கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பார்த்திபனின் 'கெட்டன வாழும்'

Wednesday, July 04, 2018

1.

இந்தக் கதை இந்தியா, உக்ரேன், ஜேர்மனி என்கின்ற மூன்று நாடுகளில் நடக்கின்றது. இந்தியாவில் இந்தக் கதையைச் சொல்பவன் முதலில் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றான். ராஜீவ் காந்தி கொலை நடந்த சில வருடங்களிலிருந்து கதை தொடங்குகின்றது. கதைசொல்லி, இதற்கு முன் ஜெயிலில் இருந்தவன். அதற்கு முன்  இயக்கத்தில் இருந்தவன். இவை எல்லாவற்றுக்கும் முன்,  இலங்கையில் அம்மா சுட்டுத் தரும் தோசைகளைச் சாப்பிட்டபடி, அக்காவோடும் அத்தானோடும் தியேட்டர்களில் படம் பார்த்துக் கொண்டு திரிந்தவன் என ஒரு பின்னணி நமக்குத் தரப்படுகின்றது.

இந்தக் கதைசொல்லி சேர்ந்த இயக்கம், போராடவேண்டிய சிங்கள அரசுக்கெதிராகப் போராடாமல் இந்தியாவில் சொந்த இயக்கத்தவர்களையே கொல்ல, அவன் அதனிலிருந்து ஓடித்தப்புகின்றான். வீட்டுக்கும் திரும்பிப் போகமுடியா நிலை. நெருங்கிய தோழர்களும் கொல்லப்படுகின்றார்கள். பட்டினியால் தினம் தினம்  செத்துப் பிழைக்க, போதைப்பொருள் பசி மறக்க உதவுகின்றது.

ராஜீவ் காந்தியின் மரணத்தோடு, தமிழ்நாட்டு பொலிஸ் இவனைப் போட்டுச் சாத்துவதுடன், பிறகு எவர் டெல்கியிலிருந்து வந்தாலும் இவனைப் போன்றவர்களை ஜெயிலுக்குள் அடைத்தும் உதைக்கின்றது. பசி மட்டும் தொடர்ந்து கொல்கின்றது.

வெளிநாட்டு நண்பர்களிடம் உதவி கேட்கும்போது அவர்கள் தங்கள் நிலை இதைவிடக் கேவலமானது என்றும்,  அளவுக்கு மீறிய கடன்  தொல்லை என்றும் கைவிரிக்கின்றார்கள். யாரோ ஒரு நண்பன் என்னால் உன்னை இங்கே கூப்பிடமுடியாது, வேண்டுமென்றால் எதையாவது வாங்கி நல்லாய்ச் சாப்பிடு என 20 பிராங்கை அனுப்ப, அதைச் செலவழிக்க வெளியில் போக, அப்போதும் பொலிஸ் பிடித்து அடித்து சித்திரவதை செய்கின்றது.

அடுத்து கதையின் களம் உக்ரேனில் திறக்கின்றது. சோவித் யூனியன் உடைந்த உக்ரேன் வறுமைக்குள் போய்க் கொண்டிருக்கின்றது. பிச்சையெடுக்கும் ஒரு சிறுமியும் அவள் தம்பியும் அறிமுகப்படுத்தப்படுகின்றார்கள். பேணிக்குள் போடப்படும் காசு ஒரு கோப்பி கூட வாங்கப் போதாது. தம்பியோ குளிர் வாட்டுகின்றது, வீட்டுக்குள் போவோம் என்கின்றான். பசித்த வயிறோடு வீட்டுக்குள் திரும்பும் இவர்களைப் பின் தொடரும் பெண்ணொருத்தி, ஜேர்மனியில் வைத்தியசாலையில் துப்பரவு செய்யும் வேலை இருக்கின்றது. வருகின்றாயா என அந்தச் சிறுமியிடம் கேட்கின்றார்.

இப்போது கதை ஜேர்மனிக்கு நகர்கின்றது. இந்தியாவிலிருந்த கதைசொல்லி எப்படியோ  ஜேர்மனிக்கு வந்துவிட்டார். அவரின் திறந்திருந்த காருக்குள் ஒரு பதினேழு வயதுப் பதின்மக்காரி ஏறியிருப்பதைக் காண்கின்றார். 'ஒளித்துத் தானிருக்கின்றாள். ஆபத்தில்லை. என்றாலும் அவதானமாக இருக்கவேண்டும். என்னவும் நடக்கலாம். அவளே ஆபத்தானவளாக இருக்கலாம். அல்லது என்னையும் தன்னுடன் ஆபத்தில் மாட்டிவிடலாம்' என கதை சொல்லி நினைக்கின்றார்.

பட்டினியான முகத்தோடு, அவளது வயதுக்குப் பொறுத்தமில்லாத ஆடைகளுடன் இருப்பவளை என்ன செய்வதென்று யோசிக்கின்றார். தனது நண்பரான அந்திரியாஸூடன் கதைத்து முடிவெடுக்கலாமென அவளை தனது அபார்ட்மென்டிற்கு கூட்டி வந்து கோப்பி தயாரித்து கொடுக்கின்றார். அவள் பேசும் மொழி இவருக்கும், இவர் பேசும் மொழி அவளுக்கும் விளங்கவில்லை.  அவளது அரைகுறை ஆடை தாண்டி, அவளது உடம்பில் இருக்கும் கத்தியாலும், சிகரெட்டுக்களாலும் கீறப்பட்ட காயங்களை காண்கின்றார். இவள் பாலியல் விடுதியிற்கு விற்கப்பட்ட சிறுமி என்பதை உடனே புரிந்துகொள்கின்றார்.

கதைசொல்லி மீண்டும் அந்திரியாஸுக்கு தொலைபேசி எடுக்கின்றார். அவன் ஒரு பொலிஸ்காரன். அவன் இப்போதும் தொலைபேசியை எடுக்கவில்லை. அவனோடு மட்டுமே நான் கதைப்பேன் என்கின்றார். இதில் கதையின் முக்கியமானதொரு முடிச்சு இருக்கின்றது.

நேரம் போகின்றது. அவளுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்கின்றார். அவள் சாப்பிட்டவுடன் தன்னை எப்படி கத்தியால் வெட்டினார்கள் என்று குசினிக்குள்ளிருந்து கத்தியை எடுத்துக்காட்டி சைகையால் செய்துகாட்டுகின்றாள். ரீவியில் ஒரு பிரபல்யம் வாய்ந்த தொலைக்காட்சிக்காரன் ஒருவன் எப்படி போதை மருந்துகளோடும், பாலியல் விடுதியில் பெண்களோடும் உல்லாசமாக இருந்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்ட செய்தி போகின்றது. தலைமறைவாக இருக்கும் அவன், தன்னிடம் இப்படி பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் போன அரசியல்வாதிகளின் பெயர் விபரம் இருக்கின்றது என்கின்றான். கதைசொல்லியோ, இலங்கை இந்தியாவிலிருக்கும் அரசியல்வாதிகள் போல இவர்களும் கோட்டும் சூட்டும் போட்டு அதையேதான் செய்கின்றனர் எனச் சலிக்கின்றான்.

அடுத்தநாள் காலை தனது பொலிஸ் நண்பனைச் சந்தித்து இந்தக்கதைசொல்லி நடந்தவற்றைக் கூறுகின்றான். பொலிஸோ அல்லது ஏதேனும் தேவாலயமோ இந்தப் பெண்ணை பொறுப்பெடுக்கக் கேட்கின்றான். பொலிஸ்காரன், இது ஒரு விசர் வேலை. இப்படியான சிறுமிகளை மாஃபியாதான் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து கொண்டுவருவார்கள். அவர்களோடு ஒருபோதும் போராடவே முடியாது. அவளை வீட்டை விட்டு வெளியேற்றிவிடு, அதுவே நல்லது என்கின்றான்.

இவன் அந்தச் சிறுமிக்கு சொக்கிளேட்டும், உணவும் வாங்கிப் போகின்றான். அவள் குசினியை எல்லாம் சுத்தம் செய்து வைத்திருக்கின்றாள். சொக்கிளேட் கிடைத்த சந்தோசத்தில் இவனை அரவணைத்துக்கொள்கின்றாள். அவளது தீக்காயங்களை ஆடை விலத்தி அவள் காட்ட, இப்படி எவரும் செய்வார்களா எனத் திகைக்கின்றான். அவள் அழுகின்றாள்.

இவனுக்கு வெளியே இப்படியே இந்தப் பெண்ணை அனுப்புவதில் எந்த விருப்பமும் இல்லை. நிறைய யோசிக்கின்றான். இவனுக்கு நண்பன் என்றும் எவனும் இல்லை. இந்தப் பொலிஸ்கார அத்திரியாஸ் மட்டுமே நண்பன். அவனே சொல்லிவிட்டான், இப்படி அவளை நீ வீட்டில் தொடர்ந்து வைத்து ஏதும் பிரச்சினை நடந்தால் நானும் உன்னைக் கைகழுவிவிடுவேன் என்று.

இறுதியால் எதுவுமே பேசாது, அவளுக்கு நூறு யூரோ கையில் கொடுத்து, கதவைத் திறந்து வைத்து வெளியே போகும்படி கையைக்காட்டுகின்றான். அவளுக்குப் புரிகின்றது. இவனால் அவளின் கண்களை நேரடியாகப் பார்க்கவே முடியவில்லை. அவள் அவனை அணைத்துவிட்டு சிரித்தபடி வெளியே போகின்றாள். கதவைச் சாத்திய இவன் ஓடிப்போய் அந்தச் சிறுமியைத் திருப்ப வீட்டை கூப்பிடுவோமா என நினைக்கின்றான். ஆனால் யதார்த்தம் தடுக்கின்றது.

அடுத்தநாள் பேப்பரில் இந்தச் சிறுமி போதை மருந்து கடத்தும் மாஃபியா கும்பலால் கொல்லப்பட்ட செய்தியைப் பார்க்கின்றான். அவர்களின் அகராதியில் இப்படித் தப்பியோடுபவர்களுக்கு சன்மானம், மரணம்.  இவன், தானே கொலை செய்தது மாதிரி  மனம் பதைக்கின்றான். எப்படியெல்லாம் அவளைச் சித்திரவதை செய்து கொன்றார்கள் என்று பேப்பர் விபரித்ததைப் பார்த்து, தூர எறிகின்றான்.

இப்போது பொலிஸ் நண்பன், உனது தொழிலுக்கு நேரம் வந்துவிட்டதென்கின்றான். கொலம்பியாவிலிருந்து போதைப்பொருட்களோடு வரும் கப்பலிலிருந்து பொருட்களை பாதுகாப்பாக குறித்த இடத்திற்குக் கொண்டுசெல்வது இவனது வேலை. இதற்கு உடந்தையாக அந்தப் பொலிசும் இருக்கின்றது. இவன்  இந்தியாவிலிருந்து தப்பி ஜேர்மனிக்கு வர இந்தப் போதைமருந்துக் கடத்தலே உதவியிருக்கின்றது. பொலிஸ்காரனான அந்திரியாஸு இவனை விமானநிலையத்தில் வைத்துப் பிடித்துவிட, இப்போது அவனோடு சேர்ந்து போதைமருந்து கடத்துபவனாக இந்தக் கதை சொல்லி இருப்பதாக, 'கெட்டன வாழும்' கதை முடிகின்றது.


2.

இந்தக் கதையில் கதைசொல்லி முன்னாள் இயக்கக்காரனாக இருந்தவன். அவனது பசியும், தமிழ்நாட்டு ஜெயில் வாசமுந்தான் அவனை எதையாவது செய்து அந்தப் படுகுழியிலிருந்து தப்பிப்போகச் செய்கின்றது. அதே பசியோடு வரும் இன்னொரு சக உயிரியைக் காண்கின்றான். அவனால் அந்தப் பெண்ணின் வறுமையையும், அவள் சிக்கிக்கொண்ட உலகையும் விளங்கிக்கொள்ளமுடிகின்றது. இது வாழ்க்கை. இங்கே சினிமாப்படம் போல ஒரு ஹீரோத்தனம் காட்டமுடியாது. அவன் கூட ஒருவகையில் பொலிஸ்காரனான அந்திரியாஸின் அடிமை.

அவனைத்தாண்டி எதுவும் செய்யமுடியாது. எனவே தெரிந்தே  இந்தப் பெண்ணின் கொலைக்கு இவனும் உடந்தையாகின்றான்.
இப்போதுதான் பார்த்திபன் ஒரு விடயத்தைச் சொல்கின்றார். ஏன் அவன் இயக்கத்துக்குப் போனான்? அவனது அக்காவும், அத்தானும் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதால் இயக்கம் ஒன்றில் சேருகின்றான். அந்தப் கொடுமை தாங்காது, பரிசுத்தமான மனதோடு இயக்கத்துக்குப் போனவனின் ஒரு வாழ்வு இப்போது எங்கெங்கோ எல்லாம் தறிகெட்டது போயிற்றென்பதுதான் எவ்வளவு அவலம்.

மேலும் புதிய வாழ்வு தேடி வந்த ஜேர்மனியிலும் அவன் இன்னொரு 'சிறை'க்குள் அகப்பட்டுவிட்டான். அவன் இந்தத் தொழிலைச் செய்வதால் அதன் பாதுகாப்புக் கருதி எந்தத் தமிழரோடும் அவனுக்குத் தொடர்பில்லை. அவன் ஒரு தனியன். ஆனால் இனி இந்தப் பெண்ணைக் கொலைக்களத்திற்கு அனுப்பிய குற்றத்தோடும் காலகாலமாக அவன் வாழ்ந்தாக வேண்டும். ஒரு அப்பாவியாக அம்மா சுடச்சுட தோசை தர சாப்பிட்ட ஒருவனின் கதை இப்படியெல்லாம் மாறுமென்று யார் அறிந்திருப்பார். ஆனால் அது நிகழ்ந்திருக்கின்றது.

இந்தக் கதையினூடாக நமது போராட்டம், இயக்கங்களின் வரலாறு, இந்திய அரசு/தமிழகப் பொலிஸின் அடக்குமுறைகள், தப்பிப்பிழைத்தல், பிறகு இன்னும் சிக்கலான ஒரு தொழிலுக்குச் சிக்குப்படல்,  'கெட்டவனாக' இருந்தும் ஒரு பெண்ணுக்காய் பரிதாபம் கொள்ளல் மட்டுமில்லை, தப்பிப் பிழைத்து தக்கண வாழ்பவனாகவும் இருக்கின்றான்.

இதிலெந்தப் பிரச்சாரத் தன்மையோ அல்லது அளவுக்கதிமாய் பரிதாபத்தைக் கோரி நிற்பதோ நடப்பதில்லை. நாம் இந்தக் கதைசொல்லியைப் புரிந்துகொள்வது போல, இந்தப் பெண்ணையும் புரிந்துகொள்கின்றோம். இங்கே கதை சொல்லிக்கு ஒரு முழுமையான கதை சொல்லப்படுவதுபோல, அந்த உக்ரேனியச் சிறுமிக்கு ஒரு கதை  முழுமையாகச் சொல்லப்படாவிட்டாலும், அவளுக்கான கதையை வாசகர்களாகிய நாம் உருவாக்கிக்கொள்கின்றோம். இந்த அப்பாவிச் சிறுமிகளை வைத்து அதிகாரத்திலுள்ளவர்கள் ஆடும் ஆட்டங்களை வெறுப்புட,ன் மீண்டும் வாசிப்புச் செய்கின்றோம்.

இந்தக் கதைசொல்லியைப் போலவே, வாசிக்கும் நாமும் இந்தச் சிறுமியைப் பலிக்களத்திற்கு அனுப்பியிருக்கின்றோம் என்ற குற்றவுணர்வைக் அடைகின்றோம். நாம் 'கெட்டவராக இல்லாத நல்லவராக' இருந்தாலும் கதைசொல்லி எடுத்த முடிவைத்தான் நாங்கள் எடுத்திருப்போம் என்னும் இயலாத்தனம் எங்கள் மனச்சாட்சியை இடையூறு செய்கின்றது. இங்கே அறமற்றவனாகிப்போன ஒருவனான கதைசொல்லியின் 'அறம்' பேசப்படுகின்றது. அதுமட்டுமின்றி நாம் எப்படி இந்தக் கதைசொல்லியை மதிப்பீடு செய்வது என்கின்ற சிக்கலும், எண்ணற்ற கேள்விகளும் இருப்பதால் இது ஒரு முக்கியமான கதையாகியும் விடுகின்றது.

(Apr 10, 2018)