கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பார்த்தவை/வாசித்தவை பற்றிய சில பகிர்தல்கள்

Thursday, November 22, 2007

கனடாவில் பிடிக்காத விடயங்கள் எவையென்று கேட்டால் பட்டியலிடுவதற்கு நூற்றுக்கு மேலான விடயங்கள் உண்டு...ஆனால் பிடித்த விடயங்கள் எவையென்று யோசித்தால், ஆங்கிலத்தில் வெளிவரும் நூல்களையும், திரைப்படங்களையும் உடனேயே வாசிக்க/பார்க்க முடியும் என்பதையே முதன்மையான விடயமாய்ச் சொல்வேனென நண்பரொருவருக்குக் கூறிக்கொண்டிருந்தேன். நூலகத்திற்கு வாசித்து முடிக்கமுன்னர் திருப்பிக் கொடுக்கவேண்டிய நூற்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்க, வீட்டிலிருக்கும்போது ஒன்று, சப்வேயில் பயணிக்கும்போது இன்னொன்று, மதியவுணவுவேளைகளில் மற்றொன்று என இடாலோ கால்வினோவின் The Castle of Crossed Destinies , எம்.ஜி.வசாஞ்ஜியின் The Assassin's Song, உம்பர்ட்டோ ஈகோவின் The Mysterious Flame of Queen Loana என்று 'பன்முகமாய்' -இறுதியில் மிஞ்சப்போவது எதுவுமேயில்லையெனத் தெரிந்தாலும்- வாசித்துக்கொண்டிருக்கின்றேன். மற்ற இருவரும் தமது கதையுலகில் எளிதாய் அனுமதித்த அளவிற்கு, கால்வினோ, அடர்ந்த காடுகள் தாண்டி, மொழிகள் எதுவுமின்றி அமைதியாக்கப்பட்ட கோட்டையிற்குள் அவ்வளவு எளிதாய் நுழைய அனுமதிக்கின்றாரில்லை ( Tarot சீட்டுக்கள் அடுக்குதல்/குலைத்து மீள அடுக்குதல் முறை மூலம் கதை கூறப்படுகின்றது) என்பதால் எழுத்துக்கூட்டி வாசித்துக்கொண்டிருக்கின்றேன். இவ்வாறு நேற்று நூலகத்திற்குச் சென்றபோது, அங்கே வேலை செய்துகொண்டிருந்த -எந்நேரமும் புன்னகைத்துக் கொண்டிருக்கும்- பெண்ணின் சிரிப்பால் உந்தப்பட்டு, மார்க்வெஸ்ஸின், 'கொலராக் காலத்தில் காதல்' (Love in the time of Cholera) நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன்.

இத்திரைப்படம், பதின்மத்தில் இழந்த காதலிற்காய், ஐம்பது வருடங்களுக்கு மேலாய் காத்திருக்கும் ஒரு ஆணின் வாழ்வைக் கூறுகின்றது. பல விதமான திருப்பங்கள், சிக்கவிழ்க்கும் முடிச்சுகள், சுவாரசியமான முடிவு என வழக்கமான சினிமாவை எதிர்ப்பார்க்கும் ஒரு இரசிகருக்கு பார்ப்பதற்கு இப்படத்தில் எதுவுமேயில்லை. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்தைய வாழ்வுமுறைக்குப் பழக்கமானோர் இன்னொரு கலாசாரத்தை விளங்கிக்கொள்ளும் சகிப்புத்தன்மையுடன் இருந்தால் மட்டுமே இப்படத்திற்குள் நுழையமுடியும். இல்லாவிட்டால் காதலிற்காய் அழுகின்றவனையும், அம்மாவோடு அளவிறந்த அன்போடு இறுதிக்காலம் வரை இருப்பவனையும் அவ்வளவு இலகுவாய் ஏற்றுக்கொண்டு இரசிக்க முடியுமா என்ன?கதையைக் கூறத்தொடங்கினால், அது நமது தமிழ்ச்சூழலிற்கு அண்மையாக வரக்கூடிய காதற்கதைதான். ஆனால் அதை முடியும்வரை பார்க்கமுடிவது மார்க்வெஸின் கதை சொல்லும் முறைமையும், கூடவேயிருக்கும் எள்ளலுந்தான். தனது தொலைந்துபோன காதலி திரும்பிவரும்வரை வேர்ஜினிட்டியோடு(?) இருப்பேன் என்று தொடகத்தில் சிவப்பு விளக்கிற்குப்பகுதியிற்குப் போய்க்கூட எவரோடும் உடலுறவுகொள்ள மறுக்கின்ற/அடம்பிடிக்கின்ற கதையின் நாயகன், பிறகு உறவுகொள்ளும் பெண்களின் எண்ணிக்கையோ அறுநூற்றிற்கு மேற்பட்டவை ( நாயகனின் வார்த்தைகளில் இன்னும் திருத்தமாகக் கூறுவதனால் 622). இப்படியிருந்தாலும், தனது முதற்காதலியின் நினைவால் எவரையும் முறைப்படி 'திருமணஞ் செய்யாமல் இருக்கின்றார். நாயகி ஒரு வைத்தியரைத் திருமணம் செய்து வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவரின் கணவன் எப்போது சாவான், தான் தன் காதலியோடு சேர்ந்து எப்போது வாழலாம் என்று எதிர்ப்பார்க்கின்ற -அவளைக் கவர்ந்திழுந்துக்கொண்டுபோக விரும்பாத- ஒருவர்தான் எங்களின் நாயகன். ஒருகட்டத்தில் இவருக்குப் பயம் கூட வருகின்றது, தான் தனது காதலியின் கணவனைவிட விரைவில் வயது முதிர்ந்தவனாகிக்கொண்டிருப்பதாகவும், அவரிற்கு முன் தான் இறந்து காதலியோடு வாழ முடியாமற்போய்விடுமோ என்றும்.. நாயகன் தபால் அலுவலகத்தில் வேலை செய்பவர். தனக்கு இன்னும் கிடைக்காத காதலியை மனதில் இருத்திக்கொண்டு உபதொழிலாக பிறருக்கு காதற்கடிதங்களும் எழுதிக்கொடுப்பவர். நகைச்சுவை என்னவென்றால், இவர் யாருக்காகவே கடிதங்கள் எழுதுகின்றாரோ அவர்களின் -எழுதப்படிக்கத்தெரியாத- காதலிகளே இவரிடம் கொடுத்து -இவர்தான் அக்கடிதத்தை எழுதியதை அறியாது- இவர் வாயாலே திருப்பி வாசிக்கக் கேட்பது.

ஐம்பது வருடங்களுக்கு பின்னராவது அவரது முதற்காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பதை படத்தை இனி பார்க்கப்போகின்றவர்களுக்காய் விட்டுவிடுவோம். படத்தின் ஒளிப்பதிவு மிக அற்புதமாய் இருக்கின்றது. இலத்தீன் அமெரிக்கா/மெக்சிக்கோ கலாசாரத்திலிருந்து வந்த ஒரு நெறியாள்கையாளர் எடுத்திருந்தால் இந்தப்படம் இன்னும் ஆழமாய் மனதைத் தொட்டிருக்குமோ என இப்படத்தைப் பார்க்கும்போது தோன்றியது. அதைவிட மார்க்வெஸின் மூலப்பிரதி எழுதப்பட்ட ஸ்பானிஷ் மொழியிலேயே பாத்திரங்களை உரையாடவிட்டிருந்தால் படம் இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கலாம். ஏனெனில் சில ஆங்கில உரையாடல்கள் நாடகப்பாணியாய் அந்தரமூட்டுகின்றது (சொல்லப்பட்ட வார்த்தைகளை மீண்டும் சொல்வதிலுள்ள சிக்கல்போலும்). எனினும் அப்பாவியாய் நடமாடிக்கொண்டு 'மன்மதராசனாட்டம்' வாழ்க்கையை அதன்போக்கில் இரசிக்கும் கிழவருக்கும், பிரைடாவின் ஓவியங்களையும், கஜோலையும் கலந்து குழைத்த நாயகியின் வனப்புக்குமாய்...மிகவும் இரசித்துத்தான் பார்த்தேன எனத்தான் சொல்லவேண்டும்.

----------------

சில வாரங்களுக்கு முன், We Own the Night என்ற குப்பைப் படமொன்றைப் பார்த்திருந்தேன் (பொலிஸ்/இராணுவம் போன்றவற்றை அளவுக்கதிகமாய் புனிதமாக்கும் படங்கள் என்றால் ஏன் எரிச்சல் வருகின்றது என்பது உளவியலோடு சம்பந்தப்பட்டதென் நினைக்கின்றேன்). ஆகக்குறைந்தது எனக்குப் பிடித்த கியூபாக்காரியான இவா மெண்டிஸாவது (Eva Mendes) ஒரளவாவிற்காவது நடித்திருப்பார் என்று நம்பிக்கொண்டிருந்தால், baby baby என்று husky குரலில் ஃபீனிக்ஸின் (Joaquin Phoenix) வாலாய் மட்டும் வந்துகொண்டிருந்ததைப் பார்த்து, Honey, could you please shut up your mouth...Its so annoying என்றுதான் அவரைப் பார்த்தும் சொல்லவேண்டியதாகிப் போய்விட்டிருந்தது. இதற்கு மாறாய் திரையரங்கிற்கு வந்த நாளன்றே பார்த்த American Gangster நல்ல கதையம்சமான படம் என்பதைவிட, டென்சில் வாஷிங்டன், ரஸல் குரோ போன்றவர்கள் திறமையான நடிப்பால் படத்தை இறுதிவரை சலிப்பின்றி நகர்த்திக்கொண்டு சென்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். BETயில் (Black Entertainment Television) American Gangsters என்ற seriesல் இரத்தமும் சதையுமாய் வரும் gangstersகளின் கதைகளை ஒருவர் பார்த்திருந்தால், இந்தப்படத்தில் பார்ப்பதற்கு வித்தியாசமாய் அவருக்கு எதுவுமேயில்லை (இப்படம்கூட நியூயோர்க்கில் மில்லியன் கணக்கில் hustle செய்து வாழ்ந்த ஒருவரின் சொந்தக்கதையை அடிப்படையாகக் கொண்டதுதான்). என்னைப் பொறுத்தவரை படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் ஒன்றுதான்... வியட்நாம் போர்க்காலத்தில் இந்த gangster அங்கிருந்தே போதை மருந்துகளை நல்ல 'pure quality'யாய் கடத்தியெடுத்துக் கொண்டுவந்து அமெரிக்காவில் விநியோகிக்கின்றார். அதை கடத்த அனுசரணையாக இருப்பதும் அமெரிக்க இராணுவந்தான்...போதைப் பொருட்கள் வ்ந்து இறங்குவதும் அமெரிக்க இராணுவத்தின் விமாங்களில்தான். இதையேன் சொல்கின்றேன் என்றால், வியட்நாம் போர்க்காலத்தோடு மட்டும் போதைப்பொருட்களை கடத்துவது/ உள்ளூர் மக்களை ஓபியம் செடிகளை பயிரிட ஊக்குவிப்பதென்று நமது அமெரிக்க கதாநாயகர்கள் நின்றுவிடவில்லை, அந்த வள்ளல் தன்மை இன்றுவரை ஆப்கானிஸ்தான் என்று பரவிப்ப் பெருகியுள்ளதெனச் சுட்டிக்காட்டதான்.பிபிஸி செய்திகளைப் பார்த்துகொண்டிருந்தால், ஆப்கானிஸ்தானில் வளர்ந்துகொண்டிருக்கும் ஒபியத்தின் அளவு, அண்மைக்காலங்களில் எவ்வளவு அதிகரித்துக்கொண்டிருக்கின்றது என்ற புள்ளிவிபரங்கள் தெளிவாக விளங்கும். இதைவிட நகைச்சுவை என்னவென்றால், நமது கனடாப்படையினர் ஆப்கானிஸ்தானில் 'தீவிரவாததை' ஒழிக்கும் கடமைகளில் தீவிரமாய் ஈடுபடுகின்றார்கள்தானே. அவர்கள் அங்கே எந்தக்கேள்விகளுமில்லாது 'தீவிரவாதி'களைச் சுட்டுக்கொன்றாலும், ஓபியம் போன்றவை வளர்கின்ற இடங்களைக்காண்கின்றபோது மட்டும் அது நமக்கான வேலையில்லையென நழுவிச்சென்றுவிடுகின்றாக்ள். அதுவும் நியாயந்தான், 'தீவிரவாதிகளை' கொல்லும்போது எவருக்கும் பதில் சொல்லவேண்டியிருக்காது (நாமும் இங்கிருந்து கொண்டு ஓ.. இன்றைக்கு 'தீவிரவாதிகள்' இறந்துபோனது கொஞ்சம் குறைவாய்/கூடுதலாய் இருக்கின்றதென இழக்கப்பட்ட மனிதவுயிர்களை எண்ணிக்கையால் மட்டும் மதிப்பிட்டபடி அடுத்த வேலைக்கு நகர்ந்து கொள்ளலாம்.) ஆனால் குளுகுளுவென்று மொட்டோடும் பூவோடும் செழுமையாக வளர்ந்த ஒபியம் செடிகளை நமது வீரர்கள் அழித்தால் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஓபியத்தை வளர்க்கச் சொன்னவனுக்கு, அதை ஏற்றுமதி செய்கின்றவனுக்கு, விநியோகிப்பவனுக்கு, வாங்கிப் புகைப்பவனுக்கு என்று இடியப்பச் சிக்கல் நிறைந்த வலை அல்லவா அது? எனக்கெனனவோ போகின்றபோக்கில் புஷ் போன்றவர்கள் எண்ணெய வியாபாரத்தை மறந்துவிட்டு, போதை மருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களை விரைவில் தொடங்குவார்கள் போலவிருக்கிறது. சிஜஏயினரும், கொலம்பியா போன்ற இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் தாங்கள் போதை மருந்து வியாபாரத்திற்காய், அங்கிருக்க்கும் இடதுசாரி போராளிக்குழுக்களோடு தனவாமல், ஆபான்கனிஸ்தான் போன்ற இடங்களில் monopoly யாய் சர்வாதிகார ஆட்டங்களை நிகழ்த்தி ஆசுவாசப்படுத்தலாம் எனச் சந்தோசப்படவும் கூடும். கனடாவில், பாடசாலை மாணவர்களிடையே, சிகரெட் பிடிப்பதைவிட, போதை மருந்து பாவிக்கும் வீதம் அதிகரித்து வருகின்றதென அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.. எனவே ஆப்கானிஸ்தானில் கனடாப் படை இருப்பது கனடாவின் எதிர்காலத்திற்கு 'வளம்' சேர்ப்பதாய்த்தான் இருக்கும். இப்போதைக்கு கனடாப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பிப்பெறுவதில்லையென உறுதியாய் நிற்கும் வலதுசாரிக்கொள்கையுடைய அதிவணக்கத்திற்குரிய பிரதமர் ஹார்ப்பரின் கைகளை நாமும் வலுப்படுத்தவேண்டியதுதான். இப்படியொரு குட்டி புஷ் கனடா மக்களுக்குக் கிடைப்பது அவ்வளவு எளிதா என்ன?

----------

வேல் என்றொரு வீணாய்ப்போன வீச்சரிவாள் படத்தைத் தியேட்டருக்குப் போய்ப் பார்த்தேன். எல்லாம் அஸினால் வந்த வினை. இப்படியான படங்களில்தான் அஸின் நடிக்கப்போகின்றார் என்றால், வேறு யாராவது நடிகைக்கு இரசிகனாய் மாறுவதைப் பற்றி யோசிக்கவேண்டி வருமென அஸினுக்கு எச்சரிக்கை செய்யவேண்டியிருக்கின்றது. தொப்புளை வஞ்சகமில்லாது காட்டிக்கொண்டிருக்கும் ஷ்ரேயாவுக்குக் கூட நடிப்பதற்கென படங்களில் சில காட்சிகளாவது உண்டு. அஸின் சேச்சியை விரைவில் ஆச்சிகளின்/அப்பத்தாக்களின் பட்டியலில் சேர்க்கவேண்டிய நிலைதான் வரும்போல. இதைவிட ஹரி என்ற இயக்குநரிற்கு தமிழகத்தில் யாராவது ஒருவர் கத்தியைக் காட்டி இனி வீச்சரிவாள் படம் எடுத்தாய் என்றால் சீவிடுவேன் என்று பயமுறுத்தினால் நாங்கள் கொஞ்சக்காலத்துக்கு நிம்மதியாய் இருக்கலாம்.கற்றது தமிழ் குறித்து உயிர்மையில் சாரு எழுதியதை இடைமறித்து சிலதை எழுதலாம் என்று உயிர்மை வாசித்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தேன். பிறகு, எப்போதும் குறுக்கு கேள்விகள் கேட்டே காலம் வீணாகிக் கொண்டிருக்கின்றதென்பதால் கையரிப்பை அடக்க முயற்சித்தாலும் அடங்கமாட்டேன் என்கின்றது.. சாரு தனது விமர்சனத்தில் எழுதியது அவரது பார்வை என்ற விதத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதென்றாலும், அவர் பார்க்கும் பார்வையில் மட்டுமல்ல வேறு கோணங்களிலும் பார்க்கமுடியும் என்பதற்காகவேனும் சிலதைச் சொல்ல வேண்டியிருக்கின்றது. ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் சாரு, ஏன் இந்த நாயகனுக்கு மட்டும் ஒரே துன்பமாய் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது என்று ஒரு கேள்வியைக் கேட்டு அலுப்படைந்துகொள்கின்றார் (தொடர்ந்து ஒரு மனிதனை கெடுதிகள் மட்டுமே துரத்திக்கொண்டிருக்குமா என்ன? (ப 16)). அதை, நாம் ஏன் அந்த நாயகனிற்கு மகிழ்ச்சியைக் கொண்டாடுவதை விட துன்பரமான நிகழ்வுகள்தான் அதிகம் பாதிக்கின்றது என்றொரு வாசிப்பாய்க் கொள்ளலாமே எனக் கேட்கவும் முடியுந்தானே. உதாரணத்திற்கு ஈழ/புலம்பெயர் படைப்புகள் குறித்து தமிழகத்திலிருந்து வரும் அதிக விமர்சனங்களில், ஒரே அழுகையாய்/சோகமாய்தான் இவர்கள் படைப்புக்கள் இருக்கின்றதென்ற் stereo typed குரல்களை நினைவூட்டிக்கொள்ளலாம்.. இங்கே துன்பமாய்/துயரமாய் 'மட்டுமே' ஈழ/புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வு இருக்கின்றதென அர்த்தப்படுத்திக்கொள்ள் முடியாது. நமக்கும் சந்தோசிக்க/நெகிழ/கொண்டாட என நிறைய விடயங்கள் நம் வாழ்வில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றது. ஆனால் அவற்றைவிட நமக்கு நமக்கான துயரங்கள்தான் அதிகம் பாதிக்கின்றது. அதனாற்றான் படைப்புக்களில் அதிகம் துயரம் தெறிக்கின்றன என்றமாதிரியான உரையாடல்களுக்கும் சாத்தியமுண்டு. தமிழகத்தில் ஆரம்பத்தில் சோகத்தை/துயரத்தை அதிகமும் படியவிட்ட தலித் படைப்புகள் வந்ததையும் பிறகு கொண்டாட்டமான பக்கங்களுள்ள தலித் அத்தியாயங்கள் பதிவுசெய்யப்படும் சூழல் கனிந்துகொண்டிருப்பதும் நமக்கு முன்னாலிருக்கும் நிகழ்கால உதாரணங்கள் (மற்றும் நல்ல இலக்கியங்கள் முகிழ்ந்த நாடுகளில் எல்லாம் போர்க்காலத்தில் அல்ல, போருக்குப்பின்னால் தான் அவ்விலக்கியங்கள் வந்திருந்தன என்பதும் கவனிக்கத்தக்கது. இடாலோ கால்வினோ கூட, தனது முதல் நாவலான The path to the spiders' nestsஐ மூன்றாவது முறையாகத் திருத்தி வெளியிட்ட முகவுரையில் கூட முதற்பிரதியிலிருக்கும் 'குறைபாடுகளுக்கு' இரண்டாம் உலகம்காயுத்தச்சூழலிருந்து தான் வெளியே வராததும் ஒரு காரணமென்று குறிப்பிடுகின்றார்). சரி கற்றது தமிழ்ற்கு மீண்டு/மீண்டும் வருவோம், எனவே இப்படியான பார்வையில் நாயகனை அதிகம் பாதிக்கும் துயரங்களை முன்னிலைப்படுத்துவதால் சந்தோசங்களின்/கொண்டாட்டங்களின் பக்கம் மறைக்கப்பட்டிருக்கலாமென ஒருவர் விபரிக்கவும் கூடும்.


இரண்டாவதாக சாரு கவலைப்படுவது, நாயகன் சைக்கோவாக இருக்கின்றானா அல்லது சமூகம் மீதான கோபத்துடன் இருக்கின்றானா என்ற தெளிவை பாரவையாளருக்கு இயக்குநர் தரவில்லை என்பது. பின் நவீனத்துவத்தை கரைத்துக்குடித்தவர் என்று 'நம்பப்படுகின்ற' சாரு கூட இப்படியான தெளிவான எல்லைக்கோட்டை இயக்குநர் தரவேண்டும் என்று புலம்புவது நமக்கு புன்னகையை வரவழைக்கிறது. தெளிவான எல்லைக்கோடுகள் நமக்கு அவசியமா சாரு? கறுப்பு வெள்ளையாய் பார்த்து பார்த்தே பழக்கப்பட்டு எல்லாவற்றையும் ஏதோவொன்றுக்குள் குறுக்கிக்கொண்டிருப்பதற்கு எதிராய்க் 'கலகம்' செய்யவேண்டிய எண்ணங்களுடைய நபரல்லவா நீங்கள்? சமூகம் மீதான அக்கறையுடையவன் அதன் மீதான சலிப்பின் நீட்சியில் சைக்கோவாக மாறமுடியாதா என்ன? அல்லது இரண்டும் கலந்த ஒரு மனிதவுயிர் யதார்த்ததில் சாத்தியப்படாதா என்ன? 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே' என்ற மாதிரி, பாரிஸில் வாழாத வாழ்வென்ன என அடிக்கடி ஆதங்கப்படும் -பிரான்ஸில் வலதுசாரி தலைவரை மக்கள் தேர்ந்தெடுத்தபின்னும் அந்த ஜடியா உங்களுக்கு இருக்கா என்று தெரியவில்லை- உங்களுக்கு பிரெஞ்சு இலக்கியத்தோடு நிச்சயம் பரீட்சயமிருக்கும். இந்தப்பிரதியை வாசித்துப்பாருங்கள். அந்தப்பெணகள் ஒரு கொலையைத் தவிர்க்கமுடியாது ஆரம்பித்து பிறகு விளையாட்டாய் காரணங்களின்றி எல்லோரையும் போட்டுத் தள்ளுகின்றார்கள். அதொரு புனைவென ஒதுக்கித் தள்ளிவிடவும் கூடும். சரி அதை விடுங்கள். அண்மையில் அமெரிக்காவில் வளைகுடாப் போரில் பங்குபற்றி வந்தவர் I'm the God என்று கடிதங்களையனுப்பி காருக்குள்ளிருந்து பத்துக்கு மேற்ப்பட்டவர்களை போட்டுத்தள்ளி வாரக்கணக்குகளில் அந்த நகர் முழுவதையுமே கதி கலக்கிக்கொண்டிருக்கின்றாரே, அவர் சைக்கோகாவும் இல்லை, சமூகம் மீதான கோபத்திலுமில்லை என்றுதான் ஆரம்பப் பரிசோதனைகள் செப்பியனவே...எனவே எவரும் எப்படியிருக்கவும்/மாறவும் வாய்ப்புக்கள் உண்டு.

அதைவிடக்கொடுமையானது நீங்கள் இப்படத்தில் இப்படியான தெளிவில்லாததால் pleasure of the text இல்லை என்று குறிப்பிடுவது(இப்படத்தின் எந்த இடத்திலும் pleasure of the text என்பதே இல்லை. சம்பவங்களில் உள்ள நம்பகத்தன்மை கதையில் இல்லாமல் போனது இதற்குக் காரணமாய் இருக்கலாம் -p 21-). சாரு, நீங்கள் இதற்கு முன் விதந்தோத்திய குருவில் எந்த pleasure of the text கண்டீர்கள் என்று அகழ்ந்தெடுத்துச் சொன்னால் நாங்களும் உரையாடமுடியும். (வளர்மதி குறிப்பிட்டதுமாதிரி, பார்த்தின் pleasure of the text இலக்கியப்பிரதிகளை மட்டுமே கவனத்தில் கொண்டு எழுதப்பட்டது என்பதை விளங்கிக்கொண்டாலும்/ஏற்றுக்கொண்டாலும், சில ஆசிரியர்கள் பாடத்திட்டத்தில் மட்டுமேயுள்ளதே படி; வேறொன்றையும் படிக்கக்கூடாது என்பது மாதிரி பார்த்தின் please of the textஐ வேறிடங்களில் பிரயோகிக்க முடியாததென்ற வளர்மதியின் குறிப்புகளில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. ஆனால் அதேசமயம் வளர்மதி கூறுவது மாதிரி ஒவ்வொன்றுக்குமான வித்தியாசங்களைப் புரிந்துகொள்கின்றேன். அதனூடாகவே பார்த்தின் pleasure of the text ஐ எழுதப்பட்ட பிரதியிற்கப்பால் வேறிடங்களிலும் பொருத்திப்பார்க்க முடியுமென நம்புகின்றேன். வளர்மதி நிச்சயம் நாம் இது குறித்து தொடர்ந்து உரையாடுவோம்).சாரு மகிழ்ச்சியாய்க் கொண்டாடிய குருவில், அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட இருவர் படத்தில் இருக்கும் erotic தன்மை கூட வரவில்லையெனக் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியிருக்கின்றது. உதாரணத்திற்கு, மோகன்லாலிற்கு ஐஸ்வர்யா அறிமுகமாமாகும் ஹலோ மிஸ்ர(ட)ர் எதிர்க்கட்சி என்ற பாடலும், பிரகாஷ்ராஜ் தபுவிற்கு(?) மரணப்படுக்கையிலும் மறக்காது கணமணி என்று கூறுகின்ற கவிதையும் வருகின்ற இருவர் காட்சிகளிலிருக்கும் pleasure of the text
குருவில் இல்லையென்றுதான் கூறுவேன். அத்தோடு, pleasure of the text 'கற்றது தமிழில்' இருக்கின்றது என்பதை இன்னொரு கோணத்தில் ...The pleasure of the text is on the contrary like a sudden obliteration of the warrior value, a momentary desqumation of the writer's hackels, a suspension of the "heart" (of courage) p30) என்ற பார்த்தின் வரிகளை வைத்தும் ஒருவர் உரையாடமுடியும். இவற்றை வேறு வகையான பார்வைகளும் சாத்தியமுண்டு என்று கூறுவதற்காய்க் குறிப்பிடுகின்றேனே தவிர சாரு அக்கறையுடன் எழுதிய அந்த விமர்சனத்தை நிராகரிக்கும் எண்ணமேதுமில்லை என மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

----------------------

அவ்வளவு அவசியமில்லையென்றாலும், சொல்லவேண்டுமென விரும்பிய இன்னொரு விடயம்....நான் நினைத்ததுபோலவே 'அம்முவாகிய நான்' படத்திற்கு காலச்சுவடு, உயிர்மை என் எல்லாவற்றிலும் நமது சிற்றிதழ் அறிவுஜீவிகள் விளாசியிருந்தார்கள். சிலர் எதையாவது கருத்தைச் சொல்ல/எழுதப்போகின்றார்கள் என்றால் அவர்கள் எப்படிச் சொல்லப்போகின்றார்கள் என்பது முன்கூட்டியே விளங்குவதுபோல, இந்தச் சிற்றிதழ்காரர்கள் தமிழ்ப்படங்களுக்கு எப்படியொரு விமர்சனம் எழுதுவார்கள் என்பது எளிதாகப் புரிந்துவிடுகின்ற ஒரு சூத்திரந்தான். 'அம்முவாகிய நான், ஒரு ஆணாதிக்கப்பிரதி என்பதிலோ விமர்சிக்கப்படவேண்டியதில்லை என்பதிலோ மாற்றுக்கருத்துக்களில்லை. இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெண்களில் எத்தனைபேர் ஆணாதிக்க்கூறுகளில் அக்கறையெடுத்து விலத்தி எழுதிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையே விரல்விட்டு எண்ணிவிடலாம் என்கின்றபோது, ஆண் குறிகளின் அசைவில் எல்லாமே அசைந்துக்கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமாவில் (அண்மையில் படமொன்றுக்காய் வெளிக்களப்படப்பிடிப்பிற்கு சென்ற நணபர் சொன்ன கதைகளிலிருந்தும்) ஆணாதிக்கக்கூறுகளற்ற ஒரு முழுமையான பிரதியை எழுதுதல் நிகழ்காலத்தில் சாத்தியமா என்பதை யோசித்துப்பார்த்தால் 'அம்முவாகிய நானை' முற்றாக நிராகரிக்கமுடியாது.

பருத்திவீரன், மொழி போன்ற படங்களை ஆகா என்று கொண்டாடிய சிற்றிதழ்களை/அறிவுஜீவிகளை லிவிங் ஸ்மைல் வித்யா போன்றோர் வைத்த விமர்சனப்புள்ளிகளை வைத்தே சிற்றிதழ்காரர்கள் கட்டியமைத்தவற்றை ஆட்டங்காணச்செய்யமுடியும். ஒரு ஆணின் பார்வையில் விளிம்புநிலை மனிதரையும் சகமனிதராய் -ஆணாதிக்கக்கூறுகளுடன் - ஏற்றுக்கொள்ள முயற்சிக்கின்ற அம்முவாகிய நானை.., இப்படி மூர்க்கமாய் சிற்றிதழ்க்காரர்களால நிராகரிக்கப்படவேண்டிய அவசியமே அற்றதுதான் எனத்தான் மீளவும் சொல்ல வேண்டியிருக்கிறது. (அண்மையில் இந்தியிலும், ராணி முகர்ஜியும், கொங்கனா சென்னும் நடித்த படமொன்று -பெயர் நினைவினில்லை- பார்த்திருந்தேன். முடிவு சற்று ஃபான்சியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாகும் ஒரு பெண்ணைப்பற்றிக் கதை என்றளவில் முக்கியமானதே)

அத்தோடு 'அம்முவாகிய நான்' வெள்ளி விழாக்கண்டு ஓடப்போவதோ அல்லது அதில் நடித்த பார்த்திபன் நட்சத்திர அந்தஸ்தோ இல்லாத நடிகராயிருப்பதால் இந்தப்படம் தமிழ்ச்சமூகத்தில் பெரிதாகப் பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை. நாம் யாரை நோக்கி இன்னும் கடுமையாக விமர்சனங்களை வைக்கவேண்டும் என்றால் நட்சத்திர அந்தஸ்தோடு தமது படங்களில் பெண்களுக்கு கலாசாரத்தைப் போதிப்பவர்களுக்கும், கதாநாயகிகளுக்கு கையை உயர்த்தி அடிப்பவர்களுக்கும், ஒதுக்கியே விடப்பட்ட அரவாணிகளை வம்புக்கு இழுத்து கேலிச்செய்யும் காட்சிகளையும் 'நகைச்சுவை', 'தமிழ்கலாசாரம்' என்ற போர்வைக்குள் தந்துகொண்டிருக்கும் கதாநாயகர்கள்/பிரதிகள் மீதுதான். மேலும் விஜய, ரஜினி,சிம்பு போன்றோரின் ஸ்ரைலில் ஈர்க்கப்பட்டு அதைச் சிறுவயதிலிருந்தே பார்க்கும் குழந்தைகள் எப்படி இந்த விடயங்களையும் 'இயல்பாய்' உள்வாங்கி விளிம்புநிலை மனிதர்கள் குறித்து அக்கறையில்லாது வளரப்போகின்றார்கள் என்பதைக் குறித்தே நாம் உரையாடலகளை இடையறாது செய்யவேண்டியிருக்கின்றது.

பொழுதுபோக்கோ நகைச்சுவையோ என்ன இழவோ இவர்கள் தமக்கு விரும்பியதைத் தரட்டும். ஆனால் எதற்காக பெண்கள், அரவாணிகள் போன்ற விளிம்புநிலை மனிதர்களை தொடர்ந்தும் இழிவுக்குள்ளாக்குகின்றார்கள்? இவர்களும் இவர்களை இயக்கும் இயக்குநர்களுந்தான் தமிழ் சினிமாவின் தலைவிதியை நிர்ணயித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதால் இவர்கள் மீதுதான் கடுமையான விமர்சனங்கள வைக்கப்படவேண்டும். பாலா, செல்வராகவன் போன்ற இயக்குநர்கள் அதிக கவனம் செலுத்தி வளர்த்துவிட்ட சூர்யா, விகரம், தனுஷ் போன்றவர்கள் வெட்டரிவாளோடு கமர்ஷியல் வேடம் போட்டு 'சூப்பர் ஸ்டார்களாகும்' வசனங்களோடு வருவது குறித்துத்தான் நாம் அதிகம் கவலைப்படவேண்டும் (விரைவில் ஜீவாவிற்கு அப்படியொரு 'அசம்பாவிதம்' நிகழாதிருக்க கோடம்பாக்கம் பிள்ளையார் காப்பாற்றுவராக).

உதவியவை/வாசித்தவை:
(1) உயிர்மை - நவம்பர்
(2) காலச்சுவடு - நவம்பர் & ஒக்ரோபர்
(3) Pleasure of the Text, Roland Barthes
(3) அய்யனார், இ.கா.வள்ளி, ஜமாலன் போன்றோரின் 'கற்றது தமிழ்' குறித்த பதிவுகள்
(4) சன்னாசியின், Living to Tell the Tale பதிவு
(5) Critisms and Truth, Roland Barthes
(6) தியேட்டரில் பார்த்த Love in the time of Cholera, American Gangster, Vel
(7) DVD யில் நல்ல தெளிவாய் இருந்த 'கற்றது தமிழ்', 'அம்முவாகிய நான்'
(8) ஒரு பெண் அடிக்கடி எழும்பி எழும்பி ஒழுங்காய்ப் பார்க்கமுடியாது மறைத்த கள்ளக்கொப்பி 'அழகிய தமிழ் மகன்'
'

தொலைந்தவர்களின் வேர்களைத் தேடியலையும் குறிப்புகள்

Thursday, November 15, 2007

-Running in the Family மற்றும் Coming through Slaughter புதினங்களை முன்வைத்து-

1.
மொழியை, கலாசாரத்தை, குடும்பங்களை காலங்காலமாய் மக்கள் தொலைத்தபடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள். போர்/பொருளாதார வசதிகள் எனப் பல காரணங்களிலிருப்பினும், உலகமயமாதலின் துரிதகதியால் இவ்வாறு இழந்துகொண்டிருப்பது வெகு சாதாரண நிகழ்வாய் இன்றையபொழுதுகளில் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. எனினும் தமது கலாசார/குடும்ப வேர்களைத்தேடி -கடந்துபோன காலத்தின் தடங்களைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன்- சிலர் பூமிப்பந்தின் மூலைகளெங்கும் அலைந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு தனது தொலைந்துவிட்ட/திசைக்கொன்றாய் சிதறிவிட்ட குடும்பத்தின் வேர்களைத் தேடி மைக்கல் ஒண்டாஜ்ஜி, இலங்கையிற்குப் போவதை சற்றுப் புனைவுகலந்த சுயசரிதைத் தன்மையில் Running in the Familyயில் எழுதியிருக்கின்றார்.நிகழ்காலமும், கடந்தகாலமும் ஓர் ஒழுங்கில்லாது குலைக்கப்பட்டு அடுக்கபபட்டு, கவிதைகள், எவர் சொல்கின்றார்கள் என்ற அடையாளமின்றிய உரையாடல்கள் எனப்பல்வேறு எழுத்துமுறைகளினால் கதை சொல்லப்பட்டுப் போகின்றது. குடியைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமில்லையோ என எண்ணுமளவிற்கு ஒண்டாஜ்ஜி குடும்பத்தினர் நிறையக் குடிப்பவர்களாக இருக்கின்றார்கள். அவரவர்க்கான குடும்பம், பிள்ளைகளென இருந்தாலும், பல்வேறு affairs (தகாத உறவு எனச்சொல்வது அவ்வளவு சரியாக இருக்காதென நினைக்கின்றேன்) குறுக்கும் நெடுக்குமாய் முகிழ்ந்தும்/குலைந்தபடியும் இருக்கின்றன. அந்த affairsஐ எல்லாம் சாதாரணமானது என்று ஏற்றுக்கொள்ளும்படியாக குழந்தைகளும் வளர்ந்துகொண்டிருக்கின்றார்கள். நன்றாக்க் குடித்து அடிக்கடி கற்பனையே செய்துபார்க்கமுடியாத கலகங்கள் செய்யும் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் (மெர்வின் ஒண்டாஜ்ஜி) தன்னைத் தமிழரெனவே அடையாளப்படுத்த விரும்புகின்றார். பேர்கர் இனத்தவர்களாக (டச், தமிழ், சிங்களம் என்ற பல்லினக்கலப்பு) இருப்பினும், இந்துமதப்படித்தான் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் தாயினது திருமணம் நடைபெறுகின்றது.

மெர்வின் ஒண்டாஜ்ஜியின் கலகங்கள் கொழும்பிலிருந்து கண்டிக்குப் புகையிரதத்தில் பயணிப்பவர்களிடையே பிரசித்தமானது. கொழும்பில் இராணுவத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த அவர் ஒருமுறை, ரெயின் புறப்பட்ட ஒரு மணித்திய்யாலத்தில் சாரதியைத்(?) துப்பாக்கிகாட்டி மிரட்டி, தனக்குத் தனியப்பயணிக்க அலுப்பாயிருக்கிறது கொழும்பிலிருந்து தனது நண்பனை அழைத்துவாருங்கள் எனக்கூறுகின்றார். நண்பர் வரும்வரை இரண்டு மணித்தியாலங்கள் ரெயின் காத்துக்கொண்டிருக்கின்றது. இன்னும்,வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ரெயினிலிருந்து சேற்று வயற்காணிகளுக்குள் குதிப்பது, கடுகண்ணாவை குகையிருட்டுக்குள் ஆடையைக் கழற்றி நிர்வாணமாய் நின்று ரெயினை மேலே செல்லவிடாது தடுப்பதென..., குடியோடும்/குடியின்றியும் என்று மெர்வினது அட்டகாசங்கள் மிக நீண்டவை. ஒருமுறை, அவரைக் கேகாலையிலிருந்து மதியுவுணக்க்கு மீன் வாங்கிவருகவென வீட்டிலிருந்து அனுப்ப, மனுசன் இரண்டு நாட்களின்பின், திருகோணமலையிலிருந்து ஒரு தந்தி அடிக்கின்றார். 'மீன்கள் கிடைத்துவிட்டன விரைவில் அவற்றோடு திரும்புகிறேன்...' இப்படி பயங்கர சுவாரசியமான மனிதராய் மெர்வின் ஒண்டாஜ்ஜி இருக்கின்றார். ஒரு கட்டத்திற்குப்பிறகு இவரது கலகங்களால் இவர் இலங்கைப் புகையிரதங்களில் பயணம் செய்யவே கூடாதெனற தடையே இவருக்கு எதிராக வருகின்றது.

oooooooooooo


கொழும்பின் கோடைக்காலங்களில் வெயிலிருந்து தப்புவதற்காய், மலையகப்பகுதியில் வேறு வீடுகள் வைத்து அங்கே தங்கும் வசதியுடையவர்களாய், நுவரெலியாவில் நடக்கும் குதிரைப்பந்தயங்களில் சூதாடுபவர்களாய், தமது குடும்பங்களிடையே அதிக செல்வாக்குள்ளவராய் இருப்பவர்கள் யாரென்று காட்டுவதற்காய் சொந்தமாய்க் குதிரைகள் வளர்ப்பவர்களாய் ஒண்டாஜ்ஜியின் குடும்பத்தினர்/உறவினர்கள் மிகுந்த வசதியுடன் இருக்கின்றார்கள். எனினும் அளவிற்கதிமான குடிப்பழக்கத்தால், ஒண்டாஜ்ஜியின் தகப்பனும் தாயும் விவாகரத்துப் பெறுகின்றார்கள். ஒண்டாஜ்ஜியின் தாயார் எந்த உதவியும் தகப்பனிடம் பெறாமல் இங்கிலாந்து சென்று உழைத்து கஷ்டங்களுடன் பிள்ளைகளை வளர்க்கின்றார் (செல்வாக்கான குடும்பம் குடிப்பழக்கம்/விவாகரத்தோடு வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது). இலங்கையை விட்டு தாய், சகோதரகள் புறப்பட்ட பின்னரும் மைக்கல் ஒண்டாஜ்ஜி தனது பதினொரு வயது வரை இலங்கையில் இருக்கின்றார். அவரது தகப்பன் மெர்வின் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கோழிப்பண்ணையொன்றைச் சொந்தமாய் நடத்துகின்றார். விடுமுறைக்காலங்களில் தகப்பனோடும், உடன்பிறவாச் சகோதரிகளோடும் மைக்கல் ஒண்டாஜ்ஜி பொழுதுகளைக் கழிக்கின்றார்.

வேர்களைத் தேடி இருபத்தைந்து வருடங்களுப்பின் இலங்கை செல்லும் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் இந்தப்புதினத்தில் ஒண்டாஜ்ஜியின் தகப்பனாரும், அவரது அம்மம்மாவுமே அதிகம் பேசப்படுகின்றார்கள். மைக்கல் ஒண்டாஜ்ஜியின் அம்மம்மா, இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். அதன்பின் பல ஆண்களோடு உறவுகள் வைத்திருந்தவர். அவ்வாறான உறவுகளுக்கும்/இரகசியச் சந்திப்புக்களுக்கும் இவர்களின் வீடுகளைச் சூழவிருக்கும் கறுவாத்தோட்டங்களே உதவிபுரிகின்றது (மைக்கல் ஒண்டாஜ்ஜியின் cinnaman peeler என்ற கவிதைகூட அதை 'நாசூக்காய்ப்' பேசுகின்றது). அம்மம்மா அவ்வளவாய் பேரப்பிள்ளைகளோடு ஒட்டாதவர்; இறுதிவரை தனது சொந்தக்காலில் நின்றவர். அவரது -நுவரெலியா வெள்ளத்தில் மூழ்கிப்போகும்- மரணம் கூட நெகிழ்வுதரக்கூடியது. அம்மம்மாவிற்கு மத்தியவயதிலேயே இடது மார்பகம் நோயின் காரணத்தால் நீககப்பட, cushion ஆன ஒருவகை செயற்கை மார்பகத்தையே பாவிக்கின்றார். அது பலமுறை தொலைந்துபோவதும், தொலைந்து போகின்ற கதைகளும் சுவாரசியமானவை. ஒருமுறை அதைக் கழற்றி வைத்திருக்கும்போது, மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தகப்பன் வளர்க்கும் நாய் அதை எடுத்துச் சென்று நாசமாக்கி விடுகின்றது. மாமியாருக்கும் மருமகனுக்குமான உறவில் அவ்வளவு சுமுகமில்லையாததால், மெர்வின் ஒண்டாஜ்ஜி திட்டமிட்டே நாயைப் பழகி நுட்பமாய் பழிதீர்த்துக்கொண்டார் என்ற ஒரு கதை அக்குடும்பத்தினருக்கிடையில் இருக்கின்றது. இன்னொருமுறை, பெற்றா (Pettah) பஸ்சிலிருந்து வரும்போது, பக்கத்தில் இருக்கும் ஒரு ஆண் இடது முலையைத் தடவிக்கொண்டு வருவதையும் அதுகுறித்து பிரக்ஞையின்றி இந்தப்பெண்மணி (லைலா) தன்பாட்டில் இருப்பதையும் கண்டு பஸ்சிலிருப்பவர்கள் திகைக்கின்றார்கள்.

oooooooooooo

மைக்கல் ஒண்டாஜ்ஜி, இலங்கையைவிட்டு வெளியேறியபின் தனது தகப்பன் -மெர்வின்- குறித்து பிறர் கூறுவதையே இப்புதினத்தின் பிற்பகுதியில் குறிப்பிடுகின்றார். உடன்பிறவாச் சகோதரி சூஸன், மெர்வின் குறித்து மிக நெகிழ்வான பல சம்பவங்களைக் குறிப்பிடுக்கின்றார். தனனில் மிகுந்த அன்பும் அக்கறையும் உடையவராய்... தன்னோடு மிகுந்த நெருக்கமாய் தந்தையிருந்தவர் என்கின்றார் சூஸன். தனக்கு சிறுவயதில் தெரிந்த தகப்பன் வேறு, பிறகிருந்த தகப்பன் வேறு என்ற புரிதல் ஒண்டாஜ்ஜியிற்கு வருகின்றது. தன்னையும், தனது சகோதர்களைப் போலவன்றி நிதானமாய், கோபப்படாது மென்மையாப் பேசும் உடன்பிறவாச்சகோதரி சூஸனைப் பார்க்கும்போது, மைக்கல் ஒண்டாஜ்ஜியிற்கு தனக்குத் தனது தாயின் குணங்கள் கடத்தபட்டிருக்கவேண்டும், சூஸனிற்கு தகப்பனின் பாதிப்பிருக்கலாம் என்று நினைத்துக்கொள்கின்றார். எனினும் குடியை இறுதிவரை விடாதிருந்த மெர்வின் தனது இறப்பிற்கான ஒருவருடத்தின்முன் அனைத்திலிருந்தும் தன்னைத் தனிமைப்படுத்தி மிகுந்த வெறுமையுடன் பொழுதைக் கழித்திருக்கின்றாரென்ற குறிப்பும் இருக்கின்றது.

இப்புதினத்தில் ஜேவிபியின் எழுபதாம் ஆண்டு கிளர்ச்சி பற்றிய குறிப்புகள் வருகின்றது. மிக இளம்வயதில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் மதிப்புடன் நினைவுக்கூரப்படுகின்றார். சிலோன் பலகலைக்கழகம் முற்றுகையிடப்பட்டு அங்கே தஞ்சம் புகுந்திருந்த கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுவர்களில் தாங்கள் சாவதற்கு முன் எழுதிய இறுதி வார்த்தைகளும் புரட்சி பற்றிய நம்பிக்கைகளும் சிகிரியா ஓவியங்கள் போல பாதுகாப்பட்டிருக்கவேண்டுமென ஒண்டாஜ்ஜி குறிப்பிடுகின்றார் (அவை அவ்வாறு செய்ய்ப்படவில்லை என்பது வேறுவிடயம்). சேர் ஜோன் கொத்தலாவையோடு காலையுணவு சாப்பிட்டு உரையாடியது, பாப்லோ நெருடா இலங்கையில் இருந்தபோது தங்களது வீட்டில் அவ்வப்போது வந்து விருந்துண்டவை எனப் பல விதமான சம்பவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. வில்பத்துக்காட்டில் மைக்கல் ஒண்டாஜ்ஜி தனது குடும்பத்தோடும் உறவுகளோடும் தங்கி நின்ற சில நாட்களைப்பற்றிய குறிப்புகள் ஒரு அழகான கவிதைக்கு நிகராய் வாசிக்கப்படவேண்டியது.


இச்சுயசரிதைப் புனைவை, ஒருவித நகைச்சுவையுடன் ஆனால் வாழ்வைக் கொண்டாடுகின்றவிதமாய் மைக்கல் ஒண்டாஜ்ஜி எழுதியிருக்கின்றார். மரணங்களுக்காய் கூட அதிகம் ஒண்டாஜ்ஜி நேரமெடுத்து கவலைப்பட்டு பக்கங்களை வீணாக்கிவிடவில்லை. எப்போதும் தகப்பன்களிற்கும், மகன்களிற்குமான உறவு சிக்கலானதுதான். ஒரளவு பிள்ளைகள் வளர்ந்தவுடன் பெரும் இடைவெளியை காலம் குறுக்கே வேலியைப்போலப்போட்டுவிட்டுச் சிரிக்கத்தொடங்கிவிடுகின்றது. தமது பிரதிமையை தங்களது மகன்களில் பார்க்கத்தொடங்கி பின்னர் அவர்கள் வளர்கின்றபோது தமக்கான வீழ்ச்சி தமது மகன்களிலிருந்து தொடங்கிவிட்டதென அநேக தகப்பன்மார்கள் நினைப்பது கூட இவ்விரிசலை இன்னும் அதிகரிக்கச்செய்கின்றதெனவும் உளவியல்ரீதியான ஆய்வுகள் கூறிக்கொண்டிருக்கின்றன. எனினும் அவ்வாறான இடைவெளியே ஒவ்வொரு மகனுக்கும் தனது தகப்பனைப்பற்றி அறிந்துகொள்ளும் சுவாரசியத்தை (curioristy?) கூட்டுகின்றனபோலும். மேலும் அந்த மகன்களும் தகப்பன்களாகும்போது, தாம் தமது தகப்பன்களுக்குச் செயததையே தமது பிள்ளைகளும் தமக்குச் செய்துவிடுவார்களோ என்ற பதட்டம் பிற்காலத்தில் தந்தைமாரை ஒருவித பாவமன்னிப்புத்தொனியில் அவதானிக்க வைக்கின்றதாய் இருக்கவும் கூடும். அந்தப்பதட்டமே மைக்கல் ஒண்டாஜ்ஜியை தனது வேர்களைத் தேடி இலங்கைச் செல்லவும் பதிவு செய்யவும் தூண்டிவிட்டிருக்கவும் கூடும். பேச்சை விட எழுத்தே ஆழம் மிக்கதென ழாக் டெரிதா முன்வைத்தற்கு உதாரணமாய், ஒரு சாதாரண மனிதராய் வாழ்வின் பக்கங்களிலிருந்து நழுவிப்போயிருக்கக்கூடிய மெர்வின், மைக்கல் ஒண்டாஜ்ஜியின் மூலம் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றார். புதிது புதிதாய் வாசிப்புக்கள் இப்பிரதி மீது நிகழ்த்தப்படுகின்றபோது, மீண்டும் மீண்டும் மெர்வின் நினைவுகூரப்படப்போகின்றார்.

இப்புதினத்தின் பலவீனம் என்று பார்க்கும்போது, வேர்களைத் தேடிய பயணத்தில் தகப்பன் மட்டுமே நிறைய இடங்களை ஆக்கிரமித்துவிடுவது வாசிப்பவருக்கு சிலவேளைகளில் அலுப்பைத் தரக்கூடும். மைக்கல் ஒண்டாஜ்ஜியின் தாய் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவாகவே வருகின்றது. சிலவேளைகளில் மெர்வின் ஒண்டாஜ்ஜி போல சுவாரசியம் தரக்கூடிய ஒரு ஆகிருதியாக தாய் இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். இதைவிட முக்கிய பலவீனம் என்னவென்றால், இந்நூல் ஒரு படித்த மேற்தட்டுவர்க்கப் பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கையில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாய் ஒண்டாஜ்ஜியின் குடும்பம் வேர்களை ஆழப்பதித்திருந்தாலும், ஒருவித அந்நியர்களாகவே இப்புதினத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றார்கள். கறுவாத்தோட்டம் முதல், நுவரெலியா, கண்டி என்று மலையகப்பகுதிகள் வரை சித்தரிப்புக்கள் இருந்தாலும், அந்த மலையகத் தோட்ட மக்களின் இருண்ட வாழ்வு பதிவுசெய்யப்படவேயில்லை. ஜேவிபியின் கிளர்ச்சி பற்றிக்கூட அக்கறை கொள்கின்ற ஒண்டாஜ்ஜி, பல நூற்றாண்டுகளாய் நுகத்தடி மனிதர்களாய் எல்லோராலும் கைவிடப்பட்ட அம்மக்கள் பற்றி தனது பார்வையை அக்கறையுடன் சற்றுக்கூடத் திருப்பினாரில்லை (குதிரைப் பந்தயத்தில் சூதாடுகின்ற பகுதிகளில் மட்டும் இவ் அடித்தள மக்கள் குறித்த சிறு குறிப்புகள் வருகின்றன).


2.
Coming Through Slaughter அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த ஒரு ஜாஸ் கலைஞனைப் பின் தொடர்ந்து சென்று பார்க்கும் கதை. ஜாஸில் மிகப்பெரும் ஆளுமையாக வரவேண்டிய ஒரு கலைஞன் (Buddy Bolden) தனது 31 வயதில் மனப்பிறழ்வுக்காகி இருபது வருடங்களுக்கு மேலாய் மனநிலை வைத்தியசாலையில் கழித்து இறந்துபோவதை இப்புதினம் பேசுகின்றது. ஜாஸ் குறித்த ஆரம்பப் புரிதலகளும், நிறையப் பொறுமையும் இல்லாதவிடத்து இந்நூலை வாசித்தல் அவ்வளவு இலகுவில்லை. நேர்கோட்டுக் கதைசொல்லல் முறையில்லாது, கடிதங்கள், கவிதைகள், உரையாடல்கள், வைத்தியசாலை ஆவணங்கள் போன்ற எல்லாவற்றையும் மாறி மாறிக் கலந்து கதை சொல்லப்படுகின்றது (இதே கதை சொல்லல் முறைதான் பின்னர் Running in the familyயில் சொல்லப்பட்டாலும், இங்கு அது இன்னும் நிறைய வலைப்பின்னலகளாய்/சிக்கலாய் இருக்கின்றது). சில இடங்களில் Boldenனின் மூலமாக, வேறு சில இடங்களில் பிற பாத்திரங்கள் ஊடாக, சிலவேளைகளில் நூலாசிரியரின் பார்வையினூடாக எனக்கதை பலவேறு திசைகளில் நகர்த்தபடுகின்றது.


ஒரு ஜாஸ் கலைஞனாக இருக்கும் போல்டன் அதேவேளை ஒரு சவரத்தொழிலாளியாகவும் இருக்கின்றார். நமது ஊர்களிலுள்ள கொண்டாட்டமான/விவாதங்கள நடைபெறுகின்ற சலூன்கள் போலவே கறுப்பினத்தவர்களின் சவரக்கடைகளும் இருக்கின்றன. (Barber shop போன்ற அண்மைய கோலிவுட் படங்களும், பல ராப் பாடல்களும் இதை இன்னும் நுணுக்காய்க் காட்டுகின்றன). ஜாஸ் கலைஞர்களுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்குமான உறவுகள் அச்சமூகத்தில் இயல்பாய் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. ஒவ்வொருவருடமும் கிரிக்கெட் (The Cricket) என்று நகரிலுள்ள விலைமாதர்களின் விபரங்க்ளுடன் தகவல் சஞ்சிகை கூட வெளியிடப்படுகின்றது. அவ்வாறு ஒரு விலைமாதராய் இருந்த நோராவுடன் போல்டன் வாழத்தொடங்குகின்றார். சலூன் கடை, ஜாஸ் இசைத்தலென இருக்கும் போல்டனுக்கு இரு குழந்தைகளும் இருக்கின்றன. அவ்வாறான காலப்பகுதியில், நோராவின் முன்னாள் காதலுலனும், 'மாமா' வேலை செய்துகொண்டிருந்த Pickett ஐ -அவருக்கு இன்னும் நோராவுடன் தொடர்பிருகிறது என்றறிந்து- கத்தியால் முகம், மார்பெங்கும் குத்தி காயப்படுத்திவிட்டு, போல்டன் தப்பியோடி இன்னொரு காதலியான ரொபினோடு வாழத் தொடங்குகின்றார். ஆனால் முரண்நகையாக ரொபின் ஏற்கனவே திருமணமானவர். ரொபின் தனது கணவனோடு இருக்கும் வீட்டிலேயே போல்டனும் வாழ்கின்றார். தனது கோபத்தை/காமம் இல்லாத பொழுதை, ரொபினின் கணவன் வெறியுடன் பியானோ வாசிப்பதன் மூலம் தீர்த்துக்கொள்கின்றார். ஒரு பெண்ணுடன் ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்கள் தங்கியிருப்பதும், ஒரு பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்பிருப்பதும் அங்கே 'வித்தியாசமாய்ப்' பார்க்கப்படுவதில்லை. போல்டனும், ரொபினும் உடலுறவு கொள்ளும்போது அது என்றுமே முழுமையுறாத உறவாய், அவர்களுக்கிடையில் வேடிக்கை பார்க்கும் ஒரு அந்நியனாய் ரொபினின் கணவனின் இசைக்கும் பியனோ இசை ஒவ்வொரு பொழுதும் வந்துவிடுகின்றது. அது எப்படியெனில், The music was his dance in the auditorium of enemies....Bullets of music delivered onto the bed we were on...(p 92). கிட்டத்தட்ட இப்படி இரண்டு வருடங்கள் தலைமறைவு வாழ்கை வாழும் போல்டனை அவரது பொலிஸ் நண்பர் வெப் (Webb) கண்டுபிடித்து மீண்டும் பழைய நகருக்கு கூட்டிவருகின்றார்.

ஏற்கனவே இருந்த போல்டனின் இசைக்குழுவில் இருந்தவர்கள் ஒவ்வொருதிசையில் போய்விட்டதறிந்து போல்டனைத் தனிமையும் நண்பர்கள் எவருமற்ற வெறுமையும் இடைவிடாது துரத்துகின்றது. மேலும், போல்டனின் முன்னாள் காதலியான நோரா இப்போது வேறொருவரோடு சேர்ந்து வாழத்தொடங்கியிருக்கின்றார். அந்த நபர் போல்டனின் இசைக்குழுவில் இருந்தவரும், நண்பருமென அறிந்து போல்டனின் வேதனை இன்னும் கூடுகின்றது. ஒரு ஊர்வலத்திற்காய் (parade) ஜாஸை வாசிக்க நோராவில் வீட்டில் சில நாட்கள் போல்டன் தங்கியிருக்கின்றார். அப்போது அவரது முன்னாள் காதலியுடனும் பிள்ளைகளிடமும் அன்பும் நெகிழ்வுமாய் பொழுதைக் கழித்து. அந்த ஊர்வலத்தில் அற்புதமான ஜாஸ் இசையை ஒரு குழுவுடன் இணைந்து கொடுக்கின்றார். தொண்டையால் இரத்தம் பீறிட்டெழுகின்றவரை தன்னை மறந்து போல்டன் வழங்கிய அற்புதமான அந்த இசை நிகழ்வை மக்கள் நீண்டநாட்களிற்கு நினைவில் வைத்திருக்கின்றார்கள். ஜாஸோடு அவ்வளவு பரீட்சயமில்லாத ஒரு வாசகரைக்கூட இதை விவரிக்கையில் மைக்கல் ஒண்டாஜ்ஜி அருகில் இருந்து பார்ப்பதுபோல இழுத்துச்சென்றுவிடுகின்றார்.. அதுவும் அந்த ஊர்வலத்தில் காணும் ஒரு பெண்ணை கற்பனையில் நினைத்து உருகி அவளோடு உடலுறவு கொள்கின்ற போல்டனின் ஆசையைப்போல இசையும் அதனோடு நகர்ந்து போகின்ற வர்ணிப்பு மிக அற்புதமானது. போல்டனின் அந்த இசையின் இனிமையும், erotic தன்மையையும் பிரதியிற்குள்ளிலிருந்து அப்படியே நமக்குள்ளும் வந்திறங்கிக்கொள்கின்றது. Fluff and groan in my throat , roll of a bad throat as we begin to slow. Tired. She still covers her my eyes with hers and sees it slow and allows the slowness for me her breasts black under the wet light shirt., sound and pain in my heart as death. All my body moves to my throat and I speed again and she speeds tired again, a river of sweat to her waist her head and hair back bending back to me, all the desire in me is cramp and hard, cocaine on my cock, eternal, for my heart is at my throat hitting slow pure notes inth the shimmy dance of victory... (p 130 & 131).

தனது முப்ப்த்தொரு வயதிற்குப் பிறகு மனப்பிறழ்வுக்குள்ளாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் வைத்தியசாலையில் கழித்து போல்டன் இறந்துபோகின்றார் அவரேன் அப்படி மனப்பிறழ்வுக்கானார் என்பதற்கான (குடி/தனிமையொரு காரணமாய் இருக்கலாம் என்றாலும்) தெளிவான காரணமோ..., திடீரென்று ஏன் ஜாஸ் இசையில் உச்சங்களைத்தொடும் தூரத்தில் இருக்கும்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டு நகரைவிட்டு ஓடிப்போய்விடுகின்றார் என்பதற்கான தெளிவான காரணங்கள் நாவலில் குறிப்பிடப்படவில்லை (ஆனால் இந்த இருண்மைத்தன்மையே இப்புதினத்திற்கு மேலும் மெருகைக்கொடுக்கின்றது). ஜாஸ் இசையின் நுட்பங்களைக்கற்று வளர்ந்துவருகையில் போல்டன் தனது இசை தெரிந்த நண்பர்களை விட்டு விலகி, ஜாஸ் இசையில் விருப்பற்று பாலியல் தொழிலாளர்களை மட்டும் படங்கள் எடுத்துக்கொண்டு திரியும் Bellocq என்பவரோடு அதிக காலங்களைக் கழிப்பதும், பிற நண்பர்கள்போல அல்லாது இசை குறித்து எதுவும் திருப்பிக் கதைக்காத அவரோடு இரவு பகலாய் பொழுதைக் குடித்துக் கரைத்ததாலும் போல்டனுக்கு ஜாஸ் பற்றிய விருப்பு சிதறிப்போயிருகலாம் என்ற ஒரு வாசிப்பு நமக்கு கிடைக்கின்றது. இதையேதான் போல்டன் ஊரையும்விட்டு ஓடிவிட்டு திரும்பிவரும்போது நோராவும் கூறுகின்றார் Look at you. Look at what he(Bellocq) did to you..Look at you. Look at you. Godamit. Look at you (p 127). ஆனால் எல்லோரையும் விட, Bellocqயே, போல்டன் ஊரைவிட்டு ஓடியபோது அதிகம் அதிர்ச்சியடைகின்றார். மேலும், போல்டன் ஊரிற்குத் திரும்பி வரும் இரண்டு வருட இடைவெளிக்குள், Bellocq நெருப்பு மூட்டி தற்கொலையும் செய்துகொள்கின்றார்.

இந்நாவல் மிகச்சிக்கலான வாசிப்பை கோருகின்றது. ஒரே அத்தியாயத்தில் பலரின் குரல்கள் தன்னிலையில் நின்று பேசுகின்றபோது யார் பேசுகின்றார்கள் என்ற குழப்பம் வருகின்றது. அத்தோடு சில சம்பவங்களை விபரிக்கத்தொடங்கி அவை அரைகுறையிலேயே நின்றும்விடுகின்றது,. சிலவேளைகளில் சில அத்தியாங்களைத்தாண்டி அந்தச்சம்பவம் வேறொருவரின் குரலினூட நீளத்தொடங்கியும் விடுகின்றது. எல்லா சம்பவங்களுக்கும்/விபரிப்புகளுக்கும் காரணங்களைத் தேடி முடிவை எதிர்ப்பார்க்கும் ஒரு வாசகரை இந்தப்புதினம் ஏமாற்றத்தையும் அலுப்பையும் ஒருசேரத் தரக்கூடியது..இவற்றிற்கப்பால் மைக்கல் ஒண்டாஜ்ஜியின் கவித்துவம் நிரம்பிய எழுத்து சிலாகித்துச் சொல்லப்படவேண்டியதொன்று. 70களின் மத்தியில் எழுதப்பட்ட இப்புதினத்தில் இத்தனை பரிசோதனைகளை ஒண்டாஜ்ஜி செய்திருக்கின்றார் என்பது பிரதிமீதான அதிக கவனத்தைக் கோருகின்றது. அதனாற்றான் இதை இன்று வாசிக்கும் ஒருவருக்கும் பல புதிய வாசிப்பின் கதவுகளை திறக்கக்கூடியதாக இருக்கின்றது போலும். போல்டனின் ஜாஸ் இசை முறையாகப் பதிவு செய்யப்படாவிட்டாலும், போல்டன் இன்றும் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில் ஆரம்பக்கால ஜாஸ் இசையின் ஆளுமைகளில் ஒருவரெனக் கொண்டாடப்பட்டபடியும், Buddy Bolden's Blues (or Funky Butt) என்ற இசைக்கோர்வை அவரின் பெயரால் நினைவூட்டப்பட்டு இசைக்கப்பட்டபடியும் இருக்கின்றது.


(அ.யேசுராசாவிற்கு...)