கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label அம்ருதா. Show all posts
Showing posts with label அம்ருதா. Show all posts

செம்மணி

Saturday, November 01, 2025

  செம்மணிப் புதைகுழிகளில் உறங்க மறுக்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்

 

ண்மையில் கனடாவில் நடந்த தேவகாந்தனின் 'கனவுச்சிறை' ஆங்கில நூலின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அப்போது இதை தமிழிலிருந்து ஆங்கிலமாக்கிய நேத்ரா ரொட்ரிகோ, தனது ஓர் அனுபவத்தைச் சொன்னார். அவர் இளம்பெண்ணாக இருந்தபோது கொழும்பிலிருந்து பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு புத்தகங்களைப் படிக்கப் போவார். எப்போது அங்கே போனாலும் இராணுவத்தின் டிரக்கும் இராணுவத்தினரும் நின்றுகொண்டிருப்பார்கள் என்றார். ஒரு பெண்ணாக அதுவும் தமிழ் பெண்ணாக, சிங்கள இராணுவத்தின் மீது பயத்தோடும் பதற்றங்களோடும் அன்றைய இளம் நேத்ரா சென்று கொண்டிருந்ததை அவர் விபரித்திருந்தார். இராணுவத்தினர் ஒரு பெண் மீது செய்யும் சேட்டைகளையும் தாண்டிச் சென்ற அந்த நாட்களினது வடுக்களையும் மீண்டும் நினைவுபடுத்தினார் நேத்ரா. 


நான் நேத்ராவின் நனடைதோய்தலில், இன்னொரு காலத்தில், இன்னொரு நிலப்பரப்பில் இப்படி இராணுவக் காவலரணைத் யாழ்ப்பாணத்தில் செம்மணியில் தாண்டிக் கொண்டிருந்த  கிரிஷாந்தியை நினைத்துக் கொண்டேன். தனது பதின்வயதில் உயர்தர பரிட்சையான இரசாயனவியல் பாடத்தின் தேர்வை எழுதிவிட்டு  96ம் ஆண்டில் கிரிஷாந்தி செம்மணி காவலரணைத் தாண்டிக் கொண்டிருந்திருப்பார். அன்று பரிட்சையை மதியம் எழுதிமுடித்துவிட்டு, முதல் நாள் இறந்துவிட்ட தன் தோழியின் மரணவீட்டுக்குப் போய்விட்டு கிரிஷாந்தி  தனித்து அந்தத் தெருவால் வந்தபடி இருந்திருப்பார். அவரது பாடசாலைத் தோழி,  அதற்கு முதல்நாள் (இராணுவ வாகனத்தால்) அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். அந்தத் தோழியின் மரணமும் சந்தேகத்துக்குரிய வகையில் இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்டதாக ஓர் கதையிருக்கின்றது. 


கிரிஷாந்தியை, காவலரணில் இருந்த இராணுவ கோப்ரலான ராஜபக்சே மறித்து பதுங்குகுழிக்குள் அடைத்து வைக்கின்றார். தனது மகள் நேரத்துக்கு வராது பதறிய கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா, மகள் இராணுவத்தால்தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பதை அறிந்து, அவரது தனது இளைய மகனான பிரணவனுடனும், அயலவரான கிருபாமூர்த்தியுடனும் அந்தக் காவலரணுக்குச் செல்கின்றார்.


இராசம்மா இதற்கு 10 வருடங்களுக்கு முன் தனது கணவரைப் புற்றுநோயிற்கு இழந்தவர். தனியொருவராக தனது இரண்டு பெண் பிள்ளைகளையும், ஒரு ஆண் பிள்ளையும் வளர்த்து வந்தவர். கிரிசாந்திக்கு மூத்த சகோதரியான பிரஷாந்தியும், இளைய சகோதரனான பிரணவனும் இருந்தார்கள். இராசம்மா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் இலங்கையில் கல்விகற்று, 50களின் இறுதியில் இந்தியாவுக்கு சென்று பொருளாதாரத்தில் இளங்கலைமாணி பட்டத்தையும் பெற்று வந்து, ஒரு பாடசாலையில் உப அதிபராகப் பணிபுரிந்தவர்.


இராசம்மா, அவரின் இளைய மகன் பிரணவன், அயலவர் குமாரசாமி ஆகிய மூவரும் இராணுவத்திடம் கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். அவர்களோ அப்படியொருவரை தாங்கள் கைது செய்யவில்லை என்று மறுக்கின்றார்கள். அதை நம்பித் திரும்பிப் போகின்றவர்கள், இராசம்மாவின் பிடிவாதத்தால் மீண்டும் காவலரணுக்குத் திரும்பி கிரிஷாந்தி எங்கே என்று வினாவுகின்றனர். 


இப்போது இராசம்மா, தனது மகளை விடுதலை செய்யாதவரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றார். ஒரு தாயின் மனது, இந்த இரவை தன் மகள் இராணுவ முகாமிற்குள் கழித்து விட்டால் இனி என்றென்றைக்கும் மீள மாட்டாளென நம்பியிருக்கலாம்.
இராசம்மாவுக்கு சிங்களமும் நன்கு தெரியும். ஆகவே அவர் சிங்களத்தில் இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்.


எப்போது துப்பாக்கியோடும், அதிகாரத்தோடும் இருக்கும் எந்த தரப்பாயினும் இப்படி ஒருவர் அடங்காது நியாயம் கேட்பது கோபத்தை வரவழைக்கத்தானே செய்யும். அதுவும் இராணுவம் என்றால் சொல்லவும் வேண்டுமா? அந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் இந்த மூன்று பேரையும் இன்னொரு பதுங்குகுழியில் கொண்டு போய் அடைத்து வைக்கின்றது.


பிறகு நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லப் போவதில்லை. ஒருபுறத்தில் கிரிஷாந்தி கூட்டு வன்புணர்வுக்கு ஆளானபோது, இவர்கள் மூன்று பேரும் அருகிலேயே வைத்து கொல்லப்படுகின்றார்கள். கிரிஷாந்தி உள்ளிட்ட இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட முறை மிகக் கோரமானது.

ற்றைக்கு இது நடந்து 30 வருடங்களாகி விட்டது. ஆனால் இதைச் சாட்சியமாகச் சொன்னவர்களின் வாக்குமூலங்களை வாசிக்கும்போது மனம் பதறுகின்றது. அதை தொகுத்து நூலாக்கி 'வன்மம' என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன் இலங்கையில் வெளிவந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களைப் புரட்டும்போதும் கைவிரல்கள் படபடக்கின்றன.


அன்று இந்த விடயம் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டபோது, இராணுவ/பொலிஸ் குழுவொன்றின் விரைவான விசாரணையினாலாயே இது ஒரு முக்கிய மனிதவுரிமை மீறல் சம்பவமாகப் பொதுவெளிக்கு தெரிய வந்தது. மேலும் எதற்கும் பயப்பிடாது சாட்சி சொல்ல வந்த பொதுமக்களினதும்,  குற்றஞ்சாட்டப்பட்ட ராஜபக்சே உள்ளிட்டவர்களிலிருந்து அரச சாட்சியாக மாறிய ச நஸார், சமரசிங்க போன்றவர்களின் சாட்சியங்களும் முக்கியமானவை. நஸாரின் சாட்சியங்களில், அவருக்கு கிரிசாந்தியின் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் பங்கிருக்கின்றதா இல்லையா என்று சற்றுக் குழப்பம் இருந்தாலும், அவர் அரசசாட்சியாக மாறியது  இந்த வழக்கின் முக்கியமான திருப்பமாகும். 

 

அது போலவே சமரசிங்க என்று ஒரு பொலிஸ்காரர் அன்று கோப்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்தவர். அவர் ஒர் அரிய மனிதாபிமானியாகவே இக்கொடும் நிகழ்வில் புலப்படுகின்றார். அவரே கிரிஷாந்தி உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கு அவருக்கு இயன்றமுறையில் முயற்சித்திருந்தவர்.


கிரிஷாந்தியைப் மதியத்தில் கைதுசெய்து காவலரணில் வைத்து விட்டு, ராஜபக்‌ஷே, சமரசிங்கவை கிரிஷாந்திக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பிருக்கா என விசாரிப்பதற்காய் அங்கே வரச் சொல்கின்றார். சமரசிங்கவிற்கு தமிழ் தெரியும் என்பதால் பதுங்குகுழிக்குள் இருந்த கிரிஷாந்தியை அவர் விசாரிக்கின்றார். கிரிஷாந்தி அதை மறுப்பதுடன், எதற்காக என்னை இங்கே தடுத்து வைத்திருக்கின்றீர்கள் எனக் கேட்கின்றார். அதுவே சமரசிங்க முதலும் கடைசியுமாகக் கிரிஷாந்தியை உயிருடன் சந்திப்பது.


இப்படி கிரிஷாந்தியை விசாரித்துவிட்டு  பகல் 3.00 மணிக்குத் திரும்புகின்ற சமரசிங்க, மூன்று பேர் அதே காவலரண்களுக்குள் நுழைவதைக் காண்கின்றார் (இதை சமரசிங்க நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும்போது நினைவுகொள்கின்றார்). அதன் பின்னர் கோப்பாயுக்கு திரும்புகின்ற சமரசிங்க மனம் அமைதி கொள்ளாது, மாலையில் இன்னொரு பொலிஸ்காரரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு, கிரிஷாந்தியை கைதுசெய்யப்பட்ட காவலரணுக்குச் சென்று கிரிஷாந்தி உள்ளிட்ட மற்றவர்கள் மூன்று பேரையும்  விடுதலை செய்யக் கேட்டிருக்கின்றார். அது வாக்குவாதமாக மாறி கோபத்தில் சமரசிங்கவையும், அவரது நண்பரையும் அங்கிருந்து ராஜபக்‌ஷே உடனே திருப்பிப் போகச் சொல்கின்றார்.


இந்த நிகழ்வில் குற்றஞ்சாட்டப்பட்டு, அரச தரப்புவாதியாக மாறி நஸாரின் சாட்சியம் இன்னும் கோரமானது. கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்ட காவலரணுக்கு அருகில் காவலில் இருந்தவர் நஸார். ராஜபக்‌ஷே தனது  இராணுவ நண்பர்களிடம் கிரிஷாந்தியின் உடல் மீது வன்புணர்வை நடத்த அனுமதி கொடுத்தபின், நஸாரும் செல்கின்றார். தான் தமிழில் பேசியதால் முனகிக்கொண்டிருந்த கிரிஷாந்தி தன்னிடம் தண்ணீரும் கேட்கவும் தான் கொடுத்ததாகவும், அப்போது யாரோ கெட்டவார்த்தைகளால் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று கேட்டபோது தான் அந்த இடத்திலிருந்து நகர்ந்ததாகவும் சொல்கின்றார். அப்படித் திரும்பிப் போகும்போது 75 மீட்டர் தொலைவில் கிரிஷாந்தியின் தாயார் இராசம்மா பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்திருக்கின்றார்.


இலங்கை இராணுவம் இவர்கள் அனைவரையும் சுருக்குக் கயிறை இரண்டுபக்கமும் போட்டு இழுத்தே கொன்றிருக்கின்றது. இந்தக் கொலைகள் நடக்கும்போது துப்பாக்கியோடு காவல் இருந்ததாக நஸார் சொல்கின்றார். பின்னர் இராணுவத்தினர் மண்வெட்டிகளோடு அந்த உடல்களைப் புதைக்கச் சென்றதையும் கண்டதாகச் சாட்சியில் சொல்லியிருக்கின்றார்.

கிரிஷாந்தியின் வழக்கு பிற வழக்குகள் போல இல்லாது, அதிகளவு அழுத்தத்தால் இரண்டு வருடங்களில் முடிந்திருக்கின்றது. இந்த நான்கு பேரும் அன்று கொலைசெய்யப்பட்ட உடனேயே ஓர் பெரும் எதிர்ப்பு எல்லாத் தரப்புக்களிலும் இருந்து வந்ததாலேயே, உரியவர்கள் கைதுசெய்யப்பட்டு, புதைக்கப்பட்ட இந்த உடல்கள் 40 நாட்களுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு மீளத்தோண்டி எடுக்கப்பட்டன. அந்த மீளக் கண்டுபிடித்தல் தமிழ் மக்களை மட்டுமில்லை, மனிதாபிமானமுள்ள சிங்களவர்களையும் தட்டியெழுப்பியது. ஆகவே இரண்டு ஆண்டுகளில் விசாரணை நடந்து தீர்ப்பும் கொடுக்கப்பட்டது. வழக்கு நடந்த சில நாட்களிலேயே, 9 குற்றவாளிகளில் முதல் குற்றவாளியான ராஜபக்‌ஷே நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடி சில வாரங்களின் பின் வேறொரு நிகழ்வால் கைதுசெய்யப்பட்டது எல்லாம், இலங்கை நீதிமன்றங்களின் வழமையாக நடக்கக்கூடிய நிகழ்வுகள் எனச் சொல்லலாம்.


இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளில் முடிந்தாலும், இவ்வாறு இதேகாலகட்டத்தில் வன்னியில் குமாரபுரத்தில் பால்பண்ணைக்கு அருகில் தமிழ்ப்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வின் தீர்ப்பை வழங்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கின்றது என்று இதே 'வன்மம்' நூலில் நாம் அறிய முடிகின்றது. ஆகவே நீதி என்பது எல்லோர்க்கும் சமம் இல்லை என்பதையும் நாம் கண்டுகொள்ள முடியும்.


கிரிஷாந்தியின் கொலைவழக்கில் எட்டுப் பேருக்கு குற்றத்தைச் செய்தற்காக தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதுதான் ராஜபக்‌ஷே இன்னொரு பேரவலமான உண்மையையும் நீதிமன்றத்தில் அறிவித்தார். நீங்கள் என்னை இந்த நான்கு பேரைக் கொன்று புதைத்ததற்காக குற்றஞ்சாட்டுகின்றீர்கள். நானறியவே இதே செம்மணிப் பகுதியில் 300-400 தமிழர்கள்  கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன எனச் சொன்னார். அப்படிச் சொன்னதோடு மட்டுமில்லாது என்னால் அவற்றையெல்லாம் அடையாளம் காட்டமுடியும் என்றும் அறிவித்தார். 


அதில் ஒரு சம்பவமாக, தனது அதிகாரியாருவொருவர் ஒரு திருமணமான தமிழ் தம்பதியைக் கூட்டிக்கொண்டு வந்து, அந்தக் கணவனின் முன்னேயே அந்தப் பெண்ணை வன்புணர்ந்தவர்; பிறகு அவர்கள் இருவரையும் மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு செம்மணியில் புதைத்தவர்; அதற்குச் சாட்சியாக நானே அந்த அதிகாரிக்கு மண்வெட்டியைக் கொடுத்தேன் என்று இன்னொரு அதிர்ச்சியான நிகழ்வைச் சொன்னார்.


அதேபோன்று ஒருநாளில் 22 இற்கு மேற்பட்ட ஆண்களை அரியாலையில் கைதுசெய்து சித்திரவதை செய்து புதைத்தோம் என்றிருக்கின்றார். அதில் ஒரு சிலரின் பெயர்களை, அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை 'வன்மம்' நூலை வாசிக்கும் ஒருவர் அறியமுடியும்.


அதன்பின்னர் இவ்வாறு பல உண்மைகளை வெளியுலகிற்குச் சொன்ன ராஜபக்‌ஷேவிற்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதும், அவரின் மனைவி தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டதுமென பலதும் இலங்கையில் நடந்திருக்கின்றது. அன்றைய சந்திரிக்காவின் காலத்தில் ராஜபக்சேவின் வாக்குமூலத்தை வைத்து செம்மணி புதைகுழிகள் மீண்டும் தோண்டப்பட்டத் தொடங்கியதும், பின்னர் இடைநிறுவில் நிறுத்தப்பட்டதுமென்பதும் கடந்தகால வரலாறு.


இப்போது மீண்டும் 30 ஆண்டுகளுக்குப் பின் செம்மணி மீண்டும் தோண்டப்படுகின்றது.  இதுவரை இருநூறிற்கும் மேலான எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டிருக்கின்றன. நாம் எவ்வாறு கொல்லப்பட்டோம் என்று சொல்லாது, அமைதியாக உறங்கப் போவதில்லையென எலும்புக்கூடுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை  சாட்சியங்களாக நம்முன்னே எழுந்தபடி இருக்கின்றனர். 


***

('வன்மம்' - ஆங்கிலத்தில் பகவதாஸ் சிறிகந்ததாஸால், கிரிசாந்தியின் கொலையின் நீதிமன்ற வழக்கின் முழுப்பிரதியை முன்வைத்து எழுதப்பட்ட நூலாகும்.  இது விண்மணி என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு அண்மையில் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது)


-நன்றி: 'அம்ருதா' - ஐப்பசி, 2005-



கார்காலக் குறிப்புகள் - 98

Monday, June 23, 2025

 

 'விழுதாகி வேருமாகி' நூலை முன்வைத்து..
******



கடந்த சில நாட்களாக வேறொரு உலகில் உலாவிக்கொண்டிருந்தேன். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பரும் எப்போது இதிலிருந்து வெளியே வருவாயெனக் கேட்டபடியிருந்தார். இந்த நூலை நான் 20 வருடங்களுக்கு முன் வன்னிக்குள் நின்றபோது வாசித்திருக்கின்றேன். 600 பக்கங்களுக்கு மேல் நீளும் நூலென்பதால் அதையன்று முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் கடந்த 20 வருடமாக அந்த நூலைத் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது வாசிக்கக் கிடைத்திருந்தது.

அது விடுதலைப்புலிகளின் பெண்கள் அணியாகிய (2ம். லெப்.) மாலதி படையணியின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் கூறுகின்ற 'விழுதாகி வேருமாகி' என்கின்ற நூல். இந்த நூல் 1996 -2001 வரையான போராட்டக் காலத்தைப் பதிவு செய்கின்றது.

1995, சூரியகதிர் -01 மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம், 1996 இல் வடமராட்சி/தென்மராட்சியைக் கைப்பற்ற சூரியக்கதிர்-02 நடவடிக்கையை எடுக்கின்றது. இந்தக் காலப்பகுதியிலே விதுஷா தலைமையிலான தனியே பெண்களைக் கொண்டமைந்த 'மாலதி படையணி' புலிகளால் கட்டியமைக்கப்படுகின்றது. மாலதி என்பவர் களத்தில் சாவடைந்த புலிகளின் முதல் பெண் போராளி.  அவர் 1987 இல் கோப்பாயில் இந்திய இராணுவத்துடனான மோதலில் களச்சாவடைந்திருந்தார். அவரின் பெயரிலே புலிகளின் பெண்கள் அணி தொடங்கப்பட்டது. மாலதி படையணி தமது முதல் களப்பலியை தென்மராட்சியில் கொடுக்கின்றது. ஒருகுறிப்பிட்ட காலம்வரை மரபு இராணுவத்தைப் போன்று இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தபோராடிக் கொண்டிருந்த மாலதி படையணி வன்னிக்குள் உள்ளெடுக்கப்படுகின்றனர். விரும்பிய கொஞ்சப்பேர் மட்டும் கொரில்லாப் படையாக தென்மராட்சிப் பகுதிக்குள் உலாவத் தொடங்குகின்றனர்.

இவ்வாறு தொடங்கும் மாலதி படையணியின் களங்கள் வன்னிக்குள் விரிகின்றன. இதன் பின்னரே 1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு முகாம் புலிகளால் தகர்க்கப்படுகின்றது. அது ஒயாத அலைகள் -01 எனப் பெயரிடப்படுகின்றது. அந்த முகாம் தாக்குதலில் பங்குபற்றிய மாலதி படையணி பின்னர் A9 நெடுஞ்சாலையை, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை இணைக்க வைக்கத் தொடங்கிய 'ஜெய சுக்குறு' (வெற்றி நிச்சயம்) நடவடிக்கையில் பல்வேறு முனைகளில் நின்று புரிந்திருக்கின்றது.

அவர்கள் மணலாற்றிலிருந்து மன்னார் வரை, புளியங்குளம் (கடும் சண்டை நடந்த அந்த இடம் அவர்களின் மொழியில் புரட்சிக்குளம்), ஒட்டுசுட்டான், மன்னன்குளம் என்று நாம் கற்பனையே செய்து பார்க்க முடியாத கொடும் களங்களில் முன்னணியில் நின்றிருக்கின்றனர்.

இந்த நூலின் முக்கியம் என்பது புலிகள் ஓயாத அலைகள்-01, 02 என்று முல்லைத்தீவு, கிளிநொச்சி பெரும் இராணுவ முகாங்களைத் தகர்த்ததையோ, அல்லது ஓயாத அலைகள் -03 என்று வன்னி பெரும் நிலப்பரப்போடு ஆனையிறவை வென்றதையோ, ஓயாத அலைகள் -04 எனப்பெயரிட்டு சாவகச்சேரி அரியாலை, நாகர்கோயில் என முன்னேறி செம்மணிப் பாலத்தடியில் நின்று இலங்கை இராணுவத்தின் யாழ் இருப்பை இறுக்கியதோ பற்றியதல்ல.

போர் என்பது எப்படி யதார்த்தத்தில் நடக்கின்றது என்பது பற்றிய நேரடி அனுபவங்களுள்ள போராளிகள் எழுதிய பதிவுகள் என்பதால்தான் இந்த நூல் மிக முக்கியமான நூலாக இருக்கின்றது. ஒவ்வொரு அத்தியாயத்திலும்ம் நீங்கள் ஒரு நாயகியைக் காண்பீர்கள், சிலவேளைகளில் ஒரு அத்தியாயத்திலே பல வீரநாயகிகளைக் காண்பீர்களென்று இந்த நூலில் சொல்வதைப் போல பல போராளிகளின் வீரத்தை/தியாகத்தைப் பார்க்கின்றோம்.

ஒரு படையணியின் தோற்றத்தை, களத்தில் வெற்றி பெற்றதை/ முன்னேறும் எதிரியோடு எதிர்த்துப் போரிட்டதை மட்டுமின்றி இதை வாசிக்கையில் இந்தப் போரின் கொடுமைகளையும் நாம் பார்ப்பதுதான் என்னளவில் முக்கியமானது. நாங்கள் கடந்த காலத்தை ஒருபோதும் மாற்றிவிடமுடியாது. ஆனால் இன்னொரு போர் எந்தப் பொழுதிலும் எங்களுக்குத் தேவையற்றது என்பது ஒரு முன்னுதாரணமாக இதைப் பார்க்கலாம்.

எப்படி 96இல் யாழ் மாவட்ட சாவகச்சேரியில் இருந்து போராளிகள் துரத்தப்பட்டார்களோ, அதை மாற்றி சில வருடங்களில் ஓயாத அலைகள் -04 உடன் சாவகச்சேரிக்குள் நுழைந்து நிலங்களை மீண்டும் கைப்பற்றத் தொடங்குகின்றார்கள். ஒருவகையில் அது அவர்களின் நீண்டநாள் கனவு. ஆனால் தொடர்ச்சியான இராணுவ முன்னேற்றங்களால் பேரழிவுடன் மீளவும் யாழை விட்டு பின்வாங்கிச் செல்வதோடு இந்த நூல் முடிகின்றது. இதை வாசித்து முடிக்கும்போது எப்படி ஒரு போர் நடக்கின்றது என்ற பயங்கரம் நம் முகத்திலறைந்து திகைக்க வைக்கும்.

இன்றும் போரை ஒரு வெற்றிக்களிப்பாகக் கொண்டாடுகின்றவர்களும், அதுபோல புலிகளின் என்றாலே எல்லாவற்றையும் வன்மமாக்கின்ற தரப்பும், பொறுமையுடன் இதை வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்வேன். ஏனெனில் வரலாற்றை மிகையாகப் புகழ்ந்தோ அல்லது இருட்டடிப்புச் செய்தோ நாம் கற்றுக்கொள்வதால் எதுவும் பிரயோசனம் இருக்கப் போவதில்லை. அப்படியான 'கற்றல்கள்' நமது தப்பித்தல்களுக்கும், தனிப்பட்ட விருப்புகளுக்கும் உதவுமே தவிர, வரலாற்றைத் தெளிவுறக் கற்பதற்கு உதவப்போவதில்லை.

வரலாறு என்பதை நாம் நினைத்தபடி மாற்றியமைக்க முடியாது என்பதற்கு இந்த நூலே நல்லதொரு உதாரணம். இந்த நூலில் விதுஷா, துர்க்கா, பால்ராஜ், தீபன், கருணா என்று பல தளபதிகளின் பேச்சுக்கள் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். கருணாவின் தலைமையில் இருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஜெயந்தன் படையணியின் தீரத்தாலே பெரும் எடுப்பில் நடத்தப்பட்ட ஜெயசுக்குறு சமர் முறியடிப்பு   பல முக்கிய களங்களில் நிகழ்ந்தது என்பதை நாமறிவோம். ஜெயசுக்குறு சண்டையின் பின் புலிகளே ஒப்புக்கொண்ட உண்மை இது. இப்போது கருணா புலிகளின் ஆதரவாளர்க்குத் 'துரோகி'யாகிவிட்டார் என்கின்றபோதும், அன்றைய வரலாற்று உண்மையை/கருணாவின் மேற்கோள்களை வரலாற்றின் எந்தப் பக்கத்திலிருந்தும் எடுத்துவிட முடியாது என்பதற்கு இந்த நூலே ஒரு சாட்சியாக நிற்கின்றது.

இந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களிலும்போராளிகளைப் பற்றிய பல நுண்ணிய அவதானங்கள் வந்தபடியே இருக்கும். ஒரு போராளி வாசிப்பதில் அவ்வளவு ஆர்வமுடையவர். களத்தில் கொடுக்கப்பட்ட சாப்பாட்டைச் சுற்றி வருகின்ற பேப்பரையே கவனமாகப் பிரித்தெடுத்து வாசித்துப் பார்க்கின்றவர். எப்போதும் அவரது காற்சட்டைப் பொக்கெட்டுக்குள் ஒரு புத்தகம் இருக்கும் என்ற விபரிப்பு இருக்கும். இப்படி நம் நினைவுகளை விட்டகலாத பல போராளிகள் இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் வந்தபடியிருக்கின்றனர்.

இயக்கம் குறித்தும்,  அவர்கள் போராட்டத்தை நடத்திய விதம் குறித்தும் விமர்சனங்களை எவ்வளவு தீர்க்கமாக வைக்கின்றோமோ, அதையளவு இந்தப் போராளிகள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் மறுதலிக்காது நாம் ஒவ்வொருபொழுதும் நினைவுகூரத்தான் வேண்டும்.

எவரெவரோ இன்றைக்கு இந்தப் போராட்டத்தை 'குத்தகை'க்கு எடுத்தமாதிரி போலிப் பெருமிதங்களில் எழுதியும்/பேசியும் கொண்டிருக்கும்போது, இந்த உண்மையான போராளிகளின் இரத்தமும் சதையுமான வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் வாசித்தல் அவசியம் என்பேன்.மேலும் சிங்களம் உள்ளிட்ட வேறு மொழிகளில்  இது மொழியாக்கப்பட்டு வருகையில் இந்தப் போராளிகள் பற்றிய பல எதிர்மறையான எண்ணங்கள் அவர்களிடையே உதிர்ந்து போகவும் கூடும்.

இறுதியாக இதற்கு முன்னுரை எழுதிய மாலதி படையணியின் தளபதியான விதுஷா சொல்வதைக் குறிப்பிட்டு இதை முடிக்கலாமென நினைக்கின்றேன்:

"எழுதுமட்டுவாளிலிருந்த எமது முன்னணிக் காவலரண் பகுதி. நேரம் 4.30 ஆகிக் கொண்டிருந்தது. முன்னரங்கின் அருகிலிருந்த மைதானத்துக்கு ஒவ்வொரு அணிகளும் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. எல்லோரும் கலகலப்பாகக் கதைத்துச் சிரித்தபடி..சிலர் விளையாட, சிலர் சூட்டுப் பயிற்சிக்கென ஆயத்தமானார்கள். போர்க்காலத்தில் சிறு ஒலியைக் கூட எழுப்பமுடியாத, தலைநிமிர்த்தி நடக்கமுடியாத பகுதி அது. இது போர் நிறுத்தக் காலம் என்பதால் பதுங்கிச்சூடு, எறிகணை வீச்சு என்ற எந்தவித நெருக்கடியுமின்றி முன்னரங்கப் பகுதியே கலகலப்பாக இருக்கின்றது.

ஒரு பனங்குற்றியில் அமர்ந்தவாறு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த என் மனம் திடீரென எங்கோ போனது. இந்த மைதானத்தில் நின்றிருக்கவேண்டிய பலரைக் காணவில்லை. அவர்கள் துயில் நிலங்களில் அமைதியாக இருக்கின்றார்கள். இவர்கள் புதிய தலைமுறையினர். இவர்களை உருவாக்கிவிட்டவர்களும், உருவாக்கியவர்களும், அவர்களை உருவாக்கியவர்களும் எனப் பலர், காலம் தமக்கிட்ட பணியை முடித்துத் தம்முடைய கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் எம்மிடம் தந்த நிறைவோடு உறங்குகின்றார்கள். மைதானத்தில் படையணிப் போராளிகளின் சத்தங்களும், அவர்களது சுடுகலன்கள் எழுப்பிய ஒலிகளும், நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த ஊர்திகளின் இரைச்சல்களும் என்னை இந்த உலகுக்கு இழுத்து வரமுடியாமல் தோற்றுப் போயின."

இதைவிட இந்தப் போர் தந்த துயரங்களைச் சொல்லிவிட முடியாது. இதற்கப்பால் அவர்களுக்கென்று தளராத நம்பிக்கையும், பெரும் கனவுகளும் இருந்தன. அதுவே அவர்களைத் தொடர்ந்து போராடச் செய்திருந்ததையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

********

 

(நன்றி: 'அம்ருதா', ஆனி 2025)

எழுதுவதும் ஒரு கலை

Thursday, March 06, 2025

 

ருகி முரகாமியின் 'Novelist as a Vocation' ஒரு சுவாரசியமான நூல். இதில் முரகாமி எவ்வாறு தான் எழுத வந்தேன் என்பதிலிருந்து எப்படி ஒரு முழுநேர எழுத்தாளனாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்க முடிகின்றது என்பதுவரை பேசுகின்றார். இது மட்டுமில்லாது எழுதும் பிரதியின் அசல்தன்மை, இலக்கியப் பரிசுகள்,  விமர்சனங்களுக்கு எப்படி முகங்கொடுப்பது, எதைப் பற்றி எழுதவேண்டும், எவ்வகையான பாத்திரங்களை ஒரு நாவலில் உள்ளடக்குவது, யாருக்காக நான் எழுதுகின்றேன் எனப் பல்வேறு தலைப்புக்களில் எழுதியிருக்கின்றார். இவற்றில் சில அவரின் வாசகர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சொல்லப்பட்ட பதில்களாகவும் அமைந்திருக்கின்றன

 

முரகாமி பொதுவெளியில் பெரிதாக தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பாதவர். அவ்வாறு உரையாட  தனக்கு விருப்பமில்லை என்று அர்த்தமல்ல, என்னால் ஒழுங்காகப் பேசத்தெரியாது, அதனால்தான் நான் பொதுவாக வெளியில் வருவதில்லை என்கின்றார். அத்தோடு இந்த நூல் குறித்துக் கூட நான் இனி எங்கும் பேசப்போவதில்லை. வேண்டுமெனில் இன்னும் வயதாகட்டும், அப்போது ஒரளவு முதிர்ச்சி வந்து பொதுவெளியில் இதைப்பற்றி உரையாற்றுகிறேன் என்று இந்நூலின் முன்னுரையில் எழுதுகின்றார்.

 

முரகாமியை வாசித்தவர்க்கு அவரின் பின்புலம் ஒரளவு தெரிந்திருக்கும். முரகாமி ஒரு உணவகத்தை ஜாஸ் இசைப் பின்னணியில் அவரது மனைவியுடன் நடத்திக் கொண்டிருந்தவர். பேஸ்பால் மீது அதீத ஆர்வமுள்ள முரகாமி சுவாரசியமாக ஓர் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நான் ஒரு நாவல் எழுதுகின்றேன் என்று தீர்மானித்து, வீட்டுக்குப் போகும் வழியிலே எழுதும் பேப்பர்களை வாங்கிக்கொண்டு போய் எழுதத் தொடங்கியவர். ஓர் உணவகத்தை நடத்திக் கொண்டு அவர் எழுதி முடித்த நாவலே 'Hear and the wind sing'. அதுவரை எழுத்தாளராக வரும் எந்த எண்ணமும் இல்லாத முரகாமி எழுதிய இந்த நாவல் ஜப்பானில் இலக்கியத்துக்கான பரிசொன்றையும் பெற்றுவிடுகின்றது.

 

அஃதொரு குறுநாவல், பிறகு சிறுகதைத் தொகுப்பு என ஒன்றிரண்டு நூலகளை எழுதிய சில ஆண்டுகளில் ஒரு 'அதிர்ச்சிகரமான' முடிவை முரகாமி எடுக்கின்றார். நான் இனி முழுநேர எழுத்தாளராக ஆகப்போகின்றேன் என்று அவரது வாழ்வியல் செலவுகளை நிவர்த்தி செய்த உணவகத்தை விற்கின்றார். அவரது நண்பர்கள் 'ஒரளவு இலாபத்தோடு இருக்கும் இதை விற்காதீர்கள், வேண்டுமெனில் நீங்கள் நாவல் எழுதும் காலங்களில் வேறு ஒருவரை வைத்து இதை நடத்தலாம்' என்று ஆலோசனைகள் சொன்னபோதும், அவர் எழுதுவது மட்டுமே செய்யப்போகின்றேன் என்று உணவகத்தை விற்று, டோக்கியோவை விட்டு வேறொரு புறநகருக்கு மனைவியுடன் இடம்பெயர்கின்றார்.

 

அதுவரை நள்ளிரவுகளில் பகுதி நேரமாக எழுதிக் கொண்டிருந்த முரகாமி, ஓர் ஒழுங்குக்குள் தன்னைக் கொண்டுவருகின்றார். இரவில் முன்னரே தூங்கி, விடிகாலையில் எழும்பி எழுதுவதும், பின்னர் உடல்நலத்துக்காக நீண்டதூரம் ஓடுவதுமென தினமும் தன்னைப் பழக்கிக் கொள்கின்றார். இந்தப் பழக்கம் தன்னை ஒவ்வொரு நாவலையும் எழுதத் தயார்ப்படுத்தும்போதும் பெரும் உதவியாக இருக்கின்றது என்கின்றார்.

 

முரகாமி தான் நாவலை எழுதத் தொடங்கும்போது, தினமும் எட்டு ஜப்பானியப் பக்கங்கள் (1600 ஆங்கில வார்த்தைகள்) எழுதுவேன் என்றும், அதற்காய் காலையில் நான்கைந்து மணித்தியாலங்கள் செலவழிப்பேன் என்றும் கூறுகின்றார். அதுபோலவே ஒருநாளில் நன்றாக எழுதும்போது நிறைய எழுதினாலும்  பத்துப்பக்கங்களோடு தன் நாவலை நிறுத்திவிடுவேன் என்கின்றார். ஒருநாளிலேயே நிறைய எழுதிவிட்டால் சிலவேளைகளில் அடுத்துவரும் நாட்களில் ஒன்றும் எழுதமுடியாது போய்விடும். தொடர்ச்சியாக ஒரு நாவலை எழுதுபவர்க்கு இது நல்லதல்ல என்கின்றார். 

 

இவையெல்லாவற்றையும் சொல்லும்போது, இது தன் தனிப்பட்ட அனுபவங்கள் என்பதையும் அடிக்கடி நமக்கு முரகாமி நினைவுபடுத்துகின்றார். இப்படி 'அளவாக' தினம் எழுதுவதை ஹெமிங்வேயும் சொல்லியிருக்கின்றார். நல்லாய் எழுத்து ஊறிக்கொண்டு வருகின்றதென்பதற்காய் ஊற்றை ஒட்ட இறைத்து விடாதீர்கள். ஓரிடத்தில் நிறுத்திவிட்டு அடுத்தநாளுக்கும் அதே ஊற்றுப் பெருக அனுமதியுங்கள்' என ஹெமிங்வே நமக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்.

 

முரகாமி தனது நாவல்களுக்காய் கிட்டத்தட்ட மூன்று நான்கு மாதங்கள் எழுதுவதற்கு உழைப்பேன் என்கின்றார். உதாரணத்திற்கு 'Kafka on the shore' இற்காய் தினமும் 10 பக்கங்கள் வீதம் மாதமொன்றுக்கு 300 பக்கங்களும், அதை ஆறுமாதங்களுக்கு எழுதி 1,800 பக்கங்கள் வரை தொடர்ந்து எழுதியதாகச் சொல்கின்றார். முதல் வரைவை முரகாமி எழுதிய பிறகு கொடுக்கும் உழைப்புத்தான் இன்னும் கவனிக்கத்தக்கது. 

 

நாவலை எழுதி முடித்தபின் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களிலிருந்து ஒரு மாதம்வரை அதை அப்படியே டிராயருக்குள் போட்டு மூடிவிடுவேன். அதைப் பற்றி ஒரு துளியும் யோசிக்காது இருக்க அந்தக்காலங்களில் முயற்சிப்பேன் என்கின்றார். பின்னர் முதலாம் திருத்தத்தை சில வாரங்களுக்குச் செய்வார். அதன் பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு 2வது, 3வது திருத்தங்களும், மீள எழுதுதலும் செய்வாரென்று சொல்கிறார். இவை எல்லாம் செய்து ஒரளவு முழுமையான பின் தனது முதல் வாசகரான மனைவிக்கு வாசிக்கக் கொடுப்பேன் என்கின்றார். அவரின் மனைவி ஒரு தேர்ந்த எடிட்டரைப் போல மாற்றங்களைச் சொல்ல, அவரோடு சிலதை முரண்பட்டு, சிலதை ஏற்று பிறகு இன்னொருமுறை முரகாமி திருத்தங்களைச் செய்வார். அதன்பின்னரே அவரின் எடிட்டர்களின் கையில் பிரதி போகும். என்னதான் தனது எடிட்டர்கள் சிறப்பானவர்களாக இருந்தாலும், அவர்களோடு எப்போதும் சண்டையிட்டே மாற்றங்களைச் செய்வேன் என்கின்றார். இவ்வாறு பல படிமுறைகளுக்குப் பிறகுதான் நாம் வாசிக்கும் முரகாமியின் பிரதி நம் கைகளை வந்து சேர்கிறது.

 

அதேபோல ஒரு நாவலை எழுதத் தொடங்கும்போது, தான் வேறெந்த எழுத்து வேலையிலும் கவனம் செலுத்துவதில்லை என்கின்றார். அப்படி அந்தக் காலங்களில் செய்யும் ஒரேயொரு விடயம் மொழியாக்கங்கள் மட்டுமே என்கின்றார். அது புனைவில்லாததால், மூளையில் இன்னொரு பகுதியைச் செயற்படுத்த வைப்பதால் அப்படி மொழியாக்கங்களைச் செய்வது எளிதாக இருக்குமென்கின்றார். 

 

இவ்வாறு முரகாமி சொல்வதை வாசிக்கும்போது எனக்கு உடனே நினைவுக்கு வருபவர் சுகுமாரன். அவர் தனது முதலாவது நாவலான 'வெலிங்டனை' எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு தொய்வு வந்தபோது தான் மொழியாக்கம் செய்யத் தொடங்கியதாக எழுதியிருப்பார். அப்படி அந்தக் காலத்தில் அவர் மொழியாக்கம் செய்ததுதான் 'பட்டு'.

 

முரகாமி தனது நாவல்கள் எழுதும் அனுபவங்களையும், அவரின் பாத்திரங்கள் உருவாக்கப்படும் வழிமுறைகளையும் இங்கே எழுதிச் செல்வது சிலாகிக்கக் கூடியது. நாவலை ஒரு படைப்பாளி எழுதிக்கொண்டிருக்கும்போது, நாவலாசிரியரும் அந்தப் பிரதியால் உருவாக்கப்படுகின்றார் எனச் சொல்கின்றார் (While Novelist creating a novel he is simultaneously being created by the novel as well). அவ்வாறு தான் உருவாக்கும் பாத்திரங்களே வேறு பாத்திரங்களை உருவாக்க அவை நாவலாக உருவாகின என்று சொல்கின்றார். முரகாமி 'Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage' ஐ முதலில் ஏழெட்டுப் பக்கக் கதையாக எழுதியிருக்கின்றார். அந்த நாவலை வாசித்த நமக்குத் தெரியும்

 

டஸாக்கியின் நான்கு பாடசாலை நண்பர்கள் சட்டென்று ஒருநாள்  எங்களோடு நீ பேசக்கூடாது என்று எந்தக் காரணமும் சொல்லாது விலகிப் போய்விடுகின்றார். இது நடந்து கிட்டத்தட்ட 18 வருடங்களின் பின், டஸாக்கி தனது முப்பத்தாறு வயதில் இருக்கும்போது ஏன் எனது நண்பர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என யோசிக்கின்றார். அப்போது டஸாக்கி டேட்டிங் செய்துகொண்டிருக்கும் பெண், இந்தக் கேள்வியை ஆழமாக அவரிடம் கேட்க வைக்கின்றார். இத்தனைக்கும் அந்தப் பெண் பாத்திரம் ஒரு முக்கிய பாத்திரமே அல்ல. 

 

சிறுகதையில் அதற்கான காரணம் எதையும் சொல்லாது, ஒரு கற்பனையான முடிவாக எழுதி வைத்ததை, அந்தப் பெண் பாத்திரம் ஏன் என்று கேட்பதிலிருந்தே அது  பெரு நாவலாக விரிந்தது என்கின்றார். அது டஸாக்கியை டோக்கியோ வரை கொண்டு சென்று இறுதியில் இந்த உண்மையை அறிவதற்காய் அவர் பின்லாந்துக்கு தனது நண்பரொருவரைத் தேடிப் போவதுவரை விரிவதை நாவலை வாசித்த நமக்குத் தெரியும். இவ்வாறு முரகாமி தான் எழுதிய சில நாவல்களின் பின்னணிகளையும், பாத்திரங்களின் சிக்கலான வார்ப்புகள் எவ்வாறு உருவாகின என்பதையும்  இந்த நூலில் விரிவாக எழுதிச் செல்கின்றார்..

 

ஒருவர் எதை எழுதவேண்டும், எந்த வகையான பாத்திரங்களை நாவலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று முரகாமி தன் நாவல் எழுதும் அனுபவங்களிலிருந்து சில திறப்புக்களைச் செய்கின்றார். மேலும் உங்களுக்கு நம்புவதற்கு கடினமென்றாலும் பலர் சொல்லும் writer's block எனக்கு வந்ததில்லை என்றும் குறிப்பிடுகின்றார். ஏதோ எப்போதும் எனக்குள் சிருஷ்டி பாய்கின்றதாக நீங்கள் நினைக்கத் தேவையில்லை. நான் எழுத விரும்பும்போது மட்டுமே எழுதுவேன். ஆகவே அது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியான மனோநிலையைத் தந்துகொண்டிருக்கின்றது என்கின்றார். 

 

எந்த நாவலாயினும், தனக்குள் உருவாகி, உருவாகி ஒருகட்டத்தில் இதற்குமேலும் என்னால் தாங்கமுடியாது என்கின்றபோதே எழுதுவதற்கு சென்று அமர்வேன் என்று முரகாமி சொல்கின்றார். தன்னால் இன்னும் இந்தக் காலக்கோட்டுக்குள் எழுதித் தரவேண்டும் என்று சொல்லப்பட்டு நேரம் வரையறுக்கப்பட்டு எழுதுபவர்களை விளங்கிக் கொள்ளமுடியவில்லை என்கின்றார்.

 

மேலும் ரேமண்ட் கார்வர் கூறியதுபோல, ஒரு படைப்பை 'இன்னும் கொஞ்சம் நேரமிருந்தால் இதைவிட மிகச் சிறப்பாக எழுதியிருப்பேன்' என்று சொல்வோரை என்னால் மன்னிக்கவே முடியாது என்கின்றார். எழுத்து என்பதே ஒரு அருமையான விடயம். உங்களுக்கு அதற்கு வேண்டிய நேரத்தைக் கொடுக்காது அவசரத்தில் எழுதுகின்றீர்கள் என்றால் நீங்கள் இதைவிட உங்களுக்கு நல்ல வருமானத்தைத் தரும்  வேறு தொழிலுக்குப் போகலாம். எழுத வந்தால் அதற்காய் உங்களை முழுதாய்க் கொடுக்கவேண்டும் என்கின்றார். முரகாமியே முதன்முதலில் ரேமண்ட் கார்வரை ஜப்பானுக்கு மொழிபெயர்த்து, கொண்டு சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக முரகாமி எப்படி ஒரு ஜப்பானியராக இருந்து அமெரிக்கவுக்கு தனது நூல்களைப் பதிப்பிக்க கொண்டு போனார் என்கின்ற பகுதிகளை வாசித்துக் கற்றுக்கொள்வது என்பது நமது தமிழ்ப்படைப்புக்களை எவ்வாறு மேற்கிற்கு அறிமுகப்படுத்தலாம் என்பதற்கான சிறந்த படிப்பினைகளாக இருக்கின்றது. தனது நூல்களின் பிறமொழி அறிமுகத்தால் கிடைத்ததைவிட, 'முகமற்ற ஜப்பானியர்களாக' எல்லா ஜப்பானியர்களும் மேற்குலகில் நடமாடிக்கொண்டிருந்தபோது எமக்கென்றொரு அடையாளம் வேண்டும் என்கின்ற ஓர் உந்துதலும் அதற்கு முக்கிய காரணம் என்கின்றார் முரகாமி.

 

அதேபோல ஜப்பானைப் போல ஒரு நாவலை எழுதிவிட்டு அது பரவலாக வாசிக்கப்பட்டும் என்று அமெரிக்காவில் சும்மா இருக்கமுடியாது. தான் தனது நாவல்களுக்காய் அது செல்லக்கூடிய எல்லாப் பாதைகளுக்கும் சென்று அமெரிக்காவில் பதிப்பிக்க முயற்சித்தேன் என்கின்றார். உங்களுக்கு ஓர் எடிட்டர்/பதிப்பகம் இருந்தால் கூட, ஒரு எழுத்தாளராக உங்களின் விடாமுயற்சியும், அவர்களை உந்தித்தள்ளுதலும் -ஜப்பானில் இல்லாதது-  தான் அமெரிக்காவில் கற்றுக் கொண்டது என்கின்றார். அதேபோல ஆசியாவுக்கு அப்பால் முதலில் இரஷ்யாவில்தான் தனது அரைவாசிக்கு மேற்பட்ட நாவல்கள் விற்பனையில் முன்னணியில் நின்றது என்பதையும் குறிப்பிடுகின்றார்.

 

அமெரிக்கப் பதிப்பகங்களை நாடும்போது, நீங்கள் உங்கள் நாட்டில் மில்லியன்கணக்கில் நாவல்களை (அவரது 'நோர்வேஜியின வூட்' ஜப்பானில் 2 மில்லியன் விற்றது) விற்கப்பட்டது என்பதோ, இத்தனை விருதுகளைப் பெற்றது என்பதோ ஆங்கில வாசகர்களுக்கு முக்கியமில்லை. அவர்களுக்குரிய வாசிப்புத் தளங்களில் நீங்கள் முக்கியமானவராக இருக்கவேண்டும். அந்தவகையில் தனது சிறுகதைகள் 'நியூ யார்க்கரில்' வந்ததே தனது நாவல்களை பெருமளவில் அமெரிக்க வாசகர்களிடையே கொண்டு சென்றதற்கு முக்கிய காரணம் என்கின்றார். இன்றைக்கு முரகாமியின் நாவல்கள் 50 இற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. உலகளவில் அவரின் புதிய நாவல்களுக்காய்க் காத்திருக்கும் வாசகர்களும் கூடிக்கொண்டே இருப்பதையும் பார்க்கலாம்.

 

வ்வளவு பிரபல்யமும், புகழும் பெற்றபோதும் முரகாமி மிகவும் தாழ்மையுடனேயே பேசிக் கொண்டிருக்கின்றார். எழுத்து என்ற ஒன்று இல்லாதுவிட்டால் என்னை நீங்கள் தெருவில் கண்டால் கூட அடையாளங் கண்டிருக்கமாட்டீர்கள். நான் இப்போதும் ஒரு சாதாரண மனிதனே, என்ன எனக்கு கொஞ்சம் எழுதத் தெரியும், அந்த ஒரு நம்பிக்கையில் இப்படி 35 வருடங்களுக்கு மேலாக ஒரு முழுநேர எழுத்தாளனாக இருக்கின்றேன் என்றே எழுதுகின்றார்.

 

ஒரு எழுத்தாளருக்கு அவர் ஒரு படைப்பை எழுதும்போது இருக்கவேண்டிய (தனக்குத் தெரிந்த) மூன்று விடயங்களைச் சொல்கின்றார். ஒன்று ஓர் எழுத்தாளர் தனக்குரிய நடையை (style) அவசியம் உருவாக்கிக் கொள்ளவேண்டும். எப்படி ஒரு பாடகருக்கு தனித்துவமான குரலும், ஓர் ஒவியருக்கும் குறிப்பிட்ட சில வர்ணங்களும் அவர்களுக்குரியதாகின்றதோ அதுபோல எழுதுபவர்க்கு ஒரு தனித்த நடை அவசியம். இரண்டாவது அந்த நடை உருவாகியபின் அப்படியே தேங்கிவிடாது காலத்தோடு அதுவும் இன்னும் வளர்ந்தபடியே இருக்கவேண்டும். மூன்றாவது இந்த தனித்துவமான நடை வாசகரிடையே நுழைந்திருக்கவேண்டும். வாசகர்களும் அதன் ஒரு பகுதியாக மாறியிருக்கக்க்கூடியதாக ஒரு படைப்பாளியின் எழுத்து நடை மாறி அந்தப் படைப்பின் அடிப்படைகள் அவர்களுக்குப் பரிட்சயமாயிருக்கவேண்டும். இவை தனது தனிப்பட்ட கருத்துக்களென முரகாமி சொல்கின்றபோதும், அவரின் நாவல்களை தொடர்ச்சியாக வாசிக்கும் நம்மைப் போன்றவர்களால் இவற்றை நன்கு தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும் என்றே நினைக்கின்றேன்.

 

அவ்வாறே இலக்கிய விருதுகளால் பெரும் நன்மைகள் விளையப்போவதில்லை என்பதைச் சொல்லவே ஓர் அத்தியாயத்தையே உருவாக்கி இருக்கின்றார். மேலும் முதலாவதாக எழுதும் படைப்புக்கு கிடைக்கும் விருதை விட விமர்சனங்களே ஒருவகையில் நல்லது என்கின்றார்.  முதல் சில படைப்புக்களினால் மிகவும் உயர்ந்தேந்தப்பட்ட எத்தனை படைப்பாளிகள் 20/30 வருடங்களில் அடையாளமே இல்லாது போயிருக்கின்றனர் என்பதை அவர் பார்க்கச் சொல்கின்றார். மேலும் வான்கோவும், பிகாஸோவும் அவர்கள் வாழ்ந்த காலத்தைவிடவும் அவர்களின் மரணத்தின் பின்னே பெரிதாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றனர், அவர்களின் புதுமுயற்சிகள் பின்னாட்களிலே அதிகம் போற்றப்பட்டன என்பதையும் குறிப்பிடுகின்றார். 

 

முரகாமியின் படைப்புக்களில் ஈர்ப்புள்ளவர்களை மட்டுமில்லை, இலக்கியத்தில் ஆர்வமுள்ள எவரையும் இந்த நூலை வாசிக்கப் பரிந்துரை செய்வேன். தமிழில் எண்ணற்ற புத்தகங்கள்  மொழியாக்கம் செய்யப்படும் பொற்காலமாக இருக்கின்ற இக்காலத்தில், விரைவில் யாரேனும் இந்த நூலை தமிழாக்கம் செய்யவேண்டும் எனவும் விரும்புகின்றேன். அதேவேளை இது எழுதுபவர்க்கான கையேடோ, எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தும் 'முன்னேற்ற' வகை நூலோ அல்ல. 

 

எதற்காக அல்லது யாருக்காக எழுதுகின்றீர்கள் என தன்னிடம் அடிக்கடி கேட்கப்படுவதுண்டு என்று சொல்லும் முரகாமி, எனக்காகத்தான் முதலில் எழுதுகின்றேன்; என்னைப் பரவசப்படுத்த மட்டுமில்லை, எனது அகம் சார்ந்த பல சிக்கல்களையும் எழுத்து முடிச்சவிழ்த்து என்னைஆற்றுப்படுத்துகின்றது என்கின்றார். 

 

அநேகரின் எழுத்துக்கள் இவ்வாறுதான் தொடங்குகின்றன போலும்.

 

****************

 


(நன்றி: 'அம்ருதா' - 2025 பங்குனி இதழ்)

 

சட்டகங்களுக்கு அப்பால் மிஞ்சுபவை

Monday, November 13, 2023

 

Dead Poets Society  திரைப்படத்தில் ஆசிரியரான ரொபின் வில்லியம்ஸ் தனது மாணவர்களுக்கு ஏற்கனவே அந்தப் பாடசாலையில் படித்தவர்களின் கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்களை ஓரிடத்தில் காட்டுவார். இவர்கள் உங்களைப் போல இதே பாடசாலையில் 30 வருடங்களுக்கு முன்னர் படித்தவர்கள். என்னதான் முயன்றாலும் இறுதியில் இறப்பென்பது இவர்களைப் போன்று உங்களுக்கும் உறுதியானது. நீங்கள் இதற்கிடையில் எப்படி உங்களுக்கு விரும்பிய மாதிரி வாழப் போகின்றீர்கள் என்பதுதான் முக்கிய கேள்வி. ஆகவே உங்களது கற்பனைகளை, விருப்பங்களை ஒருபோதும் சமரசம் செய்யாதிருங்கள் என வில்லியம்ஸ் சொல்வார். அதற்கேற்ப கவிதைகளைப் பற்றிக் கற்பிக்கும்போது பாடப்புத்தகத்தில் இருக்கும் கலாநிதி ஒருவர் எழுதிய முன்னுரையை கிழித்துவிடுங்கள் எனச் சொல்லி குப்பைக்கூடையை ஒவ்வொரு மாணவரிடம் நீட்டியபடி போவார்.


மாணவர்கள் தமது ஆசிரியரின், மாணவ காலத்தை பழைய Year Book ஊடு கண்டுபிடிக்கும்போது, அவர் இரகசியமாக Dead Poets Society என்ற பெயரில் நடத்திய இலக்கியக் குழுவைக் கண்டுபிடிக்கின்றனர். அந்தக் குழுவின் கூட்டங்களை எப்படி கடந்தகாலத்தில் தேரோவின் 'நான் காட்டுக்குள் போனேன், ஏனென்றால் நான் உள்ளுணர்வோடு வாழ விரும்பினேன். வாழ்க்கையை அதன் (என்பு) மச்சை வரை உறிஞ்சி ஆழமாக வாழ விரும்பினேன்' எனச் சொல்லித் தொடங்குவார்களோ அப்படி இந்த மாணவர்களும் சொல்லி உற்சாகத்துடன் கவிதைகளைக் கொண்டாடத் தொடங்குகின்றார்கள். இப்படி Dead Poets Society என்ற பெயரை வைத்து கவிதைகளை ஆராதித்ததுமாதிரி, ரொபர்தோ பொலானோவின் நாவலான Salvage Detectives பதின்மர்கள் தொடங்கும் கவிதைக்குழுவின் பெயர் Visceral Realists என்பது நமக்கு நினைவுக்கு வரலாம்.


வ்வொருவருக்கும் வாழ்வைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருந்தாலும், நாளாந்த வாழ்க்கை என்பது பெரும்பாடாக அலைய வைக்கின்றது. கிருஷ்ணன் நம்பி 60களில் எழுதிய கதையான 'தங்க ஒரு..' வில் வருகின்றவன் ஒரு வீட்டை வாடகைக்குத் தேடி அலைகின்றான. கிராமத்திலிருக்கும் அவனது மனைவியும், குழந்தையும் இவனோடு சேரந்து வாழ நகரத்துக்கு வர விரும்புகின்றார்கள். வாரத்துக்கு இரண்டு மூன்று கடிதங்கள் எப்போது நாங்கள் வருவதென மனைவி கேட்டபடி இருக்கின்றாள். இவனின் குமாஸ்தா வேலையில் வரும் சம்பளத்தில் ஒரு உரிய வாடகை வீட்டைக் கண்டுபிடிக்க முடியாதிருக்கின்றது.

அப்போதுதான் 'ஒரு காலணிக்குள் வாழும்' ஒரு மனிதனை தேனாம்பட்டையில் இவன் சந்திக்கின்றான். அந்தக் குள்ள மனிதன் ஒரு காலத்தில் பொலிஸாக இருந்தவன். அவன் நகரம் கொடுக்கும் நெருக்கடிகளால் சிறிது சிறிதாக குள்ளமாகி, அவனின் பொலிஸ் காலணிக்குள்ளேயே குடும்பத்துடன் வாழ்கின்ற ஒருவனாக மாறிவிட்டான் என்று அந்தக் கதை நீளும்.

மனிதர்களுக்கு இந்த வாழ்க்கை கொடுக்கும் நெருக்கடிகளால் எவ்வாறெல்லாம் மனிதன் பரிமாணம் அடைகின்றான் என்பதுதான் கதை. அதில் ஓரிடத்தில் 'எதையும் கடைசி வரைத் தெரிந்து கொள்ளும் அக்கறை உள்ளவளாயிற்றே நீ. ஆனால் உலகத்தில் எதையும் கடைசி வரைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதை மீண்டும் உனக்குச் சொல்லுகிறேன். கடைசி கடைசி என்பதெல்லாம் வெறும் மயக்கம்' என்று இந்தக் கதைசொல்லி தன் மனைவிக்கு கடிதம் எழுதுவார்.

இந்தக் 'கடைசி வரை தெரிவது தோற்ற மயக்கம்' ஆக இருப்பது போலத்தான் நமது கைகூடாத ஆசைகளும் இருக்கின்றன. அவை கைகூடும்போது நமக்கு அதை ஆறுதலாக இருந்து அனுபவிக்க முடியாதபடி இன்னொரு ஆசை சிறகு விரித்துத் தொடங்கி விடுகின்றது. ஆக கடைசி என்ற ஒன்றுமே இல்லாது. மேலும் மேலும் பெருகிக் கொண்டிருப்பதற்கு எப்படி ஒரு எல்லை வகுத்துவிட முடியும்?

ஆனால் இந்த எளிய உண்மையை Promised Land  திரைப்படத்தில் லெமன் ஜூஸ் விற்கும் ஒரு சிறுமி உடைத்து விடுகின்றாள். ஒரு சிறு கிராமத்தில் இயற்கை வாயு கிடைக்கின்றது என்று அறிந்து ஒரு பெரிய நிறுவனம் தனது சார்பாக ஒருவனை அங்கே அனுப்புகின்றது. அவனது பணி, அந்த மக்களை நிலத்தினடியில் இருக்கும் இயற்கை வாயுவினால் அவர்களுக்கு பெரும் பணம் கிடைக்கப்போகிறதெனச் சொல்லி அவர்களின் விவசாய நிலங்களை அவர்களிடமிருந்து வாங்குவது/குத்தகைக்கு எடுப்பது. இறுதியில் தனது நிறுவனத்தின் தகிடுதித்தங்களை விளங்கி அந்த மக்களுக்கு உண்மையை உரைக்கப் போகும் அவன் இந்தச் சிறுமியிடம் லெமன் ஜூஸ் வாங்கிக் குடிப்பான்.

அவன் அந்த ஜூஸின் பணத்தை விட (25 சதம்), அதிக காசை அந்தச் சிறுமிக்குக் கொடுப்பான். அவள் மேலதிக பணத்தை வாங்க மறுத்து, 25 சதமே போதுமென்பாள். ஒருவகையில் மனிதர்களுக்கு இருக்கும் பணத்தாசை என்பதைவிட, நீங்கள் இந்தப் பூமியை உங்கள் வரம்பிற்கேற்பப் பாவித்துவிட்டு இந்தச் சிறுமியைப் போன்ற அடுத்த தலைமுறையும் அனுபவிக்க விட்டுச் செல்லுங்கள் என அது மறைமுகமாய்ச் சொல்வது போலத் தோன்றியது. நாம் நமது அளவற்ற ஆசைகளை நம் இருப்பிற்கான அவசியங்களாக ஆக்கி, நம்மையும் எதிர்காலச் சந்ததியையும் நட்டாற்றில் விட்டுச் செல்லும் மிகப் பெரும் நுகர்வோராக மாறிவிட்டோம். இன்னுமின்னும் வேண்டும் என்று நம் வாழ்வைக் கூட நிம்மதியாக வாழமுடியாது, அக/புற அழுத்தங்களினால் நாம் ஓய்வே இல்லாது ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

வசதி வாய்ப்புக்களில் கூடிய/குறைந்த மனிதர்கள் பலரைப் பார்க்கின்றோம். ஆனால் படிநிலைகள் எவ்வாறிருப்பினும் தமக்குள் தீர்க்கமுடியாப் பிரச்சனைகளோடும், ஆசைகளோடும் தான் அநேகர் இருக்கின்றார்கள். இப்படியான பிரச்சினைகளோடு வாழ்வதில் மட்டும் நாம் எல்லோரும் 'சமதர்ம' உலகில் வாழ்கின்றோம் என நினைக்கிறேன்.


தார்த்தவாதக் கதைகளே இப்போது நம் தமிழ்ச்சூழலில் மிகுந்த உணர்ச்சிவசமாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பிழியப் பிழிய உணர்வுகளைக் கொடுத்தால் அது ஒரு சிறந்த புனைவாக வந்துவிடும் என்று எழுதப்படாத விதி போலும். பலர் கடுமையாக தீவிர விரதத்தைப் போல அதைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்யதார்த்தவாதக் கதை என்றாலும் தமிழ்பிரபாவின் 'கோசலை' நல்லதொரு நாவல். அங்கே  உணர்ச்சிகளுண்டு, உணர்ச்சிவசப்படுவதற்கான சம்பவங்களும் இருக்கின்றன. ஆனால் தமிழ்ப்பிரபா அதை - மேலே லெமன் விற்கும் சிறுமி போல- வாசகர் புரிந்து அசைபோடுவதற்கான வெளிகளை விட்டுச் செல்வதால் அது மிகு உணர்ச்சியாகவோ/அதீத நாடகீயமாகவோ போகவில்லை. ஒருவகையில் கோசலையை கோசலையால் மட்டும் புரிந்துகொள்ள முடியும் என்கின்ற சிக்கலான ஒரு பாத்திரமாக அவர் படைக்கப்பட்டிருப்பார்.

இன்று எழுதப்படும் சிறுகதைகள் இப்படி உணர்ச்சிகளின் நெருக்கடியால் எழுதப்படுவதால் அவற்றை மேல் எழுந்த நுனிப்புல் வாசிப்போடு கடந்து போய்க்கொண்டிருப்பேன். புனைவில் கதையென்று தெளிவாக இல்லாமலே வாசகர் இரசிக்க , அதற்குள் ஊறி நின்று எழுதலாம் என்று ஒருமாதிரியான சட்டகங்களுக்கு எழுதுபவர்களின் தலையில் ஆணியடித்துச் சொல்லலாமோ என்று கூட நினைப்பதுண்டு. புதிதாக எழுதுபவர்களைக் கூட மன்னித்து மறந்துவிடலாம், ஆனால் எழுத்தாளர் என்ற பெயரை அடைந்துவிட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை இனிவரும் காலங்களில் அவசியம் என்று நினைக்கின்றேன்.

அந்தவகையில் யுவன் சந்திரசேகரின் அண்மைக்கால கதைகளைத் தொகுத்து வந்த 'கடலில் எறிந்தவை'  ஒரு இதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. கதைகள் கிட்டத்தட்ட கட்டுரைக்கு நெருக்கமான எழுத்து வகையெனக் கூடச் சொல்லலாம். கதைகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விடயங்கள் இருப்பதில்லை. ஏதாவது ஒன்றோ இரண்டு பக்கங்களில் கதை மாதிரியான ஒன்றைச் சொல்லிவிட்டு யுவன் இந்தத் தொகுப்பிலுள்ள அநேகமான கதைகளில் தன் கனவுகளையும், அலையும் மனவோட்டங்களையும்தான் பேசுகின்றார். ஆனால் அது அலுக்காதவகையில் எனக்கு சுவாரசியமாகத் தெரிந்தது.

மேலும் ஒரு சட்டகத்துக்கு வெளியே இருப்பதும், ஏதேனும் ஒரு குழுவுக்குள் ஜக்கியம் ஆகாமல் தன்னியல்பிலே இருப்பது என்பதும் சுவாரசியமானது.  ஆகவே அந்த உதிரிக் குரல்களை, விதிவிலக்குகளை நாம் தொடர்ந்து பேசுவோம்.Dead Poets Society இல் வந்த ஆசிரியரைப் போல, லெமன் விற்கும் சிறுமியைப் போல, நிறைய வசதிகள் பெருகும் என்றாலும் தனக்கு அறமென நினைப்பதை தயக்கமின்றிச் சொல்லி வேலையிலிருந்து துரத்தப்படும் அந்த Promised Land ஆணைப் போல,  நாம் புனைவுகளில் மட்டுமின்றி வாழ்விலும் நம்மைப் புதிதாய்க் கண்டுபிடிப்போம்.

**************

 

(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை, 2023)

காலத்தின் முன் தொலைந்து போகாத படைப்பாளிகள்

Sunday, November 12, 2023

 

1.


நான் திரைப்படம் குறித்து எழுதிய முதல் விமர்சனம் ‘Finding Forrester’ என நினைக்கிறேன். இந்தத் திரைப்படத்தைப்  படித்துக் கொண்டிருந்தபோது பார்த்தேன். அதன் பாதிப்பில் ஒரு விமர்சனம் எழுதி, அது  வெளியான பத்திரிகையொன்றில் வெளிவந்தது. ஒரு கறுப்பின பதின்மனுக்கும், ஒரு எழுத்தாளருக்கும் இடையில் மலரும் நட்பைப் பற்றிய படமது. 


எழுத்தாளர் புலிட்ஸர் விருது பெற்ற படைப்பாளி என்றாலும் எல்லா வெளியுலகத் தொடர்புகளையும் மூடி தன் வீட்டுக்குள் வசிப்பவர். தன்னை திறந்து காட்டாத எழுத்தாளர் அந்த கறுப்பின பதின்மனுக்கு ஆங்கிலக் கட்டுரைகளைத் திருத்திக் கொடுக்கும் நண்பராகின்றார். இதில் Sean Connery எழுத்தாளராக நடித்திருப்பார். இது ஒரு கற்பனைப் பாத்திரம் என்றாலும், J.D.Salinger இன் பாதிப்பு இப்படத்தில் தனக்குள் இருந்ததென்று சீன் கானரி பின்னர் சொல்லியிருக்கின்றார்.


ஆங்கிலத்தில்  சாலிஞ்ஜர் (Salinger), ஹார்ப்பர் லீ (Harper Lee) போன்றவர்கள் தமது முதலாவது நாவல்களின் பெரும் வெற்றிகளுக்குப் பின் எதையும் எழுதாமல் அல்லது எழுதினாலும் நூலாக வெளியிடாமல் இருந்தவர்கள். ஆனால் அவர்களின் நாவல்கள் பெரும் பாதிப்பை வாசகர்களிடையே ஏற்படுத்தி அடுத்து என்ன நாவல்கள் எழுதுவார்களெனக் காத்திருக்க வைத்தவை. சாலிஞ்ஜரின் 'The Catcher in the Rye' பதின்மன் ஒருவனின் வாழ்க்கையைச் சொன்னாலும், பல நாடுகளில் அது தடைசெய்யப்பட்டது. அமெரிக்காவிலும் பல பாடசாலைகளில் கத்தோலிக்க மதத்தை நிந்தனை செய்வதாக படிப்பது தடை செய்யப்பட்டது. 1951 இல் வெளியிடப்பட்ட இந்த நாவல் மில்லியன கணக்கில் விற்கப்பட்டிருக்கின்றது. இத்தனை ஆண்டுகள் கழிந்தபின், இப்போதும் பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. 


நான் கனடாவில் உயர்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு இந்த நாவலும், ஹார்பர் லீயின் To Kill a Mockingbird உம் , பாடத் திட்டத்தில் இருந்தன. எங்கள் ஆசிரியர் ஹார்ப்பர் லீயைத் தெரிவு செய்ததால் நாங்கள் To Kill a Mockingbird ஐ வாசித்தோம். இப்போது ஹர்ப்பர் லீயின் நாவலும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. அமெரிக்கக் கறுப்பினத்தவர்களை காக்க வந்த ஒரு மீட்பராக அதில் வெள்ளையின Atticus Finch என்ற பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பது  குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றது. கிட்டத்தட்ட 20 இடங்களில் மேல் கறுப்பினத்தவர்களை இழிவுசெய்யும் 'N' வார்த்தை பாவிக்கப்பட்டதை, 9/10ம் வகுப்பு மாணவர்கள் வாசிப்பு சரியா என்று சர்ச்சைகளும் போய்க் கொண்டிருக்கின்றன. 


ஹார்ப்பர் லீ என்ற வெள்ளையினப் பெண்மணி, Scouts என்கின்ற ஒரு வெள்ளைச் சிறுமி வயதுக்கு வருகின்ற பார்வையினூடு இதை எழுதினாலும், அந்தக் காலத்தில் இருந்த நிறவாதத்தை இனங்காட்டிய ஒரு முக்கியமான நாவல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்நாவல் 1960களில் வெளிவந்தாலும், 1930காலகட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. எனவே அந்தக் காலகட்டத்து உலகத்தைத்தான் ஹர்ப்பர் லீ பிரதிபலித்தார் என்பதும் சரியே. ஆனால் அதேசமயம் ஒடுக்கப்பட்ட மக்கள், நெடுங்காலமாக அடிமையாக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளும், குரல்களும் முக்கியமானதே. 


ஒடுக்கப்படுவோர் குரல் என்றும் எங்கேயும் பிற எதையும் விட முதன்மை கொடுத்துச் செவிமடுக்க வேண்டியவை. இன்றைக்கு இந்த ஆங்கிலேய நாடுகளில் (அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா) கறுப்பின/பூர்வீக மக்கள் ஏற்கனவே நடத்திய பெரும் போராட்டங்களால்தான், எங்களைப் போன்ற மண்ணிறமக்கள் ஒரளவுக்குச் சுதந்திரமான மனிதர்களாக இந்த மேற்கத்தைய நாடுகளில் வாழ முடிகின்றது என்பதை நாம் உணர்ந்தால் நாம் யாரின் குரல்களோடு சேர்ந்து ஓங்கி ஒலிக்கவேண்டும் என்பது புரியும்.


0000000



சாலிஞ்ஜரும் 'Catcher in the Rye' எழுதியபின் பெரிதாக எந்த நாவலும் எழுதவில்லை. அதற்கு முன்னர் எழுதிய சில கதைகளைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பும், 'Franny and Zooey' ஒரு குறுநாவல் (+ சிறுகதை) தொகுப்பும் வெளியிட்டதைத் தவிர வேறு எதுவும் எழுதவில்லை. அதன்பிறகு ஒரு தலைமறைவு வாழ்க்கைக்கு சாலிஞ்ஜர் போய் விட்டிருந்தார். இப்படி தலைமறைவில் இருந்த சாலிஞ்ஜரோடு 90களின் நடுவில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட தொடர்புகளை வைத்து ஒரு நூல் வெளிவந்திருக்கின்றது. அது My Salinger Year. 


ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற Joanna Rakoff  ஒரு பதிப்பகத்தில் முகவராகச் சேர்கின்றார். அவர்களே சாலிஞ்ஜருக்கு முகவராக இருப்பதால், ஜோனாவுக்கு சாலிஞ்ஜரோடு தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. சாலிஞ்ஜரின் 1950 நாவலுக்கு, 1990களிலும் பல வாசகர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். சாலிஞ்ஜர் தனது தலைமறைவு வாழ்க்கையால் எவரோடும் தொடர்பு கொள்வதில்லை. அவரது முகவரியோ/தொலைபேசி எண்ணோ எவருக்கும் கொடுக்கக்கூடாது என்று ஜோனாவின் நிறுவனம் ஜோனாவுக்கு எச்சரிக்கை செய்கின்றது. 


ஜோனாவின் பெரும்பாலான வேலை, Catcher in the Rye இற்கு வரும் வாசகர் கடிதங்களை வாசித்துவிட்டு குப்பைக் கூடைக்குள் எறிவதாகும். சிலருக்கு மட்டும், 'உங்கள் கடிதத்திற்கு நன்றி, ஆனால் சாலிஞ்ஜர் இந்தக் கடித்தை வாசிக்க விரும்பவில்லை' என்று பதிப்பகத்தினூடு ஒரு சிறுகடிதம் மட்டும் அனுப்பி வைக்கப்படுகின்றது.


ஒரு காலத்தில் எதையும் வாசிக்காமல் குப்பைத்தொட்டிக்கு கடிதங்களை எறிந்த பதிப்பகம் ஒரு அசம்பாவிதத்தின் பின், கடிதங்களை திறந்து வாசித்துவிட்டு குப்பைத் தொட்டிக்குள் எறிகின்றது. அது பீடில்ஸ் இசைக்குழுவின் ஜான் லெலனின் கொலைக்குப் பிறகாகும். ஜான் லெனனை சுட்டுக்கொன்ற கொலையாளி தன் கையில் வைத்திருந்தது சாலிஞ்ஜரின் இந்த நாவலையே. இந்நாவலே தன்னை இப்படி ஜான் லெனனைக் கொலை செய்யத் தூண்டியது என்று ஒரு வாக்குமூலத்தை அந்த கொலையாளி கொடுத்திருந்தார். 


அதன்பின் இந்த பதிப்பகம் சாலஞ்ஜருக்காய் வரும் எல்லாக் கடிதங்களையும் திறந்து வாசிப்பது என்று முடிவை எடுக்கின்றது. ஒருபோதும் எந்தக் கடிதத்திற்கும் சாலிஞ்ஜர் பதில் எழுதுவதில்லை என்கின்றபோதும் தினமும் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருகட்டத்தில் அந்தக் கடிதங்களின் உட்பொதிந்திருக்கும் சுவாரசியமான விடயங்களால், பதிப்பகத்திற்குத் தெரியாமல் ஜோனா பதில் கடிதங்களை இரகசியமாக எழுதத் தொடங்குகின்றார். சாலிஞ்ஜரோடு தொலைபேசியில் அவ்வப்போது பேசும் ஜோனாவின் எழுத்தாளராகும் கனவைக் கண்டு சாலிஞ்ஜர் அவரைத் தினமும் முப்பது நிமிடமாவது எதையாவது எழுதும்படி அறிவுறுத்துகின்றார். 


மேலும் நீ இந்த அலுவலகத்தில் இருந்து வரும் பிரதிகளை வாசித்து திருத்தங்களைச் செய்யும் ஒருத்தியல்ல, படைப்பாளி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே என்கின்றார். தொழிலில் தேர்ந்து ஒரு சிறந்த எடிட்டராக/முகவராக ஒருகட்டத்தில் வரும் ஜோனா இந்த வேலையைத் துறந்து தனது எழுத்தாளராகும் கனவைப் பின்தொடர்ந்து போகின்றார். அந்த ஜோனா தன் சொந்த அனுபவங்களை வைத்து எழுதிய நூலே பின்னர் இதே பெயரில் (My Salinger Year) திரைப்படமாகவும் வந்திருக்கின்றது.


ஆக 1950களில் ஒரு நாவல் எழுதப்பட்டு இன்று 70 ஆண்டுகள் கழிந்தபின்னும் ஏதோ ஒருவகையில் இந்நாவல் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சாலிஞ்ஜர் இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பங்குபற்றியவர். அமெரிக்க உளவுத்துறையில் வேலை செய்தவர் எனவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இறுதிக்காலத்தில் தனது மகளிடம் 'நீ எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் உன்னால் எரிகின்ற தசையின் மணத்தை உனது மூக்கிலிருந்து ஒருபோதும் அகற்றமுடியாது' என போரின் கொடும் நினைவுகளில் இருந்து ஒருபோதும் தப்பிவிட முடியாதிருப்பது பற்றிக் கூறியிருக்கின்றார். 


சாலிஞ்ஜர் ஆகக்குறைந்தது இன்னமும் பதிப்பிக்காத இரண்டு நாவல்களை எழுதியிருக்கின்றார் எனச் சொல்லப்படுகின்றது. 'There is a marvelous peace in not publishing ... I like to write. I love to write. But I write just for myself and my own pleasure' என பதிப்பிப்பதை விட எழுதுவதையே அதிகம் விரும்பிய சாலிஞ்ஜரின் புதிய நாவல்கள் இனிவரும் காலங்களில் வெளிவரலாம். அப்போது சிலவேளைகளில் இன்னொருவகையான சாலிஞ்ஜரை நாம் அடையாளம் கண்டுகொள்ளவும் கூடும்.


மனிதர்களாகிய நாம் உதித்தும், மறைந்தும் போய்க் கொண்டிருக்கின்றோம். ஆனால் சிலரையே இந்த உலகம் நினைவில் நீண்டகாலம் வைத்துக் கொண்டிருக்கின்றது. எழுத்தாளர்களாக இருக்கும் பலர் தனி வாழ்வில் வறுமையிலும் வேதனையிலும் உழலக்கூடும், ஆனால் அவர்களின் படைப்புக்கள் காலம் கடந்தும் பேசப்படும் ஆசிர்வாதத்தையும் இதே எழுத்தே அவர்களுக்கு மனமுவந்து அளிக்கவும் செய்கின்றது.


***********


(நன்றி: 'அம்ருதா' - கார்த்திகை, 2023)


தேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்'

Sunday, March 15, 2020

1.

பதின்மத்தில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து பாடசாலையில் ஆங்கிலப்பாடங்களை எடுத்தபோது, வாசிப்பதற்கெனச்  சில நாவல்கள் எங்கள் பாடத்திட்டத்தில் இருந்தன. ஒழுங்கான ஆங்கிலப் பரிட்சயமில்லாது அதை வாசிக்கும் கஷ்டம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் என்னைப் போன்ற 'புலம்பெயரி'களுக்கு அந்த நாவலின் சூழல், பாத்திர வார்ப்புக்கள் போன்றவை முற்றுமுழுதாக அந்நியமாக இருந்தன. அதனால் பல நாவல்களை 'சும்மா' எழுந்தமானமாய் விருப்பின்றியே வாசித்திருக்கின்றேன். அன்றையகாலத்தில் வாசித்த Great Gatsby, To Kill a Mockingbird, Lord of the Flies போன்றவை மட்டுமே கொஞ்சம் விதிவிலக்கு.

எனக்குத் தெரிந்த நகரை, எனக்குப் பரிட்சயமான வாழ்வை, என்னைப் போன்ற மண்ணிற மக்களின் கதைகளைச் சொல்பவர்களாக, எம்.ஜி.வாஸன்ஜி, ஷியாம் செல்வதுரை போன்றவர்களைப் பிறகு கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் போன்றவர்களின் பாத்திரங்கள் இவர்களின் நாவல்களில் இருக்கின்றார்களேயென, அவர்களை நெருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் தொடர்ந்து தேடித்தேடி வாசிக்க எனக்கு முடிந்திருந்தது.

தமிழிலும் முற்றுமுழுதாகப் புலம்பெயர்ந்த வாழ்வைச் சொன்ன புதினங்கள் என்று பார்த்தால் அரிதாகவே இருக்கும். அதுவும் இலட்சக்கணக்காய் தமிழர்கள் வாழும், நான் வாழும் ரொறொண்டோ நகரின் பின்னணியில் நிகழும் கதைகளைச் சல்லடைபோட்டுத்தான் தேடவேண்டியிருக்குக்கும். அப்படி, ஒரு விதிவிலக்கான புதினமாக தேவகாந்தனின் 'நதிமேல் தனித்தலையும் சிறுபுள்' வெளிவந்திருக்கின்றது.

இலங்கையில் ஒரளவு வசதியாக மனைவி மங்களநாயகியுடனும், மூன்றுபிள்ளைகளுடன் இருக்கும் சிவப்பிரகாசம்  குடும்பத்தை நாட்டில் விட்டுவிட்டு கனடாவுக்குப் புலம்பெயர்கின்றார். அவரைக் காசு கட்டிக் கூப்பிட்ட உறவினர்கள், அவரைச் சுரண்டுவதைக் கண்டு, உறவுக்காரரின் வீட்டிலிருந்து வெளியேறி, தனியே சென்று வாழத்தொடங்கின்றார். அப்படி இருந்தபடியே மனைவியையும், பிள்ளைகளையும் கனடாவுக்கு ஏஜென்சி மூலம் எடுப்பிக்கின்றார். அவர்கள் சிங்கப்பூரில் கொஞ்சக்காலம் சிக்கிக்கொள்ள, எப்போது அவர்கள் வருவார்களென்ற உற்சாகத்துடன் முதலில் எதிர்பார்த்திருந்த சிவப்பிரகாசம், இனி எப்போதாவது வரட்டுமென காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டுக் காத்திருக்கின்றார்.

ஒருமாதிரி மங்களமும், அவரின் மூன்று பிள்ளைகளும் கனடாவுக்கு வந்தாலும், அவர்கள் தான் இலங்கையிலிருந்து விட்டு வந்த குடும்பம் அல்ல என்பது சிவப்பிரகாசத்துக்குப் புரிகிறது. மங்களமும் கனடா வந்த கொஞ்சக் காலத்திலேயே, சிவப்பிரகாசத்தை எல்லாவிடயங்களிலும் முந்திச் செல்கின்றார். சிவப்பிரகாசத்துக்கு இதையெல்லாவற்றையும்விட  தனக்கான காமத்தை மனைவி தீர்ப்பதில்லையென்ற பெருங் கவலை இருக்கிறது. மங்களமோ அந்தக் காமத்தைத் துருப்பாகக் கொண்டே சிவப்பிரகாசத்தை மேவி மேவிச் செல்கின்றார். ஒருநாள் காமம் தறிகெட்டலைய, ஒரு முக்கிய விடயத்தைக் காரணங்காட்டி மங்களம் விலகிப்போக, சிவப்பிரகாசம் வன்முறையைப் பாவிக்கின்றார். அது பெருத்து, பிள்ளைகள் பொலிஸை அழைக்க, சிவப்பிரகாசத்தால் வீட்டுக்கு என்றென்றைக்குமாய் வீட்டுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்படுகின்றது.

சிவப்பிரகாசத்துக்கு திரும்பவும் தனிமை வாழ்க்கை. அதன் பிறகு அவர் தன் வாழ்வில் இரண்டு பெண்களைச் சந்திக்கின்றார். ஒரு பெண்ணோடு அவருக்கு விரும்பிய காமம் கிடைக்கின்றது. ஆனால் அந்தப் பெண்ணின் மகனின் வடிவில் அந்த உறவும் சிதைகின்றது. இன்னொரு பெண்ணோடோ வாசிப்பின் நிமித்தம் நட்புக் கனிந்து, நல்லதொரு உறவு முகிழும் சந்தர்ப்பத்தில் வேறொரு சிக்கல் வருகின்றது.

2.

நாவலில் நதி ஒரு முக்கிய படிமமாக வந்தபடியே இருக்கின்றது. ஸ்காபரோ ரூஜ் (Rouge) நதியின் வரலாறு, கனடாவின் பூர்வீகக்குடிகளிலிருந்து தொடங்கி தற்காலம் வரை விரிவாக விவரித்துச் சொல்லப்படுகின்றது. நதிகளே இல்லாத இலங்கையின் வறண்ட ஊரிலிருந்து வந்த சிவப்பிரகாசத்துக்கு நதியோடு இருந்தலென்பது பேரனுபவமாக இருக்கிறது. இந்த நாவலை, சிவப்பிரகாசம் சந்திக்கும் மூன்று பெண்களும், அவர்களினூடாகத் தன் வாழ்வைத் தரிசிக்கும் சிவப்பிரகாசமும் அவரின் தனிமையும் என்று ஒரு சுருக்கத்துக்காய்ச் சொல்லிக்கொள்ளலாம். சிவப்பிரகாசத்தின் வாழ்வினூடாக ரொறொண்டோ மாநகரில் தமிழரின் 90களுக்குப் பின்பான வாழ்க்கையின் குறுக்குவெட்டைப் பார்க்கமுடியும்.

சிவப்பிரகாசம் ஒரு பெண்ணோடு போய் வாழ்ந்துவிட்டார் என்பதற்காக முகங்களைத் திரும்புகின்ற உறவுகளும், நண்பர்களும், அதே சிவப்பிரகாசம் தன் மனைவியின் மீது வன்முறையைப் பிரயோகிக்கும்போது, எவ்விதத் தயக்கமுமின்றி ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பது நாவலின் சற்று விசித்திரமான பகுதியெனத்தான் சொல்ல்வேண்டும். ஒருவர் தனக்குப் பிடித்த ஒருவரோடு வாழ்வதற்கு ஏன் முகத்தை இந்த மக்கள் திருப்பிக்கொள்ளவேண்டும்? உண்மையில், அவர் வன்முறையைத் தன் துணையின் மீது பாவித்திருக்கின்றார் என்பதற்கு அல்லவா முகத்தைச் சுழித்திருக்கவேண்டும்.

சிவப்பிரகாசம் தன் இயலாத்தன்மைகளை அவ்வப்போது வெளிப்படுத்தினாலும், ஒருபோதும் பிற பெண்களை விளங்கிக்கொள்ள முடியாதவர் போன்றே, நாவலை வாசிக்கும்போது தெரிகிறது. அவர் அந்தக் காலத்தைய மனிதருமல்ல. அவருக்கு மூன்றாவதாக ஒரு பெண்ணோடு உறவு வரும்போது அவர் தனது அறுபதுகளின் மத்தியில் இருக்கின்றார். ஒரு பெண்ணோடு மட்டுமே ஒருவரின் வாழ்க்கை முடிவதில்லையென பிற பெண்களைத் தேடும் (அது பிழையுமல்ல) சிவப்பிரகாசத்துக்கு பெண்கள் தமது சொந்தக்காலில் சொந்த விருப்பில் எப்போதோ தமது வாழ்வை அமைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதை அறியாதிருப்பது சற்று வியப்பாய்த்தானிருக்கின்றது.

அதுபோலவே தனது காமக்கிறுதிகளை விளங்கிக்கொள்ளவில்லையென தன் மனைவி மீது வன்முறையைப் பாவிக்கின்ற சிவப்பிரகாசத்துக்கு, இன்னொரு தமிழ்ப்பெண்ணான வின்ஸி, அவரை மொன்றியலில் சிவப்பிரகாசம் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே காமத்தைத் திளைக்கக் திளைக்கக் கொடுக்கின்றவராக இருக்கின்றார். ஆக சிவப்பிரகாசம் அவ்வளவுமீறி வெட்கப்படும், காமமா ச்சீய் என்கின்ற அந்தக் காலத்தைய ஆசாமியும் அல்லவென வாசகர்க்கு விளங்கிவிடுகின்றது.

அதே சிவப்பிரகாசம், காமத்திலும் காதலிலும் திளைக்க நல்ல வாய்ப்பிருக்கும் கிநாரியை அணுக அல்லது கிநாரி அவரை அணுகுகின்றபோது மட்டும், திருப்பவும் அந்தப் பழைய காலத்து ஆள்போல நடந்துகொள்ளும்போது வாசிக்கும் எங்களுக்கு சற்று பொறுமையின்மை வருகிறது. வின்ஸிக்கு ஒரு மகன் இருக்கின்றபோதும், அந்த உறவுக்குப் போகத் தயார் நிலையிலேயே சிவப்பிரகாசம் இருக்கின்றார்,  ஆனால் கிநாரி என்கின்ற இன்னொரு ஆர்மேனியப் பெண்ணுக்கு ஒரு மகள் ஆர்மேனியாவில் இருக்கின்றாள் என்பதை அறியும்போது மட்டும், அவருக்குள் ஒரு விலகலும் தயக்கமும் வந்துவிடுகின்றது ஏன் என்பது எமக்குப் புரிவதில்லை.

இத்தனைக்கும் சிவப்பிரகாசத்துக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அத்தோடு கிநாரியின் மகள் பதினெட்டு வயதுக்கு அண்மையாக இருப்பவளும், அவளுக்கென்று காதலனை வைத்திருப்பவளும் கூட.  அவள் கனடா வந்ததன்பின், தாயோடு இருக்கும் காலம் கொஞ்சமாகவே இருக்கும். மகளைக் காரணங்காட்டி கிநாரியும், சிவப்பிரகாசமும் உரையாடுகின்ற இடமெல்லாம் ஒருவித நாடகீயத்தன்மையாகவே தோன்றுகின்றது.ஏனெனில் 55 வயதிலும், 65 வயதிலும் இருக்கும்போதாவது ஒரு இணை தமது முதுமையைப் பற்றியும், தமக்கான துணைகளைப் பற்றியும் பேசாது, மகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி தமக்கான உறவுக்குத் தடுப்பாணை போடுவார்களோ என்றே யோசிக்க முடிகிறது.

நாவலின் இன்னொரு பலவீனமாக, சிவப்பிரகாசம் மனைவி மங்களத்துக்கு அடித்து, வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டபின், தன் பிள்ளைகளை ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதேயில்லை. ஒரே நகரத்திலே அவர்களோடு வாழ்ந்தபடி இருக்கும் சிவப்பிரகாசம், தனது பிள்ளைகளைக்  கண்டு பேசவேண்டும், பழகவேண்டுமென்று ஒருபோதும் ஆசைப்பட்டிருக்கவே மாட்டாரா? ஸ்காபரோ சிவிக் சென்ரரில் ஒரு இலக்கியநிகழ்வில் பங்குபெற வரும் சிவப்பிரகாசம் தற்செயலாக அருகிலிருந்த அங்காடிக்குள் தனது வளர்ந்த மகன் ஒரு வெள்ளைப்பெண்ணொடு காதல் செய்கின்றபோதே பார்க்கின்றார். அதற்குப்பிறகு அந்த மகன் அவரின் மூத்தமகளின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க வரும்போது மட்டுமே சந்திக்கின்றார். மகனை இரண்டு முறை பார்த்தாரென்றால், அவரது மகள்களை ஒருபோதும் திருப்பிப் பார்க்காதவராகவே இந்த புதினத்தில் சொல்லப்படுகின்றது.

எத்தனையோ நூற்றுக்கணக்கான புத்தங்களைச் சேகரத்தில் வைத்து, வாசிப்பில் பெரும் விருப்புக் கொண்ட ஒரு மனிதர் தனது பிள்ளைகளிடம் கூட கொஞ்சம்  கருணை காட்டாவிட்டால் அவர்  இவ்வளவு புத்தகங்களை வாசித்துத்தான் என்ன என்றும் இந்தப் புதினத்தை வாசிக்கும் எமக்கும் தோன்றுகின்றது.

3.

இவ்வாறான சில பலவீனங்கள் நாவலுக்குள் இருந்தாலும், சுவாரசியமாக வாசிக்கும் நடையில் தேவகாந்தன் எழுதிச் சென்றிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அவரின் கடந்த சில நாவல்களைப் போல பல நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதாது, இந்த நாவலை நூறுபக்கங்களில் முடித்திருப்பதும் என்னைப் பொருத்தவரை மகிழ்ச்சியானது.

இந்த நாவல் தனிமையும், ஒரு மனிதரின் 'ஆன்மீக'த்தேடலும் என்றாலும், அதைவிட கூடத் துருத்திக்கொண்டிருப்பது சிவப்பிரகாசம் என்கின்ற ஆண் தன்னைத்தானே ஒருவகையில் நியாயப்படுத்திக்கொள்கின்ற பனுவல்போலவே தோன்றுகின்றது. அவர் இந்தநாவலில் சந்திக்கும் இரண்டாவது பெண்ணான வின்ஸி தன் மகனுக்காக சிவப்பிரகாசத்தோடான உறவைத் துண்டித்துவிடும்போதாவது, அவருக்கு தனது பிள்ளைகளின் நினைவு வந்திருக்காதா? எங்கேயோ தான்  தவறுவிட்டிருக்கின்றேன் என்று கலங்கியிருக்கமாட்டாரா? என்று யோசிக்கத் தோன்றுகின்றது.

நாவலின் இறுதியில் சிவப்பிரகாசத்துக்கு ஒரு தெளிவு வந்து முகங்கூட பிரகாசிப்பதாய்ச் சொல்லப்படுகின்றது. 'எவரது அன்பும் எவரது ஆதரவும் எவரது அரவணைப்பும் அவருக்கு இல்லாமல் போயிருக்கிறது. அது அறுதியான ஒரு தனிமைக்குள் அவரைத் தூக்கி வீசியிருக்கிறது' என்று கூறி  'ஒரு அனுக்கிரகம் ஒளிவெள்ளம்போல் அவரில் வந்து இறங்குகின்றது. அவர் பயணத்தின் திசையும், திசையின் மய்யமும் ஒரு புள்ளியாய் அவருக்குத் தரிசனமாகின்றன' எனச் சொல்லப்படுகின்றது. சிவப்பிரகாசத்துக்கு ஒரு தரிசனம் கிடைத்திருப்பது நல்லதுதான். அந்தத் தரிசனத்தில் அவர் சந்தித்த பெண்களையும், தனது பிள்ளைகளையும் விளங்கிக்கொள்கின்ற ஒரு பகுதியும் சேர்ந்தே நுழைந்திருந்தால் எவ்வளவு நல்லது போல நமக்கும் தோன்றுகின்றது.

தேவகாந்தனின் புதினங்கள் சிலது தொடக்கத்தில்  நன்றாகப் போய்க்கொண்டிருக்கும். ஒரு குதிரையைப் போலத் தன்பாட்டில் போகும் எழுத்தை,  பிறகு ஏதோ ஒருபுள்ளியில் சட்டென்று கடிவாளத்தைப் போட்டு இறுக்கி இழுத்துவிடுகின்றவராய் தேவகாந்தனின் எழுத்தைச் சில இடங்களில் அவதானித்திருக்கின்றேன். எழுத்து எங்கு அழைத்துச் செல்கிறதோ அப்போது கடிவாளத்தைக் கூட தூர எறிந்துவிடவேண்டியதுதான். அப்போதுதான் நாவல் தன்னளவில் தன்னை எழுதிச் சென்று எல்லைகளை மீறிச்செல்வதாக அமையும் எனச் சொல்வேன். இங்கேயும் தேவகாந்தன் நாவலின் மீது ஏறி கடிவாளத்தை இறுக்குகின்ற பல இடங்கள் இருக்கின்றன.

இவ்வாறான சில தடைகள்/இடைஞ்சல்களைத் தவிர்த்துப் பார்த்தால்,  புலம்பெயர் வாழ்வை - முக்கியமாய் ரொறொண்டோ மாநகரை- அடையாளப்படுத்தும் நாவல் என்றவகையில் இது முக்கியமானது. கொஞ்சப் பக்கங்களில் இந்த நாவலை முடித்ததாலோ என்னவோ இறுக்கமான நல்ல மொழிநடையும் இந்த நாவலுக்கு வாய்த்திருக்கின்றது. தேவகாந்தனைப் போல புலம்பெயர்ந்த தேசத்தில், எழுத்தில் இப்படி முழுமையாகக் கரைந்துகொண்டவர்கள் வெகு அரிதே என்பதால் அவர் மீது ஒருவகை மதிப்பிருக்கிறது. அந்த மதிப்பிருப்பதால்தான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவல்களைக் கறாராக வாசிக்கவும் வேண்டியிருக்கிறது.
...................................

(நன்றி: 'அம்ருதா' - மார்கழி, 2019)