கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

துயரில் மூழ்கிய பொழுதுகள்

Wednesday, December 29, 2004

இறுதியாய் கிடைக்கும் செய்திகளின்படி வடகிழக்குப்பகுதியில் அம்பாறையில்தான் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. எம் கையே எமக்கு உதவி என்று அனுப்பப்படுகின்ற உதவிகள் கூட திசை திருப்பப்படுகின்ற செய்திகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போலவிருக்கிறது.
........
ஆரம்பத்தில் திருகோணமலைக்கு அனுப்பப்படவிருந்த நிவாரணப்பொதிகளுடன் இருந்த கப்பலை திசைதிருப்பிய முயற்சி இறுதியில் தமிழ் எம்பி ஒருவரால் முறியடிக்கப்பட்டது. இன்று கூட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு மலையகத்திலிருந்து உதவிகளுடன் சென்ற லொறிகளை இராணுவம் தாங்கள் சொல்லும் இடங்களுக்குத்தான் அனுப்பவேண்டும் என்று கட்டளையிட்டதாக வானொலிச்செய்திகள் கூறுகின்றன. எனது உறவினர் இரண்டு லொறிகளை நிவாரணப்பணிகளுக்காய் கொழும்பில் மாணவர்களிடம் கொடுத்திருக்கின்றார். அதில் ஒரு லொறியை பொதிகளுடன் காலிக்குச் செல்லவேண்டுமென அரசாங்க அதிகாரிகள் கட்டளையிட்டிருக்கின்றார்கள். அத்துடன் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஓடிய லொறிகளை (கொடுத்தவர் இலவசமாகத்தான் சேவைக்கு கொடுத்தார்) சிங்கள விதானைமார்கள் தங்கள் பெயரில் பதிந்து அதற்கான கட்டணங்களை அறவிட்டிருக்கின்றார்கள். இன்னும் உதவிகள்/நிவாரணங்கள் எதுவுமே பாதிக்கப்பட்ட மக்களை எட்டவில்லை என்றுதான் அங்கிருந்து பேசும் நேரடியாகப்பேசும் மக்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அம்பாறையில் சிங்கள மக்கள்/முஸ்லிம் மக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அங்கே உதவிப்பொருட்களை அனுப்பினால் அது தமிழ் மக்களுக்கும் போயிவிடும் என்ற பயத்தில் பலவிதத்தில் இனவாதிகள் இடையூறு விளைவித்துக்கொண்டிருப்பதாய் புலிகளின் குரலிலும் கூறினார்கள். இடையிடையில் நம்பிக்கையூட்டும் சின்ன விசயங்களும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. குருணாகலிலிருந்து சிங்கள மக்கள் தங்கள் உதவிக்கரத்தை திருகோணமலைக்கு நீட்டியிருக்கின்றார்கள். உதவிய ஒரு சிங்களவர் சொன்னார், முந்தி எங்களுக்கு வெள்ளப்பெருக்கின்போது புலிகளும் வன்னிமக்களும் உதவினார்கள். அதை நாங்கள் நன்றியுடன் மனதில் இருத்தி வைத்திருந்தோம். இது நாங்கள் உதவுவதற்கான அரிய தருணம் என்றார்.

...............
இன்று வானொலியைக் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கிறிஸ்தவ sister யாழிலிருந்து நேரடியாகப் பேசியிருந்தார். அவர் கற்பித்த பாடசாலை முற்றாக அழிந்துபோயிருக்கிறது. கற்ற மாணவர்களில் பத்திற்கு மேற்பட்ட சிறார்கள் இறந்திருக்கின்றார்கள். பேசுவதற்கு சற்றுமுன்கூட ஒரு சிறுமியைப் புதைத்துவிட்டுத்தான் பேசினார். அவர் வானலையில் சொன்ன இரண்டு விசயங்கள் முக்கியமானது. போர் என்றாலும் ஆகக்குறைந்தது கொஞ்ச உடுப்புக்களையும் கையிலிருக்கும் பணத்தையும் எடுத்துக்கொண்டாவது ஓட முடியும். ஆனால் இந்த அழிவு அப்படிப்பட்டதல்ல. பல ஆயிரம் மக்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டிருக்கிறார்கள், உயிரைத்தவிர. மரங்களில் தப்பியிருந்த பலர் ஆடைகளில்லாது கூட பல மணித்திலாயங்கள் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். எனவே புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அவர்களுக்கான உடனடித்தேவைகளை மட்டும் நிறைவேற்றுவதோடு மட்டுமில்லாமல், அவர்களது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளையும் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தார். காயப்பட்டு மற்றும் தப்பியிருக்கும் அநேகர், எல்லாப் போய்விட்டது. இனி என்ன செய்வது?' என்ற மனப்பிறழ்வுடன் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மற்றது இந்த அனர்த்தத்தில் அதிகம் இறந்துபோனது குழ்ந்தைகள் மற்றும் சிறார்கள். இதனால் எங்கள் பிரதேசங்களிள் ஒரு generation gap வரும் அபாயம் வருமென்று கூறினார். உண்மைதானே.
........
இங்கும், CNN னிலிருந்து CBC (Canadian Broadcasting Cooperation) வரை எல்லோருக்கும் இலங்கையில் பாதிப்படைந்தது தெற்குப்பகுதி மட்டுந்தான். எல்லா video clipsம் அதைத்தான் காட்டுகின்றன. இது குறித்து CBC தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு பெண்மணி நேரடியாக அழைத்துக்கேட்டபோது, தங்களால் அங்கே போகமுடியாதுள்ளதால், வடகிழக்குப்பிரதேசங்களின் பாதிப்புப் பற்றி எதுவும் அறியமுடியாதிருக்கின்றது என்று கூறினார்களாம். அழைத்த பெண்மணியும் சளைக்காமல், நாங்கள் video clips எடுத்துத்தந்தால் ஒளிபரப்புவீர்களா என்று கேட்டபோது கிடைத்தால் செய்கிறோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், உண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்னரே தமிழ் தொலைக்காட்சியினரால் video clips & information எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டதாம். என்ன செய்வது இயற்கை மட்டுமல்ல, aftermathம் எங்களுக்குச் சதி செய்துகொண்டுதானிருக்கிறது.
........
ஒன்று மட்டும் புரிகிறது. எமக்கென்றொரு சட்டரீதியான அரசாங்கம் இல்லையென்றால் எவருமே எங்களைக் கவனிக்கப்போவதில்லை என்பதே. இன்னும் தெற்குப்பகுதியில் நடைபெறும் சம்பவங்கள், தமிழ்-சிங்கள உறவை மேம்படுத்துவதற்கு பதிலாக இன்னும் விரிசலடைவதற்குத்தான் வித்திடுவதாய் தோன்றுகிறது.

HELP!!!

Tuesday, December 28, 2004

people who are willing to help...
http://www.geotamil.com/pathivukal/notice_tsunami_fund.html
http://kavithai.yarl.net/archives/002482.html
(thanx to pathivukal.com & EelaNathan)

யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்?

Sunday, December 26, 2004

இயற்கை எங்களையும் பழிவாங்கியது. உயர்ந்துகொண்டிருக்கும் உயிரிழப்புக்களில் சிறுவர்களும், பெண்களும் அதிகம் என்ற செய்தி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இந்த நிகழ்வு இரவில் நிகழ்ந்திருந்தால் இன்னும் அதிகமாய் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அங்கிருந்து கதைப்பவர்கள் சொல்கிறார்கள். இலங்கை அரசாங்கமும், புலிகளும் அவசரகாலத்தை பிரகடனப்படுத்தி மீட்புப்பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். அதிகமான உயிரிழப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் சொல்லிக்கொண்டிருப்பதைவிட அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதே முக்கியமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அத்தியாவசிய தேவைகளும், ஆறுதல் வார்த்தைகளுமே இந்தக்கணத்தில் தேவையானது.
..........
பல இடங்களில் சிறுவர்கள் பலியாகிப்போனது நெஞ்சை உருக்கவைப்பவை. மட்டக்களப்பு மாகாணத்தில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நாற்பது பிள்ளைகளைக் காணவில்லையாம். அதைவிடக் கொடுமை, முல்லைத்தீவில் பெற்றோரில்லாத பிள்ளைகளைப் பராமரிக்கும் செந்தளிர் இல்லத்தில் நூற்றியெழுபதிற்கும் மேற்பட்ட பிள்ளைகள் அதைப் பராமரித்த ·பாதருடன் காணாமற்போய்விட்டனர். பத்து இருபது சிறுவர்கள் தப்பியிருக்கலாம் என்று கடைசியாக ஒருவருடன் கதைத்தபோது சொன்னார். மட்டக்களப்பு மாகாணம்தான் மிகக்கோரமாய் சிதைந்து போயிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏற்கனவே வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை இந்தப்பெரும் அனர்த்தம் எதுவுமே இல்லாதவர்களாக்கிவிட்டது. அங்கிருந்து பேசிய ஒருவர் கூட, கனடாவிலிருந்து ஏற்கனவே வெள்ளப்பெருக்கிற்காய் வந்து நிதியில் லொறியில் ஏற்றிய நிவாரணப்பொதியை இந்த அழிவில் சிக்கிக்கொண்டவர்களுக்காய் பாவிக்கப்போவதாய் சொன்னார். ஒருநாள் முழுதும் உண்ண எந்த உணவுமின்றி மக்கள் தவிர்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் வானொலியொன்றில் கூறினார்.தொலைபேசிகளில், வானொலிகளில் அங்கிருந்து வந்து விழும் கதைகள் நினைத்தே பார்த்து முடியாதன.
..........
எனது அக்கா கொழும்பில் வசித்து வருகிறார். அவரது வீடு கடற்கரையோரமாய் தானிருக்கிறது. வீடு, பிறகு ஒரு தண்டவாளம் அதற்கடுத்து பெருங்கடல். அக்காவின் வீட்டிலிருந்த ஒரு பெண், இந்த பெரும் கொடும் அலையை (30 அடிக்கு மேலேயென்கின்றனர்) கண்டிருக்கிறார். திடீரென தண்ணீர் வற்றி (கடலின் ஆழத்திலுள்ள கற்கள் எல்லாம் தெரிந்ததாம்) பெரும் அலைகள் பனையளவு உயரத்திற்கு எழும்பியது என்றார். இன்னும் எமது உறவினர் ஒருவரின் வான் (அவர் டிரைவர் வைத்து யாழ்-கொழும்பு சேவை செய்பவர்) யாழ்ப்பாணத்தின் (அல்லது முல்லைத்தீவின்) கடற்கரையோரமாய் நின்றபோது அதில் இருந்த அனைவரும் வானோடு கடலிற்கு அடித்துச்செல்லப்பட்டு காணாமற்போய்விட்டனர். டிரைவர் தற்செயலாய் வெளியில் நின்றதால் கடலோடு இழுத்துப்பட்டாலும் நீந்தித் தப்பி வந்து இதைச் சொல்லியிருக்கிறார். இப்படி இன்னும் எத்தனையோ கதைகள்? புலிகளின் கட்டுப்பாட்டில் அதிகம் சேதத்திற்குள்ளானது முல்லைத்தீவுக் கடற்கரையோரம். இதுவரையே உயிரிழப்புக்கள் ஆயிரத்தைத் தாண்டிவிட்டிருக்கின்றது. இன்னும் வெளிநாடுகள் கொடுக்கும் எந்த உதவியையும் புலிகளின் கட்டுப்பாடுகளுக்கு வரவில்லை/வராது என்று அங்கிருந்து வரும் குரல்கள் மேலும் கவலையை அதிகரிக்கின்றது.
........
இங்கேயிருந்து கொண்டு என்ன இழவைச் செய்வது? விடிகாலையில் எழும்பி செய்தி கேட்டபின் பிறரைப் போல எனது அண்ணாக்களுடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை வானொலிக்கு கொடுத்தோம். (வானொலிக்காரர்கள் உடனடியாக நிதியைச் சேகரித்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறார்கள்). பிறகு, பல்கலைக்கழக/உயர்கல்லூரி மாணவர்கள் அவசரமாய் ஒரு கூட்டத்திற்கு வரச்சொல்ல சென்றிருந்தேன். ஒவ்வொரு குழுவாகப் பிரித்து, சில வேலைத்திட்டங்களைச் செய்வதாய் முடிவெடுத்தோம். முதலில் media குழுவில் நான் இருந்தபோதும், உடனடியாக வேறெதாவது செய்வது நல்லது என்று நிதிசேகரிக்கச் சென்ற குழுவோடு இணைந்து கொண்டேன். அவசரமாக எந்த வசதிகளும் இல்லாமல், எல்லா இனத்தவரின் வீடுகளைத் தட்டி இயன்றளவு நிதியைத் திரட்டிக்கொள்வதே எங்களின் இலக்காக இருந்தது. பயங்கரமாய் ஸ்நோ கொட்டிக்கொண்டிருக்க, வீதியில் கார் circus விளையாட்டுக்காட்டியது. இதை எல்லாவற்றையும் விட அங்கிருந்த மக்களின் துயரும், எல்லாவற்றையும் உதறிப்போட்டுவிட்டு உதவுவதற்கு வந்த தோழர் தோழிகளின் விரிந்த மனதும் எதையாவது செய்யவேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது.. எம்மைப்பார்த்துப் பூட்டிய கதவுகள் எத்தனை? நீங்கள் யார் என்ன அடையாளம் உங்களிடம் உள்ளது என்று கேட்டு எங்களின் பொறுமையைச் சோதித்த மனங்கள் எத்தனை? அனுமதியில்லாமல் வீட்டைத்தட்டியதால் பொலிசிற்கு அடிப்போம் என்று பயமுறுத்தியோர் எத்தனை பேர்? இதையெல்லாம் மீறி ஏதோ இராமர் பாலம் கட்ட உதவிய அணிலைப்போல நாங்களும் ஏதோ செய்தோம் என்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. இப்போதுதான் வீடு வந்து சேர்ந்தேன். நாளைக்கும் வருவதாகவும் இன்னும் அதிகமாய் நிதி சேகரிக்கவேண்டும் என்ற கனவும் எங்களில் பலருக்கு உண்டு.

THE BLACK SUNDAY

போர் ஓய்ந்த இந்தவேளையிலும், நிம்மதியாக இருக்கமுடியாதவென சீற்றம் கொண்ட இயற்கை நம்முறவுகளைப் பலிகொண்டபடியிருக்கிறது. தமிழகத்திலும், இலங்கையிலும் தான் அதிகம் மனித இழப்புக்கள் ஏற்பட்டுகொண்டிருக்கின்றன என்று வரும் செய்திகள் மிகுந்த கவலை தருகின்றது. இயற்கையை ஒருபொழுதில் தம் கடவுள்களாய் வழிபட்டவர்கள் நம் மூதாதையர். எல்லாம் போயிற்று போ. இந்தக்கணத்தில் சபிக்கிறேன் இயற்கையையும், இந்த ஞாயிறையும்.

தோணிகள் வரும் ஒரு மாலை

Saturday, December 25, 2004

இசைத்தட்டு வெளியீட்டு விழாவும், அரங்கினுள் குளிர் நுழைந்த கதையும்

தோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டு வெளியீட்டு விழா மாலை ஐந்து என்று போட்டிருந்தனர். நல்ல நித்திரையிலிருந்த நான் அரக்கப்பரக்க எழுந்து ஐந்து மணிக்கு கிட்டவாக விழா நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டேன். இங்கே நடக்கும் விழாக்கள் எப்போதும் அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் ஆரம்பிப்பது சம்பிரதாயம் என்றாலும், நான் இந்த விழாவிற்கு நேரத்திற்கு ஒரு காரணமிருந்தது. எனென்றால் முந்தி ஒருக்காய் புத்தக வெளியீடு ஒன்றிற்கு கொஞ்சம் தாமதாய் போக புத்தகம் எல்லாம் விற்று தீர்ந்திருந்தது. ஆனால் அதிசயமாய் புத்தக வெளியீடை இன்னும் நடத்தப்படாமல் இருந்தது. என்னடா இதுவென்று வரவேற்று கொண்டிருந்தவரிடம் கேட்டபோது, 'ஏன் எல்லாம் சம்பிரதாயமாய் இருக்கோணும்? புத்தகவெளியீட்டிற்கு பிறகுதான் புத்தகம் வெளியிடோணும் என்று ஏன் நினைக்கிறியள்?' என்று போட்டுத்தாக்கினார். 'சரி நீங்கள் சொன்னால் சரியாகத்தான்' இருக்குமென்று அவரிடம் சொல்லி அமைதியாகிவிட்டேன். அந்த அனுபவத்தால் இந்தவிழாவிற்கு கொஞ்சம் பிந்திப்போனாலும் இசைத்தட்டு விற்று முடிந்துவிடுமோ என்று பயத்தில் நேரத்திற்கு போயிருந்தேன். இவர்களும் சம்பிராதயத்தை உடைப்பவர்கள் என்ற என் எண்ணத்தை ஒரு மணித்தியாலம் பிந்தித் தொடங்கி, நாங்கள் typical தமிழாக்காள், நீயன்டும் பயப்பிடத்தேவையில்லை என்று நிரூபித்துவிட்டினம். இப்ப நிகழ்ச்சிகளுக்கு போக சரியாய்ப் பயமாயிருக்கிறது. வரும் மனிதர்கள் எல்லாம் இறுக்கமாய் உட்கார்ந்து இருக்கிறார்கள். இல்லாவிட்டால், தங்கள் கூட்டணியாக்களோடு மட்டும்தான் பேசுகிறார்கள். சிலருக்கு வெங்கட்சாமிநாதனைப்பற்றி பதிவுகளில் நானெழுதியது மனவருத்தம் போல. வழமையாய் சிரித்துப்பேசும் ஒருவர் சுவரோடு ஒதுங்கிக்கொண்டார். இன்னொருத்தரிடம் அவரிடம் படைப்புக்களை பேசுக்கொண்டிருக்கும்போது உட்காரப்போறன் என்டார். சரியென்று அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து கதைக்க, சரியாய் குளிராய்க்கிடக்கிறது என்று முன்னுக்குப்போனார். மனுசனுக்கு குளிருது போல இருக்கிறது என்று நானும் முன்னுக்கு போய் உட்கார்ந்தேன். பிறகும் தம்பி இதிலையும் குளிராய்க்கிடக்கிறது என்று சொன்னபோது, என்னடாப்பா நான் Jacket கழட்டிப்போட்டிருந்தே குளிரவில்லை. இந்த மனுசன் Jacketயோடு இருந்தும் குளிருது என்கிறதே எண்டு யோசித்தேன். பிறகுதான் என்ரை ஆறாம் அறிவு (?) விழித்துக்கொள்ள, அண்ணை இலக்கிய அரசியல் ஆடத்தொடங்கிறார் என்று புரிந்துவிட்டது. நாளைக்கு இந்தவிழாவைப்பற்றி ஏதாவது எழுத, யாராவது பக்கத்தில் இவர்தான் உட்கார்ந்திருந்தார் என்று சொன்னால் அவருடைய இமேஜ் என்னாவது? சரி நீங்கள் போய் முன்னுக்கு இருங்கோ. நான் கனநேரம் நிற்கமாட்டேன். CDஐ வாங்கிக்கொண்டு போய்விடுவன் என்று சொல்லி பின்னாலிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டேன். எவ்வளவு வயதுபோனாலும், தனிமனித நட்பையும், இலக்கிய விமர்சனத்தையும் பிரித்துப்பார்க்க பலரால் முடிவதில்லை. உண்மையில், வெங்கட்சுவாமிநாதனின் விருதிற்கு பின்பான சுந்தர ராமசாமியிற்கும் வெங்கட்சாமிநாதனுக்கிடையிலான விவாதம் மிகுந்த கவலையைத் தந்தது. வெ.சா ஒருகட்டத்தில் சொல்லியிருந்தார், சுராவை இனி சுந்தரராம்சாமி என்று கூட அழைக்கமுடியாது என்று. எதற்கு நட்பையும் இலக்கிய விமர்சனத்தையும் ஒன்றாக கலக்கின்றனர் என்று யோசித்தேன். எத்தனை காலமாக பேணிய நட்பை ஒரு விருதிற்கான விவாதத்தில் தொலைத்துக்கொண்டு இருவேறு துருவங்களாகிவிட்டனர்.

சரி விசயத்திற்கு வருவோம். தோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டில் 12 பாடல்கள் இருக்கின்றது. ஏற்கனவே இதற்கு இசையமைத்தும் பாடிய ராஜ் ராஜரத்தினம் கண்ணீரும் குருதியும் காத்திருப்பும் என்ற இசைத்தட்டை சிலவருடங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். இது இவரது இரண்டாவது வெளியீடு. 12 பாடல்களில் 9 பாடல்கள் சேரனுடையது. ஏனைய மூன்றில், இரண்டு வ.ஜ.ச.ஜெயபாலனுடையது. ஒன்று செழியனுடையது. பாடல்களைக் கேட்கும்போது ஜெயபாலனுடைய பாடல்கள் இலகுவாய் பாடுதற்குரியதான ஒருவிதமான இலயத்தில் இருப்பதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது( அவருடைய கவிதைகளில் எல்லாம் இப்படியான ஒருபண்பு இருப்பது அவர் இன்னும் மரபுக்கவிதை முறையை முழுமையாக அறுக்கவிரும்பாமல் இருப்பதால் இருக்கக்கூடும்). ஜெயபாலனுடைய பாடல்களில் ஒருவித குதூகலமும், தவறுகளை இழைத்தும், வருந்தியும், குறும்புசெய்தும் வாழ்வில் நகர்ந்துகொள்ளும் மனிதமனத்தைக் காணலாம். சேரனுடைய பாடல்கள்/கவிதைகள் அப்படியில்லை. ஒரு வித அறிவுஜீவித்தனத்துடன் ('எல்லோரையும் போல அந்த நேரத்தில் நீ அழவில்லை', 'நான் தரையில் வாழும் பறவை அல்ல/நான் உனக்கும் அல்ல') என்று சோகம் நிரப்பிக்கிடக்கும் பொழுதிலும் உணர்ச்சிவசப்படுவதேயில்லை. இந்த இசைத்தட்டில் இரண்டாம் பாடலான 'காற்றோடு போனதெல்லாம்' சேரனின் புலம்பெயர்வாழ்வை சொல்வது போலப்பட்டது. 'வேற்றவர் நாட்டுக்குள்ளே/வெறென்ன கிடைக்குமென்று/தீட்டிய பாடலொன்று/ தெருவோரம் முழங்கக்கேட்டேன்' பாடலில் புலம்பெயர்ந்த ஒரு கவிஞனின் நம்பிக்கையீனம் மற்றும் நம்பிக்கை தெரிகிறது. தமிழை வாழ்த்தியும் சேரனின் ஒருபாடலுண்டு. தமிழை வாழ்த்திப்பாடும்போது, எப்படியென்றாலும் பாரதியின் தாக்கம் எல்லாக் கவிஞர்களுக்கு வந்துவிடுகிறது. 'பூமியின் அழகே/ பரிதியின் சுடரே/ பொறுமையின் வடிவே/தமிழே' என்று பாடல் ஆரம்பிக்கும்போது பாரதியும் உடனே ஞாபகத்திற்கு வந்துவிடுகிறார். இன்னும், 'எங்கும் அலைந்து திரிந்து கிடப்பினும்/ ஏதிலி வாழ்வில் உதிரம் வடிப்பினும்/எங்கள் மொழிக்கொரு புதுவளம் சேர்ப்போம்/எண்ணமெல்லாம் தமிழென வாழ்வோம்' என்கின்றபோதும், வேற்று நாடுகள் சென்றெனினும் தமிழுக்கு வளங்கள் சேர்ப்பீர் என்று பாரதியின் ஏக்கம் நினைவிற்கு வந்து விடுகிறது. ஒருவிதமான் பைலா பாடலும் உண்டு. ஆடுங்கள் ஆடுங்கள் என்று எல்லா வசனமும் முடிகிறது. இப்போதைக்கு கேட்கும்போது சாதாரமாய்த்தான் தெரிகிறது. இதிலை சேரனின் எழுதுகோல வைரமுத்து வந்து உட்கார்ந்தது மாதிரித்தெரிந்தது. பாடல் ஆடக்கூடியதாய் இருக்கிறதா இல்லையா என்று Molson Canadian குடித்து கேட்டபின் சொல்கிறேன். எவடம் எவடம் என்ற பாடலும் சாதாரண வகைப்பாடல். இது சேரனின் நாடகப்பிரதியான, ஊர்ப்போக்கில் இணைக்கப்பட்ட பாடல் என்று பிறகு கேள்விப்பட்டேன். சாதியைப்பற்றித்தான் சாடைமாடையாகச் சொல்கிறது. எப்பதான் சேரன் தன் ஞானக்கண்ணைத் திறந்து சாதி பற்றி பேசப்போகிறாரோ தெரியாது. கவிஞர் எல்லாவற்றையும் எழுதவேண்டுமா என்று யாராவது கேட்கக்கூடும்? ஆனால் ஆரம்பத்திலிருந்தே 'பேரிளம் பெண்களின் காதலனாகவே கழிந்த இவ்வாழ்வில்' என்று எழுதி, இந்த இசைத்தட்டிலும் 'முற்றாத காதலோடு முழுமையத் தேடுகிறேன்' என்று காதலை PhD அளவில் வெட்டிக்கொத்தி ஆராய்ச்சி செய்பவர் மற்ற விசயங்களுக்கும் கொஞ்சம் நேரத்தைச் செலவழிக்கலாம் என்பது என்னுடைய நினைப்பு.

ஜெயபாலனுடைய இரண்டு பாடல்களும் மனதில் சட்டென்று அமர்ந்துகொள்கின்றன. ஒரு பாடலின் ஆரம்பமே, 'கால மகள் மணலெடுத்து/ கோலமிட்ட கடற்புரத்தில்/ஏழைமகள் ஒருத்தி... என்று பாடலுக்குரிய அமைவுடன் வார்த்தைகள் வந்துவிழுகின்றன. வாழ்வின் துயரம் இலகுவான சொற்களில் பாடப்பட்டாலும் மனதை நிரப்புகிறது. 'தானாய் விடிவெள்ளி/ தோன்றுகின்ற சங்கதிகள்/வானத்தில் மட்டும்/ வாழ்வினிலே இருள் தொடரும்' என்ற வரிகளில் வாழ்வின் நியதி துலங்குகிறது. எனக்கு மற்றப்பாடல்தான் நன்கு பிடித்திருந்தது. மலையகப்பெண்ணின் துயரைச் சொல்லும் பாடல். ஒரு இடத்தில், தேயிலை கொய்யும் பெண்ணின் கண்ணீர்தான் மகாவலியாய் பெருக்கெடுக்கிறதோ என்கின்றமாதிரி அருமையான உவமையுடன் வரும். இன்னும், 'யாழ்ப்பாண செம்மண்ணில் புல்லறுக்கும் தேவதையே/ வன்னியிலே காடழித்து வயல் விளைக்கும் அருந்ததியே/ மீன்பாடும் தேனாட்டின் தெம்மாங்கு ஊர்வசியே/ மலையகத்து தேவதையே பேரணியில் வாரீரோ!' வரிகளில் கவிஞரின் நுண்ணிய அவதானங்கள் கேட்பவரின் மனதிலும் எட்டிப்பார்க்கிறது. செழியனின் 'மழை பெய்த நாளொன்றில்' பாடலின் துயர் பெருக்கெடுத்தோடுகிறது. விட்டு வந்த சொந்தமண்ணையும், வேரைப் பதிக்கமுடியாத அந்நியநாட்டிலுமான வாழ்வின் கொடுங்கனவை இந்தப்பாடல் பேசுகிறது. 'துயரங்கள் போவேன்று நிலம் விட்டு நிலம் வந்தும் துயராய் வழிகின்றதே/ பெருந்துயராய் வழிகின்றதே/ வாழ்வு துயராய் வழிகின்றதே'. நம்மில் பலருக்கு இதுதானே யதார்த்தம்.

மற்றபடி ராஜ் ராஜரத்தினத்தின் உழைப்பு மதிக்கப்படவேண்டியது. 'எங்களுக்கென தனித்துவமான இசை வடிவங்களை உருவாக்கிற ஒரு பெரும் முயற்சியில் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது' என்ற அவரது ஆதங்கத்தைப் புரிந்து அவரை நாமும் உற்சாகப்படுத்துவோம். இரண்டாவது இசைத்தட்டில் நிறைய சினிமா முன்னணிப்பாடகர்கள் பாடியிருக்கின்றனர். இது பலமா பலவீனமா என்பதை காலத்தை தீர்மானிக்கவிடுவோம். முதல் இசைத்தட்டில் சொன்ன, 'ஒரு வழிப்பாதையாக இருந்துவரும் ஈழ-தமிழக கலை இலக்கியப் பாலம், இரு வழிப் பாதையாக திறந்துவிடப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் இவ்வேளையில்...' என்கின்ற வரிகளில் ராஜ் ராஜரத்தினம் போன்றவர்களின் விருப்புக்கள் எத்தனை விதம் சாத்தியப்பட்டிருக்கின்றது என்பது பற்றி அறியவும் ஆவல்.

SORRY

Friday, December 24, 2004

FRIENDS,
I HAVE FOUND DIFFICULTIES IN MY BLOG. I AM NOT SURE WHAT IS HAPPENING HERE. MY POSTINGS ARE MESSED UP. I TRY TO FIX IT UP BEFORE TONIGHT.

DJ

ஜெயமோகனின் நாவல்கள்

Sunday, December 19, 2004

ஜெயமோகனின் நாவல்களில், 'ஏழாம் உலகம்' தவிர்த்து அனைத்தையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து, கொழும்பில் நின்றபோது தமிழ்ச்சங்கத்தில் பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், கன்னியாகுமாரி எல்லாம் எடுத்து வாசித்து, இப்போது காட்டில் வந்து நிற்கிறேன்.

ரப்பர் 90களில் எழுதப்பட்ட ஜெயமோனின் முதலாவது நாவல். நாவல் என்பதை விட நாவலிற்கான ஒரு முயற்சி என்றே என் வாசிப்பில் அடையாளப்படுத்துகிறேன். அங்கே சாதிப்பெயர்களால் உருவகிப்பட்ட பாத்திரங்கள் இப்போதும் காட்டிலும் அவ்வாறே அடையாளப்படுத்தப்படுவதால், தசாப்தம் தாண்டியும் ஜெயமோகன் எங்கே நிற்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயமோகனின் நாவல்களை இலகுவாய் ஒருவிதமான வகைக்குள் அடக்கிவிடலாம். எப்போதும் அவரின் நாவல்கள் ஊடாடிக்கொண்டிருப்பது பெருங்கனவும் அதன் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியும். எல்லா நாவல்களும் ஒருவிதமான சோகத்துடனும் இயலாமையுடனும் முடிகின்றன.

ரப்பரில் எந்தப்பாத்திரமும் மனதில் நிற்கமுடியாமல் வாசித்தவுடன் மறைந்துவிடுகின்றனர். நாவல்முழுவதும் கனக்க கதாபாத்திரங்கள். ஒரு விதமான தொடர்பை/நீட்சியை ரப்பரிலும் காட்டிலும் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். ஆனால், தனது நாவல் என்ற கட்டுரைத்தொகுப்பில் 90களிலே நாவல்கள் தமிழில் முகிழத்தொடங்குகின்றன என்று குறிப்பிடுகையில் அவர் எதைக்குறிவைத்து சொல்கிறார் என்று சொல்லத்தேவையில்லை.

விஷ்ணுபுரம் அவரின் அடுத்த நாவல் என்று நினைக்கிறேன். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், நான் முதல் பாகமும் இறுதிப்பாகமும் மட்டுமே வாசித்திருக்கிறேன். தத்துவப்பகுதியில் என்னால் நுழையவே முடியவில்லை. விஷ்ணுபுரம் ஒரு இந்துத்துவ பிரதியை 'நடுநிலைமை' என்று வாசிப்பவர்கள் எண்ணும்படி கவனமாகப்பின்னப்பட்டிருக்கிறது. அரவிந்தன்(காலச்சுவடு ஆசிரியர்) அண்மையில் காட்டிற்கும் ஏழாம் உலகத்திற்கும் விமர்சகம் எழுதுகையில் விஷ்ணுபுரம் மட்டுமே ஜெயமோகனின் சிறந்தபிரதி என்கின்றபோது பிரதியின்நிலை என்னவென்று கூறத்தேவையில்லை. ஒருகாலத்தில் ஜெயமோகனின் நெருங்கிய நண்பனாகவும், RSSன் தீவிர அங்கத்துவராயும் அரவிந்தன் இருந்திருக்கிறார் என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பின் தொடரும் நிழலின் குரலின் முதல் அத்தியாயத்தை வாசிக்கும்போதே ஜெயமோகன் என்ன சொல்லவருகின்றார் என்று புரிந்துபோகிறது. அதற்காய் இவ்வளவு பக்கங்களைக் கொண்டு நிரப்பியிருக்கவோ, அல்லது மூன்றுவருடமாக ஆராய்ச்சி செய்தோ எழுதியிருக்கவேண்டியதில்லை. செய்திருக்கவேண்டியது. ஆக்ககுறைந்து பத்துப்பக்கத்தில் (பத்து பக்கம் என்பது ஜெயமோகனின் எந்தக்கட்டுரையையும் 10 பக்கங்களுக்குள் நான் வாசித்திருக்காததால்) 'ஸ்டானின் கொடுங்கோலாட்சி' என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தால் போதுமாயிருந்திருக்கும். இப்போது கூட, இடதுசாரிகள் (கட்சி இடங்கொடுக்காத போதும்) ஒளித்து வாசிக்கிறார்கள் என்று ஜெயமோகன் புளங்காகிதம் அடைகிறார். உண்மையில் இப்படி ஸ்டானினின் பாசிசம் தெரியாதவர்கள் இடதுசாரியாயிருக்காமல் இருந்தாலே கம்யூனிசத்திற்கு செய்யும் நன்றிக்கடனாயிருக்கும் என நினைக்கிறேன்.

நான் வாசித்த ஜெயமோகனின் நாவல்களில், மிக மோசமான நாவல் என்றால் கன்னியாகுமரியைத் தான் சொல்வேன். உற்றுப்பார்த்தால், எஸ்.பொவின் 'தீ'யை தத்துவம், தேடல் என்று கொஞ்சம் கலந்து கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எஸ்.பொவாது தனது 25 வயதில் முதல் நாவலாய் எழுதியிருந்தார், ஆனால் ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் என்று எழுதியவர் ஏன் இப்படி எழுதினார் என்று புரியவில்லை. இல்லாவிட்டால், தமிழ் சினிமா இயக்குநனர்கள் சொல்வதுபோல, இந்தக்காலத்தில் மசாலா கலந்து கொடுத்தால், சூப்பர் ஹிட் கிடைக்கும் என்ற மாதிரி, ஜெயமோகனும் ஒரு சூப்பர் ஹிட் இலக்கிய உலகத்தில் அவசரமாய் கொடுக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இதை எழுதியிருக்கலாம்.

காடு பற்றி அறிந்துகொண்டபோது இது எனக்குப்பிடித்தமாயிருக்கும் என்று நினைத்துத்தான் வாசிக்கத் தொடங்கினேன். முக்கியமாய் காதலையும் அழகியலையும் இது விரித்துச்சொல்லும் என்று நினைத்தேன். என்ன ஒரு அபத்தம், மலைவாழ் பெண் முலைகள் தெரிய இடுப்பில் துண்டுடன் நீராடும்போது கண்ட கதாபாத்திரமான கிரிக்கு அவள்மேல் அளவற்று காதல் பெருக்கெடுக்கிறது. ஒருபொழுதில் அவள் முலைகளில் எல்லாம் கண்கள் முளைத்து தன்னை உற்றுப்பார்ப்பது போலவும் தெரிகிறது கிரிக்கு. ஒருமுறை மட்டும் முலைகளைப்பார்த்து பெண்ணின் மீது காதல் கொண்டவன், பிறகு வாசிப்பவரைப் பார்த்து, 'இந்தக்கணத்தில் மார்பில் கைவைத்துச் சொல்வேன். காதலிக்காதவர்கள் கடவுளையும் அறிவதில்லை. ஆம் இது உண்மை' என்கிறான். இதை வாசித்தபோது நானும் கணக்கிடத்தொடங்கினேன், ஒருமுறை பார்த்து பெண்களில் ஆசைப்பட்டது என்றால், நானும் எத்தனைவிதமான கடவுள்களை தரிசித்திருக்கின்றேன் என்று. தமிழ் சினிமாக்கள் கெட்டது போங்கள். ஆனால் காட்டின் இறுதி அத்தியாயங்கள் பிடித்திருந்தன. ஒரு பெருங்கனவின் வீழ்ச்சியைச் சொல்வதால் பிடித்திருக்கக்கூடும். மனதிற்குள் புதைந்திருக்கும் சோகங்களை இணைத்துப்பார்ப்பதால் அப்படி அமைந்துமிருக்கலாம். காடு எனக்கும் பிடிக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் இந்த நாவலில் வரும் பாத்திரத்திற்கு குறிஞ்சிப்பூவை பார்த்தபின் எப்படி ஒரு உணர்வு வருகிறதோ அப்படியே எனக்கும் வாசித்துமுடித்தபிறகு ஏற்பட்டது.

ஜெயமோகனின் நாவல்களில் காமம் மதம்பிடித்தலையும் யானை போல அலைகிறது. பல பாத்திரங்களின் விபரிப்பை வாசிக்கும்போது ஆண்குறியை வெட்டிவிட்டு வாசித்தால் நமக்கும் நிம்மதி கிடைக்கும்போலத் தோன்றியது. முரண் என்னவென்றால், ஜெயமோகன் தான் நிஜவாழ்வில், ஒழுக்கம் கட்டுப்பாடு (உ+ம்: தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கு, மற்றும் திருவள்ளுவர் பற்றிய தமிழ்நாடு அரசு வெளியிட்ட புத்தகத்தில் ஒழுக்கம் பற்றிய கட்டுரை) என்று பேசிகொண்டிருக்கிறார். ஆனால் அவரின் நாவல்களின் பாத்திரங்கள் எங்கிருந்து எல்லாம் உயிர்பெறுகின்றன என்பது ஆச்சரியம். ஜெயமோகனின் நிறைவேறாத பெருங்கனவுகள்தான் அந்தப்பாத்திரங்களில் மிதக்கின்றனவோ தெரியாது. ஜெயமோகனின் நாவல்களின் மிகப்பெரும் பலவீனம் என்னவென்றால், அந்தந்தப் பாத்திரங்கள் அவற்றிற்குரிய சட்டத்தை விட்டு வெளியேறி எழுதுபவரகி விடுவது. காட்டில் பதினெட்டு வயதில் நுழைந்த கிரி சங்க இலக்கியங்களை எல்லாம் கரைத்துக்குடித்திருக்கிறான். பாடல்களையெல்லாம் அப்படியே நெட்டுயுருக்கிறான். இன்னொரு நாவலை ஒப்பிடுவது சரியில்லை என்றாலும் உதாரணத்திற்கு யூமாவாசுகியின் ரத்த உறவு, கண்மணி குணசேகரனின், கோரை போன்றவற்றைச் சொல்லாம் என்று நினைக்கிறேன். ரத்த உறவில் குடித்து குடித்து சித்திரவதை செய்யும் அப்பா பற்றி எந்தப் பெரிய விமர்சனமுமில்லை. பெரியம்மாவுடனான் அப்பாவின் உறவுகூட போகிறபோக்கில்தான் சொல்லிச்செல்லப்படுகிறது. எனெனில் கதையைச் சொல்பவன் சின்ன வயதுக்காரன். அவன் வளர்ந்தபின் கதையை எழுதுகிறதாய் வைத்துக்கொண்டாலும் அவன் ஒரு காலத்தில் எப்படி இருந்தானோ அது மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. கோரையில் வயலும், கோரையும், பன்றியும் தான் திருப்பத்திருப்ப வருகிறது. ஆனால் முடியும்மட்டும் நாவலை அலுப்பின்றி வாசிக்கமுடிகிறது. எனெனில் இரண்டு நாவல்களிலும் கதாபாத்திரங்கள்தான் பேசுகின்றன. ஜெயமோகனின் நாவல்களிலோ ஒரு கட்டத்திற்குப்பிறகு அவரே நேரடியாகப் பேசத்தொடங்கிவிடுகிறார். கதாபாத்திரம் அநாதரவாய் ஒரிடத்தில் ஒதுங்கிக்கொள்கிறது.

ஜெயமோகன் இன்னும் நிறைய எழுதவேண்டும். அப்போதுதான் வாசிக்கும் நமக்கு எது சிறந்த படைப்பு என்று இலகுவாய் அடையாளங்கொள்ள முடியும். துக்ளக் சோ எழுதும்போதுதான் பெரியாரின் தேவை எவ்வளவு அவசியம் என்று தோன்றுகிறதோ, அப்படித்தான் ஜெயமோகனின் நாவல்களை வாசிக்கும்போதுதான் மாற்று நாவல்களை இலகுவாய் என்னால் அடையாளங்கொள்ளமுடிகிறது. மற்றபடி, தான் ஒரு இந்துத்துவா ஆதரவாளர் இல்லை என்று ஜெயமோகன் கூறினால், இன்றைய பிஜேபி, ஆர் எஸ்.எஸ், நரேந்திரமோடி, அத்வானி, சங்கராச்சாரியார் என்று எல்லாம் கலந்து ஒரு நாவலை எழுதட்டும். அவர் இப்போது எங்கே நிற்கிறார் என்று அவரை வாசித்துப்புரிந்துகொள்கிறேன். எங்கையோ இருந்த USSRற்கும் மார்க்சிற்காகவும் மிகவும் கவலைப்பட்டவர் அல்லவா அவர்?

சொந்தப்புராணம் அல்லது அலம்பல்

Monday, December 13, 2004

வாழ்விலே பல விடயங்கள் காரணங்கள் என்னவென்று புரியாமலே நிகழ்ந்துவிடுகின்றன. அதற்காய் ஒருகணம் தரித்து நிற்பதுவும், பிறகு நீளநடப்பதுவும் வாழ்வியல் நியதி போல. எத்தனையோ மாற்றங்களை, ஏமாற்றங்களை கடந்துவந்தாலும், ஒரு சின்னதுன்பம் கூட என்னை ஒருகணம் அடித்துப்போட்டுவிட்டுத்தான் நகரும்.

இன்றைக்கு வேலைக்கு போய்விட்டு, பின்னேரம் வெளியே போவதற்காய் காரையெடுப்பம் என்டு போனால் கார் நின்ற space கிடக்கிறது, காரைத்தான் காணோம். ஒரு கணம் தலையைச் சுற்றி, பூமி சுழல்வது தெரிந்தது. பொலிசுக்கு அடித்து (வந்து ரெலிபோனால்தான்), பிறகு காப்புறுதி நிறுவனத்திற்கு அடிக்க அவங்கள் இன்னொரு பெரிய குண்டைப்போட்டாங்கள். நண்பரே நீங்கள் full coverage செய்யவில்லை. One way மட்டுமேதான் செய்துள்ளீர். ஆகவே களவுபோனாலும் எம்மால் ஒரு சல்லிக்காசுக்கூட நஷ்ட ஈடாகத் தரமுடியாது என்று கையை விரித்துவிட்டார்கள்.
........
கார் வாங்கின கதையை சொல்லோனும் பாருங்கோ. இப்பதான் ஒருமாதிரி படித்து பட்டம் என்று ஒன்றைப்பெற்றனான். என்ன படித்தனான், எப்படி படித்தனான் என்றெல்லாம் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். படித்து என்ன கிழித்தேன் என்றும் தெரியாது, ஆனால் படிப்பதற்காய் பெற்ற கடனை எண்ண கைவிரல்களும், கால்விரல்களும் பத்தாது (அல்லது கைவிரல்கள் + கால்விரல்களின் இரண்டு மடங்கைவிட கொஞ்சம் அதிகமான ஆயிரங்களில் கடன் என்றும் சொல்லலாம்). படித்து ஆறுமாதங்களின் கடனை வட்டியுடன் திருப்பக்கட்டவேண்டும் என்பது விதி. வேலை ஒன்றும் ஒழுங்காய் கிடைக்காமல் வாறதும் போறதுமாய் இருக்க அதிலை சேமித்த காசிலைதான் இந்தக் கார் வாங்கினனான். காப்புறுதி full coverage செய்ய ஆசையிருந்தும், கிடந்த காசையெல்லாம் வாரி காரிற்கு கொடுத்ததால், காப்புறுதியிற்கு அவ்வளவு கட்ட பணம் போதாதால் குறைந்த காப்புறுதியைத் தான் எடுத்தேன். அத்தோடு காப்புறுதிக்கு ஒருவருடத்திற்கு கட்டுகிற பணத்தில் இன்னொரு காரையே வாங்கிவிடலாம். கார் வாங்கி ஒரு மாதம் ஆகாதபடியால் பிறகு full coverage காப்புறுதியைப் பற்றி யோசிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.
......
இப்ப காரும் போய்விட்டது. ம்...காசும்தான் போய்விட்டது. பொலிசிட்டை சொன்னால் அவன் சொல்றான், இந்த model கார் அடிக்கடி களவுபோகிறதுதான் என்று coolயாய் சொல்கிறான். அவனும் என்ன செய்ய எத்தனை களவுகளுக்கு எண்டு கவலைப்படுவது? ஓசியில வந்து ஓசியில போயிருந்தால் இப்படி நானும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஏதோ கொஞ்சம் உடம்பை முறித்து வேலைசெய்து இப்படி கைநழுவிப்போனதுதான் சகிக்க முடியாமல் இருக்கிது. சோர்ந்து போகும்போதெல்லாம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகரும் தோழிகளை தொலைபேசியில் அழைத்தேன். எல்லோரும் பரீட்சை, வேலை என்று அவசரமாய் ஓடிக்கொண்டிருப்பதால் ஒருவரையும் லைனில் பிடிக்கமுடியவில்லை. கொஞ்சம் கவலையாயும், சோர்வாயும் இருந்து கட்டிலில் சரிந்து படுக்க, நேற்று christmas gift என்று அண்ணா அழகான வர்ணப்பேப்பரில் சுற்றிக்கொண்டுவந்த கார் viper என்னை இன்னும் யோசிக்கவைத்தது. எனது கார் viperல் ஏதோ கொஞ்சம் பிழை இருந்து ஸ்நோவை வடிவாய் தள்ளாததால், அவர் காரிற்கென வாங்கிவந்திருந்தார் நேற்றிரவு. படுத்தாலும் தூக்கம் வராது காரில்லாது வெறுமையாயிருந்த இடந்தான் நினைவில் அலைவுற்றுக்கொண்டிருக்க, திடீரென தொலைபேசி அடித்தது. சரி யாராவது தோழிதான் எடுக்கின்றனரோ என்று எடுக்க எதிர்முனையின் அண்ணாவின் ஐந்து வயது மகன். அண்ணிக்கு அம்மா நடந்த விவரம் சொல்லியிருக்க அவன் என்னோடு பேசப்பிரியப்பட அண்ணி திருப்பி தொலைபேசியை எடுத்திருந்தார். அவன் சொன்னான், 'சித்தியா (சித்தப்பா என்பதை அப்படி அவன் ஆக்கிவிட்டான்) கார் களவுபோனாலும் என்னட்டை ஏழு டொலர் காசு இருக்குது. அதை நான் தாறன் நீங்கள் இன்னொரு கார் வாங்குங்கோ. எத்தனை முறை களவுபோனாலும் நான் காசு தருவன்' என்று கூறி தன்ரை pig உண்டியலை உடைக்கப்போனான்.
............
ஒன்று புரிந்தது. மனிதர்கள் மீதும், வாழ்வின் மீதும் நம்பிக்கையிழக்க காலம் இன்னும் வரவில்லை என்பது.

அம்பையும் சிறுகதைகளும்

Friday, December 10, 2004

அம்பையின், உயிர்மையில் வெளிவந்த, கூடத்தில் துள்ளிய கன்றுக்குட்டி சிறுகதையை வாசித்தபோது நான் நீண்டகாலமாய் தேடிக்கொண்டிருந்த வினாவிற்கு சற்று விடை கிடைத்தாற்போலத் தெரிந்தது. எப்போதும் தேடல்,இருத்தல், இருத்தலின்மை/போதாமை என்ற சொற்களை ஆண்களாகிய நாங்கள் மட்டும் பாவித்து எழுதிக்கொண்டிருக்கும்போது இவைபற்றிய பெண்களின் அவதானங்கள் எப்படியிருக்கும் என்று நான் அவ்வப்போது யோசிப்பதுண்டு.
.............
சிறுகதையிலிருந்து சில பகுதிகள்...
இருத்தல் இருத்தலின்மை பற்றிய கேள்விகள் பெண்களைப் பாதிக்கவில்லையா என்று கேட்டார்கள் உதயனும் கதிரும்.

பெண்ணும் காமுவைப் படிக்கிறாள். சார்த்தரைப் படிக்கிறாள். திருமந்திரத்தையும் அக்க மகாதேவியையும் ஸ¤·பி கவிஞர்களையும் அவளும் படிக்கிறாள். ஆனால் ஒட்டுமொத்தக் குடும்பமும் வீட்டின் நாயகனான ஆணை உருவாக்குவதில் முனைந்திருக்கும்போது, அதன் இண்டு இடுக்குகளில் புகுந்து தன் இருத்தலையே ஆதாரமாக்கி அவள் தன்னை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இருத்தல் பற்றிய வேதாந்தபூர்வமான கேள்விகளை அவள் எழுப்பிக்கொண்டிருப்பதால்தான் அன்றாட வாழ்க்கைப் புதைகுழியிலிருந்து அவள் மீண்டு மீண்டு வரமுடிகிறது. குறியீடுகள் சூழ்ந்த உலகில் அவள் வாழ்கிறாள். "சன்னல் பக்கம் என்ன வேளை?" என்ற கேள்விதான் அவள் வாழ்க்கையின் அடித்தளம். சன்னல், புற உலகின் குறியீடு. சன்னலுக்கு வெளியேதான் அவள் சுதந்திரம். ஓடும் ஆறும், தேங்கிய கிணறும் கூட அவளுக்கு குறியீடுகள்தான். சாவின் குறியீடுகள். "ஆற்றிலோ கிணத்திலோ விழுந்து சாவேன்" போன்ற சொற்கள் அவள் மொழி உலகின் ஒலிகள். "தேவிடியா முண்டை" தான் அவளுக்கான முடிவான கண்டணம்.

"சரிதான். இதெல்லாம் மாரடிப்பு. பெண் பலியாடுங்கறியா? 'பெண்ணாகப் பிறந்தாலே உலகின் எந்நாளும் துயர்தானே' மாதிரி பாட்டுக்கள் பின்னணியில் கேக்குது எனக்கு" என்றான் உதயன்.

அவள் மறுத்தாள். இருத்தலின் கனம், கனமின்மை இரண்டையும் உணர்ந்தவள் பெண் என்றாள். இருத்தலின்மையே சிலசமயம் அவள் இருத்தலாகிப்போகிறது என்றாள். இல்லாமலே சிலசமயம் அவள் இருக்கிறாள். இருந்து கொண்டே சில சமயம் இல்லாமல் போகிறாள்.
...............................
அம்பையின் சிறுகதைகளை அவ்வப்போது கிடைக்கும்போது வாசித்தாலும், அவருடைய சிலதொகுப்புக்களை நாலைந்து மாதங்களுக்குமுன் வாசிக்க சந்தர்ப்பம் வாய்த்தது. ஆரம்பத்தில் எழுதிய அம்பையில் துடிப்பும், வெகுளித்தனமும், சினமும் கரைபுரண்டு ஓடுகிறது (வயதும் ஒரு காரணமாயிக்கக்கூடும்). எதையும், எவரையும் தயவு தாட்சண்யமின்றி தனது நிலையில் நின்று விளாசுகிறார். காலச்சுவடில் வந்த அம்பையின் பேட்டியிலும் இந்த அனுபவங்களை அம்பை தெளிவாக முன்வைத்திருந்தார் என்று நினைவு.

இன்றைய பொழுதில் அந்தக்கதைகளை வாசிக்கும்போதும், அம்பையின் பல கதைகள் காலத்தை மிஞ்சி நிற்கும் என்று தெளிவாய் சொல்லமுடியும். பல தசாப்தங்களுக்கு முன்பே அம்பை இப்படி சுதந்திரமாய் தனது கருத்துக்களை பொதுப்பார்வைக்கு வைத்திருக்கிறார் என்றெண்ணும்போது வியப்பேற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒருவிதமான சமரசமும் எல்லாவற்றையும் அனுசரித்துப்போகும் பார்வை அவரது கதைகளில் தெரிகின்றது. பெண்மொழி என்பதற்கு என்ன வரைவிலக்கணம் என்று தெளிவாகத்தெரியவிட்டாலும் (பெண்ணின் அனுபவத்தைக் கொண்டு எழுதப்படுபவை/பேசப்படுபவை என்று நான் அர்த்தம் கொள்கிறேன்) அம்பையின் சிறுகதைகளே தமிழில் பெண்மொழியில் எழுதப்பட்ட முதற்கதைகள் என நினைக்கிறேன். அம்பை உட்பட பலபெண்கள் இப்படிப்பிரிப்பதை விரும்பாமாட்டார்களெனினும், ஒருவித அடையாள வாசிப்பிற்காய் இப்படிச்சொல்லாம் என்று நினைக்கிறேன். அம்பையிலிருந்து இன்றைய உமா மகேஸ்வரிவரை பெண்மொழியை மிகச்சிறப்பாகத் தமது கதைகளில் கையாள்கின்றனர் என்பதை அவர்களின் கதைகளை வாசிக்கும்போது புரியும். தமிழ்ச்சிறுகதைகள் வரலாற்றில் புதுமைப்பித்தன் எவ்வாறு தவிர்க்கபடமுடியாதவரோ அவ்வாறே அம்பையும் விலத்தப்பட முடியாதவர் என்றே நம்புகிறேன்.

மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்-2

Tuesday, December 07, 2004

சில அவசரக்குறிப்புக்கள்

கடந்த பதிவிற்கான கருத்தாய், சுகுமாரன் எழுதிய தற்கொலை பற்றிய கட்டுரை வாசித்தீர்களா என்று ஒரு நண்பர் எழுதியிருக்க, அந்தக்கட்டுரையை வாசிக்கவேண்டும் என்று ஆவல் உண்டாயிற்று. இங்கே ஒரேயொரு கடையில்தான் காலச்சுவடு, உயிர்மை விற்பனையாகிறது. எனக்கு அந்தக் கடைக்காரருடன் அவ்வளவு ஒத்துவராதது என்பதால் அங்கே போவது மிகவும் குறைவு. ஞாயிற்றுக்கிழமை ஒரு விடயம் காரணமாக அந்த இடத்திற்கருகில் போகவேண்டியிருந்தததால், நவம்பர் உயிர்மையும், டிசம்பர் காலச்சுவடும் வாங்கக்கூடியதாயிருந்தது. சுகுமாரன், சாவதும் ஒரு கலை என்ற தலைப்பில் உயிர்மையில் அருமையான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார்

'எல்லோரும் ஒருமுறையாவது தற்கொலைக்கு முயன்றிருப்பார்கள் அல்லது தாமாக வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் இறுதிக்காட்சி பற்றி கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். ஓரிருமுறை மனத்துக்குள் ஒத்திகை பார்த்து ஒருமுறை தற்கொலைக்குத் துணிந்தேன்.' என்று தனது தற்கொலை முயற்சியை தொடர்ந்து விபரிக்கிறார். எல்லாவற்றையும் போல சாவதும் ஒரு கலை என்று கூறிய ஸில்வியா பிளாத், பிறரைப்போலல்லாது விதிவிலக்காக அதை அவர் நேர்த்தியாக செய்தார் என்று சுகுமாரன் அந்தக்கட்டுரையில் எழுதுகிறார்.

ஸில்வியா பிளாத் போலத்தான் சிவரமணியும் சாவதை ஒரு கலையாக, நேர்த்தியாக தனது தற்கொலையைச் செய்தார் என்று நினைக்கிறேன். மிக ஆறுதலாக் திட்டமிட்டு மாய்த்துக்கொண்டவர் அவர். இறந்த அந்த நாளில் கூட தன்னிடம் படிக்கவருபவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து மிக நிதானமாய் இருந்தவர் சிவரமணி என்று எனது தமக்கையார் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

தற்செயலாக எஸ்.ராமகிருஷ்ணனின் உயிர்மை கட்டுரையை வாசித்தபோது அதுவும் ஜப்பானியர்களின் தற்கொலையைப் பேசுவதாய் இருக்கிறது. திரைப்பட இயக்குனர் அகிரா குரசோவா கூட மூன்றுமுறை தற்கொலையை மேற்கொண்டு காப்பாற்றப்பட்டவர் என்ற குறிப்பிடப்படுகிறது. சாவது ஒரு கலை என்று காம்யு சொல்லியிருக்கிறார் என்று எஸ்.ராமகிருஷணன் குறிப்பிடுகிறார். (ஸில்வியா பிளாத், காம்யு இருவரும் coincidence இப்படி சொல்லியிருக்கிறார்களா? OR சுகுமாரன் அல்லது எஸ்.ராமகிருஷ்ணன் தவறுதலாக்குறிப்பிட்டனரோ சரியாகத்தெரியவில்லை).

சுகுமாரன் தனது தற்கொலை முயற்சி பற்றிச்சொல்லும்போது, ஸில்வியா பிளாத் அதை நேத்தியாகச் செய்தார், ஆனால் தான் இருபத்து நான்காம் வயதில் அதை நேர்த்தியில்லாமல்தான் செய்திருக்கிறேன் என்பது மாதிரி நானும் நேர்த்தியில்லாமல்தான் ஒருமுறை செய்திருக்கிறேன் என்பது கடந்தகாலம் பதிவுசெய்த ஒரு விடயம்.

மரணங்கள் மலியும் பனிபடரும் தேசம்

Saturday, December 04, 2004

சில நாட்களுக்கு முன்னர், ஒரு பெண் தனது கணவன் மற்றும் மூன்று பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார். நல்லவேளையாக இரண்டு பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுவிட்டன. சுதந்திரம், வசதிகள் என்று இன்னபிற விடயங்கள் கோலோச்சுகிற இடத்தில்தான் இப்படியான கொடூரமான விடயங்கள் அதிகம் நிகழ்கிறதோ என்ற எண்ணம் வந்தது. இந்தப்பெண்ணும், அடுத்தடுத்து பிள்ளைகள் பெற்றதால் வருகின்ற ஒரு உளவியல் வியாதிக்கு ஆளாகியிருக்கவேண்டும் என்று இப்போது காரணம் சொல்கிறார்கள். இந்தவிடயம்பற்றிப்பேசும்போது, ஒரு குழந்தை அழுவதைவிட பன்மடங்கு அதன் தாயார் குழந்தையைக் கருவில் சுமக்கும்போதும், குழந்தைபிறந்தபிறகும் அழுகின்றார். ஆனால் அது குறித்த விழிப்புணர்வு குறைவென்று உளவியல் நிபுணர் ஒருவர் தொலைக்காட்சியில் சொன்னார்.
................
தற்கொலைகள் மிகுந்த பீதியை ஏற்படுத்தக்கூடியன. கனடா வந்தபுதிதில், எனக்கு இங்கே முதன்முதலில் அறிமுகமான நண்பன் தற்கொலை செய்தபோது, போரிலிருந்து தப்பிவந்த நாங்கள் நிம்மதியாக இங்கேயும் இருக்கமுடியாது என்ற உண்மை புரிந்துபோனது. அதுவும் அவன் தற்கொலை செய்துகொண்டுவிதம் கொடுரமானது. தன்னை பொலீத்தினால் சுற்றி நெருப்பு வைத்து மாய்த்துக்கொண்டான். பிறகு பலநாட்களாய் அவன் எரிந்த இடத்தில் புற்கள் கருகியிருந்ததைப் பார்த்தபடி பாடசாலை போயிருக்கிறேன். அந்த சுவடுகள் என்றைக்கும் அழிய முடியாதன. பிறகு கொஞ்சம் வளர்ந்து, வளாகத்தில் இருக்கின்றபோது ஒரு தோழியின் (நல்ல நெருக்கம் இல்லையென்றாலும்) தற்கொலை மனதைக் கரைத்தது. அதுவும் கோடையில் பாடத்திற்கு பதிவுசெய்துவிட்டு, வகுப்பிற்கு போகாது நண்பர்களோடு கிறிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஏன் girlsஐ விளையாட்டில் சேர்க்கமாட்டீர்களா என்று கேட்டு எம்மோடு சேர்ந்து விளையாடிய சில தினங்களின் பின், ஆறொன்றில் குதித்து தன்னை இல்லாமல் ஆக்கிக்கொண்டாள். இப்படி இன்னும் செவிவழிக்கதையாக, பத்திரிகைகளில் வாசித்தவையாக எத்தனையோ தற்கொலைகளை கேள்விப்பட்டாயிற்று. கணவனை இழந்த ஒரு தமிழ் தாய், தனது இரண்டுபிள்ளைகளை காரின் trunkற்குள் வைத்து மூடி தன்னையும் மாய்த்துக்கொள்ள முயன்றது அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாதது. இறுதியில் அவர் காப்பாற்றப்பட இரண்டு பிள்ளைகளும் இறந்துபோய்விட்டனர். அந்தத்தாய் தன்னை ஏன் சாகவிடாமல் காப்பாற்றினீர்கள் என்று கதறியது பார்த்தவர்களின் மனதை நிச்சயம் பிசைந்திருக்கும்.
..............
எல்லா வசதிகளும், வாய்ப்புக்களும் இருந்தும் ஏன் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன என்பதற்கான அடிப்படைக்காரணங்கள் இன்னமும் சரியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை போலத்தான் படுகிறது. ஒரு சில நிமிடங்களில், நொடிகளில் இந்த விடயத்திற்கு முடிவெடுக்கிறவர்களுக்கு கவுன்சிலிங் போன்றவை எவ்வளவு உதவும் என்றும் சொல்ல முடியாது. தொழில்நுட்பத்தாலும், விஞ்ஞானத்தாலும் உலகைச் சிறிதாகச் சுருக்கவும், எம்மைப்போல இன்னொருவரை உருவாக்கவும் முடிகின்ற நம்மால், இன்னமும் பக்கத்தில் இருக்கின்றவர்களில் உளஅலைகளை கண்டுபிடிக்கமுடியாமல் இருப்பது எவ்வளவு கொடுமை.