கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மெக்ஸிக்கோ - நிரோஜினி

Wednesday, November 25, 2020

தனித்து பயணிக்கும் ஒரு எழுத்தாளனின் பயணம் ஒவ்வொருவரை சந்திக்கும்போதும், வெவ்வேறு இடங்களுக்கு செல்லும்போதும் ஒரு கவிதையாய் அல்லது கதையாய் அவனுக்குள்ளே உருவாகி, சிலது அச்சிடப்படுகின்றன. பல நினைவுகளுக்குள்ளே நிரந்தரமாகிவிடுகின்றன.

சிலருக்கு வாழ்க்கை என்பது நல்ல கல்வி, தொழில், திருமணம், சொந்த வீடு, வாகனம் இன்னும் சிலருக்கு சில அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என்பதாக மட்டுமே சுருங்கி விடுகிறது. வெகு சிலருக்கு வாழ்க்கை கொண்டாட்டம், ஒரு முடிவில்லா பயணம், புதிய மனிதர்களை புதிய புத்தகங்கள் போலே படித்தறியும் ஆவல் கொண்டிருப்பர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உலகம், சிலது பறந்து விரிந்தும் மிகச் சிலது குறுகியதும் அந்தகாரம் நிறைந்ததுமாய். மெக்சிக்கோ நோக்கி செல்லும் இந்த பயணி புத்தகங்ளை தனக்கு கவசமாக பயன்படுத்திக்கொண்டு கடந்த காலத்திற்குள் தன்னை சிறைப்படுத்தியிருக்கும் ஒருவன், அவனது உலகை வெளியே நின்று பார்க்கும் ஒரு கொண்டாட்டக்காரி சில நாள் பயணத்தில், காதலில், மதுவும் முத்தமும் நிறைந்த கடற்கணங்களில் அவனை விடுவிக்க எத்தனிக்கிறாள். அவனும் எப்போதோ மறந்துபோயிருந்த அம்மாவின் புடவை வாசத்தினை இவள் அருகாமையில் உணர்கிறான்.

பெண் என்பவள் நிகழ்கணங்களில் வாழ்பவள். சமூகம் விதித்திருக்கும் இத்தனை கட்டுக்களும் தான் மீது சுமத்தப்பட்டிருந்தாலும், அவள் நதியைப்போலே நகர்ந்து செல்கிறாள். பூக்காடுகளில் பிரியப்பட்ட ஊதா பூவாய் மிளிர்கிறாள். இந்த ஆணின் மீது அவள் பரிதாபம் கொள்ளவில்லை, காதல் வயப்படுகிறாள். நிகழ்காலங்களில் அவனை நிதானிக்க வைக்கிறாள்.
மெக்ஸிக்கோ படித்து முடிக்கும் வரைக்கும் சுவாரசியம் குறையாத, ஆழ்மனதின் உணர்வுகளை தெளிவாக விபரித்திருக்கும் ஒரு பயணக்கதை. பயணங்களை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும், புதிய மனிதர்களை சந்திப்பதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் சிறந்த விருந்து.கிட்டத்தட்ட சுவாரசியம் குறையாமல் மெக்ஸிகோவின் அதிசயங்களை படித்தாயிற்று ஒருமுறை பயணப்பட்டு போனால் போதுமானது. ஏற்கனவே போனவர்கள் இந்த மெக்ஸிகோவினை படித்த பின் போகும் பயணம் வேறுபட்டதாயிருக்கும். யார் கண்டார் ஒரு அம்பராவையோ, ஒரு கிறுக்கு வாசகனையோ சந்திக்க நேரும். ஒரு நாவல் இத்தனை சிறிய மாற்றத்தையேனும் நிகழ்த்தாதிருப்பதில் நியாயமில்லை தானே
அம்பாரோ வுக்கும் அவள் காதலனுக்கும் அவனுக்குள்ளிருக்கும் அந்தக்குழந்தைக்கும் ஆயிரம் முத்தங்கள்.
..............

(Oct 15, 2020)

நன்றி: நிரோஜினி

Killing Commendatore By Haruki Murakami

Wednesday, November 11, 2020

 1.

ந்நாவலின் முக்கிய பாத்திரம் ஓர் ஓவியன். கதை, அவன் தனது மனைவியை விட்டுப் பிரிந்து, நகரத்திலிருந்து மலைப்பாங்கான பிரதேசத்துக்கு வருவதோடு தொடங்குகின்றது. அந்த ஓவியன் அந்த மலைநகரத்திலிருந்து கொமிஷனுக்காய் பிறரைப் பார்த்து ஓவியங்களை வரைந்து கொடுக்கின்றான். அவன் தங்கியிருக்கும் வீடு ஒரு பிரபல்யம் வாய்ந்த ஓவியரின் வீடு. அந்த ஓவியர் இப்போது தன் வாழ்வின் அந்திமக் காலத்தில் ஒரு நேர்ஸிங் ஹோமில் வசித்துக் கொண்டிருக்கின்றார்.வழமைக்கு மாறாக நள்ளிரவில் இந்த மலை நகரத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் மணியொலிக்கத் தொடங்கின்றது. அந்தச் சத்தம் எங்கிருந்து வருகின்றது எனத் தேடும் இந்தக் கதைசொல்லி, ஒரு மறைக்கப்பட்ட ஓவியத்தை வீட்டின் இருண்ட பகுதிக்குள் கண்டுபிடிக்கின்றார். அதற்கான பெயரே Killing Commendatore இருந்தும் தொடர்ந்து மணிச்சத்தம் கேட்க, அயலிருப்பவரின் உதவியுடன் ஓர் இடத்தை அகழ்ந்து பார்க்க, அங்கே வித்தியாசமான விடயங்கள் வெளிவரத்தொடங்கின்றனஅது ஒரு காலத்தில் புத்த பிக்குக்கள் தியானம் செய்த இடமாகவும், தியானத்தின் போதே அவர்கள் உயிரைவிட்ட இடமாகவும் தோண்டிய அந்த இடம் இருக்கின்றது. மறைத்து வைக்கப்பட்ட ஓவியமும், புதைந்து கிடந்தததை அகழ்வராய்ந்த இடமும் இப்போது நடக்கும் பல்வேறு மர்ம நிகழ்வுகளுக்குக் காரணங்களாக ஆகின்றன. அந்த மர்மங்களின் முடிச்சுக்களில் சிலதை அவிழ்த்து, பிறதை அவிழ்க்காமலும், முரகாமி வாசிக்கும் நமக்குக் காட்டுகின்றார்.மறைக்கப்பட்ட ஓவியத்திலிருந்து கதை ஐரோப்பாவுக்கு நகர்கின்றது. அந்த ஓவியத்தை வரைந்த பிரபல்யம் வாய்ந்த ஓவியரான Tomohiko Amanda வின் வாழ்வு பின்தொடரப்படுகின்றது. அமெண்டா ஓவியராக ஆஸ்திரியாவில் கல்வி கற்றுக்கொள்ளும்போது 2ம் உலக மகாயுத்தம் நிகழத்தொடங்கின்றது. அவரின் காதலியான பெண், நாஸிகளுக்கான எதிரான இயக்கமொன்றில் இருக்கின்றார். ஆனால் அந்தப் பெண்ணும், அந்த மாணவர் இயக்கமும் நாஸிகளால் கண்டுபிடிக்கப்பட்டு மோசமாக சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகின்றார். அதிஷ்டவசமாக அமெண்டா சில வருடச் சிறைத்தண்டனையுடன் அன்றைய ஜேர்மனியுடன், ஜப்பானுக்கு இருந்த நட்புறவால் உயிர் தப்புகின்றார்.இதேகாலகட்டத்தில் அமெண்டாவின் சகோதரர் கட்டாயமாக ஜப்பானிய இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றார். ஜப்பான் சீனாவை ஆக்கிரமிப்பைச் செய்யும்போது, ஜப்பானியர்கள் சீனர்களைச் செய்யும் படுகொலைக்குச் சாட்சியமாக இருக்கின்றார். அதன் விளைவாக, ஒரு பியானோ இசைஞனாக அமெண்டாவின் சகோதரர் தன் கைவிரல்களை ஒவ்வொன்றாக வெட்டிவிட்டு யுத்ததின் முடிவில் தற்கொலை செய்துகொள்கின்றார்.2.

இவ்வாறு யுத்தத்தின் நிமித்தம் தனது காதலியையும், சகோதரனையும் பலிகொடுத்த அமெண்டா இந்தச் சம்பவங்களின் பின் எதையும் தன் குடும்பத்தோடோ நண்பர்களோடோ பகிராமல் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் மூடிவைத்துக்கொல்கின்றார். ஆனால் அவர் பேசவிரும்பும் விடயத்தை/வாதையை ஓர் ஒவியமாக வரைந்து யாருக்குந் தெரியாமல் மறைத்துவைத்திருக்கின்றார். இந்த ஓவியத்தையும், அடைக்கப்பட்ட குரல்களையுந்தான் நமது கதைசொல்லியான இந்த இளைய ஓவியன் கண்டுபிடிக்கின்றான்.இப்போது demons அவிழ்க்கப்பட்டுவிட்டன. அவை நிகழ்காலத்தில் இருக்கும் மனிதர்கள் மீது தமது நிழல்களைக் கவிழ்க்கின்றன. அதனால பல்வேறு மனிதர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அமெண்டாவின் ஓவியத்திலிருக்கும் பாத்திரங்கள் உயிருடன் நடமாடத் தொடங்கின்றன. அவை சிலது நல்லவையாகவும், சில தம்மைப் பலிகொடுத்து பிறருக்கு உதவுவதாகவும், சில இன்னும் பழிவாங்கும்தன்மையோடும் இருக்கின்றன.3.

கதைசொல்லியான இந்த ஓவியன் வழமையாக வரும் முரகாமியின் ஒரு தனிமைப்பட்ட பாத்திரம். தனக்கான உணவைத் தயாரித்து, பூனைகளோடு வாழ்ந்து, நாளாந்த வாழ்க்கையிலிருந்து விலத்தி பிறரோடு அவ்வளவு ஓட்டாத ஒரு உயிரி. ஆனால் அந்தத் தனிமைப்பட்ட உயிரிக்குக் கூட ஏதேதோ விடயங்கள் நடந்து வாழ்க்கை சுவாரசியமாகிவிடுகின்றது. மலைநகரத்தில் இருக்கும் காலத்தில் கதைசொல்லிக்கு ஒரு பதின்மூன்று சிறுமியுடன் நடபு முகிழ்கின்றது. அந்தச் சிறுமியில் 12 வயதில் இறந்துபோன தன் தங்கையை இந்த 36 வயதான கதைசொல்லி காண்கின்றார். பிறர் எவருக்கும் தென்படாத அமெண்டாவின் ஓவியப் பாத்திரங்கள் கதைசொல்லிக்கும், இந்தச் சிறுமிக்கு மட்டுமே தென்படுகின்றனர்.சிறுமியின் வீட்டைக் கண்காணிக்கும் ஒரு பணக்கார புதிரான பாத்திரத்தில் இன்னொரு கதாபாத்திரம் வருகின்றது. இந்தச் சிறுமியின் தாயார் இப்போது இறந்துவிட்டாலும், இந்தச் சிறுமியின் தாயோடு அந்தப் பணக்கார ஆணுக்கு ஒருகாலத்தில் தொடர்பிருக்கின்றது. இந்தச் சிறுமி தனது மகள்தானென இந்தச் சிறுமியைத் தொடர்ந்து கண்காணித்தபடி அந்தப் பணக்காரர் இருக்கின்றார். இந்தச் சிறுமி அந்த பணக்கார ஆணின் மகள்தான் என்று வாசிக்கும் நமக்கு ஒரளவு புரிந்தாலும், அந்தச் சிறுமியை இப்போது வளர்க்கும் பெண்ணோடு இந்த ஆணுக்கு புதிய உறவொன்று முகிழ, அவர்களின் கதை வேறொரு தடத்தில் நகரத் தொடங்கின்றது. நாவல் முடியும்வரை இந்த உண்மை அந்த ஆணால் இந்தச் சிறுமிக்குச் சொல்லப்படுவதில்லை.ஆனால் ஓவியரான கதைசொல்லி, இந்த உண்மையைத் தனது வாழ்வில் வேறுவிதமாய் எதிர்கொள்கின்றார். அவரின் மனைவிக்கு இன்னொரு ஆணுடன் உறவு வந்துவிட்டதென்று தெரிந்தே பிரிகின்றார். இவரது மனைவிக்கு விவாகரத்துக்கான பத்திரங்களை அனுப்பிவிட்டபோதும், சட்டென்று தனது மனைவியோடு சேர்ந்து இருந்தால் என்ன,

இதற்காய்க் கதைத்துப் பார்த்தால் என்ன என்று யோசிக்கின்றார். ஆனால் இப்போது அவரது மனைவி கர்ப்பமாகிவிட்டார். இந்தக் கதைசொல்லியா அல்லது இவரது மனைவி சந்தித்த புதிய ஆணாலா அவர் கர்ப்பமானார் என்ற குழப்பம் இருந்தாலும், குழப்பத்தோடு கூட வாழலாம் என்று ஒரு வழியை இந்த நாவல் இறுதியில் கண்டடைகின்றது.இவ்வாறு பல்வேறு மர்மங்களும், குழப்பங்களும் இருக்க, நாவல் சுவாரசியமாக இருந்தாலும், ஏன் முரகாமி இதை 700 பக்கங்கள் வரை நீட்சித்து எழுதினார் என்று தலையைக் குழப்ப வேண்டியிருந்தது. 300-400 பக்கங்களுக்குள் இந்த நாவலை திருத்தமாக எழுதியிருக்கலாம்.. 600-700 பக்கங்கள் தாண்டினால்தான் கிளாசிக் என்று மதிப்பார்கள் என்று யாராவது தமிழ் வாசகர் சொல்லி அவரின் மனசையும் குழப்பிவிட்டார்களோ தெரியாது.4.

நாவலின் ஓரிடத்தில் கதைசொல்லியின் நண்பன் பெண்கள் பற்றி தான் கண்டுபிடித்த ஓர் ஆய்வைச் சொல்வார். எந்த ஒரு பெண்ணினதும் முகத்தின் அரைவாசிப்பக்கம் மற்ற அரைவாசிப்பக்கத்தோடு ஒத்துவருவதில்லை என்று உறுதியாகச் சொல்கின்றார். அதாவது பெண்ணின் முகம், ஒரு அரைவாசி முகத்தில் இருந்து அந்த அரைவாசிக்கு ஏற்றமாதிரி இன்னொரு முகம் ஒத்துவருமே தவிர, அவர்களின் முகத்தில் இருக்கும் மற்றப்பக்கம் ஒருபோதும் ஒத்துவருவதில்லை என்று சொல்கின்றார்.அதற்காய் அவர் பல பெண்களின் முகத்தை கணனியில் வெட்டி ஒட்டியெல்லாம் பரிட்சித்துப் பார்க்கின்றார். ஆக எப்போதும் பெண்கள் இரண்டு முகங்களோடு நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்கின்றார். ஒரு பக்கம் அழகானதென்றால், இன்னொருபக்கம் அப்பாவியாக இருக்கின்றது என்கின்றார். இதில் எப்போது தனக்கு சிக்கல் வருகின்றதென்றால், ஒரு பெண்ணோடு முயங்கும்போது, அவளின் மற்றப்பக்கம் தன்னை உற்றுநோக்கின்றது என்றும், அது தனக்கு மிகவும் கஷ்டமாகவும், சிக்கலாகவும் இருக்கின்றது என்று நண்பர் சொல்கின்றார். இது பெண்களின் பிரச்சினையல்ல, உங்களின் மனோவியல் பிரச்சினை. இதற்கு ஆலோசனைதான் பெறவேண்டுமென கதைசொல்லி சொல்கின்றார். இல்லை நான் எல்லோரையும் போல் சாதாரணமாக இருக்கின்றேன் என்கின்றார் அந்த நண்பர். இப்படி நாம் சாதாரணமாக இருக்கின்றோம் என்று நம்புகின்றவர்கள்தான் மிகவும் பிரச்சினைக்குரியவர்கள் என்று F.Scott Fitzgerald எழுதியிருக்கின்றார் எனச் சிரித்தபடி கதைசொல்லி சொல்கின்றார்.ஒருவகையில் இந்த நாவலில் எல்லோரும் சாதாரணமாக இருக்கின்றார்கள் போலத்தான் வெளிப்பார்வைக்குத் தெரிகின்றார்கள். உண்மையில் அவர்கள் சாதாரணமாகத்தான் இருக்கின்றார்களா இல்லையா என்பதை பல்வேறு சம்பவங்களினூடாகக் காட்டப்படுகின்றது. மேலும் கடந்தகாலத்தில் உளவியல் வடுக்களிலிருந்து அவ்வளவு எளிதாகக் கடந்து வந்துவிடமுடியுமா என்றும் இந்த நாவல் நம்மைக் கேள்விகேட்க வைக்கின்றது.காஃப்காவின் எழுத்துக்களினூடாக பின்னர் Kafkaesque பிரபல்யமானது போல முரகாமியின் எழுத்துக்களிலிருந்தும் அவருக்கான தனித்துவமான பாணியைச் சிலாகிக்கும் காலம் எதிர்காலத்தில் வரும்போலத்தான் தோன்றுகின்றது.

............................

(Oct 13, 2020)