நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சுகுமாரனின் 'பெருவலி'

Tuesday, October 12, 2021

சில படைப்புக்களை வாசிக்க வழமையை விட நிறையக் காலம் எடுக்கும். இன்னுஞ் சில தம்மை வாசிப்பதற்கான நேரம் இதுவல்லவென உதாசீனம் செய்யும். இவ்வாறு அருந்ததி ரோயின் The God of small thingsஐ பலமுறை வாசிக்கத் தொடங்கியும் முழுமையாக வாசித்து முடிக்காதிருக்கின்றேன். இன்னும் இதை வாசித்து முடிப்பதற்கான காலம் வரவில்லையென என்னை ஆறுதற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு பிரான்ஸிஸ் கிருபாவின் 'கன்னி'க்கும் தொடக்கத்தில் நிகழ்ந்திருக்கின்றது.

அதேசமயம் பதின்மத்தில் இருக்கும் அக்காவின் மகளுடன் தொலைபேசிக்கொண்டிருந்தபோது, அவர் God of small thingsஐ வாசித்துவிட்டாரென்றபோது வியப்பாக இருந்தது. ஆனால் நான் அருந்ததி ரோயின் அடுத்த நாவலான The Ministry of Utmost Happiness வந்தவுடன் ஒரே இழுவையில் வாசித்து முடித்துவிட்டேன். எனக்கு பிடித்த நாவல்களில் அதுவுமொன்று.
மைக்கல் ஒண்டாச்சியின் எந்த நாவலனெறாலும் உடனேயே வாசித்து முடித்துவிடும் எனக்கு, இறுதியாக வந்த அவரின் நாவலான Warlight இற்குள் எந்தப் பக்கத்திற்குள்ளால் நுழைந்து எப்படி வெளியேறுவதென்பது இன்னும் தீர்க்கமுடியா மர்மமாய் இருக்கிறது.
இப்போது அதே ஒரு திகைப்பு, அனுக் அருட்பிரகாசத்தின் இரண்டாவது நாவலான A Passage Northஇற்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. தெரிந்த நிலவியல், ஒரளவு பரிட்சயமான மாந்தர்கள் என்றாலும் ஒரு கிழமைக்கு மேலாய் இப்போதுதான் நூறு பக்கங்களைத் தாண்டி வந்திருக்கின்றேன்.
அதேவேளை அவரின் முதல் நாவலான The Story of a Brief Marriageஐ அவ்வளவு இலயித்து வாசித்திருக்கின்றேன். அது அவ்வளவு பிடித்தது என்பதால்தான் எவரையும் நேர்காணல் செய்ய விரும்பாத என்னை ஒரு சிறு நேர்காணலை அவருடன் செய்ய வைத்திருந்திருக்கின்றது. நாவல் பற்றிய என் வாசிப்பும், அவரின் நேர்காணலுமென அன்று 'அம்ருதா'வில் அவை வெளிவந்துமிருந்தன.
அனுக்கின் இரண்டாவது நாவலில் என் வாசிப்பு மெதுநடையில் போகும்போதுதான் இந்தப் பாதை சரிவராதென ஹெமிங்வேயின் 'A Moveable Feast' இற்குள் நுழைந்திருந்தேன். இது ஹெமிங்வே அவரின் முப்பதுகளில் எழுதிப் பிரசுரமாகாத குறிப்புகள். ஹெமிங்வேயின் மறைவின் பின் இது அவரின் மனைவியால் பிரசுரிக்கப்பட்டது. ஒரு எழுத்தாளன் பாரிஸ் கஃபேயில் இருந்து தனது கதைகளை எழுதுவதும், அங்கே வரும் பெண்ணை இரசிப்பதும், அந்தப் பெண்ணை எப்படித் தன் கதைக்குள் ஒரு பாத்திரமாகக் கொண்டுவருவதுமென கற்பனை செய்வதும், ஹெமிங்வேக்கு பிரியமான மதுவகைகளுமென அந்த நூல் விரிந்துகொண்டிருக்கின்றது.

ப்படி அனுக்கையும், ஹெமிங்வேயையும் வாசிக்கும்போதுதான் தற்செயலாக சுகுமாரனின் 'பெருவலி'க்குள் வந்து விழுந்தேன். வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டிருந்தாலும் மிகச் சுவாரசியமான நாவல். வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு இளவரசியின் நாட்குறிப்புகளினூடாக இந்த நாவல் எழுகின்றது. அதற்கு சுகுமாரனுக்கு இருக்கும் கவித்துவமொழி வளஞ்சேர்க்க, உடனேயே வாசித்து முடித்துவிடவேண்டுமென்ற உந்துதலைத் தந்திருந்தது. தமிழ்ச்சூழலில் நான் கதைக்கும்போது, பலரைக் கவராத அவரின் முதலாவது நாவலான 'வெலிங்டன்' எனக்குப் பிடித்த நாவல்களிலொன்று.
அவ்வளவு எளிதில் என் வாசிப்பின் பொருட்டு நிகழ்வது இல்லையெனினும் எனக்கு சுகுமாரனின் அடுத்த நாவலான 'பெருவலி'யும் பிடித்திருக்கிறது. அதேபோல இந்த நாவலை வாசிக்கும்போது இந்த நாவலுக்கு அவர் செய்திருக்ககூடிய ஆய்வுகளும், தேடல்களும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. நமக்குப் பரிட்சயமில்லாத விடயங்களையும், நமக்கு புறத்தேயுள்ள கலாசாரங்களையும் எப்படி சுவாரசியமான புனைவாக்கலாம் என்பதற்கு 'பெருவலி' நல்லதொரு உதாரணம். அதைவிட சுகுமாரன், -நான் அடிக்கடி வலியுறுத்தும்/விரும்பும்- 200 பக்கங்களுக்குள்ளேயே இதை கச்சிதமாக எழுதி முடித்திருக்கின்றார் என்பது இன்னொரு வியப்பு.
இந்தக் குறிப்பு ஒரு நல்ல நாவலாக எனக்குத் தோன்றும் 'பெருவலி'யை வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக் கூடாதென்பதற்காய் எழுதப்படுகிறது.

****************

(Aug 09, 2021)

A Kind of Magic

Thursday, October 07, 2021

1.

உங்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது ஓர் அற்புதம் நடந்தது. இயற்கையின் மீது வர்ணத்தை யாரோ விசிறியதுபோல, சட்டென்று நிறையப் பறவைகள் செம்மஞ்சளும், நீலமும், சாம்பலாகவும் தரையில் வந்திறங்கின. இவர்களோடு அறிமுகஞ் செய்யவேண்டும் என்ற ஆவலில் முயலார் அதேகணத்தில் பற்றைக்குள்ளிலிருந்து வந்துசேர்ந்தார். யாரோ ஒருவர் மாந்தீரிகக்கோலால் தட்டிவிட, இவையெல்லாம் நிகழ்வதுபோல நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நானும், நீங்களும் சேர்ந்து ஒரு திரைப்படத்தைப் பார்ப்போமா என்று நீங்கள் கேட்டபோதுதான், இந்த அற்புதம் இடைவெட்டிப் போயிருந்தது. தொலைவில் இருந்தால் என்ன, நமக்கான திரையில் காலத்தின் நேர்கோட்டில் வெவ்வேறு வெளிகளில் இருந்தபடி ஒரு திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கியிருந்தோம்.
இது நாங்கள் பார்த்த திரைப்படத்தைப் பற்றியது அல்ல.

இது இன்னொருவனைப் பற்றியது. அவன் வீட்டில் தனிமைப்பட்டவனாக இருக்கின்றான். அந்தப் பொழுதுகளில் தனக்கான ஒரு இசைக்குழுவைக் கண்டுபிடிக்கின்றான். அதற்குப் பிறகு நடப்பவை எல்லாம் வரலாறு. அவனது இசைக்குழு பிரபல்யமாக அடைகின்றபோது, அவனுக்கு ஒரு காதலியும் வாய்க்கின்றாள். ஆனால் வருடங்கள் கழியக் கழிய அவன் தன்னையொரு இருபாலினராகக் கண்டுகொள்கின்றான். அவனை அவளால் புரிந்துகொள்ளமுடிந்தாலும், அவனை விலக்கி ஒரு வாழ்வை அவள் தேர்தெடுத்துக் கொள்கின்றாள். ஆனால் அவனது காதல் தொடக்கத்தில் அவள் மீது இருந்ததுபோலவே இறுதிவரை இருப்பது அவ்வளவு அழகு.
அந்த இசைக்குழு ஐரோப்பா, அமெரிக்கா எங்கும் புகழ்பெறுகிறது. புகழின் உச்சிக்குப் போகும் எந்த நிகழ்வோ/தனிமனிதரோ பிறகு ஒரு துன்பியல் நாடகத்தைப் பெரும்பாலும் சந்திக்கவேண்டித்தான் இருக்கிறது. இவனும் அதைச் சந்திக்கின்றான். நான் அதைப் பற்றி அவ்வளவு பேசப் போவதில்லை.
ஆனால் இந்தக் கலையையும், கலை தேர்ந்தெடுக்கின்ற மனிதர்களையும் பற்றியே யோசிக்கின்றேன். அது தன்னியல்பிலே, எவருமே அறியாமலே அவரவர்க்குள் நிகழ்வதென்றே நினைக்கின்றேன். 'நாம் கலைக்குத் தாரை வார்த்தவர்கள்' என்பவர்கள் குறித்தோ, கலைஞர்க்கு இயல்பாய் இருக்கக்கூடிய பிறழ்வை அது கலைக்கான பாதை என்று தங்களையும் பிறரையும் சிதைக்க ஓர் கருவியாகப் பாவிப்பவர்களையும் புன்னகையால் விலத்தி வரவிரும்புகின்றேன்.
தியானம் நிகழ்வது என்பது தியானஞ் செய்கின்றோம் என்று யோசிக்காமல், தன்னியல்பில் நிகழ்வதைப் போலத்தான், கலைகளும் நிகழ்கின்றது என்று நினைக்கின்றேன். அது எனக்கு எழுதிக்கொண்டிருக்கும்போது சிலவேளைகளில் நடப்பது போல உங்களுக்கு கலைப்படைப்புக்களில் மூழ்கும்போதோ, இன்னொருவருக்குப் பாடிக் கொண்டிருக்கும்போதோ நிகழலாம்.
அவ்வாறு நிகழும்போது இவ்வாறு நிகழ்கின்றதே என்று சந்தோசப்படலாமே தவிர, அவ்வாறு நிகழ்வதற்கு நாம் ஒருபோதும் காத்திருக்கவே முடியாது. எந்தப் படைப்பையும் திரும்ப திரும்ப முயற்சிப்பதன் மூலம் செம்மையாக எப்படி செய்வது என்று கற்றுக்கொள்ளலாம். ஆனால் அசலான படைப்பு என்பது அது படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது மட்டும் தற்செயலாக நிகழ்வது.
அவை எப்போது நிகழ்கின்றன என்பது சிறந்த கலைஞர்க்குத் தெரியும். ஆகவேதான் அவ்வகையான படைப்புக்கள் பிற்காலங்களில் நிகழமுடியாமல் போகின்றபோது அவர்களில் பலர் மனப்பிறழ்வுக்குள்ளாகின்றார்கள், தற்கொலையை நாடுகின்றார்கள். அந்த ருசியை அறிந்தவர்கள் ஒருபோதும் நகல்களை கலையாக்க என்றுமே விரும்பமாட்டார்கள்.

2.

நீங்கள் நட்சத்திரங்களையும், அதற்கப்பால இருக்கும் விந்தைகளையும் பேசிக்கொண்டிருந்தீர்கள். அதுமட்டுமில்லாது இந்தப் பூமியில் இருக்கும் சிறு உயிரிவரை உங்களை அதிசயக்க வைத்துக்கொண்டிருக்கின்றது என்றும் விவரித்துச் சொல்லத் தொடங்கினீர்கள். இந்த உரையாடல் நானொரு ஸென் கதையைச் சொல்லத் தொடங்கியதில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும்.

ஒரு ஸென் துறவி வண்ணத்துப்பூச்சியைக் கனவில் கண்டுவிட்டு, வண்ணத்துப்பூச்சி தன்னை அது தன் கனவில் கண்டால் எப்படியிருக்கும் என்று யோசிப்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது. அதன் நீட்சி நாம் வாழும் இந்த வாழ்க்கை உண்மையானதா? அல்லது நாம் யாரோ ஒருவரின் கனவில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோமா என நம்மை யோசிக்கவைப்பதாய்ச் செல்லும்.
கடலுக்குள் இருக்கும் ஒரு உலகத்தைப் போல, கனவுகளும் உங்களுக்குப் பிடிக்கும் என்று சொன்னீர்கள். உங்களுக்கான ஒரு செயல்திட்டத்தின் ஆக்கமொன்றைச் செய்துவிட்டு, எனது சாயல் அதில் வந்துவிட்டது கவனீத்தீர்களா எனக் கேட்டீர்கள். அதை நீங்கள் அறியாமல் நிகழ்ந்துவிட்டதென்பது உங்களுக்கும் தெரியும், அதில் என் சாயல் வந்தது தற்செயல் என்பது எனக்கும் தெரியும்.

3.

அவன் இப்போது தன் இசைக்குழுவிலிருந்து, கூடா நட்பொன்றின் நிமித்தம் பிரிந்துவிட்டான். தனியே சென்று பாடுகின்றான். வழமையான இசைஞர்கள் அடிமையாவதுபோல மதுவுக்கும், போதைமருந்துக்கும் தன்னைத் தாரை வார்க்கவும் செய்கிறான். மேலும் அவனுக்கு இப்போது -அன்றைய- உயிர்கொல்லி நோயான எயிட்ஸும் வந்துவிட்டது. அதையும் தனது புறக்கணிக்கப்பட்ட காதலைப் போல ஏற்றுக்கொள்ளவே செய்கின்றான்.
பிரிந்த இசைக்குழு மீண்டும் ஒரு நற்காரியத்துக்காய் இணைகின்றார்கள். நண்பர்களிடம் தன் உயிர்க்கொல்லி நோயின் வீரியத்தைக் கூறி நான் வாழ்வது இன்னும் கொஞ்சக்காலந்தான் ஆனால் நீங்கள் வருந்தக் கூடாது என்றும் சொல்கின்றான். நான் பிறந்ததே perfomance செய்யத்தான். அதை ஒருபோதும் கைவிடமாடேன் என்று சொல்கின்றவன் தனது 45 வயதில் இறந்து போகின்றான்.
"Whatever happens, I'll leave it all to chance
Another heartache, another failed romance, on and on
Does anybody know what we are living for?
I guess I'm learning
I must be warmer now..."
என்று சொன்னவன், தனக்கான வாழ்வை வாழ்ந்துவிட்டுத்தான் போயிருக்கின்றான். அவன் சொன்னதுமாதிரி நாமிருக்கின்றோமோ இல்லையோ எப்போதும் The Show Must Go On இல்லையா?
அவனின் வாழ்க்கையை அறிந்துபோதும், அவனின் பாடல்களைக் கேட்டபோதும், நான் பல தடவைகள் அழுதிருக்கின்றேன் என்பதை உங்களால் நம்பமுடியுமா......? அவனின் எந்தப் புள்ளியில் என்னைப் பொருத்திப் பார்த்தேனோ தெரியாது. இது கூட நானறியாமல்தான் நிகழ்ந்திருக்கவேண்டும்.
அதையெல்லாம் இப்போது துடைத்தெறிந்துவிட்டு, அவன் பாடியதைப் போல Tonight I'm gonna have myself a real good time என்றுதான் சொல்ல விரும்புகின்றேன்.
ஏனென்றால் எனக்கு அருளப்பட்ட உயிர்ப்பின் பசுமையுடன் நானின்னும் இந்தப்பூமியில் இருக்கின்றேன். உங்களோடு கனவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றேன்.
*************************************
(தலைப்பிலிருந்து, பாடல்கள் வரிகள் வரை ,அனைத்திலும் இருப்பது Freddie Mercuryம் அவனது Queen இசைக்குழுவும்)
-May, 2021-

ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி

Wednesday, October 06, 2021


ஹெமிங்வே ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதேவேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது.  இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்திருக்கின்றார். ஒருவர் தனது வாழ்ந்த காலத்திலேயே அவர்  இறந்துவிட்டதான அஞ்சலிக்குறிப்புக்களை வாசிக்க முடியுமா? ஆனால் ஹெமிங்வேயுக்கு அவர் ஆபிரிக்காவில் விமான விபத்தில் இறந்துவிட்டாரென்று அஞ்சலிக் குறிப்புக்கள் எழுதப்பட்டிருக்கின்றது. ஹெமிங்வே என்றாலே சாகசப் பயணங்கள் செய்பவரென அவரின் எழுத்தினூடும், வாழ்க்கையின் மூலமாகவும் நிரூபித்தவர். அதேபோல பிற்காலத்தில் அவர் மனப்பிறழ்வின் அலைகளுக்குள் அகப்பட்ட  துரும்பைப் போல, பரிதாபமான ஒரு மனிதராகவும் மாறியவர். அதன் நீட்சியில் தனக்கான இறுதிமுடிவை இரண்டு தோட்டக்களினால் தன்னைத்தானே சுட்டு,  வாழ்வை முடித்தும் கொண்டவர்.


ஹெமிங்வே அவரின் பதின்மங்களில் முதலாம் உலகப்போரில் பங்கேற்கின்றார். போர்வீரராக யுத்தத்திற்குச் செல்ல அவரின் கண்பார்வைக் குறிப்பாடு தடுத்து நிறுத்தினாலும், இத்தாலிக்கு ஒரு அம்புலஸ் வாகன ஓட்டியாகச் செல்கின்றார். அந்தவேளையில் முன்னணி அரங்குகளில் இருந்த இராணுவத்துக்கு சிகரெட்டுக்களையும், சாக்கிலேட்டுக்களையும் வழங்கச் சென்றபோது எதிரணி அடித்த ஷெல்லினால் காயமடைகின்றார். அப்படிக் காயப்பட்டு சிகிச்சை பெறும்போது ஹெமிங்வேயிற்கு முதல் காதல் அங்கிருந்த தாதியோடு ஆரம்பிக்கின்றது. அவர் ஹெமிங்வேயை விட 8 வயதுகள் கூடியவர். ஹெமிங்வே காயம்பட்ட யுத்தவீரராக போர் முடிய அமெரிக்காவுக்குத் திரும்பி, அந்தத் தாதியைத் திருமணஞ்செய்து கொள்ளும் கனவுடன் இருக்கும்போது அந்தக் கனவு கலைந்துபோகின்றது. அநேகர் அனுபவிக்கும் முதல் காதல் துயர் ஹெமிங்வேயிற்கு ஏற்படுகின்றது. போர் முடிந்தபின் வந்த வெறுமையும், காதல் வேதனையும் ஹெமிங்வேயை கதைகளை எழுதும் படைப்பாளியாக உந்தித் தள்ளுகின்றது. அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு 'In our Time' வெளிவந்து விசேட கவனத்தைப் பெறுகின்றது. அதற்கு முதல் 'மூன்று கதைகளும், பத்துக் கவிதைகளும்' என்ற தொகுப்பு வெளிவந்தாலும், அவரது பெற்றோர்/சகோதரி உட்பட பலர் 'வெளிப்படையாக பாலியல்' பேசியதற்காக அதில் வந்த 'Up in Michigan' கதையை எதிர்மறையாகப் பேசியிருக்கின்றார்கள்.


ஹெமிங்வே தனது 22 வயதில் திருமணஞ் செய்து, கனடாவில் இருக்கும் 'ரொறொண்டோ ஸ்டாருக்காய்' பத்திரிகையாளராக வேலை செய்தபடி பாரிஸில் வசிக்கத் தொடங்குகின்றார். பிரான்ஸ் வாழ்க்கையையும், ஸ்பானிய காளைச் சண்டையையும் பின்னணியாகக் கொண்டு ஹெமிங்வே அவரின் முதலாவது நாவலான 'The Sun also Rises'ஐ எழுதி வெளியிடுகின்றார்.  அடுத்த நாவலாக தனது முதலாம் உலகப்போர் அனுபவங்களின் பின்னணியை வைத்து A Farewell to Arms என்ற நாவலை ஹெமிங்வே சிலவருடங்களுக்குள் எழுதுகின்றார்.  இந்தப் புதினம், போரோடு தொடங்கி குழந்தை ஒன்றைப் பெறும் பெண்ணின் அவலச்சாவோடு முடிகின்றது. இந்த நாவல் போரினால் ஏற்படும் இழப்புக்களை மட்டுமின்றி அதன் நிமித்தம் விளையும் வெறுமையையும் காட்சிப்படுத்துகின்றது. எந்தப் போராயினும் அங்கே கதாநாயகர்கள் இருப்பதில்லை, வெற்றியும், கொண்டாட்டங்களும் வெற்று ஆரவாரங்களே என்பதை மிக நுட்பமாக ஹெமிங்வே இதில் எழுதிச் செல்கின்றார்.


இந்த இரண்டு நாவல்களும் மிகுந்த வரவேற்பைப் பெற்று ஹெமிங்வே அவரின் எழுத்தினால் தனது முப்பதுக்குள்ளேயே பிரபல்யம் வாய்ந்த ஒரு படைப்பாளியாக மாறிவிடுகின்றார். அதேவேளை அவர் தனது அடுத்த மனைவியான  போலினையும் இந்தக் காலத்தில் கண்டடைந்துவிடுகின்றார். போலின் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். போலினும், அவரது குடும்பத்தினரும் ஹெமிங்வேயின் எழுத்தின் மீது மிகுந்த மதிப்புடையவராக இருந்திருக்கின்றார்கள். எனவே ஹெமிங்வேயிற்கு தடையறாது எழுத போலின் வழிவகுத்துக் கொடுக்கின்றார். 


போலின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொடுக்கும் பயணத்தாலேயே ஹெமிங்வே தனது குழுவினருடன் ஆபிரிக்க ஸபாரிக்குப் போக முடிகின்றது. வேட்டையாடுதல் குறித்த சிக்கலான கேள்விகள் இப்போது இருந்தாலும் ஹெமிங்வே எப்படி காளைச் சண்டையைப் பார்க்க ஆர்வமுடையவராக இருந்தாரோ, அவ்வாறே வேட்டையாடுதலையும் ஒரு சாகசமாகச் செய்தவர். காளைச் சண்டை பற்றியும் (Death in the Afternoon), ஸபாரியில் வேட்டையாடியதும் குறித்தும் (Green Hills of Africa) இரண்டு அபுனைவுகளை விரிவாக ஹெமிங்வே எழுதியிருக்கின்றார்.ஹெமிங்வே எப்படி எழுத்தில் புதிது புதிதாக கண்டடையப் பிரியப்பட்டாரோ அப்படியே காதல்களையும் ஒருவித சாகசத்துடன் எங்கும்/எதிலும் நிறைவடையாமல் தேடிச் சென்றிருக்கின்றார் என்பதை நாம் எளிதாக அவரின் வாழ்க்கையினூடு அறியமுடிகின்றது. ஆகவேதான் அவர் எழுத்து மீது விருப்புடைய மார்த்தா என்கின்ற புதுக்காதலியை அடுத்து கண்டடைகின்றார். அப்போது தொடங்கியிருந்த ஸ்பானிய உள்ளூர் போருக்கு, புரட்சிக்காரர்களை ஆதரிக்கும் ஒருவராகவும், பத்திரிகையாளருமாக ஸ்பெயினுக்கு மார்த்தாவுடன்  ஹெமிங்வே செல்கின்றார்.


மார்த்தாவின் காதல் ஹெமிங்வையை மூன்றாவது திருமணத்தை நோக்கி நகர்த்துகின்றது. ஏற்கனவே முதல் மனைவியுடன் ஒரு மகன், இரண்டாவது மனைவியுடன் இரண்டு மகன்களுடன், இப்போது ஹெமிங்வே  தனது மனைவியைக் கண்டடைந்துகொள்கின்றார். ஹெமிங்வேயின் காதல் அறமென்பது மிகவும் சிக்கலானது. அவர் ஒரு திருமண உறவில் இருக்கும்போதே, தனது அடுத்தடுத்த காதலி/மனைவிகளைக் கண்டடைந்தும் கொள்கின்றார். ஒரு எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கை இங்கே முக்கியமானதா என்ற கேள்வி நமக்கு எழலாம். ஆனால் ஹெமிங்க்வே அவர் செய்த சாகசங்களில் இருந்து மட்டுமின்றி, அவரது காதல்களிலிருந்தும் பிரித்துப் பார்த்தல் அவ்வளவு எளிதானதல்ல. ஆகவேதான், ஹெமிங்வே தனது புதிய நாவல்களை எழுதுவதற்காகத்தான், இப்படி புதுப்புதுக் காதலிகளை கண்டடைந்துகொள்கின்றார் போலும் என்று அவரது சமகாலத்து நாவலாசிரியரான F.Scott Fitzgerald எள்ளலாகக் சொல்லியிருக்கின்றார்.


ஹெமிங்வே தனது மூன்றாவது மனைவியான மார்த்தாவுடன் கியூபாவின் ஹாவானாவுக்கு குடிபெயர்கின்றார். ஹாவானாவில் இருந்தே இடதுசாரிச் சாய்வுள்ள நாவலான 'To Have and Have Not' எழுதுகின்றார். அடுத்து அவரது பிரபல்யம் வாய்ந்த நாவலான 'For Whom the Bell Tolls'ஐ அவர் சந்தித்த ஸ்பானிய உள்ளூர்ப்போரின் பின்னணியில் வைத்துப் புனைகின்றார் . இது அமெரிக்காவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றபோதும், இடதுசாரி சார்புள்ளவர்களால்  ஒரு நாட்டு அரசு செய்த அட்டூழியங்களை எப்படி புரட்சிக்காரர்களின் கொலைகளுக்கு நிகராக வைத்துப் பேச முடியுமென விமர்சிக்கப்பட்டது.


இதன்பிறகு ஹெமிங்வே எழுதுவதிலிருந்து  மெல்ல விலகிச் செல்கின்றார். அதேவேளை கொஞ்சம் கொஞ்சமாக குடியினுள் அமிழத் தொடங்கினார். இரண்டாவது உலகப்போர் தொடங்குகின்றது. கியூபாவில் அவரோடு இருக்கும் மார்த்தா, ஸ்பானிய உள்ளூர்ப்போரை நேரில் பார்த்து எழுதியது மாதிரி 2ம் உலகப்போரையும் பார்த்து எழுத, ஐரோப்பாவுக்குச் செல்வோமென அழைக்கின்றார். ஹெமிங்வே தனக்கு வயதாகிவிட்டதென இதை மறுக்கின்றார். உலகில் முக்கிய போர் ஒன்று நடக்கும்போது அங்குபோகாது ஒளிந்திருக்கும் கோழை நீயென ஹெமிங்வேயைச் சீண்டுகின்றார். அதற்கு முன்னரே இவர்கள் இருவரின் உறவில் விழுந்த விரிசல் இப்போது பெரிதாக வெடிக்கின்றது. 


மார்த்தா ஐரோப்பாவிற்குப் போய், அங்கிருந்து மிகச்சிறந்த போர்க் கட்டுரைகளை எழுதுகின்றார். ஹெமிங்வே கியூபாவில் அதை வெளிப்படையாகப் பாராட்டினாலும், 'மார்த்தா போரை விட நான் முக்கியம் என்னிடம் சேர்ந்து வாழ வாவென்று உருக்கமாகவும், ஒருவகையில் சுயநலமாகவும் கடிதங்களை எழுதுகின்றார். 


இறுதியில் மார்த்தாவுடன் போர்க்களத்துக்கு வருகின்றேன் என்று ஹெமிங்வே கூறுகின்றார். ஆனால் அமெரிக்காவிலிருந்து விமானத்தில் புறப்படும்போது, பெண்களை அமெரிக்க இராணுவ விமானத்தில் ஏற்றமாட்டார்களென மார்த்தாவை கைவிட்டுப் போக மார்த்தா கடல் வழியாகப் பயணிக்கின்றார். இது ஹெமிங்வே செய்யும் தந்திரமென மார்த்தாவுக்குத் தெரிந்தாலும் அவர் கப்பல் வழி ஐரோப்பாவுக்குச் செல்கின்றார். மார்த்தா வந்துசேர்வதற்குள் ஹெமிங்வே அவரது நான்காவது மனைவியாகின்ற மேரியைப் பிரான்ஸில் சந்திக்கின்றார். 


அங்கே ஒருநாள் இரவு உணவுக்குப் போய்த் திரும்பும் வழியில் சந்திக்கும் விபத்தில் தலையில் காயமேற்பட்டு ஹெமிங்வேயுக்கு உணர்வு தப்புகின்றது. அதிலிருந்து  ஹெமிங்வே தப்பி வந்தாலும், இங்கிருந்துதான் அவருக்கான உளவியல் சிக்கல்கள் தொடங்குகின்றது. பின்னர் ஆபிரிக்காவில் இரண்டாவது ஸ்பாரி பயணத்தில் ஏற்படும் விமான விபத்து இதை உச்சநிலைக்குக் கொண்டு செல்கின்றது. அத்துடன் முற்றுமுழுதாக ஒரு பெருங்குடிகாரராக இந்த இடைப்பட்ட காலத்தில் ஹெமிங்வே மாறியும் விட்டிருந்தார்.


ஹெமிங்வே மார்த்தாவைக் கைவிட்டு, மேரியைக் காதலிக்கத் தொடங்கினாலும், அவரால் மார்த்தா மீது வெறுப்பை உமிழாமல் விடமுடியவில்லை. கடைசிவரை அந்த வெறுப்போடோ ஹெமிங்வே வாழ்ந்துமிருக்கின்றார். தனக்கான புதுக்காதல்களை, தன்னோடு இருக்கும் பெண்களின் நிலைமைகளை நினைத்துப் பார்க்காமலே தேடிக்கொள்ளும் ஹெமிங்வே, தனக்குரிய பெண்கள் மட்டும் தான் விரும்புவதுமாதிரியே இருக்கவேண்டுமென நினைத்ததுக் கொண்டது வியப்பானட்னு. ஒருவர் பெரும்படைப்பாளியாக இருந்தாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த விடயங்களில் சிறுமையுடைய மனிதராக மாறிவிடுகின்றனர் என்பதற்கு ஹெமிங்வே ஒரு சிறந்த உதாரணம்.தன் பின்னர் 50 ஐத்தாண்டிய ஹெமிங்வே பதின்மப் பெண் மீதும், பாலியல் தொழிலாளி மீதும் ஈர்ப்புக் கொள்வதெல்லாம் அவரை எப்படிப் புரிந்துகொள்வதென்பது சிக்கலாந்த விடயங்கள். ஆனால் அந்தப் பதின்மப் பெண்ணின் மீதான மையலைக் கூட ஹெமிங்வேயினால் புனைவாக்க முடிந்திருக்கின்றது. அதுவே 'Across the River and into the Trees' ஆக வெளிவந்து, விமர்சகர்களினால் 'இனி ஹெமிங்வேயிற்கு எழுத எதுவுமே இல்லை, வீழ்ச்சியடைந்த படைப்பாளியாகிவிட்டார்' எனக் கடுமையாக எழுதவைக்கின்றது.


ஆனால் ஹெமிங்வே காளைச் சண்டையில் எத்தனை குத்தீட்டிகளை உடலில் வாங்கினாலும் இன்னமும் சரணடைந்துவிடாத ஒரு காளையாக தன்னை நிரூபிக்க மீண்டும் எழுதத்தொடங்குகின்றார். அதுவே அவரின் அற்புதமான நாவலான 'The Old Man and the Sea' ஆக எழுந்து வந்திருக்கின்றது. அது ஹெமிங்வே இன்னும் வீழ்ச்சியடையவில்லை, படைப்புக் களத்தில் கொம்புகள் விறைக்க மூசியபடி நிற்குமொரு காளை என்பதை  நிரூபிக்கின்றது. 


இந்தக் காலப்பகுதியில்தான் ஹெமிங்வே பெருங்குடிகாரராக ஆனது மட்டுமின்றி, மிகப்பெரும் விபத்தையையும் ஆபிரிக்காவில் சந்திக்கின்றார். அவர் இறந்துவிட்டார் என்று செய்திகள் வெளியிடப்பட்டபின் இரண்டு நாட்களில் உயிருடன் திரும்புகின்றார். திரும்பிய அவர் இன்னொரு சிறுவிமானத்தில் உகண்டாவின் தலைநகருக்கு மேரியுடன் திரும்பும்போது இன்னொரு விமான விபத்தைச் சந்தித்து உடலில் எரிகாயங்களை பெறுகின்றார்.


புதிய படைப்பாளிகள் வந்தாலும் ஹெமிங்வே இன்னமும் சளைக்காத காளை என்பது எழுத்தில் நிரூபிக்கப்பட, ஹெமிங்வேயிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. ஆனால் அவர் அதை சுவீடனுக்குச் சென்று பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஆகவே அவருக்கு அந்தப் பரிசு கியூபாவில் வைத்து வழங்கப்படுகின்றது. அந்தக் காலத்தில் அவரைச் சுற்றி பெரும் ஒளிவட்டம் உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் பாய்ச்சப்படுகின்றது. ஹெமிங்வேயிற்கு பொதுவில் பேசும் தயக்கம் இருப்பினும், அவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு இருந்ததாலும், அவர் நோபல் பரிசு குறித்து அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கும் பேட்டியில் ஒரு பல்லிழந்து போன காளை போன்ற சோர்வுடன் உள்ள ஒரு ஹெமிங்வேயை நாம் பார்க்கின்றோம். 


எத்தனையோ ஆபத்துக்கள் இருந்தாலும், எத்தனையோ விபத்துக்களைச் சந்தித்தாலும் சாகசப் பயணங்களையும், யுத்தகளங்களையும் தேடிப்போன ஹெமிங்வேதானா இதுவென நமக்கு அவரைப் பார்க்கும்போது பரிதாபம் வருகின்றது. ஆனால் இதுவும் வாழ்வின் ஒருபகுதியே, இவ்வாறான எல்லா சகாசங்களும், பெருமைகளும், வெற்றிகளும், முடிசூட்டல்களும் இறுதியில் அர்த்தம் எதுவுமில்லாது  போகுமென்பதை நாம் விளங்கிக்கொள்வதற்கு  ஹெமிங்வேயின் வாழ்வை ஓர் உதாரணமாகக் கூட எடுத்தும் கொள்ளலாம்.தன்பின்னர் ஹெமிங்வே சந்திப்பதெல்லாம் வீழ்ச்சிகளே. அவரது உளவியல் மிகுந்த சிக்கலுக்குள்ளாகின்றது. பல்வேறு காலப்பகுதியில் உளவியல் சிகிச்சைகளைப் பெறுகின்றார். காதுக்குள் குரல்கள் ஒலிப்பதும், தற்கொலை பற்றிய சிந்தனையுமென ஹெமிங்வேயின் மனது சிதறுகின்றது/சிதைவுறுகின்றது. அத்துடன் முற்றுமுழுதாக குடிக்கு அடிமையாகிவிட்டதால் அது பெண் வெறுப்பாக, மேரி மீதும் பிள்ளைகள் மீதும் வன்முறையாக மாறுகின்றது. இத்தனைக்கு அப்பாலும் மேரி அவரைக் கைவிடாது இருந்திருக்கின்றார். இந்தக் காலத்திலேயே அவர் தனது இருபதுகளில் எழுதி பாரிஸில் தொலைந்துவிட்டதென நினைத்த டயரிக்குறிப்புக்களை பல்லாண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கின்றார். அதை ஹெமிங்வே திருத்தத் தொடங்கி, அதுவே ஹெமிங்வேயின் மரணத்தின் பின்னர் வெளியாகின்ற A Moveable Feast என்கின்ற நினைவுக்குறிப்புகளாகும். 


எழுத்துக்கு தன்னை முழுதாகத் தாரை வார்த்துக் கொடுத்த ஹெமிங்வே, ஒருநாள் தன் மரணத்துக்கும் தன்னை முற்றாகக் கொடுக்கின்றார். இளவயதில் தனது தந்தை தற்கொலை செய்ய, அது மிக கோழைத்தனமானது என்று விரிவாக எழுதிய ஹெமிங்வேயும் அவ்வாறான முடிவைத் தேர்ந்தெடுத்ததும் துரதிஷ்டவசமானது. தனது தந்தையின் மரணத்துக்கு தனது தாயும் முக்கிய காரணமென அவரை விட்டு விலத்திவைத்து அவரோடு நெடும் வருடங்கள் பேசாமலும், தாயின் மரணவீட்டுக்குப் போகாதும் இருந்த ஹெமிங்வே எப்படி இப்படியொரு முடிவை தன் பொருட்டு எடுத்தார் என்பதற்கு நாம் எளிதாக எந்தக் காரணத்தையும் கண்டடையமுடியாது. ஹெமிங்வேயிற்கு இவ்வாறு இவையெல்லாம் நிகழ்ந்தன என அதையதை அப்படி ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.

 

ஒரு சிறந்த படைப்பாளியாக இருந்த ஹெமிங்வேயினால் ஏன் அவர் நேசித்த பெண்களை ஒருகட்டத்துக்குப் பிறகு நேர்மையாக நடத்தமுடியவில்லை என்பதற்கும் நாம் விடைகளை அவ்வளவு எளிதாகக் கண்டடைய முடியாது. அவ்வாறே அவரது இளையமகன் அவருக்கு எழுதுகின்ற காழ்ப்புக்கடிதத்தில் ஒரு தோல்வியடைந்த தந்தையாக ஹெமிங்வேயை நாம் காண்கின்றோம். பிறகு அவரது மகன் ஹெமிங்வேயை மன்னித்தாலும், அந்த வெறுப்பை அவ்வளவு எளிதாக மீளப்பெற்றுவிட ஹெமிங்வேயினால் ஒருபொழுதும் முடியாதெனவே நினைக்கத் தோன்றுகின்றது.


இத்தனைக்கு அப்பாலும் ஹெமிங்வே தனது எழுத்துக்களால் தலை நிமிர்ந்தே நிற்கின்றார். அதுவரை காலமும் இருந்த புனைவுக்கான எழுத்து நடையை மாற்றியதால் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் வாசகர்களால் மட்டுமின்றி, சிறந்த படைப்பாளிகளினாலும் அவர் கொண்டாடப்படுகின்றார். ஒரு சாகசப்பயணி, தன் சொந்த நாட்டைவிட்டு பல்வேறு நாடுகளுக்குச் செல்வதிலும் வாழ்வதிலும் ஆர்வமுடையவர், போரின் கொடுமைகளை நேரடியாக பார்த்து அசலாக எழுதிய பத்திரிகையாளன், தன் படைப்புக்களில் நம்மையும் ஒருவராக உணரச்செய்த படைப்பாளி என்கின்ற பல்வேறு வடிவங்களில் பொருந்திப்போகின்ற ஹெமிங்வே, பலவேளைகளில் சாதாரணர்களில் பார்க்க மிகச் சாதாரணராகவும் இருந்திருக்கின்றார் என்பதும் உண்மையே. ஆகவேதான் அவர் நமக்கு இன்னும் நெருக்கமாகின்றாரோ தெரியவில்லை. 


ஹெமிங்வே தனது முதல் நாவலை எழுதி கிட்டத்தட்ட நூற்றாண்டு வரப்போகின்ற இந்தக்காலத்திலும் ஹெமிங்வே தனது எழுத்துக்களால் மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையினாலும் நம்மிடையே வியப்பானவராகவும், விசித்திரமானவராகவும் ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றார். இன்றும் பல்லாயிரக்கணக்கில் ஹெமிங்வேயின் எழுத்துக்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. புதிய புதிய வாசகர்கள் அவரை ஆர்வமாய்த் தேடிப் போய்க்கொண்டேயிருக்கின்றனர். 


ஹெமிங்வேயின் இறுதிக்காலத்தில் Life சஞ்சிகை, 20,000 வார்த்தைகளில்  ஸ்பெயினில் நடக்கும் காளைச்சண்டை பற்றிக் கட்டுரையொன்று கேட்க, அவர் 60,000 சொற்களில்  எழுதிவிட்டு, அதை எப்படி/எங்கே வெட்டிச் சுருக்குவதென்று தெரியாது தனது நண்பரிடம் அனுப்பி 20,000 சொற்களுக்கு மாற்றியிருக்கின்றார். சிறந்த எழுத்தாளராக மட்டுமின்றி, தனது எழுத்துக்களுக்கான சிறந்த எடிட்டராகவும் இருந்த ஹெமிங்வேயின் இறுதிக்காலம் எப்படி சோகமாகவும் சோர்வாகவும் போனது என்பதற்கு இதை உதாரணமாகச் சொல்வார்கள். இதே ஹெமிங்வே தனது நாவலொன்றின் (A Farewell to Arms) இறுதிப் பகுதி திருப்தியாக வருவதற்காய், நாற்பதுக்கும் மேற்பட்ட வித்தியாசமான முடிவுகளை அலுக்காது சலிக்காது  எழுதியும் பார்த்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


எழுத்தை அவ்வளவு ஆத்மார்த்தமாக நேசித்த ஒரு படைப்பாளியான ஹெமிங்வே, இதைவிட வேறு எதையும் தன் வாழ்நாளில் விரும்பியிருக்கவேமாட்டார் என்பதும், அவரது புத்தகத்தின் முதல் பக்கத்தைப் புரட்டும் வாசகருக்காய், எங்கோ தொலைவில் இருந்து  புன்னகைக்க காத்திருப்பாரென்பதும், அவரின் எழுத்தையும் சாகசப்பயணங்களையும் வியந்து பின்தொடரும் என்னைப் போன்றவர்க்கு நன்கு தெரியும்.


*********************

(நன்றி: கனலி, ஆவணி, 2021)

புகைப்படங்கள்: கூகுள்