கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கடிதங்கள் - 04

Sunday, September 24, 2023

 

அன்பு இளங்கோவிற்கு,

 

உங்களுடைய ஜென் கடிதம் படிக்கப் படிக்க உங்களது தேடல்களின் ஊடே சற்றுப் பயணித்தது போல் இருந்தது. ஏதோ எனக்கு எதிரே நீங்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது போலவும், நான் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தது போலவும் ஒரு மாயை எழுந்தது. தாயை Thich Nhat Hanh என்ற பெயரில் கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்கள் பகிர்ந்தவை அவரைக் குறித்து இன்னும் எனக்கு அறியத் தந்திருக்கின்றன. நமக்குத் தெரிந்து கொள்ளவும், வாசிக்கவும் தான் எத்தனை எத்தனை இருக்கின்றன என்று நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது.

 

கொடைக்கானலில் மிக அழகான ஒரு இடத்தில் Bodhi Zendo என்று ஒரு ஜென் மையம் இருக்கிறது. நான் அடிக்கடி சென்று வரும் இடங்களில் அதுவும் ஒன்று. முடிந்தவரையில் வருடத்திற்கு ஒரு முறையேனும் சென்று வருவேன். அங்கே Zazen ல் என் மனம் ஈடுபடும் அளவிற்கு நான் போதனைகளை அறிந்து கொள்ள மெனக்கெட்டதில்லை. அந்த இடம் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

 

இப்போதெல்லாம் என் மனம் எங்கேயோ அலைபாய்ந்த வண்ணம் இருக்கிறது. ஒரு கணம் எல்லாவற்றையும் ரசிக்கும் மனம், அடுத்த கணம் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருக்கிறது. முதலில் எல்லாம் எழுதும் போது தியான நிலையில் இயங்குவது போல் therapeutic ஆக உணர்வேன். நான் மீண்டும் எழுதத் துவங்கியதே, அது நான் அவ்வளவு பிடித்து செய்யும் செயலாக இருந்தது என்பதால் தான். ஆனால் இப்போது எழுதுவது எண்ணங்களை கிளறுவதாக, மிகவும் தொந்தரவிற்கு உள்ளாக்குவதாக இருக்கிறது. ஆற்றுத் தண்ணீரை ஒரு சீசாவில் அடைத்து குலுக்கி விட்டதைப் போல, எண்ணங்களின் கசடுகள் என் மனவெளி எல்லாம் ஆக்ரமித்திருக்கிறது. எனது மனதை அமைதிப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது.

எனது இரவுகள் உறக்கம் தொலைந்த இரவுகளாக ஆகிவிட்டன. கொஞ்ச நாட்களுக்கு எழுதுவதையே நிறுத்தி விடலாமோ என்று கூடத் தோன்றுகிறது. I feel I lost my center. அதே போல எளிதில் உணர்ச்சி வயப்படுவளாக மாறி வருவதையும் உணர்கிறேன். வெயில் தாழ்ந்த மாலை வேளைகளில் வானம் பார்த்து சற்று நேரம் அமர்ந்திருக்கும் போது மட்டும் சிறு அமைதி தழுவிக் கொள்கிறது. கொஞ்ச நாட்கள் எங்காவது சென்று இயற்கையின் மடியில் என்னை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அல்லது எதையாவது அருந்தி என்னையே நான் மறந்து நீண்ட நாட்கள் உறங்க வேண்டும் என்ற பேரவாவும் எழுகிறது.

 

யாரோப்போல் நான் என்னைப் பார்க்கிறேன்

ஏதும் இல்லாமலே இயல்பாய்

சுடர் போல் தெளிவாய்

நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்

கண்ணாடியாய் பிறந்தே

காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்

நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே

ஓசை எல்லாம் துறந்தே

காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்

 

கார்த்திக் நேத்தாவின் இந்த வரிகளை நான் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்கிறேன். இந்த வரிகளை நீங்களும் கவனித்துப் பாருங்களேன்.

 

யாரோ போல நான் என்னைப் பார்க்கிறேன், ஏதும் இல்லாமலே (எந்த பிம்பமும் இல்லாமல்) இயல்பாய், சுடர் போல் தெளிவாய்... அப்படிப் பார்க்கும்போது அது என்ன மாதிரியான தெளிவைக் (self awareness) கொடுக்கும் என்று வியக்கிறேன்.

 

அடுத்த வரிகளில் 'நான்' தொலைந்த ஆழத்தில் நான் இருக்கிறேன், காண்கின்ற யாவும் நானாகிறேன். எனக்கு இந்த வரிகள் 'the world is you, and you are the world' என்ற ஜே கேயின் கருத்தை நினைவூட்டுகிறது. 'நான்' தொலைந்து, காண்கின்ற எல்லாமே நானாகும்போது அது அன்பின் பிறப்பிடமாகத் தானே இருக்க முடியும்.

 

அடுத்த வரிகளை வாசிக்கும்போது என்னால் இந்த பாடலாசிரியரை வியக்காமல் இருக்க முடியவில்லை. நீரின் ஆழத்தில் போகின்ற கல்லைப் போல, காண்கின்ற காட்சியில் (நிகழில்) ஓசை எல்லாம் துறந்தே (ஓசை என்றால் அக, புறம் சார்ந்த எல்லா வகையான distractions யும் தானே!) நான் மூழ்கினேன். அப்படி நிகழோடு ஒன்றிப் போக முடிந்தால்? ...அவர் இந்தப் பாடலை எழுதும்போது என்ன மாதிரியான மன நிலையில் இருந்திருப்பார் என்று பிரமிப்பாக இருக்கிறது. எனக்கு நானே என்னைக் குறித்து ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பங்களிலிருந்து விடுதலையும், நான் என்ற ego நிலையிலிருந்தும் இயங்காமல் இருக்க முடிந்தாலும் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறேன். இதுவும் ஆசை என்கிற கணக்கில் தானே வரும். இயல்பான நிலையிலிருந்து தப்பி இன்னொன்றை அடைய வேண்டும் என்ற ஆசை அல்லது விருப்பு.

 

எனது எண்ணங்களைப் போலவே இந்தக் கடிதம் ஒரு ramble ஆகத் தெரிகிறது எனக்கு. இந்தக் கடிதத்தை எப்படி முடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே ஜன்னல் வழி பார்க்கிறேன். பாக்கு மரம் ஒன்று, அத்தனை காய்களை சுமந்தபடி, காற்றின் போக்கில் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு, நான் பார்க்கிறேன் என்ற பிரக்ஞையே இல்லை. ஆனால் எனக்கோ, நின்ற இடத்திலேயே வருடங்களாக நின்றிருந்தாலும் இந்த மரத்திற்கு மட்டும் எப்படி அலுப்பதே இல்லை என்று தோன்றுகிறது. எண்ணங்கள் ஒரு சாபமோ?

 

மீண்டும் எழுதுகிறேன்,

 

அன்புடன்,

 

இனியா


*************அன்பின் இனியா,

 

நீங்கள் குறிப்பிடும் Bodhi Zendo பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இது குறித்து வாசித்தபோது அங்கே போய் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலும் வந்திருக்கின்றது. எனினும் உங்களைப் போல எனக்கு அங்கே செல்லும் வாய்ப்பு வரவில்லை, அந்தவகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்.

 

எனக்கும் இவ்வாறான தியான மையங்களுக்குச் சென்று சில வாரங்களோ, மாதங்களோ தங்கி நின்று கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் அடிக்கடி பொங்கிப் பிரவாகரிக்கும். எலிஸபெத் கில்பேர்டின் 'Eat, Pray, Love' அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தைப் பார்த்தபோது, எலிஸபெத் இந்தியாவில் தியானம் பழகிய இடத்தை எப்படியோ தேடிப் பிடித்து கண்டுபிடித்திருக்கின்றேன். இந்தியாவிலுள்ள அவர்களோடு தொடர்புகொண்டு பயணத்துக்காய் தயாராகிக் கூட இருந்திருக்கின்றேன். ஆனால் அது பிறகு எப்படியோ திசைமாறிவிட்டது.

 

இதையேன் குறிப்பிடுகின்றேன் என்றால், எனக்கும் உங்களைப் போல அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனோநிலைதான் பெரும்பாலும் வாய்த்திருக்கின்றது. உங்களைப் போலத்தான் 'ஒரு கணம் எல்லாவற்றையும் ரசிக்கும் மனம், அடுத்த கணம் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருக்கிறது'ம் எனக்குள்ளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஒருவகையில் நான் இதை என் 'இருத்தலிய சிக்கல்' ஆகப் பார்ப்பதுண்டு.

 

அது இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்ற கேள்விக்கு இழுத்துச் செல்லும். பிறப்பும், மரணமும் அறுதியான உண்மைகளாக நம் முன்னே இருக்கும்போது இடையில் நடப்பவையெல்லாம் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளும் விடயங்களோ என்று நினைப்பதுண்டு. எதற்காக இந்த அலைக்கழிப்புக்கள், கசப்புகள், ஏமாற்றங்கள், துரோகங்கள், நாடகீயங்கள் என்று ஒரு திசையில் மனம் விடாது அலைவுறும். பிறகு சட்டென்று அதே மனதே ஏதோ சில விடயங்களில் குவிந்து அமைதியுறும்; இந்த வாழ்க்கை வாழ்வதற்கெனச் சொல்லி சிறகுகளை விரிக்கும்.

 

என் பதின்மங்களில் இங்கே வந்த ஒரு பத்திரிகையில் (அதுதான் நான் முதலும் கடைசியுமாக கொடுத்த நேர்காணல்) உனக்கு என்ன விருப்பம் என்று கேட்கப்பட்டபோது, 'எனக்கு ஒரு தனிமையான அறையும், வாசிக்க புத்தகங்களும், எழுதுவதற்கு கணனியும் இருந்தால் போதும்' என்று சொன்னதாக ஞாபகம். இப்போதும் அந்த விருப்பிலிருந்து பெரிதாக மாறவில்லை. மனிதர்க்கு உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளுக்கு அப்பால் கிடைப்பவை எல்லாம் 'ஆடம்பரமான விடயங்கள்' என்றுதான் நினைப்பதுண்டு. அந்தவகையில் இந்த வாழ்க்கையில் பலருக்குக் கிடைக்காத வசதிகளும், வாய்ப்புக்களும் எனக்குக் கிடைத்திருக்கின்றது என்றும், ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று நினைப்பதுண்டு.

 

ஆனால் நம் மனது மாபெரும் விளையாட்டுத் திடல் போன்றது. இன்னும் இன்னும் என்று அதிக ஆசைப்படும். பிறரைப் போல எங்களால் இருக்க முடியாது என்று நினைத்து வருந்துவது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் இந்தச் சமூகம் நம்மை எங்கெங்கோ அடித்துச் செல்ல பலதைத் திணிக்கச் செய்யும். இந்தச் சமூகத்தில் 'வெற்றியாளராக' இருப்பது முக்கியமே தவிர, ஒவ்வொன்றாக நமக்கு இத் அவசியமில்லையென உதறிச் செல்வது அவ்வளவு எளிதில்லை.

 

ஆகவே நம் மனது தொடர்ந்து தொந்தரவுக்குள்ளாகின்றது. உறக்கம் தொலைந்த இரவுகள் நமக்கு வாய்க்கத் தொடங்குகின்றன. சிலவேளை எனக்கு நெருக்கமானவர்களிடம் இந்த வாழ்க்கையை ஒரளவுக்கு வாழ்ந்து பார்த்துவிட்டேன், இனி எதுவுமில்லை போலத் தோன்றுகிறது எனச் சொல்வேன். இது சலிப்பால் எழுவதல்ல, ஒருவகையான மனநிறைவாலே நான் இதைச் சொல்லிக் கொள்ளுவேன். சிலவேளைகளில் ஒரேமாதிரியான வாழ்வை வாழ்ந்து பார்த்துத்தான் மனிதர்கள் தம் உயிரைக் கூட த் தொலைக்கும் சாகசப் பயணங்களிலோ/விளையாட்டுக்களிலோ ஈடுபடுகின்றார்களோ என்று நினைப்பதுண்டு.

 

நமது சமநிலைகள் குலையும் பொழுதுகளில், என்னைப் போல மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கை குறித்து கேள்விகள் வராதோ என்று நினைப்பதுண்டு. ஏனெனில் பலர் மிக அமைதியான வாழ்வை ஒரே சமநிலையில் எப்போதும் வாழ்வது போலத் தோற்றமளிப்பார்கள். சிலவேளைகளில் அவர்களுக்கு வேறு விதமான கேள்விகள், தேடல்கள் இந்த வாழ்வு குறித்து இருக்கவும் கூடும். நாம் எல்லோரும் ஒரு கட்டத்தில், எம்மால் இப்படித்தான் இருக்கமுடியும் என்ற ஒரு உறுதியான நிலைப்பாடு வந்தவுடன், ஒரு மிகப்பெரும் தெளிவு வருமல்லவா? அதுதான் அலைவுறுகின்ற மனதுக்கு மிக முக்கியமென நான் நினைப்பதுண்டு.

 

நம்மால் tribes போல ஒரு வாழ்வு நிலைக்குள் போகவும் முடியாது. அதேபோல் நுகர்வின் வெறிகொண்ட நவீன மனிதனாகவும் ஆகவும் முடியாது. அதுவே நம்மைத் தொந்தரவுபடுத்துகின்றது. நமது centre of attention ஐ குலைக்கின்றது. நாம் இந்தப் பொழுதில் யாராக இருக்கின்றோம் என்பதுதான் சிக்கலாக இருக்கின்றது.

 

இதனால்தான் சிலர் வேறுவிதமாக தமக்குரியதல்லாத அடையாளங்களை எல்லாம் வலிந்து ஏற்றிக்கொண்டு சமூகவலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருக்கின்றனர். பலருக்கு அது ஒரு வெறும் அடையாளம் என்று தெரிந்தாலும், அது அவர்களுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுக்கின்றது. ஒரு நடிகர் தான் நடித்துக் கொண்டிருக்கும் கதாபாத்திரமே தனது அசலான முகம் என்று நம்பத் தொடங்கினால் என்னாகும்? அவ்வாறுதான் பலர் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிலவேளைகளில் அவ்வாறே வாழ்வை 'நடித்து' முடித்துவிடவும் அவர்களுக்கு இயலக்கூடும்.

 

நீங்கள் குறிப்பிடுவது போல 'எண்ணங்கள் சாப'மாகக் கூட சிலவேளைகளில் இருக்கலாம். ஏனென்றால் அவை நமக்கு கடந்தகாலத்தை நினைவூட்டுபவை. அவ்வாறு கடந்தகாலத்தில் உறையும்போது நிகழ்காலம் வழுக்கிக் கொண்டு போய்விடும். எனக்கு சிலவேளைகளில் சலிப்பு வரும்போது முகநூலில் memoriesஐ பார்ப்பதுண்டு. அப்போது 'பரவாயில்லையே, பலதைச் செய்திருக்கின்றேன், பல இடங்களுக்குப் பயணித்திருக்கின்றேன்' என்று என் நிகழ்கால சலிப்பைத் தேற்றிக் கொள்வதுண்டு.

 

ஆனால் அதில் சிக்கலும் இருக்கின்றது. மனம் அந்த இனிமையை மீண்டும் அசைபோடத் தொடங்கும். எங்களுக்கு கடந்தகாலத்தில் இனிமையான நிகழ்வுகள் நடந்திருந்தாலும், நாம் அவற்றை ஆழப்பார்த்தால் அப்போதும் நாம் ஏதோ இந்த 'இருத்தலிய/நாளாந்த சிக்கல்களினூடாக' அல்லாடிக்கொண்டுதான் இருந்திருப்போம். அப்படியெனில் அது கடந்தகாலமாகி விட்டபின் எப்படி அது மதுரமாக இனிக்கின்றது? ஆக நாம் ஒன்று நிகழ்ந்து கடந்துகாலமான பின், நமக்குத் தேவையானதை மட்டும் நிகழுக்கு எடுத்து வர முயல்கின்றோம் அல்லவா?

 

இந்த முகநூல் memories பற்றிச் சொன்னேன் அல்லவா? சிலவேளைகளில் நான் பொதுவெளியில் பகிர்ந்திருக்காவிட்டாலும், எனக்கும் நடந்த கசப்பான/துயரமான நினைவுகள் பெருக்கெடுக்கவும் செய்யும். எனவே கடந்தகாலத்திற்குப் போய்ப் பார்ப்பதென்பது எப்போதும் மதுரமாகத்தான் இருக்கும் என்றும் சொல்லமுடியாது. ஆனால் அந்தத் துயரங்கள் கடந்தகாலம் என்பதால் எங்களால் அந்தக் கொடும் நினைவுகள் இப்போது நம்மைப் பீடிக்காது என்று நிம்மதி கொள்ள முடிகின்றது. அதிலிருந்து தெளிவான எல்லைக்கோட்டைப் போட்டு வெளியேறிவிடுகின்றோம். அதுவே கடந்தகாலத்துக்கும் நிகழ்காலத்துக்குமான வித்தியாசம். ஆகவேதான் நாம் கடந்தகாலத்தில் மூழ்க விரும்புகின்றோம் அல்லது எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காண ஆசைப்படுகின்றோம்.

 

ஒரு நாளிலேயே எல்லாவிதமான ஏற்ற இறக்கங்களைப் பார்ப்பேன் என்று பல இடங்களில் எழுதியிருக்கின்றேன். ஒரு மனிதன் பிரச்சினையில்லாது வாழ முடியாது. ஆனால் வருகின்ற சிக்கல்களை குறைத்துக் கொள்வதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. தியானத்தில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் குறுக்கும்மறுக்குமாய் ஓடிக் கொண்டிருக்கும்போது, ஒரு எண்ணத்துக்கும் மற்ற எண்ணத்துக்குமான இடைவெளியை அவதானியுங்கள் என்று சொல்லித் தருவதுபோல என்று இதை எடுத்துக் கொள்ளலாமா எனத் தெரியவில்லை. அந்த எண்ணங்களுக்கிடையிலான இடைவெளி நமக்கு அமைதியைக் கொண்டு வரலாம்.

 

அவ்வாறு நமக்கு வந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள்/சிக்கல்களுக்கிடையில், வரும் அமைதியில் வாழ்ந்து கொண்டிருப்பதுந்தான் வாழ்க்கையோ தெரியாது.

 

ஒவ்வொரு மனிதர்களும் நாம் தூர நின்று பார்க்கும்போது நிம்மதியான, செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றும். ஆனால் அவர்களை சற்று நெருக்கும்போது, அவர்கள் தங்களைத் திறந்து காட்டும்போது ஒரு எரிமலையல்லவா உள்ளே பொங்கிக் கொண்டிருக்கின்றது என்று தோன்றும். புத்தர் சொன்னத்தைத் தான் திரும்பத் திரும்ப நினைவூட்டிக் கொள்வேன்; sufferingsஐ நாம் தடுக்கமுடியாது, ஆனால் அதனால் வரும் painஐ வேண்டுமானால் குறைக்கமுடியும்.

 

எனக்குத் தெரிந்த எழுத்தாளர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதையும், செயலாற்றுவது குறித்தும் பேசிக் கொண்டிருப்பார். அவரின் உற்சாகம் தரும் கட்டுரைகள் எனக்கு அவரின் அபுனைவுகளை விடப் பிடிக்கும். ஆனால் அவர் கூட, இனி புதிதாக எழுதமுடியாது என்று சட்டென்று வந்த சலிப்பில் மின்சாரம் வரும் plug இல் கை வைப்போமா என்று பெரும் உந்துதல் வந்தது என்று ஒருமுறை எழுதினார். அவர் இவ்வாறு எழுதும்போது அவரை அரவணைத்து ஒரு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். இதன்மூலம் அவர் நமக்குச் சொல்வது;  தான் இவ்வளவு உற்சாகமானவராக, தொடர்ந்து செயலாற்றுபவராக இருந்தால் கூட, தானும் இந்தவகைச் சிக்கல்களுக்குள் இருந்து தப்பவில்லை என்பதுதான். இவ்வாறு இதை அவர் பகிர்வதுகூட நம்மோடு தோளணைத்து உங்கள் மனதின் சிக்கல்கள் தனிப்பட்ட ஒருவருக்குரியதல்ல என்று குறிப்பிட விழைவதாகக் கூட இருக்கலாம்.

 

உங்களுடைய நாட்கள் இன்னும் இனிதாகவும், அமைதியானதாகவும் அமையட்டுமாக.

 

அன்புடன்,

 

இளங்கோ

 

***************

 

 

 


கடிதங்கள் - 03

Saturday, September 23, 2023

 

அன்பு இளங்கோவிற்கு,


நலமா? உங்கள் முகப் பக்கத்தில் ஐந்து கிலோ மீட்டர் ஓடி, ஆய்ந்து ஓய்ந்து அமர்ந்திருந்ததைப் பார்த்தேன்தற்போது நன்றாக ஓய்வெடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனது பயணத்தின் காரணமாக உங்களுக்கு எழுதுவது தாமதமாகிவிட்டது. கடிதங்களுக்கான குணாதிசயமும் அதுதானே. அதாவது, எதிர் நோக்கிக் காத்திருக்கச் செய்து, பிறகு கைகளில் தவழ்வது. அப்படியாகவே இந்தக் கடிதம் அமைந்துவிட்டது. உங்கள் கடிதத்தின் வாயிலாக என்னைப் போலவே நீங்களும் கடிதங்களை சேமித்து வைப்பவர் என்று அறிந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நான் எதன் பொருட்டோ எல்லாக் கடிதங்களையும் சேமிக்கவில்லை.


நமது கடிதங்களை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எடுத்துக் கொள்ளலாம் என்று தான் நானும் நினைக்கிறேன். எந்த திட்டமிடலும் இல்லாது தன்னியல்பாக தொடங்கிய இந்த கடிதப் பரிமாற்றங்கள், அழகியல் தருணங்கள், 'எது வரினும், நிகழில் நிற்போம்' என்ற சிந்தையில் இயங்கும் நமக்கு, வாழ்க்கை அளித்த அதிசய அன்பளிப்பு தானோ? நமக்கு இப்படி இருக்க, கடிதங்களே அரிதாகிப் போன இந்தக் காலகட்டத்தில், நமது கடிதங்கள், வாசிப்பவர்களுக்கும் ஒரு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும் என்றும் நம்புகிறேன். நாம் பொது வெளியில் எழுதும் இத்தகு கடிதங்கள் மூலம் கடித இலக்கியத்தை வளர்த்தெடுக்க முடிந்தால், அதுவும் சிறப்பன்றோ?


எனக்கு முன்பெல்லாம் ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு எழுதும் கடிதங்கள் எப்படி இருக்கும் என்று அறியும் அவா இருக்கும். ஒருவேளை, அப்போது ஆணுலக அறிமுகமற்று இருந்த எனக்கு, அதை அறிந்து கொள்ள நான் தேடிய ஒரு வழியாக அது இருக்கலாம். அப்போது எனது வகுப்புத் தோழனிடம் எனது இந்த ஆசையை நான் வெளிப்படுத்த, அவன் தனது நண்பன் தனக்கு எழுதிய கடிதம் ஒன்றை எனக்கு வாசிக்கக் கொடுத்தான். அந்த எழுத்தில் பாலின வேறுபாடெல்லாம் தெரியவில்லை, நான் ஆணுலகை அறிந்து கொள்ளும் மார்க்கமாகவும் அது இல்லை, மேலும், எனது நண்பன் ஒருவன் எனக்கு எழுதிய கடிதங்களில் இருந்த துள்ளலும் இருக்கவில்லை. மாறாக, அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த ஒரு சம்பிரதாய நிகழ்வு பரிமாற்றமாக இருந்தது, எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அதற்கு பிறகு அந்தத் தேடலை விட்டுவிட்டேன். எவரோ இருவர் எழுதி நான் வாசித்த ஒற்றைக் கடிதத்தின் வழி ஒட்டு மொத்த ஆண்களின் உளவியலை அறிந்து கொள்ள முனைந்தது எனது முட்டாள்த்தனம் தானே? பின்னாளில், 'இதம் தந்த வரிகள்' என கு.அழகிரிசாமி - சுந்தர ராமசாமி கடிதங்களின் தொகுப்பை வாசித்தேன். அது எத்தகைய அனுபவத்தை கொடுத்தது என்பது தற்போது நினைவில் இல்லை. மீண்டும் வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்குமாயின் வாசிக்க வேண்டும்.


உங்கள் ஆசிரியர் தாய் (Thay) சொன்னதாக நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது. அவரைப் பற்றிய மேலதிக குறிப்புகளைப் பகிரவும். பார்வையற்ற ஒருவர், தமது கைத்தடியைத் தரையில் தட்டி தட்டி, தன் வழி அறிந்து செல்வதைப் போல, எனக்கு ஜே.கே, உங்களுக்கு தாயின் கற்பித்தல்கள் அத்தகைய கைத்தடியாக அமைந்திருக்கிறது என்றும், அந்தக் கைத்தடியை பற்றிக் கொண்டு நாம் நமது வழியை கண்டுபிடித்துச் செல்கிறோம் என்றும் நான் நம்புகிறேன்.


எதையோ எழுத வந்து எங்கேயோ எழுத்து அலைபாய்ந்ததாக எழுதி இருந்தீர்கள். எழுத்தின் கைப்பற்றி தன் கதையை சொல்லிச் செல்லும் எண்ணத்தின் இயல்பு தானே அது, அதன் படியே வழிநடத்தப் பட்டிருந்தீர்கள். அது சிறப்பாகவே வந்திருந்தது. எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயாத்தின் பேரில் அன்றி, தன்னியல்பில் தோன்றிய இந்தக் கடிதப் பரிமாற்றமானது ஆத்மார்த்மாகவும் எந்த அழுத்தத்தையும் கொடுக்காததாகவும் இருக்கிறது. மாற்றம் குறித்து நீங்கள் எழுதி இருந்ததைப் போலவே, இதுவும் மாறலாம், எப்போது வேண்டுமானாலும் தன்னியல்பாக தோன்றியது போல இந்தப் பரிமாற்றங்கள் ஒரு நாள் ஓயலாம் என்ற புரிதலோடு, எதுவரை போகுமோ அதுவரை நாம் எடுத்துச் செல்வோமாக! நிகழில் லயிப்போமாக!


அன்புடன்,


இனியா


 ***********************


அன்பின் இனியா,


உங்கள் பயணம் இனிதாய் நடந்து முடிந்திருக்குமென்று நம்புகின்றேன்.


கடிதங்களுக்கு தமிழில் நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் நிறைய கடிதங்களை திறந்த கடிதங்களாய்க் கூட எழுதியிருக்கின்றார்கள். என் நினைவில் நான் வாசித்த முதல் கடிதமாய் 10ம் வகுப்பில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, நேரு மகளுக்கு (இந்திராகாந்திக்கு) எழுதிய கடிதமாய் இருந்திருக்கின்றது. அதே காலத்தில்தான் அமெரிக்கப் பூர்வீக குடிகளின் தலைவர் Chief Seattle இன் கடிதத்தையும் வாசித்திருக்கின்றேன். அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன், பூர்வீக மக்களின் நிலத்தை வாங்கக் கேட்கப்பட்டபோது எழுதப்பட்ட கடிதம். அது இப்படித்தான் தொடங்கும் "The President in Washington sends word that he wishes to buy our land. But how can you buy or sell the sky? The land? The idea is strange to us. If we do not own the freshness of the air and the sparkle of the water, how can you buy them?" கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் ஆனபின்னும், நாம் சியாட்டில் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல்தான் திண்டாடுகின்றோம்.


இன்றைய நுகர்வுக் கலாசாரத்தில் எல்லாவற்றையுமே பணமாக்க நாம் துடித்துக் கொண்டிருக்கின்றோம். பணமாக்க மட்டுமில்லை, இந்த வாழ்வை மிக நிதானமாக இரசிக்கக் கூட மறந்து எது எதற்காகவோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.


அவ்வாறான ஓட்டத்தை கொஞ்சம் நிறுத்திப் பார்க்கத்தான் எனது ஆசிரியரான தாய் (Thich Nhat Hanh) எனக்கு உதவியிருக்கின்றார். இயற்கையை மட்டுமில்லை, சக மனிதர்களால் வரக்கூடிய ஏமாற்றங்களையும் எளிதாக எடுத்துக் கொள்ள தாயும், புத்தரும் துணையாக இருக்கின்றார்கள். Thich Nhat Hanh என்பது அவரது முழுப்பெயர் என்றாலும், அவரை அணுக்கமாக புரிந்துகொள்பவர்கள் அவரை Thay என்று அழைக்கின்றார்கள். Thay என்பதற்கு வியட்நாமிய மொழியில் ஆசிரியர் என்று அர்த்தத்தைத் தரக்கூடியது. தாயும் என்னைப் போலவே போரின் நிமித்தம் அகதியானவர்.


வியட்னாமில் தென் வியட்னாமிய கம்யூனிஸ்டுக்களும், அமெரிக்க ஆதரவு வட வியட்னாமியர்களும் சண்டையிட்ட 1960களில் இரண்டு தரப்புக்கும் அப்பால் இருந்து சமாதானத்துக்காய் களத்தில் நின்று குரல் கொடுத்தவர். ஒருகட்டத்தில் தாயை வியட்னாமிய அரசு நாட்டுக்குத் திரும்ப வரக்கூடாதென்று தடை விதிக்கின்றது. அப்போதும் Boat People என அழைக்கப்பட்ட வியட்னாமில் இருந்து படகுகளில் தப்பிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் செயற்பாடுகளில் இறங்கியவர்.


தாய் நமக்கு Inter-being என்ற புதிய சொல்லைஅறிமுகப்படுத்தியவர். அதாவது நாம் இயற்கையோடும், சக மனிதர்களோடும் தங்கியுள்ளவர்கள் என்று கூறுகின்றார். ஒரு உதாரணத்துக்கு நாம் தேநீரை அருந்தும்போது, நாம் தேநீரை மட்டும் அருந்தவில்லை. தேயிலைச் செடி, மழை, மழைக்குக் காரணமான முகில்கள் என்று நம் புறக்கண்ணுக்கு தேநீர் அருந்தும்போது தோன்றாத விடயங்களையும் பார்க்கச் சொல்கின்றார். அவ்வாறுதான் எல்லாமுமே ஒவ்வொன்றோடு தொடர்புபட்டிருக்கும் எனச் சொல்கின்றார். ஒருவகையில் நாகார்ஜூனர் சூன்யவாதத்தைப் பற்றிச் சொல்லும்போது, ஒரு கிளாஸில் அரைவாசி நீர் நிரம்பியிருந்தால், அதன் மிகுதியில் இருப்பது என்னவென்று யோசிக்கச் சொல்வதோடு இணைத்துப் பார்க்கலாம்.


தாய், ஸென் பரம்பரையில் வருகின்றவர் என்றாலும் Engaged Buddhism என்ற புதிய விடயத்தை முன்வைத்தவர். மரபான புத்தம் தேங்கிவிட்டதால், நாம் புதிதாக மாற்றங்களைச் செய்யவேண்டும் என்றே Engaged Buddhism ஐ தொடங்கியவர். அவர் புத்தர் முன்வைத்த Impermanence, No Self, Nirvana தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருந்தவர். எல்லாமே 'மாறும்' என்றால், அங்கே சுயம் என்று concrete ஆன ஒன்றும் இல்லை. இந்த 'மாறும்' நிலையும், உறுதியான 'சுயமும் இல்லை' என்கின்ற புரிதல், நம்மை 'நிர்வாணத்துக்கு' அழைத்துச் செல்லும் சுதந்திரத்தைத் தருகின்றது என்கின்றார். 'நிர்வாணம்' என்பது எல்லாவற்றிலிருந்தும் விடுதலை ஆவதாகும் என்று எளிய புரிதலாக தாய் சொல்வதாகப் புரிந்து கொள்ளலாம். உங்களின் ஜேகேயும் 'அறிந்ததிலிருந்து விடுதலை' (Freedom from Known) பற்றி நிறையப் பேசியிருக்கின்றார் அல்லவா? தாயைப் பற்றி அலுப்பில்லாது என்னால் நிறையப் பேசமுடியும். விரிவெண்ணி இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன். தாய் அண்மையில் மறைந்தபோது நானெழுதிய இந்தப் பதிவு (https://djthamilan.blogspot.com/2022/04/thich-nhat-hanh.html) தாய் பற்றிய மேலதிகப் புரிதலைத் தரக்கூடும்.


ஒஷோ நான் கற்றவை என நம்பிக் கொண்டிருந்தவற்றை உடைத்து வெறுமையாக்கிவிட்டார் என்றால், தாய் அந்த வெற்றிடத்தை அவரது எளிதான கற்பித்தல்களால் நிரம்பிக் கொண்டவர் என்று சொல்வேன். அதனால்தான் ஓஷோவை தோளில் கைபோட்டு கூடவே நடக்கக் கூடிய ஒரு தோழனைப் போலவும், தாயை என் மரியாதைக்குரிய ஆசிரியராகவும் நினைத்துக் கொள்கின்றேன். ஆனால் இவர்கள் அல்ல, எந்த ஸென் ஆசிரியர்களும் தங்களை முன்னோடியாக வழிகாட்டியாகக் கொள்ளாதே எனத்தான் சொல்வார்கள். எல்லாமே perceptions தான், ஒருபோதும் இந்தமாதிரியான நம்பிக்கைகளில் தேங்கிவிடாது அவற்றைக் கடந்து கடந்து போகவேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் எல்லாமே மாறிக் கொண்டிருப்பவை. இப்போது நாங்கள் கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்கின்றோம். ஆனால் முதல் கடிதத்துக்கும், இந்தக் கடிதத்துக்கும் எவ்வளவோ வித்தியாசமிருக்கும். 'அதே தான், ஆனால் அது அல்ல' என்பதைத்தான் ஸென் அடிக்கடி வலியுறுத்திக் சொல்வது.


ஸென் koan/katha ஒன்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்: ஞானமடைந்த ஒரு குருவிடம் ஒருவர், நீங்கள் ஞானமடைய முன்னர் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எனக் கேட்பார். அதற்கு அவர் விறகு வெட்டிக் கொண்டிருந்தேன் என்பார். அப்படியா இப்போது ஞானமடைந்தபின் என்ன செய்கின்றீர்கள் என அதே நபர் குருவிடம் கேட்பார். குரு, 'இப்போதும் விறகுவெட்டிக் கொண்டிருக்கின்றேன்' என்கின்றார். இது எளிமையான கதை போலத்தோன்றினாலும் புரிந்து கொள்ள விரிவான பாடங்கள் இருக்கின்றன.


ஸென்னைப் பற்றி அறியும் ஆவல் தொடர்ந்து இருப்பதாலோ என்னவோ நேற்று ஒரு கனவு வந்தது. அதில் ஒரு ஸென் ஆசிரியரும், என்னைப் போன்ற பலரும் அவரைச் சுற்றி இருக்கின்றோம். ஸென் ஆசிரியர் எதையோ சொன்னவுடன் ஒருவர் விளங்கவில்லையென விளக்கம் கேட்கின்றார். ஆனால் எனக்கு ஸென் ஆசிரியர் சொன்னது விளங்குகின்றது. ஒருவகையில் சில செக்கன்களில் வந்து போய்விட்ட ஆழமான புரிதல் அது. குருவிடம் விளக்கச் சொல்கின்றவர் அந்தப் புள்ளியைத் தவறவிட்டார் என்பது புரிகின்றது. ஆனால் அது புரிந்துவிட்டது என்று உணர்ந்த என்னால் கூட அதை விபரித்து கேள்வி கேட்பவருக்குச் சொல்லமுடியவில்லை.


அறிந்ததைச் சொல்ல முயலும் நான், அதை விளக்கமுடியாது தவிர்க்கின்றேன். இதைத்தான் ஸென்னில் கணநேரத்தில் விழிப்புணர்வு வந்துவிடக்கூடும் எனச் சொல்வது என நினைக்கின்றேன். அதே சமயம் அந்த அனுபவத்தை புறவயமாக முழுதாக விபரித்தும் விடமுடியாது. ஓஷோ சொல்வதுபோல ஒரு பாடகர் தான் வேறில்லை, தன் பாடல் வேறில்லை என்ற பாடிக் கொண்டிருக்கும்போது உணர்வது, ஓரு நடனக்காரர் தான் வேறில்லை, தன் ஆட்டம் வேறில்லை என்று ஆடிக்கொண்டிருக்கும்போது உணர்வது, ஒர் எழுத்தாளர் தான் வேறில்லை தன் எழுத்து வேறில்லை என அவர் அறியாமலே எழுதிக் கொண்டிருப்பது போலவும்.


இந்தக் கடிதம் ஸென்னோடு தொடங்கி அதனோடே முடிந்துவிட்டது.


அன்புடன்,


இளங்கோ


********************

கடிதங்கள் - 02

Thursday, September 21, 2023

 

அன்பு இளங்கோவிற்கு,


உங்கள் மடலை நான் பல முறை வாசித்துவிட்டேன். இது கொடுக்கும் ஆனந்தம் அபரிமிதமாக இருக்கிறது. நான் முதல் முறை வாசிக்கும்போது நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளும் அவசரமும் ஆர்வமுமாக வாசித்தேன். பிறகு நிதானமாக...  எவ்வளவு வருடங்களாயிற்று இப்படி மடல்கள் வரைந்து. இது ஒரு ஆத்மார்த்தமான உணர்வைக் கொடுக்கிறது.


ஜே.கேவை ஒரு தத்துவவாதியாக தனியாக அறிந்து கொண்டேனா என்று தெரியாது, ஆனால் அவரது கற்பிதங்களின் வழி என் மனதைத் தான் அறிந்து கொள்ளத் தொடர்ந்து முயல்கிறேன். எனக்கு சவாலே என் மனது தான். அவரைப் படிக்கத் துவங்கியபோது நம் மனதுக்குள் ஓடுபவற்றை எல்லாம் இவர் எப்படி வார்த்தைப் படுத்துகிறார் என்று தோன்றும். உன்னை மாய்த்துக்கொண்டும் நீ காப்பாற்ற வேண்டியது உனது அடையாளத்தை, உனது இனத்தை, உனது மொழியை என்ற இப்படியான போதனைகளின் நடுவே உனது அடையாளங்கள் உன்னை (நிஜமான) மறைக்கின்றன, மற்றவர்களிடமிருந்து உன்னை பிரிக்கின்றன அவற்றையெல்லாம் கிழித்தெறிந்து நீ வெளிப்படு என்ற குரல் தான் எனக்கானதாக இருந்தது. 


மேலும், ஒரு நாள் எனக்குத் தோன்றியது, இந்த பூமி ஒரு உருண்டை அவ்வளவு தானே? இதில் ஏன் நாம் இத்தனை கோடுகளைக் கிழித்து வைத்திருக்கிறோம்? ஏன் நாம் இன்னொரு நாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால் அனுமதி கோர வேண்டும்? பூமி எல்லோருக்குமானது தானே. பறவைகள் அப்படித்தானே பறந்து திரிகின்றன. இப்படியெல்லாம் கிளரும் சிந்தனைகள் சரியான திக்கில் தான் செல்கின்றன என்று எனக்கு reaffirmation கிடைத்தது ஜே கே விடம் இருந்து தான். So my connection/relationship with him is more in the lines of understanding myself, life and the world i.e., through him/his teachings.


இன்னும் உங்களுக்கு நிறைய எழுதத் தோன்றுகிறது. ஆனால் உறக்கம் இமைகளை மூடுகிறபடியால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.


உங்களைக் கண்டெடுத்தது தான் இந்த வருடத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். And I think the feeling is mutual. இந்த உணர்வோடேயே உறங்கப் போகிறேன்.


அன்புடன், இனியா


**************


அன்பின் இனியா,


நாம் இவ்வாறான கடிதங்களைத் தனிப்பட்டு இரண்டு பேருக்கிடையில் எழுதிக் கொள்ளலாம். அதைத்தாண்டி இவ்வாறு ஏன் பொதுவெளியில் எழுதிக் கொள்கின்றோம் என்றால், எந்தளவுக்கு ஒரு தனிநபரால் மனந்திறந்து பேச முடிகின்றது என்று பார்ப்பதற்காக என்று நான் நினைக்கின்றேன். நீங்களும் அவ்வாறு நினைப்பீர்களென்றே நம்புகின்றேன்.


ஒரு பரிட்சார்த்த முயற்சி, அது எந்தளவுக்கு முன்னே போகமுடியும் என்று முயற்சித்துப் பார்ப்பதாக இந்தப் பொதுவெளி கடிதங்களை எடுத்துக் கொள்கின்றேன். இன்னொருவகையில் எம்மைப் போன்ற அலைவரிசையில் இருப்பவர்கள் தங்களுக்கிடையில் கடிதங்களை எழுதிக் கொள்ள இது உந்துதலைக் கொடுக்கவும் கூடும்.


பேனா நண்பர்களுக்கு கடிதங்கள் எழுதாதபோதும், நண்பர்களுக்கும் காதலிகளுக்கும் நிறையக் கடிதங்களை எழுதியிருக்கின்றேன். எமது நாட்டின் போர் காரணமாகவும், வெவ்வேறு இடம்பெயர்வுகளாலும் பலருக்குக் கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். சிலவேளைகளில் அருகில் இருந்தாலும், பேசுவதற்கான வெளி இல்லாத இடங்களில் கடிதங்கள் எழுதி நண்பர்களிடையே பகிர்ந்து இருக்கின்றோம்.


யாராக இருந்தாலும் எனக்கு எழுதப்பட்ட கடிதங்களை எப்போதும் நான் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களைப் போல பத்திரமாக்கி வைத்திருக்கின்றேன். வாசிப்பு, இலக்கியம் என்று வந்தபோது மைக்கேல், (கவிஞர்) திருமாவளவன் (காலமாகிவிட்டார்) போன்றோர் தூர இடங்களிலிருந்து எனக்குக் கடிதங்கள் எழுதி நான் செல்லும் திசைகளை ஆற்றுப்படுத்தியவர்கள். அதிலும் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மைக்கேல் எழுதிய கடிதங்களை ஒரு காதலி அனுப்பும் கடிதங்கள் போல மனம் சிலிர்த்து வாசித்திருக்கின்றேன்.


பின்னாட்களில் இலக்கியக் கடிதங்கள் குறைந்து, காதலிகளுக்கு எழுதும் கடிதங்களாய் மாறியும் இருக்கின்றன. அதுபோலவே காதல் பிரிவுகளின்போது துயரத்தை ஆற்ற எழுதி அனுப்பமுடியாக் கடிதங்களை எனக்காக நிறைய எழுதியிருக்கின்றேன். ஒருவகையில் கடிதங்கள் என்பது நம்மோடு நாம் உரையாடுவது கூட அல்லவா?


எந்தத் தத்துவமோ அல்லது எதுவோ, நாம் வாசிப்பது/அறிவதிலிருந்து எதை நாம் எமக்காகக் கற்றுக் கொள்கின்றோம் என்பதில்தான் அதன் essence இருக்கின்றது. நீங்கள் அந்தவகையில் ஜேகேவை அப்படி அறிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதை அறிவதில் மகிழ்ச்சியே. எனது ஆசிரியரான தாய் ஓரிடத்தில் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகின்றது. ஒருமுறை அவருடைய plum village monastery இல் ஜப்பானிய japonica மொட்டுக்கள் காலம் முந்தி பனிக்காலத்தில் வந்திருக்கும். கொஞ்ச நாளில் அவை குளிர் காரணமாக மலராமலே இறந்துவிடும். பின்னர் வசந்தகாலத்தில் மீண்டும் japonica அரும்பாகி மலராகும்போது, தாய் அவர்களிடம் 'நீங்கள் அந்த உறைகாலத்தில் வந்த ஜபானிக்காவா அல்லது புதியவர்களா? என்று வினாவுவார். அந்த மலர்கள் ' we are not the same and we are not different. When conditions are sufficient we manifest and when conditions are not sufficient we go into hiding. It's simple as that எனச் சொன்னதாகச் சொல்வார்.


இதைத்தான் புத்தர் சொன்னவர் என்கின்றார் தாய். ஒரு விடயம் தோன்றுவதற்கான புறச்சூழல் இருக்கும்போது அது தன்னியல்பிலே தோன்றும். எனவே நம் வாழ்வில் நாம் நினைத்தவையோ அல்லது திட்டமிட்டவையோ நடக்காமலோ அல்லது இடைநடுவில் நின்றுவிட்டாலோ இவ்வாறு பார்க்கும் பார்வையை வளர்த்துக் கொண்டால் வருந்தாது, பிறர் மீது தேவையற்ற காழ்ப்புணர்வின்றி இந்த வாழ்வை வாழ்ந்து பார்க்க முடியுமென நினைக்கின்றேன்.


உங்களைக் கண்டடைந்ததோ, இப்போது பேசிக் கொண்டிருப்பதோ இவ்வாறு எல்லாச் சூழ்நிலைகளும் பொருந்தும்போது வந்தடைந்த ஒரு புள்ளியாகக் கூட இருக்கலாம். அதே சமயம் எல்லாமே எப்போதும் மாறிக் கொண்டிருப்பதைப் பற்றி புத்தர், தாய் உள்ளிட்ட எல்லோருமே எமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த 'மாறுதல்' பற்றிய பிரக்ஞை, நாம் நிகழ்காலத்தில் நமக்கு அருளப்பட்ட விடயங்களைத் தவறவிடக்கூடாதென்பதற்காய் அவர்கள் சொல்லியிருக்கின்றனர் போலும்.


கனடாவின் காலநிலை அவ்வப்போது வருத்தினாலும், எமக்குத் தெளிவான நான்கு காலநிலைகள் ஒவ்வொரு வருடமும் இருக்கும். ஒவ்வொரு பருவமும் அதனதன் அழகைக் கொண்டிருக்கும் ( of course சிலவேளைகளில் கடினமாகவும் இருக்கும்). அந்தந்த பருவத்தை அப்போதே அனுபவித்துவிட வேண்டும். அவை எப்போதும் நிலைத்திருக்காதவை. அதேமாதிரியான நான்கு மாதக் காலநிலையை உணர பிறகு ஒரு முழுவருடம் நாம் மீண்டும் காத்திருக்க வேண்டும்.


கனடா வந்த புதிதில் நான்கே நான்கு மாதங்கள் வரும் கோடைக்காய் வீட்டின் முன்புறங்களில் பூத்தோட்டங்கள் வைத்து அதற்காய் கடினபட்டு உழைத்து பிறர் பராமரிப்பதை சிரிப்புடன் பார்ப்பதுண்டு. வருடம் முழுதும் வெயில் உலர்த்திக்கொண்டிருக்கும் ஒரு வெப்பவலய நாட்டில் இருந்து வந்தவனுக்கு நான்கு மாதங்களுக்கு இப்படி பூத்தோட்டத்துக்காய் கஷ்டப்பட்டவர்களைக் கண்டால் சிரிப்புத்தானே வரும். ஆனால் பிறகான காலங்களில் வாழ்வின் நிலையாமையும், கிடைக்கும் சந்தர்ப்பங்களை முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்பதையும் தெளிவாக அறிந்த பின், இந்த மனிதர்களை விளங்கிக் கொள்ளமுடிந்தது. அவர்களின் மனோநிலையை அள்ளி அரவணைக்க முடிந்தது.


இன்று காலை அவ்வளவு வெம்மையாக இருந்தது. பின்னர் சட்டென்று முகில்கள் மூடி மழை பொழிந்தது. இப்போது இதை எழுதும் இந்த மாலையில் தண்மையான வெயில் மினுங்கிக் கொண்டிருக்கின்றது. காற்று மென்மையாக வீசிக் கொண்டிருக்கின்றது. மனதைக் குழப்பும் சில சம்பவங்கள் நடந்தாலும், இந்த நாள் எனக்கு மிக அழகாகவே இருக்கின்றது. இன்று என்பது எனக்காக அருளப்பட்டதாகவே தோன்றுகின்றது.


எதையோ எழுத வந்து எங்கேயோ எழுத்து அலைபாய்ந்து போய்விட்டது.


அன்புடன்,


இளங்கோ


************

ஒரு பதிவும், அது எழுத வைத்த கடிதங்களும் - 01

Wednesday, September 20, 2023

 

(கொழும்பில் ஒரு கஃபேயிற்குப் போன என் அனுபவத்தை முன்னர் எழுதியிருந்தேன். அந்தப் பதிவின் பாதிப்பில் இனியா கடிதமொன்றை முகநூலில் எழுதினார். அதற்குப் பதில் கடிதம் எழுதப் போக, அது சில மடல்களுக்கு நீண்டன. இந்தக் கடிதங்களுக்குத் தோற்றுவாயான பதிவு இங்கே https://djthamilan.blogspot.com/2023/08/pages-coffee.html)


************


அன்பு இளங்கோவிற்கு,

 

முன்னொரு போதில், அதாவது மடல்கள் மட்டும் இருந்த காலத்தில் 'பேனா நட்பு' என்று ஒன்று இருந்தது. அதைக் குறித்து உங்களுக்கு அறிமுகம் இருக்கின்றதா என்று தெரியாது. அதன் கான்செப்ட் என்னவென்றால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் எழுதும் மடல்கள் வழி ஒருவரை மற்றவருக்கு அறியத் தருவர், அப்படியே நட்பாகுபவர்க்குப் பெயர்தான் 'பேனா நண்பர்கள்'. உங்கள் பதிவுகளின் வழி உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது. இனி பதிவிற்கு வருகிறேன்.

 

ஜே கே குறித்து சிறு அலசல் நன்றாக இருக்கிறது. நான் ஜே கே யின் பரம விசிறி. இதை அவர் கேட்டால் மறுபடியும் ஒருமுறை மரித்து விடுவார்.  ஆனால் அவரை அவ்வளவு பிடித்திருக்கிறது, என்ன செய்வது? என்னால் அவரை விளங்கிக் கொள்ள முடிந்த அளவு, விளக்கிச் சொல்ல முடியாது. மேலும் என் தோழிகள் அவரைக் கண்டாலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவார்கள். இதில் நான் விளக்கவும் முற்பட்டால் அவர்களிடமிருந்து குரட்டையும் வரும்.

 

'நினைவோ ஒரு பறவை' எனக்கு மிகப் பிடித்திருந்தது. காதலிப்பவர்கள் உல்லாசமாக உறவு கொள்ளும் போதும், அதைக் குறித்து வெளிப்படையாக பேசிக் கொள்ளும் போதும் அவர்களுக்குள் ஒரு அலாதியான நெருக்கம் வரும். அதை அழகாக படம் பிடித்திருக்கிறார். அதிலும் அவர்களுக்குள் இருக்கும் அந்த 'சட்ட கிழிஞ்சிருந்தா...' சம்பாஷனை எல்லாம் மிக ரசித்தேன்.

 

//‘நினைவோ ஒரு பறவையில் நாயகி orgasm இன் பொழுது தனக்குள் short term memory loss ஆகி தான் இன்னொரு பிரபஞ்சத்தில் நுழைந்துவிடுவதான பிரமை வருகின்றது என்கின்றாள்.// கடந்த ஞாயிறு தோழிகள் மீட்டில் (meet) Orgasm and squirting குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அந்தப் பொழுதில் தோழியொருத்தி, இந்த மாதிரி அதாவது squirting orgasm எல்லா முறையும் நிகழாது, நாம் எதிர் பார்த்தாலும் நடக்காது, ஆனால் அப்படி நிகழும்போது, தான் என்ற பிரக்ஞையே முற்றிலும் இழந்த பரவச நிலையில் ஆழ்ந்து விடுவதாகக் கூறிக் கொண்டு இருந்தாள்.

 

தி.கு நல்ல அனுபவசாலி என்று நினைக்கிறேன். உண்மைக்கு வெகு அருகில் இருந்து படம் பிடித்திருக்கிறார். படம் பார்த்ததும், தி. கு வைப் பிடித்துப் போய் அவரது பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அவரிடம் ஜித்துவின் தாக்கம் இருப்பதாகவும் உணர்ந்தேன். நீங்களும் இவர்கள் இருவரையும் ஒரே பதிவில் எழுதியிருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

 

//எழுதுகின்றவனா எனக்கேட்டு என் பொழுதுக்கு வர்ணமூட்டிய இந்தப் கஃபே பெண்ணுக்கு ஒரு புன்னகையைப் பரிசளிக்க வேண்டும். ஜேகேயை வாசித்து, என் அத்தனை குழப்பங்களோடும் நான் அவரைப் புரிந்துகொள்ள rephrase செய்ததைப் பொறுமையாகக் கேட்ட என் தோழியை நேசத்துடன் அரவணைக்க வேண்டும். இவையும் கணங்களில் நிகழக்கூடிய விடுதலைதான்.//

 

அருமை! இன்னும் உங்கள் பயணம் பல பல வர்ணங்களால் நிறையட்டும். 

 

அன்புடன், இனியா

 

************************

 

அன்பின் இனியா,


பத்திரிகைகளில் பேனா நண்பர்கள் பக்கத்தைப் பார்த்து வளர்ந்திருந்தாலும், கடிதங்கள் எழுதி பேனா நண்பர்கள் கிடைக்கும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. எமது ஈழப்போராட்டத்தில் அவ்வாறு பேனா நண்பர்களுக்கிடையில் கடிதம் எழுதி போராடப் போனவர்களும்காதல் வளர்த்தவர்களும் உண்டென அறிந்திருக்கின்றேன்.

 

நான் ஜேகேயை உங்களைப் போல ஆழமாக வாசித்து அறிந்தவனல்ல. ஓஷோ, என் ஆசிரியர் தாய் (Thay) ஆகியோரை ஒரளவுக்கு நான் அறிந்ததன் பிறகே ஜேகேயிடம் வந்தவன். என் பதின்மங்களில் இருந்து அதிகம் ஈர்க்கும் விசிறி சாமியார் ஜேகேயை சென்னையில் சந்தித்த பொழுதுகள் பற்றி 'அமரகாவியத்தில்' எழுதப்பட்டிருக்கின்றது. ஒருவர் அறிவாலும், இன்னொருவர் அனுபவத்தாலும் அடைந்த ஞானத்தை, ஓரு சந்தியில் அவர்கள் தரிசித்த இடமென அதை நான் நினைத்துக் கொண்டேன்.

 

ஜேகேயை இன்னும் அறிந்துகொள்ளவேண்டுமென, 'கோவிட்கால' தனிமையில் சில நண்பர்களாய் மெய்நிகர் உலகில் சந்திக்கும் ஒரு மூடிய குழுவில், ஜேகேயை வாழ்நாள் முழுதும் பின்தொடரும் ஒரு நண்பரை அழைத்து வந்து பேசச் செய்திருக்கின்றோம். அவருக்கு ஜேகேயை மிகப் பிடிக்கும் என்றாலும், ஜேகே மீது வைக்கப்பட்டிருக்கும் விமர்சனங்களையும் சேர்த்து அவர் அன்று பேசியது பிடித்திருந்தது. ஓஷோவோ அல்லது விசிறி சாமியாரோ கூட அந்தவகைப்பட்ட விமர்சனத்திலிருந்து தப்பமுடியாது. அதற்கப்பாலும் அவர்கள் என்ன நமக்குத் தந்தார்கள்/தந்து கொண்டிருக்கின்றார்கள் என்கின்ற எமது அகப்பயணமே முக்கியமானது அல்லவா?

 

தி.குவும், ஜேகேயும் ஒரே புள்ளியில் இந்தப் பதிவில் வந்து சேர்ந்தது தற்செயலானதுதான். உண்மையில் நாமின்னும் காதலை, காமத்தை ஒப்பனைகளோடுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தி.கு அதை உடைத்துப் பார்ப்பதால் தான் 'நினைவோ ஒரு பறவை' பிடித்திருந்தது. பெண்கள் காமத்தைத் தங்களுக்கிடையில் பேசுமளவுக்கு ஆண்கள் தங்களுக்குள் அப்படிப் பேசி பகிர்ந்து கொள்வதில்லையெனவே நினைக்கின்றேன். எல்லாம் தெரிந்த மாதிரியான ஒரு பாவனையை மட்டும் ஆண்களாகிய நாம் பெரும்பாலும் பிறரிடம் காட்டிக் கொள்கின்றோம்.

 

திருவள்ளுவர் 'கள்ளுண்ணாமை' என்று ஒரு தனியே ஒரு அதிகாரம் எழுதியிருக்கின்றார். ஆனால் காமத்துப் பால் எழுதும்போது காதலின் இன்பத்தை அதிகம் மது அருந்தும் போதையுடந்தான் ஒப்பிடுகின்றார். கள்ளுண்ணாமல் எப்படி அந்தப் போதை வள்ளுவருக்குத் தெரியும் என்று நான் யோசிப்பதுண்டு. அவ்வாறுதான் தமிழ்ச்சமூகம் காமம் குறித்தும் சிலவேளைகளில் தேவையில்லாத taboo களுடன் அல்லாடிக் கொண்டு, காமத்தைப் பேசவே வேண்டாம் வேண்டாம் எனச் சொல்லியபடி அதை அனுபவிக்க வேண்டும் என்ற இரகசிய மனதை தனக்குள் வைத்திருக்கின்றதோ என்று நினைப்பதுண்டு.

 

வாழ்வில் மட்டுமில்லை, எழுத்தினூடும் ஒத்த அலைவரியில் இருப்பவர்களைச் சந்திப்பது எனக்கு இப்போது அரிதாகிக் கொண்டே வருகின்றது. அப்படி அரிதாக, வெளிப்படையாகப் பேசக்கூடிய உங்களைப் போன்ற ஒருவரை மெய்நிகர் உலகில் சந்திப்பதென்பது அருமையானது. நீண்ட ஒரு கடிதத்திற்கு (அப்படிச் சொல்லலாமோ?) மிக்க நன்றி.

 

அன்புடன்,


இளங்கோ


 ************

(ஆவணி, 2023)

புகைப்படம்: இணையம்

அ.ராமசாமியுடனான ஒரு சந்திப்பு


ந்த வருடத்தின் தொடக்கத்தில் கோயம்புத்தூரில் நின்றபோது அ.ராமசாமி தான் ஆலோசகராக இருக்கும் கல்லூரிக்கு வந்து சந்திக்க முடியுமா என்னை அழைத்திருந்தார். அது இடுக்கியிலிருந்து, சென்னைக்குச் செல்லும் பயணத்தின் குறுகிய இடைத்தங்கல் என்பதால் அவரை அங்கே சந்திக்க முடியாமல் போனது.

அந்தத் தவறவிட்ட சந்திப்பு இப்போது ரொறொண்டோவில் நிகழ்ந்துவிட்டது. அவருடன் 'தலித்', 'மணற்கேணி' போன்ற இதழ்களில் பங்காற்றிய ஜவஹரையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியானது. அத்துடன் நான் கனடா வந்ததிலிருந்து திரைப்படங்களை இரவல் எடுக்கும் 'குமரன் விடீயோ' என்ற கடையை நீண்டகாலம் வைத்திருந்து, இப்போது ஒரு குடும்ப நண்பராகவே ஆகிவிட்ட சிவாவின் வீட்டில் இவர்களைச் சந்தித்ததும், எல்லோரும் சேர்ந்து அரசியல், இலக்கியம் என்று இரவிரவாக அவரவர்களுக்குரிய முரண்களுடன் நட்பாகப் பேசியதும் இனிமையானது. இன்றைய காலத்தில் நிதானமாக ஒருவர் பேசுவதைக் கேட்பதற்கான செவிகள் அல்லவா அரிதாகப் போய்விட்டன.

கீழே வருவது அ.ராமசாமியின் பதிவு.

**************

பயணக்காதலன் இளங்கோ
-----------------------------------

மனிதர்கள் மேற்கொள்ளும் பயணங்களுக்குப் பலவிதமான நோக்கங்கள் உண்டு. புனிதப்பயணங்கள், சாகசப்பயணங்கள், இடங்களைப் பார்த்தலும் களித்தலுக்குமான பயணங்கள் என்பதைத் தாண்டி வெவ்வேறு நிலவியலுக்குள் வாழும் மனிதர்களை அறிதலை நோக்கமாகக் கொண்டு பயணித்துக் கொண்டே இருக்கும் நபர் இளங்கோ. டி.சே.தமிழன் என்பதாகவும் அறியப்படும் அவரது புனைகதைகளின் வாசகனாகவும் அவரை அறிவேன்.
ஆ.சி.கந்தராஜாவின் நாவல் வெளியீட்டில் பார்த்த இளங்கோ, நான் தங்கியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில்தான் தனது வீடு இருப்பதாகச் சொன்னார். அடுத்த நாள் காலை வந்து சந்திப்பேன். காலை உணவுக்கு என்னோடு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே வந்தார். வந்தவரோடு சென்றபோது ஒண்டாரியோ ஏரிக்கரையினை ஒட்டி இருக்கும் ஒரு பெரும்பூங்காவிற்கு அழைத்துச் சென்றார்.

காலைக்காட்சிக்கான பக்கம் என்பதாக அழைக்கப்படும் பகுதியில் இருக்கும் கில்டு பூங்காவும் (Guild Park & Gardens) தோட்டமுமான அந்த இடம் முதல் நாள் பெய்த மழையின் குளிர்ச்சியோடு இருந்தது. புதிதாகத் திருமணம் முடிக்க இருக்கும் இணையர்களின் படப்பிடிப்புகள் நடக்கும் இடமாகவும் இருந்தது அந்தப் பூங்கா. நாடக அரங்குகள், இசைக்கச்சேரிகள் நடக்கும் அரங்கத்தையும் உள்ளடக்கிய பூங்காவைக் காட்டினார் இளங்கோ.
டொரண்டோவில் பார்க்க வேண்டிய பூங்காங்கள் பல இருக்கின்றன என்றாலும் வனமாகவும் தோட்டமாகவும் அரங்கக் கூடமாகவும், சிற்பங்களின் காட்சியாகவும் இருந்த அந்த இடத்தை நண்பர் இளங்கோவோடு சேர்ந்து பார்த்தது இந்தப் பயணத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. காலையில் வந்த நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் சிவாவுக்கும் நண்பர் என்பதால் பலவற்றையும் பேசிக்கொண்டிருந்த நினைவுகள் எப்போதும் இருக்கும்.

*************

நன்றி: அ.ராமசாமி (https://www.facebook.com/ramasamy.tamil/posts/pfbid02Qn7JWG26pxAG4eJ3QL5yFubzBEdRAh7MhPHGERANdQCqRyV7Zki8VYnz3SHTHwK3l)

Prisoner #1056 - பகுதி 02

Monday, September 18, 2023

 

2. கனடாக் கனவு

 

250 பக்கங்கள் இருக்கும் இந்நூலில், இவை அனைத்தையும் 75 பக்கங்களுக்குள் ரோய் சொல்லிவிடுகின்றார். மிகுதிப் பக்கங்கள் கனடாவில் அவர் பெற்ற அனுபவங்களையும் விபரிப்பதாய் இருக்கின்றது. யாழில் தகப்பனின் இழப்போடு தவித்தபோடு இருக்கும் தாயைக் கனடாவுக்கு அழைக்க அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கின்றது. பதினெட்டு வயதில் ஒரு பதின்மனாக கனடாவில் வந்திறங்கி, இங்குள்ள பாடசாலையில் கல்வியைத் தொடர்ந்தாலும், அதைக் கைவிட்டு தொழிற்சாலையொன்றில் பணியாளராகவும், அலுவலகங்களைச் சுத்திகரிப்பவராகவும், அடுக்கங்களில் பாதுகாவலனாகவும் ஒரே நேரத்தில் பல்வேறு தொழில்களைச் செய்யத் தொடங்குகின்றார்.

 

இவ்வாறான அடிநிலை வேலைகளைச் செய்தால், தன்னால் ஒருபோதும் பொருளாதாரத்தில் முன்னேறவோ, தாயைக் கனடாவுக்கு அழைக்கவோ முடியாது என்று உணர்ந்து, ஒரு நிரந்தர Office வேலையை ரோய் தேடத் தொடங்குகின்றார். எந்த அனுபவமோ, உரிய ரெஸிமியோ இல்லாது, ஒரு முதலீட்டு நிறுவனத்தின் மெயில் ரூமில் ஒரு வேலையைப் பெற்றுக் கொள்கின்றார்.


இப்படி ஒரு அடிநிலைப் பணியாளராக  வேலையைத் தொடங்கும் ரோய், எப்படி அந்த பல பில்லியன் மதிப்புள்ள நிறுவனத்தின் ஒரு பகுதிக்கு பிற்காலத்தில்  Executive Vice President ஆக ஆகின்றார் என்பதுதான் மிச்ச கதை. ஒருவகையில் இது 'அமெரிக்கக் கனவு' போல ஒரு குடியேற்றவாதியின் 'கனடா கனவு' கதையெனச் சொல்லலாம்.


ரோயினது சித்திரவதை அனுபவங்கள், தகப்பனை இந்திய இராணுவம் பலியெடுப்பது என்பது மிகவும் துயரமான சம்பவங்கள். தகப்பனின் இறந்த உடலோடு தாய் பல மணித்தியாலங்கள் தனித்து இருந்தது,  பின்னாட்களில் நிரந்தர உளவடுவாகி  ஸ்கிரினோஃபோபியாவுக்குப் போய் கடினமான வாழ்வு வாழ்ந்து முடிந்த அந்தத் தாயாரின் அனுபவங்களையும் ஒரு கையறு நிலையிலே நாம் வாசிக்கின்றோம். ரோயையும் இந்தத் துயர நினைவுகளும், அவர் அனுபவித்த சித்திரவதைகளும் கோபக்கார ஒருவராக அவரை மாற்றி உளவியல் ஆலோசனைகளுக்குக் கொண்டு செல்வதையும் விளங்கிக் கொள்ளமுடிகின்றது.


தகப்பன் இறந்த துயரை வெளியில் பாயவிடாது தனக்குள் அடக்கிக் கொண்ட ரோய், கிட்டத்தட்ட 14 வருடங்களின் பின் (2002) பருத்தித்துறைக்குப் போய் தகப்பன் கொல்லப்பட்ட வீட்டை (அந்த வீட்டை ரோயின் தாய் கொஞ்சக்காலத்திலேயே வேறொருவருக்கு விற்றும் விடுகின்றார்) போய்ப் பார்த்து அங்கே மண்டியிட்டு தகப்பனுக்கு உரிய பிரியாவிடை கொடுத்த சில காலங்களின் பின்னரே அவரால் நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த இந்தத் துயர நினைவுகளிலிருந்து ஒரளவுக்கு விடைபெற முடிகின்றது.


 

3. இரு உலகுகளின் இணைவும் விரிசலும்

 

னடாவுக்கு வந்தவுடன் ரோயும் எல்லா குடியேற்றவாதிகளைப் போல தத்தித்தத்தி மெதுவாகத்தான் மேலே ஏறி வேண்டியிருக்கின்றது. ஆனால் ரோயுக்கு நல்ல மனிதர்கள் விரைவில் அறிமுகமாவதும், அவரது காதலி அவருக்கு வேலையில்லாத காலங்களில் உதவுவதும்  விதிவிலக்கானது. இது எல்லா குடியேற்றவாதிகளுக்கும் எளிதில் சாத்தியமாவதில்லை. முக்கியமாக அனைத்து ஆவணங்களையும் அடையாளமின்றி அழித்துவிட்டு அகதிகளாக வந்தவர்க்கு கனடாவில் இது எளிதாக நடப்பதுமில்லை. ரோய் இது தனது சொந்த அனுபவமென மிகுதிக் கதைகளைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை. அதனோடு நிறுத்தாமல் கனடாவை ஒரு 'சொர்க்கபுரியாக' மட்டும் கட்டியமைக்கும்போதே வாசிக்கும் நமக்கு அவரோடு முரண் உரையாடலைத் தொடங்கவேண்டியிருக்கின்றது.

 

கனடாவில் அவர் வேலை நிமித்தம், பரந்த தளத்தின் வெள்ளையினத்தவர்கள் நிரம்பியிருக்கும் இதன் மத்திய பகுதிகளுக்கும், சிற்றூர்களுக்கும் பயணித்ததால் ரோயின் அனுபவங்கள் ஒருவகையில் பெறுமதியானவைதான். எனினும் ரோயிற்குள் அவரையறியாமலே இங்குள்ள பல தமிழர்களைப் போன்ற தொபுக்கடீர் என்று தேசிய நீரோட்டத்துக்குள் குதிக்கும் கனடா வலதுசாரியினர் போன்ற 'பெருமை' வந்துவிடுகின்றது. இங்கு வெளியாகும் நாஷனல் போஸ்டையே வாசிப்பேன் என்று அவர் சொல்லும்போதே அவரின் அரசியல் எந்தப் பக்கம் போகின்றது என்பது விளங்குகின்றது. அதற்காய் மற்ற அரசியல் கட்சிகள்  எல்லாம் சிறப்பானவை எனச் சொல்ல வரவில்லை.

 

இந்த நாடு ஒரு சிறந்த நாடு, நீங்கள் கடினமாக உழைத்தால் உங்களுக்குரிய தடைகளைத்தாண்டி (இனவாதம், நிற வித்தியாசம்) என்பவற்றைத் தாண்டி உங்கள் கனவுகளைச் சாத்தியப்ப்படுத்தலாம் என்று தொடர்ந்து வலியுறுத்தும் கப்பிட்டலிஸ்களின் கனடாக் கனவையே ரோயும் வெவ்வேறு பகுதிகளில் ஒரே குரலில் ஒலித்தபடி இருக்கின்றார்.

 

உலகில் பல நாடுகளை விடவும் வாழ்வதற்குக் கனடா ஒரு சிறந்த நாடென்பதில் எனக்குக் கூட மாற்றுக் கருத்தில்லை.  இலங்கையில் இருக்கும் பேசும்/எழுதும்/நடமாடும் சுதந்திரத்தை விட பன்மடங்கு சுதந்திரம் கனடாவில் இருப்பதை,  ரோய் சொல்வதைப் போலவே நானும் உணர்கின்றேன்  என்பதும் உண்மைதான். ரோய் -எல்லோருக்குள்ளும் இனவாதம் இருக்கின்றது, நமக்கும் சாதிப் பிரிவினைகள் இருக்கின்றது, எனவே வெள்ளையர்களை மட்டும் இனவாதிகள் எனச் சொல்லி எங்கள் பிள்ளைகளை வளர்க்கக் கூடாது என்று எமக்கு வலியுறுத்திச் சொல்கின்றார். ஆனால் கனடா வாழ்வதற்கு நல்ல நாடென்றால், கனடாவில் இந்த வெள்ளையர்கள் இங்கிருக்கும் ஆதிக்குடிகளுக்கு என்ன செய்தார்கள்/செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைச் சொல்வதற்கும் நிறைய மினக்கெட்டிருக்க வேண்டும். அதைப் பற்றிய எந்த சிறு சலசலப்பையும் இந்த நூலில் நாம் வாசிக்கக் கிடைக்கவில்லை.

 

Systemic And Structural Racism கனடா அமெரிக்கா உள்ளிட்ட வட அமெரிக்கா நாடுகளில் நீண்டகாலமாய் தனி மனிதர்களைப் பாதிக்கின்றது என்பதை ரோய் எளிதாய்க் கடந்து போகவும் செய்கின்றார். ரோய் கனடா வந்தபோது உணர்ந்த இனவாதச் சொற்களைத்தான், அவரின் -இந்த நாட்டில் பிறந்த சொந்தப் பிள்ளையும் இப்போது கேட்கின்றது என்றால்- இந்த நாடு ஏனின்னும் இவ்வாறான விடயங்களில் முன்னேறாமல் இருக்கின்றது என்றும் அவர் யோசிக்க வேண்டும் அல்லவா. ஆடைகளில் படும் அழுக்கைப் போல எளிதாக இவற்றைத் தட்டிக் கழித்து முன்னேறி விடவேண்டும் என்று ரோய் சொல்வது அநியாயமல்லவா?

 

இப்படிப் பார்ப்போம், நாளை இலங்கையில் பெரும்பான்மைச் சிங்களவர்கள்,  சிறுபான்மையினச் சமூகங்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தமிழர்கள் உள்ளிட்டவர்களோடு நல்லிணக்கம் செய்து நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில் சிங்களப் பெரும்பான்மை அரசு, தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குச் செய்த (ரோய் விபரித்தவை உட்பட) கடந்தகால வரலாற்றைச் சொல்லாமல், நினைவூட்டாமல் இலங்கை ஒரு சிறந்த நல்லிணக்க நாடு என்று நாளை சொன்னால் வரலாறு நம்மை மன்னிக்காது அல்லவா? அவ்வாறே கனடாவை அதன் சிறப்புக்களுக்காகப் போற்றும்போது அதற்குள் இருக்கும் கீழ்மைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

 

அண்மையில் கூட ஆபிரிக்காவிலிருந்து வந்த அகதிகளை உரிய வசதிகள் இல்லாது தெருக்களில் வாழவிட்டு நாமும், இந்த அரசும் அவர்களுக்கு அவலத்தைச் செய்ததற்கு நாம் வெட்கித் தலைகுனிய வேண்டுமல்லவா? ஆகவேதான் கனடா ஒரு சொர்க்கபுரி என மட்டும் கட்டமைப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் எனச் சொல்கின்றேன். இந்த நூலைக்கூட ரோய் தனது அனுபவங்களோடு நிறுத்தியிருந்தால் நாம் இதையெல்லாம் பேசியிருக்க வேண்டியிருக்காது. கனடா ஒரு இனவாத நாடா, அப்படியா, இப்படியா என்று சில அத்தியாயங்களை  பெரும்பான்மைக் கனடியர்களை உச்சிகுளிரச் செய்ய எழுதியிருப்பதால்தான் நாம் அவர் எழுதிய 'கனடா அனுபவங்களை' இடைமறிக்க வேண்டியிருக்கின்றது.

 

ஓரிடத்தில் நான் மிகப்பெரும் விடுதலையை உணர்கின்றேன். அதைக் கனடா தந்திருக்கின்றது (I'm a free man) என்கின்றார். பிறகு இன்னொரு இடத்தில் கனடாவில் எப்போதும் நாம் போரிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றார். போரிடுவதன் மூலமே நாம் வாழ்வின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் எனவும் சொல்கின்றார். என் கேள்வி என்னவென்றால் ஒருவர் விடுதலை அடைந்தபின் எதற்காகப் போராட வேண்டும். ஏதோ ஒரு தளை/விலங்கு இருப்பதால்தானே தொடர்ந்து நாம் போராட வேண்டியிருக்கும்.  அப்படியெனில் பிறகு எப்படி ஒருவர் தன்னை விடுதலையானவராக உணர்கின்றேன் என்று எழுத முடியும்.

 

ரோயே, அவரது முப்பது வயதுக்குள் மியூட்சுவல் பண்ட்களில் முதலிட்டு மில்லியனர் ஆகிவிட்டேன் என்கின்றார். அதற்குப் பிறகு சில வருடங்களில் உலகப்பொருளாதார வீழ்ச்சியில் தனது வங்கிக் கணக்கு மைனஸுக்குப் போய்விட்டது என்றும் குறிப்பிடுகின்றார்.  அதனால் ஏற்பட்ட மனநெருக்கடிகளையும், வாழ்வாதாரச் சிக்கல்களையும் கூட விரிவாக விபரிக்கின்றார். மேலும் அவர் ஏணிப்படிகளில் ஒவ்வொரு உயரங்களை மேலே மேலே அடையும்போதும் பல்வேறு போராட்டங்களாலேயே அந்நிலைகளை அடைகின்றார். ஒருவகையில் பார்த்தால் எப்போதும் போராடிக் கொண்டே  - பொருளாதாரம் உட்பட- பல விடயங்களில் ரோய்  இருக்கின்றார். அப்படியெனில் இவர் கனடா தனக்குத் தந்த விடுதலை என்று சொல்வதன் அர்த்தம் என்ன என்ற கேள்விகள் எமக்குள் எழுகின்றன.

 

இடைக்கிடையே புத்தர் இந்த வாழ்க்கையில் suffering தவிர்க்க முடியாது என்று சொன்னவர் என்றும் வாசிப்பவர்க்கு நினைவூட்டுகின்றார்.  புத்தர் sufferingஐ ரோய் சொல்லும் பொருளாதாரத்தை வைத்து மட்டும் சுருக்கிச் சொன்னவரில்லை. அவர் சொன்ன suffering, நாம் வயதாவது, நோயுறுவது, மரணமுறுவது என்ற விரிந்த தளத்தில் ஆகும். அந்த sufferingஐ நாம் ஒருபோதும் தவிர்க்க முடியாது, ஆனால் painஐ குறைக்க முடியும் என்றுதான் புத்தர் அவரடைந்த ஞானத்தின் மூலம் நமக்குப் போதிக்க விழைந்தார். அதில் ஒன்று பொருளாதாரம்/பணம் மட்டுமே வேண்டும் என்று  கடைசிக்காலம் வரை ஓடியோடி நம் வாழ்வைத் தொலைக்காதிருப்பதும் கூட. 

 

ரோய் ரத்தினவேல் என்ற பெயரோடு இந்த நூலைக் கேள்விப்பட்டபோது இந்தப் பெயரை எங்கேயோ முன்பு கேள்விப்பட்டிருக்கின்றேனோ என்ற யோசனை தோன்றியது. பின்னர் கொஞ்சம் தேடி/தோண்டிப் பார்த்ததில் இவர் இங்கிருக்கும் பலமான ஒரு நிறுவனமான கனடிய தமிழ் காங்கிரஸின் உபதலைவராக இருந்திருக்கின்றார் என்பது புலப்பட்டது. அத்தோடு ஈழ இறுதியுத்தகாலத்தில் இனத்துவேசத்தோடு நமது போராட்டத்தைப் பற்றி எழுதிய நாஷ்னல் போஸ்டில் அக்கருத்துக்களை மறுத்து opinions columns எழுதவும் செய்திருக்கின்றார் என்பதையும் அறிய முடிந்தது.

 

கனடிய தமிழ் காங்கிரஸில் இருந்து, சில பொது அரங்குகளில் இலங்கை அரசுக்கு எதிராக இறுதி ஈழ யுத்தகாலத்தில் பேசியதால், இலங்கை அரசால் இலங்கைக்குச் செல்ல தடைசெய்யப்பட்ட சிலரில் இவரின் பெயரும் இருந்தது (இப்போதும் இருக்கின்றதா தெரியவில்லை). ரோயுக்கு உண்மையான பெயர் வேறொன்று. அதை இணையத்தில் தேடினால் கிடைக்கும். அவரே அந்தப் பெயரை இங்கே பதிவு செய்துமிருக்கின்றார் என்பது வேறுவிடயம்.  அவ்வாறு தன்னை இலங்கையரசு தடை செய்தது தனக்குப் பெருமை என்கின்றார். இலங்கை அரசுக்கும் நாட்டுப் பொருளாதாரத்தை உயர்த்துவதை விட யாரை நாட்டுக்குள் விடக்கூடாது என்பதுதான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இப்போது கனடிய அமைச்சராகி விட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கும் இலங்கை செல்ல பயணத்தடையை அந்த அரசு நீண்டகாலமாக விதித்து வைத்திருக்கின்றது. வேறொன்றுமில்லை ஹரி தொடர்ச்சியாக இலங்கையரசு செய்த தமிழனப் படுகொலைகளைப் பற்றி பல்வேறு தளங்களில் பேசிக்கொண்டிருக்கின்றார் என்பது மட்டுமே இதற்குரிய காரணம்.

 

ரோயின் இந்தப் புத்தகத்தை யாருக்காவது வாசிக்கப் பரிந்துரைப்பேனா என்றால் நிச்சயம் செய்வேன் என்றே சொல்வேன். இதில் சொல்லப்பட்ட அனுபவங்கள் முக்கியமானவை. ஆனால் ஒரு தனி மனிதரின் அனுபவம் என்று மட்டுமே நினைத்து வாசியுங்கள் என்றே அவர்களுக்கு ஞாபகமூட்டுவேன். முக்கியமான இங்கே பிறந்த அடுத்த தலைமுறைப் பிள்ளைகளை இதில் இலங்கையில் நடந்த போர் உள்ளிட்ட ஒருவர் தொடக்க காலங்களில் கனடாவில் பெற்ற பல்வகைப்பட்ட அனுபவங்களுக்காய் வாசிக்கப் பரிந்துரைப்பேன்..

 

கிட்டத்தட்ட என் நெருங்கிய உறவுகளின் ஒருவரின் வயதையொத்தவர் ரோய். ரோய் கனடாக்கு வந்து 'உயர்ந்தது' ஒருவகை என்றால், என் நெருங்கிய உறவுகளைப் போன்றவர்கள் உக்கிரேன் போன்ற கிழக்கு ஐரோப்பாப் பனிநாடுகளில் சிக்கி, கனடாவின் வடபகுதியில்  ஆவணங்களின்றி அகதியாய்  வந்திறங்கி,  உரிய சாப்பாடில்லாது  இரண்டு நாட்களாய் ரெயினில் பயணித்து குளிர்காலத்தில் ரொறொண்டோவில் வந்திறங்கியது என்று அவர்களுக்கும் சொல்ல வேறு விதமான கதைகள் இருக்கும். அவ்வாறு ஒவ்வொருவரின் கனடா வந்த கதையும், கனடாவில் அவர்கள் தத்தளித்து  எழுந்த கதைகளும்,  இன்னமும் தத்தளித்துக் கொண்டிருக்கும் கதைகளுமென பல்லாயிரம் இருக்கும்.

 

ஒருவகையில் ரோய் இந்த நூலின் பிற்பகுதியில் நமக்குத் திணிக்கச் செய்வது, இந்தியா/இலங்கையில் தலித்துகளிடமும், அமெரிக்கா/கனடாவில் கறுப்பர்களிடமும், உங்களுக்குத்தானே இப்போது படித்து, கடினமாக வேலை செய்து முன்னேற ஒரு தடையும் இல்லையே, பிறகேன் இந்த நாட்டை நீங்கள் எப்போதும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்பதைப் போன்ற அபத்த வகையைச் சேர்ந்தது.

 

ஒருவரின் வெற்றிக்கதை (அல்லது அவ்வாறாக நம்புகின்ற) எல்லோரினதும் கதையாகாது; எதையும் பொதுமைப்படுத்தல் ஆபத்தானதாகவே முடிந்துவிடும். அந்த வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள மறுப்பது என்பது பிறரின் குரல்களை நசுக்குவதைப் போன்றதாகும். ஒருவகையில் இதைத்தான் நமக்கு இந்த முதலீட்டிய நாடுகள்  'அமெரிக்கக் கனவு' என்று சொல்லி சொல்லி நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்கின்றது. அந்தக் குரலை ரோயின் பிற்கால கனடா அனுபவங்களில் அடிக்கடி கேட்பது சலிப்பூட்டுகின்றது. அதைத் தவிர்த்திருந்தால் இந்த நூல் இன்னும் சிறப்பானதாக ஆகியிருக்கும். ஆனாலும் அதன் முதற்பகுதி போர்க்கால நினைவுகளாலும், ரோயின் தனிப்பட்ட  கனடா அனுபவங்களினாலும் இது ஒரு முக்கியமான நூல் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.

 

*******************


(Prisoner # 1056: How I survived Was and Found Peace by Roy Ratnavel)


நன்றி: 'அம்ருதா' & 'கனலி'