கள் பார்வையில் இருந்து சொல்லப்படுவதால் 'திகிலூட்டும்' விடயங்களாய்த் தெரிகின்றதோ தெரியவில்லை. இதேவிடயம் வளர்ந்த ஒருவரின் பார்வையில் சொல்லப்பட்டால் அது வேறு மாதிரியாகக் கூட இருந்திருக்கலாம். சிலர் பெரியவர்களாக வளரும்போது அந்த மாற்றம் இயல்பாக நடக்கின்றது. சிலருக்கு அப்படி நிகழ்வதில்லை, அவர்கள் பலவற்றை விலையாகக் கொடுத்துத்தான் வளர்ந்தவர்களாகி விடவேண்டியிருக்கின்றது.

மைக்கல் ஒண்டாச்சி தனது அநேக நாவல்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு நாடுகளுக்கு நிலவியல் இடப்பெயர்ச்சி செய்வதைப் பற்றி ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். The English Patient இத்தாலியிலிருந்து பாலைவனத்திற்கும், Divesardo அமெரிக்காவிலிருந்து சட்டென்று பிரான்சிற்கும் இடம் பெயர்ந்து விடுகின்றன. இந்நாவலில் அவ்வாறான துல்லியமான இடப்பெயர்ச்சி சடுதியாக நிகழவில்லையெனினும், இலங்கையின் இருந்து புறப்படும் கப்பலில் நடக்கும் நிகழ்ச்சிகளிலிருந்து சுயெஸ் கால்வாயைக் கடந்தவுடன் சட்டென்று வளர்ந்தவர்களின் உலகிற்கு, இலண்டனுக்குச் சென்றுவிடுகின்றது. பின்னர் சிறிது காலம் கனடாவின் வன்கூவருக்கும் சென்றுவிடுகின்றது. இங்கு நிலப்பெயர்வை விட, ஒரு மனிதரின் வாழ்க்கைக் காலப் பெயர்வு சடுதியாக ஏற்படுகின்றது எனக் குறித்தலே சாலப் பொருத்தமாகும்.. Anil's Ghost பிறகு சுவாரசியமாக வாசித்த மைக்கல் ஒண்டாச்சியின் நாவல் The Cats' Table என்பதையும் கூறியாக வேண்டும். இக்கதையைப் போன்றே மைக்கலும் தன் பதினொராவது வயதில்தான் இலங்கையில் இருந்து இங்கிலாந்திற்குச் சென்றிருக்கின்றார் என்பது, மைக்கல் ஒண்டாச்சி தன் வாழ்வில் நடந்த கப்பல் கதையைத்தான் கூறுகின்றாரோ என்கின்ற மயக்கத்தை வாசிக்கும் நமக்குத் தரக்கூடும். புனைவொன்றில் நிஜங்களும் கற்பனைகளும் கலந்திருப்பது இயல்பானதே. உண்மைகளைப் பொய்கள் போலவும், நிகழாததை நிகழ்ந்துபோல நம்பும்படியாக எழுதும்போது நாவல் சுவாரசியமாகிவிடுகின்றது. அந்த வித்தை அறிந்த படைப்பாளி மைக்கல் ஒண்டாச்சி என்பது அவரைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

Oct, 2011.
நன்றி: காலம் -39வது இதழ்/2012
புகைப்படங்கள்: கூகுள் தேடல் ஊடு
(தேவகாந்தனிற்கு...)

புதிர்களின் பயணங்களும், திசைகள் தொலைத்த சிறார்களும்

Thursday, May 03, 2012

மைக்கல் ஒண்டாச்சியின் 'பூனையின் மேசை'
The Cat's Table by Michael Ondaatjee

1.
சிறுவர்களாக இருந்த நாம் எந்தக் கணத்தில் பெரியர்வர்களின் உலகினுள் பிரவேசிக்கின்றோம்? உடலில் ஏற்படும் மாற்றங்களைப் போல மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஸ்தூலமானதுமல்ல. அப்படியெனில் அந்த மாற்றம் பெரியவர்களாக வளர்ந்த நம்மால் நினைவுகொள்ளக்கூடியதாக இருக்கின்றதா? 'யுத்தகால இரவொன்றின் நெருக்குதல் நமது குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கி விடுகிறது' என போர்ச்சூழலில் குழந்தைகளின் நிலையை சிவரமணி பதிவு செய்திருக்கின்றார். மைக்கல் ஒண்டாச்சியின் 'பூனையின் மேசை' நாவல் மைக்கல் என்கிற பதினொரு வயதுச் சிறுவன் எப்படி பெரியவர்களின் உலகினுள் நுழைகின்றான் என்பதைப் பல்வேறு சம்பவங்களினூடாக விபரிக்கின்றது. மைக்கல் மட்டுமில்லை, அவன் வயதொத்த கஸிசியல், ரமாடின் போன்றவர்களும் மூன்று வாரங்கள் நீளும் கப்பல் பயணத்தினால் வளர்ந்தவர்களின் உலகிற்குள் விரும்பியோ விரும்பாமலோ அடித்துச் செல்லப்பட்டுகின்றார்கள்.

மைக்கல் எவரது துணையுமின்றி தனியே இங்கிலாந்திலிருக்கும் தாயை நோக்கி Orsonary எனும் பெயருடைய கப்பலில் பயணிக்கின்றார். மைக்கலுக்கு 'மைனா' என்கின்ற செல்லப்பெயரும் உண்டு. அது அவரின் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு பட்டப் பெயர். மைக்கல் கப்பலில் சந்திக்கும் இன்னொரு நண்பரான கஸிசியஸ், மைக்கல் படித்த சென்.தோமஸ் கல்லூரியில் ஒருவகுப்பு மேலே படித்தவர். மிகுந்த குழப்படிக்காரர்; பாடசாலை நிர்வாகத்தால் அவ்வப்போது கஸிஸியஸ் தண்டிக்கப்படுபவர். அதற்கு நேர்மாறான அமைதியான சுபாவமுடையவர் ரமடீன். ஆனால் ஆஸ்மா நோயால் அவதிப்படுபவர். இம்மூன்று சிறுவர்களும் கப்பலில் நண்பர்களாகின்றார்கள். ஒவ்வொருநாளும் புதிது புதிதாய் இடங்களையோ சம்பவங்களையோ கண்டுபிடிப்பதே சுவாரசியமானதென கப்பலின் திசைகளெங்கும் அலைந்து திரிபவர்கள். கப்பலும் அறுநூறுக்கு மேற்பட்ட பயணிகளைத் தாங்கக் கூடியவளவுக்கு மிகவும் பெரியது.

அநேக இடங்களில் இருப்பதைப் போன்று கப்பலிலும் அந்தஸ்தில் பல்வேறு நிலையில் உள்ளவர்களுக்கென பல்வேறு வகுப்புக்கள் இருக்கின்றன. உயர்தர வகுப்பிலிருக்கும் பகுதியிற்கு பிறர் போகமுடியாது. உணவருந்தும் இடத்திலும் இந்த வகுப்புப் பிரிவினைகள் இருக்கின்றன. (கப்பல்) கப்ரனின் உணவு மேசை அந்தஸ்து கூடியது. அந்த மேசையிலிருந்து வசதியில் குறைந்து குறைந்து போக இறுதியில் வருவது 'பூனை மேசை'. அங்கேதான் மைக்கல் உணவருந்துவது. அந்தச் சாப்பாடு மேசை அந்தஸ்தில் குறைந்ததென்றாலும் சுவாரசியமான பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள் சந்திக்கும் ஓரிடமாக இருக்கின்றது. மைக்கல் எனப்படும் மைனாவும் அவரது நண்பர்களும் அங்கேதான் பியானோ கலைஞரை, புறாக்களை தன் மேலங்கிக்குள் வைத்திருக்கும் பெண்மணியை, மூலிகைத் தாவரங்களை வளர்க்கும் ஆயுள்வேத வைத்தியரை, அவ்வளவு அதிகம் பேசாத தையற்காரரை, பழுதாக்கிப் போகும் கப்பல்களை நுட்பமாக உடைப்பவரை, இங்கிலாந்திற்கு ஆங்கிலம் கற்பிக்கப்போகும் ஆசிரியரை... எனப் பலரை அந்தப் 'பூனை' மேசையில் சந்திக்கின்றனர். பியானோக் கலைஞரான மாஸப்பா, இச்சிறுவர்களுக்கு பியானோ கற்றுக் கொடுப்பதோடு, 'நீங்கள் உங்கள் விழிகளைத் திறந்து வைத்திருந்தால் இந்தக்கப்பல் பயணம் மிகுந்த வீரதீரச் செயலுடையதாக இருக்கும்' என்கின்றார். பழுதடைந்த கப்பலை உடைப்பவரான நெவில், அந்தக் கப்பலில் பிறர் பார்க்கச் சாத்தியமில்லாத பகுதிகளை எல்லாம் இச்சிறுவர்களுக்கு எப்படிப் பார்ப்பதென வழிகாட்டுகின்றார். மூலிகைகள் வளர்க்கும் டானியல் கப்பலின் இருண்ட தளத்தில் தான் வளர்த்த மூலிகைகளை பத்திரமாக இங்கிலாந்திற்குக் கொண்டு செல்வதை மைனாவிற்குக் காட்டுகின்றார்.

கப்பலில் தம் வீரதீரச் செயல்களை மைனாவும் அவரது நண்பர்களும் செய்து கொண்டிருப்பது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் பல்வேறு அவ்வளவு எளிதில் அவிழ்க்க முடியாத மர்மக் கதைகளும் கப்பலிற்குள் அலைகின்றன. அதில் ஒன்று, மிகப் பயங்கரமான ஒரு கைதியைச் சங்கிலியால் பிணைத்து பலத்த பாதுகாப்புடன் இங்கிலாந்திற்கு இக்கப்பலில் கொண்டு செல்கின்றனர் என்பது. இந்தக் கைதி ஓர் ஆங்கிலேய நீதிபதியைக் கொன்றிருக்கின்றார். இன்னொன்று, சிலோனில் மிகப் பெரும் செல்வந்தரான ஒருவர் (விசர்)நாயால் கடிக்கப்பட்டு, நாய்க்கான குணங்கள் எல்லாம் அவருக்குள் ஏற்பட்டு, இப்போது இங்கிலாந்தில் சிகிச்சை பெறுவதற்காய் கப்பலில் பயணிக்கின்றார். அவரோடு அவரது மனைவி மகள் மட்டுமில்லாது, அவரைக் கப்பலில் பராமரிப்பதற்காய் ஓர் ஆங்கிலேய வைத்தியர், ஓர் உள்ளூர்(ஆயுள்வேத) வைத்தியர் போன்றவர்களும் பயணிக்கின்றனர். இந்தச் செல்வந்தர் ஒருமுறை ஒரு புத்தபிக்குவை அவமதிக்க, அந்தப் பிக்குச் சாபம் போட்டுத்தான் விசர் நாய் இவரை எதிர்பாராத தருணத்தில் கடித்ததென்ற செவி வழிக்கதையும் மைனாவிற்குத் தெரிகிறது.

மைனா இப்பயணத்தின்போது எமிலி என்கின்ற தன் தொலைதூரச் சொந்தக்காரியையும் சந்திக்கின்றார். பதினெட்டு வயதிலிருக்கும் எமிலி மீது மைக்கலுக்கு நேரில் சொல்ல முடியாத 'மெல்லிய காதல்; இருக்கிறது. ஆனால் எமிலி காதல் வயப்பட்டிருப்பதோ, கப்பலிலிருப்பவர்களை மகிழ்விக்க என வந்த சேர்க்கஸ் குழுவிலிருக்கும் ஓர் ஆண் மீது. இந்தச் சேர்க்கஸ் கூட்டத்தோடு வாய்பேச முடியாத சிறுமி ஒருத்தியும் பயணிக்கின்றார். அந்தச் சிறுமிக்கும் இங்கிலாந்து கொண்டு செல்லப்படும் கைதிக்கும் இடையில் என்னவிதமான உறவிருக்கின்றது என்பது நாவலில் இருக்கும் இன்னொரு சுவாரசியமான முடிச்சு. எல்லோருடனும் தான் தோன்றித்தனமாய் நடந்து கொண்டிருக்கும் கஸிசியஸிற்கு இச்சிறுமி மீது ஒரு சகோதர வாஞ்சை இருப்பதுகூட சற்று வியப்பானதுதான்.

ஒருநாள் கப்பலிலிருந்து அச்சிறுமி கடலினுள் விழும்போது கஸிஸியஸ் மிகவும் கலங்குகின்றான். பின்னாளில் பெரியவராக வளர்ந்த மைக்கல் இக்கதையைக் கூறும்போது, கஸிஸியஸ் இந்தத் தருணத்தில்தான் குழந்தைமையின் களங்கமின்மையிலிருந்து, வளர்ந்தவர்களின் உலகிற்கு நுழைந்த இடம் என எண்ணிக்கொள்கின்றார். கஸிஸியஸ் ஓர் ஒவியனாக மாறியதையும் மைக்கல் பின்பு அறிகின்றார். ஆனால் 50களின் நடுப்பகுதியில் நிகழ்ந்த கப்பல் பயணத்திற்குப் பின், ஒருபோதும் மைக்கல் கஸியஸைச் சந்திக்கவில்லை. இப்போது தான் எழுதும் இந்த நூலை ஓர் அறிமுகமாகக் கொண்டு, எங்கிருந்தாலும் கஸிசியஸ் தன்னைச் சந்திக்க வரலாம் என்ற அழைப்பையும் 'பூனையின் மேசை' நாவலினூடு விடுகின்றார். ஆம், பதினொரு வயது மைக்கல் என்னும் மைனா இப்போது ஒரு எழுத்தாளராக மாறியும் விட்டார்.

கப்பல் ஏடன் துறைமுகத்தை அடையும்போது, கப்பலில் இருந்தவர்கள் கரைக்குப் போகின்றார்கள். துறைமுகக் கடைகள் எங்கும் ஓடித் திரியும் மைனாவிற்கும் அவரின் நண்பர்களிற்கும் ஒரு கடைக்காரர் இலவசமாக நாயொன்றைக் கொடுக்கின்றார். ஆனால் நாயைக் கப்பலிற்குள் கொண்டு செல்ல விடமாட்டார்கள் என்பதை அறிந்த மைனா, அதில் அக்கறை காட்டவில்லை. கப்பலில் மீண்டும் எல்லோரும் ஏறும்போது பியானோக் கலைஞர், கப்பல் பயணத்தின் இடைநடுவில் இறங்கிப் போய்விட்டார் என்று தெரிகிறது. நீண்டகாலமாக பல்வேறு கப்பல்களில், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்த மாஸப்பா ஏன் ஏடனில் இறங்கிப் போனார் என்பதற்குப் பலரும் பல காரணங்களைக் கூறுகின்றார்கள். ஆனால் எவருக்கும் தெளிவான விடை தெரியவில்லை.

கரையிலேயே விட்டு வந்த நாயை, கஸிசியஸ் நுட்பமாக கப்பலிற்குள் எடுத்து வந்ததை மைக்கல் கண்டறிகிறார். வேறு எவருக்குந் தெரியாமல் நாயை கஸிசியஸ் அறையில் வைத்து இம்மூவரும் பராமரிக்கின்றனர். தமக்கு 'பூனையின் மேசை'யில் தரப்படும் உணவுகளை கள்ளமாய்ப் பதுக்கிக்கொண்டு வந்து நாயிற்குக் கொடுக்கவும் செய்கின்றார்கள். ஒருநாள் இவர்கள் அறையை விட்டு வெளியே ஓடிப்போகும் நாயை இவர்கள் துரத்திச் செல்கின்றார்கள். ஒளிந்துபோகும் நாய், ஏற்கனவே நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருந்த செல்வந்தரான சேர் ஹெக்டரைக் கடித்ததைக் கண்டு பதற்றமடைகின்றார்கள். அடுத்த சில மணித்தியாலங்களில் சேர் ஹெக்டர் இறந்துவிட்டார் என்ற செய்தி கப்பலுக்குள் பரவுகின்றது. நாயும் காணாமற் போகின்றது. வேறு எவருக்கும் தம் நாய் தான் சேர் ஹெக்டரைக் கடித்ததென்று தெரியாவிட்டாலும், ஒரு கொலையைச் செய்துவிட்ட குற்றத்துடன் இச்சிறுவர்கள் பதறத் தொடங்குகின்றார்கள். ஒருநாள் குற்றத்தின் குறுகுறுப்புத் தாங்கமுடியாமல் நடந்த கதையை மைக்கல் எமிலியிடம் கூறிவிடுகின்றார். எமிலியும் மைக்கலையும் அரவணைத்து 'அது முடிந்தபோன கதை, இனி கவலைப்பட ஏதுமில்லை. ஆனால் என்னிடம் கூறுவதுபோல வேறு எவருக்கும் கூறிவிடாதே' என அறிவுரை கூறுகின்றார்.

(இன்னும் வரும்...)
Oct, 2011
நன்றி: காலம் -39வது இதழ்