கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஷோபாசக்தியின் பதில்கள்: சில அவதானங்கள்

Saturday, February 19, 2011

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பகுதி 03

ஷோபாசக்தி எனது கேள்விகளுக்கு அளித்த பதில்களை முன்வைத்து சில குறிப்புக்களை எழுதுகின்றேன். கேள்வி பதில்...பிறகு பதிலுக்கு மேலும் கேள்விகள் என ஒரு முடிவுறாத வட்டத்திற்குள் சிக்காமல் இருப்பதற்காய் சில அவதானக் குறிப்புக்களை எழுதுகின்றேன்.(1) ஷோபா குறிப்பிட்ட‌ மாற்ற‌ம்/மாற்ற‌த்திற்கான‌ கார‌ண‌ங்க‌ள் என்ப‌வ‌ற்றையும் நானும் ஒப்புக்கொள்கின்றேன். கால‌ச்சுவ‌டு, இந்தியா ரூடே போன்ற‌வ‌ற்றில் எழுதிக்கொண்டிருந்த‌ ர‌விக்குமார்,ராஜ்கெள‌த‌ம‌ன் போன்ற‌வ‌ர்க‌ளையும் அதே நிலைப்பாட்டிலேயே நானும் ஆத‌ரித்து வ‌ந்திருக்கின்றேன். அதை என‌து த‌ள‌த்திலும் எழுதியுமிருக்கின்றேன்.

நான் சுட்ட‌ விரும்பிய‌து, மாற்ற‌த்தைய‌ல்ல‌. புல‌ம்பெய‌ர் சூழ‌லில் இல‌க்கிய‌ச் செய‌ற்பாடுக‌ளுக்கும், ச‌ஞ்சிகைக‌ள் வெளிவ‌ருவ‌த‌ற்கும் எவ்வ‌ள‌வு அல்லாட‌ வேண்டியிருக்கிற‌து என‌ நாமெல்லோரும் அறிவோம். ப‌டித்துக்கொண்டிருந்த‌ கால‌த்தில் என‌க்கும், ந‌ண்ப‌னொருவ‌ருக்கும் ச‌ஞ்சிகை வெளியிடும் ஆசை வ‌ந்து, அப்போது இங்கு வ‌ந்திருந்த‌ 'உயிர்நிழ‌ல்' க‌லைச்செல்வ‌னோடும் இது ப‌ற்றி உரையாடியிருந்தோம். அவ‌ர் தான் 'உயிர்நிழ‌ல்' வ‌ருவ‌த‌ற்காய், தான் வேலை செய்துவ‌ரும் ப‌ண‌ம் முழுவ‌தையுமே செல‌விட‌வேண்டியிருக்கிற‌தென‌ அது குறித்த‌ இட‌ர்க‌ளை எங்க‌ளுட‌ன் ப‌கிர்ந்திருந்தார். மேலும் 'உயிர்நிழல்' ச‌ஞ்சிகையை இல‌ங்கை/இந்தியாவிலிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு விற்ப‌தில்லையென்ற‌ முடிவில் அவ‌ர்க‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌வே அனுப்புவ‌தாய்க் குறிப்பிட்ட‌தும் நினைவு. என‌வே உயிர்நிழ‌லோ, எக்ஸிலோ பிற‌ ச‌ஞ்சிகைக‌ளோ புக‌லிட‌ சூழ‌லிருந்து மிகுந்த‌ நெருக்க‌டிகளிலிருந்தே வெளிவ‌ந்த‌ன‌ என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். எக்ஸில் ச‌ஞ்சிகையின் ஆசிரிய‌ர் குழுவில் இருந்த‌வ‌ர்க‌ளின்(?) அர‌சிய‌ல் என‌க்கு உட‌ன்பாடில்லாவிட்டாலும், அவ‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ங்க‌ளைத் த‌ங்க‌ள் ச‌ஞ்சிகையில் பிர‌சுரிக்கும்போது, சாதி வெறிய‌ர்க‌ளிட‌மோ/ம‌த‌ வெறிய‌ர்க‌ளிட‌மோ போக‌மாட்டார்க‌ள் என்ப‌தை நிச்ச‌யமாக என்னைவிட‌ ஷோபாச‌க்தி ந‌ன்கு அறிவார். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ந‌ண்ப‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ங்க‌ளைத் த‌ங்க‌ள் ச‌ஞ்சிகைக‌ளில் சேர்ப்ப‌தை விம‌ர்சித்த‌ ஷோபா, த‌ம‌து வியாபார‌ நோக்க‌ங்க‌ளுக்காய் எந்த‌ அடிப்ப‌டை அற‌முமில்லாது விள‌ம்ப‌ர‌ங்க‌ளைப் பிர‌சுரிக்கும் நிறுவ‌ன‌ங்க‌ளின் சஞ்சிகைக‌ளில் எழுத‌ப்போகும்போது, எக்ஸில் ச‌ஞ்சிகை ந‌ட‌த்திய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌மும் த‌ன‌து த‌வ‌றை உண‌ர்ந்து ம‌ன்னிப்புக் கேட்டிருப்பாரா என்ப‌து கேள்விக்குரிய‌து. நாம் யாரை விம‌ர்சிக்கின்றோம் என்ப‌தையோ அல்ல‌து எப்போது நாம் மாறுகின்றோம் என்ப‌தையோ த‌வ‌றென‌ச் சொல்ல‌ வர‌வில்லை. ஆனால் கால‌நேர‌ங்க‌ளுக்கு ஏற்ப‌ ந‌ம‌க்கு எது சாத‌க‌மாக‌ இருக்கின்றோமே அதைச் செய்துவிட்டு 'சும்மா சாட்டு' பிற‌கு சொல்வ‌த‌ற்கு இன்னொரு பெய‌ர் ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ம் என்ப‌தையும் குறிப்பிட‌ விரும்புகின்றேன்.

இந்த‌ விட‌ய‌த்துக்கு இன்னொரு உதார‌ண‌த்தையும் பார்ப்போம். புதிய‌ பார்வை என்றொரு ச‌ஞ்சிகையை எல்லோருக்கும் தெரியும். அந்த‌ ச‌ஞ்சிகையின் ப‌திப்பாசிரிய‌ர் ந‌ட‌ராஜ‌ன். அவ‌ரின் சாதி எதுவென‌ எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதே ச‌ஞ்சிகையில் அ.மார்க்ஸ் ப‌த்திக‌ள் எழுதிவ‌ருகின்றார். முத்துராம‌லிங்க‌ம் அவ‌ர்க‌ளின் நூற்றாண்டுவிழாவில் அது ஒரு சிற‌ப்பித‌ழ் வெளியிடுகின்ற‌து. அ.மார்க்ஸை ஷோபாவைப் போல‌ எல்லாப்பொழுதும் ஆத‌ரிக்கும் சுகுணாதிவாக‌ரிட‌ம், இதே கால‌ப்ப‌குதியில், 'முத்துராம‌லிங்க‌த்தை வித‌ந்தோத்தும் ஒரு இத‌ழில் அ.மார்க்ஸ் எழுதுவ‌து என்ன‌ நியாய‌ம்?' என‌ ஒரு கேள்வியைக் கேட்கின்றேன். அத‌ற்கு அவ‌ர், 'ஆமாம். இனி அ.மார்க்ஸ் புதிய‌ பார்வையில் எழுத‌மாட்டார்' என‌ப் ப‌தில் சொல்கின்றார்.

த‌லித்திய‌ அர‌சிய‌லை முன்னெடுத்த‌ அ.மார்க்ஸுக்கு ந‌ட‌ராஜ‌ன் ப‌ற்றி எதுவுமே தெரியாம‌லா அங்கே எழுத‌த் தொட‌ங்கினார் என்ப‌து முத‌ற்கேள்வி. ந‌ட‌ராஜ‌ன் த‌ன் சாதி நீக்க‌ அர‌சிய‌லை எங்கேயாவ‌து முன்வைத்து அதை ந‌ம்பித்தான் அ.மார்க்ஸ் போனார் என்ப‌த‌ற்கு ஏதாவ‌து ஆதார‌முண்டா? ஆக, அ.மார்க்ஸ் புதிய‌பார்வையில் எழுதிய‌தை எத‌ன் அடிப்ப‌டையில் புரிந்துகொள்வ‌து?

இதே ச‌ம்ப‌வ‌த்தை என‌து ப‌த்ம‌நாப‌ அய்ய‌ரின் கேள்வியோடும் ஒருவ‌ர் ஒப்பிட்டுப் பார்க்க‌லாம். அங்கே நான் குறிப்பிட்ட‌து 'சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல?' என்ப‌து. இத‌ற்கு ஒரு உதார‌ண‌மாய் ந‌ட‌ராஜ‌ன் இருக்கின்றார். இங்கே நாம் ந‌ட‌ராஜ‌னை அதிக‌ம் விம‌ர்சிக்க‌வேண்டுமா அல்ல‌து அய்ய‌ர் என்ற‌ பெய‌ரை ம‌ட்டும் வைத்திருப்ப‌த‌ற்காய் ப‌த்ம‌நாப‌ அய்ய‌ரை அதிக‌ம் விம‌ர்சிக்க‌வேண்டுமா? இந்த‌ 'வித்தியாச‌ங்க‌ளை' நாம் க‌ண‌க்கிலெடுக்க‌ வேண்டுமென‌த்தான் திரும்ப‌த் திரும்ப‌ ஷோபாவிட‌ம் வ‌ற்புறுத்துகின்றேன்.

(2) ஒரு முக்கிய விட‌ய‌த்துக்கு அது நிக‌ழ்ந்த‌ நேர‌த்தில் ஏன் ஷோபா எதிர்வினையாற்றவில்லை என்ற‌ என‌து முக்கிய‌கேள்வியைச் ஷோபா மிக‌ எளிதாக‌க் க‌ட‌ந்துபோகின்றார். ஷோபா ஏன் எல்லாவ‌ற்றுக்கும் எதிர்வினை செய்ய‌வேண்டுமா என‌ ஒருவ‌ர் கேட்க‌வும் கூடும். முத‌லாவ‌து இது ஷோபா அதிக‌ம் புழ‌ங்கும் இல‌க்கிய‌வெளி. இர‌ண்டாவ‌து ஷோபா த‌லித்திய‌ச் செய‌ற்பாடுக‌ளில் அதிக‌ம் ஈடுபாடுடைய‌வ‌ராக‌க் காட்டிக்கொள்ப‌வ‌ர். இவை எல்லாவ‌ற்றுக்கும் மேலாய் ஷோபாவின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ள் குறித்த‌ ச‌ம்ப‌வ‌ இட‌த்தில் இருந்த‌தோட‌ன்றி, அவ‌ர்க‌ளில் ஒருசில‌ர் மீதும் சுகிர்த‌ராணியால் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒன்றுமேயில்லாத‌ சீமானின் 'த‌ம்பி' ப‌ட‌த்துக்கு வ‌ரிந்து வ‌ரிந்து எழுதுகின்ற‌ ஷோபா இந்த‌ விட‌ய‌த்தில் ம‌வுன‌மாக‌ ஏன் இருந்தார் என்ப‌தும் முக்கிய‌ கேள்வி. அந்த‌ வ‌கையில் ஷோபாவினதும் சுக‌னின‌தும் ம‌வுன‌ம் 'க‌ள்ள‌ம‌வுன‌மே' என்ப‌தை இங்கே ம‌ன‌வ‌ருத்த‌துட‌ன் ப‌திவு செய்கின்றேன். (சுகிர்த‌ராணியின் இக்க‌ட்டுரைக்கான‌ ஒரு விவாத‌ம் என‌து பேஸ்புக்கில் நிக‌ழ்ந்த‌தையும் ஒரு குறிப்பாக‌ இங்கே விட்டுச்செல்கின்றேன்)

(3) கால‌ச்சுவ‌டு/உயிர்மை/கிழ‌க்குப் ப‌திப்ப‌க‌ங்க‌ளை நாடி புல‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள் செல்வ‌து என‌க்கும் வ‌ருத்த‌ம‌ளிக்கும் விட‌ய‌ந்தான். ஆனால் அவ்வாறு போகும் எல்லோரும் எம்மைப் போல‌ இணைய‌க்க‌ட‌லில் எப்போதும் மூழ்கிக்கிட‌ப்ப‌வ‌ரும் அல்ல‌ர். ந‌ட‌ப்ப‌வை அனைத்தையும் அறிந்த‌வ‌ர்க‌ளும் அல்ல‌ர். என‌வே தொட‌ர்ந்து ப‌ல‌ர் இவ்வாறான‌ ப‌திப்ப‌க‌ங்க‌ளைத் தேடிச் செல்ல‌த்தான் போகின்றார்க‌ள். அவ்வாறு செல்கின்ற‌வ‌ர்க‌ளைப் பார்த்து வ‌ருத்த‌ங்க‌ளையும், 'பாம்பென்றால் ம‌னித‌னைக் க‌டிக்கும்' என்று 'த‌த்துவ‌ங்க‌ளை'ப் பேசிக்கொண்டிருந்தால் ம‌ட்டும் போதுமா?  தொட‌ர்ந்து பாதிப்ப‌வ‌ர்க‌ளுக்காய் நாம் ஒரு சொல் ஆத‌ர‌வு அளித்தோ அல்ல‌து குறிப்பிட்ட‌ ப‌திப்ப‌க‌ங்க‌ளை அம்பல‌ப்ப‌டுத்தி எழுதுத‌லுமே நியாய‌மாகும். ஷோபா அண்மையில் ப‌ட்டிய‌லிட்ட‌ ந‌ம்பிக்கையான‌ ப‌டைப்பாளிக‌ளில் ஒருவ‌ர் மெலிஞ்சிமுத்த‌ன். அவ‌ர் ஒரு ப‌திப்ப‌க‌த்துட‌னான த‌ன் க‌ச‌ப்பான‌ அனுப‌வ‌த்தைக் கூறும்போது நாம் அத‌ற்குத் தார்மீக‌ ஆத‌ரவு கொடுக்க‌வேண்டிய‌து நம் அனைவ‌ரின‌தும் க‌ட‌மைய‌ல்ல‌வா?

'மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது' என்கின்ற‌ உதார‌ண‌ம் எவ்வ‌ள‌வு அபத்த‌மான‌து என்ப‌தைப் பாருங்க‌ள். எப்போதும் 'க‌வ‌ன‌த்தை ஈர்க்கும்' விட‌ய‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே குர‌ல் கொடுப்பேன் என்கின்ற‌ ம‌றைமுக‌ குர‌ல் இத‌ற்குள் ஒலிக்கிற‌தா இல்லையா ஷோபா? பாம்பு எப்போதும் பாம்புதானே? ம‌னித‌ன் பாம்பைக் க‌டித்தான் என்றால் எத‌ற்கு இவ்வ‌ள‌வு ப‌த‌ற்ற‌ப்ப‌டுகின்றீர்க‌ள்? ந‌ச்சில்லாத‌ ம‌னித‌ன் க‌டித்து பாம்புக்கு என்ன‌ பாதிப்பா வ‌ர‌ப்போகின்ற‌து என‌ நானொரு புதிய‌ வியாக்கியான‌ம் சொன்னால் அதுவும் ச‌ரியாக‌ வ‌ரும‌ல்ல‌வா? இதைத்தான் ஏற்க‌ன‌வே (1)ல் குறிப்பிட்ட‌மாதிரி த‌ன‌க்கேற்ற‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் சூழ‌லும் வ‌ருகின்ற‌போது ம‌ட்டும் த‌ன்னை வெளிப்ப‌டுத்தும் ஷோபாவின் ம‌னோநிலை என்கின்றேன்.

(4) நீங்க‌ள் இந்த‌க் கேள்விக்கு நேர‌டியாக‌ப் ப‌தில் சொல்லாத‌வ‌ரை, நீங்க‌ள் அருந்த‌தி ரோயின் மீது வைக்கும் விம‌ர்ச‌ன‌ம் வேறு உள்நோக்கை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌து என்றே இப்போதும் ச‌ந்தேகிக்கின்றேன்

(5)ஆங்கில‌ம் தெரியாத‌து ஒரு குறையேய‌ல்ல‌. நீங்க‌ள் பிரெஞ்சில் இர‌ண்டுவ‌ரி கேட்டால் என‌க்கும் ப‌தில் கூற‌த் தெரியாதுதான். ஆனால் அந்த‌ மோச‌டிக் க‌ட்டுரை குறித்து நீங்க‌ள் வெளிப்ப‌டையாக‌ அந்த‌க் கால‌ப்ப‌குதியிலேயே ம‌ன்னிப்புக்கேட்டிருக்க‌வேண்டும். எனெனில் அதை வைத்தே 'பின் ந‌வீன‌த்துவ‌ம் பேசுப‌வ‌ர்க‌ள் அனைவ‌ருமே போலிக‌ள்' என‌ முத்திரை குத்த‌ப்ப‌ட்ட‌தை அறிவீர்க‌ள். பின் ந‌வீன‌த்துவம் குறித்து தேட‌லும்,அறிய‌ ஆர்வ‌மும் உடைய‌ ஒருவ‌ருக்கு இத்த‌கைய‌ விட‌ய‌ங்க‌ள் எவ்வாறான‌ ஒரு மன‌ப்ப‌திவைக் கொடுக்குமென்று நினைக்கின்றீர்க‌ள்? எனெனில் அந்த‌ப்ப‌குதியிலேயே நானும் பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து அறிய‌ ஆவ‌ல் கொண்டிருந்தேன் என்ப‌தால் அந்த‌ நிலைமைக‌ள் என‌க்குப் புரியும். இன்று கூட‌ அதேமாதிரியான‌ சில‌ பிம்ப‌ங்க‌ளைச் சும‌ந்துகொண்டு பின் ந‌வீன‌த்துவ‌ம் குறித்து கேலி செய்துகொண்டிருக்கின்ற‌ சில‌ 'புர‌ட்சிவீர‌ர்க‌ளை' நீங்க‌ள் அறியாத‌தும‌ல்ல‌. த‌வ‌றுக‌ள் செய்யாத‌ ம‌னித‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ளா என்ன‌? அறிந்தே எத்த‌னையோ த‌வ‌றுக‌ளைச் செய்து ம‌ன்னிப்பும் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அறியாம‌ல் செய்த‌ த‌வ‌றுக்கு ம‌ன்னிப்புக் கேட்க‌  நாம் ஏன் த‌ய‌ங்க‌வேண்டும்?

(6) ஷோபா உங்க‌ளுக்கு த‌மிழ் ம‌ட்டுமேய‌ல்ல‌ பிரெஞ்சும் ந‌ன்கு தெரியுமென‌ என‌க்குத் தெரியும். என‌வே அதை ஒரு விட‌ய‌மாக‌ச் சொல்ல‌த் தேவையில்லை. சாருவின் 'உன்ன‌த‌ ச‌ங்கீத‌ம்' ந‌ல்ல‌ க‌தை என‌ச் சான்றித‌ழும் த‌ருகின்றீர்க‌ள். ந‌ன்று. ஆனால் பெண்க‌ள் ச‌ந்திப்பு ம‌ல‌ரில் (ஆதார‌ம் காட்ட‌ என்னிட‌ம் பிர‌தி வ‌ச‌மில்லை) ப‌ல‌ பெண்க‌ள் இக்க‌தை குறித்து வைத்த‌ எதிர்வினைக‌ளுக்கு, ஒரு தொகுப்பாள‌ன் என்ற‌வ‌கையிலும், க‌தை பிடித்த‌து என்ற‌வ‌கையிலும் எங்கேயாவ‌து விரிவாக‌ எழுதியிருக்கின்றீர்க‌ளா? இன்றுவ‌ரையும் அதுகுறித்து ஒரு இறுகிய‌ ம‌வுன‌த்தைத்தானே ப‌திலாக‌த் த‌ந்திருக்கின்றீர்க‌ள்? சாரு த‌ன் உனன‌த‌ச‌ங்கீத‌த்தை நியாய‌ப்ப‌டுத்த‌ தொட‌ர்ந்து ழார் ப‌த்தாயின் 'விழியின் க‌தை'யையும், ஷேக்ஸ்பிய‌ரின் 'ரோமியோ ஜூலிய‌ட்டை'யும் உதார‌ண‌ம் காட்டிக்கொண்டேயிருப்பார். ஆனால் விழியின் க‌தை தொட‌ங்கும் இட‌த்தைப் பாருங்க‌ள், 'I was nearly sixteen when I met Simone, a girl my own age, at the beach in X.' என்றே ப‌தின்ம‌வ‌ய‌துகார‌ன் சொல்ல‌க் க‌தை தொட‌ங்கும். அதேபோன்று ரோமியோ ஜூலிய‌ட்டில், 13 வ‌ய‌தில் இருந்து 14ற்கு வ‌ய‌துக்கு மாறுகின்ற‌ ஜூலிய‌ட்டுக்கு அவ‌ள் வ‌யதைவிட‌ ஒன்றிர‌ண்டு வ‌ய‌து கூடிய‌ ரோமியோவே காத‌ல‌ன்.

18வ‌ய‌துக்கு மேற்ப‌டாத ஒரு பெண்ணோடு. 18வ‌ய‌தைத்தாண்டிய‌ ஒரு ஆண் உற‌வுகொள்வ‌தென்ப‌து ச‌ட்ட‌ப்ப‌டி குற்ற‌ம்; ஆனால் அதேச‌ம‌ய‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தின்ம‌வ‌ய‌து பெண்ணோடு அவ‌ள் வ‌ய‌தையொட்டிய‌ ஆண் உற‌வில் இருப்பது குறித்துப் பிர‌ச்சினையில்லை. இந்த‌ வித்தியாச‌ங்க‌ளையும், தான் காட்டும் உதார‌ண‌ங்க‌ளுக்குள் இருக்கும் முர‌ண்க‌ளையும் தெரியாதுதான் சாரு தன்னை நியாயப்படுத்துகிறார் என்ப‌து இன்னொரு விவாத‌த்திற்கான‌ புள்ளி. புனைவில் எதை எழுத‌லாம்/எழுத‌க்கூடாது என‌ நாம் ச‌த்த‌ம் போட‌முடியாதுதான். ஆனால் சாருவின் 'நோநோ' சிறுக‌தைத் தொகுப்பையெல்லாம் வாசித்துவிட்டு, 'உன்ன‌த‌ச‌ங்கீத‌ம்' போன்ற‌ த‌ட்டையான‌ க‌தையைச் 'சிற‌ந்த‌ க‌தை' என‌ப் பாராட்டும் உங்க‌ள் வாசிப்பை எப்ப‌டிப் புரிந்துகொள்வ‌தென‌ யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.

இர‌ண்டாவ‌து இந்த‌க்க‌தையை முன்வைத்து வைக்க‌ப்ப‌டும் குற்ற‌ச்சாட்டு, இந்திய‌ இராணுவ‌ம் சிங்க‌ளப் பெண்ணைப் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உட்ப‌டுத்துவ‌து குறித்து. இப்ப‌டியொரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் உண்மையில் ந‌ட‌ந்திருக்கிற‌தா? ச‌ரி புனைவுதானே அங்கே எதையும் எப்ப‌டியும் முன்வைக்க‌லாம் என்ற‌ வாத‌த்தை நீங்க‌ள் முன்வைப்பீர்க‌ளாயின், நீங்க‌ள் எழுதிய‌ ஒரு சிறுக‌தையில் ர‌ஞ்சி(சுவிஸ்)யின் பெய‌ரையும், ஊரையும் குறிப்பிட்டு எழுதிய‌த‌ற்கு அவ‌ர் க‌ண்ட‌ன‌ம் தெரிவித்த‌போது அவ‌ரின் பெய‌ரை அக‌ற்றியிருந்தீர்க‌ள். அந்த‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் ஏன் நீங்க‌ள் புனைவில் வ‌ரும் க‌தைசொல்லி அதைச் ச‌ரியாக‌வோ பிழையாக‌வோ சொல்லியிருக்க‌லாம், அதை மாற்றுவ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் என‌க்கில்லையென‌ச் சொல்ல‌வில்லை? இந்த‌ இரு ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் முன்வைத்து உங்க‌ளை எந்த‌வ‌கையில் புரிந்துகொள்வ‌து?

(7) எஞ்சியிருப்ப‌வ‌ர்க‌ளின் வாழ்வுக்காய் ப‌கை ம‌ற‌ப்பும், மீளிண‌க்க‌மும் முக்கிய‌ம் என்ப‌தே என‌தும் நிலைப்பாடு. ஆனால் அதேச‌ம‌ய‌ம் வெற்றிபெற்ற‌வ‌ர்க‌ள் திணிக்கின்ற‌தாய் இந்த‌ விட‌ய‌ங்க‌ள் இருக்கக்கூடாது என்ப‌தோடு, தோற்ற‌வ‌ர்க‌ள் வென்ற‌வ‌ர்க‌ள் மீது ந‌ம்பிக்கை கொள்வ‌த‌ற்கான‌ ந‌க‌ர்வுக‌ளை வென்ற‌வ‌ர்க‌ளே செய்ய‌வேண்டும் என்ப‌தையும் நாம் வ‌ற்புறுத்தியாக‌ வேண்டியிருக்கிற‌து. இந்த‌ வெற்றி எப்ப‌டிப் பெற‌ப்ப‌ட்ட‌து என்ப‌து குறித்த‌ கேள்விக‌ளையும் நாம் ம‌ற‌ந்துவிட‌க்கூடாது. மேலும் வென்ற‌வ‌ர்க‌ள் எழுதும் ச‌ரித்திர‌மே 'வ‌ர‌லாறாக‌'ப் போய்விடுவ‌து குறித்தும் அவ‌தான‌மாக‌ இருக்க‌வேண்டும்.

இத‌ற்கு ஒரு உதார‌ண‌மாக‌ போல‌ந்தில் போலிஷ்காரர்களுக்கு ந‌ட‌ந்த‌ Katyn ப‌டுகொலைக‌ளைக் குறிப்பிட‌ விரும்புகின்றேன். போல‌ந்தை ஆக்கிர‌மித்திருந்த‌ நாசிப்படைக‌ளை வெற்றிகொண்ட‌ சோவிய‌த் ப‌டைக‌ள் நாசிக‌ளே இதைச் செய்தார்க‌ள் என‌ நெடுங்கால‌மாக‌க் கூறிவ‌ந்திருக்கின்ற‌ன‌ர். அண்மையிலேதான் ‍ இத்த‌னை வ‌ருட‌த்துக்குப் பிற‌கு தாங்க‌ளே ப‌டுகொலைக‌ளைச் செய்த‌தாக‌ ர‌ஷ்ய‌ அர‌சு வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிற‌து. காலம் கடந்த தீர்ப்புகளுக்கு சிலவேளைகளில் அர்த்தமேயிருப்பதில்லை என்பதையும் நாமறிவோம். என‌வே 'ப‌கை ம‌ற‌ப்பு' ம‌ற்றும் 'மீளிண‌க்க‌ம்' என்ப‌வ‌ற்றை முன்வைத்து நாம் வென்ற‌வ‌ர்க‌ளின் ப‌க்க‌ம் முற்றுமுழுதாக‌ச் சாய‌வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை என‌ச் சொல்ல‌ விரும்புகின்றேன். கால‌ம் தாண்டி வெளிவ‌ந்த‌ உண்மைக‌ளுக்கு ஒரு உதார‌ணமாய் இந்த‌ச் ச‌ம்ப‌வ‌ம் இருப்ப‌துபோல‌ ஈழ‌ப்போரிலும் புதைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ல‌ உண்மைக‌ள் இருக்கும் என்ப‌தை ஷோபாவும் நினைவில் கொள்ள‌வேண்டுமென‌ விரும்புகிறேன்.

ப‌கை ம‌ற‌ப்பை முன்னிறுத்தி இல‌ங்கையில் ந‌ட‌க்கும் விட‌ய‌ங்க‌ளுக்கு ஆத‌ரவு கொடுப்ப‌வ‌ர்க‌ள் எல்லோருமே எப்ப‌டி இல‌ங்கை அர‌சின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் இல்லையோ, அப்ப‌டியே இல‌ங்கை அர‌சின் செய‌ற்பாட்டை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌கை ம‌ற‌ப்புக்கும், மீளிண‌க்க‌த்திற்கும் எதிரான‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இல்லை என்ப‌தையும் நாம் க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வேண்டும்.

((8) இந்த‌க் கேள்வியின் முக்கிய‌மே, சாதிப்பெய‌ர்க‌ளை நீக்கிய‌வ‌ர்க‌ள் எல்லோரும் சாதி நீக்க‌ம் செய்த‌வ‌ர்க‌ளும‌ல்ல‌, சாதிப்பெய‌ர்க‌ளோடு இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் சாதி வெறிய‌ர்க‌ளும் அல்ல‌ என்ப‌தே. இந்த‌ வித்தியாச‌ங்க‌ளை அறியாது 'பெய‌ர்க‌ளை' ம‌ட்டும் க‌ருத்திற்கொண்டு ந‌ட்பு ச‌க்திக‌ளையும் எதிர்த்திசையில் வைத்து உரையாடுவ‌து எந்த‌ள‌வில் ச‌ரியென்ப‌தை யோசிக்க‌வேண்டும். இன்று ஹ‌ரி த‌ன‌க்குப்பின்னால் வ‌ரும் பெய‌ரை எடுத்துவிட்டார், அவ‌ர் அதை எடுக்காதுவிட்டிருந்தால், ஷோபா எவ்வாறான‌ உதார‌ண‌த்தைச் சொல்லித் த‌ப்பித்துக்கொண்டிருப்ப்பார் என‌வும் யோசிக்கின்றேன்.

(9)'தொழிலாளிக்கு தாய்நாடு கிடையாது என்ற கார்ல் மார்க்ஸின் பார்வையும் நானொரு தேசத்தரோகி என்ற பெரியாரின் அறைகூவலுமே எனது வழிகள்.'

இவ்வாறான‌ பிர‌க‌ட‌ன‌ங்க‌ளும், சூளுரைப்புக்க‌ளும் ந‌ல்ல‌தே. எனினும் ஷோபா நீங்க‌ள் இந்தியாவிற்குப் போக‌ விஸா எடுக்கும்போது இவை உங்க‌ளுக்கு உத‌வி புரியாது. நீங்க‌ள் உங்க‌ளை இல‌ங்கைய‌னாக‌வோ அல்ல‌து பிரெஞ்சுக்கார‌னாக‌வோ அடையாள‌ங்காட்டினால்தான் விஸா த‌ருவார்க‌ள் அல்ல‌வா? இவ்வ‌கையான‌ தேர்வுக‌ள் தான் இல‌ங்கையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் இருக்கும் என்ப‌தை எப்ப‌டி மறுத‌லிப்பீர்க‌ள்?

போர் துர‌த்திய‌ கால‌ந்தொட்டு ஈழ‌த்தில் இருந்த‌வ‌ரை ஏன் நான் த‌மிழ‌னாய் பிற‌ந்தேன் என‌க் க‌வ‌லைப்ப‌ட்டிருக்கின்றேன். போருக்குள் அக‌ப்ப‌ட்டிற‌ந்தால் அடுத்த‌ பிற‌ப்பு என்று ஒன்றிருந்தால் த‌மிழ‌னாய் அல்லாது பிற‌க்க‌ வேண்டுமென‌வே பிரார்த்தித்துமிருக்கின்றேன். நான் என‌து அடையாள‌ங்க‌ளைத் துற‌க்க‌ விரும்பிய‌போதும் என் மீது த‌மிழ‌ன் என்ற‌ அடையாள‌ம் ஒவ்வொரு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளிலும் திணிக்க‌ப்ப‌ட்ட‌து.

அவ்வாறு ஒரு அடையாள‌த்தை வைத்து ஒடுக்க‌ப்ப‌டும்போது, அந்த‌ அடையாள‌த்தை வைத்து கிள‌ர்ந்தெழுவ‌து த‌விர்க்க‌முடியாது. வ‌ர‌லாறு முழுதும் அதுவே நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. த‌லித் என்ற‌ அடையாள‌த்தை வைத்து ஒடுக்குத‌ல்க‌ள் நிக‌ழும்போது த‌லித்துக்க‌ள் அத‌ன் பெய‌ரிலே கிள‌ர்ந்தெழுவ‌து எவ்வாறு த‌விர்க்க‌முய‌லாதோ, அவ்வாறே த‌மிழ‌ர் என்ற‌ பெய‌ரில் ஒடுக்க‌ப்ப‌டும்போது த‌ங்க‌ளை ஒரு இணைந்த‌ ச‌க்தியாக‌ ஒடுக்க‌ப்ப‌டுவ‌தற்கு எதிராக‌ப் போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்துவ‌தையோ நாம் ஒதுக்கிவிட‌ முடியாது. ந‌ம‌க்கு வ‌ழிகாட்டிக‌ளாக‌ இருந்த‌வ‌ர்க‌ளும், ந‌ம்மை வ‌ழிந‌ட‌த்திய‌வ‌ர்க‌ளும் த‌வ‌றாக‌ இருந்தார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ நம் மீது நட‌ந்த‌ ஒடுக்குமுறைக‌ள் இல்லை என்றாகிவிடாது.

உங்க‌ளைப் போல‌வே தேசிய‌த்தின் மீது ந‌ம்பிக்கை என‌க்கில்லையென‌ வெளிப்ப‌டையாக‌க் கூறியிருக்கின்றேன். அவை இறுதியாய் எங்கே போய் முடியுமென்ப‌தையும் குறிப்பிட்டிருக்கின்றேன். ஆனால் த‌ன் தேசிய‌ அடையாள‌த்தின் பெய‌ரால் ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌ ஒரு இன‌ம், த‌ன் தேசிய‌த்தின் பெய‌ரால் ஒருங்கிணைவ‌தை நாம் த‌வ‌றென்றும் கூறிவிட‌முடியாது. இவ்வாறான‌ உங்க‌ள் சூளுரைப்புகளுக்கு அப்பால் இருக்கும் ய‌தார்த்தையும் புரிந்துகொள்ள வேண்டுகின்றேன். உங்க‌ளைப் போல‌வே என‌க்கும் பிடித்த‌மான‌ பெரியார், (இப்போது இருந்தால்) தான் வெளிநாடு செல்லும்போது த‌ன்னை இந்திய‌ன் என‌ பாஸ்போட்டில் குறிப்பிட்டிருப்பாரா அல்ல‌து தேச‌த்துரோகியென‌க் குறிப்பிட்டிருப்பாரா என‌வும் யோசித்துப் பார்க்க‌வும்.

(10) சுக‌னைப் ப‌ற்றிக் கேட்ட‌ கேள்விக்கு இப்ப‌டி விர‌லைச் சூப்புகின்ற‌ குழ‌ந்தையாய் அப்பாவித்த‌ன‌மாய் திருப்பிக் கேள்வி கேட்கின்றீர்க‌ளே ஷோபா? இணைய‌த்தில் சும்மா தேடினாலே சுக‌ன் ப‌ற்றிய‌ விமர்சனங்கள் நிறைய‌க் கிடைக்குமே? நீங்க‌ள் இப்ப‌டி 'அப்பாவி'க்குழ‌ந்தையாய்தான் இருப்பீர்க‌ள், ஆனால் எதிர்கால‌த்தில் நீங்க‌ள் வ‌ள‌ர்ந்து தொலைந்துவிட்டாலும், இந்த‌விட‌ய‌த்தை அறிய‌வேண்டுமென்ப‌த‌ற்காய்தானே பானுபார‌தியின் பேஸ்புக்கையும் உதார‌ண‌ம் காட்டியிருந்தேன். 'உயிரெழுத்தில்' எழுதுவ‌தால் அவ‌ர்க‌ள் உங்க‌ள் ந‌ட்பு வ‌ட்ட‌த்திற்குள்ளே இருப்பார்க‌ள் என‌ ந‌ம்புகின்றேன். ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கும்போது அவ‌ர்க‌ளிட‌ம் கேளுங்க‌ள், ஏன் சுக‌னிட‌ம் உங்க‌ளுக்கு இப்படி க‌டுமையான‌ விம‌ர்ச‌ன‌ம் இருக்கிற‌தென்று. என்னாலான‌ உத‌வி இப்போதைக்கு இவ்வ‌ள‌வுதான்.

(11)'தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். நீங்கள் உங்களுடைய வலைப் பதிவில் எழுதுவதை நான் தடைசெய்தால்தான் அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு'

நான் அவ‌தானித்த‌வ‌ரை நீங்க‌ள் பேஸ்புக்கில் அக‌ற்றிய‌வ‌ர்க‌ள் எல்லாம் உங்க‌ள் மீத‌ல்ல‌வா விம‌ர்ச‌ன‌ம் வைத்திருந்தார்க‌ள். இறுதியில் நேற்றுக்கூட‌ ஒருவ‌ரை அக‌ற்றியதாக என் ஃபேஸ்புக் மூலம் அறியமுடிந்திருந்தது.

நுண‌லும் த‌ன் வாயால் கெடும் என்று சும்மாவா கூறினார்க‌ள். இப்ப‌டி நீங்க‌ள் எழுதிய‌தையே சற்று விரித்துப் பார்ப்போம். இதையே ஒரு இய‌க்க‌ம் அல்ல‌து த‌லைமை தாங்குப‌வ‌ர், நான் என் இய‌க்க‌த்தில் இருப்ப‌வரைச் சித்திர‌வ‌தை செய்வேன், விரும்பினால் போட்டுக்கூட‌த் த‌ள்ளுவேன், எனெனில் இது என் இய‌க்க‌ம், நீ வாயைப் பொத்திக்கொண்டு போ' என்று சொல்வ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு நேர‌ம் எடுக்கும் என‌ நினைக்கின்றீர்க‌ள். அவ‌ர்க‌ளும் யாரையும் போட்டுத்த‌ள்ளிவிட்டு, 'இந்த‌ நப‌ர் எங்க‌ள் இய‌க்க‌ம் ப‌ற்றி அவ‌தூறு ப‌ர‌ப்புகின்றார்' என‌ச் சொல்லிவிட்டுப் போக‌லாம் அல்ல‌வா? இதுதானே க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் நிக‌ழ்ந்தும் இருக்கிற‌து அல்ல‌வா ஷோபா? இதைத்தான் ஏற்க‌ன‌வே சொன்னேன், எங்க‌ளிட‌ம் எத்த‌கைய‌ ச‌கிப்புத்த‌ன்மையும், பொறுப்புண‌ர்ச்சியும் இல்லாத‌போது நாம் ச‌ன‌ங்க‌ளுக்காய் பேசுவ‌து என்ப‌து சுத்த‌ ப‌ம்மாத்து என்கின்றேன். எங்க‌ளை ந‌ம்பி ச‌ன‌ம் வ‌ருகின்ற‌து என்றால், அது அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குத் தாங்க‌ள் கழுத்தில் தூக்குக் க‌யிற்றைப் போட்ட‌மாதிரியே என‌ இப்போதும் தெளிவாக‌ச் சொல்கின்றேன்.

(13) புலிக‌ள் எப்போதும் ஆயுத‌ப்போராட்ட‌ம் அத‌ன் மூல‌ம் த‌மிழீழ‌ம் என்ற‌வ‌கையில் மட்டுமே சிந்தித்த‌வ‌ர்க‌ள் என்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும். அவ‌ர்க‌ள் சாதி ஒழிப்பு ம‌ட்டுமின்றி பிற‌ எந்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கும் ஒருபோதும் வேலைத்திட்ட‌த்தை முன்வைத்த‌தோ ந‌டைமுறைப்ப‌டுத்திய‌தோ இல்லை என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌தே. இன்குலாப் போன்ற‌ புலிக‌ளின் தீவிர‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே, புலிக‌ள் எழுச்சியுட‌ன் இருந்த‌ கால‌த்திலேயே, 'த‌மிழீழ‌ம் கிடைத்தால்கூட‌ அத‌ன்பிற‌கும் அங்குள்ள‌ ம‌க்க‌ள் இன்னொரு போராட்ட‌த்திற்குத் த‌யாராக‌வேண்டும். அது சாதிக்கு எதிரான போராட்ட‌ம்' என‌ எப்போதோ கூறியுமிருக்கின்றார்கள். ஆக‌ உங்க‌ளைப் போன்ற‌ 'மாற்று' அர‌சிய‌ல் பேசிய‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமின்றி புலிக‌ளைத் தீவிர‌மாக‌ ஆத‌ரித்த‌வ‌ர்க‌ள் கூட‌ இதைச் சொல்லியிருக்கின்றார்க‌ள்.

ஆனால் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ ஏதோ புலிக‌ள் ம‌ற்ற‌ எல்லாவ‌ற்றையும் செய்துவிட்டு சாதியை ம‌ட்டும் வ‌ள‌ர்க்க‌த் துணைபோகின்றார்க‌ள் என்ற‌ ப‌ர‌ப்புரையைச் செய்துகொண்டிருந்தீர்க‌ள் என்ப‌தை நாம‌னைவ‌ரும் அறிவோம். இப்போது ' புலிகள் மீதான எனது விமர்சனம் அவர்கள் சாதியத்தை வளர்தார்கள் என்பதல்ல. சாதியைக் கில்லியெறிய அவர்கள் ஆழமான வேலைத்திட்டங்களை வைக்காததையே எப்போதும் எனது விமர்சனமாக வைத்து வந்திருக்கிறேன்' என‌ நீங்க‌ள் கீழிறங்கி வ‌ந்திருப்ப‌தே வ‌ர‌வேற்க‌க்கூடிய‌ விட‌ய‌ந்தான். எனெனில் இப்ப‌டி நீங்க‌ள் வெளிப்ப‌டையாக‌க் முன்பு கூறி நான் வாசித்த‌ நினைவும் இல்லை.

இது ஒருவ‌கையில் புரிந்துகொள்ள‌க்கூடிய‌ ம‌னோநிலைதான் ஷோபா. எனெனில் புலி அல்லாத‌வ‌ராய் இருப்ப‌வ‌ரைவிட‌ புலிக்குள் இருந்து வெளியே வ‌ந்து, புலியை விம‌ர்சிப்ப‌வ‌ர்க்கு நிறைய‌ பிர‌ச்சினைக‌ள் உண்டு. த‌ன‌து விம‌ர்ச‌ன‌த்தைக் காட்ட‌மாய் க‌ண்மூடித்த‌ன‌மாய் வைத்தாலான‌றி அவ‌ர் த‌ன்னை நிலை நிறுத்திக்கொள்ளுத‌ல் க‌டின‌ம். இது உங்க‌ளுக்கு ம‌ட்டும‌ல்ல‌ நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. வேறு இய‌க்க‌ங்க‌ளில் இருந்து புலிக‌ளோடு பிற்கால‌த்தில் சேர்ந்த‌வ‌ர்க‌ளும் -சாதார‌ண‌மான‌வ‌ர்க்கு இருக்கும் புலி ஆத‌ர‌வை விட‌- க‌ண்மூடித்த‌ன‌மான‌ புலி ஆத‌ர‌வைக் காட்டுவார்க‌ள். ஷோபா இதுவே உங்க‌ளுக்கு க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்தென‌ உறுதியென‌ ந‌ம்புகின்றேன், அதாவ‌து க‌ண்மூடித்த‌ன‌மான‌ புலி எதிர்ப்பு. அதுவேதான், இன்று ஈழ‌த்தில் புலிக‌ள் இல்லாத‌ கால‌த்தில், உங்க‌ள் நிலைப்பாடுக‌ளைப் படுகுழிக்குள் த‌ள்ளிக்கொண்டிருக்கின்ற‌து. முறையான‌ மாற்ற‌ர‌சியல் செய்திருந்தீர்க‌ளாயின் இப்ப‌டித் த‌டுமாற்ற‌ங்க‌ளோ ச‌ரிவுக‌ளோ வ‌ந்திருக்காது.

(14) முழுப்பூச‌ணிக்காயைச் சோற்றில் கூட‌ ம‌றைக்கலாம்; ஆனால் நான் விரிவாக‌ விப‌ரித்து எழுதிய‌ கேள்விக்கு தொட‌ர்பின்றிப் ப‌தில் சொல்கின்றீர்க‌ளே ஷோபா. நேர‌டியாக‌க் கேள்வி கேட்டும் உங்க‌ள் 'விவாத‌த் திற‌மை'யை இங்கும் செருகிவிடுத‌ல் நியாய‌மா?

இன்றைய‌ உங்க‌ள் க‌ருத்துக்க‌ளின் அடிப்ப‌டையில் நான் நேர‌டியாக‌க் கேட்ட‌து, நாளை புலிக‌ள் ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியாகி, அங்கிருக்கும் ம‌க்க‌ளின் ஆத‌ர‌வோடு த‌னித் த‌மிழீழ‌மும் பெற்றால் ஆத‌ரிப்பீர்க‌ளா அல்ல‌து புலிக‌ள் என்ற‌ கார‌ண‌த்திற்காய் எதிர்ப்பீர்க‌ளா என்ப‌து... ஏன் இப்ப‌டிச் சுற்றிவ‌ளைத்துப் ப‌தில் கூறுகின்றீர்க‌ள்.

உங்க‌ளைப் போல‌வே நானும் ' தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரலுக்கு ஆதரவாய் இருப்பவன்' என‌வே கூற‌விரும்புகின்றேன். உதார‌ண‌த்திற்கு க‌ன‌டாவிலிருக்கும் கியூபெக் மாகாண‌ம் த‌னி நாட்டுக்கான‌ கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிற‌தென‌ வைப்போம் (ஏற்க‌ன‌வே அருந்த‌ப்பில் த‌னிநாடாகாம‌ல் இருக்கிற‌தென்ப‌தை நீங்க‌ளும் அறிவீர்க‌ளென‌ ந‌ம்புகிறேன்). அங்கிருக்கும் மக்கள் த‌னிநாட்டுக்கு ஆத‌ர‌வ‌ளிக்கின்ற‌ன‌ர். அப்போதும் நான் 'தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்' என‌க் கூறிக்கொண்டிருப்ப‌து எவ்வ‌ள‌வு அப‌த்த‌மாக‌ இருக்கும்? அவ்வாறாக‌ அல்ல‌வா உங்க‌ளின் ப‌திலும் இருக்கிற‌து.

அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் நான் கேள்வி (9)ல் 'தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.' என‌க் கேட்க‌ ஏதோ புத்திசாலித்த‌ன‌மாக‌ப் ப‌தில‌ளிப்ப‌தாய் நினைத்து தொட‌ர்பிலாது ஏதோ ப‌தில‌ளித்துவிட்டு இப்போது 'தேசிய‌ இன‌ங்க‌ளின் சுய‌நிர்ண‌ய‌ம்' குறித்துப் பேசுகின்றீர்க‌ளே? இதைத்தான் க‌ட‌ந்த‌ ப‌குதியில் கூறினேன் ஸ்பைட‌ர்மான் மாதிரி தாவித் தாவிப்பாயும் உத்தி.

ச‌ரி உங்க‌ளின் குயுக்தி முறைக‌ளையாவ‌து விடுவோம். நீங்க‌ள் கார்ல் மார்க்ஸையும் ஆசானாக‌ வைத்திருக்கின்றீர்க‌ள் அல்ல‌வா? உங்க‌ள் அள‌வுக்கு மார்க்ஸை லெனின் முறையாக‌க் க‌ற்றிருக்காவிட்டால் கூட‌, லெனின் ஒரு தேசிய‌ இன‌ம் அது தான் விரும்பினால் த‌னிநாடாக‌ப் பிரிந்துபோகின்ற உரிமை அத‌ற்கு உரிய‌து என‌வும் கூறியிருக்கின்றார் அல்லவா? அதைக்கூடவா ஞாபகம் வைக்காமல் இருக்கின்றீர்கள்?

'நான் ஒரு தேசத்துரோகி, நான் எப்போதும் தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்... 'என எப்போதும் எல்லாவற்றுக்கும் ஒன்றையே கூறிக்கொண்டிருப்பது எவ்வளவு அபத்தமென்பதைத்தான் மேலேயுள்ள கேள்விகளின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். ஏற்கனவே தயாரித்த விடைகளை வைத்துக்கொண்டு எல்லா இடங்களிலும் பொருத்திப் பார்த்துக்கொண்டு உங்களை ஒரு பின் நவீனத்துவத்தில் ஆர்வமுள்ள ஒருவராய் எப்படி இனங்காட்ட முயல்கின்றீர்களென  வியப்பாகவே என்னால் இப்போதும் பார்க்க முடிகின்றது.

-------------------
இறுதியாய் என‌க்கிருக்கும் ச‌ந்தேக‌ம். நீங்க‌ள் ஊரில்/உல‌க‌த்தில் இருக்கும் ப‌ல‌ருக்கு சுவ‌ரொட்டிக‌ளும் எதிர்வினைக‌ளும் செய்திருக்கும்போது த‌மிழ்ச்சூழ‌லில் பெரும் பாதிப்பை ஏற்ப‌டுத்தும் ஜெய‌மோக‌ன் ப‌ற்றி எதுவுமே எழுத‌வில்லை? உங்க‌ளுக்கும் என‌க்கும் பிடித்த‌மான‌ பெரியாரை ம‌ட்டுமின்றி, உங்களில் அதிக‌ம் பாதிப்புச் செலுத்தும் அ.மார்க்ஸையும் அவ‌ர் நேர‌ங்கிடைக்கும்போது அடித்துத் துவைக்கிறாரே? ஏன் ஒரு சொல் அது குறித்து நீங்க‌ள் பேசுவ‌தில்லை? சில‌வேளை இத‌ற்கும் 'மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம்' என‌ப் பெரும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ருவ‌த‌ற்காக‌க் காத்திருக்கின்றீர்க‌ளோ தெரியாது? இதைவிட‌ நீங்க‌ளும் அ.மார்க்ஸும் திட்டித்தீர்க்கின்ற‌ ய‌முனா ராஜேந்திர‌ன்தான், உங்க‌ள் மார்க்ஸையும் காப்பாற்ற‌ வ‌ர‌வேண்டியிருக்கிற‌து என்ப‌து இன்னொரு முர‌ண்ந‌கை.

கடந்த இரண்டு வாரங்களாய் இந்த விடயங்களோடு ஈடுபட்டிருந்ததால் என்னால் ஃபேஸ்புக்கில் நடக்கும் பிறவற்றை தொடர்ந்து வாசிக்கமுடியவில்லை. இன்று காலை இதை வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. இதில் கூறப்படும் விடயங்களை ஆழமாகக் கவனிக்காததால் உள்நுழைந்து கருத்துச் சொல்ல இப்போது விருப்பம் இல்லை. ஆனால் இக்கட்டுரையில் உங்களை ஒரு தலித்தாகவே தொடர்ந்து அடையாளப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. அடையாளங்களை மறுதலிப்பது தவறேயல்ல, ஆனால் உயர்சாதி அடையாளங்களை மறுப்பதால் அதன் நிகர் தலித் என்றாகிவிடாது. அது மிகப்பெரும் மோசடி. இவ்வாறு அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுபோல் நீங்கள் உங்களை ஒரு 'தலித்' எனக் கூறியிருப்பின் எனது கண்டனங்களைப் பதிவு செய்துகொள்கின்றேன்.
 -----------------

இத்துட‌ன் ஷோபாச‌க்தியுட‌னான‌ விவாத‌த்திலிருந்தும் இத்தொடரிலிருந்தும் வில‌கிக்கொள்கின்றேன். ஷோபாச‌க்தி த‌ன‌து த‌ள‌த்தில் வ‌ள‌ர்ம‌தியின் (என‌துமான‌) 6 கேள்விக‌ளுக்குப் ப‌தில் அளித்திருக்கின்றார். அந்த‌ப் ப‌தில்க‌ளை இன்னும் ஆற‌ம‌ர‌ இருந்து வாசிக்க‌வில்லை. அவ‌ற்றைப் ப‌ற்றி ஏதேனும் எழுத‌வேண்டியிருப்பின் எப்போதாவ‌து ஒருநாள் எழுத‌ முய‌ற்சிக்கிறேன்.

(இறுதியாய் நிதான‌மாய் உரையாட‌வ‌ந்த‌ ஷோபாவிற்கும் ந‌ன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனெனில் என் அனுப‌வ‌ங்க‌ளின்ப‌டி ப‌ல‌ருக்கு அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி சின்ன‌ விம‌ர்ச‌ன‌த்தை வைத்தாலே, தொட‌ர்பேயின்றி எதையெதையோ கோப‌த்தில் பேசிவிட்டு அதுவ‌ரைகால‌ ந‌ட்பையே முறித்துவிட்டுச் சென்றுவிடுப‌வ‌ர்க‌ளாக இருந்திருக்கின்றார்க‌ள். அந்த‌வ‌கையில் என்னைவிட‌ தெளிவாக‌வே இது த‌னிப்ப‌ட்ட‌ காழ்ப்பின் அடிப்ப‌டையிலான‌ உரையாட‌ல் இல்லை என்ப‌தைக் கூறி தொட‌ர்ந்து உரையாடிய ஷோபாவிற்கு நன்றி. ஷோபா எப்ப‌டி எள்ள‌ல்க‌ளாய் எனக்குப் ப‌தில் அளித்தாரோ அதைவிட‌ எள்ள‌லாக‌வே நானும் ம‌றுமொழிந்திருக்கின்றேன். என‌க்கு எப்ப‌டி சில‌வேளைக‌ளில் ஷோபாவின் எள்ள‌ல் எரிச்ச‌லைத் த‌ந்திருக்குமோ அதையள‌வுக்கு அவ‌ருக்கு என‌து எள்ள‌ல்க‌ள் எரிச்ச‌ல்க‌ளைக் கொடுத்திருக்கும் என்ப‌தை என்னால் உணர‌முடிகின்ற‌து. அத‌ற்கு ம‌ன்னிப்பும், இதுவும் விவாத‌த்தின் ஒருப‌குதியே என‌ப் பெரிதுப‌டுத்தாதுவிட்ட‌ ஷோபாவிற்கு ந‌ன்றியும்.)

ஷோபாசக்தியிடம் கேட்ட இருபது கேள்விகள்

Tuesday, February 15, 2011

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பாகம் 02

ஷோபாசக்தி ஒரு நோட்டைத் தனது ஃபேஸ்புக்கில் எழுதிவிட்டு ஒரு நண்பருக்குப் பதிலளிக்கும்போது ."இதே வேண்டுகோளை முன்னர் xxxxx மும், டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன்." எனக் கூறியதே இரண்டாம் ஆட்டம் தொடங்குவதற்கான முதற்புள்ளியாக அமைந்தது.

எனது குறிப்பான (ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்) வாசிப்பவர்கள், அங்கே நான் ஷோபாசக்தி சிலரை வேண்டுமென்றே தவிர்க்கின்றார் என்று குறிப்பிடவே எழுதியிருந்தேன் என்பதை விளங்கியிருப்பார்கள். At the first place, I really don't want ask any questions to him. நிச்சயமாக அவரிடம் எனக்கு எந்தக் கேள்விகளும் எழுப்ப வேண்டியிருக்கவில்லை. எனெனில் நான் தொடர்ந்து ஷோபாசக்தியின் புனைவுகளையே வரவேற்பவனாகவும், அவரது அரசியலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இருப்பதாகவும் தொடர்ந்து கூறிவந்திருக்கின்றேன். எனவே அதன் அடிப்படையில் எனக்கு அவரிடம் கேள்விகள் கேட்பதற்கான   எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை.

ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம் குறிப்பில் ஒரு மூன்றாம் மனிதனாய், ஷோபாசக்தியின் ஃபேஸ்புக் பித்தலாட்டங்களை அவதானித்துவிட்டு அதை ஒரு வேண்டுகோளாய் வைக்கவேண்டுமெனவே எழுதினேன்.  அவரோடு நெருங்கி உறவாடக் கூடியவர்களே ஷோபாவின் இந்த சமனிலையற்ற ஆட்டத்தை ஷோபாவிற்குச் சுட்டிக்காட்டவில்லையே என்ற ஆதங்கத்தையும் எனது குறிப்பில் எழுதியிருந்தேன்.

ஆனால் அதேவேளை ஷோபாவை தொடர்ந்து பல்லாண்டுகளாய் நுட்பமாய் அவதானித்து வந்தவன் என்றவகையில் ஒரு கவனக்குறிப்பையும் இவ்வாறு இறுதியில் எழுதியிருந்தேன்...

'எனக்குத் தெரியும் இதற்கும் நீங்கள் வெட்டி ஒட்டிக் கேள்வி கேட்பீர்கள் என்று. பரவாயில்லை. ஆனால் எனக்கு உடனே பதில் சொல்ல முடியுமோ தெரியவில்லை. அவ்வாறு எதுவும் எழுதாவிட்டால் 'காணாமற்போய்விட்டான் / தலைமறைவாகிவிட்டான்' என யமுனாவிற்குச் செய்ததைப் போல மட்டும் செய்துவிடாதீர்கள், நேரம் வாய்க்கும்போது அதற்கும் பதில் சொல்வேன்'.

ஆக, ஷோபாவை எவ்வாறு சரியாகக் கணிப்பிட்டேனோ, நேரம் பார்த்து அவர் எனக்கும் அடிக்கத் தொடங்கினார். அதாவது "டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன். "

ஏற்கனவே நடந்தவற்றை அறியாது வாசிக்கும் ஒருவர், ஏதோ நான் ஷோபாசக்தியிடம் கேள்வி கேட்கவேண்டுமென ஒற்றைக் காலில் நின்றதாகவும், பிறகு ஷோபாவிடம் பயந்து பின்வாங்கிய‌தாக‌வுமே எண்ணிக்கொள்வார்.  என்னிடம் கேள்விகள் இருக்கின்றன என்று நான் கூறாமலே ஷோபா எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றார், பெயர்களை இணைத்துப் பேசுகிறார் என்பதைப் பாருங்கள் (ஷோபாவின் விவாதத்திறமையின் நளினங்கள் குறித்து,  சில உதாரணங்களை அடுத்த பதிவில் எழுதலாம் என இருக்கின்றேன்).

இது ஷோபாவிற்குப் புதிதுமல்ல. ஷோபா பிரான்சில் பலருக்குச் செய்ததுதான்.. இறுதியில் யமுனா ராஜேந்திரனுக்கு 'காணவில்லை' எனவும் ஒரு 'சுவரொட்டி' சத்தியக்கடதாசியில் ஒட்டப்பட்டதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆக இதை நினைத்து எனக்கு வருந்த எதுவுமில்லை. ஆனால்  இதை இப்படியே விட்டால், உசாத்துணை (reference)  போடுவதுபோல ஷோபா இனிவரும் காலங்களில் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் என் பெயரையும் இழுப்பார் என்றெண்ணி அவருக்கான சில கேள்விகளை இவ்வாறு எழுதத்தொடங்கினேன்.

(பார்க்க: ஆடு அறுக்க முன்னரே அடுப்பிலே சட்டி வைக்கலாமா மேன்மை தங்கிய ஷோபாசக்தி?)

"....நான் முன்னர் எச்சரிக்கையாக எழுதியது இப்போது நிகழ்ந்திருக்கின்றது. 'டிசேயிடம் கேட்டேன், அவர் அதைச் செய்யவில்லை' என்கின்றார் ஷோபா. ஆக, இதன் மறைபொருள் நான் தெகிரியமாகச் சிங்கிள் சிங்கமாய் நின்று கேட்டும் டிசே போன்ற தூசிகள் எல்லாம் பயத்தில் ஓடிவிட்டாங்கள் எனவும் விரும்பினால் வாசிக்கலாம். உண்மையில் அந்த உரையாடலைத் தொடர விருப்பமில்லை. எனெனில் ஷோபா குறுக்குமறுக்குமாய் மறித்து தாச்சி விளையாடி... எப்படி என்றால் ஆவது அளாப்பி 'சிங்கம் வென்றது' என்று மார்தட்டுவார் எனபது நன்கு தெரியும். தோல்விதான் என ஏற்கனவே தெரிந்த முடிவுக்காய், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பாதையில் போய் என்ன பிரயோசனம்? நான் என்ன கைப்புள்ளயா என்ன? வடிவேலுக்காவது அடிவாங்குகிற அளவுக்கு படங்களில் காசு கொடுகின்றனர். நான் இப்படி அடிவாங்க ஷோபாவா எனக்கு காசு அனுப்புவார்?

இந்தாருங்கள் ஷோபா உங்களுக்கு வெற்றி என அவருக்குக்கேடயத்தை இப்போதே மனமுவந்து கொடுத்துவிடுகின்றேன். ஏன் கிண்ணத்துக்குப் பதிலாய் கேடயம் கொடுக்கின்றேன் என்றால் ஷோபா ஒரு சிங்கம். அவருக்கு கேடயம் கொடுத்தால் அதைக் கவசமாய் நெஞ்சில் அணிந்துகொண்டு அடுத்த போர்க்களத்துக்குச் சென்று வெற்றி வாகை சூடுவார். அந்தப் பெருமிதத்ததால் என்னை மாதிரியான கைப்புள்ளகளையும் மறந்துவிடுவார். நானும் என்பாட்டில் நிம்மதியாக இருக்கலாம்.

இவ்வாறுதான் சற்றுமுன்னர்வரை இருந்தேன். இருந்தும் ஒரேயொரு கவலைமட்டும் வந்தது. நாளை நான் மண்டையை போடும்போது ஷோபாவோ அல்லது அவரது இரசிகர்களோ என் கல்லறைக்கு முன் நின்று, 'கேளடா கேளடா என ஷோபாசக்தி நெஞ்சை நிமிர்த்திக் கேட்டும், இவன் ஷோபாவிடம் கேள்வி கேட்காது தப்பியோடிய கோழை' எனச் சபிக்கமாட்டார்களா என்ன? (புனை)பெயரில் 'தமிழன்' என்ற பெயரை வைத்துக்கொண்டு 'கோழை'யாய்ச் செத்தால் அது முழுத்தமிழ் இனத்துக்குமே அவமானம் அல்லவா?

ஆகவே சில கேள்விகளை சும்மா ஒப்புக்காய் எழுதிவிடுகின்றேன். தயவுசெய்து இனிவருங்காலங்களில் ஷோபா, 'இதே வேண்டுகோளை முன்னர் XXXXமும் டிசேயிடமும் வைத்தேன்' என்று சொல்கின்றபோது எனது பெயரை அகற்றி பெரும் வரலாற்றுக் கறையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேண்டுமானால், இதே வேண்டுகோளை முன்னர் டிசேயிடம் வைத்தேன். அவர் ஒரு வாலிழந்த பல்லிபோலக் கேள்விகள் கேட்டார். நான் செத்த பாம்புக்கு அடிகின்றமாதிரி அவரது கேள்விகளுக்குச் சுழன்று சுழன்று பதில் அளித்து சும்மா தூவென எல்லாவற்றையும் ஊதித்தள்ளிவிட்டேன்' என எழுதவேண்டுமென இறைஞ்சிக் கேட்கின்றேன்.

இனிச் சும்மா வரலாற்றுப் பழியிலிருந்து தப்புவதற்காய் சும்மா சாட்டுக் கேள்விகள்..
(இப்போது ஷோபாவின் பதில்களையும் இணைத்திருக்கின்றேன் ~டிசே)

(1) எக்ஸிலில் வந்த விளம்பரங்களைக் கண்டித்து 'அறம்' பாடிய நீங்கள், எந்த 'அறத்தின்பாற்பட்டு' பெருநிறுவனங்கள் நடத்தும் தீராநதி, இந்தியா ரூடே, விகடன் போன்றவற்றிற்கு பேட்டி கொடுத்தீர்கள்/எழுதச் செய்தீர்கள்? (மேலதிக விளக்கம்: கற்சுறாவின் ஃபேஸ்புக்கில் உள்ளது)

ஷோபாசக்தி: (1) 90களில் இருந்த எனது கருத்து எப்போதுமே மாறாதிருக்க வேண்டும் என அவசியம் இல்லை. வெகுசன ஊடகங்களிலும் நமது கருத்துகள் வரவேண்டும் என 2000களில் முடிவெடுத்தேன். ஆனால் அதற்கான அறம் என்ன தேர்வு, என்ன என்பதை எனது புதுவிசை இதழ் நேர்காணலில் காலச்சுவடு/மாலதி மைத்ரி/சுகிர்தராணி குறித்த கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். 

(2) வால்பாறையில் நடந்த கூட்டத்தில் ம.மதிவண்ணன் தலித் என்பதற்காய் அவமானப்பட்டதை சுகிர்தராணி இங்கே (http://padamkadal.blogspot.com/2009/08/blog-post_12.html) பதிவு செய்திருக்கின்றார். நானறிந்தவரை அந்நிகழ்வில் பங்குபற்றிய அ.மார்க்ஸோ அல்லது நமது புகலிட 'தலித்தியத்தோழர்' சுகனோ இது குறித்து எதையும் பதிவு செய்ததாக அறியவில்லை? இவை குறித்து விரிவாக அறிந்திருக்கக்கூடிய 'தலித்தியப் போராளியான' நீங்கள் இதைப் பற்றி எங்கும் பதிவு செய்ததாகவும் இல்லை. அது ஏன்? காலம் கடந்தபின்பாயினும் சுகிர்தராணியின் கட்டுரைக்கான உங்கள் பதில் என்ன?

ஷோபாசக்தி: (2).அங்கு மதிவண்ணன் அவமானப்படுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. நான் அங்கே இருந்திருப்பின் பிரச்சினை கைவாறில் முடிந்திருக்கும்

(3) அருந்ததிரோய் உயிர்மை கொடுத்த முற்பணத்தைத் திரும்பிக்கொடுக்கவில்லை என்பதற்காய் ஒரு ஸ்டேட்டஸ் செய்தி விடுகின்றீர்கள். நல்ல விடயமே. நமக்கான சார்புகளைத்தாண்டி பாதிக்கப்பட்டவருக்காய் நாம் குரல் எழுப்பவேண்டுந்தான். ஆனால் இதே உயிர்மைதான் மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு' விடயத்தில் தம் வியாபார முகத்தைக் காட்டியது என 2-3 மூன்று இடங்களில் பதிவு செய்திருந்தேன். அண்மையில் ________ கூட அதே பதிலைக் கூறியிருந்தேன். அந்த விடயத்துக்கு ஏன் எதுவுமே கூறவில்லை? அருந்ததிரோய் ரேஞ்சில் மட்டுந்தான் பேசுவீர்களா? என் பல்லி மூளையோ, எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என சொல்கிறது. அஃது உண்மைதானா?

ஷோபாசக்தி: (3.4).பாருங்கள் நண்பரே புத்தகங்களை வெளியிடுவதற்காக காலச்சுவடு உயிர்மை போன்ற நிறுவனங்களிடம் நமது புலம்பெயர்ந்த படைப்பாளிகள் செல்வது எனக்கு உள்ளபடியே வருத்தத்தைத் தருவது. மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது

(4) 50, 000 ரூபாயை அருந்ததி ரோய் திரும்பிக்கொடுக்காமல் இருப்பது 'நேர்மையற்றது' என்கின்ற முடிவுக்கு வருகின்றீர்கள். நல்லதே. உங்களிடமும் இன்னுமிரு நண்பர்களிடமும் தமிழகத்தில் இருந்து X எனும் நண்பர் 50 நூற்களை விமானத்தில் அனுப்பி வைக்கின்றார். அந்நூலின் விலை கனடாவிலேயே 30 டொலருக்குத்தான் விற்கப்படுகின்றது. ஆக 50 * 30 = 1500 டொலர்ஸ் + விமானச் செலவு. ஒரு கனடியன் டொலர் = 40 இந்திய ரூபாய் என்றாலே. அனுப்பிய புத்தகங்கள் மட்டுமே 60, 000 ரூபாய்  வரும். விமானச் செலவை விடுவோம். அவை தடிமனான புத்தகங்கள். அந்த எக்ஸ் நண்பர் நீங்கள் அந்தச் செலவை அனுப்பவில்லை என என்னிடம் நேரடியாகச் சொன்னார். உங்களிடம் கேட்டால், அந்த நூலை எழுதியவர் எமது 'வளர்ப்புத் தந்தை' போன்றவர் எனக் கூறி தப்பிவிடுகின்றீர்கள் என்றும் கூறுகின்றார். (வாசிக்கும் மற்றவர்களுக்கு சார்பு நிலை வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காய்..., இதைச் சொன்னவர் வளர்மதி இல்லை எனவும் கூறிவிடுகின்றேன்).  ஆக, 50, 000 ரூபாய் நீங்கள் அந்த நண்பருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறதல்லவா? அருந்ததிரோயின் நேர்மையற்றதனத்தைக் கண்டிக்கும் நீங்கள் இதுகுறித்து ஏன் உங்கள் மனச்சாட்சியின் நேர்மையைக் கேள்வி கேட்கவில்லை?

*டிசே யின் குறிப்பு :மேலும் 3/4 ற்குப் பதில் சொல்வதாய் ஷோபா எழுதியிருக்கின்றார். இது நேரடியாக ஷோபாவின் மீது நான் முன்வைக்கும் கேள்விக்கு அவர் தன் நிலையில் இருந்து பதிலளிக்கவில்லை என்பதைச் சுட்ட விரும்புகின்றேன்)

(5) கறுப்பு தொகுப்பில் அலன் சோகலின் மோசடிக் கட்டுரையைப் பிரசுரித்திருக்கின்றீர்கள். அது குறித்து வெளிப்படையாக நீங்கள் எழுதியிருக்கின்றீர்களா? 'கறுப்பு' வாங்கி வாசிக்கும் வாசகர்களிடம் இதற்காய் மன்னிப்புக் கேட்டிருக்கின்றீர்களா? (இதேயிடத்தில் ஒன்றைக் கூறவேண்டும், இந்தக் கட்டுரையை மட்டும் வைத்து உங்களோடும் அ.மார்க்சோடும் இருக்கும் பகையால் 'காலச்சுவடு' கண்ணன் முழுத்தொகுப்பையே நிராகரித்தபோது, ரோசாவசந்த், திண்ணைதூங்கி நான் உட்பட  உங்களுக்கு ஆதரவாகவே 'பதிவுகள்' தளத்தில் பேசினோம் என்பதையும் ஒருகுறிப்புக்காய் கூறிக்கொள்கிறேன்)

ஷோபாசக்தி: (5) அது நாங்கள் ஏமாற்றப்பட்ட சம்பவம். எனக்கோ சுகனுக்கோ ஆங்கிலம் தெரியாததால் நடந்த சம்பவம். தெரிந்து செய்த பிழையன்று..அறியாமையால் செய்த தவறு. அறியாமையை அறிக்கையிட அப்போது கொஞ்சம் வெட்கப்பட்டோம். அவ்வளவே.

(6) சனதருமபோதினியில் சாருவின் 'உன்னதசங்கீதம்' எந்த அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டது? தொகுப்பாளர் என்றவகையில் அந்தக் கதை குறித்து உங்களுக்கு என்ன அபிப்பிராயம் உண்டு?

ஷோபாசக்தி: (6).அது ஒரு சிறந்த கதை என்பதே எனது கருத்து. அல்லாத பட்சத்தில் பிரசுரித்திருக்க மாட்டோம். எனக்கு ஆங்கிலம்தான் தெரியாதே தவிர தமிழ் நன்றாகவே தெரியும்.

(7) இன்று இலங்கையில் நடைபெறும் சர்வதேச எழுத்தாளர் மாநாடு, காலி எழுத்தாளர் மாநாடு என எல்லாவற்றுக்கும் ஓடி ஓடிப்போய் கையெழுத்து இடுகின்றீர்கள். நண்பர்களுக்கு அனுப்பி ஆதரவும் கேட்கின்றீர்கள். உங்களது அரசியலைத் தெளிவாக வைப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. எனது கேள்வி என்னவென்றால் ஒரு பேச்சுக்கு இலங்கை அரசுக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் போரில் வெற்றி பெற்று அவர்கள் தனிநாடும் அடைந்திருந்தால் இதேமாதிரிதான் செயற்பட்டிருப்பீர்களா? அப்படித்தான் செயல்பட்டிருப்பீர்கள் என்பதை உங்களின் 'நான் புலிகளை 100% எதிர்க்கிறேன். இலங்கை அரசை 200% எதிர்க்கிறேன்' என்ற கோசமும் வலுச்சேர்க்கிறது. எனெனில் 200% எதிர்ப்பைச் செய்வதாகச் சொன்ன அரசு அதிகாரம் செலுத்தும் நிலத்திலே இப்படி உங்களின் 'ஆதரவுத்தளம்' செயற்படும்போது, 100% எதிர்ப்பைக் காட்டிய புலிகள் வென்றிருந்தால் இன்னும் நிறைய ஆதரவு கொடுத்திருப்பீர்கள் என்பதே யதார்த்தமாகும். அப்படியாயின் புலிகள் செய்த எல்லாவற்றையும் மறந்து -பகை மறப்பும் மீள் நல்லிணக்கமும் மக்களைக் காரணங்காட்டி செய்யச் சொல்லும்- அ.மார்க்ஸ் போல நீங்களும் கூறுவீர்களா?

ஷோபாசக்தி: (7).ஆம்...யார் வென்றிருந்தாலும் பகை மறப்பும் சமாதானமுமே முதன்மையானவை என்றே வலியுறுத்துவேன். புலிகள் போரியல் வெற்றியின் உச்சங்களில் இருந்து ஒரு அரசுமாதிரியையே கட்டமைத்திருந்த காலத்திலும் இதையே கூறினேன்

(8) பத்மநாப அய்யரை அவரின் பெயரில் 'அய்யர்' இருக்கின்றது என்ற ஒரு காரணத்தை வைத்தே நீங்கள் எல்லாம் செத்த பாம்புக்கு அடிப்பதுபோல அவரைச் சாடுனீர்கள் (இங்கே எனக்கு அய்யரோடு தனிப்பட்ட நெருங்கிய பரிட்சயம் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது). கனடாவுக்கு வந்த பலமுறைகளில் ஒரேயொரு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருக்கின்றேன்). நானறிந்தவரை அய்யர், தான் பிரமாண சாதியில் பிறந்ததை முன்வைத்து எவரையும் ஒடுக்கியதாகவோ ஒதுக்கியதாகவோ கேள்விப்பட்டதில்லை. எவரும் அப்படி எழுதியும் வாசித்ததுமில்லை. நீங்கள் இவ்வளவு கிழித்தும் உங்கள் தொகுப்புக்கள்/படைப்புக்களை தானே வாங்கி அய்யர் தன் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதுவல்ல என் கேள்வி. நீங்கள் உங்கள் சத்தியக்கடதாசியில் ஹரி தனது முழுப்பெயருடன் எழுதிய மத்தியகல்லூரி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தீர்கள். ஹரிக்கும் அவரது பின்னால் வரக்கூடிய பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோலவே பத்மநாப அய்யரும் இருக்கின்றார். சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல? அய்யர் என்ற பெயர் இருப்பதால் மட்டுமே பத்மநாப அய்யரோடு தேவையில்லாமல் தனவிய நீங்கள் எப்படி ஹரியின் முழுப்பெயரோடு உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கச் செய்தீர்கள்? இதற்குப் பெயர் தான் நேர்மையா? அறமா?

ஷோபாசக்தி: (8.)ஹரி போன்ற யாழ்ப்பாணத்திலிருந்த பதின்ம வயது இளையவரையும் பழுத்த இலக்கிய இயல் வாழ்நாள் சாதனையாளரான பத்மநாபரையும் ஒரே மாதிரியாக மதிப்பிடுவது தவறு. ஹரி எழுதவந்த குறுகிய காலத்திலேயே சாதிப் பெயரைத் துறந்துவிட்டார். பத்மநாபர் இப்போதும் சுமககிறார். அவரும் துறக்கும்வரை 'தனகுவதை'த் தவிர வேறு வழியில்லை.

(9) தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.

ஷோபாசக்தி: (9)  மிகவும் சுருக்கமாகச் சொல்கிறேன்: தொழிலாளிக்கு தாய்நாடு கிடையாது என்ற கார்ல் மார்க்ஸின் பார்வையும் நானொரு தேசத்தரோகி என்ற பெரியாரின் அறைகூவலுமே எனது வழிகள்.


(10) நீங்கள் ரயாகரன், கலாமோகன் உட்பட யமுனா ராஜேந்திரன் வரை விடாது துரத்தி அவர்களை 'அம்பலத்தியிருக்கின்றீர்கள்'. ஆனால் இன்று சுகன் தான் கூறியவற்றுக்கு மாறாய் நடந்துகொண்டிருப்பதை (அண்மையில் பானுபாரதியும் தன் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கின்றார்) பார்த்துக்கொண்டிருந்தும் நீங்கள் ஏன் ஒரு கட்டுரை எழுதவில்லை (ஒரேயொரு கட்டுரை சுடப்படும் இளைஞர் பற்றிய சுகனின் புரட்டுக்கதையைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்) நான் கேட்பது சுகனின் கோட்பாடு/அரசியல் சரிவுகளை முன்வைத்து ஒரு கட்டுரை ஏன் இதுவரை எழுதவில்லை?

ஷோபாசக்தி:  (10) சுகனின் கோட்பாடு அரசியல் சரிவுகள் என நீங்கள் குறிப்பிடுவது எதையோ?

(11) அனைவருக்குமான திறந்த உரையாடல்கள் என்பது இணையத்தில் முக்கியமானது. நமது இயக்கங்கள் அனைத்தும் அவ்வாறு இருக்காத‌தால்தான் தம்மில் தாமே மண்ணை அள்ளிப்போட்டது மட்டுமில்லாது அவர்களை நம்பிய மக்கள் மீதும் மண்ணை அள்ளிப்போட்டார்கள். 'சனநாயக வெளி' பற்றி அக்கறையுள்ள நீங்கள் ஏன் பின்னூட்டங்களை தடுத்தீர்கள்? வளர்மதி தனது பின்னூட்டங்கள் தடுக்கப்பட்டதென்கிறார்.  ரஃபேலும் அதைக் குறிப்பிடுகின்றார். வேறு சிலரும் முன்னர் அவ்வாறு கூறியதாக நினைவு. பெயர்கள் சரியாக நினைவுமில்லை. நீங்கள் சத்தியக்கடதாசியிலிருந்து 'ஷோபாசக்தி டொட் கொம்' ற்குப் போனபோதும் நீண்டகாலமாய் பின்னூட்டப்பகுதி மூடப்பட்டே இருந்தது. ஆக இதுவும் சனநாயக வெளி என்கின்றீர்களா? இப்போது பேஸ்புக்கிலும் அதைத் தொடர்கின்றீர்கள். உங்களைச் சீண்டுகின்றார்கள் என்பதற்காய் அவர்களை அகற்றுகின்றீர்கள். இணையம் போன்ற வெளியிலேயே எம்மால் சகிப்புத்தன்மையும், எல்லோரையும் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கும்போது, எங்களைப் போன்றவர்கள் சனங்களை முன்னிட்டு அரசியலோ அல்லது இலக்கியந்தான் பேசமுடியும் என நம்புகின்றீர்களா? சனத்தோடு புழங்கும் வெளியில் இதேபோன்ற ஆட்கள் எரிச்சலூட்டும்போது கிடைக்கும் தும்புக்கட்டையாலோ அல்லது துவக்காலோ போடாமல் விடமாட்டோம் என்பது என்ன நிச்சயம்? ஆக இணையத்திலேயே சகிப்புத்தன்மை இல்லாத நாங்கள் சனங்களுக்கான அரசியலோ, எதுவோ பேசுவதென்பது சுத்த பம்மாத்துதான் என்கின்றேன். ஆமா/இல்லையா என்பதை ஒற்றைவரியில்லாது விளக்கத்துடன் தரவும்.

ஷோபாசக்தி: (11).தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். நீங்கள் உங்களுடைய வலைப் பதிவில் எழுதுவதை நான் தடைசெய்தால்தான் அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு. என்னுடைய தியேட்டரில் உங்களுடைய ஆபாசப் படத்தை ஓட்டவிடாமல் நான் தடுத்தால் அதன் பெயர் பொறுப்புணர்வு.

(12) இந்தக் கேள்வி குழந்தைப் போராளி சம்பந்தமானது. கேட்கும்போதே தயக்கங்கள் இருந்தன. இப்போது அது  Too personal போன்று தோன்றுவதால் அதை பொதுவெளியில் வைக்க விரும்பவில்லை. அதேசமயம் ஷோபா இதற்குப் பதில் அளித்திருந்தார் என்பதையும் குறிப்பிடவேண்டும். அதற்கு நன்றி (~டிசே)

(13) சாதியம் குறித்து... நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டமாதிரி எங்களுக்கு ஓர் பெரியாரோ அம்பேத்காரோ அயோத்திதாசரோ நாராயணகுருவோ இல்லாதுபோனது சாபமே. ஆனால் இவர்களைப் போன்ற பலரும் இருந்துகூட இன்னமும் இந்தியாவில் சாதியம் வீரியமாகவே இருக்கின்றது. அண்மையில் கூட ஆதவன் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். புலிகளின் காலத்தில் சாதி ஒழிப்பு நடைபெறவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால் சாதி நாசூக்காய் மறைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் பொதுவெளியில் பலர் தம் சாதித்திமிரைக் காட்டத் தயக்கமிருந்தது. எனெனில் புலிகளால் தண்டனை கொடுக்கப்படுமென்று.

அண்மையில் தேவதாசன் பதிவுசெய்த விடீயோவில் கோயிலில் ஒரே இடத்தில் பொங்கிப்படைப்பதை, தலித்துக்களும் இருக்கின்றார்கள் என்பதால் ஆதிக்க சாதி தனிக்கொட்டில் போட்டுப் பொங்க அதை உடைத்த தலித்துக்களை பொலிஸ் கைது செய்திருக்கின்றது. புலிகளிடம் இருக்கும் துவக்குப் பயத்தால் இவ்வாறு தனியே கொட்டில்போட்டுப் பொங்க ஆதிக்கசாதியினர் போயிருக்கமாட்டார்கள் என ஒருவர் ஒரு வாதத்தை வைக்கின்றார் என வைப்போம். அதாவது அவர் புலிகளின் காலத்தில் இருப்பதைவிட இப்போது சாதித்திமிரும் ஒடுக்குமுறைகளும் அதிகம் என முடிவுக்கு வருகிறார் என்றால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்? இப்போதைய சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எவ்வாறான போராட்டங்களை முன்வைப்பீர்கள்.?


ஷோபாசக்தி: (13).புலிகள் காலத்தில் துப்பாக்கி நிழலில் சாதியம் மறைந்திருந்தது. அது இப்போது வெளிவருகிறது என்ற கருத்துத்தான் எனது கருத்தும். புலிகள் மீதான எனது விமர்சனம் அவர்கள் சாதியத்தை வளர்தார்கள் என்பதல்ல. சாதியைக் கில்லியெறிய அவர்கள் ஆழமான வேலைத்திட்டங்களை வைக்காததையே எப்போதும் எனது விமர்சனமாக வைத்து வந்திருக்கிறேன். இன்றைக்கு உகந்த போராட்ட வடிவம் எது என்ற எனது கருத்தை அறிய எனது 'வசந்தத்தின் இடிமுழக்கம்' என்ற கட்டுரையைப் படிக்கவும்.(14) எதிர்காலத்தில் ஈழத்தில் முன்னால் புலிகள் ஒரு அரசியல் கட்சியாக பரிணாமித்து, தமிழ்ப்பிரதேசங்களில் முக்கிய கட்சியாக மாறுகின்றனர் என வைப்போம். அரசியலில் பலம் பெறுகின்ற அவர்கள் இலங்கை அரசிடமும், உலகிடமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியும் (விரும்பினால் பிரிந்துபோகின்ற உரிமையும் தரவேண்டுமென) ஒரு பொதுசன வாக்கெடுப்பை ந‌ட‌த்த‌க் கேட்கின்றார்கள் என வைப்போம். அவ்வாக்கெடுப்பில் அங்குள்ள மக்கள் தனிநாட்டுக்கு ஆதரிக்கின்றன‌ர் என (சும்மா ஒரு ஆசைக்குத்தான்) வைப்போம். ஆனால் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிகிறது. தனிநாடு வந்தால் அது எப்படி முன்னர் புலிகளின் மாதிரி அர‌சு இருந்ததோ அதே பிரின்சிப்பல்கள் பின்பற்றப்படுமென்று. நீங்கள் மக்களின் முடிவுக்கு தலைசாய்த்து புதிய நாட்டை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது புலிகளின் மிச்சங்கள் இன்னும் இருக்கின்றது என்பதற்காய் எதிர்ப்பீர்களா (இந்தக்கேள்விக்கு hint: இப்போது மக்களைக் காரணங்காட்டித்தான் எல்லா இடங்களிலும் ஓடி ஓடிக் கையெழுத்திடுகின்றீர்கள்...மக்களின் முன் மகிந்தா ஒரு பொருட்டாக இல்லாதபோது,  அம்மக்களின் முடிவின் முன் புலிகளும் ஒரு பொருட்டில்லையென இந்த அப்பாவி மனம் நம்புகிறது)


ஷோபாசக்தி: (14). நான் எப்போதுமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரலுக்கு ஆதரவாய் இருப்பவன். தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்

இந்தக் கேள்விகள் வளர்மதியினதுடையது...

(நினைவூட்டல்...
Shoba Sakthi டீசே மேலதிக விளக்கத்திற்காக மறுபடியும் சொல்கிறேன். வளர்மதியின் கேள்விகள் நியாயம் என நீங்கள் கருதும் பட்சத்தில் அந்தக் கேள்விகளோடு உங்களிற்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் தயவு செய்து அநதக் கேள்விகளை வெறுமனே கட் அன்ட் பேஸ்ட் செய்து உங்களது கேள்விகளாக வையுங்கள். நான் கண்டிப்பாக பதில் சொல்வேன். பதில்களுக்கு மட்டுமல்ல கேள்விகள் கேட்பவருக்கும் பொறுப்புணர்வு தேவையென்பதாலேயே இந்தக் கோரிக்கை.
November 13, 2010 at 9:31pm )

1. ஒடுக்கப்பட்டோர் விடுதலை – குறிப்பாக, தலித் விடுதலை குறித்து ஒரு தலித் அல்லாத ஆதிக்க சாதியில் பிறந்த நபர் எந்த அளவில் நின்று பேசுவது? தலித்துகளுடைய பிரதிநிதி போலவும், அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டது போன்ற பாவனையோடும் பேசுவது சரியா? தமிழகத்தில் அ. மார்க்ஸ் இப்படிப் தலித் அரசியல் பேசிய காரணத்தினால்தானே ரவிக்குமார், ”எங்கள் அரசியலை – விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ நடையைக் கட்டு” என்று அ. மார்க்சை ஒதுக்கித் தள்ளினார்? புலம் பெயர் சூழலிலும் அதே போன்று தலித்துகளுடைய பிரதிநிதிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு அதே தவறை செய்வது சரியா?

2. அடையாள அரசியலை நிராகரிப்பதாகக் கூறிய உங்கள் தரப்பு அரசியல் அடையாள அரசியல்தானே செய்கிறது? இது உங்கள் கொள்கைக்கு முரணானதில்லையா?

3. பெரியாரின் தாசர்களாக தம்பட்டமடித்துக் கொள்ளும் நீங்கள் பெரியார் 1930 கள் முதல் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்தியது சாதிய ஒழிப்போடு கூடிய தமிழ் தேசிய விடுதலையைத் தவிர வேறு என்ன? இதை மறுக்கிறீர்களா ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுத்தால், விளக்க வேண்டும். ஏற்றால், முரண்பாட்டை விளக்க வேண்டும்.

4. இந்தப் பெருங்கதையாடல் என்கிறீர்களே, அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? உங்கள் விளக்கப்படியே பார்த்தால், இந்துத்துவத்துவ பெருங்கதையாடல் என்று சொல்ல முடியுமா?

5. வித்தியாசம் வித்தியாசம் என்கிறீர்களே வித்தியாசத்திற்கும் முரண்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்று சொல்ல முடியுமா?

6. பலஸ்தீனத்திலே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் நீங்கள், ஈழத்திற்கோ தமிழகத்திற்கோ அதை ஏன் நிராகரிக்கிறீர்கள்? பலஸ்தீனத்திலே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் கடும் மோதல்கள் இல்லையா? ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மட்டும் அக முரண்பாடுகளைச் சொல்லி விடுதலையை மறுப்பவர்கள், பலஸ்தீனத்திற்கு அதைச் சொல்லாமல் விடுவது ஏன்?

7. காஷ்மீரில் அகமுரண்கள் இல்லையா? அங்கே ‘துரோக’ அமைப்புகளால் எண்ணற்ற உயிர்பலிகள் நிகழவில்லையா? இன்றும் ஆயுதப் போராட்டத்தோடு சேர்த்த அமைதிப் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிலும், உலகிலேயே வலுமிக்க இராணுவங்களுள் ஒன்றை எதிர்த்தல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்? காஷ்மீர் விடுதலையை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?

(இறுதி 1-6 வரையான கேள்விகளுக்கு ஷோபா விரிவாகவே தனது தளத்தில் பதிலளித்திருப்பதால், அவற்றின் விடைகளே இங்கே பதியவில்லை)
-----------------

எனது அசல் கேள்விகளான 14ற்கும் பதிலளித்து ஷோபா, இவ்வாறு கேட்டிருந்தார்....

Shoba Sakthi வளர்மதியின் கேள்விகள் அபத்தமானவை என்றும் பொருட்படுத்த்தக்கவையல்ல என்றும் எத்தனை தடவைதான் சொல்வது. மறுபடியும் நான் டிசேயிடம் கேட்பது நீங்கள் தொகுத்த அவரின் கேள்விகள் வலுவானவையெனவும் சரியானவையெனவும் நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் கருதும் பட்சத்தில அவை உங்களுடைய கேள்விகளாயும் மாறிவிடும். மகிழ்ச்சியாகப் பதில் தருகிறேன். தனிக் கட்டுரையாகவே எழுதிவிடலாம். வளர்மதியின் கேள்விகளை உங்களது கேள்விகளாக முன்வைக்கிறீர்களா என்பதைத் தயவு செய்து தெளிவுபடுத்தினீர்கள் எனில் வேலையைத் தொடங்கிவிடுவேன்.

நான் அதற்கு இவ்வாறு பதிலளித்திருந்தேன்:
ஷோபா, வளர்மதியின் கேள்விகளுக்கான பதில்களை நானும் எதிர்பார்க்கின்றேன் (அவை என் கேள்விகளுமென நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு பிரச்சினையில்லை). வேண்டுமெனில் கேள்வி இல.5 ஐத் தவிர்த்துவிட்டு பதில் எழுத வேண்டுகிறேன்

வளர்மதியின் 6 கேள்விகளுக்கு ஷோபா இப்போது பதிலளித்திருக்கின்றார். ஆனால் அவற்றை டிசே தமிழனின் கேள்விகளாக்கிவிட்டார். ஆகக்குறைந்து, வளர்மதி தொடக்கத்தில் கேட்டு,  அதையே டிசேயும் கேட்டிருந்தார் என்றாவது வளர்மதிக்கு கிரெடிட் கொடுத்திருக்கலாம். ஆனால் அவற்றை குறிப்பிடாதது மட்டுமின்றி பேஸ்புக்கில் நடந்த ஒரு விவாதத்தை இடைநடுவில் இருந்து பொதுத்தளத்தில் எடுத்துப்போட்டு அதற்குப் பதிலளிக்கிறேன் என ஷோபாசக்தி தொடங்கியதை எந்தவகையான அறம் என்பதை ஷோபாவிடம் அல்ல, வாசிக்கும் உங்களிடம் முன்வைக்கின்றேன்.

மேலும், வளர்மதியின் கேள்விகள் (மூன்றாம் கையால் வைக்கப்படுவது என்றும் ஷோபா இப்போது சொல்லிக்கொண்டு திரிகிறார்; இதுகுறித்து வரும் பகுதிகளில் எழுதுவேன்). உண்மையில் வளர்மதி என்னிடம் எந்தப்பொழுதிலும் தனது கேள்விகளை ஷோபாசக்தியிடம் கேட்கச் சொல்லிக் கேட்டதில்லை என வெளிப்படையாக முன்வைக்கின்றேன். ஷோபா புலிகளிடம் இருந்தபோது உளவுத்துறைக்குள் இருந்து வேலை செய்திருக்கலாம்; பல திடுக்கிடும் உண்மைகளைக் கூடக் கண்டும் பிடித்திருக்கலாம். ஆனால் இங்கே நடக்காத ஒரு விடயத்தை நடந்த்தாய் 'பாவனை' செய்வது மிக அநியாயமானது.

நான், ஏன் எனது கேள்விகளோடு இப்போது வளர்மதியின் கேள்விகளையும் இணைத்தேன் என்றால், நான் ஷோபாவோடு முரண்பட்டு எழுதிய முதலாவது நோட்டிலேயே ஷோபாவிற்கு இது பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றேன்.

வளர்மதி உங்களுக்கு இளங்கோவன் அன்பன் என்பவரின் பகுதியில் ஜந்தோ பத்துக் கேள்விகள் கேட்டிருந்தார். அவை முக்கியமான கருத்தியல் கேள்விகள். அதற்கான உங்கள் பதில் சுயவிமர்சன்மாகவும் உங்களை முன்னகர்த்திச் கொள்வதாகவும் இருந்திருக்கும். 'மாற்று அரசியலை' ஒருகாலத்தில் நம்பிக்கையோடு பார்த்துப் பின் சலித்துபோன எங்களுக்கும் கூட உதவியிருக்கும். சரி வளர்மதியோடுதான் 'ஆற்றைப் பார்த்துக் கோபம்' என்றிருந்தால் கூட, வேறு யாரோ திருப்பிப் போட்டு பதில் அளிக்கச் சொல்லியிருந்தார்களே. அப்போதும் மவுனந்தானா?

இளங்கோவன் அன்பனின் ஃபேஸ்புக்கில்,  வளர்மதி இதே 7 கேள்விகளை முன்வைத்து ஆகக்குறைந்து 4-5 மாதங்களாகி இருக்கும். எத்தனையோ அபத்தமான கேள்விகளுக்கு எல்லாம் தனது '24மணிநேர சேவை' (இது அவரே குறிப்பிட்டதுதான்) மூலம்  பதிலளித்து வந்த ஷோபா இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து ஏன் புறக்கணித்து வந்தார் என்பதையும் வாசிப்பவர்க‌ள் கவனத்திற் கொள்ளவேண்டும்.

மேலும், டிசே தமிழனின் ஆறு கேள்விகள் என்று எழுதிய பதிவில் எவ்வாறு
வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனக்கூறி 'வாசகத் தோழர்கள் பொறுத்தருள்க. என் கடமையைச் செய்ய என்னை அனுமதியுங்கள்'  என‌க்கூறி என்னமாதிரி பில்ட் அப் (build-up) கொடுக்கின்றார் எனப் பாருங்கள். அதேபோன்று எனது அசல் 14 கேள்விகளும் தவிர்க்கப்பட்டு மிக நுட்பமாக இந்த 6 கேள்விகள் மட்டுமே அவ‌ர‌து த‌ள‌த்தில் முன்வைக்கப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இப்போது சற்று காலச்சக்கரத்தைச் சுழற்றுவோம். 'என்னிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை?' என்றும் 'கேள்வி கேட்காமல் டிசே தமிழன் ஓடிவிட்டார்' எனவும் எழுதவும் துணிகிற ஷோபாசக்தி இந்த முன்னுரை/முக்குகின்ற உரையைத் தவிர்த்து- நேரடியாக -கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டியதுதானே?  முதலிலே ஒரு அறிமுகம் கொடுத்து கேள்வி/பதில்களை வாசிக்கமுன்னரே வாசகருக்கு தானொரு அறிவுஜீவி என்கின்ற தோரணையைக் கொடுப்பது.   இந்த 'முன்னுரையின்' பின்பு ஒரு வாசகர் முன் அனுமானமின்றி உள்ளே போகமுடியுமா?

மேலும், கேள்விகள் கேட்பவன் ஒரு முட்டாளாக இருக்கிறான் ஆகவே வாசகத் தோழர்களே பொறுத்தருள்க எனத் 'தெளிவாக' ச் சொல்லி, ஆனாலும் பாருங்கள் 'நான் எப்போதும் நல்லவனப்பு, எவன் என்றாலும் பதில் சொல்லாமல் தப்பியோடுபவன் அல்ல' என்கின்ற தோரணையை 'என் கடமையைச் செய்ய அனுமதியுங்கள்' மூலம் கட்டமைப்பது....

ஆம் நண்பர்களே. இதுதான் ஷோபாசக்தி. நீங்கள் இந்தச் சுழலிருந்தும், அவரது நளினமான விவாதத் திறமைகளிலிருந்தும் (ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்துக்கு spider man மாதிரித் தாவுவது வரை)  உங்களைக் காப்பாறிக்கொள்ளாமல் விட்டால் ஷோபாவுடன் உரையாடுவது என்பது 'சொந்தச் செலவிலே சூனியம் வைப்பது' போன்றதுதான்.

(இன்னும் வரும்)

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது

Saturday, February 12, 2011

- பகுதி 01
1.
ஷோபாசக்தி இப்போது டிசே தமிழன் கேட்ட 6 கேள்விகள் என ஒரு பதிவைத் தனது தளத்தில் எழுதியிருக்கின்றார்.  ஆனால் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்ட பின்னணிக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.  ஃபேஸ்புக்கினுள் ஷோபாவும் நானும் தொடர்ச்சியான ஒரு உரையாடலை அண்மைக்காலமாய்ச் செய்து வந்திருக்கின்றோம். எனது தனிப்பட்ட விருப்பு சார்ந்து 'டிசே தமிழன்' என்ற பெயரில் இருக்கும் ஃபேஸ்புக்கில் 45 நண்பர்களை மட்டுமே இணைத்து private access கொடுத்து ஒரு மூடிய தளமாகவே வைத்திருக்கிறேன்.  ஆனால், இப்போது ஷோபா என்னை முன்னிறுத்தி ஒரு பதிவை அனைவரும் பார்க்கக்கூடிய பொதுத்தளத்தில் எழுதியிருக்கின்றார். ஆனால் இது ஃபேஸ்புக்கினுள் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியே. உண்மையில் ஷோபாவின் இப்பதிவு தலையுமின்றி வாலுமின்றி இடைநடுவில் நின்று அந்தரத்தில் ஆடுகின்றது.

'நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றேன்' என ஷோபா குறிப்பிட்டிருந்தார் என்றால் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை. எனது பெயரைக் குறிப்பிட்டிருப்பதால் நான் நடந்தவற்றை ஆதியிலிருந்து அந்தமாகப் பொதுத்தளத்தில் முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஷோபா எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார்.  ஷோபா என்னிடம் அனுமதி கேட்காமல் எங்களுக்குள் நடந்த உரையாடலை பொதுத்தளத்தில் வைத்தது  என்னளவில் சோர்வையே ஏற்படுத்தியிருந்தது.  ஆனால் அவரைப் போலின்றி, அவருக்கு நான் இப்படி ஃபேஸ்புக்கில் நடந்த அனைத்தையும் பொதுத்தளத்தில் வைக்கப்போகின்றேன் எனக் கூறியே இங்கே இவற்றை எழுதத் தொடங்குகின்றேன் என்பதையும் குறிப்பிட விழைகிறேன்.

அத்துடன், ஷோபா டிசே தமிழன் கேட்ட கேள்விகள் எனக் கூறுபவை முதலில் வளர்மதியிடம் இருந்து வந்தவை. அதற்கான எந்த கிரடிட்டும் வளர்மதிக்கு ஷோபா கொடுக்கவில்லை என்பது எரிச்சலையே ஊட்டுகின்றது. ஆகவே அந்தக் கேள்விகளின் மூலம் வளர்மதி என முதலில் தெளிவுபடுத்தி விடுகின்றேன். அத்துடன் நான் ஷோபாவிடம் கேட்ட மிகுதி அசல் 14 கேள்விகள் இருக்கின்றன. அதை இப்போது தனது தளத்தில் நுட்பமாக மறைத்திருக்கின்றார். அந்தக் கேள்விகளையும் -ஷோபாவைப் போல மறைக்காது-   இங்கே முன்வைத்து ஷோபாவின் பதில்களையும் தரப்போகின்றேன். அத்துடன் ஷோபாவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரின் பதில்களை வைத்து ஒரு 'பொழிப்புரை' எழுதுவதாகக் கூறியிருக்கின்றேன். அதையும் இனிவரும் நாட்களில் செய்வேன்.

இனி நடந்தவை....!

இலங்கைச் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு அண்மையில் நடந்தது நாமனைவரும் அறிந்ததே. அதை முன்னிட்டு சில மாதங்களுக்கு அதற்கான எதிர்ப்பு, ஆதரவு என்ன எல்லாத்தளங்களிலும் அறிக்கைகள் மாறி மாறி அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தன. அறிக்கைகளில் அரசியலில் எரிச்சலுற்று, நான் பேஸ்புக்கில் -அறிக்கை எத்தனை 'அரி'க்'கை' யடா...!- என நிலைத்தகவல் எழுத, ஒருசாராரின் அறிக்கையைப் பிரதிநிதிப்படுத்திய ஷோபா, நான் அவரது அறிக்கையையும் கேலி செய்வதாக நினைத்து, எனது நிலைச்செய்தியின் கீழ் சில பின்னூட்டங்களை எழுதினார்.

அவரோடு அதற்கு முன் ஃபேஸ்புக்கில் எந்த விரிவான உரையாடலையும் செய்திராத நான் இவ்வாறு ஒரு நோட்டை அதன் நீட்சியில் அவருக்கு எழுதினேன். (பார்க்க: 'ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்' ). அந்தப் பதிவுக்கு ஷோபாசக்தி எழுதிய முதற்பின்னூட்டம் இப்படியாக அமைந்தது: Shoba Sakthi சரி நண்பா நீங்கள் இங்கே வைத்துள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவோம். நான் பதில் சொவல்வதில்லை என்ற விசயம் குறித்தும் பேசுவோம். முதலில் நீங்கள் கொழும்பில் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஏனெனில் விவாதம் இதைக் குறித்ததுதானே! பின்பு மிகுதி நியாயத்தைப் பேசுவோம்.

ஷோபாவின் இக்கேள்வியைச் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் வாசிப்பதற்கான ஒரு அறிக்கையை நான் எழுதினேன். (பார்க்க 'மாற்றை முன்வைத்தல்')

அதற்கு ஷோபாசக்தி, இந்த அறிக்கைக்கு தான் முதல் ஆளாக கையெழுத்து வைக்கிறேன். பிற நண்பர்களுக்கும் அனுப்பி கையெழுத்து வைக்கச் சொல்வோம் என எழுதியிருந்தார். ஆனால் இந்த அறிக்கைகளையே 'அரிக்கைக'ளாக நினைத்த நான் ஷோபாவின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காது, 'ஷோபா இது அறிக்கையில்லை. இது உங்களுக்கு மறுமொழியாக - நான் சொல்லவிரும்பியதை- அறிக்கை வடிவத்தில் எழுதியிருந்தேன். அறிக்கை வடிவத்தைத் தேர்ந்தெடுத்ததும், கீழே பெயர்களைப் பட்டியலிட்டதும் கூட இந்த அறிக்கை அரசியலை நக்கலடிக்கவே தவிர உண்.மையான அறிக்கைக்காய் இல்லை. ஏற்கனவே -அறிக்கை எத்தனை 'அரி'க்'கை' யடா- எழுதியவன்/நக்கலடித்தவன் அதேபோக்கில் ஓர் அறிக்கை எழுதுவான் என நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள் எனவே நான் நினைக்கின்றேன்.' என நான் ஒதுங்கிப்போய்விட்டேன். ஷோபாவும் நானும் அதன்பிறகு எவ்வித உரையாடல்களைச் செய்யவுமில்லை. இதை ஒரு 'பகை' மறப்பெனவும் எடுத்துக்கொள்ளவும்.

ஆமாம், அதுவே உண்மை. ஆனால் சில தினங்களுக்கு முன் ஷோபா ஒரு பதிவை எழுதி என்னையும் ரக் (tag) செய்திருந்தார்.  அங்கிருந்து தொடங்கியது இரண்டாம் ஆட்டம்.

(தொடர்ந்து வரும்...)

பொன்னொச்சிக் குறிப்புகள்

Sunday, February 06, 2011

 1.0 வாசிப்பு/திரை

எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'உறுப‌சி' இற‌ந்த‌ ந‌ண்ப‌னின் ஒருவ‌னை முன்னிட்டு ம‌ற்ற‌ மூன்று ந‌ண்ப‌ர்க‌ளின் நினைவுக‌ள் கிளைக்கும் ஒரு நாவ‌ல். அத்தியாய‌ங்க‌ள் எதுவுமே பிரிக்க‌ப்ப‌டாது இருப்ப‌துபோல‌ ஒரே தொட‌ர்ச்சியில் வாசிக்க‌ வைக்கக்கூடிய‌ நாவ‌ல். க‌தை மூன்று வெவ்வேறு த‌ள‌ங்க‌ளில் ந‌க‌ர்கின்ற‌து; ந‌ண்ப‌னின் இற‌ப்பின்போது நிக‌ழ்வ‌து ஒன்று. ம‌ர‌ண‌ச்ச‌ட‌ங்கு முடிந்த‌பின் இம்மூன்று ந‌ண்ப‌ர்க‌ளும் காட்டுக்குச் சென்று இழ‌ப்பை ஆற்றிக்கொள்வ‌து ம‌ற்றொன்று. மூன்றாவ‌து இம்மூன்று ந‌ண்ப‌ர்க‌ளும், த‌ம‌க்கும் கால‌மான‌ ந‌ண்ப‌னுக்குமான‌ க‌ட‌ந்த‌கால‌ நினைவுக‌ளை மீள‌ அசைபோடுவ‌து. எவ்வாறு இந்நாவ‌ல் ஒருவித‌ வெறுமையுட‌னும் தொட‌ங்குகின்ற‌தோ அவ்வாறே முடிகின்ற‌து. க‌ச‌ப்பின் நிழ‌லும் வாழ்வின் மீதான‌ அப‌த்த‌த்தின் வெளியும் தொட‌ர்ந்து பின் தொட‌ர்ந்து வ‌ந்த‌ப‌டியே இருக்கின்ற‌து. உண்மையில் இம்மூன்று ந‌ண்ப‌ர்க‌ளும் இற‌ந்த‌ ந‌ண்ப‌னை நினைவுகொள்வ‌த‌ன் மூல‌ம் த‌ம் வாழ்வைத் திரும்பிப் பார்க்கின்ற‌ன‌ர். தான் தோன்றித்த‌ன‌மான‌, கிறுக்குத்த‌ன‌மான‌ வாழ்வை வாழ்ந்து சொற்ப‌ வ‌ய‌தில் இற‌ந்துபோயிருந்த‌ ந‌ண்ப‌ன் அவ‌ன‌ளவில் அவ‌ன் விரும்பிய‌ வாழ்வை வாழ்ந்திருக்கின்றான் என்ப‌த‌ற்கு அண்மையான‌ முடிவுக‌ளை எட்டுகின்ற‌ன‌ர். 'உறுப‌சி'யை வாசிக்கும் ந‌ம‌க்கும், த‌க‌ப்ப‌னை அடிக்க‌ விற‌குக்க‌ட்டை கொண்டோடும்..., லொற்ற‌ரி ரிக்கெட் வாங்கி அதிஷ்ட‌த்தை ப‌ரிசோதிப்ப‌தை ஒரு முழுநேர‌த் தொழிலாக‌க்வே கொள்ளும்... த‌ன் துணை மீது நேச‌மும் உக்கிர‌மான‌ காம‌மும் கொண்டிருக்கும்... த‌ன் க‌ல்லூரிக் கால‌த்தில் க‌ம்ப‌ராமாய‌ண‌த்தை எரித்து க‌ல்லூரியில் இருந்து நீக்க‌ப்ப‌டுபவ‌னை... ஒரு புல‌னாய்வுப்ப‌த்திரிகைக்கு பிழை திருத்த‌ வேலை செய்ய‌போய் செய்திக‌ளில் வ‌ரும் கொலைக‌ளையும் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்ச்சிக‌ளையும் தானே செய்வ‌தாய் ம‌ன‌ப்பிற‌ழ்வு அடையும் இற‌ந்த‌போன‌ ச‌ம்ப‌த்தை எப்ப‌டி எடுத்துக்கொள்வ‌து என்ற‌ குழ‌ப்பமே ஏற்ப‌டுத்துகின்ற‌து. அந்த‌ச் சிக்க‌லே ந‌ம்மை இன்னும் கேள்விக‌ளைத் தொடுக்க‌வைத்து ஓர் எளிதான முடிவை சம்பத்தின் முன்வைத்து எடுக்க வைக்க ‌முடியாது செய்துவிடுகின்றது. அதேச‌ம‌ய‌ம் நாம் கூட‌ ச‌ம்ப‌த்தைப்போல‌ ஆகிவிட‌க்கூடுமோ என்ற‌ அச்ச‌த்தையும், பதற்றத்தையும் ஒருசேர‌த் த‌ருகின்ற‌து. எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் 'யாம‌ம்' நாவ‌ல் குறித்து எழுதிய‌போது அதில காம‌த்தை எஸ்.ரா மிக‌ எளிதாக‌க் க‌ட‌ந்துவிடுகின்றார் என்ற‌ விம‌ர்ச‌ன‌த்தை வைத்திருந்தேன். ஆனால் இந்த‌ நாவ‌லில் காம‌ம் மிக‌ அற்புத‌மாக‌வும், மிகைப்ப‌டாம‌லும் விப‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌து என்ப‌தைக் குறித்தாக‌ வேண்டும்.
....................................................

Wes Anderson இயக்கிய 'Darjeeling Limited' முழுத் திரைப்ப‌ட‌முமே இந்தியாவிலேயே எடுக்க‌‌ப்பட்டிருக்கின்ற‌து. நெறியாள்கையாள‌ர் Wes Andersonற்கு ச‌த்திய‌த் ரேய் மீது மிகுந்த‌ மதிப்பு இருக்க்கின்ற‌து. இப்ப‌டத்தை ரேயிற்கு காணிக்கை செய்த்தை ம‌ட்டுமின்றி ரேயின் ப‌ட‌ங்க‌ளில் வ‌ரும் சில‌ க‌ம‌ராக் கோண‌ங்க‌ளும் வ‌ருகின்ற‌ன. மூன்று ச‌கோத‌ர‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ க‌தை இது. இந்தியாவில் அனைவ‌ரும் ச‌ந்திப்ப‌தாய் ஒரு ச‌கோத‌ர‌ர் முடிவு செய்து ம‌ற்ற‌ இருவ‌ரையும் அழைக்கின்றார். இவ‌ர்க‌ள் மூவ‌ரும் த‌ம‌து த‌க‌ப்ப‌ன் இற‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்திற்குப் பிற‌கு இப்போதுதான் முதன்முதலில் ச‌ந்திக்கின்றனர். டார்ஜிலிங்குப் போகும் புகைவண்டியிலேயே க‌தை நிக‌ழ்கின்ற‌து. இப்ப‌ய‌ண‌ம் ஒரு ஆன்மீக‌ப் ப‌ய‌ண‌ம் என்று இத்திட்ட‌த்தை வ‌குக்கும் ச‌கோத‌ர‌ர் கூறிக்கொண்டாலும், அவ‌ர் இந்தியாவில் யேசுவிற்கு த‌ன்னை அர்ப்ப‌ணித்திருக்கும் தாயைத் க‌ண்டுபிடிக்க‌வவே இப்ப‌ய‌ண‌த்தை ஒழுங்கு செய்திருக்கின்றார் என்ப‌தை ம‌ற்ற‌ச் சகோத‌ர‌ர்க‌ள் பின்ன‌ர் க‌ண்டுபிடிக்கின்றன‌ர். தாய், அமெரிக்காவில் த‌க‌ப்ப‌ன் இற‌ந்த‌போதுகூட‌ ம‌ர‌ண‌நிக‌ழ்வுக்குப் போன‌தில்லை என்ப‌தோடு இவ‌ர்க‌ள் அவ‌ரைக் க‌ண்டுபிடிக்கும்போதுகூட‌ சாம‌ர்த்திய‌மாக‌ இவ‌ர்க‌ளை வில‌த்திவிட்டுப் போய்விடுகின்றார். அத‌ன் பிற‌கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்ப‌து சுவார‌சிய‌மான‌து. ப‌ய‌ண‌த்தின் ந‌டுவில் புகைவ‌ண்டியில் வேலை செய்யும் ஒரு பெண்ணோடு ஒரு ச‌கோத‌ருக்கு காத‌ல் வ‌ருகின்ற‌து. Sweet Lime பெண் என‌ அழைத்து உறவும் வைத்துக்கொள்கின்றார். இக்காட்சியை ஜெய‌மோக‌னின் க‌ண்ணாடி கொண்டு பார்த்தால், நாம் உட‌னேயே இது ஒரு 'ஐ‌ரோப்பிய சிந்த‌னைவாத‌ம்' என‌ உட‌னேயே ஒரு அடி பிட‌றியில் போட்டுவிட்டு ந‌க‌ர்ந்துவிட‌லாம். இல்லை, ஏற்க‌ன‌வே காத‌ல‌ன் இருக்கும் பெண் விரும்பித்தான் உற‌வு கொண்டார் என‌ இய‌ல்பாய் எடுத்து த‌லையைப் பிய்க்காம‌லும் இர‌சிக்க‌லாம். அது அவ‌ர‌வ‌ர் விருப்பைப் பொறுத்த‌து.

இந்த‌ப்படத்தில் புகைவண்டியில் வேலைசெய்பவராக ந‌டிக்கும் பெண்ணில் ஈர்ப்பு ஏற்ப‌ட்டு தேடிப்பார்த்த‌போது அவ‌ர் ஒரு இல‌ங்கைத் த‌மிழ்ப்பெற்றோருக்கு இங்கிலாந்தில் பிற‌ந்த‌வ‌ர் என்ப‌து தெரிய‌வ‌ந்த‌து. அம‌ரா க‌ருணாக‌ர‌ன் என்ப‌து முழுப்பெய‌ர். அம‌ரா க‌ர‌ண் என‌ சுருக்கி வைத்திருக்கின்றார். மாயா, அசினைப் போல‌ நான் அம‌ராவிற்கு இனிவருங்காலங்களில் அடிமையானாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ எதுவுமில்லை. இப்படத்தைப் பார்ப்ப‌த‌ற்கு பொறுமை வேண்டும். மிக‌ ஆறுத‌லாக‌வே காட்சிக‌ள் ந‌க‌ர்கின்ற‌ன. பெரிய‌ ஆச்ச‌ரிய‌ங்க‌க‌ளையும், ச‌டுதியான‌ திருப்ப‌ங்க‌ளையும்,நெஞ்சை உலுக்கும் முடிவுக‌ளையும் எதிர்பார்க்கும் ஒருவ‌ருக்கு இப்ப‌ட‌ம் நிச்ச‌ய‌மாக‌ப் பிடிக்காது என்ப‌தையும் முன்ன‌ராக‌வே கூறிவிடுகின்றேன். இப்படத்திற்கு முன்னராக அண்டர்சன், Hotel Chevalier  என்கின்ற 13 நிமிடக்குறும்படம் எடுத்திருந்தார். அக்குறும்படமே பின்னர் Darjeeling Limit ஐ முழுநீளப்படமாக எடுக்க ஒரு உந்துதலாக இருந்திருக்கிறது. இப்படம் தொடங்குவதன் முன் Hotel Chevalier குறும்படமும் காண்பிக்கப்படுகின்றது.
....................................................
நோரா ஜோன்ஸ் முத‌ன்முத‌லாக‌ நடிகையாக‌ ந‌டித்த‌ 'My Blueberry Nights' ப‌ட‌ம் Wong Kar-wai ஆல் எடுக்க‌ப்ப‌ட்ட‌து. யார் இந்த‌ சீன‌ நெறியாள்கையாள‌ர் என்ப‌தை... த‌மிழ்வ‌லைப்ப‌திவுக‌ளில் நிறைய‌ப் ப‌திவுக‌ள் எழுத‌ப்ப‌ட்ட‌ In the mood for love படத்தை எடுத்த‌வ‌ர் என்றால் எல்லோருக்கும் எளிதாக‌ விள‌ங்கும். க‌தையை எளிதாக‌ச் சொல்வ‌த‌னால் காத‌லில் தோல்வியுற்ற‌ பெண் த‌ன‌க்குப் பொருத்த‌மான‌ துணையை க‌ண்ட‌டைத‌ல் என‌க் கூற‌லாம். ப‌ட‌த்தின் பெரும்ப‌குதி உண‌வ‌ங்க‌ளிலும் இர‌வுக‌ளிலும் நிக‌ழ்கிற‌து. த‌ன் காத‌ல‌னால் கைவிட‌ப்ப‌ட்ட‌ எலிச‌பெத் (நோரா ஜோன்ஸ்) த‌ன் துய‌ரைப் போக்க‌ ஜெரோமி (ஜூட் லோ) ந‌ட‌த்த‌ உண‌வ‌க‌த்திற்குப் போக‌த் தொட‌ங்குகின்றார். வாடிக்கையாள‌ரால் ஒருபோதும் வேண்ட‌ப்ப‌டாத‌ ப்ளுபெர்ரி பை (blueberry pie)யைச் சாப்பிட்டுக் கொண்டு க‌டை மூடும் பின்னிர‌வுவ‌ரை எலிச‌பெத் உரையாடிக்கொண்டிருப்பார். பிற‌கு த‌ன் காத‌லின் நினைவுக‌ளை ம‌ற‌ப்ப‌த‌ற்காய் வெவ்வேறு ந‌க‌ர‌ங்க‌ளுக்குச் சென்று ப‌க‌லும் இர‌வுமென‌ உண‌வ‌ங்க‌ளில் உண‌வு ப‌ரிமாறுப‌வ‌ர்க‌ளாய் வேலை செய்ய‌த்தொடங்குகின்றார். த‌ன‌து வருமான‌த்தின் மூல‌ம் ஒரு காரை வாங்கி ப‌ய‌ண‌ம் செய்ய‌வேண்டும் என்ப‌து எலிச‌பெத்தின் க‌ன‌வாக‌ இருக்கிற‌து. வெவ்வேறு ந‌க‌ர‌ங்க‌ளில் வெவ்வேறு உண‌வ‌ங்க‌ளில் வேலை செய்துகொண்டு அங்கு ந‌ட‌ப்ப‌வ‌ற்றை ஜெரோமிக்கு க‌டித‌ங்க‌ளாய் எழுதுகின்றார். ஆனால் ஒருபோதும் தான் இருக்கும் முக‌வ‌ரியை எலிச‌பெத் எழுதுவ‌தேயில்லை. எலிச‌பெத் எங்கேயிருக்கிறார் என‌ ஜெரோமி அறிய‌ முய‌லும் முய‌ற்சிக‌ளும் தோல்விக‌ளிலேயே முடிகின்ற‌ன‌. இத‌ன் ந‌டுவில் எலிச‌பெத் ச‌ந்திக்கும் இருவ‌ர் (அதிலொருவ‌ர் Natalie Portman) எலிச‌பெத்தை மிக‌வும் பாதிக்கின்றன‌ர். எலிச‌பெத் கார் வாங்கினாரா, அவ‌ர‌து முன்னால் காத‌ல‌னுட‌ன் சேர்ந்தாரா, எலிச‌பெத்தைத் தேடிய‌ ஜெரோமிக்கு என்ன‌ ஆன‌து போன்ற‌ கேள்விக‌ளுக்கான‌ ப‌தில்க‌ளை இப்ப‌ட‌த்தைப் பார்ப்ப‌வ‌ர்க்கு விட்டுவிடுவோம். எளிமையான‌ க‌தை, ஒரு சில‌ முக்கிய‌ பாத்திர‌ங்க‌ள் ம‌ற்றும் நோரா ஜோன்ஸின் இய‌ல்பான‌ ந‌டிப்புட‌ன் அலுப்ப‌டையாது ப‌ட‌ம் ந‌க‌ர்வ‌துதான் முக்கிய‌மான‌து.
 ....................................................
2.0 சில கேள்விகள்

ஜெய‌மோக‌ன் 'அற‌ம்' ம‌ற்றும் 'சோற்றுக்க‌ண‌க்கு' ஆகிய இரண்டு நல்ல யதார்த்தவாதக் கதைகளை அண்மையில் எழுதியிருக்கின்றார். தொட‌க்க‌த்தில் இருந்தே என‌க்கு ஜெய‌மோக‌னின் சிறுக‌தைக‌ள் பிடிக்கும் என‌ச் சொல்லிக்கொண்டே வ‌ந்திருக்கின்றேன். முக்கிய‌மாய் ஜெய‌மோக‌ன் த‌ன‌து க‌தை ந‌க‌ரும் சூழ‌லுக்குள்ளும், பாத்திர‌ங்க‌ளுக்குள்ளும் ந‌ம்மை எளிதாக‌ப் பொருத்திக்கொள்ள‌க்கூடிய‌தாக‌ செய்துவிடுவார். 'அற‌ம்' க‌தையில் பெரிய‌வ‌ர் பாக்கைச் சீவ‌ல்க‌ளாக‌ ஆக்குவ‌தும்..., 'சோற்றுக்க‌ண‌க்கில்' கெத்தேல் சாகிப் உண‌வு ப‌ரிமாறுவ‌தும்... விரிவாக‌ப் பேச‌ப்ப‌டுவ‌து ந‌ம்மை அத‌ற்குள் உள்ளிழுத்துக் கொள்ளும் உத்திதான். பிற‌கு க‌தையோடு நாமும் ஒரு ம‌றைமுக‌மான‌ பாத்திர‌மாக‌ ந‌க‌ர்ந்துகொண்டிருப்போம். இந்த‌ இரு க‌தைக‌ளுமே உயிரோடு வாழ்ந்த இருவ‌ரைப் ப‌ற்றி புனைவின் மொழியில் பேசுவ‌தால் ந‌ம்மை இன்னும் வ‌சீக‌ரிக்கின்ற‌து. இதில் எவையெவை ய‌தார்த்த‌தில் ந‌ட‌ந்திருக்கும் என‌ ம‌ன‌ம் அறிய விரும்புவ‌தால் தொட‌ர்ந்து எம்மை அசைபோடச் செய்கின்ரன. ம‌ற்ற‌து த‌மிழ‌ர்க்கும் த‌மிழ்ச்சூழ‌லுக்கு என்றுமே விருப்ப‌மான‌ மிகை உண‌ர்ச்சிச் சூழ‌லில் க‌தை ந‌க‌ர்த்த‌ப‌டுவ‌தால் பொதுவாக‌ அனைவ‌ர்க்கும் வாசித்த‌வுட‌னேயே இவ்விரு கதைகளும் பிடித்தும் போய்ப்விடுகின்றது. இன்னுமொரு விடயம், மிக‌ எளிமையான‌ சொற்க‌ளால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ எவ்வித‌ சிக்க‌ல்க‌ளுமில்லாத‌ வாக்கிய‌ அமைப்புக்க‌ள். ஆக‌ இவ‌ற்றின் அடிப்ப‌டையில் என‌க்கும் இவை நல்ல சிறுக‌தைக‌ள் என‌ச் சொல்வ‌தில் த‌ய‌க்க‌ங்க‌ளில்லை.

இப்போது இந்த‌ இர‌ண்டு க‌தைக‌ளையும் ச‌ற்று இழையிழையாக‌ப் பிரித்துப் பார்ப்போம். அதாவ‌து சில‌ பொதுப்ப‌ண்புகளை அடையாள‌ங் காண‌முய‌ல்வோம். ஜெமோவின் புனைவுக‌ளில் வ‌ரும் பாத்திர‌ங்க‌ளுக்கு குறி இருக்கிற‌தோ இல்லையோ நிச்ச‌ய‌ம் சாதிய‌ அடையாள‌ங்க‌ள் துருத்திக்கொண்டேயிருக்கும். 'அற‌த்தில்' வ‌ருவ‌து பெரிய‌வ‌ர்தான். ஆனால் அவ‌ரின் பேச்சு மொழி பிராம‌ண‌ப் பேசுமொழியாக‌ இருக்கிற‌து. அதேபோல‌ 'சோற்றுக்க‌ண‌க்கு' க‌தையைச் சொல்ப‌வர் ஒரு 'வேளாள‌ன்' என‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌து. ச‌ரி, அற‌த்திலாவ‌து பெரிய‌வ‌ர் செளஷ்டிரா சாதியின‌ராக‌ இருப்ப‌தை இப்போதைக்கு விடுவோம். ஆனால் சோற்றுக்க‌ண‌க்கில் ஏன் க‌தைசொல்லி ஒரு வெள்ளாள‌ன் என‌ தேவையில்லாது புகுத்த‌ப்ப‌டுகின்ற‌து என‌ யோசித்துப் பார்க்க‌வேண்டும் (‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன்). இக்கதையில் சாதி அடையாளம் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ப் புகுத்த‌ப்ப‌டுகின்ற‌து ஏன் என‌க் கூறுகின்றேன் என்றால், க‌தையில் உண‌வுக்க‌டை வைத்திருக்கும் முஸ்லிம் பாத்திர‌ம் எல்லோருக்கும் க‌ண‌க்குப் பார்க்காது உண‌வு ப‌ரிமாறும் ஒரு அற்புத‌மான‌ ம‌னித‌ர். சாப்பிட‌ விரும்பும் எவ‌ரும் சாப்பிட‌லாம்; காசு கொடுக்க விரும்பும் எவ‌ரும் பெட்டிக்குள் விரும்பிய‌ காசைப் போட்டுவிட்டுப் போகலாம் என‌ உய‌ர்வாக‌ நினைக்கும் ஒரு ம‌னிதாபிமானி, வ‌ரும் ஒவ்வொருவ‌ரையும் பார்த்து இவ‌ரின்ன‌ சாதியென‌ பார்த்துக்கொண்டிருக்க‌ப்போவ‌தில்லை. க‌தையிலேயே அந்த‌ முஸ்லிம் பாத்திர‌ம் மிக‌க் கொஞ்ச‌மாக‌வே க‌தைப்பார் என‌வும் சொல்லப்படுகிறது. என‌வே இங்கேதான் ஜெமோ த‌ன் விருப்பை நாசுக்காய் செருகிவிடுகின்றார். அதுவும் சும்மா அல்ல‌, ஒரு க‌ல்லில் இர‌ண்டு மாங்காய்களை அல்ல‌வா விழுத்திவிடுகின்றார். ஒன்று அந்த‌க் க‌தை சொல்லிப் பாத்திர‌த்தை தெளிவாக‌ 'வெள்ளாள‌ன்' என‌ வாச‌க‌ருக்குச் சொல்லிவிடுகின்றார். க‌தைக்கு அவ‌சிய‌மில்லாத‌ அச்சாதி அடையாள‌ம் இல்லாவிட்டால் நாம் விரும்பினால் வெள்ளாள‌ன் என்றோ த‌லித் என்றோ அல்லது சாதாரண ஒரு மனிதன் என்றோ...எவ‌ராக‌வோ அடையாள‌ங்க‌ண்டுகொண்டிருப்போம். இர‌ண்டாவ‌து விட‌ய‌ந்தான் இன்னும் முக்கிய‌மான‌து...க‌தைசொல்லி ஒரு வெள்ளாள‌ன் என‌ச் சொல்லிக் காட்டுவ‌து முஸ்லிம் பாத்திர‌த்தால். ஆக‌, கவனித்தீர்களா, முஸ்லிம்க‌ளும் நுட்ப‌மாக‌ சாதி பார்ப்ப‌வ‌ர்க‌ள்தான் என‌க் க‌த்தியைச் சொருகிவிட்டு ந‌க‌ர்வ‌துதான் ஜெயமோகனுக்குள் ஒளிந்திருக்கும் 'அறம்'.

ப‌சிக்கும் எவ‌ரும் விரும்பிய‌வாறு சாப்பிட‌லாம் என‌ மிகுந்த‌ ம‌னிதாபிமான‌த்தோடு நினைக்கும் அந்த‌ முஸ்லிம் பாத்திர‌ம், ஒரு வெள்ளாள‌னுக்கு அவ‌ன் வெள்ளாள‌ன் என்று சொன்னால் சாதார‌ண‌மாக‌வோ அல்ல‌து பெருமையாக‌ நினைக்கும் வெள்ளாள‌னைப் போல‌, ஒரு ப‌ள்ள‌னிட‌மோ ப‌றைய‌னிட‌மோ நீ ஒரு ப‌ள்ள‌னோ/ப‌றைய‌னோ என‌ச் சொல்லும்போது எவ்வ‌ள‌வு அசிர‌த்தையாக‌ உண‌ரும் என்கின்ற‌ எளிய‌ உண்மையை அறியாத‌வராக இருப்பாரா என்ன‌? அன்னமிடுகின்றபோது எதையும் அளந்து போடாத மனம், சாதியை மட்டும் உற்றுப்பார்ப்பது என்பது இயல்பாய் இருக்ககூடுமா என்ன?

க‌தையில் இது ஒரு சிறுப‌குதி இத‌ற்குள் முட்டையில் ம‌யிரைப் புடுங்கும் ம‌டையா என‌த் திட்டுப‌வ‌ர்க‌ளை இப்போது நான் உங்க‌ளை 'கூகை' நாவ‌லுக்குள் அழைத்துப் போகின்றேன். நீங்க‌ள் முழு நாவ‌லையும் வாசிக்க‌வேண்டும் என்கின்ற அவசியமுமில்லை. முத‌லாவ‌து அத்தியாயத்தை ம‌ட்டும் வாசியுங்க‌ள். இர‌ண்டு த‌லித்துக்க‌ள், த‌ம் கிராம‌த்திலிருந்து ந‌க‌ர‌ம் ஒன்றுக்குச் செல்கின்றார்க‌ள். அவ‌ருக்கு அங்கே ஒரு உண‌வுக்க‌டையில் தோசை/இட்லி சாப்பிட‌ பெரு விருப்ப‌மாய் இருக்கின்ற‌து. நீண்டகாலக் கனவும் கூட. கையில் போதிய‌ள‌வு காசிருக்கிற‌து. ஆனால் இவ‌ர்க‌ள் த‌லித்துக்க‌ள் என்றால் சாப்பிட‌ இலை விரிக்க‌ மாட்டார்க‌ள். சுற்று முற்றும் பார்த்துவிட்டு உண‌வ‌க‌த்திற்குள் நுழைகின்றார்க‌ள். க‌டைக்கார‌ர் உற்று உற்றுப் பார்க்கின்றார். இவ‌ர்க‌ள் புதிய‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌தால் எந்த‌ச் சாதியைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் என‌ அவரால் அடையாள‌ங்காண‌ முடிய‌வில்லை (ஜெய‌மோக‌ன் ப‌டைத்திருந்தால் சும்மா ச‌ட்டென‌ச் சாதியை கடைக்காரர் நுக‌ர்ந்து பிடித்திருப்பார்). என‌வே அவ‌ர் ப‌ரிமாறுகின்றார். அவ‌ர்க‌ள் ச‌ந்தோச‌த்துட‌ன் சாப்பிட‌த்தொடங்குகின்றார்க‌ள். ஆனால் என்ன‌ ப‌ரிதாப‌ம்...சாப்பாட்டின் இடைந‌டுவில் இவ‌ர்க‌ளின் ஊர்க்கார‌ர் ஒருவ‌ர் அங்கே வ‌ந்துவிடுகின்றார். அவ‌ர் ஆதிக்க‌ச் சாதிக்கார‌ர். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அடி உதை இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் விழுகின்ற‌து. ஊரில் கையைக் க‌ட்டி வாயைப் பொத்தி நிற்கும் சாதிக்கு எங்க‌ளோடு நிக‌ராக‌ மேசையில் சாப்பிட‌க் கேட்கிற‌தா? என‌ ஊர் வ‌ரை துர‌த்தி துர‌த்தி அடிவிழுகிறது. பிற‌கு இப்ப‌டியொரு மாபெரும் குற்ற‌த்தைச் செய்த‌ற்கான‌ த‌ண்ட‌னை ஊருக்குள் வைத்துக் கொடுக்கப்படும்வரை கதை நீளுமென‌ நினைக்கின்றேன்.

இப்போது மீண்டும் அந்த‌ச் சோற்றுக்க‌ண‌க்குக் க‌தை வாருங்க‌ள்... இங்கேதான் நாம் எழுத்தின் அற‌ம் குறித்துப் பேச‌வேண்டும். அற‌ம் என்ப‌து சாதியை வைத்து எத்த‌னையோ பேர் எத்த‌னை இட‌ங்க‌ளில் ஒடுக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கும்போது நாம் சாதியை எழுத்தில் முன் வைப்ப‌தென்ப‌து கூட‌ மிகுந்த‌ க‌வ‌ன‌த்துட‌னும் அக்க‌றையுட‌னும் வைக்க‌வேண்டும். அதுவும் கூகையை எழுதிய‌து வேறு ஒருவ‌ரும‌ல்ல‌. ஜெமோவிற்குப் பிடித்த‌ சோ.த‌ர்ம‌ன். இந்த‌க் க‌தையை எழுதும்போது ஜெமோ என்ற‌ப‌டைப்பாளிக்கு ஒருக‌ண‌ம் ஒருவிட‌ய‌ம் மின்ன‌ல் வெட்டியிருக்க‌வேண்டும். இதை வெள்ளாள‌ன் என‌ அந்த‌ முஸ்லிம் பாத்திர‌த்தினூடாக‌ சொல்ல‌வைத்த‌தைப் போல‌ ஒரு த‌லித் பாத்திர‌த்தை அமைத்திருந்தால் அத‌ன் ம‌ன‌ம் எவ்வ‌ளவு ப‌தைப‌தைத்திருக்கும்...அது நியாய‌மில்லை அல்ல‌வா என‌ உணர்ந்திருக்கும்.  'உன்னைப் பார்த்தால் வெள்ளாள‌ன்' போல‌ இருக்கிற‌து என்று வருவதைத் த‌விர்த்திருக்க‌ச் செய்திருக்கும்.

இதைத் தீவிரமாக‌ முன்வைப்ப‌த‌ற்கு என்ன‌ காரண‌ம் என்ன‌வென்றால், நான் 'சோற்றுக்கணக்கு'க்க‌தையோடு மிக‌ ஒன்றி வாசித்துக் கொண்டிருக்கும்போது....முக்கிய‌மாக‌ ஜெமோ அங்கே கோழிக்க‌றி/மீன் குழ‌ம்பு ப‌ரிமாற‌ப்ப‌டுவ‌தை எழுதியதை வாசிக்கும்போது நாவில் ருசி வ‌ந்த‌மாதிரியே இருந்த‌து (சில‌வேளை இக்க‌தையை ம‌திய‌ உண‌வுக்கு முன் வாசித்த‌தாலோ தெரிய‌வில்லை). ஆனால் ச‌ட்டென்று அந்த‌ முஸ்லிம் பாத்திர‌ம் தொட‌ர்பேயில்லாது 'நீ வெள்ளாள‌ன்' என்ற‌போது 'ஆகா க‌டைசியில் "ஜெமோவின் "நான்" இங்கேயும் ப‌ல்லிளிக்கிற‌தே' என‌ எரிச்சல் வந்ததே இதற்குக் காரணம். ஜெமோ ய‌தார்த்தத்தைத்தானே எழுதியிருக்கின்றார்...இப்ப‌டியெல்லாம் க‌தையை அறுவைச் சிகிச்சை செய்யவேண்டுமா என‌ ச‌பித்த‌ப‌டி போகின்ற‌வ‌ர்க்கு... 'அற‌ம்' க‌தையில் தெருவில் இருந்த‌ ஆச்சியில் குண்டித்த‌சை தெருவோடு ஒட்டிக்கிடந்தது என்பதை யதார்த்த‌ம் என‌ ஏற்றுக்கொள்கின்றீர்க‌ளா என‌வும் உங்க‌ளை நீங்க‌ளே கேட்டுக்கொள்ள‌வேண்டும். அங்கே 'யதார்த்தத்தை' கொஞ்சம் உயர்வுநவிற்சியாக்க முடியுமென்றால், 'சோற்றுக்கணக்கில்' யதார்த்ததில் நடந்திருந்தாலும் தேவையில்லாததைத் தவிர்த்திருக்கலாம் என்பதையே சொல்லவருகின்றேன். அவ்வாறு தவிர்ப்பதால் அந்தக் கதை எந்தக் 'கீறலை'க் கூட அடைந்திருக்கப் போவதில்லை. இங்கேதான் நாம் ஜெமோ என்ற படைப்பாளியில் 'அறம்' குறித்தும், அவர் யாருக்கு 'சோற்றுக்கணக்கு' காட்டவிரும்புகின்றார் என்பதையும் இந்தக்கதைகளைச் சிலாகிப்பது போலவே நாம் நேர்மையாகப் பேசவேண்டும்.
....................................................
3.0 குறும்படம்

 'Hotel Chevalier'