கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எதிர்வினைகளால் மூச்சுத்திணறும் சமூகம்

Monday, March 21, 2016

மூன்று தசாப்தங்களுக்கு மேலாய் ஆயுதப்போராட்டம் நடந்து முடிந்து ஒரு பெரும் வெற்றிடம் உருவாகியிருக்கும், இன்றைய ஈழத்துச் சூழலில் விரிவாக வாசிக்கவும் உரையாடவும் வேண்டிய முதன்மையான இருவராக நான் நினைப்பவர்கள் டேவிட் ஐயாவும், மு.தளையசிங்கமும். முன்னவர் நீண்டகாலம் வாழ்ந்தவர், பின்னவர் இளம்வயதிலேயே மறைந்துபோனவர். எனினும் இருவரும் இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்த காலத்திற்கும், இயக்கங்களின் ஆயுதப்போராட்டங்கள் தீவிரமடையும் காலத்திற்கும் இடையில் தனித்துவமாக இயங்கியவர்கள்/இயங்க விரும்பியவர்கள் என்றவகையில் அவர்களை முக்கியப்படுத்துகின்றேன்.

டேவிட் ஐயா, காந்தியத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவரெனினும், அவர் காந்தியப் பண்ணைகள் இயங்கிய காலங்களில் ஒரு தனிநாடு குறித்து அனுதாபமோ அல்லது அது குறித்து தன் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக்கொண்டவரோ அல்ல. மு.தளையசிங்கம் 1956 தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்ததோடு அவரது 'ஒரு தனி வீடு' (1960) நாவலின் இறுதியில், தனிநாடாகப் பிரிந்துபோவதை ஒரு கதாபாத்திரத்தினூடாக முன்வைக்கின்றார்.

டேவிட் ஜயா, தனது பிற்காலங்களில் ஆயுதப்போராட்டம், தனிநாட்டுக் கோரிக்கை போன்றவற்றின் மீது ஆதரவான ஒருவராக மாறியதாய் அறிகின்றேன். மு.தளையசிங்கம் தனிநாட்டுக் கோரிக்கையை தொடக்க காலத்தில் ஆதரித்தபோதும், சிங்கள இனவாதத்திற்கெதிராக எழுந்த தமிழ் அரசியல் அமைப்புக்களும் இன்னொரு இனவாத இயக்கமாய்த் தெரிகின்றனர் என அவர்களை பிற்காலத்தில் நிராகரிக்கவே செய்கின்றார். ஆகவேதான் அவர் 'சர்வோதயத்தை' அரசியல் முன்னணியாக்கியதோடல்லாது, தேர்தலிலும் தம் கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்துகின்றார். தொடர்ச்சியாக 'சர்வோதயம்' எந்தத் திசையில் போயிருக்கும் எனக் கணிக்கமுடியாதபடிக்கு மு.தளையசிங்கம் தனது 37வது வயதில் மரணமடைந்து போகின்றார்.

டேவிட் ஐயாவும், தளையசிங்கமும் வழமையாய் இருக்கும் ஒரு பாதையை விலத்திவிட்டு சமூக மாற்றத்திற்காய் ஒரு தனிப்பாதையை தேர்ந்தெடுத்தவர்கள் என்பதாலேயே இவர்கள் இருவரையும் இங்கே முன்னிலைப்படுத்த விரும்புகின்றேன். ஏற்கனவே இருக்கின்ற பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்கள் ஏதோ இன்றிருக்கும் அரசியல் கட்சிகளைப் போல அன்றிருந்த ஒன்றில் கலந்துவிட்டிருக்கக்கூடும். ஆனால் அவ்வாறு இல்லாது - முக்கியமாய் சிங்கள இனவாதக் கட்சிகளுக்கு எதிராய் எதிர்வினை போல ஒன்றைக் கட்டியமைக்காமல்-வேறொரு தனித்துவமான வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். இன்றைக்கு அரசியல் களப்பணியிலும், கோட்பாட்டு உருவாக்கங்களிலும் தம்மை இணைத்துக்கொண்டிருப்பவர்கள் இவர்கள் இரண்டு பேரையும் மீண்டும் வாசிப்புச் செய்வதன் மூலம் புதிய தளங்களைக் கண்டுகொள்ள முடியும் என்றே நம்புகின்றேன்.
 

மேலும் தளையசிங்கம், சிங்களப் பேரினவாதத்தைத் தெளிவாக இனங்கண்டதுபோலவே, தமிழர்களுக்குள் இருந்த சாதிவெறியையும் இனங்ண்டு போராட்டங்களை நடத்தியிருக்கின்றார். டேவிட் ஐயாவும் தனது முதலாவது காந்தியப் பண்ணையிற்கான அடியையும் வவுனியாவில் இருந்த அருந்ததி மக்களுக்குள்ளேயே தொடங்கியிருந்தார்.

எனவே இருவரும் தாம் வாழ்ந்த சமூகத்தின் உள்ளேயும் வெளியேயும் நின்று யோசித்திருக்கின்றார்கள். ஒன்றை விட மற்றொன்று முக்கியமானதென ஒன்றை விலத்தியோ, புதைத்தோ நகராது நம் சமூகத்திற்கு இருந்த வெளி முரண்பாடுகளையும் மட்டுமின்றி உள்ளக முரண்பாடுகளையும் சமாந்தரமாகக் கொண்டு சென்றிருக்கின்றனர்.


இருவரும் சும்மா பேசிக்கொண்டிருக்காமல், தாம் நினைத்தவற்றை நிகழ்த்தியும் காட்டியிருக்கின்றார்கள். கோட்பாடுகளும், களப்பணிகளும் இணையாத எந்தப் போராட்டமும் அவ்வளவு எளிதில் அடுத்த அடியை முன்னகர்த்தியதாக வரலாற்றில் உதாரணங்களில்லை. அவ்வாறு வைத்திருந்தாலும் இந்த இணைவில்லாமலே காலத்தில் அவை விரைவில் உதிர்ந்தும் போயிருக்கின்றன.

திர்வினைக்கும், ஆய்வுகளுக்கும் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கின்றன எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்தபடியே இருக்கின்றேன். இன்றைய ஈழத்துச் சூழலில் அரசியல் கட்டுரைகள் எனப்படுபவற்றில் பெரும்பாலானவை எதிர்வினைகளே. எதிர்வினைகளுக்கு தேவையும், அதற்கென ஓரிடமும் வரலாற்றில் எப்போதும் உண்டு. ஆனால் எதிர்வினைகள் ஒருபோதும் ஆய்வுகளாகிவிடாது. சிங்களப் பேரினவாதத்திற்கெதிராக நாம் முன்வைத்த ஒரு  எதிர்வினையே ஆயுதப்போராட்டம். அதை அப்படியே எதிர்வினை போலவே எந்த மாற்றமும் இல்லாது வைத்ததிருந்ததாலேயே இறுதியில் என்ன நடந்தது என்பதையும் நாமறிவோம். 

இந்தியாவிற்குக் கிடைத்த அம்பேத்காரைப் போலவோ, பெரியாரையைப் போலவோ, காந்தியைப் போலவோ நமக்கு நிதானமாகவும் நீண்டகாலமாகவும் இயங்கிய ஆளுமைகள் கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயந்தான். ஆனால் நமக்குக் கடந்தகாலத்தில் கிடைத்த டேவிட் ஜயா, தளையசிங்கம் போன்ற சிறு நம்பிக்கை கீற்றுக்களை வைத்து நம்மை மீள்விமர்சனம் செய்வதுகொண்டு முன்னகர்ந்து போவதில் எந்தத் தவறுமில்லை. முயற்சிக்கலாம். 

( Nov 04, 2015)      

'சாம்பல் பறவைகள்'

Thursday, March 10, 2016


"உன‌க்கான‌ இட‌ம் இதுவ‌ல்ல‌வென‌ உன‌க்கு ந‌ன்கு தெரியும். ப‌ல‌முறை ப‌ல்வேறு ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் அது நிரூபிக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கிற‌து. ஆனாலும் நீ சாம‌ர்த்திய‌மாய் சில‌ கார‌ண‌ங்க‌ளை உருவாக்கி அவ‌ற்றுக்காய்த்தான் இங்கே தொங்கி பிடித்துக்கொண்டிருக்கின்றேன் என்று கூறிக்கொண்டிருக்கின்றாய். உன‌து சுய‌ம், உன‌து க‌ர்வ‌ம், உன‌து கோப‌ம் எல்லாம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அழிக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்ற‌து என்ப‌தை நீ ந‌ன்க‌றிவாய். இனி முதுகை இன்னுமாய் வ‌ளைப்ப‌த‌ற்கு முள்ள‌ந்த‌ண்டும், போலியாய்ச் சிரிப்ப‌த‌ற்கு உத‌டுக‌ளும் இல்லையென்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய‌ புதிய‌ முக‌மூடிக‌ளை அணிந்துகொள்வ‌த‌ற்கு நீ த‌யாராக‌ இருக்கிறாய். உன்னுடைய‌ க‌ன‌வுக‌ள் வேறுவித‌மான‌வை. அதை நீ செம்ம‌ண் த‌ரைக‌ளில் காற்ச‌ட்டை க‌ழ‌ன்று விழ‌ விழ‌ ஓடிய‌ நாட்க‌ளிலிருந்தே நாம‌னைவ‌ரும் அறிவோம். ஆனால் ஒரு ம‌த்தியான‌ வேளையில் உன‌து ம‌ண்ணையும், அரைக்காற்ச‌ட்டைக‌ளையும் நீ கைவிட்டு வந்த‌பின், உன‌து க‌ன‌வுக‌ளையும் கைவிட்டு வ‌ந்துவிட்டாயோ என்றுதான் எண்ண‌த்தோன்றுகின்ற‌து"

வசந்தன்: இப்போது இந்தக் கடந்துபோகின்ற பொம்பிளைப்பிள்ளை ஏன் நீலக்கலரில் நகத்திற்குச் சாயம் பூசியிருக்கா? அவர் கூட்டிக்கொண்டு போகின்ற நாயிற்கு என்ன பெயராய் இருக்கும்..... என்பது போன்ற கேள்விகள்.

நகுலன்: இதெல்லாம் ஒரு கேள்விகள்...

வசந்தன்: பதில்களை ஏற்கனவே தெரிந்த எளிய கேள்விகளை நாங்கள் எழுப்பினால், உடலுக்கு மட்டுமில்லை, உள்ளத்திற்கும் மிச்சம் நல்லது.

நகுலன்: சரி, இப்ப சொல்லு, வாழ்க்கை என்றால் என்ன?
வசந்தன்: ஆ...வாழ்க்கை என்றால்.... என்னவென்றால்... உலாத்தலுக்குக் கூட்டிக்கொண்டு போகின்ற இந்த நாயிற்கு, அவா தன்னுடைய பழைய போய்-பிரண்டின்ரை பெயரைத்தான் வைத்திருப்பா...
போதுமா?

நகுலன்: உனக்கு நாயிற்கும் வாழ்க்கையிற்கும் வித்தியாசம் தெரியவில்லை.


('சாம்பல் பறவைகள்' நாடகம், 'உயிர்ப்பு - 05' நிகழ்வினூடாக, மார்ச் 05, 2016 ரொறொண்டோ யோர்க்வூட்ஸ் அரங்கில் மேடையேறியது, அதில் வரும் முதலாவது காட்சி இது.
புகைப்படம்: ஈகுருவி)