கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வரலாற்றை வாசித்தல் - 02

Wednesday, August 26, 2020

லித்திய அரசியலை வாசித்துவிட்டு அடுத்து வாசிக்கத் தொடங்கியது ரெஜி டெப்ரேவின் 'சே குவேராவின் கொரில்லா யுத்தம்'. இது சேயின் இறுதிக்காலங்களில் பொலிவியாவில் அவரோடிருந்த ரெஜி டெப்ரோ எழுதிய நூலாகும். இதற்கு முன்னர்தான் சே (ரெஜியினது பங்களிப்பும் உண்டு) எழுதிய 'கெரில்லா யுத்தம்' என்ற நூல் வெளிவந்திருந்தது. அது பல கெரில்லா அமைப்புக்களுக்கான கையேடாகவும் இருந்திருக்கின்றது/இருக்கின்றது.  ஆனால் 'சேகுவாராவின் கெரில்லா யுத்தம்' என்கின்ற நூல் சேயினது கெரில்லா நடவடிக்கைகளை ஆய்வுபூர்வமாக அவரின் வீழ்ச்சிவரை அணுகிப்பார்க்கின்றது. 


ஒரு கெரில்லா யுத்தம் நூல்களின் வழியல்ல, அதன் புறக்காரணிகள்/அன்றைய நிலவரம் என்பவற்றிலேயே பெரிதும் தங்கியிருந்தென்பதைத் தெளிவாக இந்த நூலில் பார்க்க முடிகிறது. ஏன் சேயினது பல்வேறு குழுக்கள் பொலிவியாவில் பிடிபடப் பிடிபட சே இறுதிவரை ஒரு புரட்சி பொலிவியா/பெருவில் நடந்துவிடும் என்பது எப்படி நம்பினார் என்பது நமக்கு வியப்பாக இருக்கும். சிலவேளைகளில் மெக்ஸிக்கோவில் இருந்து கியூபாவில் 80இற்கு மேற்பட்டோரின் தரையிறக்கம் நிகழ்ந்தபோது பெரும்பாலானோர் கொல்லப்பட மிஞ்சிய 12 பேரோடு கியூபப் புரட்சி சாத்தியமானது போல பொலிவியா/பெருவிலும் ஒரு புரட்சி சாத்தியமென சே நினைத்தோரோ தெரியவில்லை. 

இன்று கடந்தகால வரலாற்றை நின்று பார்க்கும்போது இப்படி இருக்கலாம் அப்படி நடந்திருக்கலாம் என்று 'லாம்'களில் நாம் பேசமுடியுமே தவிர நடந்தவை எல்லாமே வரலாறுதான். அவற்றை நாம் மாற்றமுடியாது. ஒருவகையில் சேயைப் பார்த்தால் தோல்வியுற்ற புரட்சியாளன் என்ற விம்பங்கூட நமக்கு வரலாம். கியூபாப் புரட்சியைத் தவிர, கொங்கோ, பொலிவியா/பெருவில் மட்டுமல்ல, இடையில் ஆர்ஜெண்டீனாவில் சே முன்னின்று கட்டிய கெரில்லா இயக்கம் கூட முற்றுமுழுதாக அவர் காலத்திலேயே  துடைத்தெறிய‌ப்பட்டிருக்கின்றது. 


சிலவேளைகளில் காஸ்ரோ, ராவுல், கமீலிலோ போன்றோரே சிறந்த போராளித்தளபதிகள், சே அல்ல என்று முடிவுக்குக் கூட வரலாம். சேயை ஒரு அந்நியராக விலத்தி வைக்காது, தமக்குள் உள்வாங்கிக்கொண்டவர் காஸ்ரோ . ஆனால் பிறநாடுகளில் புரட்சியை நிகழ்த்தப் போன சேயை, கியூபாவைப் போல எவராலும் அரவணைத்துக் கொள்ள முடியவில்லை. பொலிவியாவில் சேயுக்கு, அங்கே ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பெருவிய இடதுசாரிகளோடு முரண் வருவதுதான், சேயின் மரணத்துக்கான முக்கிய காரணமாகக் கூடச் சொல்லப்பட்டிருக்கின்றது. 


அந்நியரைக் குறைத்து உள்நாட்டவர்களைக் அதிகம் சேர்த்தல் என்ற கொள்கையின்படி, பெருவிலிருந்து போராடவந்தவர்களைக் கூட சே  பொலிவியாவில் தவிர்க்கின்றார். ஆனால் பொலிவியா இடதுசாரிகள் சேயுடன் இணையாது பின்வாங்க அவரது நிலைமை இன்னும் மோசமாகின்றது.  இதே விலத்தல், கியூபப் புரட்சியின்போது சே தலைமையேற்கின்ற ஒருவராக மெக்ஸிக்கோவில் மாறும்போது தொடக்கத்தில் நிகழ்கின்றது. அந்நியர் ஒருவர் எப்படி நமக்குத் தலைமை தாங்குவது என்ற சிக்கல் அவர்களுக்கிடையில் வருகின்றது. அதை ஃபிடல்  எவ்வாறு இலாவகமாய் கையாண்டார் என்பதை சே புரிந்துவைத்திருந்தார் என்ற விடயத்தையும் ரெஜி இந்த நூலில் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 


ஆனால் இவ்வாறு கியூபாப் புரட்சி தவிர, மிகுதி எல்லாவற்றிலும் தோற்ற ஒருவர் எப்படி கெரில்லாக்களுக்கும்/ புரட்சிகளுக்கும் முன்னுதாரணமாய் ஆனார் என்பதுதான் நாம் கேட்கவேண்டிய கேள்வியாகும். சே தான் நம்பியவற்றில் தெளிவாக இருந்தார். அதையே தன் கடைசிக்காலம்வரை பின் தொடர்ந்தவர். அதில் எந்த சமரசங்களுக்கும் இடங்கொடுக்கவில்லை. இயேசுவுக்கு ஒரு 'மீள்பிறப்பு' போல சே இறந்தபின்னும் இன்னுமின்னும் மீள்பிறப்புக்களைத் தனது தோல்வியினூடாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். 


அதனால்தான் எங்கோ தொலைவிலிருந்த இலங்கையில் கூட நிகழ்ந்த புரட்சியை 'சேகுவேராப் புரட்சி' என்று பெயரிட்டு எழுபதுகளில் அழைத்திருக்கின்றார்கள். ஃபிடல் காஸ்ரோவுக்கு வரலாறு இரண்டாவது சந்தர்ப்பதை வழங்கியபோது அதைப் புரட்சியாக நிகழ்த்திக் காட்டி தன்னை காலத்தின் முன்னே அடையாளப்படுத்தினார். ஆனால் இலங்கையில் ரோகண விஜயவீராவுக்கு அதே இரண்டாவது சந்தர்ப்பத்தைக் காலம் வழங்கியபோது, அது மோசமாக நிகழ்ந்து, முடிவில் சுட்டுக் கொல்லப்படவும் செய்யப்பட்டிருந்தார். 


இப்போது ஏன் சேயை இங்கே நினைவுபடுத்துகின்றேன் என்றால், சே ஒரு இடதுசாரியாக இருந்தாலும், அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசியவாதம் சார்ந்தும் உரையாடலை நிகழ்த்த வேண்டியிருந்தது.  புரட்சி என்கின்ற கனவைக் கைவிடாது அதை அவர் நியாயமாக எதிர்நோக்கியுமிருந்தார். ஆக சேயை அவரின் காலத்தில் வைத்தே நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. அவரின் சரிவுகளிலிருந்தும் சே என்ற ஆளுமை விகாசித்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் அறிகின்றோம். 


எங்கள் ஈழத்திலும் பல்வேறு இயக்கங்கள்/புரட்சிகள்/கெரில்லாப் போர்முறைகள் என்ற பலது நிகழ்ந்து இலத்தீன் அமெரிக்க நாடுகளைப் போல ஒரு கொதிநிலையிலேயே இலங்கை எதையும் கற்றுக்கொள்ளாது இப்போதும் இருக்கின்றது. ஆனால் அதைவிட இந்த 'வரலாற்றை மறுவாசிப்பவர்களின்' தொல்லையோ இன்னுந் தாங்க முடியாதிருக்கின்றது. இன்றைய காலகட்டத்தை வைத்து இவர்கள்  கடந்தகாலத்தை  'மறுவாசிப்பு' செய்யும்போது நமக்குத் தலைசுற்றுகின்றது. நல்லவேளையாக வாசிப்பு' என்றொரு ஆசான் இருக்கின்றார் என்பதால் புத்தகங்களுக்குள் அடைக்கலம் புகுந்து நம்மால் தப்பிக்கமுடிகிறது.

................................

(Jun 12, 2020)

'காலம்' - இதழ் - 54

Tuesday, August 25, 2020

இந்தக் 'காலம்' இதழ் தெளிவத்தை ஜோசப்பினதும், எஸ்.வி.ராஜதுரையினதும் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. இதில் தெளிவத்தை ஜோசப் பற்றி மல்லியப்புசந்தி திலகர் எழுதிய கட்டுரையும், எஸ்.வி.ஆர் குறித்து வ.கீதா எழுதிய கட்டுரையும் மிக நேர்த்தியானவை. இலக்கியத்தில் ஆளுமைகள் குறித்து அறிய, இவ்வாறான சிறுசஞ்சிகை களையே தங்கியிருக்கவேண்டியிருக்கின்றது. பக்க நெருக்கடி இல்லாது, விரிவும் ஆழமாக சொல்ல விரும்பியதுக்கெல்லாம் இடம் கொடுப்பவை இவ்வாறான சஞ்சிகைகளே. அதுவும் இணையம் போன்றவை பரவலாக இல்லாத காலத்தில், வெகுசன சஞ்சிகைகளில் ஒதுக்கப்பட்டு அல்லது கவனிக்கவேபடாத படைப்பாளிகளை இவ்வாறான சிறுசஞ்சிகைகளே நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.


புலம்பெயர் சூழலில் 30 வருடங்களாக, விரும்பியபோதுதான் முகிழ்வேன் என்பதற்கிணங்க காலம் வந்துகொண்டிருப்பது ஒரு முக்கியமான நிகழ்வெனச் சொல்லவேண்டும். இந்த 30 வருடங்களில் 54 இதழ்கள்தான் வந்திருக்கின்றன என்றால், வருடத்துக்கு 2 இதழ்கள் கூட வரவில்லை என்றுதான் கணக்கிடவேண்டும். ஆனால் அந்த இடைவெளி என்னைப் போன்ற வாசகர்களுக்கு உறுத்துவதில்லை. எப்போதும் ஒரு சஞ்சிகையை/இதழை சேமித்து வைப்பதற்கு எனக்கு அதில் ஒன்றிரண்டு விடயங்களாவது புதிதாய் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கடமைக்கு என்று வருவதில் என்ன சிறப்பு இவற்றில் இருக்கப்போகின்றது. 


இதில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்ற ஷக்திக குமாரவின் சிங்களக் கதை (தமிழில் ரிஷான் ஷெரிப்) வெளிவந்திருக்கின்றது. இந்தக் கதையில் புத்தபிக்குகளின் பாலியல் வரட்சியைச் சொன்னதாலேயே ஷக்திக குமாரவை அரசு  இலங்கைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதும் நிகழ்ந்தது. போர் முடிந்தபின்னும் இன்னும் சுதந்திரமாக எதையும் எழுதும் நிலை, சிங்களர்வர்க்குக் கூட இல்லை என்பது இச்சம்பவத்தின் மூலம் நிரூபணமாகிறது. இந்தச் சிறுகதையை ஒரு முக்கிய படைப்பாகக் கூடச் சொல்லமுடியாது. ஆனால் சில பக்கங்களில் நீளும் இந்தக் கதையைக் கூடச் சகிக்க முடியாதுதான் இலங்கையில் மதம் சார்ந்த சகிப்புத்தன்மை இருக்கின்றது என்பதுதான் கவலைக்கிடமானது.


இந்த இதழில் வந்த கதைகளில் இமையத்தின் 'விஷப்பூச்சி' என்னைக் கவர்ந்த ஒன்று. ஆனால் இமையம் 'செல்லாத பணம்' நாவல், 'பெத்தவன்' குறுநாவல் உள்ளிட இன்னும் வேறு சில கதைகளிலும் இந்த ஒரே சம்பவத்தை ஏன் பல்வேறு வழிகளில் எழுதிப் பார்க்கின்றார் என்று யோசித்துப் பார்த்திருக்கின்றேன். சிலருக்கு சிலதைக் கடந்துபோக முடியாததுபோல, வீட்டைவிட்டு ஓடிப்போகும் பெண்கள் இமையத்துக்கு கதைகளுக்கான விதைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் போலும்.


கனடிய எழுத்தாளரான மார்க்கிரட் அட்வூட்டின் புதிய நாவலான 'The testaments' பற்றிய சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் வாசிப்பும் சுவாரசியமானது. இதற்கு முன்னர் அட்வூட் எழுதிய 'The Handmaid's Tale' இன் பின்னணியில் வைத்து ஒரு மதிப்புரையை இதற்கு எழுதியிருப்பது சிறப்பானது.  'The Handmaid's Tale' இங்கே மிகுந்த கவனம் பெற்று தொலைக்காட்சித் தொடராகவும் வந்து பரவலாகப் பேசப்பட்டிருக்கின்றது. அதேபோன்று மகாலிங்கம், மு.தளையசிங்கத்தோடான நினைவுகளைப் பகிர்ந்த ஒரு சிறு கட்டுரையையும் முக்கியமானது. மு.த எப்படி அன்றையகாலத்தில் ஆங்கிலப் புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றார் என்பதும், எவ்வாறு ஒவ்வொரு நூல்களிலும் தனது அடிக்குறிப்புக்களை எழுதுவார் என்பதும், இறுதியின் அவரது வீடு புங்குடுதீவில் கைவிடப்பட்டு அவரின் சேகரிப்பிலிருந்து புத்தகங்கள் சிதைந்ததோடு, அவரின் வீட்டில் குசினி மட்டும் மிச்சமாயிருக்க மிகுதி அனைத்தும் அழிந்து இருப்பதை நீண்டகாலங்களுக்குப் பிறகு அங்கே போய்ப் பார்க்கும் மகாலிங்கம் நமக்குக் குறிப்புகளாய்த் தருகின்றார். மு.தவின் எழுத்துக்களை வாசிக்கும் நமக்கு அன்று எப்படி மு.த இப்படியெல்லாம் விரிவாகப் புத்தகங்களை வாசித்திருப்பார் என்றெல்லாம் வியப்பு வரும். அதை நாம் கண்டடையக்கூடிய சிறுபுள்ளிகளை மகாலிங்கம் இந்தக் கட்டுரையில் தருகின்றார். இறுதியில் சரியாக அடையாப்படுத்தாது போர்க்காலங்களில் முன்னும், நடக்கும்போதும் இல்லாமற்போன எழுத்தாளர்களின் வாழ்வு இன்னும் அவலமானது என்ற குறிப்பு இதில் வரும். 


எனக்கு உடனே நினைவுக்கு இப்படி வந்தவர் சு.வி என அழைக்கப்பட்ட சு.வில்வரத்தினம். அவரின் வீடும், அவர் எழுதியவையும், சேகரித்த நூல்களும் இந்திய இராணுவகாலத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றது. பின்னர் ஒருபோதுமே ஊர் திரும்பமுடியாது திருகோணமலையில் காலமாகியும் விட்டவர் அவர். இவ்வாறு 95இல் இடம்பெயர்ந்து பின் திரும்பிவந்தபோது தன் சேகரத்திலிருந்த நூல்கள் அழிந்துபோனதை வடகோவை வரதராஜனும் குறிப்பிட்டிருக்கின்றார். அப்படி அவை இல்லாமற்போனதன்பின் பிறகு நூல்களை வாங்கவோ, சேகரிக்கவோ விருப்பு இல்லாது போய்விட்டது என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். இவ்வாறு எத்தனை எத்தனை அனுபவங்கள் முக்கியமாய் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிவந்த படைப்பாளிகள் பலருக்கும் இருக்கக்கூடும்.


காலம் இவ்வாறு 30 வருடங்களில் 54 இதழ்களை நமக்குத் தந்ததோடு, இன்னொரு முக்கிய விடயத்தையும் சத்தமில்லாது புலம்பெயர்மண்ணில் இருந்துகொண்டு செய்திருக்கின்றது. அது இற்றைவரை 50இற்கும் மேலான நூல்களை வெளியிட்டிருக்கின்றது. அவரவர்கள் நான்கைந்து நூல்களை வெளியிட்டவுடனேயே பதிப்பாளர்கள் என்ற 'பெருமை'களுடன் உலாவரும்போது காலம் செய்திருப்பது முக்கியமான விடயமே.  அதிலும் மொழியாக்கம் தவிர்ந்து, ஈழம்/புலம்பெயர்ந்து இருப்பவர்களின் நூல்களையே காலம் வெளியிட்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது.


இப்போதைய கொடுங்காலத்தில் காலம் அமேஸனூடாகத் தனது 55வது இதழை வெளியிட்டிருக்கின்றது. மணி வேலுப்பிள்ளை அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கும் 10 உலகச் சிறுகதைகளை மட்டும் கொண்டு ஒரு சிறப்பிதழாக அது வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

..................

(Jun, 2020)

வரலாற்றை வாசித்தல் - 01

Sunday, August 23, 2020

ஸென் மனோநிலை என்பது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது தியானத்துக்குச் செல்வது அல்ல என்று சொல்வார்கள். இரைச்சல் நிறைந்த சந்தைக்குள் போகும்போது மனதுக்குள் தியானத்திற்கான அமைதியைக் கொண்டுவருதலே முக்கியமானதென வலியுறுத்துவார்கள். அவ்வாறுதான் வெளியுலகம் தேவையற்ற வீணான விவாதங்களில் என்னை மூழ்கவைக்கும்போது, நூல்களைத்தேடிப் போய்விடுவேன். அவ்வாறு மீண்டும் வாசிக்கத் தொடங்கியது ராஜ் கெளதமன் எழுதிய 'தலித்திய அரசியல்'. இது ஒரு சிறு நூல். ராஜ் கெளதமன் சாதி ஒழிப்பிற்காய் அங்கே முன்வைக்கும் புள்ளிகள்தான் முக்கியமானது. அதிலும் அம்பேத்கார் X பெரியார் X அயோத்திதாச பண்டிதர் போன்றோரை எதிரெதிர் முனைகளில் வைத்து உரையாடாமல் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தையும், அதேவேளை அவர்கள் தவறவிட்டிருக்கக்கூடிய புள்ளிகளையும் அதில் அழகாகச் சுட்டிக்காட்டுகின்றார்.


மேலும் இந்த நூலில் ஏன் சாதி ஒழிப்பு இற்றைவரை முற்றுமுழுதாக சாத்தியப்படாததற்கான பல கோணங்களைச் சுட்டிக்காட்டி, வாசிப்பவர்களை அடுத்த நிலையில் என்ன செய்யமுடியும் என்று ஒரு திறந்த உரையாடலுக்கான அழைப்பதாலும் இந்த நூல் எனக்கு மனதுக்கு நெருக்கமாக இருந்த‌து.


முக்கியமாய் பெரியார் 'எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் தலித்துக்களுக்காகவோ, பெண்களுக்காகவோ தலைமையேற்றுப் போராடியதாகக் கூறவில்லை; இந்துச் சாதியின் இழிவு, தீண்டாமை, இந்துமதம் ஆகியவற்றை அழிக்கும் போராட்டத்தால் தலித்துகளும் பெண்களும் பயனடைந்தால் அதை வரவேற்பதாகவே சொன்னார். பெண்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதுவதாக ஆண் கூறுவது, எலிகளுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுப்பதாகப் பூனை சொல்லுவதற்கு ஒப்பானது என்று பெரியார் சொன்னதிலிருந்து தலித் விடுதலைக்கும், பெண் விடுதலைக்கும் தமது செயல்பாட்டுக்கும் இடையிலிருந்த சங்கடத்தை அல்லது தர்மசங்கடத்தைப் பெரியார் ஒப்புக்கொண்டமை புரியும். தமது வர்க்க, வருண,சாதி, பால் வரையறையை அவர் மறந்ததில்லை, மறைத்ததுமில்லை (ப.45)' என்று சொல்வது முக்கியமானது. ஆனால் நமது சூழலில் எவ்வாறு ஒவ்வொருவரும் தமக்குத் தெரியாத/அறிந்திராத விடயங்களில் கருத்துக்கூறுவதும், தம்மைப் புனிதர்களாக மாற்றி இவ்வாறான குழுக்களுக்கு அறிவுரை கூறுவதையும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்க்கலாம்.


இதற்கு இன்னொரு உதாரணமாய் இன்னொரு நூலை/உரையாடலை சொல்லலாம். அது அயோத்திதாசருக்கும் சிங்காரவேலருக்கும் 'தமிழன்' இதழில் நடந்த உரையாடலாகும். இதை 'அயோத்திதாசரும் சிங்காரவேலரும், நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம்; ‍ வெளிவராத விவாதங்கள்' என்று ஸ்டாலின் ராஜாங்கம் தொகுத்த நூலில் காணலாம் ('கயல்கவின்' வெளியீடு). 1899 இல் தமிழ்ச்சூழலில் மீண்டும் பெளத்தம் நுழையத்தொடங்குகின்றது. 'கர்னல்' ஆல்காட், அநகாரிக தர்மபாலா தலைமையில் இது ஏற்படுகின்றது. அயோத்திதாசர் சாக்கைய புத்தசங்கத்தையும், சிங்காரவேலர் மகாபோதி புத்தசங்கத்தையும் இருவேறு சங்கங்களாக நடத்துகின்றனர்.


இந்த இரண்டு சங்கங்களின் இடையிலான வேறுபாட்டுக்கு அயோத்திதாசர் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டே மகாபோதி தங்களை உயர்ந்தவராகக் காட்டிக்கொண்டு 'காட்டுமிராண்டிகளாக' இருக்கும் தலித்துக்களை நல்ல மனிதர்களாக மாற்றபோகின்றோம் என்ற கருத்துக்களோடு இருப்பதெனச் சுட்டிக்காட்டுகின்றார். சிங்காரவேலர் மகாபோதி சங்கத்தில் இருக்கும் ஒரு சிலரின் இந்தத் தவறான கருத்துக்களை முன்வைத்து இப்படி கருதிக்கொள்ளல் தவறு, நாமெல்லோரும் ஒருகாலகட்டத்தில் ஒன்றாக இயங்கி பெற்றும்/கொடுத்தும் கொண்டவர்களெனச் சுட்டிக்காட்டி அந்த உரையாடல் நீள்கின்றது.


இந்த உரையாடலில் இருந்து இரண்டு விடயங்களை உடனேயே எடுத்துக்கொள்ளலாம் போலத் தோன்றியது. சாக்கைய சங்கம் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தலித்துக்களாகிய 'எங்களுக்கு கற்றுத்தர விரும்பும், உங்கள் உயர்ந்த மனோநிலையை விட்டு முதலில் வாருங்கள்' எனத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றது. மற்றது அயோத்திதாசரும் சிங்காரவேலரும் ஒருவரையொருவர் தனிப்பட்ட‌ வசையாகத் திட்டாமல், மிக நிதானமாக உரையாடிக் கொண்டிருப்பதையும், சிங்காரவேலரின் கருத்தை மறுத்தாலும் பண்டிதர் தனது 'தமிழன்' இதழிலேயே இந்த உரையாடலை நிகழ்த்தக் களம் கொடுத்திருக்கின்றார் என்பதுமாகும். விவாதங்கள் எப்படி மோசமாகப் போகும் என்பதற்கு ஆறுமுகநாவலர் வள்ளலாருடன் செய்த அருட்பா X மருட்பா விவாதம் நல்லதொரு உதாரணமாகும்.


இதே காலகட்டத்திற்கு அண்மையாகத்தான் இந்த 'உயர்நிலையாக்கம்' செய்யும் முயற்சியில் பாரதியார் தலித் பிள்ளைக்கு பூணூல் அணிந்து பார்த்ததையும் நினைவுகொள்ளலாம். அன்று அயோத்திதாசரை பாரதியார் ஊன்றி வாசித்திருந்தால் அல்லது தலித் மக்களின் மனோவுணர்வுகள் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் பாரதியார் இந்த விடயத்தை வேறுவிதமாக அணுகியிருக்கக்கூடும்.


எல்லா அறிவார்ந்த மனிதர்களும் சில விடயங்களில் மேலோங்கி இருப்பதைப்போல வேறு சில விடயங்களில் தவறுகளை/சரிவுகளைக் காணவும் கூடும். அதற்குத் தப்பாதவர் எவருமில்லை என்றே சொல்லலாம். காந்தி ஒரு மகாத்மாக்கப்பட்டவர் ஆயினும், அவர் தென்னாபிரிக்காவில் இருந்தபோது கறுப்பினமக்கள் மீது ஒரு இனவாதியாக கருத்துச் சொன்னவர் உட்பட, அம்பேத்கார் முன்வைத்த பூனா இரட்டைவாரி வாக்குரிமைத் திட்டத்தை நிராகரித்தவரை பல சரிவுகள் 'மகாத்மா' காந்திக்கும் இருக்கின்றது. இதன் மூலம் காந்தி முற்றாக நிராகரிக்கப்படவேண்டியவல்ல‌ என்று சொல்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே காந்தியின் இந்தத் தவறுகளும் நேர்மையாகச் சுட்டிக்காட்டப்படுவதும் அவசியமானது.


அவ்வாறே அயோத்திதாச பண்டிதரின் முக்கியத்துவத்தை விதந்துரைக்கப்படும்போது அவர் அருந்ததிய மக்கள் மீது கூறிய கருத்துக்களும் விமர்சிக்கப்படவேண்டியவையேதான். இவ்வாறான எதிர்மறை விடயங்கள் சுட்டிக்காட்டப்படும்போதே அவர்கள் இன்னும் மனிதத்தன்மையாகின்றார்கள். இதன்மூலமே அவர்களைத் திருவுருவாக்காமல் அவர்களை வழிபடுபவர்களிடமிருந்து காப்பாற்றி அடுத்த காலகட்டத்துக்கும் நாம் அவர்களை எடுத்துச் செல்லமுடியும்.

......................................

(Jun 12, 2020)

La Red Avispa ( Wasp Network)

Wednesday, August 12, 2020

 கியூபாப் புரட்சியின் பின் ஃபிடல் காஸ்ரோவை அமெரிக்கா கொலை செய்த முயற்சிகள் நூற்றுக்கணக்கானவை. அதேவேளை அமெரிக்க வேறுவழிகளில் கியூபாவுக்குள் நுழைய முயன்றும் கொண்டிருந்தது. Wasp Network  அமெரிக்காவும் கியூபாவும் 90களில் தங்களுக்குள் செய்த 'திருவிளையாடல்'களின் ஒருமுகத்தைக் காட்டுகின்றது. 


சோவியத்து ஒன்றியத்தின் உடைவின்பின் கியூபாவின் பொருளாதாரம்  சரிந்துகொண்டிருந்தபோது,முற்று முழுதாகச் சுற்றுலாத் துறையில் கியூபா தங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே அமெரிக்க அதன் சுற்றுலாத் துறையில் கை வைக்கத் தொடங்கியது. ஒருபக்கம் அமெரிக்காவிலிருந்த கியூபன்களை ஆட்சியைக் கவிழ்க்க உசிப்பேற்றியதுபோல, கியூபாவிலிருக்கும் ஹொட்டலுக்கும் குண்டுகளை வைக்க அவர்களைக் கொண்டு முயற்சிக்கின்றது.  1997இல் கியூபாவின் ஹொட்டல் ஒன்றில் இப்படிக் குண்டு வெடித்தும் இருக்கிறது. இவ்வாறு அமெரிக்க கியூபாவுக்குள் உள்நுழைய முயற்சித்தபோது, கியூபாவும் அமெரிக்காவிற்குள் ஊடுருவி உளவுபார்க்கத் தொடங்கியது.


இந்தப் படம் அவ்வாறு கியூபா, அமெரிக்காவுக்குள் நுழையவிட்ட உளவாளிகளின் கதையை முக்கியப்படுத்துகின்றது. அவர்களின் மூலமே கியூபாவில் நடக்க இருந்த பல்வேறு  தாக்குதல் முயற்சிகள் தடுக்கப்படுகின்றன. அதேசமயம் ஒருமுறை கியூபா, FBIயை தங்கள் நாட்டுக்குள் அழைத்து இவ்வாறான விடயங்கள் அமெரிக்க மண்ணில் தமக்கெதிராக நடந்துகொண்டிருக்கின்றன என விபரமாய் தகவல்/சாட்சியங்களோடு முன்வைக்கின்றது. FBI சும்மாவிடுமா?  தங்கள் நாட்டுக்குள் நுழைந்த கியூப உளவாளிகளை வேட்டையாடத் தொடங்குகின்றது. இறுதியில் பலர் பிடிபடுகின்றனர். பிடிபட்டவர்கள் கியூபாவிற்கு விசுவாசமாக இருந்து, கொடுக்கப்பட்ட 15 வருடங்களுக்கு மேலான தண்டனைகளை அனுபவிக்கின்றனர்.


90களில் இவ்வாறு நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு  எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். 1998இல் 'Cuban/Miami Five' என்ற வழக்கு பிரபல்யமான ஒன்று. முதலில் கியூபா இதை மறுத்தாலும்  தாங்கள் அமெரிக்காவையோ அல்லது FBIயையோ உளவு பார்க்க இவர்களை அனுப்பவில்லை, தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கியூப குழுக்களை உளவுபார்க்கத்தான் அனுப்பினோம் என கியூபா பின்னர் 2001 இல் அதை ஒப்புக்கொண்டது. இத்திரைப்படத்தில் காஸ்ரோவிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்ட ஒரு சிறு காணொளியும் இணைக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா கியூபா உள்ளிட்ட எத்தனையோ நாடுகளில் உளவுபார்க்க ஆட்களை அனுப்பும்போது நாங்கள் செய்வதும் நியாயமென உணர்ச்சிபூர்வமாக காஸ்ரோ அதில் பேசியிருப்பார். 


நிறையச் சம்பவங்களை சொல்லவேண்டும் என்ற எத்தனிப்பில் இந்தத் திரைப்படம், சிறந்த நடிகர்களை கொண்டிருந்தாலும் நம் உணர்வுகளுக்கு அவ்வளவு நெருக்கமாய் வரவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். எனினும் உளவாளிகளுக்கும் ஒரு வாழ்க்கையிருக்கும், உளவின் நிமித்தம் எத்தனையோ விடயங்களை இழக்கவேண்டியிருக்கும் என்பதற்காக இதைப் பார்க்கலாம்.


கியூபாவிலிருந்து  கிளைடரை எடுத்துக்கொண்டு ஒருவர் அமெரிக்காவுக்குப் பறந்துவிடும் ஒரு காட்சி இதில் வரும். அவர் கியூப உளவாளியாகத்தான் அங்கு அனுப்பப்படுகின்றார் என்றாலும் அவரின் மனைவி, பிள்ளைக்குக் கூட இந்தச் செய்தி தெரியாது வைக்கப்பட்டிருக்கும். இதன் நிமித்தம் அவரின் மனைவி/பிள்ளை 'துரோகி'யாக கியூப மக்களால் வெறுக்கப்படுவார்கள். பிறகு அந்தக் குடும்பம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு உளவாளியோடு வாழத்தொடங்கினாலும், கொஞ்சக் காலத்தில் அந்த ஆணை  FBI பிடித்துவிட திரும்பவும் இந்தக் குடும்பம் அநாதரவாகத் தனித்துவிடப்படும். இவ்வாறாக உளவாளிகளுக்கு அப்பாலும் பலரின் வாழ்க்கை உளவின் நிமித்தம் பாதிக்கப்படுகின்றது என்பதை இந்தத் திரைப்படம் காட்டுவது முக்கியமானது. 


அதிலும் இப்படி உளவாளியாக வரும் இன்னொருவர் அமெரிக்காவில் ஒரு பெண்ணைத் திருமணம் கூடச் செய்துவிடுவார். அவர் கியூபாவுக்கு தன் வேலை முடிந்துபோனதன் பிறகே இந்தப் பெண்ணுக்கு அவர் ஒரு உளவாளி என்பதே தெரியவரும். இப்படி ஒரு சம்பவம் நடந்து அந்தப் பெண் கியூபநாட்டுக்கு எதிராக வழக்குக் கூடப் போட்டிருக்கின்றார். இதன் நிமித்தம், தீர்ப்பில் கொடுக்கவேண்டும் எனச் சொல்லப்பட்ட மில்லியன் நஷ்டஈட்டின் ஒரு பகுதியை அந்தப் பெண்ணுக்கு கியூபா  வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

....................

(Jun 22, 2020)