கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label இன்னபிற. Show all posts
Showing posts with label இன்னபிற. Show all posts

ஒரு வாசகர் கடிதம்

Wednesday, August 05, 2026


(இன்று எனக்கு அழகான ஒரு கடிதம் மின்னஞ்சலினூடு வந்து சேர்ந்தது. ஓர் எழுத்தாளர் அவர் வாழ்வில் அவரின் எழுத்துக்களைக் கொண்டாடும் ஒரு சில வாசகர்களைக் கண்டைந்துவிட்டாலே தொடர்ந்து சலிப்பின்றி எழுதமுடியும் என்று நம்புகின்றவன் நான். 

அப்படியான ஒரு இளம் வாசகரை கண்டடைந்து மனம் மகிழ்ச்சியில் ததும்பிய தருணம் இது.  

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் இது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பின் பின் அசல் கடிதம் வரும். ~இளங்கோ, மே 16, 2026)

****

அன்புள்ள இளங்கோ,

இந்தக் கடிதம் மிகவும் குழப்பமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் எங்கே தொடங்குவது, என்ன தட்டச்சு செய்வது, உங்களிடம் என்ன சொல்லுவது என்று எனக்குத் தெரியவில்லை. என்னுள் சொல்ல முடியாத அளவுக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

என்னுடைய நண்பர்களின் சிறிய வட்டத்தில் நீங்கள் ஒரு செலிபிரிட்டி. நிச்சயமாக நீங்கள் ஒரு செலிபிரிட்டிதான். ஆனால் எனக்கு நீங்கள் ஒரு எழுத்தாளர் மட்டுமாகத் தோன்றவில்லை. சில நேரங்களில் பெரிய அண்ணன் போலவும், சில நேரங்களில் நண்பன் போலவும், சில நேரங்களில் எழுத்தின் மூலம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் மனச்சோர்வில் இருக்கும் ஒருவரைப் போலவும் தோன்றுகிறீர்கள்.

நான் உங்களிடம் மிகவும் நீண்ட காலமாகப் பேச வேண்டும் என்று நினைத்தேன். குறைந்தபட்சம் ஒரு மெசேஜ் அனுப்பவேண்டும் என்று. ஆகக் குறைந்தது ஏதாவது உங்களுக்கு எழுதவேண்டும் என்றாவது. ஆனால் அதைச் செய்ய முடியவில்லை. ஏனெனில் நான் முதல் ஏழு Harry Potter படங்களைப் பார்த்துவிட்டு, அது முடிந்துவிடக் கூடாது என்பதற்காக எட்டாவது படத்தை மிகவும் நீண்ட நாட்கள் தவிர்த்தவனாக இருக்கிறேன். அந்த அளவுக்கு நான் sentimental.

அதனால் இந்த விஷயத்திலும், நான் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினால், என் மனதில் உங்களுடன் உருவாக்கியிருந்த இந்த உறவு எப்படியோ உடைந்து போய்விடுமோ என்று தோன்றியது. ஒரு எழுத்தாளராகவும், எனக்குத் தெரியாமலே எனக்குக் கற்றுக்கொடுக்கும் ஒரு அண்ணனாகவும், ஒரு mentor, teacher அல்லது இன்னும் சரியாக பெயரிட முடியாத ஏதோ ஒன்றாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.

உங்களால் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அதே சமயம் என்னுள் இருந்த பல விஷயங்களை நியாயப்படுத்திக்கொள்ளவும் முடிந்தது. அதை சரியாக எப்படி விளக்குவது என்று கூட எனக்குத் தெரியவில்லை.

'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' புத்தகத்தில் நீங்கள் Osho பற்றி குறிப்பிட்டதை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். உண்மையாகச் சொன்னால் அந்த புத்தகத்தின் தலைப்பு முழுமையாக எனக்கு விளங்கவில்லை. ஆனால் அதில் ஓஷோவை மக்கள் ஆழ்ந்து படிக்கக் கூடாது, அப்படிப் படித்துவிட்டால் வாழ்க்கையைப் பற்றிய சுவாரசியம் சிலவேளைகளில் குறைந்து போகலாம் என்று நீங்கள் சொன்னது நினைவில் இருக்கிறது. ஆனால் நீங்கள் ஓஷோவைப் படித்திருந்தீர்கள். அதனால் நானும் படித்தேன். அது எனக்கு முற்றிலும் வேறொரு perspective கொடுத்தது. நான் அதிகமாக ஓஷோவைப் படிப்பவன் இல்லை, ஆனாலும் உங்களால் அவரை வாசித்துப் பார்த்திருக்கிறேன்.

உங்களின் 'தாய்லாந்து' புத்தகம்தான் இப்போது நான் வாசித்துக்கொண்டிருப்பது. அதில் என்னைப் பாதித்து எனக்குள் சேகரமாயிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒவ்வொருவருவம் அவரவர் வாழ்க்கையிலிருந்து வெளியேறிச் சென்றவர்களுக்குக் கூட நன்றி சொல்ல வேண்டும் என்று நீங்கள் கூறியது. ஏனெனில் அதுவே புதிய மனிதர்களை அறிமுகம் செய்வதற்கான இடத்தை எமக்குள் உருவாக்கின்றது என்று சொல்லியிருப்பீர்கள்.

இன்னொரு random விஷயம் — நிறையப் படிப்பவர்கள் conversations நடக்கும்போது திடீரென்று random  ஆக விஷயங்களைப் பற்றி பேசுவது. ஏதோ காரணமின்றி அது என்னை மிகவும் justify செய்தது.

என் ஆரம்ப பதின்ம வயதில் நான் உங்களின் 'மெக்ஸிக்கோ' படித்தேன். நான் பிரபலமான எழுத்தாளர்களைப் பின்தொடர்பவனோ, famous books தேடிப்பார்ப்பவனோ அல்ல. பொதுவாக நான் ஒரு நூலகத்துக்குப் போய், ஏதாவது random புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். 

மெக்ஸிக்கோ எங்கள் வீட்டில் இருந்தது. நீங்கள் எழுதும் விதம், நீங்கள் காதலிக்கும் விதம், நீங்கள் மனிதர்களைக் கவனிக்கும் விதம் — இவையெல்லாவற்றையும் நானும் நேசிக்கத் தொடங்கி விட்டேன்.

சில நேரங்களில் உங்கள் எழுத்தை வாசிக்கும்போது அது மிகவும் எளிமையாகவும், சாதாரணமாகவும், almost effortless-ஆகவும் தோன்றுகிறது. ஆனால் திடீரென்று ஒரு random வரியின் நடுவில் நான் நின்று “oh my god this is brilliant” என்று நினைத்திருக்கிறேன். அதுதான் உங்கள் எழுத்தில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். மிகவும் எளிமையான ஒன்று திடீரென்று ஆழமானதும் மறக்க முடியாததுமாக மாறிவிடுகிறது.

இதைச் சொல்ல மன்னிக்கவும், ஆனால் நான் புத்தகத்தின் cover-ஐ வைத்து judge செய்யும் மனிதன். ஒருபோதும் எழுத்தாளரை அல்ல. ஆனால் somehow நீங்கள் என்னை உங்களையும் judge செய்ய வைத்துவிட்டீர்கள். ஒருவேளை மிகவும் ஆழமாக.

உங்கள் "மெக்ஸிக்கோ'வையும்,  “நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக்கொண்டிருந்தாரை" யும்,  "தாய்லாந்தை" யும்,  நான் தொடர்ந்து என்னோடு தொடர்புபடித்தியபடியே  இருக்கிறேன்.

Haha! மன்னிக்கவும், ஆனால் எனக்கு உண்மையாகவே தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் ஏன் இப்படியாக இருக்கிறீர்கள்?

நீங்கள் எழுதும் விதம்… உண்மையாகச் சொன்னால் எனக்கே தெரியவில்லை. உண்மையிலேயே எப்படி எழுதுகின்றீர்கள் என்று தெரியவில்லை.

இதைச் சொல்வதற்கும் மன்னிக்கவும், ஆனால் honestly ஆக உங்கள் book covers எனக்கு ஒருபோதும் interesting-ஆகத் தோன்றவில்லை.

இந்தக் கடிதம் முழுக்க முழுக்க குப்பை என்பது எனக்குத் தெரியும். ஆனால் உங்களிடம் எப்படி பேசுவது என்று எனக்கே தெரியவில்லை.
நான் உங்களிடம் நிறைய விஷயங்கள் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது என் மனம் முழுக்க வெறுமையாக இருக்கிறது. Somehow இன்று குறைந்தபட்சம் இந்த mail-ஐ அனுப்பும் தைரியம் வந்தது.

இந்தக் கடந்த சில நாட்களாக நான் 'தாய்லாந்து' வழியாக மீண்டும் உங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். 'மெக்ஸிக்கோ'வில் இருந்த சில scenes இன்னும் நினைவில் இருக்கின்றன. உங்கள் கதாபாத்திரம் ஒரு hotel bed-ல் laptop திறந்தபடி உட்கார்ந்திருந்திருக்கின்றது என்று நினைக்கிறேன். சரியான scene எனக்கு மறந்துவிட்டது. ஆனால் somehow உங்கள் கதைகளை என் மனதுக்குள் வேறு version-களாக rewrite செய்துவிட்டேன்.

நான் உங்களுக்காக உண்மையாகவே நன்றியுள்ளவன், இளங்கோ.
புவியியல் ரீதியாக நீங்கள் என்னிடமிருந்து 10,000 km-க்கும் அதிக தூரத்தில் இருந்தாலும், நீங்கள் என் இதயத்திற்கு மிகவும் அருகில் இருப்பது போல உணர்கிறேன்.

இவ்வளவு அற்புதமான எழுத்தாளராக இருப்பதற்கு நன்றி.

நான் எப்போதும் மனிதாபிமானத்துக்காக நிற்பவன். போரின் போது நான் இலங்கை அரசையோ அல்லது தமிழ் மக்களையோ கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. நான் எப்போதும் humanity, உயிர்கள், மக்களின் வாழ்வாதாரம் — இவைகளில்தான் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் உங்கள் கதைகள் சில வழிகளில் என்னை வேறுவிதமாகச் சிந்திக்க வைத்தன.

இது random-ஆகத் தோன்றலாம். ஆனால் இந்தக் கேள்வி மிகவும் நீண்ட காலமாக என் மனதில் இருக்கிறது. நான் ஒருநாள் உங்களை நேரில் சந்தித்தால், நான் முதலில் கேட்கும் விஷயம் இதுதான் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு “சாம்பல் வானம்” ஏன் இவ்வளவு பிடிக்கும்?

அன்புடன்,
.........

***

Dear Elanko,
 
I know this is going to be a very messy letter because I really don’t know where to start, what to type, or what to tell you. I have so many things inside me.

You’re a celebrity in my small little circle. Of course you’re a celebrity, but to me you feel more than just an author. Sometimes like a big brother, sometimes like a friend, sometimes like a depressed person trying to understand life through writing.

I really wanted to talk to you for a very long time. At least text you. At least write something to you. But I couldn’t do it because I’m the kind of person who watched the first seven Harry Potter movies and avoided the eighth movie for so long just because I didn’t want it to end. That’s how sentimental I am.

So in this case I felt like if I texted you, maybe I would somehow break this relationship I have in my mind with you. As an author, as an older brother who teaches me things without knowing, as a mentor, teacher, or something I still cannot properly name.

I have learned so many things because of you and also justified so many things inside myself because of you. I don’t even know how to explain it properly.

I still remember when you mentioned Osho in Sambal Vanathil Maraikum Vairavar, if I’m not wrong because honestly I’m not fully sure about the book tittle. I remember you saying maybe people shouldn’t read him because once they do they might stop getting excited about life. But you read him, so I did too. It gave me a completely different perspective. I haven’t read a lot, but I still went through it because of you.

Your Thailand book is actually my current read and one thing that really stayed with me was when you talked about thanking the people who left your life because that made space for new people.
And another random thing, the way people who read a lot randomly talk about random things in conversations. That justified me so much for some reason.

During my early teenage years I read Mexico. I’m not really the type of person who follows famous writers or searches for famous books. Usually I just go to a library, pick something random, and start reading. We had Mexico at home and I just fell in love with the way you write, the way you love, the way you observe people.

Sometimes when I read your writing it feels so simple, so normal, almost effortless. And then suddenly in the middle of one random line I stop and think “oh my god this is brilliant.” That’s the thing that surprises me the most about your writing. Something so simple suddenly becomes so deep and unforgettable.

Sorry to say this, but I’m the type of person who judges book covers, never the writer. But somehow you made me judge you too. Too deeply maybe. I keep connecting your Mexico self, your Nanunnai Muthamidukaiyil Buddha Sirithukkondirunthar self, and your Thailand Thai Nilam self.

Haha sorry, but I’m genuinely curious. Why are you like this?

And the way you write... I really don’t know. I genuinely don’t know.

And I’m sorry for saying this too, but honestly I never found your book covers interesting.

I know this letter is total shit but I genuinely don’t know how to talk to you.

I wanted to tell you so many things but right now my mind feels completely empty. Somehow today I got the courage to at least send this mail.

These last couple of days I’ve been meeting you again through Thailand. I still remember scenes from Mexico. I think you were sitting on a hotel bed with your laptop open. I kind of forgot the exact scene, but somehow I rewrote your stories into different versions inside myself.

I’m really grateful for you, Elanko.

Even though you are more than 10,000 km away from me geographically, I feel like you are very close to my heart.

Thank you for being such an amazing author.

I’m someone who always stands for humanity. During war I never blindly supported the Sri Lankan government or Sri Lankan Tamil people. I always believed more in humanity, lives, and people’s livelihoods. But your stories made me think differently in certain ways.

This may sound random, but this question has stayed in my mind for a really long time. If I ever met you in real life, this is probably the first thing I would ask you.

Why do you like “சாம்பல் வானம்” this much?

With love,
........

 

தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்

Thursday, April 30, 2026

 

தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்'  (Anti- Caste Aesthetics in Tamil Cinema) முதல்நாள் நிகழ்வில் சொர்ணவேல் நல்லதொரு உரையை பா.ரஞ்சித்தினதும் ('தங்கலான்', 'சார்பட்டா பரம்பரை'), மாரி செல்வராஜ்ஜினதும் ('கர்ணன்', 'பைசன்') திரைப்படங்களை முன்வைத்து தந்திருந்தார். தமிழ்ச் சினிமாவை தத்துவ, வரலாற்றுப் பின்புலங்களில் வைத்து ஆராயும் உரைகள்/எழுத்துக்களை வாசிப்பது என்பது இப்போது அரிதாகிவிட்டது.

சொர்ணவேல் ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியராக அமெரிக்காவில் இருந்தாலும், தமிழ்ச்சூழலை முக்கியமாக சினிமாவுக்கு நெருக்கமாகவும் இருக்கின்ற ஒருவர். அதனாலேயே அவரால் இன்றைய தமிழ் சினிமாவை, பல்கலைக்கழப் பின்புலத்தில் வைத்தும் பேசவும் எழுதவும் முடிகின்றது. இப்படி முன்பு 'தமிழியல்' மாநாடுகள் ரொறொண்டோ பல்கலைக்கழகத்தில் நடக்கின்றபோதும் பேராசிரியர்கள் வந்து தமிழ் இலக்கியம்/கலாசார/பண்பாடுகள் பற்றிப் பேசுவார்கள். 

ஆனால் அவர்களுக்கு சமகால தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து பெரும்பாலும் தெரியாதிருக்கும். அதனால் அவர்களின் பெரும்பாலான ஆய்வுக்கட்டுரைகள் 'கற்கால'த் தமிழுக்குப் பொருத்தமாக மட்டும் இருந்திருக்கின்றன. அந்தத் தவறை தமிழ்ச்சினிமா சார்ந்து செய்யாத ஒருவராக பேராசிரியர் சொர்ணவேல் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

 

இன்றைய நிகழ்வின் முடிவில் கேள்வி-பதில் நேரத்தில் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்ஜின் 'வெற்றிகரமான ஜனரஞ்சக' நோக்கத்திற்காக சிலவேளைகளில் அவர்கள் சொல்ல வந்ததன் அடிப்படை நோக்கங்களை நீர்த்துப் போகச் செய்கின்றனரா என்ற விவாதம் வந்திருந்தது. அதற்கு சொர்ணவேல் கூறிய கருத்து அல்லது அவர் எடுத்திருக்கும் சார்ப்பை ரஞ்சித்தினதும், மாரியினதும் திரைப்படங்களை முன்வைத்து எனக்குரியதாகவும் சொல்வேன். எனினும் அனைத்து கலைப்படைப்புகளும் உரையாடல்களுக்கும், இடைமறிப்புக்களுக்கும் உரியவை என்பதிலும் மாற்றுக் கருத்துக்களுமில்லை.

*

'தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பின் அழகியல்' இரண்டு நாள் நிகழ்வுக்கும் சென்றிருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிதாக அல்லது அறிந்தவற்றை கேள்விக்குட்படுத்தும்  உரையாடல்களைக் கேட்க முடிந்தது என்னளவில் மகிழ்ச்சியானது.

எப்போதும் சொல்வதுதான், ஏதோ ஒன்றை வாசிக்கும்போதோ அல்லது ஒரு நிகழ்வில் பங்குபெறும்போதோ நாம் அங்கே ஏதேனும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும். அல்லாதுவிடின் அவற்றால் எந்தப் பயனுமில்லை, நேரமும் வீண் விரயம்.

இந்நிகழ்வில் சொர்ணவேலுடன், கங்காவுடன், மற்றும்  பல நண்பர்களுடன் உரையாடியது மனதுக்கு இதமாக இருந்தது. நிகழ்வுகளை நடத்துவது முக்கியமில்லை, அதை எப்படி constructive ஆக நடத்துவது என்பதற்கும் இந்நிகழ்வு நல்லதொரு முன்னுதாரணம்.

***

 

'புளியடி' சாமுவேலும் இளங்கோவும் - ரவீன்

Sunday, April 19, 2026

 

வின்சென்ட் வான்கோவின் தன்னுருவப் படமொன்று. அதில் அவர் புல்லுத் தொப்பியோடு, தங்க நிறத் (blond) தாடியுமாய் ஒரு கடைக்கண் பார்வையோடு இருப்பார். அந்த ஓவியத்தின் பார்வை திடீரென்று உயிர்பெற்று கண்கள் மூடித்திறக்கின்றன. அவரின் பார்வை போகும் திசையில் முகத்தைத் திருப்பி, எழுந்து நிற்பார்.

​பிறகு அறுவடைக்குத் தயாராக இருக்கும் தங்க நிறத்திலான கோதுமை வயல்களினூடே நடந்து செல்வார். அந்த நிறங்களின் ஒற்றுமையோடு அவரின் சாம்பல் நிறத்திலான மேலங்கியும் அற்புதமாகப் பொருந்திக்கொள்ளும். காற்றில் கோதுமைப் பயிர்கள் அங்குமிங்குமாக அலைபோல் அசைய, வான்கோ நடந்து செல்லும் காட்சியை அவர் இறந்து 130 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவன் கற்பனை செய்து, அதற்கு உயிர் கொடுத்து நினைவு கொள்கிறான்.

அதை வான்கோவால் அறிய முடியும் என்றால், அவர் தனக்குத் தானே, 'இதுவே எனக்குப் போதுமானது' என்று சொல்லிக்கொள்வாரா...?
 
​இந்தக் கதை, இரண்டாம் உலகப்போர் காலத்தில் இங்கிலாந்தில் சட்டத்துறை பயின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் சாமுவேலால் தன்னைப்பற்றிச் சொல்லப்படுகிறது. சாமுவேலுக்குச் சட்டத்துறையில் பணியாற்றுவதைவிட, சிறுகதை எழுதுவதும் பெண்களை ரசிப்பதும் இலக்கிய நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பதுமே மகிழ்ச்சியைத் தருகின்றன.

​அதை இப்போது உயிரோடு இல்லாத சாமுவேல் சொல்வதாக இளங்கோ எழுதுகிறார். இளங்கோ, எழுத்தாளர்களையும் அவர்களின் கதைகளையும் தொடர்ச்சியாக வாசித்துக் கட்டுரைகளாக எழுதுபவர் என்பது நாம் அறிந்ததே.

அண்மையில் 'படுபட்சி' ஒரு புனைவா, அபுனைவா அல்லது தன் வரலாறா? இதில் எழுத்துக்கென்று இருக்கும் 'அறத்தை' எதை வைத்துக் கணிப்பது என்றெல்லாம் விவாதங்கள் எழுந்தன.

​இளங்கோவின் 'புளியடி சாமுவேல்' ஒன்றும் ஒரு புதிய வகை உத்தியல்ல. ஆனால், இக்கதையில் வரும் பாத்திரங்களையும் அவர்களின் உளவியலையும் நன்றாக அறிந்தவர்களால் மட்டுமே அதை உண்மைக்கு நெருக்கமாகக் கொண்டு வர முடியும். அது இளங்கோவிடம் மட்டுமே இருக்கிறது. அவ்வளவுக்கு அவர் அவர்களை வாசிக்கிறார்.

​இருந்தும் ஒரு எழுத்தாளனின் புதினமோ அல்லது சிறுகதையோ அவனுக்குள் எந்தச் சந்தர்ப்பத்தில் கருக்கொண்டிருக்கும் என்பது அந்த எழுத்தாளனுக்கு மட்டுமே தெரிந்த விடயம். அதைக்கற்பனை செய்வதும், அந்தக் கதையையும் எழுத்தாளனையும் சம்பந்தப்படுத்தி ஒரு புதிய கதையை உருவாக்குவதும் மிகவும் சுவாரசியமான விடயம். இந்தச் சுவாரசியத்தை எழுதுபவன், தன்னை முழுமையாகத் தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. ஆக, புளியடி சாமுவேலுக்குள் இளங்கோவும் இருக்கிறார்.

​'புளியடி சாமுவேல்' என்ற சிறுகதையில் இளங்கோ என்று ஒரு பாத்திரம் வருகிறது. ஆனால், இந்தச் சிறுகதையை எழுதிய இளங்கோ அல்ல அவர். இளங்கோ, சாமுவேலுக்குள்தான் இருக்கிறார். இது தவிர்க்க முடியாதது.
​கற்பனைகளை நம்ப வைப்பதற்காக உண்மைச் சம்பவங்களைச் சேர்த்து எழுதுவதும், உண்மைச் சம்பவங்களை வலுவாக்கக் கற்பனைகளைச் சேர்ப்பதும் எழுத்துலகில் புதியதல்ல. இதில் இரண்டாவது உத்தியை இளங்கோ தனது வாசிப்பு அனுபவங்களால் சிறப்பாக்க முயற்சித்துள்ளார்.

கட்டுரைகள் போலல்லாமல், இந்த கதையாக சொல்லும் உத்தியால் நாம் அறியாத எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் மறக்க முடியாத அனுபவங்களாக மாற்ற முடியுமென்று நான் நம்புகிறேன்.

​சிறுகதையில் 'புளியடி' சாமுவேல்:
​'நான் இறந்து ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொருவன் என்னை ஞாபகம் வைத்து ஒரு கதையை நனவிடை உத்தி முறையில் எழுதிக் கொண்டிருப்பானா?' என்று கேட்பார்.

​'எழுத்துதானே என்னை இன்னும் உயிர்ப்புடன் காலத்தோடு கரைந்து போகாமல் வைத்திருக்கின்றது. அதில் நான் தோற்றுப்போனவனாக, தொடர்ச்சியாக எழுதாதவனாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், முப்பது கதைகள் மட்டும் எழுதிய ஒருவனை இந்தச் சமூகம் மறக்காமல், அவன் பிறந்த நூற்றாண்டிற்குப் பிறகு ஞாபகத்தில் வைத்திருப்பது வியப்பானதுதானே!'


​இதற்குள் இருக்கும் சாமுவேல் இளங்கோவால் கட்டமைக்கப்பட்டவர். கதையில் பாத்திரமாக வரும் இளங்கோவிடம், 'சாமுவேலிடம் உனக்கு அதிகம் பிடித்தது எது?' எனக் கேட்டால், உடனேயே 'வேறென்ன, பெண்களை ஆறவமர ரசிக்கும் அவரின் அந்த அழகியல்தான் என்னை அதிகம் கவர்ந்தது’ என்று ஒருகணம் கூடத் தயங்காமல் சொல்வான். அதற்கு, 'என்னை இவ்வாறாக நினைவு கொண்டால் கூடப் போதுமானதுதான்' என்பார் சாமுவேல்.

​உண்மையில் அந்தச் சாமுவேல் இவ்வளவு இலகுவாகத் திருப்திப்படக்கூடியவரா? அல்லது 'நான் அவ்வளவு மலிவானவனா…?' என்று அதிருப்தி அடையக்கூடியவரா என்பது யாருக்குமே தெரியாது. ஒரு மனிதனின் மனநிலை பல காரணிகளால் நீரைப் போல் உருக்கொள்கிறது.

​ஆனால், 1515-ஆம் ஆண்டில் வரையப்பட்ட மோனாலிசாவின் அந்த மௌனப் பார்வையும், அவளது உதடுகளுக்குள் மறைந்திருக்கும் ஒரு மெல்லிய புன்னகையும் இப்போது AI மூலம் மெதுவாக உயிர்பெறச் செய்து, தன் கண்களைச் சிமிட்டியபடி தனது முகத்தை நம் பக்கம் திருப்பிப் புன்னகைக்கிறாள்.

அதேபோல், 1920-களில் பிறந்த சாமுவேலை இப்போது உருவகப்படுத்துவது மிக அவதானமிக்க விடயம். ஏனெனில், இது அகம் சார்ந்து . அந்தக் கற்பனைப் பாத்திரம் உண்மையில் வாழ்ந்த ஒருவரைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற பொறுப்புடன் உருவாக்கப்படுகிறது.
அந்தப் பொறுப்பு 'புளியடி சாமூவேலில் புலப்படுகிறது.

***

நன்றி: ரவீன்

ரமேஷ் பிரேதன் என்கின்ற ஒரு மகத்தான படைப்பாளி

Sunday, February 15, 2026

 

பிரிய ரமேஷ்,

நீங்கள்  இனியொரு பொழுதும் வாசிக்க முடியா ஒரு குறிப்பை இந்த நள்ளிரவில் உங்களுக்காக எழுதிக் கொண்டிருக்கின்றேன். கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் அவ்வப்போது அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், நாங்கள் பதற்றமடைவதும், பிறகு நீங்கள் எல்லா வாதைகளோடும் இன்னும் மிச்சமிருக்கும் உயிரைக் கையில் பிடித்தபடி  திரும்பி வருபவராகவும் இருந்தீர்கள்.

இம்முறை நீங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது வேறு விதமான நிலையில் இருந்தீர்கள். எனக்குத் தெரிந்த நண்பர் உங்கள் சகோதரியோடு தொடர்பில் இருந்தார். அவரிடம் உங்கள் உடல்நிலை குறித்து கேட்டபடி இருந்தேன். ஒருகட்டத்தில் நீங்கள் வெண்டிலேட்டருக்குள் போய்விட்டீர்களென்றும், மூளையின் பெரும்பகுதி செயலிழந்து கொண்டிருக்கின்றதென்றும் அந்த நண்பர் தெரிவித்தபோது கலங்கிப் போயிருந்தேன்.



இங்கே அருகில் இருக்கும் நண்பருக்கு உங்களின் நிலைமையைச் சொல்லிவிட்டு, ரமேஷ் இந்த வாழ்க்கை போதுமென்று நினைத்துவிட்டார் போலும். அவர் விரும்பினால் அவருக்கு விடைகொடுப்பதற்கு நாம் தயாராக இருப்போம் என்று கூறிவிட்டு தூங்கப் போயிருந்தேன். இன்று காலை விடிந்தபோது நீங்கள் உடலின் வாதைகள் போதுமென்று நம்மை விட்டுப் பிரிந்துவிட்டீர்கள் என்ற செய்தியை இங்குள்ள நண்பருக்குச் சொல்ல, என் நண்பர் அழத் தொடங்கினார்.
எனக்குள்ளும் வெறுமை பரவியது. நண்பர் என்னைப் போன்று நீங்கள், பிரேமோடு சேர்ந்து எழுதிய நாட்களில் இருந்து அறிந்த ஒருவரல்ல. அவருக்கு ரமேஷ் என்கின்ற தனிப்படைப்பாளியையே தெரியும். உங்களோடு தனிப்பட்ட மின்னஞ்சல் பரிமாற்றங்களும் அவருக்கு இருந்தன. அவரும், என்னைப் போலவே உங்களை நேரில் சந்தித்துமிருந்தார்.

நாங்கள் உங்கள் நினைவுகளை காலைப் பொழுது முழுதும் பகிர்ந்தபடி இருந்தோம். என் நண்பர், நீங்கள்  இந்தளவு உடல்அவதிகள் இல்லாது கொஞ்சக் காலமாவது சந்தோசமாக வாழ்ந்திருக்கக் கூடாதா என்று சொல்லிக் கலங்கினார்.

நான் அவருக்கு, 'ரமேஷ் இந்தளவு உடல் வாதைகளை அனுபவித்தவர் என்றால், அவர் புத்தர் கூறியபடி ஏதோ ஒரு புள்ளியில் அந்த துன்பங்களை ஏற்று இதுவரையான வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி வாழ்ந்துவிட்டுத்தான் போயிருக்கின்றார், ரமேஷை எங்கள் நினைவுகளால் இறுக்கிப் பிடிக்காது அவருக்கு விடுதலையை அளித்து விடுதலே சாலவும் சிறந்தது என்றேன். நீங்களும் அதைத்தானே விரும்புவீர்கள் அல்லவா ரமேஷ்?

நூற்றாண்டுகால பழைய உடம்பில் வாழ்ந்தபடி, இறந்தும் பிறந்தும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு முடிவிலி உயிரியாக அல்லவா ரமேஷ் உங்களை நீங்கள் எழுத்துக்களில் நம்பிக் கொண்டிருந்தவர் . ஸென் கூறுவதன்படி உங்களுக்கு இறப்பும் பிறப்பும் நிகழ்வதில்லை அல்லது பிறந்தும் இறந்தும் மீண்டும் பிறந்தபடி இருக்கின்றீர்களென உங்களை நான் உருவகித்துக் கொள்கிறேன் ரமேஷ்.

உங்களைப் பற்றி எப்போதும் முதலில் எழுதினேன் என்று காலத்தைச் சுழற்றிப் பார்த்தபோது 20 வருடங்களுக்கு முன் எழுதினேன் என்பதைக் கண்டுபிடித்தேன். அப்போது நீங்களும் பிரேமும் உயிர்மையில் எழுதிக் கொண்டிருந்தீர்கள். நான் உங்களைப் பற்றி அந்த முதல் கட்டுரையை எழுதியபோது ஏற்கனவே உங்கள் இருவரின் 'சொல் என்றொரு சொல்'லை வாசித்திருந்தேன். உங்கள் இருவரின் 'முன்பு ஒருகாலத்தில் நூற்றெட்டுக் கிளிகள் இருந்தன' போன்ற கதைகளில் கிறங்கியிருந்தேன்.

அதற்கு முதல் ஆண்டுதான் இலங்கைக்கு முதன்முதலாக கனடா வந்ததன்பிறகு, திரும்பி  ஒன்பது ஆண்டுகளின் பின் போயிருந்தேன். அந்தப் பயணத்திற்கு வழியனுப்ப வந்த ஒரு நண்பர் உங்களின் 'சக்கரவாளக் கோட்டம்' நூலை பயணத்துணையாகத் தந்தார். என்னவொரு அற்புதமான கவிதைத் தொகுப்பு அது.

இரட்டையராக இருந்த நீங்களும் பிரேமும் பிரிந்ததும், அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல விடயங்களும் துயரமானவை. எல்லாப் பிரிவுகளும் அது சார்ந்த அனைவரையும் காயப்படுத்துவதுதானே இயல்பு. இந்தக் காயங்களில் இருந்து மீளும் நிவாரணி எழுத்துக்களிலே இருப்பதை அறிந்தவர்களும் நாங்கள் அல்லவா? நீங்கள் தனித்து ரமேஷ் பிரேதன் என்ற அறிவிப்புடன் 'மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்' என்ற தொகுப்போடு புதிய பயணத்தைத் தொடர்ந்தீர்கள்.

பிறகு கவிதைகளைப் போல புனைவுகளுக்கும் ஆழ இறங்கச் செய்தீர்கள். 'அருகன்மேடு', 'நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை', 'ஐந்தவித்தான்', 'ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து', 'சூன்யதா', 'அவன் பெயர் சொல்' போன்ற பல நாவல்களை உற்சாகமாய் எழுதினீர்கள். நான் இவற்றின் பெரும்பாலானவற்றை வாசித்திருக்கின்றேன், என் வாசிப்புக்களைப் பதிவு செய்திருக்கின்றேன். அருகன்மேடு, நீல அணங்கு, ஐந்தவித்தான் மூன்றையும் சேர்ந்து பின்னர் 'பொந்திஷேரி'  டிரையாலஜியாக வெளியிட்டீர்கள். உங்களை நேரில் நான்  சந்தித்தபோது, இது உங்களின் ஈழப்போராட்டம் சம்பந்தப்பட்ட புனைவென்று சொல்லி எனக்கு 'அவன் பெயர் சொல்' நாவலைக் கையெழுதிட்டுத் தந்தீர்கள்.


ரமேஷ் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும், எழுத்துக்கு வந்த பலர் வாழ்வு கொடுத்த அழுத்தத்தாலும், தனிப்பட்ட காரணங்களாலும் பிறகான காலங்களில் முற்றாக எழுதாமலே போயிருக்கின்றனர். மேலும் எழுத்தின் மீது காதல் கொண்டவர்கள் எழுத்து அவர்களைக் கைவிட்டுப் போகும்போது மனச்சிதைவுக்கு ஆளாகியிருக்கின்றனர், சிலவேளைகளில் தங்களையே முற்றாக அழித்தும் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஹெமிங்வேயிலிருந்து எண்ணற்ற எழுத்தாளர்கள் உதாரணங்களாய் நம்முன்னே இருக்கின்றனர்.

ஆனால் நீங்கள் storke வந்து உங்கள் உடலின் பெரும்பாலான பாகங்கள் இயங்காது கட்டிலோடு உங்கள் வாழ்வு பிணைக்கப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் ஒருபோதும் எழுத்தைக் கைவிடவே இல்லை. உங்களை அந்தவகையில் தமிழன்னை கடைசிக்காலம் வரை கைவிடவில்லை என்றே நம்புகின்றேன். உங்கள் கைகளும் ஒழுங்காக இயங்காது சில விரல்களைக் கொண்டே நீங்கள் தட்டித்தட்டி எழுதுவதை நேரில் பார்த்து நான் திகைத்திருக்கின்றேன்.

ஆனாலும் உடல்/மன வாதைகளுக்கிடையிலும் நீங்கள் தினந்தோறும் எழுதிக் கொண்டிருந்தீர்கள். என்னைப் போன்றவர்களைப் பார்த்து சோம்பறிகளே என்னோடு எழுத்தில் போட்டி போட முடியுமா என்று மறைமுகமாக சவால் விட்ட ஒருவராகவே உங்களை நான் எப்போதும் நினைப்பதுண்டு.

இவ்வாறு தினம் எழுதி, எழுத்தின் மூலமே உயிர்ப்பை வைத்துக் கொண்டிருந்த உங்களைப் பார்த்த ஒருவன் என்பதால், உங்களுக்கு கொஞ்ச கொஞ்சமாக மூளை இயக்கமற்றுப் போகின்றது என்று நேற்று அறிந்தபோது உங்களுக்கு மானசீகமாக விடைகொடுக்க விரும்பினேன். ஏனெனில் அவ்வாறு ஒரு நிலையுடன் எழுத முடியாதிருக்கும் ரமேஷை என்னால் கற்பனை செய்து கொள்ள முடியாதிருந்தது. ஒருவகையில் நீங்கள் இந்த வாழ்க்கை போதுமென்று ஓர் இறுதி  முடிவை எடுத்துவிட்டீர்கள் என்பதையே நான் உணர்ந்தேன்.

கடந்த வருடம் உங்களைத் தேடி 'பிரபஞ்சன் விருது' வந்தபோது அவ்வளவு அகமகிழ்ந்து எழுதியிருந்தேன். இந்த வருடம் விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோதும் அதே மகிழ்வை நானடைந்திருந்தேன். நீங்களோ நானோ ஜெயமோகனின் நம்பிகைகளுக்கும் விஷ்ணுபுர விருதுக்கும் இன்னொரு முனையில் இருப்பவர்கள். அவ்வாறு  இருக்கும் நீங்கள் அவர்களால் தவிர்க்கவோ/மறுக்கவோ முடியாத ஆளுமை என்பதை நிரூபிக்கும்போது உங்களை ஒரு முன்னோடியாக நினைக்கும் என்னைப் போன்றவர்கள் மகிழாமலா இருப்போம்.

ஒவ்வொரு நாட்டுக்கும் போகும்போது அங்கே இருக்கும் முக்கிய எழுத்தாளர்கள்தான் முதலில் எனக்கு நினைவுக்கு வருவார்கள். புதுச்சேரி என்று நினைத்தவுடன் நீங்கள், பிரபஞ்சன், கி.ரா, ராஜ் கெளதமன் என்று உடனே நினைவுக்கு வருவீர்கள். ஆனால் ஒவ்வொருவராக இப்போது விடைபெற்றுப் போய், எனது புதுச்சேரியை இப்போது வெறுமையாக அல்லவா நீங்கள் அனைவரும் கைவிட்டிருக்கின்றீர்கள்.

உங்களைச் சந்தித்தபோது, புதுச்சேரிக்கு இப்போது முதன்முறையாக வருகின்றேன் என்ற உணர்வில்லாது எல்லாத் தெருக்களும், கோயில்களும், அருகன் மேடுகளும் எனக்குப் பரிட்சயமாக இருக்கின்றதென்றேன்.

அந்தளவுக்கு உங்களதும், பிரபஞ்சனினதும் எழுத்துக்களிலும் நான் புதுச்சேரியை அடையாளங் கண்டிருக்கின்றேன். ராஜ் கெளதமனின் 'லண்டனில் சிலுவைராஜ்'ஜில் அரைவாசிக்கு மேலே புதுச்சேரி அனுபவங்கள் அல்லவா வந்திருக்கும். ஏதோ ஒரு பாரில் மது அருந்திக்கொண்டு நீங்கள், பிரபஞ்சன், ராஜ் கெளதன் எல்லோரும் இருப்பது போலவும் நான் அங்கே வருவதுபோலவும் கற்பனை செய்வது எவ்வளவு சுகமாக இருக்கின்றது. 'Midnight in Paris' திரைப்படத்தில் முக்கிய பாத்திரம் கடந்தகாலத்தில் பாரிஸ் தெருக்களில் உலாத்தித் திரிந்த பிரபல எழுத்தாளர்களைச் சந்திப்பதுபோல உங்கள் அனைவரையும் சந்திப்பதில் என்ன தவறிருக்கப் போகின்றது.

(பிற்காலத்தைய)உங்களதும், நகுலனதும், பிரமிளினதும், ஏஜே (கனகரட்ன)வினதும், ஓவியர் கருணா வின்சென்ட்டினதும் தனித்த வாழ்வானது எனக்கு வியப்பையும் திகைப்பையும் ஒரு சேரக்கொடுப்பவை. மனிதர்கள் ஏதோ ஒருவகையில் தனிமைப்பட்டவர்கள்தான். ஆனால் நீங்கள் அனைவரும் (காரணங்களோடோ/ காரணங்களின்றியோ) இப்படியொரு வாழ்வைத் தேர்ந்தெடுத்தவர்கள் என்பதால் எனக்கு உங்கள் அனைவர் மீதும் அவ்வளவு காதலும், கருணையும் இருக்கின்றது. அதைச் சொற்களால் வரைந்து காட்டிவிடவும் முடியாது.

ரமேஷ் உங்களை நேரில் இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்துவிட்டு  வந்தபோது இப்படி எழுதியிருப்பேன்:

"அடுத்தநாள் ரமேஷ் பிரேதனைப் பார்க்கப் போயிருந்தேன். ரமேஷைச் சந்திக்கும்வரை அவரது புனைவு காட்டிய வழியே உலாத்திக் கொண்டிருந்தேன். மணக்குள விநாயகர் கோயில், அங்காளம்மாள் கோயில், கிட்டத்தட்ட வெள்ளை நகரின் அனைத்துத் தெருக்களும் எனக்கு நான் புனைவிற்குள்ளா அல்லது நிஜத்திலா உலாவிக் கொண்டிருக்கிறேன் என்ற தோற்ற மயக்கத்தைத் தந்திருந்தது..

என் பிரிய ரமேஷ் பிரேதனை, என் எழுத்துக்களில் பாதிப்புச் செய்யும் ஓர் ஆளுமையை இறுக்கி அணைத்துக் கொண்டேன். எப்படி எனக்கு அந்தத் தியானச் சாமியார் ஆசிர்வதித்தாரோ அவ்வளவும் ரமேஷிற்குள் கடத்தப்பட வேண்டும் போன்று நெகிழ்ந்திருந்தேன். அவரோடு பேசிய சில மணித்தியாலங்கள் என்றும் என் நினைவில் நிற்கும். ரமேஷ் இன்று இருக்கும் நிலைமை நம் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை."


கடைசியாக சில நாட்களுக்கு முன் 'உம்பர்தோ எக்கோ' பற்றிய என் பதிவில் உங்கள் ஆக்கமொன்றைக் குறிப்பிட்டபோது,  நீங்களும் (பிரேமும்) சேர்ந்து எழுதிய 'பேச்சு-மறுபேச்சில்' வந்த கட்டுரையல்ல, அது 'கட்டுரையும் கட்டுக்கதையும்' தொகுப்பில் வந்தது என்று என்னைத் திருத்தினீர்கள். இனி யார் என்னில் இப்படி உரிமை எடுத்துக் கொண்டு என் தவறுகளைத் திருத்துவார்கள். எனது பதின்மங்களில் இருந்து உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டிருந்த ஒரு மாணவனை விட்டு செல்வதற்கு ஏன் இவ்வளவு அவசரம் ரமேஷ்?

உங்கள் மறைவை அறிந்தபோது கண்ணீரில்லாது விடைகொடுக்கவேண்டும் என்று சொல்லி என் நண்பரின் அழுகையைக் கூட நிறுத்திய எனக்கு இப்போது இதை எழுதும்போது  ஏன் என்னை அறியாமல் கண்ணீர்த்துளிகள் உருட்திரண்டு வழிகின்றது.

என் நண்பர் அடிக்கடி சொல்வார், 'நான் உன்னை எந்தளவுக்கு நேசிக்கின்றேன் என்பதை நீ ஒருபோதும் அறியப்போவதில்லை' என்று. அப்படித்தான் ரமேஷ் உங்கள் எழுத்துக்கள் மீதான என் காதலை உங்களுக்குச் சொல்லியும் தீராதவளவுக்கு எனக்குள் இருந்திருக்கின்றது என்பதை இப்போது உணர்கின்றேன்.

நீங்கள் கற்றுத் தந்தவற்றையையும், உங்களின் தோழமையையும் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன். உங்களை இந்த வாழ்வில் சகபயணியாய் நான் சந்தித்து எனது நல்லூழ்.

சென்று வாருங்கள் ரமேஷ்!

*****
(நன்றி: 'ஏர்' - அரையாண்டு இதழ்)
புகைப்படம்: இணையம்

றிஹானா நௌபரின் பதிவு

Sunday, January 25, 2026

 

இளங்கோவை நேரில் சந்தித்தும் பேச வாய்ப்பு கிடைக்காமைக்குக் காரணம் நான் அவரை அடையாளம் காணவில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் இவர் யார்? எனக் கேட்ட போது அருகில் இருந்த வடகோவையாரை கூறியவர்கள் இளங்கோவை ஒரு கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்று மட்டுமே கூறினார்கள் . பெயரைக் கூட அவர்கள் குறிப்பிடவில்லை.

முகநூலில் அவ்வப்போது அவரது எழுத்துக்களை வாசித்திருந்தாலும் அவரது “பேயாய் உழலும் சிறு மனமே” மற்றும் “நான் உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்” ஆகிய நூல்களை அண்மையில் தான் வாசிக்கத் தொடங்கினேன்.
 


இரண்டும் வேறுபட்ட நூல்கள். முதலாவது அவரது வாழ்வியல் அனுபவங்கள் சினிமா இசை என செல்கின்றது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. உண்மையில் இளங்கோவின் சிறுகதை எழுத்து நடை கதையை நகர்த்தியுள்ள விதம் எல்லாம் சுவாரசியமானவை.

புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்களின் அன்றாட மனநிலை, தொழில் வாழ்க்கை, உறவுகள், காதல் அத்தோடு அரசியல் சார்ந்தும் சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன.
இளங்கோவின் இரண்டு நூல்களுக்கும் இடையிலான வாசிப்பில் பல விடயங்களை ஆய்வு செய்ய வேண்டி இருந்தது. அது அரசியல் ரீதியாகவோ சினிமா சார்ந்ததாகவோ அமைந்திருந்தது.

கதைகள் இடையே அவர் குறிப்பிட்டுள்ள தத்துவக்கருத்துக்கள் உண்மைத்தன்மையாக இருந்தாலும் நகைச்சுவை கலந்திருந்தது.
வலி மிகுந்த சம்பவங்களையும் சுவாரஸ்யமாக நகைச்சுவை கலந்து வாசகர்களை மிகவும் துக்கத்திற்கு உள்ளாக்காமல் நாசுக்காக கதைகளை கொண்டு சென்றிருக்கும்  பாங்கு வித்தியாசமாக இருக்கின்றது. Tourist family திரைப்படத்தை பார்த்த போதும் அந்த உணர்வு இருந்தது.  

கதைகளிலோ திரைப்படங்களிலோ திடீர் திருப்பம் இருக்கும் போது ஆர்வம் மேலோங்கும். இளங்கோவின் கதைகள் அவ்வாறு தான் இருக்கின்றன. ஒவ்வொரு கதைகளும் எதிர்பாராத திருப்பங்களையோ முடிவுகளையோ கொண்டிருக்கின்றன.

எத்தனை பரபரப்புகளுக்கு மத்தியிலும் வலிகளுக்கு நடுவேயும் வாழ்க்கையை நேசிக்கவும் ஒவ்வொரு கணப்பொழுதையும் விரும்பியவாறு கழித்திட விரும்புபவர்களுக்கு இக்கதைகள் நிச்சயம் பிடித்துப் போகும்.


 

திருகோணமலையில் புத்தர் சிலை

Thursday, December 25, 2025

 

இப்போது திருகோணமலையில் மீண்டும் புத்தர் சிலை வைப்பது பேசுபொருளாகியிருக்கின்றது. இதேமாதிரி 2000களின் மத்தியிலும் திருமலையில் புத்தர் சிலையைப் பலவந்தமாக வைத்ததும், 'ஜாதிய ஹெல உறுமய' என்கின்ற இனவாத சிங்களக் கட்சி அதன் முன்னணியில் நின்றதும் பலருக்கு ஞாபகமிருக்கலாம். அந்தப் புத்தர் சிலை அவ்வளவு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இப்போது நிறுவப்பட்டுவிட்டது. எவ்வளவு காலத்துக்குத்தான் மக்கள் இவ்வாறான ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகப் போராட முடியும். அதுவும் பெளத்த பீடாதிபதிகளின் கட்டளைகளின் ஒரு சொல்லையேனும் மறுக்காத ஒரு அரசாகவே இலங்கை சுதந்திரமடைந்த 1940களிலே இருந்து சிங்கள அரசுக்கள் ஆட்சிப்பீடமேறியபடி இருக்கின்றன. நாட்டின் பிரதமரையே துப்பாக்கியேந்திய ஒரு புத்தபிக்கு கொன்ற வரலாறு இலங்கையில் இருக்கின்றது.

அண்மையில் இலங்கைக்கு (2023) போனபோதும் திருகோணலையில் இப்படி ஒரு ஆக்கிரமிப்புப் புத்தர் சிலை நெல்சன் தியேட்டருக்கருகில் நிறுவப்பட முயற்சி நடந்ததும், மக்கள் எதிர்ப்பைக் காட்டியதும் ஞாபகத்தில் இருக்கின்றது. நான் அந்த தியேட்டரில்தான் அருகிலிருந்த சித்தி வீட்டிலிருந்து நடந்துபோய் ஒரு தமிழ்த்திரைப்படத்தின் முதல் காட்சி அன்று பார்த்திருக்கின்றேன்

இந்தக் கவிதை 2006இல் நிகழ்ந்த ஆக்கிரமிப்புப் புத்தருக்கு எதிராக எழுதப்பட்டது. பின்னர் எனது கவிதைத் தொகுப்பான 'நாடற்றவனின் குறிப்புகளிலும்' சேர்க்கப்பட்டது.  இருபது ஆண்டுகளாக அதே நிலைமைதான்.  இவற்றுக்கு மெளன சாட்சியமாக இருக்கின்றோம் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறு எதுவுமில்லை.

*

தீர்வு

***
புறாமலையில்
விஜயனால் தந்திரமாய் ஏமாற்றப்பட்ட வெஞ்சினமும்
தன் மூத்தகுடிகளை நிராதரவாய்க் கைவிட்ட துயரமும்
தோயத் தன்னைச் சிதைத்துக்கொண்டிருந்த
குவேனி
 நகரத்தெருக்களில் கால்களைப் பதிக்க
புழுதி சுழன்றாடி
நகரைக் கனவாய்ப் படர்ந்ததாம் மழை

கடற்கரையில்
கால்கள் நனைத்து சுண்டல் சுவைத்து
நெல்சன் தியேட்டரில் படங்கள் பார்த்து
நீ இன்னவின்ன இனமென்றில்லாது
பொதுச்சந்தையில் கலகலக்கும்
சனங்களின் மொழியில்
தன் துயரினைத் தொலைத்தாள்
குவேனி

கொத்துரொட்டிகளின் தப்பாத் தாளத்திலும்
பஸ்நிலைய பல்லினமொழிக்கீதத்திலும்
தன்னை உயிர்ப்பிக்கையில்
பலவந்தமாய்க் குடிவைக்கப்பட்ட புத்தரைக் கண்டு
இயற்கையை வழிபடும்
குவேனி கோபித்தாளில்லை
அவரையும் நேசிக்கத் தொடங்கினாள்
பேச்சுத்துணையாக்கி.

புத்தரும் குவேனியும்
நேவிக்கப்பல்கள் தொலைவில் மின்னும்
கடற்கரையில் கால்கள் புதைய
கரங்கள் கோர்த்து உலாவுகையில்
கோணேசரும் பத்திரக்காளியும்
காதற்கிறக்கத்திலும் பதட்டத்திலும்
இருப்பது கண்டு புன்னகைப்பதுண்டு

கோணேசர் பாவம்
இராணுவம் சூழவிருக்கும் அவருக்கும்
ஊரடங்குச் சட்டமுண்டு;
பின்னிரவு நீளமுன்னர் தன் தலம்
மீளவேண்டிய அவதி அவர்க்கு

சங்கமித்தா
புத்தரைச் சந்திக்க வந்தவொருபொழுதில்
எல்லாம் தலைகீழாயிற்று
குவேனியுடன் புத்தர் நட்பாயிருப்பதை
சகிக்கா சங்கமித்தா
உறுமய ஜாதிய நரிகளை உசுப்பிவிட
கொந்தளிக்கத் தொடங்கிற்று
மீண்டும் நகர்

அரசமரக் கிளைக்குப் பதிலாய்
சங்கமித்தாவின் கரங்களில்
கொடும் ஆயுதங்கள் முளைக்கத்தொடங்கின
கோணேசரருடன் காதல் சரசமாடிக்கொண்டிருந்த
காளியும் ஆடத்தொடங்கினாள்
தற்காப்பு ஆட்டம்

தம் இயல்பு மறந்து
காளியும் சங்கமித்தாவும்
ஊழிநடனம் ஆடுவது பொறுக்காது
இடைநடுவில் புகும் குவேனியையும்
கொத்துரொட்டித் தகட்டால் குற்றுயிராக்கி
நரிகளுக்கு நிகராய்
விழும் தலைகளுக்காய் தெய்வங்களும் அலைகின்றன
நாக்குகளைத் தொடங்கவிட்டபடி

பிறகு
புத்தர் குவேனி எனும்
இரு சடலங்கள்
காலப்பெருவெளியில் மிதந்து கொண்டேயிருந்தனவாம்
ஒரு சிறுதீவில்
அமைதி வருவது எப்படியெனும்
எளிய சூத்திரங்களைத் தம்முடல்களில்
சுமந்தபடி.

(April 18th, 2006)
***

 

வாசகர்கள்..!

Friday, November 07, 2025

 

மது ரமேஷ் பிரேதன் காலமானபோது அவர் குறித்து பகிரப்பட்ட பதிவுகளைப் பார்த்தபோது, ரமேஷ் உயிரோடு இருந்த காலங்களில் இவற்றில் ஒரு பத்துவீதமானவர்களாவது அவரை வாசித்துக் கொண்டிருக்கின்றோம் என்று அவரிடம் சொல்லியிருந்தால் எவ்வளவு அகமகிழ்ந்திருப்பார் என நினைத்துக் கொண்டேன். தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களின் நிலைமை அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் பலர் தமது வாழ்வின் பெரும்பகுதியை எழுத்துக்காக  காலங்காலமாக அர்ப்பணித்தபடி இருக்கின்றனர். அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரும் அங்கீகாரம் அவர்களின் படைப்புக்களைப் பற்றி வாசகர்கள் உரையாடும்போதுதான் அதிகம் நிகழ்கின்றது. அதுவே அவர்களைத் தமிழ்ச்சூழலில் சோர்ந்து போகாது தொடர்ந்து   உற்சாகமாக எழுத வைக்கின்றதாகவும் இருக்கின்றது.


பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு மிக நெருக்கமான சில வாசகர்களாவது இருப்பார்கள். நானென் சிறுவயதுகளில் பாலகுமாரனின் மூழ்கியிருந்தபோது வாசகரான தேவகோட்டை வா மூர்த்தி (?) என்பவரின் அநேக கடிதங்கள் முன்னுரை போல பாலகுமாரனின் நாவல்களில் பிரசுரிக்கப்பட்டபடி இருக்கும். பாலகுமாரனின் மீதிருந்த அன்பால், இப்படியொரு ஒரு தீவிர வாசகனாக என் கடிதம் ஒன்றாவது பிரசுரிக்க வேண்டுமெனக் கனவு கண்டிருக்கின்றேன். அவ்வாறு ஹென்றி மில்லருக்கு அனானிஸ், நபகோவுக்கு வேரா(Vera), தமிழில் பிரமிளுக்கு கால சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதனுக்கு தஞ்சை பிரகாஷ் என்று எண்ணற்ற வாசக உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


*


கொழும்பில் ஒரு கஃபேயில், எனது ப்யூகோவ்ஸ்கி கவிதைகள் நூல் பற்றிய உரையாடலுக்கு நண்பர்கள் வந்திருந்தார்கள். கஃபேயின் மேற்றளத்தில் ஒரு பத்து நண்பர்கள் இலக்கியம் பேசி கொண்டுவிட்டு, கீழே இறங்கி வந்தபோது அவரது காதலியை அறிமுகம் செய்து வைத்திருந்தார். நான், அவரையும் மேலே அழைத்து வந்திருக்கலாம் என்று சொன்னபோது, பரவாயில்லை என்று இருவரும் சொன்னார்கள்.


அந்த நண்பர் எனது 'மெக்ஸிக்கோ' வாசித்து, அதன் மீது அவ்வளவு நேசத்துடன் இருந்தார். அவருக்கு கிட்டத்தட்ட எல்லாப் பக்கங்களும் பாடமென்றளவுக்கு அதை ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வாசித்துமிருந்தார். அண்மையில்தான் இன்னொரு விடயமும் தெரிந்தது. அந்த நண்பர் தனது புத்தகங்களை காதலியின் வீட்டில் கொடுத்து வைத்திருக்கின்றார். அவ்வளவு வாசிப்பில் ஆர்வமில்லாத அவரின் காதலி தற்செயலாக 'மெக்ஸிக்கோ'வை எடுத்து வாசித்திருக்கின்றார். அது அந்தப் பெண்ணுக்கும் பிடித்ததால், இந்த நண்பர் 'ப்யூகோவ்ஸ்கி கவிதைகள்' நிகழ்வுக்கு வந்ததால், 'மெக்ஸிக்கோ' எழுதியவர் யாரென்று பார்க்க ஆவலுடன் வந்திருக்கின்றார். இது எனக்கு அப்போது தெரியாது. பின்னர் அந்த நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதைச் சொன்னார். அடடா இப்படியான ஒருவரை முறையாக வரவேற்கவில்லையே என எனக்குக் கொஞ்சம் வருத்தமிருந்தது.


இப்படித்தான் இன்னொரு வாசகர் இருக்கின்றார். அவர்தான் எனக்குக் கிடைத்த மிக இளம் வாசகர் என்று நினைக்கின்றேன். 'மெக்ஸிக்கோ' அவர் தனது பதினைந்து வயதுகளிலே வாசித்திருந்தார். அவரின் அக்காவின் சேகரத்தில் இருந்து எடுத்து வாசித்திருந்தார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் இந்த விடயத்தை இந்த 'இளம் வாசகனை'ப் பற்றி பகிர்ந்தபோது, 'மெக்ஸிக்கோ' அவரைப் போன்றவர்கள் வாசிக்க ஏற்ற நாவலா என்று ஒரு சிறு உரையாடல் எனது முகநூலில் போனது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம்.


அவர் இன்று பல்கலைக்கழகத்துக்கு முதலாமாண்டு போகின்ற மாணவன். 'மெக்ஸிக்கோ'வோடு மட்டும் நிற்காது எனது அண்மைய நூலான 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்' வரை வாசித்த வாசகர். தனது அக்காவோடு எனது எழுத்துக்கள் எப்படி மாறுதலடைந்து கொண்டு போகின்றது என்பதை எனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'சாம்பல் வானத்தில் மறையும் வைரவரை'த் தேடி வாசித்து உரையாடியிருக்கின்றார். அவரது அக்காவிற்கு தம்பி தன்னைவிட அதிகம் என் எழுத்துக்களை நுணுக்கமாக வாசிக்கின்றார் என்று திகைப்பு.


அண்மையில் கொழும்பில் அவர் வயதொத்ததவர்கள் கூடிப் பேசும் இலக்கியக் கூட்டத்திலும் தனக்குப் பிடித்த புத்தகம் என்று 'நானுன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருக்கிந்தார்' பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். இன்று கூட அந்தப் புத்தகத்தை யாரோ ஒரு சிங்களத் தோழிக்கு (அவர் எழுத்துக்கூட்டி தமிழை வாசிப்பவர்) கொடுத்து அந்தத் தோழி வாசித்துக் கொண்டிருந்தபோது இன்னொருவர் அதைப் பார்த்து, 'இளங்கோவின் நூலையா வாசித்துக் கொண்டிருக்கின்றீர்கள்' என்று சொல்லி அவர்கள் என் எழுத்துக்களை விவாதித்திருக்கின்றனர். அதன் முடிவில்தான் இந்த புதிய நண்பர் எனக்கு நேசத்தை ஒரு காணொளியாக அனுப்பி வைத்தார்.


பதின்மத்தின் விளிம்பிலும், இருபதுகளின் தொடக்கத்திலும் இருக்கும் ஒரு புதிய தலைமுறை (என் எழுத்தை வாசிப்பதால் மட்டும் அல்ல) நூல்களை வாசிப்பதும் உரையாடுவதும் நிறைவாக இருக்கின்றது. அவர்களினூடாக புதியவர்கள் எழுத வந்து தமிழ்ச்சூழலின் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தவும் கூடும். இப்படியான வயதுகளில்தான் அதுவரை நான் வாசித்தவற்றின் திசையை மாற்றிய எஸ்.பொவின் 'ஆண்மை'யையும், சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகளை'யும் கண்டடைந்திருக்கின்றேன். அவ்வாறு தொடங்கிய ஒரு புதிய வாசிப்பு எழுச்சியும் வீழ்ச்சியுமான என் அலைச்சறுக்கு வாழ்க்கையில் என்னை துயரங்களில் எப்போதும் மூழ்கவிடாது கரைசேர்த்திருக்கின்றது. 


இந்த இளையவர்களுக்கும், அவர்களின் வாசிப்பு, அவர்களின் தத்தளிப்புக்களின் மட்டுமில்லாது, இனிய தருணங்களுக்கும் துணை நிற்கட்டுமாக. இதுவே அவர்களை சிறந்த எழுத்தாளர்களாக நாளை ஆக்குமென நம்பிக்கையும் கொள்கிறேன்.


***
 

எனது புதிய இணையத்தளம் - www.elankodse.com

Monday, July 21, 2025

 

நண்பர்களுக்கு வணக்கம்!

 

எனது புதிய தளமான  www.elankodse.com இல் எனது ஆக்கங்களை இனி நீங்கள் வாசிக்க முடியும்.

 

நன்றி. 

****

ஒரு சந்திப்பு - இளவரசி

Friday, July 04, 2025

 

 அபூர்வமான சந்திப்புகள் அவ்வப்போது நாம் எதிர்பார்க்காமலே நடக்கும்
மதிற்பிற்குரிய எழுத்தாளர் Elanko DSe அவர்களின் சந்திப்பும் அவ்வாறே. அவருடைய ஆழமான,  பகடியான சமகால எழுத்துக்கள் எப்போதும் எனக்கு பிடித்தமானவை.


தோழைமையோடு வந்திருந்தவர் அவருடைய இரண்டு புத்தகங்களை “தாய்லாந்து ” மற்றும் “மெக்ஸிக்கோ” புத்தகங்களை கையளித்து அம்பை,  சூடாமணி,  எஸ் ரா  என உரையாடல் நீண்டது. 


நானும் மொன்றியல் எழுத்தாளர்கள் நடராசா அம்மா & வீணை மைந்தன் ஐயாவின் புத்தகங்களை வாசிக்க கொடுத்தேன். 


அத்தி பூத்தார் போல் நடக்கும் இது போன்ற புத்தகம் ,எழுத்து உலக மனிதர்களோடு உரையாடல் உள்ள நிறைவை அளிப்பது போல் அன்றாடம் அமைவதில்லை.


10 வயதேயான எனது மகனோடு சதுரங்கம் ஆடி சென்றபின்  அவருடைய புத்தகங்களை காட்ட “wow amazing cover and opt size for reading ” என சட்டென உதிர்த்தான் வார்த்தைகளை .. மகனின் முதல் விமர்சனம். 

 

தாய்லாந்து ” மற்றும் “மெக்ஸிக்கோ”  வாசிப்பு பயணம் முடித்து எனது அனுபவம் பகிர்கிறேன்.

 

நன்றி: இளவரசி இளங்கோவன்

கடிதங்கள் - 05

Tuesday, March 18, 2025

 

 அன்பு இளங்கோ,

 

இந்தப் பதிவு மிகவும் நேர்த்தியாகவும், பொறுப்பாகவும், மிகக் கவனமாகவும், மிதமாகவும் எழுதப்பட்டிருக்கிறது இளங்கோ. அப்படி எழுதப்பட்டிருந்தாலும், இது சொல்லும் வரலாறு திடுக்கிடலையும், துக்கத்தையும், ஆற்றாமையையும் ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு வன்முறையான வரலாற்றுக்கு உள்ளான ஒரு ஆள், எந்த மிகை உணர்வுக்கும் ஆளாகாமல், அல்லது அவற்றிலிருந்து தள்ளி நின்று கொண்டு, உண்மைச் சம்பவங்களை திரும்பிப் பார்த்து, அதை இப்படி எழுத முடிவதே எனக்கு ஆச்சரியத்தையும் ஆறுதலையும் கொடுக்கிறது. நீங்கள் உங்கள் நண்பர்களிடம், இலங்கைப் பின்புலம் கொண்ட அனுபவப் படைப்புகளை அனுப்புமாறும், அதைத் திரட்டி நீங்கள் தொகுப்பொன்று போட எண்ணமிட்டிருப்பதாகவும் முன்பு உங்கள் பக்கத்தில் படித்த நினைவு. நான் சரியாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறேனா? சரி என்றால் அந்த முயற்சி என்ன ஆயிற்று?

 

இந்திய ராணுவம் என்றில்லை, எந்த ராணுவத்தின் / மன்னர்களின் வெற்றிக் கதைகளை நான் கேள்விப்படும்போதும், அதற்கு எதிரில் நின்றவரின் உணர்வுகள் எப்படியாக இருந்திருக்கும், அவர்களின் வரலாறுகளில் அது என்னவென்று எழுதப் பட்டிருக்கும் என்று எண்ணிப்பார்ப்பது உண்டு. சமகாலத்தில் நடக்கும் பல வன்முறைகளுக்கும், முன்பு நடந்த வன்முறைகளுக்கும், நாங்கள் வரலாற்றை சமன் செய்கிறோம் என்ற ஒரு நியாயம் முன் வைக்கப் படுகிறது. 'Information is Wealth' என்று சொல்வார்கள், ஆனால் மனிதர்கள் தங்களுக்கு ஆதாயம் தரும் வரலாற்றுத் தகவல்களை மட்டுமே, தங்களை முன்நிறுத்திக் கொள்ள துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். இதை எல்லாம் யோசித்தால் நாம் இன்னும் ' blood for blood' என்ற காட்டுமிராண்டித்தனத்திலிருந்து முன் நகரவே இல்லை என்று தோன்றுகிறது. மன்னராட்சியிலும் போர் புரிந்தோம், மக்களாட்சியிலும் போர் புரிகிறோம். மக்கள்/தலைவர்கள், இப்படியான வன்முறையை உள்ளே வைத்துக் கொண்டு, அதற்கு ஒரு நியாயத்தையும் கற்பித்துக் கொண்டு இயங்கும் இந்த நிலையில், இவ்வளவு அதி வேகத் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு பயங்கர விளைவுகளை உண்டு பண்ணப் போகிறதோ என்று அச்சமாக இருக்கிறது. ஒருவேளை உடனடி விபரீதங்களிலிருந்து நமது தலைமுறை தப்பிக்கலாம், ஆனால் மெல்ல stew ஆகிக் கொண்டிருக்கும் இந்த பயங்கரத்திலிருந்து நமது குழந்தைகள் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறதா?

 

நானும், மகளும் அமரன் படம் பார்க்கலாமா வேண்டாமா என்று அந்தப் படம் வந்த புதிதில் விவாதித்துக் கொண்டிருந்த போது, அவள் என்னிடம் ராணுவத்தில் சேர்வது என்பதே தங்களைக் கௌரவத் தற்கொலைக்கு ஒப்புக் கொடுப்பது போலத் தான் என்றாள். ஒரு மேஜர் முகுந்த் இறந்து போனால், இன்னொரு முகுந்த் உடனடியாக தயாராகி படையில் சேர்ந்து விடுவார். இவர்கள் எல்லாம், யாரை, யாரிடமிருந்து காப்பாற்ற தங்கள் உயிரை மாய்த்து கொள்கிறார்கள்? ஏன் நாம் எல்லோரும் ஒற்றுமையாக சுமுகமாக வாழ முடியாது என்று கேட்டாள். இதே தான் எனது நிலைப்பாடு என்றாலும், அவள் எவ்வளவு தூரத்திற்கு ஆழமாக சிந்தித்திருக்கிறாள் என்று அறிந்து கொள்ளவும், இன்ன திசையில் உரையாடலை செலுத்த வேண்டும் என்ற எந்த முன் நோக்கமும் இல்லாமலும், நான் அவளுடன் கொஞ்சம் devil's advocate பாணியில் பேசிக் கொண்டிருந்தேன். நாடு என்று ஒன்று இருந்தாலே அதை பாதுகாக்க வேண்டும் அல்லவா? நாம் தென் பகுதியில் இருப்பதாலும், கடல் சூழப் பாதுகாப்பாக இருப்பதாலும் படையெடுப்புகளால் வட இந்தியாவைப் போல பெரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. மிகவும் சௌகரியமான இடத்தில் அமர்ந்து கொண்டு இப்படி பேசிக் கொண்டிருக்க முடிவதால் இராணுவத்தின் முக்கியத்துவம் குறித்து நாம் அறியவில்லை என்றேன். மேலும், என் நாடு என்று உரிமை கொண்டாடினாலே பிரச்சனை தான், அங்கே பொறாமையும் போட்டியும் வளரும், பிறகு அதைப் பாதுகாக்க ராணுவமும் வேண்டும் என்றேன். அதற்கு அவள், நாடு என்பது administration point of view யில் தேவைதான், பாகங்களாக பிரித்துக் கொண்டதால் resources யை சரியாக நிர்வகிக்க சுலபமாக இருக்கும். இது ஒரு புறம் இருக்கட்டும், எப்படியும் தேசங்கள் உருவாகி, கோடும் கிழித்தாகி விட்டது, இதில் அடுத்தவன் தேசமும் நமக்கும் வேண்டும் என்று எண்ணுவது என்ன நியாயம் என்றாள். இப்படி எங்கள் உரையாடல் தொடர்ந்த படி இருந்தது.

 

இங்கே உங்களுக்கு இன்னொரு அனுபவத்தை குறிப்பிட நினைக்கிறேன். எனது தோழி ஒருவரும் என்னைப் போல gentle parenting முறையைக் கையாள்பவர். தான் மட்டுமல்ல தன் குடும்பத்தினரும் அந்த முறையத்தான் கடைபிடிக்க வேண்டும் என்பதை அவர் இன்னும் உறுதியாக அதைக் கடைபிடிப்பவர். நமது ஊர்களில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு குழந்தைக்கு தம்பியோ. தங்கையோ பிறந்து விட்டால், அந்த குழந்தையைப் பார்க்க வருபவர்கள், 'உன்னோட தம்பி/தங்கச்சிப் பாப்பாவை நான் எடுத்துட்டு போயிடுவேன்' என்று விளையாட்டாக பேசுவதைப் போல வினையாக சீண்டுவார்கள். குழந்தைகளுக்கு அந்த வயதில் தங்களது பொருட்களின் மீதும், தன் குடும்பத்தின் மீதும் அதீதமான உடைமை உணர்வு இருக்கும். அப்போது மற்றவர், உனது வளையலைக் கொடு, கொலுசைக் கொடு, பாப்பாவை எடுத்துக் கொள்கிறேன் என்றால் அது அழத் துவங்கும் இல்லாவிட்டால் 'அடி'க்கத் துவங்கும். இந்த ஜென்ட்டில் பேரன்டிங்கில் வளரும் தோழியின் குழந்தையின் குடும்ப சூழலில், யாரும் எதை ஒன்றையும் என்னுடையது, உன்னுடையது என்று உரிமை கொண்டாடுவதில்லை. அதையேதான் அவளும் imitate செய்கிறாள். இது வரை home schooling ல் இருந்த அவள் தற்போது தான் பள்ளிக்கு செல்லத் துவங்கி இருக்கிறாள். அதே பள்ளியில் நானும் வேலை செய்வதால் என்னால் இவளை குடும்ப சூழல் மற்றும் பள்ளி சூழல் இரண்டிலும் கவனிக்க முடிகிறது. பள்ளியில் தனது பொருட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் அவள் எப்போதுமே முன் நிற்கிறாள். அவள் அவளது பொருட்களை உரிமை கொண்டாடுவதில்லை. குழந்தைக்கு இருக்கும் பற்றைப் போலத் தான் எனது நாடு, எனது மொழி, எனது மதம், இனம், குணம் என்ற எந்த வகையான உரிமை கொண்டாடல்களும்! எதன் ஒன்றின் மீதும் பற்று கொண்டிருந்தால், அது நம்மை நீ பெரிசா நான் பெரிசா என்ற போர்க்களத்திலேயே நம்மை நிறுத்தும். இதைத்தான் ஜித்துவும் சொன்னார்

 

“When you call yourself an Indian or a Muslim or a Christian or a European, or anything else, you are being violent. Do you see why it is violent? Because you are separating yourself from the rest of mankind. When you separate yourself by belief, by nationality, by tradition, it breeds violence. So a man who is seeking to understand violence does not belong to any country, to any religion, to any political party or partial system; he is concerned with the total understanding of mankind.”

 

நாங்கள் வேறு, நீங்கள் வேறு என்ற உணர்வை உள்ளே வைத்துக் கொண்டு இன்னொருவரிடம் பழகும் போது, உண்மையிலேயே மத நல்லிணக்கம் சாத்தியமா? இந்த கேள்விகளை நான் உங்களிடம் கேட்கிறேன் இல்லை இளங்கோ. எனக்கு நானே எனது புரிதலை திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன் என்று நினைக்கிறேன். நம்மைப் போன்று இப்படி சிந்திப்பவர்கள் மிக மிகக் குறைவு. அதனாலேயே எனக்கு உங்களிடம் பேச நிறைய இருக்கிறது.

 

சரி, குடும்ப அமைப்புகள், சமூகம், தேசங்கள் எல்லாமே உருவாகி விட்டன. இதை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தால், எனக்கு ஜித்து கிரிஷ்ணமூர்த்தியின் 'The Perfume of the teachings' யில் தொகுக்கப் பட்டிருக்கும் உரையாடல் நினைவுக்கு வருகிறது. அதில் கிரிஷ்ணமூர்த்தி, தனது UK, US, Indian Krishanamurti foundation யில் இருந்த ட்ரஸ்ட்டிக்கள் மற்றும் நண்பர்கள் சிலரை அழைத்து, தான் இறந்து போன பிறகு இந்த ட்ரஸ்ட்டுகள் என்ன ஆகும்? இந்த அமைப்புகளை தன் பொறுப்பில் இருந்து யார் நடத்தி செல்ல முடியும்? என்று கேள்வி கேட்டிருப்பார். கிரிஷ்ணமூர்த்தி ஒரு நெறியாளராக கேள்விகள் மட்டும் கேட்பார், அவர்கள் பதிலில் இருந்து திரும்பவும் இன்னொரு கேள்வி கேட்பார். இவரைக் குறித்த புரிதல் உங்களுக்கும் இருப்பதால், இது எத்தனை சிக்கலான கேள்வி என்று உங்களுக்கு தெரியும். அவர் எப்போதும் தன்னை தலைவன் என்றோ, குரு என்றோ முன்னிருத்திக் கொண்டதில்லை. The teachings are sacred என்று சொல்வாரே ஒழிய, அது தன்னுடையது என்று ஒருபோதும் உரிமை கொண்டாதியதில்லை. இப்போது யார் வழிநடத்துவார் என்ற கேள்விக்கு வரலாம். அங்கே தலைவன் concept கிடையாது. அதனால் ஒருவரை கைகாட்டி விட முடியாது. ட்ரஸ்ட்டிக்கள் /நண்பர்கள் என்ன பதில் சொன்னாலும், நான் நாளை இல்லை, K has died, இப்போது என்ன செய்வீர்கள் என்று திரும்ப திரும்ப அந்த சூழ்நிலையின் தீவிரத் தன்மையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை சிந்திக்க வைப்பார்.

 

அவர்கள் நாள் கணக்கில் அதை அலசுவார்கள். அதில், அனைத்து கிரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷன்களுக்கும் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும், அதாவது இந்திய பவுண்டேஷன்களின் செயல்பாடுகளில் UK,US பவுண்டேஷங்களும் (and vice versa) பங்குகொள்ள வேண்டும் என்று பேச்சு போகும்போது, இந்திய நடைமுறைகள் வேறு விதமாக இருக்கின்றன, புரிந்து கொள்வது சிரமமாக இருக்கிறது என்று மேற்கத்திய அமைப்பின் பொறுப்பில் இருப்பவர்களிடமிருந்து கருத்து வரும். (இதை சரியாக புரிந்து கொண்டு சொல்கிறேனா என்று தெரியவில்லை) இருந்தாலும் எனது புரிதலின் படி, அங்கே ஒரு அமைப்புக்கும், இன்னொரு அமைப்புக்கும் இருக்கும் கலாச்சார, மனப்போக்கு, நடைமுறை வேறுபாடுகள் குறிப்பிடப்படும். அப்போது அதை சமாளிக்க, சுழற்சி முறையில் ஒவ்வொரு கிரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷனுக்கும், மற்ற கிரிஷ்ணமூர்த்தி பவுண்டேஷனிலிருக்கும் ட்ரஸ்ட்டிக்கள் சென்று மாதக்கணக்கில் தங்கி இருந்து, நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் நடைமுறையில் ஒத்திசைந்து வருகிறதா என்று கண்காணிக்க வேண்டும். அப்போது உள்ளூர் கலாச்சார அனுபவமும், அறிமுகமும் கிடைக்கும், அப்படி ஒருவரை ஒருவர் ஆழமாக அறிந்து கொள்ளும் போது நமக்குள் கருத்துப் பரிமாற்றங்கள் எளிதாக இருக்கும் என்ற பரிந்துரை வரும். நான் இன்னும் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. ஆனால், இது எனக்கு என்ன சொல்கிறது என்றால், ஜனநாயகம் என்பதும் இப்படித் தானே இருக்க வேண்டும். உலக அமைதி காத்தல் எல்லாருடைய பொறுப்பும் தானே! உலக நாடுகளின் மக்கள் பிரதிநிதிகள், தலைவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி, பாரப்பா, நாம் செய்து கொண்டிருப்பது சரி தானா? இப்படியாகத் தொடர்ந்தால் நமது எதிர்காலம் என்ன என்று நேர்மையாக கலந்துரையாட வேண்டும் தானே? ஆனால், who will be the next big brother என்று தானே உலகம் போய்க் கொண்டிருக்கிறது.

 

முந்தா நாள், 'I don't feel at home in this world anymore' என்ற படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் பெண் ஒருவர் செவிலியராக நடித்திருப்பார். அவர், இந்த உலகத்தில் ஏன் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்கிறார்கள், ஏன் இவ்வளவு வன்முறை என்று யோசித்து துன்புறுவார். நானும் இப்படி பல முறை யோசித்ததுண்டு. அதன் விளைவாகத் தானோ என்னவோ நான் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டிருப்பது. எங்கள் பள்ளியில் ஒருவனுக்கு ஹிட்லரின் மீது அபாரமான பிரியம் இருக்கிறது. பொடியன் அவன், அவனுக்கு அவரைக் குறித்து எவ்வளவு தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவரது மீசை மீது அவனுக்கு ஒரு மோகம். அதைப் போலவே தனது மேலுதட்டின் மீது பேப்பரை ஒட்டிக் கொண்டு,'I am the Hitler' என்று சொல்லிக் கொண்டு சுற்றுவான். எனக்குப் பார்க்கும் போது சிரிப்பு வரும், ஏனென்றால், அவன் சொல்வது அவ்வளவு அழகாக இருக்கும்.

 

அவனிடம், நீ ஹிட்லராக விரும்பினால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள், அதாவது நீ, 'The Hitler who spread kindness' என்று பெயர் வாங்கக் கூடிய ஹிட்லராக இருக்க வேண்டும் என்றேன். அவனுக்கு என்ன புரிந்ததோ, அவனும் நிச்சயமாக என்றான். நாம் இன்றைக்கு இயங்கும் போது, நாளை இந்த பூமியில் இருக்கப் போகும் குழந்தைகளுக்காகவும் சேர்த்து பொறுப்புணர்வோடு இயங்க வேண்டும் இல்லையா? நமது தலைவர்க்ளுக்கும் இதை யாராவது gentle parenting செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதை சொன்ன போது என்னிடம் ஒரு தோழி நீ utopia வில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்றார். ஆனால், உலகம் அமைதிப்பூங்காவாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை தானே? மானுடமும், பூலோகமும் உய்வுற இது ஒன்றே வழி என்று சர்வ நிச்சயமாகத் தெரிகிறது. சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளும் போது தோள்களில் அமர்ந்து கொள்ளும் பாரம், செயல்படத் துவங்கும்போது மெல்லக் கரைகிறது இளங்கோ. உங்கள் பதிவு என்னை எப்படி எல்லாம் எழுத வைக்கிறது பாருங்கள். நீங்களும் அதைத்தான் உங்கள் பதிவில் சொல்லி இருந்தீர்கள், 'நமது நினைவுகளை, கற்பனைகளை விரிப்பதற்கான வெளிகளை உருவாக்குவதுதானே எழுத்து என்பதாக இருக்கவேண்டும்' என்று. அதைத் தான் உங்கள் எழுத்தின் மூலம் நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள். யாருக்கு என்ன வருமோ அதைப் பொறுப்பாகத் தொடர்ந்து செய்வோம். இதற்கு பொருந்தும் விதத்தில் ஒரு quote யையும் குறிப்பிட விரும்புகிறேன்.

 

“Never doubt that a small group of thoughtful, committed, citizens can change the world. Indeed, it is the only thing that ever has.”

― Margaret Mead

 

இன்னும் என்ன எல்லாமோ பேசத் தோன்றுகிறது இளங்கோ,,,, ஆனால், விடைபெறுகிறேன், மறுபடி எழுதும்வரை...

 

பிரியங்களுடன்,

இனியா

 

***************

 

அன்பின் இனியா,

 

உங்களின் பதிவு (கடிதம்) நிறைய முக்கியமான புள்ளிகளைத் தொட்டுச் செல்வதால், எங்கிருந்து தொடங்குவதென்று தயக்கமாயிருக்கின்றது. ஆகவே அந்தப் பதிவுக்குப் பிறகு பதிந்த காணொளியிலிருந்துதொடங்குகின்றேன். "20 வருடங்களில் நான் கற்றதை உங்களுக்குக் குறைந்த நிமிடங்களில் கூறுகின்றேன்" எனத் தொடங்கும் காணொளியை நான் ஏற்கனவே பார்த்துவிட்டு நண்பர்களிடம் பகிர்ந்திருக்கின்றேன்.

 

இந்தக் காணொளியைச் செய்யும் ஹித்திஸை 10 வருடங்களுக்கு முன்னரே அறிந்திருக்கின்றேன். நான் அப்போது பயணங்களைச் செய்பவர்களை விடாது பின் தொடர்ந்திருக்கின்றேன். காணொளிகள் அப்போது அவ்வளவு பிரபல்யம் ஆகாத காலம். மேலும் எனக்கு எழுத்துக்களிலிருந்து காட்சிகளை விரித்துப் பார்ப்பது பிடிக்குமென்பதால் பயணங்களை எழுத்துக்களில் பதிவு செய்பவர்க்கு முதலிடம் கொடுப்பேன். அந்தக் காலங்களில் ஹித்திஸ் இந்தியாவுக்குள் மிகக் குறைந்த செலவில் (நாளொன்றுக்கு ரூ 100 என்ற வகையில்?) backpacker ஆக பயணித்துக் கொண்டிருந்தார். அப்படிப் பயணித்தவர் பின் ஹரித்துவாரில் ஓரிடம் எடுத்து கோ(கா)ப்பிக் கடையை பயணிகளுக்காவென்று புறநகரொன்றில் நடத்திக் கொண்டிருந்தவர். அங்கு வரும் வெளிநாட்டவர்கள் தமது அடையாளங்களை விட்டுச் செல்லும் இடமாக அந்த கடையின் ஒரு சுவர் இருந்தது. என்றேனும் ஒருநாள் நானும் அந்தக் கஃபேக்கு இந்தியாவின் வடக்குக்குப் போனால் செல்லவேண்டும் என்று நினைத்தும் இருக்கின்றேன். சட்டென்று ஹித்திஸ் பயணியாக வந்த ஒரு ரூமேனியாப் பெண்ணுடன் காதல் வசப்பட்டு ரூமேனியாவுக்குப் போயிருந்தார். அதன் பின் அந்த கஃபேக்கு என்ன நடந்தது என்று அறியேன். அவர் அதன் பின்னர் ரூமேனியாவில் இருந்து யோகாக் காணொளிகளை பதிவு செய்யத் தொடங்கியபோது நான் அவரிடமிருந்து விலகி வரத்தொடங்கினேன். யோகா பிடிக்காதென்பதல்ல அர்த்தம். நான் இப்போதும் நேரங்கிடைக்கும்போது யோகா செய்பவன். ஆனால் அவரிடமிருந்து பெற இனி எதுவுமில்லையென்று விலகி விட்டிருந்தேன்.

 

இப்போது வேறொரு வடிவத்தில் ஹித்திஸ் வந்து நிற்பதை இந்தக் காணொளியினூடுதான் அண்மையில் பார்த்தேன். தெரிந்த முகமாக இருக்கின்றதென நினைவை மீட்டபோதுதான் இவையெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. இப்போது ஹித்திஸ் திருமணம் செய்த ரூமேனியாப் பெண்ணை விவாகரத்து செய்து இந்தியாவுக்கு வந்து தரிசு நிலத்தைக் காடாக்கும் முயற்சியில் இருக்கின்றார் என நினைக்கின்றேன். ஒருவகையில் அவரின் வாழ்க்கை ஒரு வட்டச் சுழற்சியை முடித்து இன்னொரு 'புதிய இலையாக முகிழ'த் (Turn over a new leaf) தொடங்கியுள்ளதோ தெரியவில்லை.

 

ஒருவகையில் இவ்வாறுதான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு வட்டத்தை முடித்து புதிதாகத் தொடங்குகின்றல்லவா? அந்தவகையில்தான் எனக்கு கனடாவில் இருக்கும் நான்கு பருவக்காலநிலை மிகப் பிடிக்கும். ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் ஒரு தெளிவான காலநிலை. இயற்கை தன் வட்டச்சூழற்சியை முடித்து ஒவ்வொரு பருவத்தைத் தொடங்குவது என்பது எவ்வளவு அழகு. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கின்றதல்லவா?

 

இதை எழுதும் இந்தக் கணத்தில் பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் தொடங்குகின்றதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. சூரியன் அவ்வளவு பிரகாசமாக இருக்கின்றது. குவிந்திருந்த பனிமலை மெல்ல மெல்லக் கரைய ஆரம்பிக்கின்றது. இலைகள் உதிர்ந்த மரங்களில் துளிர்கள் அரும்பத் தொடங்குகின்றன. இனி பறவைகள் வந்து பாட வசந்தகாலம் கோலாகலமாகக் களைகட்டும்.

 

*

 

இராணுவம்/தாய்நாடு குறித்த பெருமிதம் பற்றி உங்கள் மகள் வைத்திருக்கும் புரிதல்களும்/கேள்விகளும் அவ்வளவு அருமையானவை. நாமெல்லாம் இந்தப் புரிதல்களுக்கு வர எவ்வளவு காலம் எடுத்திருக்கின்றன. எமக்கு எல்லாவற்றையும் துவிதங்களாக (dichotomy) கற்றுத் தந்ததால் நாம் எப்போது பிரிவுகளைப் புரிந்துகொள்ள அதிகம் நேரத்தைச் செலவளிக்கின்றோமே தவிர, எப்படி இந்த இடைவெளியைக் குறைப்பதென்ற திசையில் நின்று யோசிப்பதேயில்லை.

 

இங்கு கனடாவில் வலதுசாரிகளின் கட்சியில் எமது தமிழர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள்; வெற்றிகளைச் சூடி எம்பிபிகளாகக் கூட வந்திருக்கின்றனர். நம்மவர்கள் பலருக்கு அவர்கள் பிரதிநிதிப்படுத்தும் கட்சியின் கொள்கைகளை விட, ஒரு தமிழர் அதில் நிற்கின்றாரே என கண்ணைமூடியபடி வாக்களிப்பார்கள். எனது அண்ணாவின் மகன் சில நாட்களுக்கு முன்கூட எப்படி நமது தமிழ் மக்கள் இப்படி முட்டாள்தனமாய் இருக்கின்றார்கள் எனக் கேட்டான். இத்தனைக்கும் அவன் எங்களைப் போல மார்க்ஸையும்,கம்யூனிஸத்தையோ, புரட்சிகளைப் பற்றியோ அறிந்தவனோ அக்கறைப்பட்டவனோ இல்லை. ஒரு எளிய அரசியல் தெளிவோடே நம்மைப் போன்றவர்கள் வலதுசாரிகளுக்கு வாக்களிப்பதையும், வேட்பாளர்களாக இருப்பதையும் அவன் கேள்விக்குட்படுத்துகின்றான்.

 

அதுபோலவே நீங்கள் குறிப்பிடும் குழந்தைகளாக இருக்கும்போதே பொருட்களைப் பகிர்ந்து கொள்வது என்று பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது எவ்வளவு அருமையானது. இந்தப் பொதுப் பகிர்தல்களை மறந்து உடைமையாக்குவது என்ற சிந்தனையால்தானே இன்று பெரும்பாலான இயற்கை வளங்கள் தனியாருக்குச் சென்றிருக்கின்றது. பெரும் நிறுவனங்கள் இவ்வாறு உடமையாக்குவதன் மூலம் இயற்கை வளங்களை எப்படி வணிகப்படுத்துகின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை.

 

இந்தப் பகிர்ந்தளித்து வாழும் முறையை நாம் இங்கிருக்கும் பூர்வீகக்குடிகளிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியொருவர் பூர்வீககுடிகளின் நிலங்களை வாங்க விரும்பியபோது chief சியாட்டில் என்ற பூர்வீகத் தலைவர் எழுதிய இயற்கை வளங்கள் குறித்த கடிதம் அவ்வளவு பிரபல்யம் பெற்றதல்லவா? இந்த உடைமையாக்கம் எவ்வளவு வன்முறையாக மாறுகின்றது என்பதற்கு நமது குடும்ப அமைப்புக்களே மிகச் சிறந்த உதாரணம்.

 

குடும்பம் என்ற அமைப்புக்குள் எல்லோருமே 'பொருட்களாக' ஆக்கப்பட்டு, அங்கே அதிகாரமும், உடைமையாக்கமும் அதன் நீட்சியில் வன்முறையாக்கமும் எளிதில் நடைபெற்றிருக்கின்றது. இதெல்லாம் புதிய கருத்துக்களுமல்ல. மார்க்ஸ்/ஏங்கல்ஸ் காலத்திலேயே 'குடும்பம், தனிச்சொத்து, அரசு' ஆகியவற்றின் தோற்றம் பற்றி நிறையப் பேசப்பட்டுவிட்டன. ஆனால் முரண்நகை என்னவென்றால் மார்க்ஸை முன்னோடியாகக் கொண்டு புரட்சிகளும்/ஆட்சிகளும் நடத்திய நாடுகளில் கூட பெரும் மாற்றங்கள் இந்த விடயங்கள் குறித்து வரவில்லை என்பதுதான்.

 

இந்தக் கனவுகள் எல்லாம் ஏன் முழுமையான அளவில் சாத்தியமாகவில்லை என்று யோசிக்கும்போது, அனைவருமே புறவயமாக மாற்றங்களைச் சிந்திக்கின்றார்களே தவிர எவரும் தம்மளவில் மாற விரும்பாதவர்களாக இருப்பதைப் பார்க்கலாம். இங்கேதான் உங்களுக்குப் பிடித்தமான ஜித்து கிருஷ்ணமூர்த்தியோ, ஓஷோவோ, எனக்கு உவப்பான ஸென்னோ வருகின்றது. ஜேகே, நாராயணகுரு போன்றவர்கள் அமைப்புக்கு எதிராக இருந்தவர்கள். உங்களுக்கான விடுதலையை உங்களைத் தவிர வேறெவரும் தரமுடியாது என்று தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருந்தவர்கள். நமக்கெல்லாம் ஒரு நாடு விடுதலையானவுடன் (அல்லது சுதந்திரமான நாட்டிலிருந்தால்) எல்லாமே மாறிவிடுமென்றுதான் சொல்லித் தந்திருக்கின்றார்கள். அப்படியெனில் இன்று அமெரிக்காவிலோ, பிரான்ஸிலோ இருக்கின்றவர்கள் அனைவரும் உண்மையான விடுதலையுணர்வுடனா இருக்கின்றார்கள்? அல்லது இந்தியா காலனியாதிக்கத்திலிருந்து விடுதலையடைந்தவுடன் அங்கிருந்த மக்களெல்லோரும் முழுமையான விடுதலை அடைந்துவிட்டார்களா?

 

எனக்கு ஸென் வரலாறு பற்றி வாசிக்கும்போது ஒரு சுவாரசியமான விடயம் கிடைத்தது. ஸென்னின் முக்கியமான ஆசிரியர்கள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த நாடுகள் மிக மோசமான அரசியல் சூழ்நிலைகள் இருந்த நிலையில்தான் தோன்றியிருக்கின்றார்கள். அந்தக் கடும்சூழலில் இருந்து ஸென்னை மிக வலுவாக வளர்த்தெடுக்கின்றார்கள் என்பது. அப்படித்தான் எனது ஸென் ஆசிரியராகக் கொள்கின்ற தாய் கூட அமெரிக்க-வியட்னாமிய போரில் முகிழ்ந்த ஒரு முக்கிய ஆசிரியராகக் கொள்ள முடியும். ஆக ஒருவர் விடுதலை அடைவதற்கு புறச்சூழல் ஒரு பெரும் தடை அல்ல என்பது புரிகிறது.

 

நீங்கள் உங்கள் பதிவில், 'என்னிடம் ஒரு தோழி நீ utopia வில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்றார். ஆனால், உலகம் அமைதிப்பூங்காவாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை தானே? மானுடமும், பூலோகமும் உய்வுற இது ஒன்றே வழி என்று சர்வ நிச்சயமாகத் தெரிகிறது' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி ஒரு வழி தெரியும்போது பற்றிக்கொண்டு எழுவதுதானே நல்லது.

 

ஒன்றுமே செய்யாமல்/சிந்திக்காமல், குழப்பங்களுக்குள்/கவலைகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்காமல், நமக்கான ஒரு உலகை (அது நிகழுமா/நிகழாதா) என்கின்ற எந்த அக்கறையுமில்லாது அப்படியான ஒரு பாதையில் பயணிப்பதால் நாம் எதையும் இழக்கப் போவதில்லை.

 

"சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்ளும் போது தோள்களில் அமர்ந்து கொள்ளும் பாரம், செயல்படத் துவங்கும்போது மெல்லக் கரைகிறது." எவ்வளவு அழகானது உங்களின் இந்த வரிகள். லா-சூ சொன்னதுபோல, ஒரு நீண்ட பயணம் என்பது ஒரு காலடியை வைக்கத் தொடங்கும்போதுதான் ஆரம்பிக்கிறது அல்லவா? நாம் நினைத்த முடிவிடத்தை சென்றடைய வேண்டும் என்று கூட இல்லை. உற்சாகமாக நடந்து கொண்டிருப்பதுதான் முக்கியமானது.

 

இப்போது இதை எழுதத் தொடங்கியதே உங்களின் பதிவுக்கான மறு கடிதமாக. ஆனால் அது எந்தெந்தத் திசையிலோ இடம் மாறிப் போய்க் கொண்டிருக்கின்றது. ஒரு எளிய கடிதமே இப்படி இருந்தால் நமது சிக்கலான வாழ்க்கை அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

 

எனது ஆசிரியரான தாய் சொன்ன, 'இந்தப் பூமியில் இந்தக் கணத்தில் உயிரோடு இருப்பதைவிட வேறெந்த அற்புதமும் இல்லை' என்பதையே இங்கே நானும் நினைவுகூர்கிறேன்.

 

இதையெழுத் தொடங்கியபோது வசந்தகாலம் பற்றிச் சொன்னேன். பறவைகள் இனி வந்து பாடுமென்றும் குறிப்பிட்டேன். பாருங்கள், இந்தக் கடிதத்தை முடிக்கும்போது பறவைகளின் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. இன்றைய நாளில் எமக்காய் அருளப்பட்ட அற்புதம் அது!

 

அன்புடன்,

இளங்கோ

 

**********************

 

(பங்குனி, 2025)

 

மு.பொன்னம்பலம்

Sunday, December 22, 2024

 

 1.
மு.பொ எனப்படும் மு.பொன்னம்பலம் காலமாகிவிட்டார். மு.பொவின் மிகக் குறைவான நூல்களை நான் வாசித்ததிருக்கின்றேன். 'பொறியில் அகப்பட்ட தேசம்', சூத்திரர் வருகை' போன்ற கவிதைத் தொகுப்புக்களையும், 'கடலும் கரையும்', 'முடிந்து போன தசையாடல் பற்றிய கதைகள்' போன்ற கதைத் தொகுப்புக்களை வாசித்தபோதும், அவரின் புனைவுகளோ/கவிதைகளோ என்னைப் பெரிதும் ஈர்த்ததில்லை. அவரை ஒரு சிறந்த விமர்சகர் என்பதாகவே என் வாசிப்பில் அடையாளப்படுத்த விரும்புகின்றேன். அது போலவே மு.பொ இறுதிவரை தொடர்ந்து திறனாய்வுகள் மூலம் வாசகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் அவரின் விமர்சன முறைகள் சுருங்கியும் தேங்கியும் போனாலும், அவரது 'யதார்த்தமும் ஆத்மார்த்தமும்', 'திறனாய்வு சார்ந்த பார்வைகள்' போன்றவை நல்ல நூல்கள் என்பேன்.

மு.பொ, மு.தளையசிங்கத்தின் சகோதரர். ஒருவகையில் இளமையில் (37) இறந்துபோன மு.தளையசிங்கத்தை, மு.பொ தனது இறுதிக்காலம் வரை கொண்டு வந்து சேர்ந்தவர் எனக் கூடச் சொல்லலாம். மு.தவுக்கு மு.பொ போன்ற ஒருவர் இருந்தததால்தான் மு.பொவின் ஆக்கங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு 'மு.தளையசிங்கம் படைப்புக்கள்' என்று வெளிவந்தது. ஒருவகையில் மு.பொ,பேசிய பலது மு.தளையசிங்கம் அவரது காலத்தில் முன்வைத்தவைகள்தான். அந்த முழுத்தொகுப்பில் விடுபட்டு, மு.பொவினால் கண்டுபிடிக்கப்பட்ட மு.தவின் நாவலொன்று, பின்னர் 'கலிபுராணம்' என்ற பெயரில் வெளிவந்தது. அந்தளவுக்கு மு.தவின் ஆக்கங்களை மு.பொ தேடிச் சேகரித்தபடி இருந்திருக்கின்றார்.

அந்தவகையில் மு.தளையசிங்கம், மு.பொவினால் ஆசிர்வதிக்கப்படவர். ஏனென்றால் ஈழத்தில் பலரது எழுதப்பட்ட ஆக்கங்கள் முழுமையாகத் தொகுக்கப்படாது அந்தந்த எழுத்தாளர்களின் மரணத்தோடு அழிந்து போயிருக்கின்றன. ஈழத்தில் மட்டுமில்லாது தமிழ்ச் சூழலில் மிகவும் கவனம் பெற்ற க.சிவத்தம்பி கூட அவரது காலத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆக்கங்கள் உள்ளிட்ட பலது வெளிவராதது பற்றி கவலைப்பட்டார் என்று என் நண்பரினூடாக அறிந்திருக்கின்றேன்.

இன்றைக்கு சிவத்தம்பிக்கு எண்ணற்ற அபிமானிகளும், மாணவர்களும் இருந்தும் சிவத்தம்பியின் ஆக்கங்கள் முழுமையாக தேர்ந்த முறையில் பதிக்கப்படாமல் இருப்பது அவலமானது. இத்தனைக்கும் சிவத்தம்பியின் மார்க்ஸிய ஆய்வுகளை விட எனக்கு அவர் சங்கப்பாடல்களிலும், திரை/நாடகம் சார்ந்து எழுதியவையே மிகவும் பிடித்தமாக இருந்திருக்கின்றன. அந்த ஆக்கங்கள் கூட சிறப்பான முறையில் இந்தக்காலத்துக்கேற்ப வெளியிடாமல் இருப்பது கவலையான விடயம்.

பிற்காலத்தைய சிவத்தம்பி மார்க்ஸிய ஆய்வுகளை கறாராக கைக்கொள்வதை கைவிட்டு புதிய தத்துவங்களை அரவணைத்தவர். அவை பற்றிய தனது பார்வைகளையும் எழுதியவர். மேலும் அவர் இலக்கிய வாசிப்புக்களில் கூட மரபான மார்க்ஸிய ஆய்வுமுறைமைகளை விட்டு வெளிவந்தமையால்தான் அன்றைய காலத்தில் புதிய எழுத்துக்களோடு வந்த ரஞ்சகுமார், உமா வரதராஜன், அ.இரவி போன்றவர்களையும் அரவணைத்தவர். இனியாவது சிவத்தம்பியின் எழுத்துக்கள் மு.தளையசிங்கத்தின் படைப்புக்கள் போல முழுமையாகவே/ஒவ்வொரு துறைசார்ந்தோ வெளியிடப்படவேண்டும். அவ்வாறு வெளிவரும் காலத்தில் சிவத்தம்பியைப் பற்றிக் கட்டியமைக்கப்பட்டிருக்கும் மரபான மார்க்ஸியர் என்பதிலிருந்து கிராம்ஸி கூறுகின்ற organic intellectuals வகைக்குள் அவர் சிலவேளைகளில் வந்தடையவும் கூடும்.

2.
2000களின் தொடக்கத்தில் ஜெயமோகன் மு.தளையசிங்கத்துக்கு ஒரு கருத்தரங்கை ஊட்டியில் நடத்தி, அது சர்ச்சைக்குள்ளாகி முடிந்தபோது, மு.தளையசிங்கத்தின் வாழ்வில் நடந்த விடயங்களை சரியான முறையில் மு.பொன்னம்பலமே விரிவாகப் பதிவு செய்தவர். அதுபோலவே 'காலம்' இதழில் ஜெமோ, சு.வில்வரத்தினத்தின் கவிதைகளை முன்வைத்து எழுதிய ('அகமெரியும் சந்தம்'), கட்டுரைக்கு நல்லதொரு எதிர்வினையையும் அடுத்த 'காலம்' இதழில் மு.பொ எழுதியிருந்தார். சுந்தர ராமசாமி மீது பிரியம் வைத்திருந்த மு.பொ சுந்தர ராமசாமியைப் பல இடங்களில் தனது திறனாய்வுப் பார்வைகளில் குறிப்பிட்டபடியே இருந்திருக்கின்றார். பிரமிளுடன் அநேகம் விமர்சங்களால் முரண்பட்டுக் கொண்டிருந்த மு.பொ, பிரமிள் காலமானபோது எழுதிய அஞ்சலிக்கட்டுரை ('மீண்டும் ஒரு சத்திமுத்துப் புலவர்) மிகுந்த கவனத்துக்குரியது.

மு.பொ இவற்றோடு மட்டும் நிற்காது மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியவர். இனிவரும் காலங்களிலாவது மு.பொவின் ஆக்கங்களின் முழுத் தொகுப்பும் வெளிவரவேண்டும்.

மு.தளையசிங்கம் காலமானபோது அவரைக் காலத்தில் முன்னகர்த்திச் செல்ல சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம் போன்ற மு.தவோடு நேரடிப் பரிட்சயமுடைய அவருடைய அபிமானிகள் இருந்தார்கள். இப்போது மு.பொன்னம்பலத்தின் மரணத்தோடு, அந்த உடுக்கூட்டத்தின் கடைசித் தாரகையும் உதிர்ந்துவிட்டது. இனி அவரவர் அளவில் தனித்து ஒளிரும் நட்சத்திரங்களாக அவர்கள் மாறுவார்களா இல்லையா என்பதைக் காலம் சொல்லும்.

மு.பொவிற்கு எனது அஞ்சலி!

 
******

( Nov 09, 2024)