கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எனது பெயரும் அகதி.

Saturday, January 13, 2007

காலதேவன் தன் சோழிகளை உருட்டுகின்றான். எவரின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானித்துவிடமுடியாதபடி சோழிகள் ஒரு தீவு தேசத்தின் இருமொழிகளின் நடுவில் சிக்கிப்புதைகின்றன. போரின் அரசன் சரிகின்ற மனிதவுடல்களைப் புசித்து நூற்றாண்டுகால தன் தீராப் பசியைத் தீர்த்துக்கொள்கின்றான். குருதியும், வன்மமுமே தமக்கான வாழ்வின் அடிநாதமென சபிக்கப்பட்ட புதிய தலைமுறைகள் இயற்கை கொஞ்சும் அழகான தேசத்திலிருந்து தோன்றத் தொடங்குகின்றன. காற்சட்டை ஒழுங்காய் இடுப்பில் அணியத்தெரியாது பூவரசுகளிலும் கள்ளிச்செடிகளிலும் ஒளித்துபிடிக்கும் விளையாடும் வயதிலேயே துப்பாக்கிகளே தமது கடவுள் என்ற வாழ்க்கை திணிக்கப்படுகின்றது. துப்பாக்கிகள் தமது உயிரை எடுக்கின்றபோது, தமக்கான வாழ்வைக் காப்பாற்றுபவையும் துப்பாக்கிகளே என்ற புரிதலோடு துப்பாக்கிச் சிறுவர்களின் சந்ததிகள் முகிழத்தொடங்குகின்றன.

ஆயிரம் கனவுகள் உலாவித்திரிந்த வெளியில் அவனும் ஒரு மழலைக் கனவாயிருந்தான். பதினைந்துவருட தாயக வாழ்வில் தனது ஊரில் -அவனுக்கு நினைவு தெரிந்த நாள்களின் பின் - ஒரு வருடமாவது முழுமையாய்த் தன் வீட்டிலே நிம்மதியாய் இருந்தான் என்பதே நினைவில் மீளக்கொணர்வதே கடினமாயிருக்கின்றது. இரவுகளுக்கு மட்டும் நிறம் கருமையாக இருப்பதில்லை; அலைந்து திரியும் அகதிகளுக்கு பகல்கள் கூட இருட்டானவையே. உயிரின் நிமித்தம் ஊரையும் வீட்டையும் துறந்து ஒவ்வொரு ஊர்களில் தங்கியும், பின் போரின் நிழல் அங்கும் நெருங்கி அருகில் வரவர 'பாதுகாப்பான' அடுத்தடுத்த ஊர்களுக்கும் என்று அலைந்துழந்த கதை நெடியது. காலையில் ஆரம்பிப்பதுதான் பாடசாலை என்ற நினைப்பொழிந்து மத்தியானப்பாடசாலைகள் அவனைப்போனற அகதிகளுக்கு ஒரு அடையாளமாயிற்று. பாடசாலைகளுக்குள்ளும் பதுங்குகுழிகள் இருந்தன. போர் அரசர்கள் விமானத்திலும் எறிக்ணைகளிலும் ஏறிவரும்போது எப்படி தப்பிப்பதென்ற முன்னெச்சரிக்கைகளே பாடங்கள் மனதில் படிந்ததைவிட அதிகம் படிந்திருந்தன.

தங்களுக்கு வழிகாட்டியாக இருந்த அண்ணாக்களும் அக்காக்களும் பாடசாலைகளில் இருந்து திடீர் திடீரென மறைந்துபோவதையும், சில மாதங்களின்பின் தெருக்களில் துப்பாக்கிகளுடன் தம்மைப்போன்ற சிறுவர்களின் எதிர்காலத்தை மலரவைப்பதற்காய் வெயிலில் கருகித் திரிவதையும் காண்கின்றான். மிருதங்கமும், 'எங்களின் பாதைகள் வளையாது' என்று பாடித்திரிந்து தனக்கும் கலைகளில் விருப்பை வரச்செய்த ஒரு அன்பு அண்ணா போராளியாக மாறியபோது மிருதங்கம் தொடர்ந்து பழகுவதும் அவ்வளவு பிடிக்காமற்போனது. எப்போதும் சிரித்தபடி சதுரங்கத்தின் நுட்பமான ஆட்டங்களை கற்றுத்தந்த இன்னொரு அண்ணா, போராளியாக இல்லாதபோதும் களத்தில் இறந்தவுடல்களை அகற்றப்போனபோது சினைப்பரடியில் இறந்துபோனநாளில், இது உண்மையாருக்கக்கூடாது என்று தேம்பித் தேம்பி ஒரு பின்னேரப்பொழுதில் இவன் அழுதுமிருக்கின்றான். அகதிகளுக்கு சொந்த ஊர்தான் இருப்பதில்லையே தவிர, கண்ணீரும் கனவுகளும் வற்றிப்போவதில்லைத்தானே.

போராட்டத்தின் நியாய/ அநியாயங்களை
-உயிருக்கு உத்தரவாதம் தரும்- ஒரு நாட்டிலிருந்து நிறைய விவாதிக்கும் 'மனநிலையை' வந்தடைந்துவிட்டாலும், இன்னமும் தனது உயிர் இருப்பதற்கான அடித்தளம் மண்ணையும் மழலைகளையும் நேசித்த போராளிகளின்/மக்களின் அகாலமரணங்களிலிருந்து எழுப்பப்பட்டதென்பதை என்றுமே இவனால் மறந்துவிடமுடியாது. தொடர்ந்து எழுத்துக்களில் போராட்டம் குறித்து பேசாதுவிட்டாலோ அல்லது எழுதப்படுவதில் 'பாஸிசம்' என்ற சொல்லாடலைப் பாவிக்காதுவிட்டாலோ, தீட்டுப்பட்டவனாய் ஆக்கிக்கொண்டிருக்கின்றன சில ஆகிருதிகள்(அது குறித்து எள்ளளவு கவலையுமில்லை. போரின் இரணங்கள் மழலை வயதில் சுமந்த ஒரு அகதியானவன் அதனால் ஏற்படும் மனப்பிறழ்வுகளிலிருந்து தப்பிப்பது எவ்வளவு கடினம் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை.

இன்று பேசுவதைப்போலவே தானே -இவர்கள்- இவன் ஊரூராய் அகதியாய் அலைந்துகொண்டிருந்திருக்கும்போதும் எழுதிக்கொண்டிருந்திருப்பாகள்? இவர்களின் எழுத்துக்களா அல்லது களத்தில் நின்ற போராளிகளின் ஒர்மமா இவனின் உயிரைக் காப்பாற்றி இன்னொரு தேசத்தின் கரையை அடையச் செய்திருக்கின்றது? இன்று இதைக்கூட எழுதமுடியாமல் - செய்திகளின் இலக்கங்களில் மட்டுமே வாசிக்கும் ஒரு அநியாய மக்கள் படுகொலையின் -பெருங்கூட்டத்தின் ஒருவனாய்- இவனும் நேற்று கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம். இரங்கல் குறிப்பை விட உயிர் விட்டுக்கொண்டிருக்கும் மூச்சுக்காற்றின் கணங்கள் எவ்வளவு அற்புதமானது என்பது 'போர் பிதுக்கித்தள்ள பருவம் வரமுன்னரே வளர்ந்துவிட்ட' இவனைப்போன்றவர்களுக்கு நன்கு தெரியும்.

ஒவ்வொரு துயரங்களிலிருந்தும் அவன் தப்பியோடவே முயன்றுகொண்டிருக்கின்றான் என்பதையும், வாசிக்கும் செய்திகளின் அவலத்தில் தனது பழைய வாழ்வின் அத்தியாயங்கள் இன்னொரு சந்ததிக்கும் மீளப்புதுப்பிக்கப்படுகின்றது என்பதை அறிவதாலும்... தான் மூளைநரம்பு வெடித்து பைத்தியக்காரனாய் ஆகிவிடக்கூடும் என்ற அச்சம் அவனுக்கு எப்போதும் உண்டு. தப்பித்தல் என்றாலும் தனது நினைவுப்புள்ளிகள் ஊரின் -பழையசம்பவங்களின்- துயரங்களில் மையங்கொள்வதைத் தவிர்ப்பதற்காய் தன்னை இலகுவாக்கும் பொழுதுபோக்கிற்குள் அடிக்கடி புகுந்துகொள்கின்றான். ஆனால் இங்கே அரசியல் பேசும் பலருக்கு போரால் பாதிக்கப்படும் மக்களின் மனவுணர்வுகளைவிட தமக்கான அரசியல் புள்ளிகளை நிரூபித்துவிடும் எத்தனிப்புக்களே இருப்பதென்பதே மிகப் பெருஞ்சோகம். அவர்களின் எந்தப்புள்ளிக்குள்ளும் சிக்கிவிடாதிருத்தலே சாலவும் சிறந்தது.

தான் பேச விரும்பும் முழு அரசியலையும் அவன் பேச விரும்பும்போது இவ்வாறான தனது பல நுண்ணிய மனவுணர்களைக் கொன்று புதைத்துவிட்டுத்தான் பேசவேண்டியிருக்கும். மெளனமாய் இருப்பதென்பது எப்போதும் உடன்பாட்டுடன் இருப்பது என்பதல்ல; மெளனத்திற்குள் உடன்பாடில்லைகளின் குறிப்புகளும் அமிந்திருக்கின்றன என்றும் விளங்கிக்கொள்ளமுடியும். 'எனக்கு நடைபெறும் எதிலும் உடன்பாடில்லை' என்று பொதுவாய் ஒவ்வொரு குறிப்பின்பின்னும் எழுதி எல்லோருக்கும் நல்லவராய் இருப்பது இலகுவெனினும்-அவனுக்கு கிடைத்த தனிமனித அனுபவங்களினூடு- அந்த முடிவுகளுக்கு மிக எளிதாய் வந்துவிடமுடிவதில்லை. தன்னில் அன்பு வைத்த அண்ணாக்கள், அக்காக்கள், ஊர் விட்டு நீங்கி வந்தபோது தொலைந்துபோன தோழர்கள், தோழிகள், உறவுகள் என்று அனைவரையும் எவரேனும் ஒருவர் உயிர்த்தெழச்செய்து தருவார்களெனின் எல்லோருக்கும் பொதுவான போரின் அறத்தையும், தவறுகளே இல்லாத வார்த்தைகளால் மட்டுமே கட்டியமைப்படும் புரட்சிப்போராட்டங்கள் குறித்த கனவுகளையும் பற்றி இவன் விரிவாகப் பேசக்கூடும்.

புலம்பெயர்ந்து இன்னொரு நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டும் அதன் தேசிய நீரோட்டத்தில் தொபுக்கடீரென வீழ்ந்துவிடாது 'அகதி' என தொடர்ந்து அடையாளப்படுத்துவது, கழிவிரக்கத்திற்காய் அல்ல. தனது தேசத்தில் இருப்பில்லாது அடித்துத் துரத்தப்படும் அகதிகளின் சென்ற தலைமுறையின் ஒரு எச்சமாய் இருக்கவே விரும்புகின்றான். தாயகமண்ணை விட அதிக சுதந்திரத்தையும், பொருளாதார வாய்ப்பையும் இந்தப் புலம்பெயர்தேசம் தந்தாலும், ஒரு கனடியப் பிரஜையாக உரிமைகொண்டாடுவதில் அவ்வளவு விருப்பமில்லை. தன் தாய்தேசத்தில் இருக்கும் அகதிகள் மட்டுமில்லை, உலகெங்கிலும் மக்கள் திரள்திரளாய் அகதிகளாய் அலைந்து திரியாதபொழுதொன்றின் அற்புதமானகணத்தில் 'அகதி' என்ற தனது அடையாளத்தை இவன் தொலைத்துவிடக்கூடும். அதுவரை முன்னாள் அகதியெனவும், மனதின் உணர்வுகளின் அடியாழங்களில் இன்றும் அகதியாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் என்றும் அனைவரிடமும் அறிமுகப்படுத்துவதில் தயக்கங்களேதுமில்லை.

.

உடல்மொழிக் கவிதைகள்

-பெண்களின் படைப்புகள்-

காமம்

உயரும்
மலையடிவார கும்பிகளுக்குள்
திணறி அடக்கமுறும்
மனித மூச்சுகளும்

பள்ளங்களின்
ஆழப் புதைவில்
அலறி ஓயும் குரல்களின்
இறுதி விக்கல்களும்
உண்டு இங்கு

சுவருக்கு செவிகள் உண்டு
இருளுக்கு கூர் விழிகளும் உண்டு
பீறிக் கசியும் ரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று -
அவளுக்கு

(ஆழியாள் - 'துவிதம்')
....................

விஸ்வரூபம்

எதோ ஒரு பருவ மாற்றத்தில்
எனது அங்கங்கள் ஒவ்வொன்றும்
மிருகமாகவும் பறவையாகவும் மாறி
என்னைவிட்டு விலகிச் செல்லத்தொடங்கின

அவையே திரும்பி வந்து சேர்வதும்
பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை
தேடிச் சென்று அழைத்துவருவதென நிகழ்வதும்
பிற்கு யாத்திரைபோலப் புறப்பட்டுச்
சென்றுவிடுவதும் வழக்கமாகி
எல்லாக்கால வெளியிலும் அலையத்துவங்கின

நீண்ட காலமாகிவிட்டது
பல திக்குகளின் நீர் நிலங்களை
நோக்கிச் சென்றிருக்கும்
எது எத்திசையில் உலவுகிறது
என யூகித்தறிய முடியவில்லை
திரும்பி வந்துவிடும்போது
வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும்
குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து
என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன

யோனி ஒரு பட்டாம்பூச்சியாக
மலைகளில் அலைதைக் கண்டதாக
காட்டில் விறகு பொறுக்கச் சென்ற
பெண்கள் வந்து கூறக்கேட்டேன்

(மாலதி மைத்ரி - 'நீரின்றி அமையாது உலகு')
....................

விருட்சங்கள்

பருவங்கள் வாய்த்த என்னுடல்
காளானைப் போலக் கனிந்து குவிகிறது.
அதன் முன்னும் பின்னும்
கவனமாய் நெய்த ரகசிய உறுப்புகள்
மயிர்க்கால்கள் சிலிர்த்த தோல் முழுவதும்
காமநெய்யின் இடையைச் சுற்றி
வெதுவெதுப்பான புணர்கதுப்புகளும்
கவிழ்த்துப் போட்ட ஆயுத எழுத்தாய்
காமத்தின் சோழிகளும்
உடலினுள் பொதிந்து மிதக்கின்றன
இப்போது புகையின் வடிவம் கொண்டு
ஒப்பனைகள் ஏதுமற்ற தெருக்கலைஞனைப் போல
கச்சையின் முன்புற வார் அவிழ்க்கிறாய்
பாலூட்டியவைகளை ருசித்தவாறே
அவற்றின் பெயர்சொல்லவும் வெட்கிக்கிறாய்
என் மார்பின் இசைக்கவையை
போரின் கொலைக்கரமாய் நீட்டுகிறேன்.
இனியென் ஆளுகைப் பிரதேசத்தில்
பதாதைகளை உயர்த்திப் பிடிக்கும்
இளகாத ஸ்தனங்களை
விதையின் அடியிலிருந்து உரக்கப்பாடு
முலைகள் விருட்சங்களாகி வெகுகாலமாயிற்று.

(சுகிர்தராணி - 'இரவு மிருகம்')
....................

விடியும் பொழுதில்

உன்னை நிறுவிடவியலாத
உன் வருடலில் கிளர்ச்சியுறாத
இவ்வுடலின் மீது
பெரும் விருட்சமெனப் படர்கிற துவேசம்
இரவென் படுக்கையில் விழுந்து துடிக்க
அதிகாலையின் முதல் கதிரைக் காண
அச்சத்தோடு உறங்கி
விடியலில் மறு உயிர்கொள்வேன் நான்

(சல்மா - 'பச்சை தேவதை')
....................

முலைகள்

முலைகள்
சதுப்புநிலக் குமிழிகள்

பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்

எவரோடு எதுவும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை....

மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை

தவத்தில்
திமிறிய பாவனையையும்
காமச்சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன

ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசு கண்ட அதிர்வில்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன

ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிக்ளாய்த் தேங்கித்
தளும்புகின்றன.

(குட்டி ரேவதி - 'முலைகள்')

Little Children - திரைப்படம்

Friday, January 12, 2007

lt1

உறவுகள்; முகிழும்போது அழகாகவும், நாட்கள் செல்லச் செல்ல அது சுவராசியமற்றுப் போவதன் அவஸ்தையையும் Little Children படத்தில் இயல்பான நிகழ்வுகளின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளார்கள். படத்தைப் பார்த்துக்கொண்டு போகும் எவருக்கும் மனித விழுமியங்களின் பெறுமதி எத்தகையென்ற கேள்விகள் எழும்பத்தான் செய்யும். Children என்ற ஏற்கனவே வெளிவந்த நாவலைத் தழுவி, Little Children ஐ படமாக்கியுள்ளார்கள். கதை நம் அநேகருக்குப் பரீட்சயமாய் இருக்கக்கூடிய பூங்கா, நீச்சல் தடாகம், விளையாட்டுத்திடல் போன்றவற்றைச் சுற்றி நிகழ்கின்றது.

மாஸுஸட்டில் நகரில் மசாசூஸெட்ஸ் மாநிலத்தின் நகரொன்றில், நன்றாக உணவூட்டப்பட்டு, நன்றாக பராமரிக்கப்பட்டு ஹார்வெர்ட் வளாகம் செல்லும் கனவுகளுடன் குழந்தைகளை வளர்க்கும் ஒரு புறநகர்ப்பகுதியில் கதை ஆரம்பிக்கின்றது. நகரில் பல பெண்கள் வேலைக்குச் செல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது மட்டுமே அவர்களின் முக்கிய வாழ்வின் பகுதியாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கும் பெண்களுடன் சாராவும் பூங்காவுக்கு தனது மகளுடன் வருகின்றார். சாரா மற்றப்பெண்களைப்போல எல்லாவற்றிலும் perfect யாய் இருக்கமுடியாது அவஸ்தைப்படும் ஒரு இல்லத்தரசி.

அந்தப்பூங்காவுக்கு - லோயருக்கான bar exam-ல் தொடர்ந்து தோற்றுக்கொண்டு வீட்டில் வேலையற்று இருக்கும் பிரட் தனது மகனுடன் அடிக்கடி வருகின்றார். அவருடன் -அறிமுகஞ்செய்து கொள்ளாமல்- தங்களுக்குள் அவரை the prom king என்று அழைத்து பிற பெண்கள் இரசித்துக்கொண்டிருப்பதை சாரா கண்டு வியப்படைகின்றார். ஒரு கட்டத்தில் அந்தப்பெண்களில் ஒருவர் சாராவிடம் தொலைபேசி நம்பரை எடுத்தால் இவ்வளவு பணம் தருகின்றேன் என்று பெட் கட்டுகின்றார்.

lt2

இவ்வாறு விளையாட்டில் ஆரம்பித்த அறிமுகம் பிறகு இருவரின் தனிமையாலும் நெருக்கம் கூடுகின்றது. சாரா ஆங்கில இலக்கியத்தில் மாஸ்ரர்ஸ் செய்துவிட்டு தனது கனவுகள் கருக குழந்தையுடன் வீட்டுப் பெண்ணானவர். அவரின் கணவரோ இன்ரநெட்டில் ஃபோர்னோ படங்கள் பார்த்து தன்னைத் திருப்படுத்துபவர். பிரட்டின் மனைவி ஒரு பிரபலயம் பெற்ற ஆவணப்பட இயக்குநனராய் இருக்கின்றார். சாராவுக்கு சலித்துப்போன -ஒரேநேர்கோட்டில் நகரும் - வாழ்க்கை முறையில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாக பிரட்டின் உறவு இருக்கின்றது. குழந்தைகளைக் கவனிப்பதற்காய் நட்பாகின்றோம் என்றபடியே Adultery(பிறன்மனை விழைதல்?) சாராவுக்கும் பிரட்டிற்குமிடையில் நிகழ்கின்றது.

இதற்கிடையில் இன்னொரு கிளைக்கதையாக, குழந்தைகளை பாலியல் சேட்டைகளுக்கு ஆளாக்கிய ரொனி என்பவர் சிறையிலிருந்து வர அந்நகர் பீதியுறத்தொடங்குகின்றது. ஒரு முன்னாள் பொலிஸ், பெற்றோருக்கான நலன்புரிச்சங்கம் அமைத்து, ரொனியை பின் தொடர்ந்தும், தொந்தரவு செய்தும் கொண்டிருக்கின்றார், ரொனி தன்பாட்டில் தனது தாயாருடன் வாழ விரும்பும்போதும். குழந்தைகளில் பாலியல் சேட்டை செய்தவரின் சிறைவாசத்திற்குப் பின்பான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை இந்தப்படம் இயன்றளவு யதார்த்தமாய் காட்ட முயற்சிக்கின்றது. இப்படியே தனது மகன் இருந்தால் எல்லோரும் தன் மகனை ஒதுக்கிவைத்துவிடுவார்கள் என்று நினைத்து தனது மகனுக்கு ரொனியின் தாயார் டேட்டிங் செய்ய ஒரு பெண்ணை சம்மதிக்க வைக்கின்றார். எனினும் நினைத்த மாதிரி அந்த டேட்டிங் வெற்றிபெறாமல் ஒரு சந்திப்போடு குலைந்துவிடுகின்றது.

இதற்கிடையில் சாரா, பெண்கள் புத்தகம் வாசிக்கும் ஒரு கிளப்பில் புத்தகமொன்றை (Madame Bovary ?) பெண்களுடன் விவாதிக்கின்றார். அந்தப்புத்தகத்தின் கதையில் வரும் பெண்ணைப் பற்றிய சித்தரிப்புக்களும், சாராவின் adulteryயும் ஒரே சந்தர்ப்பத்தில் மாறி மாறி காட்சிப்படுத்தப்படும். புத்தக வசனங்களும், சாராவின் intimacy யுமென ஒரு கவிதைக்கு நிகர்த்து அழகாக அது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். புத்தக விவாத்தின்போது சாராவின் தோழியொருவர், நாவலில் வரும் பெண் செய்தது பெருந்துரோகம் என்கின்றார். சாரா அதை மறுத்து, its not cheating, its the hunger...hunger for alternative ...-சந்தோசத்தை தேடும் தப்பித்தல்- என்று விடாது விவாதிக்கின்றார். தொடர்ந்து நிகழும் adultery யில் பிரட்டின் மனைவியிற்கு சாரா-பிரட் உறவின்மீது சந்தேகம் வருகின்றது. இதற்கிடையில் ரொனியைக் கண்காணிக்கின்றேன் என்று முன்னாள் போலிஸ் போய் ஒரு சர்ச்சையில் ஈடுபட்டு, தனது மகனைத் தொந்தரவுசெய்யவேண்டாம் என்று மகனுக்காய் வாதிடும் ரொனியின் தாயைக் கோபத்தில் கீழே தள்ளிவிடுகின்றார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவ்விரவே ரொனியின் வயது முதிர்ந்த தாய் காலமாகின்றார். ரொனி தன்னை இதுவரை காலமும் கவனமாய்ப் பார்த்துகொண்டிருந்த தன் தாய் இறந்துவிட்டாரே என்று கதறத்தொடங்குகின்றார்.

அதேநாளிலேயே, சாராவும் பிரட்டும் தங்கள் வீடுகளை விட்டு ஓடி (துணைகளைப் புறக்கணித்து) வேறு நகருக்குச் சென்று சேர்ந்து வாழ்வதென முடிவெடுக்கின்றார்கள். சாரா தனது குழந்தையுடன் - தானும் பிரட்டும் முதன்முதலில் சந்திதத பூங்காவுக்கு- இரவு நேரம் வீட்டைவிட்டு ஓடி வருகின்றார். அதேசமயம் தனது தாய் கொல்லப்பட்டுவிட்டார் என்ற பதைபதைப்பில் கத்தியொன்றுடன் வருகின்ற ரொனி, சாராவையும் அவரது குழந்தையையும் காண்கின்றார்.

lt3

படம் மிக இயல்பாய்- சிலவேளைகளில் அலுப்புத்தட்டுவதுமாதிரியும்- ஆறுதலாய் நகர்கின்றது. அடிக்கடி சடுதியான திருப்பங்கள் நடக்கும் என்று மனநிலையில் இந்தப்படத்தைப் பார்க்க விரும்புவர்கள் இந்தப்படத்தைப் பார்க்காது இருப்பதுதான் நல்லது. இங்கே சாரா - பிரட்டின் adultery குறித்து விதந்தோ அல்லது அதற்கான காரணங்களை அதிகம் நியாயப்படுத்தியோ இந்தப்படம் விரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான -நமக்குத் தெரிந்த சுற்றாடலில்- எத்தனையோ விடயங்கள் நமது அறிதல்களுக்கும் பகுத்தாய்ந்து பார்ப்பதற்கும் அப்பாற்பட்டு நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன என்பதைத்தான் நெறியாள்கையாளர் பார்ப்பவரிடையே முக்கிய செய்தியாக சொல்ல விரும்புகின்றார் என்று நினைக்கின்றேன். இந்த உறவு (adultery) எத்தனை காலம் வரை நீடிக்கப்போகின்றதோ என்று பார்ப்பவரிடையே கேள்வி எழுவது இயல்பானது. எனினும் திரையில் வரும் பாத்திரங்கள் அவ்வாறான பிரக்ஞை எதுவுமின்றி தமக்கான அலுப்பான யதார்த்ததிலிருந்து உடனடியாக தப்புகின்ற நிகழ்காலத்தையே முதன்மையாக கொள்கின்றன. அதனால்தான் சிலவேளைகளில் கவனம் இல்லாமல் கூட தமக்கிடையிலான உறவை பொது இடங்களில் கூட சாராவும்- பிரட்டும் வெளிப்படத் தவறவில்லை என்பதை நெறியாள்கையாளர் சூசகமாய் காட்சிப்படுத்துகின்றார்.

இது சில மனிதர்களின் வெட்டப்பட்ட வாழ்வியலின் சிறுதுண்டு. காலம் குறித்த மிகுந்த கவனத்துடன் எடுக்கப்பட்டிருகின்றது. திரும்பத் திரும்ப குறிப்பிட்ட பின்னணியில் கதை மாறி மாறி நகர்ந்தபடி இருக்கின்றது. அடிக்கடி சாரா பிரட்டிடம், இப்படியேன் உன் அன்பான/அழகான மனைவியிற்கு துரோகம் செய்துகொண்டிருக்கின்றாய் என்று ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பது, சாராவால் கூட இந்த adulteryஐ முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதாகவும் புரிந்துகொள்ளலாம்.

அதேசமயம், பாலியல் சேட்டை செய்து தண்டனை பெற்ற ஒரு நபரை (ரொனியை) மீண்டும் மீண்டும் குற்றவாளிக்குவதற்கு சமூகம் எவ்வாறான அழுத்தங்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றன என்பது மிக நுட்பமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ரொனியைக் கண்காணிக்கின்றேன் என்று வெளிக்கிடும் முன்னாள் பொலிஸ் கூட, கடமை நேரத்தின்போது யாரையோ தவறாக சுட்டுக்கொன்று பதவி பறிக்கப்பட்டவர் என்பது ஒரு irony தான். சாதாரண திரைப்படங்களுக்குரிய திருப்பங்கள் எதுவுமே இல்லாது,இறுதி முடிவு கூட இயல்பாய் முடிகின்றது. ஆனால், மனித உறவுகளின் சிக்கலானதும் அழுத்தமானதுமான நிலை குறித்து எமக்குள்ளேதான் கேள்விகள் நிரம்பத் தொடங்குகின்றன.

(2)
Kate Winslet எனக்குப் பிடித்த நடிகைளில் ஒருவர். இந்தப்படத்திலும் அருமையாக நடித்துள்ளார். சில நாட்களுக்குமுன் ரொரண்டோ வந்த அவரிடம் நேர்காணல் செய்யப்பட்டபோது, இந்தப்படத்தில் நடிப்பதற்காய் தான் நாவலை வாசித்து அந்த பாத்திரத்தை முழுதாய் தனக்குள் உள்வாங்கிவிட்டுத்தான் நடித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தப்பாத்திரம் (சாரா) குறித்து என்ன கருத்து உங்களுக்கிருகின்றது என்று கேட்கப்பட்டபோது, அவ்வாறான ஒரு அலுப்பூட்டக்கூடிய வாழ்வை நான் தேர்ந்தெடுக்கமாட்டேன் என்றாலும், அவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலைக்குள் சிக்கியிருக்கும் பெண்கள் திரைப்படத்தில் காட்டப்பட்டது மாதிரித்தான் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க அநேகமாய் முயல்கின்றனர் என்பதையும் மறுக்கமுடியாது எனவும் கூறியிருந்தார். சாராவின் குழந்தையாக நடித்த சிறுமியும் மிக நன்றாக நடித்திருப்பார். பலரால் சிலாகிக்கப்பட்ட, In the bedroom என்ற படத்தை எடுத்த Todd Field ன் இரண்டாவது படம் இது.

நாய்

நாய் பலவீனங்களிலிருந்து
தனக்கான அபிப்பிராயங்களை உருவாக்குகின்றது
இன்னொரு வீழ்ச்சிபற்றி குரைக்கும்போது
தனக்கான வீழ்ச்சியின் கற்களையும்
முதுகில் தாங்கியபடியே
ஆட்டுகின்றது வாலை

தனக்கான கடவுளும்
தான் பேசும் அரசியலும்
நரிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றதென
நாயும்
நரிகளின் குரல்களில் ஊளையிட்டால்
பிரதிஸ்டை செய்து பீடத்தில் ஏற்றப்பட்டு
குழாத்து சொறிதல்களும் சொகுசாய்க் கிடைக்கலாமெனினும்.....
பரிகள் நரிகளாயினும்
நாய்கள் நரிகளாவதில்லை

நாயை நோக்கி ஊளையிடும் நரிகள்
நேற்று போலிப்புன்னகைகளை
வீசிய முகமூடிப்பசுக்களென
மூடித்திறக்கும் படலைகள் அடையாளம் வைத்துச் சொல்கின்றன

வன்மத்திலிருந்து வன்மத்தையும்
சூழ்ச்சியிலிருந்து சூழ்ச்சியையும்
குரல்வளைகளைக்கிழித்து திருப்பிக்கொடுக்கும்
வன்முறை நாய்களுக்கும் தெரியும்

தன்னில் பரிவுகொள்ளும் மழலைகள்
துயில் கலைந்து
சித்தம் கலங்கிடுமெனும் கவலையில்
மூர்க்கமாய் குதறிக்கடிப்பதை நெடும்நாட்களாய் மறந்திருந்தாலும்
தீட்டிக்கொள்கின்றது வேட்டைப்பற்களை
நாய்.


No apologies. /No suckers im not sorry/ you can all sue me. /Y'all could be the cause of me. /No apologies. /Y'all feeling the force of me no remorse from me../ Like there was no real cause for me /No apologies. /I'm not even acknowledgeing you at all, 'til i get a call that gods coming./ No apologies. /Laugh f***s its all funny, I could spit in your face while you standing across from me /No apologies!
(Eminem: Re-Up)

வன்னியிலிருந்து மூன்று படைப்புக்கள்

-மீள்பதிவு-

உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி வந்தது. அதேபோன்று அந்தக் கடும் நெருக்கடிக் காலகட்டத்தில் வன்னிப்பெரும் நிலப்பரப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல படைப்பாளிகள் தோன்றியிருந்தனர் என்று புலம்பெயர்ந்தவர்கள் அறியவும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நானறிந்தவரையில், போர்க்காலத்தில் மூன்றாவது மனிதன் ஓரளவு வன்னியிலிருந்து எழுதிய படைப்பாளிகளைப்பற்றி குறிப்புக்களை எழுதியதை வாசித்திருக்கின்றேன். அதில் சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் வன்னியிலிருந்து முகிழ்ந்த படைப்புக்களுக்கு விமர்சனங்களை அவ்வவ்போது எழுதியிருந்தனர்.

அமரதாஸின் இயல்பினை அவாவுதல் (1999), நிலாந்தனின் யாழ்ப்பாணமே ஓ... எனது யாழ்ப்பாணமே (2002), தானா.விஷ்ணுவின் நினைவுள் மீள்தல் (2003) போன்றவை வன்னிப்பெரும் நிலப்பரபிலிருந்து அச்சிட்டு வெளியிடப்பட்டாலும், படைப்பாளிகள் வன்னிக்குள்ளும் வெளியிலும் வாழ்ந்தவர்கள்; வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வன்னியிலிருந்து பதிக்கப்பட்டதால், அவற்றை வன்னிப்படைப்புக்கள் என்ற ஒரு இலகுவான பிரிப்புக்குள் கொண்டுவரலாம் என்று நினைக்கின்றேன்.


இயல்பினை அவாவவுதல் தொகுப்பை வெளியிட்ட அமரதாஸ் ஒரு போராளியாக இருந்தவர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் களத்தில் நேரடியாக நின்றவர். சண்டிலிப்பாய் - அளவெட்டிப்பகுதியில் நடைபெற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் காலில் படுகாயம் அடைந்து இன்றும் ஒருகால் சரியாக இயங்காது அவதிப்படுபவர். இன்றையபொழுதில் போராட்ட அமைப்பிலிருந்து முற்றாக விலகி சாதாரண ஒரு பொதுமகனாக, துணைவி, பிள்ளை என வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவருடம் நேரடியாகப் பேசியபோது தன்னை ஒரு சுயாதீன பத்திரிகையாளர் (Freelance Journalist) என்றே அடையாளப்படுத்த விரும்புவதாய்க் கூறியது நினைவு.

அமரதாஸ் என்னும் படைப்பாளி பற்றி, கருணாகரன் இந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் இப்படிக் கூறுகின்றார். 'அமரதாஸ் 23 வயது இளைஞர்; ஈழக்கவிஞர்; தொண்ணூறுகளில் ஆரம்பத்திலிருந்து எழுதத்தொடங்கியவர்.; இலக்கியத்தின் பிற துறைகளிலும் ஈடுபடுபவர்; வாழ்வின் சகல விடயங்கள் பற்றியும் தீர்க்கமாக உரையாடுபவர்; புரிந்துணர்வோடும் விரிந்த சிந்தனையோடும் உறவாடுபவர். இவரின் கவிதைகளிலும் இந்தப் பின்புலங்களை உணரமுடியும். இவற்றுக்கப்பாலான அம்சங்களையும் அடையாளங்களையும் இவருடைய கவிதைகளில் வாசகர்கள் உணரக்கூடும்.'

அமரதாஸின் கவிதைகளில் ஆச்சரியப்படவைக்கும் ஒரு விடயம் எங்கும் நேரடியாக போரைப் பற்றிப் பேசவில்லை என்பதுதான். எழுதப்பட்ட சில கவிதைகளில் கூட, போர்க்களத்தில் நிற்கும் ஒருவன் தன் துணைக்கு தான் திரும்பி வருவேன் என்று ஆறுதல் கூறுகின்றதான கவிதைகளாய் இருக்கின்றனவே தவிர போர் குறித்து பெருமிதப்படும் கவிதைகள் அறவே கிடையாது. போரிற்குள் வாழ்ந்துகொண்டு அதன் அனைத்துக் கொடூரங்களையும் பார்க்கும் ஒருவனால் அது குறித்து பேசமுடியாது போலும். காதலியின் கடிதம் 01ல்...

'போர்முனையுள் உன் முனைப்பு
வேரறுந்த பூமரமாய் ஆகிறது என் நினைப்பு.

அழிக்கவோ அல்லது அணைக்கவோ முடியாத
என் நிழலாய் உன் இருப்பு
அந்தரத்து வாள் முனையில்
எந்தனது காத்திருப்பு'
என்றும்,

துயர்க்காலம் என்னும் கவிதையில்,
'அவசரமாய் அணிவகுத்து
போருக்குப் புறப்படும்போது
ஊரில் இருந்து
சதா என்னை நினைத்து
அழுதிருக்கும் உன் முகம்
இதயத்தில் மினுங்குது மங்கலாய்.'

என்று ஆரம்பித்து இறுதியில்...
'வெடித்துச் சிதறும் களத்திலிருந்து
உயிர்கொண்டு திரும்ப நேர்ந்தால்
உனைக்காண வருவேன்
மனஞ்சிலிர்த்து'

என்று மனதைப் பிசைவதாய்த்தான் முடிகிறது. பல கவிதைகள் படிமங்களால் வார்க்கப்பட்டு (புத்தகம் பற்றி, விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தறிப்பு) பல்வேறு அர்த்தங்களை வாசிப்பவர்களுக்குத் தருபவை. வன்னிக்கு சென்றவருடம் சென்றபோது அமரதாஸ¤டன் இரண்டு வாரங்கள் பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. இயல்பான சூழ்நிலையில் பலவிடயங்களை மனந்திறந்து பேசக்கூடியதாக இருந்தது. இந்தத் தொகுப்பில் எழுதப்பட்ட அனேக கவிதைகள் போராட்டக்களத்தில் நின்றபோது எழுதப்பட்டவை என்று கூறியபோது வியப்பாயிருந்தது. வாசிப்பதற்கோ, விவாதிப்பதற்கோ நேரங்கிடைப்பதே அரிதாயிருக்கும் சூழலில் (மற்றும் போராட்டக்காலத்தில் வடபகுதிக்கு பிற இடங்களிலிருந்த அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது) இந்தக் கவிதைகள் நவீனத்துவச் சாயல் படிய எழுதப்பட்டிருப்பதற்கு, அமரதாஸ் என்னும் ஒரு படைப்பாளியின் ஆளுமைதான் முக்கிய காரணமாயிருக்கக்கூடும் என்று நினைக்கின்றேன்.

அமரதாஸ¤டன் உரையாடியபோது அவர் நிறைந்த வாசிப்புள்ளவர் என்பதை இலகுவில் அவதானிக்க முடிந்தது. ஈழம் என்றில்லாமல் தமிழக/புலம்பெயர் படைப்புக்களில் அனேகமானவற்றை வாசித்திருக்கின்றார் அல்லது அறிந்து வைத்திருக்கின்றார். அது மட்டுமில்லாமல் அமரதாஸ் நல்லதொரு புகைப்படக் கலைஞர். அவர் எடுத்த படந்தான் Lutesong and Lament என்ற ஈழத்தமிழ்ப்படைப்புக்களின் ஆங்கிலமொழிபெயர்ப்பின் முன்னட்டையை அலங்கரிக்கின்றது. இன்று வன்னியிலிருந்தும் யாழிலிருந்தும் வரும் அனேக படைப்புக்களில் அமரதாஸினதும், கருணாகரனினதும் பங்களிப்பு ஏதோவொரு வகையில் இருக்கின்றது (அண்மைய உதாரணம்: புதுவை இரத்தினதுரையினது, பூவரசம் வேலியும் புலூனிக் குஞ்சுகளில், ட்ராஸ்கி மருதுடன், அமரதாஸின் கைவண்ணமும் உள்ளது).

அமரதாஸிற்கு பயணஞ்செய்வதில் (எந்தப்படைப்பாளிக்குத்தான் விருப்பமிருக்காது) அலாதிப்பிரியமெனவும், அவ்வாறு பயணித்த இடங்களில் எடுத்த புகைப்படங்களை எனக்கும் காட்டியிருந்தார். அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட படங்களைத் தொகுத்து, 'கோபுரங்களில் இருந்து' என்ற தலைப்பில் ஒரு புகைப்படக்கண்காட்சி வைக்கப்போவதாய் கூறியதாயும் நினைவு. அந்தக் கண்காட்சியில் முழுப்படங்களும் இந்துக்கோயில் கோபுரங்களின் சிலைகளை/சிற்பங்களை உள்ளடக்கப்போவதாய் கூறியிருந்தார். பாலியல் சிந்தனைகள் ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்தில்தான் இவ்வாறான படைப்புக்கள் முகிழ்ந்திருக்கின்றன என்பதுதான் முக்கியமான முரண்நகை என்றார். கோபுரத்தில் உறங்கிக்கிடக்கும் அவற்றை யதார்த்திற்கு கொண்டுவந்து விரிவான உரையாடல்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்ற நோக்கிலேயே கோபுரத்திலிருந்து என்று தலைப்பு வைக்க விரும்புவதாய் கூறினார். உண்மையில் அதுவரைகாலமும், இந்தியாவிலுள்ள கோயில்களில் மட்டுந்தான் இப்படி வெளிப்படையான பாலியல்/நிர்வாணம் சித்தரிக்கும் சிற்பங்கள் இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அமரதாஸ் எடுத்த புகைப்படங்கள் மிகவும் ஆச்சரியமூட்டியது (கிட்டத்தட்ட மூன்று அல்பங்கள் அளவில் அவர் எடுத்த படங்கள் இருந்தன).


தானா.விஷ்ணு யுத்ததிற்குள்ளே பிறந்து அதன் சகல பாதிப்புக்களையும் தன்னகத்தே உள்நிரப்பி வளர்ந்த ஒரு கவிஞன். அனைவரையும் போல, முதலாம் தொகுப்புக்கான பலத்துடனும் பலவீனங்களுடன் நினைவுள் மீள்தல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. போரும், காதலும் இவரது கவிதைகளின் அடிநாதமாய் ஒலித்தபடி இருக்கின்றன.

'ஒளி ஓவியத்தின் ரேகைகளுள்
நான் தொலைந்து கொண்டிருக்கும்
இந்தப் பொழுதில்
நீ தலையணைக்கடியில் உன் விழிகளை
உதிர்ந்து விட்டு
ஒரு பிரமாண்டமான கனவுக்குள் புகுந்திருக்கக்கூடும்
ஒரு வனாந்தரத்தின் தனிப் பாடகனாய்
அலைந்து திரியும் எந்தன் மனசு
குளிர்காலதின் ஸ்பரிசத்தில்
என்னுள் ஊடுருவும்
உன் விம்பங்களை எதிர்பார்த்துக் கொண்ருக்கிறது

நான் அந்த இருள் படிந்த
நான்கு சுவர்களின் நடுவே
நனைந்து போன பூனைக்குட்டியைப் போல்
இருக்கின்றேன் இப்போதும்
தனித்து.

என்று 'இருளின் தனிமை வெளி' கவிதையில் காதற்பிரிவையும் தனிமையும் வாசிக்கும் நம்முள்ளும் படியவிடுகின்றார். இன்னொரு கவிதையான 'அடையாளப்படுத்தலில்' வாளை படிமமாக வைத்து எமது வாழ்வை மீட்டெடுக்கவேண்டியவர்கள் நாமன்றி வேறொருத்தரும் அல்ல என்கின்றார்.

அதற்காய்,
'நீயும் வாள் வைத்திருப்பது நல்லது
அப்பிள் வெட்டவோ
மற்றவரை ஆசிர்வாதிக்கவோ அல்ல
உன்னை ஆசிர்வதிக்க நினைப்பவனுக்கு
உன் அடையாளத்தைக் காட்டுவதற்கும்
உன் அடையாளத்தைத் தறிப்பவனின்
சிரம் நறுக்கவும்
நீ ஒரு வாள் வைத்திருத்தல் அவசியம்'
என்று குறிப்பிடவும் தவறவும் இல்லை. இந்தத் தொகுப்பில் பல நல்ல கவிதைகளும் சில சாதாரணக்கவிதைகளும் உள்ளன. இனிவரும் காலத்தில் இன்னும் ஆழமான கவிதைகளை, விரிவான தளங்களில் தானா.விஷ்ணு தருவார் என்ற நம்பிக்கையை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படுகின்றது.


நிலாந்தன் மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு வெளிவந்தபோதே அறியப்பட்ட ஒரு கவிஞர். பிறகு ஈழ அரசியல் நிலவரங்கள் குறித்து பத்திகள் எழுதி தனது பன்முக ஆளுமையை போர்க்காலத்திலும், இன்றைய 'சமாதான' காலத்திலும் வெளிப்படுத்தியவர்; வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர். 'யாழ்ப்பாணமே ஓ.... எனது யாழ்ப்பாணமே தொகுப்பு கவிதை நடையிலும், கதை வடிவிலும் எழுதப்பட்டிருக்கின்றது. யாழின் ஆரம்பகால வரலாற்றுடன் ஆரம்பித்து, 95ல் நிகழ்ந்த பெரும் இடப்பெயர்வையும், இறுதியில் யாழின் நுழைவாயிலை எட்டிப்பார்த்த ஓயாத அலைகள்-03 வரையும் ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றது.

கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்ற ஒரு கடிதம் யாழின் அன்றைய நிலையை (1996) விபரிக்கின்றது.

'இம்முறை மிக நீண்ட கோடை
ஓரே வெயில்
ஒற்றனைப்போல ரகசியமாய் வீசும் காற்று.

இரவு
ஊளையிடும் நாய்களுக்கும்
உறுமிச் செல்லும் ட் ரக்குகளுக்குமுரியது

பகலெனப்படுவது
இரண்டு ஊரடங்குச் சட்டங்களிற்கு
இடையில் வரும் பொழுது

தெருவெனப்படுவது
ஒரு காவலரணில் தொடங்கி
இன்னொரு காவலரணில் முறிந்து நிற்பது.

இதில் வாழ்க்கையெனப்படுவது
சுற்றிவளைக்கப்பட்ட
ஒரு மலட்டுக்கனவு.'

என்கின்றது. யாழ்ப்பாணத்து பெருமை சொல்லப்பட்டாலும், யாழ் மேலாதிக்கத்தையும் நிலாந்தன் சுட்டிகாட்டத்தவறவில்லை. '...இப்படி வீரம் விவேகம் விச்சுழி தந்திரம் சுயநலம் இவற்றோடு கட்டுப்பெட்டித்தனம் புதுமைநாட்டம் விடுப்பார்வம் விண்ணாணம் இவையெல்லாம் கலந்த ஒரு திணுசான கலவைதான் ஒரு அசலான யாழ்ப்பாணி' என்கின்றார் யாழில் நடந்த மிகப்பெரும் இடம்பெயர்வும் அதனால் பாதிப்புற்ற மக்களின் துயரமும் அந்தக்காலகட்டத்தில் அங்கிருக்காதவரைக் கூட இந்தப் படைப்பை வாசிக்கும்போது கொஞ்சமாவது பரவச்செய்து கலக்கமுறச்செய்யும்.

Image1

இந்தப் படைப்பில் முக்கியமான குறிப்புக்களில் ஒன்றாய் இதையும் சேர்த்து வாசிக்கத்தான் வேண்டும். '....மேலும் இங்கையொரு சோகமான ஒற்றுமையும் உண்டு. ஐந்து ஆண்டுகளிற்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்ட அதே நாட்களில்தான் 1995ல் எக்ஸ்சோடஸ் ஏற்பட்டது என்பது.' உண்மைதான். நாம் முற்பகலில் எதை விதைக்கின்றோமோ அதைத்தானே பிற்பகலில் அறுவடை செய்யவும் வேண்டியிருக்கின்றது என்பதுதானே யதார்த்தம். ஒரு புதிய வாசிப்பு முறைக்கு நிலாந்தன் இந்தப் படைப்பில் நம்மை அழைத்துச் செல்கின்றார் என்றபோதும், பைபிளின் பழைய ஆகமத்தில் கூறப்படும் யூதர்களின் இடப்பெயர்வை யாழ்ப்பாண இடம்பெயர்வுடன் ஒப்பீட்டு நோக்குவது சற்று உறுத்தச் செய்கின்றது. அது ஆதியில் நிகழ்ந்தது எனினும் இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்கள் மீது நடத்தும் அக்கிரமம்தான் கண் முன்னே விரிந்து நிற்கின்றது. இன்றைய பொழுதில் யூதர்கள் செய்யும் அட்டூழியங்களைத் தவிர்த்து வரலாற்றின் முந்தைய பக்கங்களுக்குள் இலகுவில் நுழைந்துவிடமுடியாது. எனினும் நாமும் யூதர்களைப் போல, பராம்பரியத்துடன் நூற்றாண்டுகளாய் ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களைத் துரத்திய பாவச்செயலைச் செய்திருக்கின்றோம் என்பதை மறுத்துவிடவோ அல்லது அவ்வளவு இலகுவில் மறந்துவிடவோ முடியாது.

(Aug/05)

சேரன்

Thursday, January 11, 2007

-'மீண்டும் கடலுக்கு' தொகுப்பை முன்வைத்து-

சேரனின் ஏழாவது கவிதைத் தொகுதி, 'மீண்டும் கடலுக்கு' சென்ற வருடம் வெளியாகியிருக்கின்றது. அநேக கவிதைகளில் காமமும் குளிரும் தொடர்ந்தபடி கூடவே வருகின்றன. கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் வின்ரர் பருவத்து கொடுங்குளிரைத் தாங்குவதற்கு நனவிடை தோய்தல்களும், காமம் சார்ந்த தகிப்புக்களும் பலருக்கு ஆறுதலாகின்றன. இத்தொகுப்பிலுள்ள சேரனின் கவிதைகளும் அதற்கு விதிவிலக்கில்லாது புலம்பெயர்ந்த தனி மனிதன் ஒருவனின் வாழ்வைப் பேச முயற்சிக்கின்றன.

நெடுங்கவிதையொன்றிலிருந்து வெட்டப்பட்ட சிறு துண்டுகளோ என இதிலுள்ள பல கவிதைகள் ஒருவித தோற்ற மயக்கத்தைத் தருகின்றன. குருதியும், கண்ணீரும், சுக்கிலமும், குளிரும் பெரும்பான்மையான கவிதைகளுக்குள் நுழைந்துவிடுகின்றன. தொடர்ந்து சொல்லப்ப்பட்டதை சொல்லப்படுவதிலிருந்து விலத்தி, நல்ல கவிதைகளைத் தேடுவதுதான் இத்தொகுப்பை வாசிப்பவருக்கு முன் இருக்கின்ற முக்கியமான சவால்.

அநேகர் சேரனின் கவிதைகளில் (முக்கியமாய் 'நீ இப்போது இறங்கும் ஆறு'') காணப்படும் அரசியல் சமூகப் புள்ளிகளை விதந்து எழுதிக்கொண்டிருந்தபோது எனக்கு நெருக்கமாயிருந்தது அவரது அழகியல் கவிதைகள் (romantic poems) தான். அவற்றிலும் ஒரு அறிவுஜீவித்தனமான -உணர்ச்சி சம்பந்தபடாத - பார்வை அதிகம் விஞ்சி நின்றாலும் அவரது காதற் கவிதைகளை இலகுவாய் ஏற்றுக் கொள்ளக்கூடியதாய் இருந்தது. 'நீ இப்போது இறங்கும் ஆற்றில்' எளிமையான கவிதை என்று பலரால் புறக்கணிக்கப்பட்ட 'கேள்' என்ற கவிதையில் குளிரோடு தண்டவாளத்தருகின் ஒற்றைப்பூவுட்ன் காத்திருக்கும் ஒருவனின் தனிமையை/ஏமாற்றத்தை அப்படியே எனக்குள்ளும் அந்தக்கவிதையை படியவிட்டிருந்தது.

இத் தொகுப்பின் பின்னட்டை கூறுகின்ற ' எண்பதுகளில் ஈழத்துத் தமிழ்க் கவிதைப் போக்கின் மையப்புள்ளியாக இருந்த சேரனின்...' என்ற குறிப்பு சற்றுப் பிசகானது. எண்பதுகளில் சேரன் மட்டுமே மையப்புள்ளியானார் என்பது குறிப்பினை எழுதிய நபர் சேரனின் கவிதையை மட்டும் வாசிப்பவராய் இருந்திருந்தாலன்றி இப்படி எழுதியிருக்கமுடியாது. சேரனுக்கு முன் எழுத ஆரம்பித்த சிலரும், பலவேறு இயக்கங்கள் தோன்றியபோது அவற்றிலிருந்து முகிழ்ந்த கவிஞர்களும் பலரும் எண்பதுகளின் ஈழத்துக் கவிதைப்போக்கின் மையப்புள்ளிகளாக இருந்தார்கள் என்பதே சரியானது. அந்தப் பலபுள்ளிகளில் சேரனும் ஒருவர். அவ்வளவே. எனினும் அந்தக் குறிப்பில் ஒரு உண்மை இருக்கின்றது. சேரன் எண்பதுகளில் எழுதிய கவிதைகளின் தொனியிலும் மொழியிலும் அவ்வளவு மாற்றமில்லாது -இருபது ஆண்டுகள் கடந்தபின்னரும்-அவரது புதிய கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றார் என்பதை இத்தொகுப்பை வாசிப்பதினூடாக அறிந்துகொள்ளலாம்.

சேரனின் காமம் குறித்த கவிதைகளை தொடர்ந்து வாசித்தபோது ஒரு அலுப்பு வந்தது. ஆனால் இந்த அலுப்பு, ஏன் காமம் சார்ந்து நிறைய கவிதைகளை தமது தொகுப்புக்களில் எழுதும் ரமேஷ்-பிரேமை வாசிக்கும்போது வருவதில்லை என்று வாசக மனோநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தேன். சேரன் தனது கவிதை மொழியின் நடையில் புதிய பரிட்சார்த்தமான முயற்சிகளையோ, உடல்மொழி குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதே -எனக்கான- காரணங்களாய்த் தென்பட்டது. ஒரு கலைஞன் இறந்த காலத்தோடு உறைந்துப் போகத் தொடங்கும்போது அவனது வீழ்ச்சி ஆரம்பிக்கின்றது. சேரனின் கவிதைப் பயணத்தின் வீழ்ச்சி இத்தொகுப்பில் துல்லியமாய்ப் புலப்படத் தொடங்குகின்றன என்பதே க்சப்பான உண்மை.

'அறிவின் சுடரில் / காமம் பிறக்கும் இரவே' (காதலனும் குழந்தையும்- 1) என்ற கவிதை வரிகளை வாசிக்கும்போது, காமத்திற்கும் அறிவுக்கும் என்ன வகையிலான தொடர்பு இருக்கின்றதென்ற வினா வாசிப்பவருக்கு ஏற்படுகின்றது. இத்தொகுப்பில் மட்டுமில்லை, முன்னைய தொகுப்புக்களிலும் அறிவை அளவுக்கு மீறி விதந்தேத்தும் கவிதைகளை சேரன் எழுதியிருக்கின்றார். அறிவே எல்லாவற்றுக்கும் மூலாதாரம் என்று திணிக்கப்படும் யாழ்ப்பாணியவாத்தின் மிச்சங்களிலிருந்து சேரன் இன்னும் விடுபடவில்லையோ என்ற வகையில் யோசித்துப் பார்ப்பது தவறாக இருக்காது என்றே நினைக்கின்றேன். காமத்தை அறிவுநிலையில் மட்டுந்தான் அணுகவேண்டும் என்றால், பிறகு ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் வரும் விருப்பு/சுவாரசியம் என்ற இயற்கை உணர்வுகளைக் கூட குழிதோண்டி புதைக்கவேண்டி வருமோ என்றுதான் சேரனின் சில கவிதைகளை வாசிக்க்கும்போது தோன்றுகின்றது. பதின்ம வயதிலிருக்கும் ஒருவனுக்கு வரும் சந்தேகமெல்லாம் சேரனுக்கு அவரது நாற்பது வயதின்பின் வருகின்றது (கோடையில் கண்ணாடி அணிகின்ற பெண்ணை முத்தமிடுகின்றபோது). கண்ணாடி அணிகின்ற பெண்ணுக்கு முத்தமிடுவதிலுள்ள 'சிரமங்களை' ஒரு ஆராய்ச்சியாளர் அளவுக்கு சேரன் அதில் ஆய்வுகள் செய்கின்றார். வாசிக்கும் எனக்கோ, அந்தப்பெண் முத்த்மிடும்போது கண்ணாடியைக் கழற்றிவிட்டு முத்தமிட்டிருந்தால் நாமெல்லாம் இந்த அவ்திகளையெல்லாம் வாசிக்காமல் தப்பியிருக்கலாம் என்றுதான் தோன்றியது. (சேரனின் அடுத்த கவிதைகளுக்காய் என்னாளான உதவி, 'குளிரில் கொன்ராக் லென்ஸ் அணிந்த பெண்ணை முத்தமிடும்போது or லேஸிக் செய்த பெண்ணை மழைபெய்யும்போது முத்தமிட்டபோது... ) .

காமத்தின் பின்பான பொழுதில் பெண்ணைப் பார்த்து 'நீ காலத்தின் இடிபாடுகளில் சிக்கிய கூந்தல்கற்றை' என்று கூறிவிட்டு, நான் அப்படியல்ல... 'நித்திய ஈரலிப்பிலும்/ சலிக்காத முத்தத்துடன்/ கால்களற்று/ எப்போதும் பறக்கும் பறவை நான்' என்கின்ற கவிஞர் பல இடங்களில் சறுக்குகின்றார். தான் பறவை என்ற தொடர் பிரக்டனங்களை சேரன் தனது முன்னைய கவிதைத் தொகுதிகளிலும் வெளியிட்டவர். சேரனால் ஏன் தான் எழுதிய கவிதைகள் எதிலும், பெண்கள அப்படி சுதந்திரமாய் ஒரு பறவை போல பறக்கமுடியாது இருப்பதற்கான சமுக பின்புலங்களை விரித்து எழுத முடியவில்லை? பெண்களுக்கும் 'இடிபாடுகளில் சிக்கிய கூந்தற்கற்றையாக' அல்ல; தன்னைப் போல ஒரு பறவையாக பறக்க விருப்பம் அவர்களுக்கும் இருக்கும் என்ற மற்றப் பக்கத்தை ஏன் -வேண்டுமென்றே- சேரன் மறைக்கின்றார். நானும் பறவை நீயும் பறவை கட்டுகளை அறுத்து இருவரும் சேர்ந்து பறப்போம் என்று எழுதுவதில் என்ன தயக்கம் இருக்கின்றதென்று யோசிக்கும்போது 'கவிமனநிலையின்' சுயநலம்தான் கண்முன்னே விரிகின்றது. மற்றொரு சறுக்கல் என்னவென்றால், பறவையை கவிதைகளில் படிமமாக்கும்போது அநேகமாய் கட்டுக்களை, அடையாளங்களை மீறியதற்கே பாவிக்கப்படுகின்றது. பறவைகள் எதன் பொருட்டும் காத்திருப்பதில்லை என்பதையும் எவருக்காகவும் கண்ணீர் விடுவதில்லை என்பதையும் சேரனால் படிமாக்கப்படுகின்றதென்றால், ஏன் அந்த 'பறவை மனக் கவிஞன்' தனது மச்சாளுக்கும், அன்புள்ள அத்தானுக்கும் துயருறு காதைக் கவிதைகளை இத்தொகுப்பில் எழுத வேண்டும்? ஆக, தன்னோடு மனமும் உடலும் பகிரும் பெண்ணைப் பார்த்து நீ இடிபாடுகளிடையே சிக்கிய கூந்த்ல்; உன்னோடு தங்கவோ உனக்காகவோ கண்ணீர் விடவோ அல்லது சிக்கு எடுத்து என்னோடு பறக்க உதவி செய்வேன்... என்றோ கூறமுடியாது; ஆனால் உறவுகள் தனக்குச் செய்த 'தியாகங்களை' மட்டும் நினைத்து கண்ணீர் மல்க முடிகின்றது. அதை நாம் அற்புத கவிமனசு என்று நினைத்து விதந்தேந்த வேண்டும்!

'எரிமலைப் பயணம்', 'மாயன் நகரம்', 'செம்மணி' இத்தொகுப்பிலிருப்பதில் எனக்குப் பிடித்தமான கவிதைகள். அதிலும் 'எரிமலைப் பயண்த்தில்... 'மலை அடிவாரத்தில்/போர்க்கடவுள்களின் கோபம் மறைந்து கிடக்கிறது' என்று கூறிவிட்டு இறுதியில் 'கிழிந்து போன அமெரிக்க கொடி/ தூங்கிக் கிடக்கும் கடவுளின் மீது பறப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்புகின்றேன்' என்று முடிவது அமெரிக்காவின் ஆதிக்கக்கரங்கள் மாயன் நாகரீக நாடுகள் எங்கும் பரவியிருக்கின்றது என்பதை சூசகமாய் வாசகருக்குத் தெரிவிக்கின்றது. அமெரிக்கா ஒரு எரிமலைக்கு நிகர்த்தது. எந்த நேரமும் ஒரு எரிமலையைப் போல உறங்காமல் இந்நாடுகளை கண்காணித்துக்கொண்டிருக்கின்றது என்ற விரிவான வாசிப்பிலும் வாசித்துணரலாம். 'செம்மணி' கவிதை, கடந்த காலத்துயரை எல்லாம் மறந்துவிட்டு செம்மணியில் பிரமாண்டமாய் எழுந்து நிற்கும் செல்போன விளம்பரப் பலகையினூடு நம் அவலத்தைப் பேசுகின்றது. நமது மண்ணையும் நீரையும் சுரண்ட வரவிருக்கின்ற அந்நியமுதலீடுகள் பற்றிய அச்சத்தையும் கூடவே யோசிக்க வைக்கின்றது.

'மாயன் நகரம்' கவிதை மெக்ஸிக்கோவைப் பற்றிப் பாடுகின்றது. பூர்வீக குடிகள் வாழ்ந்த தேசத்தை 'கடலோடி எரியூட்டினான் '(கொலம்பஸின் வருகையையோடு செழிப்பான ஒரு க்லாச்சாரம் மிக விரைவாக அழியத்தொடங்குகின்றது என்பதை நினைவு கொள்ளமுடியும்) என்று ஆரம்பிக்கின்றது. தொடர்கையில், அவ்வாறு வந்த கடலோடிகள் நாட்டிய ஆயிரக்கணக்கான சிலுவைகளில் கோடிக்கணக்கான கறுப்புத்தோல் இயேசுக்கள் அறையப்பட்டார்கள் என்று உவமிக்கின்ற இடம் அருமையானது. ஒரு கவிதையினூடு ஒரு பெரும் வரலாற்றை சிறிய விதையாய்க் கொடுக்க முடியும். அந்த விதையிலிருந்து கிளைகளையும், இலைகளையும் பூக்களையும் வளர்த்துப் பார்க்கவேண்டிய பொறுப்பு வாசகருக்குரியது. (ஞாபகம் வரும் வேறொரு தொகுப்பிலிருக்கும் சேரனின் இன்னொரு கவிதை, ஒரு காலடி ஒராயிரம் ஆண்டு வர்லாறு அங்கே இருக்கின்றது என்பது மாதிரி வரும் கவிதை). அந்த வகையில் இந்தக் கவிதை அற்புதமாய் எழுதப்பட்டிருக்கின்றது என்று சொல்லவேண்டும்.

எனினும் இந்த அருமையான கவிதை வாசிப்பை அடுத்து வரும் 'பாணன் சதுக்கத்தில்' கவிதைசொல்லி தூள் தூளாய் உடைத்துவிடுகின்றார். அங்கே நடக்கும் கொண்டாட்டத்தில் ஒரு மாயன் நகர்ப் பெண்ணைப் புணர்கின்றதை பாடு பொருளாக்குகின்றார். எவரும் எவரையும் புணர்வதில் பிரச்சினையில்லை. தனிமனித சுதந்திரம் என்ற ஒன்று இருக்கிறதுதானே. ஆனால் மாயன் கலாச்சார நாடுகளுக்கு, பெண்ணுடல்களுக்காய் போகின்றவன் அதை மட்டும் செய்துவிட்டு போய்விடுவான். இங்கேயிருக்கும் கவிதை சொல்லி போல அத்தேசத்தின் வரலாற்றின் இருண்ட பக்கத்திற்கு கண்ணீர் வடித்துக்கொண்டு இத்தகைய செயலைச் செய்வதை ஒரு 'கொண்ட்டாட்டமாய்' எழுதுவதில்லை. கடலோடி வந்து எரியூட்டி செழுமை நிறைந்த அத்தேசத்தைக் கொள்ளைகொண்டவர்களும் பெண்களைச் சிதைத்தார்கள். இங்கே காசு கொடுத்தோ அல்லது இல்லாமலோ கவிதைசொல்லி செயவதும் அதற்கு நிகர்த்ததுதான். முன் கவிதையில் வடிந்த கண்ணீர் இப்போது நீலிக்கண்ணீராகி விடுகின்றது.

சேரனின் சில கவிதைகளைப் பார்க்கும்பொது சேரனா திருமாளவளவனா எழுதியது என்ற குழப்பம் ஏற்படுகின்றது. எவரின் பாதிப்பு எவரில் இருக்கின்றது என்பதை வாசிப்பவர்களிடையே விட்டுவிடுகின்றேன். ஈழ/புலம்பெயர்/தமிழக விமர்சகர்களால் முன்னிலைப்படுத்தி விதந்தேந்தப்படும் இவ்விரு கவிஞர்களும் ஒரே நேர்கோட்டில் போய்க்கொண்டிருப்பது ஆபத்தானது. அந்த வகையில் பாவிக்கும் மொழி குறித்தும் படிமங்கள் குறித்தும் அவதானமாயிருப்பது இருவருக்கும் அவசியமாகின்றது.

சேரனின் இத்தொகுப்பை மூன்று முறைக்கும் மேலாய் ஏற்கனவே வாசித்திருக்கின்றேன். இப்போது இதை எழுதுவதற்காய் இன்னொரு முறையும் வாசித்தாயிற்று. கூறுவதற்கு சற்றுத் தயக்கமிருப்பினும், தொடர்ந்து நிறைய முறை வாசித்தாயினும் ஒரு சில நல்ல கவிதைகளைக் கண்டுபிடிப்பேன் என்பதற்காய் மட்டுமே வாசித்திருக்கின்றேனே தவிர, பிற படைப்புக்கள் போல பிடித்தமான மனோநிலையில் இதை வாசிக்கவில்லை என்பதே உண்மை.

தமிழ்க் கவிதைகள் இரண்டாயிரம் ஆண்டைக் கடந்து வேக வேகமாய் தனக்கான குறைகளோடும் நிறைகளோடும் நகர்ந்துகொண்டிருக்கும்போது, சேரன் இன்னும் 80களின் மொழிநடையோடும், நித்திய காதலன் கன்வுகளோடும் இருப்பதுதான் -சேரனின் கவிதைகளுக்கான் இருப்பு- இன்றைய ஈழ/புலம்பெயர் பரப்பில் இல்லாமற் போய்க்கொண்டிருப்பதற்கான காரணமோ- என்று எண்ணத்தோன்றுகின்றது. அதே சமயம், பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாய் புலம்பெயர்ந்து வாழும் சேரனுக்கு இங்கு நடக்கும் தற்கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், நாற்றமடிக்கும் சாதிய அழுக்குகள் எதுவும் சலனமடையச் செய்யவில்லை என்பது ஆச்சரியப்படுத்தும் விடயந்தான். சிலவேளைகளில் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு மண்ணில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவ்வளவு அக்கறையிருப்பதில்லையோ தெரியவில்லை.

வைரமுத்து

Wednesday, January 10, 2007

வைரமுத்து
-நான் அறிந்தவைகளினூடாக-

வைரமுத்து, எனக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவர். வைரமுத்து ஒரு நவீன கவிஞர் இல்லையென்பதை -எனது வாசிப்புக்களினூடாக-எந்தளவுக்கு மறுதலிக்கின்றேனோ அதற்கு மாறாய் வைரமுத்துவை ஒரு சிறந்த பாடலாசிரியராய் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை. இன்றையபொழுதில் தாமரை, நா.முத்துக்குமாரின் பாடல்களில் பிடிப்பு வந்து வைரமுத்துவை கடந்துவந்துவிட்டாலும் வைரமுத்துவின் பாடல்வரிகளை எப்போது கேட்டாலும் மனதை நிறைக்கத்தான் செய்கின்றது.

கவிதைகள் என்று வாசிக்கத் தொடங்கிய பதின்ம வயதுகளிலேயே வைரமுத்துவின் கவிதைகள் கவர்ந்ததில்லை. மு.மேத்தா தான் எனக்குப் பிடித்தமானவராக அன்றைய காலகட்டத்தில் இருந்தார். வானம்பாடி வகைக் கவிதைகளை பல வருடங்களுக்கு முன்னரே கடந்துவந்துவிட்டாலும் -அநேக சிற்றிதழ்க்காரர்கள் போல- என்னால் வான்மபாடிக் கவிதைகளை முற்றாக நிராகரிக்க முடியாது. கவிதைகளை வாசிக்கவும் எழுதவும் விரும்பும் ஆரம்பநிலையில் இருக்கும் வாசகர்களில் அநேகர் வானம்பாடி வகைக் கவிதைகளின் சாயலில்தான் எழுதத் தொடங்குவார்கள் என்றே நம்புகின்றேன். அதேபோன்று, அவ்வாறு கவிதை எழுத ஆரம்பிப்பவர்களின் படைப்பின் வளர்ச்சி என்பது எப்படி வானம்பாடி வகைக் கவிதைகளை தாண்டி/நிராகரித்துச் செல்லுகின்றார்கள் என்பதைப் பொறுத்தும் தங்கியுள்ளது.

வைரமுத்துவும், ரகுமானும் கூட்டணி அமைத்து -சரணமும் பல்லவிகளும்- எழுதி இசைத்த பாடல்கள் என்னைப் பொறுத்தவரை அருமையான காலங்கள். வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களைப் பற்றி விதந்தும் விமர்சித்தும் விரிவாகப் பேசமுடியும். அதற்கான் நேரம் இப்போதில்லை என்பதால் அதைக் கடந்துவிடுகின்றேன். அருமையான பாடல்வரிகள் வைரமுத்துவின் பல பாடல்களில் இருக்கும் என்ப்தோடு இயன்றளவு பாடல்களில் நவீன இரசிகர்களுக்குப் பரிட்சயமில்லாப் பழந்தமிழ்ப்பாடல்களையும் நேடியாகவும், சிலவேளைகளில் அவற்றின் விளக்கவுரையை மையமாகக் கொண்டு மறைமுகமாகவும் வைரமுத்து நிறையப் பாடல்களை எழுதியுள்ளார். உதாரணமாய் 'தீண்டாய் தீண்டாய்' (படம் என் சுவாசக்காற்றே) பாடலில் intro ஒரு சங்கப்பாடலே... அதில் வரும் 'அல்குல்' என்ற வார்த்தையை இன்றைய தமிழுக்கு மாற்றினால் சிநேகன் போன்ற பாடலாசிரியர்கள் சங்கப்புலவர்களையும் மவுண்ட்ரோட்டில் உயிரோடு கொளுத்தவேண்டும் என்றும் அறிக்கை விட்டிருப்பார்களோ தெரியவில்லை.

அதேபோன்று வேறு நாட்டுமொழிப்படைப்புக்களையும் - அசலை தனது அசல் இல்லையென்று கூறாமல் எடுத்தாள்வதில் சற்று கள்ளமிருந்தாலும்- எளிய முறையில் கொண்டுவருவதற்காய் வைரமுத்துவை மன்னித்துவிடலாம். 'இல்லையென்று சொல்ல ஒரு கணம் போதும்; இல்லையென்ற சொல்லைத் தாங்குவதென்றால் எனக்கு இன்னுமொரு ஜெனமம் வேண்டும்' என்ற பாடல்வரிகளில் பாப்லோ நெருடாவின் ஒரு கவிதையின் சாயலும், 'மழை கவிதை கொண்டு வருது... கறுப்புக் கொடிகள் காட்டி யாரும் கதவடைக்க வேண்டாம்' என்பது ஒரு அரேபிய பாடலின் சாயலில் இருப்பதையும் பாடலின் அர்த்தங்களுக்காய் -வைரமுத்துவின் கள்ளங்களை- மறந்துவிடலாம் (இன்று பெண்களை வர்ணிப்பதற்காய் பாவிக்கப்படும் வார்த்தைகளை எல்லாம் திருவள்ளுவரின் காமத்துப்பாலில் இருந்து எடுத்து அனைவருமே கள்ளம் செய்துகொண்டிருக்கையில் வைரமுத்துவை மட்டும் இப்படிக்கூறுவது சரியா என்றும் மனச்சாட்சி கேட்கத்தான் செய்கின்றது). வைரமுத்து கவிதைகள் என்று எழுதியதை வாசிக்கும்போது எதுவுமேயில்லாதமாதிரி இருப்பவை கூட பாடலாக்கப்படும்போது அழகாவிடுகின்றன்...'என்னவளே அடி என்னவளே'....'நீ காற்று நான் மரம்'.. என்று பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வைரமுத்துவின் வீழ்ச்சி என்பது ரகுமானின் பிரிவோடு ஆரம்பித்தது என்றுதான் நினைக்கின்றேன் (ரகுமானின் இசை தொய்யத்தொடங்கியதும் அந்தப்புள்ளியே). பலர் ரகுமானின் இசையின் வீழ்ச்சிக்கு அவர் ஒரு international figure ஆனது என்றே கூறுகின்றார்கள். ஆனால் ஒரு தீவிர ரகுமான் இரசிகராய் இருந்த எனக்கு அவரது -தமிழ்த்திரைப்பட இசையின் வீழ்ச்சி-வைரமுத்துவின் பிரிவோடுதான் ஆரம்பிக்கின்றதெனவே எடுத்துக்கொள்ள முடிகின்றது. எப்போதும் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் இடையில் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும் (யுவன் சங்கர் ராஜாவுடன் நா.முத்துக்குமாருக்கும், Harris ஜெயராஜிற்கு தாமரையும்) . தெ(ன்)னாலியோடு ரகுமானின் இசையைத் -தொடர்ந்து கேட்பவர்களுக்கு- நான் குறிப்பிடும் வீழ்ச்சியின் புள்ளி புரியக்கூடும்.

வைரமுத்து கனடாவுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது சந்திருக்கின்றேன். அப்போது உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அவரின் வருகையின்போது 'கவிதை'யென்று எதையோ எழுதி இறுதியில் -வழமைபோல நக்கீரர் பாணியில் - அவரைக் கொஞ்சம் சினம் செய்ய வைக்கின்றதாய் கேள்வியொன்றை விட்டிருந்தாயும் நினைவு. அந்தக் காலகட்டத்தில் எனது தந்தையார் இங்கு வெளிவந்துகொண்டிருந்த ஒரு பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். என்னையும் வைரமுத்துவை சந்திக்கக் கூட்டிச் சென்றிருந்தார். வைரமுத்துவின் ஆசி பெற்றால், உடனேயே 'உலகப் புகழ்' பெற்றிடுவேன் என்ற நினைப்புடன் 'கவிதைகள்' சிலவற்றை கூடவே எடுத்துக்கொண்டு நானும் சென்றிருந்தேன். அப்போதுதான் எனக்கு இணையம் அறிமுகமாகி -ஒரு பெண்ணல்ல, பல பெண்களோடு- 'கடலை' போட்டுக்கொண்டிருந்தேன். இணையத்தில் Hi சொல்கின்ற எல்லாப் பெண்களுமே என் 'காதலிகள்' என்ற கனவில் நிறைய இணையஞ்சம்பந்தமான காதற்கவிதைகள் எழுதி என்னாளான 'சமூகசேவையை' கனடாத்தமிழ்ச் சமூகத்திற்கு இரவுபகலின்றி வழங்கியும்கொண்டிருந்தேன். கவிதைகளை பார்த்துவிட்டு 'உங்கள் மகன் இன்(ர)டநெட்டில் காதல் செய்யும் அளவுக்குப் போய்விட்டான்' என்று எனது தந்தையாரிடம் வைரமுத்து திரியைப் பற்றவைத்ததுமாய் நினைவு. வைரமுத்து பழகுவதற்கு எளிமையானவர் என்றே நினைக்கின்றேன். தமிழகம் சென்றபின்னும் எனது தந்தையாருக்கும் -எனது தந்தையார் வைரமுத்துவுக்கு அறிமுகப்படுத்திய- வைரமுத்துவின் தீவிர இரசிகரான ஒரு அக்காவிற்கும் கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருந்ததும் ஞாபகத்திலுண்டு.

எனினும், அந்த நேரத்தில்தான் வைரமுத்து 'ஈழத்தமிழர் விரும்பினால் அவர்களுக்கான் தேசியகீதத்தை எழுதிக்கொடுப்பேன்'..., 'விரைவில் வன்னி சென்று ஈழத்தமிழர் காவியத்தை எழுதுவேன்' போன்ற 'பிரபல்யம்' வாய்ந்த பேச்சுக்களையும் பேசியவர். வினை விதைத்தால் வினை அறுக்க வேண்டியிருக்கும் என்பதற்கிணங்க ஒரு கவிதா நிகழ்வில் சக்கரவர்த்தியின் விமர்சனத்தில் மோசமாய் அடிவாங்கியவர் ('தண்ணீர் தேசத்தைப் பாடிவிட்டு எங்கள் கண்ணீர் தேசத்தை கை கழுவிவிட்டவரே...' இன்னும் நீளும்). இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருந்த கவிதா நிகழ்வு -இதன்பின்- அடுத்த நாள் தடை செய்யப்பட்டது. அதனால் -நான் சென்ற அடுத்த நாள்- வைரமுத்துவின் பேச்சை மட்டுமே கேட்க முடிந்தது. எனினும் அவரது பேச்சுத் திறன் மிகவும் இரசிக்கத்தக்கதாய் இருந்தது. பேசும் கணங்கள் முழுதும் கூட்டதை அப்படியே அசையாமல் கட்டிவைப்பது என்ற வித்தையை -மேடைகளில் பேசிப் பேசி கொல்லும் பல ஈழத் தமிழர்கள்- வைரமுத்து போன்ற தமிழகத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் (அப்படி நான் இரசித்த் இன்னொருவர் பெரியார்தாசன்).

இன்றைய காலத்தில் வைரமுத்து விகடனில் 'தேவர்' இனப்பெருமைகளை விதந்து எழுதும் 'காவியங்களில்' எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. அவற்றை வைரமுத்து எழுதக்கூடாது என்று நிராகரிக்கும் எண்ணமில்லை. எத்தனையோ பிராமணிய படைப்புக்களை காலங்காலமாய் அவர்களின் மொழியிலேயே ஏற்றுக்கொண்டு வாசித்திருக்கின்றோமல்லவா? சிறுவயதில் தமிழகத்தில் இருக்கும் அனைவரும் பிராமணியப்பாசை மட்டுமே பேசுவார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். எனெனில் எனக்குக் கிடைத்த தமிழகப் படைப்புக்கள் பெரும்பானமையான்வை அந்தமொழியையும் அவர்களின் பெருமைகளையும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தன.

வைரமுத்து..., கண்ணதாசன், எம்.எஸ்.வி போன்றவர்கள் 'கூத்தடித்தது' மாதிரி பெண்களைச் சீரழிக்காது -இயன்றளவு பெண்களை அவர் மதித்துக்கொண்டிருப்பது- எனக்குப் பிடிததமானது. மேலும் அவரது சுயசரிதத்தில் (பெயர் மறந்துவிட்டது, 'வானம் எனக்கொரு போதிமரமா?' 'இதுவரை நான்') பச்சையப்ப்பா கல்லூரியில் மனிதர்களை விலத்தி தனிமையுடனும், அங்கிருந்த மரங்களோடும் உரையாடிக்கொண்டிருந்த வைரமுத்து என்ற இளைஞன் -எனக்குள்ளும் எனது பதின்மங்களில் இருந்ததால்- வைரமுத்துவோடு சிநேகிக்க முடிகின்றதோ தெரியவில்லை.

(குழலி, நீங்கள் விரும்பியமாதிரி நீண்டதாய் எழுதாமல் இயன்றளவு சுருக்கமாய் எழுத இதில் முயற்சித்திருக்கின்றேன் :-))

இன்மையின் இருப்பை இசைத்தல்

Tuesday, January 09, 2007

புத்தக அலுமாரியில்
பெயரறியாப் பூச்சிகள குடிபெயர்கின்றன
புததகமொன்றைத் தொலைப்பதென்பது
காலம் வரைந்த வரைபடத்தின் கோடொன்றை பறிகொடுப்பதாகும்
அன்றொரு பூச்சியை நசுக்கிக்கொல்கையில்
இரத்தம் வராதது ஆச்சரியமாயிருந்தது
பின்னாளில் என் வரைபடத்திலிருந்து
இந்நாட்டுப்பூர்வீகக்குடியொருவன் காணாமற்போயிருந்தான்.
---------------------------

மாவிளக்குப்போட்டு சுவைக்க
திருவிழாக்கள் வரும்
எதிர்பார்க்காத் தருணத்தில்
விரலநீவி கண்ணசைத்து கற்றைகோதி கரைவாய்
என் நாசியைப் பின்தொடர்வது மாவிளக்கு நெய்யா
இல்லை நம்முடல்கள் நேற்றிரா பகிர்கையில் கசிந்த வியர்வையா?
கடவுளர் உக்கிரவிழி உருட்டினாலும்
தூண்களில் விழித்திருக்கும்
முலைதிறந்த சிலைகளுக்கும்
பொங்கிப் பிரவாகரிக்கும் காமமுண்டு
விலக்கப்பட்ட மூன்றுநாட்களையும் சேர்த்து.
---------------------------

சதுரம் சதுரமாய் வரைந்த பெட்டிகளில்
முன்னும் பின்னுமாய் நகர்ந்தபடியிருக்கின்றான் சிறுவன்
அவனது தங்கையொருத்தி சதுரங்களில் வட்டங்களை வரைகின்றாள்
தோற்றுப் போக விரும்பா எத்தனத்துடன்
புதிது புதிதாய் சதுரங்களை ஆக்குகின்றான் சிறுவன்
யாரோவொருவர் இறுதியில் அழப்போவதை பார்க்க விரும்பாது
முகத்தை வேறுதிசையில் திருப்ப
அதிர்கின்றது மனது
சதுரங்களும் வட்டங்களும் முந்நூற்றறுபது பாகையினால் ஆனது.
---------------------------

உன்னுடைய பட்டியலில்
இல்லாமற்போய்க்கொண்டிருக்கின்றேன் நான்
தவிர்க்கப்படும் சந்திப்புக்களிலிருந்து
உலர்ந்துகொண்டிருப்பது கதகதப்பான வாசம்
புரட்டாதிச் சனிக்கு காகாவென்று அழைக்க
வந்து தரைபரவும் ஊர்க்காகங்களின் அலகுகளுக்குள்
சிதைந்துகொண்டிருப்பது மனிதவுணர்வுகள்
அரளிக்காய் அம்மியில் அரைத்துக்குடித்தவளுக்கு
ச்வர்க்காரத் தண்ணீர் பருக்கியது போல
உனக்கும் எனக்குமான ஸ்நேகிதம்.
---------------------------

(2006)
(முன்னர் பதிவிலிட்டு திருத்தங்களுக்காய் மறைத்தது)

மல்கம் எக்ஸ்

Monday, January 08, 2007

-ரவிக்குமாரின் 'மால்கம் எக்ஸ்' நூலை முன்வைத்து-

'I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of exploitation'
-Malcolm X-

அமெரிக்க கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் மார்ட்டின் லூதர் கிங்கும், மல்கம் எக்சும் முக்கியமானவர்களாய் கருதப்படுகின்றார்கள். இருவரும் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிகளில் (60களில்) மிகத் தீவிரமாய் இயங்கியவர்கள். அத்துடன் இருவருமே அவர்களின் நாற்பது வயதுகளை எட்டமுன்னராகவே படுகொலை செய்யப்பட்டவர்கள். மல்கம் எக்சை முதன்மையாக வைத்து இரவிக்குமார் எழுதியுள்ள இந்நூலினுடாக எக்சின் வாழ்க்கையை விரிவாக அறிந்து கொள்ளமுடிகின்றது. மல்கமின் வாழ்க்கைச் சம்பவங்களினூடாக அன்றையகால கறுப்பின மக்களின் போராட்டங்களையும் தத்தளிப்புக்களையும் எழுச்சிகளையும் -அரைநூற்றாண்டு கடந்தபின்னரும்- வாசிக்கும் நாம் அறிந்துகொள்ள முடியும்.

மல்கம் சமூக செயற்பாட்டாளருக்கு மகனாய்ப் பிறந்திருந்தாலும், அவரது தகப்பனார் வெள்ளையினத் துவேசக்காரர்களால் -விபத்து என்று சோடிக்கப்பட்டு- மல்கமின் இளவயதிலேயே கொல்லப்பட, மிகுந்த ஏழ்மையுடன் ஏனைய எட்டு சகோதர்களுடன் மல்கம் வளர்கின்றார். கணவரின் இறப்பு, வறுமை போன்றவற்றால் மல்கமின் தாயாரும் மனப்பிறழ்வுக்கு ஆளாக, மல்கமும் அவரது சகோதர்களும் வெவ்வேறு இடங்களில் வாழத்தொடங்குகின்றார்கள். இளவயதிலேயே வன்முறை, போதைமருந்துகடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு இருபதுகளின் ஆரம்பத்தில் மல்கத்திற்கு -ஒரு திருட்டுக் குற்றத்திற்காய்- பத்தாண்டு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. சிறையில் அறிமுகமான விரிவான புத்தக வாசிப்பால் மல்கம் ஆளுமை மிக்க மனிதராய் சிறைக்குள் வளர்கின்றார். அடிப்படைவாத கிறிஸ்தவம் கூட கறுப்பினத்தவர்களை ஒடுக்குகின்றது என்று தெளிந்து, அதற்கு மாற்றாய் இஸ்லாமை மல்கம் தேர்ந்தெடுகின்றார். இதற்கு வழிகாட்டியாக எலிஜா என்ற இஸ்லாமிய போதகர் மல்கத்திற்கு வாய்க்கின்றார். ஏழாண்டுகளின் பின் சிறையில் இருந்து வெளியே வருகின்ற மல்கம், தீவிரமாய் இஸ்லாமை கறுப்பின மக்களிடையே பரப்ப முயற்சிக்கின்றார். ஜநூறு அங்கத்துவர்களுடன் இருந்த நேசன் ஒஃப்வ் இஸ்லாம் மல்கமின் கடின உழைப்பால், பத்தாண்டுகளுக்குள் 30 000 மேற்ப்பட்டவர்களை அங்கத்துவராய்க்கொண்டு பிரமாண்டமாய் வளர்கின்றது. படிப்படியாக ஒரு ஆளுமைமிக மனிதவுரிமைச் செயற்பாட்டாளாராக மல்கம் உருவெடுக்கின்றார். கறுப்பர்களுக்கு என்று தனியான கல்வி பொருளாதாரம் இன்னபிற அடிப்படை வசதிகள் தேவை என்ற கறுப்பு தேசியத்தை மல்கம் கடுமையான மொழியில் முன்வைக்கின்றார். அதே நேரத்தில் மிகவும் கலகமான உரைகளின் மூலம் அடிமைப்படுக்கிடந்த கறுப்பின மக்களின் ஆன்மாவை விழிப்புறச்செய்கின்றார். இவற்றைத் தொடர்ந்து வெள்ளை இனத்துவேசவாதிகள் மட்டுமில்லை, அமெரிக்க அரசின் உளவுநிறுவனமும் மல்கமை கண்காணிக்கத் தொடங்குகின்றன. இந்தப்பொழுதுகளில் மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்காவின் தெற்குப்பகுதிகளில் அடிப்படை உரிமைகளை பேசி கருப்பின் மக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்த, மலக்ம் எக்ஸ் அமெரிக்காவின் வடக்குப் பகுதியான நியூயோர்க்கில் கறுப்பின் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புகின்றார்

இதற்கிடையில், ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளாக்கப்பட்ட கறுப்பினமக்களின் கலாச்சார வேர்களை முழுதாக அறியச்செய்யாது இருப்பதற்கே, திட்டமிட்டு வெள்ளை இனத்தவர்கள் வேறு பெயர்களை கறுப்பினத்தவர்களுக்கு சூட்டி அழைக்கின்றார்கள் என்ற புரிதல் மல்கமிற்கு வருகின்றது. அவ்வாறான வெள்ளையினத்தவர்களின் பெயர்களை மறுதலிப்பதற்காய், மல்கம், தனது லிட்டில் என்ற பெயரை எக்ஸ் ஆக மாற்றுகின்றார். தொலைந்து போய்விட்ட தனது கலாச்சார வேரை, அந்த எக்ஸ் என்ற எழுத்தில் அடையாளப்படுத்துகின்றார். அதன்பின் அமெரிக்க கறுப்பர்களில் பலபேர் எக்ஸ் என்ற பெயர்க்ளைத் தங்களுக்குச் சூட்டிக்கொள்கின்றனர். இதற்கிடையில் வழிகாடியாக இருக்கும் எலிஜாவுடன் முரண்பாடுகள் மல்கமுக்கு வெடிக்கின்றன. தமது வழிகாட்டி கட்டுப்பாடாய் இருப்பார் என்று நினைத்த மல்கமிற்கு அந்த மதபோதகர் சட்டத்திற்கு அப்பாற்பட்ட மனைவியர்களையும் பல பிள்ளைகளையும் வைத்திருப்பது மல்கமிற்கு பிடிக்காது போகின்றது. அதே நேரம் அமெரிக்க ஜனாதிபதி கெனடி கொலை செய்யப்பட்டபோது மல்கம் கூறிய கருத்தை வைத்து எலிஜா, நேசன் ஒஃப்வ் இஸ்லாமில் இருந்து மல்கமை தற்காலிகமாய் நீக்குகின்றார். கெனடியின் கொலையின்போது மால்கம் கூறியது, 'வினை விதைதவன் வினை அறுப்பான்' என்ற அர்த்தத்தில் வரக்கூடியது. எனெனில் இந்தக் காலகட்டதில் வியட்நாம் போர் உக்கிரமாய் நட்ந்துகொண்டிருந்தது. மல்கம் எக்ஸ், மார்டி லூதர் கிங் உட்பட பல கறுப்பினத் தலைவர்கள் வியட்நாமிய போரை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள் என்பது கவனத்தில் கொள்ளக்கூடியது.

இதேவேளை மல்கம் ஹஜ் யாத்திரை செல்கின்றார். அங்கே சந்திக்கும் கறுப்பு தோல அல்லாத மற்ற மக்களின் அன்பு மல்கம் இதுவரை முன்வைத்த கருத்துக்களில் இடையீடு செய்கின்றது. அதுவரை முற்றுமுழுதாக வெள்ளையின மக்கள் அனைவரையும் (சிலர் கறுப்பின மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்ததையும் அலட்சியப்படுத்தி) விமர்சித்த மல்கம் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொள்ளாது, வெள்ளையினத்துவேசத்தை மட்டுமே முதன்மையாக வைத்து உரையாடத் தொடங்குகின்றார். கறுப்புத்தோல் அல்லாது, பிற தோல் இனத்தவர்களும் தமது போராட்டதில் இணைந்துகொள்ளலாம் என்று Organization of Afro-American Unity என்ற அமைப்பை கட்டியெழுப்புகின்றார். ஃபிடல் காஸ்ரோ நியூயோர்கில் ஐ.நா.சபையில் முதன்முதலாய் உரையாட வருகையிலும் கறுப்பின மக்கள் நிறைய வாழும் Harlem பகுதியிலேயே தங்குகின்றார். இருவேறு சித்தாந்தங்களை/நம்பிக்கைகளை இருவரும் கொண்டிருந்தாலும் ஃபிடல் மல்கமை சந்தித்து உரையாடி கறுப்பின் மக்களுக்கான போராட்டத்திற்கு தனது ஆதரவை தார்மீகபூர்வமாய் வழங்குகின்றார்.

திருமணம் மீது பெரிதாய் நம்பிக்கை இல்லாத மல்கம் பிறகு பெற்றியை (Betty) திருமணம் செய்கின்றார். எனினும் மல்கம் பெண்கள் மீதான முற்போக்கான கருத்துகள் எதையும் கொண்டிராது -ஒரு அடிப்படை மதவாதியைப் போல இருந்தது- மல்கமின் ஆளுமையில் முக்கிய குறைபாடு என்றுதான் சொல்லவேண்டும். எனினும் கறுப்பின் மக்களின் தலைமைக்கான தகுதியை மல்கம் கொண்டிருந்தார் என்பதை -இதைவைத்து- மறுக்கவும் முடியாது.

நேசன் ஒஃப்வ் இஸ்லாமை பிரிந்த பின்னும் மல்கமின் வளர்ச்சியை எலிஜாவினால் தடுக்கமுடியாது போகின்றது. அதேசமயத்தில் சட்டத்தின் அப்பாற்பட்ட தனது முறையற்ற மனைவியர் பற்றிய செய்தியை மூடிமறைப்பதற்கான ஒத்துழைப்பை எலிஜா கேட்டபோதும் மல்கம் மறுத்துவிடுகின்றார் என்பது இன்னும் எலிஜாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. 1965ம் ஆண்டு ஒரு அரங்கில் மல்கம் பேசிக்கொண்டிருக்கும்போது எலிஜாவின் ஆதரவாளர்களால் மல்கம் கொல்லப்படுகின்றார். எலிஜாவின் ஆதரவாளர்களால் இக்கொலை செய்யப்படாலும் இதன் பின்னணியில் அமெரிக்கா உளவுநிறுவனங்களின் 'சுத்தமான' கைகளும் இருந்ததாகவும் நம்பப்படுகின்றது. மல்கமை உளவு பார்த்துப் பார்த்தே ஏழாயிரம் பக்கங்களுக்கு மேலான பக்கங்கள் உளவுத் துறையில் சேகரிக்கப்படது கவனத்தில் கொள்ளக்கூடியது.

மல்கம் திடீரென்று கொலை செய்யப்பட்டவர் அல்ல. மல்கமிற்கு தனது சாவு மிக நெருக்கத்தில் இருக்கின்றது என்று தெரிந்திருந்தும் களப்பணி ஆற்றுவதில் பின்னிற்கவில்லை. மல்கம் 65ல்கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கூட பல கொலை முயற்சிகள் நட்ந்திருக்கின்றன. அவரது காருக்கு குண்டு வைக்க முயற்சித்தது, வீட்டை தீயிட்டு கொளுத்தியது என்று பல ஆபத்துக்களில் இருந்து மலகம் தப்பியுமிருக்கின்றார். கலகக்காரனாய் இருந்த மலமிற்கு மட்டுமில்லை, காந்தியை தன் ஆதர்சமாய் வரிந்துகொண்டு வன்முறைப் போராட்டங்களை தொடர்ந்து நிராகரித்தபடி இருந்த மார்ட்டின் லூதர் கிங்குக்கும் பரிசாக துப்பாகி வேட்டுக்களே வரலாற்றில் வழங்கப்பட்டிருக்கின்றது.

மல்கம் எக்ஸ் (1965), மார்ட்டின் லூதர் கிங் (1968) இரண்டு முக்கிய கறுப்பின் தலைவர்களையும் அடுத்தடுத்து மூன்றாண்டுகளுக்குள் கறுப்பின் மக்கள் இழக்கின்றனர். இவர்கள் இருவரின் மிக்ப்பெரும் எழுச்சியானது, இனி மனிதவுரிமைகள் பேசும் எந்தத் தலைவரையும் பிரமாண்டமாய் வளர்ந்துவிடச்செய்யக்கூடாது என்பதில் இற்றைவரை அமெரிக்க அரசு மிகுந்த கண்காணிப்புடன் இருக்கின்றது. அதனாலேயே இற்றைய மிகு நெருக்கடி காலத்திலும் அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் போலவோ, மல்கம் எக்ஸ் போலவே ஒருவர் உருவாக முடியாது உள்ளது. ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு (கறுப்பின, ஸ்பானிய, பூர்வீககுடிகளுக்கு, 9/11 ற்குப் பிறகு முஸ்லிம்களுக்கு) தங்கள் உரிமைகளுக்காய் போராட வேண்டியபயணமோ மிகவும் நீண்டதாய் இருக்கின்றது.

அமெரிக்கா, வியட்நாம் போரில் ஈடுபட்டபோது தயவு தாட்சண்யமில்லாது அதிகார்த்தை நோக்கி கேள்விகள் எழுப்பி விமர்சித்தவர்கள்தான் மார்ட்டி லூதர் கிங்கும் மலக்ம் எக்சும். இன்றைய ஈராக், ஆப்பானிஸ்தான் யுத்தங்களை விமர்சிக்கத்தேவையுள்ள வலிமையுள்ள கறுப்பினக் குரல்கள் தொலைந்திருப்பதுதான் அவலமானது. அதைவிட அதிகாரத்தின் குரலாய் இருந்து -கருப்பினத் தலைவர்களாய் ஊடகங்களால் ஆக்கப்பட்டிருக்கும்- Condoleezza Riceம், Colin Powellம் போருக்கு ஆதரவாய் அதிகாரத்தின் குரலில் பேசிக்கொண்டிருப்பதுதான் இன்னும் ஆபத்தானது.

மல்கம் எக்ஸ் பற்றிய நூலை மிக கட்டிறுக்கமான மொழியில் தேவையான விடயங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ரவிக்குமார் எழுதியிருக்கின்றார். -வாசித்து முடிக்காமல் கையிலிருந்து எடுக்கக்கூடாது- என்பது மாதிரியான நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை ரவிக்குமாரின் எழுத்து நடை தருகின்றது. ரவிக்குமாரின் தலித்திய அனுபவங்களோடு மல்கமின் அனுபவங்களும் ஒத்துவருவதால் (ரவிக்குமாரும் இதை முன்னுரையில் குறிப்பிடுகின்றார்) இந்நூலை எளிதாக ரவிக்குமாரால் எழுதிக்கொண்டு போக முடிகின்றது . முன்னுரையில் ரவிக்குமார் குறிப்பிடமாதிரி, இஸ்ஸாமால் மட்டும் அல்ல, எந்த நிறுவனமயப்பட்ட மதத்தில் சேருவதாலும் தலித்துக்களின், ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை வந்துவிடமுடியாது என்பது என்னளவான நம்பிக்கையும் கூட. மலகம் அவரது மரணத்தின் பின், கலகத்தின் குறியீடாகிவிட்டார். எனினும் இன்றும் அமெரிக்கா நகரமெங்கும் மார்ட்டின் லூதர் கிங் பெயரில் பாடசாலைகளும் தெருக்களும் பெயரிடப்படும்போது மல்கம் எக்ஸ் அதிக இடங்களில் புறக்கணிக்கப்படுகின்றார் என்பதை மல்கமின் கலகக்குரலிற்கு இன்னும் அதிகார மையங்கள் அஞ்சுகின்றன என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அதிகார மையங்களுக்கு மார்ட்டின் லூதர் முன்வைத்து போராடிய கிறிஸ்தவத்தை இலகுவாய் ஏற்றுக்கொள்ளவும், மல்கம் முன்வைத்த இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள தயக்கங்கள் இருக்கின்றன என்ற இன்னொரு அர்த்தத்திலும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.

மல்கத்தினதும், மார்ட்டின் லூதர் கிங்கினதும் கள முன்னெடுப்புக்கள், அரசியல் புள்ளிகள் என்பவை இருவேறு துருவங்கள் என்றாலும் இருவருக்கும் தமது மக்கள் மீட்சி பெறவேண்டும் என்பதே முதல்நோக்கமாய் இருந்தது. அதனால்தான் அவர்கள் மதங்களைச் சார்ந்திருந்தாலும், அம்மதங்களின் மரபான பல நம்பிக்கைகளை புறக்கணித்ததோடு, பிரார்த்தனைகளால் மட்டும் கடவுள் எல்லாவற்றையும் தந்துவிடுவார் என்று நம்பிக்கை கொள்ளாது மக்களுக்காய் களத்தில் இறங்கிப் போராடியவர்கள். பெரியார் நமக்கு இன்னும் தேவையாக இருப்பதுபோல, அமெரிக்கா தன் ஏகாதிபத்தியப் பாதங்களை -முன்னைவிட இன்னும் வேகமாய்- உள்நாட்டிலும், வெளி உலகிலும் ஆழப்பதிக்கும்போது மல்கமினதும், மார்டின் லூதர் கிங்கினதும் மறுவாசிப்புக்கள் நமக்கு இன்னும் அதிகமாய்த் தேவைப்படுகின்றன.


(குறிப்பு: ரவிக்குமாரின் நூலின் மார்ட்டின் லூதர் பற்றிய சிறுகுறிப்புகள் மட்டுமே வருகின்றன. ஒரு ஒப்பீட்டுகாய் கிங்கின் செயற்பாடுகளையும் இங்கே சேர்த்துள்ளேன்.)

அகதி

பல்வேறு கனவுகள் உலாவித்திரிந்த வெளியில்
நானுமொரு மழலைக்கனவாயிருந்தேன்
கனவுகளுக்கு மொழியோ நிலமோ அடையாளங்களாவதில்லை
ஆதாமும் ஏவாளும் பிணைகையில்
கண்ட முதற்சாட்சியென கோபங்கொண்டான் சாத்தான்
தங்களுக்கான சுருக்குக்கயிறுகள்
மழலைகள் சொந்தம் கொண்டாடவிரும்பாத மொழியிலும் நிலத்திலும்
இரவுபகலின்றி தயாரிக்கப்படுவதாய்
வன்மத்துடன் துப்பாக்கிகளில் புகுந்து துரத்தத்தொடஙகினான் சாத்தான்
இவ்வாறாகத்தான்
என்னைப்போன்ற அகதிகளின் கதை
ஒரு தீவு தேசத்திலிருந்து ஆரம்பித்தது.


....................

நண்பர்களுக்கு,
திங்கள் காலை எழும்பி அஞ்சல்களை பார்வையிட்டபோது, நட்சத்திர வாழ்த்துக்கள வந்திருந்தன. நானறியாமலேயே நட்சத்திரமாக்கப்பட்டதை அறிந்தது உண்மையில் பேயறைந்தமாதிரியே எனக்கு இருந்தது (விடிகாலை வருகின்ற பிசாசுக்கு என்ன பெயர்?). அச்சமயம் மெஸஞ்சரில் இருந்த தமிழக நண்பரையும் வேறு யாரோ என்று நினைத்து வணக்கம் சொல்லி புதுவருட வாழ்த்துச்சொல்ல, நண்பரும் 'தலைவா, இன்னும் மப்புக் கலையவில்லையா?' என்று அன்போடு என் நிலையை கேட்டறிந்துகொண்டார். சடங்கு, சம்பிரதாயம் என்பவற்றில் நம்பிக்கையில்லை என்று அடிக்கடி எழுதிக்கொண்டிருப்பதைப் பரீட்சித்துப் பார்க்கத்தான் தமிழமணத்தார் இப்படி முறையான அறிவித்தல் கொடுக்காது தேர்ந்தெடுத்தார்களோ தெரியவில்லை. அவரவர்க்கு ஆயிரம் சோலிகள் இருப்பது புரிந்தாலும் இவ்வாறு செயததது தனிப்பட்டவளவில் எனக்கு அவ்வளவு உவப்பானதில்லை என்று உரியவர்களிடம் குறிப்பிட்டுவிட்டே இதை எழுதுகின்றேன். புலம்பெயர்ந்து ஒரு தேசத்தில் அகதியாக இருப்பதாலே எனக்கான சுயஅறிமுகத்தையும் இல்லாமலே விட்டிருக்கின்றேன் :-). தொடர்ந்து இந்த வாரத்துக்கு தமிழ்மண நட்சத்திரத்துக்கான விதிகளுக்கமைய எழுதமுடியுமா தெரியவில்லை. இயன்றளவு முயற்சிக்கின்றேன்.

வாழ்த்துக்களுக்கும் அன்புக்கும் நன்றி நண்பர்களே.