கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஆட்டுக்குட்டிகளும், உதிர்ந்த சில பழுப்பு இலைகளும்

Monday, October 24, 2005

-டிசே தமிழன்

அப்போதுதான் கோடை முடிந்து இலையுதிர்காலம் ஆரம்பித்திருந்தது. ஆக வெக்கையோ, குளிரோ இல்லா மிதமான காலநிலை அந்தப் பருவத்திற்கு ஒருவித அழகைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இவன் வகுப்பறைக்குள் இருந்து, மழை பொழியத்தொடங்கிய பின்னேரப்பொழுதை இரசிக்கத் தொடங்கியிருந்தான். மெல்லிய சாம்பல் நிற வானப்பின்னணியில் இலைகள் உதிர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கையில் மனது களிமண்ணைப் போல நெகிழத்தொடங்கியிருந்தது. இவனுக்கு இன்னும் ஒரு மாதம் கடந்தால் பதினைந்து வயது ஆரம்பிக்க இருந்தது. அன்று பாடசாலை முடிந்து பஸ்ஸைப் பிடிக்க சற்றுத் தாமதமாகியதால், வழமையாக பஸ் நிறுத்தத்தில் நிற்கும் நண்பர்களும் போய்விட்டிருந்தனர். பஸ் வர இனி எத்தனை நிமிடங்களாகும் என்று அட்டவணையைப் பார்த்துச் சலித்து தெருவை வெறிக்கத்தொடங்கையில்தான் அவளும் பஸ்ஸ¤க்காய் வருவதைக் கண்டான். அவள் இவனை விட இரண்டு வகுப்பு மேலே படித்துக்கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும், 'Boi, do you have (an) extra ticket?' என்று வினாவ, 'நான் ரிக்கெட் தாறன்; ஆனால் கொஞ்சநேரம் நீ என்னை அணைத்துக்கொள்ளவேண்டும்' என்றான் இவன். இந்த வயதுக்குரிய குறும்பு இப்படித்தான் கேட்கும் என்று நினைத்தாளோ என்னவோ இவனை அணைத்துக்கொள்ளத் தொடங்கினாள். அணைத்தபடியிருக்கையில் பஸ் தொலைவில் வருவதைக் கண்டதும், 'என்னிடம் மீதமிருக்கும் மூன்று ரிக்கெட்டுக்களையும் தாறன் ஆனால் நீ எனக்கு ஒரு முத்தம் தரவேண்டும்' என்று அவளது காதுக்குள் கிசுகிசுத்தான். பஸ் கிட்டநெருங்கும்போது அவனுக்கொரு முத்தமொன்றைக் கொடுத்துவிட்டு ஒரேயொரு ரிக்கெட்டை மட்டும் வாங்கிக்கொண்டு பஸ்சினுள் ஏறினாள். அவள் இறங்கும் இடம் வந்தபோது, 'உனது ரெலிபோன் நம்பரைத் தரமாட்டியா?' என்று இவன் கேட்க, 'Baby boi, you're close to my little brother's age. don't ever think of dating me. If you keep botherin' me, I'll kick your butt' என்று சிரித்தபடி அவனை விலத்தியபடி போயிருந்தாள். என்றைக்குமாய் நினைவுகொள்ள, இவன் பெற்ற முதலாவது முத்தமாய் அது இருந்தது.

பதினாறு வயதாகும்போது குடிக்க ஆரம்பித்திருந்தான். இவனது நண்பர்கள் வட்டத்தில், குடிக்க விரும்பாதவர்களை ஒதுக்கி வைப்பதைப் பார்த்து இவனும் குடிக்க ஆரம்பித்தான். அத்தோடு இவனுக்கும் குடித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் ஏற்கனவே இருந்தது என்பதுவும் உண்மை. பதினெட்டு வயதுக்குப் பிறகுதான் குடிக்க முடியும் என்று அரசாங்கம் கூறினாலும், இவனுக்கும் இவனது நண்பர்களுக்கும் பழக்கமான அண்ணாமார்களின் மூலம் குடிவகைகள் தடங்களின்றி விநியோகம் நடந்தது. அதற்கு இவன்கள் அந்த அண்ணாமாருக்குச் செய்யவேண்டியது, அப்படியும் இப்படியுமாய் அலைபாயத்துடிக்கும் இவன்கள் வயதொத்த பெண்களின் தொலைபேசி இலக்கங்களை வாங்கிக்கொடுக்கவேண்டும். புகைக்கவும் குடிக்கவும் தெரிந்த பதின்மவயதுப்பையன்களைத்தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்கும் என்று ஏனையோரைப் போல இவனும் நம்பினான். புகைபிடித்து புகையை ஸ்ரைலாக வாய்க்குள்ளிலிருந்து விடுவதைப் படம் எடுத்துக் காட்டி, 'girl it's really wicked' என்று பிற பெண்கள் ஆச்சரியமாய்க் கூறுவதைக் கேட்பதுதான் இவன் படித்த பாடசாலைப் பெண்களில் அப்போது பிரபலமாய் இருந்தது. அத்தோடு தங்களுக்கும் சிகரேட் தாவென்று கேட்கும் பெண்களுடன் தொடர்ந்து உரையாடி வார்த்தைகளால் வளையம் போட்டு கழுத்தை இறுக்கி கோழிக்குஞ்சைப் போல அமுக்குவதும் சுலபமாயிருந்தது. ஆனால் இவன், முதல் முதலில் சுற்றித்திரிந்த பெண்ணுக்கும் இவனுக்கும் கிட்டத்தட்ட நான்கு வயது வித்தியாசமிருக்கும். இவன் உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அந்தப்பெண் வளாகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள். படிப்பதற்காய் அரசாங்கம் கடனாய்க் கொடுத்த உதவிப்பணத்தில் பெரும்பகுதியை அவள் இவனுக்காகவே செலவுசெய்வாள். புதுப்புது ஆடைகள், சப்பாத்துக்கள் பிராண்ட் நேம்களுடன் அணிந்துவருவதைப் பார்த்து அவனது நண்பர்கள் பொறாமைப்பட்டாலும், தான் தன்னைவிட நான்குவயது கூடிய பெண்ணுடன் டேட்டிங் செய்வதைக் கவனமாக மறைத்துக்கொண்டிருந்தான். கொஞ்ச காலத்துக்குப் பிறகு அந்தப்பெண்ணுக்கு அவளோடு வளாகத்தில் படித்த பெடியன் ஒருவனோடு காதல் வர இவனிடம் நேரடியாகச் சொல்லியே உறவைத் துண்டித்தாள். இவன் கெட்ட கெட்ட வார்த்தைகளால் எல்லாம் திட்டி, இவ்வளவு காலமும் தன்னோடு திரிந்தற்கு நன்றியாய் 'b****' என்று நாமமும் சூட்டி அனுப்பி வைத்தான். இவனுக்கு அவளது நேசம் இல்லாமற்போகின்றதே என்பதைவிட, தனது செலவுக்கு காசு இனி வராதே என்ற கவலைதான் அதிகம் மனதில் நிரம்பியிருந்தது.

ஒரு நாள் இவனும், இவனது நண்பனும், நண்பனின் கேர்ள் பிரண்டும் கிளப் ஒன்றுக்கு போயிருந்தனர். அப்போது வெளியே நல்லாய் பனி கொட்டிக்கொண்டிருந்தது. கிறிஸ்மஸ் வருவதற்கு இன்னும் சில நாள்களே இருந்தது என்றபடியால் எல்லா இடங்களிலும் கொண்டாட்டத்தின் களை கட்டியிருந்தது. சனங்களுக்கும் கிறிஸ்மஸ் வந்தால் இருக்கின்ற எல்லாப் பிரசினைகளும் தங்களைவிட்டுப் போய்விடும் என்ற மாதிரியான மென்டாலிட்டியோடுதான் இருப்பினம். கிறிஸ்மஸ் முடிந்து புதுவருடமும் பிறந்துவிட்டால் யதார்த்த உலகுக்கு வந்து பெருமூச்சு விட்டபடி அடுத்த கிறிஸ்மஸை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கதொடங்குவார்கள். பாலன் பிறந்துகொண்டும், வளர்ந்து கொண்டும் சிலுவையில் அறையப்பட்டும், உயிர்த்து எழுந்துகொண்டும்தான் இருக்கிறார். இது பத்தாது என்று ரூபாக் போன்றவர்கள் கறுப்பு ஜீசஸ் வேண்டுமென்டு பாடல்களில் பாடிக்கொண்டு இருந்தது சிலவேளைகளில் இவனுக்கு எரிச்சலாயிருந்தாலும், கறுப்பு ஜீசஸை புனிதமாக்காமல் தன்னை மாதிரி பலவீனங்களுடன் உள்ள மனிதராய் அடையாளப்படுத்தியது இவனுக்குப் பிடித்திருந்தது.

டான்ஸ் கிளப்புகளுக்கு போவதென்றால் இரவு பதினொரு மணிக்குப் பிறகுதான் வெளிக்கிடவேண்டும். பன்னிரண்டு மணிக்கு டான்ஸ் ஹோல் நிரம்பத்தொடங்கிவிடும். ஒரு மணிக்கு டான்ஸ் உச்சம்பிடிக்கும். இரண்டும் மணிக்கு கிளப்பை மூடவேண்டும் என்பது சட்டம் இட்ட நிபந்தனை. ஆனால் எவரும் அதைப் பெரிதாக எடுப்பதில்லை. சிலவேளை இரண்டு மணிக்கு பொலிஸ் வந்து கதவடியில் நிற்கும். ஆனால் ஆடுகின்ற பெண்களைப் பார்த்து மயங்கியோ கிறங்கியோ என்னவோ தெரியாது, இழுத்து மூடு என்று ஒற்றைக்காலில் நின்று அவர்கள் அதட்டமாட்டார்கள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்று தமிழ் வகுப்பு ஒன்றில் படித்தது இவனுக்கு நினைவில் உண்டு. ஆனால் பொலிஸ¤ம் வாயைப் பிளந்து நிற்கும் என்பதை கிளப்புகளுக்குப் போனாப்பிறகுதான் அறிந்துகொண்டான். ஒரு மணிக்கு டான்ஸ் ஹோல் நிரம்புகிறதென்றால், ஒன்றரைக்கு ஆட்டம் highற்குப் போகும். '..grind with me baby' போன்ற வரிகள் உள்ள பாடல்கள் உச்சஸ்தாயில் ஒலிக்கத் தொடங்கும். குடிவெறியில் பலபேருக்கு என்ன நடக்கிறதென்றோ அல்லது என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்றோ தெரியாது. அதுவும் கஞ்சாவைக் கொஞ்சம் இழுத்திருந்தால் நிலைமை பற்றி எதுவுமே விபரிக்கத் தேவையில்லை. வெளியில் இருந்து ஒருவர் அந்த சமயத்தில் கிளப்புக்குள் நுழைவாரென்றால், ஏதோ உடலுறவுக்கு முன் ஆடைகளுடன் foreplay செய்துகொண்டிருக்கின்றார்கள் என்றுதான் ஆடுபவர்களைப்பார்த்து நினைக்கக் கூடும். ஹை ஹீல்ஸைப் போட்டுக்கொண்டும் கீழே வழுக்கி விழாமல் எப்படி இசையின் இலயத்துக்கேற்ப பெண்கள் நடன்மாடுகின்றார்கள் என்பது இவனுக்கு எப்போதும் ஒரு அதிசய விசயமாய்த்தான் இருக்கும்.

இவனது நண்பனுக்கும், அவனது காதலிக்கும் அண்மைக்காலமாய் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறதென்று இவனுக்குச் சாடைமாடையாய்த் தெரியும். ஆனால் பிரண்ட் அவனாய்க் கூறும்வரை எதையும் கேட்பதில்லை என்று இவன் வாளாவிருந்தான். இவனது நண்பன், சில மாதங்களுக்கு முன் தான் அப்போது புதிதாய் மார்க்கெட்டுக்கு வந்த கமரா போன் ஒன்றை கன காசு செலவழித்து, தனது காதலிக்கு வாங்கிக்கொடுத்திருந்தான். நல்ல எக்ஸ்பென்சிவ்வான பொருட்கள் வாங்கிக்கொடுத்தால் பெண்கள் காலைச் சுற்றிக் கிடப்பார்கள் என்றுதான் இவனைப் போன்றவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். அன்றிரவு டான்ஸ் கிளப்பில் நடந்த சம்பவம் அவனது நண்பனின் வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது. இப்படி அடிக்கடி டான்ஸ் கிளப்புக்கு வந்து நண்பனின் காதலிக்கு, அங்கே வருகின்ற ஒரு பெடியனோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவள் இவனது நண்பனின் உறவை முற்றாகத்துண்டித்துவிட்டுப் போயிருக்கலாம். அவள் விசர் மாதிரி, இவங்களோடு கிளப்புக்கு வந்துவிட்டு, இரவு டான்ஸ் உச்சத்தை அடையும்போது அந்தப் புதுப்பெடியனோடு சேர்ந்து ஆடத்தொடங்கிவிட்டாள். ஆட்டம் என்றால் சும்மா ஆட்டமல்ல. அதுவும் வேண்டும் என்று இவனின் நண்பனைப் பார்ப்பதும், பிறகு ஏதோ அவனைப் பற்றி நக்கலாய்ச் சொல்லிச் சிரிப்பதும் என்று அவள் செய்தது இன்னும கூட இவனது நண்பனைக் கோபப்படுத்திவிட்டது. அன்று நல்லாய் இவங்கள் குடித்துமிருந்தார்கள்.

நண்பன் அந்தப்பெடியனுக்கருகில் போய் சடாரென்று ஒரு உதைகொடுத்தான். அந்தப்பெடியனும் இதை எதிர்ப்பார்க்கவில்லை, வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருந்துவிட்டான். ஆனால் அவனோடு அவனுடைய நாலைந்து நண்பர்கள் வந்திருந்தனர். அவர்கள் இவனது நண்பனுக்கு அடிப்பதற்காய் சுற்றி வர, கிளப் பவுண்ஸர்கள் வந்து தடுத்துவிட்டார்கள். இவனுக்கு அந்த நேரத்திலும் புத்தி நன்றாக ஓடியது. இனி இந்தப் பெட்டை நண்பனிடம் வரமாட்டாள் என்பது தெளிவாய்ப் புரிந்ததால், அவள் மேசையில் வைத்துவிட்டுப் போன புது போனைச் சுருட்டிக்கொண்டு வெளியே நண்பனுடன் வந்துவிட்டான். நண்பனோ அந்தப்பெடியனுக்கு இன்னும் இரண்டு உதைகொடுக்காமல் வீட்டை போய்ச்சேருவதில்லை என்பதில் உறுதியாய் இருந்தான். 'நாங்கள் ரெண்டுபேர்; அவங்களிலை நாலைந்து பேர் நிற்கின்றாங்கள், சமாளிக்க முடியாது' என்றான் இவன். அத்தோடு நல்லவெறியில் நின்றதால், வலுவாய் நின்று அடிபடவும் முடியாது என்பது இவனுக்குத் தெரியும்.

இவங்கள் இப்படி விவாதித்துக்கொண்டிருக்கையில் அவளையும் கூட்டிக்கொண்டு அவங்கள் வெளியே வந்துவிட்டாங்கள். இவனது நண்பன் கார்க்கதவைத் திறந்துகொண்டு ஆவேசமாய் அந்தப்பெடியனை அடிக்க ஒடத்தொடங்கினான். 'இப்ப போகதையடா அவங்கள் சாத்திப்போடுவாங்கள்' என்று இவன் கத்தினான். அவங்கள் ஜந்துபேர். சுற்றி வளைத்து சரமாரியாக அடிக்கத் தொடங்கினாங்கள். கழுத்தில் மொத்த சைஸ்ஸில் போட்டிருந்த வெள்ளிச் செயினை கையில் சுற்றிக்கொண்டு மாறி மாறி அடித்தார்கள். இவனுக்கு முகத்தில் பயங்கர அடி. பற்கள் எல்லாம் உதிர்ந்துபோகின்றமாதிரி வலித்தது. ஆனால் இவனது நண்பனுக்கு இடம் வலம் என்று எதுவும் பார்க்காமல் ஸ்நோவுக்குள் புதைய புதைய அடித்தார்கள். அடி தாங்காமல் நண்பன் சுருண்டு விழுந்துவிட்டான். அவங்களும் இவன் மயங்கிவிட்டான் என்று அவளையும் கூட்டிக்கொண்டு போய் காரில் ஏறும்போது, ஏதோ வெறி வந்தமாதிரி இவனது நண்பன் தனது காரின் பின் கதவைத் திறந்து கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு போய் அந்தப்பெடியனின் இடுப்பில் குத்தி இழுத்துவிட்டான். இரத்தம் குபுகுபுவென்று பெருக்கத்தொடங்கிவிட்டது. 'if anyone wanna f*** me, step up yoo' என்று அவன் இரத்தம் படிந்த கத்தியைப் பிடித்துக்கொண்டு கத்தியதைப் பார்க்கும்போது இவனுக்கே பயமாயிருந்தது. எல்லோரும் பீதியில் உறைந்து போகத்தொடங்கினார்கள். விபரீதத்தை உணர்ந்து முதலில் சுதாகரித்துக்கொண்டது இவன்தான். நண்பனைப் பார்த்து, 'டேய் பொலிஸ் வரமுன்னம் இந்த இடத்தை விட்டுப்போயிடு, என்னை யார் இதைச் செய்தது என்று பொலிஸ் கேட்டால் தெரியாது என்று சொல்லிவிடுவன்' என்று இவன் கூறினான். இவனுக்குத் தெரியும் இவ்வளவு நடந்தாலும் கடைசிவரை அவனது காதலி இவனைக் காட்டிக்கொடுக்கமாட்டாள் என்று. குத்து வாங்கிய பெடியன் தப்புவது கஷ்டம்போல மூச்சுத் திணறி மூர்ச்சையாகத் தொடங்கினான். ஆனால் இவனது நண்பன் அந்த இடத்தை விட்டுப்போகமாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தான். 'அவளும் என்னைவிட்டுப் போய்விட்டாள், இனி என்ன வாழ்க்கை தனக்குத் தேவையாயிருக்கிறது' என்று விரக்தியாய் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு நின்றான். பிறகு பொலிஸ் வந்து நண்பனைப் பிடித்துக்கொண்டு போய் ஜெயிலுக்குள்ளை போட்டது.

நண்பன் ஜெயிலுக்குள் போனாப்பிறகும், அவனது (ex) காதலி நண்பனைப் பற்றி அடிக்கடி தொலைபேசியில் இவனோடு விசாரித்துக்கொண்டிருப்பாள். விசரி, இப்படி அவன் மீது பரிவாய் இருப்பவள், அந்த ஒரு நாள் நண்பனின் கண்முன்னால் செய்யாமல் வேறுவிதமாய் உறவை நிதானமாய் முறித்திருந்தால் நண்பனின் வாழ்வு பாழாயிருக்காதென்று இவன் யோசிப்பதுண்டு. என்றாலும் தனது நண்பனுக்கு இப்படிச் செய்தவளைச் சும்மா விடக்கூடாது ஏதாவது செய்யவேண்டும் இவனும் இவனது மற்ற நண்பர்களும் அடிக்கடி கதைத்துக்கொண்டு திரிவார்கள். ஒருநாள் இவன் தனது பிறந்தநாளுக்கு பார்ட்டி வைக்கப்போகின்றேன், இந்த ரெஸ்ரோரண்டுக்கு வாரும் என்று அவளுக்கு அழைப்பு விட அவள் தனது தோழி ஒருத்தியுடன் வந்திருந்தாள். பெடியங்கள் இவங்கள் கிட்டத்தட்ட பத்துபேர் இருந்திருப்பார்கள். அந்த மாதிரி சாப்பாடு தண்ணி என்று எல்லாம் ஓடர் கொடுத்துச் சாப்பிட்டார்கள். பில் ஆயிரம் டொலர்களைத் தாண்டி எகிறியிருக்கும். அப்போதுதான் இவனுக்கு ஒரு யோசனை வந்தது. மற்ற நண்பர்களையும் அழைத்துக்கொண்டு வெளியே வெளிக்கிட்டான். அவளும் நண்பியும் 'எங்களை விட்டிட்டு எங்கை போகிறியள்?' என்று கேட்க, 'வெளியே தம்மடித்துவிட்டு திரும்பிவாறம், நீங்கள் dessertற்கு ஓடர் செய்யுங்கோ' என்று கூறினான். அப்படியே வாசலில் நின்ற waiter டம், 'நாங்கள் அவசரமாக வெளியே போகவேண்டி உள்ளது. பணத்தை எங்களுடன் வந்த பெண்களுடன் கொடுத்துவிட்டு வந்திருக்கின்றோம். அவர்கள் dessert சாப்பிட்டு விட்டு உணவுக்குரிய பணத்தைக் கட்டுவார்கள்' என்று நினைவுபடுத்திவிட்டு இவங்கள் அனைவரும் கார்களில் ஏறி வீடுகளுக்குப் போய்ச்சேர்ந்துவிட்டார்கள். அவளும் அவளது நண்பியும்தான் முழு பில்லையும் பிறகு கட்டியிருக்கவேண்டும். அவள் அதற்குப் பிறகு இவனது 'செல்'லுக்கு எடுத்தால் இவன் கதைப்பதில்லை. இவன் தன்னை வேண்டுமென்றே தவிர்க்கின்றான் என்பது புரிந்துவிட, நல்ல 'செந்தமிழோடு' ஒரு நீண்ட மெஸேஜ் இவனுக்கு விட்டிருதாள். அந்த நேரத்திலும் தனக்குத் தெரியாக கனக்க கெட்டவார்த்தைகள் அவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பது இவனுக்கு வியப்பாயிருந்தது.

குத்தப்பட்ட பெடியன் அதிஸ்டவசமாய்த் தப்பியதால், சில வருடங்களுக்குப் பின் ஜெயிலில் இருந்து இவனது நண்பன் வெளியே வந்தான். கொஞ்ச மாதங்களுக்குப்பின் நண்பனுக்கு அருமையானதொரு பெண் காதலியாகக் கிடைத்திருந்தாள். ஆனால் நண்பன் குடியில் மூழ்க ஆரம்பித்திருந்தான். அதோடு ஜெயிலுக்குள் கிடைத்த சகவாசத்தால் potற்கும் அடிமையாகிவிட்டிருந்தான். நண்பனின் காதலி, இவனிடம் வந்து 'அவனை போதை மருந்து எடுக்கவேண்டாமென்று அட்வைஸ் செய்யடா' என்று கெஞ்சுவாள். நண்பனும் கொஞ்ச நாளைக்கு ஓமென்று இருப்பான் பிறகு தன்னாலை முடியலைடா என்று பழைய பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்துவிடுவான். ஒருநாள் over doseஆகிப் போய் இளவயதிலேயே இறந்தும்போனான். நண்பனின் இறுதிச்சடங்கின்போது அவனது காதலி அழுததைப் பார்த்தபோது இவனுக்குத் தனது நண்பன் அவளுக்காய் உயிரோடு திரும்பி வரமாட்டானோ என்று நினைக்கத்தோன்றியது. பிறகு அந்தப்பெண் இவனோடு கொஞ்சக்காலம் திரிந்தாள். இவன் எப்படி தன்னை சுதந்திரமானவனாய்க் காட்டி கொண்டாலும், இவனது அடிமனசில் கன்னி கலையாத, காதலில் ஒருபோதும் விழாத பெண்ணே துணையாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தான். மேலும் உயர்சாதிப் பெட்டையாக இருந்தால் சொந்தக்காரர்களாலும் பிரச்சினை எதுவும் வராது என்பது இவனுக்கு நன்றாகத் தெரியும்.

(2)
அந்தப்பெண்ணொடு அவன் முதன்முதலில் பள்ளிக்கூடத்திலை நடந்த multicutlure festivalலில்தான் முதன்முதலாய்க் கதைக்கத் தொடங்கினான். அதற்கு முதல் சிலபொழுது வகுப்புக்களுக்கிடையில் சந்திருந்தாலும் ஒருபோதும் நேருக்கு நேர் உரையாடியதில்லை. அவளுக்கு இவன் வேட்டி கட்ட கஷ்டப்பட்டுக் கொண்டு திரிந்ததைப் பார்க்க, சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. அத்தோடு அவளுக்கு கண்டறியாத தமிழ்க் கலாச்சார அடையாளங்கள் புதிதும் கூட. அவள் ஸ்பானிய பின்புலத்தில் வந்தவள். ஆனால் அவள் அதிகம் தமிழ் கேர்ஸ்ஸோடுதான் திரிகின்றவள். அவள்தான் இவனுக்கு வேட்டியைச் சுற்றிக் கட்ட உதவி செய்திருந்தாள். நல்லவேளையாக உள்ளுக்குள்ளை டெனிம் ஜீன்ஸ் போட்டிருந்தான். மானம் காப்பதற்கு மட்டுமில்லை, அந்தக் குளிர்காலத்திலை வேட்டியைக் கட்டிக்கொண்டு வெளியே போனால் அப்படியே ஒரு சிலையைப் போல உறைந்துவிடவேண்டிவரும் என்ற பயமுந்தான் காரணம். வேட்டி கட்ட உதவிசெய்தபடி அவள் தனக்கும் சாறி கட்டிப்பார்க்க விருப்பம் இருக்கிறதென்று சொன்னாள். அத்தோடு தங்களின் கலாச்சாரத்திலும் சாறிக்கு நிகரான ஒருவித ஆடை இருப்பதாயும் கிராமப்புறங்களில் அநேக பெண்கள் அதைத்தான் அணிவார்கள் என்றும் கூறினாள். இவனும், 'சாறி கட்டுவது பெரிய பிரச்சினையில்லை, ஆனால் இன்னொரு மனித உடலையும் காவுகின்ற பாவனையுடந்தான் நீ நடமாடவேண்டி வரும்' என்று எச்சரித்தான். இப்படி அந்த multiculture dayயில் ஆரம்பித்த பழக்கம், வகுப்புக்களில், வகுப்பு இடைவேளிகளில், மதியவுணவு வேளைகளில் என்று சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது.

எப்போதும் வெள்ளை, பழுப்பு நிறத் தோல் கொண்டவர்கள் உயர்ந்தரக வாழ்க்கை வாழ்பவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த இவனுக்கு அவளும் தன்னைப் போன்ற ஒரு குக்கிராமத்திலிருந்து வறிய பின்னணியில் வந்திருந்ததை அறிந்தபோது வியப்பாயிருந்தது. அவனுக்கு புரியாவிட்டாலும், ஸ்பானிஷ் மொழி மீது இவனுக்கு ஒருவித நெருக்கம் வரத்தொடங்கியிருந்தது. பிறகு அவளுக்காகவும், மொழியின் வசீகரத்துக்காகவும் இவனும் அவளுடன் சேர்ந்து பாடசாலையில் நடந்த ஸ்பானிஷ் வகுப்புக்குப் போகத் தொடங்கியிருந்தான். இவன் இதுவரை சந்தித்த பெண்களிடம் இருந்து தனித்துவமாய் அவள் இருப்பதாய் உணரத்தொடங்கினான். புத்தகங்களின் மீது அளவு கடந்து பிரியம் அவள் கொண்டிருப்பதைப் பார்க்க இவனுக்கு இன்னும் ஆச்சரியமாயிருந்தது. அதுவும் அவள் வயதொத்த பெண்கள் ரீனேஜ் ரொமாண்ஸ் நாவல்கள் வாசிக்கையில் இவள் இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா நாட்டு நாவல்களை வாசிப்பவளாயிருந்தது இன்னும் வியப்பாயிருந்தது. இவனுக்கு பாடப்புத்தகங்கள் மட்டுமல்ல, மற்றப் புத்தகங்களை வாசிப்பது என்பது கூட வேப்பங்காய்ச் சுவையாக இருந்தது. லைபிரரிகளுக்கு எந்தத் திசையில் வாசல்கள் இருக்குமென்பதையே அறிய விரும்பாதவனாய்த்தான் இவ்வளவு காலமும் இவன் இருந்தான். அவளோடு பழகத்தொடங்கியபின் chapters, coles என்று புத்தகக் கடைகளுக்குப் போய் புத்தகங்கள் அவளுக்காய் வாங்கிக்கொடுக்கத் தொடங்கினான். ஒருமுறை 'Lutesong and Lament' என்ற தமிழாக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை இவன் வாங்கி வந்து அவளுக்குக் கொடுத்தபோது, 'நீயும் வாசித்துப் பாரேன்' என்று அவள் சொன்னபோது, 'இதிலை என்ன இருக்கிறது என்று வாசித்துவிட்டு நீ சொல் அது காணும், அதற்கு அப்பால் என்னைக் கஷ்டப்படுத்தாதே' என்றான்.

அவள் தனது தாயோடும், தங்கையோடும், step-dadயோடும்தான் வசித்துக்கொண்டிருந்தாள். தாயிற்கு இவள் இப்படி புத்தகங்கள் வாசிப்பது துண்டறப் பிடிப்பதில்லை. இரவில் மட்டுமில்லை, எல்லாப் பொழுதிலும் இந்த இந்த நேரத்துக்கு இவற்றை செய்யவேண்டும் என்ற தாயின் அட்டவணையைத் தவறாது பின்பற்றவேண்டும், இல்லாவிட்டால் தாயிடம் பேச்சுவாங்கித் தாங்காது என்றாள். இவளுக்கு புத்தகங்கள் வாசிப்பதில் அலாதிப்பிரியம் என்பதால், படுக்கைப் போர்வைக்குள் சின்ன் ரோச் லைட்டை எரியவிட்டு வாசிப்பதாயும், சிலவேளைகளில் எல்லா லைட்டுகளையும் அணைத்துவிட்டு கொம்பியூட்டர் மொனிற்ரர் வெளிச்சத்தில் வாசிப்பதாயும் இவனுக்கு கூறியிருந்தாள். நல்லாய் வகுப்புக்களில் மார்க்ஸ் எடுத்துக்கொண்டிருந்த அவள் பிறகு வந்த தவணைகளில் மார்க்ஸ் குறைய எடுக்கத் தொடங்கியிருந்தாள். இவன் என்ன காரணம் என்று கேட்டபோது முதலில் ஒன்றுமில்லை என்றாள். பிறகு உருக்கிக்கேட்டபோது தனது வீட்டுப் பிரச்சினையைக் கூறத் தொடங்கினாள்.

அவளது வளர்ப்புத்தந்தை ஒரு தந்தையைப் போல பழகுவதில்லை எனவும், தன்னைப் பலதடவைகள் தொட முயன்றதாகவும், சமையலறையில் வேலை செய்யும்போது தனக்கு உதவி செய்வதுபோல தன்னிடம் நெருங்க முயல்வதாகவும் கூறினாள். 'நீ இதை உனது அம்மாவிடம் கூறலாந்தானே?' என்று இவன் கேட்க, 'அவாவுக்கு அவர் நல்ல மனுஷன் என்று நினைப்பு. தான் எது சொன்னாலும் செவி கொடுத்துக் கேட்பதில்லை. தான் ஏதோ மனப்பீதியில் திரிவதாய் அவர் அதை அலட்சியம் செய்துவிடுகின்றார்' என்றாள். அத்தோடு அவளது வளர்ப்புத்தந்தைக்கும், தாயிற்கும் ஒரேநேரத்தில் வேலை நேரம் இருப்பதில்லை என்பதால் இவள் தனித்து நிற்கும்போது abuse செய்ய முயல்வாராம். பல சமயங்களில் அவர் தன்னுடைய அறைக்குள் வந்தால், உடனே ஓடிப்போய் பாத்ரூம் கதவை இழுத்து மூடிவிட்டு அதற்குள் அழுதபடி இருந்தாய் சொன்னாள். இவன், 'அப்ப நான் பொலிஸுக்கு இதை அடித்துச் சொல்லட்டா?' என்று கேட்க, 'நான் செத்தாப்பிறகு அதைச் செய்' என்று வெடுக்கென்று பேசினாள். 'அவரைப் பொலீஸ் பிடித்துக்கொண்டுபோனால், அம்மா தன்னைச் சும்மா விடமாட்டார்....தன்னோடும் சேர்க்கவும் மாட்டார். இதைவிட அவலமான வாழ்வைத் தெருக்களில் வாழவேண்டிய நிலைதான் தனக்கு வருமென்றாள். 'சரி, அதற்கும் உனது பரீட்சை பெறுபேறுகள் குறைவதற்கும் என்ன தொடர்பு?' என்று வினாவியபோது, 'அம்மாவுக்கு நான் நல்லாய்ப் படித்து வெளிவரவேண்டும் என்பதுதான் ஆசை. அவாவின் ஆசைக்கு அடிபணிந்து கொடுக்ககூடாது என்பதற்காய்த்தான் வீம்பாய் படிக்காமல் குறைய மார்க்ஸ் எடுக்கிறேன்' என்றாள். 'விசரி, நீ இப்படி படிக்காமல் இருந்தால் உன்னுடைய எதிர்காலம் அல்லவா சீரழிந்துபோகப்போகிறது. அத்தோடு நீயொரு டிப்ளோமாவை எடுத்தாயென்றால், இலகுவாய் வீட்டைவிட்டு வெளியே போய் ரெசிடண்டில் இருந்துகொண்டு மேற்கொண்டு வளாகத்தில் படிக்கமுடியும், பிறகு ஒருத்தரின் தொல்லையும் இருக்காது அல்லவா?' என்றான் இவன். அவள் இதைப் பெரிதாய்க் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது இவனுக்கு கொஞ்சம் கோபமாயும் நிறையக் கவலையாகவும் இருந்தது.

அவன் அவளை முத்தமிடும் அநேக பொழுதுகளில் ஒருவித வாசனை அவள் வாயிலிருந்து வருவதை அவதானித்திருந்தான். கிட்டத்தட்ட தமிழாக்களில் பருப்புக்கறி சாப்பிட்டால் உள்ளி வாசத்துடன் எப்படி வாய் மணக்குமோ அப்படி ஸ்பானிய ஸ்பைசி உணவொன்றின் வாசம்தான் அது. ஆரம்பத்தில் weiredயாய் இருந்தாலும் பிறகு அந்த வாசம் அவனுக்கும் பிடித்துப்போய்விட்டது. ஆனால் அவன் ஒவ்வொருமுறையும் முத்தமிட்டபிறகும் 'ewww' என்று உதட்டைச் சுழிப்பான். அவளும் 'sorry, sorry! chewing gum போட மறந்துவிட்டேன்' என்று கெஞ்சியபடி இவனது தலையைக் கோதிவிடுவாள். இந்த அழகையும் அவளது சின்னப் பதட்டத்தையும் இரசிப்பதற்காகவே, பிறகு முத்தமிடும்போது வாசம் வராதபோதும் வேண்டுமென்றே இவன் உதட்டைச் சுழிக்கப்பழகியிருந்தான்.

ஒருநாள், தனது வீட்டில் தாய் வேலைக்குப் போய்விட்டார்; வளர்ப்புத் தந்தையும் உறவினர் யாரையோ சந்திக்க இன்னொரு நகருக்குச் சென்றுவிட்டார், வீட்டை வா, எங்கள் கலாச்சாரத்து உணவை உனக்குச் சமைத்துப் பரிமாறவேண்டும் என்றாள். 'சரி நான் வரேன், ஆனால் பிறகு தமிழாக்களின் உணவை உனக்குச் சமைத்துத் தரவேண்டும் என்று என்னிடம் கேட்காமல் இருக்கவேண்டும்' என்றான். 'சரி சரி பயப்பிடாதே, எந்தச் சமூகத்திலும் இந்த ஆண்கள் சோம்பறிகள்தானே, இது எங்களுக்குத் தெரியாதா?' என்று நக்கலடித்தாள். நல்ல சுவையான ஸ்பானிய உணவுகளைச் சமைத்திருந்தாள். அவளது வீட்டின் பின்புறத்தில் பூத்திருந்த பூக்களைக் கொண்டு அழகாய் சாப்பாட்டு மேசையை அலங்கரித்தாள். தெளிவான ஸ்ரியோ ஸிஸ்டத்தில் அதிகம் அதிராத ஸ்பானிய இசை பரவியபடி இருந்தது. ஒரே விதமான தமிழ்ச் சமையலை நுகர்ந்த இவன் மூக்குக்குள் அவள் சமைத்த உணவு வகைகள் நறுமணத்தைப் போல இறங்கிக்கொண்டிருந்தது. அறுசுவை உணவுகள் மட்டுமல்லாது, ஒரு பிரியத்துக்குரியவரின் அன்பையும் உள்வாங்கி இரசிக்கும் எந்தப்பொழுதும் அருமையாய்த்தானிருக்கும் போல என்று இவன் தனக்குள் எண்ணிக்கொண்டான்.

உண்டகளைப்பு தொண்டனுக்கு உண்டென்பதால், அவள் ஸோபாவின் இருக்க, இவன் அவள் மடியில் தலையைச் சாய்த்தபடி teenage crushesஜ நகைச்சுவையாக எடுத்த ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட இருவரும் உறக்க நிலைக்குப்போயிருப்பார்கள். தடதடவென்று யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. இவன் நினைத்தான், சரி இண்டைக்கு எங்கடைபாடு அவ்வளவுதான் என்று. அவள் அந்த நேரத்திலும் பதட்டப்படாமல், 'கெதியாய் ஸூவைப் போட்டுக்கொண்டு பின்பக்கம் உள்ள பேஸ்மெண்ட் கதவைத் திறந்து ஓடுப்போய்விடு' என்றாள். இவனுக்கு ஜந்தும் கெட்டும் அறிவும் கெட்டநிலையில் பின்பக்க வாசலால் ஓடியது மட்டும்தான் நினைவிலிருந்தது. ஒரு பஸ் ஸ்ராண்டை அடைந்தபிறகுதான் இவனுக்கு மூச்சுவிடும் சத்தமே கேட்டது. அங்கே நின்று கொண்டு ஒரு இருபத்தைந்து சதம் போட்டு அவளுக்கு ரெலிபோன் அடித்தான். தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும், அவளது வளர்ப்புத் தந்தைதான் கார் ரயர் பழுதாகி இடைநடுவில் பயணத்தை நிறுத்திவிட்டு திரும்பி வந்திருக்கின்றார் என்றாள். 'விசரா, ஓடுகின்ற வேகத்தில் உன்னுடைய ஸ்வெட்டரை விட்டுவிட்டு போயிவிட்டாய், நல்லவேளை நான் அதை எடுத்து எனது ரூமுக்குள் வைத்துவிட்டேன்' என்றபோதுதான் இவனுக்கு குளிருக்குள் ஸ்வெட்டர் இல்லாது நிற்பது தெரியவந்தது. 'அது சரி இந்த நாற்றம் பிடித்த ஸ்வெட்டரை எத்தனை நாள்களாய்க் தோய்க்காமல் போட்டுக்கொண்டு திரிகிறாய்? என்று சொல்லிப்போட்டு,' சரி, நான் அதை வடிவாய் தோய்த்துவிட்டு நாளை கொண்டுவந்து தருகிறேன்' என்று அவள் சொல்ல, இவன், 'இன்னும் கனக்க உடுப்புக்கள் இப்படித்தான் தோய்க்காமல் கிடக்கிறது, அதையும் கொண்டுவந்து தரட்டா?' என்று கேட்க, அவள் கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு போனை வைத்தாள்.

அப்போதுதான் கோடைகாலம் ஆரம்பித்து கொஞ்ச வாரங்கள் ஆகியிருந்தது. அந்தத் தவணைக்கான இறுதிப்பரீட்சைகள் ஆரம்பிக்க சில நாள்களே இருந்தன். அவள் உப்பிய கன்னங்களோடு தலைமயிரைக் கூடச் சரியாக வாராமல் வகுப்புக்கு வந்திருந்தாள். 'என்ன உனக்கு நடந்து?' என்று இவன் அவளைப் பார்த்துக் கேட்க, பொலபொலவென்று வகுப்புக்குள்ளேயே அழத்தொடங்கிவிட்டாள். மெல்லியதாய் நெஞ்சில் அணைத்துக்கொண்டு அழுது முடியட்டும் என்று இவன் காத்திருந்தான். பிறகு வகுப்புக்கு வெளியே கூட்டிக்கொண்டு 'என்ன நடந்தது என்று சொல்?' என்றான். தனது ரூமுக்குள் நித்திரையில் ஆழ்ந்திருந்தபோது வளர்ப்புத் தந்தை தன்னை முத்தமிட்டதாகவும், தான் திடுக்குற்றெழுந்து திமிறியபோது தனது கன்னங்களில் அறைந்ததாகவும், இப்படிச் செய்தால் பொலீசுக்கு சொல்லிவிடுவேன் என்று தான் சொல்ல, உனக்கு கனக்கப் பெடியங்களோடு தொடர்பிருக்கிறது அதைக் கண்டுபிடித்து கண்டிக்கத்தான் இப்படி ஒரு பொய்யைத் தன்மேல் சுமத்துக்கிறாள் என்று பொலிசுக்கும் இவளது தாயுக்கும் கூறுவேன் என்று வளர்ப்புத் தந்தை பயமுறுத்தியதாகவும் கூறினாள். 'சரி, நீ பொலீஸ¤க்கு இந்த விடயத்தைக் கூறினாயா?' என்று இவன் கேட்க, 'என்னால் எப்படி அவர் இவ்வளவும் சொன்னபிறகும் அதைச் செய்யமுடியும்?' என்று சின்னப்பிள்ளை போல அவள் திரும்பிக்கேட்க, இவன் ஆத்திரத்தில் 'f*** you' என்று ஆத்திரத்தில் பேசிவிட்டு அவளை அநாதரவாய் விட்டுவிட்டுப் போய்விட்டான். பிறகு அவளது நிலையில் நின்று பார்க்க அவளின் கையாலகாத நிலை புரிந்து திரும்பிப்போய் அவளிடம் கூறினான், 'ok, இனி உனக்கு ஒரு பிரச்சினையும் வளர்ப்புத்தந்தையால் வராது, கவலைப்படாதே' என்றான். 'போலீசுக்கு இதைச் சொல்லப்போகின்றியா?' என்று அவள் கேட்க, 'இல்லை இதால் உனக்கு எந்தப்பிரச்சினையும் வராது என்னை நம்பு' என்று சொன்னானே தவிர, அவள் எவ்வளவு கேட்டும் இவன் என்ன செய்யப்போகின்றான் என்று கூறவில்லை.

மதியவுணவு இடைவெளியின்போது அவளுக்குச் சொல்லாமல், இவன் அவளது வீட்டுக்குப்போனான். இவனுக்குத் தெரியும், அந்த நேரத்தில் வீட்டில் அவளது வளர்ப்புத் தந்தை நிற்பார் என்று. அவர் வீட்டுக் கதவைத் திறக்க, இவன் வெளியே இழுத்து விழுத்தி, கொண்டுபோன பேஸ்போல் மட்டையால் சரமாரியாக அடித்தான். மண்டை உடைந்து இரத்தம் வடிய மனுஷன் அலறத்தொடங்கினார். 'இனியும் அவளைத் தொடமுயன்றாய் என்றால் உன்னைக் கொல்லாமல் விடமாட்டன்' என்று தூசணத்தால் திரும்பிப் கத்திவிட்டு பாடசாலைக்குப் போயிருந்தான்.

அன்றிரவே இவனைத் தேடி பொலீஸ் வீட்டுக்கு வந்தது. வளர்ப்புத் தந்தை இவன் மீது குற்றச்சாட்டைக் கொடுத்திருக்கின்றார். அவளும் பயத்தில் இவனது பெயரைச் சொல்லியிருக்கிறாள். ஜெயிலில் இரண்டரை வருடம் இருக்கவேண்டும் எனத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. பதினெட்டு வயது நிரம்பாததால் முதல் வருடம் வேறிடத்திலும் பதினெட்டு வயது வந்தவுடன் வேறொரு இடத்துக்கும் மாற்றப்பட்டான். ஜெயிலில் இவன் இருக்கும்போதுதான், ஏன் இறந்துபோன தனது நண்பன் பிறகு போதை மருந்துக்கு அடிமையாகி இறந்துபோனான் என்ற உண்மைக் காரணத்தை புரியக்கூடியதாக இருந்தது. அங்கேயிருந்த இவனைவிட வயதில் இரண்டு மடங்கு கூடிய thugs களும், Gangsters களும் ஒரு குட்டிராஜ்ஜியத்தையே நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களை மீறி எதுவும் செய்யமுடியாது. வன்முறை என்பது அவர்களுக்கு விளையாட்டுப் போல இருந்தது. தினமும் யாரையாவது கொழுவ வைத்து அடிபடச்செய்து இரசிப்பார்கள். சிலவேளைகளில் இரவு நேரத்தில் தூக்கத்திலிருக்கும் இவனது காற்சட்டைகளுக்குள் கைகளை நுழைத்தோ அல்லது தங்களது பின்பக்கங்களை வைத்து தேய்த்துக்கொண்டு இருப்பார்கள். முரண்டு பிடித்தால் இரத்தம் வரும்வரை அடிப்பதை நிறுத்தாமல் விடமாட்டார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் சில பொலிசார் இதைத் தெரிந்துகொண்டும் அமைதியாக இருந்ததுதான். இப்படி தனிமையுடனும், சித்திரவதைகளுடனும் இருந்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்துவிடும் போல இவனுக்குத் தோன்றியது. அதுவே இவனைப் புத்தகங்களை வாசிக்கத் தூண்டியது. புத்தகங்களை வாசிக்க வாசிக்க, ஏன் அவள் தன்னைப் புத்தகங்களில் தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்தாள் என்ற காரணம் இவனுக்கு புரியத்தொடங்கியது. புத்தகங்கள் சிலவேளைகளில் கற்பனா உலகத்தைச் சிருட்டித்தாலும், யதார்த்ததிலிருந்து தப்புவதற்கு அவை இலகுவான வழியைத் திறந்துகாட்டியபடி இருந்தது இவனுக்குப் பிடித்திருந்தது. அங்கேதான் கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்பானிஷ் மொழியையும், பிரெஞ்ச் மொழியையும் அறிந்துகொள்ளத் தொடங்கினான். ஆங்கிலத்தை விட அவை எவ்வளவு செழுமையும் அழகும் நிறைந்த மொழி என்பதை உணரத்தொடங்க, அவளை நினைத்துக் கவிதைகளும் இவன் எழுதத் தொடங்கினான். என்றாலும் இவ்வளவு சம்பவங்கள் நடந்தும் தன்னைத் தேடி அவள் ஒருதடவை கூட வரவில்லை என்பது இவனுக்கு உறுத்தலாய் இருந்தது. அவ்வவ்போது வரும் நண்பர்களிடம் அவளை பற்றி விசாரிக்கும்போது, அவளது குடும்பத்தினர் வீடுமாறிப் போனதால் பாடசாலைக்கு அவள் வருவதில்லை எனவும் தங்களால் அவளைத் தொடர்புகொள்ள முடியாதிருக்கின்றது என்று கூறினார்கள். இரண்டரை வருடங்களாய் இருந்த சிறைத்தண்டனை இவனது 'நன்னடத்தை' காரணமாக இரண்டு வருடங்களுக்குள் முடிந்திருந்தது.

அவன் ஜெயிலில் இருந்து, வீடு போய் ஒருவாரம் இருக்கும். அவள் தொலைப்பேசியில் அழைத்தாள். தான் 'நாளை இந்த பஸ் ரெமினலில் வந்து நிற்பேன். அங்கை வந்து என்னைச் சந்தி, இப்போது முந்நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள வேறு ஒரு நகரத்தில் இருப்பதால் தன்னால் எல்லாவற்றையும் கதைக்க முடியாது' என்றாள். 'சரி நான் நாளை வருகின்றேன், உனக்கு இப்போது எந்தபிரச்சினையும் இல்லையா?' என்று கேட்டபோது அவள் 'இல்லை' என்றாள்.

அடுத்த நாள் காலையில், அவள் பஸ் ரெமினலில் இரண்டு ட்ரெவலிங் பைகளுடன், ஒரு சிறிய தோற்பையுடனும் வந்திறங்கினாள். 'இனி நான் உன்னோடு தங்கப்போகின்றேன்' என்றாள். 'என்னோடாயா?' என்று இவன் சற்று ஆச்சரியமாய்க் கேட்டான். 'ஏன் உனது அம்மாவுக்கு என்னைப் பிடிக்காதா?' என்று திரும்பிக் கேட்டாள். 'இல்லை, அம்மாவுக்கு ஒரு பிள்ளையாய் என்னைப் பெற்றதற்கு எவ்வளவு கஷ்டம் கொடுக்கமுடியுமோ அவ்வளவும் கொடுத்துவிட்டேன். இவ்வளவு நடந்தபிறகும் என்னை ஏற்றுக்கொண்டவர் அவர். உன்னை ஏற்றுக்கொள்வதில் அவர் தயங்கமாட்டார்' என்றான். 'பிறகேன் யோசிக்கிறாய்?' என்று அவள் கேட்க, 'இல்லை உனது வளர்ப்புத் தந்தை மற்றும் அம்மா என்ன செய்வார்களோ' தெரியாது என்றபோது, 'ஒ உனக்குப் பிறகு நடந்த கதை தெரியாது என்ன, சொல்லுறன் கேள்' என்றாள்.

உன்னைப் பொலிஸ் பிடித்துக்கொண்டுபோன சில நாள்களுக்குள் எனது வளர்ப்புத் தந்தை இந்த நகரத்தில் இருக்கமுடியாது, வேறொரு நகருக்குப் போவோம் என்று வெளிக்கிட்டுவிட்டார். எனென்றால் அவருக்குத் தெரியும், உன்னை ஜெயிலுக்குள் பொலிஸ் போட்டுவிட்டால், உனது நண்பர்கள் தன்னைச் சும்மா விடமாட்டார்கள் என்று. ஆனால் மற்ற நகரத்துக்குப்போனாபிறகும் அவருடைய சேட்டைகள் தொடர நான் பொலிசுக்கு அடித்துச் சொல்லிவிட்டேன். அவர்கள் அவர் மீது கேஸ் பதிவு செய்து என்னோடு இனி அவர் தங்க முடியாது என்று கூறிவிட்டார்கள். அம்மாவுக்கு இதனால் என் மீது சரியான கோபம். நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, இப்படி வீட்டுப்பிரச்சினைகளால் வீட்டைவிட்டு போகின்றவர்களுக்கு அடைக்கலம் தரும் ஷெல்ட்டருக்குப் போய்விட்டேன். இன்னொரு நகரத்துக்குள் நின்றதால் என்னால் உன்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அத்தோடு நான் தங்கிநின்ற ஷெல்ட்டருக்குப் பொறுப்பான பெண்மணிக்கு உனது பிரச்சினையும் தெரியும். எனவே நீ ஜெயிலுக்குள் இருக்கும்வரை எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தார்கள். 'பரவாயில்லை. நீ என்னைத் தொடர்பு கொள்ளாதில் எந்தப்பிரச்சினையுமில்லை. உனது வளர்ப்புத் தந்தையின் சித்திரவதைகளில் இருந்து நீ தப்பியிருந்தது எனக்கு நிம்மதியைத் தருகின்றது' என்றான் இவன். பிறகு அவள், 'எனது பொறுப்பதிகாரியின் மூலம், உனக்கு எப்போது சிறைத்தண்டணை முடிகிறதோ அப்போது எனக்குத் தெரியப்படுத்தச் சொன்னேன். அவர்களும் இப்போது தெரிவித்திருந்தார்கள். அத்தோடு எனக்கு பதினெட்டு வயதும் முடிந்துவிட்டது என்றதால் ஷெல்ட்டர் பொறுப்பதிகாரி எனக்கு விருப்பமான முடிவை எடுக்க அனுமதி தந்தார்' என்றாள்.

இப்போது மெல்லியதாய்க் குளிரத் தொடங்கியிருநது. இலைகள் எல்லாம் மஞ்சளும் சிவப்புமாய் பழுக்கத் தொடங்கியிருந்தன. பாடசாலையில் இருந்தபோது பழுப்பு நிற வானத்துடன் இலைகள் உதிர்ந்துகொண்டிருந்ததை குழந்தை மனுசுடன் இரசித்துக்கொண்டிருந்தது இவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. அவளை அணைக்கவேண்டும்போல, 'எவரது வன்முறையும் இல்லாது இயல்பாய் நீ வாழ துணையாயிருப்பேன்' என்று சொல்லவேண்டும் போலத் தோன்றியது. அவளுக்கும் புரிந்ததோ என்னவோ, அவனை இழுத்து முத்தம் கொடுக்கத் தொடங்கினாள். இடைநடுவில் 'ewww' என்று இவன் உதட்டைச் சுழிக்க, 'don't lie boi, I didnt even eat spanish dishes for a while' என்று இவனது நெஞ்சில் மெல்லியதாய் அடி கொடுத்தாள். இனி தான், double shift அடித்தென்றாலும் கொஞ்சம் பணத்தைச் சேமித்து, அவள் சிறுவயதில் விளையாடித்திரிந்த சொந்தத் தேசத்துக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்ற ஆசை இவனில் பெருகத் தொடங்கியது. அங்கே போனால், களங்கமில்லாத அவளது சிறுவயது நினைவுகள், பதின்மங்களில் பெற்ற காயங்களை, கடல் அலைகளைப் போல கழுவிக்கொண்டு போகக்கூடுமென்றும் நம்பினான்.

உதிர்ந்துகொண்டிருந்த ஒரு மேப்பிள் இலை அவளது தலைமயிரில் சிக்கிக்கொள்ள அதை எடுத்துவிட்டபடி இவன் சொன்னான், 'உனக்குத் தெரியுமா? நான் இப்போது நல்லாய்ப் புத்தகங்கள் வாசிக்கிறனான். ஏன் கவிதைகள் கூட உனக்காய் எழுதியிருக்கின்றேன்' என்று. அவள் இவனது விரல்களைக் கோர்த்தபடி, 'எனக்குத் தெரியும், நீ எப்ப என்னை நேசிக்கத் தொடங்குகின்றாயோ அப்போதே புத்தகங்களில் அமிழத் தொடங்குவாய்' என்றாள் சிரித்தபடி.

(குழுக்களின் வன்முறையில் தங்களைத் தொலைத்தவர்களுக்கு)

Thursday, October 20, 2005

சாத்தானின் காற்று
நள்ளிரவை
சிலுவையில் அறைய
அதிர்கிறது
பாவஞ்செய்தவர்களின் வீட்டு யன்னல்கள்

ஓடி ஒளித்த
நட்சத்திரங்களில் ஒன்றில்
தேவாலயத்தை விட்டுத்தப்பியோடிய
ஜீசஸும்
தஞ்சம் கேட்டிருக்கலாம்

போர்வையை விலத்த
ஏறியிறங்கும் மார்புக்குவட்டுக்குள்
கடந்தகாலத்தின் துயரநதி
உறைந்துநிற்பது தெரிகிறது

தொலைவில்
பைன்மரக்காட்டுக்குள்
வைரங்களைக்காவிச் செல்லும் ஒநாய்கள்
தென்படுகின்றன
பனிப்புகாருடன்

ஒநாய்களைப் பின் தொடரத்தொடங்கி
ஏழாவது நிமிடமும்
இருபத்தைந்தாவது முடக்கும்
தாண்டுகையில்
முயலில் மிருதுவுடன் கரமொன்று பற்றுகிறது
எலுமிச்சை வாசத்துடன்

இவளென்
துணையாகப்போகின்றவள் அல்லவாவென
அண்ணாந்து பார்க்கையில்
அம்மா அக்கா நண்பிகள்
அனைவரும் அறையப்பட்டிருக்கின்றனர்
சிலுவையில்

வைரங்கள் விழிகளாகி
வன்மமாய் மின்ன
இப்போது
ஒநாய்களின் பற்களில்
கோரமாய்த் தொங்குகின்றனர்
என்னில் பிரியம் வைத்திருந்தவர்கள்

'நீ
பேசியவை எழுதியவை விவாதித்தவை
எதுவுமே ஒன்றுக்கும் உதவாதவை
பார்த்தாயா,
ஒநாய்களாய் சித்திரவதைப்படுத்துவதும்
நீ மற்றும் நீ மட்டுந்தான்'

பரீட்சையில்
சிலவேளைகளில்
நான்கு தெரிவுகளுக்கும் வட்டமிடலாம்
யதார்த்ததில் எப்போதும்
தெரிவு ஒன்றுதான்

புதிதாய் ஒருவர்
வாழ்க்கையைப் பகிரவரும்போது
வேகத்தை நிதானமாக்கி
யோசிக்கவேண்டியிருக்கிறது சுற்றியிருப்பது குறித்தும்

எல்லாவற்றையும்
நிறுத்தலாமென்று தீர்மானிக்கையில்
ஒநாய்கள் தம்பிடியை தளர்த்தியிருந்தன
சிலுவைகள் நொறுங்கியிருந்தன
கடந்தகாலத்துயரநதி பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியிருந்தது.

Oct 20/05

கொழும்பு: மலரும் சில நினைவுகள்

Tuesday, October 11, 2005

கொழும்பில் இருந்தது ஒன்றரை வருடங்களுக்கும் குறைவானது. யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட சில மாதங்கள் சிலாபத்திலிருந்ததையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒருவருடந்தான் கொழும்பில் இருந்திருக்கின்றேன் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு ஒரு நகரத்துக்குரிய வசீகரங்களையும் வக்கிரகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் எனது கொழும்பு வாழ்க்கை வீடு, பாடாசாலை, ரியூசன், சில உறவினர் வீடுகள் என்று ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே சுழன்றபடி இருந்தது. முக்கியமாய் கொழும்பில் எனது எல்லைகளை விரிவாக்கிப் பார்க்காமையிற்கு சிறிலங்கா பொலிசும், ஆமியும் பிடித்து உள்ளே போட்டுவிடுவான் என்ற பயத்தோடு எனக்குரிய சோம்பலும்தான் முக்கிய காரணம் என்பேன்.

இன்று வாலிபத்தின் கிழட்டுப் பருவத்தில் நின்று கொண்டு பார்க்கும்போது, யாரவது கடந்து போன வாழ்க்கையில் எதை நீ மீண்டும் வாழ ஆசைப்படுகின்றாய் என்று கேட்டால் கொழும்பில் இருந்த ஒரு வருட வாழ்க்கையை என்று தயங்காமல் கூறுவேன். அரசர்களுக்கு மட்டுமான ஒரு பொற்காலம் இருக்கவேண்டும்? என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு இருக்கக்கூடாதா என்ன?

நெரிசலும், வெக்கையும் நிரம்பிய மாநகர் வாழ்க்கையை சுவாரசியமாக்கியவர்கள் இரண்டு நண்பர்கள். அப்போதுதான் பதின்மத்தில் காலடி வைத்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. பெண்களோடு கோழிகளாய்ச் சண்டைபிடித்ததை மறந்துவிட்டு உடல்மாற்றங்களோடு புத்துணர்ச்சியாய் பார்க்கின்ற காலகட்டத்தில் இந்த இரண்டு நண்பிகள் கிடைத்திருந்தனர். இவர்கள் இருவரும் ஒரு மகளிர் கல்லூரியில் அந்தப் பாடசாலைக்குள்ளேயே இருந்த விடுதிக்குள் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டக்களப்பு கல்முனையைச் சேர்ந்தவர். மற்றவர் நுவரேலியாவைச் சொநத இடமாகக் கொண்டவர். சில வருடங்களுக்கு முன் வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பத்திரிக்கையில் 'நேர்காணல்' என்ற ஒன்றைக் கண்டபோது, கவிதை எழுதுவதற்கு எது உனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று கேட்கப்பட்டபோது இந்த தோழிகள் தான் காரணம் என்று கூறியபோது அவர்கள் கொஞ்சம் நக்கலாய்ப் பார்த்துச் சிரித்தாலும், அதுவே உண்மைக் காரணமாகும். எதையாவது எழுத வேண்டும் என்ற ஆவலை ஊதித் தணலாக்கி நெருப்பாக்கி விட்டது அவர்கள் தான். (எனவே நான் எழுதும் கவிதைகள் சகிக்கமுடியாமல் இருந்தால் என்னைக் குற்றஞ்சாட்டாமல், இப்படி ஒரு கொடூரமான நிலைக்குத் தள்ளிவிட்ட அவர்களை நோகும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்). ஒரு பொழுது, எப்போதாவது ஒரு 'தொ- குப்பை' போட்டால் அவர்கள் இருவருக்கும் சமர்ப்பணம் செய்வதாய் கூறியிருந்ந்தது நினைவிலுண்டு.

friend1

இந்த தோழிகளுடன் முகிழ்ந்த நட்பைப் பற்றியும் கொஞ்சம் கூறவேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் கதைக்க விரும்பினாலும், வழமையான shy தன்மையுடன் அவர்களைத் தவிர்த்துக்கொண்டிருந்தேன். எனது நண்பர்களிடம் அவர்கள் என்னிடம் பேசவிரும்புவதாய்க் கூறியும் நான் அவர்களை விலத்தியபடியே வகுப்புக்களுக்குப் போய்க்கொண்டிருந்தேன். பதினைந்து வயதுகளில் யாழில் அல்ல கொழும்பிலும் கூட அப்போது பெண்களுடன் கதைப்பது என்பது பெரும் பாவமாய் இருந்தது. வகுப்புக்கள் முடிந்தவுடன் நின்றும் கதைக்க முடியாது. அவர்கள் விடுதியில் தங்கி நின்றதால் இருந்த கட்டுப்பாடுகளை விட, அந்த தனியார் நிறுவனத்தை எனது மாமியின் மகனொருத்தரே நடத்திக் கொண்டிருந்ததும் இன்னொரு காரணமாகும்.. பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் வகுப்புக்களில் பேச ஆரம்பிக்க (அடடா பதின்மத்தில் பெண்களோடு பேச ஆரம்பிக்கத் தொடங்கும் பொழுதுகள் எவ்வளவு அழகானவை). நேரங் காணாமல் கடிதங்களை வகுப்புக்களில் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினோம். அப்போது நான் கொஞ்சம் படிக்கிற ஆசாமி எனபதால், 'நீ நல்லாய்ப் படிக்கவேண்டும், வகுப்புக்களில் வைக்கும் பரீட்சைகளில் அதிக மார்க்ஸ் எடுத்தால்தான் எங்களுக்குப் பெருமை' என்ற விதமாய் எழுதுவார்கள். அவர்களும் நன்கு படிக்கக் கூடியவர்கள். அதிலும் ஒரு தோழி நன்கு ஆங்கிலமும் கணக்கும் செய்யக்கூடியவள். அவளது ஆங்கிலத்தைப் பார்த்து ஒவ்வொரு பொழுதும் வியந்திருக்கின்றேன். கனடா வந்து ஆங்கில மீடியத்தில் படித்தாலும் அவளது ஆங்கிலத்துக்கு, இப்போதும் எனக்குத் தெரிந்த ஆங்கிலம் முன்னுக்கு நிற்காது போலத்தான் தோன்றுகின்றது. ஒரு முறை இப்படிக் கடிதப்பரிமாறல் நடக்கும்போது எங்கள் பாடசாலையில் படித்த உயர்தர வகுப்பு மாணவர்கள் கண்டுவிட்டார்கள். அவர்களுக்கு நாம் ஏதோ காதல் கடிதம் பரிமாறுகின்றோம் என்ற பொறாமைத்தீ எரிந்ததோ என்னவோ தெரியாது. பிறகு நான் பள்ளிக்கூடம் போகத்தொடங்க தாங்கள் மாணவதலைவர்கள்(prefects) என்ற மிதப்பில், என்னைச் சும்மா சும்மா தேவையில்லாத காரணங்களுக்கு punishments என்று வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டாங்கள். 'இல்லை அண்ணாமார்; அது வெறும் நட்பு மட்டும்தான்' என்றபோதும் நம்ப அவர்கள் தயாராகவில்லை.

ரியூசனுக்குப் போய்க்கொண்டிருந்தபோது எனது நண்பர்களில் ஒருவருக்கு ஒரு விபரீத ஆசை வந்துவிட்டது அங்கே படித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது காதல் முகிழ ஆரம்பித்தது. அந்தப் பெண்ணும் கொஸ்டலில் தங்கியிருந்தே படித்துக்கொண்டிருந்தார். காதல் ஆசை வந்ததில் பிழையில்லை, ஆனால் அவன் உதவி கேட்டு என்னிடம் வந்ததில்தான் அவனுக்கு சனி (எனக்கும் தான்) ஆரம்பிக்கத் தொடங்கியது. எப்படி அந்தப் பெண்ணிடம் காதலைத் தெரிவிப்பது என்று மண்டையைக் குடைந்து அலசி ஆராய்ந்து இறுதியில் கடிதம் ஒன்றின் மூலமாகவே விருப்பைத் தெரிவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. கொடுப்பதற்கான கடிதத்தை, தான் எழுத்துப் பிழையுடன் எழுதிவிடுவேன் நீயே எழுதித்தாவென்று கூறினான். எனக்கும் அந்தமாதிரி புளுகம். முதன்முதலாய்க் காதல் கடிதம் எழுதுவது என்றால் சும்மாவா என்ன? அத்தோடு எனக்குள்ளும் ஒரு நினைப்பிருந்தது. முதலில் இவனை அனுப்பி வெள்ளோட்டம் விட்டால், பிறகு நான் யாரையாவது பெண்ணை விரும்பினால பாதை இலகுவாயிருக்கும் என்று. காதல் கடிதம் எழுதக் கற்பனைக் குதிரையைப் பறக்கவிடவேண்டும் அல்லவா? ஒரு இராஜ தோரணையுடன் நாமெல்லோரும் (வெள்ளவத்தையில்) இருந்த தேநீர்க் கடைக்குள் நுழைந்தோம். அன்றைய பாற்தேத்தண்ணி, வடை, வாய்ப்பன் இன்னபிற செலவெல்லாம் காதலிக்கும் நண்பனுக்கு உரியதென்பதால் கவலையில்லாமல் வெட்டினோம். வடையும் வாய்ப்பனும் வாழைப்பழமும் வயிற்றுக்குள் போகின்றதே தவிர பேனா மையில் ஒரு எழுத்தும் ஊறவில்லை. நண்பனை நிமிர்ந்து பார்த்தேன், காதலிக்கும் ஆசையில் மிகவும் பதட்டமாய் இருந்தான். அத்தோடு இப்படி இன்று செலவழிக்கும் பணத்துக்கு தனது அப்பரிடம் எத்தனை ஏச்சு வாங்கவேண்டும் என்ற கவலையும் சேர பரிதாபமாய்த் தோன்றினான். (இப்பவாவது பெண்களே புரிந்துகொள்ளுங்கள், ஆண்களுக்கும் காதலிக்கையில் பிரச்சினைகள் பிணக்குகள் என்று எவ்வளவு கஷ்டம் இருக்கிறதென்றாவது). இனியும் இப்படி இருத்தல் சரியாய் இருக்காது என்று 'உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்து' காதற்கடிதத்தை எழுததொடங்கினேன். ஈழததில் சமயம், தமிழ் பாடங்களை படித்திருந்தீர்கள் என்றால், உங்களுக்குத் தெரிந்திருக்கும், அவற்றுக்கு கொஞ்ச உண்மையும் கனக்க கற்பனையும் (பொய்யும்) தேவை என்று. சம்பந்தர் செய்த அற்புதங்களை எழுது என்று பரீட்சையில் கேட்டால், ஒரு வரி உண்மையை வைத்துக்கொண்டு நூறுவரி பொய்யை எழுதும் சாமர்த்தியம் பெற்றவனாய் அப்போது இருந்தது எனக்கு காதல் கடிதம் எழுத அந்தமாதிரி உதவியது. கடிதத்தை எழுதிமுடித்துவிட்டு நண்பனிடம் நீட்டியபோதுதான் வழமையான எனது ஆறாம் அறிவு விழிக்கத்தொடங்கியது. வெவ்வேறு எழுத்துக்கள் இருந்தால் எவரோ எழுதிக் கொடுத்திருக்கின்றார்கள் என்று அந்தப்பெண்ணுக்கு விளங்கிவிடும் என்று நினைத்து நானே நண்பனுக்காய் கையெழுத்தும் போட்டேன். வெற்றிகரமாய் நமது தாக்குதலுக்கான முன்னகர்வைச் செய்துவிட்டு தாக்குதலுக்காய் வகுப்புக்குப் போனோம். வகுப்பு ஆரம்பிக்கும்போது கடிதத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டான் நண்பன். வகுப்பின் நடுவில் அந்தப்பெண்ணைப் பார்த்தால் அவசரம் அவசரமாய் ஏதோ எழுதிக்கொண்டிருந்தது தெரிந்தது. ஆகா நண்பா, வெற்றி மேல வெற்றிதான் என்று ஜெயப்பேரிகை முழங்காத குறையில் நாங்கள் அனைவரும் வகுப்பில் உற்சாகத்தில் இருந்தோம். வகுப்பு முடிந்தவுடன் என்னைச் சந்திக்க விரும்புவதாய் அந்தப்பெண் விரும்புவதாய், எனது நண்பிகள் மூலம் எனக்கு தகவல் சொல்லப்படது.

வகுப்பு முடிந்தவுடன் அந்தப்பெண் நடந்துவந்த வேகத்தைப் பார்த்தபோது இரண்டு அடி எனக்குத் தராமல் நடையை நிறுத்தமாட்டார் போலத்தான் தெரிந்தது. என்றாலும், கடிதம் எழுதியது எனக்காக இல்லைத்தானே, எனவே அடி எனக்கு விழாது என்பதில் உறுதியாய் இருந்தேன். 'உம்மை ஒரு தம்பி மாதிரி நினைதேன். நீரே அவனுக்கொரு கடிதம் எழுதிக்கொடுத்து இருக்கின்றீர். உமக்கே இது சரியா இருக்கிறதா?' என்று அந்தப்பெண் நேராய்க் கேட்டார். அங்கே நின்று அதிக நேரம் கதைக்கமுடியாது என்பதால், வகுப்பில் இடைநடுவில் எழுதிய நீண்ட கடிதத்தை என்னிடம் தந்தார். அதில் அவர் தனது தம்பி ஒருவரை சிலவருடங்களுக்கு முன் தான் இழந்திருக்கின்றார் என்றும் பிற குடும்பக்கஷ்டங்களையும் எழுதியிருந்தார். அதனாலேயே என்னவோ ஒருவருடம் பிந்தி எங்களோடு படித்துக்கொண்டிருந்தார். அவர் தன் நிலை பற்றி எழுதிய அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் மிகவும் கவலையாகி விட்டது. நன்றாய் நகைச்சுவையுடன் கதைத்துக் கொண்டிருந்த நண்பனின் நகைச்சுவைக் குணம் அதற்குப் பிறகு சற்றுக் குறைந்திருந்தாலும் அவன் இந்த விடயத்தை பெரிதுபடுத்தாமல் இலகுவாய் எடுத்துக்கொண்டு நகர்ந்துபோனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

இப்படி இந்த விடயம் சுமூகமாய் முடிந்தாலும் எனக்கு இன்னொரு பிரச்சினை ஆரம்பிக்கத் தொடங்கியது. ஏற்கனவே 'கவிதைகள்' எழுதுபவன் என்று சிலருக்குத் தெரிந்ததுடன், இப்படி காதல் கடிதம் நண்பனுக்கு எழுதிகொடுத்ததும் தெரியவர, என்னை விட வயது கூடிய சில மாணவர்கள் வந்து தங்களுக்கும் காதல் கவிதைகள் எழுதத் தரச் சொல்லி, கேட்கத் தொடங்கினார்கள். சிலரைச் சமாளித்து தப்பினாலும், பலர் பயங்கரமான முரடர்களாய் இருந்தார்கள். கொழும்பில் அப்போது குழுக்களாய் இருந்த பாடசாலைக் காங்குகளில் இருந்தவர்களில் சிலரும் அடங்குவார்கள். எழுதித் தரமுடியாது என்றால் இரண்டு அறையாவது தராமல் விடமாட்டார்கள் என்பது மட்டும் வெள்ளிடை மலைத் தெளிவாய்த் தெரிந்தது. 'அண்ணை, நான் நட்புக்கவிதைகள்தான் எழுகின்றனான் (உண்மையில் அப்படித்தான் அந்த வயதில் எழுதிக்கொண்டிருந்தேன்), காதல் கவிதைகள் எல்லாம் எழுதுவதில்லை என்றபோது, 'சரி இப்போது அதையும் எழுதத் தொடங்கு' என்று சொல்லிவிட்டார்கள். 'கவிதை' எழுத வந்த என் விதியை நொந்தபடி சிலருக்கு 'காதற்கவிதைகள்' எழுதிக்கொடுத்திருக்கின்றேன். நிச்சயம் எந்தப் பெண்ணும் அந்தக் கவிதைகளால் வசீகரிக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. எனென்றால் அப்போது மு.மேத்தா போன்றவர்களின் 'எழுது எழுது எனக்கொரு கடிதம் எழுதும் என்னை நேசிக்கின்றேன் என்று எழுதாவிட்டாலும் வேறு ஒருவரையும் நேசிக்கவில்லை என்றாவது எழுது' போன்ற 'அற்புத கவிதைகளில்' மயங்கிக் கிடந்த காலம். 'போடா போடா விசரா, எழுதிறன் எழுதிறன் ஒரு கடிதம். வேறு யாரை நேசித்தாலும் உன்னை மட்டும் நேசிக்கவில்லை என்றாவது ஒரு கடிதம் உனக்கு எழுதித் தாறன்' என்றுதான் அந்தப் பெண்கள் கூற விரும்பியிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

உயர்தரம் படித்து முடியும்வரை காதலிப்பதில்லை என்பதில் 'தெளிவாய்' இருந்தேன். ஆனால் வகுப்புகளுக்கு வரும் பெண்களைப் பார்த்து சலனமடைவது அன்று மட்டுமல்ல இன்றுவரை தொடர்கிறது (முன் ஜென்மத்தில் செய்த புண்ணியமாக்கும்). இப்படி சலனமடையச்செய்யும் பெண்களைப் பற்றி எனது நண்பிகளிடம் விசாரித்தால், அவர்களும் அந்தப்பெண்களின் பூர்விகம், எந்தப் பாடங்கள் நல்லாய்ச் செய்வார்கள், என்னவாய் எதிர்காலத்தில் வர விரும்புகின்றார்கள், தங்களோடு அந்தப் பெண்கள் எப்படி பழகுவார்கள் என்று எல்லாம் விபரமய் எழுதித் தருவார்கள். ஆனால் கடிதத்தை முடிக்கும்போது மட்டும், உனக்கு இவர் சரிவரமாட்டார் போலத்தான் கிடக்கிறது என்ற ஒரு அடிக்குறிப்பை மட்டும் மறக்காமல் எழுதிவிடுவார்கள். நானும் எதிர்காலத்தில் எனக்கும் பிறருக்கும் உதவுமே என்ற நல்லெண்ணத்தில் எனது databaseஐ update செய்துகொண்டிருப்பதில் சளைக்காமல் இருப்பேன். அந்தச் சமயத்தில் 'ஆசை' படம் வெளிவந்திருந்தது. 'கொஞ்ச நாள் பொறு தலைவா' பாடலை எப்போது கேட்டாலும் தங்கள் நினைவு வரவேண்டும் என்று அடிக்கடி இந்தத் தோழிகள் கூறுவார்கள். வஞ்சிக்கொடி வர காத்திருக்கவேண்டிய கொஞ்ச நாள் என்பது எத்தனை நாள்கள் என்று அப்போது கேட்டுத் தெரிந்திருக்கலாம். இல்லாவிட்டால் அந்தப்பாட்டைக் கேட்டபடி வருடக்கணக்காய் கனவுகளில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை எனக்கு வந்திருக்காது.

அந்த வகுப்புக்களில் எனக்குக் கிடைத்த இந்த இரு நண்பிகளைப் போல மறக்கவே முடியாத இன்னொருவர் எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர். அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர். இரண்டிலும் தடுமாறும்/தடுமாறிய உங்களுக்கெல்லாம் இரண்டிலும் அரைகுறை எனபார். மிகவும் பிடித்த ஆசிரியர். எதையும் அவரோடு தயங்காமல் பேசலாம்; என்னோடு ஒரு நண்பரைப்போலப் பழகியவர். ஆங்கிலத்தில் எப்படி ஒரு வாக்கியம் அமைப்பது என்பதை அவரிடம்தான் முதன்முதலில் அறிந்து கொண்டேன். யாழில் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டாலும், பாடப்புத்தகங்களுக்கு அப்பால் போகாமல் நிறுத்தி விடுவார்கள். நாங்களும் புத்தகத்தைக் கொஞ்சம் பாடமாக்கி ஆங்கிலத்தில் ஏதோ எழுதித் தப்பிவிடுவோம். எப்படி தமிழில் ஒரு கட்டுரையை என்னுடையபாட்டில் எழுதமுடியுமோ அப்படி எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவில் என்பாட்டில் கட்டுரைகளை எழுதலாம் என்று நம்பவைத்து எழுதச்செய்தவர் அந்த ஆசிரியர். வீட்டில் பொங்கல், வருசப்பிறப்பு, நவராத்திரி இன்னபிற விழாக்களுக்காய்ச் செய்யப்படும் உணவுகளை அவருடன் பகிர்ந்தபடி ஆறுதலாய்ப் பேசிய பொழுதுகள் அருமையானவை. அவருடைய வகுப்பு என்றால் எதையும் கதைக்கலாம். ஒரு நாள் வாத்தி என்னிடம் உனக்குப் பிடித்த நடிகை யார் என்று கேட்டார். அப்போது ரோஜாவும், மீனாவும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலம். நான் உடனே ரோஜா என்று தயங்காமல் கூறினேன். வகுப்பு முடிந்து போகும்போது வகுப்பில் படிக்கும் ஒரு பெண் அருகில் வந்து, 'சே உம்மை நல்ல ஒரு பெடியன் என்று நினைத்திருந்தேன். நீர் மீனாவை சொல்லுவீர் என்று நினைத்தால். கவர்ச்சி காட்டி நடிக்கின்ற ரோஜாவைச் சொல்லிவிட்டார். உம்மோடு எல்லாம் இனி கதைக்க முடியாது' என்று. என்ன ஒரு பரிதாபமான நிலை. ஒரு ரோஜாவுக்காய் இன்னொரு ரோஜாவை இழக்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு நாவில் புரண்ட சனியைத் தவிர வேறு எது காரணமாய் இருக்கமுடியும்? இப்போது யோசித்துப் பார்க்கும்போது, மீனாவைச் சொல்லியிருக்கலாமோ என்று யோசிக்க தோன்றுகின்றது. மீனாவைச் சொல்லியிருந்தால் அந்தப் பிள்ளையை இழந்திருக்காமல் இருந்திருக்கலாம். மேலும் மீனாவும் ரோஜாவைப் போலன்றி singleயாய்த்தானே யாரோ ஒரு தீவிர இரசிகருக்காய் காத்துக்கொண்டும் இருக்கக்கூடும்.

friend2

கொழும்பில் எங்கள் வீட்டில் ஆரம்பத்தில் ரீவி, விசிஆர் போன்றவை இருக்கவில்லை. அதனால் படம் பார்ப்பதென்றால் உறவினர் வீடுகளுக்குச் சென்றுதான் பார்க்கவேண்டும். ஒரு நாள் ஒரு உறவினர் வீட்டில் படம் பார்க்கப்போய் இருந்தேன். அவர்கள் வெளியே அவசரமாக போகவேண்டி இருந்ததால் என்னைப் படம் போட்டு பார்க்கும்படி கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். கொப்பிகளைப் பார்த்தால் அதில் பெயர் எழுதப்படாத ஒரு கொப்பி இருந்தது. சரி என்னதான் இருக்கிறதென்று போட்டுப் பார்த்தால், அது ஒரு adults only படம். தொடர்ந்து பார்க்க ஆசையிருந்தாலும், யாராவது வந்துவிடுவார்களோ எற பயத்தில் சில நிமிடங்களிலேயே நிறுத்திவிட்டேன். adults only movie பார்க்காதபோது அதைப் பார்க்கவேண்டும் போல இருந்த சுவாரசியம் அதைப் பார்த்தவுடன் போனது ஏனோ என்று பிறகு தெரியவில்லை. படத்தை நிறுத்தியபிந்தான் எனது மூளையும் விழிக்கத் தொடங்கியது. இப்படி ஒரு 'மகா பாவத்தை' செய்துவிட்டேனே என்ற அந்த வயதுக்குரிய பயம் வந்துவிட்டது. பிறகு இந்தப் பாவத்தை நீக்குவதற்காய் ஒருகிழமை தொடர்ந்து கோயிலுக்குப் போயிருக்கின்றேன். ஆனால் Savoy போன்ற adults only movie தியேட்டர்களில் படம் பார்பதற்காய் வரிசையில் நிற்பவர்களைப் பார்க்கும்போது இவர்கள் இப்படித் 'தெளிந்து' வர எத்தனை முறை கோயிலுக்குப் போயிருப்பார்கள் என்று யோசித்திருக்கின்றேன். ஒரு நாள் பாடசாலையில் ஒரு நடிகையில் (ஹொலிவூட்டாய் இருந்திருக்கவேண்டும்) பெரிய floor-up நிர்வாணப் படத்தை நண்பர்கள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னையும் பாரடா என்று அவர்கள் கேட்க, ஏறகனவே ஒரு கிழமை கோயிலுக்கு அலைந்த நினைவு வர, வேண்டாமடா வினை என்று தவிர்த்துவிட்டேன். நான் எதோ 'நல்ல பெடியன்' முகமூடி போடுகின்றேன் என்று அவங்களுக்குத் தெரிந்ததோ என்னவோ, அவங்களும் வேணும் என்று, 'ஆகா நல்லாயிருக்கிறது', 'super' என்று படதைப் பார்த்து comments செய்துகொண்டிருந்தாங்கள். என்றாலும் பம்பலப்பிட்டி பிள்ளையாரைத் தினம் போய்த் தொந்தரவு செய்யக் கூடாது என்பதில் மிக உறுதியாய் இருந்ததால் அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். நண்பர்களிடம் யார் அந்த நடிகை என்றாவது கேட்டிருக்கலாம் என்று இப்போது கொஞ்சம் கவலையாய் இருக்கிறது.

ஏற்கனவே குறிப்பிட்டமாதிரி, பெண்களோடு சும்மா நின்று கதைப்பதே பெருங்குற்றமாகப் பார்க்கப்பட்டது அல்லது கதைப்பவர்கள் எல்லாம் காதலிப்பவர்களாய் இருப்பார்கள் என்பதுதான் பலரின் பொது அபிப்பிராயமாய் இருந்தது. நான் ஒரு முறை வகுப்பு முடிந்து நண்பிகளிடம் கதைத்துக்கொண்டிருந்தபோது, நிறுவன அதிபர் (மச்சான் உறவுமுறைப்படி) என்னைக் கழுத்தில் பிடித்து வெளியில் கொண்டுபோய் தள்ளிவிட்டது இன்னும் நினைவில் உண்டு. பிறகு எனக்குக் கூறுவதற்குப் பதிலாய் எனது நண்பிகளிடம், இவனிடம் நீங்கள் கதைத்தால் வகுப்புக்களுக்கு வராது செய்துவிடுவேன் என்று சொல்லப்பட்டதாயும் கேள்விப்பட்டேன். இப்படி சின்னச் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் மகிழ்ச்சியான தருணங்களுக்கு குறைவில்லாது இருந்தது. அதுவும் முதன் முதலாய் ஜீன்ஸ் போட்டு வகுப்புக்கு வந்த பெண்ணை எங்களின் கடிகளால் கிட்டத்தட்ட அழுகின்ற வரைக்கும் கொண்டு வந்ததை நினைத்தால் இப்போது சற்று சங்கடமாய் இருந்தாலும் அந்த வயதுக்குரிய நிலையில் அது சந்தோசமாய் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இத்தனைக்கும் அந்தப்பெண் எனது நண்பர்களில் ஒருவரின் காதலியாக இருந்தவர். அதானால்தானோ கூட பகிடி செய்தமோ தெரியவில்லை. அவரும் தொடர்ந்து ஜீன்ஸ் அணிந்துகொண்டு வகுப்புக்களுக்கு வந்தது, எமது கடிகளைப் பெரிதுபடுத்தவில்லை போலத்தான் பிறகு தோன்றியது.


அதுபோல விஜயதசமி ஒன்றில் ஹொஸ்டலில் இருந்த பெண்கள் ஆடிய ஆட்டத்தை என்றைக்குமே மறக்கமுடியாது. அதுவும் இந்தப்பூனையும் பால்குடிக்குமா என்று வகுப்புக்களில் அமைதியாயிருக்கும் ஒரு பெண் (நாம் அவருக்கு சூட்டிய பெயர் பணிஸ்) 'முக்காலா முக்காப்பலாவுக்கு' நடனம் ஆடியது இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது. ஆண்கள் என்று நானும் இன்னொரு உறவுக்காரனும் மட்டுமே ஹொஸ்டல் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டோம். அதற்குக்காரணம் நாங்கள் ரீயூசன் அதிபருக்கு உறவினராய் இருந்தமையே. பெண்கள் நடனம் ஆடிவிட்டு எங்கள் இருவரையும் ஆடச்சொல்லிக் கேட்டார்கள். அவர்கள் ஆடிய நடனங்களைப் பார்த்து, ஆட்டத்தின் அரிச்சுவடி எதுவுமே தெரியாத எனக்கே ஆடவேண்டும் போல் கால்கள் உதறினாலும், இப்படி பெண்களின் முன் அவமானப்பட்டு மட்டும் விடக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாய் இருந்தேன். ஏதோதோ காரணங்கள் எல்லாம் சொல்லிச் சமாளித்துக்கொண்டிருந்தோம். உண்மையான 'உண்மையை' அந்தப் பெண்கள் எங்கள் பேச்சைப் பார்த்தே அறியாமலா இருந்திருப்பார்கள்?


freind4

எனது மாமியொருவர் தெஹிவளைக் கடற்கரையையொட்டிய இடத்தில் வசித்துக்கொண்டிருந்தார். கடற்கரைக்கு அருகில் முளைத்திருக்கும் தாழைகள், பாதிரிமரங்களுக்கருகில் காதற்சோடிகள் மத்தியான வெயில்,மழை என்று எல்லாம் பார்க்காது உட்கார்ந்திருப்பார்கள். எங்களின் (எனதும் என் வயதொத்த மச்சான் ஒருவனின்) பொழுதுபோக்கு என்னவென்றால் அவ்வாறு ஆழமாய் காதலித்துக்கொண்டிருக்கும் சோடிகளுக்கு கல்லெறிந்து இயல்பு நிலைக்கு வரச்செய்வது. ஆனால் நாங்கள் எங்கள் முயற்சிகளில் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருப்போம். அனேகமான சோடிகள் ஏதோ நுளம்பு கடித்தது மாதிரி திரும்பிப்பார்த்துவிட்டு காதல் கடிவாளத்தைத் தட்டிவிட்டபடி இருப்பார்கள். இப்படி அடிக்கடி தண்டவாளத்தருகில் நடக்க ஆரம்பித்ததன் உண்மைக்காரணம் புரிந்ததோ என்னவோ, பிறகு மாமி எங்களை அந்தப்பக்கம் போகவிடுவதில்லை. கல்லெறிந்த பாவந்தான் இப்போதும் என்னை விடாது துரத்துகின்றது போல. அப்போதே அந்தச் சோடிகளில் எவரிடமாவது, 'ஒரு காதலில் வெற்றிபெற என்னவெல்லாம்' செய்யவேண்டும்?' என்று கேட்டிருந்தால் நான் இப்படி அவலநிலையில் நின்று எழுதிக்கொண்டிருக்க நேர்ந்திருக்காது. ஆகக்குறைந்து ஒரு காதல் துணை கிடைக்காவிட்டாலும், 'கடற்கரையில் நுளம்பு கடிக்கும்போதும் கல்லெறி விழும்போதும் விடாது காதலிப்பது எப்படி?' என்று மணிமேகலைப் பதிப்பகத்தை ( இன்னொரு பதிப்பகமும் நினைவுக்கு வருகின்றது)கொண்டு புத்தகம் வெளியிடச் செய்து பிரபலமான எழுத்தாளரும் ஆகியிருக்கலாம்.

வாழ்க்கையில் எவ்வளவு அருமையான பெண்களைச் சந்திந்திருக்கின்றேனோ அதுபோல சில பெண்களை வாழ்க்கைப் பாதையில் சந்திருக்காமலிருந்திருந்தால் மிகவும் நனறாக இருந்திருக்கும் என்றும் நினைத்திருக்கின்றேன். பெண்களைப்பற்றிய எனது புரிதல் இந்த இரு தோழிகளிடமிருந்துதான் ஆரம்பிக்கின்றது. அக்காவுடன் சேர்ந்திருந்த காலங்கள் என்பது மிகவும் குறைவு என்றாலும் தொலைவிலிருந்தபடி ஒரு ஆளுமையாக அக்கா எனக்குள் அமர்ந்திருக்கின்றார் என்பதையும் மறுக்கமுடியாது. இந்த நண்பிகளை எனது பதின்மத்தில் பெறாதிருந்தால் பெண்கள் பற்றிய எனது புரிதல் நிச்சயம் வேறு திசையில் நகர்ந்திருக்கும் என்றுதான் உறுதியாய்க் கூறுவேன். வாழ்க்கையில் பிறகு சில crushes வந்தாலும் இந்தப்பெண்கள் மீது எனக்கோ அல்லது அவர்களுக்கோ எந்த crushesம் வராதது நட்பு நட்பாய் மட்டும் இருக்கவும்முடியும் என்பற்கு ஒரு சின்னச் சாட்சி. அண்மையில் உரையாடிய ஒரு பெண்மணி, எனது எழுத்துக்களில் பெண்களின் ஆக்கிரமிப்புத்தான் அதிகம் தெரிகிறது என்று (பிழையான அர்த்தத்தில் சொல்லவில்லை) சொல்லியதும் அதுபோல எனது பதிவுகளை வாசிக்கும் எனது குடும்ப அங்கத்துவர் ஒருவர், ஆண்கள் மட்டும்தான் இந்தச் சமூகத்தில் தவறு செய்கின்றார்கள் என்ற அர்த்தம் வரும்படி உனது எழுத்துத்தொனி இருக்கின்றது என்று கூறியதும் நினைவுக்கு வருகின்றது. இதற்கு என்ன காரணமாய் இருக்கும் என்று நானும் யோசித்துப் பார்த்திருக்கின்றேன். சிலவேளைகளில் எனது முக்கிய பருவங்களில் எனது குடும்பத்திலோ அல்லது நெருங்கிய உறவுகளிலோ பெண்களை நேரடியாகச் சந்திக்காததால் வந்த பாதிப்பாயும் இருக்கலாம் அல்லது எனது பதின்மத்திலிருந்து இன்றுவரை பல அரிய தோழிகள் கிடைத்துக்கொண்டிருப்பதுவும் முக்கிய காரணமாயிருக்கலாம்.

(ஆங்கில ஆசிரியர், அருள்எம்பெருமானுக்கு.......)

Sunday, October 09, 2005

PA080002

ஊரிலென்றால்
மல்லிகைப்பூ வாசம்
கமிழ்ந்தபடி இருந்திருக்கும்
இந்தமாதத்தில்.

இரவைப் பனிமூடிக்கிடக்க
விரல்களிலும் படிகிறது
குளிர்
நிழல்களைப்போல அசைந்தாடுகிறது
கடந்தகாலத்தின் துயர்

நினைவுகள் கொடூரமாய் தோற்கடிக்கும்போது
அவசரம் அவசரமாக
போர்வைக்குள் நுழைந்து
MP3 Playerல் இசையைப் பரப்பி
புத்தகங்களில் அமிழ்ந்துபோகலாம்

அப்போது
விரியத்தொடங்கும்
இதுவரை அறியா உலகில்
நடமாடுகின்றார்கள்
மனிதர்கள் மனிதர்களாகவே

தேவதைகளைக் கொன்ற
சாத்தான்கள்
நுழைந்த திசை
வெளுக்கத்தொடங்கையில் மட்டும்
மறக்கமுடிவதில்லை
இது
தற்கொலை செய்வதற்குரிய
தருணம் என்பதை.

Oct 09/05