கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

திருமாவளவனின் 'சிறு புள் மனம்'

Sunday, March 31, 2019


-புதிய சில கவிதைகள் பற்றிய ஒரு சுருக்கமான வாசிப்பு-

விதைகள் எழுதுவதோடல்லாது, கவிதை மனோநிலையுடனும் எப்போதும் இருந்த ஒருவராக திருமாவளவனை நான் நினைவுகொள்கின்றேன். தனது நாற்பதுகளின் பின் இலக்கிய உலகில் நுழைந்த திருமாவளவன், மிகக் குறுகிய காலத்தில் நிறையக் கவிதைகளை எழுதி, தனக்கான கவனத்தை ஈர்த்த ஒரு புலம்பெயர் கவிஞர். ஈழக்கவிஞர் என்றோ அல்லது புலம்பெயர் கவிஞர் என்றோ தன்னை வகைப்படுத்தலை, திருமா ஒருபோதும் விரும்பாதவர் என்பதால், இப்போது உயிருடன் இருந்தால் என் இந்தக் கருத்தை மறுத்துத் தன்னைத் தமிழ்க்கவிஞராக முன்வைக்கச் சொல்லியிருப்பார். ஆனால் நான் அவரைப் புலம்பெயர்க் கவிஞராக முன்வைப்பதற்கு அவர் புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்ததன் பின் எழுதத்தொடங்கியதால் மட்டுமின்றி, அவரை என்னைப் போன்ற பல புலம்பெயர்ந்தவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரென நினைத்துக் கொள்வதாலும் இப்படிச் சொல்கின்றேன். இப்படி அடையாளப்படுத்துவதால் அவருக்குப் பொதுவான தமிழ்ச்சூழலில் இருக்கும் அடையாளத்தை மறைப்பது என்பதல்ல அர்த்தம்
திருமாவளவன் 'பனிவயல் உழவு' (2000), 'அஃதே இரவு அஃதே பகல்' (2003), 'இருள்-யாழி' (2008), 'முதுவேனில் பதிகம்' (2013) நான்கு கவிதைத் திரட்டுக்களையும், பின்னர் இறுதியாக 'சிறு புள் மனம்' (2015) என்ற முழுக்கவிதைத் தொகுப்பையும் நமக்குத் தந்துவிட்டுப் போயிருக்கின்றார். ஏலவே தனித்தனியாக வந்த நான்கு கவிதைத் தொகுப்புக்கள் பலரால் விரிவாகப் பேசப்பட்டுவிட்டதால், நான் 'சிறு புள் மனம்' தொகுப்பின் இறுதியில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் இருபது கவிதைகளை என் வாசிப்பிற்காக இங்கே எடுத்துக்கொள்கின்றேன்.

திருமாவளவனின் கவிதைகள் அநேகம் தாய்மண்ணில் விட்டுவந்த வாழ்வையும், புலம்பெயர்ந்து புதிய சூழலுக்குள் பொருந்திக்கொள்ள முடியா வாழ்க்கையும் பேசியவை என ஒரு எளிய புரிதலுக்காய் சொல்லிக்கொள்ளலாம்.  இனி தாயகம் மீளுதல் சாத்தியமில்லை என்ற புரிதல் அவரின் கவி மனதுக்குத் தெரிந்தாலும், புலம்பெயர்ந்த நாட்டிலும் தன்னையொரு அந்நிய மனிதராகத் தொடர்ந்து முன்னிறுத்தவே அவரது மனம் அவாவிக்கொண்டிருந்திருக்கின்றது. கழிவிரக்கக் கவிதைகள் பெருமளவில் திருமாவின் கவிதைத் திரட்டுக்களில் இருந்தளவுக்கு புலம்பெயர்ந்த வாழ்வை ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கைகொள்ளும் கவிதைகள் அவரது தொடக்கக் காலக் கவிதைகளில் அரிதாகவே இருந்திருக்கின்றன. அவ்வப்போது நம்பிக்கை தளிர்களாக துளிர்த்தாலும் அவை ஒருபோதும் ஆழ வேர் விட்டு பெரு விருட்சமாக வளர்ந்ததேயில்லை. இனியென்ன இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்வோம் என்கின்ற சலிப்புடந்தான் அந்த நம்பிக்கை தொனி அவரின் பல கவிதைகளில் வந்து தெறித்திருக்கின்றது.
எனினும், இந்த நம்பிக்கையீனமான 'நம்பிக்கை' அவரது பேத்தி பொன்னி கவிதைகளுக்குள் வந்தவுடன் வேறொரு பரிணாமத்தை எடுத்துக்கொள்கின்றது. புலம்பெயர் வாழ்வில் அவருக்கு இருந்த நம்பிக்கையீனங்களையும், சலிப்புக்களையும் குழந்தை பொன்னி வாரித் துடைத்துக்கொண்டு சென்றுவிடச் செய்கின்றாள். அதிலும் திருமாவிற்கு தன் நோயின் வீர்யம் விளங்கியபின்னர் வாழ்வதற்கான நம்பிக்கை இன்னும் அதிகம் வந்துவிடுகின்றது. அவரது புதிய கவிதைகளில் முக்கியமாக ‘நோயில் பத்து’ என எழுதப்பட்ட பத்துக் கவிதைகளில் நோயை/மரணத்தை ஒரு ஒற்றைக்கண் பூனைக்கு உவமித்து எழுதினாலும், அதனோடு ஒரு பரமபத விளையாட்டைச் செய்துகொண்டு வாழ்வைச் சுகிக்க விரும்புகின்ற ஒருவராக திருமா ன் கவிதைகளில் எழுகின்றார்..

நோய் அவரைத் தனிமையில் வீழ்த்துகின்றது. விரும்பிய எதையும் செய்யமுடியாது தடுக்கின்றது. நினைவுகளும்/கனவுகளும் அவரை அவர் புலம்பெயர் தேசத்திலா அல்லது தாய்மண்ணிலா இருக்கின்றேன் என்ற குழப்பதையெல்லாம் கொண்டுவருகின்றது. இந்தப் பொழுதுகளில் அவருக்குப் பொன்னியும், கடந்தகாலக் காதல்களும் துணையாக இருக்கின்றன. பொன்னி ஒரு வருங்காலத்தின் படிமம் என்றால், காதல் நினைவுகள் கடந்தகாலத்தின் படிமங்களாகின்றன. வெண்தாடியைத் தடவிக்கொண்டு பழைய தன் காதலிகளோடு உரையாடல்களை நிகழ்த்துகின்றார்.

கடந்த வாழ்க்கைக்குள் இனி மீள்தல் சாத்தியமில்லை என்றாலும், கவிதைகளால் அவர்களை நெருங்கிப் பார்க்க முயல்கின்றார். ஒழுங்கைகளில் காதலியின் கைபிடித்து நடந்த நினைவுகள் 'பெருகி வழிகிறது/கழிந்துபோன வாழ்வின் மீது/மீளமுடியாக்/ காதல்' என எழுத வைக்கின்றது. நிலமெங்கும்  சிந்திய மென் ஊதா லைலாக் மலர்கள், விரகம் முற்றிய பெண்ணின் கூந்தலிருந்து சிதறி மஞ்சம் நிறைத்த பூக்களை நினைவுபடுத்த  'கங்கையை/ சடைக்குள் புதைத்து வைத்த சிவன் அறிவான்/ ஒவ்வொரு மனிதனின் தலைக்குள்ளும்/ முள்ளெனக் கிடந்து நெருடும்/நினைவின் வலி' எனப் பெருமூச்சு வைக்க வைக்கின்றது.
இவையெல்லாம் திருமா நோயின் பெரும் வாதையுடன் துடித்துக்கொண்டிருந்தபோது, வாழ்வதற்கான நம்பிக்கையை முன்வைக்கின்ற எழுத்துக்களாக நாம் கண்டுகொள்ளலாம். எத்தகைய துயரத்திலும் நினைவுகள்தானே நம்மை மயிலிறகின் வருடல்களாய் ஆசுவாசப்படுத்துகின்றன. இது இன்னொரு வகையான 'மரணத்துள் வாழ்வது'.
இவ்வாறாகத் தன் தொடக்க கவிதைத் திரட்டுக்களில் கழிவிரக்கமாய் வாழ்வைப் பார்த்த ஒரு கவிமனது, பின்னர் வந்த நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அதை இன்னும் சுகிக்க எழுகின்றது. தனது கவிதைகளால் அடுத்த தலைமுறைக்கான தீக்குச்சி வெளிச்சத்தைக் கொடுக்க விரும்புகின்றது. தன் மரணத்தின் பின்னும் ஒரு மரமாக உயிர்வாழ்வேன நம்பிக்கை கொள்கின்றது.
இன்று திருமாவளவன் நம்மிடையே இல்லையென்கின்றபோதும், அவரது கவிதைத் திரட்டுக்கள் இருக்கின்றன. அவை புலம்பெயர் வாழ்வின் - முக்கியமாக கனடாவின் - குறுக்குவெட்டுப் பரப்பைப் பார்ப்பதற்கான சாளரமாக இருக்கின்றன. திருமாவின் கவிதைகளை திரும்பத் திரும்ப மறுவாசிப்புச் செய்வதினூடாக தமிழ்ச்சூழலில் அவருக்கிருக்கும் வகிபாகத்தை நாம் நினைவூட்டிக்கொள்ளலாம்.
............................................
நன்றி: நடு

மிலான் குந்தேராவின் 'அறியாமை'

Saturday, March 30, 2019


 Ignorance by Milan Kundera


மிலான் குந்தேராவின் 'அறியாமை' (Ignorance) இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் தாய்நிலம் செல்லும் சாத்தியம்/சாத்தியமின்மைகளைப் பேசுகிறது. செக் நிலப்பரப்பு ரஷ்யா படைகளால் 1969ல் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இருபது வருடங்களின் பின் உலக நிலைமைகள் மாற, செக் மீண்டும் சுதந்திரம் பெறுகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்பால் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த பெண் மீள தாய்நிலம் மீள்வது இந்நாவலின் பல்வேறு இழைகளில் ஒரு முக்கிய நிகழ்வாக‌ இருக்கிறது.

இரினா இரண்டு குழந்தைகளுடன் கணவனுடன் பிரான்ஸிற்குப் புலம்பெயர்ந்தவள். கணவன் இறந்துபோய், பிள்ளைகளும் வளர்ந்துவிட, அவளுக்கு இப்போது சுவீடனைச் சேர்ந்த கஸ்தோவ் என்கின்ற காதலனும் இருக்கின்றான். பாரிஸிலிருக்கும் இரினாவின் தோழிகள் மட்டுமில்லை, அவளின் காதலனும், செக் இப்போது சுதந்திரமடைந்துவிட்டதே, நீ ஏன் இன்னும் தாய்நிலம் போகவில்லை எனத் தொடர்ச்சியாகக் கேட்கின்றனர். தாய்நிலம் போகும் கனவு இல்லாத இரினாவை இவர்களின் கேள்விகள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இறுதியில் செக்கிற்குத் திரும்புகின்றாள். இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த செக் மட்டுமில்லை, அவளின் நண்பிகளும் கூட அவளுக்குத் தொடர்பில்லாத/தெரியாத ஒரு உலகைப் பற்றிப் பேசுகின்றனர். அவளின் வருகையை அவர்கள் கொண்டாடுகின்றனரே தவிர, அவர்களுக்குத் தெரியாத அவளின் அந்த இருபது ஆண்டுகள் பற்றி அறிய எவருமே அக்கறை கொள்கின்றார்களில்லை. அது இரினாவிற்குத் துயரத்தை மட்டுமின்றி சலிப்பையும் கொண்டு வருகின்றது.

அவளது ஒரு தோழி மட்டுமே கொஞ்சம் இரினாவைப் புரிந்துகொள்கின்றாள். எல்லோரும் தங்கள் செக் நாட்டுக்கலாசாரத்தைக் காட்ட பியர்களை ஓடர் செய்து குடிக்கும்போது, இரினா பிரான்சிலிருந்து கொண்டு வந்த வைனின் அருமையை இந்தத்தோழியே கண்டுகொள்கின்றாள். நமது செக் மக்கள் கடந்து இருபது ஆண்டுகள் செக்கில் நடந்தத கொடுமையையே மறந்ததுமாதிரி புதிய வாழ்வைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, நீ உனது புலம்பெயர்ந்த 20 வருடகால வாழ்க்கையை அறிவார்கள் என நினைக்கின்றாயா என அவள் கேட்கின்றாள்.

ரினாவின் தோழிகள் மட்டுமில்லை அவளின் காதலனான குஸ்தாவாவும் அவளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போகின்றான். அந்த விலகல் நடக்கும் கட்டத்தில் இரினா அவளது இளமைக்கால காதலனான யோசப்பைக் காண்கின்றாள். அவளுக்கு அவனை ஞாபகம் இருப்பதுபோல, அவனுக்கு இவள் பற்றிய எந்த நினைவுகளுமில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் சேர்ந்து கதைத்து, மது அருந்திக் கொண்டாடியபோது, அவளுக்கென அவன் உணவகத்தில் களவாடிக்கொண்டு வந்து கொடுத்த ஆஸ்ட்ரேயை இரினா இன்னமும் கவனமாக வைத்திருக்கின்றாள். ஏன் அதை பிரான்சிற்குக் கூட புலம்பெயர்ந்து போனபோது கொண்டு சென்றிருக்கின்றாள்.

இருபது ஆண்டுகளில் யோசப்பிற்கும் நிறைய நடந்தேறிவிட்டது. வைத்தியர்கள் நிறைய இருக்கும் குடும்பத்தில் வந்த அவன், மிருக வைத்தியராக பின்னாட்களில் மாறியிருக்கின்றான். இரினாவைப் போல அவனும் ரஷ்யா ஆக்கிரமிப்பால் டென்மார்க்கில் குடிபெயர்ந்திருக்கின்றான். அவன் அவ்வாறு புலம்பெயர்ந்ததால் அவனது குடும்பம் ரஷ்யாப் படைகளால் துன்புறுத்தப்பட்டுமிருக்கின்றார்கள். டென்மார்க்கில் போய் அங்கே டென்மார்க் பெண்ணை மணந்துவிட்டு, இப்போதுதான் 20 ஆண்டுகளின் பின் செக்கிற்குள் கால் வைக்கின்றான்.

இறுதியில் இரினாவுக்கும், யோசப்பக்கும் செக் தமது பழைய செக் இல்லை என்கின்ற சலிப்பு வருகின்றது. இந்த நாட்டில் இனி ஒருபோதும் இருக்க முடியாது என முடிவு செய்கின்றனர். இரினாவின் காதலனான குஸ்தாவ்வோ அவளிடமிருந்து விலகிச் செல்வதோடு அல்லாது, அவளுக்கு அவ்வளவு விருப்பமில்லாத அவளின் குடும்பத்தோடும் நெருக்கமாகின்றான். இது இன்னும் பெரிய விலகலை இரினாவிற்குக் கொடுக்கின்றது.

தாய் நிலம் மீளும் இருவரின் அனுபவங்களும் கசப்பாக இருக்கின்றன. யோசெப்பின் தன் மனைவியை நோயிற்குக் காவு கொடுத்துவிட்டான். ஆனால் நினைவுகளை அழிக்காது அவள் எப்படி உயிரோடு இருந்திருந்தால் ஒரு வாழ்வை அவன் அவளோடு சேர்ந்து வாழ்ந்திருப்பானோ அவ்வாறு ஒரு வாழ்வை தன் வீட்டினுள் வடிவமைத்து தானும் தன்பாடுமாய் தனித்து வாழ்ந்து வருகின்றவன்.

குஸ்தாவின் மீதான விலகல் இரினாவிற்கு யோசெப்பின் மீது ஈர்ப்பைக் கொடுக்கின்றது. யோசெப் ஒருகாலத்தில் அவனின் காதலனாக மாற இருந்தவன் என்பதால் நேசம் இன்னும் அடர்த்தியாக இரினாவுக்குள் இருக்கிறது. அவனுக்குத் தன் உடலைக் கொடுத்த இரவின் பின்தான் இரினா அறிந்துகொள்கின்றாள், யோசெப்பிற்கு தன்னைப் பற்றி எந்த நினைவும் இல்லை என்பது. அது அவளுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கின்றது.

மீளத் தாயகம் விரும்பும் கனவு மட்டுமில்லை, மீளப் புதிய காதலைக் கண்டடையும் கனவும் இரினாவிற்குக் கலைந்துபோகின்றது. புலம்பெயர்ந்த எல்லோர்க்கும் தாய் நிலம் மீளும் பெருங்கனவு இருந்துகொண்டே இருக்கின்றது. ஆனால் உண்மையிலே அந்தக் கனவு அழகான கனவுதானா என்பதையே மிலன் குந்தேரா 'அறியாமை'யில் பல்வேறு விதமான இழைகளைப் பிடித்துப் பிடித்துக் கேள்விகளால் முன்வைக்கின்றார்.

கடந்தகால நினைவுகளை இல்லாமற் செய்வது கடினமானதுதான், ஆனால் அதைவிட நிகழ்காலக் கனவுகள் இன்னும் பாழ் என்கின்றபோது எந்த மனிதரால்தான் வாழ்வினை எதிர்கொள்ள முடியும்?
--------------------------------------------------------

('அறியாமை'யை ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன்னர் வாசித்திருந்தேன். குந்தேராவின் நாவல்களை மீண்டும் வாசிக்கும் விருப்பத்தின் நிமித்தம் அண்மையில் அவரை வாசிக்கத் தொடங்குகையில், இது நம்மைப் போன்ற புலம்பெயர்ந்தவர்க்கு மிக நெருக்கமான ஒரு படைப்பு என்பதாலேயே இந்தக் குறிப்பு. ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்னர் மணி வேலுப்பிள்ளை 'மாயமீட்சி' என்ற பெயரில் இதை அற்புதமாகத் தமிழாக்கம் செய்து காலம் வெளியீடாக வந்திருக்கின்றது)

கும்பளாங்கி இரவுகள் (Kumbalangi Nights)

Saturday, March 23, 2019


'கும்பளாங்கி இரவுகளை'  ஃபகத் பாசில் தயாரித்து, நடித்துமிருக்கின்றார். ஆனால் அவர் இதில் ஒரு முக்கிய பாத்திரமல்ல.  நான்கு சகோதரர்கள்,  பெற்றோர் இல்லாத ஒரு சபிக்கப்பட்ட  கட்டிமுடிக்கப்படாத வீடு - இவற்றைப் பின்னணியாகக் கொண்டு ஓர் இயல்பான கதையை அலுப்பேயில்லாது நகர்த்திச் சென்றிருக்கின்றனர். மகேஷிண்டே பிரதிக்காரம் பார்க்கும்போது இடுக்கியும், அங்கமலி டயரிஸ் பார்க்கும்போது அங்கமலியும், சார்ளி பார்க்கும்போது மூணாறும் ஏதோ ஒருவகையில் நம் நினைவுகளில் சேகரமாவது போல, இதில் கும்பளாங்கி. அண்மையில் தொடுபுழாவில் நின்றபோது சந்தித்த நண்பரோடு சூழலியல் பற்றிப் பேச்சு வந்தபோது, கும்பளாங்கியில் இருக்கும் eco friendly tourism பற்றிப் பேச்சு வந்து, அங்கே போய் என்னைப் பார்க்கவும் அவர் கூறியிருந்தது, இந்தப் படத்தில் அதைத் தொட்டுச் சென்றபோது நினைவுக்கு வந்தது.

வெவ்வேறு திசைகளில் வாழ்க்கையை அதன்போக்கில் எந்த நிரந்தரமான வேலையும் இல்லாது வாழும் மூன்று சகோதரர்களுக்கு ஓர் இளைய சகோதரன் இருக்கின்றான். அவன் தான் இவர்களை இணைக்கும் ஒரு புள்ளியாக இருக்கின்றான். எனினும் மூத்த சகோதர்கள் எப்போதும் முரண்பட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள்.  கதையின் தொடர்ச்சியில் அவர்களின் வெவ்வேறு தந்தையர்/தாய்கள் பற்றிய விபரங்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிலைக்கு வந்ததற்கு தான்தான் காரணெமனக் குற்றஞ்சாட்டப்படுகின்ற ஒருவன் மனோவியல் வைத்தியர் முன் உடைந்துபோகின்ற கணம் அடர்த்தி கூடியது.

இவர் நெருக்கடியின் நிமித்தம் தற்கொலை முயற்சி செய்ய, இவரைத் தடுக்க முயல்கின்றவருக்கு அந்நிகழ்வு மரணத்தைக் கொண்டுவருகின்றது, அப்படிக் காலமாகிப்போன தமிழர் ஒருவரின் மனைவியை எப்படி இயல்பாக தம் வாழ்வில் ஒருவராக இந்தச் சகோதர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதெல்லாம் வார்த்தைகள் விரயமில்லாது காட்சிகளாக இத்திரைப்படத்தில் கொண்டுவந்திருக்கின்றார்கள்.

பிக்கப்பட்ட, ஒரு கோடியில் விலக்கப்பட்டிருக்கும் வீட்டுக்கு இந்தச் சகோதரர்களின் வாழ்வில் நுழையும் பெண்கள் புதிய அழகைக் கொண்டுவருகின்றார்கள். அதிலும் முக்கியமாக வெளிநாட்டிலிருந்து பயணியாக வரும் கறுப்புப்பெண்ணோடு இந்தச் சகோதரர்கள் ஒருவருக்கு வரும் காதல் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. மலையாளப் படங்களில் முஸ்லிம்களை எப்படி இயல்பாகச் சித்தரிப்பார்களோ அப்படி இப்போது கறுப்பினத்தவர்களையும் மிகநேர்மையாகக் கொண்டு வருகின்றார்கள் (இன்னொரு உதாரணம் 'சூடானி நைஜீரியாவிலிருந்து').

மூலைக்கொன்றாய்ப் பிரிந்திருக்கும் சகோதரர்களில் ஒருவரின் காதல், இவர்களை இணைக்கின்றது. ஃபகத் பாசிலில் பாத்திரம் இந்த நான்கு சகோதரர்களுக்கு அப்பாலான ஒரு பாத்திரம். 24 நோர்த் காதத்தில் அவ்வளவு சுத்தம் பார்க்கின்ற பாத்திரம் அவருக்கு என்றால், இதில் வேறுவகையான பாத்திரம். அதிக காட்சிகளில் வராதபோதும், கொஞ்சக்காட்சிகள் என்றாலும் ஒருவகையான creepy மனோநிலையை பார்ப்பவரிடையே ஃபகத் உருவாக்கிவிடுகின்றார்.

இந்தப் படத்தில்  'ஆண்மை' என்பது தொடர்ந்து கேள்விக்குட்படுத்துகின்றதை நாம் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம். ஃபகத் பாசில் அறிமுகமாகின்ற காட்சியே நான் 'ஒரு முழுமையான ஆண்'  (complete man) என்கின்றார்.  இந்தச் சகோதரர்களிடம் நீங்கள் என்னைப் போன்ற முழுமையான ஆண் இல்லை என்று நினைவுபடுத்தியபடியும் இருக்க்கின்றார். அவரின் மைத்துனி இந்தச் சகோதரர்களில் ஒருவரிடம் காதல் கொள்ளும்போது என்னைப் போல முழுமையான ஆண் அவனில்லை என்றே ஃபகத் நிராகரிக்கின்றார். ஒருவகையில் இந்த masculinity என்பது நாம் நினைக்கும் ஒன்றல்லவென இந்தத் திரைப்படம் சொல்ல வருவதைக் கண்டுகொள்ளலாம்.

இல்லாதுவிடின் சமூகம் சொல்கின்ற masculinity  இல்லாத இந்த சகோதர்களை எப்படி பெண்கள் தேடிவந்து காதலிக்கவும், தமது உடல்களைப் பகிர்ந்துகொள்ளவும் தயாராக இருப்பார்கள். இந்தப் பெண்கள் 'ஆண்மை' என்ற கட்டமைக்கின்ற ஒன்றைப் பார்க்கவில்லை, அவர்கள் தமது ஆண்களிடம் வேறுவகையான  அழகைக் கண்டுதான் காதல் கொள்கிறார்கள். புறச்சமூகம் இந்தப் பெண்களுக்கு எவ்வித அழுத்தங்களைக் கொடுத்தபோதும், அதை அவர்களே இந்த ஆண்களின் துணையை நாடிச்செல்லாது எதிர்கொள்கின்றார்கள். ஒருவகையில் இந்தப் படம் 'ஆண்மை'யைக் கேள்விக்குட்படுத்துவது போல, பெண்களையும் ஆண்கள் சார்ந்து தங்கியிருக்காது காட்டுவதால் இன்னும் நெருக்கமாவது போலத் தோன்றியது.

சகோதரர்கள் இருக்கும் நம்மில் பலர் ஒன்றை உணர்ந்திருப்போம். அதிகமாய் எதையும் நமக்கிடையில் பகிராது, உணர்ச்சிகளைக் காட்டாது இருந்தாலும், வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் அவர்கள் நமக்காக வந்து நிற்பார்கள். அப்போது அதற்கு முதல் இருந்த எல்லா இடைவெளிகளும், பிறழ்வுகளும் நமக்கிடையில் இல்லாமல் போய்விடும். இத்திரைப்படத்திலும் காதல்களினூடாக சிக்கல் வரும்போது மற்றச் சகோதரர்கள் ஒவ்வொரு சகோதரர்களுக்காய் வந்துவிடுகின்றார்கள். இந்தப் படம் முடியும்போது கூட சகோதரர்களுக்குள் ஏற்கனவே இருந்த சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாய் உபதேசம் செய்யப்படவில்லை. இந்தத் தருணத்தில் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, சபிக்கப்பட்ட வீட்டை தமது காதலிகளினூடு பிரகாசமாக ஆக்கிக்கொள்கின்றார்கள் என்றவிதமாக நுட்பமாக முடிந்திருக்கும்.

இறுதியில் ஃபகத் பாசிலின் பாத்திரத்திற்கு அவ்வளவு அதிர்ச்சியைத் தரக்கூடியதாக அல்லாது கொஞ்சம் அதிர்ச்சி குறைந்த முடிவைக் கொடுத்திருந்திருக்கலாம் என்பதைத் தவிர இந்தப் படத்தில் பலவீனங்களாய் எதுவும் துருத்திக்கொண்டு நிற்கவில்லை. படத்தில் மற்றக் காட்சிகள் அவ்வளவு இயல்பாய் இருக்கும்போது ஃபகத்தின் பாத்திரத்திற்கும் கொஞ்சம் கருணையைக் காட்டியிருக்கலாம், அண்மைக்கால ஃபகத்தின், நிவின் பாலின், துல்காரின், வினீத் சிறினீவாசனின் திரைப்படங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தபோது, அங்கமாலி டயரிஸிற்குப் பிறகு கும்பளாங்கி இரவுகளின் வரவு நம்பிக்கையளிக்கின்றது.

................................

(Feb 16, 2019)

ஹெமிங்வேயின் படகு

Thursday, March 21, 2019Hemingway's Boat by Paul Hendrickson


ஹெமிங்வேயின் படைப்புக்களைப் போல அவரது 38 அடிகள் நீண்ட படகும் பிரபல்யமானது. அவரது இரண்டாவது மனைவியாகப் போகின்ற Paulineன் செல்லப்பெயரான Pilarயே இந்தப் படகிற்குச் சூட்டப்படுகின்றது. பிறகு 'ஆயுதங்களுக்கான விடைகொடுத்தல்' (A Farewell to Arms) நாவலின் ஒரு பாத்திரமாகவும் இந்தப் பெயர் வருகின்றது. 'ஹெமிங்வேயின் படகு' என்கின்ற இந்த நூலில் ஹெமிங்வே படகை வாங்கிய 1934ல் இருந்து அவர் தற்கொலை செய்த 1961 வரை இந்தப் படகிலும், படகைச் சுற்றியும் நடந்த சம்பவங்கள் விபரிக்கப்படுகின்றன.

Paulineயோடான திருமணத்தில் இருக்கும்போதே ஹெமிங்வேயிற்கு, பத்திரிகையாளரான Martha Gellhornயோடான உறவு வருகின்றது. பின்னர் மார்த்தாவை 1940ல் திருமணம் செய்கின்ற ஹெமிங்வே, ஹாவானாவில் வீடு வாங்கி அங்கேயே மார்த்தாவுடன் வாழத்தொடங்குகின்றார். படகும் அவர்களுடன் கூடவே அமெரிக்காவிலிருந்து கியூபாவிற்கு வருகின்றது. இதனோடு Pillar ஹவானாக் கடற்கரையிலே தன் 'வாழ்வை'த் தொடங்கி இப்போது ஹெமிங்வே நினைவாலயம் ஆக்கப்பட்ட ஹவானா வீட்டில் தேடிவருபவர்களுக்கு காட்சியளித்துக் கொண்டுமிருக்கின்றது.

இந்தப் படகிலிருந்தும், ஹாவானாவில் இருந்துமே ஹெமிங்வே அவரது முக்கிய நூல்களை எழுதியிருக்கின்றார். மார்த்தாவோடு இருந்த காலத்தில் 'யாருக்காக மணி அடித்தது?' (For Whom the Bell Tolls) எழுதியதைப் போல, அவரது நான்காவது மனைவியான மேரியுடன் இருந்தபோது அவரது பிரபல்யம் வாய்ந்த 'கிழவனும் கடலையும்' (The Old Man and the Sea) இங்கேயே எழுதியிருக்கின்றார். அத்தோடு விமர்சகர்களால் மிக மோசமென விமர்சிக்கப்பட்ட 'Across the Rrivers and into the Trees'ம் இதே காலகட்டத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றது.

இந்த நூல் 'ஹெமிங்வேயின் படகு' பற்றியது என்றாலும் அந்தக் காலப்பகுதியில் ஹெமிங்வே எழுதிய‌ நாவல்கள்,  பிறருக்கு அவர் எழுதிய கடிதங்கள் (ஹெமிங்வே அவரது வாழ்க்கையில் 6000-7000 கடிதங்கள் எழுதினார்)  என்பவை விரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. அதேபோல ஹெமிங்வேயிற்குள் இருக்கும் மூர்க்கம், அவ்வப்போது எழுதமுடியாது தோற்றுப்போய்க்கொண்டிருக்கின்ற எழுத்தாளனின் ஆற்றாமை,  அவரது மனைவிமார்/காதலிகள் போன்றோருடன் அவர் நடந்துகொண்டவிதம் என்பவை அற்புதமாக, பல்வேறு சான்றாதாரங்களினூடு விபரிக்கப்படுகின்றன.


ஹெமிங்வேயின் பெண்கள் எனப் பார்த்தால், ஹெமிங்வே தனது தாயை ஒருபோதும் மன்னிக்கத் தயாரில்லை என்பது தெரிகின்றது. தனது தகப்பனின் தற்கொலைக்குத் தனது தாயே காரணமென நம்பியதோடு, தாயிற்கு எழுதும் கடிதங்களிலும் தொடர்ந்து அதனைக் குறிப்பிட்டுக்கொண்டேயிருக்கின்றார். அவரது தாய் மீளவும் தன் மகனோடு இணைய விரும்பும் ஒவ்வொரு முயற்சியையும் உதறித்தள்ளியபடியே ஹெமிங்வே இருந்திருக்கின்றார். எனினும் அவரது முதல் நாவல் வருகின்றபோது தாயின் பெயரை ராயல்டியில் சேர்த்து, அவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டுமிருந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீள இணையும் வாய்ப்பு இருவருக்கும் இயலாது போயினும், அவரது தாய் இறந்துபோனபோது ஹெமிங்வே தாயின் இறப்புக்குப் போக மறுத்திருக்கின்றார்.

ஹெமிங்கே முதல் காதலியைச் சந்திப்பது, இத்தாலியில் முதலாம் உலக மகாயுத்தத்தின்போது அவர் காயப்படுகின்றபோதாகும். தன்னைக் காப்பாற்றும் தாதியையே விரும்பி, திருமணம் செய்ய விரும்புகின்ற ஹெமிங்வேயிற்கு அந்தப் பெண்ணுக்கு ஒரு இத்தாலியரோடு உறவு வருவதால் அதுவும் கைகூடாது போகின்றது. அதன் பிறகு அவர்  நான்கு பேரைத் திருமணம் செய்திருக்கின்றார். ஒரு உறவில் இருக்கும்போது இன்னொரு உறவு தேடி ஓடியிருக்கின்றார். மனைவியர் இருக்கும்போது இளம் பெண்களோடு காதல் வயப்பட்டதோடல்லாது, பாலியல் தொழிலாளியையும் விருந்துகளுக்கு அழைத்து வந்திருக்கின்றார்.

அவர் சந்தித்த பெண்கள் வெவ்வேறுவிதங்களில் அவரின் நாவல்களில் வந்திருக்கின்றனர். கதைகளில் வரும் இந்தப் பாத்திரந்தானா அந்தப் பெண் என்று வாசிப்பவர்கள் நினைப்பதற்கு இடந்தராது அவர்களிடம் இல்லாத விடயங்களையும் இந்தப் பாத்திரங்களுக்கு இணைத்து வேறொரு வடிவத்திலும் கதையைக் கொண்டு செல்வதிலும் ஹெமிங்வே நுட்பமானவராக இருந்திருக்கின்றார்.

ஹெமிங்வேயின் ஐம்பதுகளில் அவருக்கு 21 வயதான அடீரியானாவுடன் 'காதல்' வருகின்றது. ஹெமிங்வே அவரது மனைவி மேரியுடன், வெனிஸில் சில மாதங்களுக்குத் தங்கி நிற்கும்போதே அடீரியானாவை ஹெமிங்வே சந்திக்கின்றார். பிறகு ஜரோப்பாவில் இன்னொரு பகுதியிலும் அடீரினானாவைச் சந்தித்து உடனே தன் காதலைச் சொல்லிவிடுகின்றார். திருமணம் செய்யக் கேட்கும்போது அடீரீயானா அவருக்கு ஏற்கனவே மனைவி இருப்பதை ஞாபகப்படுத்துகின்றார். என்கின்றபோதும் ஹெமிங்வேயால் அந்தக் காதலைக் கைவிடமுடியாது, கியூபாவிற்கு வந்தபிறகும் நிறையக் காதல் கடிதங்கள் அடீரீயானாவிற்கு எழுதுகின்றார்.

அடீரியானா தனது தாயாருடன் ஹவானாவிற்கு வருகின்றார். ஹெமிங்வேயுடன் மேரியுடனும் சில மாதங்கள் தங்கி நிற்கும் அடீரியானாவை அவரது தோற்றுப்போன நாவலான 'Across the rivers and into the trees'ல் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாகியும் விடுகின்றார். இதையெல்லாம் சகித்துக்கொண்ட அவரது மனைவி மேரி, ஹெமிங்வேயின் இறப்பின் பின் எழுதுகின்ற நூலான 'How it was' மிக விரிவாக இந்தத் தங்கலில் நடந்த சம்பவங்களை விபரித்து ஹெமிங்வேயின் இன்னொரு பக்கத்தை நமக்குக் காட்டியுமிருப்பார்.


'Across the rivers and into the trees' தோல்வியும் விமர்சகர்களின் எள்ளலுமே ஹெமிங்வே அவரது முக்கிய நாவலான 'கிழவனும் கடலும்' எழுத உத்வேகத்தைக் கொடுக்கின்றது.
இந்தக் கதை கடலில் உண்மையில் நடைபெற்று ஹெமிங்வேயிற்கு அவரது நண்பரொருவரால் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த நாவலில் வரும் கிழவனின் பாத்திரத்தை ஹெமிங்வே அவரது படகிற்கு கப்டனாக இறுதிவரை இருந்த ஸ்பானியரான கிறிகோரியோ புயண்டஸின் சாயலில் எழுதியிருப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. ஹெமிங்வேயின் மனைவிகளை விட இந்தக் கப்டனே ஹெமிங்வேயுடன் நீண்டகாலமாக கூடவே இருந்தார் என்றொரு நகைச்சுவையும் உண்டு.

ஹெமிங்வேயிற்குள் நெடுங்காலமாக இருந்த மனவழுத்ததை ஆற்றுப்படுத்தும் ஒரு விடயமாக இந்தப் படகும், மீன் பிடித்தலும் அமைந்திருக்கின்றது. கியூபாப் புரட்சியின் பின்னும் ஹெமிங்வே கியூபாவிலேயே இருந்திருக்கின்றார். எனினும் மன அழுத்தப் பிரச்சினை உக்கிரமாக 1960ல் அமெரிக்காவிற்குப் போய் ஒரு வருடத்திற்குள்ளேயே தற்கொலையைச் செய்கின்றார்.

தனிப்பட்ட நண்பர்களுக்கு உதவி செய்வதில் தயங்காத ஹெமிங்வேதான் தனது விமர்சகர்கள் மீது நாம் நினைத்தும் பார்க்காத மொழியில் பதில் கடிதங்களும் எழுதியிருக்கின்றார். அவரது முதல் நாவலைப் பிரசுரிக்க, பதிப்பாளர் தேடிக்கொடுக்கின்ற Scott Fitzgeraldடன் பிறகு கோபிக்கவும் செய்கின்றார். ஸ்காட்டின் இறப்பின்பின் அவரை விளங்கிக்கொள்வதாக ஹெமிங்வே குறிப்பிட்டாலும் அதைத் தெரிந்துகொள்ளாமலே ஸ்காட் இறந்துபோகின்றார்.

அதேபோன்று அவரோடு நீண்டகாலமாய் வாழ்ந்து அவரது பல்வேறு வன்முறைகளைத் தாங்கிக்கொண்ட மேரியின் முன் தான், அவரது காதலியான 21 வயதான அன்டீரியானாவை மட்டுமின்றி, பாரில் சந்திக்கும் ஒரு பாலியல் தொழிலாளியையும் கூட்டிக்கொண்டும் வருகின்றார். இவற்றை உளவியல் பிரச்சினைகளுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதர் என்பதைவிட, ஆண் என்கின்ற அடையாளத்திற்குள் வைத்து ஹெமிங்வேயைப் பார்ப்பது வேறொரு திசையில் நமக்கு பல விடயங்களைப் புலப்படுத்தவும் கூடும்.

ஹெமிங்வேயின் படைப்புக்களைப் போல, அவரது தனி வாழ்க்கையும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாததும், பல்வேறு உள்ளடுக்குகள் கொண்டதுமாகும். அவர் இரசிக்கத்தக்க மனிதர் என்றாலும் மிகுந்த சிக்கலான மனிதர் என்கின்ற விம்பமும் ஹெமிங்வேயைப் பற்றி நினைக்கும்போது கூடவே வந்துவிடுகின்றது. அதுவே ஹெமிங்வே கிட்டத்தட்ட அவரது வாழ்க்கைக் காலத்தைப் போல, 60 ஆண்டுகள் அவர் இறந்து கடந்தபின்னும், அவரைப் பற்றித் தேடித்தேடி நம்மை வாசிக்கத் தூண்டுகின்றது.

---------------------------------------

நன்றி: 'அம்ருதா' ‍பங்குனி, 2019 \