கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பத்திரிகையாளர் சிவராம் (தராக்கி) கொழும்பில் கொலை

Thursday, April 28, 2005


இன்னொரு கறுப்பு நாள்


photo

81 மே 31 இரவு

ராணி!
இன்னும் வரவில்லையென்று
அச்சம் சூழ
வாசலைப் பார்த்தபடி
எனக்காக காத்திருப்பாய்.

ஆதரவிற்கு
உன்னருகில் யாருண்டு...?
வீட்டினுள்ளே
சின்னஞ் சிறுசுகள்
மூலைக்கொன்றாய்
விழுந்து படுத்திருக்கும்.

வெறிச்சோடிய வீதியில்
நாய்கள் குரைக்க
விரைந்தோடிய ஒருவனால்
செய்திகள் பரவ
இன்னும் கலங்குவாய்.

தொலைவில்
உறுமும் ஜீப்பின் ஒலியில்
விளக்கை அணைத்து
இருளில் நின்றிப்பாய்.

உயிரைக் கையில் பிடித்தபடி
குண்டாந் தடிக்கும்
துப்பாக்கி வெடிக்கும்
தப்பியோடிய மக்களில் ஒருவனாய்
என்னை நினைத்திருப்பாய்.

நானோ...!
நம்பிக்கையின்
கடைசித் துளியும் வடிந்து
மரணத்தருகே.

சூழவும்
உடைபடும் கடைகளின் ஒலியும்,
வெறிக் கூச்சலும்,
வேற்று மொழியும்
விண்ணுயர்ந்த தீச்சுவாலையும்.

-மு.புஷ்பராஜன்

(1981/அலை-18)
நன்றி: மரணத்துள் வாழ்வோம்: ஈழத்துக் கவிதைகள்
{இந்தக்கவிதை எழுதப்பட்டு கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாகியும் ஈழத்தமிழர் வாழ்வில் எந்தமாற்றமும் வரவில்லை என்பதைத்தான் யதார்த்தம் கோரமுகத்துடன் மீண்டும் இன்றையபொழுதிலும் நிரூபிக்கின்றது.}

சில சஞ்சிகைகள்: சிறு குறிப்புக்கள்

Thursday, April 21, 2005

பொங்கல் - ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பு மலர் 2005தமிழர் தகவல் மாத இதழ், ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. இச் சிறப்பிதழ் வெளிவர பத்மநாப ஜயர் முன்னின்று உழைத்திருக்கின்றார். பெரும்பாலான சிறுகதைகள் ஏற்கனவே பிரசுரமாயிருந்தபோதும், ஈழத்துச் சிறுகதைகளை ஒரேயிடத்தில் பார்க்கும் அரிய வாய்ப்பு இவ்விதழில் இருக்கின்றது. சென்ற தலைமுறைகாலத்தவர்களாகிய, எஸ்.எஸ்.எம்.ராமையா, மு.தளையசிங்கம், வ.அ.இராசரத்தினம், என்.கே.ரகுநாதன் தொடங்கி இன்றைய தலைமுறைகால எழுத்தாளர்களின் படைப்புக்கள் வரை இதில் சேர்க்கப்பட்டுள்ளன. சாந்தனின் கிருஷ்ணன் தூது, எஸ்.எல்.எம்.மன்சூரின் சிறு தீப்பொறி மூண்டு பெரு நெருப்பாக எரியும், உமா வரதராஜனின் அரசனின் வருகை, எஸ்.எல்.எம்.ஹனிபாவின் மக்கத்து சால்வை, பார்த்திபனின் தீவு மனிதன், ரஞ்சகுமாரின் கோளறு பதிகம், குமார் மூர்த்தியின் மஞ்சள் குருவி போன்றவை எழுதப்பட்ட காலங்களில் பரவலாகப் பேசப்பட்ட ஆக்கங்கள். இங்கே வலைப்பதிவில் எழுதும் பெயரிலியின் திறப்புக்கோர்வையும், பிரதீபா தில்லைநாதனின், இன்றில் பழந்தேவதைகள் தூசிபடிந்த வீணை கொஞ்சம் நினைவுகளும் உள்ளன. பிரதீபா எழுதிவற்றில் எனக்குப் பிடித்தமான கதைகளில் இதுவும் ஒன்று. காதலையும் அதன் இழப்பையும் மிகவும் இயல்பாய் எனக்கு நெருக்கான மொழியில் சொல்வதால் என்னை அந்தக்கதை பாதித்திருந்தது. அ.ரவி, நிரூபா, பா.ரஞ்சினி, திசேரா போன்றவர்களின் கதைகள், நல்ல வாசிப்பனுவத்தைத் தருகின்றன. ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகள் தமது படைப்புக்களை தொகுப்பாய் வெளியிடுவதில் மிகுந்த சோம்பலாக இருப்பதில் (அதில் என்ன பெருமையோ எனக்கு இன்னும் புரியவில்லை) இவ்வாறான தொகுப்புக்களைத்தான் விரிந்த வாசிப்புகளுக்காய் எதிர்ப்பார்த்திருக்க வேண்டியிருக்கின்றது. அந்தவகையில் இதை சாத்தியமாக்கிய பத்மநாப ஜயரினதும் ஏனையவர்களினது உழைப்பு நிச்சயம் மதிக்கப்படவேண்டும்.

காலம் -இதழ் 23இருபத்து மூன்றாவது இதழாக மார்ச் மாதத்தில், காலம் வெளிவந்திருக்கின்றது. அ.முத்துலிங்கத்தின் நேர்காணல் இதில் முக்கிய அம்சம். அ.முத்துலிங்கத்தின் கதைகள் போலவே, நேர்காணலின் அவரது பதில்களும் புன்னகையை வரவைக்கின்றது. அ.முத்துலிங்கம் கூறுவது மாதிரி, 'ஆனால் எனக்கு ஒரு துக்கம் உண்டு. கனடா இலங்கை இல்லை: இந்தியா இல்லை: மலேசியா இல்லை: முன்னேறிய நாடுகளில் ஒன்று. Yaan Martel, Michael Ondaatje, Alice Munro போன்ற உலகத்து தலை சிறந்த எழுத்தாளர்கள் வசிக்கும் நாடு. இவர்கள் ஒழுங்கு செய்யும் இலக்கியக் கூட்டங்களுக்கோ, சந்திப்புக்களுக்கோ, நாமும் போய் எமது இலக்கிய அறிவை வளர்த்துக்கொண்டு மையநீரோட்டத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். ஒரு கட்டணமும் கட்டாமல் பயன்படுத்துவதற்கு நூலகங்கள் நிறைய இருக்கின்றன. இலக்கிய ஆய்வுகளுக்கு அரச ஆதரவு கொடுக்கிறது. அவற்றின் முழுப்பயனையும் நாங்கள் பெறவில்லை. அடுத்த தலைமுறையாவது இதை நிவர்த்தி செய்யட்டும்' என்று கூறியதை கனடாவில் என்றில்லாது அனைத்து புலம்பெயர் நாடுகளுள்ள இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் கவனத்தில் கொள்ளலாம். (Yann Martel பற்றி வாசித்தளவில், அவர் தனது Life of Pi ஜ எழுதும்வரை பணத்திற்கு கஷ்டப்பட்டவர். ஒரு நாவல் எழுதுவதற்காய் மும்பாய் போய், திருப்தி வராமல் கொஞ்சம் எழுதிய நாவலொன்றைக் கிழித்தெறிந்துவிட்டு, இருந்த சொற்பபணத்தில் பாண்டிச்சேரிக்கு சுற்றுலாப்போனபோது ஒரு பட்டேலின் கதையைக் கேட்டபின் தான், பிரபலமான Life of Piஜ எழுதியிருந்தார். புக்கர் பரிசு இந்த நாவலிற்காய் அவருக்குக் கிடைத்திருந்தது). சிறுகதைச் சிறப்பிதழ் என்று காலத்தின் முன்னட்டையில் குறிப்பிட்டிருந்தாலும், நான் வாசித்த தெளிவத்தை யோசப், மு.பொன்னப்பலம், க.கலாமோகன், மணிவேலுப்பிள்ளை ஆகியோரின் கதைகள் மிகவும் மோசமானவை. என்.கே. மகாலிங்கம் (சினுவா ஆச்சியின் சிதைவுகளை, இவர் மொழிபெயர்த்து காலச்சுவடும் காலமும் இணைந்து வெளியிட்டதென்று நினைக்கின்றேன்), சார்த்தரின் சுவர் என்ற கதையை மொழிபெயர்த்துள்ளார். சற்று நீளமான கதை. செல்வா கனகநாயகம் எழுதியுள்ள இலக்கியத்திறனாய்வும் இலக்கிய வரலாறும் மிகுந்த dry தன்மையுள்ள கட்டுரை. பல்லைக் கடித்துக்கொண்டு முழுதாய் வாசித்துமுடித்தபோதும், என்னால் எதுவுமே அதிலிருந்து கிரகிக்கமுடியவில்லை. தேவகாந்தன், ஷோபாசக்தியின் 'ம்' குறித்து ஒரு விமர்சனத்தை எழுதியுள்ளார். ஷோபாசக்தியின், 'ம்' மற்றும் 'கொரில்லா' குறித்து சற்று விரிவாக இன்னொரு பதிவு எழுத விருப்பமுள்ளது (முக்கியமாய் நண்பர்கள் பலருடன் விவாதித்ததை தொகுத்து எழுதும் எண்ணம் ஒன்று எனக்கு உள்ளது). மற்றபடி குறிப்பிட்டுச்சொல்லும்படியாக 23வது காலம் இதழில் இல்லை. ஒரு புலம்பெயர்ந்த சூழலில் கால ஒழுங்கு இல்லாவிட்டாலும் 23வது இதழை காலம் ஆசிரியர் செல்வம் வெளியிடுவதைப் பாராட்டத்தான் வேண்டும்.

அறிதுயில்- இதழ் 2கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ர·பேலை ஆசிரியர்களாகக் கொண்டு அறிதுயில் என்றொரு சஞ்சிகை வெளிவருகின்றது. இது இரண்டாவது இதழ். முதலாவது இதழை பிரமீள் சிறப்பிதழாக வெங்கட்சாமிநாதன் கனடா வந்தசமயத்தில் வெளியிட்டதாய் கற்சுறா கூறுகின்றார். தெரிதாவுடன் ஓர் உரையாடல் என்ற ர·பேலின் ஆங்கிலம் வழி தமிழில் ஒரு மொழிபெயர்ப்பு இருக்கின்றது. கருமையம் நடத்திய நாடகஙள் குறித்து வரனும், கெளசல்யாவும் இரண்டு விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள். பத்மநாப ஜயரிற்கு இயல்விருது வழங்குவது குறித்த தமது அதிருப்தியை கற்சுறாவும், எம்.ஆர்.ஸ்ராலினும் கட்டுரைகளில் முன்வைக்கின்றனர். பத்மநாப ஜயரிற்கு கொடுக்கப்படும் விருதில் எனக்கு எதிர்நிலை இல்லையெனினும், கற்சுறா வினாவுவதுபோல இயல்விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும் முறைகள் பற்றியும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் வெளிப்படையாக அறிவிக்கப்படவேண்டும் என்றுதான் நானும் நினைக்கின்றேன். '' இந்தத் தெரிவுக்குழு தமது ஒவ்வொருத்தரின் பெயரில் விருது கொடுத்தால் நாம் ஒருபோதும் அதுபற்றி அக்கறைப்படப்போவதில்லை.... அதை விடுத்து ரொரண்டோ பல்கலைக்கழகம், கனடாத் தமிழ் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம், உலகத்தமிழ் இலக்கியம் என்று மொத்தக் குத்தகையில் விருதுக்கு பெயரிட்டு விட்டு இந்த விருதைக் கொடுக்கும்போதுதான் சிக்கல் வருகின்றது' என்று கற்சுறா கூறுவதில் நியாயம் உள்ளதுபோலத்தான் எனக்கும்படுகின்றது. அறிதுயில் தொடர்ந்து வெளிவரவேண்டும். ஆனால் ஒருவரே பல்வேறு பெயர்களில் எழுதி சஞ்சிகையின் பக்கங்களை நிரப்பாமல், ஏனையவருக்கும் பக்கங்களை பகிர்ந்துகொண்டால் நல்லதுபோலத்தோன்றியது. அறிதுயிலை நீங்கள் இணையத்திலும் வாசிக்கலாம்.

தேவகாந்தனின் 'கதாகாலம்'தேவகாந்தனின் கதாகாலம் குறித்து எழுதவேண்டும் என்று நினைத்திருந்தபொழுதில் வெங்கட் விரிவான ஒரு பதிவைத் தனது தளத்தில் எழுதியிருப்பதால் சில குறிப்புக்களை மட்டும் கூறிவிட்டு ஓடிவிடுகின்றேன். வரன், மகாபாரதம் பிராமணீயத்திலிருந்து வந்தது என்று கூறினாலும், சிவதாசன் அதை மறுதலித்திருந்தார். அதனால்தான் அவர் யுகாந்தாவின் மகாபாரதத்தை முன்னிலைப்படுத்தினார் என்று நினைக்கின்றேன். எனினும் இதுகுறித்த விரிவான விவாதம் நடைபெறாதது என்னளவில் ஏமாற்றமே. தேவகாந்தனின் கதாவிலாசம் மறுவாசிப்பில்லை என்று வரனும், கற்சுறாவும் மறுதலித்திருந்தனர் (re-reading மட்டுமே, retold அல்ல). நான் இந்த நூலை இன்னும் வாசிக்காதபடியால் விரிவாக எதுவும் கூறமுடியாது எனினும், விமர்சித்தவர்களின் குரல்களைக் கேட்டதை வைத்துப்பார்க்கும்போது மகாபாரதத்தில் விடுபட்ட பகுதிகளைத்தான் தேவகாந்தன் சொல்ல முயன்றிருக்கின்றார் போலத்தோன்றியது. முக்கியமாய் பெண்ணிய வாசிப்பில், இது எந்தவிதத்திலும் அசல் பிரதியைக் கேள்விக்குள்ளாக்கவில்லை என்று நிர்மலா கூறியதற்கு, எல்லாவற்றையும் உடைக்கவேண்டும் என்றால் மகாபாரதத்தை மறுவாசிப்பது சாத்தியமில்லை, ஒரு புதுப்பிரதியைத்தான் எழுதவேண்டும் என்று தேவகாந்தன் கூறியிருந்தார்.யுத்த எதிர்ப்பு அதில் சாராம்சமாய் இருக்கின்றது என்பதற்தாய், கொழுத்த முலைகளும், கங்கை போன்ற புனிதமும் கொண்ட பெண்களைச் சித்தரிக்கும் ஆசிரியனை கேள்விப்படுத்தாமல் இருக்கமுடியாது. ஒரு பெண்ணின் மனோநிலையில், பிற்போக்குத்தனமான ஒரு நாவலாகத்தான் அடையாளங்கொள்வேன் என்று நிர்மலா கூறியசமயத்தில், பின்நவீனத்துவவாதியாக தனது பேச்சின் தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்திய வரன், படுப்பது போன்ற சில வார்த்தைகளை ஒரு சாதாரண ஆணாதிக்கவாதி நிலையில் நின்று கூறியது வியப்தைத்தான் ஏற்படுத்தியது. அத்தோடு, போரிற்கு ஆண் சென்றால், ஊரில் இருக்கும் பிற ஆண்களுடன் உறவுகொள்வதற்கான சுதந்திரம் பெண்களுக்கு முற்காலத்தில் இருந்ததெனவும் சுட்டிக்காட்டியதுடன், கள்ளஞ்செய்து பிற ஆண்களுடன் பெண் படுப்பதைவிட, இப்படி வெளிப்படையாக உறவுகள் வைக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு முற்காலத்தில் இருந்தது என்று சுட்டிக்காட்டினார். பல ஆண்களுடன் ஒரு பெண உறவு கொள்வதால் பெண்ணின் பிற பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது அப்படியிருக்கும் சுதந்திரந்தான் பெண்கள் வேண்டி நிற்கும் உண்மையான சுதந்திரமா? வரன் இப்படி அபத்தமாய் கூறினார் என்றால், அருகிலிருந்த மகாலிங்கம், ஓம் எனக்குத் தெரிய அநுராதபுரத்திலுள்ள ஒரு கிராமத்திலும் இப்படியான வழக்கம் இன்னும் இருக்கின்றது என்று ஒத்துப்பாடினார். பெண்களுக்கு பல ஆண்களுடன் உறவு இருக்கின்ற சமூகம் exist ஆகின்றதா அல்லது இல்லையா என்பதல்ல கேள்வி. இன்றைய நாம் வாழும் சமூகத்தில் பெண்கள் குறித்து நீங்கள் என்ன கருத்தை தேவகாந்தனின் கதாவிலாசத்தை முன்வைத்து கூறுகின்றீர்கள் என்பதுதான் என்னைப்பொறுத்தவரை முக்கியம். யுத்த எதிர்ப்பு இருந்தாலும், பிற்போக்குத்தனமான பெண்ணடிமைப்பிரதியாய், கதாவிலாசம் இருப்பின் (வாசிக்கும்போது தெரிந்தால்) நிச்சயம் நான் இந்தப்பிரதியை நிராகரிக்கவே செய்வேன். வரன், அசல் மகாபாரதத்தில், சாபக்கேடு அல்லது பாவம் என்ற வார்த்தைகள் அடிக்கடி வருகின்றமாதிரி, தேவகாந்தனின் நாவலில் இரண்டு பக்கங்களுக்கொருமுறை காமம் பற்றிய விவரணைகள் இருப்பதாய் கூறியது முக்கிய விடயம். அதுவும் சிலசமயங்களில் ஒரே வார்த்தைகள் திரும்பத்திரும்ப வருவது வாசிக்கையில் அலுப்பைத்தருவதாகவும், இப்படித் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகளை நீக்கும் பணி பதிப்பாளருக்குரியது என்று குறிப்பிட்டது முக்கியமான குறிப்பு . ஆனால் பிரதியை வாசித்து விமர்சித்த அனைவரும் தேவகாந்தனின் எழுத்து நடை மிகச்சிறப்பாகவும் கவிதை நடையிற்கருகிலும் இருக்கின்றது என்று பாராட்டியிருந்தனர்.இரண்டாம் அமர்வில், ஏன் இப்படியான புத்தகத்தை வெளியிட வேண்டிய அவசியம் காலத்திற்கு வந்தது என்று கேட்கப்பட்டபோது, காலம் செல்வம் இது ஒரு யுத்த எதிர்ப்பிற்கான பிரதி, இன்னவும் துரியோதனன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்று கூறினார். முதலாம் அமர்வு முடிந்து விடப்பட்ட இடைவெளியில் வழங்கப்பட்ட வடையை தவறுதலாக கீழே விழுத்தி, சரி விற்பனைக்காய் வைக்கப்பட்ட புத்தகஙகளைப் பார்த்துவிட்டு இன்னொரு வடையை ஆறுதலாக எடுக்கலாம் என்று நினைத்து, பிறகு போய்பார்த்தால், வடைப்பிரியர்கள் வடைகளை அடையாளமில்லாது முடித்துவிட்டிருந்தனர். வடை சாப்பிடும் அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டேனென்று கவலையுடன் யோசனையிலிருந்த எனக்கு, காலம் செல்வம், துரியோதனன் இன்னும் இருக்கின்றான் என்று கூறியது ஒரு அசரீரீயாகக் கேட்க, 'அப்படியெனில் யார் அந்தத் துரியோதனன்'? என்று நான் செல்வத்தைப் பார்த்துக்கேட்க, செல்வமோ, 'இப்போது கூறமுடியாது' என்று என்னைத் திரும்பி பார்த்துக் கூறினார். பிறகு மகாலிங்கமும், தேவகாந்தனும் நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார், ஆனால் அவர் நெருங்கிப்பழகிய ஜெயமோகன், சுஜாதா போன்றவர்கள் கூட தேவகாந்தனின் படைப்புக்கள் குறித்து எதுவும் கூறாது மெளனஞ்சாதிப்பதாய் கூறினார். ஜந்து பாகங்களாய் தேவகாந்தன் எழுதிய பெரிய சைஸ் புத்தகங்களைத் தானும் வாசிக்கவில்லை என்றே மகாலிங்கமும் கூறினார். பெரிய சைஸ் புத்தகங்களை தனது இளமைப்பருவத்திற்கு பிறகு வாசிப்பது என்றால் அலர்ஜி என்று கூறியபோது, அப்படியெனில் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும், பின் தொடரும் நிழலின் குரலும் நீங்கள் வாசிக்கவில்லையா என்று நான் கேட்க நினைத்தேன். அந்த சமயம்பார்த்து காலம் செல்வம் கேக்குகளை பரிமாறத் தொடங்கியிருந்தார் (பார்க்க மேலேயுள்ள படம்). கேள்வி கேட்பதைவிட ஆக்ககுறைந்தது வடையைப்போலல்லாது கேக்கையாவது சுவைபார்த்துவிடு என்று எனது ஆறாவது அறிவு எச்சரிக்கை செய்ய வழமைபோல உணவுக்கு பின் எனது கண்கள் அலைபாயத்தொடங்கிவிட்டன (கேக் மிகவும் ருசியாகவும் இருந்தது).அறையினுள் விவாதமாய் சிலவற்றை காரசாரமாய் உரையாடினாலும், வெளியில் நண்பர்களாய் முகங்களைச் சுழிக்காது, இயல்பாய் அனைவரும் பேசியது மனதிற்கு மிகவும் நிறைவைத்தந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும்.
.......
தேவகாந்தனின் கையெழுத்திடும் புகைப்படம் மட்டும்: இங்கிருந்து

ரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு

Tuesday, April 19, 2005

விரைவில் ரொரண்டோவில் வலைப்பதிவர் சந்திப்பொன்றை நடத்தலாமென்று ஒரு எண்ணம் மதியும், கறுப்பியும், பெயரிலியின் பதிவில் பின்னூட்டங்கள் இட்டபின் எனக்கும் தோன்றியுள்ளது. அதற்கான சில யோசனைகளை கனடாவில் வசிக்கும் ஒரு 'குடி'மகன் என்ற வகையில் நானும் முன்வைக்கலாம் என்று யோசித்துள்ளேன்.

முதலாவது முக்கிய நிபந்தனையாக சந்திப்பின்போது புகைப்படங்கள் எடுத்தல் தடைசெய்யப்படவேண்டும். புகைப்படங்கள் எடுத்து எமது உண்மையான வயதுகள் தெரியும்பட்சத்தில் இதுவரை நாம் (முக்கியமாய் நான்) எமது தளத்தில் கட்டியெழுப்பிய பிம்பங்கள் அனைத்தும் உடைந்துவிடும் அபாயம் இருப்பதால் ஒரு முன்னெச்சரிக்கையாய் இருக்கவிரும்புகின்றேன்.

இரண்டாவது, சந்திப்பில் கலந்துகொள்ளும் அனைவரும் தமது பதினாறு வயதுப் புகைப்படங்களுடன் வரவும். அந்தப்படங்களை பிரசுரிப்பதன் மூலம் ஏனைய நாடுகளிலுள்ள நண்பர்களை நாம் இன்னும் பதின்மவயதில் இருப்பவர் என்று இலகுவாய் நம்பவைக்கலாம். படங்களின் நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிப்பதற்காய் சிறந்த கிராபிக் கலைஞரான பெயரிலியின் உதவியையும் நாம் நாடத்தயங்கத்தேவையில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

முக்கியமாய், கலந்துகொள்ளப்போகும் அனைவரும் சுவையான உணவுப்பதார்த்தங்களை தங்களுடன் கொண்டுவரவேண்டும். அதுவும் தாங்களாகவே தயாரித்ததாகவே இருக்கவேண்டும். சந்திப்பின்போது ஏனைய வலைப்பதிவர்கள் இந்த உணவு எப்படித் தயாரிக்கப்பட்டது என்று ஏதேனும் சந்தேகம் எழுப்பினால், அந்த உணவின் ரெசிப்பியைத் தடங்களின்றி, விளக்கமாய்க் கூறவேண்டும். அவ்வாறு கூறாதுபட்சத்தில் கூட்டத்திலிருந்து முற்றுமுழுதாக வெளியேற்றப்படுவீர்கள்.

உணவை உண்பதுவும் இரசிப்பதுவும் நமது முக்கிய விடயமாக இருப்பதால், உங்கள் பதினாறு வயதுப்புகைப்படங்களில் ஏதாவது உணவு தெரியும்படி பார்த்துக்கொள்ளவும். அப்படியெனில்தான் சம்பவங்களுடன் விபரிக்கும்போது நமது புகைப்படங்களையும் ஏனையவர்கள் இலகுவில் நம்புவார்கள்.

எந்தக்காரணம் கொண்டும் இலக்கியமோ அல்லது இலக்கியவாதிகள் பற்றியோ சந்திப்பின்போது பேசக்கூடாது. அவ்வாறு வாய்தவறிப்பேசுபவர்களுக்குத் தண்டனையாக மதியின் பதிவிலுள்ள சிறுவர் பாடலொன்றைப் பாடச்சொல்வதுடன், அந்தப்பாடலுக்கு அபிநயித்துக்காட்டவும் வேண்டப்படுவர்.

இறுதியாய் நமது சந்திப்பை வரலாறு காணாத சந்திப்பாய், ஆக்ககுறைந்தது 24 பேராவது (சென்னைச் சந்திப்பில் 23 பேர் பங்குபற்றியதால்) கலந்துகொள்ளவேண்டும். ஆகவே இப்படியொரு மிகப்பெரும் சந்திப்பை நிகழ்த்தவேண்டியிருப்பதால் கலந்துகொள்ளும் நண்பர்கள் தமது பெயர்களுடன், தமது வலைப்பதிவுகளையும் முன்கூட்டியே பதிவுசெய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள். 23 பேரைத் தாண்டாவிட்டால், நான் வேறு சில பெயர்களில் புதிய வலைப்பதிவுகளை உருவாக்கி இந்தந்தப் பெயரிலுள்ள நண்பரகள் எல்லாம் கலந்துகொண்டார்கள் என்று பிறகு பீலா விட்டு பிறரை இலகுவில் நம்பவைக்கலாம். எனினும் காசி, ஒரே ஜபி முகவரியில் இருந்து பல தளங்களை உருவாக்கினால் என்னைக் கையும் மெய்யுமாக பிடித்துவிடக்கூடும் என்ற பயமிருப்பதால், புதிய தளங்கள் உருவாக்கும் இந்த இன்பச்சுமையை ஏனைய நண்பர்கள் என்னோடு தயவு செய்து பகிர்ந்துகொள்ள முன்வரவும். இந்தச் சமயத்தில் பதின்மத்தில் இருக்கும் உங்கள் சகோதர, சகோதரிகள், உறவுக்காரர்கள் புகைப்படங்களையும் இயலுமாயின் கொண்டுவரவும். எனெனில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு நபர்களின் புகைப்படத்தை ஆதாரத்துடன் நிரூபிக்க இருப்பதாலேயே இவ்வாறு கேட்கப்படுகின்றீர்கள்.இவ்வாறு இதுவரைகாலமும் உலகம் கண்டிராத வலைப்பதிவர் சந்திப்பொன்றை நடப்பதையறிந்த ஒன்ராறியோ மாநில முதலமைச்சர், தானும் ஏதேனும் உதவிசெய்யவேண்டும் நேற்றுத் தொலைபேசியில் கூறி, எமது சந்திப்பு நடப்பதற்காய் மாகாணப் பாராளுமன்றத்தை நமக்கு ஒதுக்கித் தருவதாய் மகிழ்ச்சியுடன் கூறினார். வருடத்தில் ஆகக்குறைந்தது மூன்று மாதங்கள் மட்டும் பாராளுமன்றத்திற்கு சமூகளித்துவிட்டு, மக்களின் வரிப்பணத்தில் சுற்றுலாச்செய்யும் அவரதும் ஏனைய அமைச்சர்களின் அன்புக்கு வலைப்பதிவர்களின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன். எனினும் எமது சந்திப்பு நடப்பதால் கோடைகால பாராளுமன்ற ஒன்றுகூடலை ஒத்திவைக்க வரவேண்டியிருக்குமே என்று ஒரு சாதாரண 'குடி'மகனின் போதையுடன் நான் கேட்டபோது, சார்ஸினதும் கமீலாவினதும் திருமணத்திற்கு சென்று நேரடியாக வாழ்த்த முடியாமற்போய்விட்டது, உங்கள் சந்திப்பைச் சாட்டாக கொண்டு நானும் எனது கட்சி எம்பிக்களும் இங்கிலாந்திற்கு விடுமுறைக்குச் செல்ல இதுவே சரியான தருணம், நீ இது குறித்து அதிகம் கவலைப்படதேவையில்லை என்று சற்று அதட்டித் தெரிவித்துக்கொண்டார்.

கனடா வாழ் வலைப்பதிவர்கள் சந்திக்கின்றோம் என்றாலும் ஒருவருக்கு விதிவிலக்க அளிக்கலாம் என்று நினைக்கின்றேன். அமெரிக்காவிற்குச் சொந்தமான பிரதேசமெனினும் கனடாவிற்கு வடக்கே இருக்கின்ற அலாஸ்காவில் தற்சமயம் வசிக்கும் தங்கமணிக்கு இந்த golden opportunity வழங்கப்படுகின்றது. எனினும் அவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் துருவக்கரடியையும் இந்தச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்று அடம்பிடிக்கக்கூடும் என்பதால் இது குறித்து இறுதிமுடிவை நண்பர்களாய் சேர்ந்து எடுத்தல் நல்லதெனத்தோன்றுகின்றது. தங்கமணிக்கு அனுமதியளித்தால், உலகமேப்பில் கனடாவிற்கு மேற்குப்பக்கமாய் மிக அருகில் இருக்கும் ஜப்பானில் வசிக்கும் தன்னையும் கலந்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்று ரோசாவசந்தும் கேள்வியெழுப்பக்கூடும். ஆனால் அவரை கலந்துகொள்ளாமற்செய்ய என்னிடம் ஒரு வழியுண்டு. அவர் சந்திப்பில் கல்ந்துகொள்ளும்பட்சத்தில், எந்தச்சமயத்திலேனும் இளையராஜாவின் பாடலை முணுமுணுக்கவோ, உரத்துப்பாடவோ கூடாது என்று ஒரு சட்டம்போட்டோம் எனில், 'என்னாலே ஒருக்காலும் அப்படியிருக்கமுடியாது டோய்' என்று அவராகவே ஒதுங்கிக்கொள்வார் என்பது எனது நம்பிக்கை.இதை எழுதும்சமயத்தில் வெளியே வசந்தகாலம் உருகிக்கொண்டிருப்பது தெரிகின்றது. நண்பர்களுக்கு வெளிப்புறத்திடலில்தான் சந்திக்க அதிக விருப்பம் இருக்கக்கூடும் என்பதுவும் புரிகின்றபடியால், நயாகரா நீர்வீழ்ச்சியிற்கு அருகில் சந்திப்பை நடத்தினால் மிக நல்லாயிருக்கும்போலத்தோன்றுகின்றது. எனினும் அதில் ஒரு சிக்கலுண்டு. இப்படி நாம் ஒரு வரலாறு காணாத சந்திப்பை நிகழ்த்த இருப்பதாலும், அது அமெரிக்கா பார்டருக்கு அருகிலிருப்பதாலும், அமெரிக்காவிலிருந்து எதிரிகள் (முக்கியமாய் கார்த்திக் & பெயரிலி) பொறாமையின் நிமிர்த்தம் இந்தச்சந்திப்பைக் குழப்ப்பக்கூடும் என்ற ஒரு அச்சம் எழுகின்றது. ஆகவே நமது சந்திப்புக்கு பாதுகாப்புத்தர கனடீய இராணுவத்தையும், சும்மா கண்ட கண்ட இடத்தில் எல்லாம் காரை நிறுத்தி, McDonalds burgersஜ freeயாய் சாப்பிட்டு தொந்தி வளர்க்கும் பொலிசினதும் உதவியைக்கேட்பதாய் உத்தேசித்துள்ளேன். இறுதியாய் வந்த மின்னஞ்சலில்படி நமது பிரதம மந்தியும் நமது வரலாற்றுச் சந்திப்பை வெற்றிகரமாக நடத்த வைரஸ் மூலம் ஒரு வாழ்த்துச்செய்தியை அனுப்பியுள்ளார். அதில் இதுவரை காலமும் எப்போதாவது அமெரிகாவுடன் hockeyயில் விளையாடி வெல்வதை, அமெரிகாவுடன் போரில் ஈடுபட்டு வெற்றிகொள்வதுமாதிரியான பெருமிதத்தில் இருக்கும் எங்களுக்கு, அமெரிக்க வலைப்பதிவர்களுக்கு நேரடியாகச் சவாலிட்டு இப்படியொரு சந்திப்பை நடத்துவது தனக்கு மிக மகிழ்ச்சி அளிப்பதாய் கூறியுள்ளார். அத்துடன் இதுவே வரலாற்றில் நிகழ்ந்து மிகப்பெரும் வலைப்பதிவர் சந்திப்பு என்று கின்னஸ்காரகளும் ஒத்துக்கொண்டால், நமது வலைப்பதிவு நடந்த நாளை ஒவ்வொரு வருடமும் தேசிய விடுமுறையாக அறிவித்து மக்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்போவதாகவும் கூறியுள்ளார்.

இறுதியில், கனடாவில் ஒரேயொரு பசுவில் mad cow disease கண்டுபிடிக்கப்பட்டவுடனேயே தனது இறைச்சி இறக்குமதியைத் தடைசெய்த அமெரிக்காவில், இப்போது பொதுசனத்திற்கு தெரியாமல் mad cow நோயால் பாதிக்கப்ப்ட்ட மாடுகள் பராமரிக்கப்படுவதுவதை பிபிசி documentary செய்துள்ளதைக் கண்டு அமெரிக்கா சனாதிபதி ஜோர்ஜ்.w.புஷ் கதிகலங்கி, வெள்ளை மாளிகையைக் கண்ணீர்மாளிகையாக்கிக் கொண்டிருக்கின்றார் என்ற ஒரு செய்தியைக் காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன். எனவே அவரது சோகக்கதைகளை எழுதுவதற்காய் ஒரு வலைப்பதிவு அவருக்காய் உருவாக்கவேண்டுமெனவும், ஈராக்கில் எண்ணெய்க்குதங்கள் தீப்பற்றியெறிவதால், அவரது Texas எண்ணெய்க்கம்பனிகள் பணப்பற்றாக்குறையால் நிலைகுலைந்து இருப்பதால் ஓசாம பின்லாடன் கொஞ்சம் இரக்கங்காட்டி ஜோர்ஜ் புஷ்ஷிற்கு பில்லியனில் பணம் கடன் கொடுக்கவேண்டும் என்ற அறிக்கையை நாங்கள் எழுதி ஒசாமாவிற்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றும் நண்பர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

வரலாறு காணாத சந்திப்பைப் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பின்னூட்டமாயோ அல்லது தனிப்பதிவாயோ எழுதி ஆதரவு தரவேண்டும் என்று கண்ணீர்மல்க உங்களிடம் இறைஞ்சிக்கேட்கின்றேன்.

(புகைப்படங்கள்)

'Life was too small to contain her'

Tuesday, April 12, 2005

Sylvia: திரைப்படம் பற்றிய ஒரு  பார்வை

சில்வியா, இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருப்பதுடன் படம் ஆரம்பிக்கின்றது. அவரது கவிதைகள் பத்திரிக்கைகளில் நிராகரிக்கப்படுகின்ற துயரத்துடன், Ted Hughesன் கவிதையால் ஈர்க்கப்பட்டு, இருவரும் காதலிக்கத்தொடங்குகின்றனர். பிறகு நானகு மாதங்களில் இருவரும் திருமணமும் செய்துகொள்கின்றனர். மாலைப்பொழுதுகளில் நண்பர்களுடன் சிறு அறைகளில் கவிதை வாசிப்புக்கள் நிகழ்கின்றன. Faster, Faster என்று ஆண் கவிஞர்கள் கிண்டலடித்தாலும், ஆண்களுக்கு நிகராய் கவிதைகளை வேகத்துடன் சில்வியா வாசிக்கின்றார். கவிதைகளை மனிதர்களின் முன்னால் மட்டுமல்லாது, காதலின் களிப்பில் மாடுகளுக்கு முன்னாலும் Miltonனா அல்லது Chaucerரா பிடிக்கும் என்று ரெட்டிடம் (டெட்?) கேட்டு, கவிதைகள் சொல்கையில், சில்வியாவின் இதமான மனது தெரிகின்றது.


Tedற்கு நியுயோர்க்கில் கவிதைக்கான பரிசு கிடைக்க, சில்வியா ரெட்டோடு அமெரிக்காவிற்கு மீண்டும் குடிபெயர்கின்றார். அங்கே சில்வியாவின் தாயால், மூன்றுவருடங்களுக்கு முன் சில்வியா தூக்கமாத்திரை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றார் என்ற செய்தி ரெட்டிற்கு சொல்லப்படுகின்றது. இப்படி அடிக்கடி மனவழுத்தத்திற்கு ஆளாகும் தன் மகளை கவனமாகப் பார்த்துக்கொள் என்று ஒர் தாயின் நிலையிலிருந்து சில்வியாவின் தாயார் கேட்டுக்கொள்கின்றார். பிறகு அவர்கள் கடற்கரையுடன் இருக்கும் பண்ணைக்கு விடுமுறைக்குச் செய்கின்றனர். ரெட் வற்புறுத்திக்கேட்டும், சூழல் இனிமையாக இருந்தும், சில்வியாவால் கவிதைகள் எழுதமுடியவில்லை. சமைப்பதிலும், பான் கேக்குகளை விதவிதமாய்ச் செய்வதையும் ஒரு படைப்பாய் செய்து சந்தோசம் காண்கின்றார். இப்படி கவிதைகள் எழுதாமல், சில்வியா இருப்பதைப் பார்க்க ரெட்டிற்கு சினமாய் இருப்பினும், அதை அவ்வளவாக வெளிக்காட்டாமல் இருக்கின்றார். பிறகு அமெரிக்காச் சூழல் தமது படைப்புக்களுக்கான் உந்துசக்தியைத்தராது என்று ரெட் சில்வியாவை இங்கிலாந்திற்கு அழைத்துச்செல்கின்றார். அங்கே தனது முதலாவது குழந்தையைப் பெறுகின்றார் சில்வியா. ரெட் கவிதைகள் எழுதிக் குவித்து பிரபலமடைய, சில்வியா ஒரு குடும்பப்பெண்ணுக்குரிய அனைத்தையும் செய்யவேண்டிய நிலையில் கவிதைகள் எழுதவேண்டியிருப்பதையே நிறுத்த வேண்டியிருக்கின்றது. அது அவருக்கு இன்னும் மனவழுத்த்தைத் தருகின்றது. ரெட்டிற்கு வேறு பெண்களுடன் தொடர்புகள் இருக்கின்றனவோ என்ற சந்தேகமும் வருகின்றது சில்வியாவிற்கு. ஏற்கனவே எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுப்பாய் வெளியிட்டபோதும், அது உரிய கவனத்தை விமர்சகர்களிடம் பெறாது வீணே போகின்றது. விமர்சகர்களும், சில்வியாவை ரெட் என்ற கவிஞனின் மனைவியாய் பார்க்கப்படுவது, சில்வியாவிற்கு இன்னும் அசெளகரியத்தைத் தருகின்றது. அதை உடைப்பதற்காய், தன்னை Mrs.Hughes என்று அறிமுகப்படுத்துவதைத் தவிர்த்து, சில்வியா பிளாத் என்ற அறிமுகம் செய்து தனது எதிர்ப்பை இயன்றளவு காட்டுகின்றார். பணப்பற்றாக்குறை, குழந்தைகள் வளர்ப்பு என்ற பல சிக்கல்களினால், தமது வீட்டை விற்றுவிட்டு இங்கிலாந்தின் கிராமப்புறமான வீட்டிற்கு குழந்தைகளுடன் குடிபெயர்கின்றனர்.


அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும்போது, சில்வியாவிற்கு, ரெட் இன்னொரு பெண்ணுடன் கொண்டிருக்கும் தொடர்பு வெட்டவெளிச்சமாய்த் தெரிகின்றது. The truth talks to me என்று மிக நிதானமாய்ச் சொல்லி, Get out என்று ரெட்டைப் பார்த்துச் சொல்கின்றார். இவ்வாறு கூறுகின்றபோதும், ரெட்டின் பிரிவு சில்வியாவை மிகவும் வருத்துகின்றது. தனது 23வயதில் முதன்முதலில் ரெட்டை சந்தித்து காதல் வயப்பட்டு திருமணஞ்செய்ததிலிருந்து மிக அபரிதமான அன்பை சில்வியா ரெட் மீது வைத்திருக்கின்றார். தன்னைப்போலவே உறவில் நேர்மையாக ரெட் இருப்பார் என்ற சில்வியாவின் நம்பிக்கை இடிந்துபோக, குழந்தைகளை காரில் இருத்திவிட்டு ஆற்றில் தற்கொலை செய்ய நினைக்கின்றார். ஆனால் குழந்தைகளைப் பிரிந்து போக இளகிய மனங்கொண்ட சில்வியாவால் முடியாதுபோகவே, பிறகு குழந்தைகளுடன், இன்னொரு இடத்திற்குச் சென்று வாழத்தொடங்குகின்றார் (Yates வாழ்ந்த வீட்டில்).

மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு சில்வியா திரும்புகின்றார். ரெட்டைப் பிரிந்த முதல் மாதத்தில் மிக உக்கிரமான, அற்புதமான பல கவிதைகளை எழுதுகின்றார். 'கடவுள் என் மூலமாக வலிகளை கவிதைகளில் பேசுகின்றார்' என்று, கவிதைகள் மிகவும் கடுமையாக இருக்கின்றது என்ற ஒரு விமர்சகரிற்குப் பதிலாக சில்வியா சொல்கின்றார். ரெட்டினதும், சில்வியாவினதும் நண்பர் ஒருவர் ரெட்டைப் பிரிந்த வாழ்க்கை இப்போது எப்படி இருக்கின்றது என்கின்றபோது, தான் தனது குழந்தைகளுடன், சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு, தனக்குப் பிடித்தமான கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பது தனக்கு இன்றைய பொழுதில் மிகப்பிடித்தமாய் இருக்கின்றது என்கின்றார். இனி தான் ஒரு புதிய காதலனைத் தேடவேண்டும் என்று தனது வாழ்க்கை துளிர்ப்பதை சற்று நகைச்சுவையுடன் கூறுகின்றார். இப்படிக் கூறுகின்றபோதும், ரெட்டின் மீதான் அளவிலாக் காதலைத் தொலைக்க முடியாது சில்வியா தடுமாறுகின்றார். ஒரு கிறிஸ்மஸ் நாளில் ரெட் குழந்தைகளைப் பார்க்க வருகின்றார். 'சில்வியா உன்னையும் தான் பார்க்க வந்தேன், உட்கார்ந்து ஆறுதலாகப் பேசமுடியுமா?' என்று ரெட் கேட்கின்றார். முதலும், கடைசியுமாய் சில்வியா, Are you still fucking her? என்று கேட்கின்றார். விடையை மெளனமாகத் தந்தபடி ரெட் சில்வியாவின் வீட்டை விட்டு அகல்கின்றார். பனிக்காலங்களில் மிகவும் மனவழுத்தம் கூடி சில்வியா I'm edge of the world என்று கூறியபடி தவித்துக்கொண்டு பொழுதுகளைக் கழிக்கின்றார். இறுதியில் நண்பன் மூலம், ரெட்டை ஒரு இரவு விருந்திற்கு சில்வியா அழைக்கின்றார். அழகாய்க் கழிகின்றது அந்த இரவு. உடலுறவு கொண்டபின், ரெட்டைத் தான் மிகவும் missed பண்ணியதாகவும், இனி எமது வாழ்வில் வசந்தம் துளிர்க்கப்போகின்றதும் என்று சில்வியா கூறுகின்றார். 'அந்தப்பெண்ணை விட என்னைத்தானே நீ மிகவும் நேசிக்கின்றாய்' என்று ஒரு பேதைப்பெண்ணின் இயல்புடன் ரெட்டுடன் வினாவுகின்றார்.

இனி நாங்கள் மீண்டும் Devon நகரிற்குச் சென்று, அழகான வசந்தத்தையும் இரசிக்கவும், தனக்கு இவ்வளவு காலமாய் இடைஞ்சல் செய்யும் பனிக்காலத்தையும் உன் துணையுடன் கடக்கவும் முடியுமென்றும் கூறுகின்றார். குழந்தைகளுடனும், நமது படைப்புத்தொழிலுடனும், ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் கழிக்கப்போகும் காலத்தை கனவுடன் விபரிக்கின்றார் சில்வியா. இறுதியாய், 'நீ அந்தப்பெண்ணை முற்றுமுழுதாய் விட்டு விட்டு என்னோடும் குழந்தைகளோடும் வருவாய்தானே?' என்று அன்பு ததுப்ப ரெட்டிடம் கேட்கின்றார். 'இல்லை' என்கின்றார் ரெட்டி. 'ஏன்?' என்கின்றபோது, அந்தப்பெண் கருத்தரித்துவிட்டார் என்று ரெட் கூற சில்வியாவின் கனவுகள் நொருங்குகின்றன. (இந்தக்காட்சியில் மிக நுட்பமாக ஆண்களின் சூட்சம விளையாட்டு சித்தரிக்கப்பட்டிருந்தது போல எனக்குத் தெரிந்தது. ஏற்கனவே ஒரு பெண்ணை கர்ப்பிணியாக்கி வந்த, ரெட் அதை முதலில் கூறமுடியாது சில்வியாவுடன் உடலுறவு கொண்டு, தமது வாழ்வு இயல்புக்கு வந்தமாதிரியான பாவனையுடன் நடந்துகொள்கின்றார். அந்தப்பெண்ணுக்கு குழந்தை பிறந்து தன்னோடு மட்டும் இரு என்று மற்றப்பெண் கேட்டாலும், சில்வியா மூன்றாவது முறையாக கரு தரித்திருக்கின்றார் என்று ஒரு சாட்டுச்சொல்லிக்கொண்டபடி இருபெண்களோடும் உறவைத் தொடரலாம் என்ற ஆணின் நுட்பமான திறன் வெளிப்படுவதாய்த் தெரிந்தது.)

ஏற்கனவே மனவழுத்தததால் அவ்வவ்போது நொடிந்துபோகும் சில்வியா இறுதியாய், தனது கவிதையொன்றில் கூறியதுமாதிரி,
'Dying
Is an art, like everything else,
I do it exceptionally well.

I do it so it feels like hell.
I do it so it feels real.
I guess you could say I've a call.'

அவனிற்குள் தலையை வைத்து, காபன்மொனக்சைட்டைச் சுவாசித்து தனது முடிவை மிகக் கச்சிதமாய் எடுக்கின்றார்.

Gwyneth Paltrow, சில்வியா பிளாத்தாய் மிக இயல்பாய் நடிக்கின்றார். Daniel Craig, Tedயாய் நடித்திருப்பினும், சில்வியாவின் பாத்திரத்தின் முன் ஈடுகொடுக்கமுடியாமல் சிலவேளைகளில் தடுமாறுகின்றார். இந்தப்படத்தை ஒரே நாளில் கிட்டத்தட்ட இரண்டும் முறை பார்த்தேன். அதியற்புதமாய் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லமுடியாவிட்டாலும் ஏதோ அதிக நெருக்கத்தை சில்வியாவின் வாழ்க்கை எனக்கு உணர்த்தியது. வாழ்வில் நேர்மையாக இருந்தால் கட்டாயம் நேர்மையாய் எல்லா விடயங்களும் நமக்கும் நடக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த என் நம்பிக்கையை இன்னொரு முறை சில்வியாவின் வாழ்க்கை நிராகரித்திருந்தது. ஏன் சில்வியா ரெட் தன்னைப் புறக்கணித்தவுடன் வேறொரு துணையைத்தேடாமல், ஒரு பெரும் பிணியைப்போல ரெட்டின் நினைவுகளுடனும், அவரின் அவ்வப்போதைய வரவுகளிலும் ஒட்டிக்கொண்டிருந்தார் என்பதற்கான காரணம் சில்வியாவைத் தவிர எவருக்கும் புரியப்போவதில்லை. துணையின் மீது அளவற்ற காதல் கொண்டு குழந்தையாய் உருகிய சில்வியாவில் எனக்குத் தெரிந்த பல கீழைத்தேய பெண்களின் வாழ்வினைக் கண்டேன். எந்தத்தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும், பெண்களுக்கு என்று பொதுவான பல விசயங்கள் இருக்கின்றன என்பதற்கு சில்வியாவின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டும் கூட. இந்தச் சமயத்தில் மிக இளவயதில் தற்கொலை செய்துகொண்ட சிவரமணியின் நினைவு வருவதையும் தவிர்க்கமுடியவில்லை.
....
சில்வியாவின் கவிதையொன்றின் இணைப்பை (Lady Lazarus ) தருகின்றேன். தமிழில் யாராவது மொழிபெயர்த்தால் மிகவும் சந்தோசமாயிருக்கும். (எனக்குத் தெரிந்த மொழியில் பெயர்த்து, எனக்குப் பிடித்தமான சில்வியாவைச் சிதைக்க விருப்பமில்லை).

இசைக்கலைஞர்கள் + 'Dash' = சாம்பார் பதிவு

Friday, April 08, 2005

இன்று பத்திரிகையை வாசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு சுவாரசியமான செய்தி கண்ணில்பட்டது. கனடாவில் சிறந்த இசைக்கலைஞர்களுக்காகக் கொடுக்கப்படும் அதியுயர்விருதான Junoவைப் (கிட்டத்தட்ட Grammy போல) பெற்ற ஒரு கலைஞன், subway பாட்டுக்காரனாயிருக்கின்றார் என்பது. ஒரு விருதல்ல, இரண்டு விருதுகளைப்பெற்றபின்னும், ரொரண்டாவில் அதிக சனப்புழக்கமுள்ள Bloor சப்வேயில் பாடிக்கொண்டிருக்கிறார் என்று பத்திரிக்கையில் புகைப்படத்துடன் வந்திருந்தது.. கென்யாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், ஆபிரிக்கா இசையுடன், Jazz/Bluesயை இணைத்து புது இசைக்கோர்வைகளையெல்லாம் முயற்சித்திருக்கிறார் என்று எழுதப்பட்டிருந்தது. இசைப்பதற்கு மிகக்குறைந்த இடங்கள் உள்ள இந்த நகரில், அதிக திறமையுள்ள இசைக்கலைஞர்கள் இருப்பதுதான் தன்னை ஒரு புகையிரதப்பாடகனாக்கியது என்று அவர் கூறியதுபோதும், இப்படி நேரடியாக மக்களுக்காய் வாசிப்பது கூட தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று எவ்வித சுயபச்சாபமும் இன்றி பேசியது இன்னும் பிடித்திருந்தது.
....
ஒவ்வொரு முறையும் வேலை முடிந்து சப்வேயிற்குள் செல்லும்போது, படிக்கட்டுகளில் அருகில் இசையை நிறைத்தபடி இருக்கும் கலைஞர்கள் மீதும், மூலைகளில் முடங்கியபடி do you have any change என்று கேட்பதைத் தவிர வேறெந்தத் தொந்தரவும் தராத வீடற்ற மனிதர்கள் ((homeless people) மீதும் பரிவாய் பார்வைகளை வீசியபடித்தான் போய்க்கொண்டிருக்கின்றேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கொஞ்சம் சில்லறைகள் சேர்த்து, பணம் அறவிடாது இசையை, மிருதுவாய் காதுகளில் பரப்பியபடி இருப்பவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைப்பேன். சிலவேளைகளில் அவ்வாறு செய்யமுடிகின்றபோதும், அநேகவேளைகளில் அப்படிப் போட்டால், மற்ற மனிதர்கள் ஒருமாதிரியாகப் பார்ப்பார்களோ என்ற பொதுப்புத்தியில் பின்வாங்கியிருக்கின்றேன். வேலை முடிந்து வரும் அலுப்பை, இவர்களின் இசையில், ஓரத்தில் நின்று ஆறுதலாகக் கேட்டபடி கரைக்கவேண்டும் என்பதுதான் என் நெடுநாளைய விருப்பம். ஆனால், இயந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களின் பின்னால், நானும் ஓடாவிட்டால் என்னை வேறுவிதமாய் பார்த்துவிடுகிறார்கள் என்ற பயத்தில், சனத்திரள்ப் பெருஜோதியில் இலகுவில் ஜக்கியமாகிவிடுவேன். இன்றும் வேலை முடிந்து வரும்போது, தன்னிலை மறந்தநிலையில் ஒரு பெண் மிக அற்புதமாய் கிற்றார் வாசித்தபடியிருந்தார். இசையோடு அந்தப்பெண்ணையும் இரசிக்கும் வாய்ப்பு கைக்கெட்டியதூரத்திலிருந்தாலும், நான் நவீனமனிதனுக்குரிய அடையாளத்துடன் அந்த இடத்தைவிட்டு காற்றைவிடவும் விரைவாக அகன்றிருந்தேன்.
.....
எப்போதும் கைவிட்டுப்போன/புறக்கணிக்கப்பட்ட விசயங்களின் நனவிடைதோய்தல்களில் இருக்கும் என்னால், ஏன் மனதிற்குப் பிடித்த, இதமான அனுபவங்கள் தரும் இந்தமாதிரியான விடயங்களை இயல்பாய் செய்யமுடிவதில்லை என்ற எண்ணம் அடிக்கடி எழும். ஆறிப்போன புண்ணைத் தோண்டிப்பார்ப்பதில் ஒரு சுகமிருக்கிறதென்று ஒரு கதைக்கு வைத்துக்கொண்டாலும், வாழ்க்கையில் நிகழ்ந்த/நிகழும் அற்புதமான கணங்களையேன் ஒரு வண்ணத்துப்பூச்சியின் வர்ணங்களைப்போல இலகுவில் மனதில் தேக்கிவைக்கமுடியாதிருக்கின்றதென்றது என்ற உளவியலின் புதிர் இன்னும் புரியவில்லை.
....
நல்ல இசையையும், அதையிசைக்கும் கலைஞியையும் தவறவிட்டுவிட்டேனென்று, சப்வேயிற்குள், 50cent, Oliviaவுடன் பாடும், Candy Shopஐ இரசித்துக்கொண்டு வந்தபோது, தனியார் பாடசாலைகளில் படிக்கும் சில மாணவிகளைக் கண்டேன். அவர்களை குட்டைப்பாவாடையுடன் பார்த்தபோது எனக்குள் பலவருடங்களாய் இருக்கும் கேள்வியை, மனத்தின் அலை ஒரு துரும்பைப்போல எடுத்தெறிய, ஞாபகத்திற்கு மீண்டும் வந்தது. குட்டைப்பாவாடை போடுவது அவரவர் சுதந்திரம் என்றபோதும், இறுக்கமான ஒழுக்கக்கட்டுப்பாடுகள் எங்களிடம்தான் இருக்கின்றது என்று வியாபார உத்தியிற்கு நிகராய் உரத்துப்பேசும் கத்தோலிக்க பாடசாலைகள் எப்படி இந்தமாதிரியான குட்டைப்பாவாடைகளை தமது யூனிபோர்மாய் அங்கீகரிக்கின்றன என்ற சூட்சமம் இன்னும் விளங்கவில்லை. நான் பார்த்தவரையில் பல பெண்கள் அதை அணிந்துகொண்டு மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதைத்தான் அவதானித்திருக்கின்றேன். பஸ்சில், சப்வேயில் ஆசனங்கள் இருந்தாலும் அந்தக்குட்டைப்பாவாடைகளுடன் அமர்வதன் அசெளகரியம் கருதி அதிகமான பொழுதில் நின்றபடியேதான் பயணிக்கின்றார்கள். எனது அண்ணாவின் மகனும் கத்தோலிக்கப்பாடசாலைக்குத்தான் போகின்றான். அண்ணிதான், வீட்டில் அவனது குழப்படியைக் கண்டுவிட்டு இவனை கத்தோலிக்கப்பாடசாலைக்கு அனுப்பாவிட்டால் திருந்தமாட்டான் என்று அனுப்பியவர். எனக்கு அவன் public schoolற்குப் போவதே விருப்பம். அத்தோடு, என்ன குழப்படி என்றாலும் அவன் அந்தந்தக்காலத்தில் அவற்றைச்செய்து திருந்திக்கொண்டு வாழ்வில் நகர்வது நல்லதே தவிர, இப்படி இருக்கக்கூடாது ஒரு ஒழுக்க அட்டவணையை முன்கூட்டியே தயாரிப்பவர்களிடம் போனால் அவன் சடுதியாக தவறான திசைக்குப்போகும் சாத்தியம் அதிகமுள்ளதெனத்தான் அண்ணா குடும்பத்தினரிடம் நான் அடிக்கடி கூறுவேன்.

எனினும் அண்ணாவின் மகனின் அசாதாரண வளர்ச்சியைப்பார்க்கும்போது (இதைப்பற்றிப் பிறகு கூறுகின்றேன்) இப்படிச் சொல்வது கூடப்பயமாயிருக்கிறது. 'சிச்சியா நீங்கள் private பாடசாலைக்குப் போய் பெண்களை குட்டைப்பாவாடையுடன் இரசிக்கவில்லையென்ற பொறாமையில்தான், கத்தோலிக்கப் பாடசாலைக்கு அனுப்பிய என்னையும் இடையில் நிறுத்தி, public பாடசாலைக்கு போகச்சொன்னீர்களா என்று தனது பதினைந்தாவது வயதில் என்னைப்பார்த்து அவன் கேட்கவும்கூடும்.
.....
அவனுக்கு இயல்பாய் இருக்கும் குறும்புத்தனம் போலவே புத்திசாலித்தனமும் அதிகம். என்னைச் சீண்டிப்பார்க்காவிட்டால் நானும் அவனது புத்திசாலித்தனத்தைப் பிறரைப்போல் மனதாரப் பாராட்டியிருப்பேன். ஆனால் அவன் தனது புத்திசாலித்தனத்தை எல்லாம் என்னிடம் முதலில் பரீட்சித்துப்பார்ப்பதில் தான், உள்ளது பிரச்சினை. சில வாரங்களுக்கு முன், எங்கள் வீட்டுக்கு வந்தபோது அம்மா அவனைச் சாமி கும்பிடச்சொன்னார். ஜந்து வயது இருக்கும் அவன், வீட்டிலுள்ள ஒவ்வொருத்தரின் பெயரையும் சொல்லி அவர்கள் நல்லாயிருக்கவேண்டும் என்று வழிபட்டான். இவன் சிச்சியா என்று விளிக்க, நானும், எனக்காய் இவன் ஏதோ விசேடமாய் கடவுளிடம் கேட்கப்போகின்றான் என்று காதைக் கூர்மையாக்கிக்கொண்டேன். ஆனால் பாருங்கள் அவன் என்ன கடவுளிடம் கேட்டான் என்று: எந்தநேரம் பார்த்தாலும் சிச்சியா computerற்கு முன்னாலே இருக்கின்றார். அப்படி இருக்காமல் நல்ல புத்தியை அவருக்கு கொடுவென்று என்று வழிபடத்தொடங்கிவிட்டான். அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டதும் அம்மாவிற்கும் நல்ல சந்தோசம். தான் மனதிற்குள் நினைப்பதையே தன் பேரனும் சொல்லிவிட்டான் என்று அம்மாவும் உவகைகொண்டதில் பிழையில்லைத்தானே. கடவுளிடம் முறையிட்டதுடன் நிற்பாட்டினால் கூடப் பரவாயில்லை. பிறகு இரண்டு அண்ணாமாருக்கும் தொலைபேசி எடுத்து, தனது பிரார்த்தனையின் நல்நோக்கத்தை விபரிக்க எல்லாம் தொடங்கிவிட்டான். அத்தோடு, தங்களின் வீட்டுக்கு வந்தாலும், எவரோடும் கதைக்காமல் உடனே அங்கேயும் computer அறையினுள் நான் சத்தம்போடாமல் நுழைந்துவிடுவேன் என்ற துணைச்சாட்சியையும் கூடவே சேர்த்துக்கொண்டான். சரி, குடும்பத்திற்குள்ளேயென்றால் கூட பரவாயில்லை, கொஞ்சம் சமாளிக்கலாம். அவ்வவ்போது தோழிகளிடன் தொலைபேசும்போது இவனுக்கும் இடையில் கதைக்கக்கொடுப்பேன். அப்படி ஒரு சிநேகிதியுடன் அண்மையில் கதைக்கும்போது, இந்த விசயத்தை அந்தத்தோழிக்கும் போட்டுக்கொடுத்துவிட்டான் (தோழிகள் என்றாலும் பரவாயில்லை, கொஞ்சம் அசடுவழிந்தால், சரி பிழைத்துப்போ என்று திருப்பவும் நண்பனாக்கிக்கொள்வார்கள். ஆனால் ஒரு காதலி ஒருவர் இருந்து, இப்படி என் 'மற்றத் திறமைகளையும்' புகழ்ந்தால் என் நிலை என்னாவது? காதலுக்கு பொய்தாண்டா அழகடா என்று சொன்னால் கேட்கும் வயதிலா அவன் இருக்கின்றான்). என்னுடைய புகழை அகிலமெங்கும் பரப்ப, கொஞ்சக்காலம் போனால், தனியாக ஒரு வலைப்பதிவு தொடங்கக்கூட தயங்கமாட்டான் போலத்தான் அவன் போகின்ற போக்கைப் பார்த்தால் தெரிகின்றது. அவன் இவ்வாறு எதையாவது எழுதத்தொடங்கமுன்னர், என்னுடைய 'சுயசரிதை'யை நானே எழுதி, சரணாகதி அடைவதுதான் நல்லது போல இப்போது தோன்றுகின்றது.
.......
அவனை கத்தோலிக்கப் பாடசாலைக்குச் சேர்ப்பதற்கு, முன் தகுதியாய், ஞானஸ்தானம் பெற்றிருக்கவேண்டுமென்று பாடசாலை நிர்வாகத்தில் சொல்லிருந்தார்கள். அண்ணி கிறிஸ்தவ மத நம்பிக்கையுடையவர் (அண்ணா கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அல்லது எல்லா மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவர் என்றும் சொல்லலாம்). இந்த வழிபாட்டு முறையிலும் நமது 'புத்திசாலிக்கு' சில தினங்களுக்கு முன் ஒரு சந்தேகம் வந்து வழமைபோல் என்னிடமே நேரடியாக வந்தான் (உலகத்தில் அப்பாவியாக இருப்பதைப் போல ஒரு துன்பம் இல்லையப்பா). இங்கே (எங்கள் வீட்டுக்கு) வந்தால் 'அப்புசாமி' என்று கும்பிட்டு விபூதி பூசுகின்றேன். வீட்டிலோ அல்லது பாடசாலையிலோ விபூதி பூசாமல், ஆமேன்(Amen)என்று கைகளை நெஞ்சுக்கு குறுக்காய் வைத்துச் சொல்கின்றேன். எது சரியான முறை என்று கெதியாய் சொல்லுங்கோ என்று கேட்டான். எனது நிலை அப்பமிழுத்த குரங்கின் நிலை போல் ஆயிற்று. எனினும் கொஞ்சம் சமாளித்தபடி, நீ உனக்குப் பிடித்த இரண்டு முறையிலும் கும்பிடலாம், உனது அம்மா ஆமேன் என்றும், உனது அப்பா அப்புசாமி என்றும் கும்பிடுபவர்கள். எனவே நீ எப்படியும் கும்பிடலாம், you're luckydடா என்று கொஞ்சம் சமாளித்தேன். 'Yeah' என்றபடி கொஞ்சம் யோசித்துக்கொண்டு போய் சுவாமிப்படத்திற்கு முன் நின்று, அப்புசாமி என்று வழிபாட்டைத் தொடங்கி ஆமேன் என்று முடித்துவிட்டு இது எப்படி இருக்கிறதென்றான். ஆகா, இப்படியே போனால் இவன் விரைவில், புதிய மதம் ஒன்றைத் தொடங்கி, என்னையும் அந்தமதத்தின் முதலாவது சிஷ்யனாக மாற்றிவிடுவேனோ என்று பயம், அவனது வழிபாட்டைப் பார்த்தவுடன் எனக்கு வந்துவிட்டது.
.........
பாடசாலைக்குப் போகமுன்னர் நல்ல தமிழில் பேசிக்கொண்டிருந்தான். இப்போது முக்கால்வாசி ஆங்கிலத்தில் கதைப்பதைப் பார்த்துவிட்டு, இனி நீ தமிழ் வகுப்புக்களுக்கு போகவேண்டும் என்று ஒருமுறை கூறினேன். அது Stupid class,என்னால் போகமுடியாது என்று அடம்பிடித்தான். சரியடா, நீ தமிழ் கிளாஸிற்குப் போகத்தேவையில்லை, உனக்குப் பிடித்த stupid classற்குப் போ (அப்படியே தமிழ் வகுப்புக்குப் போவதற்கு சம்மதம் சொல்வான் என்ற நப்பாசைதான்) என்று கூறினேன். அவனோ, You are stupid என்று சொல்லிவிட்டு கனக்க அலம்பத்தொடங்கிவிட்டான். எல்லோருக்கும் தெரிந்த உண்மை இவனுக்கும் தெரிந்துவிட்டதே என்ற கவலை ஒருபுறமிருந்தாலும், நான் எப்ரல் முதலாந்திகதியை விமரிசையாகக் கொண்டாடியதும் தெரிந்துவிட்டதோ என்ற சந்தேகம்தான் இப்போது என்னை அதிகம் தொந்தரவு செய்கின்றது (உள்ளுணர்வாலே அனைத்தையும் அறியும்மழலைச் சித்தனாய் இருப்பானோ தெரியாது). ஒருநாள் பாடசாலைக்குப் போய் வந்துவிட்டு, எல்லோருக்கும் செல்லப்பெயர் (Nick Name) இருக்கின்றது தனக்கு இல்லையென்றான். சரி, உனக்கு Robotsல் வரும் Rodneyயா அல்லது The Incrediblesல் வருகின்ற Dashயா பிடிக்கும் என்று நானும் அண்ணாவும் கேட்டோம். தனக்கு Dashயே செல்லப் பெயராய் வைக்கும்படிச் சொல்லிவிட்டு, Dash மாதிரி மூச்சைப்பிடித்தபடி ஓடிக்காட்டி, தனக்கு அந்தப்பெயர் பொருத்தமானதே என்பதையும் நிரூபித்துக்காட்டினான். வருகின்ற மாதம் தியேட்டருக்கு வருகின்ற Star Warsஐ பார்த்துவிட்டு புதிதாய் ஒரு Nick name வைக்கின்றானோ தெரியாது. எப்படியென்றாலும், நான் இரசித்துப்பார்க்கும் பெண்களின் எண்ணிக்கையை, அவனது செல்லப் பெயர்கள் தாண்டாது என்பதில் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையிருக்கிறது.
.....
இப்போது சொல்லுங்கள், ஜந்து வயதில் இப்படி இருப்பவன், நாளை public பாடசாலைக்கு அனுப்பினால், குட்டைப்பாவாடைப் பெண்களை தான் பார்த்துவிடுவேன் என்ற பொறாமையில்தான் சிச்சியா அனுப்பினார் என்று ஒரு குற்றப்பத்திரிக்கை வாசிப்பானோ, இல்லையோ?
..........
இறுதியாய், தொலைக்காட்சியில் இரவுச் செய்திகள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ரொரண்டோ zooவில் ஒரு குரங்கிற்கு, புதிதாய் பிறந்த குட்டிக்கு என்னபெயர் வைப்பது என்று மக்களிடம் உதவி கேட்கிறார்கள் என்று சொன்னார்கள். எனக்குத் தெரிந்தளவில், அந்தக் குட்டிக்கு வைப்பதற்கு எனது பெயரைத் தவிர வேறொன்றும் சிறப்பாக இருக்காது என்று தோன்றுவதால், எனது பெயரைச் சிபார்சு செய்வதாய் இருக்கின்றேன். வாசிக்கும் உங்களுக்கும், நான் சொல்வதில் சம்மதம் என்றால் நாளை, சென்னையிலும், நீயு ஜெர்சியிலும் நடைபெறவுள்ள வலைப்பதிவர் ஒன்றுகூடலுக்கு சென்று எனக்கு வோட்டுப் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.