கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’: இன்றைய காலத்தின் நாவல்

Wednesday, August 04, 2021

- எஸ்.கே.விக்கினேஸ்வரன்


ளங்கோவின் ‘மெக்ஸிக்கோ’ நாவல் பற்றி ஜீவநதியின் 150 வது இதழுக்கு ஒரு விமர்சனம் எழுதமுடியுமா என்று இதழாசிரியர் பரணீதரன் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். அந்த இதழ்  ‘ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழாக’  வரப்போவதாக வேறு குறிப்பிட்டிருந்தார். அதிகம் யோசிக்காமல் அவருக்கு ஓம் என்று பதில் போட்டுவிட்டேன். ஆனால் நாட்செல்லச் செல்ல ஒருவகைத் தயக்கம் எழத் தொடங்கியது. நான் இதுவரை காலத்தில் எப்போதாவது ஒரு நாவல் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறேனா, எழுதியவை எல்லாமே வெறும் அனுபவக் குறிப்புகளாக அல்லது அறிமுகக் குறிப்புகளாகத் தானே இருந்திருக்கின்றன. அப்படி இருக்க என்ன துணிவில் இந்த நாவலுக்கு மட்டும் எப்படி விமர்சனம் எழுத ஒப்புக் கொண்டேன்?. பேசாமல் ஒரு அனுபவ அல்லது அறிமுகக் குறிப்பை எழுதி அனுப்பிவிடலாமோ என்று குழம்பிக் கொண்டிருந்தேன்.


இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட நாவலை மீண்டுமொருமுறை திரும்ப வாசித்தேன். இரண்டாவது வாசிப்பின் போது நாவலுள் இன்னமும் அதிகமாக உட்செல்ல முடிந்தது உண்மைதான். ஆயினும் விமர்சனம் எழுதுவதற்கான உந்துதல் எளவில்லை. ஆனால் இப்போது இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலிருந்து சரியாக இரண்டு நாட்களுக்கு முதல் இளங்கோ தன் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். சிறிது காலத்துக்கு முன் எழுதப்பட்டதென அவர் குறிப்பிட்டிருந்தாலும், இப்பதிவை நான் இப்போதுதான் முதலாவதாக வாசித்ததாக நினைக்கிறேன். அந்தப் பதிவில் அவர் எழுதியிருந்த ஒரு விடயம் என்னை சற்று நின்று திருப்பி வாசிக்க வைத்தது.


அவர் எழுதியிருந்தார்:  “படைப்பை பார், படைப்பாளியைப் பாராதே'  என்பது எவ்வளவு முக்கியம் வாய்ந்த சொல்லாடல். ஆனால் நம் தமிழ்ச்சூழலில் அதை கேலிக்குரியதாக்கிய பெருமை, இதன் உண்மையான அர்த்தத்தை விளங்காதவர்களால் மட்டுமில்லை, இதை முன்னிலைப்படுத்திய சிலராலும் நிகழ்ந்திருக்கின்றது என்பதே அவலமானது.  ‘ படைபைப் பார், படைப்பாளியைப் பாராதே' என்பது எழுதியவர் மற்றும் வாசிப்பவருக்கு ஒரு படைப்பை முன்வைத்து  எத்தகைய பெரும் சுதந்திரத்தைத் தருகின்றது என அநேகர் எண்ணிப் பார்ப்பதேயில்லை. படைப்பை எழுதியபின்னர், அது படைப்பாளிக்குச் சொந்தமில்லை. அதை முன்வைத்து எவ்வகையான வாசிப்பையும் வாசகர் செய்வதற்கான ஒரு வெளி திறந்துவிடப்படுகின்றது. வாசகர், தனக்குரிய வாசிப்பில் அந்தப் பிரதியை எவ்வகையாகவும் புரிந்துகொள்ளமுடியும். அதை படைப்பாளி, இது நானெழுதிய படைப்பு இப்படித்தான் விளங்கிக்கொள்ளவேண்டும் என்று எந்தவகையிலும் கட்டாயப்படுத்தமுடியாது. அவ்வாறு ஒரு படைப்பாளி தன் படைப்புக் குறித்து விளக்கந் தந்தாலும், அந்தப்படைப்பை எழுதியவர் என்றவகையில் உரிமைகோரி எதையும் கூறமுடியாது. அவரும் இன்னொரு வாசகராகவே கருத்துச் சொல்லமுடியும்.”  


இதை வாசித்த போது எனது சிந்தனை ஒரு மூன்று நான்கு தசாப்தங்களுக்கு முந்திய சூழலில் நடந்த இலக்கிய உரையாடல்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. அந்த உரையாடல்கள் அந்தக்காலகட்டத்தின் இலக்கியங்களை மதிப்பிட்டதிற் பெரும்பங்காற்றிய போக்குப்பற்றிய உரையாடல்களாக இருந்தன. இந்த உரையாடகள் உண்மையில் இலக்கிய விமர்சனம் சார்ந்ததாக இருந்ததை விடவும் எழுத்தின் அல்லது எழுதுபவர்களின் கருந்து நிலை சார்பாகவே பெரிதும் அமைந்திருந்திருந்தன என்று நினைக்கிறேன். அல்லது கருத்து நிலை பற்றிப் பேசப்படுவதே அப்போதைய பிரதான விமர்சனமாக இருந்தது. படைப்பில் வெளிப்படும் கருத்து நிலை, அல்லது சமூக நோக்கு என்பவை தொடர்பான கேள்விகளும், மறுப்புகளும் படைப்புகள் பற்றிய விமர்சனங்களில் முக்கிய அல்லது முழுமையான கவனத்தை எடுத்திருந்தன. (அத்தகைய ஒரு விமர்சனப் போக்குகுக்கும் கூட அன்றைய நிலையில் ஒரு தேவை இருக்கவே செய்தது. இது பற்றிப் பேசுவதானால் தனியாக எழுத வேண்டும்.) இந்தப் போக்கும் கூட உருவாகிவந்த சமூக மாற்றத்தோடு இணைந்து வெளிப்பட்ட வரலாற்று நிகழ்வுதான். சரியாகச் சொல்வதானால், அது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை. ஆனால் அந்தத் திருப்புமுனை எவ்வளவுக்கு நியாயமானதோ, அவ்வளவுக்கு அது, தன்னளவில் முழுமையற்றதாகவும் இருந்தது. அது இன்னமும் ஆழமும் விரிவும் கொண்டு செழுமைப்படுத்தப்பட வேண்டியதாக இருந்தது. 


பழைய இலக்கியங்களை, மறுவாசிப்புச் செய்தும் புதிய இலக்கியங்களை அந்த ஒளியில் வளர்த்தெடுக்க வேண்டியதுமான பாரிய வரலாற்றுப் பொறுப்பு அதற்கு இருந்தது. ஆனால் அது ஆரம்பத்தில் அப்படித் தொடங்கியபோதும், அந்த அடிப்படையின் தொடர்ச்சியான வளர்ச்சியாக விரிவதற்குப் பதிலாக  இலக்கியத்தை கருத்துருவாக்கத்துக்கான சாதனமாகக் கருதுகின்ற நிலையை நோக்கித் திரும்பியது. அல்லது அத்தகைய ஒரு செல்நெறியே சரியானது என்று நம்பியது, .இதன் விளைவாக, இந்த விமர்சனப் போக்கினால் அங்கீகரிக்கப்படும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளைத் தூக்கி நிறுத்துவதும், மற்றவைகளை ஒதுக்குவதும் என்ற நிலை உருவாகத் தொடங்கியது. இலக்கியம் என்பது வெறுமனே கருத்து நிலைசார்ந்து மட்டும் நோக்கப்படுகின்ற ஒற்றைப் பரிமாணப் பொருள் அல்ல என்ற உண்மையை அது அடையாளம் காண தசாப்தகாலம் எடுத்தது. இலக்கியம் என்று பொதுவான வரையறைக்குள் அடங்கும் அதன் எல்லா வடிவங்களுக்கும் பொதுவானதாகவும், முக்கியமானதாகவும், கருத்துநிலை இருந்தபோதும், அது தவிர்ந்த இன்னும் பல்வேறு அம்சங்களும் இருக்கின்றன என்பது கவனத்திலெடுக்கப்படாமலே இந்த விமர்சனப் போக்கு இயங்கியது.


ஆனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலக்கியங்கள் எவ்வாறு மதிப்பிடப்பட்டன என்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. இயல்பானதென ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூக நீதிக்கு இசைவாக அமைந்த பொதுவான கருத்து நிலையும் அல்லது சிந்தனைப் போக்கும், அதன் அடிப்படையான, வாழ்வுமுறையும் முரணற்றதாக, ஏற்றதென்று நம்பப்பட்ட காலத்து இலக்கியங்கள் பெரிதும் அக்காலத்தின் சமூகநீதியையே பேசின. அது மட்டுமல்லாமல், அவற்றின் நிலைபேறுடமையை வலியுறுத்தின. இந்தப் போக்கினை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இலக்கியங்களில்,சொல், ஓசை, சொல்லும் முறையின் பல்பரிமாணத் தன்மை, கற்பனையின் ஆழமும் விரிவும் என்பவற்றுடன், சொல்லும் முறைக்கான இலக்கண விதிமுறைகளும் படைப்பின் மீதான மதிப்பீட்டுக்கு அடிப்படைகளாக அமைந்திருந்தன. அங்கு கருத்துநிலைமீதான கேள்விகள் இருப்பதில்லை. அப்படி ஏதாவது இருப்பினும், அவை அடிப்படைக் கருத்துநிலையில் எழும் சிறியளவான மீறல்களாகவே கொள்ளப்பட்டன. அவை இலக்கியத்தின் தகுதியைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியமானவையாக இருக்கவில்லை.


ஆனால். சமூக வாழ்வுக்கான கருத்துநிலைகளில் பாரிய மோதல்கள் நடந்துகொண்டிருக்கும் நவீன காலச் சூழலில், இலக்கியத்தின் தகுதியைத் தீர்மானிக்கும் முக்கிய இடத்துக்கு அவை வருவது தவிர்க்கமுடியாத தேவையாகவும், இயல்பாகவும் அமைந்துவிடுகிறது. இந்த நிலை எந்தளவுக்கு தீவிரத் தன்மை அடைகின்றது என்றால், இலக்கியத்தின் மற்றைய அடிப்படையான கூறுகளைப் புறந்தள்ளியே கூட, தானே இலக்கியத்தின் பிரதான அம்சமாகவோ அல்லது ஒரே அம்சமாகவோ கூட இருக்கலாம் என்று நிறுவிவிடுவதை ஒரு சமூக நியாயமாகவே வலியுறுத்தும் இடத்துக்கு அது வந்து சேருவதுதான். இத்தகைய ஒரு சூழ்நிலையில் எழுந்த, தவிர்க்கமுடியாத எதிர்ப்புக் குரல்களில், பல்வேறு தொனிகள் இருந்தன. பல்வேறு கருத்துநிலைகளும் இருந்தன. அதாவது கருத்து நிலை ஒன்றும் முக்கியமே அல்ல என்பது முதல், இலக்கியம் இலக்கியமாகவே இருக்க வேண்டும், அது சமூகத்தின் அரசியலுடன்,அதாவது சமூகக் கருத்து நிலையுடன் சம்பந்தப்படக்கூடாது என்பது வரையான பரப்பில் இந்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இவற்றுள் ஒன்றாகவே நான் இந்த ’படைப்பாளியின் மரணம்” (The death of the Author -Roland Barthes ) என்ற குரலையும் அதன் நீட்சியாக வந்த ’படைப்பைப் பார்,படைப்பாளியை பாராதே’ என்பதையும் புரிந்துகொள்கிறேன்.


கருத்து நிலை சார்ந்த இந்த இரு போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கிய முயற்சிகள் நமது சூழலிலும், பொதுவாகத் தமிழிலும் நடக்கவே செய்தன. ஆயினும் அந்தக் காலத்துச் சூழலின் இறுக்கம் காலத்தோடு கரைந்து, இக்காலத்துக்குரிய இலக்கியங்கள், இலக்கியத்துக்கேயுரிய பண்புகளுடனும் இக்காலத்தின் முன்னேறிய கருத்து நிலைகளைக் கொண்டவையாகவும் வரத்தொடங்கியுள்ளன. ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் பல படைப்பாளிகளிடம் இந்த ’இயல்பான சமூக நீதிக்கு’ ஏற்ற வகையிலான படைப்புகள் இலக்கிய முழுமையுடன் வெளிவருவதைக் காணக் கூடியதாக உள்ளது. அந்தவகையான படைப்பாளிகளில் முக்கியமான ஒரு படைப்பாளியாக நான் இளங்கோவை அடையாளம் கண்கிறேன். கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் என்று விரியும் அவரது இலக்கியப் பயணத்தில், கட்டுரைகளும், கதைசொல்லலும் அவருக்கு மிகவும் ‘வாலாயமானவையாக’ வந்து சேர்ந்திருக்கின்றன. இளங்கோ என்ற எழுத்தாளரை. ஒரு படைப்பாளியாகவும், ஒரு நபராகவும் நான் அறிவேன். அவரையும் அவரது எழுத்துக்களையும் இரு வேறு, ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத தனிமங்களாக என்னால் பார்க்க முடியவில்லை. அவரது நூலை, நான் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியாது என்ற அர்த்தத்தில் அதில் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், எழுதப்பட்ட பிரதி மாறுவதில்லை, ஆனால் எழுதுபவர் மாறுவார், அவரது இன்னொரு படைப்பு முன்னதைப் போல் இருப்பதில்லை, உண்மையில், இருக்க முடியாதும் கூட என்பதால் இவை இளங்கோவுக்கு மட்டுமல்ல யாருக்குமே பொருந்துவன தான். ஆனால் இன்னொன்றும் உண்மை. ஒரு பிரதிக்கு பல்வேறு வாசிப்புகள் இருக்க முடியும் . ஒரு படைப்புப் பற்றிய புரிதல் என்பது பார்ப்பவரின் பார்வையிலும் தங்கி இருப்பதால், அது எப்போதும் முழுமையாக அதாவது எலோருக்கும் ஒரேமாதிரிப் புரிகிற முழுமையாக இருக்க முடியாது. அதே காரணத்தினாலேயே, ஒரு பிரதியே ஒருவருக்கே, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அர்ததத்தையும், புரிதலையும் கொடுக்க முடியும்.


இளங்கோவின் ‘மெக்சிக்கோ’ இதற்கு நல்ல உதாரணமான ஒரு நாவல்.


000  


அண்மையில் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களது ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட நாவல் போட்டியில் பரிசு பெற்ற நாவல் என்ற வகையில் அது வெளிவரும் போதே பரவலான அறிமுகத்துடன் வெளிவந்தது. ஆனால், அத்தகைய ஒரு அறிமுகம் இல்லாவிட்டாலும் கூட பரவலாக வாசிக்கப்படுவதற்கு அடிப்படையான பல அம்சங்களைக் கொண்டது இந்த நாவல்.. கதை ஒரு சாதாரண காதல் கதை தான், கதையின் களம் போலவே மெக்சிக்கோ நாவலும் மிகச் சிறியது. அண்மைக்காலங்களில் பலநூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட நாவல்களைப் படித்ததற்குப் பிறகு ஓரு 172 பக்கங்களே கொண்ட நாவலைப் படித்தது, நீண்ட திரைப்படங்களைப் பார்த்தபின் மாறுதலுக்காக ஒரு குறுந் திரைப்படத்தைப் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. விரல் விட்டு எண்ணக்கூடிய பாத்திரங்கள், ஒரு குறிப்பான இடத்தையே சுற்றிச் சுற்றி நடக்கிற சம்பவங்கள், கூர்மையான உரையாடல்கள், கதைசொல்லி தன்னைப் பற்றியும் தன்னிடமிருந்து பிரிந்து நின்று தன்னையே கேள்விக்குள்ளாகுதல், நியாயப்படுத்துதல், கழிவிரக்கப்படுதல், தன்னைத்தானே கேலிக்குள்ளாக்குதல். தன்னை மறந்து கனவுலகில் சஞ்சரித்தல், மற்றைய பாத்திரங்களை, தனது பார்வையில் சித்தரிக்கும் போதும், அவர்களை இரத்தமும் சதையுமாக வாசகர் முன் நடமாட வைக்கும் நுணுக்கமான சித்தரிப்பை வழங்குதல் என்பவற்றால் நாவல் ஒரு நேர்த்தியான படைப்பு என்ற உணர்வை வாசிக்கும் ஒரு வாசகரிடம் இயல்பாகவே ஏற்படுத்திவிடுகிறது. இதன்பின், பலங்கள், பலவீனங்கள் எல்லாம் பாத்திரங்களின் பலங்களாகவும் பலவீனங்களாகவும் மாறிவிடுகின்றன. ஒரு நல்ல நாவலுக்கு இருக்கக் கூடிய ஒரு முக்கியனான அம்சம் இது.


நாவலின் கதை ஒன்றும் பெரிய கதை அல்ல என்று சொன்னேன். பொதுவாக, வட அமெரிக்கர்கள் விடுமுறையைக் கழிக்க இரண்டு அல்லது மூன்று வார விடுப்பில் மெக்சிக்கோ, கியூபெக் போன்ற நாடுகளுக்குச் செல்வது வழக்கம். விடுமுறைகாலம் முழுவதும், ஒப்பீட்டளவில் மலிவான செலவில், எல்லாவித களியாட்டங்களையும் மகிழ்ச்சியாக அனுபவித்துத் திரும்ப அருமையான இடங்கள் இவை என்பது பிரசித்தம். ஆனால் கதைசொல்லி பாரம்பரிய வரலாறு கொண்ட ஒருகாலத்தில் மாயன்களின் பூர்வீக நிலமாக இருந்த மெக்சிக்கோவில் இவைபற்றிய புரிதலோடு செல்லும் ஒரு ஈழத்து அரசியல் சூழலால் தனது பதின்மங்களில் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்கின்ற, தன் இளமைக்கு அழகுசேர்ப்பதாய் முகிழ்த்த காதல் முறிந்துபோன துயரத்தைச் சுமந்துகொண்டு திரியும் ஒரு தமிழ் இளைஞன், எழுத்தாளன்,கவிதை எழுதுபவன். நாவலில் அவனுக்கு பெயர் இல்லை. கதைசொல்லிக்கு மட்டுமல்ல, அவன் மெக்சிக்கோவில் சந்தித்து காதல் வயப்படும் பெண்ணுக்கும் கூட பெயர் இல்லை. நாவலின் கடைசியில், அவளின் பெயரை கதைசொல்லியே சொல்லும் வரையில் அவள் பெயரை யாரும் உச்சரிக்கவில்லை. மெக்சிக்கோ கடற்கரைகள், மலைகள், மாயன்களின் பூர்வீக இடங்கள் என்று ஒரு விடுமுறையைக் களிக்க வந்தவனான புலம்பெயர்ந்த ஈழத்துத் தமிழ் எழுத்தாளனுடன் இயல்பாக ஒட்டிக்கொண்டுவிட்ட காதலியுடன் களித்த பொழுதுகள், நினவுமீட்டிய பழைய சம்பவங்கள், அவர்களுக்கிடையே நடந்த உரையாடல்கள் என்று நாவல் நடந்து முடிகிறது. இறுதியில் வரும் ஒரு எதிர்பாராத் திடீர் திருப்பம் நாவலின் போக்கில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவராதபோதும், அது ஒன்றும் கதை சொல்லிமீதான அனுதாபத்தை ஏற்படுத்தும் நோக்கிலான ஒரு உத்தியாகத் தெரியவில்லை. காதலின் முறிவால் கதைசொல்லியின் மனோநிலை குழம்பி நோயுறுதல் சம்பந்தமான பகுதி கொஞ்சம் அவசரமாகச் சொல்லி முடிக்கப்பட்ட பகுதிபோல பட்டாலும், அதனால் முன்னிருந்த இயல்பான ஓட்டத்தில் ஒரு வேகக் குறைவு தென்பட்டாலும் குறைப்பட எதுவும் இல்லை என்று சொல்லலாம். 


அந்தப் பகுதியை அவரால் இன்னும் கொஞ்சமாகச் செழுமைப்படுத்துதல் முடியும். இதன் மூலமாக கதை ஓட்டத்தின் வீச்சை அதிகரிக்க முடியும்போல் எனக்குத் தோன்றியபோதும் எனக்கு ஒரு நல்ல நாவலை வாசித்த திருப்தி கிட்டவே செய்தது. இந்த நாவலை அதன் முழுமையை அனுபவிக்க ஒருவர் இரண்டுதரம் வாசிப்பது நல்லது என்று சொல்வேன். அப்போதுதான் அந்த நாவலில் வரும் பல ஆழமான, பூடகமான வார்த்தையாடல்களுக்குப் பின்னலுள்ள சில சிடுக்குகளை அவிழ்க்க முடியும். அல்லது பல தெரியாத காட்சிகள் தெரியும் என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொல்வதென்றால், நாவலில் பேசப்படும் கதையின் அடிப்படையான சரடு ஒரு காதல் உறவு முறிந்துபோன பின்னான, கதைசொல்லியின் மனம் உருவாக்கும் ஒரு கனவு உலகில் தன்னையும், நடந்த சம்பவங்களையும் நேர்மையான விமர்சன நோக்குடன் அவற்றை அணுகுவதும் தான்.


அப்படியானால், இந்த நாவலில் இதற்கு மேல் எதுவும் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. அது நமது காலத்தின் அரசியலை,பண்பாட்டை, சிந்தனையை, வாழ்க்கை முறையை, நம்பிக்கைகளைப் பற்றியெல்லாம் பேசவில்லையா? அப்படியெல்லாம் பேசாதவற்றை ஒரு நாவல் என்று சொல்லலாமா? என்ற கேள்விகள் எழலாம். நாவல் இவற்றையெல்லாம் சொன்னதா என்றால் இல்லை என்று சொல்லலாம். சொல்லவில்லையா என்றால் சொன்னது என்றும் சொல்லலா,ம். அது நேரடியான தத்துவார்த்த அரசியல் விடயங்களைப் பேசவில்லை. ஆனால் அவற்றை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. மனிதம் இயல்பான அதன் அழகியலோடு வாழ்வதை எம் கண்முன் நிறுத்தியிருக்கிறது. சமூக அரசியலை, பெண்களுக்கெதிரான வன்முறையை, மனிதர்களுக்கிடையிலான முரண்பாடுகளை, புரிந்துணர்வுகளை, விடுதலையை, நம்பிக்கைகளை, புலம்பெயர் வாழ்வின் அடியாழங்களை என்று எல்லாவற்றையும் பற்றி அது பேசுகிறது. ஒரு இருவார வாழ்க்கைக்குள் அது ஒரு அரைநூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட பல அரசியற் போக்குகளை, புத்தர் முதல்,மாயன்களின் வழித்தோன்றல்கள், மற்றும் கொலொம்பிய கம்யூனிஸ்டுகளின் இராணுவம் வரை அது பல வரலாற்று மற்றும் சிந்தனைகளின் போக்குகளையும் தொட்டுச் செல்வதன் மூலம் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கிய தளத்தில் தனக்கொன ஒரு முக்கிய பாத்திரத்தை அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறது. அந்த வகையில், இளங்கோவிற்கு இது முதல் நாவல் ஆயினும், அது அவருக்கும் ஒரு முக்கியமான இடத்தை நிச்சியமாக எந்த ஆர்ப்பாட்டங்களுமின்றி மிக அமைதியாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கூடவே புலம்பெயர் இலக்கியங்களின் வரிசையில் இடம்பெறும் தகுதிவாய்ந்த இன்னொரு நாவல் என்ற தகுதியையும் அது கொண்டுள்ளது என்று துணிந்து சொல்வேன்.


000  


இப்போது நான் முதல் கூறிய விடயத்துக்கு வருவோம். பண்டிதர்களதும், கற்றோர்களதும் இரசனைக்கு மட்டுமேயாக இருந்த இலக்கியம், சற்றேறக்குறைய எல்லா மட்ட்த்து மக்கள் மத்தியிலும் நுகரப்படுவதாக மாறத்தொடங்கிய போது அது நவீன இலக்கியம் என்ற பகுப்புக்கு உள்ளாகிறது. ஆயினும் இவற்றிலும் இன்னமும்’கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டை எதிர்த்து உருவான ’கலை மக்களுக்காகவே’ என்ற கோட்பாடு எழுந்து வந்ததும், பின்னர், ’கலை மக்களுக்குத்தான், மாடுகளுக்கல்ல’ என்ற எதிர்க்குரலுடன், ஆகவே அது ’கலையாகவும் இருத்தல் வேண்டும்’ என்ற கருத்துக்கள் எழுந்ததும் நாம் அறிந்ததே. இந்த மூன்றாவது படியின் செழுமையான கலை வடிவம் தான் சம காலத்தின் வெற்றிகரமான இலக்கிய வடிவமாக அமைய முடியும் என்பதே நான் மேலே குறிப்பிட்ட விடயம்.


கலை இலக்கியம் என்பவை மக்களின் அன்றாட வாழ்வியலில், அவர்களது பண்பாட்டில் தலையீடு செய்பவை. அவை பழமையின் செழுமையான பக்கங்களிலிருந்துகொண்டே புதுமையின் சவால்களை எதிர் கொள்கின்றன. ’பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல,கால வகையினானே’ என்றபடி புதியன வருதலும் அவை பலமுறுதலும் மானுட வாழ்வின் தவிர்க்க முடியா இயங்கியல் விதியாகையால், அவற்றை நாம் நிறுத்திவிட முடியாது. அது காலந்தோறும் வளர்ந்துவருவது. பாரதி அதையே சுவைபுதிது, பொருள் புதிது,வளம் புதிது, சொற்புதிது என்று சொல்வான். இந்த வகையிலான ஒரு மதிப்பீட்டில் ஒரு இலக்கியப் படைப்பு நாவலாக எப்படித் தேறுகிறது என்று அவதானித்தலை, இயல்பாகவே ஒரு வாசகர் தனது வாசிப்பினோடே செய்கிறார். வாசிக்கும் போதே சொல்லப்படும் முறை, சொல்லும் மொழி என்பவற்றால் ஈர்க்கப்பட்டு ரசித்தபடியோ, அல்லது அது கூறும் உலகில் சஞ்சரித்தபடியோ   தன் வாசிப்பை நிகழ்த்துகிறார். அதில் சொல்லப்படும் விடையங்கள் அவருக்குக் காட்சிகளாக, தகவல்களாக, கருத்துக்களாக அவரிடம் சேருகின்றன, அவற்றில் அவர் லயிக்கவோ, புதியவற்றை அறியவோ, கற்றுக்கொள்ளவோ, முரண்படவோ, கேள்விகளை எழுப்பவோ செய்கிறார். இந்தச் செயல்முறையினூடுதான் கலை இலக்கிய நுகர்வு நடைமுறையில் தொழிற்படுகிறது. இந்தத் தொழிற்பாட்டில் வெற்றி பெறுவது என்பது, இவை அனைத்தினதும் ஒரு கூட்டுப் பங்களிப்பு சார்ந்தது. அந்தக் கூட்டுப் பங்களிப்பை சிறப்புறக் கையாளும் போதே ஒரு படைப்பாளியும், படைப்பும் வெற்றிபெறமுடிகிறது. இளங்கோவின் மெக்சிக்கோவை இந்த வகையில் முக்கிய கவனத்துக்குரிய வெற்றிபெற்ற ஒரு நாவல் என்று சொல்ல முடியும்.


இதை மேலும் விளக்க, நாவலிலிருந்து மேற்கோள்களை எடுத்துவைத்து ஒவ்வொரு அம்சமாக விளக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அது இந்தக் கணத்தில் அவசியமில்லை. கனடாவில்  வாழும் வ.ந. கிரிதரன் அவர்கள் எழுதிய அமெரிக்கா என்ற என்ற நாவலும் இப்படி ஒரு நாட்டின் பெயரை தலைப்பாக்க் கொண்டு எழுதப்பட்ட நாவல் தான். ஈழத் தமிழர் புலம்பெயர் வாழ்வின் ஆரம்பக் கால நிகழ்வுகளை மையமாகக் கொண்ட ஒரு நாவல் அது. மெக்சிக்கோ, புலம் பெயர் நாட்டில் வாழத்தொடங்கி அதன் நெளிவு சுளிவுகள், அதன் பாதுகாப்பான சூழல் என்பவற்றை அனுபவிக்கத் தொடங்கிக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் எழுதப்பட்ட நாவல். புலம்பயர் இலக்கிய வரலாற்றில் கனடாவிலிருந்து வந்த இந்த இரண்டு நாவல்களுமே கவனத்துக்குரியவை. அந்த வகையிலும் கூட மெக்சிக்கோ முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நாவலாக, பேசும் பொருள் சார்ந்தும், செட்டானதும், அழகானதுமான நடையைப் பேணுவதன் மூலமாகவும் சமூக அரசியலின் மீதான விமர்சங்களையும் நாவலின் இயல்பான முழுமையுடன் இயைந்து போகும் அளவில் கொண்டுள்ளதாகவும் சிறப்பாக வந்துள்ள இந்த நாவலை, நான் மனந்திறது எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு நாவல் என்று விதந்துரைத்துச் சொல்வேன்.


*****************


( நன்றி: ஜீவநதி - இதழ் 150)