கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சில 'அரசியல்' பிரதிகள்

Wednesday, March 07, 2012

1,
உலக வரைபடத்தை விரித்து வைத்தால் அதிலொரு சிறு தீவாக மிதக்கும் இலங்கை, பலருக்கு இதமான காலநிலையுள்ள கடற்கரைகள் கொண்ட ஒரு நாடாகத் தெரியலாம். .   ஆனால் இதைப் பூர்வீகத் தாயகமாய்க் கொண்ட  -என்னைப் போன்றவர்களுக்கு-  இலங்கை விதைக்கும் நினைவுகளோ வேறுவிதமானவை. அது போர் என்கின்ற, எதைக் கொண்டு கரைக்கவோ அழிக்கவோ முடியாத, சிவப்பும் கறுப்புமான வர்ணங்களைக் கொண்ட மாபெரும் துயரச் சித்திரம். இலங்கை ஆங்கிலேயரிடமிருந்து 1948ல் விடுதலைபெற்றதிலிருந்தே ஒரு கொந்தளிக்கும் எரிமலையாக இருந்து வந்திருக்கின்றது. எப்போது தணலடங்கிய குழப்பாய் இருக்கும், எப்போது சாம்பல் விலத்திக் கொதித்தெழும் என்பதை எவருமே அவ்வளவு எளிதாக எடைபோட்டும் விட முடியாது.

1956ல் தனிச்சிங்களமே கற்கலாமென்கிற சட்டமும் அதன் நிமித்தம் 58ல் நிகழ்ந்த கலவரமும் ஆங்கிலேயர் அகன்றபின்னும் இலங்கை அமைதியாய் இருக்கப் போவதில்லையென்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தியது. அதன்பின் 1977ல் நிகழ்ந்த கலவரமும், உச்சக்கட்டமாய் 83 கலவரமும் இலங்கையில் சிறுபான்மையினரின் இருப்பைக் கேள்விக்குரியதாக மாற்றியது. தனிச்சிங்களச் சட்டம் மூலம் வளர்க்கப்பட்ட சிங்களத் தேசியத்திற்கு எதிர்வினையாக முன்வைக்கப்பட்ட அன்றையகால தமிழ்த்தேசியமும் ஒற்றைப் படையாக இருந்ததால், நாம் இன்றும் 50 ஆண்டுகளுக்கு முன் எம் உரிமைகளுக்காய்த் தொடங்கிய அதே இடத்திலிருந்து இன்னமும் நகரமுடியாது உலகிலுள்ள எல்லோரிடமும் கருணையை யாசித்துக் கொண்டிருக்கின்றோம். 1983 கலவரம் பெரும் உணர்ச்சிப்பிளம்பைத் தமிழ் இளைஞர்களிடம் ஏற்படுத்த, வீங்கி வெடித்த இயக்கங்களுக்கு எல்லாம் இந்திய அரசு ஆயுதங்களைக் கொடுத்து தன் 'பெருங்கருணை'யைக் காட்டியது கடந்தகால வரலாறு.

ஒரு சிறு தீவில் ஆயுதங்களைப் பெறுவது என்பதே கடினமாயிருக்க, அளவற்ற ஆயுதங்களோடு திரிந்த இயக்கங்கள் தங்களில் வல்லவர் யாரென்ற போட்டியில் தங்களுக்குள்ளேயே ஜனநாயகமில்லாது அடித்துக் கொண்டதும், முந்திக்கொண்டவர் தப்பிக்கொண்டாரென விடுதலைப் புலிகள் தனிப்பெரும் இயக்கமாக ஈழத்தில் வளர்ந்ததும், பிறகு நடந்தவைகளும் நாம் அறிந்தவையே. என்றும் போல மக்கள் தனிமைப்பட்டுப் போனார்கள், எல்லா அதிகாரங்களுக்கு இடையில் அல்லாடி அல்லாடி நாளாந்த வாழ்வையே ஒரு யுகமாய்க் கழிக்கவேண்டிய இருண்ட காலம் இன்னமும் ஈழத்தில் இருந்து கொண்டுதானிருக்கிறது.

இப்போது நேரடியான ஈழத்து அரசியலை சற்று விலத்தி, அரசியலை முன்வைத்து எழுதப்பட்ட புனைவைகளைப் பார்ப்போம். இதில் என்னை வசீகரித்த மற்றும் என்னால் வாசிக்கப்பட்ட பிரதிகளைப் பற்றியே பேசப்போவதால் விடுபடல்கள் நிச்சயமிருக்கும் என்பதை முன்னரே நினைவூட்ட விரும்புகின்றேன். முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தினால் மட்டுமின்றி 1981ல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது உட்பட பல நிகழ்வுகளால் நம் ஒவ்வொருவரினதும் வாழ்க்கையையும் அரசியல்மயப்பட்டிருக்கின்றது.. ஆகவே ஈழத்தமிழர்களாகிய நாம் எழுதும் பிரதிகளும் அரசியலை நேரடியாகவோ மறைமுகமோ பேசும் என்பதை கூறித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.

2.
1960ம் ஆண்டு எழுதப்பட்ட மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு' நாவல், ஈழத்தில் சிங்களவர்Xதமிழர் இனமுரண்பாடுகள் தொடங்குகின்ற புள்ளிகளை முன்வைக்கின்றது. இந்த நாவலின் பின்னணியில் தனிச்சிங்களச் சட்டமும், 1958ம் நடந்த சிங்கள -தமிழ்க் கலவரமும் இருந்திருக்க்கின்றது. இப்பிரதியில் முக்கிய பாத்திரமான சிங்கராசன் 'நான் போராடுவேன், இல்லை நாம் போராடுவோம். நம் சந்ததியார் எல்லோரும் போராடுவோம். நமக்கு ஒரு நாடும் அரசும் ஒரு கூட்டாட்சியின் கீழ் தர மறுத்தால் ஒரு தனிநாடு அல்லது கடல் கடந்த ஒரு பரந்த தமிழ்நாட்டின் கூட்டாட்சியாவது அமைக்கவேண்டும். அதற்காகவது போராடுவோம்' என நாவலில் இறுதியில் கூறுகின்றார். இந்த வாக்கியங்களை நாவல் எழுதப்பட்ட அன்றைய காலத்தில் வைத்துப் பார்க்கும்போது எவ்வளவு விரைவாக இத்தகைய இறுதி முடிவுக்குப் படைப்பாளி வருகின்றார் என்பது சற்று வியப்பு ஏற்படத்தான் செய்கிறது. முக்கியமாய் ஒவ்வொரு விடயத்தையும் மிக நிதானமாய் முன் வைக்கக்கூடிய மு.தளையசிங்கத்திடமிருந்து வருகின்றது என்பதை அவதானிக்கும்போது எத்தகைய நெருக்குவாரத்திலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கவேண்டும் என்பதை உணரமுடியும். எனினும் மு.தளையசிங்கம் 60களின் பிற்பகுதியில் இனவாத சிங்களத் தேசியத்திற்கு எதிராக எழுந்த தமிழ்த் தேசியமும் ஒருவகை ஒற்றைத்தன்மைக்குள் போவதைத் தனது 'மெய்யுள்' கட்டுரைகளில் பின்னாட்களில் எச்சரித்தாலும் 60களில் அவர் எழுதிய 'ஒரு தனி வீடும்', அவரது வேறு சில சிறுகதைகளும் இருவேறு தேசிய இனங்களின் இருப்புக்கள் இனி அமைதியாக இருக்கமுடியாது என்பதைக் கட்டியங்கூறுவதாய் அமைகின்றன.

மு.தளையசிங்கத்திற்கு சற்றுப் பின்னராக நாவல் உலகினுள் நுழைகின்ற கே.டானியல் வர்க்கப் போராட்டங்களினூடே இந்த இனச்சிக்கல்கள் தீர்க்கமுடியுமென்கிற அவதானங்களைத் தனது நாவல்களான 'பஞ்சகோணங்க'ளிலும், 'போராளிகள் காத்திருக்கின்றனர்'களிலும் வைக்கின்றார். கே.டானியலின் பிரதிகளில் அவர் நம்பிய கருத்தியல்கள் முன்னிலைப்படுத்தப்பட்டாலும் அதனூடு அவர் முன்வைக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகளும், சுரண்டல்களும் எவராலும் எளிதாக ஒதுக்கித்தள்ளவே முடியாதவையே.

1977ம் ஆண்டு கொழும்பு வரை சென்று தீண்டிய கலம்பகத்தைத் தொடர்ந்து 'லங்காராணி' என்கின்ற கப்பலில் யாழை நோக்கிச் செல்லும் கொடும் பயணத்தை அருளர் எழுதுகின்றார். இலங்கை என்ற நாட்டில் தமிழர்களின் இருப்பென்பது எப்போதும் நிச்சயமற்றதாய் இருக்கின்றது என்பதை அகதிகளை ஏற்றிச் செல்லும் கப்பலிலிருக்கும் பாத்திரங்கள் பதிவு செய்கின்றன. கப்பல் பயணம் முடியும்வரை அதிலிருப்பவர்கள் பத்திரமாகப் போய்ச் சேர்வார்களா என்ற பதற்றத்தைத் தந்தபடி நகர்கிறது 'லங்காராணி'யின் பயணம்.

1983ல் கறுப்பு ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து பல்வேறு ஆயுத இயக்கங்கள், இந்திய அரசின் ஆயுத வழங்கல்களுடன் புற்றீசல்களாய் எழுவதும், அவை காலப்போக்கில் தன்னளவில் உள் ஜனநாயகமற்றுப் போனதும் கடந்த கால வரலாறு. அந்தவகையில் ஒருகாலகட்டத்தில் பெரும் இயக்கமாய் இருந்த புளொட்டின் இன்னொரு முகத்தைக் காட்ட கோவிந்தன் 'புதியதோர் உலகத்தை' எழுதுகின்றார். தமிழ்மக்களுக்காய்த் தனிநாடு பெறப் போராட புறப்பட்ட இயக்கம் எப்படி தனக்குள்ளேயே ஜனநாயகமற்றுப் போவதையும், தமிழ்நாட்டில் இயங்கிய புளொட்டின் சித்திரவதைக் கூடங்களையும், அவற்றுள் பலியாகிப் போனவர்களையும், தப்பிப் பிழைத்தவர்களையும் கோவிந்தன் 'புதியதோர் உலகத்தில்' ஆவணப்படுத்துகின்றார்.

செழியனின் 'ஒரு மனிதனின் நாட்குறிப்பு'களில்,  எப்படி ஓர் இயக்கத்தைச் (ஈ.பி.ஆர்.எல்.எப்) சேர்ந்த மூன்று நண்பர்கள் இன்னொரு இயக்கத்தால் (விடுதலைப்புலிகளால்) கொல்லப்படுவதற்குத் தேடப்படுகின்றார்கள் என்பதை மிகுந்த பதற்றமான சூழ்நிலையில் வைத்து எழுதப்பட்டிருக்கின்றது. உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அந்த மூன்று நண்பர்களுக்கும் தப்பிப் பிழைக்கும் ஒவ்வொரு நாளும் யுகங்களாய் மாறுவதை வாசிக்கும் நம்மாலும் உணரமுடிகின்றவளவுக்கு செழியன் இப்பிரதியில் மாதம்/திகதியிட்டு எழுதியிருப்பார். அண்மையில் இப்பிரதியில் விடுபட்ட சில நிகழ்வுகளையும் இணைத்து 'வானத்தைப் பிளந்த கதை'யாக செழியன் கனடாவில் வெளியிட்டிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இதே காலத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த மலரவன் எழுதுகின்ற 'போருலா' என்கிற பிரதி வெளிவருகின்றது. இதில் மணலாறிலிருந்து மாங்குளம் இராணுவ முகாமைத் தாக்குவதற்காய் காடுகளினூடு நகர்கின்ற போராளி/களின் வாழ்வு முறை பதிவு செய்யப்படுகின்றது. பின்னர் 2001ல் ஈழத்தில் இருந்த சமாதானக் காலத்தில் மலைமகள் உள்ளிட்ட சில பெண் போராளிகளால் தொகுக்கப்பட்ட 'விழுதுமாகி வேருமாகி' ஆயுதப்போராட்டத்தில் பெண்களின் வகிபாகத்தைப் பதிவு செய்கின்றது. ஜெயசுக்குறு எனப் பெயரிடப்பட்டு -இலங்கை இராணுவம் வவுனியாவிலிருந்து யாழ் நகரை இணைக்க- ஏ9 நெடுஞ்சாலையைக் கைப்பற்றுவதற்கென பல்வேறு திசைகளில் தொடங்கிய இராணுவ நகர்வுகளை முறியடித்த சம்பவங்கள் இதிலே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோன்று தமிழ்க்கவியின் 'இனி வானம் வெளிச்சிரும்' நாவல், போராட்டத்திற்கு தன் பிள்ளைகளைக் காவுகொடுத்து தன்னையும் போராட்டத்தில் இணைந்துகொள்கின்ற ஒரு தாயின் மனோநிலையில் எழுதப்பட்டது என்றவகையில் முக்கிய பிரதியாகின்றது.

தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரமும்', ஜந்து பெரும் பகுதிகளாய் வெளியிடப்பட்ட 'கனவுச் சிறை'யும் ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் தொடக்க காலங்களிலிருந்து அண்மைக்காலம் வரை  (1981-2001)விரிகின்ற நாவல்களாகவும், வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புகின்றவர்கள் விரிவாக வாசிப்பதற்கு உதவக்கூடியதாகவும் இருக்கின்றன. எவ்வித ஆர்ப்பாடமுமோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முனைப்போ அற்ற தேவகாந்தனின் படைப்புக்களுக்கு அதற்குரிய இடம் இன்னமும் தமிழ்ச்சூழலில் வழங்கப்படவில்லையென்பது வருந்தப்படக்கூடிய ஓரு விடயமே. புலம்பெயர்ந்து எழுதத்தொடங்கிய ஷோபாசக்தியின் 'கொரில்லா' மற்றும், 'ம்'  புனைவுகள் அது எழுதப்பட்ட விதத்தில், இன்னொரு தளத்திற்கு நகர்த்தக் கூடியதான அழகியலும் எள்ளலும் கொண்டதாக அமைந்தவை. இதேபோல புலம்பெயர்ந்து நடேசன் எழுதிய 'வண்ணாத்திக்குளம்' சிங்கள-தமிழ் உறவை முன்னிலைப்படுத்தி அரசியலைப் பேச முயன்றாலும் இத்தளத்தின் பின்னணியில் எழுபதுகளில் அருள் சுப்பிரமணியம் 'அவர்களுக்கு வயது வந்துவிட்டது' என்பதை எழுதியிருக்கின்றார் என்பதையும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

இதே காலகட்டத்தில் இலண்டனிலிருந்து விமல் குழந்தைவேல் 'வெள்ளாவி'யையும், அண்மையில் 'கசகறணத்தை'யும் எழுதி இருக்கின்றார். இரண்டுமே அரசியல் பிரதிகளாகவே இருக்கின்றன. முக்கியமாய் கசகறணம் கிழக்கில் இருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகங்களின் இருந்த அன்னியோன்னிய உறவையும் அது எவ்வாறு பின்னாட்களில் வன்மமாக மாறுகின்றன என்பதையும் பேசுகின்றது. எனினும் ஒரு நாவல் என்றவளவில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தாது  சிலவிடயங்களை மட்டும் ஆவணப்படுத்துகின்றது என்பதோடு இறுதியில் சுருங்கிப்போவதையும்  குறிப்பிட்டாக வேண்டும். இந்தக் காலங்களிடையே எஸ்.பொன்னுத்துரை(எஸ்.பொ) 'மாயினி' என்கிற நாவலை வெளியிடுகின்றார். ஈழத்து எழுத்தாளர்களிடையே தனித்துவமான மொழியையும், தன் புனைவுகளில் பெரும் பாய்ச்சல்களையும் ஏற்படுத்தியவருமான எஸ்.பொ, 'மாயினி'யை ஒரு தமிழ்த்தேசியப் பிரச்சார நாவலாக கருத்துக்களையும் சம்பவங்களையும் கோர்த்து மட்டும் எழுதியிருப்பது வாசிப்பவருக்கு ஏமாற்றத்தையே கொடுக்கச் செய்யும்.

இதேசமயம் நூறு பக்கங்களுக்குள் அடங்கக் கூடியதாக வந்திருந்தாலும் மெலிஞ்சி முத்தனின் 'வேருலகு' உள்ளடங்கிய குரலில் கறாரான அரசியலை மிகுந்த அழகியலோடு முன்வைக்கின்றது. இதுவரைகாலமும் அவ்வளவு விரிவாக முன்வைக்கப்படாத நாட்டின் உள்ளேயே அகதியாக இடம்பெயரும் வாழ்க்கையின் துயரப்பாடுகளை 'வேருலகு' முன்வைக்கின்றது மட்டுமின்றி எவ்வித இயக்கதையும் சேராத ஓர் அகதியின் பார்வையிலிருந்தும் இக்குறுநாவல் எழுதப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இறுதியில் அண்மையில் வெளிவந்த சயந்தனின் 'ஆறா வடு' இந்திய அமைதிப்படை ஈழத்திற்கு வருகின்ற 87 காலப்பகுதியிலிருந்து 2001ல் சாத்தியமான சமாதானக்காலம் வரை பதிவு செய்கின்றது. இது ஒரு கடற்பயணத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருந்தாலும், யாழில் 1995ல் நிகழ்கின்ற பெரும் இடப்பெயர்வு பதிவு செய்யப்படுவதோடு சமாதானக் காலத்தில் இராணுவம் சூழ்ந்த யாழில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போராளிகளையும், அவர்களின் மனங்களில் சமாதானக்காலம் ஏற்படுத்துகின்ற மாற்றங்களையும் உன்னிப்பாக முன்வைக்கின்றது. இதுவரை சொல்லப்பட்ட கதைகளைத் தாண்டி, எண்பதுகளுக்குப் பின், வரும் தலைமுறையின் வாழ்க்கை இன்னொரு தளத்திற்கு நகர்ந்திருக்கின்றது என்பதற்கு 'ஆறாவடு' நல்லதொரு உதாரணம். எனினும் இந்நாவல் நகர்கின்ற காலப் பகுதியில்தான் வடக்கிலிருந்து முஸ்லிம்களால் துரத்தியடிக்கப்பட்டார்கள் என்பதையும், அது 'ஆறா வடு'வில் பதிவு செய்யப்படவில்லையென்பதையும் பலவீனமாகக் கொண்டுதான் இந்நாவலைப் பற்றிய ஒரு வாசிப்பைச் செய்யமுடியும்.

3.
போர்க்காலச் சூழ்நிலைக்குள் வாழாத பலருக்கு மேற்குறித்த பிரதிகள் புலம்பல் இலக்கியமாகவோ, பிரச்சார அறிக்கைகளாகவோ அல்லது அழகியலற்றதாகவோ தெரியவும் கூடும். ஆனால் யுத்ததிற்குள் வாழ்ந்த ஒருவருக்குத் தப்பிப் பிழைத்தல் என்பது எவ்வளவு சாகசமென்பது தெரியும்.  சொல்லப்படும்  கதைகள் ஒவ்வொன்றின் பின்னாலும், சொல்லாமல் விடப்பட்ட கதைகளின் துயரமும் அதற்குள் கவிழ்ந்திருக்கக் கூடிய மவுனமும் நன்கு புரியும். மூன்று தசாப்த போருக்கிடையில் அல்லாடிய தலைமுறைகள் ஒவ்வொன்றும் மரணத்திற்குள்ளும் வாழ்வதற்கான சிறு பொறியை நம்பிக்கை தளராது தொடர்ந்தேந்தியே வந்திருக்கின்றது. மரணத்தை விட இந்த வாழ்வு மகத்தானது எனக் கூறவே இந்த ஒவ்வொரு புனைவுகளும் முயற்சித்திருக்கின்றன.

எத்தனையோ பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாகிப் பலியாகி காலத்தில் காணாமற்போய்விட இன்னமும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருப்பது என்பது ஒரு பெரும் கனவைப் போலத்தான் தோன்றுகின்றது.  தங்களது துயரங்களை, ஆற்றாமைகளை, நம்பிக்கைகளை, துரோகங்களை, தியாகங்களை, நட்டாற்றில் விடப்பட்டதைத் தனக்குரித்தான மொழியில் எழுத விழையும்போது அவை 'புலம்பல்' இலக்கியமாகவே சிலருக்கு இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சிறுவயதிலிருந்தே போரையும் இழப்பையும் அகதி வாழ்க்கையையும் அறிந்த என்னைப் போன்றவர்களுக்கு, இன்னமும் வாழ்வின் மீதான நம்பிக்கையை இழக்கக் கூடாதென தோள் மீது கரம்போட்டு வரும் தோழமையைப் போல இந்த பிரதிகளில் சில இருக்கின்றன.

சிலவேளைகளில் இவை பனிபொழியும் பின்னிரவுக் காலங்களில், கடந்த காலங்களை நினைவூட்டி, யன்னலினூடு நிசப்தமான தெருவை நீண்டநேரமாய் வெறித்துப் பார்க்கச் செய்பவையாகவும் ஆக்கிவிடுகின்றன. நடந்துசெல்லும் ஒவ்வொருவரின் காலடித்தடங்களையும் பெரும்பனி அழித்துவிட்டுச் செல்கின்றமாதிரி எனக்குப் பிரியமான மனிதர்களும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் போரின் நிமித்தம் இவ்வாறுதான் சடுதியாய்க் காணாமற்போயிருக்கின்றனர். இதன் நீட்சியில் கவிழும் துயரிலிருந்தும் வெறுமையிலிருந்தும் விடுபடல் என்பது அவ்வளவு சுலபமானதும் அல்ல.


(பெப்ரவரி 12,2012)
நன்றி: அம்ருதா (மார்ச், 2012)
நன்றி: நாவல்களின் முகப்பு கூகுள் தேடல் மற்றும் அவற்றிற்குரிய தளங்கள்