கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அசுரன், ஆனால் அதைமட்டும் பற்றியதல்ல..

Thursday, April 23, 2020

மேஸன் பிரைமில் 'அசுரன்' வந்துவிட்டது என்பதறிந்து நேற்று நள்ளிரவிலேயே பார்க்கத் தொடங்கினேன்.. இதுவரை இதுகுறித்து நிறைய விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை வாசிக்காமலே தவிர்த்திருந்தேன். எனக்கான பார்வையை நானே உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காய் திரைப்பட விடயங்களில் நான் இவ்வாறு அடிக்கடி செய்வதுதான்.
அசுரனில் தனுஷின் நடிப்புப் பற்றியும், வெற்றிமாறனின் நேர்த்தியான நெறியாள்கை குறித்தும் ஏற்கன‌வே எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்களில் விதந்தேந்தப்பட்டிருக்குமென‌ நினைக்கின்றேன். ஆகவே அவற்றைச் சிலாகிப்பதை  இங்கே நான் தவிர்க்கின்றேன். நாவலிலிருந்து திரைக்கதைக்கு மாற்றுவது குறித்த்தும், சிறந்த படைப்பாளிகளை/படைப்புக்களை திரைக்குக் கொண்டு வருவதோ குறித்தும், அவற்றின் சிக்கல்கள்/தடுமாற்றங்கள் குறித்தும் பிறகொருபொழுது பேசலாம்.

மலையாளத்தில் அண்மையில் வந்த 'ஜல்லிக்கட்டி'ல் ஹரீஸ் போன்ற எழுத்தாள‌ர்களை எப்படி அற்புதமாகப் பாவிக்கின்றார்கள்  என்பதை மட்டும் ஒரு சிறுகுறிப்பாய விடுகின்றேன். கடந்தவருடம் நான் கேரளாவில் நின்றசமயந்தான் இதே ஹரீஸின் 'மீச' நாவல் வெளிவராது இந்த்துத்துவசக்திகள் தடுத்து நிறுத்த பெரும் சர்ச்சைகள் நடந்ததது என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

இவ்வாறு சிக்கலுக்குள்ளானவரை தம் திரைக்குப் பாவித்தது என்பதே ஓர் 'அரசியல் அறிக்கை'தான். மலையாளச் சூழலில் எழுத்தாளர்களும், திரைப்பட நெறியாளர்களும் எவ்வாறு அரசியல்மயப்பட்டிருக்கின்றார்கள், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கின்றார்கள்/ஊடாடிக்கொள்கின்றார்கள் என்பதற்காய் இதைச் சொல்கின்றேன்.

நமது சூழலில் அரிதாக திரைக்குள் நுழையும் எழுத்தாளர்களும் வெகுசன சினிமாவுக்கு திரைக்கதை எழுதி, அதை நியாயப்படுத்துவதையும், இந்த இலக்கிய திரைப்பட‌ இடைவெளியைக் குறைப்பதற்குப் பதிலாக இலக்கியத்தைப் போல சினிமா இல்லை என்று அடிக்கடி எழுதி, தங்களுக்கான இருப்பை நிரூபிப்பதற்காய் இன்னும் இந்த‌ விரிசலை அதிகரித்தபடியும் இருக்கின்றார்கள் (இதை ஏற்கனவே ஒரு பதிவில் விரிவாக‌ எழுதியிருக்கின்றேன்).

ஆகவேதான் அசுரன் ஒரு கொடூரவாழ்வின் நிஜமுகத்தைத் திரைக்குக் கொண்டுவரும்போதும், அங்கே 'வெகுசன' சினிமாவுக்கான சமரசங்கள் இருக்கவேண்டும் எனச் சொல்கின்றார்கள். இந்தளவாவது திரையில் வருகின்றதே என திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டுமென எங்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

அசுரனின் கதையே ஒருவகையில் நிலத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமே. ஒருவகையில் நமது ஈழப்போராட்டம் கூட நிலமீட்புப் போராட்டந்தான். எனக்கு முன்பு இருந்த தலைமுறைக்கு அது மொழிக்கான போராட்டமாகவோ, தரப்படுத்தலுக்கான போராட்டமாகவோ இருந்தாலும், என்னைப் போன்றவர்களுக்கு அது நிலமீட்புப் போராட்டமாக இருந்தது. ஆகவேதான் நாம் 'இந்த மண் எங்களின் சொந்த மண்/ இதன் எல்லையை மீறி வந்தவன் யார்' என்ற பாடலிலும், 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்/ நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்' என்று வார்த்தைகளிலும் நாம் எமது போராட்டத்தை நிலமீட்பாகப் பார்த்தோம்.

என்னுடைய குழந்தை/பதின்மப் பருவத்தில் இலங்கை இராணுவம்/பொலிஸ் என்பவற்றையே பார்க்காதால் போராளிகள் என்பது எமது நிலங்களைப் பாதுகாப்பவர்களாக, இராணுவ முகாங்களை அழித்து வெற்றிகொண்டபோது அவர்கள் எங்களுக்கு மீட்பர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். வன்முறை நமக்குள் திணிக்கப்பட்டது என்றாலும், வேறு வழியின்றி வன்முறையே எமக்குரிய முதற் தெரிவாக இருந்தபோதும் (அல்லது அதற்கு முன் தலைமுறையால எந்தத் தெரிவுகளுமின்றி எமக்கு கையளிக்கப்பட்டபோதும்), வன்முறை நமக்கு இறுதியில் எதைத் தந்தது என்பதற்கு வரலாற்றின் சாட்சிகளாக நாங்களே இருக்கின்றோம்.

ஆகவேதான் அசுரன் காட்சிப்படுத்திய ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை, நிலத்தை மீட்பதற்கான அவர்களின் தத்தளிப்புக்கள் என்பவற்றை நெருக்கமாக உணர்ந்து பார்த்தபோதும், முக்கிய பாத்திரத்தை சாகச நாயகனாக்கியபோது, அதுவும் வன்முறையினூடாக அதை நிகழ்த்தியபோது படத்திலிருந்து வெளியேற்றப்பட்டவனாக உணர்ந்தேன். இந்த 'வன்முறை' சாகச நாயகனாக்கும் முயற்சியிலிருந்து சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' கொஞ்சம் தப்பியிருக்கின்றது  என்றே சொல்வேன்.

இவ்வாறான கதைகளினூடாக தமிழ்த்திரை யதார்த்ததிற்குள் நகரும்போது, ஏற்கனவே இருக்கும் திரைக்கதை சொல்நெறிகளினூடாக அணுகமுடியாது என்பதை, வெற்றிமாறன் உணராமல் இருந்ததாலேயே அருமையான ஓர் படத்தை இழந்துவிட்டிருக்கின்றார் என்றே தோன்றியது. அதுவும் முக்கியமாக வன்முறையை கையாளும் விதத்தால்/காட்சிப்படுத்தலாலும், ஒருவர் சாகசத்தால் எதிரிகளைப் பழி வாங்கும்போதும்கூட‌ -,பரியேறும்பெருமாள் நமது மனதில் ஏற்படுத்திய உறுத்தல்களினதோ/ குற்ற உணர்வின் எந்தத் துளியையும்- அசுரன் எனக்குள் விட்டுச் செல்லவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இதே இடத்தில் இன்னொரு விடயத்தைக் குறித்தாக வேண்டும். அசுரன் படம் வந்த கையோடு ஜெயமோகன் ஏற்கனவே எழுதிய கதையான 'குருதி'யை திரும்பப் பகிர்ந்துகொண்டார். அவரின் வழமையான வாசகர்கள் எப்படிப் புகழ்ந்துரைந்திருப்பார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தக் கதையை அசுரன் படம் வந்ததன் பின் அல்ல, அது வெளிவந்த காலத்திலேயே வாசித்து, ஜெமோவின் பாணியில் சொல்வதால் எனக்கான கருத்தைத் 'தொகுத்து' வைத்திருந்தேன். இப்படி ஒரு துண்டு நிலத்துக்காய் பழிவாங்கு என்று உசுப்பிக் கதையெழுதுகின்ற ஜெமோவால் எப்படி எங்களின் ஈழப்போராட்டத்திற்கான காரணத்தையோ  அல்லது வன்முறையைக்  கையிலெடுத்ததையோ எந்தக் காலத்திலும் விளங்கிக் கொள்ளமுடியாதுபோனது என்று யோசித்திருக்கின்றேன்.

போரிலிருந்து அல்லது இப்படி சாதியால் ஒடுக்கப்பட்டு மேலெழுந்து வருபவர்க்குத் தெரியும், மண்மீட்பை விட உயிர்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கின்றதென்று, ஆனால் இறுதியில் எதையும் செய்யமுடியாக் கையாலாக நிலையிலேயே எதிர் வன்முறையைப் பாவிக்கின்றார்கள் என்பது பற்றியும் அவர்களே நன்கும் அறிவார்கள்.

அப்படி வந்தவர்கள் திருப்பி அடிப்பதைவிட, ஏன் எங்களை அடிக்கின்றீர்கள் என ஆதிக்க/இனவெறிச் சக்திகளிடம் மன்றாடவும், அவர்களின் மனச்சாட்சியையும் உலுக்குவதையுமே தம் கலை இலக்கியங்களினூடாக செய்வதற்கு அதிகம் விரும்புகின்றவர்களாக இருப்பார்கள் என்பதே யதார்த்தமானது.

அசுரனை இரவு பார்த்துவிட்டு முதலில் வாசித்த கட்டுரை டி.தர்மராஜினதுடையது.  அதில்  அசுரன் தொட மறந்த/மறுத்த புள்ளிகளை அவர் அற்புதமாகத் தொட்டிருக்கின்றார். இறுதியில் அவரின் இந்த வார்த்தைகளையே இங்கு விட்டுச் செல்கின்றேன்.

"...ஏனென்றால், ஒடுக்கப்பட்டோரின் வன்முறை என்பது சாகசம் அல்ல என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அது உயிர் வாழ்வதற்காகச் செய்யப்படும் கடைசி யத்தனம்.  அவர்கள் அவதார புருசர்களைப் போல அந்த வன்முறைக்குப் பழகியவர்கள் இல்லை.  அதனால், தப்பும் தவறுமாகவே வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்."
......................................

(1) டி.தர்மராஜ்ஜினது கட்டுரை: https://tdharumaraj.blogspot.com/2019/10/uncut.html?spref=fb&fbclid=IwAR1Be9uOdepIrbF2NsMhzKzDWn1QKLDuMkZ5AH0B1PfyCjvYW6qABNWilMI

(2) ஜெயமோகனின் 'குருதி' கதை: https://www.jeyamohan.in/34372

(Nov 08, 2019)

எல்ல (Ella)

Wednesday, April 22, 2020


ல்லவிற்கு (Ella) இரெயினில் போவதென்றால், பல மாதங்களுக்கு முன்னரே பதிவுசெய்ய வேண்டும். என்றாலும் கடைசிநேரத்தில் அடித்துப் பிடித்து கெஞ்சிப்பார்த்ததில் மூன்றாம் வகுப்பில் இடங்கிடைத்தது. கொழும்பிலிருந்து எல்லவிற்கான பயணம் 9 மணித்தியாலங்களுக்கு நீளக்கூடியது. இலங்கையில் இருக்கும் இரெயின் பாதைகளில் மிக அழகானது, இந்தப் பயணத்தடம் எனச் சொல்லப்படுகின்றது. விடிகாலை ஆறுமணிக்கு இரெயின் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டது. பொழுது மெல்லப் மெல்லப் புலர, இயற்கையும் மனிதர்களும் அவ்வளவு புத்துணர்ச்சியாய்த் தெரிய, நமது மனதும் பயணத்தின் இடையே அசையும் தாமரைகளையும், அல்லிகளையும் போல எளிதில் மலர்ந்துவிடும்.

மூன்றாம் வகுப்பு என்றாலும் ஏறிய‌ அநேகமானவர்கள் இளஞ்சோடிகளாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்து வயதான எனக்கு கடந்தகால‌ காதல் நினைவுகள், பச்சையத்தை இழந்து நின்ற முதிர்ந்த மரத்தின் மீது பொழிகின்ற மழை போல திரளத்தொடங்கின. கனடாவில்தான் நண்பர்கள் எனனைச் சோதிக்கின்றார்கள் என்றால், பயணத்திலும் இப்படி ஏன் கடவுள் என்னைப் பெருமூச்சுவிடச்செய்கின்றார் என்று நினைத்தபடி அவர்களின் காதல் சில்மிஷங்களைப் பார்த்தும் பார்க்காது மாதிரியும் யன்னலுக்கு வெளியே பார்வையை எறிந்தேன்.

ஒவ்வொரு இனிதான பயணங்களிலும் இடைஞ்சல் தருவதற்கெனவே சில மனிதர்கள் வந்துவிடுவதுண்டு. அழகான காலைப் பொழுதை குலைப்பதற்கென ஏறிய இரண்டு ஆண்கள், சிங்களப் பாடல்களை கூடிய சப்தத்தில் ஒலிக்கவிட்டிருந்தனர். கூட வந்த நண்பருக்கு சத்தம் ஒரு பெரும் சிக்கல்.
அவர்களிடம் போய் சத்தத்தைக் குறைக்கச் சொல்லலாம் என்றாலும், அவர்களுக்கு பொதுபல சேனாவின் ஞானசாரதேரர் குருவாக இருந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தால், முள்ளை முள்ளால் எடுக்கவேண்டுமென்று என் அலைபேசியில் இருந்த ராப் பாடல்களை உரக்க நான் போட்டுவிட்டேன்.

அவர்களிடம் மேலதிகமாய் ஸ்பீக்கர் இருந்தது. ஆகவே இன்னும் சத்தத்தை உயர்த்திவிட்டனர். நீயும் உனது முள்ளை முள்ளால் எடுக்கும் சிகிச்சையும் என்று தலையிடி கூடிய நண்பர் முறைத்துப் பார்த்தார். அய்யா, இது உங்கள் 'சிங்கள-பெளத்த' நாடுதான், நாங்கள் பிறகு வள்ளத்தில் வந்திறங்கிய வந்தேறிகள்தான் என்று அவர்களிடம் சரணடைந்து, ராப்பை நிறுத்திவிட்டேன். அப்படி வழிக்கு வாவென்று அவர்களும் சத்தத்தைப் பிறகு குறைக்க, நமக்குள் நல்லிணக்கம் நிகழ்ந்துவிட்டது.

பேராதனையை இரெயின் அண்மிக்க அண்மிக்க வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. அதுவரை எதிரெதிர் இருக்கையில் வேறு எவருமின்றி துட்டகைமுனு எல்லாளனை வென்றபின் நிம்மதியாக காலை நீட்டி உறங்கியதுபோல இருந்த எமக்கு இது பெரும் தொல்லையாகிவிட்டது. எதிரே இருந்தவர் இங்கிலாந்து என்றால், பக்கத்தில் அமர்ந்தவர் ஆஜானுபாவான ஜேர்மன்காரர். இனி இப்படி ஒடுங்கியபடி மூன்று இருக்கை ஆசனத்தில் இருத்தல் சாத்தியமில்லையென இரெயினின் வாசல்பக்கமாய்ப் போய் நான் குந்திவிட்டேன். அப்போதுதான் இந்த 'அந்நியர்களுக்கு' பாடங்கற்பிக்க ஒரு ஆயுதம் என்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது.

து இந்தப் பயணத்துக்கு முதல் நாளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு உறவினர் வீட்டுக்குச் சென்றபோது, அபகரித்து வந்த பிரியாணிச் சட்டி. வாசல்பக்கமாய் ஒரு துண்டைப் போட்டுவிட்டு வயதான ஆச்சிமார் காலை நீட்டியிருப்பதுபோல இருந்துகொண்டு பிரியாணிச் சட்டிக்குள் புது உலகத்தைத் தேடத் தொடங்கினேன். நல்ல வாசனையோடு, கோழிக்காலை வழித்து இழுத்து உறிஞ்சிய என்னைப் பார்த்து அவர்களுக்கு உடனேயே இரெயினை விட்டுவிட்டு ஓடவேண்டும் போல இருந்திருக்கும். ஐரோப்பாவில் வெவ்வேறு நாடுகளுக்கிடையிலான இரெயின் பயணங்களில் எவ்வளவு நாசுக்கான மேற்கத்தைய நாடகத்தை நானெல்லாம் சாப்பிடும்போது போட வேண்டியிருந்திருக்கிறது. அதற்கு இது நல்லதொரு பழிவாங்கல் என என் வாயும் கையும் சொல்லிக்கொண்டன.

ஒருமாதிரியாக எல்லயை, போகும் நேரத்தைவிட ஒரு மணித்தியாலம் பிந்திப் போய்ச் சேர்ந்தோம். நிற்கும் இடத்தில் வசதி இல்லாவிட்டாலும், காலையில் நல்லதாய் காலைச்சாப்பாடு தருகின்ற இடமாய்ப் பார்த்து பதிவு செய்திருந்தோம். அங்கே நின்ற சிங்களப் பெண் வழியில் பார்த்த தாமரைக்கு உயிர் வந்தமாதிரித் தெரிந்தார்.. சுற்றுலாப் பயணிகள் திரியும் இடமென்பதால் எல்லாம் விலையாக இருந்தன. அதனால் சாப்பிட்டுக்கொண்டு இடைநடுவில் 'லயனை'ச் சந்திக்ககூடாது, முதலிலேயே அதனோடு பொருதவேண்டுமென 'லயனை' குளிராக விற்ற கடையில் எனக்கும், நண்பர் ஒரு சூழலியல் ஆர்வலர் என்பதால் அவருக்கு somersetயையும் வாங்கிக்கொண்டு, ஒரு விளையாட்டுத்திடலினடியில் ஒதுங்கினோம்.

என் வீரத்தின் வலிமை கண்டு அஞ்சியோ என்னவோ, மரத்தில் இருந்து ஒரு பூச்சி கீழே என் தோளில் விழுந்தது. ஒரு வீரனுக்கு இப்படியுமா ஒரு சோதனை வரவேண்டும் என்று அதைத் தட்ட கழுத்தில் கடித்துவிட்டு அது தப்பிவிட்டது. ஆனால் கழுத்தோ கொஞ்சம் கொஞ்சமாய் வீங்கத் தொடங்கிவிட்டது. சா, ஒரு லயனோடே பொருதமுடிகின்ற எனக்கு இந்தப் பூச்சி இப்படியொரு பாடங்கற்பித்துவிட்டதே என்று எனக்குக் கொஞ்சம் பயம் வந்துவிட்டது.

பயத்தை இலயனின் கடைசிமிடறு வென்றதால், நாங்கள் செஃப்வ் ஹவுஸ் என மரப்பொருட்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட உணவுகத்திற்குள் நுழைந்தோம். எதிரே கொத்துரொட்டிக் கடையில் கொத்துப்போட, அந்த இசையோடு அதற்கு அருகில் இருந்த கடையின் பெயரான I love Ceylon என்பதை வைத்தே நான் பல்வேறு இராகங்களில் கர்நாடக சங்கீதக் கச்சேரி வைக்கத் தொடங்கினேன்.

இவ்வளவு இசைவளம் எனக்குள் இத்தனை நாள் எங்கு ஒளிந்திருந்தது என நான் வியப்படைய, நண்பரோ அமைதி அமைதி, மற்றவர்கள் பார்க்கின்றனர் என்றார். என்னாலோ நான் கட்டுப்படுத்த முடியாதவளவுக்கு இசை 'இலயனோடு' பெருங்கெடுத்துப் பாயத் தொடங்கிவிட்டது.  ஆனால்இப்படி ஒரு நல்ல இசை அனுபவத்தை, ஒரு கொடுமையான நிகழ்வு பிறகு நிகழ்ந்து  இல்லாமற் செய்துவிட்டதுதான் பின்னர் நிகழ்ந்த துயரம்.

வீட்டுச்சாப்பாடு மாதிரி செப்ஃவ் சமைத்துத்தருவார் என்று நினைத்து நான் பட்டர் சிக்கனை ஓடர் செய்திருந்திந்தேன். வந்ததோ ஏதோ கலங்கிய தண்ணிக் குழம்பு போன்ற ஒரு புளிப்புச் சிக்கன். எனக்கு வந்த விசரில் சிலோனாவது மண்ணாவது என்று கச்சேரியை விட்டுவிட்டு, உணவைக் கொண்டு வந்தவரிடம், 'அண்ணை நீங்கள் லெமன் சிக்கன் போன்ற ஒன்றை, பட்டர் சிக்கன் என்று கொண்டு வந்து தந்துவிட்டீர்கள்' என்றேன். அவரோ,  ஒருமுறை டிஷ்ஷை கூர்ந்து பார்த்துவிட்டு, 'இல்லை சரியான ஓடர்தான்' என்றார். 'இதற்குள் பட்டரே இல்லை வெறும் தண்ணீர்தான் இருக்கிறது'என்றேன். சரி அவர் என்ன செய்வார், பாவம். I love Ceylon என்ற என் பூபாளம் போய்  I want to see the Chef என்ற முகாரி எனக்குள் உருவெடுக்கத் தொடங்கியது.

கூட இருந்த நண்பர்தான் எப்படியோ என்னைத் தேற்றி விடுதிக்கு கூட்டிக்கொண்டு வந்தார். வரும் வழியெல்லாம், உலகெங்கோ எல்லாம் சென்று எத்தனையோ விதமான பட்டர்-சிக்கன் சாப்பிட்டிருக்கின்றேன், எல்லயிலே மட்டுந்தான் பட்டரே இல்லாது பட்டர் சிக்கன் சாப்பிட்டு சாதனை படைத்திருக்கின்றேன் என்று புலம்பியபடி வந்தேன்.

ஆனால் அடுத்தநாள் காலையில், நான் தங்கி நின்ற வீட்டுச் சிங்களப் பெண்மணி, பொல் ரொட்டி சுட்டுத்தர, அதை எல்லயின் மென்குளிரில் சாப்பிட்டபோது நான் மீண்டும் இயல்புக்கு வந்திருந்தேன். அதுவும் வீட்டிலே அவர்கள் தயாரித்த விளாம்பழ ஜாமை வாட்டிய பாணின் மீது தடவிச் சாப்பிட்டபோது, ஒரு முத்தத்தைப் போல இதமாய் இருக்க,   அந்த பட்டர் சிக்கன் செய்த செப்ஃவையே போனால் போ என்று மன்னித்துவிட்டேன்.

நல்லவேளையாக அடுத்தநாள், உணவுக்காக இலங்கையில் மீண்டும் நிகழ இருந்த ஒரு எல்லாள- கைமுனு யுத்தம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.
...........................................

(Feb 11, 2020)

பத்து வருட நாடோடி வாழ்க்கை

Sunday, April 19, 2020

யணங்கள் ஒருவகையில் வாழ்க்கை குறித்து புத்தர் கூறியதுமாதிரித்தான். அவரவர் அவரவர்க்கான பாதைகளை கண்டுபிடிக்கவேண்டும், பிறரைப் பின்பற்றக் கூடாது என்பது.  மத்தியூவின் (Matt) 'பத்துவருடங்கள் ஒரு நாடோடி' என்கின்ற இந்த நூலும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இருபதுகளில் இருந்த மத்தியூஸ் 2003ல் முதன்முதலாக தனித்து அமெரிக்காவிலிருந்து கோஸ்டா ரிக்காவுக்குப் பயணிக்கின்றார். அது அவருக்கு கொடுக்கும் உற்சாகத்தின் காரணமாக 2006-2016ல் வரை ஒரு நாடோடியாக 90இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு அலைந்து திரிந்திருக்கின்றார். அந்த அனுபவங்களின் ஒரு பகுதியையே இந்த நூல் பேசுகிறது.

பயணங்களில் tourist, traveler என இரண்டு வகையாக இருப்பதை நாமெல்லோரும் அறிவோம். மத்தியூஸ் ஒரு பயணியாக அலைந்தபடியால், நீண்டகாலம் அலைவதற்கான முக்கிய பல விடயங்களைச் சொல்கின்றார். அவரின் பெரும்பயணம் முதல் சுற்று இத்தாலி, கிரீஸ், செக் என நீண்டு தென்கிழக்காசியா வரை போகின்றது. பெற்றோருக்கு இது விருப்பமில்லாத விடயம், நண்பர்களுக்கு இப்படி செய்வது ஒரு முட்டாள்தனம், உயரதிகாரி வேலையை இராஜினாமாச் செய்யும்போது career பற்றிய அறிவுரைகள், இத்தனை விரும்பி ஏற்காப் 'பொதிகளுடனும்' மத்தியூ பயணம் செய்யும்போது அப்போது ஏற்படும் பதற்றங்களையும், பரவசங்களையும் இதில் உயர்வு நவிற்சியில்லாமல் இயல்பாய்ப் பதிவு செய்கின்றார்.

இவ்வாறாக நீண்டகாலம் பயணிக்கும்போதுவரும் காதல்கள் (destination travel love) குறித்தும் தன் அனுபவங்களை முன்வைத்தும் பேசுகின்றார். அவர் பல்வேறு பெண்களைச் சந்திக்கின்றார். தொடக்கத்தில் சில பெண்கள் அவரை தமது காதலனாக்கி ஏதாவது ஓரிடத்தில் 'செட்டில்' செய்யக் கேட்கின்றார்கள். இந்தப் பெண்களைப் பிடித்திருந்தாலும், அவரின் அலைந்து திரியும் இயல்பால் அவை எதுவும் சாத்தியமாகாது போகின்றது. அதேபோல பிற்காலங்களில் அவருக்குச் சில பெண்களைப் பிடித்து, அவர்களோடு சேர்ந்து வாழ விரும்பும்போது, அவர்கள் தொடர்ந்து பயணம் செய்யும் விருப்புடையவர்களாக இருப்பதால் இவரின் காதலை மறுக்கின்றார்கள். இவ்வாறு எல்லாவிதமான காதல்களையும், குழப்பங்களையும், ஏக்கங்களையும், ஏமாற்றங்களையும் எழுதிச் செல்கின்றார்.

ஆர்ஜெண்டீனாவில் நிற்கும்போது ஒரு சுவீடன் பெண்ணைச் சந்திக்கின்றார். அந்தப்பெண் இணைய உலகை முற்றாக மறுதலிப்பவர். தன் இயல்பில் போகும் இடங்களில் வேலை செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு உலகெங்கும் அலைந்து கொண்டிருப்பவர். புகைப்படங்கள் எடுப்பதையோ, தன் அனுபவங்களை எந்த ஷோசல் மீடியாவில் பகிர்வதையோ சற்று விரும்பாதவர் மத்தியூஸோ கொஞ்சம் கொஞ்சமாக தனது பயணத்தை எழுதுவதன் மூலம் (மில்லியன்கணக்கான பார்வையாளர்கள் அவருக்கு இருக்கின்றார்கள்) இணையத்தில் உழைத்து ஒரு digital nomad ஆக மாறிக்கொண்டிருப்பவர். இந்தப் பணத்தை வைத்தே அவர் பயணங்களைச் செய்கின்றவர்

சுவீடன் பெண்  இன்னொரு நண்பரின் படகில் கடலில் பயணித்து கொலம்பியாவுக்குச் செல்லலாம் வருகின்றாயா எனக் கேட்கின்றார். இவர் முதலில் அந்தப் பெண்ணி மீதான காதலில் வருகின்றேன் என்கின்றார். பின்னர் கடலில் இருக்கும் நாட்களில் இணையத்தில் உலாவமுடியாது, அதனால் தனது வாசகர்களை இழந்துவிடுவேன் என்பதால் கடைசி நேரத்தில் அந்தப் பயணத்தைத் தவிர்த்து, விமானத்தின் மூலம் வந்து அந்தப் பெண்ணைச் சந்திக்கின்றேன் என்கின்றார். சில நாட்கள் இணையத்தை விலத்தி இருந்தால், இந்த உலகம் அழியவா போகிறது என்று அந்தப் பெண் கேட்கின்றார். இறுதியில் படகுப் பயணத்தைச் செய்து போகும் அந்தப் பெண் இவரைப் பிறகு ஒருபோதும் தொடர்புகொள்ளவேயில்லை. ஒரு அருமையான காதலை இணையத்தின் மீதான காதலால் இழந்த சோகம் மத்தியூக்கு நிகழ்கிறது.

யணமும், இப்படி சமாந்தரமாக இணையத்தில் வேலை செய்வதும்/இயங்குவதும் எங்கே மத்தியூஸை இறுதியில் இழுத்துக்கொண்டு செல்கின்றது என்றால் அவருக்கு panic attackன் எல்லை வரைக்கும். ஒருமுறை அல்ல, இரண்டு முறை பல்வேறு சந்தர்பபங்களில் panic attack  வருகின்றது. மாத்திரைகளாலும் அவரை இயல்பாக்க முடியாத ஒரு நிலைக்கு அவர் இதன்மூலம் போகின்றார்.அப்போதுதான் பயணமும், பயணத்தின் நடுவே வேலை செய்வதும் சாத்தியமில்லை என்பது புரிகிறது. மேலும் மற்றவர்களின் விருப்புக்கேற்ப நாம் ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியாது என்பதையும் அவர் உணர்கின்றார்.

பத்து வருடங்களின் பின் 'வீடு' அடைதலை யோசிக்கின்றார். பொஸ்டனைச் சேர்ந்தவர் என்றாலும் மத்தியூ பின்னர் டெக்ஸஸை தனது இருப்பிடமாக மாற்றிக்கொள்கின்றார்.  இப்போது பயணங்கள் குறித்து பல்வேறு இடங்களில் பேச்சுக்களை வழங்குகின்றவராக, பயணக்குழுக்களுக்கு உதவுகின்றவராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அண்மையில் ஐரோப்பா பயணம் நிமித்தம்  கொரானா வைரஸ் positive ஆகி, இப்போது தன்னைத் தனிமைப்படுத்தியிருப்பதாகவும் தனது இன்ஸ்டாவில் சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மையில் இந்த நூலை வாசிக்கும்போது இது ஒருவகையில் புத்தர் கூறிய வீடு அடைதலையே நமது மனித மனங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன என்ற மறைபொருள் நமக்கு விளங்குகின்றது. சிலர் பயணத்தின் மூலம் Alchemist மாதிரி, அதைக் கண்டடைந்து கொள்கின்றனர்.  வேறு பலரோ பயணங்கள் செய்யாமலே தம்மைக் கண்டுகொள்கின்றனர். அவரவர் அவரவர்க்கான பாதைகளில் தமக்க்கான நிம்மதியைக் கண்டுபிடிக்கவேண்டியதுதான். ஆனால் ஒருவர் இவ்வாறான பயணங்களின் மூலந்தான் தன்னைக் கண்டுபிடிக்கப்போகின்றார் என்றால், அவரைச் சோர்வாக்காமல், உற்சாகத்துடன் அனுப்பிவிடுவதை வேண்டுமானால் நாம் செய்யலாம்.

இவ்வாறாக பத்துவருடத்தில் தான் பெற்ற எல்லாவகை அனுபவங்களையும் மத்தியூ கூறியிருந்தாலும், நூலில் முடிவில் அனைவரையும் பயணம் செய்ய உற்சாகப்படுத்துகின்றார். உல்லாசப் பயணியாகப் போகாமல், உள்ளூர் மக்களுடன் கலந்து பழகும் சாதாரணமான பயணியாகப் போகச் சொல்கின்றார். எப்படிப் பயணங்களைச் செய்யலாம் என்று பின்னிணைப்பாக நான்கைந்து பக்கங்களுக்கு அவசியமான குறிப்புக்களைத் தருகின்றார்.

நாம் பயணித்துப் பார்க்காதவரை எந்தப் பயணநூலும் பிரயோசனம் தரப்போவதில்லை, தனது நூல் உட்பட என்று சொல்லும் மத்தியூ, இந்த ஐந்து பக்கங்களைக் கிழித்து எடுத்துக்கொண்டு நம்மைப் பயணிக்கச் சொல்லி  புன்னகையுடன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கின்றார்.

Ten Years a Nomad: A Traveler's Journey Home
Matthew Kepnes
..................
(Mar, 2020)

எனதில்லாத எனது ஊர் - ‍ யாழ்ப்பாணம்

Saturday, April 18, 2020

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகும்போது காலை ரெயினை எடுத்திருந்தேன். நேரத்தை சிக்கனமாகப் பாவிக்கவேண்டுமாயின் இரவு பஸ்ஸெடுக்கலாம். ஆனால் இலங்கைக்கு எப்போதாவது செல்லும் எனக்கு பயணக்காட்சிகளைத் தவறவிடுவதில் விருப்பமில்லை என்பதால் சற்று நீண்டதாயினும் ரெயினைத் தேர்ந்தெடுத்தேன். கொழும்பின் நெரிசல்களைக் கொஞ்சம் தாண்டிவிட்டால் அது ஒரு அழகான காட்சியாக விரியத்தொடங்கும். சூரியன் இன்னும் உதிக்காக விடிகாலையில் பனிப்புகார் மூடிய பசும் வெளிகளுக்குள்ளால் இரெயின் ஊடறுத்துப் பாயும்போது நாமும் புத்துணர்ச்சி அடைவோம். என்ன வளம் இந்த நாட்டில் இல்லை என்கின்றமாதிரியாக சிறுகுளங்களையும், பெருமரங்களையும்,விவசாய நிலங்களையும், மகிழ்ச்சியான கிராமத்து மனிதர்களையும் கண்டடைந்து கொள்வோம்.

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராமத்தைப் பூர்வீகமாய்க் கொண்டவன் என்றாலும், இப்போது நான் யாழுக்கு அந்நியன். இங்கிருந்த 15 வருடங்களில் பெரும்பாலும் போரின் நிமித்தம் வெவ்வேறு கிராமங்களுக்கு அலைந்து திரிந்ததால், எந்த ஊரும் முழுதாய்த் தெரிந்ததுமில்லை. அன்றைய காலத்தைப்போல இப்போதும் யாழ் நகரம் எங்கேனும் தொலைந்துவிடுவேனோ என‌ அச்சுறுத்துவே செய்கிறது.

யாழ் சென்ற அடுத்தநாள் நண்பரொருவர் காலை உணவுக்காய் ரொலக்ஸிற்கு அழைத்துச் சென்றார். அநேகர் விரும்பும் உணவான இடியப்பம் எனக்குரியதல்ல, புட்டை வாங்கி கோழிக்கறியோடும், முட்டைப்பொரியலோடும் ஒருகை பார்த்தேன். நண்பனுக்கு வேறு வேலை இருந்ததால் என்னை யாழ் நூலகத்தில் கொண்டுபோய் அவரின் மோட்டார்சைக்கிளில் இறக்கிவிடச்சொன்னேன். நூலகத்தில் இரவல் வாங்கும் பகுதிக்குப் போய் இருக்கும் நூல்களை மேய்ந்துகொண்டிருந்தேன். குமார் மூர்த்தியின் கதைகள் 2008 அளவில் நூலகத்துக்கு வந்திருக்கின்றது. 2020 வரும்வரை மூன்றே மூன்றுபேர்தான் எடுத்திருந்தார்கள். புலம்பெயர் இலக்கியத்தின் முக்கியமான ஒருவரையே மூன்றுபேர்தான் வாசித்திருக்கின்றார்கள். யாழ்ப்பாணமும் யாழ்ப்பாணிகளும் நம்மைபோல‌ இன்னும் மாறாமல் அன்றையகாலம் போலவே இருக்கின்றார்கள் என்பதில் கொஞ்சம் நிம்மதி வந்தது.

முகநூலில் பொங்கும் போராளிகள் போலத்தான் இலக்கிய உலகும் யாழில் இருக்கின்றதென்று 'மகிழ்ந்து' கொண்டு சஞ்சிகைகள் வாசிக்கும் மறுபக்கத்துக்கு நகர்ந்தேன். அந்தப் பகுதியில் இருந்து கொண்டு யன்னலுக்குள் விரியும் காட்சிகளைப் பார்ப்பது இதமாக இருந்தது. கண்ணைத் திருப்பியபக்கம் எல்லாம் மரங்களும், யாழ் நகரத்தின் நெரிசல்/சத்தம் தவிர்த்து ஏதோ தூரத்தில் தள்ளிவைத்தாற்போல அவ்வளவு அமைதியாகவும் இருந்தது பிடித்திருந்தது.

ன்றைய காலங்களில் ஊருக்கொன்றாய் அலைந்தபோதும், நூலகத்திற்குப் போகும் ஆசையை விட்டதில்லை. தொடக்கத்தில் தெல்லிப்பழை நூலகம், பிறகு அது இடம்பெயர்ந்து அளவெட்டி மகாஜனசபைக்கு அருகில் இயங்கியபோது அங்கும் தேடிச் சென்றிருக்கின்றேன். பின்னர் இடம்பெயர்ந்து வரியப்புலப் பகுதியில் இருந்தபோது சுன்னாகம் பொதுநூலகம் என்னை வாசிப்பில் உந்தித்தள்ளியதில் பெரும் பங்காற்றியிருக்கிறது. அதுதான் வாண்டுமாமாவிலிருந்து, கே.டானியல் வரை, எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இன்று அவ்வாறான இடம்பெயர்வுகள், போர்ச் சூழல் இல்லாதபோதும் ஏன் ஒரு புதிய தலைமுறை வாசிப்பின் பக்கம் அவ்வளவு தீவிரமாய் வரவில்லை என யோசிப்பது சுவாரசியமாக இருக்கும்.

ஒருகாலத்தில் நூல்கள் பரவலாகக் கிடைப்பதில்லை, விலைகொடுத்து வாங்குவது கஷ்டம் என்பது காரணமாகச் சொல்லப்பட்டாலும், இன்று அநேகமாய் எல்லாப் புத்தகங்களுமே பிடிஎப்வ் வடிவில் பரவலாகப் பகிரப்பட்டும் வருகின்றது. இலவசமாகக் கிடைக்கும் இவற்றை வாசித்து எண்ணிக்கை கூடியதாகத் தெரியவில்லை.

இப்படியாக யாழ் நூலகத்தின் யன்னலுக்குள்ளால் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தபோது (வடகோவை) வரத்ராஜன், யாழ் முற்றவெளியில் நிற்கின்றேன், அங்கே வா என்று அழைத்தார். இடையில் நடந்துபோகும் வழியில் கன்ரீனில் பெண்கள் சிலர் கலகலவென்று சிரித்தபடி இருக்க, இதற்காகவே தண்ணீர்த்தாகம் வந்ததுபோல,  அங்கேபோய் ஒரு தண்ணீர்ப்போத்தலை வாங்கி ஆறுதலாக 'இரசித்து' குடித்துவிட்டு முற்றவெளி நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

வடகோவையாரை முதன்முதலாக நேரில் சந்திக்கின்றேன் என்றாலும், அது ஒரு பெரிதான விடயமாக எமக்குத் தெரியவில்லை. பின்னர் அலெக்ஸ் பரந்தாமனும், சி.ரமேஷும் இணைந்துகொள்ள, கண்காட்சிக்கென அமைத்திருந்த‌ லிங்கன்பாரில் போய் கதைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் நிம்மதியாக நம்மைப் பேசவிடாது, அங்கே கட்டிவைத்திருந்த ஒலிபெருக்கியில் மூச்சுவிடாத ஒரு பெண்ணும், ஆணும் மாறி மாறி அலறிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கிடந்த விறகுக்கட்டையால் அவர்களுக்கு ஒன்று போட்டால் என்ன என்று தோன்றியது. பின்னர்தான் இது ஒரு வியாபாரக் கண்காட்சி, அங்கே கூவிக்கூவி விற்காமல் வேறெதைச் செய்வார்கள் என ஆறுதற்படுத்திக்கொண்டு நாமெல்லோரும் வெளியில் வர சத்தியனும் இணைந்துகொண்டார்.

விடுதியில் தங்கிநின்ற என்னை, வடகோவையார் தன்னோடு ஏழாலையில் வந்து தங்கேன் எனக் கேட்டார். நண்பரொவனும் தன் வீட்டில் தங்க ஏற்பாடு செய்ததால், நண்பனுக்கு அழைத்துச் சொல்லிவிட்டு, வடகோவையாரில் மோட்டார் இரதத்தில் ஏறிக்கொண்டேன். ஏழாலையில் அவரின் வீடு, நான் யாழை விட்டு என் பதின்மத்தில் நீங்கும்போது எப்படி இருந்ததோ அப்படி அது இருந்தது. சாறம் கட்டும் வழக்கமில்லாததால், வடகோவையாரிடம் சாறமொன்றை கடன்வாங்கி, ஆசைதீர கிணற்றடியில் நின்று அள்ளிக்குளித்தேன்.

டகோவையாரின் கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாசித்திருக்கின்றேனே தவிர அவரின் தொகுப்பு என் கைக்குக் கிடைத்ததில்லை என்பதால் எனக்கு ஒரு பிரதி அன்பளிப்பாய்த் தந்தார். இளமையில் எழுதத் தொடங்கிவிட்டு, குடும்பம்/வேலை நிமித்தம் 30 ஆண்டுகளாக எழுதாமல் இருந்தவர்/இருப்பவர். என்னோடும், ரமேஷோடும், அவரும் இணையாக எல்லா விடயங்களையும் கதைக்க, 'நீங்கள் ஒரு இலக்கிய மார்க்கண்டேயர்'தான் என நான் அன்பு பாராட்ட அவருக்கு மகிழ்ச்சி. அன்றிரவு ஒரு தோழியின் வீட்டில் எனக்கு இரவுணவு ஏற்பாடாக இருந்தது. அங்கே அழைத்துச் சென்று என்னை இறக்கிவிட்டிருந்தார், ஆனால் இடையில் மது விற்கும் கடையைக் கண்டபோதுமட்டும் விசர் நாய் கடிக்க வருவதுபோல‌, விரைவாக ஏன் மோட்டார இரதத்தை விரட்டினார் என்பது மட்டும் விளங்கவேயில்லை.

இரவு 9 மணியிலிருந்து ரமேஷ், நான், அவரென இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். ரமேஷ் ஆழமாய் வாசிக்கும் ஒருவர், எனவே தீவிரமாக இலக்கியம் குறித்து கருத்துக்களை வைத்திருப்பவர்.  இரண்டு இலக்கியவாதிகள் கதைக்க நான் வடகோவையாரின் செல்லப்பிராணிகளான நாச்சியாரோடும், சிங்காரியோடும், எனக்காய் புதிதாய்க் கொண்டு வந்திறக்கிய 'லயனோடும்' சேர்ந்து நான் இவர்களை வாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் வயல்வெளியில் விரிந்திருந்த அவரது பிள்ளையார் கோயிலைக் கூட்டிக்கொண்டு போய் காட்டியிருந்தார். அங்கே அவரின் பிள்ளைகளின் படிப்புச் சாதனைகளின் நினைவுக்காய் வைத்த‌ மரங்களையும் காட்டினார். தொலைவில் நாச்சிமார் கோயில் இருக்கின்றதென இன்னொரு கோயிலைக் காட்டினார். இந்தக் கேணியடியில் மஞ்சள் தோய்த்துக் குளிக்கும் குமரிகள் இப்போதும் வருகின்றார்களா எனவும் கேட்டேன்/ அல்லது கேட்க மறந்தேன்.

பின்னர் ஆறுதலாக அவரின் 'நிலவு குளிர்ச்சியாக இல்லை' தொகுப்பில் இருந்த கதைகளை வாசித்தபோது இந்த இடங்களை எவ்வளவு அற்புதமாக எழுத்தில் கொண்டுவந்திருக்கின்றார் என்பது விளங்கியது. இந்தத் தொகுப்பில் இருப்பவை எல்லாம் 80களில் எழுதப்பட்டவை. தொகுப்பைக் கூட அந்தக் காலத்து எளிய நடையில் எழுதப்பட்டிருக்குமென கொஞ்சம் 'அசட்டை'யாக வாசிக்கத் தொடங்கிய என்னை, அவரின் ஒவ்வொரு கதைகளும் (அரைவாசிதான் இதுவரை வாசித்துமுடித்தேன்) உள்ளிழுத்துக்கொண்டன‌. வடகோவையாருக்கு இயல்பாகவே மரங்களின் மீதும், விலங்குகளின் மீதும், பறவைகளின் மீதும் இருக்கும் மோகத்தை அவரின் கதைகளில் எளிதாகக் கண்டுகொள்ளலாம்.

ன்றைய நவீன/பின்நவீனத்துவ‌ கதைசொல்லிகளான நாங்கள் இயற்கையை விட்டு எவ்வளவு தொலைவுக்கு வந்து கதைகளைச் சொல்கின்றோம் என்பதைப் பார்க்க இந்தக் கதைகள் நல்ல உதாரணங்களாக இருக்கின்றன. அரபு பாலைவனத்தில் பிழைப்புக்காய் சென்ற கதைசொல்லி, பேச எதுவுமற்ற நிலையில் பிள்ளையார் எறும்புகளை யாழ்ப்பாணத்தைப் போல அங்கும் கண்டும் அதனோடு நெருக்கம் கொண்டு தன் நிலம்பெயர்ந்த துயர் ஆற்றும் நுட்பமான  கதைகளை எழுதியிருக்கின்றார். 'மழைப் பஞ்சாங்கமும்', 'நேர்முக வர்ணனை'யும், 'மொழிபெயர்ப்பு'ம் இன்றும் தன் உயிர்ப்பை விடாது புதிய வாசகருடன் உரையாடத் தயாராகவே இருக்கின்றது. 80களிலேயே ஆதிக்கச் சாதிகளின் சாதித்தடிப்பை சுட்டிக்காட்டவும், நக்கலடிக்கவும் தயங்காத ஒரு படைப்பாளியைக் கண்டுகொள்வது மகிழ்ச்சியாக இருந்தது.

எவரெவரோ எதையெதையோ எழுதி எங்களைச் சோர்வடையச் செய்கையில், இந்த மனுசன் 30 வருடங்கள் உறங்குநிலைக்குப் போயிருக்கத்தேவையில்லை என்றே எனக்குத் தோன்றியது. ஆனால் ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டதுபோல ஈழ இலக்கியத்துக்கு என்று ஒரு தனித்துவம் இருக்கின்றது. நம்மவர்களில் பலர் தொடர்ச்சியாக அதிகம் எழுதாவிட்டாலும், அவர்களை ஒன்றிரண்டு தொகுப்புக்களோடு என்றாலும் என்றைக்கு நினைவுகூரும் வழக்கம் நம்மிடையே இருக்கிறது என்று. அந்தவகையில் வடகோவையாரின் கதை சொல்லும் பாணி எனக்கு அப்படிப் பிடித்திருந்தது. குமார் மூர்த்தியையே அவ்வளவு வாசிக்காத யாழ் சமூகம், வடகோவையாரை எவ்வளவு வாசித்திருக்குமெனத் தெரியாவிட்டாலும், புதிய தலைமுறை இவரை வாசிப்பதன் மூலம் தமது கதைசொல்லலின் பலவீனங்களைக் களைந்துகொள்ள முயலலாம்.

அடுத்தநாள் காலையில் நிகழ்ந்த 'நினைவில் உதிரும் வர்ணங்கள்' அறிமுக நிகழ்வுக்கு ஏழாலையிலிருந்து நல்லூருக்குப் புறப்பட்டோம். செல்லும் வழியில் சட்டநாதனைச் சந்திப்போமா எனக் கேட்டார். நிகழ்வுக்கு இன்னும் அரைமணித்தியாலம் இருக்கும்போது இப்போது சாத்தியப்படாது அடுத்தமுறை சந்திக்கலாமென வந்துவிட்டேன். நிகழ்வு முடிந்து இரவில் திரும்ப கொழும்புக்கு பஸ் பயணம் இருந்தது. இடையில் கொஞ்ச மணித்தியாலங்கள் இருக்கையில் இளைப்பாறுவதை விடுத்து நண்பன் சங்கரோடு 'சைக்கோ' பார்ப்போமெனப் புறப்ப்பட்டேன். சைக்கோ காட்சி நாம் சென்ற நேரம் இருக்கவில்லை. வீட்டிற்குப் போனாலும் அங்கே தூங்கத்தானே போகின்றேன், வாருங்கள் 'தர்பார்' பார்ப்போமெனப் போய் படத்தின் இடைவெளியில் முன்னுக்கும் பின்னுமென நிம்மதியாக நித்திரை கொண்டேன்.

கொழும்பிற்கு பஸ்ஸில் போகும்போது, ஆமிக்காரர் கிளிநொச்சியில் வைத்து இறக்கி பயணப்பொதிகளைப் பரிசோதித்து இலங்கை, தமிழர்களாகிய‌ எமக்குரிய நாடில்லை என்பதை மீண்டும் நினைவுபடுத்தினார்கள். ஒவ்வொரு முறையும் யாழ் போகும்போது கொஞ்ச நேரமாவது சிதைவடைந்துகிடக்கும் எமது வீட்டைப் பார்க்கப் போவேன். இந்தமுறை அங்கும் போகாது யாழ்ப்பாணத்துக்கு முற்றாக ஓர் அந்நியனானேன்.

...................................................

(Feb 07, 2020)

தமிழ்ச்சூழலில் எழுதுதல்..

Tuesday, April 14, 2020


ன்று புதிதாக எழுத வரும் பலருக்கு,  தமது படைப்புக்கள் பரவலாக வாசிக்கப்படவில்லை என்கின்ற கவலையும் சலிப்பும் இருக்கின்றது. ஒருவகையில் சமூக ஊடகங்கள் வந்ததன் பிறகு, எழுதப்படும் எல்லாமே உடனே கவனிக்கப்படவேண்டும் என்கின்ற பதற்றம் வருவதும் இயல்பானது. ஆனால் எழுத்துக்கு நேரடியான கருத்தைச் சொல்லும் வாசகர்களை விட, வாசித்துவிட்டு அதைப் பகிராமல் இருக்கும் மெளனமான வாசகர்களே அதிகம்.

சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் கவலையுடன் எவரும் தனது படைப்பைக் கவனிக்கவில்லை எனக் கூறினார். எந்தப் படைப்பிற்கும், அது எழுதப்படுவதற்கு எடுக்கும் காலத்தைப்போல், வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு கால அவகாசம் தேவைப்படும். இணையத்தில் தமிழைப் படித்து அதன் தொடர்ச்சியை வைத்திருப்பதைப் போல, எனது எழுத்துக்களும் இணையத்திலே அதிகம் எழுதப்பட்டவை. ஆகவே, படைப்புக்கள் வாசிப்பதன்/வாசிக்காமல் இருப்பதன் 'தாற்பர்யம்' கொஞ்சம் விளங்கும். எனக்கு முன் தலைமுறை எழுதுவதெல்லாம் பிரசுரமாவதற்கும், அதைவிட அதற்கான எதிர்வினைகளைப் பார்ப்பதற்கும் மாதங்கள்/வருடங்கள் காத்திருந்திருக்கின்றனர்.  அவர்களின் முதல் தொகுப்புக்கள் வரவே தசாப்தங்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது.இன்னும் பலர் தமது படைப்புக்களுக்கான வரவேற்பையே அறியாமலே காலமாகியும் இருக்கின்றனர்.
எனவே இந்தத் தலைமுறை படைப்பாளிகள் தமக்கிருக்கும் privilegesஐ விளங்கிக்கொண்டாலே, படைப்புக்கள் கவனிக்கப்படவில்லை என்ற சலிப்பை எளிதாய்க் கடந்துவரமுடியும். மேலும் வாழ்க்கையில் நமக்குப் பல விடயங்களில் எழுச்சிகளும், வீழ்ச்சிகளும் இருப்பதைப் போல, எழுத்துக்கும் இருக்கும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளலாம்.

படைப்பை அனுப்பிய நண்பருக்கு, அதை வாசித்துவிட்டு, மொழியின் தர்க்கம், நேர்த்தி என்பவை முக்கியம், அது உங்களுக்கு இயல்பாய் வருகிறது என்றாலும் அதற்கும் ஓர் எல்லை இருக்கின்றது என்று அவரின் படைப்பை வாசித்துவிட்டுச் சொன்னேன். மேலும் ஒரு தொகுப்பை அச்சில் வெளியிட்டபின், நாம் அதிலிருந்து விலகிவந்து இன்னொரு புதிய நடையின் மொழியின் ஆழங்களுக்குச் செல்ல முயற்சிக்கலாம் என்றும் கூறினேன்.

மொழியின் தர்க்கமே மட்டுமே படைப்பைத் தீர்மானிக்கும் என்றால், இப்போது அவரது வாசகர்களால் பல்வேறு வாசிப்புக்களைச் செய்யப்படும் ஜெயமோகனின் 'யா தேவி' என்ற கதையை தொடக்கத்திலேயே நிராகரித்துவிடலாம். அதாவது கேரளாவில் சிகிச்சை பெற வரும் மேற்கத்தைய பெண், தனக்குரிய வைத்தியர் யாரென்று முதலில் தெரியாது சிகிச்சைக்குள்ளே போகமாட்டார் எனச் சொல்லி கதையைத் தொடக்கத்திலேயே வாசிப்பதை நிறுத்திவிடலாம். அது நோயாளிக்கான உரிமை மட்டுமில்லை, அப்படி அனுமதி கேட்காதுவிடின்  மருத்துவருக்கே அவரின் பணி சிக்கலாகிவிடும்.

இரண்டு வருடங்களின் முன் ஓர் ஆயுர்வேத நிலையத்தில் இரண்டு வாரங்கள் கேரளாவில் நின்றபோது, அப்படி அனுமதி கேட்டு கையெழுத்தும் வாங்கிய ஆண் வைத்தியர் பிறகு, அங்கே நிற்கும் பெண்களுக்கு சிகிச்சை கொடுத்தபோது இன்னொரு பெண் தாதியையும் ஒவ்வொரு அறைக்குள்ளும் கூட்டியே செல்வதைக் கண்டிருக்கின்றேன். ஆகவே தர்க்கம் பார்த்தால் ஜெயமோகனின் இந்தக் கதை, நிகழ்ந்தே இருப்பதற்கான சந்தர்ப்பமே இல்லை. ஆனால் நாம் புனைவுக்குரிய சுதந்திரமாக அந்தத் தர்க்கத்தைக் கடந்துதான் கதைக்குள் போகமுடியும். இல்லாவிட்டால் வெளித்தள்ளிவிடும். அப்படித்தான் நண்பருக்கும் தனியே மொழியின் தர்க்கத்திற்குள்ளும், எழுதும் நடையை  திருத்தமாக எழுதிவிடுவதாலும் மட்டும் ஒரு படைப்பு சிறந்ததாகிவிடாது. அதைக் கவனியுங்கள் என்றேன்.

ழுதும் நம் எல்லோருக்கும், நாம் எழுதுபவை நம்மையறியாமலே நம்மை எழுத்தில் முன்னகர்த்திக் கொண்டிருக்கும் சில புள்ளிகள் தெரியும். அதை எழுத்தின் 'ஆன்மா' என்று ஒரு பெயரிடலுக்காய்ச் சொல்லிக் கொள்ளலாம். அந்த 'ஆன்மா'வை வாசகர்கள் எளிதில் வாசிக்கும்போது கண்டுபிடித்துவிடுவார்கள். அது இல்லாதபோது வாசிப்பவர்க்கு அலுப்பைக் கொண்டுவந்துவிடும். இப்படி எழுத்தில் தர்க்கங்களையும், நேர்த்தியையும் கொண்டுவர சிரத்தையாக முயற்சித்தவர் சுந்தர ராமசாமி. ஆனால் அதையே தொடர்ச்சியாக அவர் முன்வைத்தபோது அவரின் பிற்கால ஆக்கங்கள் பலரை ஈர்க்கமுடியாது போய்விட்டது. அதற்கு இன்னொருமுனையில் வைத்துப் பார்ப்பதற்கு ஜெயமோகனின் 'மாடன் மோட்சத்தை' முன் வைக்கலாம். அது ஒரு கதையாக தர்க்கமேயில்லாதது, எல்லாவிதமான வட்டாரமொழிகளையும் இதில் புகுத்தி குழப்பிக்கொண்டது என்று விமலாதித்த மாமல்லன் போன்றவர்கள் நீண்ட கட்டுரையாக எழுதி அதைக் குலைக்கமுயன்றாலும், அது ஒரு சிறந்த படைப்பாக தன்னை இப்போதும் முன்னிறுத்திக் கொண்டே இருக்கின்றது.  இந்த வித்தியாசங்கள் ஒரு நுட்பமான வாசகருக்கு இன்னும் நன்கு விளங்கும். ஆகவேதான் ஒவ்வொரு படைப்பாளியும் நல்லதொரு வாசகராக தான் எழுதும்போது இருக்கவேண்டும்.

புதிதாக எழுத வருபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய ஒரு விடயம், தம்மை இயன்றளவு குழு அமைப்புக்களில் இருந்து வெளியே தக்கவைத்துக்கொள்வது. ஒருவர் செயற்பாட்டாளராக இருந்தால் குழுக்களில் இருப்பதும், குழுக்களுள் செயற்படுவதிலும் சிக்கல் இல்லை. ஆனால் எழுதுவதற்கு, ஒரு குழுவிற்குள் இருப்பது பெரிதாக நன்மை பயக்கப்போவதில்லை. அண்மையில் இவ்வாறு குழுக்களில் இருந்தவர்கள் சலிப்புடனும், வெறுப்புடனும் வந்ததை அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கின்றேன். அது ஒருவகையில் அவர்கள் தொடர்ந்து எழுதுவதைப் பாதித்ததையும் கண்டிருக்கின்றேன்.

உண்மையில் குழு மனப்பான்மையானது, நமக்குள் இருப்பவர்களைப் பாராட்டிக்கொண்டிருக்குமே தவிர, உருப்படியாக நாம் முன்னகர்வதற்குரிய விமர்சனங்களைச் செய்யாது. இன்னொன்று இவ்வாறான குழுக்கள் தங்களைத் தாண்டி வேறு எவரும் எழுதுவதில்லை என்ற மனப்பான்மையுடன் எள்ளல் செய்தபடி இருக்கும். அது ஒருவகையில் சுயமோகமாக, அவர்களை எழுதச்செய்யாமலே செய்துவிடவும் கூடும். குழுக்களில் இயங்கும் சிலர் வெளியே வந்தோ, அதற்குள் இருக்கும்போது அங்கு நடந்ததை/நடப்பதைப் பகிரும்போதோ கொஞ்சம் பரிதாபம் வரும். ஆனால் என்ன செய்வது, இதையும் கடந்துவரத்தான் வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.

எழுதுபவர்கள் பலர் எழுதவரும்போது தம்மை நிறைய வாசிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு வந்து அலுத்து சலித்து விலகிச் செல்வதையும் நாம் பார்க்கலாம். தமிழ்ச்சூழலில் உண்மை நிலவரம் அறிந்தால் இப்படியெல்லாம் மனோரதியமாக இருக்கத் தேவையேயில்லை என்பதை எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும். தமிழில் நிறைய வாசிக்கப்படும் ஒரு எழுத்தாளரான ஷோபாசக்தியே சென்னையில் நாம் இருந்து பேசிக்கொண்டிருக்கும்போது, 'நான் எனக்காக இருக்கும் நூறு வாசகர்களுக்காய்த்தான் எழுதுகின்றேன்' என்று ஏதோ ஒரு பேச்சின் நடுவில் சொன்னார். இதை நாம் literalயாய் எல்லாம் எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. ஷோபாவை பல நூற்றுக்கணக்கானவர்கள் வாசிப்பார்கள், ஆனால்  ஒரு நூறு பேருக்காய் மட்டுமே நான் எழுதுகின்றேன் என்ற தெளிவு இருந்தால், பலவித சலிப்புக்களைத்தாண்டி நாம் எழுத்தில் அதிக கவனம் கொள்ளமுடியும் என்பதைக் குறிப்பிட விழைகிறேன்.

மேலும், நாம் எழுதும் ஒரு படைப்பு எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என எதிர்பார்த்து மூர்க்கமாய் எல்லா இடங்களிலும் போராடிக்கொண்டிருக்கக் கூடாது. உதாரணத்துக்கு மனுஷ்யபுத்திரன் 'பாய் பெஸ்டி' கவிதையை எழுதியவுடன் அதில் நடந்த விவாதம் அனைத்திலிருந்தும் அவர் விலகி இருந்திருக்கலாம். ஜெயமோகன் தன் கருத்தை இந்தக் கவிதைப் பற்றிச் சொன்னவுடன், உணர்ச்சிவசப்பட்டு மறுமொழி எழுதி மனுஷ்யபுத்திரன் இருக்கத் தேவையில்லை. ஜெயமோகன்தான் தமிழ் இலக்கியத்தின் அளவுகோலை வைத்திருக்கின்றார் என்று நினைத்திருந்தால்தான் இப்படி கோபப்படவேண்டி வந்திருக்கும். ஜெமோவின் கருத்தைத்தாண்டி இந்தக் கவிதை தன்னை நிலைநிறுத்தும் என்ற தெளிவு இருந்திருந்தால், கவனமாக இதிலிருந்து நகர்ந்திருக்கலாம்.

படைப்பை எழுதியவுடன் அது நமக்குரியதல்ல வாசகரின் வாசிப்புக்குரியது என நகர்ந்திருந்தால் இவ்வளவு சிக்கல் மனுஷ்யபுத்திரனுக்கு வந்திருக்காது. அதற்காய் உரிய விமர்சனங்களைச் செவிமடுக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. ஒரு படைப்பாளிக்கு தான் எடுத்துக்கொள்வதற்கு ஒரு விமர்சனத்தில் ஏதாவது இருக்கின்றதா அல்லது காழ்ப்புணர்வில் எழுதப்பட்டிருக்கின்றதா என்று பார்க்கின்ற தெளிவு எளிதிலேயே வந்துவிடும்.

ஆகவே, எழுதும் படைப்பு கவனிக்கப்படவில்லை என்று சலிக்கத் தேவையில்லை. ஒரு நல்ல படைப்பு கவனிக்கப்படுவதை விட மோசமான படைப்பை விமர்சிக்கவே நமது தமிழ்ச்சமூகம் அதிகம் பழக்கப்பட்டும் இருக்கிறது. அண்மையில் இலங்கையில் நின்றபோது நண்பரொருவர் நான் எழுதிய ஒரு நல்ல கதைக்கு  பத்துப்பேர்தான் விருப்பக்குறி இட்டிருக்கின்றனர் என்று சொல்லி சிலரிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அதேவேளை இயக்கம் சார்ந்து  விமர்சித்து எழுதப்பட்ட கதையை, அனுப்பச் சொல்லி கேட்டு வாசித்து, ஓரிரு வாரங்கள் முகநூலில் பலர் திட்டியும் கொண்டிருந்தார்கள்.

15 வருடங்களுக்கு மேலாக இணையத்தில் இயங்கும் எனக்கு இந்த தமிழ்வாசக 'அல்கோரிதம்' விளங்கும். ஆகவே நான் அதிகம் அலட்டிக்கொள்ளாது, அந்தப் பத்துப் பேரே போதும் என்றேன். ஆனால் என்னை ஆச்சரியப்படுத்தும் விடயம் என்னவென்றால், சிலவேளைகளில் நான் பயணிக்கும்போது, நான் அறியாது சிலர் என்னை வாசித்திருப்பதாய்ச் சொல்வது. கடந்தமுறை ஐரோப்பாவில் திரிந்தபோது அப்படி ஓரிருவர் சொன்னபோது, இதுதான் எனக்கு எழுத்தால் வரும் சலிப்புக்களை உதறித்தள்ளுவதற்கு தரும் உந்துசக்தியென நினைத்துக் கொண்டேன். நமக்குத் தெரியாத சிலரை நம் எழுத்துக்கள் போய்ச் சேருகின்றது என்பதை உணரும் தருணம் அருமையானது. அவ்வாறே யாராவது சிலர் அவ்வப்போது என்னைக் கண்டுபிடித்து மின்னஞ்சல்களில் என் படைப்புக்களை வாசித்ததாய் அனுப்பும் சிறு கடிதங்களும்.

இறுதியாய் நாம் இன்னொருவருடன் பேசுவதை விட, நிறைய எழுதிப் பகிர்வதன் மூலம் எமது எழுத்தை இன்னும் செழுமைப்படுத்தலாம். நான் இலக்கியம் சார்ந்து தனிப்பட்டு நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும், பொதுவெளியில் பகிர்ந்த கருத்துக்களுந்தான் எனக்கு மேலும் மேலும் எழுதிச் செல்ல உந்தித் தள்ளியிருக்கின்றது. இப்படியான நண்பர்களோடு அதிகம் தொலைபேசியிலோ, இல்லை குழுக்களிலோ இருந்தோ பேசியது இல்லை. ஆனால் இந்த நண்பர்களே எனக்கு இலக்கியம் சார்ந்து உள்ளேயும்(தனிப்பட்டும்), வெளியேயும் நிறையக் கற்றுத் தந்திருக்கின்றார்கள். நாம் ஒரு விடயத்தை விரும்பிச் செய்கின்றோம் என்றால் அதற்கான வெகுமதிகள் நமக்கு காலம் கடந்தாயினும் கிடைத்தே தீரும். ஆகவே எழுதுவது முக்கியமே தவிர, நம்மைக் கவனிக்கவில்லை/பாராட்டவில்லை என்பது அவ்வளவு அவசியமற்றதே என்றே சொல்வேன்.

சில நாட்களுக்கு முன் ஓர் அருமையான ஓவியரைக் கண்டடைந்து, அவரை ஓவியங்கள் வரையும் இன்னொரு நண்பருக்கு அறிமுகப்படுத்தி இருந்தேன். அறிமுகப்படுத்தும்போது என்னால் ஓவியம் வரைய முடியாத கவலையைப் பகிர்ந்தபோது, அந்த ஓவிய நண்பர், இப்போதுதானே எல்லோரும் வரைகின்றார்கள்  நீங்களும் வரையத் தொடங்குங்கள் என்றார். அவர் உற்சாகப்படுத்தினாலும், எனக்கு அது சுட்டுப்போட்டாலும் வராது என்பது நன்கு தெரியும். ஆகவே எமக்கு எது வருதோ, எது பிடித்தமாகிறதோ அதைச் செய்யலாம். எல்லோரும் வரைகின்றார்கள் என நாம் கும்பலோடு கும்பலாக ஓடத்தேவையில்லை. எமக்கு எழுத்து ஒரளவு வருகின்றதென்றால், எழுதிப் பார்க்கவேண்டியது. அது முடியாதென்றால் விலகிவிடுவது நமது உளத்திற்கும், வாசிக்கும் மனதிற்கும் செய்யும் நன்மையாக இருக்கும்.

நமக்கே பிடிக்காத ஒன்றை, நாம் வெறுக்கும் ஒன்றை ஏன் மற்றவர்களின் மீது திணிக்கவேண்டும்?

..................................

~ஒவியங்கள்: சல்வடோர் டாலி
(Feb 23, 2020)

மெக்ஸிக்கோ - ஆருர் பாஸ்கர்

Monday, April 13, 2020

னித வாழ்வு என்பது பல உறவுகளின் சங்கமம். அந்த உறவுகள் தரும் அனுபவங்களின் வழியாகவே பெரும்பாலும் ஒருவன் இந்த உலகைப் புரிந்துகொள்கிறான். அந்த வகையில், காதலில் தொடர்ந்து தோல்விற்று துவண்டிருக்கும் ஒருவன் அழகிய இளம்பெண் ஒருத்தியின் ஊடாக தன் வாழ்வைப் புதிதாக நுகரும் அனுபவமே எழுத்தாளர் இளங்கோவின் (கனடா) 'மெக்ஸிகோ' நாவலாகி இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை நம் சமூகத்தில் ஆண்களுக்கு பெண்கள் குறித்தான தனியான பார்வை என்று ஒன்று இல்லை என்றே சொல்லாம். பொது புத்தியில் பெண்கள் குறித்தான ஒரு பார்வையே, ஒரு சராசரி ஆணின் பார்வையாக இருக்கிறது. அந்தப் பார்வையுடன், ஒரு பெண்ணை நெருங்கும் ஒருவன் அவள் குறித்து தான் அதுவரை உருவகப்படுத்தியிருந்த பிம்பம் உடையும் போது உண்மையில் பேரதிர்ச்சி கொள்கிறான். அந்த அதிர்ச்சி சிலருக்கு காதலிக்கையில் வருகிறது. சிலருக்கு, திருமணத்திற்கு பின் வருகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து ஒருவன் மீண்டு எவ்வாறு தன்னை வழி நடத்திக் கொள்கிறான் என்பதில்தான் ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருப்பதாக நினைக்கிறேன்.

அந்த வகையில், தனது உறவுகளை நிலையாக தக்கவைத்துக் கொள்ள இயலாத புலம் பெயர்ந்த ஒருவன் மெக்ஸிக இளம்பெண்ணின் காதலில் பெரிய திட்டமிடல் எதுவும் இல்லாமல் இயல்பாக விழுவதைக் கவித்துவமாக இளங்கோ சொல்லியிருக்கிறார்.

அதற்காக நான் இளம் இருளில் இருந்தேன். அந்த இளம் பெண்ணைப் பார்த்தவுடன் ஆயிரம் மின்னலைப் பார்த்தது போல் அதிர்ந்தேன் என்றெல்லாம் மிகைப்படுத்தி எழுதாமல் அன்பு மலர்வதை மிக இயல்பாக சொல்லியிருக்கிறார். "இந்த உலகில் அனைவராலும் கைவிடப்பட்டு இனி எதுவுமேயில்லை என்ற விரக்தியில் இருக்கும் ஒருவனுக்கு, ஒரேயொரு அணைப்புப் போதும். அது கொடுக்கும் கதகதப்பில் வாழ்வதற்க்கான நம்பிக்கை மீண்டும் துளிர்க்கும்". (பக்கம் -50) என்பதைக் கதையோடு வாசிக்கும் போது அந்த அனுபவதை நமக்குக் கடத்துவதில் மிகச் சிறந்த எழுத்தாளராக மிளிர்கிறார். அதுபோல, பல தருணங்கள். ஆசிரியருக்கு வாழ்த்துகள்!

ஆண்களும் பெண்களும் இரு வேறு உலகில் இருந்து வந்தவர்கள். அவர்களுடைய மதிப்பீடுகள் வேவ்வேறாக இருந்தாலும் இருவரும் இணைந்து வாழ்வது சாத்தியமே எனும் நம்பிக்கையை விதைக்கும் நூலாக இதைப் பார்க்கிறேன். நூலில், நாயகனின் மன இறுக்கத்தைச் சற்று குறைத்திருக்கலாமோ எனத் தோன்றும் தருணங்களை எல்லாம் "அவள்" தனது ஆளுமையால் இட்டு நிரப்புகின்றாள். அதுபோல, படைப்பில் பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் அழகிய உரையாடல்களால் அழுத்தம் பெறுகின்றன. தொடர்ந்து புலம் பெயர் இலக்கியங்கள் பல எழுதுங்கள் இளங்கோ !

காதலிப்பவர்கள் திருமணத்துக்கு பின் வரும் வாழ்வு குறித்த பெரிய அவதானிப்பு இல்லாமல் அந்தப் பந்தத்தில் நுழைவதும், திருமணபந்தத்தில் இருப்பவர்கள் அதற்கு முன்பான தனது வாழ்வு குறித்து மறந்து போவதுமே (அல்லது தேவையற்றதை நினைவில் வைத்திருப்பதும்) பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.
அந்த வகையில், எழுத்தாளர் இளங்கோவின் இந்தப் படைப்பு ஆண் பெண் உறவைத் தன் வழியில் மீட்டுருவாக்கம் செய்திருப்பதால் வாசிக்கவேண்டிய ஒரு படைப்பாகிறது.

#மெக்ஸிகோ
நூல் : மெக்ஸிக்கோ
(2019-ல் பிரபஞ்சன் நினைவுப் பரிசு பெற்ற நாவல்)
ஆசிரியர் : இளங்கோ
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
விலை : ₹ 200.00
............................

பன்னீர்ப்பூ குறிப்புகள்

Tuesday, April 07, 2020

Vanni - Graphic Novel

"வன்னி" என்னும் இந்த கிராபிக்ஸ் நாவல் கிட்டத்தட்ட 250 பக்கங்கள் வரை நீள்கின்றது. இதை எழுதிய பெஞ்சமின், 2004ல் சூனாமி இலங்கையைத் தாக்கிய சில நாட்களில், ஐ.நாவின் உதவி நிறுவனத்தினூடாக இலங்கைக்கு தொண்டாற்றப் போகின்றார். அது பிறகு ஐ.நாவின் உதவி நிறுவனங்களை இலங்கை அரசு வன்னிக்குள் இருந்து முற்றாக அகற்றும் மட்டும் (2008), கிட்டத்தட்ட 4 வருடங்கள் பெஞ்சமின் வன்னிக்குள் இருந்திருக்கின்றார்.

வன்னியிலிருந்த தமிழ் மக்களின் பிறந்தநாள்/திருமணவிழாக்கள்/செத்தவீடுகள் போன்ற அனைத்திற்கும் அழைத்து தன்னை அந்நியராக உணரச்செய்யாத வன்னி மக்களை அன்பை இந்தப் புத்தகத்தில் நன்றியுடன் பெஞ்சமின் நினைவுகூர்கின்றார். வன்னிக்குள் நின்ற இறுதிக்காலங்களில் இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சிலிருந்து தப்ப, பதுங்குகுழிக்குள் இருந்த நாட்களில் வாசித்த பாலஸ்தீனியம் பற்றியதும், யூதப் படுகொலை (Maus) பற்றியதுமான கிராபிக் நாவல்களே இதற்கு உந்துசக்தியெனச் சொல்கிறார்.

பெஞ்சமின் மீண்டும் நாடு திரும்பியபோது, போரை நேரடியாகப் பார்த்ததால் PTSD யினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். அவர் அப்படி பலவந்தமாக அனுப்பப்பட்டபோது ஒரு கட்டுரையை போர் நடந்த அன்றைய காலத்தில் அநாமதேயமாக எழுதியிருக்கின்றார். அதை 'இரண்டு இராணுவங்களுக்கு இடையில்' என்று நான் தமிழாக்கம் செய்திருக்கின்றேன்.

ழப் போரின் கொடூரத்தைப் பதிவு செய்யவேண்டுமென சிறு காமிக்ஸ் புத்தகமாக 40 பக்கங்கள் அளவில் செய்யப் புறப்பட்ட இந்தத் திட்டம், இப்போது கிட்டத்தட்ட 250 பக்கங்களில் கிராபிக்ஸ் நாவலாக விரிந்திருக்கின்றது. இதை முன்வைத்தே பெஞ்சமின் தனது மானிடவியலுக்கான PhDயையும் செய்திருக்கின்றார். இந்த நாவலுக்காய், வரைபடக் கலைஞரான லிண்ட்சேயுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்ப விரும்பியிருக்கின்றார். நாட்டின் நிலைமைகள் காரணமாக, 2012ல் இவர்கள் இருவரும் பின்னர் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கிருக்கும் அகதி மக்களோடும், பிறரோடும் கள ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர்.
மேலும் இங்கிலாந்திலும், சுவிஸிலும் போரில் தப்பிய ஈழத்தமிழர்களை இவர்கள் இது தொடர்பாய்ச் சந்திருக்கின்றனர்.

வன்னியில் இருந்த காலங்களில் தனக்கு நெருக்கமான நண்பரான அன்ரனியை இந்த நாவலின் முக்கிய பாத்திரமாக்கி பெஞ்சமின் எழுதுகின்றார்.. இந்த நூலை இறந்துபோன தனது நண்பர்களுக்கும், சக பணியாளர்களுக்கும், யுத்தத்தில் தப்பியவர்களுக்கும் சமர்ப்பித்திருக்கின்றார். இவர்களுக்கான அடிப்படை மனித உரிமைகளைக் கூட, இன்னும் அங்கீகரிக்காது தோல்வியுற்ற இந்த உலகத்துக்கும் சேர்த்து பெஞ்சமின் இதைக் காணிக்கை செய்திருக்கின்றார்.

Marriage Story

தகதப்பானவையாகவும் அழகானவையாகவும் இருப்பதனால்தான் மனிதர்கள் உறவுகளுக்குள் நுழைகின்றார்கள். விலகல் வரும்போது அவை உக்கிரமானவையாகவும், வெறுப்பிற்குரியவையாகவும் பலவேளைகளில் மாறிவிடுகின்றன. பிரிதல் நிகழ்தல் உறுதி என்கின்ற நிலையில் வருகின்ற நெகிழ்வான கணங்களை அதன் அந்தரங்கமான நினைவுகளோடு பதிவு செய்கிறது இந்தத் திரைப்படம்.

உறவொன்று நிலைத்து நிற்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் சமரசம் செய்வது என்பது முக்கிய நிபந்தனையாக இருக்கின்றது. யார் யாருக்காய்ச் சமரசம் செய்கின்றார்கள் என்பது காதலின் திளைப்பில் தெரியவில்லை. ஆனால் விலகல் வரும்போது அவை பட்டியலிடப்படுகின்றன. குற்றப் பத்திரிகை இடைவெளியில்லாது வாசிக்கப்படுகின்றன. அழகான அந்தரங்கமான தருணங்களினால் நிரம்பிய இருவர் பகிர்ந்த பொழுதுகளை, தனிப்பட்ட உறவுச்சிக்கல்களின் நிமித்தம் வக்கீல்கள் இன்னும் சிக்கலாக்கின்றனர்.

வெறுப்பு உமிழ்ந்து வார்த்தைகளைக் கொட்டியபின், முழந்தாளிட்டு அவள் கால்களை அணைத்து மன்னிப்பைக் கோருகின்றான் ஒருவன். இறுதியில் எல்லாமே கைநழுவிப் போனதன்பின், தூங்கிப்போன மகனைத் தோளில் தூக்கித் தனது வீட்டுக்குக் கொண்டுசெல்கையில் சற்றுப்பொறு என்று ஓடிவந்து அவன் காலணியின் கயிற்றைக் குனிந்து அக்கறையுடன் கட்டி அனுப்பிவைக்கின்றாள் அந்தப் பெண்.

இனி என்றென்றைக்குமாய்ச் சேர்ந்து வாழ்தல் இயலாதென்ற பேருண்மை விளங்கியபின்னும், நேசத்தின் துளிர்கள் பிரிதலின் மரத்திலிருந்து ஒவ்வொன்றாக அரும்பத் தொடங்குகின்றது. அதுவே ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டாது, அவர்களின் அழகான கடந்தகால காதலாகவும் மாறுகிறது.

Android Kunjappan Version 5.25

மது தமிழ்ச்சூழல் கோடிகளில் பணத்தைக் கொட்டி சிஜிஐ மூலம் எந்திரனும், 2.0 என்றும் முழுதாய் வேகாத கதைகளை அரைகுறையாய்த் தந்து கொண்டிருக்கும்போது, ரோபர்ட்டுகளோடு அதிகம் புழங்க இருக்கின்ற எதிர்காலத்தில் மனித உறவுகளும், உணர்வுகளும் அவற்றுடன் எப்படி இருக்குமென்று பரிட்சித்துப் பார்க்கும் படமாக 'ஆண்ட்ராய்டுஆண்ராய்ட்டு குஞ்சப்பன் V 5.25' இருக்கின்றது. தகப்பனுக்கும் மகனுக்குமான உறவு, மகன் தொலைவில் வேலை நிமித்தம் போகின்றபோது முதியவரைப் பராமரிக்கும் சிக்கல்கள், சாதி பார்க்கும் தகப்பன், சாதியாலே தன் இளமையில் காதலைத் துறக்கவேண்டிய துயரம், கேரளாவில் வலுவூன்றிய மார்க்ஸியத்தைக் காட்சிகளில் மறைக்காமல் முன்வைத்தல், அதன் மீதான விமர்சனம், சாதி பார்க்கும் தகப்பனையே இறுதியில் இன்னொரு நாட்டுப் பெண்ணை மகன் காதலியாக்குவதன் மூலம் சாதி/இன/நிற வேறுபாட்டைக் கடத்தல், கிராம மக்களின் அப்பாவித்தனம், திருட்டுத்தனம், விடுப்புப் பார்த்தல் என எல்லாவற்றையும் ரோபர்ட்டுடான உறவை முன்வைத்து இதில் பேசுகின்றனர்.

எந்திரன், 2.0, இடையில் சிஜிஐயில் பெரிதாகச் சாதித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நான் தியேட்டருக்குப் போய் 3Dயில் ரத்தக்கண்ணீர் வடித்துப் பார்த்த கோச்சடையான் எல்லாம் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது இடைவெட்டிப் போயிருந்தது. கும்பளாங்கி நைட்ஸ், உயரே, ஜல்லிக்கட்டு போன்றவற்றிற்கு நிகராக வைக்கக்கூடிய படம் இது இல்லை என்றாலும், எளிமையான கதையினூடும் நமது உணர்வுகளுக்கு நெருக்கமாய் நின்று பேசமுடியும் என்பதற்கும், அந்நியக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை எப்படி ஒரு சமூகம் தனக்குரிய நிலப்பரப்புக்குரியதாகவும், பண்பாட்டுக்குரியதாகவும் மாற்றிக்கொள்கின்றது.

அதை இங்கே நகைச்சுவையாகச் சொல்வார்கள், ரோபர்ட்டுக்கு முண்டு கட்டிவிடுவது, குஞ்சப்பன் என்று பெயர் வைப்பது, இதுவரை காலமும் சாத்திரம் பார்க்காத தகப்பன் குஞ்சப்பனுக்கு சாத்திரம் பார்க்கப் போவது, குஞ்சப்பன் இந்து அல்ல எனக் கோயிலுக்குள் அனுமதிக்கமுடியாதென்கின்றபோது குஞ்சப்பன் நிகழ்த்தும் கூத்துக்கள் என்பதைப் பார்ப்பதற்காகவேனும் இதைத் தவறவிடக்கூடாது. நடிப்பில் ஷோபின் ஷகீரைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை, ஆனால் அவரையும் தாண்டி தகப்பனின் பாத்திரத்தில் சுராஜ் அவ்வளவு தத்ரூபமாக நடித்திருப்பார். 'தொண்டிமுதலும் திரிக்‌ஷக்‌ஷியுமிலும்' பார்த்த சுராஜா இது என்று நமக்கு வியப்பு வரும்.
...................................................