கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஈழப்போரின் இறுதிநாட்கள்

Monday, September 30, 2019


90களில் இயக்கத்தில் இணைந்துஅடுத்த சில ஆண்டுகளில் போராட்டத்தின் நிமித்தம் ஒரு கையையும்கண்ணையும் இழந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் போராளியாக இருந்த ஒருவர் ஈழப்போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நேரடியாகச் சாட்சியாக இருந்து எழுதிய ஒரு வரலாற்றுப் பதிவு இது.  ஈழத்தில் இறுதி யுத்தம் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்து பெரும் கொடூரத்துடன் நடந்து முடிந்திருக்கின்றதுபோர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது பெரும் அழிவுகளைச் சந்தித்தவர்கள்போர் முடிந்தபின்னும் இன்னும் பெரும் உளவியல் நெருக்கடிகளை இராணுவம்/தடுப்புமுகாம் வாழ்க்கை என அனுபவிக்க வேண்டியிருந்தது.

போராளியாக இருந்த வெற்றிச்செல்விக்கு புலிகளின் தலைவர் இறந்துவிட்டார் என்ற களச்செய்தியைக் கேட்டபின் அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான போராளிகளைப் போல அடுத்து என்ன முடிவு செய்வது என்பது பெரும் சிக்கலாகின்றது. இறுதியில் அவரின் உயிர் போவது இரண்டு இடங்களில் தடுத்து நிறுத்தப்படுகின்றது. மக்களோடு சேர்ந்து சரணடையாமல் சயனைட் குடிப்பதை ஒரு இயக்கத் தம்பி தடுத்து நிறுத்துகின்றார். 'இனி எல்லாம் முடிந்தபின் இறப்பது என்பது வீணானது. தயவு செய்து சயனைட் அடித்துவிடாதீர்கள். இப்படித்தான் காயங்களோடு பங்கருக்குள் நின்றவர்களுக்கு முதல்நாளிரவு சொன்னேன், அடுத்தநாள் காலையில் போய்ப்பார்த்தால் எல்லோரும் சயனைட் அடித்துக் கிடக்கின்றார்கள். நீங்களும் அதைச் செய்துவிடாதீர்கள்' என இவர்கள் பதுங்குகுழிக்குள் கிடக்க, தன்னைத் தரையோடு தரையாக சாய்த்துக்கொண்டு விழும் எறிகணைக்களுக்கிடையில் அந்தத் தம்பி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றான் . வாழ்வா சாவா என்று முடிவுசெய்யும் நாணயச்சுழற்சியில் வாழ்வு வெல்கின்றது.
இன்னொருமுறை இராணுவத்தை முதன்முதலாகச் சந்திக்கையில் சயனைட்டை மீண்டும் வாயில் வைக்கமுயல்கையில் வெற்றிச்செல்வியோடு இருக்கும் அவரின் பால்யகாலத்தோழியும், அந்தத்தோழியின் தாயாரும் தடுத்து சயனைட் குப்பியைப் பிடுங்கி நிலத்தில் புதைக்கின்றனர். இப்படியான ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெற்றிச்செல்வியை நாம் இழந்திருந்தால் ஒரு மாபெரும் சாட்சியத்தை இழந்திருப்போம் என்பதைவிட, ஒரு அருமையான போராளியை இழந்திருப்போம். மேலும் தன் கதைகள் எதையும் எமக்குச் சொல்லாமலே அவர் நம் நினைவுகளில் என்றென்றைக்குமாய் இல்லாமற்போயுமிருப்பார்.

ன்று ஈழப்போர் முடிந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் முடிந்தபின், போர் பற்றிய நிறையச் சாட்சியங்கள். புனைவுகள் என வரத்தொடங்கிவிட்டன. ஆனால் அநேகமானவை தாம் சார்ந்த நம்பிக்கைகளுக்குள் மட்டும் சுருண்டுவிடுவதால் அங்கே பலவேளைகளில் உண்மைகள் காணாமல் எங்கையோ தொலைந்துவிடுகின்றன. வெற்றிச்செல்வி எவ்வாறு போராளிகளின் ஓர்மத்தை பெரும்போருக்குள் விபரிக்கின்றாரோ அவ்வாறே கட்டாயமாகப் போரில் சேர்க்கப்பட்டவர்களின் உண்மை நிலைமைகளையும், அந்தப்பொழுதுகளில் மக்களின் மனோநிலை எப்படி இருந்ததென்பதையும் வெளிப்படையாகப் பேசுகின்றார். அதேவேளை இயக்கம் மீது ஆற்றாமையோடும், கோபத்தோடும் இருந்த  பெரும்பகுதி மக்கள் போராளிகளை ஒருபோதும் கைவிடத்தயாராகவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். கட்டாயமாகச் சேர்க்கப்பட்டபோது வாரித்தூற்றிய மக்களே, பிறகு போராளியாகிப் பசியோடு அவர்கள் திரிந்தபோது அவர்களை பசி தீர்த்து அரவணைத்தார்கள் என்பதையும் பதிவுசெய்கின்றார்.
இந்த இறுதியுத்தம் நாம் நினைத்தே பார்க்கமுடியாக் கொடூரம் நிறைந்ததாக இருந்திருக்கின்றது. எந்தப்பக்கத்திலும் எவ்வித நியாய/அநியாயங்களுக்கு இடம் இருக்கவில்லை. எப்படி இருந்த மக்கள் இப்படியாயிற்றனரே என எல்லா மனிதவிழுமியங்களும் கரைந்துபோய்விட்டிருந்த நாட்கள் அவை. போரின்போது நிகழும் அழிவுகளைப் போல போரின்பின் வந்த வெறுமையும் விரக்தியும் அவ்வளவு எளிதில் போகமுடியாதவை. அது தன் வாழும் காலம் முழுதும் தன்னோடு வரப்போகின்றது என்றே வெற்றிச்செல்வியும் குறிப்பிடுகின்றார்.
பத்தாண்டுகளானபின்னும், போரில் வெற்றிபெற்றபோதும் இன்றும் சிங்களப்பேரினவாதம் எதையும் விட்டுக்கொடுக்கவோ, பகிர்ந்துகொள்ளவோ தயாராக இல்லை. போராளிகளும் ஆயுதங்களும் இல்லாமலும், தமிழ் அரசியல் தலைமைகள் என்போரும் மீளாத்துயிலில் இருக்கும்போதும் ஏனின்றும் தமிழர் நிலங்களில் பாரியளவிலான இராணுவமுகாங்களும், கண்காணிப்புக்களும், புத்தர் சிலையுடனான குடியேற்றங்களும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி யோசிக்கவேண்டியிருக்கின்றது. இயல்பான வாழ்க்கையும்,  தன்மொழி, இனம் சார்ந்து தன்னிருப்பு அச்சுறுத்தப்படாத போதும் ஒரு சமூகம் ஒருபோதும் போராடப்போவதில்லை என்பது பேரினவாத அரசுக்குத் தெரியாமல் இருக்கப்போவதில்லை. சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து தொந்தரவுபடுத்துவதன் மூலமே தமது அரசியல் இருப்பை வலுவாக்கலாம் என்ற பேரினவாத சிந்தனையையை ஒழிக்காதவரை எந்தக்கட்சியோ அல்லது எவரோ அரசுபீடமேறினாலும் நாட்டில் அவ்வளவு எளிதில் சுபீட்சம் வந்துவிடப்போவதில்லை.

ழப்போரின் இறுதி நாட்கள் என்ற இந்நூல் 80களைப் போல அரசியல் சூழ்நிலை மீண்டும் வந்தாலும்/இருந்தாலும் நம்மை உணர்ச்சி அரசியலுக்குள் போகவிடாது நமக்கு நிகழ்ந்த பேரழிவைத் திரும்பிப் பார்க்கச் சொல்கின்றது. நாம் இறுதியுத்தத்தில் செய்த நம் பக்கத்து தவறுகளிலிருந்து வரலாற்றை இன்னும் பின்னோக்கி (இந்நூலில் அது இல்லாதபோதும்) சென்று நமது எல்லோருடைய தவறுகளையும் மீள்வாசிப்புச் செய்யச் சொல்கின்றது. கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையிலும் அந்நியநாடுகளின் தலையீட்டுக்கு இரையாகி ஆயுதங்களை மீண்டும் அவசரப்பட்டுத் தூக்கவேண்டாமென நம் அந்தரங்கத்தோடு உரையாடச் செய்கின்றது.
ஓர் உண்மையான போராளி தான் போராட வந்ததன் நோக்கத்தை எந்தக் காலகட்டத்திலும் மறந்துவிடுவதில்லை. அந்த ஓர்மம், அந்தப் போராட்டம் தோற்றபின்னால்கூட எங்கோ ஓரிடத்தில் ஒளிர்ந்துகொண்டேதானிருக்கும். அதே சமயம் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளவும் எதிரிகளென நினைத்துப் போராடியவர்களிடம்  அவ்வப்போது வெளிப்படும்  மனிதாபிமானத்தையும் மனந்திறந்துபாராட்டவே செய்யும் (வெற்றிச்செல்வியை பேரூந்தில் ஏற்றி தடுப்புமுகாமிற்கு ஏற்றிச்செல்லும் இளவயது இராணுவத்தினனின் மனிதாபிமானம் எவ்வித மறைத்தலுமின்றி இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது).
ஈழப்போரில் இறுதியில் நடந்தவற்றை வாசிக்க -முக்கியமாய் எதையும் அறியவிரும்பாது தமக்கான 'உண்மை'களுடன் போராட்டத்தை விளங்கிக்கொள்ள முயல்வோர்- இந்நூலைத் தேடிக் கட்டாயம் வாசிக்கவேண்டும். இதை மட்டுமில்லை அப்பு எழுதிய 'வன்னி யுத்தம்' மற்றும் வெற்றிச்செல்வி இந்நூலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாம் வாழ்வைப் பற்றி எழுதிய 'ஆறிப்போன வலிகளின் காயம்' போன்றவற்றையும் வாசிக்கவேண்டும். ஆகக்குறைந்தது இவற்றை வாசித்தாலாவது உணர்ச்சிவசப்படாமல், போலிப்பெருமிதம் இல்லாமல் எங்கே அமைதியாக அரசியல் சார்ந்து இருக்கவேண்டுமென்பதையாவது நாம் கற்றுக்கொள்ளலாம்.
----------------------------------------------------
(நன்றி: 'அம்ருதா' ‍ ஆவணி, 2019)

கட்டுமரம் (Catamaran)

Saturday, September 21, 2019


1.

ஒருவரின் தோளினூடாக தொடக்கக்காட்சியில் கமரா எழுகின்றது. மணற்திட்டுக்களிலிருந்து சில மனிதர்கள் அவரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றார்கள். கடற்கரையினூடாக ஊருக்கு வருகின்ற மனிதர்களைப் போல, இறுதிக்காட்சியில் சில‌மனிதர்கள் அந்த ஊரை விட்டுப் பல்வேறு காரணங்களுக்காக நீங்கிப்போகின்றார்கள். ஒரு கடற்கரைக் கிராமத்தை, அந்த மனிதர்களின் நிறையும் குறையுமான பக்கங்களை, மரபுகளை விட்டுக்கொடுக்காது திமிறும் ஒரு சமூகத்தை, மாற்றங்களை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு தமக்கான‌பாடுகளைத் தாங்குபவர்களை எனப் பலவற்றை 'கட்டுமரம்' திரைப்படத்தில் நாங்கள் காணலாம்.

ஆவணப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கும் சொர்ணவேலின் முதல் முழுநீளத்திரைப்படம் (feature film) இது என்று உணராவண்ணம் அவ்வளவு நேர்த்தியுடன் இத்திரைப்படம் நெய்யப்பட்டிருக்கின்றது. நெய்தலையும், நெய்தல் சார்ந்த மனிதர்களையும் இத்தனை நெருக்கமாகவும், அணுக்கமாகவும் அண்மையில் எந்தத் தமிழ்த் திரைப்படத்திலும் பார்க்கவில்லை என்று துணிந்து சொல்லலாம். இவையெல்லாவற்றையும் விட மிஷ்கினிடம் இத்தகைய ஆற்றல் நடிப்பில் ஒளிந்திருந்திருக்கின்றதா என அவர் நம்மை வியக்கவைக்கின்றார். இத்திரைப்படத்தில் பல தியேட்டர் கலைஞர்கள் நடித்திருந்தாலும், மிஷ்கினைத்தவிர வேறு எவரும் திரையில் அவ்வளவாகத் தோன்றியதில்லை. முதன்முதலாகத் திரையில் தோன்றும் எவ்வகைப் பதற்றமும் இல்லாது எல்லோரும் தத்தமது பாத்திரங்களுக்கு நியாயங்களைச் செய்திருக்கின்றனர்.

கதைக்களம் சூனாமியின் பின்னரான காலத்தில் நிகழ்வது. தனது சகோதரியையும், சகோதரரையும் சுனாமிக்குப் பலிகொடுத்த சகோதரர் ஒருவர் பெற்றோரில்லாது தவிக்கும் மருமகளுக்கும் மருமகனுக்குமாக‌தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்கின்றார். திருமண வயதில் இருக்கும் தனது அக்கா மகளுக்கு ஒரு திருமணத்தைச் செய்துவைக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தத்திலிருக்கும் மாமன்(மிஷ்கின்) பல்வேறு பொருத்தங்களைப் பார்க்கின்றார். ஆனால் மருமகளோ ஒவ்வொரு சம்பந்தங்களையும் நிராகரித்துக்கொண்டே இருக்கின்றார். அதற்கு அவருக்கு வேறொரு காரணம் இருக்கின்றது.

மாமன்‍-மருமகள்-‍திருமணம் என்கின்ற கோணங்களே இத்திரைப்படத்தில் முக்கிய பேசுபொருள் என்றாலும், சூனாமியிற்குப் பின் கைவிடப்பட்டிருக்கும் ஒரு கிராமத்தின் துயரும், குலதெய்வங்களின் மீது மரபு சார்ந்திருக்கும் ஜதீகங்களும், வறுமையிலும் நிறைவாக வாழ விரும்பும் எத்தனங்களுமென அழகியல் தன்மையிலும் இத்திரைப்படம் தன்னை விட்டுக்கொடுக்காது இருக்கின்றது. அதேவேளை எங்கிருப்பினும் மனிதர்கள் தமக்கான பலவீனங்களுடனும் இருப்பார்களென திருமணமான ஒருவர் அதைமீறி வேறு உறவில் இருப்பதும், அவ்வாறு ஏமாற்றப்படுபவர் தமது நண்பராக இருப்பினும்,  இன்னுமொரு உறவிலிருக்கும் அந்தப் பெண்ணையும்  காட்டிக்கொடுக்காது அதை ஒருவகையில் ஏற்றுக்கொள்வதுமென, அளவுக்கு மீறி காட்சிப்படுத்தாமல் இவற்றையெல்லாம் தொட்டுச் சென்றிருப்பதும் அழகு.

2.

இன்று கலை இலக்கியங்களில் அழகிய‌ல் மட்டுமே முன்னிறுத்தப்படும் சூழலில், இத்திரைப்படம் நுண்ணழகியலை மட்டுமில்லாது, நுண்ணரசியலையும் பேசுவது கவனிக்கத்தக்கது. சூனாமி அழிவின்பின் கடவுளர் மீது நம்பிக்கை இழந்தவர்கள் மற்றமதங்களுக்கு மாறுவதும்/மாற்றப்படுவதும் இதில் காட்டப்படுகின்றது. அதேபோல மருமகளுக்கு மாமன்காரன், தனது நண்பராக இருக்கும் ஒரு முஸ்லிமைத் திருமணம் செய்துகொடுக்க விரும்பும்போது, ஊரே வந்து இன்னொரு ஊர்க்காரரை/மதக்காரை திருமணம் செய்யக்கூடாது என்று எதிர்க்கின்றது. 

இன்னொருகாட்சியில் ஒருவர் மீன்பிடி சம்பந்தமான அரசாங்கத் தொழிலைச் செய்ய அந்த ஊருக்கு வரும்போது, அவருக்கு மருமகளைத் திருமணம் செய்துகொடுப்போமாவென‌நினைக்கின்றபோது மாமன்காரன் அவர் தமது சொந்தச் சாதியா என மறைமுகமாகக் கேட்பதும் காட்டப்படுகின்றது. இவ்வாறு நமது சமூகத்தில் இருக்கும் எல்லாவகையான நுண்ணரசியல்களும் படத்தின் முதன்மைக்கரு வேறாக இருந்தபோதும், அதனூடு இவையும் பேசப்படுகின்றது.

தனக்கு ஏற்கனவே இருந்த துணை பற்றிக் குறிப்பிடும்போது அதை 'லெஸ்பியன் பார்ட்னர்' என்று சொல்லாது ஒரு பார்டனர் என்று மட்டும் சொல்லியிருக்கலாம். மற்றது நிறையப்படங்களில் பார்த்த காட்சியான புகைப்படக்கலையை தனது துணைக்குச் சொல்லித்தரும் காட்சிகள் போன்ற ஒரு சில குறைகள் இருந்தாலும் இவை எதுவும் இத்திரைப்படத்தின் முழுமையில் எவ்வகையான இடறான அனுபவத்தையும் தருவதில்லை.

தந்தைவழிச் சமூகத்திலிருந்தும், சாதியச் சூழலிருந்தும் தமிழ் மனம் இன்னும் முற்றுமுழுதாக விடுபடாவிட்டாலும், அது தன்னளவில் இவற்றைத் தாண்ட எத்தனிக்கின்ற கீற்றுக்களையும், சில எதிர்பாராத சம்பவங்களின்போது மனிதர்கள் தமது ஆதி மானுடத்தன்மையான கருணையை மீளக்கண்டுபிடிக்கின்றார்கள் என்பதையும் இத்திரைப்படம் முடிகின்றபோது நாம் காண்கின்றோம்.

தற்பாலினர்/திருநங்கைகள்/இருபாலினர் போன்ற பாலினத்தவர்கள் அல்லது  ஒருவகையான fluid  தன்மையுடையவர்களைப் பற்றி அதற்கு வெளியில் இருப்பவர்கள் உரையாடுவதிலோ/கலைப்படைப்புக்களாக்குவதிலோ நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன.  மிகுந்த அவதானத்துடனேயே நம் சமூகத்தில் விளிம்புநிலையாக்கப்பட்ட இவர்களைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது நெறியாள்கை செய்த சொர்ணவேல்  மிகுந்த விழிப்புணர்வுடன் இந்த விடயத்தை அணுகியிருக்கின்றார் என்றே சொல்லத்தோன்றுகின்றது.

காதல் என்பது நம் எல்லோருக்கும் வருகின்ற ஓர் உணர்வேயாகும். பால்/பாலினம் போன்ற வித்தியாசங்களைத் தவிர அந்த உணர்ச்சிகளும், தேடலும், தவிப்பும் தற்பாலினரிடமும் அவ்வளவு வேறுபாடுகள்  இல்லாதிருப்பதை  மிகையுணச்சியற்று 'கட்டுமரம்' காட்சிப்படுத்துகின்றது.  நமது கிராமங்களில் எவ்வாறு இவ்வாறான விடயங்களை எதிர்கொள்வார்களென்பதையும், ஊர் மக்களை துவிதமுனையில் எதிராளிகளைப் போல நிறுத்தாது, இந்த தற்பால் காதலைப் போல, அந்த மனிதர்களையும் அவர்களின் இயல்பில் வைத்து புரிந்துகொள்ள முயல்கின்ற ஒரு திரைப்படம் என்பதால் 'கட்டுமரம்' நம்மை அவ்வளவு  ஈர்க்கின்றது.

...................................................
(நன்றி: 'கலைமுகம் - 68')