கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஹேமா அக்கா

Wednesday, December 24, 2008

'ஐயோ, ஹேமா அக்கா கிண‌த்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று க‌த்திக்கொண்டு நாங்க‌ள் கிண‌ற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்.

பின்னேர‌ம் நான்கு ம‌ணியிருக்கும். வெயிலில் குளித்த‌ப‌டி விளையாடிக்கொண்டிருந்த‌போதுதான் ஹேமா அக்கா கிண‌ற்றுக்குள்ளை குதிப்ப‌தைப் பார்த்தோம். ம‌லைக‌ளும் ந‌திக‌ளுமில்லாத‌ யாழ்ப்பாண‌த்தில் கிண‌றுக‌ள் தான் நீர் சார்ந்த‌ தேவைக‌ளுக்கு அமுத‌சுர‌பி. இந்திய‌ன் ஆமி வ‌ந்த‌கால‌த்திலை கூட‌, இப்ப‌டி அள்ள‌ அள்ள‌க்குறையாத‌ ந‌ல்ல த‌ண்ணியும், தார‌ள‌மாய் ல‌க்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன‌ ச‌னிய‌னுக்கு நீங்க‌ள் ச‌ண்டை பிடிக்கிறிய‌ள் என்டொரு ஆமிக்கார‌ன் ச‌ன‌த்தை செக்பொயின்றில் வைத்து ப‌ரிசோதித்துப் பார்க்கும்போது கேட்ட‌தாயும் ஒரு க‌தையிருந்த‌து. அவ‌ன் அப்படிகேட்ட‌திலையும் பிழையில்லைத்தான். ந‌ல்ல‌ தோட்ட‌க்காணிக‌ள், நிறைய‌ ப‌னைம‌ர‌ங்க‌ள், ஆடு மாடுக‌ள் என்று எங்க‌டை ஊரிலை ச‌ன‌ங்க‌ள் இருந்த‌போது அவ‌னுக்கு அப்ப‌டித் தோன்றிய‌தில் பிழையுமில்லை.

நாங்க‌ள் க‌த்து க‌த்தென்று க‌த்த‌ அண்டை அய‌லிலிருந்த‌ ச‌ன‌மெல்லாம் கிண‌ற்ற‌டியில் கூடிவிட்ட‌து. விழுந்த‌ கிண‌று ஒரு ப‌ங்குக்கிண‌று. ஆனால் ப‌ங்கிருக்கிற‌வைய‌ள், இல்லாத‌வைய‌ள் என்டு ஊரிலையிருக்கிற‌ எல்லாச் ச‌ன‌மும் அதைத்தான் பாவிக்கிறவையள். எங்க‌டை ஊர் மண், ச‌ன‌ம் சாதி பார்க்கிற‌ மாதிரி வ‌ஞ்ச‌ம் எதுவும் செய்த‌தில்லை. யார் தோண்டினாலும் ந‌ல்ல‌ த‌ண்ணியைத் த‌ந்துகொண்டிருந்த‌து. இல‌ங்கை ஆமியின் ஒபரேஷ‌ன் லிப‌ரேச‌னோடு தொட‌ங்கிய‌ பொம்ம‌ர‌டியிலிருந்தும் ப‌லாலியிலிருந்தும், காங்கேச‌ந்துறையிலிருந்தும் அடிக்கின்ற‌ ஷெல்ல‌டியிலிருந்தும் த‌ப்புவ‌த‌ற்கென‌ நானும் அம்மாவும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் எங்க‌டை வீட்டு செவ்விளநீர் ம‌ர‌த்தடிப் ப‌க்க‌மாய் வெட்ட‌த் தொட‌ங்கிய‌ ப‌ங்க‌ருக்குள்ளேயே ஆற‌டி வ‌ர‌முன்ன‌ரே தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்ந்திருக்கின்ற‌து. டொங்கு டொங்கு என்று அலவாங்கு போட‌ உறுதியாயிருக்கும் சுண்ணாம்புக் க‌ல்லுக்குள்ளிலிருந்து எப்ப‌டித்தான் இப்ப‌டி ந‌ல்ல‌ சுவையான‌ த‌ண்ணீர் வருகின்ற‌தென்ப‌து என‌க்கும் அந்த‌ வ‌ய‌தில் சரியான வியப்பாய்த்தானிருக்கும். ஹேமாக்கா விழுந்த‌ கிண‌று த‌ண்ணிய‌ள்ளுகின்ற‌ கிண‌று என்டப‌டியால் அந்த‌ள‌வு ஆழ்ப்ப‌மில்லை. ஆன‌ப‌டியால் த‌ப்பிவிட்டா. இப்போ யோசிக்கும்போது ஹேமாக்கா தான் உயிரோடும் இருக்கோனும் ஆனால் அதேச‌ம‌ய‌ம் த‌ன‌து எதிர்ப்பையும் காட்ட‌வேண்டுமென‌ ச‌ம‌யோசித‌மாய் யோசித்துத்தான் இந்த‌க்கிண‌ற்றுக்குள்ளை குதித்திருப்பா போல‌... இல்லை, த‌ன்ரை உயிரை மாய்த்துக்கொள்ள‌ வேண்டும் என்று நினைத்திருந்தால் அவான்ரை வீட்டுக்கு இர‌ண்டு வீடுக‌ள் தாண்டிக்கிட‌ந்த‌ ஆழ்ப்பமான‌ கிண‌த்துக்குள்ளையெல்லோ குதித்திருக்க‌வேண்டும். அந்த‌க்கிண‌த்துக்குள்ளை குதித்தால் ச‌ன‌ம் உயிரோடு த‌ப்ப‌முடியாத‌ள‌வுக்கு அந்த‌ மாதிரி ஆழ்பப‌மாயும், அடியில் நிறைய‌ப் பாசியுமாயும் அது இருந்தது.

'ஹேமாக்கா வெளியே வாங்கோ, வெளியே வாங்கோ' என்டு நாங்க‌ள் கிண‌த்துக்க‌ட்டைச் சுற்றி குஞ்சைப் ப‌ருந்திட்டைப் ப‌றிகொடுத்த கோழி மாதிரி க‌த்திக்கொண்டிருந்தோம். ஹேமாக்கா என்ன‌ க‌ட் வும‌னா இல்லை சுப்ப‌ர் வும‌னா... சும்மா அப்ப‌டியே விர் என்று கிண‌த்துக்குள்ளையிலிருந்து ப‌ற‌ந்துவ‌ர‌. யாரோ ஒராள் ந‌ல்ல‌ மொத்த‌மான‌ க‌யிறையெடுத்து கிண‌த்துக்குள்ளை விட‌ அவா அதைப் பிடித்து ஏறி வ‌ர‌மாட்டேனென‌ அட‌ம்பிடித்துக்கொண்டிருந்தா. அவாவை எப்ப‌டி வெளியே எடுக்கிற‌து என்டு எல்லோருக்கும் பெரிய‌ பிர‌ச்சினையாய்ப் போயிட்டுது. அதைவிட‌ ப‌ர‌ப‌ர‌ப்பாய் வ‌ந்த‌ ச‌ன‌மெல்லாம் ஏன் இந்த‌ப் பெட்டை கிண‌த்துக்குள்ளை குதித்தாள், அத‌ற்கான‌ கார‌ண‌ம் என்ன‌வென்டு ஆராய‌த்தொட‌ங்கிவிட்ட‌து. பொழுதும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் இருள‌த்தொட‌ங்கிவிட்ட‌து. ஹேமாக்காவும் கீழே விட்ட‌ க‌யிற்றைப் பிடித்துக்கொண்டு மேலேயேறி வ‌ர‌மாட்டென‌ அட‌ம்பிடித்துக்கொண்டு உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டிருக்கிறா. யாராவ‌து பெடிய‌னை கிண‌த்துக்குள்ளை இற‌க்கி அவ‌னைப் பிடித்துக்கொண்டு ஹேமாவாக்காவை தூக்க‌லாமெண்டாலும், ஹேமாக்கா ஒரு கும‌ர்ப்பெட்டையாயிருப்ப‌து 'க‌ற்பு' சார்ந்த‌ பிர‌ச்சினையாக‌வும் ச‌ன‌த்துக்கு இருக்கிற‌து. வ‌ய‌துபோன‌ கிழ‌டுக‌ளை இற‌க்க‌லாந்தான். ஆனால் ஹேமாக்காவின் பார‌த்தை த‌ங்க‌டை தோளிலை தாங்கிக்கொண்டு க‌யிற்றைப் பிடித்துக்கொண்டு ஏறுவ‌த‌ற்குள் கிழ‌டுக‌ளுக்கு சீவ‌ன் இருக்குமா என்ப‌தும் கேள்விக்குரிய‌துதான். ஒரு த‌ற்கொலை முய‌ற்சி த‌ப்பித்துவிட்ட‌து என்ற நிம்ம‌திப்பெருமூச்சை தெரிந்தே செய்கின்ற‌ ஒரு கொலையில் ப‌ரீட்சித்துப் பார்க்க‌ ச‌ன‌த்துக்கு அவ்வளவாய் உட‌ன்பாடில்லை. என‌வே கிழ‌வ‌ர்க‌ளையும் இற‌க்க‌முடியாது. ஆக‌ இவ்வாறாக‌ ஹேமாக்காவை வெளியே எடுப்ப‌து பெரும் சிக்க‌லாகிவிட்ட‌து. வெளியே நிற்கிற‌ ச‌ன‌ம் என்ன‌ செய்வ‌து என்று கையைப் பிசைந்துகொண்டிருப்ப‌தைப் பார்த்துப் பார்த்து ச‌லித்தே ஹேமாக்கா தான் இந்த‌க்கிண‌த்துக்குள்ளை குதிக்கமுன்ன‌ர் த‌ன் முடிவை ஆழ‌ ம‌றுப‌ரிசீல‌னை செய்திருக்க‌லாம் என்டு கூட நினைத்திருக்க‌லாம்.

க‌டைசியாய், இர‌ண்டுப‌க்க‌மும் கையிருக்கிற‌ க‌திரையிலை நான்கு க‌யிறைக் க‌ட்டி ஒரு பெட்டியை இற‌க்கிற‌மாதிரித்தான் க‌திரையை இற‌க்கிச்சின‌ம். ஹேமாக்கா க‌திரையிருந்து நாலு க‌யிற்றில் இர‌ண்டு க‌யிற்றைக் கையிர‌ண்டாலும் பிடிக்க‌, வெளியிலிருந்து ச‌ன‌ம் தூக்க‌த்தொட‌ங்கிச்சினம். சூர‌ன்போரிலை சூர‌னையும் முருகையும் அங்கால் ப‌க்க‌ம் இங்கால‌ ப‌க்க‌ம் ஆட்டுகின்ற‌ மாதிரி கிண‌த்தின்றை உட்சுவ‌ரிலை அடிப‌ட்டு அடிப‌ட்டு ஹேமாக்கா வெளியே வ‌ந்திருந்தா. அவாவைப் பார்க்க‌ச் ச‌ரியாய்ப் பாவ‌மாயிருந்த‌து. ம‌ழைக்கால‌த்திலை ந‌னைகின்ற‌ கோழிக்குஞ்சுக‌ள் மாதிரி பாவாடை ச‌ட்டை எல்லாம் ந‌னைந்து கூனிப்போயிருந்தா. அத்தோடு ச‌ன‌மெல்லாம் ஒரே மாதிரியாய்ப் பார்த்த‌ பார்வை அவாவையின்னும் கூனிக்குறுக‌ச் செய்திருக்கும்.

2.
ஹேமாக்கா கிண‌ற்றில் விழுந்த‌ற்கான‌ கார‌ண‌த்தை ச‌ன‌ம் அல‌சிப் பிழிவ‌த‌ற்கு முன்ன‌ரே என‌க்கு அத‌ற்கான‌ கார‌ண‌ம் தெரிந்திருந்த‌து. உண்மையிலேயே ச‌ன‌ம் ஹேமாக்காவைக் குற்ற‌வாளிக்கூண்டில் ஏற்றினால் நானுமோர் சாட்சியாக‌ ஏற்த்தான் வேண்டியிருக்கும். ஆனால் அவ்வாறான பொழுதில் மவுனமாய் இருந்திருப்பேனே த‌விர‌ ஹேமாக்காவிற்கு எதிராய் எதுவும் சொல்லியிருக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொல்வேன். எனெனில் ஹேமாக்கா அவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வா; என‌க்கும் அவாவை எங்க‌டை அமமாவிற்கு பிற‌கு அப்ப‌டிப் பிடிக்கும்.

எங்க‌டை வீட்டையும், ஊரிலையிலிருந்த‌ ப‌ள்ளிக்கூட‌த்தையும் பிரிப்ப‌து ஒரு ரோட்டுத்தான். க‌ல்லு நிர‌ப்பி தார் ஊற்றி ச‌ம‌த‌ள‌மாய் அமைப்ப‌துதான் தெருவென்றால், இதைத் தெருவென்றே கூற‌முடியாது. ஒரு வெள்ள‌வாய்க்காலாய் இருந்து கால‌ப்போக்கில் ஒரு ஒழுங்கையாகிவிட்ட‌து என்றுதான் சொல்ல‌வேண்டும். ம‌ழை பெய்ந்து வெள்ள‌ம் ஓடுகின்ற‌ வேலையில் வாழைக்குற்றியில் வ‌ள்ள‌ம் விடுவ‌த‌ற்கு மிக‌ உக‌ந்த‌ இட‌மென‌ச் சொல்ல‌லே இன்னும் சால‌ச் சிற‌ந்த‌து. அவ்வாறு எங்க‌ள் வீடுக‌ளையும், ப‌ள்ளிகூட‌த்தையும் பிரிக்கின்ற‌ ஒழுங்கையினூடு நீங்க‌ள் செல்வீர்க‌ளாயின் 'ட‌'வ‌டிவில் நீங்க‌ள் வ‌ல‌து கைப்ப‌க்க‌மாய் திரும்பினால் ஒரு ஹொஸ்ட‌லைக் காண்பீர்க‌ள். அங்கேதான் தூர‌ இட‌ங்க‌ளிலிருந்து ப‌டிக்கின்ற‌ பெடிய‌ன்க‌ள் ப‌டித்துக்கொண்டிருப்பார்க‌ள். ஹொஸ்ட‌லிலிருந்து பின்ப‌க்க‌மாய் ஒழுங்கைக்குள் நுழைவதற்கு இருக்கும் கேற் எப்ப‌வும் பூட்டிய‌ப‌டியே இருக்கும். என‌வே ஹெஸ்ட‌லுக்குப் போவ‌த‌ற்கு அல்ல‌து அங்கிருந்து வெளியே வ‌ருவ‌த‌ற்கோ நீங்க‌ள் உய‌ர‌ம் பாய‌த‌லில் தேர்ச்சி பெற்ற‌வ‌ராக‌ இருக்க‌வேண்டும். எனெனியில் ம‌திலேறிக் குதிக்க‌வேண்டும். என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள் ஹொஸ்ட‌லில் ப‌ட‌ம் போடும்போது, ப‌ட‌ம் தொட‌ங்கிய‌பின் இருட்டோடு இருட்டாய் உள்ளே மதிலேறிக்குதித்துப் போய்விடுவோம். ப‌ட‌ம் தொட‌ங்க‌ப்போகின்ற‌தென்றால் ஹொஸ்ட‌லில் இருக்கும் அண்ணாமார்க‌ள் விசில‌டிப்பார்க‌ள். நாங்க‌ள் முன்னேறிப்பாய்வ‌த‌ற்குத் த‌யாராய் ஹொஸ்ட‌ல் ம‌தில‌டிக்க‌டியில் நின்றுகொண்டு இருப்போம். ஆனால் நாங்கள் சிறுவர்களாயிருந்ததால் மதிலில் ஏற்றிவிடுவதற்கு யாரினதோ உதவி தேவையாகவிருக்கும். இவ்வாறாக‌ நிறைய‌ப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்திருக்கின்றோம். சில‌ அண்ணாக்களின் பிற‌ந்த‌நாள் கொண்டாடங்க‌ளில் க‌ல‌ந்துகொண்டிருக்கின்றோம்.

ஹொஸ்ட‌லிருக்கும் பெடிய‌ங்க‌ளுக்கு சில‌வேளைக‌ளில் க‌ர‌ண்டில்லாவிட்டால் குளிக்க‌த் த‌ண்ணியில்லாது போய்விடும். அப்போதும‌டடும் பின்ப‌க்க‌ கேற் திற‌க்க‌ப்ப‌ட்டு எங்க‌ள் வீட்டுக்கிண‌றுக‌ளில் குளிக்க‌ ஹொஸ்ட‌ல் நிர்வாக‌த்தால் அனும‌திக்க‌ப்ப‌டுவார்க‌ள். ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ள் குளிக்க‌ வாறாங்க‌ள் என்டால், எங்க‌டை ஊரும் அல்லோல‌க‌ல்லோல‌ப்ப‌ட்டுவிடும். இன்னும் குறிப்பாக‌ச் சொல்ல‌ப்போனால், ஊரிலையிருக்கிற‌ கும‌ர்ப்பெட்டைய‌ளுக்குத்தான் உள்ளூற‌ ம‌கிழ்ச்சி த‌தும்பியோடியபடியிருக்கும். அதுவ‌ரை வீட்டிலை அம்மாமார் 'பிள்ளை த‌ண்ணிய‌ள்ளிக்கொண்டு வாங்கோ' என்டால் கூட‌ ஓடிப்போய் ஒளித்துக்கொள்ப‌வ‌ர்க‌ள் கூட் ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ள் குளிக்க‌ வாறாங்க‌ள் என்டால் வாளியோடு கிண‌த்த‌டிக்கு அடிக்க‌டி போவதும் வருவதுமாய் இருப்பார்கள். கிண‌த்த‌டியில் விழிக‌ளும், புருவ‌ங்க‌ளும் நிக‌ழ்த்துகின்ற‌ உரையாட‌ல்க‌ளுக்கு காப்பிய‌ங்க‌ளின் சுவை கூட‌ நிக‌ரான‌வையா என்ப‌து ச‌ந்தேக‌ந்தான். ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ளுக்கும் ந‌ன்கு தெரியும், தாங்க‌ள் இர‌க‌சியாய்ப் பெண்க‌ளால் இர‌சிக்க‌ப்ப‌டுகின்றோம் என்று. என‌வே ஹொஸ்ட‌லை விட்டு வ‌ரும்போது ஏதோ பெரிய‌ ஊர்வ‌ல‌ம் வாற‌ மாதிரி க‌த்திக் குழறி த‌ங்க‌ளை வ‌ர‌வை ப‌றைசாற்றிக்கொண்டே வ‌ருவார்க‌ள். இன்னுஞ்சில‌ர் உற்சாக‌த்தின் மிகுதியில் சேர்ட் எல்லாம் க‌ழ‌ற்றி கையில் வைத்த‌ப‌டி த‌ம‌து 'ஆண்மையை' காட்டமுய‌ற்சிப்பார்க‌ள். அந்த‌ நேர‌த்தில் எத்த‌னையோ வீடுக‌ளின் வாச‌ல்க‌ளில் இருந்து வெளிவ‌ந்த‌ பெருமூச்சுக்களின் வெப்ப‌த்தில் அடுப்புக‌ளில் தீ கூட‌ ப‌ற்றியெரிந்திருக்க‌லாம்.

இப்ப‌டி குளிக்க‌ வ‌ந்த‌ பொழுதிலோ அல்ல‌து வேறு ச‌ந்த‌ர்ப்ப‌த்திலோதான் ஹேமாக்காவிற்கும் வ‌சீக‌ர‌ன் அண்ணாவுக்கும் நேச‌ம் முகிழ்ந்திருக்க‌வேண்டும். அவ‌ர்க‌ளுக்கிடையிலான‌ ஊடாட்ட்ட‌ங்க‌ளுக்கு நானொரு தூதுவ‌னாக‌ மாற‌வேண்டியிருந்த‌து. க‌டித‌ப்ப‌ரிமாற்ற‌ங்க‌ள், உட‌ன‌டிச் செய்திக‌ள் அல்ல‌து திட்ட‌ மாற்ற‌ங்க‌ள் என்று ப‌ல்வேறு ப‌ரிணாங்க‌ளில் ஊழிய‌ம் செய்து அவ‌ர்க‌ளின் காத‌லுக்கு நானொரு த‌விர்க்க‌முடியாத‌ தீவிர‌ தொண்ட‌னானேன். இவ்வாறான‌ ஊழிய‌ங்க‌ளுக்கு ஹேமாக்கா த‌ங்க‌டை வீட்டில் நின்ற‌ மரங்களிலிருந்து விளாம்ப‌ழ‌ங்க‌ள், தோட‌ம்ப‌ழ‌ங்க‌ளையும், ஆல‌ம‌ர‌த்த‌டிச் ச‌ந்தியிலிருந்த‌ முருக‌ன் விலாஸில் எட்னா, க‌ண்டோஸ் வ‌கையான‌ சொக்கிலேட்டுக்க‌ளையும், வாய்ப்ப‌ன்க‌ளையும் போண்டாக்க‌ளையும் ச‌ன்மான‌மாக‌ அளித்து த‌ன‌து அன்பையும் ம‌திப்பையும் வெளிப்ப‌டுத்தியிருந்திருக்கிறார்.

ஒருநாள் இப்ப‌டித்தான் ஹேமாக்காவும், வ‌சியண்ணாவும் ஹெஸ்ட‌ல் ம‌திலடியில் ச‌ந்திப்ப‌தாய் ஏற்பாடு. வ‌ழ‌க்க‌ம்போல‌ நிக‌ழ்வ‌துபோல‌ ஹேமாக்கா என்னை ம‌திலால் தூக்கிப்பிடிக்க‌ நான் விசில‌டித்து வ‌சிய‌ண்ணாவுக்கு சிக்ன‌ல் அனுப்பினேன். இவ்வாறான ச‌ந்திப்புக்க‌ள் ந‌ல்லாய்ப் பொழுதுப‌ட்டு இர‌வு மூடுகின்ற‌ ஏழும‌ணிய‌ள‌வில்தான் ந‌ட‌க்கும். அப்போதுதான் ஒழுங்கைக்குள் ச‌ன‌ ந‌ட‌மாட்ட‌ம் குறைவாயிருக்கும். அத்தோடு ச‌ன‌ம் க‌ண்டாலும் யாரென்று முக‌ம் பார்க்காது த‌ப்பியோடக்கூடிய‌தாக‌வும் இருக்கும். நான் ம‌திலுக்குள்ளால் எட்டிப்பார்த்து வ‌சிய‌ண்ணா வாறாரா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். குர‌லை வைத்துத்தான் அடையாள‌ம் காண‌க்கூடிய‌ள‌வுக்கு அன்று ந‌ல்ல‌ இருட்டு. என்னுடை விசில் ச‌த்த‌ம் கேட்டு வ‌ந்த‌ வ‌சிய‌ண்ண‌ என்ரை கையைப் பிடித்தார். ஆனால் இப்ப‌டி ஒருநாளும் இறுக்க‌மாய்ப் பிடிப்ப‌தில்லையே என்று 'ஆ... கை நோகின்ற‌தென்று' நான் சொல்ல‌, 'யாரடா நீ உன‌க்கென‌ன‌ இந்த‌ நேர‌த்திலை இங்கே வேலை?' என்று ஒரு குர‌ல் கேட்ட‌து. இது நிச்ச‌யமாய் வ‌சிய‌ண்ணாவின் குர‌லில்லை. 'ஐயோ இது ஹொஸ்ட‌ல் வோட‌னின்ரை குர‌லெல்லோ' என்டு என‌க்கு உட‌ம்பு ந‌டுங்க‌த் தொட‌ங்கிவிட்ட‌து. த‌ப்பியோட‌லாம் என்டால் ம‌னுச‌ன் கையையும் விடுகிற‌தாகவும் இல்லை. அங்காலை ஹேமாக்கா என்ரை காலைத் தூக்குபிடித்துக்கொண்டு நிற்கிறா. 'எத‌ற்க‌டா இப்ப‌ விசில‌டித்தாய்?' என்டு அந்த‌ ம‌னுச‌ன் உறுமுகிற‌து. ப‌க‌ல் வேளைக‌ளில் நாங்க‌ள் ப‌க்க‌த்திலையிருக்கிற‌ ப‌ற்றைக் காணிக்குள்ளை கிரிக்கெட் விளையாடும்போது ரெனிஸ் போல் சில‌வேளைக‌ளில் ஹொட‌லுக்குள் விழுவ‌துண்டு. அவ்வாறான‌ த‌ருண‌ங்க‌ளில் நாங்க‌ள் ம‌திலுக்கு இங்காலை நின்று ப‌ந்தை எடுத்துத்தாங்கோ என்று க‌த்துவோம். அப்ப‌டியொருத்த‌ரும் எடுத்துத் த‌ர‌ இல்லையெண்டால் நாங்க‌ளாவே ம‌திலேறிக் குதித்து ப‌ந்தை எடுப்போம். அப்ப‌டி இற‌ங்கியெடுக்கும்போது வோட‌னின் க‌ண்ணில்ப‌ட்டால் ப‌ந்து எடுக்க‌வ‌ந்தோம் என்று சொல்லித் த‌ப்பிவிடுவ‌துண்டு. இப்ப‌ வோட‌ன் என்ரை கையைப் பிடித்துக்கொண்டு 'யார‌டா நீ யாறறை மோன‌டா நீ'? என்டு வெருட்ட‌, என‌க்கு எல்லா அறிவும் கெட்டு, 'ரெனிஸ் போல் விழுந்துவிட்ட‌து எடுக்க‌வ‌ந்த‌ன்' என்டு வாய்த‌வ‌றி உள‌றிவிட்டேன். இந்த‌ இருட்டுக்குள்ளை யார்தான் ரெனிஸ் போல் தேட‌ வ‌ருவாங்க‌ள், வேறேதோ விவகார‌ம் ஓடிக்கொண்டிருக்கிற‌து என்டு வோட‌னுக்கு இப்ப‌ ந‌ல்லா விள‌ங்கிட்டுது. ச‌னிய‌ன் பிடித்த‌ ம‌னுச‌ன் என்னை விடுவ‌தாயில்லை. இனியும் இப்ப‌டிக்காரண‌ஞ் கேட்டுக்கொண்டிருந்தால் எல்லாவ‌ற்றையும் போட்டுக் கொடுக்க‌வேண்டிவ‌ரும் என்ற‌நிலையில் ச‌ட்டென்று வோட‌னின் பிடியிலிருந்து ஒரு கையை உத‌றியெடுத்து ந‌ல்லாய் 'நொங்கென்று' அவ‌ற்றை த‌லையில் குட்டினேன். ம‌னுச‌னுக்கு நொந்திருக்க‌வேண்டும்; மற்றக் கையின் பிடியைத் த‌வ‌ற‌விட்டார். நானும் ஹேமாக்காவும் பேய் ஒன்று எங்க‌ளைப் பின் தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌மாதிரி பின்ன‌ங்கால் த‌லையில்பட எங்க‌டை வீடுக‌ளுக்கு ஓடிவ‌ந்து சேர்ந்திருந்தோம்.

எப்ப‌டிப் ப‌த்திர‌மாய் பொத்தி பொத்தி வைத்தாலும் எந்த‌ விஷ‌ய‌ம் என்டாலும் ஒருநாள் வெளியே வ‌ர‌த்தானே செய்யும். அப்ப‌டித்தான் ஒருநாள் ஹேமாக்கா-வ‌சிய‌ண்ணா காத‌லும் ஹேமாக்கா வீட்டுக்கு தெரிய‌வ‌ர. இர‌ண்டு நாளாய் வீட்டில் அறைக்குள் வைத்து ஹேமாக்காவிற்கு செம அடி. அவா பிடிவாத‌மாய் வ‌சிய‌ண்ணாவைத்தான் காத‌லிப்ப‌ன் க‌லியாண‌ங்க‌ட்டுகிற‌ன் என்டு நின்டிருக்கிறா. இர‌ண்டு நாளாய் அறைக்குள்ளையே பூட்டிவைத்திருக்கின‌ம். இனி பிடிவாத‌த்தை விட்டுவிட்டுவாள் என்று நினைத்து மூன்றாம் நாள் வெளியே விட‌த்தான் ஹேமாக்கா இப்ப‌டி கிண‌த்துக்குள்ளை குதித்திருக்கிறா. இப்ப‌ ஹேமாக்காவின் காத‌ல் ஊருல‌க‌த்திற்கு எல்லாம் தெரிய‌வ‌ந்துவிட்ட‌து. இப்ப‌டியாக ஹேமாக்கா-வசியண்ணா விடயத்தில் ஒரு முடிவும் காண‌முடியாது இழுப‌றியாக‌ போன‌போதுதான் இந்திய‌ன் ஆமிப் பிர‌ச்சினை வ‌ந்த‌து. ப‌ள்ளிக்கூட‌மெல்லாம் பூட்ட‌ ஹெஸ்ட‌லிலிருந்த‌ பெடிய‌ங்க‌ளும் த‌ங்க‌ள் த‌ங்க‌ள் ஊருக‌ளுக்குப் போக‌த் தொட‌ங்கிட்டின‌ம். ஹேமாக்காவின் பெற்றோருக்கும் அப்பாடா இந்த‌ப்பிர‌ச்சினை இப்படிச் சுமுக‌மாய் முடிந்துவிட்ட‌தே என்டு பெரிய‌ நிம்ம‌தி. ஊர்ச்ச‌ன‌த்தின் வாய்க‌ளும் இப்போது ஹேமாக்காவின் க‌தையைவிட‌ இந்திய‌ ஆமிப்பிர‌ச்சினையைப் ப‌ற்றித்தான் அதிக‌ம் மென்று துப்பத் தொட‌ங்கிவிட்ட‌து. சண்டை தொடங்கியதால், என‌க்கும் ப‌ள்ளிக்கூட‌ம் இல்லையென்ட‌ப‌டியால் நானும் ஹேமாக்கா வீட்டிலைதான் அதிக‌ம் பொழுதைக் க‌ழிக்கத்தொடங்கினேன். இந்தியன் ஆமிக்கும் புலிக‌ளுக்கும் ச‌ண்டை தொட‌ங்கி எங்க‌டை ஊர்ச் ச‌ன‌மெல்லாம் உண‌வில்லாது ச‌ரியாய்க் க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில். ம‌க்க‌ளைத் த‌ங்க‌ளுக்குள் உள்ளிழுக்க‌வேண்டுமென்றால் அவ்வ‌ப்போது நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்க‌வேண்டும் -உல‌க‌த்திலுள்ள‌ எல்லா அதிகார‌ அர‌சுக‌ளும் நினைப்ப‌துபோல‌- இந்திய‌ன் ஆமியும் த‌ங்க‌டை முகாங்களுக்குச் ச‌ன‌த்தைக்கூப்பிட்டு சாமான்க‌ள் கொடுப்பான‌க்ள். ஒரு வீட்டிலையிலிருந்தும் வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ பெடிய‌ன் பெட்டைக‌ளை இந்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கு அனுப்புவ‌தில்லை; 'எதுவுமே' ந‌ட‌க்கால‌மென்ற‌ ப‌ய‌ந்தான். ஆக‌வே ப‌த்துவ‌ய‌சுக்குள்ளையிருந்த‌ என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள்தான் ஆமிக்கார‌ன் த‌ருகின்ற‌ நிவார‌ண‌த்துக்கு கியூவிலை நிற்ப‌ம். ஒருமுறை ஆமிக்கார‌ன் த‌ன்ரை ஹெல்மெட்டாலை அள்ளிய‌ள்ளி கோதுமை மாவை நிவார‌ணமாகத் தந்த‌பொழுதில்தான், காவ‌லில் நின்ற‌ இன்னொரு ஆமிக்கார‌ன் என்னைக் கூப்பிட்டு ஒரு கூலிங் கிளாஸைத் த‌ந்தான். என‌க்கென்டால் அந்த‌மாதிரிச் ச‌ந்தோச‌ம். அவ்வ‌ள‌வு பேர் கியூவிலை நிற்கேக்கை என‌க்கு ம‌ட்டும் ஆமிக்கார‌ன் கூலிங்கிளாஸ் தாறானென்டால் நான ஏதோ வித்தியாச‌மானவனாய்த்தானே இருக்க‌வேண்டும். நான் ஊருக்குள்ளை ஓடிப்போய் ஒவ்வொர் வீட்டிலையும் ஏறியிற‌ங்கி ஆமிக்கார‌ன் என‌க்கு 'கூல்டிங்' கிளாஸ் த‌ந்துவிட்டான் என்று பெருமைய‌டித்துக்கொண்டிருந்தேன். 'அது 'கூல்டிங்' கிளாஸ் இல்லைய‌டா கூலிங் கிளாஸ்' என்று ஹேமாக்கா தான் திருத்தினா. 'உங்க‌ளுக்கு ஒரு கூல்டிங் கிளாஸ் கிடைக்க‌வில்லை என்டு பொறாமை அதுதான் நான் சொல்வ‌தை நீங்க‌ள் பிழையெண்டிறிய‌ள்' என்று நான் சொல்ல‌ ஹேமா சிரித்துக்கொண்டிருந்தா. ஹேமாக்கா சிரிக்கிற‌து எவ்வ‌ள‌வு அழ‌கு. அவாவின்ரை ப‌ற்க‌ளின் விம்பம் கூலிங் கிளாஸில் தெறிப்ப‌தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் நானும் ஹேமாக்காவும் அவ‌ங்க‌டை வீட்டிலை தனியே இருக்கேக்கே இந்தியன் ஆமிக்கார‌ன்க‌ள் செக்கிங்குக்கு என்டு வ‌ந்தாங்க‌ள். செக்கிங்கில் வ‌ந்த‌ ஆமிக்கார‌ங்க‌ளில் என‌க்கு கூலிங்கிளாஸ் த‌ந்த ஆமிக்கார‌னுமிருந்தான். நான் அப்போதும் அந்த‌ கூலிங்கிளாசை என்னோடுதான் வைத்திருந்தேன். அந்த‌ ஆமிக்கார‌ன், bomb bomb என்டான். எங்கையோ குண்டை ஒளித்துவைத்திருக்கின்றம் என்டு ஐமிச்சத்தில் அவன் தேடுகின்றான் போல‌ என்டு முதலில் நினைத்தேன். No Sir No Bomb என்டு ஹேமாக்கா த‌ன‌க்குத் தெரிந்த‌ ஆங்கில‌த்தில் சொன்னா...ஆமிக்கார‌ன் bomb bomb என்று திருப்பி திருப்பிச் சொல்லிக்கொண்டேயிருந்தான். you bomb என்டான்....ஹேமாக்கா bomb ஒளித்துவைத்திருக்கிறா என்ட‌மாதிரி அவாவோடை மார்பைப் பிடித்தான்....அக்காவிற்கு என்ன செய்வ‌தென்டு திகைப்பு....நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற‌ன் என்டு ஆமிக்காரனுக்கு நினைவுக்கு வ‌ந்திருக்கோனும். you bomb you bomb என்டு சொல்லிக்கொண்டு முன்னாலிருந்த‌ அறைக்குள்ளை ஹேமாக்காவைக் கொண்டு போனான்...நான் விளையாடுகின்ற‌மாதிரி பாவனை செய்துகொண்டு ஓர‌க்கண்ணால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த‌ அறைக்கு உள்ளே கொக்கி போட்டு மூடினால்தான் பூட்ட‌ப்ப‌டும். ஆமிக்கார‌னுக்கு 'செக்கிங்குக்காய்' அடுத்த‌ வீட்டுப் போகும் அவ‌ச‌ர‌மோ அல்ல‌து கொக்கி போட்டு அறையை மூடினால் நான் க‌த்தி சனத்தைக் கூட்டிடுவேனே என்று நினைத்தானோ தெரியாது...மெல்லிய‌தாய் க‌தவைச் சாத்தினான்...அதனால் அறை முழுதாய் மூட்ப்ப‌டாது கொஞ்ச‌ம் நீக்க‌லுட‌ன் திற‌ந்த‌ப‌டியிருந்த‌து. you bomb bomb என்டு ஹேமாக்காவின் ச‌ட்டையைக் க‌ழ‌ற்ற‌ச் சொன்னான். பிற‌கு அக்காவைச் சுவ‌ரோடு அழுத்தியபடி ஆமிக்கார‌னின் பின்புற‌ம் அங்குமிங்குமாய் அசைவ‌தும‌ட்டுமே தெரிந்த‌து. ஆமிக்கார‌ன் 'செக்கிங்' முடித்துப்போன‌போது என‌க்கு அவ‌ன் த‌ந்த‌ கூலிங்கிளாஸ் பிடிக்க‌வில்லை. வீட்டை அதைக் கொண்டுபோய் அம்மம்மா பாக்கு இடிக்கிற‌ க‌ட்டையாலை அதை அடித்து உடைத்தேன்.

இந்திய‌ன் ஆமி வெளிக்கிட‌ வ‌ந்த‌ பிரேம‌தாசாவின் ஆட்சிக்கால‌த்தில் வ‌சிய‌ண்ணா ஒருநாள் எங்க‌டை ஊருக்கு வ‌ந்திருந்தார். எல்லாச் ச‌னிய‌னும் இந்திய‌ன் ஆமிக்கால‌த்தோடு ஒழிந்துவிட்ட‌தென‌ நினைத்த‌ ஹேமாக்காவின் பெற்றோருக்கு வ‌சிய‌ண்ணா த‌ன‌க்கு ஹேமாக்காவைக் க‌லியாண‌ங்க‌ட்டித்த‌ர‌க்கேட்ப‌த‌ற்காய் வ‌ந்திருந்த‌து அதிர்ச்சியாயிருந்த‌து. ஏற்க‌ன‌வே எடுத்த முடிவையே திரும்ப‌வும் சொன்னார்க‌ள். 'ஏலாது' என்டு ஹேமாக்காவின் பெற்றோர் உறுதியாய்ச் சொன்ன‌தோடு, வ‌சிய‌ண்ணா திரும்பி அவ‌ற்றை ஊருக்குப் போய்விட்டார். எல்லாம் சுமுகமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்த‌ ஒருபொழுதில் ஹேமாக்காவைக் காண‌வில்லையென்று ஊரெல்லாம் தேட‌த்தொட‌ங்கியது. பிற‌கு ஹேமாக்கா வ‌சிய‌ண்ணாவோடு சேர்ந்து ஓடிப் போய்விட்டா என்ப‌து எல்லோருக்குந் தெரிய‌வ‌ந்த‌து. 'ஏன் ஹேமாக்கா இங்கேயிருக்காது தூர இட‌த்திற்கு ஓடிப்போன‌வா?' என்டு அம்மாட்டை நான் கேட்ட‌த‌ற்கு, 'சும்மா வாயை மூடிக்கொண்டிரு' என்டுதான் அம்மா அந்த நேரத்திலை சொன்னா. பின்னாட்க‌ளில் அப்ப‌டி ஹேமாககா ஓடிப்போன‌த‌ற்கு வ‌சிய‌ண்ணாவும் ஹேமாக்காவும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற‌ கார‌ண‌த்தை அறிந்தேன். ஊரிலையிருந்து ச‌ன‌ம் கொழும்புக்குப் போய்விட்டு வ‌ருகுகின்ற‌போது ஹேமாக்காவும், வ‌சிய‌ண்ணாவும் கிளிநொச்சிப் ப‌க்க‌மாய் இருக்கின‌ம் என்டு த‌க‌வ‌லை அறிந்து சொல்லிச்சு.. நாள‌டைவில் ஹேமாக்காவை ம‌ற‌க்க‌ வைக்கும்ப‌டி போர் எங்க‌டை ஊர்ப்ப‌க்க‌மாய் திரும்ப‌வும் உக்கிர‌மாக‌த் தொட‌ங்கிய‌து.

4.
95ம் ஆண்டு யாழில் நிக‌ழ்ந்த‌ பெரும் இடம்பெய‌ர்வின்போது எங்க‌ளுக்கு முத‌லில் அடைக்க‌லந்த‌ந்த‌து ஹேமாக்க‌வும் வ‌சிய‌ண்ணாவுந்தான். காட்டையும் குள‌த்தையும் அண்டியிருந்த‌ அவைய‌ளின்றை ம‌ண்ணால் மெழுகிப் பூசியிருந்த‌ வீடு உண்மையிலேயே அந்த‌ நேர‌த்திலே சொர்க்க‌மாய்த்தானிருந்த‌து. சில‌ மாத‌ங்க‌ள் ஹேமாக்கா வீட்டையிருந்துவிட்டு நாங்க‌ள் த‌னியே இன்னொரு இட‌த்திற்குப் போயிருந்தோம். ஆனால் அதிக‌மாய் ஒவ்வொரு பின்னேர‌மும் நான் ஹேமாக்கா வீட்டுப்பக்கமாய் வ‌ந்துபோய்க்கொண்டிருந்தேன். ப‌தின்ம‌ங்க‌ளில் இருந்த‌ ப‌ருவ‌ம். எல்லாவ‌ற்றையும் மூர்க்க‌மாய் நிராக‌ரித்துக்கொண்டு நான் ம‌ட்டும் சொல்வ‌து/செய்வ‌தே ச‌ரியென்று உடும்புப்பிடி பிடித்துக்கொண்டிருந்த‌ கால‌ம‌து. நானும் வ‌சிய‌ண்ணாவும் அடிக்க‌டி அர‌சிய‌ல் பேசி சூடாகிக் கொண்டிருப்போம். அவ‌ருக்கு எங்க‌டை பிர‌ச்சினையில் நிதான‌மாய் இந்தியாவை அணுகியிருக்க‌வேணும் என்ற‌ ஒரு எண்ண‌ம் இருந்த‌து. அதாவ‌து இந்தியாவோடு அணுச‌ர‌ணையாய் இருந்திருந்தால் எங்க‌டை பிர‌ச்சினை எப்ப‌வோ தீர்ந்திருக்குமென்ப‌து அவ‌ருடைய‌ அசைக்க‌முடியாத‌ ந‌ம்பிக்கை. எங்க‌டை இந்த‌ முர‌ண் அர‌சியல் விவாத‌ங்க‌ளை சில‌வேளைகளில் செவிம‌டுக்கிற‌ ஹேமாக்கா, 'உங்க‌ள் இர‌ண்டுபேராலையே ஒரு விச‌ய‌த்துக்கு பொதுவான‌ முடிவுக்கு வ‌ர‌முடியாது இருக்கும்போது எப்ப‌டித்தான் எங்கடை ச‌ன‌த்துக்கு எல்லாம் பொதுவாய் வாற‌ தீர்வு கிடைக்க‌ப்போகின்ற‌தோ தெரியாது' என்று சிரித்துக்கொண்டு சொல்லுவா.

ஒருநாள் இப்ப‌டித்தான் வ‌ழ‌மைபோல‌ அர‌சிய‌ல் பேசி நான் மிக‌வும் கொந்த‌ளித்துக்கொண்டிருநத‌ நேர‌ம். அந்த‌ நேர‌த்தில் வ‌சிய‌ண்ணாவை அடித்தால் கூட‌ப் ப‌ர‌வாயில்லை என்ற‌மாதிரி அவர் மீதான கோப‌ம் நாடி ந‌ர‌ம்புக‌ளில் ஏறிக்கொண்டிருந்த‌போது என்னைய‌றியாம‌லே, 'நீங்க‌ள் ஒரு ம‌னுசரே, எங்கடை ஹேமாக்காவை இந்திய‌ன் ஆமி கெடுத்தாப்பிற‌கும் அவ‌ங்க‌ளைச் ச‌ப்போர்ட் ப‌ண்ணிக்கொண்டிருக்கிறிய‌ள்' என்றேன். என‌க்கே நான் என்ன‌ சொன்னேன் என்று அறிய‌முடியாத‌ உண‌ர்ச்சியின் கொந்த‌ளிப்பு. யாரோ க‌ன்ன‌த்தில் ப‌டாரென்று அறிந்த‌மாதிரி ச‌ட்டென்று எங்கள் எல்லோருக்குள்ளும் தாங்கிக்கொள்ள‌வே முடியாத‌ மிக‌ப்பெரும் ம‌வுன‌ம் கவிழ்ந்திருந்தது. அதுவரை வாஞ்சையோடு என்னைப் பார்க்கும் ஹேமாக்காவின் விழிக‌ள் அப்ப‌டியே உறைந்துபோயிருந்த‌து; என்ன‌ வித‌மான‌ உண‌ர்ச்சியென்று இன‌ம்பிரித்தறியா முடியாத‌ள‌வுக்கு நான் குற்ற‌த்தின் க‌ட‌லுக்குள் மூழ்க‌த்தொட‌ங்கியிருந்தேன். எதுவுமே சொல்லாம‌ல் எவ‌ரிட‌மும் முறையாக‌ விடைபெறாது நான் வீட்டை போய்ச் சேர்ந்திருந்தேன்.

அடுத்த‌ நாள் விடிய‌ அம்மா, 'டேய் த‌ம்பி ஹேமாக்கா குள‌த்துக்குள்ளை குதிச்சிட்டா என்டு ச‌ன‌ம் சொல்லுது... ஓடிப்போய் என்ன‌ நடந்ததெண்டு பார்த்திட்டு வான்று ப‌ட‌பட‌வென்டு கையால் த‌ட்டி எழுப்புகிறா. நான் வோட‌ன் என்னைப் பிடிக்க முயன்ற பொழுதை விட‌ வேகமாய் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்டு அறிய‌ சைக்கிளையெடுத்துக்கொண்டு ஓடுகின்றேன். ஹேமாக்காவுக்கு ஒன்டும் ந‌ட‌ந்திருக்க‌க்கூடாது என்டு எங‌கடை ஊர் வைர‌வ‌ரை நேர்ந்துகொண்டு சைக்கிளை வேக வேகமாய் உழக்குகின்றேன். ஹேமாக்காவை குள‌த்துக்குள்ளாலை இருந்து தூக்கிக்கொண்டு வ‌ருகின‌ம். 'ஐயோ ஹேமாக்கா குள‌த்துக்குள்ளை குதிச்சிட்டா எல்லோரும் ஓடிவாங்கோ' என்டு சிறுவனாய் இருக்கும்போது நான் கத்தியது மாதிரி இப்ப க‌த்த‌முடியாது நான் உறைந்துபோய் நிற்கின்றேன். வ‌சிய‌ண்ணா என்ரை கையைப்பிடித்துக்கொண்டு, 'இந்திய‌ன் ஆமி உம்ம‌ளை கெடுத்த‌து ப‌ற்றி இதுவ‌ரை ஏன் என்ன‌ட்டை சொல்லேலை என்டு ம‌ட்டுந்தான் கேட்ட‌னான் வேறொன்றுமே கேட்க‌வில்லை. ஒன்டுமே பேசாம‌ல் இருந்த‌வா இப்ப‌டிச் செய்வா என்டு நான் க‌ன‌விலையும் நினைத்துப் பார்க்க‌வில‌லை என்று ந‌டுங்கும் குர‌லில் சொல்லிக்கொண்டு இருந்தது என‌க்கு யாரோ பங்கருக்குள்ளிலிருந்து முணுமுணுப்பதுபோலக் கேட்கிற‌து. 'ஹேமாக்கா எழும்புங்கோ நான் வ‌ந்திருக்கின்றேன். உங்க‌ளுக்குத் தெரியுமா உங்க‌ளுக்கு அன்டைக்கு ஆமி அப்ப‌டிச் செய்த‌தைப் பார்த்த‌போது நான் அவ்வளவு காலமும் க‌வ‌ன‌மாய்ப் பொத்திவைத்திருந்த‌ கூலிங்கிளாசையே உடைத்து நொறுக்கின‌வ‌ன்.... நீங்க‌ள் எப்ப‌வும் எங்க‌டை ஹேமாக்காதான். எழும்புங்கோ...எழும்புங்கோ' என்டு ம‌ன‌ம் விடடுக்குழ‌றி அழ‌வேண்டும் போல‌ இருக்கிற‌து. கொலைக‌ளைச் செய்த‌வ‌ர்க‌ளால் ம‌ன‌தை லேசாக்க‌ அழ‌முடிய‌வதில்லை; உள்ளுக்குள்ளேயே ம‌றுகி உருகி த‌ங்க‌ளின்ரை பாவ‌ங்கள் எப்ப‌வாவ‌து க‌ரையாமாட்டாதா என்று காலம் முழுதும் ஏங்கிக் கொண்டிருக்க‌வேண்டிய‌துதான்.

வாசிப்பு:'பெரிய‌ எழுத்து'

Wednesday, December 17, 2008

'பெரிய‌ எழுத்து' சிறுக‌தைத் தொகுப்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வாழும் த‌.ம‌ல‌ர்ச்செல்வ‌னால் தொகுப்ப‌ட்ட‌ 12 சிறுக‌தைக‌ள் கொண்ட‌ ஒரு தொகுப்பு. போர் ந‌ட‌க்குகின்ற‌ நில‌ங்க‌ளில் ப‌டைபாளிக‌ளுக்கு உள்ளதை உள்ள‌ப‌டி சொல்வ‌திலுள்ள‌ த‌ணிக்கைக‌ளை நாம‌றிவோம். தொட‌ர்ச்சியான‌ போர்சூழ‌லில் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இல‌த்தீன் அமெரிக்கா நாடுக‌ளிலிருந்து அவ‌ர்க‌ள‌து ஆதிக்க‌தைக‌ளின் நீட்சிக‌ளோடு நிகழ்கால‌த்தை ம‌றைமுக‌மாய் உண‌ர்த்தும்வித‌மாய் எழுந்த‌ மாய‌ யதாத்த‌ எழுத்துக்க‌ளைப்போல‌, ஏனின்னும் தீவிர‌மான‌ -யதார்த்த‌ எழுத்தைத்தாண்டிய‌- எழுத்து முறை ஈழ‌த்திலிருந்து எழ‌வில்லையென்ப‌து ந‌ம் எல்லோருக்கும் முனனாள் உள்ள‌ ச‌வால். அண்மைக்கால‌மாய் மாய‌ ய‌தார்த்த‌க் க‌தைக‌ளை இராக‌வ‌ன், திசேரா போன்ற‌வ‌ர்க‌ள் எழுத‌ முய‌ற்சிக்கின்றார்க‌ள். அவ்வாறான‌ நீட்சியில் வ‌ருகின்றவ‌ர்தான் த‌.ம‌ல‌ர்ச்செல‌வ‌ன். அவ‌ரே முன்னுரையில் கூறுவ‌தைப்போல‌, 'எல்லாம் போக‌ க‌தை என‌க்குள் உருவாகிக்கொண்டிருக்கின்ற‌ கால‌த்தில் இத்தொகுப்பு வ‌ந்திருக்கின்ற‌து. நான் க‌ட‌க்க‌ வேண்டிய‌ தூர‌ம் க‌ண்ணுக்கெட்டாத தூர‌த்திலுள்ள‌து' என்ப‌தை விள‌ங்கிக்கொண்டால், இக்க‌தைக‌ளை ஒரு ப‌ரீட்சார்த்த‌ முய‌ற்சியென‌வும் அடுத்துவ‌ரும் தொகுப்புக்க‌ளில் சிற‌ந்த‌ க‌தைக‌ளை எழுதலாம் என்று ந‌ம்புவ‌த‌ற்கான‌ புள்ளிக‌ள் இத்தொகுப்பில் தென்ப‌டுகின்ற‌ன‌.

இத்தொகுப்பில் சில‌ க‌தைக‌ளை ஈழ‌த்து நிலைமைக‌ளின் கார‌ண‌மாக‌ சேர்க்க‌வில்லையென‌வும், எழுதிய‌ ஒரு க‌தைக்காய் ஒரு கும்ப‌லின் தாக்குத‌லிலிருந்து ம‌யிரிழையில் த‌ப்பினேன் என்ற‌ குறிப்புக்க‌ளோடே நாம் இத்தொகுப்பில் நுழைவ‌து நேர்மையாக‌விருக்கும். இந்திய‌ இராணுவ‌ கால‌த்தில் பொதுப்ப‌ரீட்சை எழுத‌முடியாது அக‌தியாய் அலைந்த‌ ம‌ல‌ர்ச்செல‌வ‌னின் க‌தையொன்று இத்தொகுப்பில் இல்லாத‌து உண்மையிலேயே இழ‌ப்புத்தான். இத்தொகுப்பின் முத‌ற்க‌தை 'ம‌ஞ்ச‌ள் வரி க‌றுப்பு வ‌ரி' துட்ட‌கைமுனு எல்லாள‌ன் க‌தையை மீள‌வும் வேறொரு கோண‌த்தில் பார்க்கிற‌து. துட்ட‌கைமுனு என்ப‌வ‌ன் ஒரு 'கிழ‌ட்டுப் புலி'யைப் பிடிக்கின்றான், அது நிக‌ழ்கால‌த்தில் வ‌ழ‌க்கில் இல்லாத‌ மொழியைப் பேசுகிற‌து. புலி பேசும் மொழியை அறிய‌ மொழி அறிஞ‌ர்க‌ள் வ‌ருகின்றார்க‌ள். 'நீ பிடித்திருக்கும் இது புலிய‌ல்ல‌, ஒரு முதிய‌வ‌ன்' என்கின்ற‌ன‌ர் அவ‌ர்க‌ள். இல்லை கிழ‌ட்டுப் புலிதானென‌ துட்ட‌கைமுனு குர‌லெழுப்பிக்கொண்டிருக்கின்றான‌. மொழி அறிஞ‌ர்க‌ள் இறுதியில் முன்னொரு கால‌த்தில் பேச‌ப்ப‌ட்ட‌ த‌மிழ் மொழியையே இக்கிழ‌வ‌ன் பேசுகின்றான் என்கின்றார்க‌ள். இக்கிழ‌ட்டுப்புலியால் ம‌க்க‌ளுக்கு ஆப‌த்து; சிறைக்குள் அடைக்க‌வேண்டுமென‌ நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்குத் தொடுக்கும் துட்ட‌கைமுனுவிட‌ம் அவ்வாறு நிரூபிக்க‌ உரிய‌ சாட்சிய‌ங்க‌ள் இல்லையென‌ நீதிம‌ன்ற‌ம் அக்கிழ‌வ‌னை விடுத‌லை செய்கின்ற‌து. இறுதியில் துட்ட‌கைமுனு அக்கிழ‌வ‌னைக் கூண்டிலிருந்து விடுவித்து வ‌ட‌க்கு நோக்குப் போகும்ப‌டித்துர‌த்தி விடுகின்றான். கிழ‌வ‌ன் ஒரு ப‌தினெட்டு வ‌ய‌து இளைஞ‌னாக‌ மாறியப‌டி வ‌ட‌க்கிற்குப் போவ‌தை துட்ட‌கைமுனு திகைத்த‌ப‌டி பார்த்த‌ப‌டியிருக்கின்றான். இன்ன‌மும் செதுக்க‌ப்ப‌ட்டிருந்தால் ஒரு சிற‌ந்த‌ க‌தையாக‌ வ்ந்திருக்க‌லாம் என்றாலும் இத்தொகுப்பிலிருக்கும் முக்கிய‌மான‌ ஒரு க‌தையென‌க்க் குறிப்பிட‌வேண்டும்.

'பெரிய‌ எழுத்து' க‌தை, புதுமையை எழுத்தில் விரும்புகின்ற‌ ப‌டைப்பாளிக்கும் ப‌ழ‌மையை இன்ன‌மும் பிடித்துக்கொண்டிருக்க‌ விரும்பும் ப‌டைப்பாளிக‌ளுக்குமிடையிலிருக்கும் முர‌ண்பாடுக‌ளை க‌வ‌ன‌ப்ப‌டுத்த‌ முய‌ல்கின்ற‌ க‌தை. ம‌ல‌ர்செல்வ‌னுக்கு ஜே.பி.சாண‌க்கியாவின் க‌தைக‌ள் அதிக‌ம் பிடிக்கும் போலும். இக்கதை முழுதும் அவ‌ர‌து ப‌டைப்புக்க‌ளைப் ப‌ற்றிய‌ பேச்சுக்க‌ளே வ‌ருகின்ற‌ன‌. த‌மிழ‌வ‌னின் 'ஏற்க‌ன‌வே சொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளும்', கோண‌ங்கியில் 'பாழி'யும் கூட‌ வ‌ருகின்ற‌ன‌. சாண‌க்கியாவின் மீதோ ந‌வீன‌/பின் ந‌வீன‌ எழுத்து முறைக‌ள் மீதோ ஈர்ப்பிருப்ப‌தில் த‌வ‌றுமில்லை. அதை நாம் இன்னொருவ‌ர் மீது திணித்த‌லை அல்ல‌து நாம் விரும்புவ‌தை பிற‌ரும் விரும்ப‌வேண்டும் என்று எண்ணுவ‌தை ஒரு வாசிப்பு நிலை சார்ந்த‌ வ‌ன்முறையாக‌வே பார்க்க‌வேண்டியிருக்கிற‌து. இக்க‌தையில் வ‌ரும் ப‌டைப்பாளியின் துணை வாசிப்ப‌தில் விருப்ப‌ம‌ற்ற‌ அல்ல‌து இர‌ம‌ணிச்ச‌ந்திர‌னை வாசிப்ப‌தோடு திருப்திகொள்கின்ற‌வ‌ராக‌ இருப்ப‌து ப‌டைப்பாளிக்கு அலுப்பூட்டுகின்ற‌து. ஒருநாள் வித்தியாச‌மாய், எழுததாளனின் துணைவியார் வ‌ழ‌க்கமாய் வாசிக்கும் வெகுச‌ன‌ நூலைப்படிக்காது வேறொரு நூலை வாசிப்ப‌தைப் பார்த்து இவ் எழுத்தாள‌ன், சாண‌க்யாவின் 'ஆண்க‌ளின் ப‌டித்துறை'யை வாசிக்க‌க்கொடுக்கின்றான‌. துணைவியார், 'பொம்பிளய‌ப் ப‌ற்றி ஜே.பி.சாண‌க்யா என்ன‌ எழுதியிருக்கான்? செருப்ப‌லை அடிப்ப‌ன் அவ‌னை' என்ப‌தை இதொரு இன்னொரு வாச‌க‌ரின் பார்வையென‌ ஏற்றுக்கொள்ள‌முடியாது போவ‌தில்தான் எம‌க்கு ம‌ல‌ர்ச்செல‌வ‌னோடான‌ முர‌ண்க‌ள் ஆர‌ம்பிக்கின்ற‌ன‌. பெண்க‌ளுக்கான‌ காம‌த்தையும் ஆண்க‌ளே இதுவ‌ரையும் எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்ற‌ புரித‌ல் வ‌ந்தால் நாம் இக்க‌தையின் வ‌ரும் ப‌டைப்பாளியின் துணைவியின் குர‌லை ஏற்றுக்கொள்ள‌த்தான் வேண்டியிருக்கின்ற‌து. இவவிட‌ய‌த்தில் அல்ல‌, வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கான‌ போர்னோ போன்ற‌வை கூட‌ இதுவ‌ரைகால‌மும் ஆண்க‌ளுக்காய் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தென‌ சில‌ பெண்க‌ள் பெண்க‌ளுக்கான‌ த‌னித்த‌ போர்னோக்க‌ளையை உருவாக்க‌ முய‌ற்சிக்கின்ற‌போது, ஆண் ப‌டைப்பாளிக‌ளால் பெண்க‌ளுக்கான‌ காம‌த்தையும் எழுதிவிட‌முடியும் என்று இன்ன‌மும் ந‌ம்பிக்கொண்டிருக்க‌முடியுமா என்று இக்க‌தையில் வ‌ரும் ப‌டைப்பாளி யோசித்திருப்பாராயின் 'செருப்பால‌டிப்ப‌தையும்' ஒரு உட‌ன‌டி எதிர்வினையாக‌ புரிந்துகொள்ள‌லாம். ஒரு ப‌டைப்பாளிக்கு த‌ன் ப‌டைப்பு குறித்த‌, த‌ன‌து தேர்வுகள் குறித்த‌ க‌ர்வ‌மோ பெருமையோ இருப்ப‌தில் த‌வ‌றேதுமில்லை. ஆனால் த‌ன்னைச் சுற்றியிருப்போரும் அப்ப‌டியே இருக்க‌வேண்டும் என்று விரும்புவ‌து அல்ல‌து தான் நினைத்துக்கொண்டிருப்ப‌வை ம‌ட்டுமே மேன்மையான‌து என்று நினைக்கும்போதுதான் நாம் கேள்விக‌ள் எழுப்ப‌வேண்டியிருக்கின்ற‌ன‌. இந்த‌க்க‌தையின் பேசுபொருளைப் போல‌வே இன்னொரு க‌தையான‌ 'க‌விதை + க‌தை = அப்ப‌றை'யும் பாலிய‌ல் சுத‌ந்திர‌மாய் பேச‌ப்ப‌ட‌ முடியாத‌ அவ‌தியைப் ப‌ற்றிப் பேசுகின்ற‌து. ஆனால் க‌தை முழுதும் சுகிர்த‌ராணியின், க‌லாவின், ச‌ண்முக‌ம் சிவ‌லிங்க‌த்தின், ற‌ஷ்மியின் க‌விதைக‌ள் நிர‌ப்ப‌ட்டு இவ‌ர்க‌ள் எல்லாம் இப்ப‌டிப் பேசியிருக்கின்றார்க‌ள் நான் எழுதினால் ம‌ட்டுமா பிர‌ச்சினையாக‌ இருக்கிற‌தென்ற‌ ஒரு ப‌ரிதாப‌க்குர‌லை அக்க‌தை வேண்டி நிற்கின்ற‌து. ஈழ‌த்தில் எஸ்.பொ எத்த‌னையோ த‌சாப்த‌ங்க‌ளுக்கு முன்னே 'தீ'யிலும் 'ச‌ட‌ங்கிலும்' இவ‌ற்றை நிக‌ழ்த்திக்காட்டிவிட்டார் என்ப‌தையும் ம‌ல‌ர்ச்செல‌வ‌னுக்கு நினைவுபடுத்த‌வேண்டியிருக்கிற‌து.

'குறி நீள்கின்ற‌ ம‌ர‌ம்' கிழ‌க்கில் ந‌ட‌க்கும் சிங்க‌ள‌க்குடியேற்ற‌ங்க‌ளைப் ப‌ற்றி ம‌றைமுக‌மாய்ப் பேசுகின்ற‌து. ஒர‌ளவு இன‌த்துவேச‌மாய் மாறிவிட‌க்கூடிய‌ க‌தையாக‌ இருந்தாலும், இக்க‌தையின் பேசுபொருள் முக்கிய்மான‌தொன்றே. 'நரிச்சிங்க‌ங்க‌ள்' என்ற‌ க‌தை தேர்த‌ல் அர‌சிய‌லில் இற‌ங்கி ம‌க்க‌ளை ஏமாற்றுகின்ற‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை ந‌க்க‌ல‌டித்து எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. 'ம‌ண்' க‌தை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு க‌ட‌ற்க‌ரையோர‌ங்க‌ளில் ம‌ண‌ல் அள்ள‌ப்ப‌ட்டு க‌ட‌ல்ரிப்பால் நீரால் விழுங்க‌ப்ப‌ட‌விருக்கும் கிராம‌ங்க‌ளைச் சூழ‌கின்ற‌ அபாய‌ங்க‌ள் குறித்துப் பேசுகின்ற‌து. த‌.ம‌ல‌ர்ச்செல‌வ‌ன் ஏற்க‌ன‌வே ஒரு க‌விதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கின்றார் என்று ஏற்க‌ன‌வே கேள்விப்ப‌ட்டிருக்கின்றேன். இஃது அவ‌ரின் இர‌ண்டாவ‌து தொகுப்பாய் இருக்க‌க்கூடும். ஈழ‌த்தின் இன்றைய‌ அவ‌ல‌ நிலைக்குள்ளிலிருந்து இவ்வாறான‌ ப‌டைப்பூக்க‌ ம‌னோநிலையைத் த‌க்க‌வைப்ப‌தென்ப‌து அவ்வ‌ளவு இல‌குவில்லை. ஈழ‌த்துக்கும் வெளியுல‌கிற்குமான‌ தொட‌ர்புக‌ளில் பெரும் இடைவெளிக‌ள் வ‌ந்துவிட்ட‌த‌ன்பின், இவ்வாறான‌ தொகுப்புக்க‌ள் அங்கிருக்கும் சாதார‌ண‌ ம‌க்க‌ள் என்ன‌ ம‌னோநிலையில் இருக்கின்றார்க‌ள் எனப‌தை நாங்க‌ள் அறிய‌வாவ‌து உத‌வ‌க்கூடும். அந்த‌வ‌கையில் ஈழ‌த்திலிருந்து வெளியாகும் ப‌டைப்புக்க‌ளை 'ந‌ம‌து உள்ளொளி க‌ட‌ந்த‌ ஞான‌த்தால்' ம‌ட்டும் பார்க்காது, முன்னேயிருக்கும் நிலைமைக‌ளை முன்வைத்தும் பார்க்க‌க்கூடிய‌தாய் நம‌து வாசிப்பு முறைக‌ளை மாற்றிக்கொள்வ‌தும் அவ‌சிய‌மாகின்ற‌து.

ஆடுகின்ற‌ க‌திரையில் அம‌ர‌ப்போவ‌து யாரோ?

Thursday, December 04, 2008

-சூடாகும் க‌ன‌டா அர‌சிய‌லும், அவ‌ச‌ர‌மவ‌ச‌ர‌மாய் முக‌மூடிக‌ளைக் க‌ழ‌ற்றிய‌ ந‌ம் கால‌த்து ச‌ன‌நாய‌க மீட்ப‌ர்க‌ளும்-

சில‌ வார‌ங‌க‌ளுக்கு முன் வானொலி நிக‌ழ்ச்சியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்த‌போது, ஆங்கில‌ அக‌ராதியில் புதிதாக‌ வார்த்தையொன்றைப் சேர்த்துள்ளார்க‌ள் என்று கூறியிருந்தார்க‌ள். 'Mah' என்ற‌ வார்த்தை அலுப்பான‌து (boring) என்ற‌ ஒத்த‌ க‌ருத்தைப் பிர‌திப‌திப்ப‌து என்று விள‌க்கி, விரித்துச் சொல்லும்போது, 'அண்மையில் ந‌ட‌ந்த‌ க‌ன‌டாத் தேர்த‌ல் மிக‌ அலுப்பான‌து' என்று -இப்புதிய‌ வார்த்தையைப் ப‌ய‌ன்ப‌டுத்தி- ஒரு உதார‌ண‌த்தைக் கூறியிருந்தார்க‌ள்.

வ‌ழமையாக‌ க‌ன‌டாத் தேர்த‌ல்க‌ள் எவ்வித‌ ஆர‌வார‌ங்க‌ளுமில்லாது ந‌ட‌ப்ப‌து என்றாலும், இம்முறை குறுகிய‌ கால‌த்தில் தேர்த‌ல் திக‌தி அறிவித்து ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ தேர்த‌லுக்கு, அருகிலிருந்த‌ ஐக்கிய‌ அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ சுவார‌சிய‌மான‌ தேர்த‌ல் சூழ‌லும் 'இன்னும் அலுப்பாக்கிய‌த‌ற்கு' ஒரு முக்கிய‌ கார‌ண‌மென‌லாம். இங்கே முக்கிய‌ க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் தொலைக்காட்சியில் விவாதித்துக்கொண்டிருந்த‌போது, அதே நேர‌த்தில் நிக‌ழ்ந்த‌, ஐக்கிய‌ அமெரிக்காவின் உப‌ ஜ‌னாதிப‌திக‌ளுக்கான‌ விவாதத்தைப் பார்த்த‌ க‌னேடிய‌ர்க‌ளே அதிக‌ம் என்று கூற‌ப்ப‌ட்டிருந்த‌து. அது ம‌ட்டுமின்றி க‌ன‌டாவில் ந‌ட‌க்கும் தேர்த‌லையா, ஐக்கிய‌ அமெரிக்காவில் ந‌ட‌க்கும் தேர்த‌லையா அதிக‌ம் க‌வ‌னிக்கின்றீர்க‌ள் என்றொரு ப‌த்திரிகை கருத்துக்க‌ணிப்பு நிக‌ழ்த்திய‌போது 70%ற்கும் அதிக‌மான‌ ம‌க்க‌ள் 'அமெரிக்க‌த் தேர்த‌லையே' என்று உள்ள‌தை உள்ள‌ப‌டியே சொல்லியுமிருக்கின்றார்க‌ள். இதில் பெரிய‌ விய‌ப்பு ஏதுமில்லை. ஈழ‌த்திலிருந்த‌போது அதிக‌ம் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், இல‌ங்கைப் பாராளும‌ன்ற‌த்தில் என்ன‌ ந‌ட‌க்கின்ற‌து என்ப‌தை அறிவ‌தைவிட‌ இந்திய‌ அர‌சிய‌ல் பேசுவ‌தில் சுவார‌சிய‌மாக‌ இருந்திருப்ப‌தைத்தான் அவ‌தானித்திருக்கின்றேன். சிறுவ‌ய‌தில் இல‌ங்கைப் பாராளும‌ன்ற‌த்திலுள்ள‌ அமைச்ச‌ர்க‌ளை விட‌ இந்திய‌ப் பாராளும‌ன்ற‌ அமைச்ச‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளை அறிந்து வைத்திருந்த‌து என‌க்கும் நினைவிருக்கின்ற‌து. இன்றும் பெரும்பான்மையான‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், இந்திய‌ கிரிக்கெட் அணியை ஆத‌ரிப்பது என்ப‌து இத‌ன் நீட்சியில் வ‌ருகின்ற‌ ஒரு விட‌ய‌ந்தான்.

2.
க‌னடாவில் த‌ற்ச‌ம‌ய‌ம் நான்கு முக்கிய‌ க‌ட்சிக‌ள் இருக்கின்ற‌ன‌: லிப‌ர‌ல் (Liberals), கொன்ச‌ர்வேடிவ் (Conservatives) , புதிய‌ ஜ‌ன‌நாய‌க் க‌ட்சி (New Democratic Party) , ப்ளொக் கியூபெக்குவா (Bloc Quebecios). என்ப‌ன‌ அவை. அண்மைக்கால‌மாக‌ கிறீன் க‌ட்சியும் (Green Party) ம‌க்க‌ளிடையே செல்வாக்குப் பெற்று வ‌ருகின்ற‌து.
ஆக‌ இவ்வாறாக‌ க‌ன‌டாத் தேர்த‌ல்க‌ள் அலுப்பாக‌வும்..., த‌ங்க‌ளை எவ‌ரும் க‌வ‌னிக்கின்றார்க‌ள் இல்லை என்று அர‌சிய‌ல்வாதிக‌ள் எண்ணிய‌தாலோ என்ன‌வோ சென்ற‌ வார‌ங்க‌ளிலிருந்து க‌ன‌டிய‌ அர‌சிய‌ல் சூடுபிடிக்க‌த் தொட‌ங்கியிருக்கின்ற‌து.

2006ற்கு முன், தொட‌ர்ந்து நீண்ட‌ கால‌மாக‌ மித‌வாத‌ லிப‌ர‌ல் க‌ட்சியே க‌ன‌டாவின் ஆட்சி பீட‌த்திலிருந்திருக்கின்ற‌து. இல‌ங்கையில் ஜ‌.தே.க‌விற்கு கொழும்பு மாதிரி, த‌மிழ்நாட்டில் தி.மு.க‌விற்கு சென்னை போல‌, லிப‌ர‌ல் க‌ட்சியின் அசைக்க‌முடியாத‌ ஒரு கோட்டையாக‌ ஒன்ராறியோ மாகாண‌ம் இருந்திருக்கின்ற‌து. க‌ன‌டாவின் 308 பாராளுன‌ற‌ ஆச‌ன‌ங்க‌ளில் 106 ஆச‌ன‌ங்க‌ள் ஒன்ராறியோ மாகாண‌த்தில் இருக்கின்றது. 2000 ஆண்டில் லிப‌ர‌ல் க‌ட்சி இர‌ண்டாவ‌து முறையாக‌ ழான் கிறைட்சிய‌னின் த‌லைமையில் பெரும்பான்மை அர‌சு அமைத்த‌போது, வென்ற‌ 172 ஆச‌ன‌ங்க‌ளில், 100 ஆச‌ன‌ங்க‌ள் ஒன்ராறியோ மாகாண‌த்திலிருந்து லிப‌ர‌லுக்கு கிடைத்திருந்த‌ன‌. 106 ஆச‌ன‌ங்க‌ளுள்ள‌ ஒன்ராறியோ மாகாண‌த்தின் 100 ஆச‌ன‌ங்க‌ளை லிப‌ர‌லுக்கு ம‌க்க‌ள் அளித்த‌மை இது முத‌ற்த‌ட‌வையுமில்ல‌. அத‌ற்கு முன் நிக‌ழ்ந்த‌ 1997 தேர்த‌லிலும் லிப‌ர‌ல் க‌ட்சி 101 ஆச‌ன‌ங்க‌ளை வென்றிருக்கின்ற‌து. ஆக‌, ஒன்ராறியோ மாகாண‌ ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை அசைத்துப் பார்க்கும் க‌ட்சியே க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌த்தில் எவ்வித‌ப் ப‌ய‌முமின்றி அம‌ர‌லாம் என்ற‌ உண்மை எளிதாக‌ அனைவ‌ருக்கும் புரியும். ஒன்ராறியோ மாகாண‌த்திற்கு அடுத்த‌ அதிக‌ ஆச‌ன‌ங்களைக் கொண்ட‌ (75) கியூ(கு)பெக் மாகாண‌த்தில், லிப‌ர‌ல், வ‌ல‌துசாரியான‌ 'கொன்ச‌ர்வேடிவ்' போன்ற‌ க‌ட்சிக‌ள‌ அவ்வ‌ள‌வு எளிதில் கால் ப‌திக்க‌ முடியாது, 'கியூபெக்' த‌னி நாடு கேட்டுப் போராடும் ப்ளொக் கியூபெக்கா என்ற‌ க‌ட்சி தொட‌ர்ந்து பெரும்பான்மை ஆச‌ன‌ங்க‌ளை (50 ஆச‌ன‌ங்க‌ளுக்கு அண்மையாக‌ தொட‌ர்ந்த‌ ப‌ல‌ தேர்த‌ல்க‌ளில்) வென்றுகொண்டுவ‌ருகின்ற‌து. ப்ளொக் கியூபெக்கா க‌ட்சி, கியூபெக‌ மாகாண‌த்தில் ம‌ட்டுமே போட்டியிருக்கின்ற‌ ஒரு க‌ட்சி.

3.
1993ல் இருந்து தொட‌ர்ச்சியாக‌ 2006 வ‌ரை ஆட்சி புரிந்த‌ லிபர‌ல் க‌ட்சியை வீழ்த்தி தாம் ஆட்சிப்பீட‌த்தில் ஏறுவ‌த‌ற்காய் அதிதீவிர‌ வ‌ல‌துசாரிக‌ள் தொட‌ர்ந்து முய‌ற்சிக‌ளை மேற்கொண்டே வ‌ந்திருந்த‌ன‌ர். த‌னித்து நின்று வெற்றிபெற‌முடியாது‌ என்ற‌ உண்மை வ‌ல‌துசாரிக‌ளுக்கு உறைத்த‌போது, ப‌ல‌வேறு மாகாண‌ங்க‌ளின் உள்ளூர் வ‌ல‌துசாரிச் சிந்த‌னையுள்ள க‌ட்சிக‌ளையெல்லாம் ஒருங்கிணைத்து த‌ங்க‌ளுக்குள் ஒரு த‌லைவ‌ரைத் தேர்ந்தெடுத்து, 2004 தேர்த‌லில் கூட்டாய் வ‌ல‌துசாரிக‌ள் குதித்த‌ன‌ர் (இந்நேர‌ம் பிஜேபி உங்க‌ளுக்கு நினைவுக்கு வ‌ர‌லாம்). இத‌ற்கிடையில் இர‌ண்டாவ‌து முறையாக‌த் தேர்ந்தெடுத்த‌ ழான் கிறைட்சிய‌ன் த‌லைமையிலான‌ லிப‌ர‌ல் க‌ட்சி, நூறு மில்லிய‌னுக்கு மேலான‌ Sponsorship Scandalலில் மாட்டுப்ப‌ட்டு விழி பிதுங்க‌த்தொட‌ங்கிய‌து. 2004ல் லிப‌ர‌ல் க‌ட்சியிற்கு போல் மார்ட்டின் த‌லைமை தாங்கி, உறுதியான‌ வ‌ல‌துசாரிக‌ளின் கொன்ச‌ர்வேடிவிற்கு எதிராய் நின்ற‌போதும், ம‌க்க‌ள் இன்னும் லிப‌ர‌ல் க‌ட்சியைக் கைவிட‌த் த‌யாரில்லை என்ப‌தை நிரூபித்த‌ன‌ர். மொத்த‌ ஆச‌ன‌ங்க‌ளான‌ 306ல், 135 ஆச‌ன‌ங்க‌ளைப்பெற்று லிப‌ர‌ல் க‌ட்சி வெற்றி பெற்ற‌து. இத‌ற்கிடையில் ஊழ‌ல் வ‌ழ‌க்கின் மீதான‌ இர‌ண்டாவ‌து அறிக்கை விசார‌ணைக் குழுவால் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்டு லிப‌ர‌ல் க‌ட்சியின் ஊழ‌ல் பெருச்சாளிக‌ள் கையும் க‌ள‌வுமாய் பிடிப‌ட‌, என்டிபி, ப்ளொக் க்யூபெக்கா, கொன்ச‌ர்வேட்டிவ் ஆகிய‌ க‌ட்சிக‌ள் அர‌சுக்கெதிரான‌ ந‌ம்பிக்கையில்லாப் பிரேர‌ணையைக் கொண்டு வ‌ந்து (172 -134) லிப‌ர‌ல் ஆட்சி க‌லைக்க‌ப்ப‌ட்டு 2006ல் தேர்த‌ல் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. 2006 தேர்த‌லில் லிப‌ர‌லின் கோட்டையான‌ ஒன்ராறியோ மாகாண‌ம் உடைக்க‌ப்ப‌ட்டு, இதுவ‌ரை பெரும்பான்மையாக‌ ஒன்ராறியோவில் ஆச‌ன‌ங்க‌ளை வென்ற‌ லிப‌ர‌லைப் பின் த‌ள்ளி 54 ஆச‌ன‌ங்க‌ளை கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சுக்கு ம‌க்க‌ள் கொடுக்க‌, லிப‌ர‌ல் 40 ஆச‌ன‌ங்க‌ளையே வெல்ல‌ முடிந்த‌து. இவ்வாறாக‌ நெடும் 'வ‌ன‌வாச‌த்திற்கு'ப் பிற‌கு வ‌ல‌துசாரிக‌ளால‌ ஒரு சிறுபான்மை அர‌சைக் க‌ன‌டாவில் 2006ம் ஆண்டில் அமைக்க‌ முடிந்த‌து.

க‌னடாத் தேர்த‌ல் ‍- 2006 (Total Seats: 308)

Conservative - 124
Liberal - 103
Bloc Quebecois - 51
NDP - 29
Independent - 1

2006ல் 'வ‌ராது வ‌ந்த‌ மாம‌ணியாய்' ஆட்சியைப் பிடித்த‌ வ‌ல‌துசாரிக‌ள், குறுகிய‌ கால‌த்திற்குள் -2008ல் -அவ‌ச‌ம‌வ‌ச‌ர‌மாக‌ இன்னொரு தேர்த‌லை அறிவிக்க‌ என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌து வெள்ளிடை ம‌லை. முக்கிய‌ எதிர்க்க‌ட்சியான‌ லிப‌ர‌ல் க‌ட்சி அப்போதுதான் ஒரு புதிய‌ த‌லைவ‌ரைத் த‌ங்க‌ளுக்குத் தேர்ந்தெடுத்திருந்த‌ன‌ர். அத்தோடு லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ருக்கான‌ தேர்த‌லில் த‌லைவ‌ர் ப‌தவியை வெல்ல‌க்கூடிய‌வ‌ர்க‌ள் என்று மிக‌வும் ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌ Michael Ignatieff. Bob Rae, Gerard Kennedy போன்ற‌வ‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப்ப‌ட‌ அதிக‌ம் பிர‌பல்ய‌மில்லாத‌ Stéphane Dion க‌ட்சியின் த‌லைவ‌ராக‌த் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டார். ஆக‌வே லிப‌ர‌லுக்குள் த‌ன‌து த‌லைமையை Stéphane Dion முத‌லில் உறுதியாய் நிரூபிக்க‌வேண்டிய‌ அவ‌ச‌ர‌மான‌ நிலைமை.


மேலும் லிப‌ர‌ல் க‌ட்சி இன்னும் இர‌ண்டோ மூன்று வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு தேர்த‌லை எதிர்பார்க்காத‌ நிலைமையில் (no preparations), குறைந்த‌ கால‌ அவ‌காச‌த்திற்குள் தேர்த‌ல் திக‌தி அறிவிக்க‌ப்ப‌டுகின்ற‌து. Stéphane Dion த‌ன‌து உட்க‌ட்சிப் பூச‌ல்க‌ளையே இன்னும் ச‌மாளிக்க‌முடியாத‌ நிலையில் தேர்த‌லைச் ச‌ந்திக்கின்றார். தேர்த‌ல் திக‌தியை அறிவிக்கின்ற‌போது கொன்ச‌ர்வேடிவ்ற்கு இன்னொரு அதிஸ்ட‌மும் கைகொடுக்கின்ற‌து. க‌ச்சா எண்ணெயின் விலை கூடி க‌ன‌டாவின் டொல‌ர் பெறும‌தியும் உல‌க‌ச‌ந்தையில் கிடுகிடுவென்று ஏற‌, எல்லா புற‌ச்சூழ‌ல்க‌ளும் கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சியிற்கு ஒரு வ‌லுவான‌ பெரும்பான்மை கிடைப்ப‌து உறுதியென்று க‌ட்டிய‌ங் கூறுகின்ற‌ன‌. இந்த‌ இட‌த்தில் க‌ன்டாவிலிருக்கும் புலி எதிர்ப்பாள‌ர்க‌ளும் உற்சாக‌மாக‌வே தேர்த‌லை எதிர்கொண்ட‌ன‌ர் என்ப‌தையும் குறித்தாக‌வேண்டியிருக்கின்ற‌து. கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சே புலிக‌ள் இய‌க்க‌த்தைக் க‌ன்டாவில் த‌டைசெய்து ப‌ல்வேறு புலிக‌ளின் செய‌ற்பாடுக‌ளை முட‌க்க‌த்தொட‌ங்கியிருந்த‌து. வ‌ல‌துசாரி அர‌சாங்க‌ம் ஒன்று வ‌ந்தால், க‌னடாவிற்கு வ‌ரும் குடிவ‌ர‌வாள‌ர்க‌ள்/அக‌திக‌ளுக்கு என்ன‌ ந‌ட‌க்கும் என்ப‌தையோ, ஓரின‌ப்பாலின‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் (invisible) சிறுபான்மையின‌ருக்கு என்ன‌ நிக‌ழும் என்ப‌து குறித்தோ, ஆப்கானிஸ்தானில் இன்னும் எத்த‌னை ஆண்டுக‌ள் க‌ன‌டிய‌ இராணுவ‌ம் த‌ங்கி 'ம‌னிதாபிமான‌ப்ப‌ணி' செய்ய‌ப்போகின்ற‌தோ என்ற‌ அக்க‌றையெல்லாம் இவ‌ர்க‌ளைப் போன்ற‌வ‌ர்களுக்கு அவ‌சிய‌மில்லாத‌ ஒன்றே. புலியை எதிர்த்தால் ம‌ட்டுமே ந‌ம‌து மூச்சிருக்கும்வ‌ரை செய்வ‌து என்றிருப்போர்க்கு ம‌ற்ற‌ப் பிர‌ச்சினைக‌ள் நினைவுக்கு வ‌ராத‌து அவ‌ர்க‌ள‌து 'ச‌ன‌நாய‌க‌'நிலைப்பாடு என்க‌. ச‌ரி, அதை இப்போதைக்கு விடுவோம்.

ஆக‌ பெரும்பான்மை ஆட்சியை நோக்கி வெற்றிந‌டை போட்டுக்கொண்டிருந்த‌ கொன்ச‌ர்வேட்டியிற்கு முத‌லில் ஆப்ப‌டித்த‌து, ஜ‌க்கிய‌ அமெரிக்காவின் வ‌ர்த்த‌க‌த்தில் ஏற்ப‌ட்ட‌ வீழ்ச்சி. 'எம‌து வ‌ங்கிக‌ள் எல்லாம் மிக‌வும் வ‌லுவான‌ நிலையிலிருக்கின்ற‌ன‌, க‌வ‌லையேப‌ட‌வேண்டாம்' என்று நிதிய‌மைச்ச‌ர் தேர்த‌ல் கால‌த்தில் அறிக்கை விட்டுக்கொண்டிருந்தாலும், கிட்ட‌த்த‌ட்ட‌ 75% ற்கு மேலான‌ வ‌ர்த்த‌க‌த்தை ஜ‌க்கிய‌ அமெரிக்காவோடு க‌ன‌டா செய்துகொண்டிருக்கும்போது ம‌க்க‌ள் இதை உறுதியாய் ந‌ம்ப‌த் த‌யாராக‌ இருக்க‌வில்லை. ஒரு க‌ட்ட‌த்தில் பொருளாதார‌ வீழ்ச்சியை வைத்து, லிப‌ர‌ல் வென்றுவிடுமோ என்ற‌ நிலை வ‌ந்த‌போது, அந்த‌ அற்புத‌ த‌ருண‌த்தை -எமினெமின் வார்த்தைக‌ளில் சொல்வ‌த‌னால் Seize the momentஐ- லிப‌ர‌ல் க‌ட்சியின் உறுதிய‌ற்ற‌ த‌லைமையால் த‌ம‌க்குரிய‌தாக‌ மாற்ற‌முடிய‌வில்லை. ஒரு க‌ட்சியின் அர‌சிய‌ல் விஞ்ஞாப‌ன‌த்தை விம‌ர்சிக்காது, லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ரை நோக்கி மிக‌வும் கீழ்த்த‌ர‌மான‌ தாக்குத‌ல்க‌ளை கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சி தொலைக்காட்சிக‌ளில் ந‌ட‌த்த‌த்தொட‌ங்கிய‌து, அத்தகைய‌பொழுதில் ' நான் ந‌ல்ல‌வ‌ன்; ம‌க்க‌ளுக்கு அதையெல்லாம் விள‌ங்க‌ப்ப‌டுத்த‌த் தேவையில்லை' என்று அர‌சிய‌ல் ச‌துர‌ங்க‌த்தில் எதிர்க் காய்க‌ளை ந‌க‌ர்த்தத்தெரியாத‌ லிப‌ர‌ல் க‌ட்சி த‌லைவரை அர‌சிய‌ல் தெரியாத அப்பாவியென‌த்தான் எடுத்துக்கொள்ள‌வேண்டியிருக்கிற‌து. அத்தோடு சுற்றுச் சூழ‌லில் மிகுந்த‌ அக்க‌றையுடைய‌வ‌ராக‌ Dion இருந்த‌தால், சுற்றுச் சூழ‌லை முன்வைத்து நிறைய‌ வ‌ரிக‌ளை சுற்றுச் சூழ‌ல் பாதுகாப்பிற்காய் அற‌விட‌ப்போகின்றார் என்ற‌ ஒரு ப‌ய‌த்தை ம‌க்க‌ளிடையே மிக‌ நுட்ப‌மாக‌ கொன்ச‌ர்வேட்டிவ் க‌ட்சி கொண்டு சென்றுமிருந்த‌து.

ஆக‌, இப்போது ச‌ந்தைப் பொருளாதார‌ வீழ்ச்சியால் கொன்ச‌ர்வேடிக் க‌ட்சியிற்கு பெரும்பான்மை அர‌சு அமைப்ப‌து என்ற‌ நிலையிலிருந்து, 'நாயைப்பிடி பிச்சை வேண்டாம்' என்ற‌ நிலையில் த‌ம் வ‌ச‌த்து இருந்த‌ ஆட்சியை மீள‌வும் காப்பாற்ற‌வேண்டிய‌ நிலையில் தேர்த‌ல்‍ 2008 ஒக்ரோப‌ரில் ந‌ட‌க்கின்ற‌து.

தேர்த‌ல் 2008 (Total Seats 308)


Conservative - 143
Liberal - 77
Bloc Quebecios - 49
NDP - 37
Independent - 2

இவ்வாறாக‌ச் சென்ற‌ ஒக்ரோப‌ரில் ஒரு பெரும்பான்மை அர‌சை வ‌ல‌துசாரிக‌ளுக்குக் கொடுக்க‌ ம‌க்க‌ள் த‌யாரில்லையென்ற‌ நிலையில், மீண்டும் வ‌ல‌துசாரிக‌ள் இன்னொரு சிறுபான்மை அர‌சை பாராளும‌ன்ற‌த்தில் 'த‌லை த‌ப்பிய‌து த‌ம்பிரான் புண்ணிய‌ம்' என்ற‌வ‌ளவில் அமைத்துக்கொண்டார்க‌ள்...

4.
க‌ன‌டாத் தேர்த‌ல் முடிவுக‌ளைப் பார்த்துக்கொண்டிருந்த‌ இர‌விலோ அத‌ற்க‌டுத்த‌ நாளிலோ, கூட‌வே துணையாயிருந்த‌ ந‌ண்ப‌ரிட‌ம், ஏன் ம‌ற்ற‌க்க‌ட்சிக‌ள் கூட்டாய்ச் சேர்ந்து கொன்ச‌ர்வேடிவை விழுத்தி கூட்ட‌ணி அர‌சை அமைக்க‌க்கூடாது என்று கேட்டிருக்கின்றேன். இன்னொரு ந‌ண்ப‌ரிட‌மும் இது ப‌ற்றி விவாதித்த்தாய் நினைவு. இங்கு உய‌ர்க‌ல்லூரியில் ப‌டித்த‌ கால‌ங்க‌ளிலேயே க‌னடா வ‌ர‌லாறு, அர‌சிய‌ல் பாட‌ங்க‌ள் ப‌க்க‌ம் போன‌தேயில்லை. க‌ன‌டாவின் வ‌ர‌லாறு என்ப‌தே இர‌த்த‌க்க‌றைப‌டிந்த‌ வ‌ர‌லாறு என்ப‌து வேறு விட‌ய‌ம். ஆக‌வே க‌ன‌டிய‌ அர‌சிய‌ல் ச‌ட்ட‌த்தில் இவ்வாறான‌ கூட்ட‌ணிய‌ர‌சுக‌ள் அமைப்ப‌ப‌த‌ற்கு எதிரான‌ ஒரு ச‌ட்ட‌ம் கூட‌ இருக்க‌லாம் என்று நினைத்திருந்தேன். எனெனில் இர‌ண்டாம் உல‌க‌ம‌காயுத்த‌தின் பின், கொம்யூனிஸ்ட் க‌ட்சியொன்றை க‌ன‌டா த‌டை செய்த‌தாய் எங்கையோ வாசித்த‌து நினைவிலிருக்கின்ற‌து. எதுவும் ந‌ட‌க்க‌லாம் உல‌க‌த்தில்.

ஆக‌ வ‌ல‌துசாரிக‌ள் மீண்டும் ஆட்சிப்பீட‌த்திலேறினார்க‌ள். இந்த‌ வ‌ருட‌த்தில் இல்லாவிட்டாலும் அடுத்த‌ வ‌ருட‌த்தின் பிற்ப‌குதியிலாவ‌து ஒரு Recession க‌ட்டாய‌ம் நிக‌ழும் என்று ந‌ம‌து மேன்மைக்குரிய‌ நிதிய‌மைச்ச‌ர் செப்பினார். விரைவில் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட‌வுள்ள‌ வ‌ர‌வு செல‌வு திட்ட‌த்தில் பெரிய‌ துண்டு விழ‌ப்போகின்ற‌து (ஆக‌வே ம‌க்க‌ளே உங்க‌ளை எப்பாடுப‌ட்ட‌வாது காப்பாற்றுங்க‌ள்) என்றும் அவ‌ர் க‌ட்டிய‌ம் கூறினார் (ஆப்கானிஸ்தானிற்கே நிறைய‌ பில்லிய‌னின் நிதி போகின்ற‌து பிற‌கு எப்ப‌டி ப‌ட்ஜெட்டை balance செய்வ‌தாம்?). அவை எதுவும் குறித்து அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டாது, த‌மிழ் ம‌க்க‌ளின் த‌லைவிதியை நிர்ண‌யிப்ப‌த‌ற்காய் சுப்பிர‌ம‌ணிய‌ சுவாமியை, ஆன‌ந்த‌ச‌ங்கரியை இங்கே அழைத்து கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்தும் ந‌ம‌து புதிய‌ ச‌ன‌நாய‌க‌வாதிக‌ள் கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சு வ‌ந்ததால் புலிக‌ளுக்கு மேலும் 'ஆப்பு'க் கிடைக்க‌ப்போகின்ற‌து என்று கொண்டாடினார்க‌ள். எல்லாவித‌மான‌ ச‌ன‌நாய‌க‌மும் இருக்கின்ற‌தென்றால், புலிக‌ளை எதிர்ப்ப‌த‌ற்கு ம‌ட்டுமில்லை புலிக‌ளை ஆத‌ரித்துப் பேசுவ‌த‌ற்கான‌ உரிமைக்கும் குர‌ல் கொடுக்க‌வேண்டும் என்று உண்மையான‌ ச‌ன்நாய‌க‌ விழுமிய‌ங்க‌ள் தெரிந்திருந்தால், த‌மிழ்த் தேசிய‌ கூட்ட‌ணியில் ம‌க்க‌ளால‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ பா.உறுப்பின‌ர்க‌ளுக்கு க‌ன்டா விசா கொடுக்க‌ ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌போதெல்லாம் 'அர‌சிய‌லுக்கு அப்பால்' ச‌ன‌நாய‌க‌ உரிமையை முன்வைத்து குர‌ல் எழுப்பியிருக்க‌வேண்டும்... ஒரு சிங்க‌ள‌வ‌ரான‌ க‌லாநிதி விக்கிர‌பாகுவிற்கு விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தை எதிர்த்துக் குர‌ல் கொடுத்திருக்க‌வேண்டும், ஆனால் புலி அடையாள‌ம் கொடுத்து... அவ‌ருக்கு விசா ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌தைக் கொண்டாடிய‌தோடு ந‌ம‌து புலியெதிர்ப்பு ச‌ன்நாய‌க‌ உரிமைக‌ள் முடிந்துவிட்ட‌ன‌. புலி X புலி எதிர்ப்பு அர‌சிய‌லுக்கு அப்பால் ந‌க‌ர‌முடியாத‌ புல‌ம்பெய‌ர் அர‌சிய‌ல் நில‌வ‌ர‌ம் மிக‌வும் க‌வ‌லைக்குரித்தான‌து. புல‌ம்பெய‌ர்ந்து அர‌சிய‌லை முன்னெடுப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌து அப்படிச் சொல்ப‌வ‌ர்க‌ள், எத‌ற்கெத‌ற்கோ அறிக்கை விடுகின்றார்க‌ள்/கையெழுத்துப் போடுகின்றார்க‌ள். இன்று புல‌ம்பெய‌ர்ந்து கொண்டிருக்கும் வ‌ன்னிக்குள்ளிருக்கும் ம‌க்க‌ளுக்காக‌வே, கிழ‌க்கு மாகாண‌த்தில் மாறி மாறி போட்டுத்த‌ள்ள‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் அப்பாவிச் ச‌ன‌ங்க‌ளுக்காக‌வோ, ம‌லைய‌க‌ப்ப‌குதிகள், கொழும்பின் சுற்றுப்புற‌ங்க‌ளில் நிக‌ழும் க‌ண்மூடித்த‌ன‌மான‌ கைதுக‌ள்/ஆட்க‌ட‌த்த‌ல்க‌ள் ப‌ற்றியோ, இல‌ங்கை அர‌சின் மிலேச்ச‌ன‌த்த‌ன‌மான‌ கிள‌ஸ்ர‌ர்(Cluster) குண்டுத்தாக்குத‌ல்க‌ளுக்கு எதிராக‌வோ ஒரு அறிக்கை விடுவார்க‌ள் என்றால்..ம்கூம். இப்ப‌டியெல்லாம் செய்தால் ந‌ம‌து ந‌டுநிலைமை குழ‌ப்ப‌ப்ப‌ட்டு வ‌ர‌லாற்றில் த‌ம் பெய‌ர்க‌ள் பொன்னெழுத்துக்க‌ளில் த‌வ‌றாக‌ப் ப‌திய‌ப்ப‌ட்டு விடுமோ என்ற‌ க‌வ‌லை அவ‌ர்க‌ளுக்கு இருக்கிற‌து போலும். ந‌ம‌து ம‌க்க‌ளுக்காய் எழுந்த‌ இய‌க்க‌ங்க‌ளின் அர‌சிய‌ல் எல்லாம் எப்ப‌டி த‌னி ம‌னித‌ர்க‌ளில் போய் ஒடுங்கிக்கொண்ட‌ன‌வோ அதைவிட‌ மிக‌க்கேவ‌ல‌மாய் ந‌ம‌து புல‌ம்பெய‌ர் அர‌சிய‌ல் த‌னிம‌னித‌ர்க‌ளின் ந‌ல‌ன்க‌ளுக்காய் முன்னெடுக்க‌ப்ப‌டுவ‌தைக் காணும்போது மிக‌வும் கேவ‌ல‌மாக‌ இருக்கின்ற‌து. எத்த‌னையோ தேவைய‌ற்ற‌ விட‌ய‌ங்க‌ளை த‌மிழ்நாட்டிலிருந்து சுவீக‌ரித்துக்கொண்ட‌ நாம், த‌மிழ‌க‌த்துப் ப‌டைப்பாளிக‌ள்/ செய‌ற்பாட்டாள‌ர்க‌ளிட‌மிருந்து இவ்வாறான‌ ச‌ம‌ய‌ங்க‌ளிலாவ‌து -ச‌ற்றாவ‌து- ம‌க்க‌ளுக்கு ஏதாவ‌து உருப்ப‌டியாக‌ச் செய்வ‌து ப‌ற்றி க‌ற்றுக்கொள்ள‌லாம்.

நிற்க‌. க‌னடாவின் அர‌சிய‌லைப் ப‌ற்றியெழுத‌ வ‌ந்த‌ இக்க‌ட்டுரை எங்கெங்கோ அலைகின்ற‌து. நேர்கோட்டு வாழ்வே இனிச் சாத்திய‌மில்லை என்கின்ற‌போது நேர் எழுத்துமுறை சாத்திய‌மா என்ன‌? ஆக‌ இறுதியாய் க‌ன‌டா கொன்ச‌ர்வேட்டிவ் அரசு க‌விழ்வ‌த‌ர்கான‌ சூழ்நிலைக‌ள் சென்ற‌ வார‌த்திலிருந்து கனிய‌த்தொட‌ங்கியிருக்கின்ற‌ன‌.

சிறுபான்மை அர‌சாக‌விருக்கும் கொன்ச‌ர்வேட்டிவ் அர‌சு தானொரு பெரும்பான்மையாக‌ அர‌சாக‌ த‌ன்னை நினைத்து த‌ன்னிச்சையாக‌ முடிவுக‌ளை எடுக்க‌த்தொட‌ங்கிய‌போது, இம்முறை லிப‌ர‌ல், என்டிபி, ப்ளொக் கியூபெக்கா சேர்ந்து கொன்ச‌ர்வேடிவ் க‌ட்சியிற்கு எதிரான‌ ந‌ம்பிக்கையில்லாப் பிரேர‌ணையை வ‌ருகின்ற‌ திங்க‌ட்கிழ‌மை கொண்டுவ‌ருகின்ற‌ன‌. பில்லிய‌ன் க‌ண‌க்கில் ப‌ண‌த்தைச் செல‌வ‌ழித்து இர‌ண்டு வ‌ருட‌த்திற்குள் மூன்றாவ‌து தேர்த‌லை க‌ன‌டிய‌ ம‌க்க‌ள் ச‌ந்திக்க‌ விரும்ப‌மாட்டார்க‌ள் என்ப‌தால், லிப‌ர‌லும், என்டிபியும் இணைந்து கூடட‌ணிய‌மைத்து அர‌சைத் த‌ங்க‌ளுக்குத் த‌ரும்ப‌டி கோருகின்றார்க‌ள். ப்ளொக் கியூபெக் தான் ஆட்சியில் ப‌ங்குபெற்றாம‌ல் வெளியிலிருந்து 2010 ஆண்டுவ‌ரை ஆத‌ர‌வு த‌ருகின்றோம் என்றிருக்கின்றார்க‌ள். கொன்ச‌ர்வேடிவ் க‌ட்சி க‌விழ்வ‌து உறுதியாகிவிட்ட‌து. வ‌ருகின்ற‌ ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் ச‌ம‌ர்பிக்கின்ற‌ ப‌ட்ஜெட் வ‌ரையாவ‌து பொறுத்திருக்க‌... என்று பிர‌த‌ம‌ர் க‌த‌ற‌த்தொட‌ங்கியுள்ளார்.

இம்முறை யார் க‌னடாவில் ஆட்சியிலிருப்ப‌து என்ப‌தை க‌வ‌ர்ன‌ர் ஜென‌ர‌லே தீர்மானிக்க‌வேண்டிய‌வ‌ராய் இருக்கின்றார். லிப‌ர‌ல்-என்டிபி இணைந்து, இன்னொரு தேர்த‌லுக்கு அழைப்பு விடுக்காது, தேர்த‌லில்லாது ஆட்சிய‌மைப்ப‌த‌ற்கு அழைப்பு விடுத்த‌து ஒரு ந‌ல்ல‌தொரு முய‌ற்சியே. ஆக‌ க‌வ‌ர்ன‌ர் ஜென‌ர‌லுக்கு மூன்று தெரிவுக‌ள் உள்ள‌ன‌.

முத‌லாவ‌து உட‌னடித் தெரிவாய் த‌ன‌க்குள்ள‌ அதிகார‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி பாராளும‌ன்ற‌த்தை ஒத்திவைத்த‌ல் (ஆக‌க்குறைந்த‌ அடுத்த‌ ப‌ட்ஜெட் ச‌ம‌ர்ப்பிக்கும் வ‌ரையாவ‌து), அதையேதான் கொன்ச‌ர்வேடிவ் அர‌சாங்க‌ம் கேட்கின்ற‌து. அந்த‌ இடைவெளிக்குள் ஏதாவ‌து ச‌ம‌ர‌ச‌த்தை பின்க‌த‌வுவ‌ழியால் செய்ய‌லாம் என்று ஆட்சியிலிருக்கும் வ‌ல‌துசாரிக‌ள் ந‌ம்புகின்ற‌ன‌ர். இர‌ண்டாவ‌து தெரிவு, பாராளும‌ன்ற‌த்தைக் க‌லைத்து இன்னொரு தேர்தலை ந‌ட‌த்துவ‌து. மூன்றாவ‌து தெரிவு, லிப‌ர‌ல்‍-என்டிபி கூட்ட‌ணிக்க‌ட்சிக‌ளை ஆட்சிய‌மைக்க‌க் கேட்ப‌து.

ப்ளொக் கியூபெக்கா க‌ட்சியின‌ரை பிரிவினைவாதிக‌ள் என்று மோச‌மாக‌த் திட்டும்..., புதிய‌ குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் மீது ச‌ட்ட‌ விதிகளை இறுக்கும்..., ஆப்கானிஸ்தானிலுள்ள‌ க‌னேடிய‌ இராணுவ‌த்தை திருப்பிய‌ழைக்க‌ விரும்பாத‌..., ச‌ம‌ர்பிக்கும் ப‌ட்ஜெட்டில் சுற்றுச்சூழ‌ல் குறித்து அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டாத‌, கொன்ச‌ர்வேட்டிவ் க‌விழ்த்து ஒரு கூட்டணி அர‌சு வ‌ருவ‌தே ம‌க்க‌ளுக்கு ந‌ன்மை ப‌ய‌க்கும். மேலும் இட‌துசாரித்த‌ன்மையுள்ள‌ என்டியிபியின‌ர் ஆட்சியில் ப‌ங்குபெறும்போது ம‌த்திய‌/கீழ்த்த‌ர‌ ம‌க்க‌ளிற்கும், சிறுபான்மையின‌ருக்கும், புதிய‌ குடிவ‌ர‌வாள‌ருக்கும் ஏதாவ‌து சில‌ ந‌ன்மைக‌ளாவ‌து நிக‌ழும் சாத்திய‌முமுண்டு.

ம் நினைப்ப‌தெல்லாம் ந‌ட‌ந்துவிட்டால்...?


குறிப்பு 1 : கியூபெக‌ த‌னிநாடாக‌ பிரிய‌வேண்டும் என்ற‌ ப்ளொக் கியூபெக்கா உள்ளிட்ட‌ க‌ட்சிக‌ள் முக்கிய‌ கோரிக்கையாக‌ வைத்திருந்தாலும், 1967ல் ரூடோ லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராகிப் பிர‌த‌ம‌ரான‌திலிருந்து இற்றைவ‌ரை லிப‌ர‌ல் க‌ட்சியிலிருந்து பிர‌த‌ம‌ர் ஆன‌வ‌ர்க‌ள் எல்லோரும் கியூபெக‌ மாநில‌த்திலிருந்தே வ‌ந்திருக்கின்றார்க‌ள் என்ப‌து க‌வ‌ன‌திற்குரிய‌து. இன்றைய‌ லிப‌ர‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ரும் கியூபெக‌ மாகாண‌த்தைச் சேர்ந்த‌வ‌ரே.

குறிப்பு 2: க‌ட‌ந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளில் என்டிபி க‌ட்சியின‌ர், 19, 29, 37 ஆச‌ன‌ங்க‌ளென‌ வ‌ள‌ர்ச்சிபெற்று வ‌ருவ‌து -த‌னிப்ப‌ட்ட‌வ‌ளவில்- என‌க்கு உவ‌ப்பான‌ விட‌ய‌ம்.

ந‌ன்றி: விக்கிபீடியா (தேர்த‌லின் க‌ட்சிக‌ள் பெற்ற‌ ஆச‌ன‌ங்க‌ளின் விப‌ர‌ங்க‌ளுக்கு)

ப‌ட‌ம் 1: க‌ன‌டா அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ள் தொலைக்காட்சி விவாத‌த்தின்போது
பட‌ம் 2: க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌ம்