கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label ஈழ‌ம். Show all posts
Showing posts with label ஈழ‌ம். Show all posts

செம்மணி

Saturday, November 01, 2025

  செம்மணிப் புதைகுழிகளில் உறங்க மறுக்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்

 

ண்மையில் கனடாவில் நடந்த தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது இதை தமிழிலிருந்து ஆங்கிலமாக்கிய நேத்ரா ரொட்ரிகோ, தனது ஓர் அனுபவத்தைச் சொன்னார். அவர் இளம்பெண்ணாக இருந்தபோது கொழும்பிலிருந்து பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புத்தகங்களைப் படிக்கப் போவார். எப்போது அங்கே போனாலும் இராணுவத்தின் டிரக்கும் இராணுவத்தினரும் நின்றுகொண்டிருப்பார்கள் என்றார். ஒரு பெண்ணாக அதுவும் தமிழ் பெண்ணாக, சிங்கள இராணுவத்தின் மீது பயத்தோடும் பதற்றங்களோடும் அன்றைய இளம் நேத்ரா சென்று கொண்டிருந்ததை அவர் விபரித்திருந்தார். இராணுவத்தினர் ஒரு பெண் மீது செய்யும் சேட்டைகளையும் தாண்டிச் சென்ற அந்த நாட்களினது வடுக்களையும் மீண்டும் நினைவுபடுத்தினார் நேத்ரா. 


நான் நேத்ராவின் நனடைதோய்தலில், இன்னொரு காலத்தில், இன்னொரு நிலப்பரப்பில் இப்படி இராணுவக் காவலரணைத் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் தாண்டிக் கொண்டிருந்த  கிரிஷாந்தியை நினைத்துக் கொண்டேன். தனது பதின்வயதில் உயர்தர பரிட்சையான இரசாயனவியல் பாடத்தின் தேர்வை எழுதிவிட்டு  96ம் ஆண்டில் கிரிஷாந்தி செம்மணி காவலரணைத் தாண்டிக் கொண்டிருந்திருப்பார். அன்று பரிட்சையை மதியம் எழுதிமுடித்துவிட்டு, முதல் நாள் இறந்துவிட்ட தன் தோழியின் மரணவீட்டுக்குப் போய்விட்டு கிரிஷாந்தி  தனித்து அந்தத் தெருவால் வந்தபடி இருந்திருப்பார். அவரது பாடசாலைத் தோழி,  அதற்கு முதல்நாள் (இராணுவ வாகனத்தால்) அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். அந்தத் தோழியின் மரணமும் சந்தேகத்துக்குரிய வகையில் இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்டதாக ஓர் கதையிருக்கின்றது. 


கிரிஷாந்தியை, காவலரணில் இருந்த இராணுவ கோப்ரலான ராஜபக்சே மறித்து பதுங்குகுழிக்குள் அடைத்து வைக்கின்றார். தனது மகள் நேரத்துக்கு வராது பதறிய கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா, மகள் இராணுவத்தால்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து, அவரது தனது இளைய மகனான பிரணவனுடனும், அயலவரான கிருபாமூர்த்தியுடனும் அந்தக் காவலரணுக்குச் செல்கின்றார்.


இராசம்மா இதற்கு 10 வருடங்களுக்கு முன் தனது கணவரைப் புற்றுநோயிற்கு இழந்தவர். தனியொருவராக தனது இரண்டு பெண் பிள்ளைகளையும், ஒரு ஆண் பிள்ளையும் வளர்த்து வந்தவர். கிரிசாந்திக்கு மூத்த சகோதரியான பிரஷாந்தியும், இளைய சகோதரனான பிரணவனும் இருந்தார்கள். இராசம்மா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் இலங்கையில் கல்விகற்று, 50களின் இறுதியில் இந்தியாவுக்கு சென்று பொருளாதாரத்தில் இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்று வந்து, ஒரு பாடசாலையில் உப அதிபராகப் பணிபுரிந்தவர்.


இராசம்மா, அவரின் இளைய மகன் பிரணவன், அயலவர் குமாரசாமி ஆகிய மூவரும் இராணுவத்திடம் கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். அவர்களோ அப்படியொருவரை தாங்கள் கைது செய்யவில்லை என்று மறுக்கின்றார்கள். அதை நம்பித் திரும்பிப் போகின்றவர்கள், இராசம்மாவின் பிடிவாதத்தால் மீண்டும் காவலரணுக்குத் திரும்பி கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். 


இப்போது இராசம்மா, தனது மகளை விடுதலை செய்யாதவரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார். ஒரு தாயின் மனது, இந்த இரவை தன் மகள் இராணுவ முகாமிற்குள் கழித்து விட்டால் இனி என்றென்றைக்கும் மீள மாட்டாளென நம்பியிருக்கலாம்.
இராசம்மாவுக்கு சிங்களமும் நன்கு தெரியும். ஆகவே அவர் சிங்களத்தில் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்.


எப்போது துப்பாக்கியோடும், அதிகாரத்தோடும் இருக்கும் எந்த தரப்பாயினும் இப்படி ஒருவர் அடங்காது நியாயம் கேட்பது கோபத்தை வரவழைக்கத்தானே செய்யும். அதுவும் இராணுவம் என்றால் சொல்லவும் வேண்டுமா? அந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் இந்த மூன்று பேரையும் இன்னொரு பதுங்குகுழியில் கொண்டு போய் அடைத்து வைக்கின்றது.


பிறகு நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லப் போவதில்லை. ஒருபுறத்தில் கிரிஷாந்தி கூட்டு வன்புணர்வுக்கு ஆளானபோது, இவர்கள் மூன்று பேரும் அருகிலேயே வைத்து கொல்லப்படுகின்றார்கள். கிரிஷாந்தி உள்ளிட்ட இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட முறை மிகக் கோரமானது.

ற்றைக்கு இது நடந்து 30 வருடங்களாகி விட்டது. ஆனால் இதைச் சாட்சியமாகச் சொன்னவர்களின் வாக்குமூலங்களை வாசிக்கும்போது மனம் பதறுகின்றது. அதை தொகுத்து நூலாக்கி 'வன்மம' என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கையில் வெளிவந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும்போதும் கைவிரல்கள் படபடக்கின்றன.


அன்று இந்த விடயம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டபோது, இராணுவ/பொலிஸ் குழுவொன்றின் விரைவான விசாரணையினாலாயே இது ஒரு முக்கிய மனிதவுரிமை மீறல் சம்பவமாகப் பொதுவெளிக்கு தெரிய வந்தது. மேலும் எதற்கும் பயப்பிடாது சாட்சி சொல்ல வந்த பொதுமக்களினதும்,  குற்றஞ்சாட்டப்பட்ட ராஜபக்சே உள்ளிட்டவர்களிலிருந்து அரச சாட்சியாக மாறிய ச நஸார், சமரசிங்க போன்றவர்களின் சாட்சியங்களும் முக்கியமானவை. நஸாரின் சாட்சியங்களில், அவருக்கு கிரிசாந்தியின் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் பங்கிருக்கின்றதா இல்லையா என்று சற்றுக் குழப்பம் இருந்தாலும், அவர் அரசசாட்சியாக மாறியது  இந்த வழக்கின் முக்கியமான திருப்பமாகும். 

 

அது போலவே சமரசிங்க என்று ஒரு பொலிஸ்காரர் அன்று கோப்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். அவர் ஒர் அரிய மனிதாபிமானியாகவே இக்கொடும் நிகழ்வில் புலப்படுகின்றார். அவரே கிரிஷாந்தி உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு அவருக்கு இயன்றமுறையில் முயற்சித்திருந்தவர்.


கிரிஷாந்தியைப் மதியத்தில் கைதுசெய்து காவலரணில் வைத்து விட்டு, ராஜபக்‌ஷே, சமரசிங்கவை கிரிஷாந்திக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பிருக்கா என விசாரிப்பதற்காய் அங்கே வரச் சொல்கின்றார். சமரசிங்கவிற்கு தமிழ் தெரியும் என்பதால் பதுங்குகுழிக்குள் இருந்த கிரிஷாந்தியை அவர் விசாரிக்கின்றார். கிரிஷாந்தி அதை மறுப்பதுடன், எதற்காக என்னை இங்கே தடுத்து வைத்திருக்கின்றீர்கள் எனக் கேட்கின்றார். அதுவே சமரசிங்க முதலும் கடைசியுமாகக் கிரிஷாந்தியை உயிருடன் சந்திப்பது.


இப்படி கிரிஷாந்தியை விசாரித்துவிட்டு  பகல் 3.00 மணிக்குத் திரும்புகின்ற சமரசிங்க, மூன்று பேர் அதே காவலரண்களுக்குள் நுழைவதைக் காண்கின்றார் (இதை சமரசிங்க நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது நினைவுகொள்கின்றார்). அதன் பின்னர் கோப்பாயுக்கு திரும்புகின்ற சமரசிங்க மனம் அமைதி கொள்ளாது, மாலையில் இன்னொரு பொலிஸ்காரரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு, கிரிஷாந்தியை கைதுசெய்யப்பட்ட காவலரணுக்குச் சென்று கிரிஷாந்தி உள்ளிட்ட மற்றவர்கள் மூன்று பேரையும்  விடுதலை செய்யக் கேட்டிருக்கின்றார். அது வாக்குவாதமாக மாறி கோபத்தில் சமரசிங்கவையும், அவரது நண்பரையும் அங்கிருந்து ராஜபக்‌ஷே உடனே திருப்பிப் போகச் சொல்கின்றார்.


இந்த நிகழ்வில் குற்றஞ்சாட்டப்பட்டு, அரச தரப்புவாதியாக மாறி நஸாரின் சாட்சியம் இன்னும் கோரமானது. கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்ட காவலரணுக்கு அருகில் காவலில் இருந்தவர் நஸார். ராஜபக்‌ஷே தனது  இராணுவ நண்பர்களிடம் கிரிஷாந்தியின் உடல் மீது வன்புணர்வை நடத்த அனுமதி கொடுத்தபின், நஸாரும் செல்கின்றார். தான் தமிழில் பேசியதால் முனகிக்கொண்டிருந்த கிரிஷாந்தி தன்னிடம் தண்ணீரும் கேட்கவும் தான் கொடுத்ததாகவும், அப்போது யாரோ கெட்டவார்த்தைகளால் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்டபோது தான் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததாகவும் சொல்கின்றார். அப்படித் திரும்பிப் போகும்போது 75 மீட்டர் தொலைவில் கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்திருக்கின்றார்.


இலங்கை இராணுவம் இவர்கள் அனைவரையும் சுருக்குக் கயிறை இரண்டுபக்கமும் போட்டு இழுத்தே கொன்றிருக்கின்றது. இந்தக் கொலைகள் நடக்கும்போது துப்பாக்கியோடு காவல் இருந்ததாக நஸார் சொல்கின்றார். பின்னர் இராணுவத்தினர் மண்வெட்டிகளோடு அந்த உடல்களைப் புதைக்கச் சென்றதையும் கண்டதாகச் சாட்சியில் சொல்லியிருக்கின்றார்.

கிரிஷாந்தியின் வழக்கு பிற வழக்குகள் போல இல்லாது, அதிகளவு அழுத்தத்தால் இரண்டு வருடங்களில் முடிந்திருக்கின்றது. இந்த நான்கு பேரும் அன்று கொலைசெய்யப்பட்ட உடனேயே ஓர் பெரும் எதிர்ப்பு எல்லாத் தரப்புக்களிலும் இருந்து வந்ததாலேயே, உரியவர்கள் கைதுசெய்யப்பட்டு, புதைக்கப்பட்ட இந்த உடல்கள் 40 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீளத்தோண்டி எடுக்கப்பட்டன. அந்த மீளக் கண்டுபிடித்தல் தமிழ் மக்களை மட்டுமில்லை, மனிதாபிமானமுள்ள சிங்களவர்களையும் தட்டியெழுப்பியது. ஆகவே இரண்டு ஆண்டுகளில் விசாரணை நடந்து தீர்ப்பும் கொடுக்கப்பட்டது. வழக்கு நடந்த சில நாட்களிலேயே, 9 குற்றவாளிகளில் முதல் குற்றவாளியான ராஜபக்‌ஷே நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி சில வாரங்களின் பின் வேறொரு நிகழ்வால் கைதுசெய்யப்பட்டது எல்லாம், இலங்கை நீதிமன்றங்களின் வழமையாக நடக்கக்கூடிய நிகழ்வுகள் எனச் சொல்லலாம்.


இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் முடிந்தாலும், இவ்வாறு இதேகாலகட்டத்தில் வன்னியில் குமாரபுரத்தில் பால்பண்ணைக்கு அருகில் தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வின் தீர்ப்பை வழங்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கின்றது என்று இதே 'வன்மம்' நூலில் நாம் அறிய முடிகின்றது. ஆகவே நீதி என்பது எல்லோர்க்கும் சமம் இல்லை என்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும்.


கிரிஷாந்தியின் கொலைவழக்கில் எட்டுப் பேருக்கு குற்றத்தைச் செய்தற்காக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் ராஜபக்‌ஷே இன்னொரு பேரவலமான உண்மையையும் நீதிமன்றத்தில் அறிவித்தார். நீங்கள் என்னை இந்த நான்கு பேரைக் கொன்று புதைத்ததற்காக குற்றஞ்சாட்டுகின்றீர்கள். நானறியவே இதே செம்மணிப் பகுதியில் 300-400 தமிழர்கள்  கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன எனச் சொன்னார். அப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாது என்னால் அவற்றையெல்லாம் அடையாளம் காட்டமுடியும் என்றும் அறிவித்தார். 


அதில் ஒரு சம்பவமாக, தனது அதிகாரியாருவொருவர் ஒரு திருமணமான தமிழ் தம்பதியைக் கூட்டிக்கொண்டு வந்து, அந்தக் கணவனின் முன்னேயே அந்தப் பெண்ணை வன்புணர்ந்தவர்; பிறகு அவர்கள் இருவரையும் மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு செம்மணியில் புதைத்தவர்; அதற்குச் சாட்சியாக நானே அந்த அதிகாரிக்கு மண்வெட்டியைக் கொடுத்தேன் என்று இன்னொரு அதிர்ச்சியான நிகழ்வைச் சொன்னார்.


அதேபோன்று ஒருநாளில் 22 இற்கு மேற்பட்ட ஆண்களை அரியாலையில் கைதுசெய்து சித்திரவதை செய்து புதைத்தோம் என்றிருக்கின்றார். அதில் ஒரு சிலரின் பெயர்களை, அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை 'வன்மம்' நூலை வாசிக்கும் ஒருவர் அறியமுடியும்.


அதன்பின்னர் இவ்வாறு பல உண்மைகளை வெளியுலகிற்குச் சொன்ன ராஜபக்‌ஷேவிற்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதும், அவரின் மனைவி தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டதுமென பலதும் இலங்கையில் நடந்திருக்கின்றது. அன்றைய சந்திரிக்காவின் காலத்தில் ராஜபக்சேவின் வாக்குமூலத்தை வைத்து செம்மணி புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டத் தொடங்கியதும், பின்னர் இடைநிறுவில் நிறுத்தப்பட்டதுமென்பதும் கடந்தகால வரலாறு.


இப்போது மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின் செம்மணி மீண்டும் தோண்டப்படுகின்றது.  இதுவரை இருநூறிற்கும் மேலான எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வாறு கொல்லப்பட்டோம் என்று சொல்லாது, அமைதியாக உறங்கப் போவதில்லையென எலும்புக்கூடுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை  சாட்சியங்களாக நம்முன்னே எழுந்தபடி இருக்கின்றனர். 


***

('வன்மம்' - ஆங்கிலத்தில் பகவதாஸ் சிறிகந்ததாஸால், கிரிசாந்தியின் கொலையின் நீதிமன்ற வழக்கின் முழுப்பிரதியை முன்வைத்து எழுதப்பட்ட நூலாகும்.  இது விண்மணி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது)


-நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2005-



இலங்கை அரசியலை பின்-நவீனத்துவ நிலவரத்தினூடாகப் புரிந்துகொள்ளல்!

Monday, December 16, 2024

 

1.

இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலைக்குச் சென்றபோது சில வருடங்களுக்கு முன் 'அரகலய' போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டது. அதன் உச்சத்தில் அன்றைய ராஜபக்‌ஷ அரசு துடைத்தெறியப்பட்டது. இலங்கையின் முழு அதிகாரங்களும் பெற்ற ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்‌ஷ இலங்கையை விட்டுத் தப்பியோடியதும், வெவ்வேறு நாடுகளில் தலைமறைவாகப் பதுங்கி இருந்ததும் அண்மைக்கால இலங்கையின் வரலாறு.

நாட்டைத் திவாலாக்கி இப்படி அரசுகள் வீழ்ந்தற்கு -ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் போனால்- நமக்கு 'அரபு வசந்தம்' சிறந்த சாட்சியமாக இருக்கின்றது. விலைவாசிகள் உயர்ந்து மக்களின் நாளாந்த வாழ்வே அவதிக்குட்பட்டபோது ஒரு துனிஷியா இளைஞன் சந்தையொன்றில் தன்னைத் தீவைத்துக் கொழுத்தியதன் மூலம் 'அரபு வசந்தத்தை'த் துனிஷியாவில் தொடக்கி வைத்தான். அந்தக் கோபத் தீ  பின்னர் எகிப்து, லிபியா, பஹ்ரைன், யேமன், சிரியா பல நாடுகளைச் சென்றடைந்தது. சில நாடுகளில் மனித இழப்புக்களோடு அந்தந்த நாட்டு ஜனாதிபதிகள் தூக்கியெறியப்படவோ அல்லது அரச அதிகாரத்தை இராணுவத்திடம் கொடுத்துவிட்டுத் தப்பியோடவோ வேண்டியிருந்தது. இந்த 'அரபு வசந்தத்தில்' மேற்குலகின் இரகசியக் கைகள் போராட்டத்தின் இறுதிக்காலங்களில் இருந்தனவா என்பதும், முக்கியமான கேள்விதான்.

ஆனால் இலங்கையில் நடந்த 'அரகலய'ப் போராட்டம் பல்வேறு வகைகளில் சிறப்பு வாய்ந்தது. எவ்வித மனித இழப்புக்களும் இல்லாமல் ஒரு சர்வாதிகார -அதுவும் ஈழத்தில் போரை முடித்து இன்னொரு பேரரசனாக தம்மை புதிய 'மகாவம்ச'த்தின் பக்கங்களில் சேர்த்துக்கொண்ட ராஜபக்‌ஷ குடும்பம் முழுதாக மக்களினால் துடைத்தெறியப்பட்டது. இவ்வாறு இலங்கையில் வரலாற்றில் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட இந்த முக்கிய சம்பவத்தையும் ராஜபக்‌ஷ குடும்பமோ அல்லது இனி வரும் சிங்கள அரசாட்சியாளர்களோ மகாவம்சத்தில் சேர்ப்பார்களா என்றும் பார்க்க வேண்டும்.

மேலும் 'அரகலய' போராட்டம் நடந்தபோது இராணுவம் எவ்வாறு பேரமைதியாக இருந்தது என்பது மிகப்பெரும் கேள்வி  (அமெரிக்காவின் தலையீடு நிச்சயம் இருந்திருக்கும்). பிற தென்கிழக்காசிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளைப் போல, அங்கு மக்களால் துரத்தப்பட்ட ஜனாதிபதி/பிரதமர்களுக்குப் பின், இராணுவம் இலங்கையில் தனக்கான அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ளாது, 'ஜனநாயக வழியிலே' அதிகாரம் கைமாற்றப்பட்டதையும் முக்கிய புள்ளியாக நாம் குறித்தாக வேண்டும்.

இத்தனைக்கும் இலங்கையில் இராணுவத்தின் அளவு மிகப்பெரியது. ஒரு நாட்டின் சனத்தொகையை வைத்துப் பார்க்கும்போது, இலங்கையானது உலகில் 14வது பெரிய இராணுவத்தை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. அத்தகைய பலமிகு இராணுவத்துக்கு, சர்வ அதிகாரமும் வாய்க்கப் பெற்ற ஜனாதிபதி கட்டளையிட்டிருந்தால் 'அரகலய' போராட்டக்காரர்கள் அனைவரையும் ஒரு நாளுக்குள் அகற்றிவிட முடியாதா என்ன? ஆகவே  இந்த விடயத்தில் உள்ளே நடந்திருக்கக்கூடிய இந்திய/அமெரிக்க/ஐரோப்பா அரசுக்களில் இராஜதந்திர நாடகத்தை தற்சமயம் கொஞ்சம் மறந்துவிடுவோம்.



2.


இப்போது சமகாலத்துக்கு வருவோம். அரகலய போராட்டத்தின் ராஜபக்‌ஷ குடும்பம் துரத்தப்பட்டபின், நிலைமாறும் அரசை ரணில் விக்கிரமசிங்க தாங்கிக் கொள்கிறார். நேரடித் தேர்தல்களில் பலமுறை தோற்று ஒருபோதும் ஜனாதிபதி பதவி ரணிலுக்குக் கிடைக்காதென, ரணிலே அந்த ஆசையைக் கைவிட்டபோது அவருக்கு இப்படி அமைந்தது ஒரு பேராச்சிரியமே. இதையும் ஒருவகையில் பின் நவீனத்துவ 'விளையாட்டு' என எடுத்துக் கொள்ளலாம்.

இந்த அவல்/அபத்த நகைச்சுவையை ஒருபக்கம் வைத்துவிட்டுப் பார்த்தால், அரகலயப் போராட்டம்/அதற்காய்ப் போராடிய மக்கள்/துரத்தியடிக்கப்பட்ட ஜனாதிபதி என எல்லாவற்றையும் பின் நவீனத்துவத்தின் மூலம் அணுகினால் இன்னும் சுவாரசியமான பல முடிச்சுக்கள் கட்டவிழலாம்.

பின் நவீனத்துவம் மார்க்ஸியம் உள்ளிட்ட பலவற்றைப் பெருங்கதையாடல் என்று கூறி நிராகரிக்கின்றது. ஏன் மார்க்ஸியம் போன்றவை பெருங்கதையாடல் என்று பின்நவீனத்துவம் சொல்கின்றது என்றால், மரபான மார்க்ஸியர் உள்ளிட்ட பலர் 'மார்க்ஸியமே' முடிந்த முடிவானது. அதை மாற்றமுடியாது என்று வலியுறுத்திய காலம் ஒன்றிருந்தது,  எல்லோருக்குமான முழு உண்மை என்பதை பின் நவீனத்துவம் ஏற்றுக்கொள்வதில்லை. எல்லாமே பகுதி பகுதி உண்மைகளாளது என்பதே பின் நவீனத்துவம் வலிறுத்துகின்றது. ஆகவே மார்க்ஸியம் தன்னை முடிந்த உண்மையாகவும், முழுமையடைந்த தத்துவமாகவும் தன்னை முன்வைக்கும்போது அது பெருங்கதையாடல் ஆகிவிட்டது என்றே அர்த்தம். அங்கே எந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியாது ஒரு 'தேக்கநிலை' உருவாகிவிடுகின்றது.

மதம் சார்ந்த பிரதிகளையும் இப்படிப் பார்க்கலாம், எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டு விட்டன/சொல்லப்பட்டுவிட்டன என்ற அடிப்படைவாத மதவாதிகள் உரத்தக் குரலெழுப்புவார்கள் அல்லவா? அவ்வாறு பெருங்கதையாடலாகி விட்டவை என்ன செய்யும், தனக்குள் அதிகாரத்தைக் குவிக்கும். அப்படிக் குவிப்பதன் மூலம் எல்லோருக்கும் பொதுவான உண்மையான அந்தப் பிரதிகளை முன்வைக்கும். அவ்வாறு அதற்குள் அடங்காதவர்களை 'மற்றமை'யாகக் கட்டியமைத்து தனது எதிர்ப்பினைக் காட்டும்.

உதாரணத்துக்கு இலங்கையில் சிங்களப் பேரினவாதம், சிங்களப் பெளத்தமே அரச அதிகார மதம் என்று சொல்வதன் மூலம் ஒருவகை அதிகாரத்தை பெளத்தத்துக்குக் கொடுப்பதைச் சொல்லிக் கொள்ளலாம். அதன் இன்னொரு முனைதான் இப்போது மீண்டும் வென்றுள்ள டிரம்ப் பைபிளை மீண்டும் அமெரிக்காவின் மீட்டெடுத்த  வெள்ளையினப் பெருமிதமாக முன்வைப்பதாகும்.
 
நான் மீண்டும் இலங்கை அரசின் பின் நவீனத்துவ நிலவரத்துக்கு வருகின்றேன். பின் நவீனத்துவம் பெருங்கதையாடல்களை நிராகரிக்கும் அதேவேளை, இனிப் பெரும் புரட்சிகளால் மாற்றங்கள் நிகழாது என்பதையும் விலத்தி வைக்கவே செய்கின்றது. ஏனெனில் இந்த குவிப்பு (unity) என்பது எப்படியோ பெரும் அதிகாரத்தைக்  (totality)கொண்டுவருகின்றது என்று சந்தேகப்படச் சொல்கின்றது. சிறு குழுக்களால் அதிகாரத்தில் மாற்றங்களை ஏதேனும் ஒரு வகையில் மேற்குலகில் கொண்டுவந்தற்கு கறுப்பினத்தவர்களில் 'Black Lives Matter', கனடாவில் பூர்வீகக்குடிகளின் 'Idle No More' போன்றவற்றை அவ்வப்போது உதாரணங்களாகச் சொல்வதுண்டு.

இன்னொருவகையில் இடதுசாரி ஆயுதப்புரட்சிகளை இரண்டு வெவ்வேறு காலங்களில் நிகழ்த்திய ஜேவிபியின் பின்னணியில் இருந்து வருகின்ற, இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸநாயக்க ஒரு இடதுசாரியா என ஒரு நேர்காணலில் பாக்கியசோதி சரவணமுத்துவிடம் கேட்கும்போது Anura is a pragmatist, not a Marxist என்று சொல்கிறார். அதாவது அநுர யதார்த்தவாதியே தவிர இடதுசாரி கொள்கைகளைக் கடைப்பிடிக்கக் கூடிய ஒருவர் அல்ல என்கின்றார் (இல்லாவிட்டால் எந்த அசலான இடதுசாரி IMFஉடன் கடன்வாங்கும் பேச்சுக்களைத் தொடர்ந்து நடத்த முடியும்?)

மேலும் அநுரவின் என்பிபி கூட்டணி, இடதுசாரி அரசியலை முன்வைத்து மக்களிடம் வாக்குக் கேட்டவர்களும் அல்ல. அவர்களின் முக்கியமான தேர்தல் விஞ்ஞாபமானதாக இருந்தது இலஞ்ச ஒழிப்பு (Anti-Corruption). இத்துடன் இலங்கை வீழ்ச்சியில் இருந்து எழுவதற்கு, பொருளாதாரச் சீர்திருத்தமும் முக்கியமானது என்பதை மேலதிகமாகத் தம் தேர்தல் பரப்புரைகளில் சேர்த்துக் கொண்டனர். ஆனால் அந்தப் பொருளாதாரச் சீர்திருத்தம் மார்க்ஸின் பொருளாதாரத்தின் அடிப்படையில் வரப்போவதில்லை என்பதையும் நாமறிவோம். வேண்டுமெனில் என்பிபியினர் கொண்டு வரும் சீர்திருத்தம் நியோ-லிபரல்களுக்குரிய ஒன்றாக இருக்கக்கூடும் என நம்பலாம். இல்லாவிட்டால் இன்றிருக்கும் இலங்கையை என்றென்றைக்குமாகக் கட்டியெழுப்பவும் முடியாது என்பதே இலங்கையின் துயர யதார்த்தமாகவும் இருக்கின்றது.



3.

இந்தப் பின்னணியில்தான் -அதாவது இலஞ்ச ஒழிப்பும், பொருளாதாரச் சீர்திருத்தமும் - முக்கியப்படுத்தப்பட்டதால்தான்  சிறுபான்மையினரான தமிழர்களும், முஸ்லிம்களும், மலையகத்தமிழர்களும் என்பிபி கூட்டணியிருக்கு பெருவாரியாக வாக்களித்திருந்தனர். இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து சிங்கள மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்த ஜனாதிபதிக்கோ/சிங்களக் கட்சிக்கோ எதிரான நிலையில்தான் தமது ஆதரவை வழங்கிய வடக்கு கிழக்கு (மட்டக்களப்பு தவிர்த்து) மக்கள் பெருமளவில் வாக்களித்தது இலங்கையின் வரலாற்றிலே முக்கியமானது.

 'இலஞ்ச ஒழிப்பு' என்பது இத்தேர்தலில் முக்கியப்படுத்தப்பட்டதால்தான், அதற்கு முன்னர் யாழில் சில அரசாங்க வைத்தியசாலைகளில் நடக்கும் மருத்துவச் சீர்கேடுகளைப் பொதுவெளியில் கொண்டு வந்த வைத்தியரான  அருச்சுனாவும் வடமாகாணத்தில் சுயேட்சையாக நின்று வென்றிருக்கின்றார் என்று நம்புகின்றேன். இங்கே ஒருசாரார் அருச்சுனாவை கண்மூடி ஆதரிப்பதற்கும், இன்னொருபகுதியினர் அவரை எல்லாவற்றுக்கும் நக்கலடிப்பதற்கும் அப்பால் அருச்சுனாவின் வருகையை/வெற்றியை வைத்து ஒரு case study செய்து பார்க்கலாம்.

எப்படி அரகலய போராட்டத்தோடு ஜேவிபியினர் இளையவர்களை சமூகவலைத்தளங்களினூடாக அணுகி ஆதரவு பெற்றனரோ (மிகுதி அனைத்து மரபார்ந்த சிங்கள அரசியல் கட்சிகள் சமூகவலைத்தளங்களின் தாக்கத்தை கவனிக்கத் தவறியமை) அவ்வாறே சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தி அருச்சுனாவும் வெற்றி பெற்றிருக்கின்றார். இத்தனைக்கும் அவரின் சறுக்கல்கள், அவரின் சுயேட்சிக்குழுக்கள் நடந்த எதிர்ப்புக்கள் எனப் பல விடயங்கள் தேர்தல் காலங்களில் தொடர்ந்தபோதும், மரபார்ந்த தமிழ்க்கட்சிகளின் பல முக்கியமானவர்களை மண் கவ்வச் செய்து அருச்சுனா வென்றிருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.

சுமந்திரன் போன்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியமான நபரை மட்டுமில்லை, எப்போதும் நிலையான வாக்கு வங்கியை வைத்திருப்பவர் என்று கடந்த பல தசாப்தங்களாக நிரூபித்த டக்ளஸ் தேவானந்தாவைக் கூட தோற்கடித்து, அதுவும் இலங்கையில் பல நூற்றுக்கணக்கான சுயேட்சைக்குழுக்கள் நின்ற இத்தேர்தலில், ஒரேயொரு சுயேட்சைகுழு எம்பியாக பாராளுமன்றத்துக்கு அருச்சுனா சென்றிருக்கின்றார். இத்தனைக்கும் யாழின் முன்னாள் மேயராகவும், நிதானமாக அரசியல் செய்பவராகவும், பெரும்பாலான யாழ்ப்பாணர்கள் விரும்புவதாகச் சொல்லும் தமிழ்த்தேசியத்தின் மீது அபரித விருப்புமுள்ள மணிவண்ணனைக் கூட எளிதில் அருச்சுனா தோற்கடித்திருப்பதை பின் நவீனத்துவ நிலவரத்தின் நல்லதொரு உதாரணமாகக் காட்டலாம்.

இன்னொருவகையில் இது எனக்கு சிலியில் நடந்த ஒரு விடயத்தை நினைவூட்டுகின்றது. பினோச்சோயின் சர்வாதிகாரத்திற்குள் நெடுங்காலமாகச் சிக்கித் திணறிய மக்களுக்கு அதிலிருந்து தப்புவதற்கு ஒரு ஜனநாயக ரீதியாக சூழல் வருகின்றது. அதாவது 'இல்லை' (No) என்று பெரும்பான்மை வாக்களித்தால் பினோச்சோ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிப் போகவேண்டும். அந்தத் தேர்தலில் பினோச்சோவைத் தோற்கடிக்க அங்கிருக்கும் இடதுசாரிகள் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் எப்படி எதைச் செய்தாலும், என்ன புதிதாக நடந்துவிடப் போகின்றது என்ற அலுப்பில், இளம் வாக்காளர்கள் வாக்களிக்கவே விரும்பாமல்  இருக்கின்றனர். அப்போதுதான் ஒரு இடதுசாரிக் குழு, இந்த இல்லை' (No) க்கு வாக்களித்தால் நாட்டில் பாலும் தேனுமாக  coca colaவும், பார்ட்டிகளும், அமெரிக்கக் கனவுமாக மாறப்போகின்றதென்று விளம்பரங்கள் செய்து இளைஞர்களின் மனதை மாற்றியமைக்கின்றார்கள் (இதன் வரலாற்றை 'NO' என்கின்ற திரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் நன்கு அறிந்து கொள்ளலாம்). இறுதியில்  இந்தத் தேர்தலில் பினோச்சோ தோல்வியடைந்து சிலியிருந்து  ஐரோப்பா நாடொன்றுக்குத் தப்பியோடுகின்றார்.


அவ்வாறுதான் நாட்டில் எல்லாமே இலஞ்சத்தில் திளைத்திருக்க, ஒரு தன்னிலை அதன் அத்தனை பலவீனங்களோடும் எதிர்க்கேள்விகளும், அம்பலப்படுத்தல்களையும் செய்ய, வடமாகாணத்தில்  அருச்சுனா ஒரு வெற்றித் திருவுருவாக்கப்பட்டிருக்கின்றார். இந்த வெற்றியை நாம் சும்மா போகின்றபோக்கில் எள்ளல் செய்து கடந்துவிடாமல் இருந்தால் நிறையப் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். அடுத்த தேர்தலில் அருச்சுனா இதைமாதிரி வெல்வாரா இல்லையா அல்லது ஏதேனும் மரபான  கட்சியில் ஜக்கியமாவாரா என்பது எதிர்காலத்துக்குரியவை. இப்போது அவசியமும் அற்றது.

எனக்குப் பிடித்த தத்துவவாதியான தெரிதா 'எதிர்காலம் என்பதே நாம் நினைத்துக்கொண்டிருக்கும் எதிர்காலம் அல்ல' என்கிறார்.. எதிர்காலம் கணிக்கக்கூடியதும், திட்டமிடப்படக்கூடியதும், அட்டவணைப்படுத்தக்கூடியதும்.... ஓரளவு எதிர்வுகொள்ளக்கூடியதும் என்பதைத் தெரிதா மறுக்கின்றார். இது எதிர்காலம் என்றாலும் எதிர்காலம் என்று நமக்குத் தெரிந்த எதிர்காலத்தைத் தாண்டிய எதிர்காலமே (future beyond this known future), தான் குறிப்பிடுகின்ற 'எதிர்காலம்' என்கின்றார் ('மற்றதுகளின் வருகைக்காய் காத்திருத்தல்'). அதாவது முற்றுமுழுதாக எதிர்பாராத ஒரு வருகைக்காக காத்திருப்பதைப் போன்றதே தான் குறிப்பிடும் எதிர்காலம் என்கின்றார் தெரிதா. அவ்வாறான ஒரு 'எதிர்காலம்'தான் இலங்கையில் இப்போது சாத்தியமாகின்றது என்று நினைக்கின்றேன். இல்லாவிட்டால் கடந்த தேர்தலில் 225 இருக்கைகள் உள்ள பாராளுமன்றத்தில் 3 இருக்கைகள் மட்டுமே வென்ற ஜேவிபி, இம்முறை கிட்டத்தட்ட 160 இருக்கைகளை வென்று இலங்கையின் தேர்தல் வரலாற்றில் நிகழாத அறுதிப்பெரும்பான்மைச் சாதனையை நாட்டியிருப்பதும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் 3% வாக்குகளைப் பெற்ற ஒருவர் இம்முறை 42% வாக்குகளைப் பெற்று நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக  இலங்கையில் வந்திருப்பதையும் யார்தான் கணித்திருக்க முடியும்?

ஆக, 'அரகலய'ப் போராட்டத்தில் இருந்து, இன்று அனுர குமார திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாக வென்றிருப்பதிலிருந்து, அருச்சுனா ஒரு சுயேட்சை வேட்பாளராக எம்பி ஆனது வரை எல்லாவற்றையும் பின் நவீனத்துவ நிலவரத்துக்குள் வைத்து விளங்கிக் கொள்ளப் பார்ப்பது சுவாரசியந் தரக்கூடியது. ஆனால் irony என்னவென்றால் நாம் ஒன்று உறைந்துபோன தமிழ் அரசியல் ஆய்வாளர்களின்  அரைத்த மாக்கதைகளில் சிக்குண்டு கிடப்போம், இல்லாவிட்டால் இன்றைய யூ-டியூப்பர்களின் கட்டுக்கதைகளில் 'சில்லறையைச் சிதற' விட்டுக் கொண்டிருப்போம். ஒருபோதும் வெவ்வேறு சிந்தனைப்புள்ளிகளில் வைத்து இலங்கை அரசியலை விளங்கிக் கொள்வது பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளமாட்டோம்.

*****************

(நன்றி: 'அம்ருதா' - மார்கழி, 2024)

 புகைப்படங்கள்: இணையம்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம்

Thursday, September 14, 2023


பொரளையில் முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தலை, சிங்கள நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள சிங்கள நண்பனை அங்கு நான் செல்வதற்காகத் தொடர்பு கொண்டேன். அவர் ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் பின் எஞ்சிய பொருட்களைக் கொண்டு திறந்தவெளிக் கண்காட்சிகளை பொரளை உள்ளிட்ட இடங்களில் காட்சிப்படுத்தியவர். அப்போதுதான் கோத்தபயா ராஜபக்‌ஷே ஜனாதிபதியாயிருந்தார். அந்த அச்சம்/நெருக்கடிக்குள்ளும் அவர் இந்தப் படுகொலையின் வீரியம் தெரிய தம்மின மக்களிடையே அன்று உரையாடலைச் செய்து கொண்டிருந்தார். இந்நினைவு கூர்தலில் நிகழ்வொன்றுடன் கலந்துகொள்ள இருந்த என் நண்பன் ஒருங்கிணைப்பாளர்களுடன் ஏற்பட்ட முரண்களினால் இன்று கலந்துகொள்ளவில்லை என்றார். ஆகவே தனித்தே அங்கே சென்றேன். சாணக்கியன், ஸ்வாதிக்கா,ரஜீவ்காந்த் போன்ற தெரிந்த சில தமிழ் முகங்களைக் கண்டேன்.

சிங்கள இனவாதிகள், "இராணுவம் - போர் வெற்றி நாயகர்கள்" என்ற பதாதையுடன் வந்திறங்கி குழப்பினார்கள். ஒரு சிறு நினைவுகூர்தலுக்கு சாதாரண பொலிஸ், ஆர்ப்பாட்டங்களை அடக்கும் சிறப்பு பொலிஸ் (கறுப்பு உடை), அதிரடிப்படையினர் (STF) எனப் பெரும் படையே வந்திருந்தது. நிச்சயம் சாதாரண உடைகளில் உளவுத்துறையும் அங்கு மக்களுடன் கலந்து நின்றிருக்கும். கூடவே கண்ணீர்ப்புகை/தண்ணீர் பீச்சும் பாரிய வாகனம் உள்ளிட்ட இராணுவ வாகனங்களும் அணிவகுத்து நின்றன.

அமைதியான நினைவு கூர்தலுக்கு வழிகோலாது, வன்மமும், வன்முறையும் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்காது, நினைவுகூர வந்தவர்களையே ஆர்ப்பாட்டங்களை அடக்கும் பொலிஸும், அதிரடிப்படையினரும் "பொக்ஸ்" அடைத்து அடைத்து வீதியின் ஒரு கரைக்குக் கொண்டு வந்து அவ்விடத்தில் இருந்து அகற்றினர். கடந்த வருடம் அரகலியாப் போராட்டம் நடந்தபோது காலி முகப் போராட்டக்களத்தில்,


முள்ளிவாய்க்கால் நினைவு கூரப்பட்டபோது இனவாதம் வாலைச் சுருட்டிக் கொஞ்சம் இருந்தது. இம்முறை அவ்வாறில்லை என்று தன் அசல் முகத்தை பல்லிளித்துக் காட்டியது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை அமைதியாக நினைவுகூர முடியாதுவிட்டாலும், இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு நாம் செல்லவேண்டிய பாதை நெடியது என்பதை இனவாதிகள் தெளிவாக இராணுவ/பொலிஸ் துணையுடன் நமக்குச் சொல்லியிருக்கின்றார்கள்.

நான் ஓட்டோவில் நினைவுகூர்தலுக்காய் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இன்னொரு ஓட்டோவில் ஒருவர் வெள்ளைச் சட்டை, வெள்ளைக் காற்சட்டை அணிந்து, கையில் வெள்ளைப் பூக்களுடன் இருந்தார். வாகன நெருக்கடியால் நிகழ்விற்கு நேரமாகிவிட்டதென்று ஓட்டோவில் இருந்து அவர் இறங்கி ஓடிப் போகத் தொடங்கினார். அவர் ஓர் உண்மையான மனிதாபிமானிக்குரிய அடையாளம். அவரைப் பின்னர் நிகழ்வில் அடையாளங்கண்டு என்னை அறிமுகப்படுத்தி, நினைவுகூரலுக்கு வந்தமைக்கு நன்றி சொன்னேன்.

இனவாதிகள் இருக்கத் தான் செய்கின்றார்கள். ஆனால் என் சிங்கள நண்பனைப் போல, இந்த வெள்ளைச் சட்டை இளைஞன் போலத்தான் நிறையப் பேர் நிகழ்ந்தவற்றுக்காக வருந்தவும், இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முயன்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களிடையே எவ்வகையான அதிகாரமும் இல்லை. எனவே மலையிடுக்குகளில் அடங்கிப் போகும் குரல்களாக இவை இருக்கின்றது.

இன்றைப் போல அல்லாது, என்றோ ஒருநாள் அவர்களின் குரல்கள் பல இலட்சக்கணக்கான கூட்டுக்குரல்களாக வலிமையாக ஒலிக்கக் கூடும். அப்போது இந்த நாடு தனக்கான நிரந்தர அமைதியை அடையக் கூடும். அன்று ஒவ்வொரு சிறுபான்மையினமும் இது தனக்குரிய நாடென்றும் சொல்லி இறும்பூதெய்யவும் கூடும்.

ஆனால் அதுவரை...?


(May 18, 2023)

சாந்தனின் படைப்புலகம்

Monday, January 04, 2010

'விளிம்பில் உலாவுதல்' குறுநாவல்களின் தொகுப்பை முன்வைத்து
1.

ஈழ‌த்துப் ப‌டைப்பாளிக‌ளில் முக்கிய‌மான‌ ஒருவ‌ரான‌ சாந்த‌ன் நெடுங்கால‌மாக‌ எழுதி வ‌ருகின்ற‌வ‌ர். ஈழ‌த்தில் முற்போக்கு அலை, வீச்சுட‌ன் இருந்த‌ எழுப‌துக‌ளில் அத‌னுள் எற்றுப்ப‌ட்டுப்போகாம‌ல் த‌ன‌க்குரிய‌ கதை சொல்லும் முறையை இவர் த‌னித்துவ‌மாய்க் கொண்ட‌வ‌ர். சாந்த‌னின் தொட‌க்க‌ கால‌ க‌தைக‌ள் ‍‍-அவ‌ரே ஓரிட‌த்தில் ‍குறிப்பிடுவ‌தைப் போல‌-பேருந்துக‌ளிலும் புகைவ‌ண்டிக‌ளிலும் நிக‌ழ்ப‌வை. எளிய‌ ம‌னித‌ர்க‌ளும், சாதார‌ண‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் சாந்த‌னின் க‌தையுல‌க‌த்தில் பெரும்பாலும் நுழைந்தாலும் அவ‌ர்க‌ளை/அவ‌ற்றை ம‌ற‌க்க‌முடியாத‌வ‌ர்க‌ளாய் மாற்றிக்கொள்வ‌தில்தான் சாந்த‌ன் என்னும் ப‌டைப்பாளி முக்கிய‌ம் உடைய‌வ‌ராக‌விடுகின்றார். சாந்த‌ன் த‌ன‌து பாத்திர‌ங்க‌ளின் வ‌ர்ண‌னைக‌ளுக்கு அதிக‌ இட‌ம் எடுத்துக்கொள்வ‌தில்லை. பெரும்பாலான அவரது க‌தைக‌ள், ஏதோ இர‌ண்டு ம‌னித‌ர்க‌ள் க‌தைத்துக்கொண்டிருக்கும்போது -இடையில் நுழைகின்ற‌ மூன்றாவ‌து ம‌னித‌ன் எப்ப‌டி உரையாட‌லில் ப‌ங்குகொள்வானோ- அப்ப‌டியே ச‌டுதியாக‌ க‌தைக‌ள் ஆர‌ம்பித்து அதிக‌ம் அல‌ட்ட‌லில்லாது சொல்ல‌ வ‌ந்த‌தைக் கூறிவிட்டு அதேவேக‌த்தில் முடிந்தும்விடுகின்ற‌ன‌. அத‌னாலேயே அவ‌ர‌து அதிக‌ சிறுக‌தைக‌ள் ஒரு சில‌ ப‌கக‌ங்க‌ளிலோ (சிலவேளைக‌ளில் ஒரு ப‌க்க‌த்தில் கூட‌) முடிந்துவிடுகின்ற‌வையாக‌ இருக்கின்ற‌ன‌. குறுநாவ‌ல்க‌ளின் அத்தியாங்க‌ளுக்குக் கூட‌ அதிக‌ ப‌க்க‌ங்க‌ளைச் செல‌வ‌ழிக்க‌ விரும்புவ‌தில்லை சாந்த‌ன். அதனால் என்ன‌, குறைந்த‌ ப‌க்க‌ங்க‌ள் கொண்ட‌ க‌தைக‌ள் என்றாலும் சாந்த‌னின் க‌தைக‌ள் சுரீரென்று எங்கோ ம‌ன‌தில் குத்திவிட்டு ந‌க‌ர‌த்தான் செய்கின்ற‌ன‌.

ஒரு ப‌டைப்பாளி என்ப‌வ‌ர் எப்போதும் விசால‌மான‌ ம‌ன‌தோடு இருக்க‌வேண்டும். தொட‌ர்ச்சியாக‌ சுற்றியிருப்ப‌வை குறித்து அவதானித்து, வேண்டிய‌வ‌ற்றை எடுத்தும் வேண்டாத‌வ‌ற்றை வ‌டிக‌ட்டிய‌ப‌டியும் இருக்க‌வேண்டும். ப‌டைப்பாளிக‌ள் ப‌ல்வேறு மொழிக‌ளை அறிந்துவைத்திருப்ப‌தும், வித்தியாச‌மான‌ க‌லாசார‌ப்பின்ன‌ணிக‌ளில் வாழ‌ நேர்கின்ற‌போதும், ப‌டைப்புக்க‌ள் ப‌ன்மைத்துவ‌மாய் முகிழும் ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ள் அதிக‌ம் இருக்கின்ற‌ன‌ சில‌ர் எங்குபோனாலும் கிண‌ற்ற்துத‌வ‌ளையாக‌ த‌ம‌து க‌லாசார‌மும் மொழியும் ம‌ட்டுமே உய‌ரிய‌து என்று க‌த்திக்கொண்டிருப்பார்க‌ள், அவ‌ர்க‌ளை இப்போதைக்கு மறந்து விடுவோம். சாந்த‌னுக்கு த‌மிழ், சிங்க‌ள‌ம், ஆங்கில‌ம் ஆகிய மூன்று மொழிக‌ளில் ந‌ன்கு தேர்ச்சி இருக்கின்ற‌து; இர‌ஷ்ய‌மொழியை விரும்பிக் க‌ற்றுமிருக்கின்றார். அத‌ன் நிமித்த‌ம் மொஸ்கோவுக்கு -சோவிய‌த்து ஒன்றிய‌த்தின் அழைப்பின்பேரில்- ப‌ய‌ணித்துமிருக்கின்றார். 1966 - 1980 வ‌ரை க‌ட்டுப்பெத்தை, கொழும்பு, திருக்கோண‌ம‌லை போன்ற‌ யாழ்ப்பாண‌த்தைத் தாண்டிய நகரங்களில் வாழ்ந்த‌ சாந்த‌னின் அனுப‌வ‌ங்க‌ளும், ஆர‌ம்ப‌கால‌ங்க‌ளில் அவருக்கு அதிக ஈர்ப்பிருந்த‌ மார்க‌சிச‌மும் அவ‌ர‌து ப‌டைப்புல‌கிற்கு இன்னும் வளத்தைக் கொடுக்கின்றன சொந்தமண்ணைவிட்டுப் பிரிவதில்லையென்ற வைராக்கியத்தில். -1980க‌ளின் பின் யாழை விட்டு வெளியேற‌விட்டாலும்- அவ‌ரால் ஈழ‌த்தில் எல்லா ம‌க்க‌ளையும் ப‌டைப்பின் மூல‌ம் நேசிக்க‌ முடிகின்ற‌து.


'விளிம்பில் உலாவுத‌ல்' என்கின்ற‌ இத்தொகுப்பில் சாந்த‌னின் அய்ந்து குறுநாவ‌ல்க‌ள் இருக்கின்ற‌ன‌. அவை 1984 லிருந்து 2007 வ‌ரை ப‌ல்வேறு கால‌ க‌ட்ட‌ங்க‌ளில் எழுத‌ப்ப‌ட்ட‌வை. எந்த‌ ஒரு ப‌டைப்பும் அது சார்ந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பையும் க‌தைக்கான‌ ச‌முக‌ அரசிய‌ல் கார‌ண‌ங்க‌ளையும் நேர‌டியாக‌வோ அல்ல‌து ம‌றைமுக‌மாவோ உண‌ர்த்திக்கொண்டேயிருக்கும். புனைவுக‌ளினூடாக‌க் கூட, ஒரு கால‌க‌ட்ட‌த்தின் வ‌ர‌லாற்றைப் ப‌டிக்க‌லாம் என்று சில‌ சிந்த‌னையாள‌ர்க‌ள் குறிப்பிடுகின்றார்க‌ள். இன்றைய‌ சில‌ ஈழ‌த்து/புலம்பெய‌ர் ப‌டைப்பாளிக‌ள் நில‌த்தில் காலூன்றா வான‌த்துப் ப‌ற‌வைக‌ளாகிவிடுகின்ற‌ன‌ர் என்ப‌தும் ஒருவ‌கை அவ‌ல‌மே.

சாந்த‌னின் க‌தைக‌ளில் வ‌ரும் சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளினூடாக‌ அந்த‌க்கால‌ அர‌சிய‌ல் சூழ‌ல்க‌ளும், நிக‌ழ்த்த‌ப்ப‌டுகின்ற‌ நில‌ப்ப‌ர‌ப்புக‌ளும் துல்லிய‌மாக‌க் காட்ட‌ப்ப‌டுகின்ற‌ன‌. ஏற‌த்தாழ அரை நூற்றாண்டுக‌ளாய் அரசிய‌ல் ப‌த‌ற்ற‌ங்க‌ளோடேயிருக்கும் ஈழ‌த்தில் ஒவ்வொரு பிர‌தேச‌மும் அத‌ற்குரிய‌ அர‌சிய‌லைக் கொண்டிருக்கின்ற‌ன‌. யாழ்ப்பாண‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளும் கொழும்பில் இருப்ப‌வ‌ர்க‌ளும் வெவேறு சூழ‌லில் வாழ்ந்துகொண்டிருப்பார்க‌ள். அதேபோன்று யாழில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கும் ம‌ட்ட‌க்கிள‌ப்பில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்குமான‌ சூழ‌ல் வெவ்வேறு வ‌கையான‌து. யாழ்ப்பாண‌த்தில் ஒருகால‌க‌ட்ட‌த்திற்குப் பிற‌கு முற்றுமுழுதாக‌ த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டுமே வாழ்ந்து வ‌ந்திருக்கின்ற‌ன‌ர். ம‌லைய‌க‌ப் ப‌குதிக‌ளிலும், கொழும்பிலும் பெரும்பான்மை சிங்க‌ள ச‌மூக‌த்தோடு வாழ்ப‌வ‌ர்க‌ளுக்கான‌ சூழ‌ல் முற்றிலும் வேறுவித‌மான‌வை. ம‌ட்ட‌க்கிள‌ப்பு, திருக்கோண‌ம‌லை, அம்பாறை போன்ற‌ எல்லைக் கிராம‌ங்க‌ளிலும், குடியேற்ற‌த்திட்ட‌ங்க‌ளோடும் வாழ்ப‌வர்க‌ளுக்கான‌ சூழ‌ல் இவையெல்லாவ‌ற்றையும் விட‌ இன்னும் வித்தியாச‌மான‌வை. யாழில் நிறைய‌க் கால‌ம் வாழ்ந்தாலும்,வெவ்வேறு பிர‌தேச‌ங்க‌ளில் வாழ்நதிருந்ததால் சாந்த‌னின் க‌தைக‌ள் அவை சொல்ல‌ப்ப‌டுகின்ற சூழ‌லில் காலூன்றியே கதை சொல்கின்றன.

2.
இத்தொகுப்பிலுள்ள‌ முத‌ற்க‌தையான‌ 'ஆரைக‌ள்' கொழும்பின் பின்புல‌த்தில் நிக‌ழ்கின்ற‌து. 1977 க‌ல‌வ‌ர‌ம் முடிந்து மீண்டு வந்து வேலை செய்யும்போது த‌மிழ‌ர்க‌ளுக்கிடையில் இருக்கும் சாதி பார்த்து ப‌ழ‌கும்/ கூட‌ச்சேர்ந்து தேநீர் குடிக்கும் ப‌ழ‌க்க‌ங்க‌ளை இன‌ங்காட்டுகின்ற‌து இக்க‌தை. எத்த‌கைய‌ அசாத‌ர‌ண‌ சூழ்நிலையாய் இருந்தால் என்ன, தொழில்ச‌ங்க‌ அமைப்புக்க‌ளாய் இருந்தால் என்ன‌, இவ‌ற்றை மீறி ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் ம‌ன‌ங்க‌ளிடையே ஊடுருவியுள்ள‌ சாதி ஒருபோதும் ம‌றைவ‌தேயில்லை என்பதை மறைமுகமாய் உணர்த்துகின்றது. நான்கு வ‌ருட‌ங்க‌ளாய் ஒரே அலுவ‌ல‌க‌த்தில் வேலை செய்தும் கதைசொல்லியைப் பார்த்து சிறிதும் புன்ன‌கைக்காத‌ த‌ன‌பால் இறுதியில் க‌தைக்க‌த் தொட‌ங்குகின்றார். அத‌ற்கு அவ‌ர் கூறும் கார‌ண‌ம் 'க‌ன‌நாளைக்குப் பிற‌கு இவ‌ன் மூர்த்திதான் சொன்னான், எட‌ போய்யா, அவ‌ன் சுண்டியெடுத்த‌ வெள்ளாள‌ன் எல்லோ எண்டு'. ஒரு உய‌ர்ந்த‌ சாதிக்கார‌ன் இன்னொருவ‌னோடு உரையாடுவ‌த‌ற்கான‌ முன் நிப‌ந்த‌னையாக‌ இருக்க‌வேண்டிய‌து, ம‌ற்ற‌வ‌ரும் உய‌ர்ந்த‌ சாதிக்கார‌ராய் இருக்க‌வேண்டும் என்ப‌தை நினைத்து, க‌தை சொல்லி ஏள‌னமாய்ச் சிரித்துக்கொள்வதோடு கதை முடிந்துவிடுகின்றது.

இர‌ண்டாவ‌து க‌தையான‌ 'உற‌வுக‌ள் ஆயிர‌ம்' ர‌ஷ்யாவில் நிக‌ழ்கின்ற‌து. க‌தை சொல்லி, கொழும்பிலிருந்த‌ கால‌த்தில், விருப்பின்பேரில் ர‌ஷ்ய‌ மொழி க‌ற்க‌, அவ‌ரை ர‌ஷ்யாவைச் சுற்றிப் பார்க்க‌ அழைக்கின்றார்க‌ள். ஈழ‌த்தில் இளைஞ‌ர்க‌ள் இய‌க்க‌ங்க‌ளாய்த் த‌ங்க‌ளை த‌க‌வ‌மைத்துக் கொள்கின்ற‌ கால‌க‌ட்ட‌ம் அது. மிக‌வும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வேலையிலிருந்து விடுமுறை எடுத்து க‌தைசொல்லி ர‌ஷ்யாவுக்குப் ப‌ய‌ணிக்கின்றார். அங்கே ப‌ல்வேறு நாடுக‌ளிலிருந்து வ‌ந்த‌ ப‌ல்வேறும மொழிக‌ளைப் பேசுப‌வ‌ர்க‌ளோடு ப‌ழ‌கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கிற‌து. அந்த‌வேளையில் கேர‌ளாவிலிருந்த‌ வ‌ந்த‌ கீதாவுக்கும் க‌தை சொல்லிக்கும் இடையில் மெல்லிய‌ காத‌ல் முகிழ்வ‌து அழ‌காக‌ச் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஆனால் வெளிநாட்டுப்ப‌ய‌ண‌த்தைக் கூட‌க் குதூக‌லிக்க‌ முடியாது இடையில் இல‌ங்கையிலிருந்து ஒரு செய்தி(வ‌த‌ந்தி) ப‌ர‌வுகின்ற‌து. க‌ட்டுநாய‌க்காவில் போய் இற‌ங்குகின்ற‌ த‌மிழ‌ர்க‌ளையெல்லாம் இல‌ங்கை அர‌சு பிடித்துக்கொண்டு போய் சிறையில் அடைக்கிற‌தென்று. அந்த‌ அவ‌திக‌ளினால் க‌தைசொல்லியின் காத‌ல் கைந‌ழுவிப் போவ‌தையும் எப்ப‌டி க‌தைசொல்லி போய் க‌ட்டுநாய‌க்காவில் இற‌ங்க‌ப்போகின்றார் என்ற‌ ப‌தைபதைப்ப‌தையும் இக்க‌தை ப‌திவுசெய்கின்ற‌து. இக்க‌தையை வாசிக்கும்போது ச‌ட்டென்று ம‌ன‌தில் வ‌ந்து தோன்றிய‌து அசோக‌மித்திர‌னின் 'ஒற்ற‌ன்' நாவ‌ல். எங்கிருந்தோ வ‌ந்து புதிய‌ சூழ‌லில் கொஞ்ச‌கால‌ம் ந‌ட்பாய்ப் ப‌ழ‌கி, பிற‌கு என்றென்றைக்குமாய் அவ‌ர்க‌ளில் ஒருவ‌ரையும் பார்க்க‌முடியாது பிரிகின்ற சூழ‌ல் மிகுந்த‌ நெகிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌து. அசோகமித்திர‌னின் 'ஒற்ற‌னும்', சாந்த‌னின் 'உற‌வுக‌ள் ஆயிர‌மும்' வெவ்வேறு க‌தைப் ப‌ர‌ப்பைக் கொண்டிருந்தாலும், இர‌ண்டிலும் க‌தைசொல்லிக‌ள் த‌ங்க‌ளுக்கு இதுவ‌ரை ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்தாத‌ புதிய‌ நாடொன்றுக்கு முத‌ன்முறை போகின்றனர். அத்தோடு தாங்க‌ள் இதுவ‌ரை பார்த்த‌றியாத‌ ம‌னித‌ர்க‌ளையும், க‌லாசார‌ங்க‌ளையும் த‌ங்க‌ள் பார்வையிலிருந்து பார்த்து எந்த முன்முடிவுகளும் எடுக்காது, அம்ம‌னித‌ர்க‌ளை அவர்களின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்வ‌துமென‌வும்... ஒத்த‌ த‌ன்மையுடைய‌வ‌னாய் இருக்கின்றன. தஸ்தயேவ்ஸ்கியின் 'வெண்ணிற‌ இர‌வு'க‌ளை வாசித்த‌ நில‌ப்ப‌ர‌ப்புக்கு தாங்க‌ள் உண்மையில் நிக‌ழ்கால‌த்தில் இருக்கின்றோம் என்று கீதாவும் க‌தைசொல்லியும் உரையாடும் பகுதியும், கீதா காத‌லுடன் ஒரு ம‌லையாள‌ப் பாட‌லை குழுவாய் இருக்கும்போது பாடுவ‌தை அப்ப‌டியே என்றென்னைக்குமாய் கதைசொல்லி நினைவில் வைத்திருப்ப‌துமான பகுதியும் வாசிப்பவருக்கு நெகிழ்ச்சி த‌ர‌க்கூடிய‌வையாகும்.

'ம‌னித‌ர்க‌ளும் ம‌னித‌ர்க‌ளும்' என்கின்ற‌ க‌தை 1977ம் ஆண்டு க‌ல‌வ‌ர‌ம் நிக‌ழும்போது கொழும்பில் சிக்கிக்கொண்ட‌ சில‌ குடும்ப‌ங்க‌ளின் க‌தையை அந்த‌ப் ப‌த‌ற்ற‌ங்க‌ளோடு முன்வைக்கின்ற‌து. கொழும்பில் இருப்ப‌து சாத்திய‌மில்லை என்கின்ற‌ நிலையில் அங்கிருக்கும் த‌மிழ்ம‌க்க‌ள் த‌ங்க‌ள் சொந்த‌ இட‌ங்க‌ளுக்கு புற‌ப்ப‌ட‌த்தொட‌ங்குகின்றார்க‌ள். அவ்வாறான‌வ‌ர்க‌ள் முத‌லில் அக‌தி முகாமில் த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்டு க‌ப்ப‌லில் ஏற்றிச் செல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். அஃதொரு நெடிய‌ ப‌ய‌ண‌ம். இவ்வாறு போவ‌தை விரும்பாத‌ சில‌ குடும்ப‌ங்க‌ள் புகைவ‌ண்டியில் போவ‌த‌ற்குத் தீர்மானிக்கின்ற‌ன‌ர். இர‌விலிருந்து விடிகாலை வ‌ரை ஊர‌டங்குச் ச‌ட்ட‌ம். இவற்றினூடாக‌ க‌தைசொல்லியும் அவ‌ர‌து ம‌னைவியும் இன்னொரு குடும்ப‌மும் த‌ப்பிப் போகின்றார்க‌ள் என்ப‌தைப் ப‌ற்றிய‌தே இக்க‌தை. க‌தையில் இத்த‌கைய‌ அவ‌திக‌ளுக்குள்ளும் த‌ங்க‌ளைக் காப்பாற்றும் ஒரு சிங்க‌ள ஆட்டோக்கார‌ருக்கும் அவ‌ரின் உத‌விக்குமாய் க‌தை சொல்லி நெகிழ்வ‌து மொழிக‌ளையும், இன‌ங்க‌ளையும் தாண்டிய‌ ம‌னித‌ர்க‌ளுக்குள்ள காருண்ய‌த்தைத் தெளிவாக‌க் காட்டுகின்ற‌து

'எழுத‌ப்ப‌ட்ட‌ அத்தியாய‌ங்க‌ள்' குறுநாவ‌ல் சுதும‌லையில் புலிக‌ளின் த‌லைமையை இந்திய‌ இராணுவ‌ உல‌ங்குவானூர்த்திக‌ள் ஏற்றிச்செல்வத‌ற்கான‌ காத்திருப்பில் தொட‌ங்கும் க‌தை க‌ட‌ந்த‌ கால‌த்தையும் நிகழ்காலத்தையும் நோக்கி முன்/பின்னாக ந‌க‌ர்கின்ற‌து. அவ்வ‌வ்போது வ‌ந்து போகும் ச‌மாதான‌ முயற்சிகளில் ம‌க்க‌ள் ந‌ம்பிக்கை கொள்வ‌தையும், இவ்வாறான‌ வானூர்த்திக‌ளே த‌ன‌க்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ளை முந்தைய ஆண்டுக‌ளில் ப‌லியும் எடுத்தும் இருக்கின்ற‌து என்ப‌தையும் கதைசொல்லி நினைவுகூர்கிறார். காத்துக்கொண்டிருக்கும்போது வ‌ழ‌மைபோல‌ அர‌சிய‌லும் பேச‌ப்ப‌டுகின்ற‌து. ஒரு கால‌த்தில் ந‌ம்பிக்கை த‌ர‌க்கூடிய‌தாய் இருந்த‌ இட‌துசாரி இய‌க்க‌த்தில் தான் இணைந்த‌தையும், அதிலிருந்த‌ சில‌ அர்ப்ப‌ணிப்புள்ள‌ த‌லைவ‌ர்க‌ளைப்ப‌ற்றியும் க‌தைசொல்லி அசைபோடுகின்றார். வ‌ட‌க்கு கிழ‌க்கிற்கு இணைப்புக்கு ஒரு ம‌க்க‌ள் வாக்கெடுப்பை வைப்ப‌துபோல‌ ஏன் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் முழு இலங்கையிலிருந்து பிரிந்துபோவ‌த‌ற்கான‌ ஒரு தேர்த‌லை இவ‌ர்க‌ள் ந‌ட‌த்த‌க்கூடாதென‌ ஒரு இட‌துசாரி வினாவ‌ச் செய்ததை கதை சொல்லி அசைபோடுகின்றார். இந்த‌ ச‌ம‌ய‌த்தில் ஒருவ‌ர் 'நீங்க‌ள் யாரோடு?' என்று கேட்கும்போது க‌தைசொல்லி 'நான் ச‌ன‌ங்க‌ளோடு' என்று கூறுவ‌தோடு ம‌க்க‌ள் ம‌ய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டிய‌ போராட்ட‌ம் இடைந‌டுவில் சிதைந்துபோன‌து குறித்தும் கவலைப்படுகின்றார். ஈழ அரசியலில் உன‌து நிலைப்பாடு என்ன‌வென்கின்ற‌போது, 'ச‌ன‌ங்க‌ள் எதைத் தீர்மானிக்கின்றார்க‌ளோ, அதுதான். என்னைப் பொறுத்த‌ளவிலை த‌மிழ‌ர்க‌ள் ஒரு த‌னித் தேசிய‌ இன‌ம். அவ‌ர்க‌ளுடைய‌ சுய‌நிர்ண‌ய‌ உரிமை ம‌றுக்க‌ப்ப‌டமுடியாதது. எந்த‌வித‌ சுர‌ண்ட‌ல்க‌ள் பாகுபாடுக‌ள், அட‌க்குமுறைக‌ள், அடிமைத்த‌ன‌ங்க‌ளுக்கும் ஆளாகாம‌ல் இறைமையோடும் கெள‌ர‌வத்தோடும் நாங்க‌ள் வாழ‌ ஏற்ற‌ வ‌ழி எந்த‌ வ‌ழி ஏற்ற‌து என்ப‌தைத் தெரிவு செய்கிற‌ சுத‌ந்திர‌ம் அவ‌ர்க‌ளுக்கு உண்டு. எந்த‌ வித‌த்திலென்றாலும் அவ‌ர்க‌ளுக்கு நியாய‌மும் பாதுகாப்பும் இருக்க‌வேண்டும். பிர‌ச்சினை தீர‌வேண்டும் அதுதான் முக்கிய‌ம்' என்று கதைசொல்லும் ப‌குதி இன்றைய‌ கால‌த்திற்கும் பொருந்த‌க்கூடிய‌தே.

'அடையாள‌ம்' என்கின்ற‌ க‌தை, நீண்ட‌ கால‌ம் க‌தைசொல்லி யாழ்ப்பாண‌த்தில் இருந்துவிட்டு ந‌ண்ப‌ரொருவ‌ரின் அழைப்பின்பேரில் இந்தியாவுக்கு ஒருவார‌ம் செல்கின்ற‌தைப் ப‌ற்றிய‌ க‌தை. யாழ்ப்பாண‌த்திலிருந்து கொழும்புக்கு வ‌ரும் க‌தைசொல்லிக்கு கொழும்பு மிகுந்த‌ ப‌த‌ற்ற‌த்தைத் த‌ருகின்ற‌து. பொலிஸ் ப‌திவு, பாதுகாப்புச் சோத‌னைக‌ள் போன்ற‌வ‌ற்றையெல்லாம் மிகுந்த‌ பய‌த்துட‌னேயே எதிர்கொள்கின்றார். வீதியில், லொட்ஜில் ச‌ந்திக்கும் த‌மிழ‌ர்க‌ளெல்லாம் த‌ன‌து ப‌ழைய‌கால‌த்தை நினைவுப‌டுத்தி பொலிசில் சிக்க‌வைத்து வைத்துவிடுவார்க‌ளோ என்ற‌ ப‌த‌ற்ற‌ம் தொட‌ர்ந்த‌ப‌டியே அவருக்கு இருக்கின்ற‌து. என்றாலும் கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தினைந்துவ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு ச‌ந்திக்கும் சிங்க‌ள் ந‌ண்ப‌ர் எவ்வித‌ மாற்ற‌மில்லாது ந‌ட்புட‌ன் இருப்ப‌து க‌தைசொல்லிக்கு நிம்ம‌தியாக‌ இருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் சொற்ப‌ வார‌த்திலும் எப்போது கொழும்புக்குத் திரும்பிப் போவ‌து.., அங்கே என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என்று அந்த‌ர‌த்தோடே க‌தைசொல்லி ஓடிக்கொண்டிருக்கின்றார். அந்த‌ப்ப‌ய‌ண‌த்தின்போது நீல‌ ப‌த்ம‌நாப‌ன், அருந்த‌தி ரோயையெல்லாம் ச‌ந்திப்ப‌தாக‌க் கூற‌ப்ப‌டுகின்ற‌து. க‌ட்டுநாய‌க்காவில் வ‌ந்து இற‌ங்கும்போது இவ‌ரை ஏற்றிச்செல்ல‌ எவ‌ருமில்லாது ஓட்டோவொன்றில் செல்லும்போது க‌தைசொல்லிக்கும், ஒரு சிங்க‌ள முதிய‌வ‌ருக்கும், இவ‌ர் முத‌ன்முத‌லான் சுவைக்கும் பிய‌ருக்கும் இடையில் நிக‌ழும் உரையாட‌ல் நினைவில் நிற்க‌க்கூடிய‌து. த‌ன்னையொரு த‌மிழ‌னாக‌ சோதனைச்சாவடிகளில் காட்டாதிருக்க‌ பிய‌ரைக் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் குடித்துக்கொண்டு இருப்பது காப்பாற்றும் என்று இவர் ந‌ம்புகின்றார். இறுதியில் பார்த்தால் அந்த‌ பிய‌ர் கானில் 'ப்ளு ரைக‌ர்' என்ற பெய‌ருட‌ன் புலிப்ப‌ட‌மொன்றும் இருக்க‌ த‌ன‌து அச‌ட்டுத்த‌ன‌ம் க‌தைசொல்லிக்கு புரிகின்ற‌மாதிரி க‌தை முடியும்.

சாந்த‌ன் இதுவ‌ரை த‌மிழில் 15 தொகுப்புக்க‌ளையும், ஆங்கில‌த்தில் 4 தொகுப்புக்க‌ளை வெளியிட்டிருக்கின்றார். சாந்த‌னின் எழுப‌துக‌ளின் வ‌ந்த‌ தொகுப்பைப் பார்க்கும்போது அங்கே வ‌ரும் க‌தைசொல்லிக‌ள் ப‌ய‌ண‌த்தை உற்சாக‌மாய் மேற்கொள்ப‌வ‌ர்க‌ளாய்... நினைத்த‌ நேர‌த்தில் கொழும்பிலிருந்து யாழுக்கும், திரும‌லைக்கும் போக‌க்கூடிய‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள். ஆனால் இறுதியாய் வ‌ந்த‌ இததொகுப்பில் உள்ள கதைகளில் (80க‌ளின் ந‌டுப்ப‌குதிக்கு பின்) இப்ப‌ய‌ண‌ங்க‌ள் எவ்வ‌ளவு அல்ல‌ல்க‌ளுக்கும் ப‌தற்றங்க‌ளுக்குமிடையில் நிக‌ழ்கின்ற‌து என்ப‌தை விள‌ங்கிக்கொள்ள‌ முடியும். உண்மையில் இந்த‌ப் 'ப‌யண‌ங்க‌ளின் க‌தை'க‌ளினூடாக‌க் கூட‌ நாம் ஈழ‌த்தின் அர‌சியல் நில‌வ‌ர‌ங்க‌ளைப் புரிந்துகொள்ள‌ முடியும். எவ்வாறு த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ அர‌சிய‌ல் சூழ‌ல் ஈழத்தில் மாறிக்கொண்டிருந்த்ன என்பதை சாந்த‌னின் 70க‌ளின் கொழும்புச் சூழ‌லை முன்வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் முக்கிய‌ சாட்சிக‌ளாகும். சாந்த‌னின் யாழுக்கு அப்பால் வாழ்ந்த‌ சூழ்நிலை சிங்க‌ள ம‌க்க‌ளை வெறுத்தொதுக்காம‌ல் த‌மிழ‌ர்க‌ளின் மீதான‌ பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை மட்டுமே கூற‌க்கூடிய‌தாக‌ இருப்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

இந்த‌ அய்ந்து குறுநாவ‌ல்க‌ளில் -சாந்த‌னின் ஏனைய‌ அநேக‌ சிறுக‌தைக‌ளைப் போல‌வே- எந்த‌ப் பிர‌ச்சார‌த்தொனியும் புல‌ப்ப‌ட‌வில்லை. 'எழுத‌ப்ப‌ட்ட‌ அத்தியாய‌ங்க‌ள்' கதையில் கூட‌ அர‌சிய‌ல் வெளிப்ப‌டையாக‌ப் பேச‌ப்ப‌டுவ‌து, யாழ் சூழ‌லில் அவ்வாறு மக்கள் இருப்பது இய‌ல்பான‌ ஒன்றென‌க் காட்சிப்ப‌டுத்துவ‌த‌ற்கேயாகும். 1977ம் இன‌க்க‌ல‌வ‌ர‌த்தில் த‌ப்பிப்போவ‌த‌ன் ப‌த‌ற்ற‌த்தைத் 'ம‌னித‌ர்க‌ளும் ம‌னித‌ர்க‌ளும்' கதையில் த‌க்க‌வைத்திருந்தாலும் புகைவ‌ண்டியில் ஏறுவ‌தோடு க‌தையை சாந்தன் முடித்துவிடுகின்றார். தேவைக்க‌திம‌காய் புகைவ‌ண்டிப்ப‌ய‌ண‌த்தில் என்ன‌வெல்லாம் நிக‌ழ்ந்திருக்கும் என்றேல்லாம் விப‌ரிக்க‌வில்லை. அநேகமான கதைகளில் சாந்தன் வாசிப்பவருக்கான வெளியை கதை முடிந்தபின்னும் தருகின்றார். உதாரண்மாய் 'உறவுகள் ஆயிரம்' கதையில், கதை சொல்லி கட்டுநாயக்காவில் போயிறங்கும்போது என்ன நிகழப்போகின்ற பதற்றத்தை வாசிப்பவரிடையே படியவிட்டாலும், கதை மொஸ்கோவில் விமானம் ஏறுவதோடு முடிந்துவிடுகின்றது. கட்டுநாயக்காவில் என்ன நிகழ்ந்திருக்கும் என்ற வெளி வாசகருக்கு திறந்துவிடப்படுகின்றது. கட்டுநாயக்காவில் இறங்கி எளிதாக வெளியேறியவர் ஒருமாதிரியும், அங்கே சோதனைக் கெடுபிடிகளால் சிக்குப்பட்டு அல்லற்பட்டவர் வேறொரு மாதிரியுமாய் இக்கதையை வாசித்து முடிப்ப‌த‌ற்கான‌ வெளி தரப்படுகின்றது.

'உற‌வுக‌ள் ஆயிர‌ம்' க‌தையில் க‌றுப்பின‌த்த‌வ‌ர்க‌ளை 'நீக்ரோக்க‌ள்' என்று ஓரிட‌த்தில் குறிப்பிடுகின்ற‌து.இன்றைய‌ வ‌ழ‌க்கில்லாத‌, ஒரு இன‌த்துவேச‌ வார்த்தையாக‌ ம‌திப்பிட‌ப்ப‌டுகின்ற‌ இவ்வார்த்தையை சாந்த‌ன் அடுத்த‌ ப‌திப்பிலாவ‌து திருத்திக்கொள்ள‌வேண்டும். அத்தோடு 'ஆரைக‌ள்' க‌தையில் கொழும்பு போன்ற‌ பல்லின‌ச்சூழ‌லில் இருந்துகொண்டு, க‌ல‌வ‌ர‌த்தால் பாதிக்க‌ப்ப‌ட்டும் சாதி பார்ப்ப‌தை சாந்த‌ன் கேலி செய்தாலும், அதை முழுமையாக‌ தெளிவாக‌ ம‌றுக்காம‌ல் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ளை ஒரு ஏள‌ன‌ப் புன்ன‌கையால் எளிதாக‌க் க‌ட‌ந்துவிட‌முடியுமா என்ப‌தும் கேள்விக்குரிய‌து.  எனெனில் நாம் சாதி குறித்த‌ க‌தையாட‌ல்க‌ளில் மிக‌த் தீவிர‌மாக‌வே எதிர்வினையாற்ற‌ வேண்டியிருக்கிற‌து.

ஏறத்தாழ 40 வருடங்களுக்கு மேலாய் யாழ் சூழலில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும் சாந்தனுக்கு உரிய அங்கீகாரம் தமிழ்ச்சூழலில் கொடுக்கப்படவில்லையெனவே எண்ணத்தோன்றுகின்றது. சனங்களுக்கான கதையை அந்தச் சனங்களில் ஒருவராய் போர்ச்சூழலுக்குள் நின்று எழுதிக்கொண்டிருப்பவர்களை நமது தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் கவனித்ததாய் வரலாறுகளும் இல்லை என்பதும் உண்மையே. ஈழத்தின் அரசியல் வரலாற்றை -புனைவுக‌ளினூடாக‌- அறிந்துகொள்ள விரும்புவர்கள், 1970களிலிருந்து 2000 வரையான‌ சாந்த‌னின் கதைகளை வாசித்தால் தமிழர்கள் எவ்வாறு வரலாற்றில் நுட்ப‌மாய் திட்ட‌மிட்டு ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பதையறிய முடியும். அதேபோன்று தமிழர்களின் அரசியல் வரலாற்றில் விடப்பட்ட தவறுகளும், இழைக்கப்பட்ட துரோகங்களும் கூட சாந்தனின் கதைகள் பூடகமாய் பதிவுசெய்வதையும் நாம் கவனிக்கவேண்டும். சாந்தனைப் போன்ற பல்லின மொழி மக்களோடு பரிட்சமுடைய படைப்பாளிகளின் குரல்களை இலங்கை அதிகார வர்க்கங்களோ, தமிழ்ப்போராட்ட இயக்கங்களோ அதிகம் செவிமடுத்திருந்தால் நாம் இன்றைய பேரழிவுக்கு வந்திருக்கமாட்டோமோ என்ற ஆதங்கம் எழுவதைத் த‌விர்க்க‌வும் முடிவதுமில்லை. சாந்தனின் கதைகள், பிறரை நேசிப்பதற்கான விசாலமனதையும், எதிர்க்கருத்தாய் இருந்தாலும் செவிகளைத் திறந்து வைத்துக் கேட்பதையும்தான் வேண்டி நிற்கின்ற‌ன‌ போல‌த் தெரிகின்ற‌து.

இக்க‌ட்டுரைக்காய் மேல‌திக‌மாய் உத‌விய‌வை:
காலங்கள் (1984)
ஒரே ஒரு ஊரிலே (1975)

விக்கிபீடியா (சாந்த‌னின் புகைப்ப‌ட‌ம்)

(கூர் 2010ம் ஆண்டு தொகுப்பிற்காய் எழுதிய‌து)

த‌மிழ் முகாங்க‌ள் - NY Times, Editorial

Friday, July 17, 2009


த‌மிழ்ப்புலி கெரில்லாக்க‌ளை வெற்றி கொண்ட‌தாய் அறிவிக்க‌ப்ப‌ட்டு இர‌ண்டு மாத‌ங்க‌ளின் பின்னும், இல‌ங்கை அர‌சாங்க‌ம் இட‌ம்பெய‌ர்ந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ் ம‌க்க‌ளை இன்ன‌மும் 'ந‌ல‌ன்புரி கிராம‌ங்க‌ள்' என‌ப்ப‌டும், ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ இராணுவ‌ விசார‌ணை முகாங்க‌ளாய்த் தெரிகின்ற‌ இட‌ங்க‌ளில் த‌ங்க‌வைத்திருக்கின்ற‌து.

மிக‌வும் கோரமான‌ போரின் இறுதிக்க‌ட்ட‌த்தில் கெரில்லாக்க‌ளால் பய‌ண‌க்கைதிக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ இங்கிருக்கும் ம‌க்க‌ளில் அநேக‌ர், முகாங்க‌ளில் இருந்து வெளியே செல்ல‌ அனும‌திக்க‌ப்ப‌ட‌வோ, ம‌னித‌ உரிமை நிறுவனங்க‌ளாலோ அல்ல‌து ப‌த்திரிகையாள‌ராலோ அணுக‌வோ முடியாது இருக்கிறார்க‌ள்.


அர‌சாங்க‌ம், இங்கிருக்கும் அக‌திக‌ளிலிருந்து த‌மிழ்ப் புலிக‌ளைத் தாங்க‌ள் பிரித்த‌றிந்துவிட்டும், த‌மிழ்க் கிராம‌ங்க‌ளிலுள்ள‌ மிதிவெடிக‌ளை அகற்றிய‌பின்னும் ம‌க்க‌ளை (அவ‌ர்க‌ளின் சொந்த‌ இட‌ங்க‌ளுக்கு) திரும்பிச் செல்ல‌ அனும‌திப்பார்களென‌க் கூறுகின்ற‌து. இங்கிருக்கும் ம‌க்க‌ளுக்குள் முன்னாள் கெரில்லாக்க‌ள் ப‌துங்கியிருக்க‌க் கூடும். த‌மிழ்ப் புலிக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளை எவ்விதப் பெறும‌தியும் இல்லாது பாவித்திருக்கின்றார்க‌ள் என்ப‌திலும், ஆண்க‌ளையும் குழ‌ந்தைக‌ளையும் ப‌ல‌வ‌ந்த‌மாய் த‌ங்க‌ள் இய‌க்க‌த்தில் சேர்ந்திருக்கின்றார்க‌ள் என்ப‌திலும் எத்த‌கைய‌ அற‌மும் இருக்க‌வில்லை. ஆனால் இங்கிருப்ப‌வ‌ர்க‌ளை விசார‌ணை செய்யும் முறை நீண்ட‌கால‌த்திற்கு இழுத்த‌டித்துக்கொண்டே செல்கின்ற‌து. அநேக‌ அக‌திக‌ள் இதை த‌மிழ்ச் சிறுபான்மையின‌ருக்கு எதிரான‌ இன்னொருவ‌கையான‌ துஷ்பிர‌யோக‌மாக‌வே பார்க்கின்ற‌ன‌ர். ஒரு மூத்த‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதி, நியூயோர்க் ரைம்ஸின் லிடியா போல்கிறினுக்கு கூறுகின்ற‌போது, "இது எதிர்கால‌த்தில் இன்னொருவ‌கையான‌ பிர‌ச்சினைக்கு எளிதாக‌ வ‌ழிவ‌குக்கும். ஜ‌னாதிப‌தி ம‌கிந்த‌ ராஜப‌க்ஷா, த‌மிழ‌ர்க‌ளின் மீள்சீர‌மைப்பை உண்மையில் விரும்புகின்றார் என்றால், அவ‌ர் இப்போதே இந்த‌ ம‌க்க‌ளை அவ‌ர்க‌ளின் சொந்த‌ இட‌ங்க‌ளுக்குத் திரும்பிச் செல்ல‌ அனும‌திக்க‌ வேண்டும்" என்கிறார்.

முகாங்க‌ளிலுள்ள‌வ‌ர்க‌ளை ச‌ந்திப்பதை அர‌சாங்க‌ம் க‌டுமையாயாய்க் க‌ட்டுப்ப‌டுத்துவ‌தைப் பார்க்கும்போது, இது போரின் க‌டைசிமாத‌ங்க‌ளில் அர‌சால் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌தாய் ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌ துஷ்பிர‌யோக‌ங்க‌ளுக்கான‌ விசார‌ணைக‌ளைத் த‌டுப்ப‌த‌ற்கான‌ முய‌ற்சிக‌ள் போன்ற‌ ச‌ந்தேக‌த்தையே எழுப்புகின்ற‌து. இராணுவ‌ம், புலிக‌ளை மிக‌ ஒடுங்கிய‌ க‌ட‌ற்க‌ரையோர‌மாக சுற்றிவ‌ளைத்த‌போது, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளும் அக‌ப்ப‌ட்டிருந்தார்க‌ள்; ம‌னித‌ உரிமை நிறுவ‌ன‌ங்க‌ளின் கூற்றுப்ப‌டி, தொட‌ர்ச்சியாக‌ இங்கே எறிக‌ணைக‌ள் வீச‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஜ‌.நா ச‌பை, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள் என்று கூறுகின்ற‌து, ஆனால் எப்ப‌டி, யாரால் என்கின்ற‌ கேள்விக‌ள், சுயாதீன‌ விசார‌ணைக‌ள் இல்லாத‌தால் இருண்மையாக‌வே இருக்கின்ற‌து.

உத‌வி வ‌ழ‌ங்கும் நாடுக‌ள் ‍-ஐக்கிய‌ அமெரிக்கா, ஐரோப்பிய‌ ச‌பை, ஜ‌ப்பான் - ‍ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌ அமைப்புக்க‌ள் உண‌வு, உறைவிட‌ம் ம‌ற்றும் உடைக‌ளை முகாங்களிலுள்ள‌ ம‌க்க‌ளுக்கு வ‌ழ‌ங்கி உத‌வி செய்துகொண்டிருக்கின்ற‌ன‌. ஆனால் அநேக‌ர் த‌மிழ‌ர்க‌ளின் நிலை குறித்து இதுவ‌ரை ம‌வுன‌மே சாதிக்கின்ற‌ன‌ர், எனெனில் இவ‌ர்க‌ள் இங்குள்ள‌ (முகாங்க‌ளின்) நிலைமைக‌ளை விம‌ர்சித்தால் தாங்க‌ள் முகாங்க‌ளிலிருந்து வெளியேற்ற‌ப்ப‌டுவார்க‌ளென‌ அஞ்சுகின்றார்க‌ள். அமைதியாக‌ இருப்ப‌த‌ற்கான‌ கால‌ம் முடிகின்ற‌து. த‌மிழ‌ர்க‌ளுக்கு உத‌வுவ‌த‌ற்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ வ‌ழி, அவ‌ர்க‌ளுக்கான‌ சுதந்திர‌த்தை வேண்டுவ‌தும், இந்த‌ ‍நீண்ட‌ விசார‌ணைக‌ளை‍ முடிவுக்குக் கொண்டுவ‌ருவ‌தும் தான்.



Thanks: NY Times (Jul 15, 2009)
த‌மிழாக்க‌ம்: டிசே

என‌க்குத் தெரிந்த‌ முருகைய‌ன்

Sunday, July 12, 2009

('முருகைய‌னின் வாழ்வும் நினைவும்' நிக‌ழ்வில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரை)

1.
இன்று முருகையனின் நினைவுப்பகிர்தலிற்காய் வந்திருக்கும் உங்களில் சிலர், முருகையனோடு நெருங்கிப் பழகியவர்களாக இருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரது வெளிவந்த படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். எனக்கு எப்படி முருகையன் முதலில் அறிமுகமானார் என காலப் பாதையில் பின்னோக்கி நகரும்போது, சிறுவயதுகளில் படித்த பாடப்புத்தகங்களின் மூலமாக அறிமுகமாயிருப்பார் போலத்தான் தோன்றுகின்றது. ஈழத்தில் படித்த காலத்தில் பாடக்குழு உறுப்பினர்களின் பெயரில் முருகையனின் பெயர் நீண்டகாலமாய் இருந்து வந்திருக்கின்றது. அப்போது அறிமுகமாகிய முருகையன், இப்போது எனக்கு தெரிகின்ற பன்முகத் திறமை கொண்டதொரு படைப்பாளியாக அறிமுகமாயிருக்கவில்லை என்பதும் உண்மை.

பின்னாட்களில் வாசித்த 'பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்' தொகுப்பின் மூலமாக முருகையன் எனக்குள் ஒரு கவிஞராக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார். எங்களுக்கென்று ஒரு நீண்ட கவிதைப் பராம்பரியம் இருந்து வந்திருக்கின்றது. மஹாகவி, நீலாவாணன், முருகையன், பசுபதி என்று தொடர்கின்ற வளமான மரபு எங்களுக்கு இருக்கின்றது. முருகையன் கவிஞராக மட்டுமில்லாது, நாடக ஆசிரியராக, கட்டுரையாசிரியராக,மொழிபெயர்ப்பாளராக எனப் பன்முகத்தனமையுடையவராக இருந்திருக்கின்றார். இவையெல்லாவற்றையும் விட, இன்று முருகையனின் மறைவை ஒட்டி எழுதப்படுகின்ற அஞ்சலிக்குறிப்புக்களைப் பார்க்கும்போது, முருகையன் ஓர் அற்புதமான மனிதராக வாழ்ந்திருக்கின்றார் போலத்தான் தெரிகிறது.

பட்டங்களோடும் பட்டோபங்களோடும் பலர் வாழ்ந்தாலும், அவர்களில் பலரால் நிலத்தில் காலூன்ற முடிவதில்லை; சக மனிதர்களை நேசிக்கத் தெரிவதில்லை. அந்தவகையில் பார்க்கும்போது, இவ்வாறானவர்களுக்கு எதிர்மாறாக, முருகையனும், ஏஜே கனகரட்னவும் வாழ்ந்து முடித்துவிட்டுப் போயிருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் தமது திறமைகளின் வெளிச்சத்தில் திளைக்காது, சக மனிதர்களை நேசித்துக்கொண்டு, சாதாரணமாய் வாழ்ந்த அருமையான மனிதர்கள். ஆதி மதங்களும், அண்மைக் காலத்து மார்க்சிசமும் போதித்ததும் சக மனிதர்களை உன்னைப் போல நேசி என்பதைத்தான். மதத்தையும் மார்க்சையும் வைத்து எத்தனையோ போலித்தனங்களும் பித்தலாட்டங்களும் நிகழ்ந்துகொண்டிருக்க, முருகையனும், ஏஜேவும் தங்களது வாழ்வின் மூலம், முக்கியமான ஒரு விடயத்தை சப்தமின்றி எங்களுக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கின்றார்கள்.

முருகையனின் படைப்புக்கள் முழுதையும் நான் வாசிக்கவில்லை என்பதை இங்கே குற்றவுணர்ச்சியுடன் தான் கூறவேண்டியிருக்கின்றது. தொகுப்பாய் முருகையனை வாசித்ததைவிட உதிரிகளாய் வாசித்ததே அதிகம். கவிதைத் தொகுப்புக்கள் என்று பார்க்கும்போது அவரது 'ஆதி பகவன்' மற்றும் 'ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்' ஆகிய இரு தொகுப்புக்களை மட்டுமே வாசித்திருக்கின்றேன். இந்த நிகழ்வில் பேசுவதற்காய், முருகையனின் வேறு கவிதைத் தொகுப்புக்கள் இருக்கின்றனவா என்று சில நண்பர்களிடம் வினாவியபோது முந்தைய காலங்களில் வெளியிட்டவை இப்போது அச்சில் இல்லை என்றார்கள் அவர்கள். நான் தேடியவை, முருகையனின் 'தரிசனம்', 'நெடும்பகல்', 'நாங்கள் மனிதர்', 'வந்துசேர்ந்தன' 'அது அவர்கள்', 'மாடுகளும் கயிறுகள் அறுக்கும்' போன்ற கவிதைத் தொகுப்புக்களாகும்.

2.
முருகையனோடு உறவு என்பது எனக்கு அவரது படைப்புக்களினூடாக மட்டும் என்பதால் முருகையனை முன்வைத்து ஈழம் மற்றும் புலம்பெயர் சூழலைப்பற்றி ஒரு சில அவதானங்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

தமிழுக்கு தொடர்ச்சியான நீண்ட மரபு இருப்பதை சங்க காலத்திலிருந்து முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஒரு சமூகத்தின் செழிப்பு என்பது, அது தனது மரபிலிருந்து அகழ்ந்து, தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு, தான் வாழும் காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுப்பது என்பதுதான். அவ்வாறு, நிகழ்காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாத ஒரு சமூகம், இறுதியில் முற்றுமுழுதாக அழிந்து போகின்றது; அல்லது இன்னொரு சமூகத்தோடு தன்னை இரண்டறக் கலக்கச் செய்கின்றது. இது மொழிக்கும் பொருந்தும், கலாசாரம் பண்பாடுகளுக்கும் பொருந்தும். இதைத்தான் டார்வின் 'தக்கண தப்பிப் பிழைக்கும்' என்றார். மார்க்சும் வேறொரு விதமாக, 'மாற்றம் என்பதே மாறாதது' என்றார். முருகையனும், 'வேண்டாத குப்பை விலக்கி, மணி பொறுக்கி/அப்பாலே செல்லும் அறிவோ குறைவு/ ஓ/ இரண்டாயிரம் ஆண்டுப் பழைய சுமை எங்களுக்கு;/ பண்பாட்டின் பேராற் பல சோலி எங்களுக்கு' என்றொரு கவிதையில் எச்சரிக்கவும் செய்கின்றார்.

மூத்தோர்களை மதிக்காத ஒரு சமூகம் வளமையுடைய ஒரு சமூகமாக இருப்பதில்லை. இதைத்தான், ஒரு முதியவர் இறந்துபோகும்போது 'ஒரு வாசிக சாலையே அழிந்துபோகின்றது' என்றொரு சீனப்பழமொழி கூறுகின்றது. முன்னே சென்ற மூத்தோர்களின் தோளில் நின்று ஏறிப் பார்த்தாலே நாம் இன்னும் முன்னேற முடியும். ஆனால் நம் தமிழ்ச் சமூகத்தில், நாம் நம் முன்னோர்களை எந்தளவுக்கு மதித்திருக்கின்றோம்? முருகையன் போன்ற படைப்பாளிகளின் படைப்புக்களை எந்தளவுக்கு மறுவாசிப்புச் செய்திருக்கின்றோம்? இவ்வளவு ஆளுமையுள்ள முருகையனை நாம் எந்தளவுக்கு பொதுவெளியில் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்?

சிவத்தம்பி அவர்கள் முருகையன் பற்றிய நினைவுக்குறிப்பில், முருகையனினதும் மஹாகவியினதும் இழப்பை பாரதி, பாரதிதாசனின் தொடர்ச்சியில் வைத்துப் பார்ப்பதாகக் கூறுகின்றார். முருகையன் முக்கியமான ஒரு புலமைத்துவ கவிஞர் (intellectual poet) என்றும் குறிப்பிடுகின்றார். அத்தோடு தனது வாழ்க்கைக்காலத்தில் முருகையனின் முழுத்தொகுப்பும் வெளிவந்து தமிழகத்திலும் அது பரவலாக அறிமுகப்படுத்தப்படுவதைப் பார்க்கவேண்டும் எனவும் பிரியப்படுகின்றார்.

3.
இப்போது சற்று காலத்தைப் பின்னோக்கி நகர்த்துவோம். எங்களுக்கு கைலாசபதி, சிவத்தம்பி, மு.தளையசிங்கம், சிவசேகரம், நுஃமான் போன்ற வலுவான விமர்சகர்களும், தத்துவப் புலமை உள்ளவர்களும் கிடைத்திருக்கின்றார்கள். இன்று சிவத்தம்பியையோ, கைலாசபதியையோ விமர்சித்து, கடந்துபோகின்ற எத்தனையோ தமிழகத்து அறிவுசார்துறையைச் சேர்ந்தவர்கள், ஈழத்து அறிவுஜீவிகளை தங்கள் எழுத்துக்களில் எங்கோ ஓரிடத்தில் அங்கீகரித்தே போகின்றார்கள். தங்களுக்கு இவ்வாறான கலை, இலக்கியங்களில் ஈடுபாடு வந்ததற்கு ஈழத்துத் திறனாய்வாளர்களும் ஒருவிதத்தில் காரணம் என்றே சிலர் கூறியும் இருக்கின்றார்கள். அந்த திறனாய்வு மரபு இப்போது எங்கே போயிற்று? ஈழத்தில் தசாப்தங்களாய் நிகழ்ந்துகொண்டிருந்த போர் ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம். ஈழத்தில் இருப்பவர்களுக்கு அது ஒருவகையில் பொருந்தவும் கூடும். ஆனால் புலம்பெயர்ந்து இருப்பவர்களிடையில் இருந்து கூட, இந்த மரபின் தொடர்ச்சி ஏன் வளர்க்கப்படவில்லை?

இந்தக் கேள்வியை ஏன் இங்கே எழுப்புகின்றேன் என்றால், அப்படியான ஒரு மரபு தொடர்ச்சியாய் வளர்ச்சி பெற்றிருக்குமானால, சிவத்தம்பி அவர்கள் இன்று கவலைப்படுவதைப் போல, முருகையனை இனியேனும் பரவலாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கேள்வி வந்திருக்காது. எனெனில் இப்படியாய் வாசிக்கவும் விமர்சிக்கின்றச் செய்கின்றதுமான ஒரு மரபு வந்திருந்தால், மூத்த தலைமுறையை அது ஆழமாக வாசித்து, விரிவான தளத்தில் அறிமுகம் செய்திருக்கும். எங்களுக்கு முன்னிருந்தவர்கள் என்ன செய்தார்கள், எத்தகைய தளங்களில் செயற்பட்டார்கள் போன்ற விபரங்கள் அறியாமலே அடுத்த தலைமுறைகள் வரத்தொடங்கிவிட்டன இந்த அவல நிலைதான், இன்றைய ஈழத்து/புலம்பெயர் கவிதைகள் தேங்கிப் போய் மேலே நகரமுடியாது மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதற்கும் காரணம். இன்று கவிதை எழுதுகின்ற பெண்கள் மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை தரக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். நாம் நம்மிடையே நமது படைப்பாளிகள் பற்றி விரிவான உரையாடல்களை நிகழ்த்தவே இல்லை. ஒரு குறுகிய வட்டத்தில் எமக்குப் பின்னால் ஒளிர்வது மட்டுமே சூரியன் என்று நினைத்து பிறருக்குப் பின்னால் சுழன்றிருக்கக் கூடிய பிரபஞ்சங்களைக் கைகழுவி விட்டுவிடோம் என்பதுதான் எங்களின் நிகழ்காலத்துச் சோகம்.

ஒரு காலத்தில் கவனித்தோம் என்றால், தமிழகத்தோடு எங்களுக்கு இருந்தது ஒருவகையான கொடுத்தல் வாங்கல் முறை. எங்களிடமிருக்கும் நல்லதை நாங்கள் தருகின்றோம், உங்களிடம் இருக்கும் அதி சிறந்தவைகளை நீங்களும் தாருங்கள் என்ற பரஸ்பரமான நட்புடன் இந்தக் கொடுத்தல் வாங்கல்கள் இருவழிப்பாதைகளில் நிகழ்ந்தன. ஆனால் எப்போது அவர்களிடமிருந்து பெறுவதை மட்டும் பெற்று அதை மட்டும் வைத்து திருப்திப்பட்டுக்கொள்வோம் என்று சுருங்கிக்கொண்டோமோ அப்போதே நாம் தேங்கிப் போனவர்களாய் ஆகிவிட்டோம். கொடுப்பதும் வாங்குவதும் சீராக நிகழ்ந்திருந்தால் நாம் கைலாசபதி, சிவத்தம்பி, சிவசேகரம், நுஃமான், தளையசிங்கம், என்றொரு வளமான மரபின் தொடர்ச்சியாக தமிழ்ச்சூழலில் நின்று, இன்று முருகையனைப் பெருமிதமாக வழியனுப்பிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் அவ்வாறு இல்லாததால்தான், இனியாவது முருகையன் பரவலாக விரிந்த தளத்தில் அறிமுகப்படுத்தவேண்டும் எனக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

எங்களில் பலருக்கு ஒரு காலத்தில் 'கணையாழி'யில் எழுதுவது என்பது, இலக்கியத்திற்கான சிம்மாசானம் கிடைத்துவிட்டதென்ற இறுமாப்பு இருந்திருக்கின்றது. பின்னர் சு.ராவின் 'காலச்சுவடி'ல் எழுதுவது என்பது பெரும்பெறென நினைப்பு இருந்தது. இப்போது எதில் எழுதினால் இலக்கிய அரண்மனையில் தாழ்ப்பாள்கள் திறக்கும் என்று தெரியவில்லை. அதற்காய் முயற்சிப்பவர்களிடம்தான் நாம் கேட்கவேண்டும். இன்றைய ஈழத்து/புலம்பெயர் படைப்பாளிகளில் பெரும்பாலானோர் தமது தனித்துவங்களை இழந்து, தமிழகத்துக் குழுக்களோடும் தனிநபர்களோடும் ஒட்டிக்கொள்கின்றார்கள். இந்நோய்தான் எங்களவர்களை விரிவான தளத்தில் அறிமுகப்படுத்த முடியாத வீழ்ச்சிக்கு வித்திட்டதெனக் கூறவேண்டியிருக்கிறது. இவ்வாறு தனிநபர்களையும், தமிழகத்துக் குழுக்களோடும் தங்களை அய்க்கியப்படுத்திவர்களுக்கு, தங்கள் தங்கள் பிதாமகர்களைக் காப்பாற்றவும், அவர்கள் சார்ந்திருக்கும் தத்துவச் சார்புகளை நியாயப்படுத்தவுமே இரவும் பகலுமெனப் பொழுது போய்விடுகின்றது. இதற்கு அப்பால் எப்படி தமது மூத்தோர்களையோ, சமகாலத்தவர்களையோ வாசிக்கவோ அறிமுகப்படுத்தவோ நேரம் கிடைக்கப்போகின்றது?

இப்படிக்கூறுவதால் தமிழகத்திலிருக்கும், ஈழத்து/புலம்பெயர் படைப்புக்கள் குறித்து உண்மையான அக்கறையுடையவர்களை கீழே இறக்குவதாக எண்ணவேண்டாம். நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுவது ஒருகாலத்தில் இரண்டு வகையான பாதையில் நடந்த கொடுத்தல் வாங்கல் உறவு இன்று ஒற்றைப் பாதையாக உருவாகிய அவலத்தைத்தான் கவனப்படுத்த விரும்புகின்றேன். பல தனிப்பட்ட உதாரணங்களை கூறி விரிவாக உரையாட விரும்பமிருந்தாலும், இஃதொரு நினைவுப்பகிர்தலாய் இருப்பதால் தவிர்த்துக்கொள்ள விரும்புகின்றேன். இன்றைய இணைய உலகம், தமிழை பல்வேறு தூர இடங்களிலிருந்து விரைவாக எங்கள் வாசல்களுக்கு எடுத்துவருகின்றது. பல தமிழக படைப்பாளிகள்/செயற்பாட்டாளர்கள் எங்களிடமிருந்து எங்கள் வாழ்வை அறிந்துகொள்ள தங்கள் மனங்களைத் திறந்தே வைத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நமது படைப்பாளிகளையும், இன்னமும் வெளிச்சம் பரவாத படைப்புக்களையும் விரிவாக நாம் தான் அறிமுகப்படுத்தவேண்டும். அதேபோன்று அவர்களிடமிருந்து வரும் நேர்மையான விமர்சனங்களையும் நாம் ஏற்று, எங்களுக்கிடையில் உரையாடல்களை நிகழ்த்திக்கொள்ளவேண்டும்.

4.
புலம்பெயர் படைப்பாளிகள் பலருக்கு தமது படைப்புக்களை எவரேனும் விமர்சனம் செய்தால் தலையிலிருந்து கால் வரை எரியத்தொடங்கிவிடுகின்றது. எத்தகைய ஒரு விமர்சனத்தை எவரொருவர் செய்தாலும், அந்தப்படைப்பு ஏதோ ஒருவகையில் விமர்சிப்பவரையும் பாதித்திருக்கின்றது என்ற மேலான எண்ணத்தைப் படைப்பாளிகள் வளர்த்துக்கொள்ளவேண்டும். 'ஆசிரியர் இறந்துவிட்டார்' என்று ரோலன் பார்த் கூறியதுமாதிரி, வாசிப்பவருக்கும் அவர் தனக்குரிய முறையில் வாசிப்புச் செய்வதற்கு முழுச் சுதந்திரம் உண்டு எனபதைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் எதைக் கொடுக்க விரும்புகின்றேனோ அதை மட்டுமே கொடுப்பேன், கேட்பதற்கு நீ யார் என்று எதிர் வினாத் தொடுக்கத் தொடங்கினால், கிணற்றுத்தவளையாக இருப்பதற்கான தகுதியை நாம் வளர்த்துக்கொள்கின்றோம் என்றுதான் அர்த்தம்.

முருகையன் ஒரு கவிஞ்ராகவும் நாடகப் பிரதியாளராகவும் இருந்திருக்கின்றார் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர் மொழிபெயர்ப்புச் செய்வது எப்படி என்பது குறித்து நல்லதொரு நூலை எழுதியுள்ளார் என்பதை எவருமே அதிகம் கவன்படுத்தவில்லை. அதேபோன்று இலக்கியம் குறித்து அவர் எழுதியது ஒரு நூலாக வந்துள்ளது. அண்மையில் ஒரு நிகழ்வில் ஒரு படைப்பாளி, விமர்சிப்பவர்கள் Love Bite மாதிரி, கடித்த இடம் தெரியவேண்டும், ஆனால் காயம் தெரியக்கூடாது என்றொரு புதிய வியாக்கியானத்தை திறனாய்வாளருக்குக் கொடுத்திருந்தார். இப்படி இப்படிக் கடித்தால்தான் சரியென்பதற்கு, நாம் இலக்கியத்திற்கும் வந்து காதலா செய்துகொண்டிருக்கின்றோம்? கலை இலக்கியத்தில் கறாரான பார்வை இருந்தால்தானே புத்தூக்கமுள்ள படைப்புக்கள் வெளிவரும். இதோ இங்கே அருகே உட்கார்ந்திருக்கின்ற சிவசேகரம் திறனாய்வு செய்து எத்தனையோ தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. நாம் சிவசேகரத்தின் திறனாய்வோடு முரண்படலாம். ஆனால் சிவசேகரத்தின் விரிவான வாசிப்புக்கள் நம்மை அப்படைப்புக்களைத் தேடி வாசிக்கவும், நமக்கான நம் பார்வைகளையும் உருவாக்கிக் கொள்ளவும், வழிகளைத் திற‌ந்திருக்கின்ற‌ன‌ என்பதை மறுக்க முடியாது அல்லவா? திறனாய்வாளர்கள் - படைப்பாளிகள் குறித்து முருகையன் 'இன்றைய உலகில் இலக்கியம்' என்ற நூலில் எழுதியுள்ளதைப் பாருங்கள்...

"விமரிசனத்தைக் கண்டு கிடுகிடுத்து நடுங்கும் மனோபாவம் நமது பழம்பெரும் எழுத்தாளர்களிடையும் உண்டு. தங்கள் படைப்பையிட்டு யாராவது, ஏதாவது குறைவாகச் சொல்லிவிட்டால், மனம் நொந்து வாடிப்போய் விடுகிறார்கள், இவர்கள்.


எழுதத் தொடங்கும் இளைய சிறுவர்களிடம் இந்த மனப்பான்மை இருந்தாலும் பரவாயில்லை. அதனை நாம் விளங்கிக்கொள்ளலாம். அவர்களுடைய உணர்ச்சி நொய்ம்மையைக் கவுரவிக்கலாம்; அதற்கு மதிப்பளிக்கலாம். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட, பேர் பெற்ற எழுத்தாளர்களே விமரிசனத்தைக் கண்டு மிரள்வது நமது இலக்கிய உலகில் உள்ள ஒரு குறைபாடு என்றே தோன்றுகிறது.

“பிரேத பிரிசோதனை செய்வதுபோல இலக்கியத்தை ஏன் வெட்டிக் கிழிக்கிறீர்கள்? கீறிப் பிளக்கிறீர்கள்? இப்படியெல்லாம் செய்தால் அதன் உயிராற்றலாகிய ஆன்மாவின் இராகங்களை நீங்கள் கேட்க மாட்டீர்கள். கலைஞனின் சுயதருமமும் சுயேச்சையும் விகசிதமாவதைக் காண இயலாத குருடர் ஆகிவிடுவீர்கள்;;’’ இப்படியெல்லாம் முறையிடுகிறார்கள், விமரிசனத்துக்கு முகங்கொடுக்கத் தயங்கும் படைப்பாளிகள்.

இன்னும் சொல்லுவார்கள். “பூத்துக் குலுக்கும் மலரின் வாசனையை மூக்கினால் மோந்து சுகித்தல் வேண்டும். பல பல வண்ணக் காட்சியினை விழிகளால் அள்ளி விழுங்குதல் வேண்டும். அப்படிச் செய்யாமல், பூவைப் பறித்துச் சாம்பலாக்கிச் சோதனைக் குழாய்க்குள் இட்டு அமிலங்களை ஊற்றுகிறீர்களே! பூவின் அழகு உங்களுக்கு எப்படிப் புலப்படும்? கலைப்படைப்பின் புனிதப் பூரிப்பு உங்களுக்கு எப்படிப் புரியும்?’’

இவை விமரிசகனை நோக்கி விடுக்கப்படும் வினாக்கள், இவையெல்லாம் இந்த வினாக்களுக்கு விமரிசகன் தரும் விடை என்ன? ஐயா எழுத்தாளரே, முதலில் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் உங்கள் எதிரி அல்லன் நண்பன்தான். உங்கள் படைப்புக்கும் உங்கள் வாசகனுக்கும் ஒரு தொடர்பை உண்டாக்குவதற்குத்தான் முயலுகிறேன். உங்களுக்கு உதவி செய்வதுதான் என் நோக்கம். இரண்டாவதாக, பிரேத பரிசோதனையிற் கீறிக் கிழிக்கப்படும் பிணம், பின்னர் உயிர் பெற்று எழுவதில்லை. எரிந்து சாம்பலாகிறது அல்லது மக்கிச் சிதைகிறது மண்புழுவுக்கு உணவாகிறது. இரசாயனச் சாலையிலே சோதனைக்கு உள்ளாகும் பூவும், பழையபடி திரும்பப் போய் மலர்ச் செடியில் உட்காரமுடியாது; உல்லாசமாக அசைய இயலாது; ஒயிலாக வீற்றிருக்க ஏலாது. ஆனால், என்னுடைய பரீசீலனைக்கு உட்படும் உங்களுக்கு படைப்பை நான் பகுத்தாலும் சிதைத்தாலும், அட்டவணைப்படுத்தினாலும், வரைவு கீறினாலும், கம்பியீற்றருள் ஊட்டினாலும், ஒப்புநோக்கினாலும், வேற்றுமை கண்டாலும், இவை எல்லாவற்றுக்கும் பிறகுகூட, உங்கள் படைப்பு உங்கள் படைப்பாக, அப்படியே, அலுங்காமல் நலுங்காமல், முழு உயிரோடு இருக்கிறது. எல்லா வாசகர்களும் அணுகக்கூடிய நிலையில் ஊறுபடாமல் பூரணமாக மிஞ்சியிருக்கிறது. ஆகவே உங்களுடைய படைப்பு அழிந்து விட்டதே என்று நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை; கிடு நடுக்கம் கொள்ள வேண்டியதில்லை' எனத் தெளிவாகவும் சற்று நகைச்சுவையாகவும் முருகையன் எழுதியிருக்கின்றார்.

ஈழத்தில் ஏஜே கனகரட்னா, சு.வில்வரத்தினம், சோ.கிருஷ்ணராஜா, முருகையன் என்ற ஒரு தலைமுறை, முற்றுமுழுதான சரியான ஆவணப்படுத்தல்கள் இல்லாது, நினைவில் மட்டுமே எஞ்சி நிற்கக்கூடியதாக மறைந்து கொண்டிருக்கின்றது. வாழ்வுப் பெரும் நெருக்கடிகளிலிருந்து, இவ்வாறு படைப்புச் சூழலுக்கு இவர்கள் வந்தற்கும், விருப்புடன் இயங்கியதற்கும், இவர்களுக்கு சக மனிதர்கள் மீதிருந்த பரிவும் பேரன்பும் போலத்தான் தோன்றுகின்றது. முருகையன் போன்றவர்களை நாங்கள் இந்தப்பொழுதில் நினைவு கொள்வது என்பது கூட நடந்துவந்த பாதையில் நம்மை நாமே மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்து நினைவுகளின் கதகதப்பான சிறகுகளின் உள்ளே சற்று நேரம் ஓய்வெடுப்பது போன்றதுதான்.

இக்கட்டுரைக்கு உதவியவை:
(1) பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் - தொகுப்பாசிரியர்கள்: எம்.ஏ.நுஃமான், அ.யேசுராசா
(2) இன்றைய உலகில் இலக்கியம் - முருகையன்
(3) கவிஞர் இ.முருகையன் நினைவில் - கானா. பிரபாவின் பதிவு

"எங்க‌ள் குழ‌ந்தை அழுது, எம‌து இட‌த்தைக் காட்டிக்கொடுத்துவிடுமோமென‌ நாங்க‌ள் ப‌ய‌ந்தோம்"

Tuesday, April 21, 2009

Escape from the Tigers leads to safety – in razor-wire encircled 'transition' camps

By Andrew Buncombe in Manik Farm, Sri Lanka
த‌மிழில்: டிசே த‌மிழ‌ன்

புலிக‌ளின் நிலைக்கும், இராணுவ‌த்தின் த‌ரிப்பிட‌த்திற்கும் இடையிலிருந்த ‍ஏற‌த்தாழ‌ இர‌ண்டு மைல் நீள‌மான‌ யாரும‌ற்ற‌ (சூனிய‌ப்)பிர‌தேச‌த்தைக் க‌ட‌ப்ப‌த‌ற்கு, பிர‌பாக‌ரின் குடும்ப‌த்தின‌ருக்கு நான்கு நாட்க‌ள் தேவைப்பட்டிருந்த‌ன‌. சில‌ பைக‌ளிலிருந்த உடைமைக‌ளோடு, பிஸ்க‌ட்டைச் சாப்பிட்டும், ஆற்று நீரைக் குடித்தும், இர‌விர‌வாய் விழித்திருந்து (அவ‌ர்க‌ள்) உயிரைக் காப்பாற்ற‌வேண்டியிருந்த‌து பிர‌பாக‌ர‌ரும், அவ‌ர‌து ம‌னைவியும், த‌ம‌து ஐந்து மாத‌க் குழ‌ந்தை அழுது, தாம் ம‌றைந்திருந்த‌ இட‌த்தைப் போராளிப் ப‌டையின‌ருக்குக் காட்டிக்கொடுத்துவிடுமோ என்று ப‌ய‌ந்து போயிருக்கின்றார்க‌ள்.

இப்போது, அவ‌ர்க‌ள் பாதுகாப்பாய் இருக்கின்றார்க‌ள். தை மாத‌த்திலிருந்து, பிர‌பாக‌ரும், ர‌திக‌லாவும், அவ‌ர்க‌ளின் இர‌ண்டு குழ‌ந்தைக‌ளும், வ‌ட‌க்கிலுள்ள‌ இராணுவ‌ அக்தி முகாமில் - ச‌ண்டையின் கார‌ண‌மாக‌ வ‌லுக்க‌ட்டாய‌மாய் த‌ம‌து வீடுக‌ளை இழ‌ந்து வ‌ந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளோடு- வாழ்ந்துகொண்டிருக்கின்றார்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு தாங்க‌ள் த‌ங்க‌ள் (சொந்த‌)வீடுக‌ளுக்குப் போவ‌த‌ற்கு முன், இங்கே எவ்வ‌ள‌வு கால‌ம் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌த் த‌ங்கியிருக்க‌ வேண்டுமென‌ ஊகித்த‌றிய‌ முடியாதிருக்கிற‌து. "என‌க்குத் தெரியாது, இது அர‌சாங்க‌த்தைப் பொறுத்த‌தே" என்றார் முப்ப‌து வ‌ய‌தான விஞ்ஞான‌ ஆசிரிய‌ர் ஒருவ‌ர்.

பிர‌பாக‌ரரும் அவ‌ர‌து குடும்ப‌த்தின‌ரும் அதிஸ்ட‌வ‌ச‌மான‌வ‌ர்க‌ள். அர‌சாங்க‌ம் தாம் (அக‌தி) ம‌க்க‌ளுக்கு எல்லாவ‌ற்றையும் செய்துகொண்டிருக்கின்றோமென‌ நிரூபிப்ப‌த‌ற்காய், ஊட‌க‌விய‌லாள‌ருக்ககென‌ காட்சிப்ப‌டுத்த‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ 8500 ம‌க்க‌ளுள்ள‌ 'நிலைமாறும்' முகாமைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளே இவ‌ர்க‌ள். ம‌ர‌த்தாலும், உலோக‌த்தாலும் ஆன இங்குள்ள‌ வீடுக‌ள் ஒர‌ள‌வு உறுதியான‌வை. சில‌ பாட‌சாலைக‌ள் ம‌ற்றும் ஒரு ம‌ருத்துவ‌ம‌னையோடு இம்முகாம‌ சுத்த‌மாக‌ இருக்கிற‌து.

ஆனால், கொஞ்ச‌ம் (வாக‌ன‌த்தில்) க‌ட‌ந்துபோனால் நிலைமை முற்றிலும் வேறுவித‌மான‌வை; நிழ‌லேயில்லாத‌ இந்த‌ 'நிலைமாறும்' முகாங்க‌ளிலுள்ள‌ 17000 ற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ள், தார்ப்ப‌ப்பையால் அமைக்க‌ப்ப‌ட்ட‌ குடிசைக‌ளில் சூரிய‌னிலிருந்து த‌ப்ப‌ ஒளிந்துகொள்கின்றார்க‌ள். ம‌க்க‌ள் குடிநீர் ம‌ற்றும் க‌ழிப்பிட‌ வ‌சதியின்மை ப‌ற்றி முறையிடுகின்றார்க‌ள். ஒரு பெண், போரில் அவ‌ரின் த‌க‌ப்ப‌ன் கொல்ல‌ப்ப‌ட்டும், க‌ண‌வ‌ன் காய‌ப்ப‌ட்டும் இருக்கும் கிரியா 'இங்கே (த‌ர‌ப்ப‌டும்) உண‌வு ருசியே இல்லை, போதுமான‌ த‌ண்ணீரும் இல்லை' என்றார். எல்லா முகாங்க‌ளும் முள்ளுக்க‌ம்பிக‌ளால் சூழப்ப‌ட்டு, ம‌க்க‌ள் வெளியே போக‌ அனும‌திக்க‌ப்ப‌டுவ‌தும் இல்லை.

அர‌சாங்க‌ப் ப‌டைக‌ளுக்கும், த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளுக்கும் ஏற்ப‌ட்ட‌ போரினால் த‌ம‌து வீடுக‌ளை இழ‌ந்த‌ ‍உள்ளூரில் இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளால்‍ இல‌ங்கை, மிகப் பெரும் பிர‌ச்சினையை எதிர்நோக்கியுள்ள‌து. வ‌ட‌கிழ‌க்கிலுள்ள‌ க‌ரையோர‌ப் பிர‌தேச‌த்தில், இறுதியாய் உள்ள‌ போராளிக‌ளால் சூழ‌ப்ப‌ட்டிருக்கும் 150 000ற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் கூட்ட‌த்திலிருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் (இராணுவ‌)அக‌தி முகாங்க‌ளுக்குக் கொண்டு செல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள். கிட்ட‌த்த‌ட்ட‌ 70, 000 ம‌க்க‌ள் இவ்வாறு வ‌ந்திருக்கின்றார்க‌ள். தை 2008ல் போராளிக‌ளை ஒழிப்ப‌த‌ற்கென‌ தொட‌ங்கிய‌ இராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கையில் ஈடுப‌ட்ட‌ -மெனிக் ப‌ண்ணைக்கு பொறுப்பான‌- இராணுவ‌ அதிகாரி, இந்த‌ எண்ணிக்கை விய‌ப்ப‌ளிக்கிற‌து என்கிறார். "நாங்க‌ள் ஒருபோதும் இவ்வ‌ள‌வு பேர் வ‌ருவார்க‌ளென‌ நினைக்க‌வில்லை' என்றார் லெப்.கேண‌ல் இந்துனில் டீ சில்வா.

அநேக‌மான‌ அக‌திக‌ள், போர் உக்கிர‌ம‌டைய‌ த‌ம‌து வீடுக‌ளிலிருந்து எவ்வாறு வெளிக்கிட்டார்க‌ள் என்ப‌தை பிர‌பாக‌ரின் க‌தையை ஒத்த‌தாக‌வே சொன்னார்க‌ள். சில‌ர், தாங்க‌ள் வெளிக்கிடுவ‌தை புலிக‌ள் த‌டுக்க‌ முய‌ற்சித்தார்க‌ள் என்றும் கூறினார்க‌ள். உத‌வி வ‌ழ‌ங்கும் குழுக்க‌ள், புலிக‌ள் ம‌க்க‌ளைக் கேட‌ங்க‌ளாக‌ பாவிப்ப‌தையும், சில‌ ம‌க்க‌ள் வெளிக்கிட‌ முய‌ற்சித்த‌போது (புலிக‌ளால்) சுட்டுக்கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள் என்றும் குற்ற‌ஞ் சாட்டியிருக்கின்ற‌ன‌.

திருக்கோண‌ம‌லையைப் பூர்விக‌மாய்க் கொண்ட‌ பிர‌பாக‌ர், இராணுவ‌ம் வ‌ழ‌ங்கிய‌ மொழிபெய‌ர்ப்பாள‌ரும், இராணுவ‌ மேற்பார்வையும் இல்லாது க‌தைத்தார். அவ‌ருடைய‌ இர‌ண்டு அறைக‌ளுள்ள‌ குடிசை எளிமையான‌து. அங்கே ப‌டுக்கை வ‌ச‌திக‌ள் கிடையாது, அக‌திக‌ள் நில‌த்திலேயே தூங்க‌ வேண்டும். ஆனால் ந‌ன்கு காற்றோட்ட‌முள்ள‌ இட‌ம். தென்னோலைக‌ளால் வேய‌ப்ப‌ட்ட‌ கூரை சூரிய‌ ஒளியைத் த‌டுப்ப‌தில் அவ்வ‌ள‌வு ப‌ய‌னுடைய‌தாக‌ இருக்கவில்லை. அவ‌ரும் அவ‌ரைப் போன்ற‌ ப‌ல‌ரும் த‌ங்க‌ளுக்கு த‌ண்ணீர் போதுமாய் த‌ர‌ப்ப‌ட்டாலும், த‌ர‌ப்ப‌டும் பிற‌ உண‌வுப் பொருட்க‌ள் மிக‌வும் குறைவென்றார். அவ‌ர‌து ம‌னைவி குடிசையின் முன்னுள்ள‌ நில‌த்தில் பூச்செடிக‌ளை ந‌ட்டிருக்கின்றார்.

இருந்தும் பிர‌பாக‌ருக்கும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் மிக‌வும் பிர‌ச்சினைக்குரிய‌ விட‌ய‌ம் என்ன‌வென்றால், எவ்வ‌ள‌வு கால‌ம் அவ‌ர்க‌ள் இப்ப‌டியே இங்கே இருக்க‌வேண்டியிருக்கும் என்ப‌து. அர‌சாங்க‌ம், இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் ஊர்க‌ளுக்குத் திரும்பிப் போக‌ முன்ன‌ர், இங்கிருக்கும் அக‌திக‌ள் புலிக‌ள‌ல்ல‌ என்று சோதிக்க‌வேண்டியிருக்கிற‌து என்றும், (இவ‌ர்க‌ளின் சொந்த‌ கிராம‌ங்க‌ளிலுள்ள‌)மிதிவெடிக‌ளை அக‌ற்ற‌ அத‌ற்கான‌ குழுக்க‌ளை முத‌லில் அனுப்ப‌வேண்டியிருக்கிற‌து என‌வும் கூறுகின்ற‌து. இவ‌ர்க‌ள் இங்கே ஒரு வ‌ருட‌த்திற்கு இருக்க‌வேண்டிவ‌ரும் என்ப‌தை அர‌சாங்க‌ம் ஒத்துக்கொள்கின்ற‌து. சில‌ உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் இதை (ஒரு வ‌ருட‌த்தை) விட‌ இன்னும் நீண்ட‌ கால‌மாய் இருக்க‌க்கூடுமென‌ அஞ்சுகின்ற‌ன‌.

" நான் திரும்ப‌வும் ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னாய் இருக்க‌ விரும்புகின்றேன். நாளையே நான் இங்கிருந்து போய்விட‌ விரும்புகின்றேன்" என்கிறார், ஒருகால‌த்தில் புலிக‌ளின் த‌லைந‌க‌ராய் இருந்த‌ கிளிநொச்சியைச் சேர்ந்த‌ ச‌ந்திர‌ன். "நான் இங்கே ஒரு வ‌ருட‌ம் த‌ங்க‌வேண்டியிருப்பின், என‌க்கு விச‌ர் பிடித்துவிடும். இங்கே ப‌ல‌ நெருக்க‌டிக‌ள் இருக்கின்ற‌ன‌, முக்கிய‌மாய் நீர் ம‌ற்றும் க‌ழிப்பிட‌ வ‌ச‌திக‌ள். அத்தோடு உண‌வும் எங்க‌ளுக்கு ஏற்ற‌ ருசியாய் இருப்ப‌தில்லை. எங்க‌ளது எல்லா உடைமைக‌ளும் போய்விட்ட‌ன‌. எங்க‌ளிட‌ம் வ‌ரும்போது என்ன‌ கொண்டுவந்தோமோ அது ம‌ட்டுமே இருக்கின்ற‌து."
31 வ‌ய‌தான‌ ந‌ந்த‌பால‌ன் என்ப‌வ‌ரும், இங்கேயிருந்து போவ‌தையே விரும்புகின்றார். "நாங்க‌ள் போக‌லாம் என்று அர‌சாங்க‌ம் சொல்கிற‌தென்றால், நாங்க‌ள் போவோம். நாங்க‌ள் ஒருவ‌ருட‌த்திற்கு த‌ங்க‌ வேண்டியிருக்குமென்றால், இங்கே நிறைய‌ப் பிர‌ச்சினைக‌ள் இருக்கும்'

இங்குள்ள‌ முகாங்க‌ளின் நிர்வாக‌த்தைப் பார்த்துக்கொள்ளும் பினான்ஸி சார்ள்ஸ், இங்கிருக்கும் அக‌திக‌ள் ஆக‌க்கூடிய‌து ஒரு வ‌ருட‌ம் த‌ங்க‌ வேண்டியிருக்கும் என்கிறார். "நாங்க‌ள் எங்க‌ளால் எவ்வ‌ள‌வு முடியுமோ அவ்வ‌ள‌வும் செய்து இவ‌ர்க‌ளை தேர்ச்சியுள்ள‌ குடிம‌க்க‌ளாக்குவோம்" என்கின்ற‌ பினான்ஸி அத‌ற்கான‌ பயிற்சிக‌ளும் இன்ன‌ பிற‌ விட‌ய‌ங்க‌ளும் இம்முகாமில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தாய்க் குறிப்பிடுகின்றார்.



Thanks: The Independent

வவுனியாவிலுள்ள முகாங்களைப் பற்றிய நேரடி அனுபவம்

Sunday, February 22, 2009


வவுனியா 'உள்ளே இடம்பெயர்ந்த மக்கள்'
(IDP) நல்வாழ்வு மையங்களுக்கான எனது பயணம்

-வைத்தியர் தயா தங்கராஜா

தமிழில்: டிசே தமிழன்

வன்னியில் நடக்கும் போர் பற்றியும், அதனால் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அறிந்துகொண்டிருந்தாலும், நான் நேரே சென்று அறியும்வரை இவ்வளவு கொடூரமாய் அது இருக்குமென ஒருபோதும் நினைத்ததில்லை. எங்கள் வளர்ப்புப் பிள்ளையொருவர் போரில் கொல்லப்பட்டுவிட்டாரென்று ஒரு அழைப்பு தற்காலிக (அகதி)முகாமிலிருந்த சபை உறுப்பினரிடமிருந்து வந்திருந்தது. துயரத்தைப் பற்றி நான் எனது மாணவர்களிடம் பலமுறை விரிவுரை செய்திருந்தாலும், துயரத்தின் ஆழத்தை அறிவது இதுவே எனக்கு முதல்முறையாக இருந்தது. 'இல்லை, இல்லை, இப்படி (நடந்து) இருக்க முடியாது' என நான் அழுதேன். நான் நேராக அங்கிலிக்கன் ஆயரின் அலுவலகத்திற்குச் சென்றேன். மதிப்புக்குரிய நேசகுமாரை நான் சந்தித்தபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர் (வளர்ப்புப் பிள்ளை) தப்பிவிட்டார் என்றும் இப்போது ஏதோ ஒரு முகாமில் இருக்கின்றார் எனவும் அவர்கள் சொன்னார்கள்.

அடுத்த நாள் ஒரு இருக்கையைப் பதிவுசெய்து வவுனியாவிற்கு புகைவண்டியில் போனேன்.அதிகாலையில் வெளிக்கிட்டு நான் வவுனியாவைப் பிற்பகலில் போய்ச்சேர்ந்தேன். எனது வளர்ப்புப் பெண் எனக்காக ஸ்ரேசனின் காத்துக்கொண்டிருந்தார். நான் நேராகவே முகாமுக்குச் சென்றேன். ஒருவரும் முகாமிற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

பாடசாலைகள் தற்காலிக முகாங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை கொட்டகைகளாக அமைக்கப்பட்டிருந்தன; எப்படிச் சொல்வதென்றால் 5-6 மீற்றர் உள்ள கூடாரங்களைப் போன்று. இராணுவ முகாங்களைச் சுற்றி எப்படி முள்ளுக்கமபிகள் இருக்குமோ அப்படியே இந்த (அகதி) முகாங்களைச் சுற்றியும் முள்ளுக்கம்பிகள் இருந்தன. உள்ளேயிருப்பவர்களை வீதியின் மற்றப்பக்கத்தால் மட்டுமே பார்க்க முடியும். பாதுகாப்பு மிகவும் இறுக்கமாய் இருந்தது. 'கிட்ட வரத் துணியாதே, இங்கிருந்து போ, இங்கிருந்து போ' என்ற மற்ற இராணுவத்தினரின் வெருட்டல்களை அசட்டை செய்து, நான் முகாமுக்குப் பொறுப்பான இராணுவ வீரரை நோக்கிச் சென்றேன்.

நான் அவரை அணுகி, எனது சிங்களம் மிகவும் மோசமாக இருந்ததால் ஆங்கிலத்தில் பேசினேன். நான் இம்முகாமிலுள்ள மதகுருவாயுள்ள எனது மகனைப் பார்க்க விரும்புவதாய் அவரிடம் கூறினேன். அவர் எனது வார்த்தைகளை எனது மகனிடம் கொண்டுசெல்லக்கூடிய கனிவானவராய் இருந்தார், ஆனால் என்னை வீதியின் மறுமுனையில் நிற்கச் சொன்னதோடு, எனக்கு ஜந்து நிமிடங்கள் மட்டுமே தருவேன் என்றும் சொன்னார். பத்து நிமிடத்தில் டானி வெளியே வந்தார். அவர் மிகவும் களைப்பாகவும், மன உளைச்சலுக்குள்ளானவர் போலவும் இருந்தார்.

அவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றுவதற்காய் ஒவ்வொரு இடங்களாய் ஓடியிருந்தனர். எறிகணைகள் மிகவும் கோரமாய் இருந்ததால் அவர்களால் பதுங்குகுழியை விட்டு வெளியே வருவதே மிகவும் கடினமாய் இருந்தது. ஒவ்வொரு கணமும் (விமானக்)குண்டு வீச்சாகவும் துப்பாக்கி வேட்டுக்களாகவும் இருந்தன. அவர் கருணா நிலையத்தின் பொறுப்பாளாராக இருந்தார். கருணா நிலையத்தில் உளநிலை குறைந்தவர்களோடு பாடசாலைக்குப் போகும் சிறுமிகளும் தங்கியிருந்தனர். ஒரு ஞாயிறு இரவு (பெப்ரவரி 15, 2009) சிறிய பிரார்த்தனையின் பின், மாலையில் (வன்னியை விட்டு)வெளியேறுவதாய் முடிவு செய்தனர். எனினும் விடிகாலை 1.30க்கே வெளியேறினர். எவ்வளவு கொடூரமாய் அது இருந்திருக்குமென்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

நாங்கள் வன்னிக்குள் வேலை செய்ததால், என்னால் மழையாகப் பொழியும் எறிகணைகளினதும், விமானக்குண்டுகளினதும் ஆபத்துக்களை எண்ணிப் பார்க்க முடிகிறது. அவர்கள் அடர்ந்த காடுகளிலுள்ள யானையிலிருந்து விசமுள்ள பாம்புகள் வரை சிறியதும் பெரியதுமான எல்லாப் பிராணிகள் மீதும் அவதானமாக இருக்கவேண்டியிருந்தது. இருட்டில் பல மணித்தியாலங்கள் நடந்து, கொல்லப்பட்ட உடலங்கள் மீதும், அங்குமிங்குமாய் பரவியிருந்த மனிதவுடலின் பகுதிகள் மீதும் சரிந்து விழாமல் வரவேண்டியிருந்தது. அவர்கள் இறுதியில் வவுனியாவுக்கு வருகின்ற பேருந்துகளைக் கண்டார்கள். அவர்கள் பேருந்து ஒன்றில் ஏறியபோது, எறிகணை ஒன்று வந்து இன்னொரு பேருந்தின் மீது வெடித்தது. தங்களோடு (கருணா நிலையத்தில்) தங்கிருந்த பதினான்கு பேரைக் காணவில்லை என்று அவர் சொன்னார். (பிறகு ஆறு பேர் கண்டுபிடிக்கப்பட்டார்கள்).

நாங்கள் (அகதிமுகாமில்) காத்திருந்தபோது, மதியவுணவுப் பொதிகள் வானிலிருந்து கொண்டுவரப்பட்டன. மதிய உணவுக்கான பொதி மிகவும் சிறியதாக இருந்ததை நாம் கவனித்தோம். ஒரு உணவுப்பொதி 650 கிராமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக பின்னர் நான் நம்பத்தகுந்த ஒரு நபரிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆனால் ஒவ்வொரு பொதியும் கிட்டத்தட்ட 300 கிராமாகவே இருந்தது.

அவ்வாறே நான் மற்ற முகாங்களுக்குச் சென்றபோது, வீதியின் மறுமுனையிலிருந்து பார்த்தபோது, நூற்றுக்கணக்கான ஆண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள், சிலவேளைகள் இதுவே நீண்ட நாட்களுக்குப் பிறகான முதல் குளியலாகவும் அவர்களுக்கு இருக்கலாம். திறந்த வெளியில் பத்து ஷவர்கள் இருக்கையில், எல்லோரும் தண்ணீருக்காய்த் தள்ளுப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டுவிடும். ஆண்களும் இராணுவத்தினரும் இருக்கும் இவ்வாறான ஒரு திறந்தவெளியில் எப்படிப் பெண்களால் சமாளிக்க முடியுமென்று நான் யோசித்தேன்! என்ன கழிவறை வசதிகள் அவர்களுக்காய் செய்யப்பட்டிருக்கும்?

வைத்தியசாலைக்கான எனது பயணம் மனதை உலுக்கக்கூடியதாக இருந்தது. விபத்துப் பகுதியிலிருந்தவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே (ஏதோவொரு) உறுப்பை இழந்தவராக இருந்தார்கள். வெளியே இருந்தும் வேறு எவரும் உள்ளே வந்து இவர்களைப் பார்க்க அவ்வளவாய் அனுமதிக்கப்படவில்லை. நோயாளிகளுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்பதும் தெரியாது. அவர்கள் மிகவும் மன உளைச்சலுக்குள்ளானவர்கள் போல இருந்தார்கள். தங்கள் வலியின் காரணமாகவும், கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவுகளில் அவர்கள் கத்துபவர்களாகவும் அழுபவர்களாகவும் இருந்தார்கள். நிறையப் பேர் தங்கள் இரண்டு கால்களை இழந்தவர்களாகவும், சிலர் தங்கள் கைகளை இழந்தவர்களாகவும் இருந்தார்கள்.

ஒரு கர்ப்பிணித் தாய் தனது இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் இழந்ததோடு, தாதிப்பெண்கள் தான் சாவதற்கு உதவவேண்டுமென கதறிக்கொண்டிருந்தார். இன்னுஞ் சிலர், அவர்களின் முள்ளந்தண்டில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பின் காரணமாக முற்றுமுழுதாக செயலிழந்திருந்தனர். அங்கிருந்த சிறுவன்களில் ஒருவன் என்னை ஈர்த்தான். அவனது தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. நான் அவனை நோக்கிப் போனபோது அவனது கன்னத்தில் கண்ணீர் உருண்டோடியது.

அவனுக்கு மூளையில் ஒரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவன் என்னிடம் தனது தகப்பனும் இளைய சகோதரியையும் எங்கேயிருக்கின்றார்களென கண்டுபிடிக்கமுடியுமா எனக்கேட்டான். அவனது தாயும், இரண்டு சகோதரர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள். அவனது மற்ற குடும்ப உறுப்பினர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினமானது. கிண்ணியா, பொலனறுவை, மன்னார், இன்னும் வெவ்வேறு இடங்களுக்கு (வன்னிக்குள்ளிலிருந்து) வந்தவர்கள் அனுப்பப்பட்டபோது, குடும்பத்தினர் ஒன்று சேருவதற்கான சிறு சந்தர்ப்பம் என்பது கேள்விக்குரியதே.

ஒரு தாய் வெறுமையான பார்வையுடன் அமர்ந்திருந்தார். அவர்கள் ஓடத்தொடங்கியபோது, அவரின் ஒரு குழந்தை கொல்லப்பட்டுவிட்டது. அதற்கிடையிலும் ஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி தனது குழந்தையைப் புதைக்கும் துணிவு அவருக்கு இருந்திருக்கிறது. அவர் தனது குழந்தையின் உடல், காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை விரும்பவில்லை. அவர் அழவில்லை ஆனால் உளவியல் பிரச்சினைகளுக்குட்பட்டிருந்தார் என்பது உறுதி. எறிகணைகள் நேரே பதுங்குகுழிக்குள் வந்து விழுந்த பல சம்பவங்கள் இருக்கின்றன.. ஆயிரக்கணக்கானவர்கள் இதனால் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இன்னமும் வன்னிக்குள் தங்கியிருப்பவர்கள் பல்வேறு காரணங்களால் பயத்துடன் (வன்னிக்கு) வெளியே வராது இருக்கின்றார்கள். அவர்களுக்கு தாங்கள் கொல்லப்படுவது (வெளியே வந்து) சித்திரவதை செய்யப்படுவதை விட மேலானதாய் இருக்கிறது.

தீவின் எல்லாப் பக்கமும், முக்கியமாய் கொழும்பில், இராணுவத்தின் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு நபரின் அடையாள அட்டையில் அவரின் பிறந்த இடம் வன்னியாகவோ, முல்லைத்தீவாகவோ, கிளிநொச்சியாகவோ, ஏன் யாழ்ப்பாணமாயிருந்தாலோ, அவனோ/அவளோ பிரச்சினைக்குரியவராகிவிடுவார். எங்கள் குடியிருப்பு சென்ற வாரம் முழுமையாகச் சோதிக்கப்பட்டு, எனது பதினாறு வயது மகளின் அலுமாரி, ஆடைகள் வைக்குமிடமெல்லாம் சோதிக்கப்பட்டு அவளும் விசாரிக்கப்பட்டாள். அவ்வண்ணமே மக்கள் வன்னியை விட்டு வெளியே வரவிரும்பினாலும், இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இப்போது இங்கே இனப்படுகொலை பல்வேறு நிலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. தெரியாத பிரதேசங்களிலும், பழக்கப்படாத இடங்களிலும் சிதறடிக்கப்பட்ட மக்கள், இறுதியில் வலுவற்ற குடிமக்களாகி, அதன் விளைவால் எங்கள் கலாசாரம், கல்வி, உறவு முறைகளில் மிகப்பெரும் பாதிப்பு வரப்போகின்றது என்பதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சந்ததிக்கு இனி எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதைத்தான் என்னால் உணர்ந்து சொல்லமுடியும். சர்வதேச சமுகங்களால் அறிக்கைகளை வெளியிடமுடியும், ஆனால் அவை எவையும் எந்தக் கவனத்தையும் பெறாது. எனக்கு எதிர்காலம் இருண்டதாகவும் பயங்கரமானதாகவும் தெரிகிறது.

Thanks: TransCurrents

இர‌ண்டு இராணுவ‌ங்க‌ளுக்கு இடையில்

Wednesday, January 28, 2009

In English: எழுதிய‌வ‌ரின் பெய‌ர் குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை. இந்த‌க்குறிப்பு ம‌ட்டும் உள்ள‌து - The author is a photographer and aid worker who left the Vanni in September 2008
(தேவை க‌ருதி அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாய் மொழிபெய‌ர்த்த‌து. த‌மிழ் மொழிபெய‌ர்ப்பில் தெரிய‌க்கூடிய‌ த‌வ‌றுக‌ளுக்காய் ஆங்கில‌த்தில் எழுதிய‌வ‌ரிட‌ம் முன்கூட்டிய‌ ம‌ன்னிப்பு. ~டிசே)

கைவிட‌ப்ப‌ட்ட‌ வீடுக‌ள், சிதைக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வு, இட‌ம்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள். இல‌ங்கை இராணுவ‌த்துக்கும், விடுத‌லைப் புலிக‌ளுக்கும் இடையில் ந‌டைபெறும் உக்கிர‌மான‌ போரின் கோர‌த்தை விப‌ரிக்கின்றார் உத‌விப்ப‌ணி செய்யும் ஒருவ‌ர்.

"வ‌ன்னியிலுள்ள‌ இலுப்பைக்க‌ட‌வையில் என‌து வீடு இருக்கிற‌து. தை இர‌ண்டாந்திக‌தி, 2007 காலை ஒன்ப‌து மணிக்கு கிபீர் (இல‌ங்கை விமான‌ப்ப‌டையின் ஜெட்ஸ்) வ‌ந்த‌ன‌. அவை எங்க‌ள் கிராம‌த்தில் குண்டுக‌ளை வீசின‌, நில‌ம் அதிர்ந்துகொண்டிருக்க‌, குண்டின் சித‌ற‌ல்க‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ற‌க்க‌த்தொட‌ங்கின‌. ப‌ல‌ ம‌க்க‌ளுக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து போல‌வே நானும் காய‌ப்ப‌ட்டேன். இவ்வாறே நான் என‌து காலை இழ‌ந்தேன்."

ஸ்ரெல்லா, செந்த‌ளிர்ப்பான‌ முக‌மும் வனப்புமுள்ள 13 வ‌ய‌துடைய‌வ‌ள். நான் அவ‌ளை ஆவ‌ணி 05, 2008ல் ம‌ணிய‌ங்குள‌த்தில் ச‌ந்தித்தேன்; இல‌ங்கை வ‌ட‌க்கிலுள்ள‌ வ‌ன்னியில் இருக்கும் ம‌ணிய‌ங்குள‌ம் கிராம‌ம், அவ்வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌ம் வ‌ரை த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டிலிருந்த‌து. ஸ்ரெல்லா அவ‌ள‌து வாழ்வின் முக்கிய‌ க‌ட்ட‌த்திலிருந்தாள், அவ‌ள‌து ம‌ன‌மும் உட‌லும் வ‌ள‌ர்ச்சிய‌டைந்துகொண்டிருந்த‌து. ஆனால் அவ‌ளுக்கும் அவ‌ள‌து வய‌திலிருந்த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குமிடையில் பாரிய‌ வித்தியாச‌மிருந்த‌து; அவ‌ள் சாதார‌ண‌ ப‌தின்ம‌ வ‌ய‌துடைய‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்ப‌த‌ற்கு அப்பால் நிறைய‌ விட‌ய‌ங்க‌ளைச் ச‌ந்தித்திருந்தாள்.

"ஆனி 20, 2008ல், எங்க‌ள் புதிய‌ வீட்டுக்கு அண்மையாக‌ எறிக‌ணைக‌ள் விழ‌த்தொட‌ங்க‌, நாங்க‌ள் ப‌ய‌த்தில் வீட்டை விட்டு ஓடவேண்டியிருந்த‌து. எங்க‌ளால் ப‌ல‌ பொருட்க‌ளை(உடைமைக‌ளை) எடுக்க‌முடிய‌வில்லை, என‌து குடும்ப‌த்தின‌ரின‌தும் உற‌வின‌ர்க‌ளின‌தும் உத‌வியுட‌ன்- என்னுடைய‌ ஊன்றுகோலோடு- எவ்வ‌ள‌வு வேக‌மாக‌ ஓட‌முடியுமோ அவ்வ‌ள‌வு வேக‌மாய் நான் ஓட‌வேண்டியிருந்த‌து. நாங்க‌ள் இங்கே ஒருவார‌மாய் இருக்கின்றோம், ஆறு குடும்ப‌ங்க‌ள் இருப்ப‌த‌ற்கு ஒரேயொரு த‌ங்குமிட‌ம் ம‌ட்டுமேயிருக்கிற‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 23 பேர். ம‌ல‌ச‌ல‌கூட‌ங்க‌ள் வ‌ச‌தியாய் இல்லை, என‌து (ஒற்றைக்)காலால் என‌க்கு இன்னும் க‌ஷ்ட‌மாயிருக்கிற‌து."

"என‌க்குத் தெரிய‌வில்லை, நாங்க‌ள் இந்த‌ இட‌த்திலிருந்து இனியும் இட‌ம்பெய‌ர்ந்தால் என்னால் எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும் என்று. என்னிட‌ம் செய‌ற்கைக்கால் இருக்கிறது, சைக்கிள் ஓட‌வும் முடியும். என்னிட‌ம் ஒரு சைக்கிள் இருந்திருந்தால், வாழ்க்கை இன்னும் இல‌குவாய் இருக்கும்."

"நிம்ம‌தியாக‌ப் ப‌டுக்க‌ ஒழுங்கான‌ த‌ங்குமிட‌ங்க‌ளையும், வ‌ச‌தியான‌ ம‌ல‌ச‌ல‌கூட‌ங்க‌ளையும் நாங்க‌ள் பெற‌முடியுமென்றால் என்னால் ம‌கிழ்ச்சியாக‌ இருக்க‌ முடியும்; ஆனால் இவ‌ற்றுக்க‌ப்பால், என‌க்கு ஒரு சைக்கிளே முக்கிய‌ தேவையாக‌ இருக்கிற‌து."

நான் ஸ்ரெல்லாவை மீண்டும் ஆவ‌ணி 20, 2008ல் ச‌ந்தித்தேன். அவ‌ள் தாங்க‌ள் த‌ங்கியிருந்த‌ ம‌ணிய‌ங்குள‌ம் வீடு இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் எப்ப‌டி இல‌ங்கை இராணுவ‌த்தால் தாக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை விப‌ரித்தாள்.

"மாலை 7.30 ம‌ணிய‌வ‌ள‌வில் எறிக‌ணைக‌ள் விழ‌த்தொட‌ங்க நாங்க‌ள் அவ‌ச‌ர‌ம‌வ‌ச‌ர‌மாக‌ 5 கிலோமீற்ற‌ர்க‌ள் தொலைவிலுள்ள‌ கோணாவில் பாட‌சாலைக்கு ஒடினோம். என்னுடைய‌ செய‌ற்கைக்காலால் என்னால் தொட‌ர்ந்து போக‌ முடிய‌வில்லையென்ப‌தால் எங்க‌ள் குடும்ப‌ம் அவ்விர‌வை இப்பாட‌சாலையிலேயே க‌ழிக்க‌வேண்டியிருந்த‌து. எங்க‌ள் குடும்ப‌ம் த‌ங்க‌ள‌து உடைமைக‌ளைக் காவிக்கொண்டு வ‌ந்தால் அவ‌ர்க‌ளால் என‌க்கு உத‌வ‌வும் முடிய‌வில்லை. என‌து குடும்ப‌ம் ஓடுவ‌தை நான் மெதுவாக்கிக் கொண்டிருந்த‌தால் என‌க்குச் ச‌ரியாக‌க் க‌வலையாக‌ இருந்த‌து. அந்த‌ இர‌வு எறிக‌ணை‌கள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்த‌தால் பெரும் ச‌த்த‌ங்க‌ளுடைய‌தாக‌ இருந்த‌து. ம‌ற்ற‌க் குடும்ப‌ங்க‌ளால் இன்னும் தூர‌த்துக்கு ஓட‌ முடிந்திருந்த‌து, ஆனால் என்னுடைய‌ காய‌ங்க‌ளினால் நாங்க‌ள் இங்கேயே த‌ங்க‌வேண்டியதாக‌ப் போய்விட்ட‌து."

"நாங்க‌ள் இப்போது இந்த‌ப் பாட‌சாலையில்(கோணாவில்) இருக்கின்றோம், என‌க்குத் திருப்ப‌வும் க‌ஷ்ட‌மாக் இருக்கிற‌து. இந்த‌ப் பாட‌சாலை என‌து ப‌ழைய‌ பாட‌சாலை போல‌வே இருக்கிற‌து, ஆனால் நாங்க‌ள் இதை ஒரு வீடாய்ப் பாவித்துக்கொண்டிருக்க, இந்த‌ப் ப‌க்க‌த்திலுள்ள‌ சிறுவ‌ர்க‌ள் க‌ஷ்ட‌ப்ப‌ட‌ப்போகின்றார்க‌ள். திரும்ப‌வும் எறிக‌ணைக‌ள் ஏவ‌ப்ப‌ட்டு இந்த‌ இட‌த்தை விட்டும் திரும்ப‌வும் ஓட‌வேண்டியிருக்குமோ என்று என‌க்குச் ச‌ரியாக‌ப் ப‌ய‌மாயிருக்கிற‌து. ஒரு இட‌த்திலிருந்து இன்னொரு இட‌த்துக்கு ஓடியோடி என‌க்குச் ச‌ரியாக‌க் க‌ளைப்பாக‌வும், எந்த‌ இட‌மும் பாதுகாப்பாய் இருக்காது போல‌வும் தோன்றுகிற‌து."

"இல‌ங்கை அர‌சும், புலிக‌ளும் எங்க‌ளை அனும‌தித்தார்க‌ள் என்றால், இந்த‌ இட‌த்திலிருந்து த‌ப்பியோட‌ என‌க்கு மிக‌ச் ச‌ந்தோச‌மாக‌ இருக்கும். என‌க்கும் எங்க‌ள் குடும்ப‌த்துக்கும் நிம்ம‌தி வேண்டும், என்னால் இனியும் ஓட‌முடியாது. என‌க்கு இன்னும் கிபீர் விமான‌த்தாக்குத‌ல் குறித்த‌ கெட்ட‌ க‌ன‌வுக‌ள் வ‌ருகின்ற‌ன‌. கிபீர் விமான‌ங்க‌ளின் ச‌த்த‌த்தைக் கேட்கும்போது, நான் மிக‌வும் ப‌ய‌ப்பிடுகின்றேன்."

ஸ்ரெல்லா அந்த நேர‌த்தில் என்ன‌த்தையெல்லாம் அனுபவித்தாள் என்ப‌தை நான‌றியேன். இல‌ங்கை அர‌சு. 2009ம் ஆண்டு முடிவ‌த‌ற்குள் விடுத‌லைப் புலிக‌ளை அக‌ற்றி, விடுவிக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளில் ச‌னநாய‌க‌த்தை வ‌ழ‌ங்க‌ப்போவ‌தாய் சூளுரைத்திருக்கிற‌து. தை 02ல் இல‌ங்கை இராணுவ‌ம் முக்கிய‌ ந‌க‌ரான‌ கிளிநொச்சிக்குள் நுழைய‌, புலிக‌ள் எல்லா விலையையும் கொடுத்து ச‌ண்டை பிடித்துக்கொண்டிருக்க‌ நிலைமை இன்னும் மோச‌ம‌டைந்திருக்கிற‌து. இந்தத் த‌ருண‌த்தில் கேள்வி இருக்கிற‌து: வ‌ன்னியிலுள்ள‌ த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ நிக‌ழ‌ப்போகின்ற‌து?

இல‌ங்கை இராணுவ‌த்துக்கும், விடுத‌லைப் புலிக‌ளுக்கும் இடையில் 2002-08 வ‌ரையிருந்த‌ யுத்த‌ நிறுத்த‌த்திற்கு ந‌ன்றி கூறிய‌ப‌டி, வ‌ன்னியிலிருந்த‌ ச‌மூக‌ங்க‌ள் ந‌டைபெற்றுக்கொண்டிருந்த‌ அபிவிருத்தியில் ம‌கிழ்ச்சிய‌டைந்திருந்த‌ன‌. ம‌க்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளிலும் வாழ்க்கைத் தேவைக‌ளிலும் முத‌லீடுசெய்து, த‌மிழ‌ர்க‌ளுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குமான‌ சமாதான‌த்தையும் சுபீட்ச‌த்தையும் எதிர்பார்க்க‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌ர். இந்த‌க் க‌ன‌வுக‌ள், இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஆறு வ‌ருட‌ யுத்த‌நிறுத்த‌ ஒப்ப‌ந்தத்தை உத்தியோக‌பூர்வ‌மாக‌ முடிவுக்குக் கொண்டுவ‌ந்த‌போது நொறுங்கி, த‌மிழ‌ர்க‌ள் மீண்டும் இட‌ப்பெய‌ர்வு, அத‌ன் பாதிப்புக்க‌ள், நிச்ச‌ய‌மின்மைக‌ள், பாதுகாப்பின்மை என்ப‌வ‌ற்றோடு ம‌ல்லுக்க‌ட்ட‌வேண்டியிருந்த‌து.

உள்நாட்டிலேயே அதிக‌ம் இட‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளை கொண்ட‌ ஒரு நாடாக‌ உல‌கில் இல‌ங்கை இருக்கிற‌து. நிலைமை மோச‌மாக‌த் தொட‌ங்க‌த் தொட‌ங்க‌, கிட்ட‌த்த‌ட்ட‌ 400 000 ம‌க்க‌ள் த‌ம் வீடுக‌ளை இழ‌ந்திருக்க்கின்றார்க‌ள், 70, 000 பேர் -எண்ணிக்கையில்- கால் நூற்றாண்டு உள்ளூர்ப் போரால் இற‌ந்துள்ளார்க‌ள்.

2008 முழுதும், வ‌ன்னியின் தென்மேற்கு மூலையிலிருந்து இல‌ங்கை இராணுவ‌ம் குறிப்பிட‌த்த‌க்க‌ ந‌க‌ர்வுக‌ளை மேற்கொண்டிருந்த‌து. இராணுவ‌ம் முன்னேற‌ முன்னேற‌, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளையும், விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும், மீன்பிடிக் கிராம‌ங்க‌ளையும் விட்டு, வ‌ருகின்ற‌ எறிக‌ணைக‌ளிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காய் ஓட‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌ர். ம‌க்க‌ள் த‌ம‌து உடைமைக‌ளைக் க‌ட்டி, டிராக்ட‌ர்க‌ள் மூல‌மாகவும் ந‌ட‌ந்தும் பாதுகாப்பான‌ வ‌ட‌க்கு நோக்கி ந‌க‌ர‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌ர். விவ‌சாயிக‌ளும் மீன‌வ‌ர்க‌ளும் அந்நியோன்னிய‌மாய் வாழ்கின்ற‌ வ‌ன்னி இல‌ங்கையுள்ள‌ மிக‌வும் செழிப்பான‌ பகுதிக‌ளாகும். அவ‌ர்க‌ளுடைய‌ மிக‌ச்சொற்பமான‌ சேக‌ரிப்பை பாதுகாப்பான் இட‌ங்க‌ளுக்கு ந‌க‌ர்வ‌த‌ற்காய் டிராக்ட‌ர்க‌ளை வாட‌கையெடுப்ப‌த‌ற்கு செல‌வ‌ழிக்கின்றார்க‌ள். "ம‌ர‌ங்க‌ளுக்கு கீழே வாழும் எங்க‌ளில் ப‌ல‌ர் உரிய‌ த‌ங்குமிட‌ங்க‌ளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த‌ நிலைமைக்குள் எப்ப‌டி என்னால் என‌து மாண‌வ‌ர்க‌ளைக் க‌வ‌னிக்க‌ முடியும்? அவ‌ர்க‌ள் வ‌ந்து ப‌டிப்ப‌த‌ற்கான‌ எந்த‌ப் பாட‌சாலையும் என்னிட‌ம் இல்லை; அந்த‌ மாண‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ர் எங்கேயிருக்கின்றார்க‌ள் என்ப‌தே தெரியாது' என்கிறார் ‍ கிளிநொச்சியிலிருந்து வ‌ந்த‌ ஆசிரிய‌ர், பிள்ளை.

இல‌ங்கை இராணுவ‌ம் இன்னும் வ‌ன்னிக்குள் உள்ந‌க‌ர‌, ப‌ல‌ ம‌க்க‌ள் க‌ளைத்தும், பிற‌ரிட‌ம் இர‌ந்தும், இன்னுமின்னும் இட‌ம் பெய‌ரத்த‌ள்ள‌ப்ப‌டுகின்றார்க‌ள். "நான் க‌ட‌ந்த‌ மூன்று வ‌ருட‌ங்க‌ளில் என‌து வீட்டிலிருந்து ஏழு முறைக‌ள் இட‌ம்பெய‌ர‌ச் செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றேன்" என்கிறார் ஜெய‌புர‌த்தைச் சேர்ந்த‌ ச‌ந்திரா. "2005ல், இல‌ங்கை இராணுவ‌ம் எங்க‌ள் வீட்டுக்கு அண்மையிலுள்ள‌ ப‌குதிக‌ளை நோக்கி எறிகணைக‌ளை ஏவும்வ‌ரை வீரப‌ன் க‌ண்ட‌லில் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌தொரு வாழ்க்கையிருந்த‌து. என‌து க‌ண‌வ‌ன் ஒரு மீன‌வ‌ராக‌ இருந்தார்; நாங்க‌ள் ந‌ன்றாக‌வே வாழ்ந்தோம். "

"எறிக‌ணைக‌ள் வீச‌ப்ப‌ட்டிருந்த‌ கால‌ப்ப‌குதியில், க‌ர்ப்பிணியாயிருந்த‌ நான் இர‌வினுள் பாதுகாப்பின் நிமித்த‌ம் ஓட‌வேண்டியிருந்த‌து. அதிலிருந்து ஒவ்வொரு ஆறு மாத‌மும் எறிக‌ணை வீச்சினால் இட‌ம்பெய‌ர்ந்து கொண்டேயிருக்கின்றேன். நான் இப்போது இந்த‌ ம‌ர‌த்தின் கீழே இருக்கின்றேன், இது ஏழாவ‌து முறை. ஓடியோடி (இட‌ம்பெய‌ர்ந்து பெய‌ர்ந்து) என‌க்கு மிக‌வும் க‌ளைப்பாக‌ இருக்கிற‌து. "

ம‌ன்னாரிலிருந்து வ‌ந்த‌ ம‌க்க‌ளை நான் புர‌ட்டாதி 2008ல் ச‌ந்தித்த‌போது, அவ‌ர்க‌ள் ப‌ட்டினியுட‌னும் க‌ளைப்புட‌னும் ப‌ய‌த்துட‌னும் இருந்தார்க‌ள். குழ‌ந்தைக‌ள் ப‌ல‌ மாத‌ங்க‌ளாய் பாட‌சாலைக்குப் போக‌வில்லை, த‌ந்தைமார்க‌ள் த‌ம‌து தொழில்க‌ளை இழ‌ந்திருந்த‌ன‌ர், தாய்மார்க‌ள் பாதுகாப்பு, உண‌வு, ப‌டிப்பு என்ப‌வ‌ற்றை உரிய‌முறையில் வ‌ழ‌ங்க‌முடியாத‌ ப‌ல‌வேறு உண‌ர்ச்சிக‌ளோடு அல்லாடிக்கொண்டிருந்த‌ன‌ர். மிக‌ப்பெரும் த‌த்த‌ளிப்பு எல்லா ம‌க்க‌ளிடையும் காண‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து; இது 25 வ‌ருட‌ப்போரினால் வ‌ந்த‌ க‌டைசி அழுத்த‌மாயிருந்த‌து.

மேரி யாழ்ப்பாண‌த்தைப் பூர்வீக‌மாக‌க் கொண்ட‌வ‌ர், ஆனால் 1995ல் வ‌ன்னிக்கு வ‌ந்த‌வ‌ர். இவ‌ருக்கு இர‌ண்டு பிள்ளைக‌ள், க‌ண‌வ‌ர் ஒரு விவசாயி. அன்பும் அர‌வ‌ணைப்பும் உடைய‌ தாயான‌ மேரி இல‌ங்கையை விட்டு வெளியேறி புதிய‌ ஒரு வாழ்வை த‌ன‌து குடும்ப‌த்துட‌ன் வாழ‌ அவ‌திப்ப‌டுகின்றார். "இப்ப‌டியான‌ சூழ்நிலையில், ஒரு தாயாக‌ இருப்ப‌து மிக‌வும் க‌டின‌மான‌து" என்று என‌க்கு அவ‌ர் சொன்னார். " என‌க்கு இர‌ண்டு பிள்ளைக‌ள் இருக்கின்றார்க‌ள், ஒரு ப‌தினாறு வ‌ய‌து ம‌க‌னும் ப‌தின் மூன்று வ‌ய‌து ம‌க‌ளும். க‌ன‌க்க‌ பிர‌ச்சினைக‌ளை நான் எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து, என‌து பெரிய‌ ப‌ய‌ம் என்ன‌வென்றால், புலிக‌ளால் என‌து பிள்ளைக‌ள் க‌ட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளாகிவிடுவார்க‌ளோ என்ப‌து".

"என‌து ம‌க‌ள் இங்கே என்ன‌ ந‌ட‌ந்துகொண்டிருக்கின்ற‌து என்ப‌தை அவ்வ‌ள‌வு அறிந்த‌வ‌ள் அல்ல‌, நானும் அவ‌ளுக்கு இவ‌ற்றைச் சொல்ல‌ முய‌ற்சிக்க‌வும் இல்லை. அவ‌ள‌து குழ‌ந்தைமையைச் ச‌ந்தோசிப்ப‌த‌ற்கு ச‌ந்த‌ர்ப்ப‌ம் உள்ள‌ அவ‌ளை நான் குழ‌ப்ப‌ விரும்ப‌வில்லை. ஆனால் என‌து ம‌க‌னுக்கு எல்லாம் விள‌ங்கும். "

"அவ‌ன் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வ‌ரும்போது, த‌ன‌க்கு மேல் வ‌குப்பிலுள்ள‌வ‌ர்க‌ள் ச‌ண்டைக்காய் கூட்டிச் செல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தை அடிக்க‌டி கூறுவான். இது பிள்ளைக‌ளுக்கு மிக‌வும் க‌ஷ்ட‌மான‌து, அவ‌ர்க‌ள் த‌ம‌து பிற‌ந்தநாட்க‌ளைப் ப‌ற்றிக் க‌தைத்து, நேர‌ம் வ‌ரும்போது யார் முத‌லில் கூட்டிச் செல்ல‌ப்ப‌டுவார்க‌ள் என்ப‌தைக் க‌ண‌க்கிடுகின்றார்க‌ள். என‌து ம‌க‌ன் 1992ல் பிற‌ந்த‌வ‌ர், இப்போது, புலிக‌ள் 1991ல் பிற‌ந்த‌ பிள்ளைக‌ளைக் கூட்டிச்செல்கின்றார்க‌ள்....அடுத்த‌ வ‌ருட‌ம் 1992 ஆக‌ இருக்கும்.

"இன்னொரு பெரிய‌ பிர‌ச்சினை என்ன‌வென்றால், எங்க‌ள் ச‌ன‌த்துக்கிடையே இருக்கும் பொறாமை ம‌ன‌ப்பான்மை. ஒரு பிள்ளை வீட்டிலிருந்து (புலிக‌ளால்) கூட்டிச்செல்ல‌ப்ப‌டுகையில், அப்பிள்ளையின் பெற்றோர், புலிக‌ளிட‌ம், அந்த‌ச்சுற்றாட‌லிலுள்ள‌ வீடுக‌ளில் ஒளிந்திருக்கும் ம‌ற்றப்பிளைக‌ளைப‌ ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ளைச் சொல்லுகின்றார்க‌ள். எங்க‌ள் ச‌ன‌த்துக்கிடையேயுள்ள‌ இவ்வாறான‌ பொறாமை ம‌ன‌ப்பான்மை, ஒவ்வொருத்த‌ரும் ஒவ்வொருத்த‌ரைப் ப‌ற்றியும் (கோள்மூட்ட‌) சொல்ல‌ வைக்கின்ற‌து. ஒரு பெண் பிள்ளை ஆறு மாத‌மாய் ஒரு ப‌ள்ள‌த்துக்குள் ப‌துங்கியிருந்த‌து என‌க்குத் தெரியும். ஒவ்வொரு இர‌வும் அவ‌ள‌து த‌ந்தை உண‌வும் நீரும் கொண்டுவ‌ந்து கொடுக்க‌ அவ‌ள் எல்லோருடைய‌ பார்வையிலிருந்தும் த‌ப்பியிருந்தாள். ஒரு வெயிலான‌ நாளில் அந்த‌ப்பிள்ளை கிண‌ற்றில் த‌ண்ணீர் குடித்துவிட்டு ப‌ள்ள‌த்துக்குள் திரும்பிப்போவ‌தை அய‌ல‌வ‌ர் ஒருவ‌ர் க‌ண்டிருக்கின்றார். அடுத்த‌ நாள் புலிக‌ள் வ‌ந்து அவ‌ளைப் ப‌ள்ள‌த்திலிருந்து கூட்டிச் சென்றிந்த‌ன‌ர். இவ்வாறான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எங்க‌ள் ச‌மூக‌ அமைப்பின் அடித்த‌ள‌ங்க‌ளை அழித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌. "

"என‌து பிள்ளைக‌ளும் கிபீருக்குச் ச‌ரியாக‌ப் ப‌ய‌ப்பிடுகின‌ம். ஒருநாள் மாலை என‌து ம‌க‌ன் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வ‌ரும்போது, வான‌த்திலில் கிபீர் ச‌டுதியாக‌த் தோன்றி, எங்க‌ள் வீட்டுக்கு அருகிலிருந்த‌ புலிக‌ளின் முகாமிற்கு குண்டு வீசிய‌து. அந்த‌ச் ச‌த்த‌ம் மிக‌ப் பெரிய‌து, அந்த‌ச் ச‌த்த‌ம் என‌க்குள் நிறைய‌ப் ப‌ய‌த்தைக் கொடுத்த‌து. என‌து ம‌க‌ன் அந்த‌ப் ப‌க்க‌த்தாலை வ‌ந்துகொண்டிருக்கும் நேர‌ம் என்ப‌தை நான் உண‌ர்ந்து அவ‌னுக்கு சேத‌ம் ஏற்ப‌ட்டிருக்குமோ என்ற‌ ப‌ய‌த்தில் நான் க‌த்தினேன். ஓடிக்கொண்டே வ‌ந்த‌ நாங்க‌ள் இருவ‌ரும் பாதையின் இடைந‌டுவில் ச‌ந்தித்தோம். அவ‌னைக் க‌ண்ட‌போது என‌க்கு ப‌ய‌மாக‌வும், ம‌கிழ்ச்சியாக‌வும் இருந்த‌து. ஆனால் இப்போது அவ‌ன் கிபீருக்கு ச‌ரியாக‌ப் ப‌ய‌ந்துபோயிருக்கின்றான். வீட்டிலிருக்கும் எங்க‌ளுக்குக் கேட்க‌முன்ன‌ரே அவ‌னுக்கு அந்த‌ச் (கிபீர்) ச‌த்த‌ம் கேட்கிற‌து. உட‌னேயே ஓடிப்போய் வீட்டுக்குப் பின்ப‌க்க‌முள்ள‌ கானுக்குள் ப‌டுத்துக்கொள்கின்றான். இவ்வாறு மாலையில் ந‌ட‌க்கும்போது, அவ‌னால் ப‌டிக்க‌ முடியாதிருக்கின்ற‌து, என‌க்கும், இந்த‌த் தாக்க‌ம் அவ‌ன‌து ப‌டிப்பைக் குழ‌ப்பிவிடுமோ என்று ச‌ரியாக‌க் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து. "

"என‌து பிள்ளைக‌ள் ந‌ன்கு ப‌டிக்க‌வும் ந‌ல்ல‌ க‌ல்வியையும் பெற‌ விரும்புகின்றேன், ஆனால் கிபீரின் ச‌த்த‌த்தை காலையில் நாங்க‌ள் கேட்கும்போது, அவர்க‌ள் பாட‌சாலைக்குப் போவ‌தை விரும்ப‌வில்லை. என‌து பிள்ளைக‌ள் என்றோ ஒரு நாள் கொல்ல‌ப்ப‌ட‌ப்போகின்றார்க‌ள் என்று வ‌ர‌வ‌ர‌ என‌க்குச் ச‌ரியாக‌ப் ப‌ய‌மாயிருக்கிற‌து...ஆக‌வேதான் அவ‌ர்க‌ளை வீட்டிலிருக்க‌ச் சொல்கின்றேன். என‌து பய‌த்தின் கார‌ண‌மாக‌ சில‌வேளைக‌ளில் அவ‌ர்க‌ள் வார‌த்தில் ஒருநாளோ இர‌ண்டு நாட்க‌ளோ பாட‌சாலைக்குப் போவ‌தைத் த‌வ‌ற‌விடுகின்றார்க‌ள். நானொரு கெட்ட‌ அம்மாவாக‌ ஆகிக்கொண்டிருப்ப‌தாய் இது என்னைச் ச‌ரியாய்க் க‌வ‌லைப்ப‌டுத்துகிற‌து. ஆனால் நான் என‌து பிள்ளைக‌ளைப் பாதுகாக்க‌ முய‌ற்சித்துக்கொண்டிருக்கின்றேன்."

2008 ஆண்டுமுழுதும், இல‌ங்கை இராணுவ‌ம் மேற்குக்க‌ரையோர‌த்தால் கிளிநொச்சி நோக்கியும், யாழ் தீப‌க‌ற்ப‌க‌த்தையும் மிகுதி நாட்டையும் இணைக்கும் கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ ஆனையிற‌வு நோக்கியும் முன்னேறிய‌ப‌டி இருந்த‌து. பொதும‌க்க‌ள் மீண்டும் கிளிநொச்சியிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையிலிருக்கும் புதுக்குடியிருப்பு நோக்கி இட‌ம்பெய‌ர‌த்தொட‌ங்கின‌ர். இந்த‌க்க‌ண‌ம்வ‌ரை, இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ள் மிக‌வும் மோச‌மான‌ நிலையில் வாழ்ந்திருந்தாலும், கிளிநொச்சியிலும், ஆனையிற‌விலும் ந‌ட‌ந்த‌ ச‌ண்டைக‌ளிலிருந்து காப்பாற்ற‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள்.

செஞ்சிலுவை ச‌ங்க‌ம் த‌விர்ந்த‌ அனைத்து உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ளும், ஐப்ப‌சி 16, 2008ல் இருந்து வெளியேற்ற‌ப்ப‌ட்டு, அர‌சாங்க‌த்தின் ந‌க‌ரான‌ வ‌வுனியாவில் த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். இம்ம‌க்க‌ளை அவ‌ர்க‌ளுக்கு உத‌வி தேவைப்ப‌டுகின்ற‌ முக்கிய‌ த‌ருண‌த்தில் விட்டுவிட்டு வ‌ந்த‌து என்னுடைய‌ வாழ்வில் மிக‌ வ‌லியைத் த‌ந்த‌ அனுப‌வ‌மாகும். அத்தியாவ‌சிய‌ தேவைக‌ள் கிடைக்காத‌ நிலையில், எறிக‌ணைக‌ளின‌தும், விமான‌ங்க‌ளின் தாக்குத‌ல்க‌ளுக்கிடையில், நான் என‌து ந‌ண்ப‌ர்க‌ளையும், கூட‌ வேலை செய்த‌வ‌ர்க‌ளையும் வ‌ன்முறைக‌ளுக்கிடையிலும், ந‌ம்பிக்கையீன‌ங்க‌ளுக்கிடையிலும் விட்டு வெளியேற‌ வேண்டியிருந்த‌து. ஐப்ப‌சி மாத‌த்திலிருந்து, உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்கள் ஒவ்வொரு நாளும் உண‌வையும் த‌ங்குமிட‌ங்க‌ளையும், அத்தியாவ‌சிய‌மான‌ ம‌ருந்துக‌ளையும் ம‌க்க‌ளுக்கு கொண்டுசெல்வ‌த‌ற்கு திணறிக் கொண்டிருக்க‌ வேண்டியிருக்கின்ற‌து. ப‌ல‌வேறு வ‌கையான‌ அமைப்புக்க‌ளின் தொட‌ர்ச்சியான‌ த‌டுத்துநிறுத்த‌ல்க‌ளால், அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ள் மிக‌வும் அவ‌சிய‌மாய்த் தேவைப்ப‌டுகின்ற‌ இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளுக்கு கொண்டுசெல்லுத‌ல் த‌டுக்க‌ப்ப‌டுகின்ற‌து. கார்த்திகை ப‌ருவ‌மழையின் கார‌ண‌மாக‌, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் ம‌ர‌ங்க‌ளைத் த‌ம‌து வீடுக‌ளாக்கி, இருக்கின்ற‌ சொற்ப உண‌வுப்பொருட்க‌ளைப் ப‌கிர்ந்த‌ப‌டி இருக்கின்றார்க‌ள். உத‌வி நிறுவ‌ன‌ங்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ ம‌லேரியாவையும், போசாக்கின்மையையும் த‌டுப்ப‌த‌ற்கு உதவி கேட்டுக்கொண்டிருக்கின்றார்க‌ள், ஆனால் விளைவு என்ன‌வோ சொற்ப‌மே.

தை 02, கிளிநொச்சி இல‌ங்கை இராணுவ‌த்திட‌ம் விழும்வ‌ரை, இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளால் புதுக்குடியிருப்பு ப‌குதியிலிருந்து ந‌க‌ர‌ முடியவில்லை. அவ‌ர்க‌ள் இந்து ச‌முத்திர‌த்தாலும், முன்னேறிக்கொண்டிருந்த‌ இராணுவ‌த்தாலும், விடுத‌லைப்புலிக‌ளாலும் சூழ‌ப்ப‌ட்டிருந்தார்க‌ள். புலிக‌ள் இட‌ம்பெய‌ர்வ‌த‌ற்கு த‌டுத்த‌தோடு, அவ‌ர்க‌ளைத் த‌ங்க‌ள் இய‌க்க‌த்திற்குச் சேர்ப்ப‌த‌ற்கும், வேலைக‌ளைச் செய்வ‌த‌ற்கும் ப‌ய‌ன்ப‌டுத்தின‌ர்.

கிளிநொச்சியின் கைப்ப‌ற்ற‌லோடும், சில‌ நாட்க‌ளின் பின்பான‌ ஆனையிற‌வின் வீழ்ச்சியோடும், புலிக‌ளுக்கு எதிர்கால‌ம் அவ்வ‌ளவு ந‌ல்ல‌தாக‌த் தென்ப‌ட‌வில்லை. வ‌ன்னியிலுள்ள‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம் த‌ற்ச‌ம‌ய‌ம் த‌ங்க‌ளுக்கேற்ற ப‌குதிக‌ளைத் தேடிக்கொண்டிருக்கின்றார்க‌ள். இல‌ங்கை இராணுவ‌ம் கிளிநொச்சியைத் த‌ம் வ‌ச‌மாக்கிய‌பின், இறுதி யுத்த‌ம் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டிலுள்ள‌ முல்லைத்தீவை நோக்கி ந‌க‌ர்ந்து கொண்டிருக்கின்ற‌து. மிக‌ப்பெரும் இட‌ம்பெய‌ர்ந்த‌ ச‌ன‌த்திர‌ள் கிளிநொச்சியிற்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலிருக்கிற‌து, ஆனால் இம்முறை அவ‌ர்க‌ளுக்கு ஒளிந்துகொள்ள‌ எந்த‌ இட‌மும் இல்லை.

"இந்த‌ மோச‌மான‌ நில‌வ‌ர‌ம் மிக‌ உச்ச‌த்தில் இருக்கிற‌து" என்றார் ச‌ர்வ‌தேச‌ அமெனெஸ்டி ஆய்வாள‌ரான‌ யோலென்டா போஸ்ட‌ர். " முல்லைத் தீவை நோக்கிய‌ அர‌சாங்க‌ ந‌ட‌வ‌டிக்கையினால் ச‌ண்டை உக்கிர‌ம‌டைய‌ க‌ட‌ந்த‌ வார‌ம் ம‌க்க‌ளுக்கு இழ‌ப்புக்க‌ள் அதிக‌ரித்திருக்கின்ற‌ன‌. த‌மிழ் புலிக‌ள் ம‌க்க‌ளைப் போக‌ விட‌வேண்டும், அதேவேளை அர‌சாங்க‌ம், பொறியில் அக‌ப்ப‌ட்டும், ப‌ல‌வேளைக‌ளில் ம‌ற‌க்க‌ப்ப‌ட்டும்விட்ட‌ ம‌க்க‌ளுக்கான‌ உட‌ன‌டி ம‌னிதாபிமான‌ உத‌விக‌ளைச் செய்ய‌ அனும‌திக்க‌ வேண்டும்."

ச‌ர்வ‌தேச‌ செஞ்சிலுவைச் ச‌ங்க‌ம், ம‌க்க‌ள் வெளியேறுவ‌த‌ற்கான‌ -உட‌ன்பாடுள்ள‌ பாதையில்லாத‌து குறித்து மிக‌வும் விச‌ன‌ப்ப‌ட்டுள்ள‌து, அத்துட‌ன் ம‌க்க‌ள் மிக‌ச்சிறிய‌தான‌ ப‌குதியில் செறிவாக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள், இத‌னால் அவ‌ர்க‌ள‌து வாழ்விட‌ நிலைமைக‌ளும், பாதுகாப்பும் மிக‌வும் க‌வ்லைக்கிட‌மாயுள்ளது, குறிப்பாய் தொற்றுநோய்க‌ள். ம‌க்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ள் (அர‌சாங்க‌த்தால்) த‌டுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாலும், , ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் உத‌வில்லாத‌தாலும், எவ்வித‌ பாதுகாப்புமின்றி இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளின் நிலைமை மிக‌ மோச‌மாய் இருக்கிற‌து.

வ‌ன்னி ம‌க்க‌ளுக்கு இல‌ங்கை இராணுவ‌ம் ப‌ற்றி மிகுந்த‌ பாதுகாப்பின்மையாக‌ இருப்ப‌தே உண்மை. த‌மிழ‌ர் மீதான‌ 25 வ‌ருட‌ ப‌டுகொலைக‌ளின் வ‌ர‌லாற்றில், இல‌ங்கை இராணுவ‌த்தின் தெளிவான‌ நோக்காக‌ புலிக‌ளை முற்றாக‌ அழிப்ப‌தாய் இருக்கையில் வ‌ன்னி ம‌க்க‌ள் மிகவும் அந்த‌ர‌மான‌ நிலையை எதிர்நோக்கியிருக்கின்றார்க‌ள். கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லோருடைய‌ குடும்ப‌த்திலும் யாரோ ஒருவ‌ர் விரும்பியோ அல்ல‌து க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டோ புலி உறுப்பின‌ராக‌ இருக்கின்றார். இந்த‌ நிலைமையால் தாங்க‌ள் புலிக‌ளின் அனுதாபிகளாக‌ பார்க்க‌ப்ப‌டுவோம் என்று இன்னும் அதிக‌மாய் இல‌ங்கை இராணுவ‌த்தின் மீது ப‌ய‌ப்பிடுகின்ற‌வ‌ர்க‌ளாய் ம‌க்க‌ள் இருக்கின்றார்க‌ள், அவ்வ‌ண்ண‌மே தாங்க‌ள் இல‌ங்கையின‌து பாதுகாப்பிற்கு அச்சுறுத்த‌லாய் இருப்ப‌தாய்ப் பார்க்க‌ப்ப‌டுவோம் என்ப‌தும்.

"இல‌ங்கை இராணுவ‌ம் இந்த‌ப் ப‌குதியிற்கு வ‌ருவ‌து குறித்து என‌க்கு மிக‌வும் ப‌ய‌மாயிருக்கிற‌து" என்று யாழ்ப்பாண‌த்தைச் சேர்ந்த‌ செல்வ‌ன் கூறினார். "என‌க்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் த‌ர‌ப்ப‌ட்டால் நான் வெளியேறுவேனா என்ப‌து என‌க்குச் ச‌ந்தேக‌மாய் இருக்கிற‌து. எங்க‌ள் கிராம‌த்திலிருக்கும் எல்லோரும் அர‌சாங்க‌த்தின் ப‌குதிக‌ளுக்கு செல்வார்க‌ளாயிருப்பின், நான் என‌து குடும்ப‌த்துட‌ன் போக‌க்கூடும். ஆனால் எங்க‌ள் எல்லோருக்கும் ச‌ரியாய்ப் ப‌ய‌மாயிருக்கிற‌து, நாங்க‌ள் ஒருபோதும் வெளியில்(அர‌ச‌ ப‌குதியில்) வாழ்ந்த‌தில்லை ஆதனால் அங்கே எப்ப‌டி(நிலைமை) இருக்கும் என்றும் தெரிய‌வில்லை."

வ‌ன்னி 'விடுவிக்க‌ப்ப‌டும்போது' வ‌ன்னியிலிருந்து ஆயிர‌க்க‌ண‌க்கில் ம‌க்க‌ள் வெள்ள‌மாய் வ‌ர‌க்கூடுமென்று வ‌வுனியாவில் அர‌சாங்க‌ம் (த‌டுப்பு) முகாங்க‌ளைத் த‌யார்ப‌டுத்தியுள்ள‌து. ஆனால் நாங்க‌ள் க‌ட‌ந்த‌கால‌த்தில் பார்க்கின்ற‌போது, இத்த‌கைய‌ 'ம‌னிதாபிமான‌ முகாங்க‌ள்' முக்கிய‌மான‌ சித்திர‌வ‌தைக் கூட‌ங்களாக‌வும், இம்முகாங்க‌ளிலிருந்து ம‌க்க‌ள் வெளியேற‌ ப‌ல‌ மாத‌ங்க‌ள் எடுக்க‌க்கூடிய‌தாக‌வும் இருந்திருக்கிற‌து. அத்துட‌ன் இங்கே த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளுக்கு என்ன‌ காத்திருக்கிற‌து? வ‌ள‌மான‌ அவ‌ர்க‌ளின் வ‌ன்னி நில‌ங்க‌ள் இந்த‌ யுத்த‌த்தால் வெடிக்க‌ப்ப‌டாத‌ குண்டுக‌ளால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டுள்ள‌து. இன்ன‌மும் வெடிக்காத‌ எறிக‌ணைக‌ள் ப‌திந்துள்ள விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும், க‌ரையோர‌ப் ப‌குதிக‌ளையும் சுத்திக‌ரித்து விவசாயிக‌ள் திரும்பிப்போக‌ இன்னும் ப‌ல‌வ‌ருட‌ங்க‌ள் எடுக்கும்? என்ன‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மீள்சீர‌மைப்புக்கும் மீள் குடியேற்ற‌ங்க‌ளுக்கும் செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌? இவையெல்லாம் சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்டு கைய‌ளிக்கும்வ‌ரை இந்த‌ ம‌க்க‌ள் இவ்வாறான‌ த‌டுப்பு முகாங்க‌ளிலா காத்திருக்க‌வேண்டும்?

சுயாதீன‌ க‌ண்காணிப்பாள‌ர்க‌ள் வ‌ன்னியில் இல்லாத‌தால், இர‌ண்டு ப‌க்க‌மும் ஒழுங்க‌மைக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ர‌ப்புரையைச் செய்து வ‌ருகின்ற‌ன‌, இத‌னால் உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ ஐப்ப‌சியிலிருந்து வெளியேறிய‌பின், வ‌ன்னியிலுள்ள‌ ம‌க்க‌ளின் உண்மையான‌ நில‌வ‌ர‌த்தை அறிவ‌து மிக‌வும் க‌டின‌மாயிருக்கிற‌து. அந்த‌ மாத‌ம் வ‌ரையும்(ஐப்ப‌சி) பார்த்த‌வ‌கையில் சொல்வ‌த‌னால், ம‌க்க‌ள் உண‌வு, உறைவிட‌ம், பாதுகாப்பு க‌ழிவிட‌ வ‌ச‌திக‌ள் மிக‌வும் குறைந்த‌ க‌ஷ்ட‌மான‌ வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார்க‌ள்... ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் வெளியேற்ற‌த்துட‌ன், உத‌விப் பொருட்க‌ள் வ‌ழ‌ங்குவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்ட‌ன‌, ப‌ருவ‌ம‌ழையின் கார‌ண‌மாக‌வும், உக்கிர‌மான‌ இராணுவ‌ ந‌டவ‌டிக்கையாலும், நிலைமை மிக‌வும் மோச‌மாக‌ நினைத்துப் பார்க்காத‌ அள‌வுக்குப் போயிருக்கும்.


ந‌ன்றி:

Tehelka
த‌மிழில்: டிசே த‌மிழ‌ன்


புகைப்ப‌ட‌ம் 1: வீடும், பாதுகாப்பும் பிற‌வ‌ச‌திக‌ளும‌ற்று ம‌ர‌த்தின் கீழ் த‌ங்கியிருந்த‌ குடும்ப‌ம் ஒன்று.
புகைப்ப‌ட‌ம் 2: இல‌ங்கை இராணுவத்தின் எறிக‌ணைக‌ளால் அழிக்க‌ப்ப‌ட்ட‌ வீட்டின் எஞ்சிய‌பகுதியில் த‌னித்திருக்கும் சிறுவ‌ன்.
புகைப்ப‌ட‌ம் 3: ம‌னிதாபிமான‌ப் ப‌ணிக‌ளைச் செய்த‌ நிறுவ‌ன‌ங்க‌ளை இல‌ங்கை அர‌சாங்க‌ம் வ‌ன்னிக்குள இருந்து வெளியேற்ற‌போது, அவ‌ர்க‌ளைப் போக‌வேண்டாம் என்று ம‌க்க‌ள் ந‌ட‌த்திய‌ போராட்ட‌ம்.
(இப்ப‌ட‌ங்க‌ளும் மேலே க‌ட்டுரையை எழுதிய‌வ‌ராலேயே எடுக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌)