கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மைத்ரி

Monday, July 11, 2022

 

ஜிதன் எழுதிய 'மைத்ரி'யை நேற்றிரவு வாசித்து முடித்திருந்தேன். ஒரு புதிய எழுத்தாளரின் நாவல் என்ற வகையில் கவனிக்கத்தக்கது, ஆனால் அதேவேளை தமிழில் தவறவிடாது வாசிக்கவேண்டிய ஒரு படைப்பு என்று சொல்ல என் வாசிப்பு துணியாது. வழமையாக எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களில் எஸ்.ரா தனது முன்னுரையை எழுதி எங்களுக்கு அவரின் நாவலை வாசிக்கும் ஆர்வத்தைக் குறைப்பதுபோல இங்கு அஜிதன் மட்டுமில்லை, அவரின் தோழியும் கூட நாவலைப் பற்றி பெரிய உரைகளை தொடக்கத்திலேயே எழுதி எங்களைச் சோதிக்கின்றார்கள். நாங்கள் 200 பக்கங்களுக்கு எழுதியதைப் பத்துப் பக்கங்களில் சுருக்கிச் சொல்லப்போகின்றோம்/ இப்படித்தான் இந்தப் படைப்பை வாசிக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லத் தொடங்கினால், எங்களுக்கு நாமெழுதிய படைப்பின் மீதே அவ்வளவு நம்பிக்கை இல்லையோ என்ற எண்ணம் வாசிப்பவருக்கு வந்துவிடும். மேலும் ஒரு படைப்பை அதை எந்தவகையான வாசகராக இருந்தாலும், அவரவர்களின் பின்னணியில் வாசிப்பதற்கான சுதந்திரம் இருப்பதை மறுதலிக்க நாம் யார். 'ஆசிரியர் இறந்துவிட்டார்' என்று தமிழ்ச்சூழலில் உரையாடப்பட்டு 3 தசாப்தங்களுக்கு மேலே ஆகிவிட்டபின்னும் இவ்வாறு எழுதிக்கொண்டிருப்பது ஒருவகையில் அபத்தம் அல்லவா?


'மைத்ரி' நாவல் காதலில் தோற்றவன் இமயமலை நோக்கி பயணம் செய்கையில் பேரூந்தில் ஒரு பெண்ணைக் காண்கின்றான். அவளோடான‌ அனுபவங்கள், காதல் வயப்படல், பித்து நிலையில் அவளிடமிருந்து வெளியேறல் (அவளைச் சந்தித்தது உண்மையில் நிகழ்ந்ததா என்கின்ற குழப்பங்கள்) எனப் பல நிகழ்ந்தேறுகின்றன. ஒருவகையில் அஜிதன் குறிப்பிடுவதுபோல (குறிப்பிடாமல் விட்டால்கூட) இது ஜெயமோகனின் 'காடு' நாவலிலிருந்து எழுந்த இன்னொரு கிளைக்கதை எனப் புரிந்துகொள்ளலாம். எப்போதும் கவனம் பெற்ற பெற்றோரிடமிருந்து வாரிசுகள் அதே துறையில் வெளிவரும்போது பல்வேறு சவால்களை பிறரை விட அதிகம் அந்தப்பிள்ளைகள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். இதை அஜிதனும் எதிர்கொண்டிருப்பார், இனியும் எதிர் கொள்ளவேண்டியிருக்கும். 'மைத்ரி'யில் சிக்கல் என்னவென்றால் காடு நாவலில் நிகழ்ந்த ஒரு கட்டற்ற எழுத்தின் பிரவாகம் இங்கு நிகழ்வில்லை என்பதே. அஜிதனுக்கு தன் வயதுக்குள் நின்று ஒரு கதையைச் சொல்வதா அல்லது காடு போல அதை விரித்து தத்துவார்த்தமாய் கொண்டு போவதா என்பதில் குழப்பம் வந்திருக்கின்றது. இருபது வயதுக்காரனுக்குரிய‌ கதையை நாற்பது வயதுக்காரன் சொல்வதான பாவனையில் அமைந்ததுதான் 'மைத்ரி'யின் பலவீனம் எனச் சொல்வேன்.

அதேபோல காடு, புனைவின் வழி அதன் பாத்திரங்களினூடாக தத்துவார்த்த/ஆன்மீகத் தளங்களுக்கு இயல்பாக விரிந்து சென்று அமைந்தது. மைத்ரியில் தத்துவார்த்த/ஆன்மீக விடயங்களை கடினப்பட்டுப் பாத்திரங்களுக்குள் புகுத்தியது போல அதன் வாசிப்பில் தொடர்ந்து தொந்தரவுபடுத்தியபடி இருந்தது. ஒருவர் முற்றுமுழுதாக தத்துவார்த்த ரீதியாக எழுதுவது தவறில்லை. அதற்கு அண்மைய சிறந்த‌ உதாரணமாக அனுக் அருட்பிரகாசத்தின் 'Passage North' ஐ சொல்வேன். அதன் கதை சொல்லப்படும் விடயம் மிகச்சுருங்கிய தளத்துக்குரியது. ஆனால் அந்த நாவலை முக்கியத்துவப்படுத்துவது அந்த சிறுதளத்தில் இருந்து விரிந்து எழும் தத்துவார்த்தப் பார்வையே, அதை 'மான் புக்கர்' short listவரை கொண்டு சென்றிருக்கின்றது.


வ்வாறு சொல்வதால் மைத்ரி மோசமான நாவல் என்று அர்த்தமல்ல. ஒரு புதிய படைப்பாளிக்கு, முக்கியமாக ஆளுமையுள்ள தந்தை எழுத்தாளராக இருக்கும்போது அதைத்தாண்டி எழுதுவது என்பதே மிகவும் கடினமானது. அதைத்தாண்டி அஜிதன் எழுத வருவது பாராட்டக்கூடியது. ஆனால் முன்னுரையில் எல்லாம், 'இந்த ஆறாவது அத்தியாயம் உட்பட சில அத்தியாயங்கள் தமிழிலேயே எழுதப்பட்டவற்றில் மிக முக்கியமான பகுதிகளென அகந்தையுடன் சொல்வேன்' என்று அஜிதன் தன்னைத்தானே பிரகடனப்படுவது எல்லாம் சற்று அதிகப்படியானது. எழுதும் நம் எல்லோருக்கும், நாம் எழுதும்போது எழுத்து நம்மை அழைத்துச் செல்லும் உன்னத இடங்கள் தெரியும். அவை நமக்கு எழுத்து தருகின்ற அற்புத தருணங்கள். ஆனால் அது நமக்கு மட்டுமே உரிய அந்தரங்கமானது.

அப்படி அஜிதன் சிலவேளை உணர்ந்திருக்கலாம். தவறும் இல்லை. ஆனால் அதைப் பிரகடனப்படுத்தி பிறருக்குத் தெரிவிப்பது என்பது ஒருவகை எழுத்து வன்முறை. அதை வாசிப்பவர்கள் அல்லவா சொல்லவேண்டும். நாம் எழுதிவிட்டு நாமே இப்படிச் சொல்வதில் என்ன பெரிதாக நமக்குக் கிடைத்துவிடப்போகிறது. இதைப் போன்றவற்றை அஜிதன் தவிர்க்கலாம். அவர் தொடர்ந்து எழுதப்போகின்றார் என்றால் இவ்வாறான தேவையில்லாப் பிரகடன‌ங்கள் எல்லாம் கைவிடவேண்டியவையெனச் சொல்வேன்.

தந்தையிட்ட பாதையிலிருந்து விலகி தனக்கான பாதையை ‍‍-அது எவ்வளவு கரடுமுரடாய் இருந்தால் கூட‍ - இனிவரும் காலங்களில் அஜிதன் அமைக்க வாழ்த்து.

(Jun 07, 2022)