கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தெஹிவளைக் கடற்கரை

Thursday, August 29, 2019


பாடசாலைக்கால தோழியொருவர் மதிய உணவிற்காய் அவரின் வீட்டுக்கு அழைத்தபோது இரெயின் தண்டவாளம் தாண்டி தெஹிவளைக் கடற்கரையைப் பார்க்கப் போயிருந்தேன். என் பதின்ம வயதுகளில் காதலர்கள் நிரம்பி வழியும் தாழைகளும் இன்னபிற கடற்கரைத் தாவரங்களும் நிறைந்த பகுதியது. தங்களுக்கான உலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் அவர்களைச் சிறு கற்களால் எறிந்து நிஷ்டை கலைத்த அனுபவங்களை 'பேயாய் உழலும் சிறுமனதில்' தொகுத்திருக்கின்றேன்.

தோழியுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது இந்த இடத்திற்கு குடிபெயர்ந்து 2 வருடங்கள் ஆனபோதும், பத்து வீடுகள் தள்ளியிருக்கும் கடற்கரைக்குப் போனதில்லை என்றார். சரி என்னைச் சந்தித்ததோடு, புது இடத்தைப் பார்த்தமாதிரியும் இருக்கட்டும் என அவரை அழைத்து, மீண்டும் கடற்கரை உலா போந்தபோது மாலை 4 என்றபோதும் வெயில் சுட்டெரிந்துகொண்டிருந்தது. முந்தைய காலம் போல இல்லாது கடற்கரை அழகாக்கப்பட்டு மாலை நேரத்திற்கான புதிய உணவகங்களும் வந்திருந்தன.

பின்னர் ஒருமுறை நண்பர் ஒருவருடன் இரவில் அதே கடற்கரைக்குப் போயிருந்தேன். ஒரே பாடசாலை/ஒரு வகுப்புக்கூட என்ற சிறுவயதுப் பரிட்சயம் சற்று மங்கலாய் இருந்தாலும், இப்போது என் எழுத்தின் வழி அவருக்கு ஏதோ ஒருவகையில் நான் நெருக்கமாக, சந்திக்க ஆவல் வந்திருந்தது. நானோ அவரின் தனித்துவமான புகைப்படங்களைப் பின் தொடர்பவனாக பின்னர் ஆகியிருக்கின்றேன்.

கடற்கரைக் காற்று, மெல்லியதாய்ப் பொழிந்த மழை, Live music, பொங்கி வழிந்த மது, மகிழ்வைச் சிந்தியபடி இருந்த பெண்கள், கரையில் தீப்பந்தங்களிலும், வாயிலும் நெருப்பை உருவாக்கி நம்மைப் பதறவும் வியக்கவும் வைத்த ஒரு கலைஞன் என அந்த இரவு விரிந்தபடியே இருந்தது. நண்பர் தாஜ்மகால்/ஆலப்புழா/வியட்நாம் எனவும், மச்சுபிச்சு/மெக்ஸிக்கோ/கியூபா என நானும் அனுபவங்களில் நாடு நாடாகக் கடந்தபடி இருந்தோம். அது பிறகு வீடு திரும்பும்போது ஒவ்வொரு தெருவிலும் காரை நிறுத்தி, கஸல்/சூஃபி/கவாலி இசையென பிடித்த பாடகர்களின் பாடல்களைக் கேட்கும்படியாக பித்த நிலைக்குக் கொண்டுபோயிருந்து. இறுதியில் வீட்டின் முன் நின்றும் காசியிற்கு வேட்டிகட்டி எல்லாம் தொலைத்தவர்களாக அலையவேண்டும் என்றும், எல்லேயிற்கு தன்னைப்போல இரெயின் எடுத்துப்போய் கரையவேண்டுமெனவும் கிறங்கிப்பேச நள்ளிரவுதாண்டி 2 மணி ஆகியிருந்தது.

அழகிய தருணங்கள் எதிர்பார்க்காது/திட்டமிடாது நிகழும்போது அவை இன்னும் வசீகரமான பொழுதுகளாக மாறிவிடுகின்றன. பிறகு அவ்வளவு நேசத்துடன் உன்னோடு பேச. நுரான் சகோதரிகள் சூஃபியை இசைக்கத் தொடங்கினர் மனவெளி எங்கும்.


(May, 2017)

காலம்-53வது இதழில் வந்த மூன்று கதைகள் குறித்து..

Tuesday, August 27, 2019


காலம் புதியஇதழ் (53) கையில் கிடைத்த அன்றிரவே அதில் வந்த கதைள் அனைத்தையும் வாசித்து முடித்திருந்தேன். செல்வத்தாருடன் கதைக்கும்போது அவன் கதை அனுப்பியிருக்கின்றான், இவன் கவிதை அனுப்பியிருக்கின்றான் என்று அவ்வப்போது என்னுடன் தகவல்களைப் பகிர்ந்துகொண்டிருப்பார். ஆனால் பெண்களின் ஆக்கங்கள் எதுவும் வருதா என்ற விடயத்தை மட்டும் மறைத்துவிடுவார். இந்த இதழ் கிடைத்தவுடன் யாராவது பெண்கள் கதை எழுதியிருக்கின்றார்களா என ஆவலுடன் தேடிப் பார்த்தேன். அப்படியென்றால்தானே நானும் ஒரு பொய்ப்பெயருடன் அதைச் சிலாகித்து ஜெயமோகனின் தளத்துக்கு அனுப்ப முடியும்.

இந்தக் காலம் இதழில் ஷோபாசக்தி, அகரமுதல்வன், ஏஜே டானியல் கதைகளை எழுதியிருக்கின்றார். மூன்று பேருமே அளவுக்கு அதிகமாகப் பெண்களைப் பற்றி விசனப்பட்டிருக்கின்றார்கள். ஷோபாவும், ஏஜே டானியலும் பாலியல் தொழிலாளர்கள் பற்றியும், அகரமுதல்வன் திருமணமான பெண்ணுக்கு வரும் உறவு பற்றியும் கதை சொல்லியிருக்கின்றார்கள்.

ஷோபா இதுவரை எழுதிய கதைகளை வைத்துப் பார்க்கையில் இது ஒரு சாதாரண கதை.  கதையில் தொடக்கத்தில் வரும் 'மஞ்சள் அழகி'யை எங்கோ இந்தக் கதையைச் சொல்லும் பாத்திரம் சந்திக்கப் போகின்றது என்பது எங்களுக்கும் தொடக்கத்தில் விளங்கிவிடுகின்றது. அதற்காய் இவ்வளவு நீட்டி முழங்கிக் கதையைக் கொண்டு செல்லவேண்டுமா என்ற சலிப்பே கதையை முடிக்கும்போது வந்தது. இடைக்கிடையில் கதையின் 'நம்பகத்தன்மைக்கு' க்ரியா பதிப்பகம், பிரபஞ்சன், பிரபஞ்சனின் 'ஓரு ஊரில் இரு மனிதர்' தொகுப்பு பற்றிக் கொஞ்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஏஜே டானியல் இப்போதுதான் கதைகளை எழுதத் தொடங்கும் ஒருவர் என்பதால் அவருக்கு கொஞ்சம் இரக்கம் உண்டு.  இந்தவகையான விஸா இல்லாது பாரிஸில் வாழும் ஒருவனின் துயர கதைகள்ஏற்கனவே பலரால் சொல்லப்பட்டிருக்கின்றது என்பதால் அகவயமான தனிப்பட்ட அனுபவம் சார்ந்தஉணர்வால் வாசகரைத் தொடவதே இனியான கதைகளில் முக்கியமானது. அதைச் சொல்கின்ற ஒரு மொழி அவருக்குக் கதையின் அரைவாசிவரை வாய்த்துமிருக்கிறது. ரெயினின் சந்திக்கும் பெண்ணின் கருணையோடோ அல்லது அவரைப் போய் அவரின் வீட்டில் சந்திக்கின்றவரையோடோ கதையை முடித்திருக்கலாம். ஆகக்குறைந்தது பிகாலுக்கு கதையைச் சொல்கின்றவர் போவதோடு என்றாவது

ஏனெனில் பிகால் எதற்கு பிரபல்யம் வாய்ந்ததென்று நுட்பமான வாசகர் சொல்லாமலே புரிந்துகொள்வார். இன்னொன்று, ஒன்றோ அல்லது இரண்டோ வாக்கியங்களுடன் பந்திகளைப் பிரிக்காது தேவையானபோது பிரிக்கலாம். எஸ்.ராமகிருஷ்ணன் இப்படித்தான் பிற்கால நாவல்களை எழுதி வாசிப்பவர்க்கு எரிச்சலை கொண்டுவருகின்றவர்

'சாகாள்' என்று கதை எழுதியும், இந்துத்துவ சச்சிக்கு முண்டுகொடுத்தும் எங்களுக்கு அவ்வப்போது இரத்தக் கொதிப்பை வரச்செய்யும் அகரமுதல்வன், கொல்லப்படத் தேடப்பட்டவளும், அவளைக் கொல்லத் தேடுபவனும், இன்று போர் முடிந்து வாழப்போகின்றபோது தியாகி துரோகி என்று கெட்டவார்த்தைகளால் பேசுகின்றார் எனக் கவலைப்படுகின்றார்தியாகி X துரோகி என்ற துவிதநிலை அடையாளங்களைத் தாண்டி மனிதர்கள் மிகுந்த சிக்கலானவர்கள் என்கின்ற இந்த நிலைக்கு அவர்  வந்திருப்பதை முதலில் நாம் பாராட்டத்தான் வேண்டும். மோசமான கதைகளை அகரமுதல்வன் எழுதிக்கொண்டிருந்த காலத்தின் பின்னரும் அவரைத் தவிர்க்காது தொடர்ந்து வாசித்தற்கு அவருக்கு இருக்கும் கதைசொல்லும் திறமை ஒரு முக்கிய காரணம்

இப்படிக் கூறுவதால் இவை மூன்றும் மோசமான கதைகள் என்ற அர்த்தம் அல்ல. இன்றைய தமிழகப் பத்திரிகைகள்/சஞ்சிகைகளில் வரும் எத்தனையோ கதைகளை விட இவை மேலே உயர்ந்து ஆம்பலாகவே நிற்கின்றன. எனினும் கதை சொல்லலலில் வித்தியாசமானவை என்றோ, அண்மையில் வந்தவற்றில் முக்கியமானவை என்றோ அடையாளப்படுத்துகின்ற அளவுக்கு இவைஇல்லை என்றே சொல்வேன்.

இரண்டு கதைகள் பாலியல் தொழிலாளர்களையும், இன்னொரு கதை திருமணமான பெண்ணோடு வரும் பாலியல் உறவையும் தொட்டுச் செல்வதால், நமது தமிழ் ஆண்களுக்கு/கதை சொல்லிகளுக்கு இப்படி ஏன் பெண் உடல்கள் தொடர்ந்து தொந்தரவுபடுத்திக்கொண்டிருக்கின்றது என்றும் ஒரு யோசனை எனக்குள் ஓடியது. நமது காதலிகள்/துணைகள்/மனைவிகள் நம்மைச் சந்திக்கும்வரை 'கன்னி'களாக இருக்கவேண்டும் என்று காலங்காலமாகத் திணிக்கப்பட்டு வந்துவிட்ட விடயத்தை இன்றைய காலப் பெண்கள் எளிதாய் உடைத்துச் செல்ல, நம் எவராலும் அதைத் தாங்கிக்கொள்ள முடியாததும் ஒரு காரணமாக இருக்குமோ என்னவோ?

(Jun, 2019)

The Great Hack

Monday, August 26, 2019


ருகாலத்தில் தரவுகள் என்பவை செல்வம் என்ற நிலையிலிருந்தன (Data is Wealth).. இப்போது அவை இன்னும் பரிணாமம் அடைந்து ஆபத்துத் தரும் ஆயுதங்களாகவும் மாறிவிட்டிருக்கின்றன. அண்மையில் Cambridge Analytica பேஸ்புக்கினூடாக அதனைப் பாவிப்பவர்களின் தகவல்களைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவிதியைத் தீர்மானித்திருக்கின்றது இனியான காலத்தில் ஜனநாயகரீதியான தேர்தல்கள் சாத்தியமா என்பதும் இந்த தகவல் சேகரிப்புக்களின் நிமித்தம் அதி முக்கிய கேள்வியாக மாறியிருக்கின்றது.

ஒருகாலத்தில் நமது தனிப்ப்பட்ட தகவல்களை தமது பொருட்களை விற்பதற்குப் பாவித்த பெரும் இணையத்தளங்கள் இப்போது அவற்றைப் பிறருக்கு நாமறியாமலே விற்கவும் தொடங்கியிருக்கின்றது. Cambridge Analytica என்பது தரவுகளைச் சேகரித்து விஞ்ஞானரீதியில் ஆய்வுசெய்கின்றது என வெளியில் சொன்னபோதும், அது இரகசியமாக இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி நாடுகளின் தேர்தல் முடிவுகளையே மாற்றியிருப்பது இப்போது தெரிய வந்திருக்கின்றது.

நமது தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நமக்கு என்ன வேண்டுமென்று வியாபார ரீதியாக தீர்மானித்து, அவற்றையே நமக்கான திரைகளில் விளம்பரப்பொருட்களாக விற்பனை செய்து வந்த இந்த பெரு இணைய நிறுவனங்கள், கொஞ்சம் கொஞ்சமாக எமது அரசியல் நிலைப்பாடுகளிலும் தலையிடத்தொடங்கியது பெரும் ஆபத்தாக வந்திருக்கின்றது. ஒருவகையில் இதுவரை பெருநிறுவனங்கள் அரசுக்களை மறைமுகமாக இயக்கிக்கொண்டிருந்த 'நிழல் அரசை' விட்டு வெளிப்படையாகவே தாங்களே அரசுக்களாக மாறுகின்ற காலகட்டம் இதுவெனவும் சொல்லலாம்.

Cambridge Analytica பிற நாடுகளின் (பத்துக்கு மேற்பட்ட நாடுகளில், இந்தியாவில் 2010 நடந்த தேர்தலும் இதில் அடக்கம்) தலைவிதியைத் தீர்மானித்தபோதும் அமைதியாக இருந்த மேற்குலகம், அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் அது தலையிட்டபோது , Cambridge Analytica தம் அடி மடியிலேயே தகவல்களைக் கொண்டு கைவைக்கத் தொடங்கிவிட்டதென சுதாகரித்துக்கொண்டது. .

வ்வாறு இவை தொடங்கின்றன என்றால், நீங்கள் பாவிக்கும் சமூக ஊடகத்தளங்களினூடாக கேள்விக்கணைகளுக்குப் பதிலளிக்கச் செய்தோ,வெவ்வேறு விளையாட்டுத்தனமான அப்ஸ்களைப் பாவிக்க அழைப்பு விடுத்தோ உங்கள் தனிப்பட்ட தகவல்களை முதலில் திரட்டுகின்றன. பின்னர் உங்களின் விருப்பு வெறுப்புக்கள், அரசியல் நிலைப்பாடுகள் என்பவற்றை கண்டுகொண்டு அதைக்கொண்டு உங்களை manipulate செய்யத்தொடங்குகின்றன. நீங்கள் அறிந்தோ அறியாமலோ இந்த இராட்சத நிறுவன்ங்கள் காட்டுகின்ற உலகு மட்டுமே உலகென பிறகு நம்பத் தொடங்குகின்றீர்கள்.

இவ்வாறாகத்தான் பேஸ்புக் நிர்வாகத்தின் அனுமதியுடன் அமெரிக்காவிலிருக்கும் மில்லியன்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை Cambridge Analytica திருடியிருக்கின்றது. அதன்பின்னர் அதைப் பாவித்து டொனால்ட் ட்ரம்ப்பைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்திருக்கின்றது. முக்கியமாக வலதுசாரிகளாக இல்லாதவர்களை விடுத்து, யாருக்கு வாக்களிப்பது என்று தடுமாறிக்கொண்டிருந்தவர்களை குறிவைத்து, தொடர்ந்து ஹிலாரிக்கு எதிரான பிரச்சாரங்களை Cambridge Analytica, டொனால்ட் ட்ரம்ப் விளம்பரங்களுக்காகக் கொடுத்த நிதியைக் கொண்டு செய்திருக்கின்றது. இதில் கவனிக்கவேண்டிய விடயங்கள் அமெரிக்காவின் சில மாகாணங்களில் ஒரு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார் வெற்றிபெறுவதற்கு 70, 000ற்கும் குறைவான வாக்குகளே போதுமாயிருந்திருக்கின்றது.

இவ்வாறு அமெரிக்கத் தேர்தலில் கைவரிசையைக் காட்டிய Cambridge Analytica நிறுவனத்தினர் பின்னர் பிரித்தானியா, ஐரோப்பியா யூனியனிலிருந்து பிரிவதற்கும் வலதுசாரிகளுக்கு உதவிசெய்ய அங்கிருந்த மக்களின் தகவல்களைப் பெற்றிருக்கின்றது. Cambridge Analytica இப்படித் தரவுகளைத் திரட்டி பல நாடுகளில் அரசியல் நிலையையே மாற்றியிருக்கின்றதென்று வெளியில் இருந்து பலர் பேசியபோதும், இதன் தீவிரம் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர் வெளிப்படையாகப் பேச வந்ததாலேயே இன்னும் தெரியவந்திருக்கின்றது.

சில நாடுகளில் தேர்தலில் மக்களை வோட்டுப்போடாமல் தவிர்க்கச் செய்தே தங்களிடம் ஆதரவு கேட்ட கட்சிகளை வெற்றிபெறச் செய்திருக்கின்றனர். உதாரணமாக Trinidad and Tobago வில் இந்தியா வம்சாவளிக் கட்சியினரை வெற்றிபெறச் செய்வதற்காக, அங்கே ஏற்கனவே இருந்த கறுப்பின ஜனாதிபதிக்கு எதிராக ஒரு இயக்கத்தை இவர்கள் ஆரம்பிக்கின்றார்கள். இவர்களின் இலக்கு 18-34ற்குள் இருக்கும் கறுப்பின இளைஞர், யுவதிகள். அவர்களை வாக்களிக்காமல் செய்வதற்காக ஒரு வாக்களிக்காத இயக்கத்தைத் தொடங்குகின்றனர். இதேவேளை இந்திய வம்சாவளி இளைஞர்/யுவதிகள் பெற்றோரின் சொற்கேட்டு வாக்களிக்கின்றனர். இவ்வாறாக கறுப்பின இளைஞர் பட்டாளத்தை வாக்குச் சாவடிக்கு பிரச்சாரத்தின் மூலம் போகச் செய்யாமல் Cambridge Analytica தாம் விரும்பிய இந்திய வம்சாவளியின வேட்பாளரை வெற்றிபெறச் செய்திருக்கின்றது.

இப்போது Cambridge Analytica தனிப்பட்ட தரவுகளைப் பாவித்தது கண்டுபிடிக்கப்பட்ட்தால் அது இன்று இல்லாமற்போய்விட்டது. ஆனால் Cambridge Analytica முன்னாள் நிறுவனர் ஒருவர் இப்படத்தில், 'எப்போதும் ஒரு Cambridge Analytica இருந்துகொண்டேயிருக்கும். அதைத் தடுக்கமுடியாது' என்கின்றார்.

ஐரோப்பிய யூனியனுக்கு சாட்சி கொடுக்கும் Cambridge Analyticaவை அம்பலப்படுத்திய பிரிட்டனி ஓரிடத்தில் சொல்வார், இனி நம்மைப் பற்றிய தரவுகளை நமது தனிச்சொத்துப்போல இந்த இணையப்பெருநிறுவனங்கள் நினைக்கவேண்டும். இதுகுறித்து ஒரு இறுக்கமான சட்டம் வரும்போதே ஒரளவுக்காவது நாம் நமது தரவுகளைக் காப்பாற்றமுடியும் என்கின்றார்.

(July 30, 2019)