கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ

Sunday, October 29, 2023

 

ஒரு வாசிப்பு அனுபவம்

நன்றி: கிருஷ்ணாவணக்கம் இளங்கோ,


ஆடி மாதம் மெக்ஸிக்கோவில்  வாசிப்போம் என்றிருந்த மெக்ஸிக்கோவை இப்போது தான் மகனை நீச்சலுக்கு விட்டு விட்டு காத்திருக்கும் நேரத்தில் வாசிக்கிறேன்.  அரை மணித்தியாலத்தில் ஒரே மூச்சாக பதினொரு அத்தியாயங்களை வாசித்து விட்டு இப்போது அசை போடுகிறேன்.  அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.


1 1/2 மணித்தியாலங்களில் 30 அத்தியாயங்களை முடித்து விட்டேன் . ஒரு சுகமான வாசிப்பனுபவம்.


..........


இப்போது வாசித்து முடித்து விட்டேன்.  எதிர்பாராத முடிவு.  கதைக்கு நன்றாக இருந்தாலும் ஏனோ இப்படி ஏன் முடித்தீர்கள் என்று இரண்டு நாட்களாக யோசிக்கிறேன்.  இன்னுமொரு முறை வாசித்தால் தான் கருத்து எழுத முடியும்.


வாசிக்கும் போது நான் நினைத்தேன் திரும்பவும் மெக்ஸ்சிக்கோ போகும் போது 'பொண்ட்' கதைகள் போல அவளைப் பற்றி அதுவரை வாசகனுக்குத் தெரியாததைச் சொல்லி கதையின் திருப்பத்தைச் சொல்லப் போகிறீர்கள் என்று. அல்லது பழைய காதல் தந்த துன்பத்தால் வேண்டுமென்றே மீண்டும் அப்படி ஒரு நிலைக்குப் போகாமல் இருப்பதற்காகவே சந்திக்கவில்லை என்று.  நான் மிகச் சாதாரண வாசகன்.  எனக்கு அப்படித் தான் கதை போகும் என்று ஊகிக்க முடியும்.


அந்த வகையில் நான் எதிர்பாராத ஒன்றைச் சொன்னது நல்ல உத்தியாகத் தான் இருந்தது.  அது தான் எல்லோரையும் கவர்ந்ததற்கான காரணமாக இருக்க வேண்டும்.


ஆனாலும் உங்களது இயல்பான எழுத்து நடைக்கு கடைசி ஓரிரண்டு அத்தியாயங்கள் கொஞ்சம் அன்னியமாக இருந்தன என்பது எனது அவதானம். 


இந்த ஆவலில் முன்பு தொடங்கி இடையில் நிற்பாட்டிய 'தாய்லாந்தை'  இனி வாசிக்கப் போகிறேன்.


00000000


(செப்ரெம்பர் 15, 2023)

கார்காலக் குறிப்புகள் - 26

Monday, October 23, 2023

 

சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பார்த்திபன் ஜேர்மனியில் இருந்து வந்திருந்தார். அவரைச் சந்தித்தபோது அவர் சேகரித்து வைத்திருந்த வெவ்வேறு மொழிகளில் நிகழ்த்தபட்ட concert காணொளிகள்/பாடல்கள்/திரைப்படங்கள் நிரம்பிய memory stick ஒன்றை எனக்கு அன்பின் நிமித்தம் தந்திருந்தார். தற்செயலாய் என் கணனியில் அதைத் திறந்து பார்த்தபோது, ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' என்ற பெயரில் சென்னையில் 2016இல் நடந்த நிகழ்வு இருக்க, இந்த மாலையில் அதைப் பார்த்து/கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.


நான் இசை என்றால், ஏ.ஆர்.ரஹ்மானோடு வளர்ந்து வந்தவன். இன்றைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் அன்றைய காலத்தில் வந்த இசைத்தட்டுக்களின் முகப்புகள் அப்படியே மறக்காமல் நினைவிலிருக்கின்றது. 'அலைபாயுதே'யில் கூந்தல் விரிந்தபடி நீலநிற உடையில் புல்வெளியில் படுத்திருக்கும் ஷாலினி, 'மின்சாரக் கனவில்' பச்சை நிற ஆடையில் இருக்கும் கஜோல் என இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.

அன்று அசல் இசைத்தட்டுக்களை ரெமி, ஐங்கரன் போன்ற நிறுவனங்கள் ஐரோப்பா/கனடாவில் வெளியிடும். அவற்றின் விலை அதிகமென்றாலும், இசையின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும். நான் அன்று கையில் பெரிதும் புழங்காது விட்டாலும் தேடித்தேடி இவற்றை வாங்கிச் சேகரித்திருக்கிறேன். ரஹ்மான்தான் முதன் முதலில் பாடகர்களைத் தாண்டி, தொழில்நுட்ப/பக்கவாத்திய கலைஞர்களின் பெயர்களை தனது இசைத்தட்டுக்களில் பதிவு செய்தவர்.

பின்னாட்களில் இளையராஜா, எஸ்பிபி- ஜேசுதாஸ், கார்த்திக் உள்ளிட்ட அண்மையில் பிரதீப்குமாரின் நேரடி இசை நிகழ்ச்சிகள் வரை எத்தனையோ பார்த்திருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்வுதான் எனக்கு மிக நெருக்கமானது. மற்றவர்களின் இசை/பாடல் தரங்குறைந்தது என்றெல்லாம் இல்லை, ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களோடு தவழ்ந்து வளர்ந்தவன் என்பதால் எனக்கு அவரின் பாடல்களோடு -இன்றைய ஈராயிரக்குழவிகளின் மொழியில் சொல்வதென்றால் - vibe செய்வது எளிதாக இருக்கும். அதனால்தான் ஏஆர்ஆர் 'அந்த அரபிக் கடலோரம்' பாடலை இங்கு பாடியபோது சுற்றியிருந்த சூழலையெல்லாம் மறந்து எழுந்து ஆடியிருக்கின்றேன்.

இப்போதும் இந்த 'நெஞ்சே எழு' நிகழ்வைக் காணொளியாகப் பார்க்கும்போது, என்னையறியாமலே மனம் நிறைந்து சில இடங்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. பகலில் ஏதோ ஒரு சோர்வுக்குள் காரணமில்லாது போயிருந்தவனை உற்சாகமான மனோநிலைக்கு இது பின்னர் மாற்றியுமிருந்தது. அதைத்தானே நமக்குப் பிடித்த கலைஞர்/கலை நமக்குள் நிகழ்த்த வேண்டியது? அதனால்தான் அந்தப் படைப்புக்களோடு நெருக்கமாகவும், அதை வெளிப்படுத்திய கலைஞர்களோடு நேசமாகவும் இருக்கின்றோம்.

இப்போது ரஹ்மானின் பாடல்களை முந்திய 'வெறி'த்தனத்தோடு கேட்பதில்லை. அவர் கடந்த 10 வருடங்களில் வேறொரு தரத்துக்கு நகர்ந்து விட்டார் என நினைக்கின்றேன். நான் பத்து வருடங்களுக்கு முன் இருந்த ரஹ்மானோடு பின் தங்கி அங்கேயே நிற்கின்றேன். ஆனால் அதுவே எனக்கு ரஹ்மானை ஆராதிக்கப் போதுமாயிருக்கின்றது. எனக்கு அடுத்த தலைமுறைக்கு , சமகாலத்தைய ரஹ்மானின் பாடல்கள் நெருக்கமாக இருக்கக்கூடும்.

ரஹ்மான், இளையராஜா எல்லோரும் இசைக்குள்ளேயே மூழ்கிப்போனவர்கள். அவர்களை வெளியே இழுத்து அவர்களுக்குத் தொடர்பில்லாத உலகத்தைப் பற்றிக் கேட்பதெல்லாம் அபத்தமானது. அதைப் புரிந்துகொண்டால் அவர்களுக்கு மட்டுமில்லை நமக்கும் நல்லது. தேவையில்லாது வீணாய் பொங்கி எவரின் நேரத்தையும் வீணடிக்கவும் வேண்டியதில்லை. இளையராஜாவிடம் கடந்தகாலத்தில் பொப் மார்லி/கத்தார் மாதிரி அவர் இருக்கவேண்டும் என்று தமிழுலகம் விவாதித்து அடிபட்டது நினைவிருக்கிறது.

ரஹ்மானும் இசைக்காக ஆஸ்கார் விருது பெற்றபோது ஈழத்தில் மனிதவுயிர்கள் பல்லாயிரக்கணக்கில் யுத்தத்தில் அழிந்து கொண்டிருந்தன. ரஹ்மான் அப்போது ஈழத்தில் ஒரு கொடூர யுத்தம் நடக்கிறதென்று உலகின் முன்னிலையில் சொல்லியிருந்தால் ஒரு இரசிகனாய் அவரை இன்னும் உயரத்தில் கொண்டு போய் நான் வைத்திருப்பேன். ஆனால் ரஹ்மான் எப்படி என்று ஏற்கனவே தெரிந்ததால் எனக்கு அதில் எந்த ஏமாற்றமும் இருக்கவில்லை.

அதேவேளை தனது பாடல்களைப் போல அரசியலையும் வெளிப்படையாகப் பேசும் M.I.A என்கின்ற மாயா அதே எம்மி/ஆஸ்கார் நிகழ்வுகளில் தனது மேடையை ஈழத்துக்காய்ப் பகிர்ந்து கொண்டார். மாயா அதைச் செய்யாவிட்டால்தான் மாயாவின் தீவிர இரசிகன் என்றவகையில் நான் ஏமாற்றமடைந்திருப்பேன்; ரஹ்மான் இது குறித்து மட்டுமில்லை இந்தியாவில் இந்த்துத்துவம் எல்லை மீறிப்போகும் இந்தக்காலத்தில் எதுவும் பேசாதது மெளனமாக கடந்துபோவதைக் கூட என்னால் புரிந்து கொள்ளமுடியும். ஒரு கலைஞரிடம் அவர் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமென நாம் எதிர்பார்க்கலாம்; ஆனால் ஒருபோதும் இப்படித்தான் இருக்கவேண்டுமென அவர்களை வற்புறுத்துதல் நியாயமற்றது. (இதற்கும் தனிப்பட்ட பலவீனங்களால மற்றவர்களை மோசமாகச் சுரண்டல் செய்து அதைக் கலையின் பேரில் சுமத்திவிட்டுத் தப்புபவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.)

நான் ரஹ்மானின் காலத்தவன் என்பதால் இப்போது இன்னொரு சிக்கலையும் எதிர்கொள்கின்றேன். என் காலத்தைய ரஹ்மானின் பாடல்கள் எல்லாம் வைரமுத்துவோடு சம்பந்தப்பட்டது. வைரமுத்துவின் பாலியல் சீண்டல்கள் குறித்து பெண்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது, இந்தப் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இந்த அரசியலை எப்படிக் கடந்து கேட்பது என்று மனம் திண்டாடும். அந்த உறுத்தல் ஒவ்வொரு பொழுதும் ரஹ்மானின் பாடல்களைக் கேட்கும்போது ஏதோ ஒருவகையில் எனக்குள் வரும்.

அண்மையில் கூட நண்பரொருவர் மழைக்காலத்திற்கான பாடல்களென எனக்கும் ஒரு பாடலை tag செய்தபோது, அவருக்கு நன்றியாக ஒரு பாடலைப் பதிவு செய்யப்போனபோது ரஹ்மானும் வைரமுத்துவும் இணைந்த ஒரு மழைப்பாடலே எனக்கு உடனே நினைவுக்கு வந்தது அதனைப் பகிரப் போகும்போதுதான் அதைப் பொதுவெளியில் சொல்வதுகூட வைரமுத்துவின் பாலியல் சீண்டல்களை ஒருவகையில் ஏற்றுக்கொள்வது போலாகிவிடும் என்று அதைப் பகிராது பின் வாங்கியிருந்தேன்.

ஆனால் ரஹ்மான் இந்த விடயத்தில் ஒன்றைச் சொல்லாமல் செய்தார். வைரமுத்துவின் மீதான குற்றச்சாட்டுக்கள் பொதுவெளிக்கு வந்தபோது கிட்டத்தட்ட வைரமுத்துவிடம் இருந்து பாடல்களை வாங்குவதிலிருந்து அவர் முற்றிலும் விலகினார். அதேவேளை இந்தச் சர்ச்சையினால் திரைப்படப் பாடல் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட சின்மயியைத் தன் பாடல்களில் தொடர்ந்து பாடவும் வைத்தார். அரசியல் நீக்கம் செய்தவராக இருக்கும் ரஹ்மான் செய்த இந்த விடயத்தைக் கூட நமது இலக்கியவாதிகள் செய்யவில்லை. கடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கூட வைரமுத்துவை மேடையேற்றி அழகு பார்த்தவர்கள் நமது இலக்கியச் சிம்மங்கள்.

இதையேன் இப்போது சொல்கின்றேன் என்றால் ரஹ்மானின் அண்மைய இசைநிகழ்வின் குழறுபடியால், அவரை எல்லாப் பக்கங்களாலும் அடித்துத் துவைத்துக் கொண்டிருக்கின்றார்கள் எனக் கேள்விப்பட்டேன். நான் பெரிதாக இந்த விடயங்களைப் பின் தொடர்ந்து பார்க்கவோ/வாசிக்கவோ இல்லை. நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டு எடுத்தும் அனுமதிக்கப்படாதவர்கள் கோபிப்பதில் நியாயங்கள் இருக்கின்றன. ரஹ்மானும் இது குறித்துத் தன் தரப்பைப் பேச வேண்டும் என்றாலும், அந்தப் பாரத்தை நிகழ்வை நடத்தியவர்களே பெரிதும் பொறுப்பெடுக்க வேண்டியவர்களாவர்.

அதேவேளை என் வாழ்க்கையில் இசையின் ஒரு பகுதியாய், அதிக நெருக்கமாக இருந்த ரஹ்மானை எந்தப் பொழுதில் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஏனெனில் அவரிடமிருந்து ஒரு சாதாரண இசை இரசிகனாய்ப் பெற்றதும், பெற்றுக் கொண்டுக் கொண்டிருப்பதும் நிறைய.

ஆகவே அவரோடு இருக்கின்றேன்.

இந்த 'நெஞ்சே எழு'வுடன் அலையலையாய்க் கடந்தகாலத்தில் பயணித்துக் கொண்டிருப்பவன், அதற்கு மூலகாரணியாய் இருப்பவரின் படைப்பாளுமையை 'மறக்குமா நெஞ்சம்'?

இல்லை. ஒருபோதும் மறக்காது!

**********************

(ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்வில் வந்த சர்ச்சைகளால், ரஹ்மானின் ஒரு தீவிர இரசிகன் என்றவகையில் எழுதத் தொடங்கியதை, வழமை போல சமூகவலைத்தளக் கொந்தளிப்புக்கள் அடங்கியபின் இப்போது பதிவிடுகின்றேன்)


(புரட்டாதி 15, 2023)


கார்காலக் குறிப்புகள் - 25

Saturday, October 21, 2023

 

-ஓர் இலையுதிர்கால நடை-


 

நிறம் மாறும் இலைகள். இலைகளை உதிர்க்கும் மரங்கள்.

 

வர்ணங்களின் பேரழகும், உதிர்வின் பிரிவும் இரண்டறக் கலந்து மனதை ஏதோ சொல்ல முடியாத உணர்வில் ஆழ்த்தும் இலையுதிர்காலம் இனி இங்கு.

 

கோடையைப் போல வெயில் புன்னகைக்கின்ற இந்த நாளில் நான் நடந்தபடியிருக்கிறேன். பச்சை/மஞ்சள்/சிவப்பு என எவ்வளவு பார்த்தும் ஒருபோதும் தெவிட்டா மரங்களின் மாயஜாலங்களையும், அவ்வப்போது இடைவெட்டுகின்ற மனிதர்களையும் கடந்தபடி போகின்றேன்.

 

இதமான காலநிலை என்பதால் சைக்கிளில் நிறையப் பேர் செல்கின்றார்கள். உலாத்தலின் நடுவில் சுற்றியிருக்கும் இடத்தின் வனப்பில் மயங்கி ஓர் புகைப்படத்தை வலையேற்றுகிறேன். 'என்னைக் கூட்டிச் செல்லாமல் எங்கே தனியே நடக்கிறாய்' என்று ஒரு மெஸெஜ். 'இன்னமும் இலைகள் உதிர்க்கவில்லையா?' என்று மற்றுமொரு மெஸேஜ்.

 

எல்லாப் பதில்களையும் புன்னகைத்து ஏற்று நீள நடக்கிறேன். காதில் ஹென்றி மில்லரின் 'The Hour of Man' ஐ கேட்கின்றேன். ஓரிடத்தில் ஒரு மத்திய வயதுக்காரரும் இளைஞரும் பேசிக்கொண்டிருப்பது கேட்கின்றது. 'வேலை மட்டும் வாழ்க்கையில்லை, அந்த எண்ணத்தை மறந்துவிடு' என்று சொல்லப்படுவதைக் கேட்கின்றேன். சிலவேளை ஒரு கவுன்சிலர் தன்னிடம் ஆலோசனை கேட்க வந்திருப்பவரை இப்படி மரங்கள் சூழ்ந்த இடத்திற்குக் கூட்டி வந்து, 'வாழ்க்கையை எளிதாகப் பார்' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாரோ தெரியவில்லை. பிறகு அதே பாதையையில் திரும்பும் வழியிலும் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். இம்முறை காதில் கேட்பதை நிறுத்திவிட்டு அவர்களின் வாழ்க்கை பற்றிய உரையாடலை உற்றுக் கேட்கின்றேன்.

 

 மரங்களின் மீள்நடுகையை இங்கே தொடங்குகின்றோம் என்ற ஓர் பலகையை கிட்டச் சென்று வாசிக்கின்றேன். இந்த மரங்கள் வளர ஒரு குறிப்பிட்ட காலம் எடுக்கும். தயவு செய்து இதற்குள் நுழைந்து இயற்கையின் சமநிலையைக் குழப்பிவிடாதீர்கள் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. மரங்கள் வளர்வது யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்.

 

ஒரு பெஞ்சில் சற்றுநேரம் இருந்து புகைப்படத்துக்கு வந்திருந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். இன்ஸ்டாவில் ஏனோ அமலாபாலின் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். அவருக்குள் என்ன மாற்றம் நடந்து கொண்டிருக்கிறதோ தெரியவில்லை, விவாகரத்துக்குப் பின் சோர்ந்துபோகாமல் ஒரு உற்சாகமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதை அவரது பக்கம் காட்டுகின்றது. மண் சிற்பங்கள் செய்வதாக அமலா மாடல் செய்த புகைப்படங்கள் அழகாக இருக்கின்றன என நினைத்தபடி மீண்டுமொருமுறை அவர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பென்யாமினின் 'ஆடு ஜீவிதம்' பட முன்னோட்டதைப் பார்க்கிறேன். இன்னமும் அந்தத் திரைப்படம் திரைக்கு வரவில்லை என்பது நினைவுக்கு வரவும், பக்கத்தில் வந்து ஒரு இளைஞன் அமரவும் சரியாக இருக்கின்றது.

 

கொஞ்சம் அமைதியற்ற இளைஞன். அப்படி இல்லாவிட்டால் இளைஞர் என்று சொல்வதில் அர்த்தமில்லை. குடிப்பதற்கு ஏதோ கொண்டு வந்து வைத்துவிட்டு, நடப்பதும் பின் பெஞ்சில் அமர்வதுமாக இருந்தார். அவரைக் குழப்பாமல் அவரின் இயல்பில் அவரை விடுவதே நல்லதென என் நடையை மீள ஆரம்பிக்கின்றேன்.

 

நான் நிறையக் காலம் அணியும் ரீஷேர்ட்டைப் பார்த்து மருமகள் 'மாம்ஸ் தயவு செய்து இதை அணியாதை' என்றும், பெறாமகள் 'எப்போதுதான் இதைக் கைவிடுவீர்களோ?' என்று கேட்காத நாட்களில்லை. ஆனால் இப்படி குறும்பான வாசகத்தோடு இருப்பதால்தான் கொஞ்ச மனிதர்களாவது என்னைக் கவனித்துப் பார்க்கின்றார்கள் என்பது எனக்கு மட்டுந் தெரிந்த உண்மை. இதே ரீஷேர்ட்டோடு தோழியோடோ, காதலியோடு சேர்ந்து போனால் கூட, யாரேனும் பெண்கள் என்னை கொஞ்சம் ஏறெடுத்துப் பார்த்தால் அவர்களுக்கு மூக்கு வியர்த்துவிடும். என்னை அல்ல, இந்த ரீஷேர்ட்டைத்தான் உற்றுப் பார்க்கின்றனர் என்று நான் உள்ளதைச் சொல்லும்போது 'அதுதானே பார்த்தேன்' என்று அவர்கள் விடும் மூச்சில் என்னை ஒரு சதத்துக்கும் மதிப்பதில்லை என்ற உண்மை விளங்கும். ஆனால் நமக்குத்தானே எந்த வெட்கம் மான ரோஷம் எதுவும் இருப்பதில்லை. அன்பே என்று அவர்களின் காலடியில் சரணாகதி அடைவேன்.

 

இப்படி நடக்கையில் ஒரு வயது முதிர்ந்த இணை ஒன்று எதிரே நடந்து வந்து கொண்டிருந்தது. காதில் ஹென்றி மில்லர் இன்னமும் போய்க் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்து ஹலோ சொன்னபோது, கையால் சைகையைக் காட்டி கொஞ்சம் நில் என்றனர். என் ரீஷேர்ட் வாசகத்தை வாசித்துவிட்டு, I love it என்றார் அந்தப் பெண்மணி. பிறகு இன்றைய நாள் அவ்வளவு வெம்மையாக அழகாக இருக்கின்றது அல்லவா என்று எங்கள் உரையாடல் போனது. இப்படியே நான் கடைக்குப் போய் என் மனைவிக்கு பிகினி வாங்கிக் கொடுக்கப் போகின்றேன் என்று நகைச்சுவையாக அந்த முதிய ஆண் சொன்னார். இன்னமும் வற்றிப் போக காதல் அவர்களிடையே ஊற்றெடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தல் அவ்வளவு இனிமை.

 

அவர்களிடம் விடைபெற்று நடந்தபோது மனம் நிறைந்திருந்தது. விழுந்திருந்த ஒரு இலையை எடுத்து சிறுபாலத்தைக் கடக்கும்போது ஒரு முனையில் நேசத்துடன் எடுத்து எறிந்தேன். அதை வீசிவிட்டு பாலத்தின் மறுகரையில் வந்து நின்று அந்த இலை மிதந்து போகின்றதா எனப் பார்த்தேன். அப்போது நீரைக் குனிந்து பாத்தபோது வானம் கீழே மிதந்தது. கூடவே இலைகள் விரிந்த மரமொன்றும் அழகாய்த் தெரிந்தது.

 

அந்த அழகைப் பார்க்கப் பார்க்க உள்ளே மகிழ்ச்சி ததும்பத் தொடங்கியது. மகிழ்ச்சி என்பதே எண்ணங்கள் ஏதுமில்லாமல் நாங்கள் தொலைவதுதான் என்பது புரிந்தது. இல்லாவிட்டால் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க அழகும் மகிழ்வும் மறைந்துவிடும். ஹென்றி மில்லரின் எழுத்தில் -இராமகிருஷ்ணர் யானையைப் பற்றிச் சொல்லிய கதையொன்று- சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது.

 

நான் எறிந்த இலையைக் காணவேயில்லை. அப்போதுதான் நீரை உற்றுப் பார்த்தேன். அந்த சிற்றாறிலே இரண்டுவிதமான நீரோட்டங்கள் எதிரும் புதிருமாக ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டிலும் இலைகள் இருவேறு திசையில் வந்து கொண்டிருந்தன. அப்படியெனில் எது போகின்றது எது வருகின்றது என எளிதாகக் கணிக்கமுடியுமா? தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. எந்த ஒன்றும் உருவாவதுமில்லை, அழிவதுமில்லை என்ற துவிதங்களை மறக்கவும் மறுக்கவும் எளிதாக முடிவதில்லை. எனினும் சிலவேளைகளில் இப்படி ஓரு சிற்றாறு எளிய பாடமாக இவற்றைக் கற்பித்து விடுகின்றது.

 

உதிர்வும் அழகென்று இலையுதிர்கால வர்ண இலைகள் சொல்கின்றன. முதுமையில் கூட இந்த வாழ்வு பேரழகென்று உரையாடிய அந்தத் தம்பதியினர் சொல்லிச் சென்றனர். மூச்சை உள்ளிழுத்து, வெளியே விட்டு நாம் உயிர்த்திருக்கும்வரை, இந்த உலகில் எல்லாமே சாத்தியம் என்று எனது ஆசிரியரான தாய் அடிக்கடி நினைவுபடுத்துவார்.

 

நமக்கு நடப்பதற்கு கால்களும், வரவேற்பதற்கு மரங்களும், புன்னகைப்பதற்கு மனிதர்களும் இன்னமும் இருக்கின்றன/ர்.

 

*****************


(Oct 04, 2023)

கார்காலக் குறிப்புகள் - 24

Monday, October 09, 2023

 

ன்றைக்கு அப்பிள்களைப் பறிப்பதற்காக ஒரு பண்ணைக்குப் போயிருந்தேன். சில பண்ணைகளில் நம்மிடம் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை அறவிட்டு, எங்களை நாம் விரும்பிய மரக்கறிகளை, கனிகளைப் பறிக்க விடுவார்கள்.

நானும் நண்பரும் இந்தப் பண்ணைக்குப் போனபோது நாங்கள் எடுத்த நுழைவுச் சீட்டுக்கு பூசணிக்காயையோ (பரங்கிக்காய்), butternut squashயோ ஒவ்வொன்று பறித்துக் கொண்டு வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னார்கள். அப்பிள்களைப் பறித்து ஒரு பையினுள் நிரப்பிவிட்டு பூசணிக்காயைப் பறிப்பதற்கு பண்ணையின் மறுபுறத்திற்கு Wagon இல் அழைத்துச் சென்றார்கள். அப்போது தோட்டத்தில் நின்று பூசணியைப் பிடுங்கி படங்காட்டிக் கொண்டிருந்தபோது ஒரு குரல் பின்னிருந்து கேட்டது.

'இதென்ன இவ்வளவு சின்னப் பூசணியையா கொண்டு போகப்போகின்றாய், நீ பெரிய மனிதன், இன்னும் பெரிதாக பறித்துக் கொள்' என்று சொன்னது அந்தக் குரல். சிரிப்பதென்றாலே எப்படி என்று கேட்கும் எனக்கு, நன்கு தெரிந்தவரைப் போலச் சொன்ன தொனியும், அந்தச் சொற்களும் சிரிப்பை வரவழைத்தது.

பிறகு அதைவிட நன்கு பெரிய பூசணியைப் பிடுங்கிக் கொண்டு wagon இல் ஏறியபோது இந்தப் பெண்ணோடும், அவரது தாயாரோடும் கொஞ்சம் கதைக்க முடிந்தது. நானும் நண்பரும் எங்கிருந்து இந்தப் பண்ணைக்கு வந்தோம் என்று கேட்டனர். அவர்களை விட நாங்கள் தொலைவிலிருந்து வந்திருக்கின்றோம் என்று வியந்தபோது, இல்லை நாங்கள் காரில்தான் வந்தோம், தூரம் பெரிதாகத் தெரியவில்லை என்றோம். அவர்கள் கார் இல்லாதபடியால் ஊபரில் வந்தோம் என்றார்கள்.

000000

நான் நெடுங்காலம் காரைச் சொந்தமாக வைத்திருப்பதைக் கைவிட்டிருந்தேன். ஆனாலும் குளிர்காலத்தில் எனது பஸ்கள் நேரந்தவறி வரும்போது எரிச்சல் வரும். பத்து நிமிடத்தில் பேரூந்தில் போய்விடும் தூரத்தில் இருக்கும் வீட்டுக்காய் ஒரு மணித்தியாலம் எல்லாம் சிலவேளைகளில் காத்திருந்திருக்கின்றேன்.

இப்படி நான் பஸ்சுக்காய்க் காத்திருக்கும்போது அறிமுகமில்லாத ஒருவர் எனக்காய் தன் காரை நிறுத்தி ride தருவார். பின்னர் காலையில் அப்படி பஸ்சுக்காய்க் காத்திருக்கும்போது பலமுறை என்னை ஏற்றிக் கொண்டு அவர் போகும் தூரம் வரை கூட்டிச் செல்வார். அந்தக் கருணை எல்லாம் எல்லோருக்கும் எளிதில் கை வராதது.

நான் சிறுவயதுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, சதுரங்கப் போட்டியில் பங்குபெற யாழ்நகருக்கு எங்கள் ஊரிலிருந்து செல்வேன். ஆஸ்மாவில் பீடிக்கப்பட்ட என்னைப் பெற்றோர் சைக்கிளோட அவ்வளவு அனுமதிப்பதில்லை. அத்துடன் சிறுவயது என்பதால் என்னை பக்கத்து வீட்டு அக்காதான் இந்தப் போட்டிகளுக்கு அப்பாவிற்கு நேரமில்லாதபோது அழைத்துச் செல்வார். அவருக்கு என்னை விட ஏழெட்டு வயது கூட இருக்கும். அப்படிப் போகும்போது (உயர்தரத்தில் வர்த்தகம் படித்துக்கொண்டிருந்தார்) எனக்குப் பல கதைகள் சொல்லி வருவார்.

ஒருமுறை 'உனக்குத் தெரியுமா, வெளிநாட்டில் காரில் வெறுமையான இருக்கைகளோடு போகும்போது, அவர்கள் காரை இடைநடுவில்   நிறுத்தி தெருவில் நிற்பவரை எல்லாம் அழைத்துச் செல்வார்கள்' எனச் சொன்னார். அது எனக்கு நன்கு மனதில் பதிந்துவிட்டது. ஆனால் அகதியாய் உள்ளூரில் அலைந்து பிறகு கனடாவுக்கு வந்தபோது இப்படியான ஒரு நிகழ்வையும் பார்க்காதது எனக்கு மிக ஏமாற்றமாயிருந்தது. நான் நினைக்கின்றேன் அந்த அக்கா Hitchhiking செய்வது பற்றித்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று.

இப்போது அந்த அக்கா இலண்டனில் இருக்கின்றார். அவர் தன் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றிய கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் இன்றும் 'உள்ளம்' என்ற நல்லதொரு இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டு பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அக்காவும், வளர்மதி சனசமூக நிலையமும் வாழ்க!

000000

பண்ணை wagonஇல் எம்மோடு வந்த இந்தப் பெண்ணிடமும் அம்மாவிடவும் நாங்கள் உங்கள் வீட்டுப் பக்கமாய்த்தான் போவோம், உங்களுக்கு சம்மதமெனில் நாங்கள் உங்களை அங்கே கொண்டு போய் இறக்கிவிடுகின்றோம் என்றோம். அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. வரும் வழியில் இந்தப் பண்ணை தனக்கு மிக நெருக்கமான உணர்வைத் தருகின்றது என்றார். எங்களுக்கும்தான் என்று இந்தப் பண்ணையில் நீண்டு விரிந்திருந்த சூரியகாந்தி தோட்டத்தில் கிறங்கிப் போயிருந்த எனது நண்பரும் சொன்னார்.

அந்தப்
பெண் தாங்கள் சீனாவில் (நகரின் பெயர் மறந்துவிட்டேன்) ஒன்றிலிருந்து வந்தவர்கள் என்றார். இந்த நகரத்து அப்பிள்களைப் போல, தங்கள் நகரம் லீச்சிகளுக்குப் பிரபல்யம் வாய்ந்தது என்றார். அப்படி தரமான லீச்சிகளைச் சுவைத்த தங்களுக்கு இங்கு கடைகளில் விற்கும் லீச்சிகளைச் சாப்பிடுவது என்பது அவமானமாய் இருக்கிறது என்றார். நானும், மாம்பழங்களோடு வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கு இங்கு அதே சுவையுடன் மாம்பழங்கள் கிடைப்பதில்லை என்றேன். பிறகு எங்கள் பேச்சு இந்நகரின் மோசமான பஸ்/மெட்ரோ சேவைகள் பற்றிய விமர்சனமாக நீண்டது. அருகிலிருந்த நண்பருக்கோ, இவன் ஒன்று இலக்கியவாதிகளை திட்டுகின்றான், மிச்ச நேரத்தில் இந்த நகரைத் திட்டுகின்றான் என்று மனதில் சிந்தனை போயிருக்கும். ஆனாலும் என்ன நாய் வாலை நிமிர்த்தவா முடியும்?

மகளையும், தாயையும் அவர்களின் வீட்டுக்கு அருகில் இறக்கியபோது அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. நிறைய நன்றிகளைத் தெரிவித்தார்கள். இறுதியில் சிறுவயதில் அந்த அக்கா சொன்ன விடயத்தை நான் செய்துபார்த்துவிட்டேன் என்பதில் ஒரு சிறு நிறைவு. இவ்வாறான தருணங்களில்தான் வாழ்வு வேறெதையும் விட அதிகம் நுரைத்து பெருகுகின்றது என நினைக்கின்றேன்.

நான் குளிரில் நடுங்கும் நாட்களில் என்னைத் தன் காரில் ஏற்றிப் போன பெயர் தெரியாத அந்த அண்ணாவையும் நன்றியுடன் இந்தப் பொழுதில் நினைவுகூர்கின்றேன்.

**************


(Sep 15, 2023)

கார்காலக் குறிப்புகள் - 23

Sunday, October 08, 2023


ஒருநாள் கழிந்தது.. 

ன்று ஹென்றி மில்லரின் 'The Books in my life'ஐ எடுப்பதற்காக நூலகத்திற்குச் சென்றிருந்தேன். அதை இரவில் பெறுவதற்கு முன், நூலகத்தின் தமிழ்ப்பகுதிக்குச் சென்று நோட்டமிட்டேன்.  இங்கு எந்த நூலகத்துக்குப் போனாலும் அது நான் வழமையாகச் செய்கின்ற ஒரு சடங்கு. கோவிட்டுக்குப் பிறகு, கடந்த சில வருடங்களாக புதுத் தமிழ்ப் புத்தகங்களின் வரவைக் காணவில்லை. இங்கு மட்டுமில்லை, தமிழர்கள் நிறைய இருக்கும் (தமிழ் எம்பி/அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி) நூலகத்தில் கூட அண்மைக்காலத் தமிழ்ப் புத்தகங்களைக் காணாதது ஏமாற்றமாக இருந்தது. கனடாப் பொருளாதாரம் போல தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதற்கான நிதியும் சுருங்கிவிட்டது போலும்.

 

ஜி.குப்புசாமி தமிழாக்கிய அருந்ததி ரோயின் 'பெருமகிழ்வின் பேரவை' இருந்தது. ஏற்கனவே அதை ஆங்கிலத்தில் எப்போதோ வாங்கி வாசித்துவிட்டேன் என்பதால் அதைத் தடவி ஆராதித்துவிட்டு வந்தேன். தற்செயலாக அங்கே அழகியபெரியவனின் 'சின்னக்குடை' என்ற நாவல் இருந்தது. அதன் பேசுபொருள் சுவாரசியமாக இருக்க அதைத் தூக்கிக்கொண்டு வந்து நூலகத்தில் பத்திரிகைகள்/சஞ்சிகைகள் இருக்கும் பகுதியில் அமர்ந்திருந்தேன்.

 

நீண்டநாட்களுக்குப் பிறகு இங்கு வரும் பத்திரிகைகளை கைகளால் ஏந்தி வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனக்கு பத்திரிகைகளின், புத்தகங்களின் வாசங்களை நுகர்ந்து பார்க்க மிகப் பிடிக்கும். Toronto Star, Globe & Mail, National Post போன்ற பத்திரிகைகள் இருந்தன. Toronto Star லிபரல் எண்ணங்களைக் கொண்டவர்களுக்குரியவை;  Globe & Mail அறிவுஜீவிகளுக்குரியவை; National Post வலதுசாரிகளுக்குரியவை; இப்படி ஓர் எளிய புரிதலுக்காய் வகுத்துக் கொள்ளலாம். 

 

Toronto Sun என்கின்ற இன்னொரு நாளாந்த பத்திரிகையை நூலகத்தில் காணவில்லை. அழகிகளை Sunshine Girl  என்ற  நீச்சலுடையில்  3ம் பக்கத்தில் போடுவார்கள்.  மூன்றாம் பக்கம் தவிர மிச்சம் எல்லாம்  வலதுசாரி அரசியலும்/கிசுகிசுக்களும் அதில் நிரம்பியிருக்கும். இதாவது பரவாயில்லை, இலண்டனுக்கு முதல் தடவை சென்றபோது அங்குள்ள Sun வாங்கப்போக அங்கே Sunshine Girl, topless ஆக இருக்க, அதை நான் நின்ற வீட்டில் மறைக்கப்பட்ட பாடு இருக்கிறதே. நாசமாய்ப் போக!

 

0000000

 

இப்போது கனடாவின் பொருளாதாரம் Recession இல் வந்து நிற்கின்றது. அத்தோடு இப்போது இங்கு பேசுபொருளாக இருப்பது மக்கள் வசிப்பதற்கான வீடுகளுக்கான பற்றாக்குறை. இந்தப் பிரச்சினையோடு, இன்றைய மத்திய அரசு நிறைய குடிவரவாளர்களை கனடாவுக்குள் எடுக்கின்றார்கள் என பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பும் வரத்தொடங்கியுள்ளது என்ற பேச்சும் வரத் தொடங்கியிருக்கிறது.

 

வீட்டுப் பற்றாக்குறையோடு புதிய குடிவரவாளர்களை எப்படி முடிச்சுப் போடுகின்றார்கள் என்பதை மேலுள்ள மூன்று பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளை இணைத்து வாசிப்பதென்பது சுவாரசியமானது. இவ்வாறான பொழுதுகளில் எவ்வளவுதான் அடக்கினாலும், எல்லோருடைய அரசியல்/இனத்துவ பூதங்களும் அவர்களின் வீட்டுக்கு வெளியே வந்துவிடும்.

 

Toronto Star இல், உலகமயமாதல் எப்படி கனடாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதைப் பற்றிய கட்டுரையில், கனடாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரின் மிகப்பெரும் பதாதையுள்ள புகைப்படம் வந்தது வியப்பாயிருந்தது. விளிம்புநிலையினரைப் போலவே கனடாவின் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். எப்போதாவது மேதினம் போன்ற நாட்களில்தான் அவர்கள் வெளியுலகிற்குத் தெரிவார்கள்.

 

ஒரு மே தினத்தில் இப்படிப் பதாதைகளோடு கோசமிட்டுக் கொண்டு நின்ற கம்யூனிஸ்ட் கட்சியினரைப் பார்த்த, ஒரு தமிழக -திமுக ஆதரவு- நண்பர், 'இவர்கள் இந்தக் கொடியோடு இப்படியே எல்லா இடத்துக்கும் வந்துவிடுவார்கள்' என்று எள்ளலாகச் சொல்லப் போக,  'அப்படி என்ன இளக்காரம்' என அவரோடு தொடங்கிய அரசியல் பேச்சு சூடாகிக் கொந்தளிப்புக்குப் போனது.  அதற்குப் பிறகு 'என்னை ஒரு கம்யூனிஸ்டாகவேஅடையாளப்படுத்தி அந்த நண்பர் நக்கலடித்துக் கொண்டிருப்பார். ஆனால் இலங்கை/இந்தியாவிலிருக்கும் இடதுசாரிகளோடு எனக்கிருக்கும் முரண் அவருக்குத் தெரியவா போகிறது?

 

Toronto Star இப்போது முன்பிருந்த செழிப்பில் இல்லை. பக்கங்கள் மட்டுமில்லை, அகலத்தைக் கூட குறைத்துவிட்டார்கள். ஒருகாலத்தில் குளுகுளுவென்று பாய்ந்த நதி, இப்போது மெலிந்த கோடாக நகர்வதைப் போன்று அது தோற்றமளித்தது. கனடா வந்த புதிதில் எனது சகோதரரோடு 'ரொறொண்டோ ஸ்டாரை' வீடுவீடாக, அடுக்ககம் அடுக்ககமாய்ச் சென்று போட்டது நினைவுக்கு வந்தது.

 

சனிக்கிழமையில் 'அதன் வளப்பம்' ஒரு கைக்குள் அடங்க மறுப்பது. பனி கொட்டும் காலத்தில் அப்படி எடை கூடிய பேப்பர்க்கட்டை கையுறையோடு சேர்த்து வீடு வீடாகப் போடுவது நரகத்திற்குச் சென்று உலவுவதைப் போன்றது. ஆனாலும் அன்று நமக்கு ஏதோ ஒருவகையில் உணவிட்டது இந்த பத்திரிகை விநியோக வேலைதான். ஆகவே இந்தப் பத்திரிகை என்றும் நின்றுவிடாது அச்சில் வந்து கொண்டிருக்க வேண்டுமென மனம் அவாவியது.

 

0000000

 

அவ்வாறு பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தபோது நான் எடுத்து வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு ஒருவர் இது என்ன மொழிப் புத்தகங்கள் எனக் கேட்டார். நான் தமிழ் என்றதும் எங்கே இம்மொழி பேசப்படுகின்றது என்று கேட்கவும் நம் பேச்சு நீளத் தொடங்கியது. அவரும் எழுதுபவர். கவிதைகள் எழுதுகின்றேன், ஆனால் அவ்வளவு நல்லதில்லை என்று சற்று கூச்சத்தோடு சொன்னார். பிறகு அவர் இரவல் எடுத்திருந்த கவிதைப் புத்தகங்களைக் காட்டினார். நிறைய கிளாஸிக் கவிதைகள். ஹக்கூவும் பிடிக்கும் என்றார்.

 

சில வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் ஒரு நண்பரோடு பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர் என்னைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும்போது 'ஒரு எழுத்தாளர்' என்று சொல்லி என்னை அறிமுகப்படுத்துவார். நான் கூச்சத்துடன் அப்படியெல்லாம் அறிமுகப்படுத்தத் தேவையில்லை என்றாலும் ' ஒருவருக்கு எது அதிகம் பிடிக்கின்றதோ, அதன் பேரிலே ஒருவரைப் பிறருக்கு அறிமுகம் செய்தலே நியாயம்' என்பார். என்னிடம் 'எது உனக்கு  இந்த உலகில் அதிகம்  பிடிக்கும்' என்றபோது, நான் அவரிடம் 'வாசிப்பதும் எழுதுவதும் பிடிக்கும்' என்று சொன்னதால் வந்த விளைவு இது.

 

இப்போதும் ஒரு நண்பர் என்னை அப்படித்தான் பிறரிடம் அறிமுகப்படுத்துவார். அநேகமாக இவனைப் பற்றி வேறு சொல்லி அறிமுகப்படுத்த எதுவுமில்லை, பாவம் இப்படியாவது பிழைத்துப் போகட்டும்' என்பதாக இருக்கக் கூடும்.

 

நூலகத்தில் சந்தித்தவருக்கும் எனக்கும் இடையில் எழுத்து/வாசிப்பு பற்றிப் பேச்சுப் போனபோது நானும் தமிழில் எழுதுகின்றவன் எனச் சொன்னேன். அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரின் கெட்டகாலமாக எனது நூலொன்றும் அந்த நூலகத்தின் இரவல் பெறும் பகுதியில் இருந்தது. அதை எடுத்துக் காட்டினேன். தானெழுதிய கவிதைகளை அனுப்புகின்றேன், வாசித்துக் கருத்துச் சொல்லமுடியுமா எனக் கேட்டார். நாங்கள் நமது மின்னஞ்சல்களைப் பகிர்ந்து  விடைபெற்றுக் கொண்டோம்.

 

0000000

 

அவர் போனபின் பத்திரிகைகளை வாசித்தபடி, நூலகத்தில் நடப்பவற்றை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். பல்வேறு மனிதர்களை நூல்கள் எப்படி இணைக்கின்றதென்பது அவதானிப்பதும், அங்கு நடக்கும் உரையாடல்களைக் கவனிப்பதும் சுவாரசியம் தரக்கூடியது. ஒருவர் வந்து தன் சொந்தக்கதையை எல்லாம் நூல்களை இரவல் பெறும் சாக்கில் நூலகரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

இன்றைக்கு கனடாவில் தமிழர்கள் உள்ளிட்ட பலர் முதுமையில் தனிமையில் இருக்கின்றார்கள். எனக்குத் தெரிந்த சில நண்பர்களுக்கு இந்த வயது முதிர்ந்தவர்கள்/ஓய்வுபெற்றவர்களில் இருந்து வரும் அழைப்புக்களை எடுத்துப் பார்த்தாலே எவ்வாறு பலர் தனிமையில் உழல்கின்றார்கள் என்பது புரியும். இவ்வாறான விடாத அழைப்புக்களைப் பார்க்கும்போது நான் முதுமையடையும்போது இப்படியொருவனாக, மற்றவர்களைத் தொந்தரவுபடுத்துபவனாக மாறிவிடக்கூடாது என நண்பர் ஒருவரிடம் அண்மையில் சொல்லியிருக்கின்றேன்.

 

இன்னொருவகையில் முதியவர்கள் மட்டுமில்லை நாமனைவருமே தனிமையில் இருக்க மிகவும் அவதிப்படுகின்றோம். கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் கூட அந்தத் தனிமை வெறுமையைப் பரப்பி நம்மை எதையோ தேட வைத்துவிடுகின்றது. தனிமையை இளமையில் நிதானமாக எதிர்கொள்பவர்கள் மட்டுமே வாசிப்பிலோ, இசையிலோ, இன்னபிற நுண்கலைகளிலோ தம்மைத் தொலைத்துவிடக் கூடியவர்களாக பின்னாட்களில் மாறுகின்றார்கள். அவ்வாறில்லாது படிப்பு/வேலை/குடும்பம் என்ற ஒற்றைப்பாதையில் (அதைத்தான் சமூகம் விரும்புகின்றது) செல்கின்றவர்கள் இறுதியில் மனிதர்கள் அருகில்லாதபோது என்ன செய்வதென்று திகைத்துப் போகின்றார்கள். அந்த வெற்றிடத்தை நிரப்ப யாரையோ அல்லது எதையையோ அவர்களைத் தேடவைக்கின்றது. அது நிரப்பப்படாதபோது  காழ்ப்பும்/கசப்பும் நிறைந்த மனிதர்களாக அவர்களை ஆக்கி எதிர்மறைச் சிந்தனைகளின் சுழல்களுக்குள் கொண்டு போய்விடுகின்றது.

 

இதனால் அவர்கள் மட்டுமில்லை அவர்களோடு பழகுகின்றவர்களையும் அது பாதிக்கச் செய்கின்றது. இதிலிருந்து வெளிவந்தவர்கள்/வருபவர்கள் மிக அரிதே. சமூக வலைத்தளங்களிலும் இந்தத் தனிமையைத் தாங்கமுடியாது தம்மையும்/பிறரையும் தொந்தரவுக்குட்படுத்தும் பலரை நாம் எளிதாக அடையாளங்காண முடியும்.  சமூகவெளியில் உலாவும் பெண்களைக் கேட்டால் இந்தத் 'தொந்தரவுகள்' குறித்து இன்னும்  விரிவாகச் சொல்வார்கள்.

 

ஹென்றி மில்லரின் ஒரு நூலை இரவல் வாங்கப் போய், எது எதுவோவெல்லாம் நினைவுக்கு வருகின்றது. இந்த நூலில் ஹென்றி அவர் வாசித்து அவர் பாதிப்புச் செலுத்திய நூல்களைப் பற்றி எழுதியிருக்கின்றார். இப்புத்தகத்தின் பிற்பகுதியில் (Appendix) இருக்கும் பகுதிகளும் சுவாரசியமானவை. அதில் ஹென்றி தேர்ந்தெடுத்த நூறு முக்கிய நூல்கள் பற்றிய பட்டியல் ஒன்று இருக்கின்றது. அவ்வாறே 'நான் இன்னமும் வாசிக்க வேண்டிய நூல்கள்' (Books I still intend to read) என்ற பகுதியும், 'நண்பர்கள் எனக்கு வழங்கிய புத்தகங்கள்' என்ற பக்கங்களும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

 

எனக்கிருக்கும் நண்பர்கள் நான் விரும்பும் நூல்களை -ஹென்றி மில்லருக்கு அவரது நண்பர்கள் வழங்கியது போல- எனக்கு  ஒருபோதும் மனமுவந்து தருவதில்லை.

 

ஆகவேதான் நான் நண்பர்களிடமிருந்து புத்தகங்களைத் திருடுகின்றேன்.

 

*********** 


(Sep 14, 2023)