கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label எஸ்.பொ. Show all posts
Showing posts with label எஸ்.பொ. Show all posts

கார்காலக் குறிப்புகள் 101

Friday, July 04, 2025

 இனி (ஒரு விதி செய்வோம்)

****

எஸ்.பொ(ன்னுத்துரை)வின் 'இனி' என்ற நூலை திருப்பவும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். இது வெளியாகியபோதே சுடச்சுட வாசித்திருக்கின்றேன். எனக்கு மிகப் பிடித்த நூல், ஆனால் யாரோ என்னிடமிருந்து எடுத்துக்கொண்டு போய் அது தொலைந்து போய்விட்டிருந்தது. நிறையக் காலம் தேடிக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் அதை வாசிக்கக் கிடைத்தது.


'இனி' என்கின்ற இந்தநூல், ஒருவகையில் எஸ்.பொவின் கடந்தகால இருப்பைச் சொல்லும் அல்புனைவு எழுத்துக்களாலும், நேர்காணல்களாலும், அவருக்குப் பிடித்த அறிக்கைகளாலும் நிரம்பிய தொகுப்பு . ஒருவகையில் எஸ்.பொ இதுதான் தானேன இலக்கிய வெளியில் தன்னை அறிக்கையிட்ட நூலெனவும் எடுத்துக் கொள்ளலாம். இது வெளியிடப்பட்ட ஆண்டு 2000 ஆவணி. அடுத்தடுத்த மாதங்களில் எஸ்.பொ, 'புலம்பெயர்ந்தோரோ இனி தமிழ் இலக்கியத்தை வழி நடத்துவர்' என்கின்ற இலக்கிய சுவிசேஷத்தோடு பல்வேறு நாடுகளில் பயணித்துக் கொண்டிருந்தவர். அப்படி புறப்பட்ட அந்த இலக்கியப் பயணி கனடாவில் கால் வைத்தபோதுதான் நான் அவரை நேரடியாக முதன்முதலாகச் சந்தித்தேன்.

எஸ்.பொவைச் சந்திக்கமுன்னரே அவரின் 'ஆண்மை' சிறுகதைத் தொகுப்பை வாசித்திருந்தேன். என் பதின்ம வயது வாசிப்பை முற்றிலுமாகப் புரட்டிப் போட்ட இரண்டு நூல்களில் ஒன்று 'ஜே.ஜே.சில குறிப்புகள்; மற்றது 'ஆண்மை'. இரண்டையும் தற்செயலாக ஒரேநேரத்தில் வாங்கி வாசித்திருந்தேன்.

எஸ்.பொவைச் சந்தித்த காலத்தில்தான் 'காலச்சுவடு', தமிழினி-2000 என்கின்ற இலக்கியப் பெருநிகழ்வை நடத்தியிருந்தது. அதற்குப் பிறகு அப்படியொரு பெருநிகழ்வு தமிழக-ஈழத்து-புலம்பெயர் எழுத்தாளர்களைக் கொண்டு நடத்தபட்டதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. அது சுந்தர ராமசாமி என்கின்ற ஆளுமையின் அன்பின்பால கூட்டிணைந்த கூட்டம். ஒரு பெரு நிகழ்வு நடந்தால் அதற்கு எதிர்ப்பில்லாது, உலகில் எங்கேனும் இலக்கியம் உண்டா என்ன? 'நிறப்பிரிகை'யினர் அ.மார்க்ஸின் தலைமையில் 'தமிழினி என்கின்ற கும்பமேளா' என்று அறிக்கைவிட்டு இந்நிகழ்வைப் புறக்கணித்தனர். இதற்கிடையில் தனித்த ஒநாயாக (lone wolf), சு.ராவோடு ஒத்தோட முடியாமலும், நிறப்பிரிகையோடு இணையவும் முடியாமல் ஜெயமோகன் தனித்து ஓடிக்கொண்டிருந்தார்.

எஸ்.பொ அந்த வருடத்திலேயே ஒவ்வொரு நாட்டுக்கும் பயணித்து இலக்கிய ஊழியத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.எஸ்.பொவால் நல்ல இலக்கிய ஆளுமைகளைக் சரியாக அடையாளங்கண்டு கொள்ள முடிந்திருக்கின்றது. எம்மிடையே பேசும்போது, இப்போது மலையாளப் பின்னணியில் வந்த ஜெயமோகன் நல்லாய் எழுதிக் கொண்டிருக்கின்றார் எனச் சொன்னார். அப்போது ஜெமோவின் 'விஷ்ணுபுரம்'வந்து நேர்/எதிர்மறையான எல்லா விமர்சனங்களையும் அது சந்தித்துக் கொண்டிருந்தது. அப்படி தன்னுடைய எழுத்துலக வாரிசாக  தற்போது பிரான்ஸில் வசிக்கும் கலாமோகனைச் சொல்லியிருக்கின்றார். பின்னாட்களில் வேறு சிலரையும் எஸ்.பொ வாரிசுக்களாக அறிவித்திருந்தார். அது அவரின் மூப்பின் காரணமாக வந்த தனிமையில் அவரோடு நெருங்கியிருந்த சிலர் மீது வைத்த அன்பின் காரணம் என்பதால் அந்த 'வாரிசு'க்களை நாம் இப்போதைக்கு மறந்துவிடலாம்.

இந்த 'இனி: ஒரு விதி செய்வோம்' என்கின்ற நூலை ஒவ்வொரு தசாப்தங்களாக எஸ்.பொ பிரித்திருக்கின்றார். '70களில் எஸ்.பொ' என்கின்ற பகுதியில், அவரின் பிரசித்த பெற்ற அறிக்கை இருக்கின்றது. 70களில் இடதுசாரி சார்புள்ள சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு, வெளிநாட்டு உற்பத்திகள் பலவற்றுக்கு தடை விதித்தது. அதில் ஒன்று இந்தியாவிலிருந்து வெளிவந்த புத்தகங்கள்/சஞ்சிகைகளுக்கான தடை. இந்தத் தடையை எந்தந்த வகையினர் எவ்வாறு ஏற்கின்றனர்/எதிர்க்கின்றனர் என்று எஸ்.பொ ஓர் அறிக்கையை 100 பக்கங்களுக்கு மேலாக எழுதியிருக்கின்றார். இது அன்றைய காலத்தில் (1972), 'எஸ்.பொ அறிக்கை' என்ற பெயரில் 124 பக்கங்களில் தனி நூலாகவும் அச்சிடப்பட்டிருக்கின்றது.

இது மட்டுமில்லை, இந்த தொகுப்பில் இல்லாவிட்டலும், கிட்டத்தட்ட அந்தக் காலத்தில் 'இஸ்லாமும் தமிழும்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார். ஏதோ ஒரு சச்சரவின் நிமித்தம் மூன்றோ/நான்கோ நாளில் 100 பக்கங்களுக்கு மேலாக நீளும் எழுதி இஸ்லாமிய வாலிபர் இயக்கம் இதை வெளியிட்டிருக்கின்றது. என்ன சர்ச்சை என்பது ஒருபுறம் இருக்க, ஒருவகையில் அந்நூலை வாசிக்கும்போது எழுபதுகளில் இஸ்லாமிய (முஸ்லிம்) இலக்கியம் குறித்து நாம் அறியும் ஓர் ஆவணமாக இன்று அது திகழக் கூடும். இவ்வாறு எஸ்.பொ அவருக்குரிய சர்ச்சைகளுடன், ஓர் முழுமையான ஆளுமையாகத் திகழ்ந்திருக்கின்றார்.

அதனால்தான் இந்த நூலில், '80களில் எஸ்.பொ' என்ற பகுதியில் கலாமோகனோடு ஓர் நீண்ட நேர்காணலை நிகழ்த்துகின்றார். அது எஸ்.பொவுக்கு அன்றிருந்த இலக்கிய நிலைப்பாட்டை மட்டுமின்றி, அவருக்கு ஈழத்தில் நடந்துகொண்டிருந்த போராட்டம் குறித்து என்ன கருத்திருந்தது என்பதையும் பதிவு செய்கின்றது. ஆனால் 80களில் இருந்த எஸ்.பொ, 2000களில் இருக்கவில்லை. அவருக்குள் எப்போதும் தமிழ்த்துவக் கனல் எரிந்துகொண்டிருந்தபோதும், பிற்காலத்தில் 'விடுதலை வெறி'யர்களை நேசிக்கும் ஒருவராக அவர் மாறிவிட்டிருந்தார்.

அதை எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுப்பிலிருக்கும், அருமையான குறுநாவலாக இருக்கும், போராளியாக இருந்து அகாலமான அவரின் மகனின் மித்தியைப் பற்றி நனவிடைதோய்ந்து எழுதிய கதை-15இல் நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம். அதுபோலவே இந்த நூலின் பின்னட்டையில் அவர் சேர்த்திருப்பது அவரது மகன் போராளியாக களத்தில் ஆயுதங்களோடு அவரின் தோழர்களோடு நிற்கின்ற புகைப்படத்திலும், எஸ்.பொ வந்து சேர்ந்த பாதையைக் காணலாம்.

அதன்பிறகு '90களில் எஸ்.பொ' பகுதியில் அவர் தமிழக/புலம்பெயர்ந்த சஞ்சிகைகளுக்குக் கொடுத்த நேர்காணல்கள். இந்த நூலில் நான் மீண்டும் வாசிக்கும்போது தவிர்த்த பகுதி அதுதான். என் தனிப்பட்ட வாசிப்பில் எனக்கு எவரின் நேர்காணல்களும் சுவாரசியம் தருவதில்லை. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிய வேண்டுமெனில், ஒரு நேர்காணலே போதுமென நினைப்பவன். அதற்குப் பிறகு அவர்கள் எதைச் சொன்னாலும், அதிலிருந்து 'சொன்னதையே திருப்பிக் கூறுகின்றனர்' என்று எளிதாக கண்டுகொண்டுவிடுவேன். மற்றும்படி ஒரு படைப்பாளி தன் (புனைவல்லாத) கருத்துக்களைச் சொல்ல வேண்டுமெனில் எழுதி விட்டுப் போய்விடலாம் என்பதே என் கருத்து. ஆகவே எனக்கு எஸ்.பொவை அறிந்துகொள்ள கலாமோகன் அவரை 80களில் கண்ட ஒரு நேர்காணலே போதுமாக இருந்தது.

இந்நூலின் இறுதிப்பகுதியான 'புத்தாயிரம் நோக்கிய உரத்த சிந்தனைகள்' எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று. இதில் எஸ்.பொ, அன்று 'கணையாழி'யில் எழுதிய கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. 'தமிழ்த்துவம்: ஒரு புரிதல்', 'தேவை: உண்மையான உபாசகர்கள்', இவ்வழி ஏகின் எவ்வழி புக்கும்' என்று பல சுவாரசியமான இன்றும் உரையாடல்கள் அமைக்கக்கூடிய கட்டுரைகள் இருக்கின்றன.
 

இந்த நூல் வெளிவந்து 25 வருடங்கள் ஆன பின்னும், இன்னும் காலத்தில் உறைந்துபோய் விடாமலும், அதே வேளை ஒரு காலகட்டத்தை ஆவணப்படுத்துவதாக இருக்கின்றதும் கவனிக்கத்தது.

எஸ்.பொ, பிரமிள், மு.தளையசிங்கம் போன்றவர்கள் புனைவில் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தினாலும், அதேயளவுக்கு நிகராக அல்புனைவிலும் தமது எழுத்தின் திசைகளை விசாலித்தவர்கள். அதனால்தான் இவர்கள் மீது எத்தகைய விமர்சனங்கள்/வசைபாடல்கள்/கீழிறக்குதல்கள் இருந்தாலும், எந்த ஓர் இலக்கிய தரப்பாலும் எளிதில் நிராகரிக்க முடியாதவர்களாக அவர்கள் விகாசித்து ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

***********

 

( Jun 25, 2025)

எஸ்.பொவின் 'வரலாற்றில் வாழ்தல்'

Monday, July 24, 2023


 -இரண்டாம் பாகம்-


ஸ்.பொவின் வரலாற்றில் வாழ்தல்இரண்டாம் பாகத்தின் அரைவாசிப் பாகம் புலம்பெயர் இலக்கியமே இனி தமிழிலக்கியத்தை முன்னெடுக்கும்என்கின்ற அவரின் சுவிஷேசத்தைப் பற்றியே பேசுகின்றது. அந்தவகையில் அவர் 2000களின் ஓர் உலகப்பயணத்தை ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா, மேற்கொண்டார். அவற்றை இங்கே விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார் என்கின்றபோதும், அந்தப் பயணத்தின் பெறுபேறுகள் அவருக்கு அவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கவில்லை. பனியும் பனையும்என்கின்ற 39 புலம்பெயர் எழுத்தாளர்களின் கதைகளின் அச்சடிக்கப்பட்.ட்தே 300 பிரதிகளே என்கின்றபோதும் அவையும் முழுமையாக விற்பனை போகாது இருக்கின்றதென்ற அவலத்தை எஸ்.பொ இந்நூலில் பதிவு செய்கின்றார். ஆனால் தன்னைத் தமிழுக்கு ஊழியம் செய்கின்ற படைப்பாளியாக முன்வைக்கின்ற எஸ்.பொ சலிக்காது இறுதிவரை தமிழ் இலக்கியத்தினூடாகப் பயணித்திருக்கின்றார் என்பதும் வரலாறுதான்.

எஸ்.பொவின் இந்த ‘வரலாற்றில் வாழ்தலில்அவரின் நைஜீரியா அனுபவங்களை முதன்மையாகச் சொல்வேன். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆபிரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த செழிப்பான அனுபவங்களைக் கொண்டவர் எஸ்.பொ. இன்னும் இந்த அனுபவங்களை விரித்து இங்கே விரித்து எழுதியிருக்கலாம் என்று எண்ணக்கூடிய அளவுக்கு எஸ்.பொ இந்த அனுபவங்களை சுவாரசியமாக எழுதியிருக்கின்றார். 70/80களில் ஆபிரிக்காக் கண்டங்களில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அநேகரைப் போல எஸ்.பொவும் தனது குடும்பத்தினரோடு புலம்பெயர்ந்திருப்பார் என்று இதுவரை எண்ணிய எனக்கு அவர் தனித்தே நைஜிரியாவில் இருந்திருக்கின்றார் என்பது புதுசெய்தி.

இந்த வரலாற்றில் வாழ்தலில்எஸ்.பொ அவர் கூறி வந்தவற்றையே தன் எழுத்தால் தானறியாமலேயே உடைத்திருக்கின்றார். எஸ்.பொ இப்படி புலம்பெயர்ந்தற்கு சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களின் பழிவாங்கல்களே முக்கிய காரணம் எனத்தான் சொல்லித் திரிந்திருக்கின்றார். ஆனால் எப்போதும் ஆசிரியராகவே இருந்த எஸ்.பொ ஒருகட்டத்தில் ஒரே தொழிலைச் செய்வதால் அலுப்படைகிறார். இத்தனைக்கும் அவரின் ஆசிரிய தொழிலில் பெரும்பாலான பாடசாலைகளில் அவரைப் புரிந்துகொண்ட அதிபர்கள் இவருக்கு இலகுவான நேரசூசிகையையே போட்டுக்கொடுக்கின்றனர். அதன் நிமித்தம் எழுதவோ, வாசிக்கவோ, நாடகங்கள் போடவோ இவருக்கு நிறைய நேரம் கிடைக்கவே செய்கின்றது. எனினும் எஸ்.பொவுக்கு ஒன்றேயே திரும்பத் திரும்பச் செய்வதில் அலுப்பு வருகின்றது. 


அது எம்.ஜி.ஆர் தலைமையில் மதுரையில் தமிழராய்ச்சி மாநாடு நடக்கும்போது எஸ்.பொ இது பங்குபெறும்போதே, தமிழகத்திற்குச் சென்று வேலை பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார். அவருக்கு வேலையொன்றும் தர எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருக்கும் ஒருவர் உறுதியும் கொடுக்கின்றார். எஸ்.பொவின் இந்தச் சலிப்பை விளங்கிக்கொண்ட ஏ.ஜே.கனகரட்ன, மு.நித்தியானந்தனின் வழிகாட்டலுடன் நைஜிரியாவுக்குப் புலம்பெயர்கின்றார். ஆக எஸ்.பொ ஊதிப்பெருப்பித்து நமக்குச் சொன்ன சிவத்தம்பி, கைலாசபதியின் பழிவாங்கலால்தான் புலம்பெயர்ந்தார் என்கின்ற வாதம் அவ்வளவு வலிமையானது இல்லையென்பதை இதை வாசிப்பதினூடாக நாம் உணர்கின்றோம்.


ந்தப் பாகத்தில் எஸ்.பொ, தனது மனைவியாரோடு பிணக்கு வந்து நீண்டகாலம் தனித்து அலைந்த பகுதி குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தொடர் குடிகாரராக இருந்த எஸ்.பொ, இந்தப் பிரிவின் பின் பெருங்குடிகாரராக ஆகின்றார். ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையாகி, நினைவு தெரியாது மயங்கிக்கிடந்து நண்பர்களின் முயற்சியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். இனி குடித்தால் ஆபத்து என்று வைத்தியர் எச்சரித்து அனுப்பியபோதும், 2 வாரங்களுக்குள் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கின்றார். கிட்டத்தட்ட ப்யூகோவ்ஸ்கியை நினைவுபடுத்தும் பகுதிகள் போல எஸ்.பொவின் இந்த அனுபவங்களை நான் வாசித்தேன். ஆனால் அப்படி இருந்த எஸ்.பொ கிட்டத்தட்ட 7-8 ஆண்டுகள் குடியிலிருந்து விலகியிருக்கின்றார். அதற்குப் பெரிய காரணம் எதுவுமிருக்கவில்லை. பிள்ளைகள் உயர்தரத்தில் படிக்கின்றார்கள், வீட்டுச் செலவீனங்கள் கூடிவிட்டதென குடியைக் கைவிடுகின்றார். பின்னர் மீண்டும் ஆரம்பிப்பது அவரின் மகனான மித்ர புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கடலிலே மரணமாகின்ற போதாகும்.

தந்தையர் கண்முன்னே தனயர்கள் இல்லாமற் போவது பெருஞ்சோகம். எஸ்.பொ மித்ரவை இழந்ததைப் போல பின்னர் அவரின் மற்ற மகனான புத்ரவை இந்தியாவில் இழக்கின்றார். இரண்டு மகன்களின் இறுதிச் சடங்குகளின்போது கூட (மித்ர எனப்படும் அர்ஜூனாவின் உடல் கடலிற்குள் போனது) எஸ்.பொவால் அந்தந்த இடங்களுக்குப் போகமுடியாத சூழல். ஒருவகையில் இந்த இழப்புக்கள் எஸ்.பொவை சோரவைக்கின்றது. ஆகவேதான் வரலாற்றில் வாழ்தலையும் தனது மகனான புத்ரவின் மரணத்தோடு முடிக்கவும் செய்கின்றார்.

ஓரிடத்தில் எஸ்.பொ எழுதுவார், ‘வாசிக்கும் நீங்கள் நினைக்கக்கூடும், என் பெரும்பகுதி இனிய நினைவுகளாக இருக்கின்றதென்று. அவ்வாறில்லை, இதைவிட மூன்றுமடங்கான துயர நினைவுகள் இருக்கின்றன, அவற்றையெல்லாம் எழுதித்தான் என்ன நடக்கப்போகின்றதுஎனச் சொல்லிக் கடந்துபோகின்றார். இந்த வரலாற்றில் வாழ்தலில் ஒரு சிறந்த கதைசொல்லியை, தமிழ் ஊழியத்தில் ஓர்மமுள்ள படைப்பாளியை, தன் ஈகோ சீண்டுப்படுகையில் இன்னும் மேலே ஏறி பிறரைச் சீண்டிப் பார்க்கும் எஸ்.பொவை பார்த்தாலும், இன்னொருபுறத்தில் சோர்வில் அவ்வப்போது உழலும், துயரங்களை மறைத்து உள்ளே கேவியழக்கூடிய ஓர் ஆத்மாவான எஸ்.பொவையும் காண்கின்றோம். அதுவே இயல்பானதும், அழகானதும் கூட.

இன்றைய காலத்தில் சில எழுத்தாளர்கள் தாம் மகிழ்ச்சியாகவும் சோர்வில்லாதும் இருக்கின்றோம் என அடிக்கடி குறிப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு பிரகடனப்படுத்துபவர்கள்தான் பிறர் மீது சீண்டல்களையும், காழ்ப்புக்களையும், அவமதிப்புக்களையும் செய்பவர்களாக இருக்கின்றபோது, இவர்களின் மகிழ்ச்சியினதும், சோர்வற்றதன்மையினதும் உண்மையான அர்த்தம் என்ன என்று எனக்குள் அடிக்கடி கேள்விகள் எழுவதுண்டு. எஸ்.பொவைப் போல எல்லாச் சறுக்கல்களும், சலிப்புக்களும் கொண்டவர்கள் மீதும், அதை அப்படியே எழுத்தில் முன்வைப்பவர்கள் மீதுமே என்னால் இன்னும் நெருக்கம் கொள்ள முடிகின்றது.

இந்த வரலாற்றில் வாழ்தலில் இறுதி அத்தியாயமாக தவம்என்ற பகுதி இருக்கின்றது. தமிழ் மொழி மீதான தன் காதலை எஸ்.பொ இதில் அறிக்கையிடுகின்றார். புலம்பெயர்ந்த நாடுகளிலே தமிழ்ப்படைப்பு தொடரும் என்கின்ற நம்பிக்கையை முன்வைக்கின்றார். அதேவேளை புலம்பெயர்ந்த தேசங்களில் இருப்பவர்கள் மொழி அடையாளத்தையும், மத அடையாளங்களையும் குழப்பி வருவதாகத் தோன்றுகின்றது என்று எஸ்.பொ எழுதுகின்றார்.மத அடையாளங்கள், இன்றைய நிலையில் தங்களுடைய ஆன்மீகப் பலத்தினை முழுவதுமாக இழந்துள்ளன. இந்துத்துவத்தின் ஓங்காரம், தமிழ் உணர்வுகள் மீது ஆதிக்கஞ் செலுத்தும் ஓர் உள அர்த்தத்தினை மறைத்து வைத்துள்ளதாக எனக்குத் தோன்றுகின்றது. இந்த ஓங்காரம் தமிழின் செழுமைக்கு உகந்ததல்லஎன்று நம்மை எச்சரிக்கின்றார். இன்றைக்கு 20 ஆண்டுகளின் பின் இது புலம்பெயர்ந்த தேசத்துக்கு மட்டுமில்லை, ஈழத்துக்கும் பொருந்தும் என்பதை நாம் கவனிக்கவேண்டும்.

2000களின் தொடக்கத்தில் கனடா வந்த சுந்தர ராமசாமி, புலம்பெயர் தேசங்களில் இனி தமிழ் வாழாது என்கின்ற நம்பிக்கையீனத்தை வெளியிட்டிருக்கின்றார். ஒருவகையில் அது தேய்ந்து போய்க்கொண்டிருப்பதும் உண்மைதான். ஆனால் எஸ்.பொ புத்தாயிரத்துக்கு (2000) அப்பாலும் தமிழ் புலம்பெயர்ந்த தேசங்களில் இருக்குமென்று புத்தாயிரத்தில் எதிர்வு கூறினார். இற்றைக்கும் ஏதோ ஒருவகையில் புலம்பெயர் தேசங்களில் தமிழ் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. இலக்கியப் படைப்புக்களை சொற்பமானவர்கள்தான் வாசிக்கின்றார்கள்/எழுதுகின்றார்கள் என்றாலும் (அது எல்லாத் தேசங்களிலும் இயல்புதானே) புலம்பெயர் தேசத்து எழுத்தாளர்களுக்கும் தமிழில் இன்னும் இடம் இருந்து கொண்டேதானிருக்கின்றது. ஆகவேதான் அந்த புலம்பல்/அலட்டல் அண்மையில் நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் சலசலப்புக்குள்ளானது. ஒருவகையில் அது எஸ்.பொ கண்ட கனவின் நீட்சி எனக்கூடச் சொல்லலாம்.

என் எழுத்து ஊழியம் என் தவமாக இனிக்கின்றதுஎன்ற வரிகளுடன் எஸ்.பொ, ‘வரலாற்றில் வாழ்தலைமுடிக்கின்றார். நமக்கோ எஸ்.பொவின் இலக்கிய இருப்பு, அவரின் எல்லாப் பலவீனங்களை மீறியும் பெருமிதப்பட வைக்கின்றது. ஆகவேதான் அவர் என்னைப் போன்றவர்களுக்கு ஓர் ஆளுமையுள்ள முன்னோடியாகத் திகழ்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

*********************


(Mar 13, 2023)

வரலாற்றில் வாழ்தல்

Friday, June 30, 2023


ஸ்.பொ(ன்னுத்துரை) ஒரு சுவாரசியமான மனிதர். தானொரு காட்டான்என்று வாழ்நாளுக்கான இயல்விருது கனடாவில் கொடுக்கப்பட்டபோது பொதுவெளியில் தயங்காமல் பிரகடனப்படுத்தியவர். அவரின் வரலாற்றின் வாழ்தல்உண்மைகளை இயன்றளவு அப்படியே முன்வைக்கின்ற ஒரு சுயசரிதை நூல். வரலாற்றில் வாழ்தல் ஆயிரம் பக்கங்களுக்கு மேலா? அதுவும் இரண்டு பகுதிகளா? 3000 இற்கு மேற்பட்ட பக்கங்களை வாசிப்பதா என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் மனுஷன் அலுப்பே வராதவளவுக்கு அவ்வளவு சுவாரசியமாக எழுதியிருக்கின்றார்.


வரலாற்றின் வாழ்தலின் இரண்டாம் பாகத்தில் இப்போது நிற்கின்றேன். முதல் பாகம் எஸ்.பொ, முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து வெளியேறுவதோடு நிறைவுபெறும். முதல் பாகத்தில் நடுவில், பெண்களைக் கண்டாலே தூரவிலகும் ஒரு உள்ளொடுங்கியாக இருக்கின்றாரே, எப்படி இந்த மனுஷனால் தீஎல்லாம் எழுத முடிந்ததென்று நானே சலித்தபோது, மனுசன் ஒரு காதல் கசந்து (அதற்காய் மூன்று வருடம் எதையும் எழுதாமல் இலக்கியத் துறவறம் எல்லாம் செய்திருக்கின்றார்) மீண்டெழுந்தபோது செய்ததெல்லாம் மன்மதலீலைகள்தான்.

முற்போக்கு அணியினரோடு முரண்டு பிடித்தது, ஒடுக்கப்பட்ட சாதி அடையாளத்தோடு பிறந்ததால் எப்படி ஒடுக்கப்பட்டேன் என்று அதை வைத்து பரிதாபந் தேடாமல், ஓர்மத்துடன் அதற்குள் இருந்து எழுந்து வந்ததைப் பற்றி எழுதியது மட்டுமில்லாமல், இந்த மன்மதனாட்டங்களையும் எழுத்தில் நேர்மையாக முன்வைக்க முடிந்ததால்தான் அவர் எனக்கு இன்றும் ஆசான்.

இரண்டாம் பாகத்தில்..

யாழ்ப்பாணத்தில் முட்டையடிப்பும், கொழும்பில் கதிரையடியும் முற்போக்கு அணியினரிடம் வாங்கிக் கட்டியபின், எஸ்.பொ அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு வீயை வெளியிடுகின்றார். எதிரியை நேரடியாகச் சந்திப்பது என்ற ஓர்மத்துடன் தன் புத்தக வெளியீட்டு விழாவில் வந்து விமர்சனம் வைக்கவேண்டுமென்று கைலாசபதியையும், சிவத்தம்பியையும் நேரில் சென்று எஸ்.பொ அழைக்கின்றார். கைலாசபதி நாசூக்காய் மறுத்தாலும், சிவத்தம்பி வெளியீட்டு நிகழ்வில் வந்து பேசி, எஸ்.பொவின் வீதொகுப்பை நிராகரிக்கின்றார். நீங்கள் நிராகரிப்பது சரி, உங்கள் முற்போக்கு எழுத்தாளர் அணியினர் எழுதிய கதையை உங்கள் விமர்சன அளவீட்டிற்கு முன்வையுங்கள் என்று எஸ்.பொ தனது ஏற்புரையில் எகிறுகிறார். 

சிவத்தம்பியரோ, உனது அந்தத் 'தீ'யுமல்ல இந்த 'வீ'யுமல்ல என்றுவிட்டு மேடையில் அமைதியாகி விடுகின்றார். இப்படியாக அந்தக்காலத்தில் எதிர்ப்பும், எகிறலும், புரிந்துகொள்ளலும் நடந்திருக்கின்றதென்பது சுவாரசியமானதுதான். இன்றைக்கு வெவ்வேறு அணியினர் எஸ்.பொவையும், கைலாசபதியையும், சிவத்தம்பியையும் சுவீகரித்துக் கொண்டிருந்தாலும், இந்த சண்டை/சர்ச்சரவுகளைத்தாண்டி அவரவர்க்கான இடம் அவரவர்க்கு தமிழ்ச்சூழலில் இருக்கத்தான் செய்கிறது.

யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ்.பொ அளவுக்கு இன்னொருவர் இந்தளவுக்கு கிழக்கு தமிழர்களோடும், முஸ்லிம்களோடும் நெருங்கிப் பழகி, அந்த அனுபவங்களை எழுத்தில் முன்வைத்திருப்பார்களோ தெரியாது. அந்தளவுக்கு கிழக்கு மாகாணத்து மக்களைப் பற்றி விபரித்து எழுதியிருக்கின்றார். யாழ்ப்பாணத்து நனவிடைதோய்தல்போல மட்டக்களப்பு நினைவுகளை எழுத எஸ்.பொ விரும்பியிருந்தபோதும் அது நிகழாதது சோகமான விடயந்தான். யாழில் பிறந்து வளர்ந்ததால் அதில் காலூன்றியபடி, அதேசமயம் அது குறித்து எவ்விதப் போலி பெருமிதமும் கொள்ளாது, பிற இடங்களை/மக்களை நேசிக்கத் தெரிந்தவராக எஸ்.பொ எப்போதும் இருந்திருக்கின்றார்.

ஸ்.பொ 60/70களின் காலங்களை விபரிக்கின்றபோது இவர்கள் எல்லாம் இலங்கையில் வாழ்ந்தார்களா என்ற வியப்பு வருகின்றது. சாத்தான்குளத்து அப்துல் ஜாப்பார் என்கின்ற கிரிக்கெட் வர்ணனைகளை அழகு தமிழில் செய்த அறிவிப்பாளர் எல்லாம் இலங்கையில் வாழ்ந்ததோடல்லாது, எஸ்.பொ எழுதிய நாடகங்களில் நடித்துமிருக்கின்றார்கள். அப்படி எஸ்.பொவின் நாடகங்களில் நடித்த வேறு சிலர் அப்துல் ஹமீது மற்றும் பின்னாளில் அமைச்சரான அஸ்வர் எனப்பட்டியல் நீளும்.. இதனூடாக வரலாற்றின் ஒரு காலகட்டத்தையும் அறிந்து கொள்கின்றோம். எம்.ரஹ்மானின் இளம்பிறைசஞ்சிகை உள்ளிட்ட வேறு சில பத்திரிகைகளில் எஸ்.பொ பத்திகள் எழுதியிருக்கின்றார். அவற்றையும் தொகுப்பாக்கினால் இன்னும் சுவாரசியமான அந்தக்காலத்தைய விடயங்கள் வெளிக்கொணரப்பட்டிருக்கும் என எழுதுகின்ற எஸ்.பொ அதைக் கொண்டு வராமலே காலமாகி விட்டார்.

எஸ்.பொவின் சடங்கு’, ‘நனவிடைதோய்தல்', 'வீபோன்று, அதிகம் பேசப்படாத “?” முக்கியமான படைப்பென்பது என் துணிபு. அந்தக் காலத்தில் இப்படி ஒரு அங்கதமான பிரதி எழுதப்பட்டிருக்கின்றதென்று வியந்திருக்கின்றேன். அது எழுதப்பட்ட கதை சுவாரசியமானது. ஒரு முஸ்லிம் அரசியல்வாதிக்கு அவரின் ஊழல்பற்றி அங்கதச் சுவையுடன் முஸ்லிம் சமூகம் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிடுகின்றது. அதை அவர்கள் பந்தநூல் என்று குறிப்பிடுகின்றனர். இதையே முதன்மையாக வைத்து எஸ்.பொ அன்றைய சூழ்நிலையைப் பின்னணியாக்கி “?” எழுதுகின்றார். அந்த வடிவம் எப்படி அமைய வேண்டுமென்பதற்காய் உ.வே.சா பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள்வரை தேடிப் போயிருக்கின்றார்.

இந்த புத்தகத்திற்காய் உழைத்த நேரத்துக்கு தன்னால் 2 புதிய புத்தகங்கள் எழுதியிருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார். "?" எழுதியபின் இன்னொரு சோகம் நிகழ்கின்றது. நூல் தயாரான பின் ஒரு பயணத்தின்பின் அந்தக் கையெழுத்துப் பிரதியை எஸ்.பொ தொலைத்துவிடுகின்றார். இப்போது நமக்கு கிடைக்கும் “?”, அவர் முதல் பிரதியை எழுதுவதற்கு எடுத்து வைத்த குறிப்புக்களை வைத்து எழுதியது. அதை இரண்டாம் முறை எழுதுவதென்பது எவ்வளவு சித்திரவதையானது என்பதை எஸ்.பொ மனம் நொந்து 'வரலாற்றில் வாழ்தலில்'' எழுதியிருக்கின்றார்.

இதை எழுதுவதற்கான காரணமாக என்னைப் பற்றிய மதிப்பீடு ஒன்று தேவை. பிறருடைய மதிப்பீட்டுகளிலும் பார்க்கச் சுய விமர்சனங்கள் என் வளர்ச்சிக்கும் தனித்துவப் பார்வைக்கும் உதவியிருக்கின்றன. சுய விமர்சனத்தின் நன்மைகளை கம்யூனிஸ முகாமில் அறிந்து கொண்டேன். இதனால் நான் வெற்றிகளைக் கண்டு மருண்டதில்லை. தோல்விகளைக் கண்டு துவண்டதில்லை. வெற்றிகளின் நிழல்களிலே நான் சயனிக்க விரும்பியதும் இல்லைஎன்று எஸ்.பொ எழுதுகின்றார்.

எஸ்.பொ சுதந்திரனில் சடங்குஎழுதிய அதே காலகட்டத்தில் தேடல்என்றொரு தொடர்கதையையும் வீரகேசரியில் எழுதியிருக்கின்றார். ஆனால் அது முற்றிலும் தரப்படும் காசுக்காக எழுதப்பட்டது. நீங்கள் சடங்கையும் தேடலையும் அருகருகில் வைத்துப் பார்த்தால் இரண்டின் தரமும் தெரியும் என்று வெளிப்படையாக வரலாற்றில் வாழ்தலில்எழுதிச் செல்வதால்தான் எஸ்.பொ தனித்துவமானவர் எனச் சொல்கின்றேன். ஆகவேதான் அவர் என் ஆசான்.

*********************************


(Feb 21, 2023)

எஸ்.பொவின் 'முறுவல்'

Saturday, April 16, 2022


எஸ்.பொன்னுத்துரை - பகுதி 08 


1.

எஸ்.பொ, பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடந்த புலம்பெயர்ந்தவர்களை இணைத்து தமிழ் ஊழியம் செய்யவேண்டும் என்ற பெருங்கனவோடு கனடா வந்தபோது, நான் அவரின் வெகுசிலவான ஆக்கங்களை மட்டுமே வாசித்திருந்தேன். எனினும் எஸ்.பொ என்கின்ற ஆளுமை என்னை ஈர்க்க அவரைப் பின்தொடர்ந்து அவர் பங்குபற்றிய சில கூட்டங்களுக்குத்  சென்றிருக்கின்றேன். ஒரு நிகழ்வு இங்கிருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தோடு இணைந்து படித்துக்கொண்டிருந்த தமிழ் மாணவர்களோடு நடந்ததிருந்தது.


எஸ்.பொ, இலக்கியவாதிகளை இணைத்துப் பேசிய இன்னொரு ஒருமுழுநாள் கருத்தரங்கில் முற்போக்கு அணியினரையும், முக்கியமாய் கைலாசபதியையும், சிவத்தம்பியையும் இழுத்துப் பேசியிருந்தார். அடுத்த நிகழ்விலும் கொஞ்சம் வம்பாய் அவர்களை இழுத்தார். எஸ்.பொ அவர்கள் இருவரையும் விட்டுவிலகி, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே இறுக்கத்தோடும், கோபத்தோடும் இருக்கின்றார் என எனக்குத் தோன்றியது. சிவத்தம்பியும், கைலாசபதியும் இலக்கியத்தை நமக்கு உகந்த வகையில் இலக்கியத்தைப் பார்க்கவில்லை என்பதற்காக அவர்களின் பங்களிப்புக்களை ஏன் இப்படி உதாசீனப்படுத்தவேண்டும் என்று எனக்கு அப்போது தோன்றியது.


மனோன்மணியம் சுந்தரனார் மாணவர்களின் நிகழ்வில், எஸ்.பொ, சிவத்தம்பியை இழுத்ததைச் சில மாணவர்கள் விரும்பவில்லை. ஒரு மாணவி கேள்வி நேரத்தில் நீங்கள் இப்படி சிவத்தம்பியை கீழிறக்கத் தேவையில்லை என்றார். எஸ்.பொவுக்கு இது சுட்டிருக்கவேண்டும். 'எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும்' எனச் சற்று எள்ளலுடன் கூறினார். அந்த மாணவியோ, 'நான் சிவத்தம்பி சேரின் மாணவியாக ஒருகாலத்தில் இருந்திருக்கின்றேன், அவர் ஓர் அற்புதமான ஆசிரியர்' என்று மறுத்துக் கதைத்தார். தொடர்ந்து அந்த நிகழ்வு கொஞ்சம் குழப்பமாகப் போனது. எனக்கு அதற்குப் பின் எஸ்.பொவின் பேச்சுக்களில் இருந்து, அறிவதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்ற எண்ணம் தோன்றியது.


பிறகான காலங்களில் எஸ்.பொவை ஆழமாகவும் விரிவாகவும் வாசிக்கத் தொடங்கி என் ஆசானாகக் கொண்டபோதும் எஸ்.பொவோடு நெருக்கம் கொள்ளவேண்டும் என்று எனக்கு பிறகு ஒருபோதும் தோன்றியதில்லை. ஆசான்களாயிருப்பினும் அவர்களைத் தள்ளி நின்று இரசிப்பதில்தான் ஓர் அழகும், மதிப்பும் இருக்கின்றது என்பது என் அனுபவம். ஆகவேதான் எஸ்.பொ இரண்டாவது முறையாக இயல்விருது வாங்க, கிட்டத்தட்ட 10 வருடங்களின் பின் கனடா வந்தபோதும் அவரைத் தனித்துச் சந்தித்து நிறைய அளவளாவ வேண்டும் என்ற விருப்பு எனக்குள் எழுந்ததில்லை.


ஆனால் ஆசான்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவேண்டும் என்பதற்காய் 'உரிய அழைப்பிதழ்' இல்லாதே எஸ்.பொவைக் கெளரவப்படுத்திய இயல் விழாவுக்கு 'மதில் ஏறிப்பாய்ந்து' போயிருக்கின்றேன். எஸ்.பொ அந்த 'நாசூக்கான‌ கற்றோர்' அரங்கில், 'நானொரு காட்டான்' என்று தொடங்கி ஒரு சிறப்பான உரையை ஆற்றி என்னைப் போன்றவர்களுக்குப் பெருமிதத்தைத் தந்தார். அதற்குப் பிறகு இறுதியாய் அவரை நேரடியாகச் சந்தித்தது என்றால், 'காலம்' சஞ்சிகை நடத்திய நிகழ்வில். அன்று எத்தனையோ எஸ்.பொ எழுதிய நூல்கள் இருக்க, அவர் காமசூத்ராவுக்கு 'கவிதை' உரை எழுதிய நூலில் கையெழுத்து வாங்கி அவருக்கு நான் என்றுமே 'இவ்வாறான விடயங்களில்' விசுவாசமான சீடனாக இருப்பேன் எனவும் உணர்த்தியிருக்கின்றேன். 


2.


முற்போக்கு இயக்கமும், கைலாசபதி, சிவத்தம்பி போன்ற விமர்சகர்களும் தீவிரமாக இருந்த ஒருகாலத்தை இன்று நிதானமாக நாங்கள் அசைபோட்டுப் பார்க்கலாம். ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஏதோ ஒரு இயக்கமோ, இசமோ தீவிரமாகப் பரவுவதும் அவை தம்மை முன்னிறுத்துவதும் நிகழ்ந்திருப்பதை நாம் பார்க்கமுடியும். அவ்வாறே ஈழத்தில் ஒருகாலத்தை முற்போக்கு இயக்கத்தினர் முற்றுகையிட்டிருக்கின்றனர். அது தவிர்க்கமுடியாததும் கூட. இலங்கையில் தீவிர சாதி ஒடுக்குமுறையை எதிர்த்த ஓர் இயக்கம், தன்னை கலை இலக்கியம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் நுழைந்து பங்களிப்பது இயல்பானது. ரஷ்யாப் புரட்சியின்பின் ரஷ்யாவில் நிகழ்ந்ததுபோல, தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சியின் பின் நிகழ்ந்ததுபோல, இடதுசாரிகள் முற்போக்கு இயக்கத்தைக் கட்டியமைத்து கலை இலக்கியங்களிலும் பரவியிருக்கின்றனர்.


காலத்தின் தேவையாயிருந்த முற்போக்கு இயக்கத்திலிருந்தே நமது முக்கிய முன்னோடிகள் எல்லோரும் வளர்ந்திருக்கின்றனர். பிறகான காலங்களில் சிலர் முரண்பட்டு வெளியேறினாலும் கே.டானியல், எஸ்.பொ, மு.தளையசிங்கம், டொமினிக் ஜீவா என்று, முதல் தலைமுறையின் நிறையப் பேரை அப்படிப் பட்டியலிடலாம். ஒருவகையில் ஒரு இயக்கம் தீவிரமாக இருக்கும்போது உதிரிகளாய்  பலர் வெளியேறுவதும், அவர்கள் தமது எதிர்ப்பை அந்த பேரியக்கத்தின் மீது விமர்சனமாக வைப்பதும் முரணியக்கத்தின் அடிப்படைப் பண்பாகும்.


அவ்வாறே முற்போக்கு இயக்கத்திலிருந்து மு.தளையசிங்கமும், எஸ்.பொவும், வ.அ.இராசரத்தினமும் வெளியே வந்து தமதான இலக்கியத்தை, அது சார்ந்த கோட்பாடுகளை முன்வைத்திருக்கின்றனர். ஒருவகையில் முற்போக்கு இயக்கத்தினோடு ஏற்பட்ட முரணியக்கமுமே நல்ல இலக்கியவாதிகளை அதற்கு வெளியிலும் எமக்கு ஈழத்தில் தந்திருக்கின்றது. எனவே முற்போக்கு இயக்கத்தின் எழுச்சியை இன்று நின்று அவதானிக்கும்போது அது ஒரு நல்ல விளைவே என்று சொல்லத் தோன்றுகின்றது.


என் வாசிப்பின் வழியே நான் முன்னோடிகளாகவும், விருப்பத்திற்குரியவர்களாகவும் கொள்பவர்களான எஸ்.பொவும், மு.தளையசிங்கமும், பின்னாளில் யேசுராசாவின் 'அலைகள்' போன்ற சிற்றிதழ்கள் முன்வைத்த கலையிலக்கியக் கோட்பாடுகள் என்றாலும், எனக்கு சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்களிடமும் மதிப்பிருக்கின்றது. அவர்களின் இலக்கியம் சார்ந்த கோட்பாடுகளில், இலக்கியத்தின் நுண்ணழகியல் உள்ளிட்ட பலதைத் தவற விட்டிருந்தாலும், அவர்களின் உழைப்பு ஒருவகையில் பாராட்டத்தக்கதே.


அண்மையில் தற்செயலாக 1968இல்  இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்ட கைலாசபதியின் "Tamil Heroic Poetry"ஐ (தமிழ் வீரயுகக் கவிதைகள்)கொஞ்சம் தட்டிப்பார்த்தபோதே அவரின் உழைப்பின் தீவிரம் தெரிந்தது. ஏற்கின்றோமோ இல்லையோ அதற்கான ஆய்வு மதிக்கப்படவேண்டியது. அவ்வாறே சிவத்தம்பியின் இலக்கிய ஆய்வுகளில் அவ்வளவு ஈர்ப்பில்லாதுவிடினும் அவர் நமது சங்க இலக்கியங்களில் செய்த ஆய்வுகளும், அன்றைய காலத்தில் படித்தவர்களால் தீண்டப்படாத சினிமாக்கள் பற்றி எழுதிய கட்டுரைகளும்  நினைவில் கொள்ளப்படவேண்டியவை. இன்றையகால ராஜ் கெளதமனும், அ.மார்க்ஸும் இன்னும் பிறரும் கைலாசபதி/சிவத்தம்பியின் ஆய்வுகளின் ஈர்ப்பினாலே இவ்வாறான  ஆய்வு வாசிப்புக்களுக்குள் புகுந்ததாகச் சொல்லியிருக்கின்றனர்.


எஸ்.பொ போன்றவர்கள் ஒருவகையில் இந்த 'முற்போக்கு விடயத்தை' சற்று அதிகமாய் ஊதிப் பெருப்பித்தவர்கள் என்றே இப்போது பார்க்கும்போது தோன்றுகின்றது. எஸ்.பொவைப் போன்றோர் உதாசீனம் செய்யப்பட்டது உணமையெனினும், அவரின் முக்கிய படைப்புக்களான 'சடங்கு', 'வீ 'போன்றவை முற்போக்கு முகாமோடு தீவிரமாக முரண்பட்ட காலங்களிலேயே வந்திருக்கின்றது. கே.டானியல், தெணியான், பெனடிக்பாலன், கே.கணேஷ், பசுபதி, முருகையன் போன்ற முக்கிய பல எழுத்தாளர்கள் முற்போக்கு முகாமிலிருந்தே உருவாகியிருக்கின்றனர். ஆக முற்போக்கு இலக்கிய முகாம் நமது இலக்கியச்சூழலுக்கான இருண்டகாலம் என ஒருபோதும் சொல்லவே முடியாது.


இன்றைக்கு தமிழகத்தில் ஒருசாரார் சிவத்தம்பி/கைலாசபதி போன்றவர்களின் இலக்கிய ஆய்வுகளுக்கு எதிராக வெங்கட் சாமிநாதன் போன்றவர்களை உயர்த்திப் பிடிக்கின்றனர். பிற்காலத்தில் வெங்கட் சாமிந்தானுக்கு எதிராகப் பிரமிளும், எம்.ஏ.நுஃமானும் (மார்க்சின் கல்லறையிலிருந்து) தொடர்ச்சியாக எதிர்வினைகள் செய்திருக்கின்றார்கள் என்பது ஒருபுறமிருக்க, இன்று வெங்கட் சாமிநாதன் முன்மொழிந்த இலக்கியவாதிகளில் எத்தனைபேர் 'உருப்படியான' இலக்கியவாதிகளாகக் கனிந்திருக்கின்றார்கள் என்றும் பார்க்க வேண்டியிருக்கின்றது. அந்தவகையில் பார்த்தால் சிவத்தம்பி/கைலாசபதிக்கு இலக்கியவாதிகளை முன்மொழிந்ததில் நிகழ்ந்த சரிவே, வெ.சாவுக்கும் கூட நிகழ்ந்திருக்கின்றது என எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? மேலும், சிவத்தம்பி போன்றவர்கள் கூட பிற்காலத்தில் எஸ்.பொவை அங்கீகரித்திருக்கின்றார்கள் என்று எஸ்.பொவே 'இப்போதாவது என்னை ஏற்கிறார்களே' எனச் சில இடங்களில் எழுதியிருக்கின்றார்.


ஒருவகையில் நமக்கு முற்போக்கு இயக்கமும், அதனோடு நிகழ்ந்த முரணியக்கமுமே நல்ல இலக்கியங்களை அதற்குள்ளும், அதற்கு வெளியிலே தந்திருக்கின்றது என்பது விளங்குகின்றது. அதேபோல முற்போக்கி இலக்கிய முகாமிலிருந்து வெளியேறிய மு.தவோ, எஸ்.பொவோ ஒருபோதும் மார்க்சியத்தை வெறுத்தார்களில்லை.  முற்போக்கு முகாமில் இருந்த சிலரின் அதிகாரத்தைக் கேள்வி கேட்டார்களே தவிர, அந்த இயக்கத்துக்கு சமூகத்தில் இருந்த வகிபாகத்தை ஒருபோதும் மறுத்தவர்களில்லை. இன்றும் கூட முற்போக்கு இயக்கத்தின் மீதான மறுவாசிப்புக்கள் சரியாக நிகழ்த்தப்படவில்லை. எடுக்கவேண்டியதை எடுத்து உதறவேண்டியதை உதறி முற்போக்கு இலக்கியத்தை மீளவாசிப்புச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


நான் எப்போதும் வலியுறுத்துவது ஒன்றுதான். ஒரு இலக்கியப்போக்கோ இலக்கியமுகாமோ பூதாகாரமாக எழும்பி நிற்கும்போது அதைப் போலவே உதிரிகளும் கவனிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அதேபோல அந்த இலக்கிய முகாங்களில்/முகங்களில் இருக்கும் அரிய விடயங்களை எடுத்துக்கொண்டு அடுத்த தலைமுறை முன்னே நகரவேண்டும். ஒருவகையில் நாம் மற்றமையை முற்றாக நிராகரிக்கும்போது, அடுத்ததாக நாம் ஒரு புதிய சூழலுக்குள் புகும்போது, நாம் நம்பியவையே முற்றுமுழுதாக நிராகரிக்கப்படும் அவலச்சூழல் நமக்கும் வரலாம். 


ஒருகாலத்தில் முற்போக்கு முகாம் தனதில்லாத மற்றமைகளை நிராகரித்ததால், நாங்களும் அவர்களை இப்போது முற்றாக நிராகரிக்கவேண்டும் என்பதில்லை. அதுபோலவே இன்று தமிழ்நாட்டின் சில இலக்கியவாதிகள் தமதல்லாத மற்றமைகளை கடுமையாக நிராகரிக்கும்போது எதிர்காலத்தைப் பற்றியும் அவர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். நாளை புதியவர்களோ புதிய இலக்கியக்கோட்ப்பாடுகளோ வந்து இவர்களை முற்றாக நிராகரித்தால் தமிழ் இலக்கியத்துக்கு அது இழப்பாக அல்லவா போகும். 


கடந்தகாலத்தில் முக்கியமானவர்களாக முன்னிறுத்தப்பட்ட சுந்தர ராமசாமியையோ அல்லது ஜெயகாந்தனையோ இன்று எத்தனை பேர் இப்போதும் அதே ஆவலுடன் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அன்று உதிரிகளாக இருந்து மிகக் குறைந்தளவே எழுதிய ஜி.நாகராஜனையும், ப.சிங்காரத்தையும் வாசிக்க புதிது புதிதாகப் பலர் வந்துகொண்டிருப்பதை நாங்கள் பார்க்கமுடிகின்றது. எப்போதும் காலத்தோடோ ஊரோடோ ஒத்தோட வேண்டியதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்.


ஆகவேதான் தொடர்ந்து நான் பெரும் மரங்களின் நிழல்களிலிருந்து வெளியேறி உதிரிகளின் மீது என் பார்வையை அதிகம் குவிப்பவனாகவும், பெரு மரங்களை விமர்சனங்களின்றி அப்படியே ஆரத்தழுவ விருப்பம் இல்லாதவனாகவும் இருப்பதை என் வாசிப்பின் அடிப்படைப் பண்பாக வைத்திருக்கின்றேன்.


3.


எஸ்.பொவின் 'முறுவல்' ஒரு நாடகப் பிரதியாகும். இதை அவர் 70களில் எழுதி 74ல் கொழும்பில் மேடையும் ஏற்றியிருக்கின்றார். இந்தப் பிரதியில் பல்வேறு பாத்திரங்கள் குறுக்கிடுகின்றன. நிகழ்காலப் பாத்திரங்கள் பாத்திருக்க, இதிகாசப் பாத்திரங்கள் உயிர்பெற்று எழும்பத்தொடங்குகின்றன. விஸ்வாமித்திரனுக்கும், மேனகாவுக்கும் நிகழும் உரையாடல் விதந்து சொல்லக் கூடியவை. விஸ்வாமித்திரன் மேனகாவின் காதலை நிராகரிக்க இந்திரன் பூமியின் மீது சாபம் போட திரேகாதயுகம் தோன்றுகின்றது.


மழையே இல்லாதுபோய் மனிதர்கள் பட்டினியில் வாடத்தொடங்குகின்றனர். அப்போது விஸ்வாமித்திரனோடு சண்டாளன் என்ற பாத்திரம் உரையாடத் தொடங்குகின்றது. விஸ்வாமித்திரன், பசியின் கோரம் தாங்கமுடியாமல் 'தீண்டக்கப்படாதவன்' தன் குடிசையில் வைத்திருந்த இறைச்சியைச் சாப்பிடுகின்றார். இதுவரை காலமும் நீங்கள் கட்டிவைத்திருந்த உங்கள் தீண்டாமைக் கொள்கைகள் என்னவாயிற்று என்று சண்டாளன் கேட்கின்றார். நாங்கள் உயர்ந்தகுடிகள் எங்களுக்கு ஏற்றமாதிரி மனுநீதியையும், சடங்குகளையும் மாற்றக்கூடிய அதிகாரம் வாய்த்தவர்கள். இப்போது இந்த இறைச்சியை தீண்டத்தகாதவனாக உன்னிடமிருந்து களவெடுத்துச் சாப்பிடுவதும் அறமே என்கின்றார் விஸ்வாமித்திரன். 


எப்படியெல்லாம் தமக்கு வேண்டியபடி தமக்கான சாத்திரங்களை மாற்றுகின்றனர் இந்த ஆதிக்கசாதியினர் என அதிர்ந்து போய் ஒடுக்கப்பட்டவர் மெளனமாக இருக்கின்றார். இந்திரனுக்கோ விஸ்வாமித்திரனை நாய் இறைச்சியைச் சாப்பிடவைத்து அவரின் கொட்டத்தை அடக்கிவிட்டேன் என்று நிம்மதி வருகின்றது. பிறகு சமகால பாத்திரங்கள் இந்த வரலாற்று வாசிப்பைப் பற்றி ஆராய்வதுடன் நாடகப் பிரதி முடிகின்றது.


இதைப் பிறகு 2005ல் தமிழகத்திலும் தமிழச்சி தங்கபாண்டியன், சித்தன் போன்றோர் நடிக்க நாரதகான சபையிலும் மேடையேற்றியிருக்கின்றனர். 


70களில் எழுதப்பட்டதாயினும் அப்போதே இதில் எஸ்.பொவின் குறும்புத்தனங்கள் பல இருக்கின்றன. எஸ்.பொவே இந்த நாடகத்தின் இடையில் ஒரு பாத்திரமாக வருகின்றார். இந்திரன் தன் மனச்சாட்சியுடன் உரையாடுகின்ற காட்சிகள் சிலாகிக்கக் கூடியவை. விஸ்வாமித்திரன்- மேனகாவினூடாக எஸ்.பொ நமக்கு ஏற்கனவே சொல்லப்பட்ட கதையை மீள்வாசித்துப் பார்க்கின்றார். எஸ்.பொவுக்கு அவரொம் கதைகளில் வாய்க்கும் அழகிய மொழி இதில் அவ்வளவு வாய்க்காவிட்டாலும் 70களில் இப்படி ஒரு பிரதியை - வழமையான அவருடைய காமத் தீற்றுக்களுடன் - மேடையேற்றியிருக்கின்றார் என்பது கவனத்திற்குரியது.


***********

எஸ்.பொவின் 'நீலாவணன் நினைவுகள்'

Saturday, April 09, 2022

 (எஸ்.பொ - பகுதி 07)


'இலக்கியத்தைக் கற்றுத் தேர்ந்தவன் நான்' என்ற இறுமாப்புடன் என்னை 'வித்தக விமர்ச'கனாகவோ, ஞானம் பாலிக்கும் 'ஆசானா'கவோ இலக்கிய உலகிலே நானை திணித்துக் கொண்டனல்லன். அன்றும், இன்றும், நாளையும் அந்த இனிய உலகிலே நான் பரமார்த்த ஊழியனே. 'நான் இலக்கிய உலகிலே இவற்றைச் சாதித்துவிட்டேன்' என்று எதையாவது தொட்டுக்காட்டவும் கூச்சப்படும் ஒரு முதிர்ச்சியும் என்னை வந்து சேர்ந்திருக்கின்றது. இவ்வளவு காலமும் நான் எழுதியவை எல்லாம், நாளை நான் எழுதப்போகும் ஓர் உன்னத இலக்கியப் படைப்பிற்கான பயிற்சியே என்று சத்தியமாக நம்புபவன் நான். எனவே, என் கருத்துக்களைச் செலவாணிப்படுத்தும் அதேவேளையில், இன்றளவும், எல்லோரிடத்திலிருந்தும், நேற்றுத்தான் பேனா தூக்கிய ஓர் இளவலின் அனுபவத்திலிருந்துங்கூட, எதையாவது கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவனாய் இருக்கிறேன்.


(எஸ்.பொ, 'நீலாவணன் நினைவுகள்', ப 120)


1.


நீலாவணன் கிழக்கிலங்கையில் பிறந்த முக்கியமான கவிஞர். எஸ்.பொவின் காலத்துக்குரியவர். நீலாவணன் இளவயதில் (44) காலமாகும்போது எழுதிய அஞ்சலிக்கட்டுரையை விரித்து பின்னர் எஸ்.பொ எழுதியதே நீலாவாணன் நினைவுகள் பற்றிய நூலாகும்.


எஸ்.பொ, 80களில் கலாமோகனின் வீட்டில் பாரிஸில் தங்கியிருந்தபோது, அங்கே அப்போது வாழ்ந்த நமது 'காலம்' செல்வத்தார் பாரிஸ் அழகிகளையும், நெப்போலியனையும் தேடிப் போகாத காலத்தில் (விரிவான விபரங்களுக்கு செல்வத்தாரின் 'எழுதி தீராக் கதை'களை வாசிக்க), எஸ்.பொவைச் சந்தித்திருக்கின்றார். பின்னர் கனடா வந்த செல்வம் 'மஹாகவி' உருத்திரமூர்த்தியின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுகின்றார். அதனைப் பாராட்டும் எஸ்.பொ, 'யாழ்ப்பாண இலக்கியப் பங்களிப்பு = ஈழத்து இலக்கிய வளம்' என்கிற பழைய தவறுகளை இயற்றாது, மட்டக்களப்பின் தற்கால எழுத்து எழுச்சிகளையும் ஆவணப்படுத்தும் வகையில் கவிஞர் நீலாவணன் பற்றியும் ஒரு சிறப்பு மலர் வெளியிடும்படியாகக் கேட்கின்றார். அதிலிருந்தே இந்த நூல் எழுதும் காலம் கனிந்தது என்கிறார் எஸ்.பொ. இந்த நூல் 'காலம்' வெளியீடாக 94ம் ஆண்டு வெளிவந்திருக்கின்றது.


எஸ்.பொ இந்த நூலில் நீலாவணனுடனான நினைவுகளினூடாக அந்தக்கால இலக்கியப் போக்குகளையும், இலக்கியவாதிகளையும் அசை போடுகின்றார். முக்கியமாய் 60களில் கிழக்கிலங்கையில் கலை இலக்கியம் சார்ந்து நிகழ்ந்த சம்பவங்களை நாங்கள் இந்தத் தொகுப்பினூடாக அறிகின்றோம். நீலாவணன் அந்த மண்ணின் கவிஞராக இருந்தது பற்றி, நீலாவணனின் கவிதைகளை முன்வைத்து எஸ்.பொ பேசுகின்றார். அப்படிச் செய்யும்போதும் நீங்கள் எனது வாசிப்பினூடாக நீலாவணனைப் பார்க்கத் தேவையில்லை, நீங்களே தேடி வாசித்து உங்களுக்கான பார்வைகளை உருவாக்குங்கள் என்றும் எஸ்.பொ எங்களுக்குத் தெளிவாக இங்கே சொல்கின்றார்.


எஸ்.பொ, முற்போக்கு முகாமிலிருந்து வெளியேறிய காலத்தை அண்டிய பகுதியில், எஸ்.பொவுக்கு நீலாவணனின் நட்பு வாய்க்கின்றது. ஒரு மேடையை முதன்முதலாக இருவரும் பகிரும்போதும் இரண்டுபேரும் ஒருவர் கருத்தை ஒருவர் மறுத்தே பேசுகின்றனர். காலப்போக்கில் அவர்களை அறியாமலே ஒரு நல்லதொரு நட்பு அவர்களுக்கிடையில் முகிழந்து விடுகின்றது. தன்னைப் போலவன்றி முற்போக்கு முகாமை விட்டு வெளியே வந்துவிடாத நீலாவணனை, கைலாசபதியோ, சிவத்தம்பியோ தமக்கான ஆஸ்தான கவிஞர்களாக முன்னிறுத்திய முருகையன், பசுபதி போலக் கூட கவனப்படுத்தவில்லை என்று எஸ்.பொ கவலைப்படுகின்றார்.


நீலாவணன், மஹாகவி உருத்திரமூர்த்தி மீது அளவற்ற பற்று வைத்திருந்தவர். மஹாகவியை எங்கும் விட்டுக் கொடுக்காதபோதும், அவர்களுக்கிடையில் தான் அறிந்த காலங்களில் அவ்வளவு நட்பு இருக்கவில்லை என்கின்றார். மஹாகவி கிழக்கில் அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் கூட, அவர்களுக்கிடையில் அவ்வளவு பேச்சுவார்த்தைகள் நடந்ததில்லை என்கின்றார். அது ஏனென்றும் தனக்குத் தெரியவில்லை என்கின்றார். அதுபோலவே எஸ்.பொவும், நீலாவணனுடன் அவரின் இறுதிக்காலத்தில் கிட்டத்தட்ட 10 வருடங்களாக தொடர்பில் இல்லாமலே இருந்திருக்கின்றார். தனிப்பட்டோ அல்லது இலக்கியஞ் சார்ந்தோ வராத ஊடலினால் இறுதிவரை பிறகு நீலாவணனோடு பேச முடியாமற் போய்விட்டது என்று கவலைப்படுகிறார். நண்பர்களாய் இருப்பவர்கள் பெரிய காரணங்கள் எதுவுமின்றி ஒருகட்டத்தில் பிரிவதும், பிறகு என்றென்றைக்குமாய்ச் சந்திக்க முடியாமல் இருப்பதும் இலக்கிய உலகில் வழமையாக நடைபெறுபவைகள்தானே.


நீலாவணன் குறித்த இந்தப் பதிவுகளில் எஸ்.பொ,  விபுலானந்தரின் ஆழ்ந்த உழைப்பும், பல்துறைத் திறமையும் எப்படி யாழ்ப்பாண வித்தகக் கும்பலால் மறைக்கப்பட்டது என்பது பற்றி எழுதுகின்றார். அதேவேளை யாழைப் பூர்வீகமாகக் கொண்ட இலங்கையர்கோன் உண்மையிலே கிழக்கிலங்கையில் இலக்கியம் செழிக்க பல்வேறுவழிகளில் உதவியிருக்கின்றார் என்பதைக் குறிப்பிடுகின்றார்.நீலாவணனுக்கும், இலங்கையர்கோனுக்கும் இருந்த உறவைப் பற்றி எஸ்.பொ விபரிக்கும்போது நமக்கும் நெகிழ்ச்சி வருகின்றது. அவ்வாறு இலங்கையர்கோன் பற்றி வ.அ.இராசரத்தினம் நெகிழ்ச்சியாக, தனது நினைவுகளின் குறிப்புகளில் எழுதியது எனக்கு நினைவுக்கு வருகின்றது.


எஸ்.பொவுக்கு, இலங்கையர்கோனோடும் இலக்கியக் குறித்த கருத்துக்களில் சர்ச்சை வருகின்றது. இருவருக்கும் நெருக்கமான நீலாவணனுக்கு இந்த மோதலை என்ன செய்வதென்றும் தெரியவில்லை. எஸ்.பொ அந்தக் கோபத்தில் நீலாவணன் வீட்டிலிருந்து புறப்பட்டு மட்டுநகருக்குப் போகப்போகின்றேன் என்கின்றார். நீலாவாணன் ஒருநாள் நின்றுவிட்டுச் செல்லுங்கள், இலங்கையர்கோன் தன் பக்கம் தவறிருந்தால் நிச்சயம் உங்களைச் சந்திக்க வருவார் என்கின்றார். அவ்வாறு இலங்கையர்கோன் வந்து மன்னிப்புக்கேட்டு எஸ்.பொவின் நினைவில் உயர்ந்த மனிதராக மாறுகின்றார்.


இலங்கையர்கோனின் மறைவு நீலாவணனைத் தாக்க, இலங்கையர்கோனை யாழ் வரை சென்று இறுதியாக வழியனுப்பி வைக்கின்றார். அப்படி நீலாவணனின் நிழலினூடாக வளர்ந்த எம்.ஏ.நுஃமான் பின்னர் மஹாகவி கொழும்பில் மரணமடைய யாழ்ப்பாணம் வந்து வழியனுப்பியதையும் எஸ்.பொ குறிப்பிடுகின்றார். நுஃமான் என்ற மெல்லிய இளைஞனை அளவெட்டி வரை வரசெய்த இலக்கியத்தாகத்தினூடாக எஸ்.பொ, மஹாகவிக்கும் தனக்கும் இருந்த நினைவுகளை இங்கே நம்மோடு பகிர்கின்றார்.


இலங்கையர்கோன், நீலாவணனுக்கு இருந்தமாதிரி, நீலாவணன் அவ்வாறு பலரைப் பிறகு 'எழுத்தாளர் சங்கம்' என்ற அமைப்பை நடத்தி வளர்த்திருக்கின்றார். அதிலிருந்து முகிழ்ந்து வந்த முக்கியமான இருவராக நுஃமானையும், சண்முகம் சிவலிங்கத்தையும் எஸ்.பொ கவனப்படுத்துகின்றார்.


2.


நீலாவணன், பாரதியாரை விட, பாரதிதாசன் மீது நிறைந்த பற்றுடையவராகவும், பாரதிதாசனின் கவிதைகளை மனப்பாடம் செய்து பாடுகின்றவராகவும் இருந்திருக்கின்றார் என்கின்றார். எஸ்.பொவுக்கு பாரதிதாசன், திராவிட இயக்கங்களின் உணர்ச்சிக்குள் வீழ்ந்துவிட்ட கவியென்கின்ற பிம்பம் இருக்கின்றது. எனவே நீலாவணனுக்கு இருக்கும் பாரதிதாசப் பிடிப்பை எதிர்மறையாக அவ்வப்போது குறிப்பிடுகின்றார். அதேவேளை நீலாவணனுடன் அவரின் கடைசிப் பத்தாண்டுகளில் தொடர்பில்லாததால் நீலாவாணன் கூட சிலவேளைகளில் மாறியிருக்கலாம் எனவும் எஸ்.பொ இந்நூலில் குறிப்பிடுகின்றார்.


மஹாகவி, இலங்கையர்கோன் போல இந்த நூலில் சற்று விரிவாகப் பேசப்படும் இன்னொருவர் ஏ.ஜே.கனகரத்ன. எஸ்.பொ, ஏ.ஜேவுடன் யாழில் கிராண்ட் ஹொட்டலில் மதுவை சிறுசிறு மிடறுகளாக அருந்தியபடி இலக்கியம் பேசியது அற்புதமானது என்கின்றார். பிறகு எஸ்.பொவும், ஏ.ஜேவும் நீலாவணனின் வீட்டிலும் இருந்து பேசியிருக்கின்றனர். ஆனால் இதைவிட இம்மூவரும் கொட்டாஞ்சேனையில் இருந்து நீலாவணன் கவிதைகள் வாசிக்க, தாங்கள் மதுவருந்தி அதைக் கேட்டதும், கருத்துக்களைப் பகிர்ந்ததும் இன்னும் பேரின்பந்த தந்த அனுபவம் என்கின்றார் எஸ்.பொ.


ஏ.ஜே தமிழ் ஆக்கங்களை ஆங்கில ஆக்கங்களுடன் ஒப்பிட்டு நயப்பதும், கவிதைக்கு உருவகமொழி இன்றியமையாதது என நீலாவணனுக்குச் சொல்வதும், நீலாவணன் அதைப் பிறகான காலங்களில் எடுத்துக்கொள்வதுமென ஒரு கடந்தகாலத்தை நாங்களும் அவர்களுடன் இருந்து பார்க்கின்றோம். அதேபோன்று முற்போக்கு அணி தன்னை எல்லா இடங்களிலும் இருந்தும் தனிமைப்படுத்த, இளம்பிறை எம்.ஏ.ரஹ்மானும், நீலாவணனும், அவரின் கல்முனை நண்பர்களுமே தாங்கிப் பிடித்தார்கள் என்பதையும் எஸ்.பொ குறிப்பிடுகின்றார். எம்.ஏ.ரஹ்மானின் பதிப்பகம் இல்லாதுவிட்டால் தன்னால் இவ்வளவு உத்வேகத்துடன் எழுதியிருக்க முடியாதிருந்திருக்கும் என்றும் குறிப்பிடுகின்றார்.


நீலாவணனின் சடுதியான இழப்பு எஸ்.பொவுக்குப் பேரிழப்பாக இருக்கின்றது. கிழக்கின் இலக்கியத்தை இன்னும் ஆழமாகக் கொண்டு சென்றிருக்கக் கூடியவர் இளவயதில் இல்லாமற்போய்விட்டாரே என்று கவலைப்படுகின்றார். நீலாவாணனின் முக்கிய நெடுங்கவிதையான 'வேளாண்மை'யை பிறகு நீலாவணனின் நண்பரான வ.அ.இராசரத்தினம் பதிப்பிக்கின்றார். அவ்வளவு வசதியில்லாத வ.அ.இராசரத்தினம், இதை நீலாவணனுக்காய் செய்கின்றார் என எழுதுகின்ற எஸ்.பொ அதனூடாக நமது வாசிப்புப் பழக்கத்தையும், காசு கொடுத்து நூல்களை வாங்கப் பஞ்சிப்படுத்தும் சூழலையும் கடுமையாக விமர்சிக்கின்றார். 


முக்கியமாக, 'புலம்பெயர்ந்த நாடுகளிலே கலாசாரப் பராம்பரிய வேர்கள் பட்டுப்போகாது பாதுகாக்க வேண்டிய அவலங்களுக்கு மத்தியிலே வாழ்பவர்கள் கூட,  பொருள் வசதிகள் இருந்தும், தமிழ் சினிமா உலகின் மூன்றாந்தர நடிகைகளின் குண்டி நெளிப்புக்குப் பொன்மாலை சூட்டத் தவிக்கிறார்களே ஒழிய, ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களைக் காசு கொடுத்து வாங்குவோம் என்கிற உணர்ச்சி அற்ற ஜடங்களாக வாழ்வதிலே பெரும்பாலும் திருப்திப்படும் அநியாய கோலத்தைப் பாக்கின்றோம். இத்தகைய அசட்டையும் பஞ்சிப்பாடும் நிலைத்திருக்கும் வரையிலும் ஈழத்து இலக்கியக்காரனின் படைப்புகளை நூலுருவிலே பேணும் ஆசை, ஓர் இனிய கனவாகவே கரைந்துபடும். இலவச கூப்பன் அரிசி நுகர்ந்து மகிழ்ந்த கூட்டத்தினருடைய சந்ததியினர், கலை-இலக்கிய ரஸனையை 'ஓசி'யில் பெறும் 'பொழுது போக்குப் பண்டம்' என்று கருதுதல் அவல் பேறாகும்.' என எழுதுகின்றார். 


எஸ்.பொ இந்தளவு கடுமையான கசப்பான வார்த்தைகளைப் பேசுவதற்கு, அன்று (94) வரை நீலாவணனின் ஆக்கங்கள் முழுவதும் நூலுருப் பெறவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.


நீலாவணனின் நினைவுகள் என்கின்ற இந்த நூலினூடாக எஸ்.பொ நீலாவணனை மட்டுமில்லை இன்னும் பலரை நினைவுகூருகின்றார். அன்றையகால இலக்கிய உலகை, சர்ச்சரவுகளை, இழந்துபோன நட்புக்களை, அன்று தமிழ் X முஸ்லிம் என்ற முரண்கள் இல்லாது கலந்துபழகிய அந்நியோன்னியத்தை நமக்குக் கவனப்படுத்துகின்றார். சடங்கு, ஆண்மை, நனவிடைதோய்தல் போன்ற அரிய படைப்புக்களைத் தந்தபோதும், தன்னை இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர் என்று எஸ்.பொ சொல்லிக்கொள்கின்றார். உண்மையின் உபாசகனாகவும், தமிழ் இலக்கிய ஊழியனாகவும் தன்னை என்றும் வைத்துப்பார்க்கும் எஸ்.பொ இந்த நூலினூடாக  தனது நல்லதொரு நண்பரை நினைவுகொள்வதன் மூலம், நீலாவணனை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் அறிமுகப்படுத்துகின்ற அரிய பணியைச் செய்திருக்கின்றார் என்றே கூறவேண்டும்.


**********

(2019)

எஸ்.பொவின் 'அப்பாவும் மகனும்'

Saturday, April 02, 2022

 (எஸ்.பொ - பகுதி 06)


1.


எஸ்.பொ அவரது தந்தையார் 1972ல் காலமாகும்போது 'அப்பையா' என்று அவரோடான தனது நினைவுகளைக் கவிதை வடிவில் எழுதுகின்றார்.  தகப்பனின் இறுதிச்சடங்கில் சில சம்பிரதாயமான சடங்குகளை எஸ்.பொ செய்யவேண்டியிருக்கின்றது. யாழ்ப்பாணத்து கிடுகுவேலிக் கலாசாரத்தையும், சடங்குகளையும் மறுதலித்து வந்த எனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதென்று எஸ்.பொ கவலையுறுகின்றார். அப்போதுதான் உள்மனதில் தனக்கு ஒரு குரல் கேட்டது என்கின்றார். நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ எனக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்கின்றார்.


"பல்கோடியின் ஒரு பின்னத்திலே ஒரு நிகழ்ச்சி - அல்ல, அற்புதம்- தன் பேரோளிக்குள் ஆழ்த்தியது. இது கற்பனை மயனின் குறளியாகச் சிலருக்குத் தோன்றலாம். உங்கள் சுயத்தை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால், நடந்தது என்னவோ உண்மை என்று இப்போதும் சத்தியமாகவே நம்புகின்றேன்" என எஸ்.பொ கூறுகின்றார்.


அது அவரது தந்தையான அப்பையாவின் குரல்: "எட, தம்பி! நீயே அழுகிறாய்? நீ யாழ்ப்பாணச் சடங்குகளிட்டைத் தோத்துப் போனாய் எண்டு எந்த விசரன் சொன்னவன்? உன்ரை மயிர்க்கணுவைக் கூட எனக்கு நல்லாத் தெரியும். என் ஒருத்தன்ரை பட்சத்துக்காக தோத்துப் போனதாக நடிக்கிறாய். எடேய், தலையை நிமிர்த்தி நடவடா, நீயும் தோத்துப் போனால், எனக்கு வெற்றி ஏதடா? நீயும் உன்பட்சமுமே என் வெற்றி!" என்பதே அந்தக் குரல். தகப்பனுக்கான சடங்குகளுக்காய் மீசையை இழந்து, நான்கு முழக்காரிக்கன் மட்டுமே தன் சங்கையை மறைக்க, நடுத்தெருவில் நடந்தபடி தோளிலே கொள்ளிக் குடம் சுமந்தபடி குழந்தையாக தேம்பி அழுதபடி போகும் எஸ்.பொ தன் சுயத்தை அப்பையாவின் குரலிலூடாக தன்னை மீட்டுக்கொள்கின்றார். 


அப்பையாயா காவியத்திலேயே 'தேர்' கதை தனது தந்தையைப் பற்றியது என்று எஸ்.பொ நமக்கு வாக்குமூலத்தைத் தருகின்றார். "பேசாது/ நீண்டு மிகநீண்டென் நெஞ்சை நிறைத்தவராய்/தோன்ற அவருருவைத் தோயும் மன உயர்வை/அவரின் ஆரோ கணத்தை அவரோ கணகதியை/ எதிர் நோக்கித் தேர்-ஐ எழுதுகின்றேன்." என்று அப்பையா பற்றிய நூலில் குறிப்பிடுகின்றார்.


கவிதைகளால் சொல்லப்படும் அப்பையா காவியத்தில் எஸ்.பொ, தனது தந்தையுடனான நினைவுகளை சிறு சிறு குறிப்புக்களாய் நமக்குத் தருகின்றார். எஸ்.பொவுக்கு படிப்பித்து, யாழ்ப்பாணத்து 'வழக்கப்படி' நல்லதொரு சீதனம் வாங்கும்  நிலைக்கு வந்துவிட்ட நிலையில் எஸ்.பொ, மட்டக்களப்புப் பெண்ணை நேசித்துத் திருமணஞ் செய்கின்றார். 'மட்டக்களப்பாரின்/ மந்திரத்தில் கட்டுண்ட/ துட்டனவன் இனியும் / தொடர்புண்டோ? என்றோரை/ விட்டுப் பிரிந்து/ 'மகனே, நீ மணந்த/ மனைவி எனக்குத் தலைமை மருமகள்' என அப்பையர் எளிதில் ஏற்றுக்கொள்கின்றார். 


எஸ்.பொ அவர் மட்டுமில்லை, அவரின் பிள்ளைகளையும், சாதி பார்க்காதும், சீதனம் வாங்காதும் திருமணஞ் செய்யவிட்டவர். அவ்வப்போது எஸ்.பொ பெண்கள் பற்றிய கொஞ்சம் நக்கலும் நளினமும் கலந்து பேசி/ எழுதினாலும் அவர் தன் வாழ்வில் அவரது எழுத்தைவிட நேர்மையாக இருந்திருக்கின்றார். நம்மிடையே இருந்த பலரைப் போல (என் சமகாலத்திலும் கூட) ஒரு பக்கம் பெண்/சாதி விடுதலை பேசிக்கொண்டு மறுபக்கம் சாதி பார்த்தும், சீதனம் பெற்றுக்கொண்டும் மணம் செய்த பல 'படைப்பாளி'களை நான் நன்கு அறிவேன் என்பதால் எஸ்.பொவை எழுத்தால் மட்டுமில்லாது, எழுத்துக்கும் வாழ்வுக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லாது வாழ்ந்தவர் என்பதிலும் ஆசானாகக் கொள்வதில் மகிழ்ச்சியாகவே இருக்கின்றது. 


எஸ்.பொவுக்கு அவரது அப்பையா 1972ல் இறக்கும்போது அதன் பின்னர் யாழ்ப்பாணத்தோடான நேரடித்தொடர்புகள் முற்றுமுழுதாக அறுந்துபோகின்றது. அதற்கு முன்னரே எஸ்.பொ மட்டக்களப்பில் வசிக்கத் தொடங்கினாலும், ஒரளவு தொடர்புகள் 1970கள் வரை அப்பையாவின் நிமித்தம் இருந்திருக்கின்றது. ஆகவேதான் எஸ்.பொவை ஜெயமோகன் யாழ் நிலத்துப் பாணன் என்கின்றபோது, 'எஸ்.பொ யாழ் நிலத்துப் பாணன்- 1970வரை மட்டும்' என்று வரவேண்டுமென நினைப்பதுண்டு. 


அதேபோன்று எஸ்.பொவை யாழ் நிலத்தோடு சுருக்க முடியாது. இது எப்போதும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களுக்கு இருக்கும் உரிய சிக்கல். தங்களை மட்டும் உலகு பரவிய தமிழ் எழுத்தாளர்களாகவும், பிற நிலத்தில் வாழ்ந்தவர்களை எல்லாம் அந்தந்த நிலத்துக்கு மட்டும் உரியவர்களாகச் சுருக்கிவிடுவதாகும். அநேக தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் தாமாகவே இந்த authorityஐ எடுத்து தாங்களாகவே தமிழ்நிலத்து எழுத்தாளர்களாகி விடுகின்றார்கள். நம்மைப்போன்ற மற்றவர்கள் எல்லோரும் குறுநிலத்து மன்னர்களாகவோ/மறவர்களாகவோ ஆகிவிடுகின்றோம். இனியாவது இவர்கள் தமது  privilege குறித்துச் சிந்திக்கவேண்டும். அம்பை ஓரிடத்தில் குறிப்பிட்டதுபோல, ஆண்கள் தம்மைப்பற்றி எதைப்பற்றி எழுதினாலும் -அது ஆண் இலக்கியமாக அல்லாது- தமிழ் இலக்கியமாகவும், பெண்கள் தம்மைப் பற்றி எழுதினால் பெண் இலக்கியமாக மட்டும் சுருக்கிவிடுவதாகவும் அமைந்துவிடுகின்றது போலத்தான் இதுவும்.


2.


எஸ்.பொ தனது தந்தையை 1972ல் இழந்தது போல, விடுதலைப் போருக்காய்ச் சென்ற அவரது மகன் மித்ராவை 1986ல் இழக்கின்றார். தகப்பனையும் தனயனையும்  குறுகிய காலத்தில் இழக்கும் எஸ்.பொ பிறகு 90களில் தன் மகன் பற்றிக் கவிதைகளாக எழுதுகின்றார். இது இரண்டையும் தொகுத்தே 'அப்பாவும், மகனும்' என்ற தொகுப்பு 1999ல் வெளிவருகின்றது. எஸ்.பொ, மித்தி பற்றி எழுதிய ஆண்மை-15 கதையை வாசித்தவர்க்கு அதில் குறிப்பிட்ட பெருமளவான விடயங்களைத்தான் எஸ்.பொ இங்கே கவிதைகளாக்கி இருக்கின்றார் என்பது எளிதாகப் புரியும். ஒருவகையில் எஸ்.பொ அப்பையாவுக்கும், மித்திக்கும் 'கல்வெட்டுக்களை' இதன் மூலம் எழுதியிருக்கின்றார் எனக் கொள்ளலாம். அப்பையா கனிந்து உதிர்ந்துபோனது போலின்றி, மித்தி பிஞ்சிலே (23 வயதிலேயே) மறைந்துபோனவர். எனவே மகன் பற்றிய அந்தத் துயரம் இன்னும் கடுமையாகவே எஸ்.பொவைத் தாக்கியுமிருக்கும்.


இந்தப் பாயிரத்தில் மித்தியின் நினைவுகள் மட்டுமில்லை எப்படித் தமிழ் இனம் வரலாற்றில் தொடர்ந்தும் வஞ்சிக்கபட்டதென்று 1900களில் தொடக்கத்தில் இருந்து முக்கியமான நிகழ்வுகள் நடந்த வருடங்கள் குறிப்பிடப்பட்டு அப்போது நடந்த சம்பவங்கள் கூறப்படுகின்றது. ஒருவகையில் இது தனிப்பட்ட மகனின் நனவிடைதோய்தலாக மட்டுமின்றி வரலாறு குறித்த நனவிடைதோய்தலாகவும் இது அமைந்திருக்கின்றது.


இறுதியில் 'ஒன்று நீ தெரிக... நான் விழிமூடும்/ஒருபோழ்தில் உன்னையே நினைப்பேன்!/அன்றுநான் 'மகனே...! வருகிறேன் உன்றன்/ அருகினில் என்றார்த்தே வருவேன்!/ நின்றுநீ என்னை நெஞ்சோடும் அணைப்பாய்!/நினைவுகள் மீட்டுநாம் மகிழ்வோம்!" என்று எஸ்.பொ எழுதுவதில் அவர் மீண்டெழுந்துவிடாத அவரின் புத்திர சோகத்தைப் பார்க்கின்றோம்.


3.


எஸ்.பொ தனது தமிழ் ஊழியத்தை, தனி மனிதச் சாதனையாக ஒருபோதும் பார்த்தவருமில்லை. எல்லோரும் சேர்ந்து  'ஊர் கூடித் தேர் இழுப்போம்' என்று விரும்பியவர். தொடர்ச்சியாக இளவல்களை தமிழ் ஊழியத்துக்கு வாருங்களென  அழைத்துக் கொண்டிருந்தவர். ஆகவேதான் "பிறவியில் தமிழ்த்துவம் பொருத்துதல் மகத்தானது. என் அப்பையா எனக்களித்த பிதுரார்ஜிதம் அது. ஆனாலும், சாதாரண மனித ஆசைகளுடன் வாழும் சாமன்யன். தமிழ் உழைப்பிலும் ஊழியத்திலும் வெறிகொண்ட சாமான்யன். இந்த வெறியில் உலக இலக்கியத் திருத்தவிசிலே தமிழ்ப் படைப்புக்கள் சரியாசனம் சுகித்தல் வேண்டும் என்கிற பேராசையில் வசமிழ்ந்தவன். வெறியும் பேராசையும் தமிழ் ஊழியத்தில்  ஆகுமானவை." என்று தன்னைப் பிரகடனம் செய்தாலும், தானும் தன் ஊழியம் தமிழ் என்னும் பெருங்கடலில் சிறு துளி என்கின்றதை விளங்கிக்கொண்டவர். இன்று கொஞ்சம் எழுதினாலும் தாமே தமிழின் எல்லாச் செல்நெறிகளுக்கும் தலைமை தாங்குகின்றோம் என்று ஒளிவட்டம் வீசப்பேசுவோர் எஸ்.பொவிடமிருந்து  இவ்வாறான சிலதையாவது  கற்றுக்கொள்ளலாம்.


அது மட்டுமில்லை, "பேராசை கொண்ட தமிழ்ப் படைப்பிலக்கிய இளவல்களே, என் தோள் மீது ஏறி நின்று, தமிழ்ப் படைப்பிலக்கிய வெற்றிகளைத் தரிசிக்க வாருங்கள்" என எஸ்.பொ தன் தோள்களையே அடுத்த தலைமுறை ஏறி நின்று தரிசிக்க தருகின்ற படைப்பாளியும் கூட. ஒரு படைப்பாளி தன் தோளின் மீது ஏறி நின்று உலகைப் பார் என்றால், அதன் அர்த்தம் என் உழைப்பை/படைப்பைத் தாண்டி நீ செல்லவேண்டும் என்று பிரியப்படுவதுதானே! 


பெரும்பாலான ஆசான்கள் தம்மை மீறி எவரும் வளர்ந்துவிடக்கூடாதென்று பொறாமை கொள்கின்றபோது என்னைத் தாண்டிச் செல்வதுதான் இளவல்களே நீங்கள் தமிழுக்கும் எனக்கும் செய்யும் நன்றிக்கடன் என்று சொல்கின்ற எஸ்.பொவை ஆசானாகக் கொள்வதில் பெருமையே என்னைப் போன்றோர்க்கு என்றுமிருக்கும்.


**********


மித்திரா எனப்படும் அருச்சுனா

Sunday, March 20, 2022


(எஸ்.பொ - பகுதி 05)


 1. 

எஸ்.பொவின் 'ஆண்மை' தொகுதியில் உச்சக்கதையாக வெளிப்பட்டிருப்பது ஆண்மை- 15. அதைக் கதையெனக் கூடச் சொல்லமுடியாது. இயக்கத்துக்குப் போய் சாவடைந்து விட்ட தனது மகனைப் பற்றிய எஸ்.பொவின் நினைவிடை தோய்தலெனச் சொல்லலே திருத்தமானது. நமது ஆயுதப்போராட்டம் தந்தையர்கள் கண்முன்னே உயிரோடு இருக்க, தனயர்கள் இல்லாமற்போய் இயற்கையின் சுழற்சியையே தலைகீழாக்கி இருந்தது. எஸ்.பொ, சண்முகம் சிவலிங்கம், மு.வாஞ்சிநாதன் போன்ற பல்வேறு படைப்பாளிகளின் பிள்ளைகள் இளவயதில் இறந்துபோக, இவர்களைப் போன்ற தந்தையர்கள் அந்தத் துயரத்தோடோ காலம் முழுக்க வாழ வேண்டியிருந்திருக்கின்றது.


தான் எழுதியவற்றை ஆறு மாதமோ, ஒரு வருடமோ 'ஊறுகாய்' போட்டு வைத்திருக்கத் தயங்காதவரும், சில கதைகளை மூன்று நான்கு தடவைகளுக்கு திரும்பவும் எழுதுவற்கு அலுப்புப்படவே மாட்டாதவருமான எஸ்.பொ, அப்படியே ஒரு அமர்வில் குந்தி எழுதிய கதையென்றால் அது அவரது மகனான மித்தி பற்றிச் சொல்கின்ற ஆண்மை-15 கதைதான்.  எழுதியதை திருப்பிப் பார்க்காததற்கும், புதுக்கி மீண்டும் எழுதாததற்கும், 'என் எண்ணமே எழுத்தாக வேண்டும் என்ற வெறி' என எஸ்.பொ முன்னீட்டில் எழுதுகின்றார். இது ஒருவகையில் தனது மனதில் இருந்த எல்லாத் துயர்களையும், பாரங்களையும் இறக்கிவைக்க எஸ்.பொ விரும்பியிருக்கின்றார் என எடுத்துக்கொள்ளலாம். கல் குவாறிகளினூடாக ஏறிய இயேசு தனது சிலுவையை இறக்கிவைக்கின்ற ஒரு தருணம். 


யாழ்ப்பாணத்தில் 90களில் வாழ்ந்தவர்க்கு, புலிகள் இயக்கம் பல்வேறு வீதிகளுக்கு, தமது சாவடைந்த போராளிகளின் பெயர்களைச் சூட்டியது நினைவிருக்கக்கூடும். எப்போதாவது யாழ் நகருக்கு அப்பாவோடு அவர் பணிபுரிந்த யாழ் கச்சேரிக்கும், நோயின் நிமித்தம் யாழ் வைத்தியசாலைக்கும் போன நாட்களில் எனக்கு ஒரு வீதியின் பெயர் அப்படியே ஞாபகத்தில் ஒட்டிக்கொண்டது. ஸ்ரான்லி வீதியெனபட்ட அந்த வீதி 'அருச்சுனா வீதி' என மாற்றப்பட்டிருந்தது. அந்த 'அருச்சுனா வீதி'யிலிருந்து வெளிவந்த ஏதோ ஒரு பத்திரிகையோ அல்லது சிறுவர் சஞ்சிகையையோ அன்றைய காலங்களில் வாசித்ததாக மங்கலாக ஞாபகமும் இருக்கின்றது.


அப்படி அந்த வீதிக்கு அருச்சுனா வீதியெனப் பெயரிடப்பட்டிருந்தற்கு,  போராளியாகிக் காலமாகிவிட்ட எஸ்.பொவின் மகனென அறிய எனக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது. எஸ்.பொவின் மகன் மித்திரா எனப்படும் அருச்சுனா ஒரு சிறந்த புகைப்படக் கலைஞரும் கூட. புலிகள் ஒளிப்பதிவுக்கென ஒரு புதிய கூடத்தை உருவாக்கியபோது அதற்கும் 'அருச்சுனா புகைப்படக் கலையகம்' எனப் பெயரிட்டிருந்தார்கள். இளவயதிலேயே (20களில்) இறந்து போய்விட்டாலும், சிறந்த ஆளுமையாக வந்திருப்பதற்கான தெறிப்புக்களைக் கொண்ட ஒருவர் மித்தி போலும்.


2.

ஒரு தந்தையாக மித்தியின் ஞாபகத்தை எஸ்.பொ நமக்கு ஓவியமாக வரைகின்றார். ஐந்து பிள்ளைகளுக்கு நடுவிலன் என்பதால் அவரைப் பார்த்தன் என அழைக்க, அந்தப் பெயருக்கு நிகர்த்த அருச்சுனாவை, மித்தி தன் இயக்கப் பெயராக மாற்றியதாக எஸ்.பொவுக்கு கடிதம் எழுதுகிறார். மித்தி இளவயதில் நிறைய வாசிப்பவராக,  1978ல் கிழக்கில் வந்த சூறாவளியில் எஸ்.பொ சிக்குகின்றபோது காப்பாற்றுகின்றவராக, தோழிகளுடன் மிகுந்த இயல்பாகப் பழகுகின்றவராக நமக்கு இந்த நனவிடைதோய்தலின் மூலம் காட்டப்படுகின்றார். 


மித்தி தனது தோழிகளில் ஒருத்தியை, தான் காதலிக்கின்றேன் எனச் சொல்ல எஸ்.பொ, 'டேய் நான் உனது வயதில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்பிள்ளைகளைத் துரத்திக்கொண்டு திரிந்தேன்' என்று பதில் சொல்லிச் சிரிக்கின்றார். அந்தளவுக்கு மகனோடு ஓர் அந்நியோன்னிய உறவை எஸ்.பொ பேணியிருக்கின்றார். தனது மகன்களில் மித்தியே தன்னைப் போல எழுத்துலகிற்கு வருவான் என எஸ்.பொ கனவு காண்கின்றபோது, மித்தி இயக்கத்தில் சேருகின்றார். இந்தக் கதையில் நேரடியாக சொல்லாவிட்டாலும், பழ.நெடுமாறன் இலங்கைக்குக்குப் போன முதல் பயணத்தில் மித்தியே அந்தப் பயணத்தையும்,  அந்தக்காலத்தில் மக்கள்படும் கஷ்டங்களையும் 1985 இல்  ஒளிப்பதிவாக ஆவணப்படுத்துகின்றார். 40 மணித்தியாலங்கள் எடுக்கப்பட்ட அந்த ஆவணம், பிறகு 2 மணித்தியாலங்களாய்ச் சுருக்கப்பட்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இயக்கத்தின் பிரச்சாரத்துக்காய்ப் பாவிக்கவும் பட்டிருக்கின்றது.


மித்தி இறந்தபின் அவரின் புகைப்படத்தோடு, தெருவுக்கு அருச்சுனா என்று பெயரிட்டிருப்பதை, எஸ்.பொவின் மார்க்சியத் தோழர் நீங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து காசு அனுப்பி செல்வாக்கு செலுத்தித்தான் இவ்வாறு செய்திருக்கின்றீர்கள் என்று சொன்னதை, எஸ்.பொவால் ஒருபோதும் இந்த நனவிடைதோய்தலில் மறக்கமுடியாதிருக்கின்றது. தன் மகன் இழந்த சோகத்தை ஏன் இவரால் புரிந்துகொள்ள முடியவில்லையென எஸ்.பொ வருந்துகின்றார். எனினும் அதைச் சம்பவமாக மட்டும் சொல்லிவிட்டு எஸ்.பொ நகர்ந்திருக்கலாமென எனக்கு இந்த நனவிடை தோய்தலை வாசித்தபோது தோன்றியது. அவர் யாரென நேராகப் பெயர் சொல்லாவிட்டாலும், எஸ்.பொ விவரித்த வகையில் அவர் யாரென அடையாளங் கண்டுகொள்ள முடியும். அவரும் ஒரு முக்கியமான படைப்பாளிதான். 


இந்தக் கதையின் முதல் பகுதி நினைவோடையில் எழுதப்பட்டதென்றால், 2ம் பகுதி மித்தியைப் பற்றி அறிந்தவர்கள் கூறியது, மித்தியைப் பற்றி பிறர் எழுதியது என்பதைத் தொகுத்து எஸ்.பொ எழுதியிருக்கின்றார். மித்தி தனது 23வது வயதில், இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பி வரும்போது இலங்கைக் கடற்படையோடு ஏற்பட்ட மோதலில் கடலில் இறந்துபோகின்றார். எஸ்.பொ தொடர்ந்தும் மித்தி கொடுத்த சிறுபரிசுகளால் மித்தியை நினைத்துக்கொள்ளவும்,  தனது முக்கியமான தருணங்களில் மித்தியின் இருப்பில்லாதபோது அந்த வெற்றிடத்தை உணரவும் செய்கின்றார். எஸ்.பொ இதை உணர்வுக்கு முக்கியம் கொடுத்து எழுதியதால் இக் கதையை இதுவரை நான்கைந்து தடவைகளுக்கு மேலாய் வாசித்தபோதும் கண்களில் நீர் மெல்லிய திரையிடுவதைத் தடுக்க முடியவில்லை.


************

(புகைப்படம்: இணையம்)


எஸ்.பொவின் சில கதைகள்

Sunday, March 13, 2022

(எஸ்.பொ - பகுதி - 04)


1. 'ஆண்மை' தொகுப்பில் இருக்கும் இன்னொரு முக்கிய கதையாக 14ஆவதைச் சொல்வேன். இந்தக் கதை ஒரு ஆணும் பெண்ணும் தமக்குள் உரையாடிக்கொள்கின்ற காட்சிகளாக விரிகின்றது. இருவரும் தியேட்டருக்குப் படம் பார்க்கத் தனித்தனியே செல்கின்றனர். இதில் வரும் மிகத்தீவிரமான பெண்ணியவாதி, ஆண்கள் 'ஆண்களுக்கு மட்டும்' எனச் செல்கின்ற, மட்டுநகரிலுள்ள‌ தியேட்டருக்குள் படம் பார்க்கப் போகின்றாள். இப்படி, தான் தனியே படம் பார்க்கப் போவதும் பெண்ணியமென அந்தப் பெண் சிந்திக்கின்றவள். அவளுக்குப் பக்கத்தில் தற்செயலாக இருக்கின்ற ஆண் ஒரு நாடகக் கலைஞன். அவன் தன்னோடு நடிக்கும் நடிகைகளையே பணியவைக்கின்றவன். இப்படி ஒரு பெண் தனியே வந்து 'வயது வந்தோர்க்கான' படம் பார்ப்பது அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், மற்றப் பெண்களைப் போல இந்தப் பெண்ணையும் அடைந்துவிடலாமெனக் ‘கணக்கு’ப் போடுகின்றான். இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு சிங்களப் பெண்ணியவாதியுடன் காதல் இருந்திருக்கின்றது.. இந்தப் பெண் தன் உடலை தானே 'I have conquered myself' என் நினைக்கும் லெஸ்பியன்காரி. 'என் உடம்பு ஆண்களாகிய உங்கள் தீண்டல்களினால் tune செய்யப்படாது. அதுதான் ஆணாதிக்கத்தின் முதுகில் கொடுக்கும் முதல் சாட்டையடி' என நினைக்கின்றவள்.
இந்த ஆணோ அவளின் இயல்பு அறியாதவன், அவளை எப்படியும் இந்தப் படம் முடிவதற்குள் தன் விருப்புக்கு சம்மதிக்க வைத்துவிடலாமென நினைக்கின்றவன். ஆகவே மெல்ல மெல்லமாக அவளின் உடலின் மீதான இச்சைகளைத் தீண்டி ஆழம் பார்க்க விரும்புகின்றான். அவளும் இவனின் மெல்லிய துலங்கல்களுக்கு தூண்டல்களைக் காட்டுவதைப் போல நடித்து, இறுதியில் தன் வித்தையைக் காட்டிவிடுகின்றாள். இவனோ படத்தின் நடுவில் ஐயோ என்று துள்ளி எழுகின்றான். படம் பார்க்கின்றவர்கள் என்னவெனக் கேட்கின்றனர். இவளோ, "ஏதோ நட்டுவக்காலியோ, தேளோ கடிச்சுப் போட்டுதாம். சேர், படம் பார்க்கிறவங்களைத் தொந்தரவு செய்யாமல், Bar பக்கம் போய் வேட்டியை நல்ல உதறிப் பாருங்கள்' எனச் சொல்கின்றாள். அவளை 'கொல்கின்ற வெறி'யோடு தியேட்டரை விட்டு ஆண் விலகிச் செல்வதோடு கதை முடிகின்றது. கதை முடியும்போது மட்டுமல்ல, அதை வளர்த்திக் கொண்டும்போகும்போதும், ஆண்Xபெண் என்கின்ற எதிரெதிர்நிலைகளின் சிந்தித்தல்/உணர்வுகள் போன்றவற்றை இறுக்கமாக எஸ்.பொ எழுதிச் செல்கின்றார். ஒரு பெண் தன் உடலை லெஸ்பியன் உறவின் மூலம் கண்டுகொள்வதைக் கூட விரசமில்லாமல், கூரிய அவதாதங்களுடன் எஸ்.பொ எழுதிச் செல்லும்போது 1930களில் பிறந்த எஸ்.பொவின் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் படைப்புமனம் நீர்த்துச் செல்லவில்லை என்பதைக் கண்டுகொள்கின்றோம். இவ்வாறு ஒரு gay ஆணான டொமினிக்கின் கதையை ஆண்மை-03ல் எழுதிச் செல்லும் எழுதும்போது எஸ்.பொவுக்கு வரும் சில குழப்பங்கள் கூட, இந்தக் கதையில் இருக்கவில்லை. அவ்வளவு தெளிவாக லெஸ்பியன் உறவை, பெண்களின் மீட்பை, எந்தப் பெண்ணாகினும் சரணடைய வைக்க முடியுமென்கின்ற ஆண்களின் திமிரைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு நவீனமான எஸ்.பொவை இந்தக் கதையில் நாம் காண்கின்றோம்.
2. ஆண்மை-01 இல் இலங்கையில் அரசர்களில் ஒருவராக இருந்த துட்டகைமுனுவின் மகனொருவனின் கதை சொல்லப்படுகின்றது. துட்டகைமுனுவின் போர் வெறியையும், அதிகார ஆசையும் வெறுத்து தனக்குப் பிடித்த ஒரு சாதாரண குடியானப் பெண்ணோடு வாழும் ஒருவனின் கதை இது. அந்தப் பெண்ணுக்கோ இப்படி அரச இடாம்பீகத்தைத் துறந்து, தந்தையின் கோபத்தையும் சம்பாதித்து வரும் அரசிளங்குமரனை எப்படி வைத்துத் தாங்குவதென்ற கவலை வருகின்றதது. அவன் தனது விருப்பைப் புரியவைக்கின்றான். எனதும் உனதும் குழந்தை இந்தக் காட்டுக்குள் -போலித்தனமான அரச மரியாதைகள் இல்லாது- இயற்கையுடன் இயைந்து வாழட்டுமெனச் சொல்கின்றான். ஆண்மை -02 கதையில் ஒரு இளமைக்கால எஸ்.பொவைச் சந்திக்கின்றோம். எஸ்.பொ தொடக்க காலத்தில் தீவுப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கின்றார். இந்தக் கதை அவ்வாறான ஒரு பாடசாலையிலிருந்து திரும்பவும் யாழ் நகருக்குத் திரும்பும் பஸ் பயணத்தில், சந்திக்கும் ஒரு பெண்ணோடு தொடங்கி அந்தப் பெண் தனக்கான தரிப்பிடத்தில் இறங்குவதில் முடிகின்றது. கதைசொல்லி நமக்கு அறிமுகப்படுத்துகின்ற அவரின் மாணவர்களின் ஒருவன் கூட எமக்கு நெருக்கமாகின்றவன். அவன் அவ்வளவு படிக்காதவன் என்கின்றபோதும் குறும்புத்தனமானவன். அவன் வலித்துச் செல்லும் சிறுபடகில் இவரையும் அந்த ஆசிரியையும் ஏற்றிவருகின்றான். இந்த ஆசிரியையோ வேறொரு பாடசாலையில் கல்வி கற்பிக்கின்றவர். அவரை ஒரு விளையாட்டுப் போட்டியில் சந்திக்கின்றார். ஆண் ஆசிரியர்கள் நூலோடு ஓடிச் சென்று, பெண் ஆசிரியைகள் வைத்திருக்கும் ஊசியில் இந்த நூலைக் கோர்க்கவேண்டும். கதை சொல்லி, இந்த ஆசிரியையில் ஒரு ஈர்ப்பு வந்து அவரை நோக்கி ஓட, இன்னொரு ஆசிரியர் குறுக்காய் நுழைந்து அந்தச் சந்தர்ப்பதை தடுத்துவிடுகின்றார். இப்போது அவர்கள் இருவரும் சிறுபடகில் போகும் சந்தர்ப்பம். அது பிறகு பஸ்சிலும் அடுத்தடுத்த இருக்கைகளில் செல்லும் பயணமாக மாறுகின்றது. இந்த ஆசிரியையே எப்படியாவது ஈர்த்து நேசித்துவிடவேண்டுமென்கின்ற ஆசை இவருக்குள் பெருகுகின்றது. ஆனால் நல்ல சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் -மற்ற‌ ஆசிரியர் நூலோடு குறுக்கே புகுந்தமாதிரி- இடையில் கைகூடாது நழுவிவிடுகின்றன. வாசிக்கும் நமக்கும் இவர்கள் இருவரும் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமெனத் தோன்றுகின்றது. ஆனால் அந்தோ பரிதாபம். இறுதியில் நடக்கும் ஒரு நிகழ்வால் எல்லாக் கனவுகளும் கலைந்துவிடுகின்றன. இவ்வாறாக ஒரு அந்நியமான பெண்ணில் ஈர்ப்புவருவதும், பிறகு அவை கலைந்துபோகின்றதுமான சந்தர்ப்பங்களை நாம் ந‌ம் வாழ்வில் கண்டிருப்போம். எஸ்.பொவின் இந்தக் கதையைப் போல, நான் பஸ்களில் போகும்போது ஒரு பெண்ணைச் சந்தித்திருக்கின்றேன். அவருக்குச் சுருள் சுருளான தலைமயிர் என்பதும் ஞாபகம். தொடக்கத்தில் சாதாரண ஒருவரைக் கடந்துபோகின்றதுமாதிரி இருந்த எனக்கு ஒருநாள் அவரை சற்று ஆழமாக அவதானித்தபோது மூக்குத்தி அணிந்திருப்பது தெரிந்தது. அதன் பின் எப்படி எனக்குள் ஒரு வசீகரம் அவரைப் பற்றி வந்ததெனத் தெரியாது. அவரைக் காணும்போதெல்லாம் உள்ளம் நெகிழ்ச்சியுறும். புன்னகைக்கின்றாரா இல்லையா, பேச‌ விரும்புகின்றாரா இல்லையா என்பதைத் தெரியாமலே அப்படி ஒரு விளையாட்டை நாம் இருவரும் ஆடிக்கொண்டிருந்தது சுவாரசியமாக இருந்துமிருக்கிறது. 3. இன்னொரு கதை கள்ளுச் சீவுகின்ற தொழிலாளியைப் பற்றியது. வீட்டோடு கள்ளுக்கொட்டிலை வைத்திருந்ததால், தனது பிள்ளைகளின் படிப்புக் கெடுகின்றது என்பதையும் அந்தத் தந்தை அறிந்தே இருக்கின்றார். அவரின் மகன் சென்னையில் படிக்கும் இடைவெளியில், வீட்டில் வந்து தங்கி நிற்கின்றான். கள்ளுக்குடிக்க வரும் வின்ஸர் தியேட்டர் நிர்வாகி, வீட்டுப் பிரச்சினையுடன் கள்ளுப்போதையில் கொஞ்சம் எகிறுகின்றார். தூசணமெல்லாம் பேசுகின்றார். அப்போது அடைப்புக்குறிக்குள் எஸ்.பொ கூட இந்தளவுக்குத் தூஷணமெல்லாம் பேசமாட்டான் என்கின்ற குறிப்பில் தெரிவதுதான் எஸ்.பொவின் குறும்புத்தனம்.. 'நாங்கள் யார், நீங்கள் எளிய சாதிகள்' என்று அரைகுறைத் தமிழிலும் சிங்களத்திலும் அந்த முதலாளி பேசுகின்றார். ஒரளவுக்குத் தாங்கிக் கொள்ளும் கள்ளுக்கடைக்காரர் ஒரு அறைபோட்டு சாத்தி அவரை அமைதியாக்கின்றார். அப்பாவோடு யார் இப்படி சண்டையிடுகின்றதென்ற‌ சினத்தில் சென்னையில் படிக்கும் மகன் உலக்கையோடு ஓடிவருகின்றான். 'இது சின்னப்பிரச்சினை இப்படி உலக்கையோடு வரவா நானுன்னைச் சென்னைக்கு அனுப்பிப் படிப்பிக்கின்றேன்' என்கின்றார் தகப்பன்.

இந்தக் கதையில் தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் சாதி அடையாளத்தை படிப்பாலும், பொருளாதாரத்திலும் மீற முயலும் ஒரு அழகான குடும்பத்தை நாம் பார்க்கின்றோம். அடித்ததால், அந்த வின்ஸர் நிர்வாகி மயங்கிவிழுந்தாலும் அவரைத் தூக்கிக்கொண்டு அவரின் பட்டறைக்குள் விட்டுவிட்டே திரும்பி இந்தத் தந்தை வருகின்றார். இப்படி அறைந்ததால் மனம் சரியில்லை என்று கொட்டிலுக்குள்ளேயே படுக்கின்றவருக்கு அவரின் மனைவி சாப்பாடு கொடுத்து தூங்க‌ வைப்பதுடன் கதை முடிகின்றது.
ஒடுக்கப்பட்ட சமூகம் சந்திக்கும் ஒடுக்குமுறையுடன், தம் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத மனிதர்களை நாம் இங்கே பார்க்கின்றோம். இந்தத் தந்தையின் பிள்ளைகள் இன்னும் உறுதியாய் தம் மீது திணிக்கப்படும் சாதிய வன்மங்களை வீரியமாய் எதிர்கொண்டு முன்னகர்ந்து செல்வார்கள் என்பதை எமக்கு எஸ்.பொ இந்தக் கதையில் மட்டுமில்லை, வரலாற்றில் வாழ்தலிலும் சொல்லியிருக்கின்றார்.
இவ்வாறான கள்ளுக்கொட்டில் அனுபவங்களை தெணியான் தனது சுயசரிதையாக எழுதிய 'இன்னும் சொல்லாதவை' இல் நாம் இன்னும் தெளிவாகப் பார்க்கின்றோம். கள்ளுக்கொட்டிலை வைத்திருக்கும் அவர் தகப்பன் ஒருகட்டத்தில் உதவிக்குக் கூட படிக்கின்ற மகனை (தெணியான்) வரவேண்டாம் என்று நிறுத்துவதில் இருந்து சாதிய ஒடுக்குதல்களின் பல திசைகள் நமக்குப் புலப்படுகின்றது.
ஆண்மை 9வது கதையில், பராசக்தி அக்கா தான் சிறுவனாக இருந்தபோது ஆண்மையை விழிக்கச் செய்ததாக கதைசொல்லி தனது பேரப்பிள்ளைகள் வந்துவிட்ட‌ காலத்தில் இருந்தபடி அசைபோடுகின்றார். அவர் அடிக்கடி விளையாட்டைக் காரணஞ்சொல்லி பராசக்தி அக்கா வீட்டுக்குபோனது கண்டுபிடிக்கப்பட்டு வெண்தாடிக்கிழவர் எனப்படும் அவரது அப்பையாவினாலும், மாமாவினாலும் அடிகொடுக்கப்பட்டு 'திருத்தப்படுகின்றார்'. சிறுவர்களாகிய நாம் எப்போது இளைஞர்களாகின்றோம், அது நம்மெல்லோருக்கும் இனிய அனுபவமாகத்தான் இருக்கின்றதா என இந்தக் கதையை முன்வைத்து நாம் நனவிடைதோய்ந்தும் பார்க்கலாம்.

*****************

(புகைப்படங்கள்: நன்றி/இணையம்)

எஸ்.பொவின் 'ஆண்மை'

Wednesday, March 09, 2022


(எஸ்.பொ - பகுதி -03)


1.


எஸ்.பொவை முதன்முதலாக 2000ம் ஆண்டளவில் சந்தித்தபோது, அவரது 'ஆண்மை' தொகுப்பை ஏற்கனவே வாசித்திருந்தேன். 'ஆண்மை'யில் எந்தக் கதைக்கும் பெயரிடப்படவில்லை. ஆண்மை- 01 எனத் தொடங்கி ஆண்மை- 15 வரை கதைகள் அதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நான் அப்போதுதான் இலக்கியம் என்பது பாலகுமாரனைத் தாண்டியும் இருக்கின்றதென உணர்ந்து, தீவிரமாய்ப் பிறரையும் வாசிக்கத் தொடங்கிய காலம். எஸ்.பொ அந்தக்காலகட்டத்தில்தான் புலம்பெயர் இலக்கியத்தை தானே முன்னத்தி ஏராக நின்று, நகர்த்துவதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து பல்வேறு கண்டங்கள்/நாடுகளுக்குப் பயணித்துப் பாடுபட்டுக்கொண்டிருந்தார். அவ்வளவு நம்பிக்கையோடு இலக்கியத்தின் மீது இருந்த எஸ்.பொ என்ற முன்னோடியின் தீயின் சிறு'துளி'யாவது என்னைப் போன்றவர்களை அன்று தீண்டாமல் இருந்திருந்தால்தான் வியப்பாயிருந்திருக்கும்.


அந்தப் பயணத்தின்போது கனடாவுக்கு எஸ்.பொ வந்தபோது, அவரது தடித்த கண்ணாடிகளுக்குள் இருந்து தீட்சண்யமாக வெளிப்படுத்திய பேச்சை விட அவரிடம் நான் வாசித்த 'ஆண்மை'யைப் பற்றிக் கேட்க சில கேள்விகள் இருந்தன. நிகழ்வு முடிந்து வெள்ளைவேட்டி சரசரக்க நடந்து வந்தவரை இடைமறித்தேன். எல்லாக் கேள்விகளைக் கேட்கச் சந்தர்ப்பம் கிடைக்காதபோதும், ஆண்மை-09ல் பராசக்தி அக்கா, அவன் அவ்வளவு சிறுவன் என்று தெரிந்தும் அவனின் உடலோடு விளையாடியது சரியா, எழுத்தில் இப்படி வைப்பது முறையா எனக் கேட்டேன். 'தம்பி, எழுத்தில் வைப்பது சரியா, இல்லையா என்பதைவிட, அப்படி எனக்கு நடந்தது அதைத்தான் எழுதினேன்' என்றார் எவ்விதத் தயக்கமும் இல்லாது. எஸ்.பொவுக்கா அல்லது இன்னொருவருக்கா இது நடந்தது என்பல்ல முக்கியம், புனைவின் சுதந்திரம் குறித்தும், உதறித்தள்ளவேண்டிய தயக்கங்கள் பற்றியும் நானாக இதை உணர எனக்குப் பல ஆண்டுகள் பின்னர் தேவைப்பட்டது.


ஆண்மையில் இது ஒரு முக்கியமான கதையல்ல. ஒருவகையில் இத்தொகுப்பில் இருக்கும் கதைகள் ஒவ்வொன்றும் 'ஆண்மை' என்பது எதுவாக இருக்கும் என்று நேரடியாகவும் மறைமுகமாவும் பரிட்சித்துப் பார்க்க விரும்புகின்றதென எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எந்த ஒரு கதையும் இதுதான் 'ஆண்மை' என்று தெளிவாக வரையறுக்காமல் வழுக்கிச் செல்வதுதான் இந்தக் கதைகளை மீண்டும் மீண்டும் சலிக்காது வாசிக்க முடிவதற்கும் ஒரு காரணமாகின்றது.


இத்தொகுப்பில் முக்கிய கதைகளில் ஒன்றாக ஏழாம் கதையைச் சொல்வேன். அது நிச்சாமத்தில் நிகழ்ந்த சாதி வன்முறைக்கு எதிராக நின்ற ஒரு மக்கள் கூட்டத்தின் நெஞ்சுரத்தை மிகத்தெளிவாகப் புனைவில் முன்வைக்கின்றது. சாதிமான்கள் நடத்தும் தேநீர்க்கடைகளில் தேநீர் குடிக்க தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையும் போராட்டம் ஆதிக்க சாதிகளால் பொலிஸ் துணையுடன் வன்முறையாக்கப்படுகின்றது. நிச்சாமம் கிராமம் ஆயுதப்பொலிஸால் சுற்றிவளைக்கப்படும்போது, அதற்கு தலைமைதாங்கும் ஒருவர்  மக்கள் அநியாயமாகக் கொல்லப்படப்போகின்றார்கள் என்பதன் நிமித்தம் சரணடைகின்றார். மணியம் என்கின்றவர் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவராக இருந்தபோதும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமைகளைக் காப்பாற்றுவதற்காக தன்னைக் கைது செய்யச் சொல்வதை எஸ்.பொ 'ஆண்மை' என்கின்றார். ஓர் உண்மையான போராட்டக்காரன் ஒருபோதும் அநியாய பலியெடுப்புக்களுக்குப் போகமாட்டான் என்பதையும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் தொடர்ந்து செல்வதற்கு இதைவிட வேறு சிறந்த வழியில்லை என்பதையும்  இந்தக்கதையின் முடிவை வைத்து நாம் விளங்கிக்கொள்ளலாம். 


இந்தக் கதையை வாசிக்கும்போது நாம் வரலாற்றின் ஒரு குரூர காலத்தில் நுழைகின்றோம். நமக்கு ஒருபக்கத்தில் தமிழீழத்தைப் பெற்றுத்தருகின்றோம் என்று முழங்கியவர்களே, எப்படி தாழ்த்தப்பட்டவர்களின் போராட்டங்களுக்கு பொலிஸ்/அரசு அதிகாரத்தை ஏவிவிட்டார்கள் என்பதையும் நாமறிகின்றோம். இந்துக்கோயில்களில் மட்டுமில்லை இளவாலையில் இருக்கும் கத்தோலிக்கத் தேவாலயத்தில் வழிபடக் கூட ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடமிருக்கவில்லை என்பதையும் கண்டுகொள்கின்றோம். நிச்சாமம் சாதி எதிர்ப்பின் உச்சமாய்த் திமிர்ந்தபோது,  அங்கே சாதிச் சண்டை நடக்கவில்லை, ( சீன மார்க்ஸிஸ்ட்டுக்களின்) ஷாங்காய் புரட்சி நடக்கின்றது என்று கொழும்பில் பேசிய தமிழ்த்தலைவர்களின்  இரட்டை வேடங்களும் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன.


இன்று அமெரிக்க ஹொலிவூட்காரர்கள் பலரின் தாத்தாமார்கள் ஒருகாலத்தில் பெரும் அடிமை வியாபாரத்தை நடத்தியும், தம் பண்ணைகளில் அடிமைகளையும் வைத்திருந்தார்கள் என்று அறிய வருகின்றபோது பல நடிகர்கள் தன் முன்னோர்களின் செயல்களின் நிமித்தம் மன்னிப்பைக் கேட்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் இன்றளவும் அன்று சாதிமான்களாக இருந்து, அவர்களின் வாரிசுகளாக  இப்போதிருக்கும் பிள்ளைகளிலும் பேரப்பிள்ளைகளிலும்  எத்தனைபேர் வெளிப்படையாக அன்றைய சாதி வெறியின் பேரில் இந்த மன்னிப்புக் கோரலைக் கேட்டிருக்கின்றனர்?  அது குறித்து குற்றவுணர்வையாவது கொண்டிருக்கின்றார்களா என்பது குறித்த கேள்விகளை நாம் கேட்கவேண்டியவராகின்றோம்.


2.


இந்த நிச்சாமக் கதைக்கு நிகராக, 'ஆண்மை' தொகுப்பிலிருக்கும் பத்தாவது கதையையும் சொல்வேன். இந்தக் கதை முற்றிலும் மட்டக்களப்பில் நிகழ்கின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கதைசொல்லி, மட்டக்களப்புக்கு வேலை நிமித்தம் போய், அங்கிருந்த குடும்பத்தோடு நெருக்கமாகப் பழகுகின்றார். அவருக்கு, அந்த வீட்டில் பெற்றோரை இழந்து தாய்மாமனோடும், அம்மம்மாவோடும் இருக்கும் பெண்ணின் மீது மையல் வருகின்றது. காதலைத் தாண்டி 'தசை' ஆசை இன்னும் இந்தக் கதைசொல்லியைத் தொந்தரவு செய்கின்றது. 


ஒரு பூரணைநாளில் அந்தப் பெண்ணை அடையமுயல்கின்றபோது அவள் இடைநடுவில் நிறுத்துகின்றாள். கதைசொல்லி கோபத்துடன் யாழ்ப்பாணம் போய்விடுகின்றார். பெண்ணோ திரும்பி வரும்படி உருக்கமான கடிதங்களை எழுதுகின்றாள். எப்படியெனினும் உங்கள் மீதான காதலில் அடுத்த பூரணையில் என்னை முழுதாகத் தருகின்றேன் என்கின்றாள்.


கதை சொல்லி மீண்டும் மட்டுநகருக்குத் திரும்பிவருகின்றார்.  கோபத்தோடு இருக்கும் கதைசொல்லிக்குத் தன்னை முழுமையாகக் கொடுக்க அந்தப் பெண் தயாராகின்றாள். அந்தவேளையில் அந்தப் பெண்ணின் பரிபூர்ணமான மனது கதைசொல்லியை நடுங்கவைக்கின்றது  அவளை விட்டுவிலகி ஓடுகின்றார். திரும்பி வாருங்களென அவள் கூப்பிடுகின்றாள். அப்போதுதான் கதைசொல்லி உண்மையைச் சொல்கின்றார். தனக்கு ஏற்கனவே மனைவி யாழில் இருக்கின்றாள். உன்னளவில் அழகில்லையென்றாலும் அவளின் காத்திருப்பைத் தாண்டி எதுவும் செய்யமுடியாது என்று இந்தப் பெண்ணின் தன்னைகொடுக்கும் பரிபூர்ண இழத்தலின்  முன் சரணடைகின்றார். இத்தோடு கதை முடிந்திருந்தால் அது சாதாரணமாகிவிடும். எஸ்.பொ முடிக்கும் இடத்தைப் பாருங்கள். 


"மட்டக்களப்பாரின் மந்திரம் என்ன?

பாயோடும் ஒட்டும் பழிப்புரை என்ன?

இந்தக் கொச்சையான ஜோடிப்பிற்குப் பின்னால், எத்தனை அமரிகளுடைய கன்னிமை என் போன்ற யாழ்ப்பாண ஓநாய்களினால் குதறப்பட்டது?

அமரி நீ கார்த்திகை நட்சத்திரக்காரி. உன் மாப்பிள்ளை என்றாவது ஒருநாள் உன் வீடு தேடிவருவான்..

நான் மனிதனாய் மீளுயிர்ப்புப் பெற்ற திருப்தி, ஏனைய சோகங்களை விழுங்க, ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது."


எவ்வளவு அற்புதமான கதையாக ஒரு பெண்ணின் அந்தப் பரிசுத்த அன்பின் முன், தன்னை மீளுயிர்ப்புப் பெற்ற மனிதனாக கதைசொல்லியை மாற்றி இந்தக் கதையில் எஸ்.பொ முடிக்கின்றார். இந்தக் கதையை எஸ்.பொவைத் தவிர வேறொருவராலும் இவ்வளவு அருமையாக எழுதியிருக்கவே முடியாது.  எழுத்து தன்னை மறந்து தானே நிகழ்த்திக்கொள்ளும் வித்தையை இந்தக் கதையின் தொடக்கத்தில் இருந்தே உணரமுடியும்.


3.


இதேபோன்று இன்னொரு முக்கியகதையாக ஆண்மை-12ஐக் கொள்வேன். இந்தக் கதையில் தமிழ் - முஸ்லிம் உறவின் அரிய காலத்தைக் காண்கின்றோம். இப்படியெல்லாம் மனிதர்கள் ஒருகாலத்தில் வாழ்ந்திருக்கின்றார்களா என இனங்களுக்கிடையிலான முரண்கள் உச்சத்தில் இருக்கும் அவலகாலத்தில் அல்லவா இப்போது நாம் வாழ்கின்றோம்.


பாணந்துறையில் கடை நடத்தி வரும் வேலாயுதபிள்ளை இனக்கலவரத்தில் அவரின் கடையோடு வைத்துக் கொளுத்தப்படுகின்றார். அவரோடு நண்பராக இருக்கும் ஹஜியார், அவரின் மகனான கணபதிக்காக அந்தக் கடையை மீளவும் கட்டிக்கொடுக்க, அடுத்த தலைமுறையான கணபதியும், ஹஜியாரின் மகனான அஸாருத்தீனும் நல்ல நண்பர்களாகின்றனர். ஹஜியாரின் குடும்பத்தில் கணபதியும் ஒரு மகனாகின்ற அளவுக்கு நெருக்கமாகின்றான். ஆயிரம் பேரைக் கொன்ற அங்குலிமாலாவையும் மன்னித்த கருணாமூர்த்தி புத்தரின் அஹிம்சையைச் சொல்லிக்கொண்டிருந்தபோதும், சிங்களப்பேரினவாதம் பாடங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று தொடர்ச்சியாக அங்குலிமாலாவின் கதை இந்தக் கதையில் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.


இப்போது வருடம் 1983. அஸாருத்தீன் கொழும்புக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு வர, பாணந்துறையில் இருக்கும் கடைக்கு சிங்களக் காடைக்குழு  தீ வைக்கப் போக, அதை தடுத்து நிறுத்த கணபதி ஓடுகின்றான். கொழும்பிலிருந்து பாணந்துறைக்கு, கொழும்பில் நடந்த கலவரத்தைச் சாட்சியாகப் பார்த்துவிட்டு பதறிவரும் அஸாருத்தீன், தாயிடம் ஏன் கணபதியை கடைக்கு அனுப்பினீர்கள் என வைதபடி, அவனைக் காப்பாற்ற இன்னொரு 'தொப்பியையும், ஜூப்பாவையும்' எடுத்துக்கொண்டு கணப்தியை முஸ்லிமாக மாற்றிக் காப்பாற்றத் தெருவுக்கு ஓடுகின்றான். அதற்குப் பிறகு என்ன நிகழ்ந்ததென்று ஒரு கதையை எஸ்.பொ சொல்லிவிட்டு, பிற்சேர்க்கையாக வாசகனுக்கு இன்னொரு முடிவையும் சொல்கின்றார். ஒரு காலத்தில் வரலாற்றை, ஆனால் அந்த வரலாற்றின் முடிவை வேறுவிதமாக எழுதவேண்டுமென ஆசைப்படும் எஸ்.பொவை இந்தக் கதையில் நாம் பார்க்கின்றோம். 


ஒருவகையில் புனைவைவிட உண்மையே தன்னை தொந்தரவு செய்கின்றது என, இந்த இனவெறித்தாக்குதல்கள் நடந்தபோது தான் நைஜீரியாவில் வாழ்ந்துகொண்டிருந்தேன் என எஸ்.பொ வாசகருக்காக ஒரு குறிப்பையும் தருகின்றார். இந்தக் கதையை இப்போது வாசிக்கும்போது புத்தரின் காருண்யத்தைத் தனதாகக் கொண்ட சிங்களப் பேரினவாதம் எப்படியெல்லாம் தமிழர்களின் மீது நடந்துகொண்டதோ அதுபோல நாமும் பின்னர் முஸ்லிம் மக்களை எப்படி எங்களிலிருந்து பிரித்து விலத்திவைத்தோம் என்பதையும் இந்தக் கதையை முன்னிட்டு வாசித்துப் பார்க்கலாம்.


நிச்சாமம் கதையில், மிகத் தெளிவாக தேசியப்போராட்டத்தை நிகர்த்து சாதிப்போராட்டம் இருக்கின்றதென எஸ்.பொ முன்வைக்கின்றார். அதேவேளை எஸ்.பொ பிற்காலத்தில் தமிழ்த்தேசியத்தையும் மிக உறுதியாக முன்வைத்தவராக இருந்தபோதும்,  இறுதிவரை எழுத்திலும், பேச்சிலும் முஸ்லிம்களின் வடபகுதி வெளியேற்றத்தை தவறான விடயமெனக் கண்டித்தபடியே இருந்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதேசமயம் தமிழ் மக்களின் மீதான சிங்களப்பேரினவாதத்தின் கொடுமைகளை எஸ்.பொ தொடர்ச்சியாக வலியுறுத்த வந்ததை ஏற்றுக்கொண்டாலும், பிற்காலத்தில் எழுதிய 'மாயினி' நாவலில் பண்டாரநாயக்க குடும்பத்தை மிகக் கொச்சையான எள்ளல்களால் கீழிறிக்கியும் வைத்தது என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும். அப்படி எழுத எங்களுக்கு எஸ்.பொ தேவையில்லை. இங்கே சமூகவலைத்தளங்களில் எழுதும் அரைகுறை வாசிப்புள்ளவர்களே போதும் என்பேன்.


*****************

(2019)