கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஜெயமோகனின் 'வெண்கடல்'

Sunday, June 24, 2018

வெண்கடலில் இருக்கும் கதைகளை ஏற்கனவே ஜெயமோகனின் தளத்தில் வாசித்தவையென்றாலும், நூல் வடிவில் இன்னொருமுறை பொறுமையாக கடந்த சில நாட்களாய் வாசித்துக்கொண்டிருந்தேன். பலருக்குப் பிடித்த 'அறம்' கதைகளின் தொடர்ச்சியில் எழுதப்பட்ட கதைகள் என்பதால் இவையும்  'உணர்ச்சி' பொங்க எழுதப்பட்டிருக்கின்றன.  ஜெயமோகனின் கதைகளைத் தொடர்ந்து வாசிக்கும் ஒருவர்க்கு இதில் ஜெயமோகன் பாவித்த எழுத்து நடையை எளிதாக வித்தியாசம் கண்டுகொள்ளமுடியும். தற்கால சிறுகதைக்கான வழியை விட்டு பின்நகர்ந்து, இதிலுள்ள அநேக கதைகள் உரையாடல்களால் மட்டும் நகர்த்திச் செல்லப்படுகின்றது. எனவே எளிமையும், பாத்திரங்களிடையிலான மெல்லிய முரண்களும் எந்த வாசகரையும் எளிதில் உள்ளிழுத்துக்கொள்ளும்.

தமிழர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.  காட்டும் அன்பில் மட்டுமல்ல, நடைமுறை அரசியலிலும் கூட அப்படி அந்த 'உணர்ச்சிவசப்படல்களை' எங்கும் எளிதாகக் காணமுடியும். அந்த நூலிழையைப் பின்பற்றி ஜெயமோகன் அறத்திலும், வெண்கடலிலும் கதைகளை இழைத்தபடி போகின்றார்.
நடைமுறையில் எப்படி பெரும் உணர்ச்சிவசப்படல்களின் பின் நமது அறிவு சற்று வேலை செய்யத்தொடங்குமோ, அப்படித்தான் ஜெயமோகனின் இந்தக் கதைவரிசைகளைத் தாண்டிவரும்போது இவ்வளவு உணர்ச்சிக்கலவை சற்று அதிகமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. உரையாடல்களின் மூலம் கதை நகர்த்துவது ஒருகட்டத்திற்குப் பிறகு ஆபத்தாகிப்போய், அலுப்படையச் செய்துவிடுகிறன.

மேலும் எல்லாவற்றையும் உரையாடல்களினால் சொல்லிவிட்டால் வாசிப்பவர்க்கான வெளி என்னவாக இருக்கப்போகின்றது. ஒருவகையில் ஜெயமோகன் திரைப்படங்களில் எழுதப்போனபின் வந்த மாற்றமோ இது எனவும் எண்ணத்தோன்றுகின்றது. நமது பெரும்பாலான திரைப்படங்களில் இரசிகர்களுக்கு ஒன்றும் விளங்காதமாதிரி எல்லாவற்றையும் வெளிப்படையாகக் காட்டுவார்கள். ஜெயமோகனுக்கும் அந்தப் பாதிப்பு வந்திருக்ககூடுமோ என யோசிக்கத்தோன்றுகின்றது. இதை 'இரவு', 'உலோகம்' போன்ற நாவல்களிலும் அடையாளங்காணமுடியும்.

இந்த இடத்தில்தான் அசோகமித்திரன் நினைவிற்கு வருகின்றார். அவர் எந்தளவிற்குக் கச்சிதமாய் உரையாடல்களைப் பாவிக்கின்றார் என்பதை அவரின் கதைகளை வாசிக்கும் நாம் அறிந்துகொள்ளலாம். இன்னும் நிறைய உரையாடப்போகின்றாரோ என நினைக்குமிடத்தில் (சிலவேளைகளில் அதற்குமுன்னரே) நிறுத்திவிட்டு வாசிக்கும் நம்மை மேலும் கதையை வளர்த்துவிடும் சுதந்திரத்தைத் தந்துவிடுகின்றார். மேலும் எத்தகைய உணர்ச்சிமயமான கதையாக இருந்தபோதும் அசோகமித்திரன் திளைக்க திளைக்க உணர்ச்சிகளில் எம்மை அமிழ்த்துவதும் இல்லை. உதாரணத்திற்கு 'அம்மாவுக்கு ஒரு நாள்' என்பதை மிகுந்த உணர்ச்சிமிகுந்த கதையாக அ.மி எழுதியிருக்கலாம்.


தை, அம்மா ஒருநாள் மாலை படம் பார்க்கப் போக விரும்புவதாக வேலைக்குப் போகும் மகனிற்குச் சொல்கிறார். மகன் சும்மா வீட்டில் கிடவுங்கள் எனச் சொல்லிவிட்டு வெளியில் செல்கின்றான். எனினும் வேலையில் இருக்கும்போது, எங்களுக்கு எல்லாவற்றையும் செய்யும் அம்மா, வேறு எதை விரும்பிக் கேட்டார், இதையாவது அவருக்குச் செய்வோம் என நினைத்து வேலைமுடிந்து  வீட்டிற்குத் திரும்ப முனைகிறார். ஆனால் சந்தர்ப்பவசத்தால் அவரால் நேரத்திற்கு வீட்டிற்குத் திரும்பமுடியவில்லை. இறுதியில்  வீடு செல்லும்போது மிகுந்த குற்றவுணர்வுடன் திரும்புகிறார். அப்போதுகூட அம்மா அதைப்பற்றிய எந்தக்குற்றச்சாட்டுமில்லாது, அவருக்குத் தேநீர் தயாரித்துத் தரவா என்று கேட்கிறார். அந்தளவுதான். ஆனால் கதையை வாசித்து முடிந்தவுடன் நம் எல்லோரையும் நமது அம்மாக்களைப் பற்றி யோசிக்க வைத்துவிடுகின்றார். நாம் நம் அம்மாக்களுக்கு விரும்பியதை எப்போதெனினும் செய்திருக்கின்றோமா என இப்போதும் அந்தக்கதையை நினைக்கும்போது அசோகமித்திரன் நினைக்க வைக்கின்றார்.

இங்கே எந்த உணர்ச்சிகளோ, உசுப்பேத்தல்களோ இல்லை. ஆனால் மனதைவிட்டுக் கதை அவ்வளவு எளிதில் அகலவில்லை..
வெண்கடலில் முதலிலிருக்கும் கதையான 'பிழை'யில், காசியில் அலைந்துகொண்டிருப்பவனுக்கும் ஒருசாமியாருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் என்றாலும் அவனின் ஊடாக காந்தி கொண்டுவரப்படுகின்றார். காந்தி கொண்டுவரப்படுவதில் சிக்கலில்லை. ஆனால் காந்தியினூடாக ராமன் glorify செய்யப்படும்போதுதான் நமக்குப் பிரச்சினை தொடங்குகின்றது. அவரவர் தங்களுக்குப் பிடித்த கடவுளர்களோடு இருக்கலாம்.

'பிழை' கதையில் ராமன் திரைப்படத்தைக் காந்தி பார்க்கின்றார். திரையில் படத்தை ஆரம்பிக்கும்போது ராம் ராம் என்று கண்ணீர் மல்குவதோடு அல்லாது, இருகரம் கூப்பி தொழுதபடி இருக்கின்றார். உண்மையை எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் காந்தியிற்கு ராமன் பிடித்தவராய் இருந்தபோதும் அவர் தனது 'உண்மை' திரையிற்குள்ளால்தான் வருமென்று நம்பும்போது ராமபக்தர்களுக்கு மெய்கூச்செறியக்கூடும். ஆனால் காந்தியை அவரது பலவீனங்களினூடாகவும் நேசிக்க விரும்பும் ஒருவருக்கு, அய்யா ஜெயமோகன் போதுமய்யா உமது திருவிளையாடல், காந்தியைக் காந்தியாக விடுமென அவரைப் பார்த்துச் சொல்லத்தான் தோன்றும்.

காந்தியைத்தான் ஜெயமோகன் தனக்குரிய காந்தியாக வனைய விரும்புகின்றார் எனில், 'குருதி' மற்றும் 'நிலம்' கதைகளில் மண்தான் உயிரைவிடப் பெரிசு என்று சேத்துக்காட்டாரைக் கொண்டு உசுப்பிவிடும்போது நமக்கு வியப்பேற்படுகிறது. நம் சொந்தமண்ணை எந்தப் பொழுதிலும் கைவிடக்கூடாது என்று நிகழ்ந்த ஈழப்போராட்டம் குறித்த ஜெயின் 'கோணல்' பார்வை என்னவென்பதை நாமனைவரும் அறிவோம். அப்படியான கருத்துள்ள ஒருவர், 'மண்தான் நமது மானம், அதைச் சொந்தம் கொண்டாடுகின்ற அந்நியரைக் கூறுபோடு' என மோகினியாட்டம் வார்த்தைகளில் ஜெ ஆடும்போது எனக்கென்னவோ அவருக்குள் சோட்டாக்கரை பகவதியம்மன் தான் உள்நுழைந்து ஆடுகின்றாரோ என்ற அய்யம் வந்தது.

'இந்த மண் எங்களின் சொந்தமண்' போன்ற பாடல்களை என 6-7 வயதுகளில் கேட்டு வளர்ந்த, 'சிங்களவனிற்கு யாழ்ப்பாண கறுத்தக்கொழும்பான் மாங்காய்தான் பிடிக்கும், உள்ளே வரவிடப்போகின்றீர்களா(அதற்கு வேறொரு அர்த்தம் இருந்தது என்பதை பிறகு வளர்ந்தபோது அறிந்தபோதும்) என பத்து வயதுகளில் புலிகளின் வாஞ்சியர் வந்து பள்ளிக்கூடத்தில் உணர்ச்சிபொங்கப் பேசியதைக் கேட்ட எனக்கு, மண்ணா மசிரு, உசிருதான் எல்லாவற்றிற்கும் முக்கியமென  என்றோ விளங்கியபோது, ஜெ -அதுவும் தாழ்த்தப்பட்ட (?) சாதியொன்றிற்குள் வைத்து- இந்தக் கதையைச் சொல்லும்போது, இப்போதுதான் அவர்களே கொஞ்சமேனும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளார்கள், அவர்களாக எது வேண்டுமென அவர்கள் அறிந்து வரட்டுமென (நமது ஆயுதம் எதுவென எதிரியே தீர்மானிக்கின்றான் என மாவோ சொன்னது உதாரணம் சொல்வது ஜெயிற்குப் பிடிக்காவிட்டாலும்) நாம் சொல்லிவைப்போம்.

வெண்கடலிற்குள் பிடித்த கதைகள்  சில இருக்கின்றன. 'அம்மையப்பம்' , 'கிடா' மற்றும் மிக எளிமையாகத் தெரிந்தாலும் நம்மைக் கிராமத்திற்குள் நனையவைக்கும் 'தீபம்'  போன்றவை குறிப்பிடத்தக்க கதைகள்.

கதைகளில் குடிப்பவர்களாகவும் கஞ்சா புகைப்பவர்களாகவும், புகை பிடிப்பதிலும் பிரியமுடைய மனிதர்களாகவும் பாத்திரங்களை வார்க்க முடிகின்ற ஜெயமோகனால் ஏன் அதற்கு வெளியே குடிப்பவர்களையோ, புகைபிடிப்பவர்களையோ கூட்டங்களில் வர அனுமதிக்காதவராகவும், எவர் இறந்தாலும் இந்த விடயங்களைப் பெரும் விடயமாகச் சுட்டிகாட்டி உலகில் பெரும்பாவத்தைச் செய்தவர்களாகவும் எழுதுகின்றார் என்று யோசித்துப் பார்ப்பதும் சுவாரசியமாக இருக்கிறது. மேலும் நீலிகளையும், கொற்றவைகளையும் வியந்து எழுதித் தீர்க்கின்ற அவரால், ஏன் நிகழில் பெண்களுக்கான இடத்தைக் கொடுக்க மனம் முடிவதில்லை என்ற திசையிலும் சென்று சிந்திக்கலாம்.

பதின்மங்களில் பாலகுமாரனைப் போன்று பாதித்தவர் வேறு எவருமில்லை. என்னை வழிகாட்ட வந்த குருபோல நினைத்துக்கொள்ளுமளவிற்கு அவர் மீது 'பக்தி' வைத்திருந்தவன் நான். பின்னாட்களில் அவரது எழுத்துக்களை வாசிக்கப்போனபோது என்னால் முழுதாக வாசிக்க முடியாமைக்குப் போனதற்கு அவருடைய நாவல்கள் அநேகம் உரையாடல்களாலே வளர்க்கப்பட்டமை ஒரு முக்கிய காரணமாகக் கண்டுகொண்டேன். ஆனால் அசோகமித்திரனின்  'இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ளவேண்டுமோ அல்லது 'அம்மாவுக்கு ஒருநாளோ' 1950களில் எழுதியிருந்தாலும், இப்போது  அரை நூற்றாண்டுக்குப் பிறகு வாசித்தாலும் அலுக்கவேயில்லை.

இதை உரையாடல்களாலும், உணர்ச்சிக்குளத்திற்குள்ளும் அமிழ்த்தி அறமும் வெண்கடலும் எழுதிய ஜெயமோகனுக்கு சொல்ல வேண்டுமென்றில்லை. எல்லாம் அறிந்த எனக்கா அறிவுரை என்பார் அவர். அதுபோலவே முரண்பாடுகளுக்கு அப்பாலும்  அவர்மீது நமக்குள் மிதந்துகொண்டிருப்பதும் அக்கறை அல்லவா?

(Jun, 2016)

வாரணாசி மற்றும் சகோதரிகள் கதைகள் பற்றி..

Saturday, June 23, 2018

விகடனில் வந்த நரனின் 'வாரணாசி' கதையை வாசித்தபோது, ஏன் விகடனில் எழுதும்போது, வெளியில் நல்லா எழுதுபவர்களெல்லாம் தேய்வழக்காக அங்கே கதை எழுதுகின்றார்கள் என்று -  முன்னர் குறிப்பிட்ட சலிப்பான குரலே- எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது. நரனின் கதை பற்றி போகன் சங்கர் எழுதியதில் உடன்பாடிருந்தாலும், வேறொரு இடத்தில் இன்னொரு குழு சுரேஷ் பிரதீப், கே.என்.செந்தில் போன்றவர்கள் போகனைப்போல உரிய விமர்சனத்தை வைத்திருக்கலாமே தவிர,  இந்தளவிற்கு நரனை அவர்கள் சீண்டியிருக்கத் தேவையில்லை எனவே நினைத்தேன்.

கே.என்.செந்தில் போல காலச்சுவடு குழுவிற்குள்ளோ அல்லது சுரேஷ் பிரதீப், கார்த்திக் பாலசுப்பிரமணியம்(?) போன்று விஷ்ணுபுரக் கூட்டத்திற்குள்ளோ நின்று துதிபாடாமல் (அல்லது நமக்கு நாமே துணையென மாறி மாறி தங்களுக்குள்ளேயே எழுத்தில் கொஞ்சம் விமர்சிக்கின்றமாதிரி பாராட்டு மழை பொழியாது) நரன்  எந்தக் குழுவிற்குள்ளும் தன்னை அடையாளப்படுத்தவர் என்று அவர் மீது எனக்குத் தனிப்பட்டு ஒருவித மதிப்பிருக்கின்றது.

சரி, நரனை 'ஓட்டிய' மற்றக்குழுவிடந்தான் என்ன இருக்கின்றதென இப்போது கே.என்.செந்திலின் நெடுங்கதையான  'சகோதரிகளை' வாசித்தால், இப்படி எழுதிக்கொண்டா நரனை 'கலாய்த்தார்கள்' என வியப்புத்தான் வந்தது (கே.என்.செந்திலின் 'அரூப நெருப்பு' மற்றும் 'இரவுக்காட்சி' ஆகிய இரண்டு தொகுப்புக்களையும் ஏற்கனவே வாசித்திருக்கின்றேன்.  ஒரு சில கதைகள் நன்றாக வந்திருந்தாலும், அவை தமிழில்  அதிகம் கவனிக்கத்தக்க தொகுப்புக்களாக என் வாசிப்பில் இல்லை என்பதையும் இங்கே கூறவிழைகின்றேன்).

ந்த 'சகோதரிகள்' கதை ஒரே 'அழுவாச்சிக் காவியமாக' அல்லவா இருக்கின்றது. அதுவும் முதலிரு பகுதிகளிலும்  கதையில் வரும் எல்லாப் பாத்திரங்களையும் அறிமுகப்படுத்த, எனக்கு யார் யார், யாருக்கு யார் உறவு/தொடர்பு என்று அறியவே தலைச்சுற்றல்தான் வந்தது (நெடுங்கதைதானே எழுதுகின்றார், ரஷ்ய பேரிலக்கியம் படைக்கவில்லையே?).  சரி இடிக்கும் தலையை கதையில் வரும் கைலாசம் போலவோ அல்லது விஸ்வம் போல  'வெறியில்லாது நிதானமாய்'  வாசித்தாலும், இந்தக் கதையில் நிறைய 'அங்காடித்தெரு'வும், கொஞ்சம் 'காதலும்' கலந்தல்லவா இருக்கின்றது என்றுதான் மனதிற்குட்பட்டது. ஒரு கதை, நமக்கு கதை போலல்லாது சினிமாப்படங்களைத்தான் ஞாபகப்படுத்துகின்றதென்றால், அந்தக் கதையின் வீரியம் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

நம் சூழலில் இந்த யதார்த்தப்பாணியில் கதைகள் சொல்கிறோம் என ஏன் எங்களைத் தாங்கள் எழுதும் கதாபாத்திரங்களின் கண்ணீரை விட அதிகம் அழவைக்கின்றார்கள் என்று தெரியவில்லை. சோகத்தைப் பிழி பிழியென்று பிழிந்து நமக்குள் கொஞ்ச நஞ்சமேனும் மிச்சமிருக்கும் மனிதாபிமானத்தை மட்டுமில்லை, வாசிப்பதில் இருக்கும் ஆர்வத்தையும் வாரிச்சுருட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார்கள்.
இப்போது ரமேஷ் பிரேதனின் 'ஐந்தவித்தானை' வாசித்துக்கொண்டிருக்கின்றேன். ரமேஷ் தனிப்பட்ட வாழ்வில் படுகின்ற கஷ்டங்களை நாமறிவோம். ஆனால் அவர் கதைகளில் அதையா சொல்லிக் கொண்டிருக்கின்றார். தேவகியும் மாதவனும் சந்திக்கும்  2ம் பாகத்தை வாசித்தால் நமக்கு அந்த எழுத்தின் மீது அப்படியொரு வாஞ்சையல்லவா மேலேறித் ததும்பிக்கொண்டிருக்கும்.

இதற்குச் சமாந்திரமாக சினுவா ஆச்சுபேயின் Things Fall Apart ஐ இன்னொரு முறை வாசித்தும் கொண்டிருக்கின்றேன். அதில் முக்கியபாத்திரமான Okonkwo ஒரு கொலைக்காக தங்களின் tribeற்குத் தரப்பட்ட தானப்பட்ட ஒரு பதின்மப் பையனை, 3 ஆண்டுகள் தனது மகனைப் போல வளர்த்துவிட்டு, காலம் வந்துவிட்டதென பூசாரி சொன்னவுடன் காட்டுக்குள் கொண்டு ஊரவருடன் சேர்ந்து அந்தப் பதின்மனைக் கொல்லும்போது,  அவன் அதை நம்பமுடியாமல் 'அப்பா என்னைக் கொல்கின்றார்கள்' என அடைக்கலந்தேடி வரும்போது  Okonkwo தன் பலவீனத்தைக் காட்டக்கூடாதென்று தனது பாசம் அனைத்தையும் ஒதுக்கிவைத்து அவனுக்கு ஒரு வெட்டுப்போட்டு கொல்வாரே, அந்தக் கணத்தில் நாம் உறைந்தல்லவா போய்விடுகின்றோம். அந்தக் குற்றவுணர்வுதானே நாவல் முழுவதும் ஊடுபாவியபடி வந்தபடியே இருக்கின்றது.

சோகமான நிகழ்வு, யதார்த்தமான கதை சொல்லல் என கே.என்.செந்தில் பயன்படுத்தும் அதே பாணி நடை என்றாலும், ஏன் சினுவா ஆச்சுபே மலையொன்றில் நின்று விகசிக்கின்றார் என்று யோசிக்காதவரையில், இப்படித்தான் அழுவாச்சி காவியம்' சொல்கின்றோம் என்று வாசகருக்குள் இருக்கும் ஒரு துளி கண்ணீரையும் வற்றச்செய்யவேண்டிய அபாயம் வந்துவிடும். சரி இவ்வளவிற்குக் கூடப் போகவேண்டாம், அவரது குழுவை, அவரது பள்ளியைச் சேர்ந்த ஜே.ஜே.சிலகுறிப்புகளிலிருந்து கூட எவ்வளவையோ கற்றுக்கொள்ளலாமே.

'வாராணசி, 'இரு சகோதரிகள்' போன்றவற்றை வாசிக்கும்போது, இந்த மாத தடம், அம்ருதா, காலச்சுவடு போன்றவற்றில் வந்த ஈழ/புலம்பெயர்ந்தவர்களின் கதை எவ்வளவோ பரவாயில்லைப் போலத் தோன்றுகின்றது.

(Jun 05, 2018)

ஆனி மாத அம்ருதா, காலச்சுவடு, தடத்தில் வந்த மூன்று சிறுகதைகள் குறித்து

Thursday, June 21, 2018

டத்தில் வந்திருக்கும் யதார்த்தனின் 'வாப்பான்ர கொக்கான் கல்லுகள்' ஒரு முஸ்லிம் பெண்ணின் குரலில் கதையைச் சொல்கின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற ஒரு பெண், அவளின் வாப்பா/அவள் சந்திக்கும் கிளியண்ணன் போன்றோரின் மீதான நேசமும், பிறகெப்படி அவரது வாழ்வு மூடப்பட்டுக்கொண்டு போகின்றது என்பதையும், இறுதியில் ஒரு சிறுநம்பிக்கையை கொக்கான் கல்லின் மூலம் இன்னொரு தமிழ்ப் பெண்ணுக்கு விதைக்கின்றார் என்பதையும் - ஒரு எளிய சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். எங்களுக்கு அடுத்த தலைமுறையில் பரவலான வாசிப்பும், எழுதுதலில் மொழி வசமாகியவர்களும் என நான் நினைக்கின்றவர்களில் அனோஜனும், யதார்த்தனும் முக்கியமானவர்கள் என்று அவர்களின் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புக்களை முன்வைத்துச் சொல்வேன்.

'மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்' என்ற தொகுப்பில் அருமையான சில கதைகளை எழுதிய யதார்த்தனின் இந்தக் கதை சாதாரணமானது என்பேன். இந்தக் கதையில் அலுப்பேயில்லாது வாசிக்கும் மொழி வாய்த்தாலும், அவர் தேர்ந்தெடுத்த கதை சொல்லல் முறை
வியாக்கியானத்திற்குட்பட்டது. பின் நவீனத்துவத்தில் நிறையப் பேசப்பட்டுவிட்ட சிக்கலையே இங்கேயே குறிப்பிடவேண்டும்.

அதாவது நீங்களில்லாத மற்றதை உங்களின் குரலில் எடுத்துப் பேசுவதில் நிறைய அவதானமாக இருக்கவேண்டும். இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் ஒரு கதைசொல்லி தானில்லாது, தான் அடையாளப்படுத்த முடியாத ஒரு விடயத்தை வெளியில் இருந்து சொல்வதே நியாயமாகும். இங்கே ஒரு முஸ்லிம் பெண்ணின் குரலில் கதை சொல்கின்றேன் என்று உம்மா, வாப்பா என்று பாத்திரங்களுக்குப் 'பெயரிட்டவுடன்' அது முஸ்லிம் பெண்ணின் கதையாகிவிடும் என்று வாசகரை நம்பச் செய்யமுடியாது. மேலும், உதாரணத்திற்கு இந்தக்கதையில் முஸ்லிம் பெண்ணின் குரலில் அக்கா, தங்கை என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றது. இப்படியெல்லாம் அவர்கள் நம்மைப்போலப் பாவிப்பதில்லை.

இன்னுஞ்சொல்லவேண்டுமென்றால் அக்கா, அண்ணா போன்றவற்றுக்குக்கூட வெவ்வேறு பிரதேசங்களுக்கு என் குறைந்த அறிதலில் வெவ்வேறு பெயரிடுதல்கள் இருக்கின்றன (நானா, காக்கா). அதேபோல் இந்தக் கதையில் வரும் உரையாடல் ஒரு அசல் தமிழர் கதைப்பது போலிருக்கின்றதே தவிர, ஒரு முஸ்லிமின் பேச்சு வழக்கைத் துழாவிப்பார்த்தபோதும் கிடைக்கவில்லை. இதே சிக்கலை நான் யதார்த்தனின் தொகுப்பிலும் கண்டிருக்கின்றேன். அங்கே பெண்ணின் குரலில் சொல்லப்பட்ட கதைகளில் கூட ஆண்களின் குரல்களே ஒலிக்கின்ற ஆபத்து இருக்கின்றது. ஆக இப்படி நாம் பிறரை claim செய்யாமல் இயன்றளவு நமக்குரிய அசல் குரலில் இருந்து அவர்களின் கதைகளைக் கூறுவதே அவர்களுக்கு மட்டுமல்ல, எழுதும் கதைகளுக்கும் செய்யும் நியாயமாக இருக்கும். இந்த விடயத்தை யதார்த்தன் இனிவரும் காலங்களில் கவனங்கொள்ளவேண்டும்.


காலச்சுவடில் வந்த ஜே.கே.யின் 'சமாதானத்தின் கதை'யைப் போல நம் சூழலில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. சமாதானம் என்ற பெயர் வந்ததைப் பூடகமாய்ச் சொல்வதற்கே அவர் நிறையப் பகுதிகளை இங்கே செலவழித்திருக்கின்றார். இப்படிப் பட்டப்பெயர்களைப் பூடகமாகப் பலர், தமது கதைகளில் சிறப்பாக எழுதியிருக்கின்றனர். அண்மையில் வாசித்ததில் உடனே நினைவுக்கு வருவது யதார்த்தனின் கதையான 'இலங்கைப்பூச்சி'.

மேலும் 'சமாதானதின் கதை' ஏற்கனவே சொல்லப்பட்டக் கதை என்றாலும் அதிலிருந்து வெளிவந்து வாசகரை வசீகரிக்கக்கூடிய எந்தத் தெறிப்பும் இதில் இல்லை என்பதுதான் பலவீனம். ஜே.கே.யின் அபுனைவுகளில் எனக்கு இருக்கும் ஈர்ப்பைப்போல, அவரது புனைவுகளில் வாசித்தளவில் பெரிதும் இருந்ததில்லை.

அவர் கொஞ்சம் செவிமடுக்கக்கூடியவர் என்றால், அவர் ஒன்று ஜனரஞ்சகமான எழுத்துக்கு (அதில் எந்தத் தவறுமில்லை) முற்றாக நகரவேண்டும் இல்லாவிட்டால் அதன் எதிர்ப்புறத்துக்கு நகரவேண்டும். இரண்டுக்கும் இடையில் அல்லாடும் நிலைமையே அவரது கதைகளில் பொதுவாகக் கண்டுகொண்டிருக்கின்றேன். அது சிக்கலானது. ஒன்றின் கரையின் நின்றுகொண்டு விருப்பமெனில் இன்னொரு கரைக்கு நகரலாம். இல்லை எனக்கு இரண்டு பக்கமும் வேண்டுமென்றால் நாணயம் போல கதைகளில் ஒரு முழுமை ஒருபோதும் வந்துவிடாது என ஒரு வாசகராக அவருக்குச் சொல்லவிரும்புகின்றேன்.


வாசித்த நம்மவர் இருவரின் கதைகளைத்தான் அதிகம் சிலாகித்துச் சொல்லமுடியவில்லை என்றால், அம்ருதாவில் வந்த ருவண் எம். ஜயதுங்கவின் 'வாக்குமூலம்' கதை என்னளவில் முக்கியமானதாக இருந்தது. தமிழில் எம்.ரிஷான் ஷெரிப் அழகாக மொழிபெயர்த்திருக்கின்றார் (வகுப்புவாதம் என்று சில இடங்களில் வருகின்றது அதை வர்க்கமாகவோ அல்லது வர்க்கப்புரட்சியாகவோ தமிழாக்கியிருக்கலாம். இடதுசாரிகள் வகுப்புவாதம் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என்று சொல்வதில்லை). மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்குச் செல்லும் ஒருவரின் 'வாக்குமூலமே' இந்தக்கதை.

பல்கலைக்கழகக் காலத்தில் புரட்சியின் மீது கனவு கண்டு அதற்காய் பிறகு கொடும் சித்திரவதைகளை ஒருவர் அனுபவிக்கின்றார். எவரையும் தான் கொலைசெய்யவில்லை என்றாலும், சில 'துரோகி'களைக் கொலை செய்யத்தான் அனுமதித்தாகவும் இவர் மருத்துவரிடம் சொல்கின்றார். இரத்தம், இரத்தத்திற்கு எதிரான இரத்தம் அது ஒரு கொடூர ருசியாகப் போன கடந்தகாலம் வாக்குமூலத்தில் கடந்துபோகின்றது. இறுதியில் இவரை இராணுவம் பிடித்துக் கொடும் சித்திரவதை செய்கின்றது. தோழர்கள் ரயர் போட்டு எரிக்கப்படுகின்றனர். கொடும் வேதனையிலும் தனது தோழர்களைக் காட்டிக்கொடுக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கின்றார்.

ஒருமுறைதான் சாவு வரும் என்று சித்திரவதை செய்யும் அதிகாரியின் முகத்திற்கெதிராக வைராக்கியமாகக் கூறும் இவரைச் சுட்டுக்கொல்ல கட்டளையிடப்படுகின்றது. கொல்லப்படக் கொண்டுபோகும் இவர் இறுதிநேரத்தில் காப்பாற்றப்படுகின்றார். ஆனால் சாவைவிட இன்னொரு அதிர்ச்சி வருகின்றது. இவர் மிகப்பெரும் தோழராக, தங்களின் சேகுவேரா போன்ற தளபதியாக நினைத்த தோழர் இப்போது இராணுவ உடையோடு அங்கே வருகின்றார். அவரால் இவர் கொலை செய்யப்படுவதிலிருந்து தப்பினாலும், அவர் எதிரணியில் இருப்பதை இவரால் தாங்க முடியாதிருக்கின்றது. அந்தத் 'தோழரோ' எல்லாம் முடிந்துவிட்டது, அனைத்து வாக்குமூலங்களை'யும் கொடுத்துவிடுங்கள் என்கின்றார். 'தோழர்' மீது பெரும் கோபம் வந்தாலும், இறுதியில் தோழரைப் போல தனது தோழர்கள் ஒவ்வொருவரின் இரகசிய இடங்களைச் சொல்லி, இவரும் ஒரே படகில் ஏறிவிடுகின்றார். அதிசயமாகப் பிறகு இந்தக்கதைசொல்லியை சிறையிலிருந்தும் விடுதலை செய்துவிடுகின்றனர்.

ஒரளவு இயல்புநிலைக்கு வந்தபின், இவர் சிவப்பு நிறத்திலிருந்து புத்தமதத்திற்குப் போகின்றார். இலங்கையில் பெளத்தத்தின் ஊடே அரசர்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கின்றார்கள் எனச் சமாதானம் சொல்லியபடி ஓர் இனவாதியாக இவர் மாறிவிடுகின்றார். பிற மதங்கள் மீது, பிற இனங்கள் மீது கடும் காழ்ப்புணர்வைக் கொட்டுகின்றார். ஒருகாலத்தில் தான் தலைமறைவாக இருக்க உதவிய தேவாலயத்தைக் கூட ஒரு கெட்டகனவாக மறந்துவிடத்துடிக்கின்றார் என்றளவிற்கு அவருக்குள் வெறுப்புணர்வு வந்துவிடுகின்றது. இந்த வெறுப்பும், குழப்பங்களும் அவரை இப்போது ஒரு மனநல மருத்துவரை நோக்கிச் செல்ல வைக்கின்றது என்பதோடு இந்தக் கதை முடிகின்றது.

இலங்கையில்  வெவ்வேறு இரு காலப்பகுதியில் புரட்சிகளைச் செய்ய முயன்ற புரட்சிகர இயக்கம்,  இன்று ஜே.வி.பி என்கின்ற இனவாதக்கட்சியாக மாறியிருப்பதை நாம் யதார்த்தத்தில் காணமுடியும். மேலும் ஒருகாலத்தில் புரட்சியின் மீதும், மார்க்ஸிசத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட பல சிங்கள இளைஞர்கள் பலர் சிங்கள பேரினவாத அரசின் இருக்கைகளை நிரப்பிக்கொண்டிருக்கவில்லையா? அத்தோடு இந்தக்கதையை நமது இயக்கங்களோடு கூட ஒப்பிட்டுப் பார்ப்பதுகூடச் சுவாரசியமான ஒன்று.

நாம் ஒடுக்கப்படுகின்றோம் என்று போராடப்புறப்பட்ட சிலர் இன்று சிங்களப் பெளத்த பேரினவாத்தைத்தூக்கிக்கொண்டும், இன்னொருபுறத்தில் வேறுசிலர் தீவிரத் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு பிற இனங்கள் மீது வெறுப்புணர்வை இன்னும் வளர்த்துக்கொண்டும் அல்லவா இருக்கின்றார்கள். சிங்களவர்க்கு மட்டுமில்லை நம் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய கதை. ருவண்.எம்.ஜயதிலகவின் வேறு சில கதைகளையும் ஏற்கனவே (ரிஷான் ஷெரிப் தமிழாக்கியிருக்கவேண்டும்) வாசித்ததாய் நினைவு. இப்போது கனடாவில் வசிக்கும் ஜயதிலக ஒருகாலத்தில் இராணுவத்தின் மனநலப்பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆனி 03, 2018)

Factotum by Charles Bukowski

Monday, June 18, 2018

*Baby, I’m a genesis but nobody knows it but me!

1.
ப்யூகோவ்ஸ்கியின் Factotum நாவல் அவரது தபால் நிலையத்திற்கும் (Post Office), பெண்களுக்கும்   (Women) இடையில் எழுதப்பட்ட நாவலாகும். ப்யூகோவ்ஸ்கியின் எதிர்நாயகனான சினாஸ்கி இதில் ஒரு எழுத்தாளாக வளரவும், அதேவேளை நாளாந்த அல்லாடல்களுக்கிடையில் சிக்குப்படுகின்ற காலப்பகுதியே இதில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.  இரண்டாம் உலக மகாயுத்தம் பின்னணியில் நடைபெறுகின்ற காலம். 'தபால் நிலை'யத்திலும், 'பெண்க'ளிலும் கதை நிகழும் நிலப்பரப்பு கிட்டத்தட்ட முற்றுமுழுதாக லாஸ் ஏஞ்சல்ஸ் என்றால், இங்கே கதை அமெரிக்காவின் பல்வேறு நிலப்பரப்புக்களில் அலைந்துகொண்டிருக்கின்றது.

சினாஸ்கியிற்கு லாஸ் ஏஞ்சல்ஸும், அங்கே இருக்கும்  அவரின் பெற்றோரின் வீடும், அமைதியைத் தராதபோது அவர் ஏதேனும் வேறொரு நகர் தனக்கு அடைக்கல்ம் தரக்கூடுமென்று பயணிக்கத் தொடங்குகின்றார். ஒவ்வொரு நகரிலும் அடிமட்டத் தொழிலை தன்னிருப்புக்காகச் செய்கின்றார். சில வேலைத்தளங்களில் துரத்தபடுகின்றவராக, இன்னுஞ் சிலவற்றில் தானாகவே விலத்திக்கொள்கின்றவராக சினாஸ்கி இருந்தாலும், அவர் எல்லா இடங்களிலும் பெண்களைப் பார்த்துச் சலனப்படுவதிலோ, குடிப்பதில் சளைப்பின்றியோ இருக்கின்றார்.

நியூயோர்க் அவருக்குப் பிடிக்காத நகரங்களில் ஒன்று.இவ்வளவு சனங்கள் ஏன் இங்கே பிதுங்குப்படுகின்றனர் என்று எரிச்சல்படுகின்றார். வேலை தேடும் சினாஸ்கி 'ரைம்ஸ்' பத்திரிகையில் வேலைக்கு விண்ணப்பிக்கின்றார். இரண்டு வருடம் கல்லூரியில் படித்த ஜேர்னலிஸம் தன் வேலைக்கு சாதகம் என நினைக்கின்றார். அதிசயமாக 'ரைம்ஸ்' பத்திரிகையினர் வேலைக்குக் கூப்பிடுகின்றனர்.  அங்கு எழுதத்தானே என்னை வேலைக்கு எடுக்கின்றீர்கள் என்று சினாஸ்கி கேட்க, இல்லை இரவுகளில் வேலைத்தளத்தைச் சுத்தமாக்க என்கின்றனர். சினாஸ்கி அந்த வேலையையும் எடுக்கின்றார்.

வழமைபோல அந்த வேலையிலிருந்தும் துரத்தப்படுகின்றார். வேலை செய்த சில நாட்களுக்கான சம்பளத்தை ரைம்ஸ் கொடுக்கத் தாமதிக்கும்போது, அங்கே பெரும் பணியில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கின்றார். இங்கேதான் ப்யூகோவ்ஸ்கியின் எள்ளல் எழுத்தில் மிளிரும். ப்யூகோவ்ஸ்கி இப்படி எழுதுவார்; 'அந்த மனுசன் நல்ல மனுசன். நன்றாக வசதியாகவும் இருந்தார். பழகுவதற்குப் பரவாயில்லை. ஆனால் பாவம் நான் வேலையை விட்டுக்கொஞ்ச காலத்தில் மனுசன் செத்துவிட்டார். ஆனால் குடித்துக்கொண்டிருக்கும் நான் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.'

வளர்ந்து வரும் எழுத்தாளரான சினாஸ்கி எழுதி அனுப்பும் படைப்புக்கள் அநேக பத்திரிகைகளிலிருந்து பிரசுரக்க முடியாது என திருப்பியனுப்படுகின்றன. திருப்பி அனுப்பப்படும் மறுப்புக் கடிதங்களைப் பற்றி, ப்யூகோவ்ஸ்கி எழுதும் விதம் அவ்வளவு நகைச்சுவையானது. ஒரு கட்டத்தில் அவரது ஒரு சிறுகதை ஏற்றுக்கொள்ளப்பட்டு, 25 டொலர்கள் சன்மானமாக அனுப்பப்படும்போது சினாஸ்கி அடையும் மகிழ்ச்சி அளவிடமுடியாது. மூன்று நாட்கள் வெளியில் அவ்வளவு போகாது குடித்தபடி தனது அறைக்குள் கொண்டாடியபடி இருப்பார்.

2.

ப்யூகோவ்ஸ்கியின் நாவல்களில் இதுவே முதன்மையானது என்று பலர் குறிப்பிட்டாலும், என்னைப் பொறுத்தவரை  Post Officeற்கும், Womenற்கும் பிறகே இதை வைப்பேன். ஒருவகையில் வளர்ந்துவரும் மத்தியதர எழுத்தாளன்  பாத்திரம்- பிறகு ப்யூகோவ்ஸ்கி பிரபல்யம் அடைவதால்-  எவருக்கும் அமெரிக்க கனவு சாத்தியம் என்பதை முன்வைப்பதால் பலருக்குப் பிடித்திருக்கலாம்.

இதையேன் சொல்கின்றேன் என்றால், ப்யூகோவ்ஸ்கியின் இன்னொரு நாவலான Hollywood ல், சினாஸ்கி தன்னையும் தன்னோடு திரியும் சாராவையும், தாங்களிருவரும் ஸ்காட்டும், ஸெல்டாவும் என அடிக்கடி அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஸ்காட் பிட்ஸ்ஸலாண்டின் 'The Great Gatsby', அமெரிக்கக் கனவின் முக்கிய படிமம் என்பதை அதை வாசித்தவர்கள் அறிவோம். ஆனால் அந்தக் கனவைக் கூட நக்கலடிக்க ப்யூகோவ்ஸ்கியால்தான் முடியும். தன்னை விட சாராவிற்கு அப்படிச் சொல்வது, ஸ்காட்டின் ஸெல்டாவிற்கு இறுதியில் நிகழ்ந்ததை அறிந்ததால்- பிடிக்காது என்பார். அத்தோடு தனக்கும் ஸ்காட்டின் எழுத்துப் பிடிக்காது என்பார். ஆனால் வேண்டுமென்றே சினாஸ்கி, புதியவர்களைச் சந்திக்கும்போது, இப்படியே தொடர்ந்து அறிமுகப்படுத்தியபடியே Hollywood  நாவலில் இருப்பார்.

'‘I was a man who thrived on solitude; without it I was like another man without food or water. Each day without solitude weakened me. I took no pride in my solitude; but I was dependent on it."எனத் தன்னைத் தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்ற சினாஸ்கி, கழிவறைகளைச் சுத்தம் செய்வதிலிருந்து, நாய்களுக்கான உண்வைத் தயாரிக்கும் கொதிநிலை தொழிற்சாலைகளிலிருந்து, பெண்களுக்கான ஆடைகள் விற்கும் கடைகளிலிருந்து, கார் பிரேக் பாகங்கள் செய்யும் தொழிலகங்களிலிருந்து எல்லாவிதமான தொழில்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கின்றார்.

பணக்காரர்கள் வாழும் செழிப்பான இடம் ஒன்றை சென் - லூயிஸில் நடந்து கடக்கும்போது, நல்ல வைனையும், நல்ல மாட்டுத்துண்டையும், அழகான கட்டில்களையும் கொண்ட இவர்களையும் என்னையும் பிரித்து வைப்பது எது? அவர்களை விட நான் கொஞ்சம் கூடவாக சிந்திப்பவனாக இருக்கின்றேன். ஓ அவர்களிடம் அந்தப் பணம்' என்பார். அவ்வாறு யோசித்தாலும், சினாஸ்கி அவருக்கான சந்தர்ப்பங்கள் சில வாய்க்கும்போதும் அப்படிப் பணம் சம்பாதிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்காதவராகவும் இருக்கின்றார்.

எந்த வேலையைச் செய்தாலும், அதை மீறி -சினாஸ்கி வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும்- அவருக்குள் இருப்பது ஒரு எழுத்தாளனாக வரும் கனவு. அதை நோக்கியே சினாஸ்கி உந்தித்தள்ளிப்படுகின்றார்.

ஒருவகையில் அதுவே அவரது சந்தோசமாக/மனநிறைவைத் தருகின்ற விடயமாகவும் இருப்பதை இதை வாசித்து முடிக்கும்போதும், ப்யூகோவ்ஸ்கி என்ற ஒரு எழுத்தாளனின் வாழ்வை இந்தப் பிரதியிற்கு வெளியில் அறியும்போதும் உணரமுடிகின்றது.
---------------------

* சினாஸ்கி நன்கு குடித்துவிட்டு ஒரு பெண்ணின் கால்களின் அழகில் மயங்கி, அந்தப் பெண்ணின் கால்களை முத்தமிட்டபடி சொல்வது.

(Mar 02, 2018)

உறைந்த‌ ந‌தி

Sunday, June 10, 2018

-இளங்கோ

வ‌ன் 999 ப‌க்க‌ங்க‌ளில் எழுத‌த் திட்ட‌மிட்ட த‌ன‌து ‌நாவ‌லை பின்ப‌க்க‌ங்க‌ளிலிருந்து எழுத‌ விரும்பினான். க‌ன‌விலும், காத‌லியைக் கொஞ்சும்போதும் நாவ‌லைப் ப‌ற்றி சிந்த‌னைக‌ள் ஓடுவ‌தால் 999 ப‌க்க‌ங்க‌ளில் நாவ‌லை எழுதுவ‌து அவ‌னுக்கு அவ்வ‌ள‌வு க‌டின‌மான‌தாய் இருக்கவில்லை. மேலும் எல்லாப் புக‌ழ் மிகுந்த‌ புனைக‌தையாள‌ர்க‌ளும் சொல்வ‌துபோல‌ இந்த‌ நாவ‌லை அவ‌ன‌ல்ல‌, வேறு எதுவோ தான் எழுத‌வைத்துக் கொண்டிருக்கின்ற‌து என்ப‌தையும் அவன் நம்பத் தொடங்கியிருந்தான்.

பின்ப‌க்க‌ங்களிலிருந்து எழுத‌த்தொட‌ங்குகின்றேன் என்ற‌வுட‌ன் த‌ன‌து வாச‌க‌ர்க‌ள் வேறு வித‌மான‌ வாசிப்பைச் செய்ய‌க்கூடுமென்ப‌தால், 'பின்புற‌ங்க‌ளில் அழ‌கிய‌ல்-ஒரு த‌த்துவார்த்த‌மான‌ஆய்வு' என்று ‌தான் எழுதி, த‌ன‌து ச‌க வாசகியொருத்தியால் திருடப்பட்டு, த‌ன‌க்குத் தெரியாம‌ற் பிர‌சுரிக்க‌ப்ப‌ட்ட‌அந்த‌ப் பிர‌தியிற்கும் இத‌ற்கும் தொட‌ர்பில்லையெனவும்‌ அவ‌ன் எனக்குச் சொல்ல‌ச் சொல்லியிருக்கின்றான்.  999, 998, 997... என்று பக்கங்களிட்டு எழுதிக்கொண்டிருப்ப‌தையே தான் பின்ப‌க்க‌த்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன் என்ப‌தில் உண‌ர்த்த‌விரும்புகின்றேன் என்று வலியுறுத்தியிருந்தான்.

'பின்புற‌ங்க‌ளின் அழ‌கிய‌ல்... ' ஆய்வுக்குத் த‌ன‌து பின்புற‌மே மிக‌ முக்கிய‌கார‌ண‌மாய் இருந்த‌தென்று அந்த‌வாச‌கி குற்ற‌ஞ்சாட்டிய‌த‌ற்கு உன‌து எதிர்வினை என்ன‌ என்று நான் குறுக்கிட்டுக் கேட்ட‌த‌ற்கு, அவ‌ளை அவ‌ள‌து முகத்தை முத‌லில் கண்ணாடியில் பார்க்க‌ச் சொல் என்றான். எப்ப‌டி எழுதினாலும் வாசிப்ப‌த‌ற்கு நான்குபேர் வ‌ருவார்க‌ள் என்ற‌ அவ‌ன‌து அச‌ட்டுத்துணிச்ச‌ல் என‌க்கு மிகுந்த‌ விய‌ப்ப‌தைத் த‌ந்த‌து. ஆக‌க்குறைந்தது அவ‌ன் த‌ன‌து ம‌ன‌ச்சாட்சியை ச‌ற்று உன்னிப்பாய்க் க‌வ‌னிந்திருந்தால் கூட‌ இந்த‌ 999 ப‌க்க‌ நாவ‌லை எழுதும் விபரீதத்தை நிறுத்தியிருக்க‌லாம்.

வ‌லை, வ‌லை, வ‌லை. எல்லாமே வ‌லையாக‌த் தெரிந்துகொண்டிருந்த‌து. சில‌வேளைக‌ளில் தானே ஒரு வ‌லையாக‌ ஆகிக்கொண்டிருக்கின்றேனோ என்ற‌  எண்ண‌ம் அவ‌னுக்குள்ளும் எழுந்தும் கொண்டிருந்த‌து. ஒரு வ‌லையை அக‌ற்ற‌ இன்னொரு வ‌லை; அந்த‌ இன்னொரு வ‌லையை அக‌ற்ற‌ இன்னுமின்னுமாக‌ நிறைய‌வ‌லைக‌ள். வ‌லைக‌ளை மீன்க‌ள் ம‌ட்டுமில்லை ம‌னித‌ர்க‌ளுந்தான் விரும்புவ‌தில்லை. சில‌ந்தி வ‌கைக‌ளில் ஏதோவொரு சிலந்தியின‌ம் த‌ன‌து வ‌லையில் தானே மாட்டி த‌ற்கொலை செய்து கொள்ளும் என்று யாரோ எழுதியிருந்த‌தை வாசித்தது அவ‌ன‌து நினைவ‌லைக‌ளில் வ‌ந்துபோயிற்று.

இப்ப‌டி தானும், எல்லாமும், வ‌லையாக‌ ஆகிக்கொண்டிருப்ப‌தில் உள‌விய‌ல் சிதைவுக்கு ஆளாகிக்கொண்டிருப்ப‌து அவ‌னுக்கும் விள‌ங்கிக்கொண்டுதானிருந்த‌து. உள‌விய‌லுக்கான‌ சிகிச்சை/ஆலோச‌னை பெறுவ‌தே ஒரு கொலைக்கு நிக‌ர்த்த‌தாய்ப் பார்க்க‌ப்ப‌டும் ச‌மூக‌த்தில் உள‌விய‌ல் சிகிச்சைக்காய் போவ‌து என்ப‌து இன்னொரு உள‌விய‌ல் பிர‌ச்சினையாக‌ மாறி விட‌வும் கூடும் என்ற அச்சத்தில் அதையும் தவிர்த்திருந்தான்.

இப்ப‌டி வ‌லைக‌ளைப் ப‌ற்றி தீவிர‌மாய் யோசித்துக்கொண்டு ந‌ட‌ந்துகொண்டிருந்த‌ பொழுதொன்றில்தான் அவ‌ன‌து முன்னாள் காதலி எக்ஸை ச‌ன‌நெருக்க‌முள்ள‌ தெருவில் க‌ண்டிருந்தான். கிட்ட‌த்த‌ட்ட‌ அவ‌னும் எக்ஸும் தொண்ணூறு பாகையில்தான் ச‌ந்தித்திருந்த‌ன‌ர். இன்னும் திருத்த‌மாய்ச் சொல்ல‌ப்போனால் தொண்ணூறு பாகையைத்தாண்டிய‌ சில‌பாகையில் என்றுதான் சொல்ல‌வேண்டியிருக்கும். எனென்றால் இவ‌ன் தான் அவ‌ளைக் க‌ண்டானே த‌விர‌, அவ‌ள் இவ‌னைக் காணவில்லை. அவ‌ளின் பின்புறத்தை வைத்தே அவளை அடையாள‌ங் க‌ண்டிருந்தான் என்று சொல்வ‌தில் அவ‌னுக்கு எந்த‌ வெட்க‌முமில்லை. 'உன‌து பிருஷ்டத்தைப் பார்க்கும்போது எனக்கு - உன‌க்காய் என‌க்குள் துடித்துக்கொண்டிருக்கும் இத‌யந்தான்- நினைவுக்கு வ‌ருகின்ற‌து' என்று ஒருமுறை அவ‌ளோடு நெருக்க‌மாய் இருந்த‌போது இவ‌ன் சொன்ன‌து அவ‌ளுக்கு இப்போது நினைவில் இருக்குமோ தெரியாது.

வ‌லையைப் ப‌ற்றிக் க‌தைக்க‌த் தொட‌ங்கிய‌வ‌ன் பிருஷ்டம், க‌லாசார‌ம் என்று எங்கையெங்கையோ ப‌ற‌க்கிற‌ ப‌ட்ட‌ம் மாதிரி அலைய‌வைக்கின்றானென்று நீங்க‌ள் நினைக்க‌க்கூடாது. வாழ்க்கையும் அப்ப‌டித்தானே இருக்கிற‌து. எது எத‌ற்கோ தொட‌ங்கும் ப‌ய‌ண‌ம் எங்கு எங்கோ எல்லாம் சுற்றி அலைந்துவிட்டுத்தானே நினைத்த‌ இட‌த்தை அடைந்திருக்கின்ற‌து; சில‌வேளைகளில் நினைத்த‌ இடத்தை அடையாம‌லேயே இடைந‌டுவில் நின்றுமிருக்கிற‌துதானே. ஃபிராய்ட் சொன்ன‌ 'ஆழ்ம‌ன‌த்தில் நிகழா ஆசைக‌ளே க‌ன‌வாய் மாறுகின்ற‌ன‌' என்ப‌து மாதிரி இவ‌னுக்கும் பிறரின் பிருஷ்டம் ஒரு முக்கிய பிர‌ச்சினை ஆகிவிட்டிருந்த‌து.


ருநாள் இவ்வாறுதான் அவ‌னும் அவ‌ளும் பெரு ந‌க‌ர‌த்தை விட்டு ஒதுக்குப் புற‌மான‌ ந‌க‌ரொன்றுக்குப் புற‌ப்ப‌ட்டிருந்த‌ன‌ர். எதையும் திட்ட‌ம் போட்டுச் செய்வ‌தில்லை. ஏனெனில் வார‌க்க‌ண‌க்காய், நாட்க‌ண‌க்காய் திட்ட‌ம் போட்டால் அது நிக‌ழாது போகும் என்ற‌வொரு ஜ‌தீக‌ம் அவ‌ர்க‌ளிடையே இருப்ப‌தால் ம‌ணித்தியால‌ங்க‌ளில் திட்ட‌ம்போட்டு உட‌னே ந‌டைமுறைப்ப‌டுத்துவ‌துதான் அவ‌ர்க‌ளுக்கேற்றதாய் இருந்த‌து. இவ்வாறு சில‌ம‌ணித்தியால‌ங்க‌ள் ஒரு ந‌க‌ருக்கு  ப‌ய‌ணித்து போய்விட்டு, அங்கே என்ன‌ பார்ப்ப‌து என்று தேட‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌ர்.

தன‌க்கு ஒர‌ள‌வு ப‌ரீட்ச‌ய‌மான‌ பெருந‌க‌ருக்குள்ளேயே ஒழுங்காய் திசை பார்த்து ப‌ய‌ணிக்க‌த் தெரியாத‌ மேதாவியாக‌வே அவ‌ன் எப்போதும் இருந்திருக்கின்றான். அவ‌னைப் போன்ற‌வ‌ர்க‌ளில் துய‌ர் க‌ண்டுதான் யாரோ ஜிபிஎஸைக் க‌ண்டுபிடித்திருக்க‌வேண்டும் என்ற‌ ந‌ன்றியுண‌ர்வு அவ‌னுக்கு ஜிபிஎஸ் மீதுண்டு. ஆனால் அவ‌ளுக்கு அப்ப‌டியில்லை. வரைபடம் பார்த்துப் ப‌ய‌ணிப்ப‌தே பிடித்த‌மாயிருக்கிற‌து, ஜிபிஎஸ் மிகவும் இய‌ந்திர‌த்த‌ன‌மான‌து; நாம் எக்ஸ்ப்ளோர் ப‌ண்ணுவ‌த‌ற்கான‌ எந்த‌ வெளியையும் த‌ருவ‌தில்லை. நாமாய்த் தொலைந்து தேடிக் க‌ண்டுபிடிப்ப‌தே சுவார‌சிய‌மான‌ ப‌ய‌ண‌மாயிருக்கும் என்ப‌து அவ‌ள‌து நிலைப்பாடு.

ச‌ரி, எங்கேயாவ‌து ஒரு கடையில் ஒரு உள்ளூர் வரைபடம் வாங்கி இட‌ங்க‌ளைப் பார்ப்போம என்ற‌போதுதான், அவ‌ன‌து க‌ண்ணுக்குள் ஒரு புத்தகக்கடை தெரிந்த‌து. இந்தக் கடையில் வாங்கினால் விலை குறைவாக‌ வாங்க‌லாம் என்று அங்கே போய், வரைபடத்துடன் மேலதிகமாய் இர‌ண்டு, மூன்று புத்த‌க‌ங்க‌ளும் வாங்கிவ‌ந்தார்க‌ள். இப்ப‌டிச் செல‌வாகுமென்று தெரிந்திருந்தால், இதைவிட‌ முதல் பார்த்த கடைக்கே போயிருக்கலாம் என்றான‌வ‌ன். ஆனால் அந்த‌ப் புத்த‌க‌சாலையில் வாங்கிய‌ நீட்ஷேயின் 'Beyond God & Evil'ல் இருந்து இன்னொரு பிர‌ச்சினை புகைக்க‌த் தொட‌ங்கிய‌து.

அவ‌ன், "இங்கே பார் நீட்ஷே இப்ப‌டிச் சொல்லியிருக்கின்றார், Woman learns how to hate to the extent that she unlearns how - to charm' என்றான். உட‌னே அவ‌ள் எப்ப‌டி நீட்ஷே, தான் ஒரு பெண்ணாக‌ இல்லாது இப்ப‌டிப் பெண்க‌ளைப் ப‌ற்றிச் சொல்ல‌முடியும் என்று ஒரு சண்டையை ஆர‌ம்பித்தாள். அவ‌னும் ஏன் நீட்ஷே அவ‌ருக்குத் தெரிந்த‌ பெண்க‌ளின் மூல‌ம் அறிந்த‌தை வைத்து இதை எழுதியிருக்க‌லாம் என்றான். இல்லை நீட்ஷே திரும‌ண‌ம் செய்ய‌வேயில்லை என்று நீதானே சொன்னாய் என  அவள் ஞாபகமூட்டினாள்.


வ்வாறு அவ‌னின் க‌தையைக் கேட்டுக்கொண்டிருந்த‌ நான், உனது க‌தை மிக‌வும் அலுப்பாக‌ ந‌க‌ர்கிற‌து. த‌ய‌வு செய்து நாவ‌ல் எழுதும் உன் கொடுங்க‌ன‌வை நிறுத்திவைக்க‌முடியுமா என்று ம‌ன்றாடும் தொனியில் கேட்டேன். உன‌து வாழ்க்கையில் நூற்றுக்கு தொண்ணூறு வீத‌ம் தேவைய‌ற்ற‌தும் அலுப்பான‌ உரையாட‌ல்க‌ளைச் செய்துகொண்டும் கேட்டுக்கொண்டுமிருக்கும் நீ இவ்வாறு கேட்ப‌த‌ற்கு த‌குதிய‌ற்ற‌வ‌ன் என‌ அவ‌ன் க‌த்த‌த்தொட‌ங்கினான். மேலும் நான் எழுத‌ விரும்பும் காப்பிய‌த்தை நிறுத்து என்று சொல்வ‌து ஓர் அதிகார‌மிக்க‌ உரையாட‌ல்; முத‌லில் ஃபூக்கோவைப் போய் ப‌டித்துவிட்டு வா, இல்லையெனில் ஆக‌க்குறைந்து நான்கைந்து நாட்க‌ளாய்  தொடர்ந்து குடித்தபடி, நாறிக்கொண்டிருக்கும் நீ இன்றைக்கேனும் குளிக்க‌முய‌ற்சி செய் என்று என‌து சுய‌த்தின் மீது எரிய‌ம்புக‌ளை வீச‌த்தொட‌ங்கினான்.

இன்றைக்கு இவனோடிருந்து மேலும் க‌தை கேட்கும் எண்ண‌மில்லாது போன‌தால் நான் என‌து வீட்டை நோக்கி ஒரு பூங்காவும் அத‌ன் நீட்சியில் சிறு காடுமிருக்கும் பாதையால் ந‌ட‌க்க‌த் தொட‌ங்கினேன். அப்போது எனக்கு முன்னால் ஒரு பெண்ணும், ஆணும் மிகுந்த காதலோடு இணைந்து நடக்கக் கண்டேன்.க‌ல்லூரிக்குப் போக‌த் தொட‌ங்கிய‌தால், பழைய‌ ந‌ண்ப‌ர்க‌ளோடு பொழுதைக் க‌ழிப்ப‌து குறைந்து, அவ‌ர்க‌ளும் தொலைவில் விலகிப்போன‌துமாதிரி இவ‌னுக்குத் தோன்றிய‌து. கல்லூரியில் ந‌ட‌க்கும் வ‌குப்புக‌ளுக்கு ஒழுங்காய்ப் போகாவிட்டாலும், க‌ல்லூரியிலேயே த‌ன‌து பொழுதை அதிக‌ம் க‌ழிக்க‌ப் ப‌ழ‌கியிருந்தான். க‌ல்லூரியில் ந‌ட‌க்கும் அமெரிக்க‌ன் ஃபுட்போல், கூடைப்ப‌ந்தாட்ட‌ம் போன்ற‌வற்றைப் பார்ப்ப‌து இவ‌னுக்குப் பிடித்த‌மாயிருந்த‌து. க‌ல்லூரி ஜிம்மிலும், ப‌ப்பிலும் பொழுதைத் த‌னியே க‌ழிக்க‌ப் ப‌ழ‌கியிருந்தான். ப‌ப்பில் இருட்டு மூலையைத் தேடி ஆறுத‌லாய் இர‌சித்து இர‌சித்துக் குடிப்பது இவனுக்குப் பிடித்தமாயிருந்தது. சில‌நாட்க‌ளில் ப‌தினொரு ம‌ணியானால் ப‌ப்பின் ஒருப‌குதி டான்ஸ் ப்ளோராகாக மாறிக் கொண்டாட்ட‌மாகிவிடும். ப்ளோரில் ஆடுவ‌தைவிட‌ ஆட்ட‌த்தைப் பார்ப்ப‌துதான் இவ‌னுக்கு விருப்பாயிருந்த‌து.
ஆட்ட‌ம் உச்ச‌மேற‌ அப‌த்த‌/அங்க‌த‌/துரோக‌ நாட‌க‌ங்க‌ள் ப‌ல‌சோடிக‌ளுக்கிடையில் அர‌ங்கேறும். பிய‌ர் போத்த‌ல்க‌ளை உடைக்காது, கைக‌ல‌ப்பு வ‌ந்து ப‌வுண்ச‌ர்க‌ள் குழ‌ப்புப‌வ‌ர்க‌ளை வெளியே தூக்கிப் போடாது ந‌ட‌ந்த‌ ஆட்ட‌நாட்க‌ள் மிக‌க் குறைவான‌தே. ஆனால் இவற்றுக்கப்பாலும் ச‌ந்தோச‌மும் கொண்டாட்ட‌மும் இர‌வின் வெளியெங்கும் த‌தும்பி வ‌ழிந்துகொண்டேயிருக்கும்.

இவ்வாறு ஒருநாள் த‌னிமையையும், ம‌துவையும், இர‌வையும் சுவைத்துக்கொண்டிருந்த‌பொழுதில் ஒருத்தி மிக‌வும் ப‌த‌ற்ற‌த்துட‌ன் ஒரு பிய‌ரைக் கையிலேந்திய‌ப‌டி இவ‌னோடு மேசையைப் ப‌கிர்ந்துகொள்ள‌முடியுமா என்று கேட்ட‌ப‌டி வந்தாள். 'பிர‌ச்சினையில்லை, அம‌ர‌லாம்' என்றான். ‘நாளை காலை ஒரு முக்கிய‌மான‌ பிர‌ச‌ன்டேச‌ன் இருக்கிற‌து. ஒரு பாட‌த்தின் இறுதித்தேர்வாய் இந்தப் பிர‌ச‌ன்டேச‌னை வைத்திருக்கின்றார்கள். அதுதான் மிக‌வும் ப‌த‌ற்ற‌மாயிருக்கிற‌து’ என்றபடி பிய‌ரை வாயில் வைத்தபடி உறிஞ்சினாள்.

அவ‌ள் நெற்றியில் துளிர்த்திருந்த‌ விய‌ர்வைக்கும், பிய‌ர் போத்த‌லில் ப‌ர‌வியிருந்த‌ நீர்த்துளிக‌ளுக்குமிடையில் இருக்கும் வித்தியாச‌ந்தான் வாழ்வுக்கும் ம‌ர‌ண‌த்திற்குமான‌ வித்தியாச‌மாக்குமென‌ நினைத்த‌ப‌டி அவ‌ளின் பேச்சைக் கேட்க‌த் தொட‌ங்கினான். அவ‌ளுக்கிருந்த ப‌த‌ற்றத்தில் அவ‌ள் இங்கே அங்கேயென‌ விட‌ய‌ங்க‌ளைக் க‌தைத்துக்கொண்டிருந்தாள். அவ‌னுக்குப் ப‌திலுக்குப் பேசுவ‌த‌ற்கென்று எதுவுமேயிருக்க‌வில்லை. அவ‌ளும் இவ‌ன் எதையும் பேசாது த‌ன்னைக் கேட்டுக்கொண்டிருப்ப‌தையே விரும்பிய‌வ‌ள் போல‌ இடைவிடாது பேசிக்கொண்டிருந்தாள்.

விடைபெற்றுப்போகும்போது, தானிங்கே ரெசிட‌ன்ஸிலேயே த‌ங்கியிருக்கின்றேன், நேர‌மிருக்கும்போது நீ என்னோடு க‌தைக்க‌லாம் என்று அவ‌ள் த‌ன‌து தொலைபேசியை இல‌க்க‌த்தைப் ப‌கிர‌, அவ‌னும் த‌ன‌து இல‌க்க‌த்தைக் கொடுத்திருந்தான்.

அடுத்த‌நாள் காலை எழும்பிய‌போது, இவ‌னுக்கு நேற்றிர‌வு ந‌ட‌ந்த‌து நினைவுக்கு வ‌ர‌, தொலைபேசியில் அவ‌ள் பிர‌ச‌ன்டேச‌னுகுப் போக‌முன்ன‌ர் வாழ்த்துத் தெரிவித்தான். 'நீ ந‌ன்றாக‌ச் செய்வாய், எதற்கும் ப‌ய‌ப்பிடாதே; அப்ப‌டிச் செய்யாதுவிட்டாலும் உல‌க‌ம் அழிந்துபோய்விடாது' என்று ந‌கைச்சுவையாக‌ இவன் சொன்னான். அவ‌ளுக்கு இவ‌ன‌து அழைப்பு விய‌ப்பாயிருந்த‌து என்ப‌து அவ‌ள‌து ந‌ன்றி சொன்ன‌குர‌லிலேயே தெரிந்த‌து, அவ‌ளிருந்த‌ ப‌த‌ற்ற‌த்தில் இப்ப‌டி யாரோ ஒருவ‌ர் த‌னக்காய் யோசிக்கின்றார் என்ற‌ நினைப்பு அவ‌ளுக்குத் தேவையாக‌வுமிருந்த‌து. ‘இந்த‌பிர‌ச‌ன்டேச‌ன் ந‌ன்றாக‌ச் செய்தேன் என்றால் இன்று மாலை என‌து செல‌வில் பிய‌ர் வாங்கித்த‌ருகினறேன்’ என்றாள் அவ‌ள்.

மாலை, அவ‌ன் க‌ல்லூரி ஜிம்முக்குள் நின்ற‌போது தொலைபேசி அழைப்பு அவ‌ளிட‌மிருந்து வ‌ந்த‌து. தான் ப‌ப்பில் நிற்கின்றேன, வ‌ந்து ச‌ந்திக்க‌முடியுமா என்று கேட்டாள். இன்று, நேற்றுப் போல‌ ப‌த‌ற்ற‌மில்லாது புன்ன‌கைத்த‌ப‌டி வ‌ர‌வேற்றாள். வெளியே கொட்டிக்கொண்டிருந்த ப‌னியின் துக‌ள்க‌ள் அவ‌ள் த‌லைம‌யிரில் ம‌ல்லிகைப்பூக்க‌ள் பூத்திருந்த‌ மாதிரியான‌ தோற்ற‌த்தைக் கொடுத்திருந்த‌து. காதுக‌ள் குளிரில் சிவ‌ந்திருந்த‌ன‌. குளிர்க்கோட்டை க‌ழ‌ற்றிய‌ப‌டி 'நான் திருப்திப்ப‌டும‌ள‌வுக்கு என‌து பிர‌ச‌ன்டேச‌னைச் செய்திருக்கின்றேன்' என்றாள். ஏற்க‌ன‌வே பிய‌ரிற்கு ஓட‌ர் செய்திருப்பாள் போல‌. அவ‌ன் வ‌ந்திருந்த‌துமே வெயிட்ட‌ர் ஒரு பெரும் குவளையில்  பிய‌ரை நிர‌ம்பிக் கொண்டு வ‌ந்து மேசையில் வைத்தார். பின் அவ்விர‌வு மிக‌ நீண்ட‌தான‌து. மாறி மாறி உரையாட‌ல். அவ‌னையும் அவ‌ளையும் அறிய‌முய‌ன்ற‌ அற்புத‌க்க‌ண‌ங்க‌ள்.

இர‌ண்டு பேரும் ஒருமிக்கும் புள்ளியென்று எதையும் க‌ண்டுபிடிக்க‌ முடியாவிட்டாலும்,தொட‌ர்ந்து உரையாடிக்கொண்டிருந்த‌து அவ்விர‌வில் இருவ‌ருக்கும் பிடித்த‌மாயிருந்தது. மொழியாலும், க‌லாசார‌த்தாலும்,மேற்கு-கிழ‌க்கு என்று வெவ்வேறு பின்புல‌ங்க‌ளாலும் இருவரும் தூர‌த் தூர‌வாகவே இருந்த‌னர்‌. ஒவ்வா முனைக‌ள் அதிகம் க‌வ‌ர்வ‌தில்லையா, அதுபோல் எதுவோ அவ‌ர்க‌ளை இணைத்துவைத்த‌து போலும்.

பிற‌கான‌ நாட்க‌ள் எவ்வ‌ள‌வு இனிமையான‌வை. நேச‌ம் இவ்வ‌ள‌வு க‌த‌க‌த‌ப்பாய் இருக்க‌முடியுமா என்று வியக்கவைத்த நாட்க‌ள். ப‌க‌லிலும் இர‌விலும் திக‌ட்ட‌வே முடியாது என்று பொங்கிப் பிரவாகரித்த அன்பு. இப்ப‌டியொரு பெண்ணிட‌மிருந்து காம‌ம் பீறிட்டுக் கிள‌ம்ப‌முடியுமா என்று திகைத்து பின் திளைத்த‌பொழுதுக‌ள். அவ‌ள் இருந்த‌பெண்க‌ளுக்கான‌ ரெசிட‌ன்ஸில் கூட‌விருக்கும் அறைத்தோழிக‌ள் வெளியில் போகும்போது, குறுகிய‌‍/நீண்ட‌ ப‌த‌ற்ற‌மும் க‌ள்ள‌மும் காம‌மும் பின்னிப்பிணைந்த‌பொழுதுக‌ள்.

கிட்ட‌த்த‌ட்ட‌ஒருவ‌ருட‌ம் முடிந்து, வ‌ந்த‌ இர‌ண்டு வார‌ கிறிஸ்ம‌ஸ் விடுமுறையில் தான் த‌ன‌து பெற்றோரைப் பார்க்க‌ த‌ன‌து பிறந்த ந‌க‌ரிற்குப் போக‌ப்போகின்றேன் என‌ வெளிக்கிட்டிருக்கிறாள். கிறிஸ்ம‌ஸ் கொண்டாட்ட‌ங்க‌ள் முடிந்து ஸ்நோ பொழியும் அல்லோலோக‌ல்லோல‌த்துட‌ன் குளிர்கால‌த் த‌வ‌ணையிற்கான‌ வ‌குப்புக்க‌ளும் ஆர‌ம்பித்துவிட்டிருந்த‌ன‌. இவ‌னால் அவ‌ளைச் ச‌ந்திக்க‌ முடிய‌வில்லை. தொலைபேசி அழைப்புக்க‌ளுக்கும் எவ்வித‌மான‌ ப‌தில்க‌ளையும் காண‌வில்லை. அவ‌ளிலிருந்த ரெசிடென்ஸில் போய்த்தேடிய‌போது அவ‌ள் இப்போது அங்கே வ‌சிப்ப‌தில்லையென‌ச் சொன்னார்க‌ள்.

அவ‌ளோடு அறையைப் ப‌கிர்ந்த‌ ம‌ற்ற‌ ந‌ண்பிக‌ளிட‌ம் கேட்ட‌போது ஏதோ  வேலை எடுத்து, ரெசிடென்சை விட்டு வெளியே வ‌சிக்க‌ப் போய்விட்டாள் என்ற‌ன‌ர். அவ‌ள‌து த‌ற்போதைய‌ முக‌வ‌ரி த‌ர‌முடியுமா என்று இவ‌ன் கேட்ட‌போது த‌ங்க‌ளுக்குத் தெரியாது என்று இவனைத் தவிர்க்கச் செய்தனர். இவ‌னுக்குப் பித்துப்பிடித்த‌து மாதிரியிருந்த‌து. ஏன் அவ‌ள் அப்படிச் செய்கின்றாள் ஏதாவ‌து பிழையைத் தான் செய்துவிட்டேனா என்று மூளையைத் தோண்ட‌த்தொட‌ங்கினான்.


திரும்ப‌வும் தனிமையும, இருளும், கொடுமையான‌ குளிரும் அவ‌னைச் சூழ‌த்தொட‌ங்கின‌. ஆனால் இவை முன் போதில்லாது தாங்க‌முடியாத‌வையாக‌ யாராவ‌து த‌ன்னோடு வ‌ந்து பேச‌மாட்டார்க‌ளா என்று ஏங்க‌ வைப்ப‌வையாக‌ அவனை மாற்றிவிட்ட‌ன‌. திக‌ட்ட‌த் திக‌ட்ட‌ அன்பைத் த‌ந்த‌வள் இப்ப‌டி பெரும் இடைவெளியைவிட்டு ஒன்றும் சொல்லாம‌ற் போய்விட்டாளென்ற‌ நினைப்பு அவ‌ள் மீது ஒரே நேர‌த்தில் வெறுப்பையும், கோப‌த்தையும் உண்டாக்கின‌.

ஆக‌வும் நினைவுக‌ள் வ‌ந்து அவ‌ன் உண‌ர்வுக‌ளை அரிக்க‌த்தொட‌ங்கும்போது த‌ன‌க்குத் தெரிந்த‌அவ‌ள‌து தொலைபேசி இல‌க்க‌த்தில் அழைக்க‌த் தொட‌ங்குவான். இவ்வாறு தொட‌ர்ச்சியாக‌ மூன்று நான்கு முறை அவ்வில‌க்க‌த்தை அழைக்கும்போது ஒரு ஆண் எடுத்து 'பிழையான‌ இல‌க்க‌த்தை அழைக்கிறாய், நீ கேட்கும் அவ‌ள் இவ்வில‌க்க‌த்தில் இல்லை; இனி அழைக்க‌வேண்டாம்' எனச் சொல்ல‌த்தொடங்கினான். ஒருநாள் ப‌ப்பில் இய‌லாத் தனிமையில் பொதுத்தொலைபேசியிலிருந்து அவ‌ள‌து இல‌க்க‌த்திற்கு அழைத்த‌போது, ஒரு பெண் குர‌ல் ம‌றுமுனையில் எடுத்துக் க‌தைப்ப‌து தெரிந்து. நிச்ச‌ய‌ம் அவ‌னால் அடையாளங்கொள்ள‌க்கூடிய‌தாயிருந்த‌து. அவ‌ளேதான்.

'நீ சூஸன் தானே' என்று அவள் பெயரைச் சொல்லி இவ‌ன் கேட்க‌ம‌றுமுனை துண்டிக்க‌ப்ப‌டடுவிட்ட‌து. திரும்பி நாலைந்துமுறை இவ‌ன் எடுப்ப‌தும், எதிர்முனை துண்டிப்ப‌துமாயிருக்க‌, க‌டைசியாய் 'த‌ய‌வுசெய்து வைத்துவிடாதே நான் சொல்வ‌தைக் கேள். இப்போது என் நிலை எப்ப‌டியென்ப‌து அறிவாயா? நீ என்னை உண்மையில் நேசித்திருப்பாயின் தொலைபேசியை வைக்காது நான் சொல்வ‌தைக் கேள்' என்று உடைந்த‌குர‌லில் பேச‌த் தொட‌ங்கினான். இம்முறை ம‌றுமுனை துண்டிக்காது ம‌வுன‌த்துட‌ன் இவ‌ன் பேசுவ‌தைக் கேட்க‌த் தொட‌ங்கிய‌து. இறுக்க‌ப்பூட்டியிருந்த‌ அவ‌ள் ம‌ன‌து ச‌ற்று நெகிழ்ந்திருக்க‌வேண்டும் போல‌. இவ‌ன் 'என்ன‌ நட‌ந்த‌து உன‌க்கு?' என்று கேட்டு, எல்லாவித‌மான‌ த‌ன் துய‌ர‌ங்களையும் சொல்ல‌த் தொட‌ங்கினான். அவ‌ள‌து மிக‌ப்பெரும் ம‌வுன‌ம் இவ‌னை ஒரு இராட்ச‌த‌வில‌ங்காய் விழுங்க‌வும் தொட‌ங்கியிருந்தது. அன்றிர‌வு குடித்த‌ ஏழாவ‌து பிய‌ர் தந்த‌ உச்ச‌போதை போன‌த‌ன் சுவடே தெரியாம‌ற்போய்விட்ட‌து.

மிகவும் இய‌லாத‌ப‌ட்ச‌த்தில் இவ‌ன் 'நீயொரு வார்த்தை பேச‌மாட்டாயா?' என்று திருப்ப‌த் திருப்ப‌க் கேட்க‌த்தொட‌ங்கினான். இறுதியில் அவள், 'ச‌ரி, த‌ய‌வுசெய்து இனி தொலைபேசி எடுக்காதே, நான் வ‌ருகின்ற‌ ச‌னிக்கிழ‌மை க‌ல்லூரிக்கு இந்த‌நேர‌ம் வ‌ந்து க‌தைக்கின்றேன்' என்றாள்.

ச‌னிக்கிழ‌மை வ‌ந்த‌து; வ‌ந்தாள். இப்போதிருக்கும் நான் முன்பு இருந்த‌வ‌ள் அல்ல‌. நாங்க‌ளிருவ‌ரும் இருந்த‌ ந‌ல்ல‌நினைவுக‌ளோடு பிரிந்துவிடுவோம் என்றாள். ஏன் என்ன‌ந‌ட‌ந்த‌து? என்னில் என்ன‌பிழையைக் க‌ண்டாய்? த‌வ‌றுக‌ள் இருந்தால் சொல், நான் திருத்திக்கொள்கின்றேன். த‌ய‌வுசெய்து என்னைவிட்டுப் போகாதே. நீயில்லாத் த‌னிமையை யோசிக்க‌முடிவ‌தில்லை என்று இவன் கெஞ்சத்தொடங்கினான். 'இல்லை த‌ய‌வு செய்து என்னை ம‌ற‌ந்துவிடு' என்று அவ‌ள் திருப்ப‌த் திருப்ப‌ச் சொல்ல‌த் தொட‌ங்கினாள். என்னால் முடியாது என்று அவ‌ள் கையைப் பிடித்து இத‌ழில் முத்த‌மிட‌முனைந்துபோது, ' F*** off, you are abusing me... உன‌க்குக் கார‌ண‌ந்தானே வேண்டும். நான் இன்னொருத்த‌னுட‌ன் சேர்ந்து வாழ‌த்தொட‌ங்கியிருக்கின்றேன். கார‌ண‌ம் போதுமா?' என்று கூறிவிட்டு இருட்டில் க‌ரைந்துபோயிருந்தாள்.

அவ‌ன் அன்றிலிருந்து கிட்ட‌த்த‌ட்ட‌ ஆறு நாட்க‌ள் வீட்டுக்கு வ‌ராது வெளியில்தான் திரிந்திருக்கின்றான். சாப்பாடு, இய‌ற்கை உபாதையெல்லாம் வெளியேதான். அந்த‌ ஆறு நாட்க‌ளில் ஓரிருமுறை பொதுக்க‌ழிப்ப‌றையில் குளித்திருக்கின்றான். ஆடை காயும் வ‌ரை சில‌ம‌ணித்தியால‌ங்க‌ள் பாத்ரூம் கதவை மூடிப்போட்டு உள்ளேயே அம‌ர்ந்திருக்கின்றான்.

அப்போது வெளியே மிக‌உக்கிர‌மான‌ குளிர். ஹோம்லெல்ஸ் நண்பர்கள்தான் இவ‌னை அந்த‌ ஆறு நாட்க‌ளும் காப்பாற்றியிருக்கின்றார்கள். குளிர் தாங்காத‌போது, மிக‌வும் ம‌லிவாய் தாங்கள் வாஙகி வைத்திருந்த‌ க‌ஞ்சாவை ஊத‌த்த‌ந்து உடம்பின் குளிரை உறையச் செய்திருந்தார்க‌ள். த‌ங்க‌ளுக்குக் கிடைத்த‌ சில க‌ம்ப‌ளிக‌ளை இவ‌னோடு ப‌கிர்ந்திருக்கின்றார்க‌ள். இப்ப‌டிக் க‌ழிந்த‌ ஆறாவ‌து நாளில்தான் இவ‌னோடு உயர்க‌ல்லூரியில் ப‌டித்த‌ தோழியொருத்தி க‌ண்டு, ரோட்டிலிருந்து எழுப்பிக்கொண்டுபோய், த‌ன‌து வீட்டில் வைத்து பிட்டும் மாம்ப‌ழ‌மும் பிசைந்து ஊட்டி விட்டிருக்கின்றாள். தனது சொந்தக்கையால் உணவை எடுத்துச் சாப்பிட‌முடியாத‌ அள‌வுக்கு மிக‌வும் ப‌ல‌வீன‌மாய் இருந்திருக்கின்றான்.


வ்வாறு அவ‌ன் த‌ன‌து க‌தையை எனக்குச் சொல்லி முடித்த‌போது, 'இந்த‌க் காத‌லுக்காக‌வா இவ்வ‌ள‌வு சித்திர‌வ‌தைக‌ளை நீ அனுப‌வித்தாய், சும்மா தூசென‌ இதைத் த‌ட்டிப்போயிருக்க‌லாம்' என்று எல்லோரைப் போல‌வே என‌க்கும் சொல்ல‌ விரும்ப‌மிருந்தாலும் அவ‌ன் குர‌லில் இன்னமும் க‌னிந்துகொண்டிருந்த‌ நேச‌ம் என்னை எதையும் பேசாது த‌டுத்து நிறுத்திய‌து. 'அந்த‌ஆறு நாட்க‌ளில் உன்னை உன‌து பெற்றோர் தேட‌வில்லையா?' என்று ச‌ம்பிர‌தாய‌மான‌ கேள்வியை நான் அவ‌னிட‌ம் கேட்டேன். 'ஓம். அவைய‌ளும் தேடினைவைதான். ஏலாத க‌ட்ட‌த்தில் பொலிஸிட‌மும் முறையிட்டிருக்கின‌ம். நானும் ட‌வுன் ர‌வுணுக்குள்ளேதான் ஒளித்துக்கொண்ட‌னான். அத்தோடு பொலிஸும் ப‌தின்ம‌வ‌ய‌துக‌ள் என்றால் கொஞ்ச‌ம் தேடுவான்க‌ள். ப‌தினெட்டு வ‌ய‌துக்குப் பிற‌கு என்டால் அவ்வ‌ள‌வு அக்க‌றை எடுக்க‌மாட்டான்க‌ள். ஏனென்டால் இங்கை க‌ன‌ச‌ன‌ம் வீட்டை உற‌வுக‌ளைவிடடு ஓடிப்போற‌து சாதார‌ண‌மாய் ந‌ட‌க்கிற‌துதானே' என்றான்.

அவ‌னை நான் ச‌ந்தித்த‌து, அவ‌னின் இந்தக் க‌தையைக் கேட்ட‌து எல்லாம் அந்த‌ க‌ல்லூரி வ‌ளாக‌த்தில்தான். நானும் அங்கே ப‌குதிநேர‌மாய் வ‌குப்புக்க‌ள் எடுக்க‌த் தொட‌ங்கியிருந்த‌ கால‌ம் அது. 'இதுவெல்லாம் ந‌ட‌ந்து எவ்வ‌ள‌வு கால‌ம் ஆகின்ற‌து?' என்று கேட்டேன். 'நான்கு மாத‌ங்க‌ளாகிவிட்ட‌ன. இப்போது இங்கே வ‌குப்புக்க‌ள் எடுப்ப‌தில்லை, ஆனால் வ‌ந்து வ‌ந்து போய்க்கொண்டிருப்பேன்' என்றான். ஏனென்று கேட்ட‌த‌ற்கு 'அவ‌ளை எங்கேயாவ‌து பார்க்கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ந்துவிடாதா என்பதற்காய்' என்றான். பிறகு இந்த‌நான்கு மாத‌ங்க‌ளில் ஒருநாள் அவ‌ளைச் ச‌ந்தித்த‌தாக‌வும், அவ‌ளோடு தான் க‌தைக்க‌ முற்ப‌ட்ட‌போது, த‌ன்னோடு க‌தைக்க‌வேண்டாமென்று சொல்லி வில‌த்திப் போன‌தாக‌வும், தான் பின் தொட‌ர்ந்தபோது க‌ம்ப‌ஸ் பொலிஸிட‌ம் அவள் முறையிட்டதாக‌வும் சொன்னான்.

'அநேக‌மாய் உல‌கிலிருக்கும் எல்லோருமே இவ்வாறான‌ காய‌ங்க‌ளைத் தாண்டித்தான் வ‌ந்திருப்போம். இவ்வாறான‌ கொடுங்கால‌ங்க‌ளைத் தாண்டிப் போய்ப்பார்த்தால் வாழ்க்கை இன்னும் அழ‌காயிருக்கும். ஏன் நீ ந‌ட‌ந்துபோன‌ விட‌ய‌ங்க‌ளை ம‌றந்துவிட்டு முன்னே நகர்கின்ற வாழ்க்கையைப் பார்க்க‌க்கூடாது?' என்றேன். நான் சொல்வ‌தை ம‌வுன‌மாய்க் கேட்டுக்கொண்டிருந்த‌வ‌ன் கொஞ்ச‌நேர‌ அமைதியைக் குலைத்து, 'என்ன‌தான் இருந்தாலும் ஒரு த‌மிழ்ப்பெட்டையை நான் ல‌வ் ப‌ண்ணியிருந்தால் இப்ப‌டியெல்லாம் செய்திருக்க‌ மாட்டாள்தானே' என்றான்.

'த‌மிழ்ப்பெட்டை என்றில்லை, ம‌னித‌ம‌ன‌ங்க‌ளே விசித்திர‌மான‌துதான். க‌ண‌ந்தோறும் மாறிக்கொண்டிருப்ப‌வை. மாறும் ம‌ன‌ங்க‌ளிற்கு ஏன் தாம் மாறினோம் என்று சொல்வ‌த‌ற்கு சில‌வேளைக‌ளில் கார‌ண‌ங்க‌ளே இருப்ப‌தில்லை. நீ இப்ப‌டி அவ‌ளுக்காய் ஏங்கிக்கொண்டிருப்ப‌தில் இருந்து தெரிகிறது, அவ‌ள் உன்னை நிராக‌ரித்த‌ற்கு ஒரு வ‌லுவான‌ கார‌ண‌த்தை நீ தேடிக்கொண்டிருக்கின்றாய் என்பது. அதுதான் உன்னை இன்னும் க‌ஷ்ட‌ப்ப‌டுத்துகின்ற‌து. உல‌கில் ந‌ட‌க்கும் எல்லா விச‌ய‌ங்க‌ளுக்கும் ஏதேனும் கார‌ணங்க‌ள் இருக்கா என்ன‌? நீயும் உன‌து காத‌ல் விட‌ய‌த்தை இவ்வாறு எடுத்துவிட்டு ந‌க‌ர‌முய‌ற்சி செய்யேன்' என்று நான் கடைசியாய் அவனுக்குச் சொன்ன‌தாக‌வும் நினைவு.

பிற‌கு சில‌மாத‌ங்க‌ளில் என‌து ப‌குதி நேர‌வ‌குப்புக்க‌ள் முடிந்து நான் அக்க‌ல்லூரிக்குப் போவ‌தை நிறுத்தியிருந்தேன். அவ‌னைப் ப‌ற்றிய‌ நினைவுக‌ளும் ம‌ற‌க்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தாலும் அவ‌ன் விழிக‌ளுக்குள் தெரிந்த‌ஏதோ ஒரு இன‌ம் புரியாத‌ த‌விப்பு ம‌ட்டும் என்னைவிட்டுப் போக‌வில்லை. ஒருநாள் ச‌ப்வேயில் போகும்போது இர‌ட்டைக் கொலை ச‌ம்பவ‌ம் ப‌ற்றிய‌ செய்தி பேப்ப‌ரில் வந்திருந்த‌து. கொல்ல‌ப்ப‌ட்ட‌இர‌ண்டுபேரில் அவனது ப‌ட‌மும் பிர‌சுரிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து . மிக‌வும் அவ‌ச‌ர‌ப்ப‌ட்டுவிட்டானோ என்று ம‌ன‌ம் பெரும் மழையின் ஏற்பட்ட மண்சரிவைப்போல அரிக்கத்தொடங்கியது.


உபகதை:
கொலை ந‌ட‌ந்த‌அன்று, இவ‌ன் அவ‌ளையும் அவ‌ள‌து புதிய‌ காத‌ல‌னையும் க‌ண்டிருக்கின்றான். த‌ங்க‌ளைப் பின் தொட‌ர‌வேண்டாம் என்று அவர்கள் கேட்டும் இவ‌ன் பின்தொட‌ர்ந்திருக்கின்றான். அவ‌ர்க‌ளும் தாம் வ‌ழ‌மையாக‌ப் போகும் திசையை மாற்றி க‌ல்லூரிக்குப் பின்னாலிருக்கும் சிறு காடு இருக்கும் ப‌குதியால் சென்றிருக்கின்றன‌ர். இவ‌னுக்குத் த‌ன்னைப் புற‌க்க‌ணித்து அவ‌னோடு க‌தைத்துக்கொண்டு போகும் அவ‌ளைப் பார்க்க‌ வ‌ன்ம‌ம் மன‌திற்குள் வெடித்துப் ப‌ர‌வியிருக்கிற‌து போலும். ஜீன்ஸிற்குள் வைத்திருந்த‌ ம‌ட‌க்குக் க‌த்தியால் ச‌ட‌க்கென்று அவ‌ளோடு போன பெடிய‌னின் க‌ழுத்தில் நான்கைந்து முறை வெட்டியிருக்கின்றான். த‌டுக்க‌முய‌ன்ற‌ அவ‌ளுக்கும் க‌ன்ன‌த்தில் வெட்டு விழுந்திருக்கிற‌து. அவ‌னது உயிர‌ட‌ங்கிப் போகும்வ‌ரை இவ‌ன் அவளது த‌லைம‌யிரைப் பிடித்துக்கொண்டு பார்க்க‌ வைத்திருக்கின்றான். பிற‌கு த‌ன‌து பெற்றோர் இருந்த மாடியின் உச்சிக்குப் போய், இந்த‌ பூமியிற்கு இனி வ‌ர‌க்கூடாது என்ப‌த‌ற்காய் மேலே ப‌ற‌ந்து போவ‌த‌ற்காய் கீழே குதித்திருக்கின்றான்.

(எழுதியவனா, எழுத வைத்தவனா அல்லது கதையைக் கேட்டவனா எவன் இந்தக் கொலையைச் செய்தான் என்ற குழப்பத்தோடு இந்தக் கதை முடிவதற்கு, எழுதியவரைத் தெளிவுபடுத்தக் கேட்க முடியாது. ரோலண்ட் பார்த் ‘ஆசிரியரின் மரணம்’ பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியும் விட்டார். முடிக்கப்படாத 333 பக்க நாவலொன்றும் தற்கொலை செய்த அவனது வீட்டைக் கனேடிய பொலிஸ் தேடியபோது கண்டெடுக்கப்பட்டுமிருந்தது)
-------------------------------------------

ஓவியங்கள்: கிளிம்ட்
(நன்றி: 'அம்ருதா' - சித்திரை- 2018)

ஒரு சைக்கிள் பயணமும், துணைவந்த நிலவும்

Sunday, June 03, 2018

நேற்று சைக்கிளில்  இதுவரை போகாத பாதையொன்றைத் தேர்ந்தெடுத்தபோது, வழியில் ஒரு மான் பயமின்றி நிற்பதைக் கண்டபோது வியப்பாயிருந்தது. இன்று  உடலில் சாம்பல் புள்ளிகள் கொண்ட முயல்குட்டியொன்று சென்ற வழியில் சுழித்தோடியது, வரவர 'இயற்கை'யிற்கு என்மீது பாசம் ஏதோ ஒருவகையில் கூடிவிட்டதென்பதில் சிறு சந்தோசம் எட்டிப் பார்த்தது.

ஒளி குறைந்து இருள் கூடிக்கொண்டு போன தருணத்தில் நிலவு அடர்ந்தமரங்களுக்கிடையில் எழுந்த காட்சி அற்புதமானது. இன்றைய பெளர்ணமியை எப்படியேனும் படம்பிடித்துவிடவேண்டுமென வீடு வந்து பார்த்தபோது வானில் மிக மேலேறி சிறுவட்டமாய் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. அழகான காட்சிகளோ/அனுபவங்களோ மீண்டும் நிகழ்வதில்லை என்பதைப் போல அந்த 'நிலவு' அந்தத் தருணத்துக்குரியது என மகிழ்ச்சி கொள்ளவேண்டியதுதான் .

இப்படி 'தவறவிட்ட' நிலவை நினைத்துக்கொண்டு வந்தபோது அறையில் உடனே கண்ணுக்குப் புலப்பட்டது எம்.டி.எம்மின் 'நிலவொளி எனும் இரகசிய துணை' என்ற 'கட்டுரைகளும் கட்டுரைகள் போலச் சிலவும்' என்கின்ற தொகுப்பு. இந்நூலை எத்தனை முறை இதுவரை வாசித்திருக்கின்றேன் என்பதற்கப்பால்,  வேறு எதையாவது வாசிக்கும்போது சோர்வு வரும்போது, சட்டென்று இந்நூலில் ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டி வாசிக்கத் தொடங்கிவிடுவேன். அந்தளவிற்கு எனக்கு நெருக்கமான ஒரு தொகுப்பு.

வாசித்தவை book shelf ற்குள் போய்க்கொண்டிருப்பதைப் போல, இது இன்னும் அடியில் போகாமல் என் பக்கத்திலேயே இருப்பதற்கு, இது எண்ணற்ற திசைகளில் விரிக்கும் சிறகுகள் மட்டுமல்ல, சிலவற்றை ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் திறந்துவிடுகின்ற புதிய ஊற்றுக்களும் ஒரு காரணம்.

நிலவைப் பற்றி அல்லவா பேசிக்கொண்டிருந்தேன். இது எம்.டி.எம்மின் 'நிலவொளி எனும் இரகசிய துணை'யில் இருந்து...

"இன்மை என்பது வெறுமை அல்ல; அது புத்தனின் புன்னகை போல ஆசையோ துக்கமோ மகிழ்ச்சியோ இல்லாத சாந்தம். அனைத்தும் இயக்கத்தில் இருக்கின்றன; அனைத்துமே இயக்கமற்றும் இருக்கின்றன என அறிவது. இன்மையை உணர்தலை என் கனவுகளின் வழி மட்டுமே நான் சொல்ல முடியும் என்று நான் நினைப்பதுண்டு.
...............
...............
உண்மையில்  இன்மையின் இருப்பினை (sensing the presence of emptiness) உணரும் தருணங்களை நீட்ஷேயும் பௌத்த கவிகளும் மட்டுமேதான் அதிகமும் எழுதியிருக்கிறார்கள். நீட்ஷேயும் பௌத்த கவிகளுமே இன்மையை உணரும் கணத்தில் துணை நிற்பது நிலவொளியே என்று எழுதியிருப்பதும் இன்னொரு ஆச்சரியகரமான ஒற்றுமையாகும். ஆனால் நீட்ஷேக்கும் பௌத்த கவிகளுக்கும் இடையில் இன்மையை அறுதி உண்மையாக உணர்வதில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. 
இன்மையை உணரும் தருணம் நீட்ஷேக்கு பௌத்த கவிகளின் அனுபவம் போல அமைதியானதாக இருப்பதில்லை; கொந்தளிப்பின் உச்சகட்டங்களில் அதுவும் ஒன்று. துணையாக ஒளிரும் நிலவு பௌத்த கவிகளுக்குத் தரும் ஆசுவாசத்தை நீட்ஷேக்குத் தருவதில்லை" 

இதனோடு ஓஷோ நிலவொளி பற்றியும் நீட்ஷே குறித்தும் கூறியவற்றையும் நீட்சித்து வைத்துப் பார்க்க விரும்புகின்றேன்.

ஆம், இன்மை என்பது வெறுமை அல்ல. ஆனால் எனக்கு இன்னமும் -பெளத்த துறவிகளுக்கு வாய்ப்பதைப் போன்ற- சாந்தம் கிடைத்ததில்லை. பல தடவைகள் நீட்ஷேவைப் போல கொந்தளிப்பின் தளும்பல் நிலைகளையே சென்றடைந்திருக்கின்றேன்.

என்றாலும் என்ன....

'நிலவொளி என்னும் இரகசிய துணை' யை ஏதோ ஒருவகையில் இன்று உணரவும் அது குறித்து  யோசிக்கவும் முடிந்திருக்கின்றதே.
இப்போதையிற்கு அது போதும்.

(Jun 02, 2015)

ரமேஷ் பிரேதனின் 'நல்லபாம்பு: நீல அணங்கின் கதை'

Friday, June 01, 2018

"பாம்பாய் வாழ்வதைவிட பாம்பால் வழிநடத்தப்படுவது கொடுமையானது. ஒரு நூறு முகம் கொண்ட ஒற்றைப் பாம்பு. பாம்புடன் வாழும் வலியை சிவனுக்குப் பிறகு செம்புலி மட்டுமே அறிவார். பாம்பை யாராலும் கொல்ல முடியாது; அதன் உயிர் அது பற்றிய கதையில் உள்ளது. கதையைக் கடவுளாலும் கொல்ல முடியாது. கடவுள் கதைக்குள் அடங்கிவிடுவதால், ஆகப்பெரியதாகக் கதையே எல்லையற்று விரிகிறது. செம்புலி நூற்றியெட்டுக் கதைகளால் ஆனவர். ஆனால், எல்லாக் கதைகளுக்குள்ளும் பாம்பு இருப்பதால் அவரால் ஒருபோதும் தனித்து வாழ இயலவில்லை."

(‘நல்லபாம்பு: நீல அணங்கின் கதை’ - ரமேஷ் பிரேதன்)

தார்த்தவாதம் என்ற செத்தபாம்பை இன்னும் சலிக்காது அடித்துக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலிலிருந்து ‘நல்லபாம்பு: நீல அணங்கின் கதை’ என்ற ரமேஷ் பிரேதனின் நாவலை வாசிப்பது என்பது எவ்வளவு அருமையான அனுபவம். யதார்த்தவாதமா, அய்யகோ வேண்டாம் என முகமெல்லாம் சுழித்து ஒதுக்கவேண்டிய மனோநிலை எனக்கில்லையாயினும், யதார்த்தவாதத்தில் மட்டும் கதைசொல்லலே அறமெனவும்/அழகியலெனவும் ஒரு வலிந்த கருத்து கடந்த சில தசாப்தகாலமாய் நம் சூழலில் நிறுவப்பட்டு மற்ற வகையான கதையாடல்களையெல்லாம் ஒதுக்கும் ஒரு புறவயமான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருப்பதையே சோர்வாகப் பார்க்கவேண்டியிருக்கின்றது. அத்தோடு மாய யதார்த்தமும், தொன்மங்களும் தேடுகின்றோம் என ஒரு குறிப்பிட்டோர் மொழியை இன்னுமின்னும் இயந்திரத்தனமாக்கி வாசிப்பவர்களைப் பயமுறுத்தியதும் இதற்கு வலுச்சேர்த்ததை ஒருவகையில் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இதிகாசங்களையும், புராணங்களையும், காப்பியங்களையும் மறுவாசிப்புச் செய்வதற்காய் செம்புலி என்கின்ற ஒருவன் இராசராசன் காலத்தில் இருந்து எழுகின்றான். அந்தச் செம்புலி இன்றையகாலத்திலும் பல நூற்றாண்டுகள் தாண்டி நம்மோடு வாழ்கின்றான். அவன் சோழனின் காலத்தில் தன் மனைவியான நல்லதங்கத்தைக் கொலை செய்த கதைகள் பல்வேறு விதமாய், பல்வேறு காலங்களில் சொல்லப்படுகின்றன. நல்லதங்கம் இறந்தாலும் அவள் ஒருபோதும் செம்புலியை விட்டுப் பிரிவதில்லை. நூற்றாண்டு காலங்களாய் ஒரு பாம்பாய் செம்புலியைப் பின் தொடர்கின்றாள்; அவனின் நிம்மதியைக் குலைத்துத் தொந்தரவு செய்கின்றாள். அதுபோலவே அவரது மகன்களை மணம் செய்யும் ஜெயராணியும் கலைராணியும் கூட செம்புலியைப் பாம்புகளாய்/மனிதர்களாய்ப் பின் தொடர்கின்றார்கள்.

அவர்கள் இருவரும் ராணியாகவும், சேடிப்பெண்ணாகவும் வரலாற்றின் ஒருகாலத்தில் இருந்தவர்கள். தன் விருப்பமின்றி கவர்ந்து சென்ற மன்னனை ஜெயராணி நுட்பமாகக் கொலை செய்து, பட்டத்து இளவரசனையும் காமத்தால் வென்று அரியணையைக் கைப்பற்றுகின்றாள்.  தொடர்ச்சியில், சேடிப்பெண்ணோடு ஏற்படும் இழுபறியில் ஜெயராணி கொலை செய்யப்படுகின்றாள். சேடிப்பெண்ணும் தன் தோழியுமான கலைராணியைப் பாம்பாகி வந்து பின்னர் ஜெயராணி பழியும் தீர்க்கின்றாள்.

ன்றைய காலத்தில் அவர்களிருவரும் ஆரிய இனத்தைச் சேர்ந்த அம்பிகாவாவும், திராவிடத் தோன்றலான நல்லதங்கமாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் தாம் சந்தித்த ஆண்களைப் பேசுகின்றார்கள். ஆண்களை நேசிக்கின்றார்கள்/வெறுக்கின்றார்கள். வத்திக்கான் போல பெண்களுக்கென்றே ஒரு தனித்தேசம் உருவாக்கவேண்டுமென்று கனவுகாண்கின்றார்கள். அந்தக் கனவை எள்ளல் செய்து எட்டி உதைக்கவும் செய்கின்றார்கள். தங்களுக்குள் காமம் கொண்டு உருகுகின்றார்கள். ஒருத்தி இப்ராஹீம் என்கின்ற அல்ஜீரியனைக் கொண்டு தனக்கான குழந்தையைப் பெறப்போகின்றேன் என பிரான்ஸிலிருக்கும் ஸோர்போன் பல்கலைக்கழகத்திற்குப் போகின்றாள். மற்றவளோ பாண்டிச்சேரியின் கடற்கரையில் உலாவியபடியும், செம்புலியோடு உரையாடியபடியும் இருக்கின்றாள்.

இவர்கள் இருவரும் தன்னைப் பழிவாங்க வந்திருக்கும் மருமக்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களால் தன்னை ஒன்றும் செய்யமுடியாதென்று சிவனுக்கு அடுத்து எப்போது உயிர்த்திருக்கும் செம்புலி நம்புகின்றார். செம்புலியினூடாக பாம்புகளின் கதைகள் பெருகியபடியே இருக்கின்றன. அந்தக் கதைகளை, தன் முன்னால் மனிதர்கள் இருக்கும்போது மட்டுமில்லை, மனிதர்கள் இல்லாதபோதும் செம்புலி சொல்லிக்கொண்டே இருக்கின்றார். அதேபோல ஆயிரம் ஆண்டுகள் உயிரோடு இருக்கும் இரகசியத்தை இந்தப் பெண்களுக்குச் செம்புலி சொல்லத் தொடங்கினாலும், பிறகு இடைநடுவில் நிறுத்திவிடுகின்றார். திருமூலரின் கூடுவிட்டுப் பாய்தலைப் போலத்தான் உயிரைச் சுருக்கி வெவ்வேறு உடல்களிற்குள் பாய்கின்றார் என இந்தப் பெண்கள் சந்தேகிக்கவும் செய்கின்றனர்.

‘நீல அணங்கின் கதை’யில் வள்ளலார் வருகின்றார், சிலப்பதிகாரத்தின் கோவலனும், கண்ணகியும், மாதவியும், மணிமேகலையும் எதிர் பாலின அடையாளங்களை எடுக்கின்றனர். கண்ணனும், மாதவனும் பெண்மை கலந்த அறம் சார்ந்த ஆண்களென கோமுகி மனம் நிறைந்து சொல்கின்றாள். சிவனே நீக்கமற இந்தப் பிரதியில் நிற்கின்றார் என்றாலும், புத்தரும் பிரதியினூடு ஊடாடிக்கொண்டே இருக்கின்றார். இவ்வாறு எத்தனையோ விதமான தொன்மக்கதைகள் இதனூடாக மீள்வாசிப்புச் செய்யப்படுகின்றன. அல்ஜீரியனான இப்ராஹீமின் கோட்பாடுகள் எல்லாம் சிரிக்க மட்டுமல்ல எப்படிப் பெருங்கதையாடல்களை எள்ளல்கள் செய்யலாம் என்பதற்கும் அவை அருமையான உதாரணங்கள்.

ந்த நாவல் முழுதுமே புனிதம் எனக் கற்பிக்கப்பட்ட எல்லாவற்றையும் குறுக்கீடு செய்தபடி இருக்கின்றது. ஆரிய திராவிட மோதல்களுக்கு முன் அழிந்துபோன நாகர் இனம், தூய ஆரிய/வெள்ளை இனத்தை கலப்பினமாக்க முயற்சி செய்யும் வழிகளெல்லாம் வாசிப்பதற்குச் சுவாரசியமானது. புரட்சிக்காரர்கள் மீது அக்கறையை இப்பிரதி கொண்டாலும், அவர்களையும்  ஒருவகையில் எள்ளல் செய்கின்றது. திராவிட இனம் இன்று முன்னிறுத்தும் பெரியாரும் கூட அதிலிருந்து விதிவிலக்காக நிற்கமுடியாதே இங்கே இருக்கின்றார்,

ஒரு எளிய வாசிப்பிற்காய் ‘புனிதங்களைக் கட்டவிழ்த்தல்’ என்று இந்த நாவலை நாம் முன்வைக்கலாம். புனிதமோ, தூயதோ எல்லாமே கட்டமைக்கப்பட்டவையே. இவற்றின் நீட்சியிலிருந்துதான் பாஸிசம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் வரலாற்றின் ஒவ்வொருகட்டத்திலும் முளைத்தெழும்பியிருக்கின்றது. இதே புனிதம்தான் தங்களை உயர்நிலையாக்க பிறரை மற்றவராக்கியது/அந்நியராக்கியது. இந்த தூய்மைதான் மனிதர்களை இனங்களாகவும், நிறங்களாகவும், சாதிகளாகவும் பிரித்து தங்களுக்குள்ளேயே அடிபடவும், பிளவுபடவும் தொடர்ந்து தூண்டிக்கொண்டிருக்கின்றன.

“நான் ஒரு சாமான்யன். ராசராசனோ பேரரசன். என்னைப் பற்றிய செய்திகளைக் கதைகள் என்றால் பேரரசனைப் பற்றிய செய்திகளை வரலாறு என்பீர்கள். வரலாறு யாரையும் விடுதலை செய்யாது; வரலாற்றிலிருந்து வெளியேறுவதில்தான் விடுதலை வாய்க்கிறது. நான் வரலாற்றிலிருந்து வெளியேறியவன். என்னைப் பற்றிய கதைகளாலானவன். கதைகள் என்றென்றைக்குமான எதிர் வரலாறைக் கொண்டிருக்கும். நான் எது சொன்னாலும் அது புனைவுதான். உண்மையைப் பொய்யென்றாக்கினால் அதன் பெயர் புனைவு. பேரரசன் ஒரு பொய், நான் ஒரு புனைவு. உண்மை என்று ஒன்றுமில்லை."

ஆம், அதுபோலவே நமக்குக் கற்பிக்கப்பட்ட/கற்றுக்கொண்டிருக்கும் வரலாறுகளும், பின்பற்றிக்கொண்டிருக்கும் புனிதங்களும் கூட ஒருவகையில் புனைவுகளே. அதைக் கேள்வி கேட்டு குறுக்கிடுகின்ற ஒரு பனுவலாக இந்த நல்லபாம்பு என்கின்ற நீல அணங்கு இருப்பதால் அது இன்றைய சூழலில் மிக முக்கியமாகின்றது.
............................................................

(நன்றி: 'அம்ருதா' - சித்திரை, 2018)

'நல்லபாம்பு: நீல அணங்கின் கதை' யை இங்கே வாசிக்கலாம்:  https://rameshpredan.blogspot.com/2018/01/nallabambutale-of-blue-goddess-novel.html