கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எஸ்,பொவின் 'தீ'

Monday, February 28, 2022


(எஸ்.பொ - பகுதி -02)


 1. 


ஸ்.பொ, அவரின் முதலாவது புதினமான 'தீ'யை எழுதியபோது அவரது இருபதுகளில் இருந்திருக்கின்றார்.  அது பின்னர் அவரது  29 வயதில்சரஸ்வதி பதிப்பகத்தால் 1961இல் வெளிவந்திருக்கின்றது. தீ வெளிவந்தபோது அது உருவாக்கிய உரையாடல்களும் சர்ச்சைகளும் அன்றையகாலத்தில் வெகு பிரபல்யம் பெற்றவை. " 'தீ'யைத் தீயிலிட்டுக் கொளுத்துங்கள்" என்று ஈழத்தில் மட்டுமில்லை, தமிழகத்தில் 'எழுத்து' போன்ற சிற்றிதழ்களிலும் பிரமிள். மு.தளையசிங்கம் போன்றவர்கள் இந்த நாவல் குறித்து விரிவாக விவாதித்திருக்கின்றார்கள்.


இன்றைக்குக் கிட்டத்தட்ட தீ வெளிவந்த 60 வருடங்கள் ஆகியபின், 'தீ'யிற்கான மதிப்பு என்னவாக இருக்கின்றது எனவும் யோசித்துப் பார்க்கலாம். இவ்வளவு தசாப்தகாலம் ஆகியபின்னும் 'தீ'யை நாம் எளிதாகப் புறக்கணிக்கமுடியாது. அதேவேளை தீ அன்றையகாலத்தில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியதே தவிர, ஒரு பெரும் பாய்ச்சலை உருவாக்கவில்லை என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.  அன்றைய கால எழுத்துமுறை, மரபு, பாலியல் விடயங்களை எழுதுவதற்கு இருந்த தயக்கம் போன்ற விடயங்களில் இருந்து தன்னை 'தீ' வித்தியாசப்படுத்தியிருக்கின்றது என்பதால் அது ஓரு முக்கியமான உடைப்பு. ஆனால் அந்த உடைப்பு ஒரு பெரும் பாய்ச்சலாக நடக்கவில்லை என்கின்ற பலவீனத்தையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். பாய்ச்சல் என்பது அன்றையகாலத்தில் இலக்கியம் போய்க்கொண்டிருந்த திசைக்கு மாற்றாக இன்னொரு பாதையின் புதிய வழித்தடத்தை உருவாக்குவது என்ற அர்த்தத்தில் சொல்கின்றேன். 'தீ' - அன்றைய வழமைக்கு எதிராக 'தீ'யா என ஒரு வியப்பை வாசிப்பவரிடையே ஏற்படுத்தியதே தவிர, பொங்கிப் பிரவாகரித்த ஒரு புதிய எழுத்து முறையை  அது உருவாக்கவில்லை என்பதையே 60 வருடங்களின் பின்னிருந்து 'தீ'யை மதிப்பிடும்போது இப்போது தோன்றுகின்றது.


அதேவேளை அன்றைய காலத்தில் வைத்துப் பார்க்கும்போது, அப்போது வெளிவந்த தீ ஒரு முக்கிய நாவலாகும் என்பது எளிதில் புலப்படும். எஸ்.பொ கிட்டத்தட்ட அவரது 25 வயதில் எழுதி முடித்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அந்தவகையில் ஒருவர் இவ்வளவு இளமையில், பாலியல் விடயங்களைப் பேசுகின்ற ஒரு புதினத்தை,  முதல் நாவலாக வெளியிடுவதற்குப் பெரும் துணிச்சல் வேண்டும். எஸ்.பொவின் மொழியில் சொல்வது என்றால் நிறைந்த 'ஓர்மம்' வேண்டும். அந்த ஓர்மம் எப்போதும் ஒரு எழுத்தூழியக்காரனுக்கு இருக்கவேண்டும் என்று தொடர்ந்து எஸ்.பொ வற்புறுத்திவந்தவரும் கூட.தனது கருத்துக்கள் சரியா பிழையா என்பதைவிட தனக்கு என்ன தோன்றுகின்றதோ அதைப் பாசாங்குகின்றி எந்தச் சபையில் என்றாலும் சொல்லக்கூடியவராக இருந்ததாலேயே அவரால் தொடர்ந்து கலகக்காரனாக தமிழ் இலக்கியச் சூழலில் இருக்கமுடிந்தது. இந்தக் 'கலகக்காரத்தனத்தை'  மு.தளையசிங்கம் பின்னாட்களில் கடுமையாக விமர்சித்தாலும், இதுவே எஸ்.பொவின் ஓர் அடையாளமாக எப்போதும் இருந்திருக்கின்றது. ஆகவேதான் புறக்காரணிகளைப் பற்றிக் கூட அதிகம் யோசிக்காது 2000ஆண்டுகளில், 'புத்தாயிரத்தில் புலம்பெயர்ந்தவர்களே தமிழ் இலக்கியத்துக்குத் தலைமை தாங்குவார்கள்' என்று எல்லாச் சபைகளிலும் சொல்லியும் திரிந்தவர்.2.ருவனுக்கு அவனது சிறார் பருவத்தில் இருந்து அவன் திருமணம் செய்தபின்புங் கூட, அவனுக்கு வரும் பாலியல் இச்சைகளை கவித்துவமான மொழியில் சொல்கின்ற ஒரு புதினம் 'தீ' எனச் சொல்லலாம். எஸ்.பொ அவரது இளமைக்காலத்தில் தமிழை மூன்றாம் பாடமாக ஆங்கிலம், இலத்தீனுக்கு அடுத்து ஒரு பாடமாக எடுத்தவர் என்பதை நாமறிவோம். அத்தோடு அவருக்கு அன்றைய காலத்தில் செல்வாக்காக இருந்த மணிப்பிரவாள நடையில் இருந்த மோகத்தையும் நாம் தீயில் தெளிவாகக் காணலாம்.'நான்' என்ற தன்மையிலே கதை சொல்லப்படுகின்றது. குழப்படிக்காரனாக இருந்த சிறுவன் அவனது தந்தையால் தொடர்ந்து அடித்து ஒடுக்கப்படுவனாக இருக்கின்றான். அவனை அவன் பாட்டியும், அவர் இறந்தபின் தாயும், தகப்பனின் இந்த வன்முறைகளிலிருந்து காப்பாற்றுபவர்களாக இருக்கின்றார்கள். அவனது பாலியல் விழிப்பு அல்லது அருட்டல், அவனது வயதொத்த சிறுமியான கமலாவோடு ஆரம்பிக்கின்றது. பின்னர் இவனது குழப்படி நிமித்தம் படிப்பதற்காக ஹொஸ்டலுக்கு அனுப்பப்படும்போது அங்கே யோசெப் சுவாமிகளால் வேறுவகையில் அருட்டப்படுகின்றது. இதைச் சிறுவனாக அவன் எப்படி எடுத்துக்கொள்கின்றான் என்பதை எஸ்.பொ ஒரு மயக்கமான எழுத்தில் தந்தாலும், நாம் அதை பெரியோர் சிறுவர் செய்யும் துஷ்பிரயோகம் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அதேவேளை இவனே தனது திருமணத்தின் பின், திலகா என்கின்ற பருவமடையாப் பெண்ணின் மீது இதே துஷ்பிரயோகப் பாலியல் ஈர்ப்பைச் செய்கின்றான். திலகாவை இதிலிருந்து தப்பச் செய்கின்ற பெண்ணாகம, சரசு என்கின்ற பெண் அங்கே வந்து சேர்கின்றார். திலகாவைக் காப்பாற்றி தன் உடலை இந்த நானின் தேவைகளைத் தீர்க்க, சரசு முன்வைக்கின்றார்.ஆக, இந்த 'நான்' என்கின்ற கதாபாத்திரத்தை எந்தவகையில் வைத்துப் பார்ப்பது என்கின்ற சிக்கல், வாசிக்கும் நமக்கு வருகின்றது. கமலா, யோசெப் சுவாமிகள் போன்றவர்களால் அருட்டப்படும் பாலியல் ஈர்ப்பு, பின்னர் 'அகங்காரியும்', அழுங்குப்பிடியரும், அக்கிரமி'யுமான தந்தையின் தென்னந்தோட்டத்தில் வேளை செய்யும் இந்த 'நானை'விட வயதுகூடிய பெண்ணான பாக்கியத்தோடு கூடுவதோடு போய் முடிகின்றது.  பாக்கியம் கணவன் எங்கையோ ஓடிப்போய்விட, இவ்வாறான வேலைகளையும், அவை கிடைக்காதபோது பிற ஆண்களோடும் பாலியல் தொழிலைச் செய்கின்றவராகவும் இருக்கின்றார். இந்த 'நான்' பாக்கியத்தின் வழமையான வாடிக்கையாளராகிவிட அது இவரது தந்தையால் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றார்.பிறகு இந்த 'நான்' உயர்வகுப்புக்களில் படித்துக்கொண்டிருந்த சாந்தியைக் கண்டுகொள்கின்றார். சாந்தி இவர் இதுவரை தன்னைப் பற்றிக் கட்டிவைத்திருந்த பிம்பங்களையெல்லாம் உடைத்து, முதலில் இவரின் ஈர்ப்பை நிராகரித்துக்கொள்கின்றார். எனினும் வலையை இவர் கவனமாகப் பின்னர் இரை எளிதாக சிக்கிக்கொள்கின்றது. அந்தப் பாலியல் வேட்கை, தன்னை இவர்தான் திருமணஞ்செய்வார் என்ற நம்பிக்கையை சாந்தியில் ஏற்படுத்துகின்றது.மேற்படிப்புக்காக இந்த 'நான்' சென்னைக்கு- தாம்பரத்துக்கு வருகின்றார். சாந்தி தான் நம்பிக்கையோடு காத்திருப்பேன் என்று இவரின் கையில் அணிவித்த கணையாழி இருந்தாலும், இவருக்குத் தமிழ் கற்பித்த ஒருவரின் பேத்தியான லில்லி மீது ஈர்ப்பு வருகின்றது. லில்லி ஒரு கிறிஸ்தவப் பெண். இவர் தனிமையையும், அவ்வப்போது வரும் நோயையும் அருகிலிருந்து விரட்டுகின்ற கனிந்த பெண். லில்லிக்கும் இவர் மீது காதல் இருக்கின்றது. தாத்தாவும், லில்லியும் ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் சென்னையை விட்டுப் போய்விட, இவர் அவர்களைத் தேடி உதகைக்குத் தனித்துப் பயணித்து லில்லியைச் சந்திக்கின்றார். இந்த 'நான்' முதன்முதலாக காதலையும், மணம் புரியும் வேட்கையையும் லில்லியிலே கண்டடைய முடிகிறது. ஆனால் இவர் எப்படி சாந்தியின் நம்பிக்கையை நொறுக்கி லில்லியிடம் வந்து சேர்ந்தாரோ, அவ்வாறே லில்லிக்குச் சிறுவயதில் நிச்சயிக்கப்பட்ட உறவுமுறைத் திருமணப் பந்தம் இருப்பதாக, இவருக்குப் பேரிடியாக தாத்தாவினூடாகச் சொல்லப்படுகின்றது. முதன்முதலாக ஏமாற்றத்தைக் காணும் இந்த நான் இதை படுவான்கரையில் இருந்து மாட்டைப் போல அசைபோகின்றது.மீண்டும் ஈழம் திரும்பும் இந்த நான், புனிதம் என்ற பெண்ணில் லில்லியைக் கண்டுகொள்கின்றது. ஆனால் லில்லியின் மீது ஈர்ப்புப் பொங்கிப் பிரவாகரித்ததுபோல புனிதத்தில் வரவில்லை. பாலியல் உறவு எதுவுமில்லாது திருமணப் பந்தம் என்றவகையில் நீளும் அந்த உறவின் இறுதியில் புனிதம் இறந்துபோய்விடுகின்றார். ஈழம் வந்தபோது எப்படியோ யாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆசிரியர்ப் பணியில் இருக்கும் இந்த நானுக்கு அவரிம்ட கல்விகற்கும் திலகா என்றொரு சிறுமி மீது ஈர்ப்பு வருகின்றது. அவர் மீதான பாலியல் உறவு (துஷ்பிரயோகம்) தவறாகப் போகும்பொது சரசு என்றொரு பெண் வந்து காப்பாற்றிவிடுகின்றார். "ஒரு குஞ்சுச் சிறுமியை இப்படி நாசமாக்கிறாயே. உன்னைப் போன்ற ஆசாமியிடம் இப்படிப் பயிற்சி பெற்றால், அவள் கடசியில் என்னைப்போல சாமியாகத்தான் வாழவேண்டும்" என்று பாலியல் தொழிலாளியான சரசு திட்டி இந்த நானை தன் வசம் திருப்புகின்றார். திலகாவிடம் சில்மிஷமாக இருக்கும்போது, இந்த நான் யோசெப் சுவாமியை நினைத்துக்கொள்கிறது."இந்தப் பிஞ்சு உள்ளங்களில், காலப்போக்கில் எவ்வளவு அழுக்கும் தூசும் ஒட்டிக்கொள்கிறது? யோசெப் சுவாமியார், என் மொட்டு உள்ளத்தில்...' என்றும் 'ஐயோ யோசெப் சுவாமியாரே! எத்தனை சிறுவர்கள் உங்கள் லோப்புக்குள் தஞ்சம்' எனவும் கசப்பான நனவிடை தோய்தலும் இந்த நானுக்குள் நிகழ்கிறது. தீ தன் இறுதிப்பகுதியை நெருங்கும்போது இந்த 'நான்' யோசெப் சுவாமியாரால் அதன் விருப்புக்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றார் என்று விளங்குகின்றது. ஆனால் காலம் விசித்திரமானது. அப்படிப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்த நானே, பின்னர் வளர்ந்து திலகா என்றுல் பருவமடையாச் சிறுமி மீது அதே வேலையைச் செய்துகொள்ளவும் முடிகிறது. பெற்றோர் வன்முறையாளராக இருப்பதைப் பார்த்து வளரும் குழந்தைகள் அதனிடமிருந்து தப்பிக்க விரும்பினாலும் தங்களையறியாமலே வளர்ந்தபின் வரும் துணைகளிடமும், தம் குழந்தைகளிடமும் வன்முறையாளராக நடக்கும் உளவியல் சிக்கலை, இங்கும் இந்த நானில் நாங்கள் பார்க்கின்றோம்.3.வ்வாறு பல பெண்களையும், யோசெப் சுவாமியாரையும் சந்தித்த நான், ஒரு மாட்டைப் போன்று கடந்தகாலத்தை படுவான்கரையின் நிழலில் இருந்து


"என் வாழ்க்கையில் - செக்ஸ் வாழ்க்கையில் - எதிர்ப்பட்ட பெண்களெல்லாம் மலர்களா? வாழ்க்கை ஒரு மாலை?


நான் ஒரு நார்!


நான் நாரென்றால் எங்கே மலர்கள்? எல்லா மலர்களும் அகல அலர்ந்து, இதழ் இதழாகக் கருகி, சுழன்று, உதிர்ந்து...வெறும் தண்டுகள்! நிழல் நினைவுகள் மட்டும் மீதம், மலர் வாழ்ந்த தண்டுகளும், அவற்றை ஈனைத்து வைத்திருக்கும் நாரும் இல்லை. அக்கினியில் வெந்து பொங்கிய நார்.

(146-147) என்று அசைபோடுகின்றது.


பின்னர் இன்னும் மனம் குவித்து, பாலியலைக் கிளர்த்திய ஒவ்வொருவரையும் அவர்கள் எவ்வாறு தீயை தனக்குள் உருவாக்கினார்கள் என்றும் நெருக்கமாய் நின்றும் பார்க்கின்றது.


"யோசெப் சுவாமியாரே, நீ என் பிஞ்சு நெஞ்சிலே அக்கினிப் பொறிகளைத் தூவினாய்.


பாக்கியம்! நீ அந்தப் பொறிகளில் சுளகு வீசித் தீயை வளர்த்தாயா?


சாந்தி! நீ நெய்யூற்றி வளர்த்த தீயின் நிறம் என்ன?


லில்லி, நீ என் உள்ளத்திலே கொழுந்து விடச் செய்த தீ எத்தகையது?


புனிதம்! நீ மட்டும் விதிவிலக்கா? நீ மூட்டிய தீ மட்டும் சுடாதா?


திலகா! நெருப்பின் கங்கிலேயே ஓமாக்கினி எழுப்பினாயே? அதற்கு நிறமுண்டா?


மொத்தத்தில் அக்கினி மலர்கள் வளர்க்கும் காமத்தீ!


அதில், தேகத்தில் புல்லரிக்கும் குளிர் காய்கிறோம் என்ற நினைப்பில் தோலைப் பொசுக்கி விடுகிறோம்


(148-149),இவ்வாறு ஒரு சிறுவனிலிருந்து வயது முதிர்கின்றவரை சந்தித்த பெண்களை/ஆணை அசைபோடும் இந்த நான் எத்தகைய படிப்பினைகளைக் காண்பது என்பதுதான் சற்று சிக்கலானது. அதுதான் பட்டினத்தார் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சென்றடைந்த பாதையாகும்."பெண்கள் வெறும் தோல் ஜடங்கள்! அந்த ஜடங்களின் மிருதுத் தோலின் ஸ்பரிச உணர்ச்சிகள்தான் ஆண்களுக்குத் தேவை!வெறும் தோல்தானே? அதற்குத் தசையும் உயிரும் ஏன்? காற்றில் ஊதிய ரப்பர் பெண் போதாது? எல்லா விந்துக்களும் உட்சென்று பந்தாக வெளிவருவது கிடையாதே. எத்தனை விதைகள் நிலத்தில் விரயமாக்கப்படுகின்றன?" என்று அந்த நான் சொல்கின்றது. 


இங்கேதான் தீயை முக்கியமான நாவலாக வைக்கமுடியாத சிக்கல் நமக்கு வருகின்றது. இதை ஏன் ஓர் 'ஆன்மீகத் தேடலாக' நாம் எடுத்துக்கொள்ளக்கூடாதெனவும் யாரேனும் வினாவக்கூடும். முக்கியமாய் இந்து மதத்தில் ஆணுக்கெனக் கூறப்படுகின்ற பிரமச்சாரியம், இல்லறம், வானபிரஸ்தம், துறவறம் என்ற நான்கு நிலைகளில் எஸ்.பொ தீயில் முன்வைக்கின்ற நான் என்கின்ற பாத்திரம், பிரமச்சாரியத்தையும், இல்லறத்தையும் கடந்து துறவுக்குப் போவதற்கு முன்பான வானப்பிரஸ்தம் என்ற நிலையில் இருப்பதாக வாசிக்கக்கூடாதா எனக் கேட்பின் அதில் ஒரளவு நியாயமிருக்கின்றது. ஆனல் துறவறத்துக்குப் போவதற்கு இப்படிப் பல்வேறு அனுபவங்களைத் தந்த பெண்களை வெறும் தோலாக மட்டும் பார்ப்பதில் என்ன 'புத்துயிர்ப்பும், விடுதலையும்' இருக்கப்போகின்றது. இத்தனைக்கும் இதில் வரும் எந்தப் பெண்ணும், 'உனது விடுதலைக்குத்தான் எங்களைப் பரிசோதனைப் பொருட்களாக ஆக்கினாய்' என்று பின்னாட்களில் இந்த நானைத் துரத்தித் தொல்லை கொடுப்பவர்களுமில்லை என்கின்றபோது, இந்த நான் கற்றுக்கொண்ட பாடங்களின் சாரமே இடறுகிறதே என்றுதான் நாம் எண்ணவேண்டியிருக்கின்றது. அதே வேளை இதை எஸ்.பொ தனது இருபதுகளில் எழுதியிருக்கின்றார் என்பதால் அதில் ஒரு முதிராத்தன்மை இருப்பதையும் நாம் கவனித்தாகவேண்டும்.எஸ்.பொ  நாவல்களில் வெகு எளிதாக 'தீ'யை, அவரின் அடுத்த புதினமான  'சடங்கு' மூலம் கடந்துசெல்கின்றார். பின்னர் சில காலங்களில் வந்த 'வீ' என்ற கதைகளின் மூலம் தன்னைச் சிறந்த கதைசொல்லியாகவும் முன்வைக்கின்றார். புனைவுகள் மட்டுமில்லை தான் அரசியலிலும் அங்கதத்திலும் சலித்தவனல்ல என்பதை அவரின் '?' என்ற நூலில் பார்க்கின்றோம். பின்னர் புலம்பெயர்ந்தபின் 'நனவிடைதோய்தல்' என்ற புதுவகையான எழுத்து வகைமையை நமக்குத் தந்திருக்கின்றார்.ஒரு படைப்பாளிக்கு முன்னாலுள்ள மிகப்பெரும் சவால் அவர் தான் எழுதிய படைப்புக்களைத் தாண்டுவதில்தான் இருக்கின்றது. தீ முதன் நாவலாகவும், எஸ்.பொவின் அச்சில் வெளிவந்த முதல் நூலாகவும் இருக்கின்றது. அதை எஸ்.பொ எளிதாக அடுத்த 5 வருடங்களில் வெளிவந்த 'சடங்கு' மூலமாகவும், 'வீ' மூலமாகவும் எட்டித் தாண்டிச் செல்கின்றார். ஆகவேதான் எஸ்.பொவின் 'தீ'யை மதிப்பிடும்போது அது அன்றைய காலத்தில் ஒரு உடைப்பை ஏற்படுத்தி இருக்கின்றதே தவிர, ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி தனித்துவமான பாதையைப் போடவில்லை என்று கூறுகின்றேன். மேலும் 'தீ'யை எஸ்.பொவின் கிளாஸிக்களில் ஒன்றெனச் சொல்லவும் தயங்குவேன். ஆனால் ஒருவர் தனது இருபதுகளில் எழுதிய நாவல் இது என்பதாலும், இன்றைக்கு 60 வருடங்களுக்கு முன்னிலிருந்த இலக்கியச் சூழலையும் வைத்துப் பார்த்தால் தீயுக்கு அதற்கான ஒரு மதிப்பு இருக்கின்றது என்பதையும் நாம் மறுக்கத் தேவையில்லை.


.............................................


(2019)

புகைப்படங்கள்: இணையம் 

எஸ்.பொ (என்கின்ற எஸ்.பொன்னுத்துரை)

Saturday, February 26, 2022

(தொடர்)

பகுதி-01


சான்களைப் பற்றி எழுதும்போது எங்கிருந்தோ ஒரு நெகிழ்ச்சி வந்துவிடுகின்றது. அதேவேளை அந்த நெகிழ்ச்சி, ஆசானாகியபோதும் தேவையற்று ஒருவரை விதந்தோத்திவிடக்கூடாது என்கின்ற மெல்லிய பதற்றத்தையும் கூடவே கொண்டுவருகின்றது. இவ்வாறுதான் ஒவ்வொரு பொழுதும் எழுத்து சார்ந்து என் ஆசான்களாகிய ஒருவரான எஸ்.பொவை வாசிக்கும்போதோ, நினைக்கும்போதோ எனக்குள் பல்வேறு உணர்வுகள் வந்துவிடுகின்றன. எஸ்.பொவைப் போல நம் ஈழச்சூழலில் நீண்டகாலம் இலக்கியத்தோடு உறவாடிய ஒருவரைக் கண்டெடுத்தல் அவ்வளவு எளிதல்ல. 'தீ' (1957) என்று தமிழ் இலக்கியச் சூழலை சலனப்படுத்திய நாவலை எழுதியபோது  எஸ்.பொவுக்கு வயது இருபத்தைந்து. அவரின் முக்கிய நாவலாக நான் நினைக்கும் 'சடங்கு' தொடராக சுதந்திரனில் வெளிவந்தபோது அவருக்கு 34 வயது. அதே வருடத்தில் அவரின் முக்கியமான 'வீ' (1966) என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவருகின்றது.


கே. டானியல், டொமினிக் ஜீவா போன்றோருடன் நட்புடன் இருந்ததுடன், முற்போக்கு அணியிலும் தீவிரமாக ஒருகாலத்தில் எஸ்.பொ இருந்திருக்கின்றார். அப்போது இவர்கள் மூன்று பெரும் 'புரட்சி' என்ற பெயருடன் தொடங்கும் புனைபெயர்களை வைத்து எழுதியிருக்கின்றனர். முற்போக்கு அணியும் பிற்காலத்தில் சீன-சோவியத் அரசியல் நிலைப்பாடுகளுக்கேற்பப் பிரிகின்றது. ஆனால் அதற்கு முன்னரே எஸ்.பொ தனது 28வயதிலேயே முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு அங்கிருந்து வெளியேறுகின்றார். அப்போது 'நற்போக்கு அணி' என்ற இன்னொரு அணியைத் தொடங்குகின்றார். 'நற்போக்கு' அணி தொடங்கிய கொஞ்ச வருடங்களிலேயே நீர்த்துப்போனாலும், எஸ்.பொ ஒருபோதும் தன் 'தாய்க்கழகத்துக்கு'த் திரும்பிப் போக ஒருபோதும் பிரியப்பட்டவருமில்லை.


தனித்து நின்று தனக்கான வெளியை உருவாக்கிய எஸ்.பொவைப் பேசாது ஈழத்திலக்கியம் ஒருபோதும் முழுமை பெறாது. ஒரு பெரும் ஆளுமையாக எஸ்.பொ இருப்பதால் அவர் முழுமையடைந்த மனிதராக வாழ்ந்துதான் இல்லாமற்போனார் என்றெல்லாம் நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரின் ஆளுமை அவருக்கிருந்த எல்லாப் பலவீனங்களுக்கும் அப்பால் விகசித்து நின்றிருக்கின்றது எனக் கொள்க. இன்று எல்லோரும் தம்மைத் திருவுருவாக்கும் மடங்களை உருவாக்க எத்தனிக்கும்போது, எந்தக் கூட்டத்துக்குள்ளும் சிக்காதது மட்டுமின்றி, தன்னைத்தானே தன் படைப்புக்களிலேயே எள்ளல் செய்து தன் வழி தனித்துவமான பாதையென்று அவர் வாழ்ந்த காலங்களில் காட்டிவிட்டுப் போயிருக்கின்றார்.


ஒருமுறை அவர் காலத்தைய ஒரு பெண் பேசும்போது, 'இவர் 'தீ'யை எழுதிவிட்டு இருந்தகாலம். தீயைத் தீயிலிட்டுக் கொழுத்துங்கள் என எல்லோரும் அதற்காய்த் திட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தீயை இப்படி எழுதிவிட்டேன் என்ற எந்த பயமுமில்லாது சிகரெட்டையும் புகைத்துக்கொண்டு ரோட்டில் போன அந்தத் திமிர் இருக்கிறதே' என்று எஸ்.பொவைப் பற்றிச் சொன்னபோது எழுத்தில் திமிர்த்த அழகன் என எஸ்.பொவை உருவகித்திருக்கின்றேன். இன்று எனக்கு ஒரு மானசீகக் குருவாக இருப்பதுபோல அன்று எஸ்.பொ எத்தனையோ பெண்களின் இரகசியக் காதலனாக இருந்திருப்பார் என்று நினைத்து மெல்லியதாகப் புன்னகைத்திருக்கின்றேன்.


ஸ்.பொ, அவர் காலமாகும்வரை 40ற்கும் மேலான நூல்களை எழுதியிருக்கின்றார். எஸ்.பொ தொடாத இலக்கியத்தின் வகை இல்லையெனச் சொல்லுமளவுக்கு எல்லாவற்றிலும் கை நனைத்திருக்கின்றார். எஸ்.பொவின் தீயும், சடங்கும், நனவிடைதோய்தலும் பேசப்பட்ட அளவுக்கு அவருக்கு "?" (கேள்விக்குறி) என்ற நூல் அவ்வளவு பேசப்படவில்லை. 1972ல் வெளிவந்த "?" ஒரு சிறந்த பின் நவீனத்துவ எழுத்துவகையெனச் சொல்லலாம். பின் நவீனத்துவம் தமிழ்ச்சூழலில் அறிமுகமே ஆகாத ஒருகாலத்தில் நிறைய அடிக்குறிப்புக்களுடன் ஒரு பனுவல் எழுதப்பட்டது மட்டுமல்ல, அதன் எல்லாப் பக்கங்களிலும் எள்ளல் பொங்கி வழிகின்றது.


அதில் 1ம், 2ம் பதிப்பு 40களில் வந்ததெனக் கூறி நாம் வாசிக்கும் இந்த பதிப்பு (1972) 3ம் பதிப்பெனச் சொல்லப்படுகின்றது. இதற்கான பின்னீட்டை கொண்டோடி சுப்பர் என்பவர் எழுதுகின்றார். சுப்பரும் எஸ்.பொதான் என்றாலும் அதில் எஸ்.பொவுக்கும் திட்டு விழுகின்றது. இதை எழுதுகின்ற நேரத்துக்கு ஒரு சோக்கான நாவலை எஸ்.பொ எழுதியிருக்கலாமென்று விமர்சனம் கொண்டோடி சுப்பரால் வைக்கப்படுகின்றது.


"இந்தப் புத்தகத்திலும் இந்திரியக் திறிக்கீஸுகள் ஏதேனும் எஸ்.பொ விட்டிருப்பான் எண்ட ஆசையோடைதான் வாசிக்கத் துவங்கினனான். அந்த அறுவான் சரியா ஏமாத்திப் போட்டான். ஒண்டைச் சொல்ல வேண்டும். வழக்கம் போலை எல்லாதையும் பச்சை, பச்சையாகத்தான் புட்டுக் காட்டுறான் போலைத்தான் கிடக்கு" என்று மட்டுமில்லாது, மேலும் 'கண்ணானை எனக்கெண்டால் இந்தப் புத்தகத்திலை பல பகுதிகள் விளங்கேல்லை. என்னிலும் பார்க்க உங்களுக்கு அதிக பகுதிகள் விளங்கிச்சு தெண்டால் நீங்கள் குடுத்து வைச்சவங்கள்" என்றும் கொண்டோடி சுப்பர் பிரதியின் 'கரடுமுரடு' தன்மை பற்றி எழுதிச் செல்கின்றார்.


காலம், வெளி, கணித சூத்திரம், பாயிரம், பாயிரங்களுக்கான தெளிவுரை, அநுபந்தம், நூல் முடிய இப்பதிப்பில் வெளிவந்த ஆட்பெயர்கள், நூல்பெயர்கள், திருக்கடைக் காப்பு என்று எஸ்.பொ இந்தப் புதினத்தில் செய்யும் வித்தகத்தனம் சிலாகிக்க வேண்டியது. ஒருவகையில் இது அன்றைய காலத்து நிகழ்வுகளையும், முற்போக்கு அணியினர் மீதான தனது நக்கல்களையும், விமர்சனங்களையுந்தான் நுட்பமாக எழுதியிருக்கின்றார் என்று அந்தக் காலத்தின் மீது முன்வைத்து இதை வாசிக்கும்போது விளங்கிக்கொள்ளமுடியும்.


நச்சினார்க்கினியர் பரம்பரையின் தூரத்துச் சொந்தமான நச்சாதாக்குமினியர்தான் இதை எழுதுகின்றார். இதன் அசல் பிரதியைப் பெற அவர் 2147ல் இருக்கும் நூலகத்திற்குப் போகின்றார். அதைப் பயன்படுத்த லைசன்ஸும் தேவையாயிருக்கின்றது என்று நீளும் இதன் முன்னீட்டை வாசிப்பதே சுவாரசியமானது.


பிறகு சார்பியல் விதி சூத்திரத்துடன் தரப்பட்டு விளக்கப்படுகின்றது. அது இன்னும் விளங்குவதற்கு ஆங்கிலக் குறும்பா ஒன்றும் வாசகருக்குத் தரபப்டுகின்றது.

"There was once a lady called Bright.

who could travel faster than light.

She went out one day

In a relative way

And returned the previous day"

என்று சொல்லிவிட்டு, 'குறும்பாவிலே சுட்டப்படும் சீமாட்டி எதிர்காலத்தையும் இறந்தகாலமாக மாற்றிவிட்டாளே! 2147ம் ஆண்டு 1972 இல் இறந்த காலமாகிவிட்டதல்லவா? " என்று காலம் என்பது நாம் நினைக்கும் காலமாகத்தான் இருக்கவேண்டுமா எனவும் வினாவப்படுகின்றது.


இதை எஸ்.பொ எழுதும்போது 1972ம் ஆண்டு, அதுவும் சார்பியல் விதியை இவ்வளவு எளிதாக எவர் புனைவுக்கு அந்தக்காலத்தில் கொண்டுவந்திருப்பர். ஆகவேதான் நான் எஸ்.பொவினது சடங்கு நாவலைப் போல, "?" முக்கியமாகக் கொள்கின்றேன். இந்த "?" இன்னமும் வாசிக்காத வாசகருக்காய் நாமறியாத பல்வேறு விடயங்களை உள்ளடக்கி வைத்திருக்கின்றது எனத்தான் சொல்வேன்.


சிலவேளை நம் மொழி அழியாமல் 22ம் நூற்றாண்டிலும் இருப்பின், ஒருவாசகர் இதை 2147 ஆண்டில் எடுத்து வாசித்தால் எப்படியிருக்கும்? ஒருவகையில் ரமேஷ் பிரேதன், "இன்றிருக்கும் நானல்ல, நான் நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய தாய்மொழியின் நீட்சி. ஆகவே என் சிந்தனைகள் ஆதியிலிருந்தே தொடங்குகின்றன. நான் பேசுவது இந்தக் காலத்துக்கு மட்டும் உரித்தானல்ல. நான் இங்கே இப்போது இருக்கின்றேனே தவிர, நான் பல்வேறு காலங்களில், வெளிகளிலும் உலாவித்திரிபவன்" என்று சொல்வதற்கு நிகர்த்து இந்த "?" வாசித்துப் பார்ப்பது ஒரு மொழி விளையாட்டைப் போல இருக்கும்.

 

0000000000000000000000000


ஓவியம்: மூனா? (நன்றி இணையம்)

உதிராக் கடைசி இலை!

Thursday, February 24, 2022

 1.


இலையுதிர்காலத்தில் முதல் இலை மஞ்சளாவதை யன்னலுக்குள்ளால் பார்த்துக்கொண்டிருந்தேன். கனடா வந்த புதிதில் ESL (English as a Second Language) வகுப்பில் சேர்ந்தபோது, படித்த ஓ'ஹென்றியின்  'கடைசி இலை' கதை நினைவுக்கு வந்தது. கதையில் ஒரு பெண்ணுக்கு நிமோனியா வந்து மோசமான நிலையில் இருப்பார். அவர் தனது அறையிலிருந்து வெளியே இலைகள் உதிர்த்துக்கொண்டிருக்கும் மரத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்.  


அதுவும் ஒரு இலைதுளிர்க்காலம்! என்றோ ஒருநாள் அந்த மரத்தின் கடைசி இலையுதிரும்போது தானும் இறந்துவிடுவார் என்று அவர் கொஞ்சம் கொஞ்சமாக நம்பத்தொடங்கிவிடுவார். 


இந்தத் தீவிர நம்பிக்கை அவரின் உயிரை உண்மையில் பறித்துவிடுமோ என்ற கவலையில் அவரது அறைத்தோழி கீழ்த்தளத்தில் இருக்கும் ஒரு ஓவியரைக் கொண்டு ஒர் 'தத்ரூபமான' இலையை அந்தச் சுவரில் படர்ந்திருக்கும் மரத்தில் (சுவரில்) வரையச் செய்துவிடுவார். இதை அறியாத நிமோனியாவில் பாதிக்கப்பட்ட பெண், கடைசி இலை இன்னமும் மரத்தில் இருக்கிறதென்ற நம்பிக்கையில் அந்த நோயிலிருந்து மீண்டுவிடுவார். பிறகுதான் அவருக்குத் தெரியும், அந்த இலை அசலான இலையில்லை, வரையப்பட்டது என்பது. ஆனால் துயரம் என்னவென்றால் இந்த ஓவியத்தை வரைந்த ஓவியர் நிமோனியா வந்து  இறுதியில் இறந்துபோய்விடுவார். 


ஒருவகையில் இது எதையோ பெறுவதற்காய், நாம் எதையோ இழக்கவேண்டியிருக்கவேண்டியதை மறைமுகமாய்ச் சொல்வதாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். மேலும் எவ்வளவு முயற்சித்தாலும் சிலவிடயங்கள் நமது அறிதலுக்கு அப்பாலாக இருக்கலாம். அதற்குள் கூட அமிழ்ந்து நிலைமையை மேலும் சிக்கலாக்காது, முகில்களைப் போல கடந்து செல்லவேண்டிய சந்தர்ப்பங்களையும் நாம் சந்திக்கவேண்டி வரலாம்.


பிரான்சிஸ் கிருபாவுக்கான அஞ்சலிக்கூட்டத்தில் கார்த்திக் நேத்தாவின் உரையைக் கேட்டபோது, அவரின் அகவுலகிற்குள் ஓர் உடைப்பு ஏற்பட்டு மீண்டெழுந்தது போல, ஏன் பிரான்சிஸ்ஸிற்கு ஏற்படாதுபோனது என்ற கேள்வி எழுந்தது. பின்னர் அது அவ்வாறே நிகழ்ந்துவிட்டது,  அதில் தொக்கி நிற்கும் 'ஏன்'களை விட்டுவிட்டு நகர்வதுதான் நல்லது போல மனசுக்குத் தோன்றியது. 


2.


சிலநாட்களுக்கு முன் என் முதல் -பதின்ம- காதலியைச் சந்தித்திருந்தேன். அவர் உலகின் இன்னொருமூலையில் நிம்மதியாக வசித்துக் கொண்டிருக்கின்றார். நீண்ட வருடங்களின் பின் இப்போது சந்திக்கின்றேன்.  அவர் எனக்கு காதலை மட்டுமல்ல, தற்கொலையெனும் சாவின் விளிம்பையும் அறிமுகப்படுத்தியவர். அந்தளவுக்குக் காதல் பித்துப் பிடித்த காலமது. 


அதன் பிறகு நிறைய நிறையக் காதல்களையும், பிரிவுகளையும் அனுபவித்தாயிற்று. எனினும் மனம் பிறழ்ந்து உழன்றபோதுகூட ஒருபோதும் தற்கொலையை நாடிப் போக பின்னர் ஒருபோதும் மனது விரும்பியதில்லை. மரணத்தைப் புரிந்துகொண்டாலே வாழ்க்கை இனிக்குமென்று ஓஷோ சொல்வதைப்போல, ஒருமுறை சாவின் விளிம்பைக் கண்டுவிட்டதால், வாழ்வு இன்னும் சுவைக்கின்றது போலும். 


காதலைப் போல காதலின் பிரிவும் எம்மை அலைக்கழிக்கும் பெரும்சுழல். அதிலிருந்து மீளும் வழிகள் எனக்குக் கிடைத்தது போல பிரான்ஸ்ஸிற்கும் ஏதோ ஒருவகையில் தெரிந்திருந்தால் காதலிலிருந்து மட்டுமல்ல, வாழ்க்கையிலிருந்து மீளும் வழி தெரிந்து என்னைப் போல காதல்கள் பலதை அனுபவித்துக்கொண்டு, தனது கடந்தகாலக் காதலியோடு (அவருக்கு அப்படியொருவர் இருந்திருந்தால்), இப்போது எனது பதின்மக் காதலியுடன் நான் பேசிக் கொண்டிருப்பதைப்போல அவரும் பேசித்திரிந்திருப்பாரெனத் தோன்றியது. 


ஆகக்குறைந்தது நானும் அவரும்


"பெண்ணைக் கண்டு

பேரிரைச்சிலிடுகிறாய் மனமே...

பெண் யார்?

பெற்றுக்கொண்டால்  மகள்.

பெறாத வரையில்

பிரகாசமான இருள்.

வேறொன்றுமில்லை."


(ப 24, வலியோடு முறியும் மின்னல்)


என்ற அவரது கவிதையை முன்வைத்து 'இல்லை பிரான்சிஸ், சிலவேளைகளில் பெண் இதைத்தாண்டியும் இருக்கிறாள்' என உரையாடிக் கொண்டு கூட இருந்திருக்கலாம். ஆனால் திரும்பவும், இது கூட ஒற்றைப்படையாக பிரான்ஸிஸ்ஸை விளங்கிவைத்திருப்பதன் என் பலவீனந்தானோ என்றும் மனம் யோசிக்கிறது. 


பிரான்ஸிஸ் நாம் அறியாத எத்தனையோ காரணங்களை அவரின் அகவுலகிற்குள் வைத்திருந்திருக்கலாம். ஆக நாமெல்லோருமே நமக்குத் தெரிந்த அனுபவங்களின் நீட்சியில் வைத்து பிரான்ஸிசைப் பார்க்கின்றோமே தவிர, அவர் கையில் அள்ளுகின்ற தண்ணீரைப்போல அகப்படாமல் தப்பிப்போய்க்கொண்டிருக்கின்ற  ஒருவர் என்பதும் புரிகிறது. இப்போது இதையெல்லாம் ஏன் நினைத்துக் குழம்பிகொண்டிருக்கின்றேன் என்பதற்கும் ஏதேனும் காரணங்கள் இருக்கா என்ன?


3.


நானும், நண்பரும் உணவருந்தியபடி கதைத்துக்கொண்டிருந்தோம். அவர் ஒரு வைத்தியர் என்பதால் கொரானா இறப்புக்கள் முதல் பல்வேறு வன்கொடுமைக் கதைகள் வரை நிறையச் சொல்லிக்கொண்டிருந்தார்.  ஒரு உடல் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுஞ் சம்பவத்தைப் பார்த்து, வைத்தியசாலையை விட்டு வெளியேறியபோது முழுப்போத்தல் வைனை வாங்கிக்கொண்டுபோய் முழுதாய் அருந்திய பின்னாலேயே தன்னால் அந்தத் துயரைக் கொஞ்சமாவது கடக்க முடிந்தது என்றார். இந்தத் துயர்களை எவ்வளவு முயன்றாலும் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதவை.


இப்படி அங்குமிங்குமாய் அலைந்த கதையின் நடுவில் have you ever felt loneliness என வினாவினார். நான் அதைத் தத்துவார்த்துவ விளக்கமாய் சொல்லத் தொடங்கி,  இது தேவையில்லாததென சட்டென ஒரு புள்ளியில் நிறுத்தினேன். தனித்து இருக்க விரும்புபவன் என்றாலும், புறவயமாய் நான் ஒருபோதும் தனிமையை உணர்ந்ததில்லை, எப்போதும் குடும்பத்தவர்,நண்பர்கள், காதலிகள் என அருகிலோ தூரத்திலோ இருக்க வாய்க்கப் பெற்றவன் எனச் சொன்னேன். எனினும் வாசிப்பு ஆழமாகின்றபோது, நகுலனை வாசிக்கும்போது தனிமைக்குள்ளும், ப்யூகோவ்ஸ்கியை வாசிக்கும்போது பெண்பித்தனாகவும், ஹெமிங்வேயை வாசிக்கும்போது குடிபோதையில் அமிழ்பவனாகவும் என்னைக் கற்பனை செய்துகொள்ளும் பழக்கம்  அவ்வப்போது இருக்கிறதென எப்படி இந்த நண்பருக்கு விளங்கப்படுத்துவது என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன்.


பின்னர் நாம் படித்த பாடசாலையை பார்த்தபடி, நமக்கு பிடித்த பாடல்களைக் கேட்டபடி நகரத்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்தோம்.


உயர்கல்லூரி நாட்கள், காதல் நினைவுகள், பிரிவின் வாதைகள், தியாகம்/துரோகம் என்கின்ற பெயர்சூட்டல்கள் எல்லாம் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இப்போது தெரிகிறது.


நேசமே முழுதாய் முகையவிழ்க்காத 16 வயதுப் பெண்ணாக ஒருகாலத்தில் இருந்த இவரால்தான் என் வாழ்வு கானலாயிற்றென கற்பிதம் செய்த காலங்களை நினைக்க ஒரு புன்னகை அரும்பிற்று.


எதிரெதிர் காலங்கள்

.............................

 

என் காலம் 

தவழ்கிறது

தத்துகிறது

நடந்து செல்கிறது

தலை தெறிக்க ஓடுகிறது

தள்ளாடிச் சரிகிறது

திரும்பிப் பார்க்கிறது

தேங்கிக் கிடக்கிறது

இன்னும் என்னவென்னவோ செய்கிறது

என் காலம்.


உன் காலமோ

காலை மாலைகளற்ற

வாடாத பூவாகத் தன் தீராத இதழ்களில்

மலர்ந்து கொண்டேயிருக்கிறது.


(ப 75, நிழலன்றி ஏதுமற்றவன், ஜெ. பிரான்ஸிஸ் கிருபா)


4.


ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகளின் தமிழாக்கத்தை திருத்தியும், வெட்டியும் செய்து தொகுப்பாக்கி, பதிப்பகத்துக்கு அனுப்ப முன்னர் ஒரு நண்பருக்கு வாசிக்க அனுப்பி வைத்திருந்தேன். அதில் 'படையல்: என்னை நேசித்த பெண்களுக்கு...' என காணிக்கை செய்திருந்தேன்.  இந்த நண்பரும் என் மதிப்புக்குரியவர் என்பதால் என் படையலில் அவரும் இருக்கின்றார் என்பது அவருக்குச் சொல்லாமலே புரிந்திருக்கும். வாசித்துவிட்டு எனக்காய் ஒரு திருத்தம் செய்கின்றாயா என்றார். என்னவெனக் கேட்டேன். 'என்னை நேசித்த பெண்களை' - 'என்னை நேசிக்கும் பெண்களுக்கு' என மாற்ற முடியுமா என வினாவினார். 'உன் மீதான நேசம் முடிவடையாதது, அப்போதுதான் நான் விடுபடமாட்டேன்' என்றார். 


என் பதின்ம நண்பரிலிருந்து, இப்போது படையலில் திருத்தஞ்செய்யக் கேட்ட  நண்பர் வரை, எல்லாப் பிரியப் பெண்கள் மீதும் காலம் வாடாத பூவாக அவர்களின் தீராத இதழ்களில், என்றும் மலர்ந்து கொண்டேயிருக்கட்டும்.


எனக்கான உதிராத 'கடைசி இலை'களாக இவர்களே இருந்துகொண்டிருக்கின்றனர்.


************************


(செப்ரெம்பர் 28, 2021)
நன்றி: புகைப்படம்-இணையம்

The Hand of God

Wednesday, February 23, 2022

 

பால்யத்தைப் பற்றிச் சொல்ல நம்மிடம் நிறையக் கதைகள் இருக்கின்றன. ஏனெனில் அப்பாவித்தனத்திலிருந்து நாம் மெல்ல மெல்ல விலகிச் செல்கின்ற பருவமது. புதிய விடயங்கள் அறிமுகமாகின்றபோது தடுமாறுகின்ற காலங்களும் அதுவாகவே இருக்கும். ஆனால் அதை அக்காலத்திற்குரிய குறும்புகளோடும், கசப்புக்களோடும், குதூகலத்தோடும், இழப்புக்களுடனும் சொல்ல முடியுமா என்பதுதான் நம் முன்னாலிருக்கும் சவால்.


'The hand of god' ஒரு பதின்மனுடைய வாழ்க்கையை இத்தாலியப் பின்புலத்தில் வைத்துச் சொல்கின்றது. இது இத்திரைப்பட நெறியாள்கையாளர் (பாலோ சொரொண்டினோ) சொந்தக் கதையுங்கூட. இத்தாலியின் நேப்பிள்ஸில் பிறந்த சொரொண்டினோ அவரின் பதினாறு வயதில் தனது பெற்றோரை ஒரே நேரத்தில் இழந்தவர். அந்தத் துயரினூடாகப் பெற்றோரை நினைவு கொண்டாலும், பெரும்பாலான குடும்பங்களுக்குள் இருக்கும் இரகசியங்களையும் இந்தப் படத்தில் ஒரு பதின்மனுடைய பார்வையில் இருந்து கொண்டுவர அவர் தவறவும் இல்லை. கம்யூனிச சார்புடைய, பிள்ளைகள் மீது அக்கறை கொள்கின்ற தகப்பனுக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருப்பது அறிந்து, குடும்பம் உடைகின்ற நிலை வருகின்றது. அதேசமயம் நாபாலி உதைபந்தாட்டக் கழகத்துக்கு டியாகோ மரடோனா விளையாட வருவது பெரு நிகழ்வாகக் கொண்டாடப்படுகின்றது. ஒரு துயரத்தை இன்னொரு மகிழ்வான செய்தி ஒரளவுக்கு பிள்ளைகளைச் சமன் செய்துவிடுகின்றது.

பின்னர் கிட்டத்தட்ட மரடோனா அந்நகரின் ஒரு அடையாளமாகவே மாறிவிடுகின்றார். மரடோனா ஆடும் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக ஊரிலே தங்கி நிற்பதாலேயே இந்தத் திரைப்படத்தின் நாயகன் பபியோத்தே (அசலில் சொரொண்டினோ) பெற்றோர்கள் சென்ற சுற்றுலாப் பயணத்துக்குச் செல்லாததால் உயிர் தப்புகின்றார். ஒருவகையில் மரடோனாதான் பபியோத்தையைக் காப்பாற்றியிருக்கின்றார் என உறவுகளால் சொல்லப்படுகின்றது.


உதைபந்தாட்ட வீரனாக வரும் கனவை உடைத்து ஒரு திரைப்பட இயக்குநனராக வரவேண்டுமென பபியோத்தே பின்னர் விரும்புகின்றார். அந்தவேளையில் பிரபல்யமான ஒர் இயக்குநரைச் சந்திக்கின்றார். எல்லோரும் ரோமுக்குப் போய் படம் எடுப்பதுபோல நினைக்காது, உன் சொந்த நகரில் இருந்து உனது கதையை திரைப்படமாக்கு என்கின்றார். ஆக, இப்போது எமக்கு சொரொண்டினோ தனது பதின்மத்துக் கதையைச் சொல்லத் தொடங்குகின்றார்.


னப் பிறழ்வுடைய அத்தை, பிள்ளையொன்றும் பிறக்காத அவர் அதற்காக முயற்சித்து, அரிதாகவே சிலரின் கண்களுக்குத் தெரியுமெனச் சொல்லப்படும் Little Monk ஐத் தேடிப் போய் பிற ஆண்களிடம் தன்னை இழக்கின்றார். இவ்வாறு நிகழும் ஒவ்வொரு பொழுதும் அத்தையின் கணவர் அதையறிந்து கடும் வன்முறையை அவர் பிரயோகிக்கின்றார். அம்மாவின் மீது அயலில் இருக்கும் ஆணொருவருக்கு இருக்கும் மென் காதல், உன் பெற்றோரின் இழப்பில் உன்னைத் தொலைத்துவிடாதே, நீ எதிர்காலத்துச் செல்வதற்கு இதென, காமத்தை முதன்முதலாகக் கற்பித்து அனுப்பும் ஒரு முதிய பெண்மணி, நேசமும் விலகலும் இருக்கும் சகோதரன் என எல்லாவிதமான அனுபவங்களையும் இத்திரைப்படத்தினூடாக நாம் கடந்து போக முடிகின்றது.


இப்படத்தை இத்தாலியப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது எனக்குள் சமாந்தரமாக ஓடிய இன்னொரு படம் ஃபெலினியின் 'Amarcord'. அது எனக்கு மிக நெருக்கமான படமென்பதால்தான் அந்தப் படமே திரைப்படங்கள் குறித்து வெளிவந்த எனது தொகுப்பான 'உதிரும் நினைவின் வர்ணங்களில்' முதல் கட்டுரையாகச் சேர்த்திருப்பேன். ஃபெலினியுக்கு அவரது பால்யம் முசோலினியின் பாஸிசக் காலத்திலும், சொரொண்டினோவுக்கு அவரது பால்யம் மரடோனாவின் பொற்காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றது.


ஏற்கனவே வெளிவந்த சொரொண்டினோவின் 'Youth' பிடித்த படங்களிலொன்று. அதில் மரடோனா, மரடோனா என்ற பாத்திரமாகவே வந்திருப்பார். அதுபோலவே நிர்வாணக் காட்சிகளையும், இளமையின் பிரவாகங்களையும், வாழ்வின் அபத்தங்களையும் எவ்வாறு கலையாக்குவதென்பதற்கு சொரொண்டினோவின் மேலே குறிப்பிட்ட படங்களை மட்டுமில்லை, அவரின் "The Great Beauty' , 'Loro' போன்ற படங்களையும் திரைப்படங்களை எடுக்க ஆர்வமிருப்பவர்கள் கவனிக்கவேண்டும்.


இவ்வாறான படங்களைப் பார்க்கும்போதுதான் நமக்குச் சொல்ல இவ்வாறு எவ்வளவோ கதைகள் இருக்க, நாம் என்னவிதமான படங்களை எடுக்க ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கின்றோம் என்பதைப் பற்றிய எண்ணங்களும் இடைவெட்டிப் போகின்றன.0000000000000


(Dec 20, 2021)

காலமென்ற சிமிழுக்குள் கடந்துபோகும் புரவிகள் - 02

Tuesday, February 22, 2022


ழுத்தாளர்களை சிலவேளைகளில் இரண்டு வகையினராகப் பிரித்துப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். ஒருவகையினர் தமதில்லாத பிற கதைகளை எழுதியவர்கள், மற்றவகையினர் தாம் சம்பந்தப்பட்டக் கதைகளை எழுதியவர்கள். தமது வாழ்க்கைக் கதைகளை எழுதியவர்கள் என்று நினைப்பவரும் தமது கதைகளை அப்படியே சொல்லிருப்பார்கள் என நம்பத்தேவையில்லை. புனைவு என்பது நடந்தவையிலிருந்தும்/நடக்காதவைகளிலிருந்தும் மேலும் மேலும் கற்பனைகளை விரித்துப் பார்ப்பதுதானே. நகுலனின் சுசீலா என்று அவர் 'நினைவுப்பாதை' போன்ற புனைவுகளில் வைக்கும் கதாபாத்திரத்திற்கு அப்பால்தான் சுசீலா இருக்கின்றாரென்பதை நகுலனின் நேர்காணலை வாசிக்கும்போது அறியலாம். ஆக 'நகுலனின் நினைவுப்பாதை'யில் வரும் சுசீலா, நவீனனின் சுசீலாதானேயன்றி அசலான சுசீலா  இல்லை என்பதை எளிதாய்ப் புரிந்துகொள்கின்றோம்.

 

அவ்வாறேதான் சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி ஆட்டோபிக்‌ஷன் வகையில், சின்னாஸ்கி என்ற கதைசொல்லியின் மூலம் 'பெண்கள்' (women) நாவலை எழுதிச் செல்வதுங்கூட. அதில் சின்னாஸ்கி என்பது ப்யூகோவ்ஸ்கி என்பதில் மறுகேள்விக்கு இடமில்லை. ஆனால் ப்யூகோவ்ஸ்கி இத்தனை பெண்களைச் சந்தித்திருந்தாலும், அந்த நிகழ்வுகளை அப்படியே அசல்குலையாது எழுதிச் சென்றிருப்பார் என்று நாம் நம்பத் தேவையில்லை.

 

நகுலனின் 'நிழல்களில்' சாரதி என்ற பாத்திரத்தில் வருவது கிருஷ்ணன் நம்பி என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த 'சாரதி'யின் கதையை அப்படியே கிருஷ்ணன் நம்பியின் கதையாக நாம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இத்தனைக்கும் 'நிழல்களில்' வரும் கேசவ மாதவன் என்ற பாத்திரமாகிய சுந்தர ராமசாமி இந்நாவலுக்கு ஒரு முன்னுரையும் எழுதியிருக்கின்றார். ஆக கிருஷ்ணன்நம்பி மட்டுமில்லை, சுராவும் 'நிழல்களை' நகுலன் எழுதி வெளியிடும்போது ஆட்சேபணை செய்யவில்லை என்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

 

நகுலன் ஒரே கதையைத்தான் எல்லா இடங்களிலும் வெவ்வேறுமாதிரியாகக் கூறுகின்றார் என்ற விமர்சனம் இருந்தாலும் (நகுலனே இதனை புனைவுகளிலும், அதற்கு அப்பாலும் பல்வேறு இடங்களில் இதைச் சொல்கின்றார்), நகுலனின் படைப்புக்களுக்கு ஒரு முக்கிய இடம் தமிழ்ச்சூழலில் இருக்கின்றது. அது அவரது 'தனிமை'க்கு கிடைத்ததால் வந்தது அல்ல. அவர் அப்படி 'தனித்து' இருந்ததது ஒரு மேலதிக் காரணமாக இருக்குமே தவிர, அந்தத் 'தனிமை'யை நாம் காதலரோடோ, துணைகளோடோ, யாரோடோ இருந்தாலும் உணர்ந்துகொள்ளக்கூடிய இருத்தலியத் தனிமைதான் அது. ஆகவேதான் அது எல்லோருக்கும் பொதுவான தனிமையாக நகுலனின் புனைவுகளில் இருந்து  விகசித்தெழுகிறது. ஒருவகையில் நகுலன் தமிழில் இதைத் தொடர்ந்து எழுதிச் சென்றதால்தான் அது முக்கியத்துவம் வாய்ந்த இடத்தையும் எடுத்துச் செல்கின்றது. டயரிக்குறிப்புக்களில் எழுதுவதாக சொல்லும் நவீனனின் கதைகளே பின்னரான காலத்தில் சுந்தர ராமசாமி போன்றோர் எழுதிய முக்கிய படைப்புக்களான 'ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு' ஒரு உந்துதலையும் கொடுத்திருக்கவும் கூடும்.

 

தினைந்து வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் 'கன்னியாகுமரி'யை வாசித்திருந்தேன். அதை அன்றைய இளமையின் உற்சாகத்தில் எஸ்.பொவின் 'தீ' கொஞ்சம் ஆழமான வடிவம் என்று எழுதியதும் ஞாபகம் இருக்கிறது. அப்படித்தான் ஜெமோவின் 'காட்டை' வாசித்துவிட்டு அவ்வளவு ஈர்க்கவில்லை என்று அப்போது எழுதியிருந்தாலும் இப்போது காட்டை மீள்வாசிப்புச் செய்தபோது எனக்கு நெருக்கமான ஒரு நாவலாக அது மாறியிருந்தது. அதேபோல இப்போது இருபதுகளில் இருக்கும் ஒருவர், ஒரு platonic உறவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா என்று காட்டை நிராகரித்ததைப் பார்த்தபோது -அன்றைய என்னைப்போன்ற ஒருவர் எனும்- மெல்லிய சிரிப்பு வந்தது.

 

அப்படி காடு எனக்குரிய நாவலாக பின்னாட்களில் மாறியதுபோல 'கன்னியாகுமரி'யும் மாறக்கூடுமென்று திரும்ப வாசித்துப் பார்த்திருந்தேன். ஆனால் காடு என்னை மாற்றியதுபோல கன்னியாகுமரி மாற்றவேயில்லை. காட்டில் கிரிதரனில் ஜெமோவின் சாயலை அதிகம் படியவிட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளமுடிந்தது. ஆனால் கன்னியாகுமரியில் வரும் ரவியில் மட்டுமில்லை பெண்கள் பாத்திரங்களிலும் ஜெமோவின் என்ற ஆளுமை தன்னை மீறித் துருத்திக்கொண்டு நிற்க, அந்தந்த பாத்திரங்கள் தன்னை எழுதிக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்பது எளிதாகப் புரிந்தது.

 

ஜெமோவின் பெண்கள் பாத்திரங்கள் எத்தனை அறிவுஜீவியாக இருந்தாலும், அவை ஆண் பாத்திரம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவர்களுக்குத் தம்மை 'அடிபணியும்' பாத்திரமாக எளிதாக மாற்றிக்கொள்வதன் நுட்பம் எனக்கு இன்னும் விளங்கவில்லை. இத்தகைய ஆண் Xபெண் முரணை ஆதவன் அற்புதமாக எழுதிக்கொண்டே செல்வார். ஒருபோதும் அவர் சிந்திக்கக்கூடிய பெண்களை இரண்டாம்பாத்திரமாக (secondary character) ஆக்குவதில்லை. ஆகவேதான் அந்த முரண் கூர்மையாகவும், முடிவுறாத உரையாடல்களாகவும் ஆதவனின் 'காகித மலர்களிலும்' என் பெயர் ஆதிசேஷனிலும் வந்தபடியே இருக்கும்.

 

'கன்னியாகுமரி'யில் வரும் பிரவீணா எவ்வளவு புத்திசாலியாகவும், நிறைய வாசிப்பவராக இருக்கின்றவராக இருப்பினும், ரவியின் அப்பாவி மனைவி ரமணியைப் போலவே பல இடங்களில் பிரவீணா பரிதாபமாகக் காட்சியளிக்கின்றார். பிரவீணாவுக்கு ரவியின் மனைவியைப் போல எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளவேண்டிய எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால் ரவி அவரை 'அடிமை'யைப் போல நடத்த நடத்த,  திருப்பத் திருப்ப ரவியை நோக்கி வந்துகொண்டிருப்பதில் வாசிக்கும் எங்களுக்கு எரிச்சல் வருகின்றது.

 

அதைவிட மிகுந்த அவதி வந்த இடமென்னவென்றால், விமலாவை நான்கு காடையர்கள் பாலியல் வன்புணர்வை 20 வருடங்களுக்கு முன்னர் செய்ததை, ரவியின் முன்னிலையில் பிரவீணா கேட்கும்போது, அங்கேதான் ஜெமோ என்கின்ற ஆண் தன்னை முன்னிலைப்படுத்தப்படுவது தெரியவருகின்றது. அவர் பிரவீணாவை அல்ல, விமலாவைக் கூடச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ரவி  மோசமாக விமலாவை இன்னும் அவமானப்படுத்,த விமலாவை பாலியல் வன்புணர்ந்த ஸ்டீபனை மீண்டும் கொண்டுவந்து நேரில் காட்டினாலும், இந்தப் பெண்களின் பாத்திரங்களுக்குள் நுழையவே முடியாத அபத்தத்தின் புள்ளியை நாம் கண்டடைகின்றோம். பாலியல் வன்புணர்வு வழக்கு நீதிமன்றத்தில் நடப்பதை விட மோசமான  உரையாடல்கள் இரு பெண்களுக்கு இடையில் நிகழ்த்தும் கொடுமையை நாம் 'கன்னியாகுமரி'யில் சகித்துக் கொள்ளவேண்டியவராகின்றோம்.

 

விமலா அந்தப் பாலியல் வன்புணர்வு சம்பவத்தை உதாசீனப்படுத்துகின்ற விடயத்தை ஏற்கனவே நான் என் 12/13 வயதுகளில் வாசித்த சுஜாதாவின் நாவலில் வாசித்தும் விட்டேன். நாவல் பெயர் இப்போது நினைவினில்லை. அதில் ஒரு கணவன் மனைவியும் எங்கோ போகும்போது இப்படி அந்தப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவார். அப்படிச் செய்த குற்றவாளிகளை எப்படியேனும் கண்டுபிடித்துவிடவேண்டுமென்ற வெறியுடன் அந்தப் பெண் அவர்களைத் தேடிக்கொண்டிருப்பார். இறுதியில் அந்த  குற்றவாளி  சிறையில் அடைக்கப்படும்போது, அவரைப் பார்த்துவிட்டு ஒன்றும்பேசாமல் அந்தப்பெண் அமைதியாகத் திரும்புவார் என்பதாக அந்நாவல் முடியும்.

 

விமலா ஸ்டீபனுக்கு முன் செய்வதும் அதைத்தான். ஆக அதில் கூட பெரிய விடயம் இல்லை. இப்படி அண்மையில் ஒரு நூற்றுக்கணக்கான பக்கங்கள் நீளும் ஒரு நாவலில் தொடக்கத்திலே இலங்கை இராணுவம் ஒரு தமிழ்ப்பெணை பாலியல் வன்புணர்வு செய்தபின், அந்தப் பெண்  பின்னர் அந்த இராணுவத்தைத் தொடர்ந்துபோய் காதல் செய்வதுபோல வந்தவுடன், எவ்வளவு பெரிய அபத்தமென அந்த நாவலை அப்படியே வாசிக்காது வைத்துவிட்டதும் நினைவில் எழுகிறது.

 

ஆக மீண்டும் 'கன்னியாகுமரி'யை வாசித்தபோது ஜெமோவின் 'காடு', 'இரவு' போன்றவற்றை மீள வாசித்தபோது பிடித்துப்போனது போல, இது அப்படியொரு நெருக்கமான நாவலாக ஆகவில்லை என்பது சற்றுக் கவலையானதுதான். அந்தவகையில் நான் 10/15 வருடங்களின் முன் நிகழ்த்திய வாசிப்புக்கள் அனைத்தையும் முற்றாகப் புறக்கணிக்கவும் தேவையுமில்லை என்று கொஞ்சம் நிம்மதியும் வருகின்றது.

 

இப்படியாக நகுலனை, ஜெமோகனை மீள்வாசிப்புச் செய்யும்போது ஒருவர் எவ்வளவு படைப்புக்களை எழுதியிருக்கின்றபோதும் காலத்தின் நீட்சியில் நாம் சுருக்கி வைத்துத்தான் அவற்றையெல்லாம் பார்க்க விரும்புகின்றோம் என்றும் சிந்தித்துப் பார்க்க முடிந்தது . ஜெயமோகன் எவ்வளவு எழுதியிருந்தாலும் அவரையும் காலம் முன்னோக்கிச் செல்ல ஒரு சிமிழுக்குள்தான் அடக்கப்போகின்றது. அது சுந்தர ராமசாமிக்கும், ஜெயகாந்தனுக்கும் ஏற்கனவே நிகழ்ந்திருக்கின்றது.

 

அப்படியெனில் மீச்சிறு உலகிற்குள் நின்று படைத்த நகுலனுக்கும், இரண்டு நாவல்களை மட்டும் எழுதிய ப.சிங்காரத்திற்கும், ஏன் இன்னும் கொஞ்சவருடங்களில் பிரான்ஸிஸ் கிருபாவின் 'கன்னி'க்கும் அதுதான் நிகழப்போகின்றதென்றால், எல்லோர்க்கும் அவரவர்க்குரிய இடமிருக்கும் இலக்கிய உலகில், ஆரவாரங்களுக்கும், அலட்டல்களும் சமகாலத்தில் ஏன் இவ்வளவு அவசியம் என்ற வினாவையும் நாம் எழுப்பிப் பார்க்கலாம்.


000000000000000


(நன்றி: 'அம்ருதா' - தை, 2022)

காலமென்ற சிமிழுக்குள் கடந்துபோகும் புரவிகள் - 01

Monday, February 21, 2022


சில வாரங்களுக்கு முன்னர் நண்பர்கள் இருவருடன் தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தபோது, பயணிப்பவர்களால்தான் நிறைய எழுதமுடியுமென ஒரு நண்பர் சொன்னார். அத்துடன் தமிழில் இன்று ஒரளவு தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் சில எழுத்தாளர்களையும் உதாரணங்களாய்க் காட்டினார். அவர் சொல்வதில் ஒருவகையில் நியாயம் இருக்கிறதென்றாலும், அதை ஒரு நிபந்தனையாக முன்வைக்க முடியாதெனச் சொன்னேன். 


தமிழில் எனக்குப் பிடித்த அசோகமித்திரனோ, நகுலனோ அவ்வளவாகப் பயணித்ததில்லை. அசோகமித்திரனாவது அவரின் வாழ்வின் முற்பகுதியில் கொஞ்சமாவது பயணித்திருக்கின்றார். நகுலனுக்கு அதுகூட அவ்வளவாக வாய்க்கவில்லை. ஆனால் இப்போதும் அவரைத் தேடித் தேடிப்போய் என்னைப் போன்ற பலர் வாசித்துக்கொண்டிருக்கின்றோம். இத்தனைக்கும் அவரின் கதை சொல்லும் பரப்பு என்பது மிகவும் சுருங்கியது. ஆனாலும் அவர் ஏன் இப்போதும் காலங்கடந்தும் எங்களை ஈர்த்துக்கொண்டிருக்கின்றார்? அவரின் தனிமையும், அவர் வாழ்ந்த வாழ்வும் அந்த மஞ்சள் நிறப்பூனையைப் போல அலைந்துகொண்டிருப்பதால்தான் நகுலன் இன்னமும் காலத்தில் வற்றாப் படைப்பாளியாக இருக்கின்றாரா?  இல்லையெனில் இந்தக் காலத்தில் எனக்கு யதார்த்தத்தின் மீது நின்று கதை சொல்வதை வாசிப்பது அலுத்துக்கொண்டிருப்பதால்தான் நகுலன் நெருக்கமாகின்றாரா என்றும் தெரியவில்லை.


இதை எழுதும் இந்தப் பொழுதில் பெருமாள் முருகனின் 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை'யை வாசித்து முடித்திருக்கின்றேன். என் இருபதுகளில் வாசித்தபோது பெருமாள் முருகனின் 'கூளமாதாரி'யையும், கண்மணி குணசேகரனின் 'கோரை'யும், சோ.தருமனின் 'கூகை'யையும் யதார்த்தவாத கதைகளுக்கு மிகப்பெரும் உதாரணமாக வைத்திருந்திருக்கின்றேன். இப்போதும் அதில் பெரும் மாற்றம் எதுவும் வரவில்லை. ஆனால் இன்று பெருமாள் முருகனின் நாவல்கள் சாதாரணமாக வாசித்து, பக்கங்களை எளிதாகக் கடந்துபோகின்றமாதிரியான நிலைக்கு வந்துவிட்டது. அவரின் 'மாதொருபாகன்' அதன் சர்ச்சைக்குரிய விடயத்துக்காய் கவனத்தைப் பெற (அதற்கு முன்னரே நான் வாசித்துவிட்டேன்), அதன் முடிவில்  இருந்து தொடங்கும் கதையை இரண்டுவிதமாக எழுதிய 'ஆலவாயனை'யும், 'அர்த்தநாரி'யையும் வாங்கி ஒன்றை மட்டும் வாசித்துவிட்டு இதுவே போதுமென மற்றதை இன்னும் வாசிக்காமல் வைத்திருக்கின்றேன். 'பூனாச்சி' நாவலெல்லாம் ஆங்கிலத்தில் அவ்வளவு விரைவில் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பதில் அதிலென்ன அப்படிச் சிறப்பாக இருக்கிறதென, எனக்குத் தனிப்பட்டவகையில் கேள்வி இருக்கிறது. இவ்வாறு நேரடியாக கதை சொல்லல் பாணி எனக்குரியதாக இல்லாது போனது துயரமென்றாலும், நான் அடைக்கலம் அடைய நகுலனும், லா.ச.ராவும், சமகாலத்தில் ரமேஷ் பிரேதனும் எனக்கு இருக்கின்றார்கள் என்பது கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றது.


ஆகவேதான் கோணங்கியும் அவருக்கு கொடுக்கப்பட்ட விஜயா பதிப்பக விருதில் பேசும்போது, யதார்த்த எழுத்தைக் கைவிட்டு கற்பனையின் விளைநிலத்தில் வாருங்களென நம்மைத் தன்னோடு அழைக்கிறார். அவர் பேசுவதே ஒருவர் மாயக்கம்பளத்தில் அடிக்கும் காற்றுக்கேற்ப அலைவதுபோல எம்பி எம்பி ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்துக்குப் போவது கூட எனக்கு நெருக்கமாயிருந்தது. அதை நகுலன் எழுத்தில் செய்துகொண்டு போகின்றார், அதனால்தான் சிலருக்கு அவர் 'இயந்திரத்தனமாய்' எழுதிக்கொண்டுபோகின்றார் என்கின்ற விமர்சனத்தையும் நகுலன் மீது வைக்கச் செய்திருக்கிறது. ஆனால் அதைத்தாண்டி என்னைப் போன்றவர்களைத் தேடி நகுலன் தொடர்ந்து வந்து சேர்ந்துகொண்டிருக்கின்றார். எனக்கு அடுத்த தலைமுறையில் ஒரு நண்பர், எனது தோழியொருத்தியுடன் நகுலனின் 'அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி'யை சேர்ந்து வாசிக்க வாஞ்சையுடன் அழைக்கிறார், அங்கே நகுலன் இன்னமும் இறக்காது நம்மோடு வருகிறார். 15 வருடஙகளுக்கு முன் அறிமுகமான நகுலன், அம்பை எல்லாம் அவர்களின் (புனை)பெயரால் என்றும் குன்றா இளமையுடந்தான் எனக்குள் புகுந்து இன்றும் அப்படியேதான் இருக்கின்றார்கள். பெயர்களால் மட்டுமில்லை எழுத்துக்களாலும் அவர்களுக்கு வயதாவதில்லை, அதில் கூடவே அசோகமித்திரனையும், எஸ்.பொவையும் சேர்த்துக்கொள்வேன்.


ரேமாதிரி எழுதப்படும் எழுத்துச் சூழலில் இருந்து புதியவகை எழுத்துக்களை எழுதப்போகின்றோம் என்றால் முதலில் அதுகுறித்து அச்சங்களைக் களையவேண்டும். இரண்டாவது நாங்கள் யாரோடோ போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றோம் என்ற மனப்பான்மையை முற்றாகத் துரத்த வேண்டும். மேலும் இவ்வாறாக எழுதினால்தான் இன்றையகாலத்தில் வாசிப்பார்கள் என்கின்ற நினைப்பின் சுழிப்பை அகற்றவும் வேண்டியிருக்கிறது. ஆகவேதான் நகுலன் தன் சமகாலத்தில் எவரும் வாசிக்கவில்லை, தானே சொந்த செலவில் பதிப்பித்த புத்தகங்கள் விற்காமல் இருக்கிறது என்று அவ்வப்போது சலித்துக்கொண்டிருந்தபோதும், அவர் தனக்கு விரும்பியதை எழுதுவதிலிருந்து விலகவே இல்லை. நீங்கள் என்ன சொன்னாலும் நான் எழுதவிரும்புவதை எழுதியே தீர்ப்பேன் என மறைமுகமாய்ச் சொல்லியிருக்கின்றார். 


இன்னொருவகையில் உங்களுக்குள் 'ஊற்று'ப் பெருகும்போது மட்டும் எழுதுங்களென ஹெமிங்வே சொல்வதையும், 'சாறு' இல்லாமல் எதையும் எழுதித் தொலைக்காதீர்களென்று ப்யூகோவ்ஸ்கி எழுதியதையும் இங்கே நினைவூட்டிக் கொள்ளலாம். நாங்கள் எழுதுவது ஏதாவதாக இருந்தாலும் அந்தத் தருணத்திற்கு நாங்கள் உண்மையாக இருந்தோமா என்று ஒருதடவை எங்களைச் சரிபார்த்தும் கொள்ளலாம். எழுதிக்கொண்டிருந்த தான், ரஷ்ய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு-1, 2 என்பவற்றை வாசித்ததோடு இதல்லவா எழுத்து என்று வியந்து எழுத்தின் உறங்குநிலைக்குக் கூட என் நண்பரைப் போல, விரும்பினால் போகலாம். அது தவறொன்றுமில்லை. எழுத்துக்குக் கொடுக்கும் ஒருவகை மரியாதைதான் அதுவும்.

 

மேலும் சமகால எழுத்தாளர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைப்பதைவிட, என்ன தோன்றுகின்றதோ அதை எழுதலாம். ஏனெனில் எழுத்து 'ஊற்றாகி' நல்ல 'சாறாகி' வரும்போது, அது தனக்கான வாசகர்களைக் கண்டடைந்துகொள்கின்றது. அந்த வாசகர்கள் காலத்தின் மீது  இப்படைப்புக்களை வைத்து, அடுத்த சந்ததியினருக்குக் கடத்தவும் செய்யவுங்கூடும்.


அந்தவகையில் துன்பங்கள் அல்ல, படைப்பாளிதான் நல்ல எழுத்துக்குத் தேவையென்று ப்யூகோவ்ஸ்கி சொன்னதுபோல, பயணங்கள் அல்ல, எழுத்தாளர்கள்தான் சிறந்த படைப்புக்களை எழுத வேண்டுமெனச் சொல்கிறேன். இன்று தமிழில் முன்னணி எழுத்தாளராக ஒருவர் சஞ்சிகையொன்றுக்கு அனுப்பிய படைப்பை வாசித்துவிட்டு, நண்பரொருவர் 15 வருடங்களுக்கு முன் எழுதியமாதிரியே அவர் இப்போதும் எழுதுகின்றார், கவலையாக இருக்கிறது என்றார் அந்த நண்பர். ஒன்றையே அதேமாதிரி எழுதுவது பெரிய தவறொன்றுமில்லை. நகுலன் ஒரு குறிப்பிட்ட சில விடயங்களையே திருப்பத் திருப்ப எழுதினவர். ஆனால் அவரிடம் வற்றாத சாறு எழுத்துக்களில் பெருகிக்கொண்டிருந்தது. தன் பலத்தை மட்டுமில்லை, தனது பலவீனங்களையும், தன்னை உந்தித்தள்ளும் எழுத்தாளர்களையும் மேற்கோள் காட்டி எழுதும் நேர்மையும் நகுலனுக்கு வாய்த்தது. மேலும் எந்த கட்டுக்குள்ளும் இயங்காது தன்போக்கில் சூரியன் எழுந்து மறைவதைப் போல எழுதிக்கொண்டே, அலுப்பான வாழ்க்கையையும் கோடிட்டுக் காட்டிப் போய்க்கொண்டிருப்பவராகவும் நகுலன் இருந்திருக்கின்றார்.


மீண்டும், பயணங்கள்  நம் அலுப்பான அன்றாடங்களைக் கொஞ்சம் மாற்றியமைக்கவும், புதிய மனிதர்களைச் சந்திக்கவும் வைக்கவும் கூடும் போன்ற சில அனுகூலங்கள் இருந்தாலும், அதற்கும் எழுத்துக்கும் ஒருபோதும் நேரடித் தொடர்பில்லை, அப்படியான கற்பிதங்களில் நாமிருக்கத் தேவையில்லையெனவும் பயணிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்க்குச் சொல்வேன். நகுலனையும், ரமேஷ் பிரேதனையும் பிடித்தவர்க்கு, இது இன்னும் சொல்லாமலே நன்கு விளங்கும்.


*************

(நன்றி: 'அம்ருதா' - தை, 2022)