கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நினைவுகளில் வாழ்பவர்கள்

Thursday, September 20, 20121.
அண்மையில் ஈழம் சென்றிருந்தேன். அக்கா குடும்பத்துடன் கொழும்பில் நீண்டகாலமாய் வசித்து வருகிறார். பயணத்தின் ஒருபகுதியாக ஊருக்குச் சென்று பார்ப்பதாய்த் திட்டம் இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக எவருமே வசிக்க அனுமதிக்கப்படாத இடம் எங்கள் ஊர். 1990களின் தொடக்கத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலினால் இடம்பெயரத் தொடங்கி, பிறகு யாழ்ப்பாணத்திலேயே பல்வேறு இடங்களுக்குள் அகதிகாய் அலைந்து இறுதியாய் கனடாவிற்கு வந்திறங்கிய வாழ்வு என்னுடையது. இப்போது ஊரைச் சற்று உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து நீக்கி, சென்று பார்க்க விடுகிறார்கள் என்பதால் போய்ப் பார்க்கலாம் எனத் தீர்மானித்திருந்தோம். ஊர் இன்றும், எவரும் தீண்டுவாரின்றி மரங்கொடிகளும் பற்றைகளும் போர்த்திக் கிடந்தன. வீடுகளும் கூரைகள் எதுவுமின்றி முன்னோர் காலத்தில் மக்கள் வாழ்ந்தார்கள் என்ற ஓர் அடையாளம் என்றளவில் மட்டுமே எஞ்சியிருந்தன. பலரின் வீட்டின் அறைகளில், ஹோல்களில் நடுவேயே மரங்கள் முளைத்துவிட்டிருந்தன. 20 வருடங்கள் என்பது அவ்வளவு கொஞ்சக் காலம் அல்லவே தானே.

ஊரினதும் வீட்டினதும் புகைப்படங்களைப் முகநூலில் பகிர்ந்தபோது ஒரு நண்பர் கேட்டிருந்தார், அங்கே போய் வீட்டைப் பார்த்தபோது என்ன உணர்வு தோன்றியதென்று.  உண்மையிலேயே அங்கு ஒருகாலத்தில் எனக்கிருந்த வாழ்வையும், ஊரவர்களையும் போரின் நிமித்தத்தால் இழந்துவிட்டிருந்தேன் என்பதில் சற்றுக் கவலைதான். ஆனால் இதைவிட எத்தனையோ கொடுமைகளையும், என்றுமே அழிக்கமுடியா பெரும் வடுக்களையும் பின்னாளில் ஈழத்திலிருந்த மக்களுக்குப் போர் கொடுத்திருக்கிறது என எண்ணும்போது  ஊரும் வீடும் பிரிந்த எனது துயரம் பெரிதேயல்ல எனத்தான் நினைக்கிறேன்.

வீட்டைப் பார்த்துவிட்டு, யாழில் நின்ற சில நாட்களில் வெவ்வேறு இடங்களில் தெறித்து வாழும் ஊரவர்கள் மற்றும் உறவினர்களைச் சந்திக்கச் சென்றிருந்தோம். நம் உரையாடல்களின் வழி இழந்தபோன வாழ்வை மீட்டபடியிருந்தோம். சிலபேர் 95 யாழ் முற்றுகையின்பின் வன்னிக்குள் சென்று வாழ்ந்தவர்கள். அண்மைய பேரழிவில், தம் நெருங்கிய உறவுகளைப் பறிகொடுத்தவர்களும் அவர்களில் அடக்கம். துக்கம் விசாரிக்கவேண்டும் என்று மனம் அவாவினாலும், அவர்களிடம் போய் உங்கள் மகன் எப்படி இறந்தார் என்றோ அல்லது உங்கள் துணைவர் எப்படி இறந்தார் என்றோ கேட்பது மிகவும் கொடூரமாக இருக்கும் என்பதால், அநேகமாய் வேறு விடயங்களையே கதைத்துக் கொண்டிருந்தோம். இழப்பும் வறுமையும் அவர்களைச் சூழ்ந்திருப்பதைக் கண்டபோது சோர்வாகவே இருந்தது. ஒரு காலத்தில் ஒன்றாய் எங்களுடன் சேர்ந்து விளையாடியவர்கள், ஒழுங்கைகளில் வெயில் குடித்து அலைந்தவர்கள், பசித்தபோது சாப்பாடும் மோரும் தந்தவர்களென... அவர்களை இன்று வேறொரு நிலைமையில் பார்க்கும்போது மிகவும் அந்தரமாகவே உணர்ந்தேன்.. இந்தப் பயணத்தின்போது என்னத்தைக் காவிக்கொண்டு மீளவந்தேன் என்று யோசிக்கும்போது, இத்தகைய சூழலுக்குள்ளும் வாழத்துடிக்கும் அவர்களின் மிகப்பெரும் நம்பிக்கையைத்தான் எனத்தான் கூறுவேன்.

2.
இலக்கியம் சார்ந்தியங்கும் சில நண்பர்களையும் இந்தப் பயணத்தில் சந்திக்க முடிந்தது என்னளவில் முக்கியமாய் இருந்தது. உமா வரதராஜன், நிலாந்தன், ச.இராகவன், துவாரகன், யோ.கர்ணன், அஜந்தகுமார், உதயகுமார் போன்ற சில நண்பர்களைக் குறுகிய பொழுதில் சந்திக்க முடிந்திருந்தது. இன்னும் அ.யேசுராசா, கருணாகரன், றியாஸ் குரானா, தீபச்செல்வன் போன்றவர்களைச் சந்திக்க விரும்பியும் நேரம் இடம் கொடுக்காது போனதில் சந்திக்காதது சற்றுக் கவலைதான். இந்த நண்பர்களையும், இன்னும் பலரையும் சந்தித்ததில் ஈழத்திலிருந்து ஒலிக்கும் பன்மைக்குரல்களை கேட்க முடிந்திருந்தது. எவ்வாறு புலம்பெயர் தேசங்களில் அரசியல் சார்ந்து பல்வேறு குரல்கள் இருக்கின்றனவோ, அவ்வாறே பல்வேறு குரல்கள் ஈழத்திலும் இருக்கின்றன என்பது நான் அவதானித்த ஒரு விடயம், ஆகவே எவரும் முழுமையாக எவரையும் அடையாளப்படுத்திவிடமுடியாது என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. ஆக, அவரவர் அவரவர்க்கான குரலில் பேச விழைகிறார்கள் என்பதை விளங்கிக்கொண்டு அக்குரல்களை அணுகவேண்டும் எனத்தான் நினைக்கிறேன். முக்கியமாய் கிழக்கு மாகாணத்தில் நான் நினைத்துக்கொண்டு இருந்ததற்கு மாறாக, புலம்பெயர் தேசத்தில் முன்வைக்கப்படும் குரல்களுக்கு மாற்றாக வேறு குரல்களையும் கேட்டதில் என்னளவில் ஒரு சிறு அதிர்ச்சி எனத்தான் கூறவேண்டும்.

ஈழத்தில் பல்வேறுமுனைகளிலிருந்தும் பல்வேறு சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் பலர் தமது படைப்புக்களை நூலாக்கிக் கொண்டிருக்கின்றனர். கொழும்பில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குச் சென்றபோது பெருமளவில் அபுனைவுத் தொகுப்புக்கள் ஈழத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாக இருந்தது. பல நண்பர்கள் தத்தம் பிரதேசங்களில் தமக்குரிய வளங்களுடன் இலக்கியக் கலந்துரையாடல்களையும், புத்தக வெளியீட்டுக்களையும் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இன்றும் ஒரு பொது நிகழ்வு அது புத்தக வெளியீட்டாய் இருந்தாலானென்ன, கலந்துரையாடலாய் இருந்தாலென்ன இராணுவத்திடம் அனுமதி பெற்றே நிகழ்ச்சிகளை நடத்தும் நிலை இருக்கின்றதென்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஈழத்து அரசியல் நிலைமை பேசுபவர்கள், ஈழத்தில் இயல்புநிலை திரும்பவேண்டுமென விரும்புபவர்கள் மற்றும் புலம்பெயர் தேசத்திலிருந்து எடுத்துக்கொண்டு இலக்கியக் கூட்டங்களை ஈழத்தில் நடத்த விரும்புபவர்கள்... இவ்வாறான தடைகளைப் பற்றியும் உரத்துப் பேசவேண்டும். அண்மையில் ஒரு நண்பர் இலக்கியக்கூட்டம் நடத்திமுடிக்க, இராணுவம் அவரை விசாரிக்க வீடு தேடிப் போயிருக்கிறதென்பது அங்குள்ள யதார்த்தமாய் இருக்கிறது.

3.
உமா வரதராஜனின் எழுத்துக்களை அவரது 'உள்மனயாத்திரை' தொகுப்பு வாசித்ததிலிருந்து மிகவும் பிடிக்கும். அண்மையில் அவரது எல்லாச் சிறுகதைகளையும் தொகுத்து 'உமா வரதராஜன் கதைகள்' என வெளியிட்டிருக்கின்றார்கள். 'மூன்றாம் சிலுவை' என்றொரு நாவலையும் எழுதி கடும் விமர்சனங்களையும் அவர் சந்திருக்கின்றவர். உமா எந்த நாவலையும் எப்படியும் எழுதுவதில் எனக்குக் கேள்விகளில்லை. ஆனால் 'உள்மனயாத்திரை' எழுதிய உமாவிடமிருந்து அவரின் நாவலில் வேறெதையோ எதிர்பார்த்தேன். அது 'மூன்றாம் சிலுவை'யில் கிடைக்கவில்லை என்பது ஒரு வாசகராக என்னளவில் ஏமாற்றமாய் இருந்தது..

ச.ராகவன் என்னை பொறுத்தவரை ஈழத்தில் இப்போதிருக்கும் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். அவருடன் பேசிக்கொண்டிருப்பதே மிகவும் சுவாரசியமான விடயம். சிறுகதைகளைப் பற்றி, எங்களின் முன்னோடி எழுத்தாளர்களை மற்றும் சமகாலப் படைப்பாளிகளைப் பற்றியெனப் பலதும் பத்துமாய்க் கதைத்துக்கொண்டிருந்தோம். ஈழத்தின் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து ஏன் இலத்தீன் அமெரிக்கக் கதைகளைப் போல -தொன்மமும் படிமங்களும் நிறைந்த கட்டிறுக்கமான- மாய யதார்த்தக் கதைகள் வெளிவரவில்லை என்பதைப் பற்றி  நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. அவ்வாறான முயற்சியில் ஈடுபடும் எழுத்தாளர்களாக,  ஈழத்தில் திசேராவையும் இராகவனையும் முன்னர் கவனப்படுத்தி ஒரு கட்டுரையில் எழுதியுமிருக்கின்றேன். ஆனால் சிலவேளைகளில் தனிப்பட்டவர்களைப் பற்றிக் கதைகள் எழுதியும் இராகவன் சிக்கலில் மாட்டுவதுண்டு. அண்மையில் கூட அப்படியொரு கதை இந்தியச் சஞ்சிகையில் எழுதி சர்ச்சைக்குள்ளானதாய்க் கேள்விப்பட்டேன். 'விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு' என்ற அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு சென்ற வருடம் வெளிவந்திருக்கின்றது.

துவாரகன் என்கின்ற குணேஸ்வரன் ஒரு கவிஞராக இருப்பதுடன் நிறைய அபுனைவுக் கட்டுரைகளை எழுதிவருகின்றார். முக்கியமாய்ப் புலம்பெயர் படைப்புலகம் குறித்து நிறையத் தகவல்களைச் சேகரித்து விரிவாக எழுதி வரும் ஒருவர். புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்து அவர் எழுதிய 'அலைவும் உலைவும்' கட்டுரைகளின் தொகுப்பு ஒரு முக்கிய தொகுப்பு. இந்த வருடமும் 'புனைவும் புதிதும்' என ஏற்கனவே எழுதிய ஆய்வுக்கட்டுரைளைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கின்றார். யோ. கர்ணன் அண்மையில் கவனம் பெற்றுவருகின்ற ஒரு சிறுகதைப் படைப்பாளி. 'தேவதைகளின் தீட்டுத்துணி' என்கின்ற முதலாவது தொகுப்பிற்குப் பிறகு இப்போது 'சேகுவரா இருந்த வீடு' என்கின்ற இரண்டாவது தொகுப்பை வெளியிட்டிருக்கின்றார். ஈழப்போராட்டம் மீதான பல்வேறுபக்க பார்வைகளை - முக்கியமாய் இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த பல சம்பவங்களை- கர்ணனின் எழுத்துக்களினூடாக நாம் வாசித்தறிய முடியும்.

3.
ஊரிலிருந்தபோது எனக்கு மாவிட்டபுரமும் கீரிமலையும் நெருக்கமான கோயில்களாக இருந்தன.  வேறு பல கோயில்கள் அருகிலிருந்தாலும் ஏனோ இவற்றுக்கு நிறையத் தடவைகள் போயிருந்தேன். கீரிமலைக்கு அருகிலேயே அம்மா பிறந்து வளர்ந்த ஊரும் இருந்தது. அங்கே போய்ப் பார்த்தபோது அதன் நடுவில் இராணுவத்தின் 'பண்ட்' போயிருந்ததன் அடையாளம் தெரிந்தது. குடிக்கும் நீருள்ள கிணற்றின் உள்ளே, இடைநடுவில் இருந்து அரசமரம் ஒன்று பெரிதாக வளரத் தொடங்கியிருந்தது. சும்மாவே அரசமரமில்லாத இடங்களிலேயே இரவிரவாக புத்தர் சிலைகள் முளைக்கும்போது, துலக்கமான அரசமரத்தைக் கண்டு புத்தர் இந்தக் கிணற்றடியில் வந்து சேராதிருக்கவேண்டுமென நினைத்துக்கொண்டேன். கீரிமலைக்கு அப்பாவோடு அடிக்கடி ஆடி அமாவாசைத் தினங்களில் சென்றிருக்கின்றேன். ஒருமுறை கீரிமலைக் கேணியில் தவறி வீழ்ந்துமிருக்கின்றேன். இப்போது கீரிமலையைப் பார்க்க முடியுமெனினும், அதனருகில் இருக்கும் இந்து சமுத்திரத்தில் முன்னரைப் போல கால் நனைக்க அனுமதியில்லை. மேலும் முன்னர் திருவடி நிழலாக இருந்த இடம் இப்போது 'ஜம்புகோளப் பட்டினமாய்' மாறியுமிருந்தது. மற்றது கீரிமலைக் கோயிலின் புராதனக் கோபுரம் இப்போது இல்லையெனச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

அப்படியே மாவிட்டபுரத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போது காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை தூரத்தில் தெரிந்தது. எங்கள் மாமா அங்கேதான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார், ஆனால் எனக்கு நினைவு தெரிந்தமுதல் சீமெந்துத் தொழிற்சாலை இயங்கியதற்கான எந்தத் தடயங்களுமில்லை. இப்போதும் அப்படியே இருக்கிறது. ஆனால் தோண்டிக்கொண்டிருக்கும் முருகைப்பாறைகளின் வேலை மட்டும் இன்னும் முடியாது -யார் யாரோ எல்லாம் மண்ணைக் கிளறிக்கொண்டிருக்கின்றார்கள்- எனக் கேள்விப்பட்டேன். அது 'யார் யாரோவாக' இருந்தாலும் ஒரு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காலடி வைப்பவர்கள் நாம் யாரென்பதை ஊகித்தும் அறிந்து கொள்ளலாம்.

மாவிட்டபுரம் கந்தசாமிக் கோயிலின் கொடிக்கம்பத்தைக் காணவில்லை. தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள் என்றார்கள். அவ்வளவு பெரிய கொடிக்கம்பத்தைக் களவெடுத்துக் கொண்டுபோனவர்கள் எங்கே விற்றிருப்பார்கள் என யோசிக்கச் சற்றுத் திகைப்பாய்த்தானிருந்தது. மாவிட்டபுரமும் அழிவின் இடிபாடுகளுக்கிடையே இருக்கின்றது. மாவிட்டபுரத்தின் ஐந்து தேர்கள் பவனிவரும் தேர்த்திருவிழாவும், பிரமாண்டமான சப்பரத்த்திருவிழாவும் இன்னமும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது என ஞாபக அலைகளில் இருக்கின்றன. இன்று ஒரு சிறு தேரும், இன்னொரு தேர் கீழ்ப்பகுதியும் இருக்கக் கண்டேன். சப்பரம் இருந்தற்கான அடையாளத்தைக் காணவில்லை..

நான் படித்த பாடசாலையில், ஒவ்வொருமுறையும் மஞ்சத்திருவிழா அன்று மாவிளக்குப் போட மாவிட்டபுரம் கோயிலுக்குப் போவார்கள். சிறுவர்களாய் இருந்த நாங்களும் அந்தக் காலத்தில் உற்சாகமாய்ப் போவோம். மூத்த மாணவர்கள் சுதந்திரமாய் காதல் செய்யும் நாட்களாய் மாவிட்டபுரத் திருவிழா நாட்கள் இருந்ததை கச்சானையோ, கோன் ஜஸ்கிறிமையோ சுவைத்துக் கொண்டு பார்த்துமிருக்கின்றேன்.இந்நினைவுகளே சிலவருடங்களுக்கு எழுதிய ஒரு கவிதைக்கும் விதை போட்டிருந்தது.

மாவிளக்குப்போட்டு சுவைக்க
திருவிழாக்கள் வரும்
எதிர்பார்க்காத் தருணத்தில்
விரல்நீவி கண்ணசைத்து கற்றைகோதி கரைவாய்
என் நாசியைப் பின்தொடர்வது மாவிளக்கு நெய்யா
இல்லை நம்முடல்கள் நேற்றிரா பகிர்கையில் கசிந்த வியர்வையா?
கடவுளர் உக்கிரவிழி உருட்டினாலும்
தூண்களில் விழித்திருக்கும்
முலைதிறந்த சிலைகளுக்கும்
பொங்கிப் பிரவாகரிக்கும் காமமுண்டு
விலக்கப்பட்ட மூன்றுநாட்களையும் சேர்த்து.
(2006)

ஆக நாமெல்லோரும் நினைவுகளில் அல்லவா வாழ்பவர்கள். அந்த நினைவை மீண்டும் யதார்த்த்தில் நிகழ்த்திப் பார்க்கும் எத்தனங்களும் -என்னைப் போல சிலரால்- இவ்வாறான பயணங்களின் மூலம் பரீட்சித்தும் பார்க்கப்படுகின்றன, ஆனால் அவை அநேகமான வேளைகளில் மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாய் துயரத்தை இன்னும் பெருக்கிவிடுவதாகவே அமைந்துவிடுகின்றன. ஆகவேதான் சிலவேளைகளில் நினைவுகளுக்குப் பதிலாக எழுத்தில் அடைக்கலம் புகவேண்டியும் இருக்கிறதோ என்னவோ.

--------------------------------
நன்றி: அம்ருதா (செப்/2012)