கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வரலாற்றின் வழித்தடங்களில்...

Tuesday, March 30, 2021

-குமிழியையும், நீண்ட காத்திருப்பையும் முன்வைத்து-


"History is unkind to those it abandons, and can be equally unkind to those make it."


-Salman Rushdie (Two Years Eight Months and Twenty-Eight Nights)


1.


ரஷ்யப் புரட்சி பற்றியும், அதன் முன்னணிப் புரட்சி வீரர்களான செம்படை (red army) பற்றியும் நாம் விரிவாக அறிந்திருப்போம். அவர்களின் புரட்சிக்கால நினைவுகள், உலக மகா யுத்தங்களில் அவர்களின் மிகப்பெரும் பங்களிப்புக்கள் குறித்து எழுதப்பட்ட நூல்களினூடாக நாங்களும் செம்படைகளில் ஒருவராக மாறியிருப்போம். புரட்சி முடிவடைந்த பின், செம்படையினர் நெடும் மலைகளுக்கும், கொடும் பனிப்பாலைகளுக்கும் இடையிலிருந்த குக்கிராமங்களுக்கும் சேவையாற்ற அனுப்பப்பட்டதையும் வியந்து பார்த்திருப்போம். 


புரட்சி நடக்கும் வரை தொழிலாளர்களாலும், விவசாயிகளும் வழிநடத்தப்பட்ட இப்படையை பின்னர் லியோன் டிராஸ்கி உழைப்பாளிகளுக்கு இருக்கும் 'அதிகாரத்தை' விலத்தி, முறைப்படுத்தப்பட்ட 'இராணுவமாக' அமைப்புப்படுத்துகிறார். அவ்வாறு ஒழுங்குபடுத்திய டிராஸ்கியையும், உள்கட்சி சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டி பல்லாயிரக்கணக்கான செம்படைகளையும், ஸ்டாலின் பின்னாட்களில் இல்லாமலும் செய்தார் என்பது வேறு கதை. புரட்சியின்போது லெனின், ஜார் மன்னனை மட்டுமில்லை,  அவரது குடும்பத்தினரையும் கழுவிலேற்றியதை அவ்வாறு எளிதில் வரலாற்று மறக்கவில்லை ஸ்டாலினது குலாக் கடுழீயச் சிறை, உள்ளிருந்தவர்களையும் எதிராளியாக்கப் பார்த்ததன் விளைவென எடுத்துக்கொள்ளலாம். இப்போது ரஷ்யப்புரட்சி, புரட்சியின் பின் அங்கே நிகழ்ந்தவற்றை, அதன் அரசியல் சரி/பிழைகளைச் சற்று ஒதுக்கிவைப்போம்.


ஒருகதைக்கு ரஷ்யப் புரட்சி தோற்றிருந்தால், நாம் இன்னும் வியந்துகொண்டிருக்கும் செம்படைகளின் வீரம்/அர்ப்பணிப்பு என்பவற்றுக்கு இன்று வரலாற்றில் என்ன இடம் இருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? அப்படித் தோல்வியடைந்திருந்தால் நாம் வாசித்த புத்தகங்களில் எழுதப்பட்டவை எல்லாம் வேறு விதத்தில்தான் எழுதப்பட்டிருக்குமா அல்லது அப்படி எழுதியிருந்தாலும் நாம் அதை வாசிக்கும்போது - வெற்றியடைந்த புரட்சி/உலகமகாயுத்த எதிர்ப்பு- என்ற வாசிப்பை விடுத்து வேறு விதமாகத்தான் செம்படைகளை வாசித்திருப்போமா? 


அதை வேறுவிதமாக, இன்று நமது ஆயுதமேந்திய ஈழப்போராட்டம் வெற்றியடைந்திருந்தால் அல்லது ஆகக்குறைந்தது சுயநிர்யணத்துடன் கூடிய அதிகாரப் பரவலாக்கத்துடன் சுமுகமாய்  நமது ஆயுதப்போராட்டங்கள் முடிந்திருந்தால் நாம் எழுதும் ஈழப்போராட்ட வரலாறுகள் வேறு விதத்தில் எழுதப்பட்டிருக்குமா? அல்லது இவ்வாறு எழுதப்பட்டிருந்தாலும் - வெற்றியடைந்த யுத்தத்தின் முன் - இதெல்லாம் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டிருக்குமா? இன்றைக்கு ஸ்டாலினின் கொடுங்காலம் பேசப்பட்டாலும் 'என்னவென்றாலும் ரஷ்யாவை இறுக்கமான தேசியத்துக்குள் கட்டமைத்தவர், ஹிட்லரின் பாஸிச நாஸிப்படைகளுக்கு ஸ்டாலின்கிராட்டின் சமாதி கட்டியவர்' என்று ஸ்டாலினும் ஏதோ ஒரு தருணத்தில் வியந்து பலரால் நினைவுகூரப்படுகின்றார் அல்லவா?


ஆகவேதான் வரலாறு குழப்பமானது மட்டுமில்லை வரலாற்றை எழுதுவது என்பதும் சிக்கலானதுதான். நமது ஈழப்போராட்டத்தின் ஆயுத வரலாறு என்பது தொடக்கத்திலேயே உள் இயக்க/ சகோதரப் படுகொலைகளுடன் தொடங்கியிருக்கின்றது. ஆகவே தொடக்கமே சிக்கலானது. அப்போது இயக்கத்தைத் தொடங்கியவர்களும் இருபதுகளிலும் இருந்தவர்கள்.  இவர்களை சரியாக வழிநடத்தாமல் ஒருபக்கம் எமது தமிழ் அரசியல்வாதிகள் உசுப்பேத்தினார்கள் என்றால், இன்னொருபுறம் இந்திய அரசு தனது நலன் சார்ந்து ஆயுதங்களையும், பயிற்சிகளையும் அள்ளியும் கொடுத்தது. இயக்கங்கள் வீக்கமடையத் தொடங்கிய காலத்துக்கு முன்,ஒரளவு இடதுசாரி/களப்பணிகளுடன் இயங்கியவர்களும் பின்னர் அமைதியாக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்களத்திலிருந்து அகற்றப்பட நமது இயக்கங்கள் அனைத்தினதும் தலைமைகள், அதிகாரம் குவிந்த மையங்களாக  இயக்கங்கள் தொடங்கிய காலங்களிலேயே மாறிவிட்டிருந்தன என்பதும் கசப்பான உண்மை.


2.


அன்று - எழுபது/எண்பதுகளில்- இருபதுகளுக்குள்ளும், இருபதையொட்டிய வயதில் இருந்தவர்களே இயக்கங்களைத் தொடங்கியவர்களும், இணைந்தவர்களாகவும் இருந்தார்கள். அந்த 'முதிர்ச்சியற்ற' வயதின் போதாமைகளும், எதையாவது செய்தாகவேண்டும் என்ற உத்வேகமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அன்றைய சூழல் அப்படிப் பலரை உந்தித்தள்ளத்தான் பலர் இயக்கங்களில் இணைந்துகொண்டார்கள். பிறகு நடந்தது எல்லாமே கசப்பான வரலாற்றுப் பக்கங்களாய் நம்முன்னே விரிந்துகிடக்கின்றன.


இவ்வளவு கசடான பக்கங்களாய் நமது ஆயுதப்போராட்டம் இருந்ததற்காய், ஒருவர் அன்று வளர்த்த கனவை- ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதல்- கொடுங்கனவாக நினைத்துப் பார்க்கத் தேவையில்லை. காலம் நம்மை இப்படி ஆக்கியது என்பதற்காய், அன்று துணிந்துகொண்ட இலட்சியத்தில் ஒரு அப்பாவித்தனத்தை ஏன் நாம் வேண்டுமென்றே ஒளித்துக்கொள்ளவேண்டும். ஆனால் இன்று நமது போராட்டச் சூழலை வைத்து எழுதப்படுகின்ற  தன் வரலாற்று பனுவல்கள் அனைத்துமே குற்றவுணர்வுடனேயே எழுதப்படுகின்றன. அதை ஒருவகையில் தன்னை எழுதித் தன்னிடம் வைத்திருக்கும் ஆற்றொண்ணவொண்ண துயரங்களைக் கடத்தல் என்பதென ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி எழுதுதல் பலருக்கு ஒரு தெரபியாக இருப்பதை நாம் மறுக்கத் தேவையில்லை. ஆனால் trauma இற்குள் இருப்பவர்க்கு traumaவைப் பேசுதல் முதல் கட்டமெனில், அவர்களின் கடந்தகாலத்தில் நடந்த நல்ல விடயங்களைப் பேசுவது என்பது அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான ஒரு வழியாகவும் இருக்கும்.


அதற்காகத்தான் 'குமிழி'யையும், 'The long watch' (தமிழில் நீண்ட காத்திருப்பு) என்ற இரண்டு தன் வரலாற்றுப் பனுவல்களை எடுத்துக்கொள்கின்றேன். குமிழி புளொட்டில் 1985-1986 இல் இணைந்து அதன் உள்ளே இயங்கிய கொடூரமான நிகழ்வுகளைப் பார்த்து அந்த இயக்கத்தைவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய ஒருவருடைய (பல்வேறு பாத்திரங்களுள்ள தன்னிலைகளால் இங்கே நான் என்னும் கதைசொல்லி இவற்றைச் சொல்கின்றார்) அனுபவங்களை புனைவின் மொழியில் சொல்கின்றது. 'நீண்ட காத்திருப்பு' என்பது ஒரு இராணுவக்கப்பலுக்குப் (சாகரவர்த்தனா) பொறுப்பான அதிகாரியான ஒருவர்,  அவரின் கப்பலைப் புலிகள் தகர்த்து அவரை எட்டு வருடங்கள் சிறை வைத்த அனுபவங்களைப் பேசுகின்ற ஒரு நினைவுகளின் தொகுப்பாகும். 


இந்த இரண்டு நூல்களையும் அடுத்தடுத்து வாசித்து தற்செயலானது என்றாலும் இரண்டுமே  trauma பற்றிச் சொல்கின்றது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். 'குமிழி'யில் ஒருவர் இரண்டு வருடங்கள் இயக்கம் ஒன்றில் பார்த்த அனுபவங்கள் என்றால், 'நீண்ட காத்திருப்பில்' ஒருவர் எட்டு ஆண்டுகள் சிறையில் பெற்ற அனுபவங்களின் தொகுப்பாகும். 


இவ்விரு அனுபவங்களும், ஒருவருக்கு பல்வேறு உளவியல் சிக்கல்களைக் கொடுத்திருக்கின்றது என்றாலும், 'நீண்ட  காத்திருப்பில்' அஜித் போயகடா அதை மீள நினைத்துப் பார்ப்பதினூடாக அந்தத் துயரத்தை ஒருவகையில் கடக்கமுயல்கின்றார் என்பதை அவர் கதை சொல்லும் தொனியில் கண்டடைய முடியும்,  தனக்கு நிகழ்ந்த கடும் விடயங்களைக் கூட எந்தப் பக்கமும் சாராது (அல்லது அளவுக்கதிகமாய் அந்த நிகழ்வுகளில் அரசியல் சரிபிழைகளைப் பேசாது) தான் உணர்வதைச் சொல்வதால் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக விரிகின்றது.


இப்போது 'குமிழி' உள்ளிட்ட நமது ஆயுதப்போராட்டம் பற்றிய இவ்வாறான நூல்களில் ஏன் அளவுக்கதிகமாய் குற்றவுணர்வு மேலோங்கி நிற்கின்றது என்பது குறித்து யோசித்துப் பார்க்கவேண்டியிருக்கின்றது. ஏன் அஜித் போயகொடா இராணுவத்தை விமர்சித்தாலும், தான்  தனித்த ஒரு மனிதன் என்கின்ற ரீதியில் கதை சொல்லும்போது, நமக்கு இராணுவம் செய்த கொடும் நினைவுகள் உடனே நிகழ்வுக்கு வராது அதனோடு ஒன்றிப்போகமுடிகின்றதே? அது ஏன்? எப்படி அவரால் இவ்வாறான மனதைத் தொடும் ஒரு கதையை - எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை- பெற்றபோதும் சொல்லமுடிகின்றது என்ற திசையில் வைத்து நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.


அஜித் போயகொட புலிகளால் விடுவிக்கப்படும்போது கிட்டத்தட்ட அவரவர் கால அளவுக்கு ( 8 ஆண்டுகள்) இலங்கைச் சிறையில் வைக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கியஸ்தவரான கெனடி என்பவரும் கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்படுகின்றார். இன்று அந்தக் கெனடி இருந்திருந்தால் எப்படி தன் சிறைக்கால அனுபவங்களை எழுதியிருப்பார். அவரும் தோற்றுப்போன போரின் சாட்சி என்ற குற்றவுணர்வுடந்தான் அவரது தன் வரலாற்று சிறை அனுபவங்களை எழுதியிருப்பாரா? 


இவ்வாறு சிந்திக்கக் கோருவதன் நோக்கம், நமது இயக்கங்களின்/ஆயுதப்போராட்டங்களின் கொடூரங்களைப் பேசுவதைத் தவிர்ப்பதோ அல்லது அவை சென்று சேர்ந்து திசைகளின் துயரங்களைப் பேசாமல் இருக்கவேண்டுமோ என்பல்ல அர்த்தம். ஆனால் நாம் எல்லோரும்  ஏன் ஒரேமாதிரியான வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பதைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பதற்காக இதைச் சொல்கின்றேன்.


3.


குமிழியையோ, புதியதோர் உலகையோ, இன்னபிற நூல்களையோ வாசிக்கும்போது, இதில் கொடுமையானவர்களாக/சித்திரவதையாளர்களாக இருப்பவர்களின் நிலையிலிருந்து அவர்களின் சார்பிலிருந்து ஒரு நூல் எழுதப்பட்டால் எவ்வாறு இருக்குமெனவும் யோசித்துப் பார்த்தேன். அவர்களும் ஒருவகையில் எல்லோரையும் போன்று தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற ஒத்த கருத்தோடுதானே இயக்கங்களுக்குப் போயிருப்பார்கள். அவர்களுக்கு என்றும் ஒரு குரல் இருக்குமல்லவா? அவர்கள் ஏன் அந்த இடத்தைச் சென்றடைந்தார்கள் என்பதற்கும் ஒரு கதையிருக்கும் அல்லவா? 


இதையெல்லாவற்றையும்விட, இந்தக் குற்றவுணர்வும், செய்துவிட்ட வாதையுணர்வும் அவர்களுக்கு அல்லவா எல்லோரையும் விட மிகுந்த தொந்தரவாக தொடர்ந்து அவர்களின் வாழ்விற்குள் சுழன்றாடியபடி இருக்கும். அப்படியெனில் அவர்கள் எப்படி தமது  traumaஇற்குள் இருந்து மீண்டிருக்கின்றார்கள் அல்லது மீளாமலே தமது வாழ்நாளைக் கழித்துக்கொண்டே இருக்கின்றார்களா? அவர்களும் தமது தன் வரலாற்றுக் கதைகளை எழுதவேண்டும். ஆகக்குறைந்தது தமது சொந்தப்பெயர்களிலோ/இயக்கப்பெயர்களிலோ எழுதாவிட்டால் கூட, அவர்கள் தமது குற்றங்களிலிருந்து நீங்குவதற்காய்/பாவமன்னிப்புக்களைப் பெறுவதற்காய் ஏதோ ஒரு புதிய புனைபெயரிலாவது எழுதலாம்.  


உதாரணத்துக்கு அஜித் போயகொடா தம்மைச் சிறையில் வைத்த காலங்களில் இருந்த பதினம் விசாரணையாளன் ஒப்பிலான் என்பவரைப் பற்றி நமக்குக் கூறுகின்றார். அவர் புலிகளின் புலனாய்வளராக இருந்துகொண்டு இந்திய றோவினது உளவாளியாகவும் இருந்திருக்கின்றார். பின்னர் இலங்கையிலிருந்து தப்புவதற்காக இலங்கை அரசுக்கும் புலிகளுக்குள் இருந்து வேவுபார்த்தாகவும் கூறுகின்றார். இந்த ஒப்பிலான் (அவருக்கு வேறு ஒரு பெயரும் இருக்கின்றது. அது இங்கே வேண்டாம்) அஜித் போயகொட சிறையிலிருந்து வெளிவந்தபின் (அநேகமாய் போர் முடிந்தபின்னதாக இருக்கவேண்டும்) கனடாவிலிருந்து முகநூலில் தன்னைத் தொடர்புகொண்டதாகவும், ஒப்பிலான் தனது கதைகளைச் சொல்லித்தான் தப்பித்திருப்பார் என்றும் போயகொடா தனது நூலில் சந்தேகம் தொனிக்க எழுதிச் செல்கின்றார்.  இந்த ஒப்பிலான் தனது அனுபவங்களை எழுதினால் இன்னொருவகையாக இருக்கும் அல்லவா?


நமக்கு முதல் எதிரியாய், பல தசாப்தங்களாய் நம்மை ஒடுக்கிய/சித்திரவதைகள் செய்த அரசை/இராணுவத்தை இன்று ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொண்டுவிட்ட, அவர்களையும் சக மனிதர்களாய் மதித்து, எமக்கு இழைத்த எல்லாக் குற்றங்களுக்கும் மேலாய் பழகத் தொடங்கிவிட்ட இந்தக் காலத்தில், சகோதரப்படுகொலைகளைச் செய்தவர்களும்/சித்திரவதையாளர்களாக மாறியவர்களும் ஓடி ஒளிந்துகொள்ளத்தேவையில்லை. இற்றைக்கு இவ்வாறு சித்திரவதைக்குட்பட்டவர்களோ, இவர்களினால் தமது குடும்ப உறவுகளைப் பலிகொடுத்தவர்களோடு 'கண்ணுக்கு கண்' கேட்கும் பழிவாங்கும் நிலையில் இருக்கப்போவதில்லை. அவர்கள் தமக்கும் தமது உறவுகளுக்கும் ஏன் இவ்வாறு நடந்தது எனக் கேட்கவும் அந்தத் துயர்களுக்கு ஓரிடத்தைக் கொடுத்துவிட்டு நகரக்கூடியவர்களுமாகவே பெரும்பாலும் இருப்பார்கள். ஒருவகையில் நெல்சல் மண்டேலா சொன்னதுமாதிரி ' உங்களை மன்னிக்கின்றோம், ஆனால் நடந்தவற்றை மறக்கமாட்டோம்' என்ற மனோநிலைக்கு பாதிக்கப்பட்டவர்கள் வந்திருக்கவும் கூடும்.


இன்றையகாலத்தில் நம் ஆயுதப்போராட்டம் சார்ந்து எழுதப்பட்டும் தன் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவை  இன்னொரு போராட்டத்தைத் தொடங்குவதற்கான நம்பிக்கையைத் தராவிட்டாலும்,  இனியும் ஆயுதப்போராட்டங்களைத் தொடங்க விருப்பமுள்ளவர்க்கு  எவ்வளவு ஒடுக்குமுறை ஈழத்தில் இருந்தாலும் ஆயுதங்களைத் தூக்குவதற்கான காலம் இனியெப்போதுமே வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யக்கூடியதாக இருக்கின்றன என்பது முக்கியமானது. அத்துடன் ஆயுதங்களைத் தூக்கிய எந்தப் போராட்டத்துக்கும் இவ்வாறு உட்படுகொலைகளையும், எதிரியென/உளவுபார்ப்பவர்களை உறுதியான தகவல்களே இல்லாது போட்டுத்தள்ளிய வரலாறுகளும் இருப்பதை, உலகப் புரட்சி வரலாறுகளை சும்மா மேய்ந்து பார்த்தாலே நம்மெல்லோருக்கும் புரியும். ஆகவே நமது ஆயுதப்போராட்டங்கள் தவறான பாதையில் போனது என்றாலும் அதை உலகப் புரட்சிப் போராட்டங்களின் முன்வைத்துப் பார்த்து இவ்வாறு தன் வரலாற்று புதினங்களை எழுத முயற்சி செய்யும்போது அவை நமக்கு வேறொரு பரிணாமத்தைத் தரவும் கூடும்.


இவ்வாறு தன் வரலாற்றை எழுதுபவர்கள் அல்லது அனுபவங்கள் உள்ளவர்களிடம் நான் தனிப்பட்ட உரையாடல்களில் ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு. நீங்கள் அன்றைய 20களில் அவ்வளவு முதிர்ச்சியற்றுத்தான் இருந்தீர்கள், இப்போது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலே ஆனபின்னர் என்னமாதிரியான போராட்டவடிவத்தின்/வடிவங்களின் மூலம் நாம் உரிமைகளைப் பெற்றுக்கொண்டிருக்கலாம் என நம்புகின்றீர்கள் எனக் கேட்பேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழிகளைத் தங்களால் இயன்றளவு சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கே இது hypothesis என்ற சந்தேகம் இருப்பதை அவர்களின் பதில்களால் அறியமுடியும். ஒரு தெளிந்த பாதை இவ்வாறான விடயத்துக்கு இருப்பதுமில்லை.

தத்துவத்திற்கும், கனவுக்கும், செயற்பாட்டுக்கும் ஒரு பெரும் தொலைவு இவற்றுக்கிடையில் இருப்பதை நாம் அறிவோம். ஏற்கனவே நடந்துவிட்ட  கியூபாப் புரட்சியைப் பார்த்துவிட்டு  சேகுவேராவின் 'கொரில்லாப் போரை' வாசித்து மட்டும் அந்தப் பாதையை நம்பிச் செல்லவும் முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதிய மார்க்ஸ் கூட புரட்சி இன்னொரு நாட்டில் நடக்குமென எதிர்வுகூற,  வேறொரு நாட்டில், வேறொரு சூழலில் ரஷ்யாவில் புரட்சி நிகழ்ந்து முடிந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகியும் விட்டது. ஆக, நாம் வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ள நிறைய இருக்கின்றன. எதைச் சரியாகச் செய்வது என்பதற்காக மட்டுமில்லை, சிலவேளைகளில் நமது பாதைகள் தவறாகச் செல்கின்றது என்பதைக் கற்றுக்கொள்வதற்காவும் கூட, வரலாறு நமக்குத் தேவையாக இருக்கின்றது.

..........................................................


(நன்றி: 'கனலி')

சுபிட்ச முருகன் - சரவணன் சந்திரன்

Monday, March 29, 2021

ரு குடும்பத்தின் மீது வீழும் சாபம் அந்தக் குடும்பத்தின் தலைமுறைகளைப் பாதிக்கின்றது. ஒரு பெண் அநியாயமாக தன் வாழ்வைப் பலிகொடுக்கின்றாள். தந்தை,சகோதரர்களென அடுத்தடுத்து -இப்பெண் தன் மரணத்தின் பின்பாகப் பலிவாங்க- ஒவ்வொருத்தராகத் தற்கொலை செய்கின்றார்கள். அவ்வாறாக இறந்த அத்தை, அடுத்த தலைமுறையான கதைசொல்லியின் மீது சாபத்தை நிழலாக விழுத்த இவனது வாழ்வும் குலைகின்றது. 


ஒருமுறை ஆச்சி சிறுவயதில் இவனுக்கு 'உன் தாத்தன் மொத்தமா கருவறுத்திட்டாரு. வாழ நினைச்சவள பருந்து மாதிரி சுத்தியே நாக்கால கொத்திட்டாரு. அவ திருப்பி கொத்தாம விட மாட்டா. பாசமா, பழியான்னு கேட்டா, பழிதான் முந்திக்கிட்டு வந்து நிக்கும். அதான் இயற்கை. அவளைக் கும்பிடதறத் தவிர வேறு வழியே இல்ல உனக்கு' என்று சொன்னது இவனுக்கு நினைவு வருகின்றது.


வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டவன், உடல் சார்ந்த உறவுகளில் தன்னைத் தொலைத்து அதுவும் சுயசித்திரவதையாகி நீண்டு, உடல் அழுகிப் போய்க்கொண்டிருக்கின்றபோது என்ன நடக்கின்றது என்பதை முன்னும் பின்னுமாகப் பார்க்கின்ற புதினமாக சரவணன் சந்திரனின் 'சுபிட்ச முருகன்' இருக்கின்றது.


சரவணன் சந்திரன் எழுதிய நாவல்களில் 'ஐந்து முதலைகளின் கதை'யையும், 'ரோலக்ஸ் வாட்ச்சையும்' வாசித்திருக்கின்றேன். அவற்றுக்கான கதைக்களங்களில் இருந்து வேறுமாதிரியானது இது. ஆனால் அவற்றில் இருந்த சுவாரசியத்திலிருந்து விலகி, ஒருவகை அலுப்பான வாசிப்பை இது தர, பல பக்கங்களை மேலோட்டமாக வாசித்துக் கடந்துமிருந்தேன். இந்தப் புதினத்தில் ஒரு எழுத்தாளராக சரவணன் சந்திரனைச் சிலதைக் கண்டெடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு இதில் பெரிதாக எடுத்துக்கொள்ள எதுவும் இருக்கவில்லை. இவ்வாறான கதைகளை பாலகுமாரனின் கதைகளில் என் பதின்மங்களில் வாசித்திருக்கின்றேன் (கனவுகள் விற்பவன்?). பின்னர் எஸ்.ராவின் 'துயில்' போன்ற நாவல்களில் இது வேறுவகையில் மெல்லியதாக வெளிப்படுகின்றது. இவ்வாறான கதைகளை/தொன்மங்களை, அண்மையில் வெளிவந்த 'பேய்ச்சி' நாவலில் கூட  ம.நவீன அழகாகக் கையாண்டிருக்கின்றார்.


இந்ந்தாவலின் கதைசொல்லி பெண் உடல்கள் மீதான பித்தத்தில் கோயில் போன்ற பொது இடங்களில் உரசுவதிலிருந்து, பின்னர் பல இடங்களில் அடிபட்டுத் தெளிந்து, தொலைவிலிருந்து பெண்களைப் பார்த்து சுயமைத்துனம் செய்வதிலிருந்து, இன்னபிற 'தகாத' காரியங்களைக் கூட்டாகப் பிறருடன் செய்யும்போது கூட, அவை ஏன் இவன் இவ்வாறாக செய்கின்றான் என்று அனுதாபம் வருவதற்குப் பதிலாக எரிச்சலே வருகின்றது. சரவணனின் எல்லாவற்றையும் 'சுவாரசியமாக்க' விரும்பும் எழுத்தின் பலவீனமாக இது இருக்ககூடும். இந்தக் கதைசொல்லி தன் காதலியான கீர்த்தனாவோடு பல்வேறுவகையில் புணர்ந்ததைச் சொல்லும்போதும் கூட சலிப்பும், பிறகு இப்படி என் நிலைமை இப்படியாயிற்றே எத்தனை முறை கீர்த்தனாவின் உறையை (வெள்ளிச் சவ்வுறை) கிழிந்திருக்கின்றேன் என்று நினைவேக்கம் கொள்ளும்போதெல்லாம், ஒரு பெண்ணுக்கு எத்தனை உறைகள்(?) உள்ளே இருக்குமென நாம் திகைத்து வாசிக்கவேண்டியிருக்கின்றது. 


எனது நண்பரொருவர்,  உடல் முயக்கங்களைப் பற்றிப் பேசும்போது, நீங்களெல்லாம் ஸிப்பைக் கழட்டுவது மட்டுந்தான் புணர்தல் என்பதை அறிந்துவைத்திருக்கும் தலைமுறை என்பார். இன்றையகாலம் காமம் பற்றி அழகாகப் பேசுவதற்கு மிகப்பெரும் சுதந்திரத்தைத் தந்தாலும், அலுப்பான மொழியில், அரைகுறையான வகையில்தான் பலர் எழுதிக்கொண்டிருக்கின்றனர். இந்த நாவலில் கூட காமம் எப்படி பின்னர் அழகியலிருந்து குரூரத்தை நோக்கி நகர்கின்றதென்பதைக் கூட வார்த்தைகளுக்குள் கொண்டுவரக் கஷ்டப்படுகின்றது என்பதுதான் துயரமானது.


காமத்தை, காமத்தைப் பற்றி விபரிக்காமல்  அதில் மூழ்கடிக்க பாமுக்கின் 'எனது பெயர் சிவப்பை' ஒருமுறை வாசித்துப் பார்க்கலாம். காமத்தை நேரடியாகச் சொல்வது போன்ற பாவனையுடன்,  ஆனால் நம்மை வாசிக்குந்தோறும் கிளர்த்தும் எழுத்துக்களுக்காய் ப்யூகோவ்ஸ்கி புகைபிடித்தபடி தனது புதினங்களில் நமக்காய்க் காத்திருக்கின்றார். ஆனால் நாமின்னமும் தமிழில் மூன்றாந்தரப் பத்திரிகைகளில் வந்த மொழிக்கு அப்பால் போக முடியாத அவலத்துடன் நின்று எழுதும்போது, அவை வெறும் சம்பவங்களாகக் கடந்து போகின்றன.


திருவண்ணாமலையில் சில வருடங்களுக்கு முன் நின்றபோது அங்கேயிருக்கும் சில சாமியார்களைப் பற்றி சற்று அறியக்கூடியதாக இருந்தது. அதில் ஒரு சாமியார் அடிக்கின்ற சாமியெனப் பெயரென எடுத்தவர் எனச் சொன்னார்கள். அவர் அடித்துவிட்டால் அதிஷ்டம் வாழ்வில் கொட்டுமென ஒரு கூட்டம் எப்போதும் அவரிடம் அடிவாங்க காத்து நிற்குமெனச் சொன்னார்கள். அதுபோல இந்தப் புதினத்தில் ஒரு எச்சில் சுவாமியார். அவர் துப்புவதைக் கைகளில் வாங்குவதற்காய் சனம் அவரிடம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அவரின் மரணம் ஒரு செய்தியை இந்தக் கதைசொல்லியிடம் சொல்லிச் செல்கின்றது.  இவ்வாறு ஒரு சில தெறிப்புக்களை/திறப்புக்களை இந்தப் புதினம் வைத்திருக்கின்றதே தவிர, ஒரு நாவலாக முழுமைகூடி இது வரவில்லை என்றே சொல்வேன்.

...................................

(Nov 07, 2020)

வாசிப்பது எளிது!

Saturday, March 27, 2021

ஒவ்வொரு ஞாயிறும் நான்கைந்து நண்பர்கள் வாசித்த புத்தகங்கள் பற்றியும், இலக்கிய உலகில் நடக்கும் களேபரங்கள் குறித்தும் பேச ஒன்றுகூடுவோம். அதிலும் மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ, பருவம் நான்கும் காதலின் நிமித்தம் மற்ற விடயங்களெல்லாம் வீணென்று குப்புறப்படுத்திருக்கும் என்னைப் போன்றவனுக்கு நண்பர்கள் பகிரும் பல தகவல்கள் சுவாரசியமாக இருக்கும்.

இம்முறை ஒரு நண்பர், எப்படி உங்களுக்கு இப்படி வாசிக்க நேரம் கிடைக்கிறதென்று ஒரு வினாவை காற்றலைகளில் அள்ளியெறிந்தார். ஒவ்வொரு நண்பர்களும் தாம் எப்படி வாசிக்க நேரம் ஒதுக்குகின்றோம் என்று சொன்னார்கள்.

என் முறை வந்தபோது,'இங்கே பாருங்கள். இருபதுகளில் நான் காதலித்த மாதிரி இப்போது காதல் இல்லை' என்றேன். கேட்ட நண்பருக்கோ, தான் வாசிப்பது பற்றிக் கேட்டால், இவன் காதலிக்கின்றது பற்றி கதைக்கின்றானே என ஒரே குழப்பம். கனடாவில் பனி பொழிகின்றதா அல்லது உண்மையில் உனக்குத்தான் பனி சரியாப் பிடித்துவிட்டதோ என்று கேட்டார்.

அவசரப்படாதீர்கள் என்று எனது விளக்கத்தைத் தொடர்ந்தேன். அதாவது என் 20களில் நான் எப்படி நேசித்தேன் என்று பாருங்கள்.

ஒருமுனையில் இருந்து நான் அன்பே நீங்கள் என்ன சாப்பிடுகின்றீர்கள் என்று கேட்பேன். எதிர்முனையிலும் அதே கேள்வி என்னை நோக்கி வரும். நான் பிட்டும் சம்பலும் சாப்பிடுகின்றேன் என்றால், காதலி இடியப்பமும் சொதியும் சாப்பிடுகின்றேன் என்பார். பிறகு கதைக்க என்ன இருக்கும்? ஒன்றுமே இருக்காது. இறுதியில் அவர் இடியப்பத்தில் குறுக்குமறுக்குமாய் ஓடும் பின்னல்களை எண்ண, நான் உதிர்ந்துபோன புட்டின் துணிக்கைகளை தவறில்லாது எண்ணத்தான், என்னைப் போன்றவர்கள் காதல் வளர்த்தவர்கள். அப்படி நாங்கள் புட்டோடும் இடியப்பத்தோடும் வளர்த்த மாதிரியா இப்போது காதல் வளர்க்கின்றார்கள்.

இது பீட்ஸாக் காலம். எதிர்முனையில் காதலியிடம் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால், மூன்று துண்டு பீட்ஸா சாப்பிட்டுவிட்டேன். அடுத்து என்ன அடுத்து என்ன சொல் என்று பறக்கின்றார்கள். அவ்வளவு அவசரம்.

அதனால்தான் அவர்களுக்காய் நான் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கின்றேன். புத்தகங்களை வாசித்தால்தான் கொஞ்சமாவது காதலிகளோடு சுவாரசியமாக எதையாவது பகிர்ந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் எதிர் வரிசையில் இன்னொருவன் ஹாவாயன் பீட்ஸாவோடு காத்து நிற்பான். என்னிடம் இருந்து அறிவதற்கு இனி எதுவுமில்லையென்றால், எனக்கான காதலும் கடந்துபோய்விடும் என்றேன்.

'சரியடா, இப்போது என்ன சொல்ல வருகின்றாய்?' என்று நண்பர் இன்னும் கூடக் குழம்பியபடி கேட்டார்.

நான் வாசிப்பது என் அறிவை வளர்ப்பதற்கோ, என் மகிழ்ச்சியிற்காகவோ இல்லை. என் காதலிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காய்த்தான் கஷ்டப்பட்டு வாசிக்கின்றேன். அப்படி நீங்களும் ஒரு ஸ்நேகிதியை கண்டுபிடித்துவிட்டால், வாசிக்க நேரமில்லை என்று கவலைப்படாது நிறைய வாசிக்கத் தொடங்கிவிடுவீர்கள் என்றேன்.

அவருக்கும் கொஞ்சம் ஆசை (எந்த ஆசை?) எட்டிப்பார்த்திருக்கவேண்டும். 'என்றாலும் புதிதாய் ஒரு ஸ்நேகிதி வந்துவிட்டால் என் மனைவி கோபிக்கமாட்டாரா?' என்றார்.

'யோசிக்காதீர்கள். அதற்கும் ஒரு வழியிருக்கின்றது. உங்களது மனைவிக்கும் நான் ஒரு நல்ல வாசக ஸ்நேகிதனை அறிமுகப்படுத்திவிடுகின்றேன்' என்றேன்.

அவ்வளவுதான். அத்தோடு அவர் வெளிநடப்புச் செய்துவிட்டு காற்றலைகளில் இருந்து விலகிப்போய்விட்டார். அடுத்த வாரம் அவர் வருவாரோ தெரியாது.

ஏன், இனி இப்படிக் கூட்டம் தொடர்ந்து நடக்குமோ தெரியாது.
................................

(Nov 23, 2020)

மெக்ஸிக்கோ - ஜெயக்குமரன் (JK)

Friday, March 19, 2021

தனியராகச் செய்யும் பயணங்கள் கொடுக்கும் உணர்வுகள் கலவையானவை. நாம் போகும் இடங்கள் யாவிலும் கூட்டம் அலைமோதும். தெரியாத கடைக்காரர்கள். தெருவில் எதிர்படுபவர். பாதையோர பழ வியாபாரி. கடற்கரையில் குழந்தைகளோடு பந்து விளையாடும் இளங்குடும்பம். ஆண்கள். பெண்கள். எல்லோருடனுமே ஏதோ ஒரு உறவை ஏற்படுத்த நம் மனம் நாடும். பழகிய மனிதர்களோடு பேசும்போது ஏற்படும் உற்சாகத்தைவிட இவர்களை அவதானிப்பதில் உருவாகும் உள்ளக் களிப்பு அதீதமானது. அதைக் களிப்பு என்று சொல்லிவிடவும் முடியாது. கொஞ்சம் அங்கலாய்ப்பு, கழிவிரக்கம், தனிமையின் சிறு விரக்தி, அதை ஏற்றுக்கொள்ள மறுத்து வியாபிக்கும் கொண்டாட்ட மனநிலை. தனிமைப் பயணங்களில் இவை எல்லாமே கலவையாக வந்துபோவதுண்டு. பயணங்களை இந்த மனநிலையோடு அணுகும்போது உருவாகும் களம் அலாதியானது. பயணங்களில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்களைக் கதாபாத்திரங்களாக்கி அவர்களோடு ஊடாடி, அவர்களின் வாழ்க்கைக்குள்ளும் சென்று கொஞ்சம் எட்டிப்பார்த்தல் என்பது ஒரு அனுபவம். அதனை எழுத்து அற்புதமாகக் கொடுக்கும். கூடவே நாம் ஏங்குகின்ற ஒரிரு இலட்சியப்பாத்திரங்களையும் சேர்த்துவிட்டால் அது கொடுக்கும் உவகை சொல்லி மாளாது. தோஸ்தாவஸ்கியின் பெண்கள்போல. அல்லது ஜேன் ஓஸ்டினின் சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டியில் வரும் எலினோர், மரியானே சகோதரிகள்போல. பாலகுமாரனின் ஒரு சிறுகதையில் வரும், கடற்கரையில் அவரோடு கவிதை பாடும் ஈழத்துச் தமிழ்ச்செல்விபோல. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸிபோல. அல்லது எல்லோராபோல. இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவலும் அத்தகையதே. 


ஈழத்தில் பிறந்து கனடாவில் வளரும் இளைஞன் ஒருவனின் மெக்சிகோவிற்கான பயணத்தைப் பேசும் நாவல் இது. அங்கே அவன் பலரோடு சேர்த்து தன் இலட்சியக் காதலியையும் காண்கிறான். அவளோடு பேசுகிறான். இருவரும் ஊரெல்லாம் திரிகிறார்கள். அவளை அணைத்துக்கிடக்கும் கணத்தில் செம்புலப்பெயல் நீரனார் பாடலை மொழிபெயர்த்துச் சொல்கிறான். இவன் சமைத்த உணவுப் பாத்திரங்களை அவள் கழுவிக்கொண்டிருக்கையில் பின்னால் சென்று அணைத்து அவள் காது மடல்களில் முத்தம் கொடுக்கிறான். இருவருமாய்ச் சேர்ந்து உலக இயல்புகளைப் பேசுகிறார்கள். பெண்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஈழத்து வாழ்க்கையை இவன் பேச அவள் போராட்டத்தில் இறந்த தாய்வழி மாமாவையும் ட்றாக்டரில் இறந்த உறவினர்களையும் நினைவுகூறுகிறாள். கண்டங்கள் வேறாகினும் போர்களும் அனுபவமும் வலியும் ஒன்றுதானே. அவனுக்கு அவள் சுப்பீரியர். அவளிடம் முழுதாய்ச் சரணடைந்து அவள் மடியிலேயே கிடந்து அவள் கதைகளை ரசிக்கும் ஆண்டாளாக மாறத்துடிப்பவன் 


இவன். ஒரு உறவின் முறிவிற்குப் பின்னர் அறிமுகமாகும் எட்டமாட்டாத உறவு ஒன்று கொடுக்கும் அலைக்கழிப்புத்தான் இந்நாவல். அது நிஜமாகத்தான் இருக்கவெண்டுமென்பதில்லை. நாவலின் ஆரம்பத்திலேயே அந்த இலட்சியக் காதலி யார் என்பது கொஞ்சம் புரிந்துவிடும். அது புரிந்தபிற்பாடு நிகழ்பவை யாவும் சற்று அபத்தமாகவே தெரியும். அதை இளங்கோ தெரிந்தே செய்திருக்கலாம். ஒருபக்கம் மெக்ஸிக்கோ பயணம். மறுபக்கம் அந்த இளைஞனின் அலையும் மனம். இரண்டுக்கும் நடுவே வாசிக்கும் நாமும் இழுபட்டுச்செல்லும் பயணம்தான் இந்நாவல். 


ஒரு பயணத்தின்போதுதான் இந்நாவலைத் தேர்ந்தெடுத்து வாசித்தேன். இந்த நாவல் கொடுத்த மனநிலையோடுதான் என் பயணமும் கழிந்தது. தேர்ந்த சிவப்பு பினோட் நோயரை இரண்டு கிளாஸ் அதிமாக அருந்தினால் உருவாகும் போதையின் மிதப்பு இந்நாவலை வாசித்துக்கொண்டிருக்கையில் இருந்தது என்று சொன்னால் மிகையல்ல. இளங்கோவிடம் அவ்வகை மென்போதை மொழி இருக்கிறது. கூடவே பதின்மங்களில் புலம்பெயர்ந்து திணை, மொழி, மனிதர்களைப் பிரிந்துவாழும் இளைஞனுக்கேயுரிய அடையாளச் சிக்கல்களும் இருக்கிறது. அதை அனுபவித்து எழுதும் ஆற்றலும் இருக்கிறது. இவையெல்லாம் இணைந்த ஒரு அற்புத படைப்பை அவரிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கவைத்திருக்கிறது 


நன்றி: Jeyakumaran Chandrasegaram

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை - எஸ்.ராமகிருஷ்ணன்

Wednesday, March 17, 2021

காதல் என்பது நாம் இதுவரை அறியாத‌ நம் உணர்வுகளின் ஆழங்களைத் தொடுகின்றது. எந்தக் கணத்தில் எப்படி ஒரு காதல் உறவு முகிழுமென்பதையும் அறியமுடிவதில்லை. அதன் முன் நாம் கற்றவைகளையும், அறங்களையும் கைவிட்டு எதுவுமற்றவர்களாய் சிலவேளைகளில் சரணடையவும் செய்கிறோம். இவ்வாறான ஒரு மறக்கமுடியாதக் கதையை எஸ்.ராமகிருஷ்ணன் 'ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை' யில் சொல்லப்போகின்றார் என்ற ஆவலுடனேயே இதை வாசிக்கத் தொடங்கினேன்.


வெயில் உருகி வழியும் கோயில்பட்டியிலுள்ள‌ தனது தாத்தா வீட்டுக்கு, பாடசாலை கோடைகால விடுமுறையில் போகும் ராமசுப்பிரமணியன் என்பவன், அங்கே சில்வியால் என்கின்ற மெட்ராஸிலிருந்து வந்த‌ ஒரு பதினைந்து வயதுப் பெண்ணைச் சந்திக்கின்றான். அங்கிருந்து முகிழ்வதே இந்தக் காதல் கதை. தொடர்ச்சியாக மூன்று கோடைகாலங்களில் கோவில்பட்டியில் சில்வியாவும், சுப்பிரமணியனும் சந்திக்கின்றனர். முதல் கோடைகால விடுமுறையில் சில்வியா சுப்பிரமணியனுக்குப் பலதைக் கற்பிக்கின்றாள், காட்சிப்படுத்துகிறாள். ஒரு பெண் இப்படிப் பதின்மவயதில் மிகச் சகஜமாக இருப்பாளா என்ற வியப்புடன் இவன் அவளைப் பின் தொடர்ந்தபடியே இருக்கின்றான்.


ஆனால் அடுத்தடுத்து வரும் கோடை கால விடுமுறையில் சில்வியா வெவ்வேறு வடிவங்களை எடுத்து சுப்பிரமணியிடமிருந்து விலகிப் போகின்றவளாக‌ இருக்கின்றாள். நட்பை மீறிய‌ காதல் இவர்களுக்குள் இருக்கின்றது. உதடுகளில் முத்தமிட்டு மூன்றாம் கோடை விடுமுறை முடிந்தவுடன் அவர்கள் என்றென்றைக்குமாய்ப் பிரிந்துவிடுகின்றார்கள். காலம் இருவரையும் பின்னர் வெவ்வேறு சூழல்களுக்குள் இழுத்துச் செல்கின்றன. இப்போது 40களில் இருக்கும் ராமசுப்பிரமணியன் சில்வியாவை சந்திக்கச் செல்வதிலிருந்து புதினம் காலத்தின் பின்னும் முன்னுமாக நகர்கின்றது. 


இது கோடைகாலக் காதல் கதை என்றாலும், நாவல் காதலை மட்டும் பேசுவதில்லை. மனிதர்கள் காதலோடு எப்படி நாளாந்த அல்லாடல்களுக்கிடையில் சிக்கித்திணறுகிறார்கள் என்கின்ற‌ தீற்றோவியத்தையும் இது தருகிறது. எஸ்.ராவின் இதற்கு முன் வந்த 'பதினை' வாசித்தபோது ஏமாற்றமாக இருந்தது. இது அந்தவகையில் ஏமாற்றத்தைத் தராதபோதும், இது இன்னொரு சாதாரணக் காதல் கதை போலவே வாசிப்பின் முடிவில் தோன்றியது. கடந்த நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ரஷ்ய காதல் கதைகளின் இருந்த உயிர்ப்புக் கூட இதில் இல்லாது கோவில்பட்டி வெயிலைப் போல வாசிப்பில் ஒரு உலர்நிலை எப்போதும் இதனூடு வந்துகொண்டிருந்தது.


பதினைந்து வயதுக் காதலாக இருந்தாலென்ன, முதிர்ந்த வயதிலும் காதலுக்காய்க் காத்திருக்கின்ற 'கொலராக் காலத்தில் காதல்' என்கின்ற மார்க்வெஸில் நாவலாய் இருந்தால் என்ன, ஏன் அவர் இறுதியில் எழுதிய  Memories of My Melancholy Whoresஇல் எண்பது வயதுடையவர்க்கு, இளம் பெண்ணின் மீது வரும் காதலாய் இருந்தால் என்ன,  அதன் சரி/பிழை, அறம்/அறமின்மை என்பவற்றுக்குப்பால நம்மை அந்தப் பாத்திரங்களோடு ஒன்ற வைக்கின்றதல்லவா? எஸ்.ராவின் இந்தப் புதினத்தில் அவர் மட்டுமில்லை, வாசிக்கும் நம்மையும் மூன்றாம் நபராய்/வெளி ஆளாக  காதலிலிருந்து நம்மை தொலைவில் வைத்திருப்பதால்தான் என்னை இந்த நாவல் அவ்வளவு ஈர்க்கவில்லை என நினைக்கிறேன் . 


அதுவும் நாற்பதிலும், முப்பத்தொன்பதிலும் இருக்கும் ராமசுப்பிரமணியனும், சில்வியாவும் ஏதோ வயதுபோன முதியவர்களைப் போல கடந்த வாழ்க்கையையும், நிகழ் வாழ்க்கையையும் துயரமாக மட்டும் பார்க்கும்போது,  இந்த வயதிலேயே மனிதர்களை இழந்துபோனவைகளை மட்டும் நினைத்து ஏக்கமுறுபவர்களாக ஏன் கைவிடவேண்டும் போலத் தோன்றியது. வாழ்க்கை மட்டுமில்லை, காத்லும் தொடர்ந்து ஆற்றைப்போல‌ ஓடிக்கொண்டிருப்பதுதான்.  கடந்தகாலத்தை மட்டும் நினைத்து ஏங்குபவர்க்குத் தேங்கிப் போன குளம் மட்டுமே சொர்க்கம் போலத்தோன்றும். 'நண்பனே உன்னுடைய வயது என்ன?' எனக் கேட்கின்றபோது 'சாகும்வரை காதலிக்கும் வயது தோழி' என்று சொல்லிய நம் ஈழக்கவிஞனின் குரலே என் பாதையுமாகும்.


எனக்கு மிகப் பிடித்த உபபாண்டவத்தையும், யாமத்தையும், துயிலையும், பால்யநதியையும் எழுதிய எஸ்.ராவிடமிருந்து அதற்கு நிகரான அல்லது தாண்டிப்போகின்ற ஓர் அழகான காதல் கதையை எதிர்பார்ப்பேனே தவிர, இப்போது புதிதாய் எழுதத் தொடங்குகின்ற ஒருவரைப் போல 'ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை'யை அவர் எழுத, நானதைக் கொண்டாடிக் குதூகலிக்கமாட்டேன்.

......................

(Oct 30, 2020)

Jungle

Tuesday, March 16, 2021

அண்மையில் நண்பரொருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் இன்னொரு நாட்டுக்குத் தனித்துச் சென்ற பயணம் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார். வீட்டுக்கு ஒரு காரணத்தையும், வேலைத்தளத்தில் இன்னொரு காரணத்தையும் சொல்லித் தனியே பயணத்தைத் தொடங்கிய அவர், ஒரு நகரத்திலிருந்து  பஸ்சில்  மலைப்பாங்கான இன்னொரு நகருக்குச் சென்றபோது இடைநடுவில் இறக்கிவிடப்பட்டு நடந்த சில திகிலான சம்பவங்களைச் சொல்லியிருந்தார். அதைவிட இன்னும் விறுவிறுப்பான, மரணத்தை நெருக்கத்தில் கண்ட ஒரு பயணத்தை Jungle என்கின்ற  இந்தப்  படம் நமக்குக் காட்டுகிறது.


1980களின் தொடக்கத்தில் இஸ்ரேலைச் சேர்ந்த 21 வயது ஜின்ஸ்பேர்க் தென்னமெரிக்காவைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகின்றார். தந்தை பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் படிக்கச் சொல்ல, ஆகக்குறைந்தது ஒருவருடமாவது நான் பயணிக்கப்போகின்றேன் என பெற்றோரின் விருப்பின்றி ஜின்ஸ்பேர்க் தென்னமெரிக்காவுக்கு வந்து சேர்கின்றார். பொலிவியாவில் தற்செயலாக சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை நண்பராகக் கண்டடைகின்றார். அவரின் மூலம் பல்வேறு நாடுகளில் நடந்துபோய் அற்புதமாகப் படம்பிடிக்கும் ஒரு அமெரிக்கரையும் இந்தப் பயணத்தில் ஜின்ஸ்பேர்க்  நட்பாக்கிக்கொள்கின்றார். 


இவ்வாறு இவர்கள் தென்னமெரிக்காவுக்குள் பயணித்துக்கொண்டிருக்கும்போது, ஜின்ஸ்பேர்க் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவரைச் சந்திக்க, அவர் இதெல்லாம் ஒரு பயணமா, என்னோடு வாருங்கள் நான் அமேஸன் காட்டையும், அங்கே இதுவரை எவருமே பார்த்திராத பூர்வகுடிகளையும் உங்களுக்குக் காட்டுகின்றேன் என்கின்றார். புதிய உலகைக் காணும் விருப்பில் அந்த நபரோடு புறப்படும் இவர்களின் பயணம் கடும் சிக்கல்களைச் சந்திக்கின்றது. இனி மேலும் நடக்கமுடியாது என்று திரும்புகையில் வழிநடத்தும் நபரும், சுவிஸ் நண்பரும் நடந்தே திரும்ப, ஜின்ஸ்பேர்க்கும், அமெரிக்கப் புகைப்படக்கார -நண்பரும் அவர்களே பயணத்தின் இடைநடுவில் தயாரித்த கட்டுமரத்தில்-  ஆற்றினூடாகத் திரும்புகின்றார்கள்.


கட்டுமரத்தில் திரும்பும் இவர்கள் நீரின் பெரும் வீழ்ச்சியில் சிக்கிக்கொள்ள ஜின்ஸ்பேர்க் தண்ணீரில் விழுந்து தப்பினாலும், கூட வந்த நண்பரைப் பிரிந்து காட்டுக்குள் சிக்கிக்கொள்கின்றார். அந்தக் காட்டுக்குள் ஜின்ஸ்பேர்க் கிட்டத்தட்ட 3 வாரங்கள் உயிர் தப்புகின்ற சாகசத்தையே இந்தப் படம் சித்தரிக்கின்றது. இது 1980களின் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது (ஏற்கனவே ஜின்ஸ்பேர்க்கால் புத்தகமாகவும் இது எழுதப்பட்டிருக்கின்றது)..


கட்டுமரத்தில் திரும்பி வந்த ஜின்ஸ்பேர்க்கும், புகைப்படக்கார நண்பரும் தப்பினாலும், இற்றைவரை கால்நடையாகத் திரும்ப விரும்பிய,  இவர்களைக் கூட்டிக்கொண்டு சென்றவருக்கும், அவரோடு கூடவே சென்ற சுவிஸ்காரருக்கும் என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் அவர்கள் மர்மமாய் காணாமல் போயிருக்கின்றனர். உண்மையில் அந்த வழிநடத்திய நபர் இப்படி வேறு சிலரையும் முதலில் கூட்டிச்சென்று பொலிஸால் எச்சரிக்கப்பட்டவர் என்றாலும், எதற்காக தங்களை அந்த நபர் அமேஸான காட்டுக்குள் கூட்டிச்சென்றார் என்பதற்கான காரணத்தை தன்னால் அறியமுடியாது என்று ஜின்ஸ்பேர்க் கூறுகின்றார்.


பயணத்தின் நடுவில், ஜின்ஸ்பேர்க்கைச் சந்திக்கும் ஒரு பெண் தான் வாசித்த ஒரு புத்தகத்தில் இப்படிச் சொல்லியிருப்பதாய்ச் சொல்வார்: "The last freedom is to choose one’s own way.” இந்த இறுதிச் சுதந்திரத்தை எப்படித் தேர்ந்தெடுப்பது என்று தெரியாததால்தான் நாம் சிலவேளைகளில் நம் வாழ்வில் அதிகம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றோமோ தெரியாது.

..........................

(2020)


பட்டிப்பூ (அந்திமந்தாரை) குறிப்புகள்

Monday, March 15, 2021

1. தாமரையாள் ஏன் சிரித்தாள்?


ஒரு கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும்போது நம்மை என்ன செய்யவேண்டும்? இன்னும் என்ன என்னவென அவற்றில் கூறியிருப்பதைப் பற்றித்  தேடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதில் எழுதியிருப்பதை மனமொன்றி இரசிக்கவாவது செய்யவேண்டும். 


அவ்வாறுதான் உமா வரதராஜனின் 'மோகத்திரை'யை வாசித்தபோது, முதல் பக்கத்திலேயே நடிகை காஞ்சனாவைப் பற்றிய கட்டுரை தொடங்கியபோதே அவர் என்னை ஈர்க்கத் தொடங்கிவிட்டார். உடனேயே காஞ்சனாவின் பாடல்களை youtubeஇல் சுழலவிட்டபடி, நூலை வாசிக்கத் தொடங்கினேன். காஞ்சனாவின் பாடல்கள் - அப்படியே எம்ஜிஆர், சிவாஜி, உமாவின் ஊர் தியேட்டர்கள்/படம் பார்த்த அனுபவங்கள், இயக்குநர் சிறிதர் பற்றிய கட்டுரைகள் வாசிக்கும்வரை என்னோடு தொடர்ந்தபடி வந்தபடி இருந்தன.


காஞ்சனா நடித்த சில பாடல்களை ஏற்கனவே அவர் அதில் இருக்கின்றாரா என அறியாது பார்த்திருக்கின்றேன். ஆனால் உமாவின் கட்டுரைதான், உமாவைப் போல எனக்கும் காஞ்சனாவைப் பிடித்த நடிகையாகச் செய்துவிட்டது. பிற நடிகைகள் கோலோச்சிக்கொண்டிருந்த 60-70களில் ஒரு ஓரமாய்க் காஞ்சனா பிரகாசித்திருக்கின்றார். எவ்வாறு எனக்கு அஸின் -ஒரு முக்கிய நடிகையாக அவரின் காலத்தில் இல்லாதபோதும்- என்னை அவ்வளவு கவர்ந்தாரோ, இப்போது அவருக்கு முன் தலைமுறை நடிகைகளில் காஞ்சனா,  அவரின் பாடல்கள் முழுதையும் பார்த்துவிட்டதன் பிறகு எனக்கு மிகவும் உவப்பாகிவிட்டார்.


இந்த நூல் தந்த உற்சாகத்தில் ஓடிப்போய் 'ஆசை முகங்கள்' என்னும் நடிகைகளைப் பற்றி பல்வேறு பேரினால் எழுதப்பட்ட கட்டுரைகளை சி.மோகன் தொகுத்த தொகுப்பைப் பார்த்தேன். என்னே ஒரு சோகம்! அதில் பத்மினி, சாவித்தி, சரோஜாதேவி, வைஜெந்திமாலா எல்லாம் இருக்கின்றனர், ஆனால் காஞ்சனாவைக் காணவில்லை. 


என் பிரிய அஸினைப் பற்றி எம்.டி.முத்துக்குமாரசாமி எழுதிய ஒரேயொரு கட்டுரைக்காகத்தான் அந்தத் தொகுப்பையே தேடி வாங்கியிருந்தேன். எனினும் 'ஆசை முகங்கள்' அடுத்த பதிப்பு வந்தால் சி.மோகன், காஞ்சனா பற்றி உமா எழுதிய இந்தக் கட்டுரையைக் கட்டாயம் சேர்க்கவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.


"காஞ்சனா என்ற அமைதியான ஆறு ஏதோ ஒரு ரகசியத்தை ஒளித்து வைத்துக் கொண்டிருந்தது. அவருடைய அழகு அத்தகையது. ஆடைக் குறைப்புக்களால் அந்த மெளனக் குகையின் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிடலாம் என்றும் பலவந்தமாகப் பொன்முட்டையிட வைக்கலாம் எனவும் தமிழ்த் திரையுலகம் முயன்றிருக்கக்கூடும். ஆனால் அவர் ஆடைகளால் மூடப்பட்ட பதுமை அல்ல என்பதை அது உணரத் தவறிவிட்டது. அதன் கண்களில் தென்பட்டது உண்மையான அவரல்லர்." ('மோகத்திரை' - ப 11)


காஞ்சனாவைப் பாராட்டிவிட்டு அஸினைப் பற்றிப் பேசாவிட்டால் நம் மனம் என்னை மன்னிக்காது என்பதால் அஸின் பற்றி எம்.டி.எம் எழுதியிருப்பதிலிருந்து சிறு பகுதி..


" வாழ்க்கையின் துயரங்களை துயரங்களாக அனுபவத்தறியாத செல்லப்பிள்ளையின் கண்கள் அசின் பெண் பிம்பத்தின் கண்கள். அந்தக் கண்களே அசின் பிம்பத்தின் உடலசைவுகள் அனைத்தையும் கோலாகலமாய் மாற்றுகின்றன. உணர்வு தொற்றா கண்கள் அவை என்பதினால் அசின் பிம்பத்தை அம்பாளாகக் காண வேண்டிய துரதிருஷ்டம் நமக்கு நிகழாது என்று நான் ஆசுவாசமடைகிறேன். அழகிய பொம்மை உலா பொழுதுபோக்குக்கு உகந்ததுதானே." ('ஆசைமுகங்கள்' - ப. 110)2. Kilometers and Kilometers


இந்தப் படத்தின் trailerஐ  முதன்முதலாக பார்த்தபோது, ஒரு road movie என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு சுற்றுலாப்பயணிக்கும்,  அலைந்து திரியும் பயணிக்கும் வித்தியாசம் தெரியாது குழப்பிக்கொண்டதால் படம் அவ்வளவாக ஒட்டாது போய்விட்டது. அதுவும் இன்று உலகமே சுருங்கிவிட்டபிறகு அமெரிக்காவிலிருந்து வரும் பெண் இந்தியக் கலாசாரத்தை அவ்வளவு விளங்காது இருக்கமுடியுமா என்று  நினைக்க வைக்கும்போதோ படம் என்னிலிருந்து விலகிப்போகத் தொடங்கிவிட்டது. 


ஒரு மோட்டார்சைக்கிளில் இந்தியாவின் நிலப்பரப்பைப் பார்க்க விரும்பும் பெண் ஒருபோதும் சுற்றுலாப் பயணியின் மனோநிலையில் இருக்கப்போவதில்லை. அவர் தான் பயணிக்கும் நிலப்பரப்புக்களின் மக்களுக்கிடையிலும், கலாசாரத்திற்குள்ளும் குறுக்குவெட்டிப் போக விரும்புவாரோ தவிர, இவற்றையெல்லாம் மற்றமையாகாகப் பார்த்து விலகிப் போகப்போவதில்லை. 


மேலும் அமெரிக்கக் கலாசாரம் என்பதே தனிமனிதர்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று ஒற்றைத் தன்மையாக நம்புவது கூட ஆபத்தானது. அமெரிக்க X இந்திய கலாசாரத்தை எதிரெதிராக வைத்துப் பார்க்கவேண்டும் என்ற எத்தனிப்பில் காட்சிகளும் இயல்பின்றி தறிகெட்டலைய  அது பார்ப்பவரையும் திரைப்படத்திலிருந்து வெளியேற்றிவிடுகிறது. 'நாங்கள் ஒரு பெண்ணோடு கொஞ்சம் நெருக்கமாகப் பழகத் தொடங்கினாலே, அவர்களை நமது மனைவிமார்கள் மாதிரி நினைக்கத் தொடங்கிவிடுவோம்' என்று நாயக பாத்திரம், அமெரிக்கப் பெண்ணைப் பற்றிப் பேசத் தொடங்கினவுடனேயே, நமக்கு நம்மைப் பற்றித் தெரியுமே போதுமய்யா போதுமென நமது மனச்சாட்சி பேசத் தொடங்கிவிடுகிறது. நான் இன்னும் பார்க்காதுவிடினும் The Great Indian Kitchen என்று அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட படத்தையும் இதே நெறியாளர்தான் எடுத்திருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.3. Air Time by Katie Melua


Katie Meluaஇன் பாடல்களைப் பல்வேறு பொழுதுகளில் வெவ்வேறு நண்பர்களோடு அருகில் இருந்து கேட்டிருக்கின்றேன். அதுவும் ஒரு நண்பரோடு  காலைத் தேநீரோடு, வீட்டுனுள் நுழையும சூரியக்கதிர்களைப் பார்த்தபடி கேட்டியின்  ஓரிரு பாடல்களைத் திரும்ப திரும்ப தவழவிட்டபடி இரசித்திருக்கின்றோம்.  Nine Million Bicycles, Wonderful life, The closest thing to crazy , I will be there போன்ற பாடல்கள் அன்றைய காலைகளுக்கு அப்படியொரு புத்துணர்ச்சியைத் தந்ததை உணர்ந்திருக்கின்றேன்.


நீண்டகாலமாகப் புதிய பாடல்களைப் பாடாத கேட்டி இப்போது  ஒரு புதிய இசைத் தொகுப்புக்குத் தயாராகிவிட்டார். ஜெயமோகனின் 'ஆழி' என்ற சிறுகதையில், உறவில் இருந்த காதல் இணை ஒன்று பிரிவிற்குப் பின்  சந்திப்பதாய்க் கதை தொடங்கும். அவர்கள் இருவருமே எதுவுமே 'நம்மிடையே பொதுவில் இல்லை, ஆனால் மூன்று வருடங்கள் காதலில் இருந்திருக்கின்றோம், அதிசயந்தான்' என்று கூறியபடி இறுதிச் சந்திப்பையும் சண்டை/சர்ச்சையோடே தொடங்குவர். ஒருவர் அமெரிக்காவுக்குப் போகப் போகின்றார். இன்னொருவர் திருவனந்தப்புரத்துக்கு வேலை நிமித்தம் இடம் மாறப்போகின்றார். அவர்கள் இருவரும் மணப்பாடுக்கு போய் குளிப்பது, கடல் அலைகளுக்குள் சிக்கிச் சுழல்வது, அதன் நிமித்தம் ஒரு (தற்காலிக) புரிந்துணர்வு வருவது என‌ அந்தக் கதை விரியும்.


அந்தக் கதையைப்  போலத்தான் இந்தப் பாடலும்.


பிரிந்து போன காதலர்களில், பெண் ஒருத்தி தான் கடந்துவந்த காதலனை நினைக்கின்றாள். சிலவேளை அவனும் தன்னைப் போல, இப்போதும் தம் பிரிந்துபோன காதலை நினைத்து எண்ணி/ஏங்கிக் கொண்டிருக்கின்றானா தெரியவில்லை என நினைக்கின்றாள். இறுதியில் சந்திக்கவும் முடிவு செய்கின்றாள். ஆனால் 'ஆழி'கதை போல இங்கே புரிந்துணர்வு இருவருக்குமிடையில் வருவதில்லை. 


இந்தப் பெண் பாடுகின்றாள், 'இதை விட்டுப் போ, ஏனென்றால் நிறைய காதல் உன்னைச் சுற்றி இருக்கிறது'. இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். உலகில் நிறைய காதல் இருக்கும்போது ஒரு தேவையில்லாத/துயரம்தரும் உறவுக்காய் ஏங்கிக்கொண்டிருக்காதே என்பது ஒன்று. 


உன் மனதிற்குள் காதல் நிறைந்து இருக்கின்றது, அதற்குப் பொருத்தமானவன் இவன் இல்லை என்பது மற்றொன்றாகும் . 

.......................

ஹிப்பி - அய்யனார் விஸ்வநாத்

 அய்யனாரை அவர் எழுத வந்த காலத்தில் இருந்தே வாசித்து வந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட நாங்களிருவரும் சமகாலத்தில் எழுத வந்தவர்கள் என்று நினைக்கின்றேன். ஆக அவரின் இந்த 'ஹிப்பி' நாவலையும் அவரை வாசித்த வாசிப்புக்களின் தொடர்ச்சியில் வைத்தே பார்க்க விரும்புகின்றேன். ஹிப்பி திருவண்ணாமலையும், அதன் அயலான ஜவ்வாது மலையையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றது.

 

இவ்வாறு திருவண்ணாமலையைப் பின்னணியாக வைத்து ஜீ.முருகன் எழுதிய 'மரம்' எனக்குப் பிடித்த ஒரு புனைவு. ஹிப்பியில் இரண்டு வெவ்வேறு விதமான மனிதர்களின் கதைகள் சமாந்திரமாகச் சொல்லப்படுகின்றன. இறுதியில் அவை எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புறுகின்றது என்பது சற்றுச் சுவாரசியமானது.

 

ரமணாச்சிரமம் பகுதியில் ஓட்டோ ஓடிக்கொண்டிருப்பவனுக்கு வெள்ளைக்காரக் குழுவுடன் நட்பு முகிழ்கிறது. அவர்கள் அவனை அழைத்துக்கொண்டு ஜவ்வாது மலைக்கருகிலுள்ள கிராமம் ஒன்றுக்கு மனிதர்கள் இல்லாத வனாந்திரப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கே அவன் சந்திக்கும் மனிதர்களும், கட்டற்ற வாழ்க்கையும், எதிர்பாராத நடக்கும் அசம்பாவிதமும் ஒரு நீள்கதையாக நீள, இன்னொரு பக்கத்தில் அலமேலு என்ற பெண்ணைப் பற்றியும் கதை சொல்லப்படுகின்றது.

 

அய்யனாரின் பிற படைப்புக்களையும், அவரின் வெளிவந்த நாவல்/குறுநாவல்களையும் அவரின் வலைப்பதிவுகளில் வாசித்தவன் என்றவகையில் இதை அய்யனாரின் முக்கியமான நாவலாகக் கொள்ளமாட்டேன். இந்த நாவலில் கொண்டாட்டத்திற்கும், ஏன் மனிதர்கள் இப்படி ஹிப்பி வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கும் ஆழமாக இறங்கிச் சென்று பார்ப்பதற்கு மிகப்பெரும் வெளி இருந்தபோதும், இந்த ஹிப்பிகள் எல்லா அத்தியாயங்களிலும் கஞ்சாவை இழுப்பதையும், குடித்துக்கொண்டிருப்பதையும் மட்டும் வாசிக்கும்போது சற்று அலுப்படைய வைக்கின்றது.

 

இதை வாசிக்கும்போதுதான் Paulo Coelho எழுதிய 'ஹிப்பி' நினைவுக்கு வருகின்றது. அவர் ஹிப்பியாக பிரேஸிலில் இருந்து ஐரோப்பாவுக்கு வந்து, அங்கிருந்து நேபாளம் வரை ஹிப்பியாக அலையும்போது சந்திக்கும் நினைவுகளை இதில் எழுதியிருக்கின்றார். அவரது அந்தப் பயணம் நேபாளம்வரை வந்து முழுமையடையாது இடைநடுவில் நின்றாலும் ஹிப்பிகளின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டு முகத்தை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். அதுபோல அய்யனார் ஆகக்குறைந்தது இதில் ஒரு சில ஹிப்பிகளின் வாழ்வை இன்னும் இந்தப் புனைவில் வாசிப்பவரை உற்றுப் பார்க்கம்படியாக, ஆழ இறங்கியிருக்கலாமோ என்று தோன்றியது.


அய்யனார், இந்த நாவல் தான் திருவண்ணாமலையை வைத்து எழுதும் trilogy யில் ஒன்றெனக் குறிப்பிடுகின்றார். இன்னும் மூன்றாவது நாவல் அவரால் எழுதி முடிக்கப்படவில்லை. அது ஹிப்பியைத் தாண்டி இன்னும் நேர்த்தியான ஒரு படைப்பாக விரைவில் வருமென நம்புகிறேன்.

.................

(Oct 23, 2020)

 

ஏதிலி - அ.சி.விஜிதரன்

Sunday, March 14, 2021

 1.

இந்தியாவில் இருக்கும் ஈழ ஏதிலிகளின் கதைகளை இந்தப் புதினம் பேசுகின்றது. 14 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நூலில் ஒவ்வொரு அத்தியாயமும் புதிய மனிதர்களையும் அவர்களோடு தொடர்புடைய சம்பவங்களையும் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவில் இன்னமும் 30 ஆண்டுகளுக்கு மேலாகியும், அங்கே முகாங்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ எதிலிகளின் நிலைமையில்  -இன்று ஈழத்தில் போர் முடிந்தபின்னும் கூட-  பெரிதாக ஏதும் மாற்றம் வந்துவிடவில்லை. சாதாரண மனிதர் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, தேவையான கல்வியையோ, நல்லதொரு வேலையைப் பெறுவதற்கோ இன்னும் ஏதிலிகள் வாய்ப்பில்லாதே தமது வாழ்வை நடத்தவேண்டியிருக்கின்றது.


இந்தப் புதினம் தொடக்கத்தில் ஒரு பின் நவீனத்துவக் கதைசொல்லலின் கூறுகளிலிருந்து தன்னை விரித்தெடுக்கத் தொடங்கினாலும், இறுதி அத்தியாயங்களை நெருங்கும்போது, தனித்துச் சம்பவங்களைச் சொல்லவேண்டுமென்ற அவசரத்தில் சற்று உலர்ந்ததன்மையையும் கடைசியில் அடைந்துவிடுகின்றது. ஒருவகையில் விஜிதரன் இடதுசாரிப் பின்புலத்தில் இருந்து வருகின்றவர் என்பதால் எப்படி பின் நவீனத்துவக் கதைசொல்லல்களை எளிதில் உள்வாங்கினார் என்பது சற்று ஆச்சரியமாக இருந்தாலும், இறுதியில் தனக்குரிய 'அரசியலை'ச் சொல்லிவிடவேண்டும் என்ற எத்தனிப்பில் ஒருவகையில் பிரச்சாரம் போல பிற்பகுதிகள் ஆகியும் விடுகின்றன.


இந்த நாவலில் கிட்டத்தட்ட மூன்று வெவ்வேறு அத்தியாயங்களில் முகாங்களிலுள்ள 'அரசியல்' பிரக்ஞையுள்ள இளைஞர்/கள்,  இந்திய கியூ பிராஞ்சி/சிஜடியினரினதும், அரசியல்வாதிகளினது போலித்தனங்களைக் கேள்விகளால் தகர்த்துவிடுகின்றனர் என்பதை எளிதாக நாம் கண்டடைகின்றோம்.. அதிலும் நாம் தமிழர் போன்ற தமிழ்த்தேசிய அரசியலை உணர்ச்சிபூர்வமாகச் செய்பவர்களைக் கேள்வி கேட்டு சாரு என்ற பெண் அ தகர்ந்தெறியும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால் இறுதி அத்தியாயத்தில், ஈழத்தில் போர் முடிந்து இந்தியாவிலிருக்கும் ஈழ ஏதிலிகள் திரும்ப நாட்டுக்குத் திரும்பவேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன்,  செல்வநாயகத்தின் வழித்தோன்றல் அகதிமுகாங்களுக்குள் நுழையும்போது அதை உடைத்தெறியும் நபர்களான  கடவுள் ஆரையும், நேவியையும் பார்க்கும்போது ஒருவகை  பிரச்சாரத்தன்மை நாவலுக்குள் வந்துவிடுகின்றது.

இவ்வளவு பெருந்திட்டத்தோடு வரும் ஒருவரை, அவர் சார்ந்த அமைப்பை இரண்டு இளைஞர்கள் கேள்விகளால் வழிமறித்து அனுப்பிவைக்கின்றார்கள் என்பது நம்புவதற்கு கடினமாய் இருப்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தளவுக்கு முகாம் மக்கள் இத்தனை வருடங்களாகியும் இந்த அமைப்புக்களின் 'அரசியல்' தெரியாமல் அப்பாவிகளாக இருப்பார்களா என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசித்துப் பார்க்கவும் வேண்டியிருக்கின்றது..

 

2.

விஜிதரன் 'கலை என்பது முற்றிலும் அரசியல் சார்ந்தது' என்பதைத் திடமாக நம்புகின்ற ஒருவரெனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கிறார். ஏன் இந்த நாவல் கூட கலையை விட அரசியலையே முதன்மையாகக் கொள்வதையும் வாசிக்கும் எவரும் எளிதில் விளங்கிக்கொள்ளமுடிகிறது. அதில் தவறும் இல்லை. கலை மக்களுக்கா, கலை கலைக்காகவா என்ற கடந்தகால விவாதங்களுக்கு நாம் இப்போது மீண்டும் போகத் தொடங்கத் தேவையில்லை. அந்த விவாதம் நம் ஈழச்சூழலில் 60/70களில் நடந்து முடிந்து, நாம் கடந்தும் வந்துவிட்டோம். ஆனால் இந்த புதினத்தில் இடதுசாரியான விஜிதரன் எந்த எந்த இடத்திலும் முகாங்களுக்குக்குள் ஓர் அமைப்பைக் கட்டுவதையோ அல்லது அதற்கான ஆரம்ப சமிக்ஞைகளைக் கூட இதில் எழுதிக்  காட்டாதது சற்று வியப்பானதுதான். புதிதாய்த் தொடங்கிய கட்சியான 'நாம் தமிழர்'களே ஏதிலிகளின் முகாங்களுக்குள் நுழைய முடியும்போது, அரசியல் கொந்தளிப்பான ஒரு முக்கிய இடத்தில் இடதுசாரிகளுக்கு வேலை இல்லாமலாப் போய்விடும்.


மற்றும்படி  தேங்கிப்போன ஓர் இடதுசாரியைப் போல அல்லாது, விஜிதரன் ஈழ அரசியலை  மிகுந்த கவனத்துடன் மக்களின் பக்கம் நின்று பேசுவது இந்தப் புதினத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியது. எப்படி புலிகளின் தலைவரோடு அவர்களின் தலைமை அழிக்கப்பட்டதை உடனே தெரிவிக்காது ஆறப்போட்டு, தமிழகத்தில் ஒரு பெரும் எழுச்சி நிகழ்வதை தமிழக அரசியல்வாதிகள் தடுத்தார்கள் என்பதிலிருந்து, புலம்பெயர்ந்தவர்கள் தம்மிடம் இருக்கும் இயக்கத்தின் சொத்துக்களைப் பதுக்குவதற்காய், தலைவர் வரட்டும் அப்போது நாம் இவற்றைக் கையளிக்கின்றோம் என்று சோகநாடகம் நடத்தியதிலிருந்து எல்லாவற்றையும் வெளிப்படையாக விஜிதரன் இதில் பேசுகின்றார். அதுபோல புலிகள்தான் யுத்தத்தில் மனிதவுரிமைகளை மீறியவர்கள் என்று ஒரு பாத்திரம் பேசுகின்றபோது, புலிகளைச் செய்தது தெரியும், அரசாங்கமும், இராணுவமும் செய்ததைப் பேசாமல், முள்வேலிக்கம்பிகளுக்குள் தன் சொந்தமக்களை அடைத்து சித்திரவதைப்படுத்திய அரசின் பக்கங்களைப் பேசாமல் யாருக்கான நியாயம் பேசுகின்றீர்கள் என்றும் இந்த நாவலில் கேட்கப்படுகிறது,


அரசியல் புரிதலுள்ள ஒருவரால்தான் இவ்வாறு நியாயமாய் எழுதமுடியும் என்பதற்கும், இதற்காகவேனும் அழகியலை மட்டும் கலையில் பார்ப்பவர்கள் அரசியலையும் விஜிதரனைப் போலப் பயிலவேண்டும் எனவும் சொல்லவேண்டியிருக்கிறது. இதேபோல இன்னொரு உறுத்தலான விடயம் இதில் சொல்லப்படுகின்றது. அதாவது ஈழத்திலிருந்து ஏதிலிகளாக வந்த மக்கள் பற்றிய விபரங்களை முதன்முதலாகப் பதிவு செய்யும்போது, அவர்களிடம் சாதி கேட்டுப் பதிவு செய்யப்படுகிறது என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.

 

3.

தமிழகத்தில் இருக்கும் ஈழ ஏதிலிகளைப் பற்றிப் பேசுகின்ற ஒரு புதினம் என்றவகையில் இது முக்கியமானதுதான். ஆனால் கலையின் அமைதியை அரசியல் துருத்திக்கொண்டு போகின்ற பல அத்தியாயங்களும் இதில் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும். அகதி முகாங்களை இப்படி வைத்திருக்கின்றார்களே என ஒரு 'ஆறுமுகநாவலர்' பாத்திரம் கனவில் வரும்போது, மறுபாத்திரம் இதைவிடக் கொடுமையாக சேரிகளில் மக்கள் இருக்கின்றார்கள் எனச் சொல்கின்றது. அது உண்மைதான். ஆனால் சேரி மக்களுக்கு என்று ஒரு வாழ்வு இருக்கின்றது. கொண்டாட்டம் இருக்கின்றது. அப்படி இவ்வாறு தசாப்தகாலங்களாய் முகாங்களில் இருக்கும் மக்களுக்கும் ஒரு வாழ்வு இருக்கும். அது இவ்வாறான அரசியலைப் புரிந்தோ/புரியாமலோ அவர்களுக்குள்ளும் ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை இருக்கும். அதை அவ்வளவாக இந்தப் புதினத்தில் தொட்டுப் பார்க்கப்படவில்லை என்பதுதான் கவலையானது.


இந்தப் புதினத்தின் கதைசொல்லிக்கும், மதுரையில் படிக்கும் மலையாளப் பெண்ணுக்கும் காதல் இருக்கின்றது. அவள் செய்யும் படிப்பு சம்பந்தமான ஆய்வுக்கு 'நமது மக்கள்' என்று ஏதிலிகள் முகாங்களிலுள்ள பெண்களுக்குரிய சிக்கல்களை எடுத்துக்கொள்கின்றவளாகவும் மினு ஈழமக்களைப் புரிந்துகொண்டவளாகவும் இருக்கின்றாள். ஆனால் மினுவுக்கும், 'வீ'யுக்கும் வரும் காதலைப் பற்றிப் பெரிதாக ஏதும் விபரிக்கப்படவில்லை. ஈழ அகதிகள் என்று பல்வேறு வழிகளில் வெறுத்தொதுக்கப்படுகின்ற அகதியொருவனை, கேரளத்தைப் பூர்வீகமாய்க் கொண்ட ஒரு பெண் நேசிக்கின்றாள் என்பது எவ்வளவு அழகானது. அந்தக் காதலைச் சொல்வதில் ஒரு அழகியல் இருக்கும். அது கூட ஒருவகை அரசியல்தானே. உங்களில் இந்தத் 'தீண்டாமை'களில் இருந்து காதல் இந்த எல்லைகள்/ஒதுக்கல்களைத் தாண்டியும் எழும் அற்புதமான விடயமெனச் சொல்லும்போது, நேரடியாக அரசியலைச் சொல்வதை விட, வாசிக்கும் இது நம்மை அதிகம் பாதிக்கும் அல்லவா?


 'கலை என்பது அரசியல் சார்ந்தது' என்று தீர்க்கமாக இருக்காது, 'கலை என்பது அரசியலும் சார்ந்தது' எனச் சற்றுத் தளர்வாக இருந்திருந்தால் இந்தப் புதினம் இன்னும் பலவழிகளில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்குமென நினைக்கிறேன்.

.....................


-நன்றி: வனம்

(Oct 25, 2020)