கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பியானிப்பூ (Peony) குறிப்புகள்

Wednesday, July 21, 2021

 

 1.

அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில் எம்.எஸ்செகோவின் வாழ்வு 44 வருடங்கள். அவர் மறைந்துகூட இப்போது ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அவரது கதைகளை இன்று வாசிக்கும்போதும் காலாவதியாகாது இருக்கின்றன. 'நாயுடன் நடந்த பெண்' செகோவின் பிரபல்யம் வாய்ந்த கதை. அதில் வரும் பாத்திரம் அன்னா என்ற பெயரில் இருப்பதால் மட்டுமின்றி, அந்தக் கதையின் சம்பவங்கள் பலதும் எனக்கு டால்ஸ்டாயின் 'அன்னா கரீனா'வை ஞாபகப்படுத்தியபடி இருந்தது (ஆங்கிலத்தில் ஏற்கனவே வாசித்திருந்தேன்). திருமணம் செய்த ஒரு பெண் விடுமுறைக்கு வரும்போது அவர் மீது காதலில் விழும் ஒரு ஆணின் கதை இது. பிறகு அவன் அந்தப் பெண்ணைத்தேடி அவர் வாழும் நகரத்துக்குப் போவதாய்க் கதை நீளும். இது விளாடீமிர் நபகோவுக்குப் பிடித்த செகோவின் கதைகளில் ஒன்று. இந்தக் கதையை செகோவ் எழுத ஏதும் காரணமிருக்கின்றதா என சற்று ஆராய்கின்றபோது இது செகோவின் வாழ்வில் நடந்த கதையென்றும், அந்தப் பெண்ணே செக்கோவ் பின்னர் திருமணம் செய்த ஒல்கா என்பதையும் அறியமுடியும்.


இதேபோல இன்னொரு கதையான 'சந்தோசமான மனிதன்' சுவாரசியமான ஒன்று. திருமணம் செய்த ஒருவன் ரெயினில் வருகின்றான். அவன் தற்செயலாக ரெயினின் வேறொரு பெட்டியில் தனது நண்பரொருவனைக் காண்கின்றான். அவனிடம் தான் திருமணஞ்செய்துவிட்டேன், தான் மிகவும் ஒரு சந்தோசமான மனிதன் என அடிக்கடி சொல்லிக்கொள்கின்றான். தன்னால் விரும்பியபோது சந்தோசத்தை உருவாக்கமுடியும் என்று சொல்லி நண்பனை மட்டுமில்லை அந்த ரெயின் பெட்டியில் இருக்கும் அனைவரையும் உற்சாகப்படுத்துகின்றான்.


இதற்கு முன் அவன் ஒரு தரிப்பிடத்தில் ரெயின் நின்றபோது மது குடிப்பதற்காக இறங்கி சில குவளை மது அருந்த ரெயினும் புறப்பட இறுதி நேரத்தில் ரெயினுக்குள் ஏறியிருக்கின்றான். இதைக் கூறிவிட்டு நண்பனிடம் தனக்காய்க் காத்திருக்கும் மனைவியைக் காண இன்னொரு பெட்டிக்குப் போகும்போதுதான், அந்த மகிழ்ச்சியான மனிதனுக்கு தான் பிழையான எதிர்ப்புறத்தில் வந்துகொண்டிருக்கும் ரெயினுக்குள் அவசரத்தில் ஏறிவிட்டேன் என்பது புரிகிறது. முட்டாள் முட்டாள் எனத் தன்னைத் திட்டிக்கொள்கின்றான். சந்தோசத்தை தன்னால் தானே உருவாக்கமுடியும் என்று சொல்கின்றவன் இப்போது சோர்ந்து போகின்றான். அந்த ரெயினுக்குள் இருக்கும் மற்ற மனிதர்கள் அவனுக்கு அடுத்து என்ன செய்கின்றார்கள் என்பது கதை.


செகோவிடம் இருந்து எப்படி எளிமையான கதைகளைச் சொல்வது என்பதை அறிந்து கொள்வதைப் போல, அந்த எளிமையிலிருந்து நம்மைப் பாதிக்கச் செய்யும் கதைகளையும் எழுதமுடியும் என்பதையும் கற்றுக்கொள்ளமுடியும். ஒரு சிறு உலகத்திற்குள் நாம் சுழன்று கொள்ளாது அல்லது அதுதான் 'மோஸ்தர்' என்று நம்பாது, வெளியே வந்து எப்படி நாம் வெவ்வேறு பின்னணியில் இருந்து மனிதர்களின் கதையைச் சொல்லலாம் என்பதற்கு செகோவ் நமக்கு நல்லதொரு உதாரணமாக இருக்கின்றார்.


எம்.எஸ்(எம்.சிவசுப்பிரமணியன்) நேர்த்தியாக இந்தக் கதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கின்றார். என்ன சிலவேளைகளில் தமிழ் வாசகர்களுக்கு விளங்கவேண்டும் என்பதற்காய் மதுக்கடைகளையெல்லாம் கள்ளுக்கடைகளாக்கிவிடும்போது. ரஷ்யாவில் கள்ளுக்கடைகளா என திகைப்பு வந்தாலும் எதுவென்றாலும் போதை போதைதானேயென அதையும் இரசிக்கமுடிகிறது.2.


மெளன வாக்கிய மாலை (கவிதை-காண்பியம்-தியானம்) - யோகிஆன்மீகத்தை வியாபாரப்படுத்தப்பட்ட மதங்களுக்குள்ளும், அதைப் பிரதிநிதிப்படுத்துகின்றோம் என்கின்ற போலிகளின் பேரிச்சலுக்குள்ளும் இடையில் இருந்து பேசுவது என்பது மிகவும் கடினமானது. மேலும் உள்ளுணர்ந்து கொள்வதை எல்லாம் எழுத்தாகவோ/பேச்சாகவோ வைக்கும்போது கூட அவற்றின் சாராம்சம் இழந்துபோகும் ஆபத்தும் உள்ளது. விசர்ச் செல்லப்பா எனப்படும் செல்லப்பா சுவாமிகள் பேசியது மிகக்குறைவு. ஏன் அவரின் தொடர்ச்சியெனப்படும் யோகர் சுவாமிகள் கூட அவ்வளவு பேசவில்லை. மிகவும் குறைவாகப் பேசிய ரமணர் கூட, நான் யார் என்றே தொடர்ந்து அவரைத் தேடி வந்தவர்களிடம் கேள்விகளாகக் கேட்க வைத்தவர். விசிறி சாமியார், தன்னைப் பற்றி வரும் ஓரிரு வரிகளை தொடர்ந்து மனனம்/பராயாணம் செய்தாலே போதும் என்று சொல்லியபடி தன்னையொரு பிச்சைக்காரன் என்று அறிவித்துக்கொண்டவர்.


அதைபோலத்தான் ஆன்மீகத்தை எளிதான வார்த்தைகளில் அல்லது ஏற்கனவே தேய்வழக்காகிப்போன சொற்களில் பேசும்போது நமக்குப் பெரும்பாலும் அர்த்தத்தைத் தராது போய்விடும் நிலைமையும் உண்டு. ஸென்னில் மலையைப் பார்க்கும்போது முதலில் மலை தெரியும், பிறகு அது இல்லாது போகும், ஞானம் கிடைத்தபின் மலை மலையாகவே தெரியும் என்று சொல்லும் கதை உண்டு. மலை மலையாகத் தெரிவதற்கு ஏன் நாம் இவ்வளவு கஷ்டப்படவேண்டும் என்று உடனே ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால் அந்த transformation - மலை/மலையில்லாது போதல்/மீண்டும் மலை தெரிதல்- என்பதற்கு சிலவேளைகளில் ஒரு ஆயுளே நமக்குப் போதாமல் கூடப் போகலாம். ஆகவே எளிமை என்பது எப்போதும் ஒரே 'எளிமை'யல்ல.


அவ்வாறுதான் யோகியின் கவிதைகளை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது. யோகி தன்னை முதலில் ஆன்மீகவாதியாக முன்வைக்க விரும்புகிறார் என இந்தத் தொகுப்புச் சொல்கின்றது. அவரின் கவிதைகள் எளிமைபோல, ஏற்கனவே பழக்கப்பட்ட வார்த்தைகளுக்குள் வந்துவிழுவதால் நாம் சாதாரணமாக வாசித்து கடந்துகூடப் போய்விடலாம். ஆனால் அவருக்கு அந்தச் சொற்கள் தரும் மெளனமும் ஆழமும் மிக நீண்டவையாக இருக்கலாம்.


அவருக்கு ஒத்தவரிசைகளில் பயணித்துக்கொண்டிருப்பவர்கள் அந்த சொற்களை அதன் மேலோட்டமான அர்த்தங்களைத் தாண்டி வேறு அர்த்தங்களை அறிந்துகொள்ளவும் கூடும். இந்த நூல் அழகான வடிவமைப்பில் இலங்கையிலிருந்து வெளிவந்திருக்கின்றது. கவிதைகளை அப்படியே ஒரு நீண்ட ஒற்றையாக மாற்றிவிட, அதன் மறுபக்கத்தில் காண்பியக் காட்சிகள் விரிகின்றன.3.

அயல் பெண்களின் கதைகள் - (சிங்களத்திலிருந்து தமிழில் எம்.ரிஷான் ஷெரீப்)


எனக்கு ஒரு சிங்கள நண்பர் இருக்கின்றார். அவரிடம் அவ்வப்போது இலக்கியம் சார்ந்து பேசுவதுண்டு. அண்மையில் கத்யானா அமரசிங்ஹாவின் 'தரணி' வாசித்துவிட்டு என்ன ஒரு நாவலென வியந்துகொண்டிருந்தார். அதற்கு அவர் சிங்களத்தில் ஒரு வாசிப்பும் எழுதியிருந்தார். தமிழிலும் 'தரணி' வந்திருக்கின்றதென்று நான் கூறியபோது, விரைவில் வாசித்துவிட்டு வா, நாம் அதைப் பற்றிப் பேசுவோம் என்றார்.


அந்தப் புத்தகம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் ரிஷான் ஷெரீப் சிங்களத்திலிருந்து தமிழாக்கம் செய்திருந்த 'அயல் பெண்களின் கதைகளை' கடந்தமுறை சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிவந்திருந்தேன். 5 சிங்களப் பெண்களின் 9 கதைகள் இருக்கின்றன. கத்யானாவின் 'நட்சத்திரப் போராளி', தஷிலா ஸ்வர்ணமாலியின்' பொட்டு', சுநேந்ரா ராஜ கருணாநாயகவின் 'குறுந்தகவல்' எனக்குப் பிடித்தமான கதைகள். ஒருவகையில் இந்தக் கதைகள் மூன்றும் தமிழ் மக்களைப் பேசுகின்றவையுங்கூட. எப்படி இந்தப் பெண்கள் நுட்பமாக கதைகள் எழுதுகின்றார்கள் என்பதோடு, நமக்கு நெருக்கமாய் நம்மைப் பற்றிய கதைகளைச் சொல்கின்றார்கள் என்பதும் சற்று வியப்பானது. போர் அனுபவங்கள் நிறைந்த தமிழ் மக்களாகிய நாம் எத்தனை விரிவான அனுபவங்கள் இருந்தாலும் ஏனின்னும் இவர்கள் அளவுக்கு நம்மால் கதைகளை வேறொரு பாதையில் நின்று சொல்லமுடியவில்லை என்ற ஏக்கமும் இவர்களை வாசிக்கும்போது வருகின்றது.


சிங்களப் பெண்களின் கதைகளுக்கு தொடர்பில்லாத இந்திய நகரத்துப் பெண்களின் அட்டைப்படம் ஏன் தெரிவுசெய்யப்பட்டது என்பது மட்டும் புரியவில்லை. இது எனக்கான கேள்வி மட்டுமில்லை, இந்த அட்டையைப் பகிர்ந்தபோது என் சிங்களத் தோழியும் இதையே கேட்டார். அதுபோல அவரும் நமது தமிழ்க்கதைகளை வாசிக்க ஆர்வமாகவே இருக்கிறார் (தமிழினியின் கதைகள் தவிர வேறு எதுவும் அவருக்குக் கிடைக்கவுமில்லை). சிங்களத்திலிருந்து தமிழுக்கு வருகின்ற மாதிரி, தமிழிலிருந்து சிங்களத்துக்கும் நேர்த்தியான மொழிபெயர்ப்புக்களை யாரேனும் தனித்தோ/கூட்டாகவோ செய்யலாம். இல்லாவிட்டால் ஒற்றைவழிப் பயணம் போல நாம் மட்டுமே நம்மோடு பேசிக் கொண்டிருப்பதைப்போல ஆகிவிடும்.

.................................


(Feb 23, 2021)

Baggio: The Divine Ponytail

Thursday, July 15, 2021

1.

எனக்கு நினைவு தெரிந்த முதலாவது உலகக்கோப்பை உதைபந்தாட்டம் என்றால் அது 1994 இல் நிகழ்ந்த ஆட்டங்களாகும். அப்போது நாங்கள் மட்டுமில்லை எங்கள் பாடசாலையும் இடம்பெயர்ந்து இணுவில்/மருதனார்மடம் போன்ற இடங்களில் இயங்கிக்கொண்டிருந்தது.  அப்போது தொலைக்காட்சி, ஏன் ரேடியோ வசதி கூட எங்களிடம் இருக்கவில்லை. மின்சாரமே தடைபட்டு மண்ணெண்ணெய் விளக்குகளில் படித்துக்கொண்டிருந்த நாங்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பது கூட அதிகந்தான். ஆக, உலகக்கிண்ண உதைபந்தாட்ட விபரங்களைப் பார்க்க பத்திரிகைகளை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த காலமது .


அதேசமயம் மருதனார்மடத்தில் எங்களுக்குத்தெரிந்த வீட்டில் மட்டும் ஜெனரேட்டரின் உதவியுடன் இந்த உதைபந்தாட்ட ஆட்டங்களை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர். அது எங்களுக்கு உதைபந்தாட்ட பயிற்சியாளராக இருந்த றொகானின் வீடு. அவர் எங்கள் பாடசாலை அணிக்கு விளையாடிய காலங்களில் எங்கள் பாடசாலை அணி அகில இலங்கை சாம்பியன்ஸாக வந்திருந்தது.  றொகான் பின்னர் வன்னிக்கு இடம்பெயர்ந்து புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பில் முக்கியமான ஒருவராக இருந்து காலமானவர். 


அதேபோல, நான் 15 வயதுக்குட்பட்ட எங்கள் பாடசாலை கிரிக்கெட் அணிக்கு நான் தலைமை தாங்கியபோது யாழ் இந்துக்கல்லூரிக்கு புலிகளின் முக்கிய அரசியல்பொறுப்பாளர்களின் ஒருவராக இருந்த யோகி பயிற்சியாளராக இருந்தார். மாத்தையாவின் பிரச்சினைகள் நிகழ்ந்து, புலிகள் அவரைப் பதவியிறக்கி, இயக்கத்திலிருந்தும் வெளியேற்றியபோது அவர் இப்படி பயிற்சியாளராகப் புதிய வடிவம் அன்று எடுத்திருந்தார்.


றொகானின் வீட்டில் உதைபந்தாட்டங்களைப் பார்க்க விரும்பினாலும், இரவுகளில் அல்லது விடிகாலைகளில் நடக்கும் ஆட்டங்களை நேரடியாகப் பார்க்க எனக்கு அன்று சந்தர்ப்பம் வரவில்லை. நாங்கள் வேறு ஊரில் அப்போது இடம்பெயர்ந்து வசித்துக்கொண்டிருந்தோம். போர்க்காலம் வேறு. ஆனால் எங்களில் ஒரு நண்பன் மட்டும் அவரின் வீட்டிற்கருகில் இருந்ததால் அவனுக்கு ஆட்டங்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. ஆகவே அவன் சுடச்சுட அடுத்தநாள் காலையில் எங்கள் வகுப்பில் இரவு நடந்த ஆட்டங்களைப் பற்றிச் சுவாரசியமாகச் சொல்லிக்கொண்டிருப்பான். நாங்கள் வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருப்போம்.


இன்றைக்கு மட்டுமில்லை அன்றைக்கும் எனக்கு இத்தாலி அணி பிடிக்காத அணி. என்றுமே பிடிக்காத இன்னொரு அணியென்றால் அது இங்கிலாந்து (இங்கிலாந்து இரசிகர்கள் மன்னிக்க). அன்றிலிருந்து இற்றைவரை பிரேஸிலின் தீவிர இரசிகன் நான். அடுத்து ஆர்ஜெண்டீனா, மற்றைய இலத்தீன் அமெரிக்க நாடுகள் என்றவகையில் என் விருப்பப்பட்டியல் நீண்டபடி போகும். 


1994 இறுதி ஆட்டம் பிரேசிலுக்கும், இத்தாலிக்கும் நிகழ்கிறது. அன்று இரண்டு 'சுப்பர் ஸ்டார்களான' பிரேசிலின் ரொமாரியோவும், இத்தாலியின் ரொபர்தோ பாஜ்ஜியோவும் களத்தில் நிற்கின்றார்கள். இவர்களின் முழுநீள வர்ணப்படங்கள் அன்று sports starஇல், வந்து அவற்றை சேகரித்து வைத்ததாகவும் நினைவு.


இதுவரை எந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் நிகழாதபடிக்கு, அன்றைய ஆட்டம் சமநிலையில் முடிந்து Penalty Shoot outஇற்குப் போகின்றது. இத்தாலிய நட்சத்திரம் ரொபர்தோ பாஜ்ஜியோ தனது உதையை கோல் கம்பத்திற்கு மேலாக அடித்ததால் பிரேஸில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்கின்றது. ஒரு பிரேசில் இரசிகனாக அது எனக்கு மகிழ்ச்சி. 


பிறகு பிரேசிலின் ஆட்டங்கள் ஒவ்வொன்றையும் இரசித்துப் பார்த்துக் கொண்டாடித் தீர்த்தது 2002 இல் பிரேசில் உலக்கோப்பையை வென்றபோதாகும். அதன் பிறகு நிகழ்ந்ததெல்லாம் சோகக் கதை. சரி அதை  ஏன் இப்போதைக்கு  நினைப்பான். நெய்மார் விளையாட்டுக் களங்களில் சுருண்டு விழுவதெல்லாம் விஜய் படத்தில் வில்லன்கள் அடிவாங்கி சுருண்டுவிடுவதை விட மிகச்சிறந்த நடிப்பென இத்தாலிய/இங்கிலாந்து இரசிகர்கள் சொல்லி எள்ளல் செய்ய வந்துவிடுவார்கள். வேண்டாம், அது  பொல்லாத வினை!


2.

ஒரு நட்சத்திரமாக 1994இல் மின்னிய ரொபர்த்தோ பாஜ்ஜியோ எப்படி அந்தத் தவறான உதையினால் ஒளியிழந்த நட்சத்திரமாகப் போனார் என்பது நாம் அவ்வளவு அறியாதது. அதை மட்டுமில்லாது ஒரு நட்சத்திரமாக ரொபர்த்தோ மின்னியது, அதன் பின் நிகழ்ந்த சரிவுகள், இறுதியில் எப்படி இத்தாலி மக்களிடையே மறக்கப்படாத ஒருவராக ஆகினார் என்பதை இந்தப் படத்தைப் பார்க்கும்போது தெரியும். ஏற்கனவே கூறியதுமாதிரி நான் ஒரு இத்தாலிய அணி இரசிகனல்ல. ஆனால் ரொபர்தோவும்,  அநேக பிரேசிலிய ஆட்டக்காரகளைப் போல, வறிய/எளிய குடும்பங்களிலிருந்து வந்தாரோ அப்படி வந்திருக்கின்றார் என்பதும், தன் தனிப்பட்ட திறமைகளால் இந்தளவுக்குப் பிரகாசித்தார் என்பதும் என்னை இப்போது வசீகரிக்கின்றது என்பதும் உண்மை. 


1994 உலகக்கிண்ணப் போட்டியின்போது அவர் தொடக்கத்தில் ஒரிரு ஆட்டங்கள் ஆடவில்லை. சில ஆட்டங்களில் இடைநடுவில் ஆட்டகளத்திலிருந்து அவரது விருப்புக்கு மாறாக எடுக்கப்பட்டிருந்தார் என்பதும், அவருக்கும் பயிற்சியாளருக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளும் இந்தத் திரைப்படத்திலிருந்து வெளிப்படையாகத் தெரியவருகின்றன. 1994 அந்த இறுதி உதை அவரை ஒரு தோல்வியின் நாயகனாக/வீழ்ச்சியுற்ற வீரனாக உள்ளே அழுத்தி உதைபந்தாட்ட ஆட்டங்களிலிருந்து சில வருடங்களுக்கு விடுபடச்செய்கிறது. ஒரு தவறான உதை ஒரு வீரனை என்னவெல்லாம் செய்துவிடக்கூடும் என்பதற்கு ரொபர்தோ நல்லதொரு உதாரணம்.


அடுத்த உலகக்கிண்ணத்தில் (1998) விளையாடினாலும்,  தனது மீள்வருகையை மீண்டும் அணியில் உறுதிசெய்ய கடுமையாகப் பயிற்சிசெய்து 2002 உலகக்கிண்ணப்போட்டியில் பங்குபெற விரும்பியபோது அப்போதும் பயிற்சியாளர் ஒருவரால் ரொபர்தோ தெரிவு செய்யப்படுவதிலிருந்து விலக்கப்படுகின்றார்.  இத்துடன் அவர் இத்தாலிக்கு ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொடுக்கும் கனவும் கலைந்து போகின்றது. இவ்வாறு இருந்தும் அவர் ஒருகாலத்தில் நட்சத்திரமாக மின்னினார் என்பதை ஒருவரும் மறுக்கப்போவதில்லை. 


இதையெல்லாவற்றையும் விட இந்தத் திரைப்படத்தில் என்னைக் கவர்ந்த விடயம், ரொபர்தோ தன் இளமைக்காலத்திலேயே புத்தரைப் பின் தொடர்பவராக தன்னை மாற்றிக்கொண்டமையாகும். அவர் தன் தோல்விகளிலிருந்து மீள்வதுகூட பயணம் முக்கியமே தவிர இலக்கை அடைதல் அவசியமில்லை என்கின்ற லா-சூ சொல்கின்ற வார்த்தைகளினூடாகத்தான் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும்.


மரடோனாவுக்கு காலம் உலகக்கிண்ணக் கோப்பையை மனது நிறைந்து அவரது 'பொன் கரங்களுக்கு'க் கொடுத்தது. அவருக்கு நிகரான வீரனான மெஸ்ஸிக்கு இன்னும் அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கவில்லை. ரொபர்தோவுக்கும் அந்தக் கனியைச் சுவைக்கக் கொடுக்காது காலம் அவரை களத்திலிருந்து நகர்த்தி விட்டிருக்கின்றது. 


94இல் எனது பெருமைக்குரிய நட்சத்திர வீரன் பிரேசிலின் ரொமாரியோ. ஆனால்  ஒருவன் சிறந்த வீரன் என்பதை நிரூபிக்க அவருக்கேற்ற மிகச்சிறந்த எதிராளி களத்தில் விளையாட வேண்டும். அந்த மிகச்சிறந்த எதிராளியாக ரொபர்தோ பாஜ்ஜியோ எதிர்முனையில் அன்று இருந்தார். அந்தவகையில் ரொபர்தோ மீது மதிப்பிருக்கிறது. மேலும் தோல்வியுற்றவர்களே என்னை வசீகரிப்பவர்கள். வென்றவர்களை விட எங்களுக்குச் சொல்வதற்கு அவர்களிடம் சிறந்த பாடங்களும் இருக்கும்.  எனக்கு நெருக்கமுடைய ஒருவராக ரொபர்தோவை இந்தக் காலத்தில் நினைத்துக் கொள்கிறேன்.


************


(மே 30, 2021)

Mr. K (சிறுகதை)

Saturday, July 03, 2021

 

Mr. K


-இளங்கோ


 

கோடைகாலத்தின் தொடக்கமாக அப்போது இருந்திருக்கவேண்டும். நிலம் முழுதும் பசுமை விரிந்து கிடந்தது. சணல் வயல்கள் மஞ்சள் நதிகளைப் போல இடையிடையே நெளிந்தோடின. வெயிலும், இடைக்கிடை மழையுமென வாழ்வதற்கு இதைவிட வேறென்ன வேண்டுமென நினைக்க வைக்குமளவுக்கு காலநிலை மனதுக்கு உவப்பானதாக இருந்தது. நான் எனது பல்கலைக்கழகத்தை முடித்துவிட்டு ரொறொண்டோவுக்குத் திரும்பியிருந்தேன். பனிக்காலம் முழுதும் படித்த படிப்புக்கேற்ப ஒரு வேலை தேடிக் கிடைக்காததில் சோர்ந்திருந்தேன்.  இளவேனில் முடிந்து பசுமையாய் கோடை விரிய வேலையொன்றுக்கு அழைப்பு வந்திருந்தது. படித்த படிப்புக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றாலும், படிப்பிற்காய்ப் பெற்ற கடனை அடைக்க வேண்டியிருந்த நிர்ப்பந்தத்தில் இந்த வேலையாவது கிடைத்ததேயென நிம்மதி அடைந்திருந்தேன்.


அது ஒரு காப்புறுதி நிறுவனம். சென்.ஆண்ட்ரூ சப்வேயில் இருந்து இறங்கியவுடன் அண்ணாந்து பார்த்தால் பழமையும், வனப்பும், நிமிர்வும் கொண்ட 'கனடா லைஃப்வ் என்பது அதன் பெயர். கனடாவில் நாம் வாழும் வாழ்க்கையை இந்தக் காப்புறுதி நிறுவனந்தான் தாங்கிக்கொண்டிருப்பதான பாவனையில் கர்வத்துடன் நின்றது. அங்கே வேலை செய்யத் தொடங்கினாலும் இலங்கை மண்ணை இன்னும் முற்றிலுமாக உதறித் தள்ளாத காலமது.  எனக்காகக் காப்புறுதி எதையும் அங்கே வாங்கிவிடாது, கனடாவில் படிப்பதற்காய் வாங்கிய கடனுக்கு மட்டும் என் வாழ்வைத் தாரை வார்த்திருந்தேன்.


எங்களுக்கான வேலைத்தளம் உலகின் உயரமான சி.என் டவரோடு போட்டிப் போடுகின்ற கட்டடத்தின் மேற்றளத்தில் அல்ல,  வெயிலின் ஒரு துளியும் நுழைந்துவிடாத நிலவறையே எமக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கேயே வாடிக்கையாளர்களின் கோப்புகள் சேகரமாக்கப்பட்டிருக்கும். என்னைப் போன்றவர்களின் வேலை, பிறர் கேட்கும் பைல்களை தேடி எடுத்து, அதற்குள் இருக்கும் உரிய ஆவணங்களை, கேட்பவர்க்குச் சரியாக எடுத்துக் கொடுப்பதாகும். இந்த வாடிக்கையாளர் அனைவரும் காப்புறுதி நிறுவனத்துக்கு கணனி அறிமுகமாவதற்கு முன் சேர்ந்தவர்கள். அவர்களின் விபரங்கள் எதுவுமே கணனியில் அப்போது ஏற்றப்பட்டிருக்கவில்லை.


எங்கள் வேலை எளிது போன்று தோன்றினாலும் குறுக்கும் நெடுக்குமான பல்வேறு வரிசையில் இருக்கும் இந்த தளத்திற்குள் நுழைவது ஒரு புதிர்ச்சூழல் போல இருக்கும். சிலவேளை தலையைச் சுற்ற வைக்கும் அளவுக்கு ஏதோ ஒரு வரிசையில் மட்டும் தொடர்ந்து நின்று கொண்டு, கண்டுபிடிக்க முடியாத ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பதற்கான பாவனையை இது தரும். அப்போதுதான் ஒருவர்  எனக்கு அறிமுகமாயிருந்தார். சிலரைப் பார்த்தவுடனேயே என்ன காரணம் என்றறியாமலே இவர்கள் வித்தியாசமானதென்று உள்மனம் சொல்லுமல்லவா? அப்படித்தான் இவரைப் பார்த்தவுடன் ஓர் எண்ணம் எனக்குள் தோன்றியது. அவரே உருவாக்கியிருக்கக்கூடிய அவருக்கான உலகத்திற்குள் சுழன்றுகொண்டு திரிபவரைப் போன்ற ஒரு தோற்றம்.


உணவு நேர இடைவெளிகளில் மற்றவர்கள் முதல் நாள் நடந்த ஐஸ் ஹாக்கியினதோ, பாஸ்கட் பாலினதோ ஸ்கோர் விபரங்களையும், ஆட்ட நுணுங்கங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது அவற்றை விலத்தி நான் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பேன். அப்போது மூன்றாங்கையாக இந்த ஸ்மார்ட் போன்கள் எல்லாம் முளைத்துவிடாத ஒரு பொற்காலமெனச் சொல்லவேண்டும். ஒருநாள் பிரான்ஸ் காப்ஃகாவினது 'விசாரணை'யை ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன். எனது சாப்பாட்டு மேசையைக் கடந்துசென்றவர் சட்டென்று நின்று, ‘This is not the right time to read Kafka, young man' என்றார். இதை அவர் எனக்குத்தான் சொல்கிறார் என்பது முதலில் விளங்கவில்லை. என் முகத்தைச் சுருக்கியபடி என்ன சொன்னீர்கள் என்ற பாவனையில் விழிகளை விரித்து அவரைப் பார்த்தேன். உனக்குத்தான் சொல்கின்றேன் என்றபடி எனக்கு எதிரே இருந்த கதிரையில் வந்தமர்ந்தார்.


காஃப்காவை வாசிப்பது ஒருவகையான வாதை என்பதைவிட, அவர் எழுதிய நிறைய எனக்கு விளங்காமலே இருந்தது. அதைத்தான் இவர் குறிப்பிடுகின்றாரோ எனக் கேட்டேன். ‘இல்லை காப்ஃகாவை வாசிக்கத் தொடங்கினால் வாழ்வின் மீதான பற்று இல்லாது வெறுமை தேவையில்லாது சூழ்ந்துவிடும் என்றார். ‘அப்படி வெறுமை எளிதில் பற்றாது, எனக்கு ஒரு காதலி இருக்கின்றாள். அவளை நெஞ்சு முழுதும் நிரப்பி வைத்திருக்கின்றேன். வெறுமைக்கு மட்டுமில்லை வேறெதற்கும் இடமில்லைஎனச்சிரித்தபடி சொன்னேன். சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். தொடர்வதோ விலத்துவதோ உனது தெரிவு எனப் பெருமூச்சொன்றுடன் அவர் என்னைவிட்டு  விலகிச்சென்றார்.

 

 

டித்து முடித்ததற்கும் வேலை கிடைப்பதற்கும் இடையில் ஒரு வெறுமை எனக்குள் இருந்தது. தினமும் ஒரே மாதிரி பொழுது கழிந்துகொண்டிருந்தால் சோர்வு வந்துவிடாதா என்ன? மின்னஞ்சல்களிலும், தொலைநகல்களிலும் அனுப்பும் வேலைக்கான விண்ணப்பங்கள் இலையுதிர்காலத்தில் காற்று அடித்துச் செல்லும் உதிர்ந்த மேப்பிள் இலைகள் போல எங்கோ சப்தமில்லாது தொலைந்துகொண்டிருந்தன. அவளோடு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட காதல்தான் ஏதோ ஒருவகையில் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது. அவளும் இல்லாதுவிட்டால் அநேக கனேடியர்க்கு வரும் winter blueஇற்குள் சிக்கித் திணறி மனவழுத்தத்துக்குள் நுழைந்திருப்பேன்.


காதல் என்பது மனசு சார்ந்து எனச் சொன்னாலும் உடல்களின் வாசனையை அறியாது வரும் காதலை நேசமெனச் சொல்லமுடியாதல்லவா. நானும் அவளும் நமது உடல்களின் வளைவு சுழிவுகளை நிதானமாய் அறிந்துகொள்ள மட்டுமல்ல, உதடுகளால் முத்தமிடக் கூட நிம்மதியான இடங்களைத் தேடி அலையவேண்டியிருந்தது. கையில் காசு அவ்வளவு புழங்காததால் பொது இடங்களில்தான் நமக்கான ஒதுக்குப்புறங்களைத் தேடி திருப்தியடைய வேண்டியிருந்தது. அப்படி நாமிருவர் கண்டெடுத்த இரகசிய இடங்களில் ஒன்றுதான் பேரங்காடி.  அங்கே இருக்கும் ஆடைக் கடைகளின்  fitting roomsதான்,  நமது இளமைக்கான பாதையைத் திறந்து வைத்திருந்தன. அதுவும் சனம் அவ்வளவு புழங்காத மதிய நேரங்கள் நமக்குப் பொருத்தமான காலங்களாகவும் இருந்தன.


அவள் பெண்களுக்கென தனித்து இருக்கும் fitting room இற்குள், முதலில் அணிந்து பார்ப்பதற்கென கையில் சில ஆடைகளுடன் நுழைவாள். நான் அவள் அணிந்த புதிய ஆடைகள் அவளின் உடலுக்குப் பொருத்தமாக இருக்கின்றதா எனச் சரி பார்த்துச் சொல்கின்ற காதலனாக சற்றுத் தொலைவில் நிற்பேன். எவருமே கவனிக்காத பொன்னான நேரத்தில் நான் அந்தச் சின்ன அறைக்குள் நுழைய, பின்னர் நாங்கள் உதடுகளாலும் கைகளாலும், அளவுகளையச் சரி பார்ப்போம்.  வெளி ஆடைகள் குறைந்து உள்ளாடைகள் கலைந்து நாம் காமத்தின் உச்சத்திற்கு ஏறி, கீழே வரும்போது இந்தக் கடையை வைத்திருக்கும் அந்த நல்லமனிதர் வாழ்கவென மனதுக்குள் வாழ்த்தி வெளியேறுவோம்.


எந்த ஒரு விடயமாயினும் ஒரே ஒழுங்கில் செய்தால், ஒன்று அலுப்பு வந்துவிடுகின்றது அல்லது யாரேனும் அதை வந்து குழப்பிவிடுவார்கள். நாமிருவரும் உடல்களின் அளவீடுகளை உடைகளைக் குறைத்து இரகசியமாகச் செய்கின்றோம் என்பதை ஒருநாள் கடைக்காரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். நாங்கள் அளவீட்டை கச்சிதமாய் அளக்கும்வரை விட்டுவிட்டு இனி இந்தக் கடைப்பக்கம் எட்டியே பார்க்கக்கூடாதென்று எச்சரித்து  வெளியே அனுப்பிவைத்தனர். அதன் பின்னர் காதல் ஆர்முடுகலாக ஏறினாலும், காமம் அமர்முடுகலாக இறங்கி இறங்கி கீழே சரிந்து அதளபாதாளத்துக்குள் போய்க்கொண்டிருந்தது.


காதலும் காமமும் தாவோயிசத்தின் ஜின்-யாங் போன்றது. எது வெளிச்சம் எது இருட்டானது என்று பொருத்திப் பார்ப்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஆனால் ஒன்றில்லாது மற்றொன்று இல்லை. காதல் கூடினாலும் காமம் குறையக்குறைய நம் நேசம் எங்கோ காணாமற் போகின்றது என நாங்கள் கவலையுறத் தொடங்கிய காலத்தில்தான், எனக்கு வேலை அலாவுதீனின் அற்புத விளக்காகக் கிடைத்தது. படிப்புக்கான கடனை இனி கவலையில்லாது வட்டியுடன் சேர்ந்து மாதம் மாதம் கட்டிவிடலாம் என்ற மகிழ்ச்சியை விட, அவளை அரைகுறையான fitting room இற்குள் எல்லாம்  கூட்டிச்செல்லாது, எங்கேயாவது நிம்மதியான இடத்துக்குக் அழைத்துப் போய் அளவீட்டை நேர்த்தியாக எடுத்தவேண்டுமென்ற களிப்பு எனக்குள் பொங்கியது.


அப்படி நாங்கள் இருவரும் ஒரு நாள் முழுதும் செலவழிக்கவென ஐந்து நட்சத்திர மதிப்புள்ள Four seasons  ஹொட்டலை பதிவு செய்தேன். அவளுக்கும் அது பெரும் சந்தோசத்தைக் கொடுத்தது. அது ஐந்து நட்சத்திர ஹொட்டல் என்பதால் அல்ல, இதுவரைகாலமும் பதற்றங்களோடு இருந்ததுபோல அன்றி, நம்மை நாம் நிதானமாக உடல்களாய் அறிந்துகொள்ளலாம் என்பதால் வந்தடைந்த பரவசநிலை அதுவாகும். 


இவ்வாறு ஒரு இடத்தை  நான் தேர்ந்தெடுத்ததால் ஏதாவது வித்தியாசமானதைச் செய்யவேண்டும் என்று விரும்பினாளோ என்னவோ 'உனக்கு ஏதும் நிறைவேறாத ஆசையிருந்தால் சொல் என்றாள். வழமையான தமிழ் ஆணுக்கு அதுவும் ஒரு பெண்ணை தனித்து ஒரு அறைக்குள் பார்க்க விரும்பும்போது என்ன பெரிதாக ஆசை இருக்கப்போகின்றது.  உன்னைச் சேலையில் பார்க்கவேண்டும் என்பது என் பெரும் விருப்பங்களில் ஒன்றெனச் சொன்னேன். அவ்வாறே ஆகட்டும், நான் சேலையை அங்கே கொண்டுவந்து உனக்காக அணிந்துகாட்டுகின்றேன் என்றாள். என்னதான் தமிழ் ஆண் என்றாலும் புலம்பெயர்ந்த தமிழ் ஆண் என்றால் கொஞ்சம் தாயகத்திலிருந்து வித்தியாசம் காட்ட வேண்டுந்தானே. 'நீ சாறிக்கு ப்ளவுஸ் அணியவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை என்பதையும் அவளுக்குச் சொன்னேன். நான் ப்ளவுஸ் கொண்டு வரவில்லை. ஆனால் நான் கூறியதை நீ மறந்திடாமல் கொண்டு வாவென்றாள். ‘Trojen Magnum உனக்குப் பிடிக்கும் எனக் கேட்டேன். ‘பிராண்ட் எதுவாக இருந்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் flavour இல்லாததாய், நல்ல தரத்தில் வாங்கிக்கொண்டு வா, பாதுகாப்பு முக்கியம் என்றாள்.


அவளோடு ஓர் அருமையான பொழுதை ஐந்து நட்சத்திர ஹொட்டலில் களித்துவிட்டு, வேலைக்குப் போனபோது மனது குதூகலத்தின் குளமாய் நிறைந்திருந்தது. வேலையில் கூட வழமைக்கு மாறாய் ஓடியோடி ஒவ்வொரு aisle இற்குள்ளும் நுழைந்து பைல்களை உற்சாகமாய் எடுத்தபடி இருந்தேன். இதை அவர் கவனித்துவிட்டார்.  என்ன காப்ஃகா தனது காதலிகளுக்கு எழுதிய உருக்கமான கடிதங்களை வாசித்துவிட்டாயா? என்று கேட்டார். ‘இல்லை என் காதலியோடு நீண்ட காலத்துக்குப் பிறகு நிம்மதியாக ஒரு நாளைக் கழித்துவிட்டேன்  எனச் சொன்னேன்.


நல்லவேளை காஃப்காவை வாசித்து அவருக்குள் இருந்த தேவையற்ற பதற்றங்களால் அவர் காதலிகளைத் தொலைத்தமாதிரி நீ இல்லை என்றார். ‘ஏன் உங்களுக்கு காஃப்காவைப் பிடிக்காததால்தான் இப்படிச் சொல்கின்றீர்களா எனக் கேட்டேன். ‘அப்படி இல்லை, காப்ஃகாவை நிறைய வாசித்து அவரை மாதிரி வாழ்வின் வெறுமையை நானும் உணர்வதால்தான் இதைச் சொல்கின்றேன் என்றார். பிறகு சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு,  காஃப்கா அவரின்விசாரணையாலும், அவரின் பதற்றங்களும், பயங்களும் நிறைந்த கதைகளாலும் மட்டும் அடையாளப்படுத்தக் கூடிய ஒருவருமல்ல. உனக்கு அவரின் 'பெர்லின் பொம்மை' கதை தெரியுமா என்றார். எனக்குத்தெரியாது என்றபோது காப்ஃகாவினது அந்தக் கதையை அவர் சொல்லத் தொடங்கினார்.

 

 

காஃப்கா அவரின் வாழ்வின் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது. காப்ஃகா ஒருபொழுதும் அவரின் சொந்த நகரான ப்ராக்கை விட்டு வெளியேற விரும்பியதில்லை. அவரின் நெடுநாள் காதலியை இரண்டுமுறை திருணஞ் செய்வற்கு அண்மையாகப் போய் அவற்றைக் கடைசி நேரத்தில் இடைநிறுத்தியவர். அவ்வாறு தேவையில்லாப் பயங்களோடு திணறிக்கொண்டிருந்த காஃப்காவிற்கு இளமையான காதலியொருத்தி பெர்லினில் கிடைத்திருந்தார். எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து செல்கின்ற கலகக்காரப் பெண்ணாக டினா இருந்தார். டினாவின் அழைப்பின் பேரில் ஒரு மாற்றம் வேண்டி முதன்முதலாக காப்ஃகா பெர்லினுக்குச் சென்றிருக்கின்றார். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக பெர்லினில், காஃப்கா தன் சொந்த நகரை நீங்கி வசித்தது சற்று விசித்திரமானதுதான். அப்போது நிகழ்ந்த ஒரு கதைதான் இது.


ஒருநாள் அவர்களின் தொடர்மாடிக்கட்டடத்தின் முன்னால் இருந்த பூங்காவில் ஒரு சிறுமி அழுதுகொண்டிருக்கின்றாள். டினாவோடு வெளியில் நடக்கச் சென்றிருந்த காஃப்கா அழுதுகொண்டிருக்கும் சிறுமியைக் காண்கின்றார். அவளின் அழுகையை நிறுத்தும் பொருட்டு காப்ஃகா அவள் அழுவதன் காரணத்தைக் கேட்கின்றார். அந்தச் சிறுமி, நெடுநாள் தான் பத்திரமாய் வைத்திருந்த பொம்மை தொலைந்துவிட்டதென விக்கி விக்கி அழுதபடி சொல்கிறாள். அப்போதுதான் முதலாம் உலகமகா யுத்தம் முடிவடைந்திருந்த காலம். ஜேர்மனி போரால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.  நாட்டு மக்களை வறுமை மூடி, நாளாந்த வாழ்க்கை சிதைக்கப்பட்டிருந்த காலப்பகுதி அது.


காஃப்கா அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்தும் பொருட்டு, அவளின் பொம்மை ஒரே இடத்தில் இருந்து அலுப்படைந்து, இப்போது பயணம் செய்யப்போய்விட்டது, தன் பொருட்டு இந்தச் சிறுமி கவலைப்படக்கூடாதென்று பொம்மை தன்னிடம் சொன்னதாக கூறுகின்றார். சிறுமி கொஞ்சம் இதை நம்பினாலும், எப்படி இதுவரை நானறியாத உங்களிடம் பொம்மை இதைச் சொன்னது என்று கேட்கின்றாள். அதற்கு காஃப்கா பொம்மை ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. நான் மறந்துபோய் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன், நாளை கொண்டு வந்து தருகின்றேன் என்கின்றார்.  இந்தச் சம்பவத்தை பிறகு வெளியுலகிற்குச் சொல்லும் காப்ஃகாவின் காதலியான டினா, ஒரு குழந்தைக்கு இப்படி வாக்குறுதி கொடுத்ததற்காய், காப்ஃகா உடனேயே வீட்டுக்குப்போய் குளிர்கால அங்கியைக் கூடக் கழற்றாமல் மிகச்சிரத்தையாக கடிதம் எழுதத் தொடங்கினார் என்று குறிப்பிடுகின்றார்.


இவ்வாறு அடுத்தநாள் கடிதத்தை குழந்தையிடம் பொம்மை எழுதியதாகக் கொடுத்தவுடன், அந்தச் சிறுமி தொடர்ந்து பொம்மை எழுதும் கடிதங்களைத் தனக்குத் தரச் சொல்கின்றார். இதன் நிமித்தம் இந்தச் சிறுமிக்கு தினம் ஒரு கடிதமென மூன்று வாரங்கள் கடிதங்களை காஃப்கா எழுதுகின்றார். அந்தக் கடிதங்களினூடாக பொம்மை கொஞ்சமாக கொஞ்சமாக வளர்ந்து, ஒருகட்ட்ட்த்தில் திருமணம் செய்துவிடுவதாய்க் குழந்தைக்குச் சொல்லிவிடுகின்றார்.  பொம்மை தன்னைவிட்டுத் தொலைவில் போய்விட்ட துயரத்தை விட, அது எங்கேயோ நன்றாக இருக்கின்றதென நினைத்து சிறுமி கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் கொள்கிறாள்.


இறுதிக்கடிதத்தில் நான் திருமணம் செய்துவிட்டேன். இனி கடிதங்கள் எழுத நேரங்கிடைக்காது என்று காஃப்கா பொம்மை சொல்வதாக எழுதுகின்றார். அன்பெனப்படுவது ஒரே இடத்திலோ அல்லது ஒருவராலோ தரப்படுவதில்லை, அது வேறு விதமாகக் கூடத் தரப்படலாம். எனவே எனக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்ற பொம்மையின் இறுதியின் வார்த்தைகளுடன் காஃப்கா கடிதத்தை முடிக்கிறார்.


இவ்வாறு காஃப்காவினது பொம்மைக் கதையைச் சொன்ன அவர் காப்காவினது இறுதிக் கடிதத்தில் இருந்த வார்த்தைகளான Everything you love, you will eventually lose, but in the end, love will return in a different  form”  என்பதை, நான் மனப்பாடம் செய்யவேண்டும் போல அதைத் திருப்பச் திருப்பச் சொன்னார்.  

கண்காணிப்பு உலகம் குறித்து மிகப் பெரும் அச்சத்தோடும், தனக்கான பதற்றங்களோடும், அவருக்கு ஏற்கனவே வந்துவிட்ட காசநோயோடும் போராடிக்கொண்டிருந்த காப்கா ஒரு சிறுமிக்காய் நேரம் எடுத்து எழுதிக்கொடுத்த கடிதங்களினூடாக வேறொருவராகக் காட்சியளிக்கின்றார் எனச் சொல்லியபடி சப்வேயிற்குள் எனது நண்பர் நுழைந்து மறைந்தார்.

 

 

ன்னால் அதன்பிறகு அன்றையகாலத்தில் எவ்வளவு முயன்றபோதும் காப்காவினது விசாரணையை மனம் ஒன்றி வாசிக்க முடியாது போனது. கடுமையாக மனதைக் குவித்து வாசித்தாலும் வார்த்தைகள் மூளையில் பதியாது நழுவிப்போய்க்கொண்டே இருந்தன. ஆனால் காப்ஃகா இறப்பதற்கு முன் எழுதிய 'ஒரு பட்டினிக் கலைஞர்' கதையை என்னால் எளிதாக வாசிக்க முடிந்திருந்தது. ஒரு படைப்பாளிக்கான இடம் என்னவென்பதையும், எவ்வளவு எளிதாக ஒரு கலைஞர் மாற்றீடு செய்யப்படமுடியும் என்பதையும் என் இளமைக்காலத்திலேயே அது உணரவைத்திருந்தது.


நண்பர் விரும்பியமாதிரியே, காப்காவின் முக்கிய படைப்பான விசாரணையை என்னால் வாசிக்க முடியவில்லை என்பதை அவருக்குச் சொன்னேன். அதனால் அவருக்கு நிறைவு இருந்ததா அல்லது இல்லையா என்பதை சரியாக என்னால் அறியமுடியவில்லை. ஒருவகையில் அதை அறிந்துகொள்வதில் எனக்கும் பெரிய ஈடுபாடும் இருக்கவில்லை. எனக்கு என் காதலியோடு வந்த சிக்கல்களிலேயே நிறைய நேரத்தைச் செலவழிக்க வேண்டியதாகப் பிறகு போய்விட்டது.


ஒருநாள் காஃப்கா, பொம்மை எழுதிய கடிதத்தில் சொன்னதுபோல, என் காதலியோடும் காதல் முடிந்துபோனது. எந்த நேசமாயினும் முடிந்துபோகும். ஆனால் வேறிடத்தில் இன்னொரு வடிவத்தில் அது திரும்பி வருமென்பதை, என் மனம் நம்ப மறுத்து, தொலைந்துபோன காதலை நினைத்து ஏங்கிச் சோர்ந்து போகும் காலம் என் முன்னே கொடூரமாய் வந்து நின்றது.


எனது இந்த நிலையையும் இந்த காஃப்கா வாசகர் அல்லது அவநம்பிக்கையாளர் கண்டுபிடித்திருந்தார்.  ஒரு சோகத்துக்கு அந்தச் சோகத்திற்கான காரணங்களைத் தேடிச் செல்வதை விட,  இன்னொருவர் அதையொத்து தனக்கு நிகழ்ந்த துயரத்தைச் சொல்லும்போதுதானே இது எல்லோருக்கும் பொதுவான கவலையென நினைத்து மனித மனம் ஆறுதல் கொள்கிறது. அவர் தனக்கு நிகழ்ந்த கதையைச் சொல்லத் தொடங்கினார்;

 


னக்குள் ஒரு காதல் தீவிரமாய் வந்தபொழுது அவள் அப்போது தாதியாக வேலை செய்துகொண்டிருந்தாள். இருவரும் எங்கள் வீட்டுக்கோ நண்பர்களுக்கோ சொல்லாது திருமணப் பதிவையும் அவசரமாகச் செய்துகொண்டோம். அவள் வேறொரு நகரத்திலும், நான் இன்னொரு நகரத்திலும் வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம். அதற்கு முன்னர் எங்கள் இருவருக்கும் காதல் அனுபவங்கள் இருந்தன. நான் இதற்கு முதல் காதலித்த ஒரு பெண்ணுக்கு உருகி உருகி அவள் உடலின் அந்தரங்கமான பகுதிகளை விபரித்து எழுதிய கடிதத்தை அந்தப் பெண் தன்னோடு வேலை செய்த இன்னொரு ஆணுக்கு வாசிக்கக் கொடுத்திருந்தாள். அப்போது நாங்கள் எல்லோரும் ஒரேயிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தோம். எனக்கு என்னவோ எனது கடித்தத்தை அந்த வேலைத்தளத்தில் இருந்த எல்லோருமே வாசித்தமாதிரியான பதற்றம் வரத்தொடங்கியது.


எல்லோருக்கும் என்னைப் பற்றித் தெரிந்துவிட்டது போலவும் ஒரு மாய உணர்வால் பீடிக்கப்பட்டேன். முதன் முதலாக மனதளவிலான பாதிப்பு இதுதான். இந்த மாய உணர்வு என் காதுகளில் மாய ஒலியாகக் கேட்க ஆரம்பித்துவிட்டது. நீ மிகவும் மோசமானவன்... நீ மிகவும் பச்சையானவன்... நீ ஒரு காமுகன்... நீ அசிங்கம் பிடித்தவன்' என்று என்னை எல்லோரும் திட்டுவதுபோல, கெட்ட வசவுகளால் என்னைத் துன்புறுத்துவதுபோல. என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்க, அவர் ஒரு சைக்யாட்ரிஸ்டை பார்க்கும்படி அறிவுறுத்தினார். இந்த உளவியல் சிகிச்சையில் முக்கியமானது, என்னவென்றால் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். இது அவசியமானது. நல்லபடியாகக் குணமாகிக் கொண்டு வருகிறது என்று தெரிந்தால் மாத்திரைகளின் வீர்யத்தைக் குறைத்துக் கொடுப்பார்கள்.


இந்த அனுபவத்துக்குப் பிறகுதான் நான் இவளைத் திருமணம் செய்தேன். இவளுக்கு நான் மாத்திரை எடுப்பது பிடிக்கவில்லை. ஒன்று நானா இல்லையா மாத்திரையா  வேண்டும் என்று முடிவெடுக்கச் சொல்லிவிட்டாள். மாத்திரை எடுப்பதை அவளுக்காக நிறுத்தினேன். ஆனால் எனக்குள் பிறகு பல்வேறு விதமான குரல்கள் திரும்பவும் ஒலிக்கத் தொடங்கின. அதிலும் நான் திருமணம் செய்த இவளுக்கு வேறு யாரோடு வரம்பு மீறிய உறவு இருக்கின்றதென்று எனக் குரல்கள் திரும்பத் திரும்பச் சொல்லத் தொடங்கின. ஒருகட்டத்தில் அது உண்மையென தீவிரமாக நம்பவும் தொடங்கி, அவளைக் கண்காணிக்கவும், வார்த்தைகளால் துன்புறுத்தவும் செய்யத் தொடங்கினேன்.


ஒருநாள் என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. வாழ விருப்பமில்லாததால் நான் சாகிறேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே. இனி உனக்கு முழு சுதந்திரமுண்டு. நீ எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். உன்னை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்' என்று கடிதம் எழுதி அவள் தலையணைக்குக் கீழ் வைத்துவிட்டு படுத்துவிட்டேன். அவள் என்னை எழுப்பிப் பார்த்திருக்கிறாள். நான் எழுந்திருக்கவில்லை.


இறுதியில் அவள்தான் என்னை வைத்தியசாலைக்குக் கொண்டுபோய் காப்பாற்றினாள். ஆனால் இப்படி தேவையில்லாது சந்தேகம் கொள்ளும் என்னோடு சேர்ந்து இனியும் வாழமுடியாது என்று தெளிவாக முகத்துக்கு நேரே சொல்லிவிட்டாள்.


அவளும் போனதன்பின், தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் எனக்குத் தொற்றிக் கொண்டது. இரவுகளில் தூக்கமில்லை. ஓயாத மன உளைச்சல். எதை எதையெல்லாமோ நினைத்து அடிக்கடி அழுது கொண்டிருந்தேன். ஒரு நிலைக்குப் பிறகு சிகிச்சை எடுத்தே தீரவேண்டுமென்று தோன்றிவிட்டது. நண்பர்  ஒருவர் மூலமாக மனநலக் காப்பகத்தில் சேர்ந்தேன்.


அங்கே எந்த இடையூறும் இல்லாதபடி சீராகவும் சரியாகவுமிருந்தது மருத்துவமனைச் சூழல். சிகிச்சையும் சிறப்பான வகையில் இருந்தது. ஒருவகையில் தேறிவந்துவிட்டேன். என்றாலும் இப்போதுகூட அவ்வபோது தாறுமாறான எண்ணங்கள், நான் நினைக்காமலேயே தானாகவே எண்ணங்கள் வருகின்றன. மோசமான எண்ணங்கள் அதிகம் வரும். இது மனதை மிகவும் பாதிக்கிறது. இந்த மோசமான எண்ணங்கள் என்னுள் அதிகமான அச்சத்தை ஏற்படுத்துகின்றன.


இவை எல்லாவற்றிலிருந்தும் தப்ப  காப்ஃகா தான் எனக்குத் துணை புரிந்தார். அவரை என் நிலையோடு ஏதோ ஒருவகையில் பொருத்திப் பார்க்கமுடிகின்றது. அவருக்குக் காதலிகள் இருந்தாலும் திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கவில்லை. நாமெல்லோருமே யாராலோ, எதனாலோ கண்காணிக்கப்படுவதாக அவர் தீவிரமாக நம்பினார். என்னைப் போலவே கண்ணுக்குத்தெரியாத எதிரிகளோடு தினமும் காப்ஃகாவும் போராடினார் என்பதைத்தான் அவரின் எழுத்துக்கள் சொல்கின்றன என்றார்.


 

ப்படி தன்பாட்டில் உலாவிக்கொண்டிருந்த இந்த மனிதருக்குள் இவ்வளவு போராட்டங்கள் மனதின் அடியாழத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றனவா என வியப்பும், ஒருவகையில் சோர்வும் எனக்கு வந்தது. ஏன் இந்த உலகம் அற்புதமான மனிதர்கள் மீதெல்லாம் தேவையில்லா கொடூரத்தின் போர்வையைக் கவிழ்த்துவிட்டுச் செல்கின்றன என நினைத்துக்கொண்டேன். மற்றொருவகையில் இவர் சிக்கிக்கொண்ட சுழலின் ஆழத்தின் அளவுக்கு நான் போகவில்லை என்று எண்ணி என் மனம் சிறிது ஆறுதலும் கொண்டது.


இது நடந்து சில மாதங்களுக்குப்பிறகு நான் அந்த வேலையை விட்டிருந்தேன். என் காதலை இழந்துபோன சோகத்தால் என்னால் அந்தவேலையில் அவ்வளவு ஈடுபாடு கொள்ள முடியவில்லை. நிலவறையில் சூரிய ஒளிபடாது ஓர் அவதிக்குள் வேலை செய்வதுபோல, என் காதலியும் இல்லாதுபோனதால் மனமும் எதிலோ சிக்கிக்கொண்டு மூச்சுவிடத் திணறிக்கொண்டிருப்பதாய்த் தோன்றியது. எங்கேயாவது தூர இடத்துக்குப் போனால் நன்றாக இருக்குமென மனம் சொன்னது. சட்டென்று ஒரு விமான டிக்கெட்டைப் பதிவுசெய்து  கியூபாவுக்கு எந்த தயார்ப்படுத்தலும் இல்லாது போய்ச் சென்றிறங்கினேன். அங்கு போயும் என் காதலியின் நினைவு விடாது துரத்த அவளுக்கு ஒரு மெயில் 'உன்னை மறக்கமுடியாது இருக்கின்றது' என உருக்கமாய் எழுதி அனுப்பினேன். அவள் எல்லாவற்றையும் இத்தோடு நிறுத்துவதுதான் நம் இருவருக்குமான விடுதலையாக இருக்கும் என மறுபதில் எழுதிவிட்டு அதற்குப் பிறகு நான் எழுதிய எந்த ஈமெயில்களுக்கும் பதில் அனுப்பாது விட்டிருந்தாள்.


நான் வேலையை விட்டு விலகிச் செல்லப்போவதை என் காஃப்கா நண்பருக்குச் சொல்லியிருந்தேன். ‘ஓர் இடைவெளி, ஒரு பயணம் உன்னை ஆற்றுப்படுத்தட்டும்என என்னை ஆசிர்வதித்து அவர் அனுப்பினார்.  காஃப்காவை மத்திய வயதில் வாசி. இப்போது  அவருக்குள் அதிகம் நுழையாதே' என மீண்டும் அறிவுறுத்தினார். 'காப்ஃகா முக்கியமானவர், நம் இருத்தலிய வாழ்வில் ஒருபோதும் விலத்திப் போகமுடியாதவர். ஆனால் அதற்கு நாம் அனுபவ நதிக்குள் நுழைந்து மூச்சுத்திணறி நீச்சலைக் கற்றுக்கொள்ளாதவரை காப்ஃகா தொலைவிலே நின்று மட்டும் புன்னகைத்து எங்களைக் குழப்புவார் என்று மிக அக்கறையான வார்த்தைகளுடன் சொல்லி அனுப்பிவைத்தார். அதுவரைகாலமும் தன்னை காப்ஃகாவினது கே என்ற பாத்திரத்தால் தன்னை அறிமுகப்படுத்தியவர் அன்றுதான் தன் முழுப்பெயர் கார்ல் ராஜன் என்று எனக்குச் சொன்னார்.

 

 

நான் அதற்குப் பிறகு எத்தனையோ அனுபவங்களை அடைந்துவிட்டிருந்தேன். காதல்களும் ஒன்றுக்கும் மேலே வந்து  நீரளவே ஆகுமாம் நீராம்பல்  என்பது போல ஒவ்வொன்றும் நீண்டகாலம் தங்காது இடைநடுவில் விலத்திப் போயிருந்தன. ஒரு மழைநாளில் இலைகள் மஞ்சளாய் உதிர்ந்துகொண்டிருப்பதை செம்மதுவை அருந்தியபடி அறைக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். மனது Mr..Kயை ஒரு உதிர்ந்து விழும் இலையென உருவகித்து பின் தொடர்ந்து செல்லத் தொடங்கியது. அதன் நீட்சியில் எனது அன்றைய காதலியின் நினைவும் இலையின் நரம்பென ஓடியது. அவள் இன்று சேலை அணிகையில் ப்ளவுஸ் போடும்போது, நான் ப்ளவுஸ் இல்லாது சேலை அணியக் கேட்டதை, நினைத்துச் சிரிக்கக் கூடுமென ஓர் எண்ணம் எட்டிப் பார்த்தது, இப்போது நான் துயரில் இருக்கின்றேனா அல்லது மகிழ்வாய் இருக்கின்றேனா அறிய முடியாக் குழப்பத்தில் ஒரு மிடறு மதுவை மேலும் அருந்தினேன். என் வயதும் அனுபவமும் அருந்தும் மதுவைப் போல காலத்தோடு கனிந்து வர, காப்ஃகா கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபடத்தொடங்கினார்.


இப்போது நான் சந்தித்த நண்பர் கே. எங்கே இருப்பார் என யோசித்துப் பார்த்தேன். எங்கிருந்தாலும் நன்றாக வாழ்ந்துகொண்டிருப்பார் என்று உள்மனம் சொல்லியது.  எனது புத்தக அலுமாரியிலிருந்து எழுந்தமானமாய் ஒரு புத்தகத்தை வாசிக்க எடுத்தேன். அது கோபிகிருஷ்ணனின் 'உள்ளிருந்து சில குரல்கள்'  தொகுப்பாய் இருந்தது.


அதை விரித்து வாசித்துக்கொண்டிருக்கும்போதுதான் ஒரு விடயம் சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது. கோபிகிருஷ்ணன் தனது கிறிஸ்தவக் காதலியை மணம் செய்வதன் பொருட்டு மதம் மாறியபோது அவருக்கு சூட்டப்பட்ட கிறிஸ்தவப் பெயர் கார்ல் ராஜன்.


அப்படியெனில் 'K...' என்ற பெயரோடு நான் சந்தித்தது எழுத்தாளர் கோபிகிருஷ்ணனைத்தானா?

.........................................................


 (குறிப்பு: 'மழை' சிற்றிதழுக்காய் கோபிகிருஷ்ணனை, யூமா வாசுகி எடுத்த நேர்காணலின் சில பகுதிகள் இந்தக் கதையில் நன்றியுடன் எடுத்தாளப்பட்டிருக்கிறது)

 

நன்றி: 'காலச்சுவடு- இதழ் 257, மே 2021

ஓவியம்:  றஷ்மி