கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label மெக்ஸிக்கோ. Show all posts
Showing posts with label மெக்ஸிக்கோ. Show all posts

மெக்ஸிக்கோ (இளங்கோ) - இராமசாமி செல்வராஜ்

Sunday, March 23, 2025

 

 ண்பர் டிசே தமிழனின் (இளங்கோ) மெக்சிக்கோ நாவலை நூலகங்களின் வழியே கடன்வாங்கிப் படித்தேன். பிரபஞ்சன் நினைவுப்பரிசு பெற்ற நூல். அவருடைய எழுத்தும் நடையும் வலைப்பதிவுகளின் வழியே அறிந்த ஒன்றுதான் என்றாலும், முழுநூலாய்ப் படிப்பது இதுவே முதன்முறை.


சிக்கலான கதைக்களம். அதனால் நடையும் சொற்பாவனைகளும் சற்று அந்நியமாய் உணரச் செய்தது. தொராண்டொ, மெக்சிக்கோ, அமெரிக்கா என்று சற்றேனும் அறிந்த ஒருவர்க்கே விலகிநிற்கும் சூழல் என்பதால் தமிழ்ச்சூழலில் பிறர்க்கு எவ்வளவு ஒட்டும் என்பது ஒருகேள்விக்குறி. ஆனால், நெட்பிலிக்சும் பிற திரைக்காட்சி வாய்ப்புகளும் பரவலாய் இருக்கின்ற இந்நாளில் அது பெருந்தடையாய் இல்லாமலும் இருக்கக்கூடும்.

 

அந்தப்பின்புலத்தைத் தவிர்த்துப் பார்த்தால், eat pray love சாயலில் எதையோ தொலைத்துத் தேடித் திரியும் ஒருவன் சந்திக்கின்ற பெண்ணும், அவர்கள் சேர்ந்து போகும் பயணங்களும், ஆண் பெண் உறவின் அத்துனைச் சாத்தியங்களோடும் (:-)) முழுதும் விவரித்துச் செல்லும் கதை. ஈழத்தில் பிறந்து கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஒருவன் மெக்சிக்கோப் பயணத்தில் சந்திக்கிற கொலம்பியப் பெண்ணோடான கதை. கடந்த காலமும் நிகழ் காலமும் கலந்து வெளிப்படுகின்ற கதை தொடர்ந்து ஒரு நம்பகமில்லாத நிகழ்வுக்கோவைகளாக இருக்கின்றதே என்றும், அவர்களுக்கு இடையேயான ஈர்ப்புக்கு வலுவான காரணம் இல்லையே என்றும் தோன்றவைத்தது. ஆனால் அந்தக் கேள்வியைக் கதைமாந்தரே கேட்டுக்கொள்வதும், தற்செயல் நிகழ்வுகளின் கூட்டுத்தொகையாக ஏன் இருக்கக்கூடாது என்றும் விடைபகிரும் ஆசிரியர் இறுதியில் வேறொரு விடையைப் பகிர்ந்து அனைத்துக்கேள்விகளுக்குமான விடையாக வைக்கின்றார்.

 

மனித மனம் சார்ந்த அந்த விடை ஏற்புடையதாய் இல்லாமலும் இருக்கலாம்; அல்லது, அதன்மேலும் கேள்வியெழுப்ப முடியாத முழுவிடையாகவும் இருக்கலாம். அது வாசிப்பவரின் அனுபவம், ஏற்பு இவற்றைப் பொறுத்தும் அமையக்கூடும். இதற்குமேலும் இறுதித்திருப்பம் குறித்துச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இப்படியான ஒரு திருப்பம் இருக்கிறது என்று முன்பு படித்த ஒரு விமர்சனம் இதனைப் படிக்க எனக்கு ஒரு தூண்டுகோலாகவும் இருந்தது.

 

ஒரு பிழைகண்டுபிடிப்போனாகப் பல என் கண்ணில் பட்டன . ஒரு சில வடவெழுத்து ஒரீஇ காரணமாக இருக்கலாம். அல்லது பல்வேறு உச்சரிப்புகளைத் தமிழில் வெளிப்படுத்த முயன்றது காரணமாய் இருக்கலாம். ஆனால் முழுதும் அவ்வாறு ஒருதரத்துடன் இல்லை. Van என்பதை வேன் என்றோ வான் என்றோ எழுதலாம். ஆனால் இரண்டு வகையாகவும் ஒரே பக்கத்தில் எழுதுவதைத் தவிர்க்கலாம். சில இடங்களில் வேற்றுமை உருபு மயக்கம் தமிழக ஈழத் தமிழ் நடை வேறுபாடுகளாலும் இருக்கக்கூடும். ஆனால் ஆசிரியர்க்கு இல் விகுதி மீது அப்படி என்ன பிடிப்போ தெரியவில்லை. விடுதிக்கு, அறைக்கு, தம்பிக்கு என்று சொல்லும் இடங்களில் விடுதியிற்கு, அறையிற்கு, தம்பியிற்கு என்று அள்ளித் தெளித்திருக்கிறார்.

 

இனிய நடைக்குச் சொந்தகாரரான டிசே தமிழன் சற்றே வேறுபட்ட முயற்சியைச் செய்து தன் எல்லைகளை விரிக்கச் சற்றுச் சிக்கலான தெரிவைக் கையாண்டிருக்கிறார். படிக்கலாம்.

 

மெக்சிக்கோ

இளங்கோ

டிசுக்கவரி புக்கு பேலசு

2019

 

******

 

நன்றி: https://www.facebook.com/ramasamy.selvaraj.9/posts/pfbid01PvNcHq95AXrQA6tsWmKgHTZyonF15TLo3mfF7uyKwvqLnaEEp7oBNnTcxxLSi2Ql 

(பங்குனி 12)

மெக்ஸிக்கோ வாசிப்பனுவம்

Saturday, December 02, 2023

 

-சுகிர்தா இனியா

 

நாவல் : மெக்ஸிக்கோ

நாவலாசிரியர் : இளங்கோ

 

ளங்கோவின் மெக்ஸிக்கோ தான் எனது சிறிது கால வாசிப்பு இடைவெளிக்குப் பிறகு நான் முழுவதுமாக படித்து முடித்த நாவல். இளங்கோவின் எழுத்தின் மீது எனக்கு அதீத ஒட்டுதல் உண்டு. காரணம் என்னால் பத்திக்கு பத்தி தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ளக்கூடிய எழுத்தாக அவருடைய எழுத்து இருக்கிறது. ஒரு நாள் எதேச்சையாக முகப்புத்தகத்தில் அவருடைய பதிவு ஒன்றைப் பார்த்தும், அட நம்மைப் போல ஒருவர் என்று தோன்றியதும் அவருடைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டேன். நட்பு அழைப்பும் கொடுத்தேன். அப்போது அவரைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. பிறகு அவருடைய பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்தேன். அதற்கு பிறகு தான் அவர் நாவலாசிரியர், சிறுகதையாளர், இன்ன பிற திறமையாளர் என்று அறிந்து கொண்டேன். அப்படி அறிந்து கொண்ட பிறகு அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

 


இளங்கோவின் எழுத்தில் தொனிக்கும் ஒரு aloofness/solitary nature என்னைக் கவர்ந்திழுக்கும் அம்சங்களில் ஒன்று. மெக்ஸிக்கோவில் அவரது முக்கியக் கதாப்பாத்திரம் இத்தகைய குணாம்சம் வாய்ந்தவராகவும், தன்னையே introspect செய்து கொள்பவராகவும், தனது குறைபாடுகளை எந்தப் பூச்சும் இல்லாமல் வெளிப்படுத்துபவராகவும், அவை விமர்சிக்கப்படும்போது அதில் உண்மை புலப்பட்டால் அதை மனதார ஏற்றுக்கொள்பவராகவும் என அவர் அதை படைத்திருந்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. இது எப்படியென்றால் கையால் செய்யப்பட்ட மட்பாண்டங்களோ அல்லது நெசவுத் துணியோ ஏதாவது ஒரு இடத்தில் பிசகி இருக்கும். அதன் தனித்தன்மை அது தான். அப்படியான ஒரு ஹாண்ட்மேட் கதாப்பாத்திரம் இது.

 

//விலக்கப்பட்டவர்களையும் விசித்திரமானவர்களையும் பற்றி அக்கறைப்படுவதற்கும் இந்த உலகில் ஒரு சிலராவது இருக்கின்றார்கள்.//

 

முதல் அத்தியாயத்தில் இந்த வரிகளைப் படித்தபோதே இந்தக் கதாப்பாத்திரத்தின் மீது ஒரு ஒட்டுதலும் பரிவும் வந்தது. இப்படி என்னை இறுகப்பற்றிய பத்திகள் இந்த நாவலில் ஏராளம் உள்ளன. அவற்றில் சில பத்திகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

 

//இந்த நள்ளிரவு தாண்டிய பொழுது, ஏன் என்னை இப்படி வெறித்து வெறித்துப் பார்க்கிறது? மழையின் சாரலிற்குள் நுழைந்து என் சோகத் துளிகளைக் கரைக்க வேண்டுமென விம்முகிறது நெஞ்சு. சனங்கள் நிரம்பித் ததும்பும் இப்பெரு நகரத்தில் யாருமேயற்ற ஒருவனாய் உணர்வது

எவ்வளவு கொடுமை. தனிமையின் கனந்தாங்காது என்னைப் போல யாரேனும் ஒருவர் தூக்கந் தொலைத்து பல்கணியில் நிற்கவும் கூடுமோ? // 

 

இந்தப் பத்தியை உறக்கம் தொலைந்து வெறுமையான இரவின் பிடியில் தன்னந்தனியாக நின்று சலித்த ஒவ்வொருவராலும் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ள முடியும். நம்மைப் போல இந்த அகால இரவில் யாரேனும் விதானத்தை வெறித்துப் பார்த்தபடி கிடப்பார்களோ அல்லது மொட்டைமாடியில் வான்நோக்கிப் படுத்துக்கொண்டு சூனியத்துள் வெறிப்பார்களோ என்றும் நாம் தனிமையில் நெட்டித் தள்ளிய இரவுகள் நம் நினைவில் ஊசலாடும்.

 

//ஒரு உண்மையை உணர்ந்தேன்.

இந்த உலகிற்கு நான் தனித்தே வந்தேன். மரணிக்கும் போதும்  தனித்தே போகப்போகின்றேன். இடையில் மட்டும் ஏன்

மற்றொருவர் எப்போதும் தொடர்ந்து என்னோடு வரவேண்டும் என நினைக்க வேண்டும் என்றுணர்ந்த கணம்என்றாள்..//

 

இந்த தத்துவார்த்த பத்தி அவரது காதலி சொல்வது போல வரும். இந்த உண்மை நமக்கு தெரிந்தே இருந்தாலும் கூட நாம் சமயங்களில் இம்மைக்கும் எம்மைக்கும் என்று உருகிவிடுவோம். அப்படி உணர்ச்சிவயப்படும்போது இப்படியான உரையாடல்கள் நம்மை நிதானிக்கவும், சமநிலைப்படுத்தவும் செய்யும்.

 

// ஒவ்வொருமுறையும் இப்படிச் சோர்ந்துபோகும்போது, என்ன காரணம் என வினாவாமலே யாரேனும் ஒருவர் வந்து அணைத்துக் கதகதப்பாக்கினால் எவ்வளவு நன்றாக இருக்குமென நினைத்துக்கொண்டு அவள் உடல்சூட்டில் ஒரு பூனைக்குட்டியைப் போல சுருண்டுகொண்டேன். இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் நிற்கும் ஒருவருக்கு ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்.//

 

தனியாக இயங்குபவள் தனிமையை விரும்புபவள் நான் என்றாலும், சமயங்களில் உள்ளிருந்து உதறும் குளிர் போல சமநிலை குலையும்போது, சிந்தையின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு மண் வீழும் மலர் போல இன்னொருவருக்குள் சரணடைய வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன்.

 

// எத்தனையோ தவறுகளைச் செய்திருந்தாலும் இன்னொருவர் தரும் நேசமும் அரவணைப்பும் ஒரு பாவமன்னிப்பைப் போல நம்மை மீண்டும் மனிதர்களாக்கி விடுகின்றது.//

 

அன்புக்கு அந்த வல்லமை உண்டு இல்லையா என்று தோன்றியது.

 

// பயணங்களின்போதுதான் மனிதர்கள் எப்படி மாறிப்போய் விடுகின்றார்கள். எல்லாவற்றையும் புறப்படும் இருப்பிடங்களில் விட்டுவிட்டு, அசலான முகங்களோடு வலம் வரத் தொடங்குகின்றார்கள். தாங்கள் சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் தம்மை இயல்பாகத் திறந்து காட்டவும் செய்கின்றார்கள். நான் நின்ற விடுதியில் நான் பல்வேறு விசித்திரமானவர்களைச் சந்திக்க முடிந்தது.//

 

இதை நானும் கவனித்திருக்கிறேன். தனித்துப் பயணிக்கும்போது எனக்கு ஒரு உதவி தேவை என்று யாரிடமும் கேட்கத் தயங்கியதில்லை. பயணிகளிடம் எல்லோருமே வாஞ்சையாகத்தான் இருக்கிறார்கள். என்ன செய்தாலும் பயணிகளுக்கு 'பயணிகள்' என்ற சலுகை கிடைக்கிறது. ஒரு பயணி ஒரு இடத்தில் வழமைக்கு மாறாக ஏதாவது செய்துவிட்டாலும், பாவம் வெளியூர்க்காரங்க அவங்களுக்கு தெரியாது என்று மன்னிக்கவும் தயாராகவே மனிதர்கள் இருக்கிறார்கள். நம் மீது பிம்பங்கள் இல்லாதபோது, நமக்கு இன்னொருவர் மீது எந்த பிம்பமும் இல்லாதபோது, இயல்பாக இருப்பது சாத்தியமாகிறது என்று நினைக்கிறேன்.

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் வாசித்து நெகிழ்ந்த இன்னொரு முக்கியமான உரையாடலும் இருக்கிறது. அதை இங்கே இணைத்தால் இந்தப் பதிவு மிக நீளமாகப் போகும் என்பதால் வேண்டாம் என்று விடுகிறேன்.

 

மெக்ஸிக்கோ நாவலை துவங்கியவுடன் சரசரவென வாசிக்கத் துவங்கிய நான் 32 ஆம் அத்தியாயம் 'மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள்' வந்தபோது சற்று விளங்க முடியாமல் அங்கேயே தேங்கி நின்றேன். வாசனையைப் பற்றி வந்து கொண்டிருந்த எறும்பொன்று திடீரென்று ஏற்பட்ட தடங்கலால் தடுமாறி நிலைகுலைவது போன்ற தடுமாற்றம் அது. சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அங்கிருந்து எனது வாசிப்பைத் துவங்கியபோது எனக்கு அந்த சரடு பிடிபட்டது. அந்த வாசிப்பு இடைவெளி எனக்கு அவசியமானதாகவும், ஒரு புதிய கண்ணோட்டத்தில் இந்த நாவலை வாசிக்கும் அனுபவத்தையும் கொடுத்தது. உண்மையைச் சொன்னால் இந்த 'மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள்' வாசிக்கும்போது நான் உணர்ச்சி வயப்பட்டேன். இந்தப் பகுதி எனக்கு மிகவும் ஆத்மார்த்தமாகப் பட்டது. இதோ இவனை எனக்குத் தெரியும் என்று திரும்ப திரும்ப என் மனம் அடித்துக் கொண்டது. இந்த உணர்வு எனக்குப் புரிகிறது. ஆமாம் புரிகிறது என்று என் மனம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டது.

 

கதையின் முடிவு எதிர்பார்க்காத முடிவு என்றாலும்  ஒரு வாழ்வனுபவத்தைப் போல மிக இயல்பான முடிவாகவே இருந்தது.

 

தொடர்ந்த வாசிப்பாலும், நேர்மையான உரையாடல்கள் மூலமும் நம்மை நாமே உள் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்வது அவசியம். நேர்மையான உள் ஆய்வுதான் நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள உதவும். நமக்குள் தான் எத்தனை எத்தனை நிறங்கள் இருக்கின்றன என உரையாடல்களும், வாசிப்பும் நமக்கு காட்டிக் கொடுக்கும். இப்படித்தான் என்னையே அடையாளம் காட்டக் கூடியதாக, தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளக் கூடியதாக, ஆத்மார்த்தமான உணர்வைக் கொடுக்க கூடியதாக எனக்கு மெக்ஸிக்கோ வாசிப்பனுபவம் இருந்தது.


 ***************


நன்றி: சுகிர்தா இனியா

https://www.facebook.com/photo?fbid=199156269864891&set=a.104123939368125

மெக்ஸிக்கோ

Sunday, October 29, 2023

 

ஒரு வாசிப்பு அனுபவம்

நன்றி: கிருஷ்ணா



வணக்கம் இளங்கோ,


ஆடி மாதம் மெக்ஸிக்கோவில்  வாசிப்போம் என்றிருந்த மெக்ஸிக்கோவை இப்போது தான் மகனை நீச்சலுக்கு விட்டு விட்டு காத்திருக்கும் நேரத்தில் வாசிக்கிறேன்.  அரை மணித்தியாலத்தில் ஒரே மூச்சாக பதினொரு அத்தியாயங்களை வாசித்து விட்டு இப்போது அசை போடுகிறேன்.  அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.


1 1/2 மணித்தியாலங்களில் 30 அத்தியாயங்களை முடித்து விட்டேன் . ஒரு சுகமான வாசிப்பனுபவம்.


..........


இப்போது வாசித்து முடித்து விட்டேன்.  எதிர்பாராத முடிவு.  கதைக்கு நன்றாக இருந்தாலும் ஏனோ இப்படி ஏன் முடித்தீர்கள் என்று இரண்டு நாட்களாக யோசிக்கிறேன்.  இன்னுமொரு முறை வாசித்தால் தான் கருத்து எழுத முடியும்.


வாசிக்கும் போது நான் நினைத்தேன் திரும்பவும் மெக்ஸ்சிக்கோ போகும் போது 'பொண்ட்' கதைகள் போல அவளைப் பற்றி அதுவரை வாசகனுக்குத் தெரியாததைச் சொல்லி கதையின் திருப்பத்தைச் சொல்லப் போகிறீர்கள் என்று. அல்லது பழைய காதல் தந்த துன்பத்தால் வேண்டுமென்றே மீண்டும் அப்படி ஒரு நிலைக்குப் போகாமல் இருப்பதற்காகவே சந்திக்கவில்லை என்று.  நான் மிகச் சாதாரண வாசகன்.  எனக்கு அப்படித் தான் கதை போகும் என்று ஊகிக்க முடியும்.


அந்த வகையில் நான் எதிர்பாராத ஒன்றைச் சொன்னது நல்ல உத்தியாகத் தான் இருந்தது.  அது தான் எல்லோரையும் கவர்ந்ததற்கான காரணமாக இருக்க வேண்டும்.


ஆனாலும் உங்களது இயல்பான எழுத்து நடைக்கு கடைசி ஓரிரண்டு அத்தியாயங்கள் கொஞ்சம் அன்னியமாக இருந்தன என்பது எனது அவதானம். 


இந்த ஆவலில் முன்பு தொடங்கி இடையில் நிற்பாட்டிய 'தாய்லாந்தை'  இனி வாசிக்கப் போகிறேன்.


00000000


(செப்ரெம்பர் 15, 2023)

மெக்ஸிக்கோ - தேவகாந்தன்

Wednesday, November 30, 2022


2019 இல் வெளிவந்திருக்கிற இளங்கோவின் முதல் நாவல் 'மெக்ஸிக்கோ'. மெக்ஸிக்கோவுக்கான ஒரு பயண அனுபவத்தைப் பதிவிறக்குவதுபோல் தொடங்கும் இந் நாவல், அதீதமாய்த் தென்படினும், உண்மையில் அது பதிவிறக்குவது * நவீன வாழ்வின் ஒரு முகத்தைத்தான். தன்னிலை ஒருமைப் பாத்திரமான 'நான்', அவர் மெக்ஸிக்கோவில் சந்திக்கும் ‘அவள்’, ஏற்கெனவே அவர் ரொறன்ரொவில் அறிமுகமாகிப் பிரிந்த துஷி, இறுதியாக கதையில் அறிமுகமாகும் மனநல வைத்தியர் ஆகிய நான்குமே நாவலின் பிரதான பாத்திரங்கள். 'நா'னும் 'அவ'ளும் நிறையவே ஓவியம், கவிதை, படைப்பெனப் பலவும்பற்றி , மிகவும் அறிவுஜீவித்தனமாகப் பேசிக் கொள்கின்றார்கள், தாம் வாசகரிடத்தில் போலியாகிக் கொண்டிருப்பதான பிரக்ஞையின்றி.


இந் நாவல் இரண்டு வாசிப்பு முறைகளைச் சாத்தியமாக்குகிறது. ஒன்று, மெக்ஸிக்கோவிலும் கனடாவில் கிங்ஸ்டனிலும் களிநிலை கொண்டலையும் பாத்திரங்களில் அழுந்திவிடும் வாசிப்பு; அது ஒருவகை வாழ்க்கையை வாசகரிடத்தில் தரிசனமாக்கும். மற்றது, அந்த அறிந்தனபோல் தோன்றும் பாத்திரங்களை மறந்துவிட்டு, அவர்களது உரையாடல்கள் வழி விரியும் கட்டுப்பாடற்றதும் அறிவார்த்தமானதுமான தனிவாழ்க்கையையும் அகவுலக வெளியையும் கவனமாக்கும் வாசிப்பு. இவை வேறுவேறு வழிகளினூடான அனுபவங்களை வாசகருக்குத் தரவல்லவை.

2012 இல் வெளிவந்த குறமகளின் 'மிதுனம் ', கனடாவில் வயது முதிர்ந்தோர் வாழ்வில்லத்தில் தனியாய்த் தங்கும் இலங்கை மூதாட்டியின் தனித்துவமான கதையை ‘மெக்ஸிக்கோ' போல் எடுத்துரைக்கும் நூல்தான். ஆனால் 'மிதுனம்' கதையாய்த் தேங்கிப்போக, தனிவாழ்வின் நாவலாய் நிமிர்ந்தது 'மெக்ஸிக்கோ'.

(நன்றி:தேவகாந்தன்
நூல்: இலங்கைத் தமிழ் இலக்கியம், ப161-162)

'மெக்ஸிக்கோ' பற்றிய காணொளி

Tuesday, August 23, 2022

 ஒரு படைப்பு அதற்கான வாசகர்களைத் தன்னியல்பிலே கண்டடைந்துகொள்ளும்.




நன்றி: சாந்தி

மெக்ஸிக்கோ - ஜனனி செல்வநாதன்

Monday, May 02, 2022


மெக்ஸிக்கோ - ஒற்றை வரியில் சொல்வதானால் மனம் பிறழ்ந்தவனின் உணர்வைப் பேசும் உன்னத உளவியல்.


குடும்பமாகவோ துணையுடனோ பயணம் மேற்கொள்வோர் மத்தியில் ”எதையோ மறக்கவோ அல்லது எதையோ புதிதாய் கண்டடையவோ தான் பயணங்கள்” என தனித்து கனடாவிலிருந்து இரு வாரம் விடுமுறையில் மெக்ஸிக்கோ செல்லும் ஒருவன், (மன)வெளியில் ஒருவளைக் கண்டு அவளழகில் திகைத்து இலயித்து எளிதில் அவளைக்கடந்து போகவியலா தடுமாற்றத்துடன், எதையும் எதிர்மறை எண்ணங்களோடு எதிர்கொள்ளப் பழகியதால் அவளது வெளிப்படையான யதார்த்தமான பேச்சுக்களால் தனக்குள் சுருங்கி, தான் செய்யும் ஒவ்வொன்றுக்கும் அவள் எதிர்மறையாகச் சொல்லிக்கொண்டிருப்பதாக நினைத்து எதற்கெடுத்தாலும் சண்டைக்கோழி போல சிலிர்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாரா ஒரு கணத்தில் அவளால் அவன் காப்பாற்றப்பட, அவளோ அதற்கான எவ்வித பந்தாவோ பாசாங்கோ காட்டாது தன்னியல்பில் நகரத்தொடங்கிய கணத்தில், அவன் எண்ணத்தில் இதுவரை Bad Vibration என தேக்கப்பட்டிருந்த அவள் அவனறியாமலேயே அவன் அலைவரிசையிற்குள் பொருந்திக்கொள்ளத் தொடங்குகிறாள்; அப்போது எமக்குள்ளும் ஏதோ ஒன்று குமிழியிடத் தொடங்குகின்றது.

முதலாவது அத்தியாயத்தின் மூன்றாவது பத்தியிலேயே ”விலக்கப்பட்டவர்களையும் விசித்திரமானவர்களையும் பற்றி அக்கறைப்படுவதற்கும் இந்த உலகில் ஒரு சிலராவது இருக்கின்றார்கள்” என்ற ஒற்றை வரியில் மொத்தக்கதையையும் எமக்கு உணர்த்திவிட எத்தனிக்கும் எழுத்தாளர், இடையிடையேயும் சரி மனம் பிறழ்ந்தவனின் குறிப்புகள் எனும் அத்தியாயத்தின் ஊடேயும் சரி ‘அவனை’ப் பற்றிய படிமத்தை வலிந்து திணிக்காமல் போகிற போக்கில் முற்கூட்டியே இயல்பாய் ஆங்காங்கே வரைந்து முடித்து விடுகின்றார். இதனாலோ என்னவோ இறுதி அத்தியாயம் முடிந்தும்-சில நாட்கள் கடந்த பின்னும் ‘அவனை’யும் அவனுக்குள் இருக்கும் குழந்தையையும் மறக்கமுடியாமல் கண்ணீர் வழிய அணைத்துக் கொண்டிருக்கின்றேன்.

மனச்சுமையால் கட்டுண்டுகிடக்கும் ஒவ்வொரு மனிதனதும் மனச்சுமையைக் குறைப்பதற்கு ஏற்ற களமாக அமைவது கலைகளின் மாற்றுவடிவமே என சிக்மன் ஃப்ராய்ட் கூறுவது அரிஸ்டோட்டிலின் உளவியலான ‘கதாசிஸ்’ போன்றதே. ’கதாசிஸ்’ எனும் உணர்வு வெளியேற்றத்தை மிகவும் திறம்பட மெக்ஸிக்கோவில் கையாண்டுள்ளார் இளங்கோ.

Adults only புத்தகமென்று ‘சில’ரால் சொல்லப்பட்ட மெக்ஸிக்கோ தனக்குள் தனித்துப் பயணிக்கும் ஒருவனின் பயணக்குறிப்பை-அவனது மனப்பிறழ்வை- அவனது நகைச்சுவையை-அவனுள் அவனே உருவாக்கிய குழந்தையை-புத்தரைக் கொண்டாடும் உன்னதத்தை-அதேநேரம் புத்தரைக் கொண்டாடும் பிரதிநிதிகளின் அத்துமீறல்களால் புத்தர் எம் வெறுப்பின் அரசியலாக இருந்ததை-அதீத அன்போ காதலோ இருந்தும் அதை சொல்லத்தயங்கும் தயக்கங்களை-யாழ்ப்பாணத்து பதுங்கு குழிகளை-அதனோடு ஒட்டிய கதைகளை-யாழ்ப்பாணத்தில் இப்போதும் இருக்கின்ற 30/40 வருடங்களுக்கும் முற்பட்ட உயிருக்கு உத்தரவாதமில்லாத அவலத்தை-போரின் வடுக்களை-உலகின் நாகரீகங்களை-மெக்ஸிக்கோ நகரின் வரலாறை-ஃப்ரீடாவை அவரது பிரகாசமான நீலவர்ண ஓவியங்களை-வான்கோவை-அவரது மஞ்சள் வர்ணம் மீதான காதலை- பத்திரப்படுத்தி வைத்துள்ளது.

சிலரால் புறக்கணிக்கப்படுபவர்கள் தான் சிலரால் உன்னதமாகக் கொண்டாடப்படுவர். "இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் இருக்கும் ஒருவனுக்கு, ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்" என்ற எதிர்பார்ப்போடு-நேசிக்கப்பட்ட ஒருத்தியின் புறக்கணிப்பால் முழுவதுமாய் உடைந்து எதையும் எதிர்மறையாகவே பார்த்துப் பழகிய ‘அவனை’ அவனின் தாயாரின் சாயலோடு அவனது பலவீனங்களுக்காய் இரக்கப்படாது காதலோடு முழுவதுமாய் இட்டு நிரப்புகிறாள் ‘அவள்’...

காதல் ஒரு சாம்பல் பறவை...!

[குறும்படம் எடுக்கவேண்டும் என்ற எனது நீண்ட வருடக் கனவு இதுவரை கனவாகவே இருந்திருக்கின்றது. தன் வெறுமையையும் தனிமையையும் உதறித்தள்ள தனக்குள்ளே ஒரு குழந்தையை உருவாக்கி உரையாடும் ‘அவனை’-எந்த நேரத்தில் எந்த உணர்வுடன் இருக்கும் எனத் தெரியாத குழந்தையுடன் இருக்கும்,புரிந்து கொள்ள கஷ்டமான ‘அவனை’ அவனது இயல்புகள் சிதைந்துவிடாது செதுக்கி எடுக்க வேண்டும் எனது கனவுப் படத்தில்]

நன்றி: https://www.facebook.com/janany.selvanathan/posts/5460266957335075

படைப்புக்கள் குறித்து பா.அ.ஜயகரனின் குறிப்பு

Friday, February 04, 2022


ளங்கோவின் 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுதி வெளிவருவதற்கு முன்பே தனிக் கவிதைகளாக சிலவற்றை வாசித்திருந்தேன். அவரது கவிதை மொழி எனது கவனத்தை ஈர்த்தது. ஈழத்தின் போர் அனுபவங்கள், புலம்பெயர் வாழ்வபனுவங்களை அவர் கவிதைகள் நுட்பமாக வெளிப்படுத்துவபன.

வாழ்வு என்பது அலைவுதான். அந்த அலைவின் நினைவை எவராலும் மறக்க முடியாது. குறிப்பாக படைப்பாளிகளினால் அவற்றை கடந்து செல்ல முடியாது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களில் புலம்சார் விடயங்கள் தவிர்க்க முடியாதது. வாழ்வின் மிக முக்கிய தருணங்களை புலம்சார் நினைவுகள் சுமந்திருக்கின்றன. அதன் வலியை கடப்பதற்கும் நாம் எழுதியே ஆகவேண்டும். மறத்தலுக்கு எதிரான இயல்பான செயற்பாடு அது. புலம்பெயர் இலக்கியத்தின் மிகமுக்கியமான ஓட்டமாக அதை அவதானிக்க முடியும். புலம்பெயர் இலக்கியத்தை அணுகுபவர்களுக்கு அந்த புரிதல் மிகமுக்கியமானது. 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பு நமது காலத்தின் அதிர்வை, அலைவை, வலியை சுமந்துகொண்டிருப்பது மட்டுமல்லாது அவற்றைக் கடத்திக்கொண்டும் இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாகத்தான் இவரது சிறுகதைகளையும் அணுக முடியும். 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' சிறுகதைத் தொகுதியில் உள்ள சிறுகதைகளிலும் புலம், புலம்பெயர்வு குறித்த எம் வாழ்வின் அலைதலை தரிசிக்க முடியும். வாசிப்பும், தேடலும், அனுபவமும் அவரை சிறந்தவொரு கதை சொல்லியாக செப்பனிட்டிருக்கிறது. அதை அவரது கதைகளுக்கூடாக பயணித்தவர்கள் புரிந்துகொள்ள முடியும்.
அவரது வாசிப்பும், தேடலும், தேர்வும் எம்போன்ற வாசகர்களுக்கு புதிய விடயங்களை தந்து கொண்டிருக்கின்றன. வாசிப்பு என்பது 'மெல்ல இனிச் சாகும்' என்ற நிலையில் உள்ள என் போன்றோருக்கு சில பக்கங்களை காட்டிச் செல்கிறார். அதனால் நாமும் தேடி வாசிக்க உந்தப் படுகின்றோம். புத்தகம், பயணம், திரைப்படம், இசை விமர்சனங்கள்-அறிமுகங்கள் என்பன அவரது எழுத்தின் முக்கியமான இன்னொரு பக்கம். 'பேயாய் உழலும் சிறுமனமே' அவரது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இலக்கியப் புனைவுகளுக்கு அப்பால் எழுத்தில் நிகழவேண்டிய பன்முகப் போக்கை காட்டுகிறது.
இவ்வகைய பன்முக எழுத்து எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இளங்கோவுக்கு அது வாய்த்திருக்கிறது. இவரின் சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்கள், அறிமுகங்கள், ஏனைய இலக்கிய-அரசியல் விவாத எழுத்துக்கள் மிக முக்கியமானவை. இவை காழ்ப்புணர்வு சார்ந்தவை அல்ல. இலக்கியத்தில் நிகழவேண்டிய ஆழமான உரையாடலுக்கான ஆரம்பப் புள்ளியாகவே நான் கருதுகிறேன். அத்தகைய ஆரோக்கியமான களத்தின் அவசியம் நமக்கு இருக்கிறது. ஆரோக்கியமான விவாதங்களை 'வேலிச் சண்டை'யாக்கக் கூடியவர்களால் நாங்கள் சோர்ந்து போய் இருக்கிறோம். திறனாய்வுக்கு திறந்த மனமும் வேண்டும். அது அவருக்கு இருக்கிறது. அவரின் அபுனைவு எழுத்துக்கள் தொடரவேண்டும்.
அண்மையில் இளங்கோவின் 'மெக்ஸிக்கோ' நாவலை வாசித்து முடித்தேன். நீண்ட நாட்களின் பின்னர் ஒரு நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். பாராட்டு இருவருக்கும். இறந்தகால ஆணும், நிகழ்காலப் பெண்ணும் எக்காலமும் இருக்கும் நிலத்தை தரிசிக்க முயலும் நாவல் என்று இதைச் சொல்லிவிட முடியும். தரிசிப்பு என்பதை நான் அழுத்திச் சொல்லவிரும்புகிறேன். தரிசனம் உள்ளார்ந்தமானது. அதை அடைவதென்பது ஒரு நிலைப்பட்டதோ அல்லது ஒரு போக்கைச் சார்ந்ததோ அல்ல. பன்னிலைகளில் நிகழ்வது. நம்மைக் கடத்தல், மற்றோரை அணுகுதல், காதல், காமம், நினைவைப் பேசுதல், பண்பாட்டைப் பேசுதல், தன்னைப் பேசுதல், பயணம், தனிமை என நாவலின் பல்வேறு அடுக்குகளுக்கூடாக தரிசனத்திற்கான வெளி இருந்து கொண்டேயிருக்கிறது. அவரின் ஆதர்ச எழுத்தாளர்களின் பயண அனுபவ எழுத்துகள் இந் நாவலுக்கு உந்துதலாக இருந்திருக்கக்கூடும். இன்றைய இடர்காலத் தனிமை, பயணம்பற்றிய நித்திய வேட்கை என்பன 'மெக்ஸிக்கோ' நாவலை இன்னும் நெருக்கமாக்கி நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

-பா.அ.ஜயகரன்

நன்றி: முகநூல்

இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’: இன்றைய காலத்தின் நாவல்

Wednesday, August 04, 2021

- எஸ்.கே.விக்கினேஸ்வரன்


ளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவல் பற்றி ஜீவநதியின் 150 வது இதழுக்கு ஒரு விமர்சனம் எழுதமுடியுமா என்று இதழாசிரியர் பரணீதரன் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். அந்த இதழ்  ‘ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழாக’  வரப்போவதாக வேறு குறிப்பிட்டிருந்தார். அதிகம் யோசிக்காமல் அவருக்கு ஓம் என்று பதில் போட்டுவிட்டேன். ஆனால் நாட்செல்லச் செல்ல ஒருவகைத் தயக்கம் எழத் தொடங்கியது. நான் இதுவரை காலத்தில் எப்போதாவது ஒரு நாவல் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறேனா, எழுதியவை எல்லாமே வெறும் அனுபவக் குறிப்புகளாக அல்லது அறிமுகக் குறிப்புகளாகத் தானே இருந்திருக்கின்றன. அப்படி இருக்க என்ன துணிவில் இந்த நாவலுக்கு மட்டும் எப்படி விமர்சனம் எழுத ஒப்புக் கொண்டேன்?. பேசாமல் ஒரு அனுபவ அல்லது அறிமுகக் குறிப்பை எழுதி அனுப்பிவிடலாமோ என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.


இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட நாவலை மீண்டுமொருமுறை திரும்ப வாசித்தேன். இரண்டாவது வாசிப்பின் போது நாவலுள் இன்னமும் அதிகமாக உட்செல்ல முடிந்தது உண்மைதான். ஆயினும் விமர்சனம் எழுதுவதற்கான உந்துதல் எளவில்லை. ஆனால் இப்போது இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலிருந்து சரியாக இரண்டு நாட்களுக்கு முதல் இளங்கோ தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். சிறிது காலத்துக்கு முன் எழுதப்பட்டதென அவர் குறிப்பிட்டிருந்தாலும், இப்பதிவை நான் இப்போதுதான் முதலாவதாக வாசித்ததாக நினைக்கிறேன். அந்தப் பதிவில் அவர் எழுதியிருந்த ஒரு விடயம் என்னை சற்று நின்று திருப்பி வாசிக்க வைத்தது.


அவர் எழுதியிருந்தார்:  “படைப்பை பார், படைப்பாளியைப் பாராதே'  என்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்த சொல்லாடல். ஆனால் நம் தமிழ்ச்சூழலில் அதை கேலிக்குரியதாக்கிய பெருமை, இதன் உண்மையான அர்த்தத்தை விளங்காதவர்களால் மட்டுமில்லை, இதை முன்னிலைப்படுத்திய சிலராலும் நிகழ்ந்திருக்கின்றது என்பதே அவலமானது.  ‘ படைபைப் பார், படைப்பாளியைப் பாராதே' என்பது எழுதியவர் மற்றும் வாசிப்பவருக்கு ஒரு படைப்பை முன்வைத்து  எத்தகைய பெரும் சுதந்திரத்தைத் தருகின்றது என அநேகர் எண்ணிப் பார்ப்பதேயில்லை. படைப்பை எழுதியபின்னர், அது படைப்பாளிக்குச் சொந்தமில்லை. அதை முன்வைத்து எவ்வகையான வாசிப்பையும் வாசகர் செய்வதற்கான ஒரு வெளி திறந்துவிடப்படுகின்றது. வாசகர், தனக்குரிய வாசிப்பில் அந்தப் பிரதியை எவ்வகையாகவும் புரிந்துகொள்ளமுடியும். அதை படைப்பாளி, இது நானெழுதிய படைப்பு இப்படித்தான் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று எந்தவகையிலும் கட்டாயப்படுத்தமுடியாது. அவ்வாறு ஒரு படைப்பாளி தன் படைப்புக் குறித்து விளக்கந் தந்தாலும், அந்தப்படைப்பை எழுதியவர் என்றவகையில் உரிமைகோரி எதையும் கூறமுடியாது. அவரும் இன்னொரு வாசகராகவே கருத்துச் சொல்லமுடியும்.”  


இதை வாசித்த போது எனது சிந்தனை ஒரு மூன்று நான்கு தசாப்தங்களுக்கு முந்திய சூழலில் நடந்த இலக்கிய உரையாடல்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. அந்த உரையாடல்கள் அந்தக்காலகட்டத்தின் இலக்கியங்களை மதிப்பிட்டதிற் பெரும்பங்காற்றிய போக்குப்பற்றிய உரையாடல்களாக இருந்தன. இந்த உரையாடகள் உண்மையில் இலக்கிய விமர்சனம் சார்ந்ததாக இருந்ததை விடவும் எழுத்தின் அல்லது எழுதுபவர்களின் கருந்து நிலை சார்பாகவே பெரிதும் அமைந்திருந்திருந்தன என்று நினைக்கிறேன். அல்லது கருத்து நிலை பற்றிப் பேசப்படுவதே அப்போதைய பிரதான விமர்சனமாக இருந்தது. படைப்பில் வெளிப்படும் கருத்து நிலை, அல்லது சமூக நோக்கு என்பவை தொடர்பான கேள்விகளும், மறுப்புகளும் படைப்புகள் பற்றிய விமர்சனங்களில் முக்கிய அல்லது முழுமையான கவனத்தை எடுத்திருந்தன. (அத்தகைய ஒரு விமர்சனப் போக்குகுக்கும் கூட அன்றைய நிலையில் ஒரு தேவை இருக்கவே செய்தது. இது பற்றிப் பேசுவதானால் தனியாக எழுத வேண்டும்.) இந்தப் போக்கும் கூட உருவாகிவந்த சமூக மாற்றத்தோடு இணைந்து வெளிப்பட்ட வரலாற்று நிகழ்வுதான். சரியாகச் சொல்வதானால், அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை. ஆனால் அந்தத் திருப்புமுனை எவ்வளவுக்கு நியாயமானதோ, அவ்வளவுக்கு அது, தன்னளவில் முழுமையற்றதாகவும் இருந்தது. அது இன்னமும் ஆழமும் விரிவும் கொண்டு செழுமைப்படுத்தப்பட வேண்டியதாக இருந்தது. 


பழைய இலக்கியங்களை, மறுவாசிப்புச் செய்தும் புதிய இலக்கியங்களை அந்த ஒளியில் வளர்த்தெடுக்க வேண்டியதுமான பாரிய வரலாற்றுப் பொறுப்பு அதற்கு இருந்தது. ஆனால் அது ஆரம்பத்தில் அப்படித் தொடங்கியபோதும், அந்த அடிப்படையின் தொடர்ச்சியான வளர்ச்சியாக விரிவதற்குப் பதிலாக  இலக்கியத்தை கருத்துருவாக்கத்துக்கான சாதனமாகக் கருதுகின்ற நிலையை நோக்கித் திரும்பியது. அல்லது அத்தகைய ஒரு செல்நெறியே சரியானது என்று நம்பியது, .இதன் விளைவாக, இந்த விமர்சனப் போக்கினால் அங்கீகரிக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளைத் தூக்கி நிறுத்துவதும், மற்றவைகளை ஒதுக்குவதும் என்ற நிலை உருவாகத் தொடங்கியது. இலக்கியம் என்பது வெறுமனே கருத்து நிலைசார்ந்து மட்டும் நோக்கப்படுகின்ற ஒற்றைப் பரிமாணப் பொருள் அல்ல என்ற உண்மையை அது அடையாளம் காண தசாப்தகாலம் எடுத்தது. இலக்கியம் என்று பொதுவான வரையறைக்குள் அடங்கும் அதன் எல்லா வடிவங்களுக்கும் பொதுவானதாகவும், முக்கியமானதாகவும், கருத்துநிலை இருந்தபோதும், அது தவிர்ந்த இன்னும் பல்வேறு அம்சங்களும் இருக்கின்றன என்பது கவனத்திலெடுக்கப்படாமலே இந்த விமர்சனப் போக்கு இயங்கியது.


ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலக்கியங்கள் எவ்வாறு மதிப்பிடப்பட்டன என்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. இயல்பானதென ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூக நீதிக்கு இசைவாக அமைந்த பொதுவான கருத்து நிலையும் அல்லது சிந்தனைப் போக்கும், அதன் அடிப்படையான, வாழ்வுமுறையும் முரணற்றதாக, ஏற்றதென்று நம்பப்பட்ட காலத்து இலக்கியங்கள் பெரிதும் அக்காலத்தின் சமூகநீதியையே பேசின. அது மட்டுமல்லாமல், அவற்றின் நிலைபேறுடமையை வலியுறுத்தின. இந்தப் போக்கினை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இலக்கியங்களில்,சொல், ஓசை, சொல்லும் முறையின் பல்பரிமாணத் தன்மை, கற்பனையின் ஆழமும் விரிவும் என்பவற்றுடன், சொல்லும் முறைக்கான இலக்கண விதிமுறைகளும் படைப்பின் மீதான மதிப்பீட்டுக்கு அடிப்படைகளாக அமைந்திருந்தன. அங்கு கருத்துநிலைமீதான கேள்விகள் இருப்பதில்லை. அப்படி ஏதாவது இருப்பினும், அவை அடிப்படைக் கருத்துநிலையில் எழும் சிறியளவான மீறல்களாகவே கொள்ளப்பட்டன. அவை இலக்கியத்தின் தகுதியைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியமானவையாக இருக்கவில்லை.


ஆனால். சமூக வாழ்வுக்கான கருத்துநிலைகளில் பாரிய மோதல்கள் நடந்துகொண்டிருக்கும் நவீன காலச் சூழலில், இலக்கியத்தின் தகுதியைத் தீர்மானிக்கும் முக்கிய இடத்துக்கு அவை வருவது தவிர்க்கமுடியாத தேவையாகவும், இயல்பாகவும் அமைந்துவிடுகிறது. இந்த நிலை எந்தளவுக்கு தீவிரத் தன்மை அடைகின்றது என்றால், இலக்கியத்தின் மற்றைய அடிப்படையான கூறுகளைப் புறந்தள்ளியே கூட, தானே இலக்கியத்தின் பிரதான அம்சமாகவோ அல்லது ஒரே அம்சமாகவோ கூட இருக்கலாம் என்று நிறுவிவிடுவதை ஒரு சமூக நியாயமாகவே வலியுறுத்தும் இடத்துக்கு அது வந்து சேருவதுதான். இத்தகைய ஒரு சூழ்நிலையில் எழுந்த, தவிர்க்கமுடியாத எதிர்ப்புக் குரல்களில், பல்வேறு தொனிகள் இருந்தன. பல்வேறு கருத்துநிலைகளும் இருந்தன. அதாவது கருத்து நிலை ஒன்றும் முக்கியமே அல்ல என்பது முதல், இலக்கியம் இலக்கியமாகவே இருக்க வேண்டும், அது சமூகத்தின் அரசியலுடன்,அதாவது சமூகக் கருத்து நிலையுடன் சம்பந்தப்படக்கூடாது என்பது வரையான பரப்பில் இந்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இவற்றுள் ஒன்றாகவே நான் இந்த ’படைப்பாளியின் மரணம்” (The death of the Author -Roland Barthes ) என்ற குரலையும் அதன் நீட்சியாக வந்த ’படைப்பைப் பார்,படைப்பாளியை பாராதே’ என்பதையும் புரிந்துகொள்கிறேன்.


கருத்து நிலை சார்ந்த இந்த இரு போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கிய முயற்சிகள் நமது சூழலிலும், பொதுவாகத் தமிழிலும் நடக்கவே செய்தன. ஆயினும் அந்தக் காலத்துச் சூழலின் இறுக்கம் காலத்தோடு கரைந்து, இக்காலத்துக்குரிய இலக்கியங்கள், இலக்கியத்துக்கேயுரிய பண்புகளுடனும் இக்காலத்தின் முன்னேறிய கருத்து நிலைகளைக் கொண்டவையாகவும் வரத்தொடங்கியுள்ளன. ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் பல படைப்பாளிகளிடம் இந்த ’இயல்பான சமூக நீதிக்கு’ ஏற்ற வகையிலான படைப்புகள் இலக்கிய முழுமையுடன் வெளிவருவதைக் காணக் கூடியதாக உள்ளது. அந்தவகையான படைப்பாளிகளில் முக்கியமான ஒரு படைப்பாளியாக நான் இளங்கோவை அடையாளம் கண்கிறேன். கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் என்று விரியும் அவரது இலக்கியப் பயணத்தில், கட்டுரைகளும், கதைசொல்லலும் அவருக்கு மிகவும் ‘வாலாயமானவையாக’ வந்து சேர்ந்திருக்கின்றன. இளங்கோ என்ற எழுத்தாளரை. ஒரு படைப்பாளியாகவும், ஒரு நபராகவும் நான் அறிவேன். அவரையும் அவரது எழுத்துக்களையும் இரு வேறு, ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத தனிமங்களாக என்னால் பார்க்க முடியவில்லை. அவரது நூலை, நான் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியாது என்ற அர்த்தத்தில் அதில் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எழுதப்பட்ட பிரதி மாறுவதில்லை, ஆனால் எழுதுபவர் மாறுவார், அவரது இன்னொரு படைப்பு முன்னதைப் போல் இருப்பதில்லை, உண்மையில், இருக்க முடியாதும் கூட என்பதால் இவை இளங்கோவுக்கு மட்டுமல்ல யாருக்குமே பொருந்துவன தான். ஆனால் இன்னொன்றும் உண்மை. ஒரு பிரதிக்கு பல்வேறு வாசிப்புகள் இருக்க முடியும் . ஒரு படைப்புப் பற்றிய புரிதல் என்பது பார்ப்பவரின் பார்வையிலும் தங்கி இருப்பதால், அது எப்போதும் முழுமையாக அதாவது எலோருக்கும் ஒரேமாதிரிப் புரிகிற முழுமையாக இருக்க முடியாது. அதே காரணத்தினாலேயே, ஒரு பிரதியே ஒருவருக்கே, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அர்ததத்தையும், புரிதலையும் கொடுக்க முடியும்.


இளங்கோவின் ‘மெக்சிக்கோ’ இதற்கு நல்ல உதாரணமான ஒரு நாவல்.


000  


அண்மையில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களது ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட நாவல் போட்டியில் பரிசு பெற்ற நாவல் என்ற வகையில் அது வெளிவரும் போதே பரவலான அறிமுகத்துடன் வெளிவந்தது. ஆனால், அத்தகைய ஒரு அறிமுகம் இல்லாவிட்டாலும் கூட பரவலாக வாசிக்கப்படுவதற்கு அடிப்படையான பல அம்சங்களைக் கொண்டது இந்த நாவல்.. கதை ஒரு சாதாரண காதல் கதை தான், கதையின் களம் போலவே மெக்சிக்கோ நாவலும் மிகச் சிறியது. அண்மைக்காலங்களில் பலநூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட நாவல்களைப் படித்ததற்குப் பிறகு ஓரு 172 பக்கங்களே கொண்ட நாவலைப் படித்தது, நீண்ட திரைப்படங்களைப் பார்த்தபின் மாறுதலுக்காக ஒரு குறுந் திரைப்படத்தைப் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. விரல் விட்டு எண்ணக்கூடிய பாத்திரங்கள், ஒரு குறிப்பான இடத்தையே சுற்றிச் சுற்றி நடக்கிற சம்பவங்கள், கூர்மையான உரையாடல்கள், கதைசொல்லி தன்னைப் பற்றியும் தன்னிடமிருந்து பிரிந்து நின்று தன்னையே கேள்விக்குள்ளாகுதல், நியாயப்படுத்துதல், கழிவிரக்கப்படுதல், தன்னைத்தானே கேலிக்குள்ளாக்குதல். தன்னை மறந்து கனவுலகில் சஞ்சரித்தல், மற்றைய பாத்திரங்களை, தனது பார்வையில் சித்தரிக்கும் போதும், அவர்களை இரத்தமும் சதையுமாக வாசகர் முன் நடமாட வைக்கும் நுணுக்கமான சித்தரிப்பை வழங்குதல் என்பவற்றால் நாவல் ஒரு நேர்த்தியான படைப்பு என்ற உணர்வை வாசிக்கும் ஒரு வாசகரிடம் இயல்பாகவே ஏற்படுத்திவிடுகிறது. இதன்பின், பலங்கள், பலவீனங்கள் எல்லாம் பாத்திரங்களின் பலங்களாகவும் பலவீனங்களாகவும் மாறிவிடுகின்றன. ஒரு நல்ல நாவலுக்கு இருக்கக் கூடிய ஒரு முக்கியனான அம்சம் இது.


நாவலின் கதை ஒன்றும் பெரிய கதை அல்ல என்று சொன்னேன். பொதுவாக, வட அமெரிக்கர்கள் விடுமுறையைக் கழிக்க இரண்டு அல்லது மூன்று வார விடுப்பில் மெக்சிக்கோ, கியூபெக் போன்ற நாடுகளுக்குச் செல்வது வழக்கம். விடுமுறைகாலம் முழுவதும், ஒப்பீட்டளவில் மலிவான செலவில், எல்லாவித களியாட்டங்களையும் மகிழ்ச்சியாக அனுபவித்துத் திரும்ப அருமையான இடங்கள் இவை என்பது பிரசித்தம். ஆனால் கதைசொல்லி பாரம்பரிய வரலாறு கொண்ட ஒருகாலத்தில் மாயன்களின் பூர்வீக நிலமாக இருந்த மெக்சிக்கோவில் இவைபற்றிய புரிதலோடு செல்லும் ஒரு ஈழத்து அரசியல் சூழலால் தனது பதின்மங்களில் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கின்ற, தன் இளமைக்கு அழகுசேர்ப்பதாய் முகிழ்த்த காதல் முறிந்துபோன துயரத்தைச் சுமந்துகொண்டு திரியும் ஒரு தமிழ் இளைஞன், எழுத்தாளன்,கவிதை எழுதுபவன். நாவலில் அவனுக்கு பெயர் இல்லை. கதைசொல்லிக்கு மட்டுமல்ல, அவன் மெக்சிக்கோவில் சந்தித்து காதல் வயப்படும் பெண்ணுக்கும் கூட பெயர் இல்லை. நாவலின் கடைசியில், அவளின் பெயரை கதைசொல்லியே சொல்லும் வரையில் அவள் பெயரை யாரும் உச்சரிக்கவில்லை. மெக்சிக்கோ கடற்கரைகள், மலைகள், மாயன்களின் பூர்வீக இடங்கள் என்று ஒரு விடுமுறையைக் களிக்க வந்தவனான புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளனுடன் இயல்பாக ஒட்டிக்கொண்டுவிட்ட காதலியுடன் களித்த பொழுதுகள், நினவுமீட்டிய பழைய சம்பவங்கள், அவர்களுக்கிடையே நடந்த உரையாடல்கள் என்று நாவல் நடந்து முடிகிறது. இறுதியில் வரும் ஒரு எதிர்பாராத் திடீர் திருப்பம் நாவலின் போக்கில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவராதபோதும், அது ஒன்றும் கதை சொல்லிமீதான அனுதாபத்தை ஏற்படுத்தும் நோக்கிலான ஒரு உத்தியாகத் தெரியவில்லை. காதலின் முறிவால் கதைசொல்லியின் மனோநிலை குழம்பி நோயுறுதல் சம்பந்தமான பகுதி கொஞ்சம் அவசரமாகச் சொல்லி முடிக்கப்பட்ட பகுதிபோல பட்டாலும், அதனால் முன்னிருந்த இயல்பான ஓட்டத்தில் ஒரு வேகக் குறைவு தென்பட்டாலும் குறைப்பட எதுவும் இல்லை என்று சொல்லலாம். 


அந்தப் பகுதியை அவரால் இன்னும் கொஞ்சமாகச் செழுமைப்படுத்துதல் முடியும். இதன் மூலமாக கதை ஓட்டத்தின் வீச்சை அதிகரிக்க முடியும்போல் எனக்குத் தோன்றியபோதும் எனக்கு ஒரு நல்ல நாவலை வாசித்த திருப்தி கிட்டவே செய்தது. இந்த நாவலை அதன் முழுமையை அனுபவிக்க ஒருவர் இரண்டுதரம் வாசிப்பது நல்லது என்று சொல்வேன். அப்போதுதான் அந்த நாவலில் வரும் பல ஆழமான, பூடகமான வார்த்தையாடல்களுக்குப் பின்னலுள்ள சில சிடுக்குகளை அவிழ்க்க முடியும். அல்லது பல தெரியாத காட்சிகள் தெரியும் என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால், நாவலில் பேசப்படும் கதையின் அடிப்படையான சரடு ஒரு காதல் உறவு முறிந்துபோன பின்னான, கதைசொல்லியின் மனம் உருவாக்கும் ஒரு கனவு உலகில் தன்னையும், நடந்த சம்பவங்களையும் நேர்மையான விமர்சன நோக்குடன் அவற்றை அணுகுவதும் தான்.


அப்படியானால், இந்த நாவலில் இதற்கு மேல் எதுவும் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. அது நமது காலத்தின் அரசியலை,பண்பாட்டை, சிந்தனையை, வாழ்க்கை முறையை, நம்பிக்கைகளைப் பற்றியெல்லாம் பேசவில்லையா? அப்படியெல்லாம் பேசாதவற்றை ஒரு நாவல் என்று சொல்லலாமா? என்ற கேள்விகள் எழலாம். நாவல் இவற்றையெல்லாம் சொன்னதா என்றால் இல்லை என்று சொல்லலாம். சொல்லவில்லையா என்றால் சொன்னது என்றும் சொல்லலா,ம். அது நேரடியான தத்துவார்த்த அரசியல் விடயங்களைப் பேசவில்லை. ஆனால் அவற்றை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. மனிதம் இயல்பான அதன் அழகியலோடு வாழ்வதை எம் கண்முன் நிறுத்தியிருக்கிறது. சமூக அரசியலை, பெண்களுக்கெதிரான வன்முறையை, மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகளை, புரிந்துணர்வுகளை, விடுதலையை, நம்பிக்கைகளை, புலம்பெயர் வாழ்வின் அடியாழங்களை என்று எல்லாவற்றையும் பற்றி அது பேசுகிறது. ஒரு இருவார வாழ்க்கைக்குள் அது ஒரு அரைநூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட பல அரசியற் போக்குகளை, புத்தர் முதல்,மாயன்களின் வழித்தோன்றல்கள், மற்றும் கொலொம்பிய கம்யூனிஸ்டுகளின் இராணுவம் வரை அது பல வரலாற்று மற்றும் சிந்தனைகளின் போக்குகளையும் தொட்டுச் செல்வதன் மூலம் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கிய தளத்தில் தனக்கொன ஒரு முக்கிய பாத்திரத்தை அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறது. அந்த வகையில், இளங்கோவிற்கு இது முதல் நாவல் ஆயினும், அது அவருக்கும் ஒரு முக்கியமான இடத்தை நிச்சியமாக எந்த ஆர்ப்பாட்டங்களுமின்றி மிக அமைதியாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கூடவே புலம்பெயர் இலக்கியங்களின் வரிசையில் இடம்பெறும் தகுதிவாய்ந்த இன்னொரு நாவல் என்ற தகுதியையும் அது கொண்டுள்ளது என்று துணிந்து சொல்வேன்.


000  


இப்போது நான் முதல் கூறிய விடயத்துக்கு வருவோம். பண்டிதர்களதும், கற்றோர்களதும் இரசனைக்கு மட்டுமேயாக இருந்த இலக்கியம், சற்றேறக்குறைய எல்லா மட்ட்த்து மக்கள் மத்தியிலும் நுகரப்படுவதாக மாறத்தொடங்கிய போது அது நவீன இலக்கியம் என்ற பகுப்புக்கு உள்ளாகிறது. ஆயினும் இவற்றிலும் இன்னமும்’கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டை எதிர்த்து உருவான ’கலை மக்களுக்காகவே’ என்ற கோட்பாடு எழுந்து வந்ததும், பின்னர், ’கலை மக்களுக்குத்தான், மாடுகளுக்கல்ல’ என்ற எதிர்க்குரலுடன், ஆகவே அது ’கலையாகவும் இருத்தல் வேண்டும்’ என்ற கருத்துக்கள் எழுந்ததும் நாம் அறிந்ததே. இந்த மூன்றாவது படியின் செழுமையான கலை வடிவம் தான் சம காலத்தின் வெற்றிகரமான இலக்கிய வடிவமாக அமைய முடியும் என்பதே நான் மேலே குறிப்பிட்ட விடயம்.


கலை இலக்கியம் என்பவை மக்களின் அன்றாட வாழ்வியலில், அவர்களது பண்பாட்டில் தலையீடு செய்பவை. அவை பழமையின் செழுமையான பக்கங்களிலிருந்துகொண்டே புதுமையின் சவால்களை எதிர் கொள்கின்றன. ’பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல,கால வகையினானே’ என்றபடி புதியன வருதலும் அவை பலமுறுதலும் மானுட வாழ்வின் தவிர்க்க முடியா இயங்கியல் விதியாகையால், அவற்றை நாம் நிறுத்திவிட முடியாது. அது காலந்தோறும் வளர்ந்துவருவது. பாரதி அதையே சுவைபுதிது, பொருள் புதிது,வளம் புதிது, சொற்புதிது என்று சொல்வான். இந்த வகையிலான ஒரு மதிப்பீட்டில் ஒரு இலக்கியப் படைப்பு நாவலாக எப்படித் தேறுகிறது என்று அவதானித்தலை, இயல்பாகவே ஒரு வாசகர் தனது வாசிப்பினோடே செய்கிறார். வாசிக்கும் போதே சொல்லப்படும் முறை, சொல்லும் மொழி என்பவற்றால் ஈர்க்கப்பட்டு ரசித்தபடியோ, அல்லது அது கூறும் உலகில் சஞ்சரித்தபடியோ   தன் வாசிப்பை நிகழ்த்துகிறார். அதில் சொல்லப்படும் விடையங்கள் அவருக்குக் காட்சிகளாக, தகவல்களாக, கருத்துக்களாக அவரிடம் சேருகின்றன, அவற்றில் அவர் லயிக்கவோ, புதியவற்றை அறியவோ, கற்றுக்கொள்ளவோ, முரண்படவோ, கேள்விகளை எழுப்பவோ செய்கிறார். இந்தச் செயல்முறையினூடுதான் கலை இலக்கிய நுகர்வு நடைமுறையில் தொழிற்படுகிறது. இந்தத் தொழிற்பாட்டில் வெற்றி பெறுவது என்பது, இவை அனைத்தினதும் ஒரு கூட்டுப் பங்களிப்பு சார்ந்தது. அந்தக் கூட்டுப் பங்களிப்பை சிறப்புறக் கையாளும் போதே ஒரு படைப்பாளியும், படைப்பும் வெற்றிபெறமுடிகிறது. இளங்கோவின் மெக்சிக்கோவை இந்த வகையில் முக்கிய கவனத்துக்குரிய வெற்றிபெற்ற ஒரு நாவல் என்று சொல்ல முடியும்.


இதை மேலும் விளக்க, நாவலிலிருந்து மேற்கோள்களை எடுத்துவைத்து ஒவ்வொரு அம்சமாக விளக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அது இந்தக் கணத்தில் அவசியமில்லை. கனடாவில்  வாழும் வ.ந. கிரிதரன் அவர்கள் எழுதிய அமெரிக்கா என்ற என்ற நாவலும் இப்படி ஒரு நாட்டின் பெயரை தலைப்பாக்க் கொண்டு எழுதப்பட்ட நாவல் தான். ஈழத் தமிழர் புலம்பெயர் வாழ்வின் ஆரம்பக் கால நிகழ்வுகளை மையமாகக் கொண்ட ஒரு நாவல் அது. மெக்சிக்கோ, புலம் பெயர் நாட்டில் வாழத்தொடங்கி அதன் நெளிவு சுளிவுகள், அதன் பாதுகாப்பான சூழல் என்பவற்றை அனுபவிக்கத் தொடங்கிக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் எழுதப்பட்ட நாவல். புலம்பயர் இலக்கிய வரலாற்றில் கனடாவிலிருந்து வந்த இந்த இரண்டு நாவல்களுமே கவனத்துக்குரியவை. அந்த வகையிலும் கூட மெக்சிக்கோ முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நாவலாக, பேசும் பொருள் சார்ந்தும், செட்டானதும், அழகானதுமான நடையைப் பேணுவதன் மூலமாகவும் சமூக அரசியலின் மீதான விமர்சங்களையும் நாவலின் இயல்பான முழுமையுடன் இயைந்து போகும் அளவில் கொண்டுள்ளதாகவும் சிறப்பாக வந்துள்ள இந்த நாவலை, நான் மனந்திறது எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்று விதந்துரைத்துச் சொல்வேன்.


*****************


( நன்றி: ஜீவநதி - இதழ் 150)


மெக்ஸிக்கோ - ஜெயக்குமரன் (JK)

Friday, March 19, 2021

தனியராகச் செய்யும் பயணங்கள் கொடுக்கும் உணர்வுகள் கலவையானவை. நாம் போகும் இடங்கள் யாவிலும் கூட்டம் அலைமோதும். தெரியாத கடைக்காரர்கள். தெருவில் எதிர்படுபவர். பாதையோர பழ வியாபாரி. கடற்கரையில் குழந்தைகளோடு பந்து விளையாடும் இளங்குடும்பம். ஆண்கள். பெண்கள். எல்லோருடனுமே ஏதோ ஒரு உறவை ஏற்படுத்த நம் மனம் நாடும். பழகிய மனிதர்களோடு பேசும்போது ஏற்படும் உற்சாகத்தைவிட இவர்களை அவதானிப்பதில் உருவாகும் உள்ளக் களிப்பு அதீதமானது. அதைக் களிப்பு என்று சொல்லிவிடவும் முடியாது. கொஞ்சம் அங்கலாய்ப்பு, கழிவிரக்கம், தனிமையின் சிறு விரக்தி, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வியாபிக்கும் கொண்டாட்ட மனநிலை. தனிமைப் பயணங்களில் இவை எல்லாமே கலவையாக வந்துபோவதுண்டு. பயணங்களை இந்த மனநிலையோடு அணுகும்போது உருவாகும் களம் அலாதியானது. பயணங்களில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்களைக் கதாபாத்திரங்களாக்கி அவர்களோடு ஊடாடி, அவர்களின் வாழ்க்கைக்குள்ளும் சென்று கொஞ்சம் எட்டிப்பார்த்தல் என்பது ஒரு அனுபவம். அதனை எழுத்து அற்புதமாகக் கொடுக்கும். கூடவே நாம் ஏங்குகின்ற ஒரிரு இலட்சியப்பாத்திரங்களையும் சேர்த்துவிட்டால் அது கொடுக்கும் உவகை சொல்லி மாளாது. தோஸ்தாவஸ்கியின் பெண்கள்போல. அல்லது ஜேன் ஓஸ்டினின் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டியில் வரும் எலினோர், மரியானே சகோதரிகள்போல. பாலகுமாரனின் ஒரு சிறுகதையில் வரும், கடற்கரையில் அவரோடு கவிதை பாடும் ஈழத்துச் தமிழ்ச்செல்விபோல. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸிபோல. அல்லது எல்லோராபோல. இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவலும் அத்தகையதே. 


ஈழத்தில் பிறந்து கனடாவில் வளரும் இளைஞன் ஒருவனின் மெக்சிகோவிற்கான பயணத்தைப் பேசும் நாவல் இது. அங்கே அவன் பலரோடு சேர்த்து தன் இலட்சியக் காதலியையும் காண்கிறான். அவளோடு பேசுகிறான். இருவரும் ஊரெல்லாம் திரிகிறார்கள். அவளை அணைத்துக்கிடக்கும் கணத்தில் செம்புலப்பெயல் நீரனார் பாடலை மொழிபெயர்த்துச் சொல்கிறான். இவன் சமைத்த உணவுப் பாத்திரங்களை அவள் கழுவிக்கொண்டிருக்கையில் பின்னால் சென்று அணைத்து அவள் காது மடல்களில் முத்தம் கொடுக்கிறான். இருவருமாய்ச் சேர்ந்து உலக இயல்புகளைப் பேசுகிறார்கள். பெண்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஈழத்து வாழ்க்கையை இவன் பேச அவள் போராட்டத்தில் இறந்த தாய்வழி மாமாவையும் ட்றாக்டரில் இறந்த உறவினர்களையும் நினைவுகூறுகிறாள். கண்டங்கள் வேறாகினும் போர்களும் அனுபவமும் வலியும் ஒன்றுதானே. அவனுக்கு அவள் சுப்பீரியர். அவளிடம் முழுதாய்ச் சரணடைந்து அவள் மடியிலேயே கிடந்து அவள் கதைகளை ரசிக்கும் ஆண்டாளாக மாறத்துடிப்பவன் 


இவன். ஒரு உறவின் முறிவிற்குப் பின்னர் அறிமுகமாகும் எட்டமாட்டாத உறவு ஒன்று கொடுக்கும் அலைக்கழிப்புத்தான் இந்நாவல். அது நிஜமாகத்தான் இருக்கவெண்டுமென்பதில்லை. நாவலின் ஆரம்பத்திலேயே அந்த இலட்சியக் காதலி யார் என்பது கொஞ்சம் புரிந்துவிடும். அது புரிந்தபிற்பாடு நிகழ்பவை யாவும் சற்று அபத்தமாகவே தெரியும். அதை இளங்கோ தெரிந்தே செய்திருக்கலாம். ஒருபக்கம் மெக்ஸிக்கோ பயணம். மறுபக்கம் அந்த இளைஞனின் அலையும் மனம். இரண்டுக்கும் நடுவே வாசிக்கும் நாமும் இழுபட்டுச்செல்லும் பயணம்தான் இந்நாவல். 


ஒரு பயணத்தின்போதுதான் இந்நாவலைத் தேர்ந்தெடுத்து வாசித்தேன். இந்த நாவல் கொடுத்த மனநிலையோடுதான் என் பயணமும் கழிந்தது. தேர்ந்த சிவப்பு பினோட் நோயரை இரண்டு கிளாஸ் அதிமாக அருந்தினால் உருவாகும் போதையின் மிதப்பு இந்நாவலை வாசித்துக்கொண்டிருக்கையில் இருந்தது என்று சொன்னால் மிகையல்ல. இளங்கோவிடம் அவ்வகை மென்போதை மொழி இருக்கிறது. கூடவே பதின்மங்களில் புலம்பெயர்ந்து திணை, மொழி, மனிதர்களைப் பிரிந்துவாழும் இளைஞனுக்கேயுரிய அடையாளச் சிக்கல்களும் இருக்கிறது. அதை அனுபவித்து எழுதும் ஆற்றலும் இருக்கிறது. இவையெல்லாம் இணைந்த ஒரு அற்புத படைப்பை அவரிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கவைத்திருக்கிறது 


நன்றி: Jeyakumaran Chandrasegaram

மெக்ஸிக்கோ - சுகிர்தா

Wednesday, February 17, 2021

 GV Prakash இசையில் சைந்தவி பாடும் பாடல் ஒன்று. " நிழல் தேடும் ஆண்மையும், நிஜம் தேடும் பெண்மையும் ஒருபோர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா?" ஏனோ இந்தப்பாடல் வரிகள் தான் எனக்கு நினைவில் வருகின்றன.

"நீ இந்தக் காலையில் படகில் போகும்போது உன் நாட்டிற்குப் போகும் கனவைப் பற்றிச் சொன்னாய். இன்னமும் கடந்தகாலத்தில் நீ வாழ்ந்துகொண்டிருப்பதால், உனக்கு எதிர்காலமும் ஒரு கனவாய் இருக்கிறது. எனக்கு அப்படியில்லை. இந்த அதிகாலை, இந்தச் சூரியன், அரிதாய் வாய்த்த படகுப் பயணமென அதில் மட்டுமே திளைத்திருந்தேன். எனக்கு இந்தக் கணமே முக்கியம். எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் இப்படி ராகுலோடும், உன்னோடும் சுற்றித் திரியவே முடிந்திருக்காது. அடுத்தகணத்தில் என்ன நிகழுமெனத் தெரியாதபோது எதிர்காலத்தைப் பற்றி எப்படி தீர்மானிக்க முடியும் எனச் சொல்லியபடி, காற்றுக் கலைத்த கேசத்தை ஒரு பக்கமாய் ஒதுக்கினாள்." காதலியின் பிரிவிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னைத் தனிமைப்படுத்துபவனுக்கு அவளின் நட்பு எதிர்பாராமல் கிடைக்கிறது. அவள் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவள். மோதலில் தொடங்கிய அவர்களின் நட்பு, அது வளர்ந்த விதமும், அந்த அவளினூடான வாழ்வின் தரிசனமும், வாழ்ந்தால் அவளைப்போல ரசனையானவளாக, தெளிந்த மனநிலையுடையவளாக வாழவேண்டுமென்ற அவாவைத் தூண்டும் விதமான வர்ணிப்புகள்! அவளை எந்தவிதத்திலுமேனும் தாழ்த்திவிடாது வார்த்தைகளால் வர்ணித்த விதங்கள். ஆசிரியரின் கெட்டித்தனம் என்னவென்றால், அவளை ஒரு ஸ்பானியப் பெண்ணாகத் தேர்ந்தெடுத்ததுவே! ஏனென்றால் எம் பெண்களிடமில்லாத வாழ்வு தொடர்பான மாற்றுப் பார்வையை, தரிசனத்தை முன்வைக்க அந்த அவளின் வருகை அவசியமாக இருக்கிறது. கடைசிவரை அவள் என்னவானாள் என்று அறிவதற்கிடையில், அவன் அவளோடான அந்த அற்புத வாழ்வை வாழ்ந்து முடித்துவிட்டு கடைசியில் மனநல மருத்துவரின் வாயிலிருந்து அப்படியான ஒருத்தி அவன் வாழ்வில் வரவேயில்லையென்று சொல்லவைத்து நியாயம் செய்துவிட்டுத் தப்பித்துவிடுகிறார் ஆசிரியர். வாழ்த்துகள் இளங்கோ. உங்கள் எழுத்துகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்துவருகிறேன். நீண்ட காத்திருப்பின் பின் உங்கள் புத்தகம் கைவசம் கிடைத்தது மகிழ்ச்சி. உங்களைப் போல விமர்சனமெல்லாம் எழுதமுடியாது. ஆனாலும் ஒரு வாசகியாக நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன் என்பதில் ஐயமில்லை. "Ich Erzähler" என்று சொல்லப்படும் வகையில் எழுத்தாளர் கதையை நகர்த்தும் விதமும், சொல்லாடல்களும் மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன!

இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவல் குறித்து - Shathir Ahamed

Wednesday, December 30, 2020

பிரபஞ்சன் நினைவுப்பரிசு பெற்ற நாவல் (என்று Sabry நாநா கூற கட்டாயம் வாசிக்கிறேன் என்று)வாங்கிவந்தேன். பிரபஞ்சனின் என்ற பெயர் கூறுகையில் ஞாபகம் வருவது “இவ்வளவுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” என்ற வரிகள் தான். மனதை நெகிழ்சியுற வைக்கும் எழுத்துக்களில் பிரபஞ்சனுடையதும் என் பிரையோரிட்டி வரிசையில் வந்துவிடும். அதே நெகிழ்ச்சியை தரவல்ல ஓர் படைப்பாகத்தான் ‘மெக்ஸிக்கோ’ வும் அமையப்பெற்றிருக்கிறது. Enrique iglesias,Murakami,Bukowski,Zedd,Passenger என என் மனதுடன் ஒன்றிய பலரையும் எழுத்தாளர் கையாண்ட விதம் அபாரம்.

பயணக்குறிப்பாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்ற வாசகனின் ஏக்கத்தை பூர்த்தியாக்கிவிட்டார் எழுத்தாளர். முக்கியமாக புத்தரைப்பற்றியான வசனக்குறிப்புகள் அன்த்துமே fபெர்ஸ்ட் கிளாஸ்.
//இன்னும் சொல்லப்போனால் புத்தர் தன்னை பின்தொடரவேண்டும் என்று எவரையும் வலியுறுத்தியவருமில்லை.கடவுள் என்ற சொல்லையே எந்தப் பொழுதிலும் பாவிக்க மறுதலித்த அவரை இன்று கடவுளாக்கியதுதான் மனிதர்கள் அவருக்குச் செய்த மிகப்பெரிய அவமானம்// என்றெல்லாம் எழுத ஒருவகைத் துணிச்சல் அவசியமாகிறது.
இடைக்கிடையே பெண்கள், வாழ்க்கை, திருமணம் என்ற தலைப்புகளில் இடம்பெறும் உரையாடல்கள் யதார்த்தத்துடன் ஒன்றித்துப்போகின்றன.விட்டுச்சென்ற பெண்ணின்மீதான மரியாதையைத்தொலைக்க கூடாது என்ற கருத்திலான வசனங்கள் கூட அழகுதான். வாழ்வில் அவர் சந்தித்த சில குடிகாரர்களை பற்றிய குறிப்பு புதிதல்ல,ஆனால் குறிப்பிட்ட முறைதான் புதிது. பிரிவின் வாதையை van Gogh மற்றும் Frida Kahlo உடன் சேர்த்துக்கூறியதும் நல்ல உத்திதான்.
கிளைமாக்ஸ் நன்றாகப் பொருந்திப்போயிருக்கிறது.இந்த நாவலைப்பற்றி சுருக்கமாக கூறுவதாயின்; வேலைசெய்து மூளை களைத்த பின் தேவைப்படும் விடுமுறையில் வாசிக்க ஏற்ற ஒரு மாஸ்டர் பீஸ்.

(Nov 28, 2020)
நன்றி: Shathir Ahamed

மெக்ஸிக்கோ - நிரோஜினி

Wednesday, November 25, 2020

தனித்து பயணிக்கும் ஒரு எழுத்தாளனின் பயணம் ஒவ்வொருவரை சந்திக்கும்போதும், வெவ்வேறு இடங்களுக்கு செல்லும்போதும் ஒரு கவிதையாய் அல்லது கதையாய் அவனுக்குள்ளே உருவாகி, சிலது அச்சிடப்படுகின்றன. பல நினைவுகளுக்குள்ளே நிரந்தரமாகிவிடுகின்றன.

சிலருக்கு வாழ்க்கை என்பது நல்ல கல்வி, தொழில், திருமணம், சொந்த வீடு, வாகனம் இன்னும் சிலருக்கு சில அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் என்பதாக மட்டுமே சுருங்கி விடுகிறது. வெகு சிலருக்கு வாழ்க்கை கொண்டாட்டம், ஒரு முடிவில்லா பயணம், புதிய மனிதர்களை புதிய புத்தகங்கள் போலே படித்தறியும் ஆவல் கொண்டிருப்பர். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உலகம், சிலது பறந்து விரிந்தும் மிகச் சிலது குறுகியதும் அந்தகாரம் நிறைந்ததுமாய். மெக்சிக்கோ நோக்கி செல்லும் இந்த பயணி புத்தகங்ளை தனக்கு கவசமாக பயன்படுத்திக்கொண்டு கடந்த காலத்திற்குள் தன்னை சிறைப்படுத்தியிருக்கும் ஒருவன், அவனது உலகை வெளியே நின்று பார்க்கும் ஒரு கொண்டாட்டக்காரி சில நாள் பயணத்தில், காதலில், மதுவும் முத்தமும் நிறைந்த கடற்கணங்களில் அவனை விடுவிக்க எத்தனிக்கிறாள். அவனும் எப்போதோ மறந்துபோயிருந்த அம்மாவின் புடவை வாசத்தினை இவள் அருகாமையில் உணர்கிறான்.

பெண் என்பவள் நிகழ்கணங்களில் வாழ்பவள். சமூகம் விதித்திருக்கும் இத்தனை கட்டுக்களும் தான் மீது சுமத்தப்பட்டிருந்தாலும், அவள் நதியைப்போலே நகர்ந்து செல்கிறாள். பூக்காடுகளில் பிரியப்பட்ட ஊதா பூவாய் மிளிர்கிறாள். இந்த ஆணின் மீது அவள் பரிதாபம் கொள்ளவில்லை, காதல் வயப்படுகிறாள். நிகழ்காலங்களில் அவனை நிதானிக்க வைக்கிறாள்.
மெக்ஸிக்கோ படித்து முடிக்கும் வரைக்கும் சுவாரசியம் குறையாத, ஆழ்மனதின் உணர்வுகளை தெளிவாக விபரித்திருக்கும் ஒரு பயணக்கதை. பயணங்களை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும், புதிய மனிதர்களை சந்திப்பதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் சிறந்த விருந்து.கிட்டத்தட்ட சுவாரசியம் குறையாமல் மெக்ஸிகோவின் அதிசயங்களை படித்தாயிற்று ஒருமுறை பயணப்பட்டு போனால் போதுமானது. ஏற்கனவே போனவர்கள் இந்த மெக்ஸிகோவினை படித்த பின் போகும் பயணம் வேறுபட்டதாயிருக்கும். யார் கண்டார் ஒரு அம்பராவையோ, ஒரு கிறுக்கு வாசகனையோ சந்திக்க நேரும். ஒரு நாவல் இத்தனை சிறிய மாற்றத்தையேனும் நிகழ்த்தாதிருப்பதில் நியாயமில்லை தானே
அம்பாரோ வுக்கும் அவள் காதலனுக்கும் அவனுக்குள்ளிருக்கும் அந்தக்குழந்தைக்கும் ஆயிரம் முத்தங்கள்.
..............

(Oct 15, 2020)

நன்றி: நிரோஜினி

மெக்ஸிக்கோ - கே.நல்லதம்பி

Monday, October 12, 2020

 “மெக்ஸிக்கோ” – இளங்கோ. சமீபத்தில் வெளியான இவரது நாவல். இவர் இலங்கைத் தமிழர். புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். புதிய சூழ்நிலைக்குத் தங்களை நிலை நிறுத்திக்கொண்டு அடையாளப்படுத்திக்கொள்வது புலம்பெயர்ந்தவர்களின் இயல்பான தவிப்பு. அந்தத் தவிப்பின் பல அனுபவங்கள் இவர் கதைகளில் தெரிகிறது. ஒரு இளைஞன் தனது பயணங்களின் தேடலைச் சொல்லும் கதை.

இளைஞர்களைக் கவரும் கதை. “எதையோ மறக்கவோ அல்லது எதையோ புதிதாய் கண்டடையவோதான் பயணங்கள்” “எவ்வளவு காயங்கள் வாழ்வில் வந்தாலும், பெண்களில்லாத வாழ்வு சாத்தியப்படாது”. “காதல் அதிக வேலையில் துயரத்தைத்தான் தருகிறது என அறிந்தும் ஏன் அதைத் தேடித்தேடி அலைந்திருக்கிறேன்”. இதுபோல அங்கங்கே தெறிக்கும் வரிகள் படிப்பவர்களைக் கவருவதில் சந்தேகமில்லை.

இவருடைய “கள்ளி” என்ற சிறுகதையை 4 ஆண்டுகளுக்கு முன் கன்னடத்தில் “கந்த காமினி” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து “சகி” என்ற கன்னட இதழில் பிரசுரமாகி இருக்கிறது.

படியுங்கள் பிடிக்கும்.

டிஸ்கவரி புக் பேலஸ் - சென்னை ரூ. 200/-

(நன்றி: https://www.facebook.com/elanko.dse/posts/10158196956258186)

மெக்ஸிக்கோ - செல்வரஞ்சினி

Thursday, September 03, 2020

வாழ்வியலின் எண்ணற்ற பிரச்சனைகளில் மனம் ஆழ்ந்து அமிழும் போதெல்லாம் காதலின் மெல்லுணர்வுகள் மட்டுமே கைதூக்கி கரைசேர்த்து விடுகின்றன. அல்லாடும் மனதை ஹீலியம் நிரப்பிய பலூனாக காற்று வெளியிடை அழைத்துச் செல்கின்றன.அப்படி ஒரு எண்ணப் பயணத்தை எனக்குள் விதைத்தவள் மெக்ஸிகோவின் அவள். படர்க்கையில் விளிக்கப் பட்டாலும் கூட படைப்பின் முன்னிலையில் விஸ்வரூபம் எடுப்பவள் அவள்தான்.


உலகில் ரசிப்புக்கு உரிய எதனையும் அதன் சோகத்தின் பக்கங்களோடும், எதிர்மறை எண்ணங்களோடும் எதிர்கொள்ளும் கதைசொல்லியான அவன் வளர்புப்பிராணிபோல வெறுமை ஒன்றையே கூட வைத்திருந்தாலும் கூட , பயணங்களிலும் வாசிப்பிலும் தன்னை மறந்தும் மறவாமலும் தேடலை விரும்புகின்றவன். அவனால் அதிகம் நேசிக்கப்பட்டவர்கள் ஆளுமையின் வசீகரமும், இயல்பாகவே மனஉறுதியும் கொண்ட இரு பெண்கள். இவர்களே தமது உரையாடல்களின் மூலம் வாசகருடன் நெருக்கமாகும் கதைமாந்தர்.


பெண்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல, சந்தர்ப்பங்களைப் பொறுத்து எதிர்நிற்பவரை வீழ்த்தும் சாகசமும் வல்லமையும் படைத்தவர்கள் என்கிறார் இளங்கோ.உண்மைதான். இயற்கையையும், வாழ்க்கையையும் புரிந்து கொள்ளும் விதமும் , "இந்தக்_கணத்து_வாழ்வு_அழகானது" எனவே நிகழ்காலத்தில் வாழ்ந்து மகிழ் கொள்ளுங்கள் என்கிற அவர்களது அற்புதமான வெளிப்பாடும் ஒரு பெண்ணாக எனக்கும் பெருமிதத்தினை அளிக்கின்றன. அதே சமயம் இனிதான வாழ்வியல் இன்பங்களை எல்லாம் எமது ஆக்கிரமிப்பு எண்ணங்களாலும், உணர்வுகளினாலுமே சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்ற பேருண்மையானது வாசகருக்கு மனத்தெளிவினையும் தந்து நிற்பது சிறப்பானது.


பதினாறாவது பக்கத்தில் கடலில் அவளால் வீசப்பட்ட வலையில் மீனாகப் போனதென்னவோ கதைசொல்லியான ஆண்மகன்தான்.ஆனால் கதையில் ஆசிரியரது எழுத்து வன்மையெனும் மாயவலையில் சிக்கியது வாசகராக நானும்தான்.ஒரு ஆணால் எழுதப்பட்ட இந்த படைப்பு ஆணின் தன்முனைப்பையும், ஆதிக்கத்தையும் முன்னிறுத்துவதை விட பெண்மையின் கம்பீரத்தையும், கருணையையும் வெளிக்காட்டும் ஒன்றாக இருப்பது மனதுக்கு இதமானது. 


மெக்ஸிக்கோவின் இயற்கை வனப்பும், றொறண்டோ பனியின் கனதியும், தாயகத்தின் கடந்தகால கசப்பான நினைவுகளும், புத்தர்பெருமானின் தத்துவ முத்துக்களும், மாயன்களின் வாழ்க்கை வனப்பும் கதையின் பாதை எங்கும் ஆங்காங்கே சிதறிச் சிரித்துக் கொண்டிருக்கிறன. இது போதாதென்று புன்னகை தரும் இளங்கோவின் இதமான நகைச்சுவை மலர்களும், வரையறை தாண்டாத எழுத்தில் காதலின் காமரசங்களும் ஆங்காங்கே சிலிர்க்க வைக்கின்றன.காதல் என்பதே வாழ்வாக வேண்டுமா அன்றி வாழ்வின் பகுதியாக வேண்டுமா என்ற கேள்வி கதையின் இறுதியில் எழுவது தவிர்க்க முடியாதது.


கதையை வாசிக்கும் போது மனதைக் கவர்ந்த பல வரிகளுக்கு பென்சிலால் மெலிதாக அடிக்கோடு இட்டுக் கொண்டே வந்தேன். பக்கங்கள் செல்லச்செல்ல கோடுகளும் கூடிக்கொண்டே சென்றன. இறுதி அத்தியாயங்களை நெருங்கிய போது வலிதான எண்ணங்கள் தந்த திக்பிரமையுடன் இயல்பாகவே கோடிடுவதைக் கைகள் நிறுத்திக் கொண்டன. 


நிஜம் எது நிழல் எது என்ற மயக்கத்தில் மனது மரத்துப் போன அந்தக் கணங்களில். "நெஞ்சுக்குள்_பெய்திடும்_மாமழை..." என்ற பாடல் வரிகள் அலைகளாய் மனதில் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. இதன் அர்த்தம் என்னவென்று கதையை முதலில் இருந்து இறுதிவரை அர்ப்பணிப்போடும், உள்ளார்ந்த அன்பின் வழிநின்றும் வாசித்தவர்களுக்குப் புரியும். வாழ்த்துக்கள் இளங்கோ. அருமை.


அடிக்கோடிட்ட_அழகிய_வரிகளில்_மிகச்சில


தற்செயல்களின் அழகியல் தருணங்கள்......


காதல் ஒரு சாம்பல் பறவை........


இலையுதிர் காலமென்பது இலைகள் மலர்களாகும் இன்னொரு வசந்த காலம்.........


பனியில் உறைந்த நதி ஒன்று உறைநிலை விலத்தி வசந்தத்தில் பாயத் தொடங்குவது போல......


விழுவதும் எழுவதும் வாழ்க்கையில் இயல்பு.ஆனால் நான் ஒரே இடத்தில் விழுந்து விழுந்து கொண்டிருக்கிறேன்.......


ஒருகாதல் எப்படி முகிழ்கிறதோ அது போலவே எந்தப்புள்ளியில் அது முற்றுப் பெறுகிறது என்பதை எளிதாக அறிய முடியுமா........?


பிரியும் நாளோடு பிரிதல் நிகழ்ந்து முடிந்து விடுவதில்லை......


இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் நிற்கும் ஒருவருக்கு ஒரேயொரு அணைப்பு போதும்.அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்........


எவ்வளவு காயங்கள் வாழ்வில் வந்தாலும் பெண்கள் இல்லாத வாழ்வு சாத்தியப்படாதென ஆசீர்வாதிக்கப் பட்டிருக்கிறேன்.........


எத்தனையோ மழைத்துளிகளுக்கிடையிலும் அவள் கூந்தலில் இருந்து இறங்கி என் நெஞ்சு நனைத்த துளியை எனக்குரிய துளியெனப் பத்திரப் படுத்திக் கொண்டேன்


மனம் நெய்யப் போகும் எல்லாப் புதிர்களில் இருந்தும் என்னைக் காப்பாற்றுபவளாக அவள் இருப்பாள்.....

........................................