கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

G-20 ரொறொண்டோவில் நடந்தது என்ன?

Tuesday, June 29, 2010

பதின்மூன்று முட்டாள்க‌ள் மைதான‌த்தில் கிரிக்கெட் விளையாட‌ ப‌தின்மூன்றாயிர‌ம் பேர்க‌ள் அதை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்க‌ள் என்றொரு பெர்னாட் ஷோவின்  ந‌கைச்சுவைத் துணுக்கு ஒன்று இருக்கிற‌து. அதுபோல‌வே G-20 என்ற‌ பெய‌ரில் 20 நாட்டின் த‌லைவ‌ர்க‌ள் சொகுசாக‌ இருந்து க‌தைத்து த‌ங்க‌ளை க‌ட‌வுள‌ரின் அவ‌தார‌மாக‌ 'ஏழை' நாடுக‌ளுக்கு காட்ட‌ ரொறொண்டோவில் கூடினார்க‌ள். எல்லாமே அவ‌ர்க‌ள் நினைத்த‌ப‌டித்தான் ந‌ட‌ந்த‌து... ஜூன் 25ம் திக‌தி வ‌ரைக்கும். க‌ட‌வுள‌ர்க‌ள் என்றால் சும்மாவா? பில்லிய‌ன் டொலர் க‌ண‌க்கில் ($1.24 Billion) பாதுகாப்புக்குச் செல‌வு செய்து, க‌ட‌வுள‌ரின் மாநாட்டுக்கு அர‌ங்குக‌ளைச் சுற்றி வான‌ளாவிய‌ வேலிக‌ளை அடைத்து, அது போதாதென்று காலாட்ப‌டை, க‌வ‌ச‌ந்தாங்கிய‌படை, குதிரைப்ப‌டை, ந‌வீன‌ தொழில்நுட்ப சைக்கிள் ப‌டையென்று ப‌ல்வேறு த‌டுப்புப் ப‌டைக‌ளையும் உருவாக்கியிருந்தார்க‌ள். இதைவிட‌ க‌ண‌க்கில்/க‌வ‌ன‌த்தில் வ‌ராத‌ உள‌வுப்ப‌டை,  பொதுமக்களைப்போல க‌ல‌ந்துவிட்ட‌ உள்ளூர்ப்படை, ஏதும் அச‌ம்பாவித‌ம் ந‌ட‌ந்தால் குருவிக‌ளாய் ம‌னித‌ர்க‌ளைச் சுட்டுத்த‌ள்ள‌ சினைப்ப‌ர் ப‌டை என‌ ந‌க‌ரின் மூலை முட‌க்கு எல்லாம் குமிந்துகிட‌ந்தார்க‌ள் ந‌ம் க‌ட‌வுள‌ரின் பாதுகாவ‌ல‌ர்க‌ள்.

ஆனால் விளையாட்டில்தான் 13பேர் முட்டாள்க‌ள் விளையாட‌ 13000 பேர் வேடிக்கை பார்ப்பார்க‌ள்; G-20 என்ப‌து ப‌ல‌ரின் நாளாந்த‌ வாழ்வையும், அடிப்ப‌டை உரிமைக‌ளையும் ப‌றிக்கும் நிக‌ழ்வ‌ல்ல‌வா? க‌ட‌வுள் என்றாலும் வினையாகிப்போனால் எதிர்வினை செய்து அனைவ‌ருக்குமான‌ சுத‌ந்திர‌த்தை  உறுதிசெய்வ‌தற்கு G20 எதிர்ப்பாள‌ர்கள் (Anti G20) ஒன்று கூடினார்கள். இறுதியாய் தம் விளையாட்டு மைதான‌த்தில் தாமே ஆடி தம் 'வெற்றி'யை உலகுக்கு எடுத்தியம்ப விரும்பிய‌ க‌ட‌வுள‌ரை முற்றாக ம‌ற‌ந்து, அனைவரும் இந்த‌ எதிர்ப்பாள‌ர்க‌ள்/அர‌ச‌விழ்ப்பாள‌ர்க‌ளைப்  ப‌ற்றியே பேச‌த்தொட‌ங்கின‌ர். 'எங்க‌ளுக்கு G20 மாநாடு, விளையாட்டில் ஒலிம்பிக்ஸைப் போல கோலாகலமானதென' அர‌சு வழங்கவிருந்த சலுகைகளை வாங்க‌ ப‌ல்லிளித்துக் கொண்டிருந்த‌ பெருநிறுவனங்களான வ‌ங்கிக‌ளையும் சேத‌ப்ப‌டுத்தி ஒரு செய்தியைச் செப்பிவிட்டுத்தான் ஓய்ந்தார்க‌ள் அர‌ச‌விழ்ப்பாள‌ர்க‌ள்.


ஜூன் 25ற்கு முன்...
G20 மாநாடு ஜூன் 26ல் ரொறொண்டோவில் தொடங்குவதற்கு முன்ன‌ரே ப‌ல்வேறு அமைப்புக்கள் தம் எதிர்ப்பைக் காட்டுவ‌த‌ற்காய் பல ஊர்வ‌ல‌ங்க‌ளை ந‌க‌ரின் முக்கிய‌ப‌குதிக‌ளில் நடத்தத் தொடங்கியிருந்தன.. ஜூன் 24 க‌ன‌டா நாட்டின் பூர்வீக‌க்குடிக‌ள் த‌ம‌து நில‌ங்க‌ள் தொட‌ர்ந்து ஆக்கிர‌மிப்ப‌தையும், G20யின் நிகழ்ச்சி நிரலையும் எதிர்த்து நகரின் முக்கிய வீதிக‌ளில் ஊர்வலமாகச் சென்று ஒன்ராறியோ பாராளும‌ன்ற‌ வளாக‌மான‌ குயின்ஸ் பார்க்கைச் சென்ற‌டைந்த‌ன‌ர். நீங்க‌ள் என்ன‌ செய்தால் என்ன‌ இந்த‌ வீதிக‌ள் எம‌க்குரிய‌ன‌ என்று பொலிஸ் என்ற‌ அதிகார‌ அமைப்பு ம‌றைமுக‌மாய் எல்லோருக்கும் உண‌ர்த்த‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌. சைக்கிள்க‌ளில், குதிரைக‌ளில், த‌ங்க‌ள் அடையாளம் பொறிக்கப்பட்ட கார்களில், ஏன் சாதார‌ண ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும வாகங்களிலென, எங்கும் பொலிஸே நீக்க‌ம‌ற‌ நிறைந்திருந்த‌ன‌ர். போதாதற்கு வானில் வானூர்திகளாகவும் பறந்துகொண்டிருந்தனர். உங்க‌ளால் இப்ப‌டி சும்மா க‌த்த‌வே முடியும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் எங்க‌ள் கைக‌ளில்தான் என்று சொல்லாமற் சொன்னார்கள்.

ஜூன் 25 - ‍ வெள்ளி...

மிக‌ப்பெரிய‌ பேர‌ணியொன்று ப‌ல‌வேறு அமைப்புக்க‌ளினால் அல‌ன் பூங்காவில் (Allan Gardens) பிற்பகல் 2.30 மணியளவில் தொட‌ங்க‌ இருப்ப‌தாய் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 2000ற்கு மேலான‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்டார்க‌ள் (நாங்க‌ளும் க‌ல‌ந்துகொண்டோம்). அன்றுதான் ஒன்றாரியோ பாராளும‌ன்ற‌த்தில் இர‌க‌சிய‌மாக‌ பொலிசுக்கு அதிக‌ அதிகார‌ம் கொடுக்கும் ச‌ட்ட‌மொன்று இய‌ற்ற‌ப்பட்ட‌து பொதுவெளியில் க‌சிய‌த் தொடங்கியது. ஜூன் 2ல் இச்ச‌ட்ட‌ம் இய‌ற்ற‌ப்ப‌ட்டிருக்கிற‌து; அது என்ன‌வெனில் மாநாட்டு அர‌ங்கு வேலிக்கு 5 மீற்ற‌ர் தொலைவுக்கு அப்பாலே ஒருவ‌ர் ந‌ட‌மாட‌முடியும். அப்ப‌டியொருவ‌ர் அதையும் மீறி வ‌ந்தால் அவ‌ரை விசாரிக்க‌வும், அடையாள அட்டை கேட்க‌வும், பொருட்க‌ளைப் ப‌ரிசோதிக்க‌வும் பொலிசுக்கு உரிமையுண்டு. இவ்வாறு செய்ய‌ப்படுவ‌தை ஒருவ‌ர் -தன் தனிமனித அடிப்படை உரிமையை முன்வைத்து- ம‌றுப்பாரானால் அவ‌ரை பொலிஸ் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பும் அதிகாரமுண்டு. ஒரு 22 வ‌ய‌து இளைஞ‌ன் இவ்வாறு த‌ன் அடையாள‌த்தைக் காட்ட‌ ம‌றுத்து கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌போதே பொலிஸ் த‌லைவ‌ரால் இச்ச‌ட்ட‌ம் ஏற்க‌ன‌வே இய‌ற்றப்பட்ட‌து குறித்து பொதுவெளியில் தெரிவிக்க‌ப்ப‌டுகிறது. கிட்டத்தட்ட 3 வாரங்களாக இது குறித்து எந்த பொது அறிவிப்பும் வெளியிடாது கள்ள மவுனம் காக்க காசுக்கடவுளரின் பாதுகாவலர்களால் மட்டுமே முடியுமே. க‌ட‌வுள‌ர்க‌ள்தான் ப‌க்த‌ர்க‌ளுக்கு இர‌க‌சிய‌மாய் அருள் பாலிப்பார்க‌ள் என்றால் பொலிஸும் தம் கடவுளரின் கடைவாய்ச் சிரிப்புக்காய் பொதும‌க்க‌ளைப் பலிகொடுக்க இர‌க‌சிய‌மாய் இச்ச‌ட்ட‌த்தை இய‌ற்றியிருந்தார்க‌ள் போலும்!

அல‌ன் பூங்காவில் குழுமியிருந்த‌ ம‌க்க‌ள் ந‌க‌ர‌த்தெருக்க‌ளில் ஊர்வ‌ல‌மாக‌ப் போகத்தொட‌ங்குகின்ற‌ன‌ர். No One Is Illegal என்ற‌ அமைப்பினூடாக‌ நாங்க‌ளும் ந‌ட‌க்க‌த் தொட‌ங்குகின்றோம். பூங்காவில் முற்றுமுழுதாக‌ த‌ங்க‌ளை க‌றுப்பு உடையால் ம‌றைத்த‌ ப‌ல‌ரைக் காண்கிறோம் (எங்க‌ளை ப‌ட‌ம் எடுக்க‌வும் அவ‌ர்க‌ள் அனும‌திக்க‌வில்லை‍ இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி கீழே சொல்கிறேன்). ஒவ்வொரு அமைப்பும் அர‌சையும் அதிகார‌த்தையும் எதிர்த்துக் கோசம் போடுகின்றன.. "No One Is Illegal, Canada is Illegal" என்கின்ற‌ கோச‌மும் எழுகின்றது. இது நிச்சயம் அதிகார அடிவருடிகளுக்குக் கோபத்தையோ/எரிச்சலையோ ஏற்படுத்தியிருக்கும். புதிதாய் உரிய அனுமதியின்றி வருபவர்களை Illegal Immigrants என்று அடையாளங்குத்தி திருப்பி அனுப்பச் செய்கின்ற அரசு, தன் மூதாதையர்கள் இந்நாட்டின் பூர்வீகக்குடிகளின் நிலங்களை ஆக்கிரமித்து, ஒடுக்கியே தனக்கான அரசை ஸ்தாபித்தபோது, Canada is Illegal என்பதில் எவ்விதத் தவறுமேயில்லைத்தானே. கோச‌ம் எழுப்ப‌ப்ப‌டாத‌போது ராப் பாட‌ல்க‌ளால் அதிகார‌த்தை முக்கிய‌மாய் பொலிசை திட்டுகிற‌/கேலி செய்கிற‌ வ‌ரிகள் மிகப்பெரும் சத்தத்தில் ஓடுகின்ற‌ன‌. கூட்ட‌ம் ந‌கர‌ ந‌க‌ர சைக்கிள் பொலிஸ் இருபுற‌மும் வேலி அடைத்து எங்களைச் சூழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். நாங்க‌ள் போகின்ற‌ வீதிக்கு குறுக்காய் திடீரென‌ ஒரு பொலிஸ் கார் த‌ன் அலார‌த்தை அல‌ற‌விட்டு த‌ன்னைவிடுவென‌ அதிகார‌ம் காட்டுகிற‌து. ஏற்க‌ன‌வே அள‌வுக்க‌திக‌மான‌ பொலிஸின் பிர‌ச‌ன்ன‌த்தாலும் அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ அதிகார‌த்தாலும் எரிச்ச‌லும் கோப‌ம‌டைந்திருந்த ஊர்வலக்குழுக்கள் பொலிஸ் காரைச் சூழ‌த்தொட‌ங்குகின்ற‌து.

இங்கே ஒன்றை நினைவில் கொள்ள‌வேண்டும். ஊர்வ‌ல‌த்தில் வ‌ந்த‌ அரைவாசிக்கும் மேற்ப‌ட்டோர் கையில் க‌ம‌ராக்க‌ள் இருக்கின்ற‌ன‌. மேலும் ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர். எந்த‌ அத்துமீற‌லும் உட‌னே ப‌ட‌மாக்க‌ப்பட்டு அதேவேக‌த்தில் பொதுவெளியில் ப‌ர‌வத் தொட‌ங்கிவிடும். அலாரம‌டித்த‌ பொலிஸ் காரை ஊர்வ‌ல‌க்கார‌க‌ள் சூழ‌ந்த‌தைப் போலவே க‌ம‌ராக்க‌ளும் சூழ‌கின்ற‌ன‌. ப‌ட‌மெடுக்கின்ற‌ன‌. த‌ன் அதிகார‌ம் இனி ஆகாதென்ற‌ நிலையில் பொலிஸ் காரின் அலார‌ம் நிறுத்த‌ப‌ட்டு அமைதியாகின்ற‌து. இந்த‌ தெருக்க‌ள் உங்க‌ளுக்கு ம‌ட்டுமில்லை; நாங்க‌ள் ஊர்வ‌ல‌ம் போகும்போது அது எங்க‌ளுக்கும் சொந்த‌மான‌து என்ப‌தை மறைமுக‌மாக‌ பொலிசுக்குத் தெளிவுப‌டுத்தப்ப‌டுகிற‌து.

இப்ப‌டிக் காரைச் சூழ்ந்து எல்லோரும் நின்றால் ஏதாவது அச‌ம்பாவித‌ம் நிக‌ழ்ந்துவிடக்கூடுமென்ற‌ எச்ச‌ரிக்கையில் சுற்றி நிற்ப‌வ‌ர்க‌ளைத் தொட‌ர்ந்து ந‌ட‌ந்துபோகுமாறு சில‌ பெண்க‌ள் அறிவுறுத்துகிறார்க‌ள். தொட‌ர்ந்து கோஷ‌ங்க‌ள் எழுப்ப‌டுகிற‌து; ஊர்வ‌ல‌ம் ந‌க‌ர‌த்தொட‌ங்குகின்ற‌து. சில‌ நிமிட‌ங்க‌ளில் எங்க‌ளுக்குப் பின்னே கூட்ட‌ம் அல்லோலக‌ல்லோலப்ப‌டுகிற‌து. என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று க‌ம‌ராவுட‌ன் ஓடும்போது பொலிஸ் ஒரு க‌றுப்பின‌ இளைஞ‌னை நில‌த்தோடு சாய்த்து கைதுசெய்கிற‌து. கூட்ட‌ம் கொந்த‌ளிக்க‌த் தொட‌ங்குகிற‌து. அங்கே நிற்கும் பொலிஸைச் சுற்றி ஊர்வ‌ல‌க்கூட்ட‌ம் சுற்றிவ‌ளைக்க‌த் தொட‌ங்குகிற‌து. Let him GO என அவ‌ரை விட‌ச்சொல்லி கூட்ட‌ம் க‌த்துகிற‌து. ப‌ட‌மெடுத்துக்கொண்ட‌வ‌ர்களையும் பொலிஸ் முர‌ட்டுத்த‌ன‌மாய் ந‌ட‌த்துகிற‌து. No One Is Illegal சார்பாக‌ பொலிஸ் அராஜ‌க‌த்திற்கு எதிராக‌ ஏற்கனவே கோச‌ம் எழுப்பிக்கொண்டிருந்த‌ பெண்ணை பொலிஸ் குறிவைத்து தாக்குகிற‌து. அவ‌ருக்கு க‌ண்ணருகில் காய‌ம் ஏற்பட்டு இரத்தம் வடிகிறது.. அந்த‌ இளைஞ‌னை கைதுசெய்வ‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் என்ன‌வென்று அறியாத‌போதும் அவ‌ர் காது கேளாத‌/ வாய் பேசாத ந‌ப‌ர் என்று அறிந்தோம்.

இவ‌ரை பொலிஸ் ஊர்வ‌ல‌த்தின் இடையே புகுந்து கைது செய்த‌தாக‌சொல்ல‌ப்ப‌டுகிற‌து. இவ்விளைஞன் கைது செய்யப்படும்போது அவர் வாய் பேசமுடியாதவர், தயவு செய்து அவரின் கைகளை இறுக்கக்கட்டினால் அவரால் (சைகையால்) பேசமுடியாது என அவரின் நண்பி கூறியபோதும் பொலிஸ் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறது. அவர் பேசுவதை விளங்கி பொலிசுக்கு தெரிவிக்க தன்னையும் கூட்டிச்செல்க என அவ்விளைஞனின் தோழி கேட்டபோதும் பொலிஸ் மறுக்கிறது. நேற்று அவரின் வழக்கறிஞர் 'இது கிட்டத்தட்ட சாதாரண வாயால் பேசும் ஒருவரை அவரைப் பேசமுடியாது செய்ய duct tape ஒட்டுவதற்கு நிகர்த்த மனித உரிமை மீறல்' எனக் கூறியிருக்கிறார்.

ஊர்வ‌ல‌ம் எங்கே முடியுமென‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளால் கேட்க‌ப்ப‌ட்ட‌போதும் அது செல்லும் வீதிக‌ளோ, முடியும் இட‌மோ தெளிவாக‌க் கூற‌ப்ப‌டாது, இய‌ன்ற‌வை பாதுகாப்பு வேலிக்க‌ருகில் செல்வ‌து என‌ ஊர்வலத்தை வழி நடத்துபவர்களால் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. எனினும் பெருந்தொகையான‌ பொலிஸ் பிர‌ச‌ன்ன‌த்தால் வேலியை நெருங்க‌முடியாது, ஊர்வ‌ல‌ம் மீண்டும் தொட‌ங்கிய‌ இட‌த்திற்கு (அலன் பூங்காவிற்கு) வ‌ருகின்ற‌து. வீட‌ற்ற‌வர்களுக்கு (Homeless People) ஆத‌ர‌வு (Solidarity) கொடுக்கும் வ‌கையாக‌ கூடார‌ங்க‌ள் சிலவற்றை அங்கேயே அமைத்து 40ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அவ்விர‌வு அங்கேயே த‌ங்குகின்ற‌ன‌ர்.

( தொடரும்)

ஒற்றைக்கால் புறாவும் புர‌ண்டு ப‌டுக்கும் ஆமைக‌ளும்

Monday, June 28, 2010

-மெலிஞ்சிமுத்த‌னின் 'வேருல‌கு' நாவ‌லை முன்வைத்து-

1.
ஈழ‌த்த‌மிழ‌ரின் வாழ்வென்ப‌து ஈழ‌த்திலும் புல‌த்திலுமென‌ ப‌ல்வேறு சிக்க‌ல்க‌ளைத் தின‌மும் ச‌ந்திப்ப‌து. நான்கு புற‌மும் க‌ட‌ல் சூழ்ந்த‌ தீவொன்றில் இருந்து வ‌லுக்க‌ட்டாய‌மாய் புல‌ம்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் க‌தைக‌ளில் அநேக‌ம் க‌ண்ணீரின் உவ‌ப்பு உடைய‌ன‌வை. புதிய‌ வாழ்வு தேடிப்புற‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌ ஈழ‌த்த‌மிழ‌ரின் உயிர்க‌ள் க‌ட‌லிலும்,ப‌னியிலும் காணிக்கையாக‌க் கொடுக்க‌ப்பட்டு நினைவுக‌ள் ம‌ட்டும் மித‌ந்துகொண்டிருக்கின்ற‌ன‌. இவ்வாறு புதிய‌ வாழ்வு தேடி அக‌தியாய்ப் புல‌ம்பெய‌ரும் ஒருவ‌ன் விமான‌நிலைய‌த்தில் பிடிப‌ட்டு நிர்வாண‌மாக்க‌ப்ப‌ட்டு விசாரிக்க‌ப்ப‌டுவ‌தில் இருந்து தொட‌ங்குகின்ற‌து மெலிஞ்சி முத்த‌னின் 'வேருல‌கு' குறுநாவ‌ல். க‌தைசொல்லியான‌ சீல‌ன் நிர்வாணியாக்க‌ப்ப‌ட்டு அடையாள‌த்துக்காய் புகைப்ப‌ட‌மும், கைரேகையும் பொலிஸால் எடுக்க‌ப்ப‌டுகின்ற‌து. த‌ன்னைப் புற‌வுல‌காய் அடையாள‌ங்காண‌ முய‌ற்சிக்கும் உங்க‌ளால் த‌ன் த‌னித்துவ‌மான‌ க‌ன‌வுகளுக்குள் நுழைய‌முடியுமா என‌ சீல‌ன் அவ‌ர்க‌ளை ம‌ன‌துக்குள் கேலி செய்கின்றான்.

சீல‌ன் ஈழ‌த்திலிருந்து பிரான்சிற்கு புல‌ம்பெய‌ர்ந்த‌ ஓர் அக‌தி. ஊரில் இருக்கும்போது ப‌ழ‌க்க‌மான‌ ப‌வானி சீல‌னுக்கு த‌ங்கிமிட‌த்தை வ‌ச‌தி செய்து கொடுக்கிறார். அவ்வீட்டில் வ‌சிக்கும் ப‌வானி உட்ப‌ட‌ அனைவ‌ரும் குறைந்த‌ வ‌ருமான‌த்தில் த‌ங்க‌ள் வாழ்வை ந‌க‌ர்த்திச் செல்ப‌வ‌ர்க‌ள். மேலும் ஊரிலிருக்கும் த‌ம் குடும்ப‌ம்/உற‌வுக‌ளுக்கு ப‌ண‌மும் அனுப்ப‌வேண்டிய‌வ‌ர்க‌ள். மிகுந்த‌ அவ‌ஸ்தைக‌ளுட‌ன் இவ‌ர்க‌ளுட‌ன் கால‌ம் க‌ழிக்கும் சீல‌னுக்கு இர‌ண்டாம் முறையும் அக‌தி அந்த‌ஸ்து பிரான்சில் நிராக‌ரிக்க‌ப்ப‌ட பிரான்ஸிலிருந்து வேறு நாடுக்கு க‌ள்ள‌மாக‌ வெளிக்கிட‌த் த‌யாராகிறார். ப‌வானி சீல‌னைத் திரும‌ண‌ம் செய்யும் த‌ன் விருப்பைத் தெரிவிக்கிறார். தான் காத‌லியாக‌ ப‌வானியை நினைத்துப் ப‌ழக‌வில்லையென‌க் கூறி சீல‌ன் ம‌றுத்தாலும், இத‌ற்கு இன்னொரு முக்கிய‌ கார‌ண‌ம் உண்டு. அது சாதி. ப‌வானி, ஊரில் ப‌னையேறும் தொழிலைச் செய்யும் பிறேம‌னின் ம‌க‌ள்.

ஸ்பெயினிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லும் ப‌ய‌ண‌ம் இடைந‌டுவில் பிடிப‌ட்டுத் த‌டைப‌ட‌, வெறுமையோடு சிறைக்குள்ளிருக்கும் சீல‌னுக்குள் ஊர்ப‌ற்றிய‌ நினைவுக‌ள் ஊற‌த்தொட‌ங்குகின்ற‌ன‌. ஸ்பெயினிலிருந்து க‌தை க‌ட‌ல்க‌ளையும் க‌ண்ட‌ங்க‌ளையும் தாண்டி அரிப்புத்துறையில் போய் இற‌ங்கி ந‌க‌ர‌த் தொட‌ங்குகின்ற‌து. அருவியாறு பாயும் அரிப்புத்துறையில் போரும் வ‌றுமையும் மாறி மாறித் த‌ம்மை விஞ்சுகின்ற‌ வாழ்க்கை சீல‌னுக்கு. பெரிய‌ம்மா குடும்ப‌த்தோடு அதிக‌ கால‌ம் க‌ழிக்கும் சீல‌னுக்கு அருகிலிருக்கும் க‌ண்ம‌ணி மாமி குடும்ப‌த்துட‌ன் நெருங்கிப் ப‌ழ‌கும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்க்கிற‌து. க‌ண்மணி மாமியின் குடும்ப‌த்தை முன்னிலைப்ப‌டுத்திய‌ப‌டி 'வேருல‌கு'  ப‌ல்வேறு திசைக‌ளில் ப‌ய‌ணிக்க‌த் தொட‌ங்குகின்ற‌து. க‌ண்ம‌ணி மாமி, மாமா, அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளான‌ ச‌சிய‌க்கா, சின்ன‌ன், அத்தான்பிள்ள‌ ம‌ற்றும் ‍க‌ண்ம‌ணி மாமி வீட்டில் வேலை செய்கின்ற‌‍ உலுந்தையின் பாத்திர‌மும் அதிக‌ம் விவ‌ரிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவ‌ர்க‌ளோடு சேமாலைய‌ண்ண‌ன், ச‌ந்தியாக்கிழ‌வ‌ன், பொன்னுக்கிழ‌வி போன்றோரும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்றார்க‌ள். இம்மூவ‌ரும் சீல‌னின் வாழ்வில் ஆழ‌மான‌ பாதிப்பை ஏதோவொரு வ‌கையில் ஏற்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள்.

க‌ண்ம‌ணி மாமி குளிப்ப‌தை இர‌க‌சிய‌மாக‌ இர‌சிக்கும் உலுந்தை, வ‌ள‌ர்ந்த‌ த‌ன் ம‌க‌ளான‌ ச‌சிய‌க்காவுட‌ன் ஒரே அறையில் ப‌டுத்து கைக‌ளால் அளைகின்ற‌ (க‌ண்ம‌ணி)மாமா, ச‌சிய‌க்காவின் நெருப்புச் சுழியேற்றும் மார்புக‌ளை நினைத்துத் த‌ன் காற்ச‌ட்டைக‌ளை ந‌னைக்கும் க‌தைசொல்லியான‌ சீல‌ன் என‌ எல்லோருக்குள்ளும் காம‌ம் ப‌ல்வேறு புள்ளிக‌ளில் குறுக்கிடுகின்ற‌ன‌. க‌ண்ம‌ணி மாமியின் இருளான‌ அறையினுள் ஆமைக‌ள் புர‌ள்வ‌தைப் போல‌ இவ‌ர்க‌ள் எல்லோருக்குள்ளும் காமம் ஒரு இர‌க‌சிய‌ ந‌தியாய் ந‌க‌ர்ந்த‌ப‌டியிருக்கின்ற‌து. ஆனால் 'வேருல‌கு' காம‌த்தை ம‌ட்டும் உரையாடும் புனைவ‌ல்ல‌. போர் சார்ந்த‌ வாழ்க்கையின் உள்ளும் காம‌ம் த‌ன்ன‌ளவிள் க‌சிந்த‌ப‌டியிருக்கும் என்ப‌தைப் ப‌டைப்பாளி சுட்டிக்காடிவிட்டு புற‌ச்சூழ‌லுக்குள் ந‌க‌ர்ந்துவிடுகின்றார்.

ஈழ‌த்தில் ப‌ல்வேறு இய‌க்க‌ங்க‌ள் வெடித்துக் கிள‌ம்புகின்ற‌ கால‌ம். 'தோழ‌ர்' என‌ த‌ங்க‌ள் இய‌க்க‌த்த‌வ‌ரை அழைத்துக்கொள்ளும் இய‌க்க‌ம் ஒன்றுக்கு க‌ண்ம‌ணி மாமி குடும்ப‌த்தின‌ர் ஆத‌ர‌வு கொடுக்கின்றன‌ர். ந‌ள்ளிர‌வுக‌ளில் க‌ண்ம‌ணி மாமி, வீட்டில் புட்டு அவித்துக் கொட்ட‌க் கொட்ட‌, சுட‌ச்சுட‌ எழுத‌ப்ப‌டும் சுவ‌ரோட்டிக‌ள் ப‌க‌ல் வேளைக‌ளில் உண‌ர்ச்சிக‌ர‌மாய் போராட்ட‌த்திற்கு சுவ‌ர்க‌ளில் அழைப்பு விடுகின்ற‌ன‌. அவ்வாறான‌ கால‌ப்ப‌குதியில் இய‌க்க‌த்தில் இருக்கின்ற‌ சேமாலைய‌ண்ண‌னுக்கும் ச‌சிய‌க்காவிற்கும் காத‌ல் அரும்புகின்ற‌து. அவ‌ர்க‌ள் திரும‌ண‌ம் செய்கின்ற‌ நாளில் இராணுவ‌ம் ஊர்புக‌ ச‌ன‌ங்க‌ள் அக‌தியாகின்ற‌ன‌ர். இடையில் க‌ண்ம‌ணி மாமி வீட்டில் வேலை செய்யும் உலுந்தை (க‌ண்ம‌ணி)மாமாவிற்கு க‌த்தியால் குத்திவிட்டு ஓடிப்போய்விடுகின்றார். இவ்வாறு மாமா குத்த‌ப்ப‌ட்ட‌த‌ற்கு மாமாவிற்கு உலுந்தையின் அக்காவோடு இருந்த‌ இர‌க‌சிய‌ உற‌வென்று ஊரில் பேசிக்கொள்கின்றார்க‌ள். ஆனால் எவ‌ருக்குத் தெரியாத‌ -சீல‌னுக்கு ம‌ட்டுந்தெரிந்த‌‍- மாமியின் உட்பாவாடையை க‌ள‌வாக‌ எடுத்து இர‌க‌சிய‌மாய் இர‌சிக்கின்ற‌ உலுந்தையின் இன்னொரு க‌தையும் வேருல‌கில் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து.

உலுந்தையின் அக்காவோடு த‌ன் க‌ண‌வ‌னுக்கு இருந்த‌ தொட‌ர்புப‌ற்றிப் பேசும் ஊர் வாயை மூட‌ முடியாத‌ க‌ண்ம‌ணி மாமி சாவ‌த‌ற்குக் கிண‌ற்றுக்குள் குதிக்கிறார். இதை முத‌லில் க‌ண்டாலும், அவ‌ரை விட‌ சாதியின் ப‌டிநிலையில் குறைந்திருக்கின்ற‌ பிறேம‌னால் கிண‌ற்றுக்குள் குதித்து க‌ண்ம‌ணி மாமியை விட‌ காப்பாற்ற‌ முடியாதிருக்கின்ற‌து. சேமாலைய‌ண்ண‌ன் வ‌ரும்வ‌ரை காத்திருக்க‌வேண்டியிருக்கிற‌து. 'எங்கிருந்தோ எழும் மிடுக்கும' என்று ம‌ஹாக‌வி பாடிய‌தைப் போல‌ இழ‌ப்புக்க‌ள், இட‌ம்பெய‌ர்த‌ல்க‌ள் போன்ற‌ துய‌ர்க‌ளுக்கும் அப்பால், உயிர்ப்புட‌ன் அரிப்புத்துறைச் ச‌ன‌ம் தொழில் செய்ய‌ க‌ட‌லுக்குப் போக‌த்தொட‌ங்குகின்ற‌ன‌ர். ஒரு நாள் க‌ட‌லுக்குள் தொழில் செய்ய‌ப் புற‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌குக‌ள் இராணுவ‌த்தால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ உட‌ல‌ங்க‌ளோடு க‌ரை திரும்புகின்ற‌ன‌. அன்று ஊரில் 12 பேர் வித‌வையாயிற்றார்க‌ளென‌க் க‌தைசொல்லி கூறுகின்றார். அதில் போன‌ சேமாலைய‌ண்ணன் உட்ப‌ட ஒருசில‌ரின் உட‌ல்க‌ள் த‌விர‌ மிகுதி உட‌ல்க‌ள் அடையாள‌ங் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. சேமாலைய‌ன்ண‌ன் உயிருட‌ன் வ‌ருவார் என்று ச‌சிய‌க்காவும், க‌ண்ம‌ணி மாமியும் ந‌ம்புகின்றன‌ர். க‌ர்ப்ப‌ணியாயிருக்கும் ச‌சிய‌க்காவிற்கும் குழ‌ந்தை இற‌ந்து பிற‌க்கின்ற‌து.

இவ்வாறான‌ கொடுங்க‌ன‌வுக‌ள் சூழ‌ந்த‌ கால‌த்தில், மாமாவைக் குத்திவிட்ட‌ உலுந்தையை சீல‌ன் ஓரிட‌த்தில் ச‌ந்திக்கின்றார். த‌ன்னோடு கூட‌வே வ‌ரும்ப‌டி அழைக்கின்ற‌ உலுந்தையோடு போகின்ற‌ சீல‌ன், த‌ண்ணீர் அள்ள‌த் த‌னித்து வ‌ருகின்ற‌ ஒரு இராணுவ‌த்தின் த‌லையை உலுந்தை வெட்டுவ‌தை நேர‌டிச் சாட்சியாக‌ப் பார்க்கின்றார். எநத‌ அற‌த்தைச் ச‌ம‌ன்பாடாக‌ வைத்தும் கொலையை நியாய‌ம் செய்ய‌முடியாது ந‌ம்புகின்ற‌ சீல‌னுக்கு உலுந்தையின் இச்செய‌ல் மிகுந்த‌ அதிர்ச்சியைத் த‌ருகின்ற‌து.

பூச்சியாடும் தானுமாய்த் திரிகின்ற‌ பொன்னுக்கிழ‌வி ப‌ல‌ தொன்ம‌க் க‌தைக‌ளை சீல‌னுக்குக் கூறுகின்றார். அதிலொரு க‌தை அல்லி ராணியின் க‌தை. அரிப்புத்துறையில் குறுநில‌ அர‌ச‌ர்க‌ளாய் இருந்த‌ ப‌ர‌ம்ப‌ரையில் வ‌ந்த‌ அல்லியையும் அவ‌ள‌து க‌ண‌வ‌னையும், அல்லியில் ஆசை வைக்கும் ஓர் அதிகாரி ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாக‌க் கொல்கின்றான். ஆனால் அல்லிக‌ளுக்கு ம‌ர‌ணம் நிக‌ழ்வ‌தேயில்லை; துரோகிக‌ளை அழிப்ப‌த‌ற்காக‌ கால‌ந்தோறும் அல்லி ராணி உயிர்த்த‌ப‌டியேயிருக்கிறாள் என்கிறார் பொன்னுக்கிழ‌வி. த‌ன‌க்குள்ளே அதிக‌ம் பேசுகின்ற‌ ச‌ந்தியாக் கிழ‌வ‌னை, ஊர் ம‌ன‌ம்பிற‌ழ்ந்த‌வ‌ர் என்று கூறிக்கொண்டாலும் சீல‌னுக்கு அவ‌ரே எதையும் அதிக‌ம் அறிந்த‌வ‌ரென்று அவ‌ருட‌ன் நெருங்கிப்ப‌ழ‌குகிறான்.

ஒருநாள் ச‌ந்தியாக் கிழ‌வ‌ன் காணாம‌ற்போகின்றார். ச‌ன‌ம் முற்றுமுழுதாய் ஊர் விட்டு அக‌தியாக‌ இட‌ம்பெய‌ர்கிற‌து. பொன்னுக்கிழ‌வி என்ன‌ நிக‌ழ்ந்தாலும் ஊரைவிட்டு நீங்குவ‌தில்லையென‌ ச‌ந்தியாக் கிழ‌வ‌னின் மீள்வ‌ருகைக்காய் ஊரிலேயே த‌ங்கிவிடுகின்றார். ஆமைக‌ள் மீண்டும் புர‌ண்டு புர‌ண்டு இருட்டு அறைக‌ளில் ப‌டுக்கின்ற‌ன‌. பூனைக‌ளும் எவ்வ‌ள‌வு த‌டுத்தும் குட்டிக‌ளைப் போடுவ‌தை வீடுக‌ளில் நிறுத்துவ‌தாய் இல்லை. ச‌சிய‌க்கா அக‌தி முகாமில் இருக்கின்ற‌ செல்வனோடு எங்கையோ வ‌ன்னிப்ப‌க்க‌மாய் ஓடிப்போய்விடுகின்றார்.

த‌ற்செய‌லாய் ஒருநாள் சீல‌ன் சேமாலைய‌ண்ண‌னை உயிருட‌ன் காண்கிறார். அவ‌ர் த‌ன்னை மீன்பிடிக்க‌ க‌ட‌லுக்குள் போன‌போது கைது செய்த‌ இராணுவ‌ம் த‌ள்ளாடி முகாமிலும் பின்ன‌ர் வெலிக்க‌டையிலும் வைத்திருந்து விடுவித்த‌து என்கின்றார். வ‌றுமையின் நிமித்தம் கூலித்தொழிலாளியாக‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் வேலை செய்து 'முட்டாள்' என‌ப்ப‌ட்ட‌ம் வாங்கி த‌ற்போது இராணுவ‌த்தோடு சேர்ந்திய‌ங்கும் இய‌க்க‌ம் ஒன்றோடு ச‌ம்ப‌ள‌த்திற்காய் சேர்ந்திருக்கின்றேன் என்கிறார். இவை எல்லாவ‌ற்றுக்கும் மேலான சோக‌மாய், சேமாலைய‌ண்ணனை இராணுவ‌ம் பிடிப‌டமுன்ன‌ர் சேர்ந்து இய‌ங்கிய‌ இய‌க்க‌ம், சேமாலைய‌ண்ணன் விடுத‌லையாகி வ‌ந்த‌போது க‌ரைந்து காணாம‌ற்போய்விட்ட‌து. 'ஈழ‌ விடுத‌லைப் போராட்ட‌ம் என்ற நீரோட்ட‌த்தில் தெறித்து வெறும் குமிழிக‌ளாய் ச‌ல‌ன‌ற்றுப் போன‌ எத்த‌னையோ துளிக‌ளில் ஒருதுளிதான்' சேமாலைய‌ண்ண‌ன் என்று நினைத்து க‌வ‌லைப்ப‌டுகிறார் சீல‌ன்.

ஒருநாள் அல்லி ராணி அருவியாற்றில் நீராடுவ‌தை சீல‌ன் காண்கிறார். நெருங்கிப் போய்ப்பார்க்கும்போது அது -க‌ண்ம‌ணி மாமியின் ம‌க‌ளான‌‍- சின்ன‌ன் என்ப‌து தெரிகின்ற‌து. அல்லிக‌ள் மீண்டும் தோன்றுவ‌து துரோகிக‌ளைப் பூண்டோடு அழிக்க‌வே என்ற‌ பொன்னுக்கிழ‌வியின் தொன்ம‌க் க‌தை க‌ட‌ந்து போகின்ற‌து. சின்ன‌ன் ஒருநாள் சேமாலைய‌ண்ண‌னை ஏழு துண்டாய் வெட்டிவிட்டு ந‌தியில் இற‌ங்கி இர‌த்த‌க்க‌றையைக் க‌ழுவிக்கொள்கிறார்.

2.
வேருல‌கின்' க‌தாபாத்திர‌ங்க‌ள் குறித்தும் அவை ந‌க‌ரும் திசை குறித்தும் ஒரு எளிமையான‌ வ‌ரைபட‌த்தை இவ்வாறு வ‌ழ‌ங்கினாலும் இக்குறுநாவ‌லில் வ‌ரும் ப‌ல‌ பாத்திர‌ங்க‌ள் த‌ம்ம‌ள‌வில் த‌னியே விரிந்து ப‌ல‌ க‌தைக‌ளைக் கூற‌க்கூடிய‌ன‌. முக்கிய‌மாய் சேமாலைய‌ண்ண‌ன், உலுந்தை, ச‌சிய‌க்கா த‌ங்க‌ளின் க‌தையைத் த‌ம‌த‌ள‌வில் சொல்ல‌க்கூடிய‌ இடைவெளிக‌ளை ப‌டைப்பாளி த‌ந்திருக்கின்றார். அதிக‌மான‌ உரையாட‌ல்க‌ளாலும்,எளிமையான‌ மொழியிலும் எழுத‌ப்ப‌டும் பெரும்பான்மையான‌ ஈழ‌ப்ப‌டைப்புக்க‌ளிலிருந்து வில‌கி நிறைய‌ப் ப‌டிம‌ங்க‌ளோடும், மிக‌ இறுக்க‌மான‌ உரைந‌டையோடும் 'வேருல‌கு' த‌னித்துவ‌மாய் மிளிர்கின்ற‌து. 'காடு ப‌ச்சை மேக‌ங்க‌ளாய் அவ‌தார‌மெடுத்திருந்த‌ அவ்விட‌த்தில் வான‌ம் இற‌ங்கித் த‌ன் கூர‌ல‌கால் ந‌தி நீர் அருந்திக்கொண்டிருந்த‌து' (ப‌26), 'க‌ட‌ல் ப‌ல‌ கோண‌ல்மாண‌ல்க‌ளின் அழ‌கு. காம‌த்தையும் கோப‌த்தையும் ஒருங்கே சேர்த்த‌ திமிற‌லின் வ‌டிவ‌ம். க‌ட‌ற்க‌ரை முழுவ‌தும் கேட்டுக்கொண்டிருக்கின்ற‌து ஒரு ப‌டுக்கைய‌றையின் முன‌க‌ற்ச‌த்த‌ம்' (ப‌25) 'பொறுக்க‌ப்ப‌டாத‌ எருக்க‌ட்டிக‌ளோடு பொக்கிளிப்பான் வ‌ந்த‌தொரு முக‌த்தைப் போல‌க் கிட‌ந்த‌து ப‌ன‌ங்கூட‌ல்' (ப‌58) என்ப‌வை ஒரு சில‌ உதார‌ண‌ங்க‌ள்.

ஈழ‌த்தின் உள்ளே போரினால் ந‌டைபெறும் இட‌ம்பெய‌ர்வுக‌ள் ப‌ல்வ‌கைப்ப‌ட்ட‌து. ஒர‌ள‌வு வ‌சதியான‌வ‌ர்க‌ள் இட‌ம்பெய‌ர்ந்து த‌ங்க‌ள் உற‌வின‌ர் வீடுக‌ளிலோ வேறு வீடுக‌ளிலோ த‌ங்கிவிடுவ‌து ஒருவ‌கை. இன்னொரு வ‌கையின‌ருக்கு இவ்வாறான‌ வ‌ச‌திக‌ள் கிடைப்ப‌தில்லை. ஆக‌வே அவ‌ர்க‌ள் இட‌ம்பெய‌ரும்போது யாராலும் க‌வ‌னிக்க‌ப்ப‌டாத‌ கைவிட‌ப்ப‌ட்ட‌ நில‌ப்ப‌ர‌ப்புக்க‌ளில் குடில்க‌ளை அமைத்து முகாங்க‌ளை நிறுவிக்கொள்வார்க‌ள். இவ்வாறான‌ அக‌தி முகாங்க‌ளில் அடிப்ப‌டை வ‌ச‌திக‌ள் கூட‌ இருப்ப‌தில்லை. இய‌ற்கைக்க‌ட‌னிற்காய் ப‌ற்றைக‌ளைத் தேட‌வேண்டியிருக்கும். ம‌ழை, வெள்ள‌ம் போன்ற‌வை நிக‌ழும்போது இன்னொருவ‌கையான‌ சிர‌ம‌ங்க‌ளை எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கும். இதுவ‌ரை எழுத்தில் அவ்வ‌ள‌வு ப‌திய‌ப்ப‌டாத‌ இந்த‌ இர‌ண்டாம் வ‌கையான‌ அக‌திமுகாம் வாழ்வு 'வேருல‌கில்' மிக‌ அழுத்த‌மாக‌ப் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. 'வ‌றுமை உறிஞ்சிய‌ செரிக்காத‌ வ‌யிறுக‌ளும், க‌ன்ன‌ங்க‌ள் ஒட்டி முன்னோக்கி நிற்கும் ப‌ற்க‌ளும், குழி விழுந்த‌ க‌ண்க‌ளும், அவிந்த‌ வாய்க‌ளும், ந‌ர‌ம்பு புடைத்திருக்கும் நெற்றிப் ப‌ள்ள‌ங்க‌ளும்' இவ்வாறான‌ அக‌தி முகாம் வாழ்க்கைக்குள் இருந்த‌வ‌ர்க‌ளுக்கு 'கொடையாக‌' அளிக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து.

இப்புனைவில் போராட்ட‌த்தில் உண்மையாய் த‌ங்க‌ளை அர்ப்ப‌ணித்த‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் விருப்பு வெறுப்பின்றி இய‌ல்பாக‌ப் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். கால‌மும் வ‌றுமையும் திசை மாறிப்போக‌ சேமாலைய‌ண்ண‌னைத் துர‌த்தினாலும், அவ‌ர் ஒரு வேற்றாளாக‌ இக்குறுநாவ‌லில் சித்த‌ரிக்க‌ப்ப‌டாது முக்கிய‌மான‌து. 'துரோகி' என‌ப்பெய‌ரிட்டு ஒழித்துக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ அநேக‌ரிலும், இர‌த்த‌மும் ச‌தையுமான‌ த‌மிழ்ம‌க்க‌ளின் விடுத‌லை சார்ந்த‌ க‌ன‌வுக‌ளே இருந்திருக்கின்ற‌ன‌ என்ப‌தை சேமாலைய‌ண்ண‌ன் பாத்திர‌ம் காட்டுகின்ற‌து. சேமாலைய‌ண்ண‌ன போல‌ கால‌த்தின் சுழியில் சிக்குப்ப‌ட்டு சின்னாபின்னாமாகிப் போன‌வ‌ர்க‌ள்தான் எத்த‌னை பேர்? அதேபோல‌ எதிரிக‌ளாக‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மீது நாம் நிக‌ழ்த்திய‌ மிக‌க்கொடூரமான‌ வ‌ன்முறையின் ப‌டிம‌ந்தான் உலுந்தையின் பாத்திர‌ம். த‌னியே வ‌ரும் இராணுவ‌த்தின் க‌ழுத்தை வெட்டி த‌லையை கிணற்று வாளிக்குள் வைத்து இர‌த்த‌ம் தெறிக்க‌க் கொண்டு ஓடுகையில் நாம் இழந்துபோயிருந்த‌ ம‌னிதாபிமான‌ம் நினைவூட்ட‌ப்ப‌டுகின்ற‌து.

நான்கு கால்க‌ளின் க‌தையைச் சொல்ல‌ப்போகின்றேன் என்று இக்குறுநாவ‌லின் இடையில் க‌தைசொல்லி சொல்வ‌து இந்த‌ நான்கு காலிலிருந்து நீளும் ஆயிர‌க்கான‌ கால்க‌ளின் துய‌ரத்தைத்தான்; ஒற்றைக் காலிழ‌ந்த‌ புறா, ஒரு காலை மிதிவெடிக்கு ப‌லி கொடுத்த‌ ஒரு கூத்துக்க‌லைஞ‌ன் ம‌ற்றும் இராணுவ‌த்தின் ப‌குதியிற்குள் வ‌ந்து சுட‌ப்ப‌ட்டு ம‌ர‌ணித்த‌ ஒரு போராளியின் கால்க‌ள். இந்த‌க் கால்க‌ள் த‌ம‌து க‌தையை ம‌ட்டும் ந‌ம‌க்குக் கூறுவ‌ன அல்ல‌, அத‌ற்குப் பின்னால் நாம் த‌வ‌ற‌விட்ட‌ ப‌ல‌ கால்க‌ளின் க‌தையையும் அக்க‌றையுட‌ன் க‌வ‌னிக்க‌ச் சொல்கின்ற‌ன‌.

ஈழ‌த்தின் நிக‌ழ்கால‌க் க‌தையைச் சொல்ல வ‌ரும் ஒருவ‌ருக்கு மிகுந்த‌ சிர‌ம‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஏதோவொரு புள்ளியில் ப‌டைப்பாளி ஒரு சார்பை எடுக்க‌வேண்டிய‌ நிலையை வ‌ந்த‌டைய‌வே செய்வ‌ர். ஆனால் போரை வெறுக்கின்ற‌, கொலைக‌ளை எந்த‌ அற‌த்தின் பொருட்டும் நியாய‌ப்ப‌டுத்த‌ விரும்பாத‌ ஒரு ப‌டைப்பாளி தான் சொல்ல‌வேண்டிய‌ க‌தையை ம‌ட்டும் கூறிவிட்டு எவ‌ரின் மீதும் தீர்ப்பு எழுதாது வில‌கிவிடுவார். அந்த‌வ‌கையில் மெலிஞ்சி முத்த‌னின் 'வேருல‌கு' இருப்ப‌து குறிப்பிட‌வேண்டிய‌து. 'ஒற்றைக் காலிழ‌ந்த‌ புறாவே துய‌ர‌த்துட‌ன் அலையாதே, உன‌க்குப் ப‌ற‌ப்ப‌த‌ற்கு சிற‌குக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் ம‌ற‌ந்துவிடாதே' என்று பெரும் இழ‌ப்புக்க‌ளின் பின்னால் வ‌ரும் விர‌க்தியிற்கு அப்பாலும் வாழ்வின் மீது ந‌ம்பிக்கை கொள்ள‌ச் சொல்கிற‌து இப்புனைவு. இதனால்தான் அண்மைக்கால‌த்தில் வெளிவ‌ந்த‌ ப‌டைப்புக்க‌ளில் க‌வனிக்க‌த்த‌க்க‌ ப‌டைப்பாக‌வும் ப‌ல்வேறு வாசிப்புக்க‌ளைச் செய்ய‌க்கூடிய‌ புனைவாக‌வும் வேருல‌கு தெரிகின்ற‌து.

(தீராந‌தி - ஜீன்,2010 இத‌ழில் இத‌ன் சுருக்கிய‌ வ‌டிவ‌ம் பிர‌சுர‌மான‌து)