மாய யதார்த்த/ஃபாண்டஸி திரைப்படங்கள் எத்தனையோ இருந்தாலும் அகிரா குரோசாவின் 'கனவுகள்', வூடி அலனின் 'பாரிஸில் நள்ளிரவு', கு(யி)லரமோ டெல் டோராவின் 'பானினுடைய பதிர்வட்டம்' போன்றவற்றை வெவ்வேறு பின்னணிக்காக உதாரணங்களாக எடுத்துக் கொள்வேன். அப்படி மாய யதார்த்தப் பாணியில் அமைந்த சல்மான் ருஷ்டியின் 'நள்ளிரவின் குழந்தைகள்' நாவலை, திரையில் அதே வனப்புடன் வரையப்படவில்லை. இத்தனைக்கும் இதன் நெறியாளர் தீபா மேத்தாவுடன், ருஷ்டி திரைக்கதையில் இணைந்து பணியாற்றியுமிருந்தார். இவ்வாறு தனது நாவலுக்கு நிகழும் என்று கணித்தபடியால்தான், மார்க்குவெஸ் அவரின் 'தனிமையின் நூறு ஆண்டுகளை'த் திரைப்படமாக்க கேட்டபோதும் 'முடியாது' என்று உறுதியாக மறுத்திருக்கின்றார். அவரின் 'காலராக் காலத்தில் காதல்' கற்பனை வளத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும், நாவலின் உள்ளடுக்குகளை அது தவறவிட்டதாக ஓர் எண்ணம் எனக்கிருக்கிறது.
ஆனால் தமிழிலோ புதிய சூழலுக்கு/புதிய கதைக்களன்களுக்கு பார்வையாளர்களைத் தயார்ப்படுத்தல்களே இல்லை. ஒரு திரைப்படம் தற்செயலாக வெற்றி பெற்றுவிட்டால், ஒரு பத்து படமாவது அதேபோல எடுத்து முதலில் வந்த நல்ல திரைப்படத்தின் அருமையே இல்லாமற் செய்துவிடுவார்கள். தொடர்ச்சியாக காதல் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த செல்வராகவன் சடுதியாக 'ஆயிரத்தில் ஒருவனின்' திகைக்க வைத்தார். அன்றைய செல்வராகவனின் படங்கள் மீது விருப்பு வைத்திருந்த நான் 'ஆயிரத்தில் ஒருவனை' முதற்காட்சியாகப் பார்த்தபோது அது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது. அப்போது இத்திரைப்படம் குறித்து எதிர்மறையாக வைக்கப்பட்ட விமர்சனங்களை மறுத்து சிறு சிறு குறிப்புக்களாக நான் எழுதியதும் நினைவிலுண்டு. ஆயிரத்தில் ஒருவனின் பிற்பாதி விளங்கவில்லை/சும்மா பாவனை செய்கின்றது என்றபோது அப்படியல்ல என்று விவாதித்திருக்கின்றேன். மேலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து ஒரு பெரும் வெறுமை சூழ்ந்திருந்தபோது, 2010 இல் வெளிவந்த அத்திரைப்படம் பலருக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சத்தையும் தந்திருந்தது. இப்போது கிட்டத்தட்ட 14 வருடங்கள் கடந்தபின், செல்வராகவனின் மற்றப் படங்களை விட, 'ஆயிரத்தில் ஒருவனே' அதிகம் சிலாகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு முரண்நகை..
நேற்று தங்கலானைப் பார்த்தபோதும் ஆயிரத்தில் ஒருவனைப் போல அது வெளிவந்த காலத்தில் தவறவிடப்பட்டு பின்னரான காலத்தில் அதிகம் உரையாடப்படுமென நினைத்துக் கொண்டேன். ஏனெனில் தங்கலானின் கதைசொல்லல் பாணிக்கு இன்னும் பார்வையாளர்கள் தயார்ப்படுத்தவில்லை என்றே நினைக்கின்றேன். ஏன் பா.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' போன்ற திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டாடிய இரசிகர்கள் கூட, ரஞ்சித் முற்றிலும் 360 கோணத்தில் திரைக்கதையை மாற்றியமைத்த தங்கலானை அந்தளவுக்கு வரவேற்பார்களா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.
'தங்கலான்' அதற்குரிய கதைசொல்லல் பலவீனங்களை, தொன்மங்களை எப்படி யதார்த்தத்தோடு இணைப்பதென்ற சிக்கல்களை/ காட்சிப்படுத்தல்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்பதை மறுக்கத் தேவையில்லை. அது ஒரு நெறியாளர், அதுவரையில்லாத புதுப்பாணியில் சொல்லவரும்போது வருகின்ற குழப்பங்கள் என எடுத்துக் கொள்ளலாம்.
நான் அத்திரைப்படத்தில் உள்நுழைந்தவனாக இருந்தேன். கோலார் தங்க வயலுக்குள் அழைத்துச் சென்றவர்களினூடாக தமிழகத்தில் இருந்து கூலித்தொழிலாளர்களாக/கொத்தடிமைகளாக எங்கோ தொலைவில் இருந்த ஜமேய்க்காவுக்கும், பிஜித்தீவுகளுக்கும், மொரிஸியஸிற்கும் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் துயரத்தை மட்டுமில்லை, காப்பிக்கும்/தேயிலைக்கும் ஆசைகாட்டி இலங்கைக்கும்/மலேசியாவுக்கும் அழைத்துச் சென்ற விளிம்புநிலைமனிதர்களின் வாழ்வியலைக் கண்டேன். ஏன் என்னைப் போன்றவர்களின் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வின் தெறிப்பைக் கூட இதில் கண்டு சற்றுக் கலங்கியிருக்கின்றேன்.
அவர்களுக்கு வறுமையும், சாதி ஒடுக்குமுறையும் இவ்வாறான இடம்பெயர்தலுக்குக் காரணமெனில் நமக்கு போர் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் எல்லாப் புலம்பெயர்வுகளுகு அப்பால் அது எத்தகைய வாழ்வாக இருந்தாலும், சொந்த மண்ணை விட்டு வலுக்கட்டாயமாகப் பிரிவதென்பதுதான் எத்தகை துயரமானது.
அதனால்தான் தங்கலான் 'எனது மண் எமது உரிமை' என்று கடைசிவரை போராடுகின்றான். அதன்மூலமே தனது ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபடமுடியும் என்று உறுதியாக நம்பி, அதை மறுக்கும் எவராயினும் அவர்கள் நல்லவர்களாகஇருந்தாலும்- அவர்களுக்கு எதிராகப் போராடுவதில் தங்கலான் பின்னிற்பதில்லை. இறுதியில் அவன் அடைகின்ற புரிந்துணர்வும்/இலக்கும் தற்காலிகமாக இருந்தாலும், அதுவும் முக்கியமானதே.
இவ்வாறு பலரின் இடைவிடாத போராட்டங்களின் மூலந்தான் இன்று இந்த நிலைக்கு வந்து நாம் வாழ/சிந்திக்க முடிகின்றது. அத்துடன் எவ்வகையான ஒடுக்குமுறை என்றாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க மட்டுமின்றி, நாம் ஒடுக்குமுறையாளராக மாறக்கூடிய ஒவ்வொரு தருணங்களிலும் நம்மை கவனமாக அவதானிக்கவும் இவ்வாறான படைப்புக்களே நம்மை உந்தித்தள்ளுகின்றன.
**************
(நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி)