கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label ஓரின‌ப்பால். Show all posts
Showing posts with label ஓரின‌ப்பால். Show all posts

(அமெரிக்க) இராணுவ‌த்தில் ஓரின‌ப்பாலின‌ர்

Monday, March 29, 2010

சுருக்க‌மான‌ வ‌ர‌லாறு
இராணுவ‌த்தில் ஓரின‌ப்பாலின‌ர்

By: Kayla Webley
தமிழாக்க‌ம்: டிசே த‌மிழ‌ன்

அமெரிக்க இராணுவ‌த்தில் ஆண்/பெண் ஓரின‌ப்பாலர் ம‌ற்றும் இருபாலின‌ர் என‌ கிட்ட‌த்த‌ட்ட‌ 660,000 பேர் த‌ம‌து பாலிய‌ல் சார்பை (sexual orientation) ப‌ல‌வ‌ந்த‌மாக‌‍ ம‌றைத்து வேலை செய்துகொண்டிருக்கின்றார்க‌ளென‌ அண்மைக்கால‌ ஆய்வொன்று கூறுகின்ற‌து. பெப்ர‌வ‌ரி 02ல், 17 வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு, அமெரிக்க ஜ‌னாதிப‌தி ஓபாமா 'த‌ம‌து நாட்டை நேசிக்கும் ஓரின‌ப்பாலார், அமெரிக்க இராணுவ‌த்தில் வேலை செய்வ‌தை ம‌றுக்கும் ச‌ட்ட‌த்தை' ப‌ற்றி விவாதிக்க‌ வேண்டியிருக்கிற‌து எனப் பேர‌வையில்(Congress) பேசியிருப்ப‌தைக் குறிப்பிட்டாக‌ வேண்டும்.

பழ‌ங்கால‌ கிரேக்க‌த்தில் இது(ஓரின‌ப்பால்) ஒரு முக்கிய‌ விட‌ய‌மே அல்ல‌. பிளேட்டோ படையினரிடையே ஓரின‌ப்பாலை ஊக்குவிப்ப‌தால் படைகள் ப‌ல த‌டைகளைத் தாண்ட‌முடியுமென‌ எழுதினார்; 'காத‌ல் பிர‌யோச‌ன‌ம‌ற்ற கோழைக‌ளைக் கூட‌ உத்வேக‌முள்ள‌ வீர‌ர்க‌ளாக‌ மாற்றிவிடுகிற‌து' என்கிறார். ஆனால் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ பெரும்பாலான‌ ம‌ற்றைய‌ ப‌குதிக‌ளில் இது ம‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. நெப்போலிய‌னின் போர்க்கால‌ங்க‌ளில் இவ்வாறான‌ ந‌ட‌த்தைக‌ளுக்காய் ப‌ல‌ர் தூக்கிலிட‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். 1778ல் ஜென‌ர‌ல் ஜோர்ஜ் வாசிங்ட‌ன், ஒரு இராணுவ‌ வீர‌னை த‌ற்பால் ந‌ட‌த்தைக்காய் இராணுவ‌த்திலிருந்து நீக்கியிருக்கிறார்.

1916ல் ஜ‌க்கிய‌ அமெரிக்கா, ஓரின‌ப்பாலின‌ர் இராணுவ‌த்தில் ப‌ணியாற்றுவ‌தை த‌டை செய்திருக்கின்ற‌து. இர‌ண்டாம் உல‌க‌ ம‌கா யுத்த‌த்தின்போது, படையில் சேர்ப‌வ‌ரின் ந‌ட‌த்தைக‌ளையும், உட‌ல் உறுப்புக்க‌ளையும் அவ‌தானித்தே இராணுவ‌த்தில் சேர்க்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். விய‌ட்னாம் போர்க்கால‌த்தில் சில‌ர் ஓரின‌ப்பாலின‌ருக்கான‌ ந‌ட‌த்தைக‌ளைக் காட்டிய‌தால் சேர்க்க‌ப்ப‌டுவ‌து த‌விர்க்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து எனினும் எல்லாப்பொழுதும் இத‌னால் ப‌டையில் சேர்க்க‌ப்ப‌டாம‌ல் த‌விர்க்க‌ப்ப‌ட்ட‌துமில்லை; 1968ல் பெர்ரி வோக்கின்ஸ் என்ற‌ வோஷிங்ட‌ன் ந‌க‌ரைச் சேர்ந்த‌ 19 வ‌ய‌து இளைஞ‌ன் 'த‌ற்பால்சார்பு ந‌ட‌த்தையுடைய‌வ‌ராக‌' இருந்த‌போதும் 16 வ‌ருட‌ங்க‌ள் இராணுவ‌த்தில் ப‌ணிபுரிய‌ அனும‌திக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். பிற‌கு இவ‌ரின் பாலிய‌ல் சார்பால் இவ‌ர் இராணுவ‌த்திலிருந்து நீக்க‌ப்ப‌டடதற்காய் நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்குத் தொடுத்து 1990ல் அவ்வ‌ழ‌க்கில் வென்றுமிருக்கின்றார்

ஜ‌னாதிப‌தி பில் கிளிங்ட‌ன் 1993ல் ப‌த‌வியேற்ற‌போது, இராணுவ‌த்தில் சேரும்போது 'கேட்காதே, சொல்லாதே' (Don't ask, Don't tell) என்ற ச‌ட்ட‌த்தை இராணுவ‌ அலுவ‌ல‌ர்க‌ளின‌தும், பொதும‌க்க‌ளின‌தும் எதிர்ப்புக்க‌ளிடையே கொண்டு வ‌ந்தார். இம்முய‌ற்சி ஒர‌ள‌வு வெற்றி பெற்ற‌து. பேர‌வை இத‌ற்குப் ப‌திலாக‌, அமெரிக்க‌ இராணுவ‌த்தில் த‌ம‌து பாலிய‌ல் சார்பை வெளிப்ப‌டையாக‌ ஒருவ‌ர் அறிவிக்காத‌வ‌ரை அவ‌ர் இராணுவ‌த்தில் ப‌ணியாற்ற‌முடியும்' என்ற‌ இன்னொரு ச‌ட்ட‌த்தைக் கொண்டுவ‌ந்த‌து. ஆனால் பென்ர‌க‌ன் ஒருவ‌ரை இராணுவ‌த்தில் சேர்க்கும்போது அவ‌ர‌து பாலிய‌ல் சார்பைக் கேட்ப‌தை நிறுத்தினாலும், இராணுவ‌த்தில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ளிடையே தொட‌ர்ந்தும் (இவ்வாறான‌ ந‌ட‌த்தைக‌ளுக்கான‌) விசார‌ணைக‌ளை ந‌ட‌த்திக்கொண்டிருக்கின்ற‌து. 1994 ஆண்டிலிருந்து கிட்ட‌த்த‌ட்ட‌ 12, 000 இராணுவ‌த்தின‌ர் அவ‌ர்க‌ளின் பாலிய‌ல் சார்பினால் இராணுவ‌த்திலிருந்து நீக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள்.

ந‌ன்றி: TIME
(Timeல் வந்த இக்கட்டுரையை ஸ்கான் செய்து அனுப்பிய 'வைகறை'  ரவிக்கும் நன்றி)

*ச‌ந்தோச‌ம்; ஆனால் யாருக்கும் தெரியாம‌ல்.

Friday, January 29, 2010

1.
ந‌ம்மைப் போல‌ ச‌க‌ ம‌னித‌ரையும் நேசித்த‌ல் என்ப‌து அற்புத‌மான‌ ஒரு விட‌ய‌ம். ந‌ம‌க்குள்ள‌ எல்லாச் சுத‌ந்திர‌ங்க‌ளும் பிற‌ருக்கும் வேண்டும் என்று அவாவி நிற்ப‌து போல்,. ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் த‌னிம‌னித‌ உரிமைக‌ள் பாதிக்க‌ப்ப‌டும்போது ந‌ம‌தான உரிமைக‌ள் பாதிக்க‌ப்ப‌டுகின்ற‌ என்றரீதியில் குர‌ல்கொடுக்கின்ற‌வ‌ர்க‌ள்தான் உண்மையான‌ ம‌னிதாபிமானிக‌ள். ஆனால் உல‌கம் இவ்வாறு அழ‌காய், எல்லோரும் ச‌ம‌ உரிமைக‌ளுட‌ன் வாழ்கின்ற‌ ஒரு நில‌ப்ப‌ர‌ப்பாய் விரிந்திருக்க‌வில்லை என்ப‌துதான் ந‌ம் கால‌த்தைய‌ சோக‌ம். மைய‌வோட்ட‌த்திலிருந்து வில‌க்கி விளிம்புக‌ளாக்க‌ப்ப‌ட்டு, ப‌ல்வேறுப‌ட்ட‌ ம‌க்க‌ள் திர‌ள் இருப்ப‌தைப் பார்த்துக்கொண்டு நாம் 'இவ்வுல‌க‌ம் மிக‌ அழ‌கான‌து' என்று கூறுவ‌து ந‌ம்மை நாமே ஏமாற்றுவ‌துதான்.

புல‌ம்பெய‌ர் தேச‌ங்க‌ளில் ந‌ம‌து நிற‌ம்/நாம் பின்ப‌ற்றும் ம‌த‌ம்/ந‌ம் க‌லாசார‌ப் பின்புல‌ங்க‌ள் என்ற‌ ப‌ல்வேறு வ‌கைக‌ளை முன்வைத்து ஒடுக்க‌ப்ப‌டுகின்றோம் என்று உண‌ர்கின்ற‌ நாமே எம் ச‌மூக‌த்திலேயே சாதி, பாலின‌ம், பிர‌தேச‌ங்க‌ள் போன்ற‌வ‌ற்றை முன்வைத்து ப‌ல‌ரை விளிம்புநிலை ம‌னித‌ர்க‌ளாக்கி வைத்திருக்கின்றோம். இது குறித்து சிறிதும் அவ‌மான‌ப்ப‌டாது பிற‌ரை குற்ற‌ஞ்சாட்டுவ‌தில் ம‌ட்டும் கால‌ங்கால‌மாக‌ ந‌ம‌து த‌மிழ‌ர் 'பெருமை'க‌ளைப் ப‌றைசாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

'ஒடுக்க‌ப்ப‌டுகின்ற‌வ‌ர்க‌ளின் போராட்ட‌ங்க‌ள் ஒருபோதும் முடிவ‌தில்லை'என்ற‌ரீதியில் ப‌ன்முக‌வெளியில் ட‌்ன்ஸ்ர‌னின் உரை தொட‌ங்கிய‌து. டன்ஸ்ர‌ன் த‌ன்னை வெளிப்ப‌டையாக‌ ஓரின‌ப்பாலின‌ராக‌(gay) அறிவித்த‌ ஒருவ‌ர். 'சிநேகித‌ன்' என்ற‌ ஓரின‌ப்பாலின‌ருக்க்கான‌ ஓர் அமைப்பை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து ந‌ட‌த்திவ‌ருப‌வ‌ர். (எளிய‌ புரித‌லிற்காய் நான் இங்கே ஓரின‌ப்பாலின‌ர் அமைப்பு என்று குறிப்பிட்டாலும் அவ‌ர்க‌ள் LGTTIQQ2S என்ற‌ வ‌கைக்குள் வ‌ரும் அனைவ‌ரையும் உள்ள‌ட‌க்குகின்ற‌ன‌ர் என்ப‌தைத் த‌ய‌வுசெய்து க‌வ‌ன‌த்திற் கொள்ளவும்).

நாம் விளிம்பு நிலையாக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளாய் இருந்தாலன்றி, அவர்க‌ளின் ஒடுக்க‌ப்ப‌டும் வ‌லிக‌ளைப் ப‌ற்றியோ அத‌ற்கெதிரான‌ போராட்ட‌ங்க‌ள் ப‌ற்றியோ முழுதாய் விள‌ங்கிக்கொள்ள‌ முடியாது. ஆனால் அவ‌ர்க‌ள் பேசுவ‌த‌ற்கு வேண்டிய‌ வெளிக‌ளைத் திற‌ந்துவிடுவ‌தில்.., அவ‌ர்க‌ளை வெளிப்ப‌டையாக‌ பேச‌விடுவ‌தென.., ஆரோக்கிய‌மான‌ உரையாட‌ல்க‌ளைத் தொட‌ர்வ‌தில் அக்க‌றையாக‌ நாம் ப‌ங்குபெற‌முடியும். சாதி நிலையில் தான் ஒடுக்க‌ப்ப‌டுவ‌தை, ஒருவர் ஒரு பொதுவெளியில், ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ம‌ணித்தியால‌ங்க‌ளில் த‌ன‌து முழுக்க‌தையையோ வ‌லியையோ/ த‌த்த‌ளிப்புக்க‌ளையோ கூறிவிடுவார் என்று எதிர்ப்பார்க்க‌முடியாது. முத‌லில் தான் அவ்வாறு உரையாடுவ‌தை -தானாய் அல்லாத பிற‌ர்- எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்ற‌ ப‌ய‌ங்க‌ள் விளிம்புநிலையின‌ருக்கு ஏற்ப‌டுவ‌தும், தாம் சொல்லும் நிகழ்வுக‌ளைக் கொண்டு பிற‌கு த‌ன்னை அடையாள‌ப்ப‌டுத்தி, த‌ம்மை மேலும் ஒடுக்குவ‌த‌ற்கு கார‌ணிக‌ளாக‌ இவைக‌ள் அமைய‌க்கூடும் என்ற‌ நினைப்பும் ஒருவ‌ருக்கு ஏற்ப‌டுத‌ல் இய‌ல்பான‌து. நியாய‌மான‌தும் கூட‌.

ஆக‌வே இவ்வாறு விளிம்புநிலையில் உள்ளவர்களின் வாழ்வை அறிந்துகொள்ள‌ அக்க‌றைகாட்டாத‌ ச‌மூக‌த்தில், த‌ன‌து அடையாள‌த்தை வெளிப்ப‌டையாக‌ அறிவித்து ஒருவ‌ர் பொதுவெளியில் உரையாட‌த் த‌யாராகுகின்றார் என்றால் அது கூட‌ மிக‌ப்பெரும் போராட்ட‌த்தின்பின் வ‌ந்திருக்கக்கூடிய‌து என்ப‌தை நாம் முத‌லில் விள‌ங்கிக்கொள்ள‌ வேண்டியிருக்கின்ற‌து. மேலும் ஒடுக்க‌ப்ப‌ட்டு ச‌மூக‌த்திலிருந்து வில‌த்தி வைக்க‌ப்ப‌டும் ஒருவர் தான் க‌ட‌ந்துவ‌ந்த‌ பாதை முழுதையும் பொதுவெளியில் வைக்கும் சாத்திய‌ங்க‌ளும் மிக‌க்குறைந்த‌தாக‌ இருக்கின்ற‌து என்ப‌தையும் நாம் நினைவில்கொள்ள‌ வேண்டும். இவ்வாறான‌ புரித‌ல்க‌ளுட‌னேயே நாம்  விளிம்புநிலையிலிருப்ப‌வ‌ர்க‌ளுட‌னான‌ எம‌து உரையாட‌ல்க‌ளைத் தொட‌ங்க‌வேண்டும். அவ்வாறில்லாது ந‌ம‌க்கு இருக்கும் 'வெளி' அனைத்தும் அவ‌ர்க‌ளுக்கும் இருக்கிற‌து என்று சிறுபிள்ளைத்த‌ன‌ங்க‌ளுட‌ன் உரையாட‌ல்க‌ளை ஆர‌ம்பித்தால் நாம் இன்னும்  அவர்களை ஒடுக்குப‌வ‌ராய் ஆகிவிடும் ஆப‌த்துக்களுண்டு.

2.
பிற‌ அம‌ர்வுக‌ளைப் போலன்றி -தாம் பேச‌ ச‌பையிலிருப்ப‌வ‌ர்க‌ளைச் செவிம‌டுக்க‌ச் செய்யாது- ச‌பையிலிருப்ப‌வ‌ர்க‌ளையும் ப‌ங்குபெற‌ச் செய்யும் நோக்குட‌ன் டன்ஸ‌ர‌ன் அம‌ர்வை மாற்றிய‌மைத்து வித்தியாச‌மாக‌ இருந்த‌து. மூன்று கேள்விக‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டு ஒவ்வொரு குழுவின‌ரின‌தும் ப‌தில்களை அறிந்து, அத‌ன் மூல‌ம் ஒரு க‌ல‌ந்துரையாட‌ல் உற்சாக‌மாய்த் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌து. இதுவே பொதுவெளியில்(த‌மிழ‌ர் ம‌த்தியில்) செய்யும் முத‌ல் அம‌ர்வு என்ப‌தால் எளிதான‌ கேள்விக‌ளை முன் வைத்திருக்கின்றோம் என்ற‌ன‌ர் ட‌ன்ஸ்ர‌னும் அவ‌ருட‌ன் வ‌ந்திருந்த‌ பிற‌ நண்பர்களும்..

முத‌ற்கேள்வியாக‌ Gay, Lesbian என்ப‌வ‌ற்றிற்கு த‌மிழில் எவ்வாறான‌ சொற்க‌ள‌ ப‌ய‌ன‌ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்று கேட்க‌ப்ப‌ட்ட‌து. சில‌ர் ஓரின‌ப்பாலின‌ர்/ த‌ற்பால் சேர்க்கையாள‌ர் என்றும் வேறு சில‌ர் ஆண் ஓரின‌ப்பாலார், பெண் ஓரின‌பாலார் என்றும் கூறினர். இன்னொரு குழு ஓரின‌ப்பாலினருக்கு எவ்வாறான வ‌சைச்சொற்க‌ள் நம் சமூகத்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌ன‌ என்று அச்சொற்க‌ளையும் குறிப்பிட்டார்க‌ள். எங்க‌ள் குழுவில் இருந்த‌ ந‌ண்ப‌ரொருவ‌ர் த‌மிழ‌ர் ப‌ண்பாட்டில் ஆதிகால‌த்திலிருந்தே ஓரின‌ப்பால் இருந்து வ‌ந்த‌தென‌வும், ஆனால் ச‌ங்க‌ம் ம‌ருவிய‌ கால‌ங்க‌ளில் ம‌த‌ங்க‌ளின் ஆதிக்க‌த்தால் அவ‌ர்க‌ள் ஒடுக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என‌வும், ஆக‌வே ஓரின‌ப்பாலின‌ருக்குப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌ழைய‌ சொற்க‌ளை நாம் மீட்டெடுப்ப‌த‌ன் மூல‌ம் வ‌ர‌லாற்றை மீள‌க் க‌ண்டுபிடிப்ப‌தாய் இருக்குமென்ற‌ க‌ருத்தை முன்வைத்தார். மேலும் இன்றும் த‌மிழ‌க‌த்திலிருக்கும் (இந்தியா) ப‌ல‌ சிற்ப‌வேலைப்பாடுக‌ளில் த‌ற்பால்சேர்க்கை சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து முக்கிய‌ சாட்சிய‌ம் எனவும் சொன்னோம். அத்துடன் வ‌ர‌லாற்றிலிருந்து புழ‌ங்கிய‌ ஒரு சொல்லை எடுத்தாளும்போது 'இப்போதுதான் இந்த‌ மாதிரியான‌ உறவு/சேர்க்கை' என்று பாசாங்குகாட்டும் ம‌னித‌ர்க‌ளிற்கு உறுதியான‌ எதிர்வினை கொடுக்க‌ உக‌ந்த‌மாதிரியாக‌வும் இருக்கும் என்றும் கூறினோம்.

எல்லாக் குழுக்க‌ளின் க‌ருத்துக்க‌ளை தொகுத்து ட‌ன்ஸ்ர‌ன் த‌ன‌து சில‌ க‌ருத்துக்க‌ளையும் சேர்த்து LGTTIQQ2Sக்கு விரிவான‌ விள‌க்க‌ம் கூறியிருந்தார். தான் 90களில் அமைப்பாயிருக்கையில் LGBT ம‌ட்டுமே இருந்த‌தாக‌வும் இப்போது இன்னும் ப‌ல‌ விளிம்புநிலையின‌ரை உள்ளட‌க்கி தாமொரு உறுதியான‌ அமைப்பாக‌ மாறிவ‌ருகின்றோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதேவேளை எல்லாப் பிற‌ அமைப்புக்களிற்கும் இருப்ப‌தைப் போல‌ தாங்களிற்கும் ப‌ல‌ பிள‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌ என‌வும் அவ‌ற்றோடும் போராடவேண்டியிருக்கிற‌து என்றும் குறிப்பிட்டார். முக்கிய‌மாய் த‌ங்க‌ள் 'சிநேகித‌ன்' அமைப்பில் அதிக‌ இல‌ங்கைய‌ர்க‌ள் இருப்ப‌தால் தென்னிந்தியாவைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் அதிக‌ம் க‌வ‌னிக்க‌ப்ப‌டாது இருக்கின்றோம் எனறு நினைக்கும் நிலை இருக்கிற‌து என்றார்.

இர‌ண்டாவது கேள்வியாக‌ என்ற‌ எப்ப‌டி த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளில் Gay, Lesbians சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் கேள்வி கேட்க‌ப்ப‌ட்ட‌து. த‌மிழ்ப்ப‌ட‌ங்க‌ளே எங்க‌ள‌ ச‌மூக‌த்தின் முக‌ங்க‌ளாக‌ (அதாவ‌து அதிகமானோர் பார்ப்ப‌வ‌ர்க‌ள் என்ற‌வ‌கையில்) இருப்ப‌த‌னால் இந்த‌க்கேள்வி கேட்க‌ப்ப‌ட்ட‌தாய்க் கூற‌ப்ப‌ட்ட‌து. அரவாணிக‌ள்/திருந‌ங்க‌ளைக‌ள் போல‌ எவ்வித‌ மாற்ற‌முமின்றி மிக‌க்கேவ‌ல‌மான‌ முறையிலேயே அனைத்து விளிம்புநிலையின‌ரும் சித்த‌ரிக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தே ப‌ல‌ரின் பொதுக்க‌ருத்தாய் இருந்த‌து 'வேட்டையாடு விளையாடு'வில் வ‌ரும் வில்ல‌ன்க‌ளை ஓரின‌ப்பாலாக்கி ந‌கைச்சுவை என்ற‌ பெய‌ரில் அது வ‌ன்ம‌மாய் வெளிப்ப‌ட்ட‌து ப‌ல‌ரால் இங்கே சுட்டிக்காட்ட‌ப்ப‌ட்ட‌து. அதேபோன்று இவ்வாறான‌ விளிம்புநிலையின‌ரை இய‌ல்பாய்காட்டும் எந்த‌ சாத‌க‌மான‌ முய‌ற்சியும் த‌மிழ்ச்சூழ‌லில் காட்ட‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தையும் குறிப்பிட்டிருந்தோம்.

மூன்றாவ‌து கேள்வியாக‌, க‌ன‌டாவில் ஓரின‌ப்பாலின‌ர் திரும‌ண‌ம் செய்வ‌தை ஏற்றுக்கொள்ளும் ச‌ட்ட‌ம் குறித்து என்ன‌ நினைக்கின்றீர்க‌ள்? என‌க் கேட்க‌ப்ப‌ட்ட‌து. அனைவ‌ரும் இச்ச‌ட்ட‌ம் ஏற்றுக்கொள்ள‌க்க்கூடிய‌து; வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து என்று கூறினோம். அதேச‌ம‌ய‌ம் இந்த‌ச் ச‌ட்ட‌ம் இவ்வாறானவ‌ர்க‌ளை ச‌மூக‌த்தில் இய‌ல்பான‌வ‌ர்க‌ளாய் ஏற்றுக்கொள்ளாது அடையாள‌ப்ப‌டுத்தி வேறுப‌டுத்தி வைத்திருக்கும் அபாய‌முண்டு . என‌வே இவ்வாறான‌வ‌ர்க‌ளை இய‌ல்பாய் பொதுச்ச‌மூக‌ம் ஏற்றுக்கொள்ளும்வ‌ரை தொட‌ர்ச்சியான‌ போராட்ட‌ங்க‌ள் நிக‌ழ்த்த‌ப்ப‌டுத‌ல் அவ‌சிய‌மான‌து என்றும் க‌வ‌ன‌ப்ப‌டுத்தினோம். எனெனில் இனி ஓரின‌ப்பாலின‌ருக்கான‌ உரிமைக‌ளையோ அல்ல‌து அவ‌ர்க‌ள் ஒடுக்கப்ப‌டுவ‌தையோ குறிப்பிட்டால் 'அதுதானே ஏற்க‌ன‌வே ச‌ட்ட‌மிருக்கிற‌து;அது பார்த்துக்கொள்ளும் ' என்று -தொட‌ர்ச்சியாய் செய்ய‌வேண்டிய‌ போராட்ட‌த்தை- அட‌க்கிவிடும் வாய்ப்பு அதிகார‌வ‌ர்க்க‌ங்க‌ளிற்கும், ம‌த‌ம்சார்ந்த‌ அமைப்புக்க‌ளிற்கும் பொதுப்புத்தியிற்கும் ஏற்பட்டுவிடும் என்ற‌ அபாய‌த்தைச் சுட்டிக்காட்டினோம்.

3.
இக்கேள்விக‌ளுக்குப் அப்பால் பிற‌கு இன்னொரு கேள்வி டன்ஸ்ர‌னின் ந‌ண்ப‌ர்க‌ளால் முன்வைக்க‌ப்ப‌ட்ட‌து. அதாவ‌து பெற்றோராக‌ இருக்கும்/இருக்க‌ப்போகும் நீங்க‌ள் உங்க‌ள் ம‌க‌னோ/ம‌க‌ளோ தான் த‌ற்பாலின‌த்த‌வ‌ர் என்று கூறினால் உங்க‌ள‌து எதிர்வினை எப்ப‌டியிருக்கும் ?‌. ப‌ல்வேறு க‌ருத்துக்க‌ள் இக்கேள்வியை முன்வைத்துச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌. சில‌து மிகுந்த‌ அபத்த‌மாக‌வும் இருந்த‌ன‌. அதைத் த‌னிம‌னித‌ர்க‌ளின் க‌ருத்து என்றில்லாது பொதுப்புத்தி சார்ந்த‌ க‌ருத்துக்க‌ள் என்ற‌வ‌கையிலும் த‌ம‌து ம‌ன‌தில் உள்ள‌த்தை வெளிப்ப‌டையாக‌ச் சொல்கின்றார்க‌ள் என்ற‌வ‌கையிலும் அவ‌ற்றை ட‌ன்ஸ்ர‌னும் அவ‌ரின் ந‌ண்ப‌ர்க‌ளும் எடுத்துக்கொண்டாலும் என‌க்கு -த‌னிப்ப‌ட்ட‌வ‌ளவில்- எரிச்ச‌லாக‌வே இருந்தது. முக்கிய‌மாய் ஒருவ‌ர், சிறார்க‌ளாய்/ப‌தின‌ம‌ங்க‌ளில் இருக்கும்போது த‌ற்பால் சேர்க்கையில் க‌ட்டாய‌மாய் ஈடுப‌டுத்த‌ப்ப‌டுவ‌தால் அவ‌ர்க‌ள் பிற்கால‌த்தில் அப்ப‌டியாகிவிடும் அபாய‌ம் இருக்கிறது என்றார். இதை ம‌றுத்து சும‌தி அதை பாலிய‌ல் துஷ்பிர‌யோக‌மாக‌வே (sexual abuse) எடுக்க‌வேண்டுமே த‌விர‌ ஒரு உற‌வாய் எடுக்க‌வேண்டிய‌தில்லை என‌க்குறிப்பிட்டார். நானும் அதேயே ஆண்க‌ள்/பெண்க‌ள் த‌னியே விடுதிகள்/சிறைக‌ள் போன்ற‌வ‌ற்றில் இருக்கும்போது த‌ற்பால் உற‌வில் ஈடுப‌டுகின்றார்க‌ள். அது நிச்சய‌ம் பாலிய‌ல் வ‌ற‌ட்சியால் (sexual starvation) ஏற்ப‌டுவ‌தே த‌விர‌,இய‌ல்பான‌ ஓரினபாற் சேர்க்கையாய் இருப்ப‌தில்லை. எனெனில் பிற‌கு பொதுவெளிக்குள் அவ‌ர்க‌ள் வ‌ரும்போது த‌ம‌து பாலிய‌ல் உற‌வை இய‌ல்பாய்த் தேர்ந்தேடுக்கின்றார்க‌ள். ஆகவே பாலிய‌ல் வ‌றட்சியால் வ‌ரும் த‌ற்பால் உற‌வுக‌ளையும், இய‌ல்பாய் வ‌ரும் த‌ற்பால் உற‌வுக‌ளையும் ஒன்றாய்ச் சேர்த்துக் குழ‌ப்ப‌க்கூடாது என்றும் குறிப்பிட்டேன். அவ்வாறு பார்த்தால் ஆண்கள்/ பெண்க‌ள் என‌த் தனித்த‌னியே ஹொஸ்ட‌ல்க‌ளில் த‌ங்கியிருந்த‌வ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் பிற்கால‌த்தில் த‌ற்பால் சேர்க்கையாள‌ராக‌ இருக்க‌வெண்டும். ஆனால் அவ்வாறான‌ விகித‌ம் அதிக‌ம் இருப்ப‌த‌ற்காய் எந்த‌த் த‌ர‌வையும் நான் அறிந்த‌தில்லை என‌வும் குறிப்பிட்டேன் (நிகழ்வில் நான் சொல்ல‌வ‌ந்த‌தைச் ச‌ரியாக‌க் குறிப்பிட்டேனோ தெரிய‌வில்லை)

உரையாட‌லின் முடிவில், ட‌ன்ஸ்ர‌ன் த‌மிழ்ச்ச‌மூக‌த்தில் ஓரின‌ப்பாலின‌ராய் இருப்ப‌த‌ன் அவ‌திக‌ளையும் ப‌த‌ற்ற‌ங்க‌ளையும் முன்வைத்து சில‌ விட‌ய‌ங்க‌ளையும் கூறினார். உதார‌ண‌மாய் நான்கு ச‌கோத‌ர‌க‌ளுட‌ன் பிற‌ந்த‌ த‌ன‌க்கு த‌ன்னை த‌ற்பால் சேர்க்கையாள‌ர் என‌ பொதுவெளியில் அடையாள‌ப்ப‌டுத்த‌ல் (ஒர‌ள‌வு) எளிதாய் இருப்ப‌தைப் போன்று, ச‌கோத‌ரிக‌ளுட‌ன் பிற‌ந்த‌ ஒரு த‌ற்பால் சேர்க்கையாள‌ருக்கு எளிதாக‌ இருப்ப‌தில்லையென்றார். எனெனில் 'உன‌து ச‌கோத‌ர‌ர் த‌ற்பால்சேர்க்கையாள‌ர்' என்று அச்ச‌கோத‌ரிக‌ளின் திரும‌ண‌வாழ்வு ந‌ம் ச‌மூக‌த்தில் குழ‌ப்ப‌டும் சாத்திய‌ங்க‌ள் நிறைய‌ உள்ள‌தென‌க் குறிப்பிட்டார். மேலும் த‌மிழில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் உற‌வு முறை அழைப்புக்க‌ளிலும் சிக்க‌ல்க‌ள் த‌ங்க்ளைப் பொறுத்த‌வ‌ரை உள்ள‌தென்று குறிப்பிட்டார். உதார‌ண‌மாய் த‌ன‌து ச‌கோத‌ர‌ரின் ம‌க‌ன் த‌ன்னைச் சித்த‌ப்பா என்று அழைக்கின்ற‌வ‌ர். ஆனால் த‌ன‌து துணையை ச‌கோத‌ர‌ரின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகும்போது எவ்வாறு அவ‌ரை அழைப்ப‌து போன்ற‌ சிக்க‌ல்க‌ள் இருக்கின்ற‌தென்றார். சிறிய‌ விட‌ய‌ங்க‌ளாய் நாம் க‌வ‌னிக்காத‌ இம்மாதிரியான‌வை பெரும் 'அர‌சிய‌லாய்' இருப்ப‌தை நாம் உண‌ர்ந்துகொள்ள‌லாம். இவ‌ற்றுக்கு எல்லாம் தீர்வுக‌ளை அடைவ‌த‌ற்கு ஓரின‌பாலாருக்கு ம‌ட்டுமில்லை அவ‌ர்க‌ளைப் புரிந்துகொள்ள அக்க‌றைப்ப‌டும் ந‌ம‌க்கும் இருக்கின்ற‌து என்ப‌தை ஒருபோதும் ம‌றந்துவிட‌முடியாது.


புகைப்ப‌ட‌ங்க‌ள்: சென்ற‌வ‌ருட‌ம் (2009) றொறொண்டோவில் ந‌ட‌ந்த‌ Pride Week ன்போது எடுக்க‌ப்ப‌ட்ட‌வை

*ட‌ன்ஸ்ர‌னும், அவ‌ரின் ந‌ண்ப‌ர்க‌ளும் இத் த‌லைப்பிலேயே த‌ம‌து அம‌ர்வைச் செய்திருந்த‌ன‌ர்

(ந‌ம் சூழ‌லில் இவ்வாறான‌ விட‌ய‌ங்க‌ள் விரிவாக‌ உரையாட‌ப்ப‌டுவ‌தில்லை என்ற எண்ண‌த்தாலேயே நிக‌ழ்வில் நிகழ்ந்த‌ அனைத்தையும் இய‌ன்ற‌வ‌ரை தொகுத்திருக்கின்றேன்)

எதிர்ப்பே வாழ்வாய்...

Saturday, October 31, 2009

-Aimee & Jaguar ஜேர்ம‌னிய‌த் திரைப்ப‌ட‌த்தை முன்வைத்து-

வ்வொருவ‌ருடைய‌ வாழ்வும் அவ‌ர‌வ‌ர்க‌ள் வாழ்கின்ற‌ கால‌த்தையும், இருக்கின்ற‌ ச‌மூக‌ங்க‌ளையும் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. எல்லா நில‌ப்ப‌ர‌ப்புக‌ளுக்கும் ந‌ம்மால் எப்ப‌டி ப‌ய‌ணிக்க‌ முடியாதோ, அவ்வாறே ந‌ம்மால் எல்லோருடைய‌ வாழ்வையும் வாழ்ந்து பார்க்க‌வும் முடியாது. ஆனால் எம்மால் வெவ்வேறு வாழ்க்கை முறைக‌ளையும், க‌லாசார‌ப்  பின்புல‌ங்க‌ளையும் வேறுவ‌கைக‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முய‌ற்சிக்க‌ முடியும். அத‌ற்கு ந‌ம் எல்லோருக்கும் விசால‌மாய் சிந்திக்கும் ம‌னோநிலையும், தெரியாத‌தை தெரிந்து கொள்ளும் ஆர்வ‌மும், இவ‌ற்றுக்கு அப்பால் முன் முடிவுக‌ள் எதையும் எடுக்காத‌ ச‌கிப்புத்தன்மையும் அவ‌சிய‌மாகின்ற‌ன‌.

Aimee & Jaguar என்கின்ற‌ இத்திரைப்ப‌ட‌ம் இர‌ண்டாம் உல‌க‌ப்போரின்போது நட‌க்கின்ற‌ க‌தை. ஹிட்ல‌ரின் நாஸிப்ப‌டைக‌ள், அமெரிக்காவின‌தும் அத‌ன் நேச‌ப்ப‌டைக‌ளின‌தும் தாக்குத‌ல்க‌ளினால் தோல்வியுற்றுக் கொண்டிருக்கின்ற‌ கால‌க‌ட்ட‌ம்; விமான‌க்குண்டுக‌ள் அகோர‌மாக‌ ஜேர்ம‌னிய‌ ந‌க‌ர‌ங்க‌ளில் விழுந்து வெடிக்கின்ற‌ன‌. வெல்வ‌த‌ற்கான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இன்ன‌மும் உள்ள‌தென‌ அதீத‌ ந‌ம்பிக்கை கொள்கின்ற‌ நாஸிப்ப‌டையின‌ர் எல்லைக‌ளில் நின்று ச‌ண்டைபிடித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌ர்.


நான்கு குழ‌ந்தைக‌ளின் தாயான‌ லிலிக்கு (Lilly) நாஸிப்ப‌டையில் போரிட்டுக்கொண்டிருக்கின்ற‌ க‌ண‌வ‌னால், அவரின் உடல்சார்ந்த‌ வேட்கையைத் த‌ணிக்க‌ முடியாதிருக்கின்ற‌து. அந்த‌வேளையில் த‌லைம‌றைவாக‌ வாழ்ந்துவ‌ருகின்ற‌ யூத‌ப்பெண்ணான‌ பெலிசியினுட‌ன்(Felice), லிலிக்கு உற‌வு முகிழ்கின்ற‌து. தொட‌க்க‌த்தில் காத‌லும் காம‌மும் வ‌ழிய‌ வ‌ழிய‌ வ‌ருகின்ற‌ அநாம‌தேய‌க் க‌டித‌ங்க‌ள் ஒரு ஆணால் அனுப்ப‌ப்ப‌டுகின்ற‌தென‌ லிலி நினைக்கின்றார். பின்னாளில் அது பெலிசியினால் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌டித‌ங்க‌ளென‌க் க‌ண்டுபிடித்து பெலிசியோடு சேர்ந்து வாழ‌த்தொட‌ங்குகின்றார். இவ்வாறிருக்கையில் த‌லைம‌றைவாக‌ இருக்கும் பெலிசியின் ந‌ண்ப‌ரொருவ‌ர் நாஸி உள‌வுத்துறையால் சுட‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுகின்றார். அதிலிருந்து தொட‌ரும் விசார‌ணைக‌ளில் யூத‌ரான‌ பெலிசியையும் நாஸிக‌ள் தேட‌த்தொட‌ங்குகின்ற‌ன‌ர்.

இத‌ற்கிடையில் குறுகிய‌ விடுமுறையில் போர்முனையிலிருந்து திரும்பி வ‌ரும் லிலியின் க‌ண‌வ‌ன், லிலி‍-பெலிசியின் உற‌வைக் க‌ண்டுபிடிக்கின்றார். எனினும் நான்கு குழ‌ந்தைக‌ளுட‌ன் இருக்கும் லிலி த‌ன்னுட‌ன் திரும்பிவ‌ருவார் என்று க‌ண‌வ‌ன் ந‌ம்புகின்ற‌போது, லிலி த‌ன‌க்கு விவாக‌ர‌த்துத் த‌ரும்ப‌டி க‌ண‌வ‌னிட‌ம் வேண்டுகின்றார்.

விவாக‌ர‌த்துப் பெற்ற‌ பெற்ற‌ லிலியுட‌ன் பெலிசி சேர்ந்து குடும்ப‌ப் பொறுப்புக்க‌ளை எடுக்கும்போது, ஹிட்ல‌ரைக் கொல்வ‌த‌ற்கென‌ உட்க‌ட்ட‌மைப்புக்குள் நிக‌ழ்ந்த‌ Valkyrieதிட்ட‌ம் நிகழ்ந்து தோல்வியில் முடிகின்ற‌து (இந்தக் கொலைத்திட்ட‌த்தை வைத்து, அண்மையில் Tom Cruise ந‌டித்து சொத‌ப்பிய‌ ப‌ட‌ம் நினைவுக்கு வ‌ருகிற‌து) . அத‌ன்பின் நிக‌ழ்கின்ற‌ ப‌டுமோச‌மான‌ க‌ளையெடுப்பில், தாங்க‌ளும் அக‌ப்ப‌டப்போகின்றோம் என்று அஞ்சி -த‌லைம‌றைவாய் வாழும் -பெலிசியின் ந‌ண்ப‌ர்க‌ள் ஜேர்ம‌னியை விட்டு வெளியேறுகின்ற‌ன‌ர். த‌ங்க‌ளுட‌ன் கூட‌வே வ‌ர‌ வ‌ற்புறுத்தியும் பெலிசி, த‌ன் காத‌லியான‌ லிலியை விட்டு வ‌ர‌மாட்டேனென‌ ம‌றுக்கின்றார்.

இந்த‌ப்பொழுதிலேயே லிலியிட‌ம், பெலிசி தான் த‌லைம‌றைவாய் வாழுமொரு யூத‌ இன‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் என்ற‌ உண்மையைக் கூறுகின்றார். யூத‌ர்க‌ளைத் தேடி அழிக்கும் நாஸிக‌ளின் ப‌த‌ற்ற‌மான‌ காலக‌ட்ட‌த்தில் பெலிசியை லிலி ஏற்றுக்கொள்வ‌தோடு த‌ன‌து காத‌லியைத் த‌ன‌து பெற்றோர்க‌ளிட‌மும் அறிமுக‌ப்ப‌டுத்துகின்றார். ஓரின‌ப்பால் துணையாக‌ ம‌ட்டுமின்றி, ஒரு யூத‌ராக‌வும் இருக்கும் பெலிசியை, லிலியின் பெற்றோர் த‌ய‌க்க‌த்துட‌ன் ஏற்றுக்கொள்கின்ற‌ன‌ர்.

இறுதியில் பெலிசியின் கொல்ல‌ப்ப‌ட்ட‌ தோழியிட‌ம் க‌ண்டெடுத்த‌ த‌ட‌ய‌ங்க‌ளை வைத்து பெலிசியை லிலியின் வீட்டில் வைத்து நாஸிக‌ள் கைது செய்கின்றார். சிறையிலிருக்கும் பெலிசியை அவ்வ‌ப்போது லிலி ச‌ந்தித்தாலும் அவ‌ரால‌ பெலிசியை விடுத‌லை செய்ய‌முடியாதிருக்கின்ற‌து பின்ன‌ர் போல‌ந்திலிருந்த‌ ஒரு சித்திர‌வ‌தை முகாமில் எவ்வித‌ச் சாட்சிய‌ங்க‌ளுமின்றி பெலிசி காணாம‌ற்போய்விடுகின்றார்(கொல்ல‌ப்ப‌ட்டுவிடுகின்றார்).

பின்னாளில் த‌ன‌து முதிய‌ வ‌ய‌தில் லிலி த‌ன‌து பால்ய‌கால‌த் தோழியொருவ‌ரை முதியோர் இல்ல‌மொன்றில் ச‌ந்திக்கும்போதே இந்த‌க் க‌ட‌ந்த‌கால‌ நினைவுக‌ள் கிள‌ற‌ப்ப‌டுகின்ற‌ன‌. லிலியின் தோழி, பெலிசி கைதுசெய்ய‌ப்ப‌ட்டு காணாம‌ற்போன‌த‌ன் பிற‌கு, எவ்வாறு லிலியின் வாழ்வு க‌ழிந்த‌தென‌ வினாவுகிறார். பெலிசி கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌த‌ன் பிற‌கு தான் எந்த‌ப் புதிய‌ உற‌வுக்குள்ளும் போக‌வில்லை என்கின்ற‌ லிலி, பெலிசியோடு இருந்த‌ கால‌ங்க‌ளே உண்மையான‌ காத‌லோடு இருந்த‌ கால‌ங்க‌ளென‌க் கூறி ந‌ன‌விடை தோய்வ‌தோடு ப‌ட‌ம் முடிவ‌டைகிற‌து.


ப்ப‌ட‌ம் போரின் ப‌த‌ற்ற‌ங்க‌ளை ம‌ட்டுமில்லாது போர்க்கால‌ அழிவுக‌ளையும் காட்சிப்ப‌டுத்துகின்ற‌து. ஒரு கால‌த்தில் தேசிய‌த்தின் பேரால் வெறியூட்ட‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள், அழிவுக‌ள் த‌ம் வீட்டு வாச‌ல்க‌ளில் வ‌ந்துகொண்டிருப்ப‌தைத் துய‌ர‌த்துட‌ன் பார்த்த‌ப‌டி இருப்ப‌து ம‌ன‌தில் தைக்கும்ப‌டியாக‌ காட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ஒருகாட்சியில் குழ‌ந்தைக‌ளை மிருக‌க்காட்சிச்சாலைக்குக் கூட்டிச் செல்ல‌ப்ப‌டும்போது அங்கே மிருக‌க்காட்சிசாலையென்றிருப்ப‌து குண்டுத்தாக்குத‌லில் சிதில‌மாகிப்போன‌ ஒரு க‌ட்ட‌ட்ட‌த்தொகுதி ம‌ட்டுமே. குண்டுக‌ள் தொட‌ர்ச்சியாக‌ வீழ்ந்துகொண்டிருக்க‌, ம‌னித‌ர்க‌ள் உட‌ல‌ங்க‌ளைச் ச‌ர்வ‌சாத‌ர‌ண‌மாக‌ -வேற்றுக்கிர‌க‌வாசிக‌ள் மாதிரி- தாண்டிய‌ப‌டி ந‌ட‌மாடிக்கொண்டிருக்கின்றார்க‌ள். ஆனால் இவ்வாறாக‌ தோல்வியின் விளிம்பில் நாஸிக‌ள் நின்ற‌போதும் த‌ம‌து அதிகார‌த்தைக் கைவிடாது யூத‌ர்க‌ளை அர‌ச‌ இய‌ந்திர‌ம் வேட்டையாடிய‌படியே இருக்கின்ற‌து என்ப‌தும் காட்ட‌ப்ப‌டுகின்ற‌து. அதேபோன்று எல்லாமே கைந‌ழுவிப்போய்விட்டாலும் ஹிட‌ல‌ரின் தேசிய‌த்தின் மீது க‌டைசிவ‌ரை ந‌ம்பிக்கையிழ‌க்காது போர்முனைக்குப் போய் இற‌க்கின்ற‌ லிலியின் க‌ண‌வ‌னைப் போன்ற‌வ‌ர்க‌ளும் இருக்க‌த்தான் செய்கின்றார்க‌ள்.




த‌ம‌க்கான‌ ம‌கிழ்ச்சியை ம‌ட்டுமில்லாது த‌ம‌க்கான‌ பாலிய‌ல் விடுத‌லையைத் தேடுகின்ற‌வ‌ர்க‌ளாய் லிலியும் பெலிசியும் இருக்கின்றார்க‌ள். த‌ன‌து ம‌ர‌ண‌ம் வாச‌ல‌டியில் ஒரு நிழ‌லைப்போல‌ ம‌றைந்திருக்கிற‌து என்ப‌தைத் தெளிவாக‌ உண‌ர்கின்ற‌ பெலிசி அந்த‌ நாளைய‌ ம‌கிழ்வையோ அல்ல‌து த‌ன‌து காத‌லையோ கைவிட‌த்த‌யாரில்லாத‌வ‌ராக‌வே இருக்கின்றார். வாழ்வு என்ப‌து என்ன‌ என்கின்ற‌ கேள்வி தோழிக‌ளிடையே வ‌ரும்போது 'நான் இந்த‌ப்பொழுதைக் கொண்டாடிக்கொண்டிருப்ப‌வ‌ள் நாளையைப் ப‌ற்றி ஒருபோதும் க‌வ‌லைப்ப‌ட்ட‌தில்லை'யென‌ பெலிசி த‌ன்னைப் பிர‌க‌ட‌ன‌ம் செய்துகொள்ள‌வும் செய்கின்றார். இர‌ண்டாம் உல‌க‌யுத்த‌த்தின்போது ஜேர்ம‌னியில் கூட‌ த‌லைம‌றைவாக‌ மிக‌ப்பெரும் எண்ணிக்கையான‌ ஓரின‌ப்பால் பெண்க‌ள் இருந்த‌தை இப்ப‌ட‌ம் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்ற‌து. ஹிட்ல‌ரின் நாஸிப்ப‌டைக‌ள் யூத‌ர்க‌ளை ம‌ட்டுமின்றி ஹிப்பிக‌ள், ஓரின‌ப்பாலார் போன்ற‌ ப‌ல்வேறு விளிம்புநிலை ம‌னித‌ர்களை 'ப‌ரிசுத்த‌ இன‌ப்பெருமை'யில் க‌ண‌க்கில்லாது கொன்றொழித்த‌தை நாம் நினைவில் கொள்ள‌வும் வேண்டும். அதிகார‌ம் ம‌றுத்த‌ வாழ்க்கை முறைக்கு எதிராக‌ த‌ங்க‌ள் வாழ்வு முறையையே ஒரு போராட்டமாக‌ ஆக்கிக்கொண்ட‌ லிலியைப் போன்ற‌ எத்த‌னையோ பேர்க‌ள் கால‌ங்கால‌மாக‌ இருந்துகொண்டேதான் இருக்கின்றார்க‌ள்.


த‌மிழ் சூழ‌ல் சார்ந்து ஓரின‌ப்பால் குறித்து மிக‌க் குறைவான‌ உரையாட‌ல்க‌ளே நிக‌ழ்த்த‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஓரின‌ப்பால் குறித்து த‌மிழில் ப‌ட‌ங்க‌ள் ஏதாவ‌து வ‌ந்திருக்கின்றதா என‌ப் பார்க்கும்போது, சும‌தி ரூப‌ன் திரைக்க‌தை எழுதி, ரூப‌ன் இய‌க்கிய‌
You 2 என்ற‌ (30-45 நிமிட‌ங்க‌ள்) ஓட‌க்கூடிய‌ ஒரு குறும்ப‌ட‌மே வ‌ந்திருக்கின்ற‌தென‌த் தோன்றுகின்ற‌து. அந்த‌ப் ப‌ட‌த்தில் ந‌டிப்ப‌த‌ற்கும் ந‌டிகைக‌ள் தேட‌ தான் மிக‌வும் கடின‌ப்ப‌ட்ட‌தாய் சும‌தி எங்கோ ஓரிட‌த்தில் கூறிய‌தும் நினைவினிலுண்டு. ந‌டிகைக‌ள் இல்லாது போன‌போது திரைக்க‌தை எழுதிய‌ சும‌தியே அதிலொரு பாத்திர‌ம் ஏற்க‌வேண்டியும் இருந்திருக்கின்ற‌து. You 2 என்கின்ற‌ இக்குறும்ப‌ட‌த்தின் க‌தை, குழ‌ந்தைக‌ளுள்ள‌ ஒரு பெண் த‌ன‌து க‌ண‌வ‌னின் வ‌ன்முறையால் பாதிக்க‌ப்ப‌ட்டு இன்னொரு தோழியின் வீட்டில் வீட்டில் சென்று வாழ‌த்தொட‌ங்குகின்றார். க‌ண‌வ‌னை க‌ண்க‌ண்ட‌ தெய‌வ‌ம் என‌ ந‌ம்புகின்ற‌ -குடும்ப‌ வ‌ன்முறையால் மிக‌ மோச‌மாக‌ப் பாதிக்க‌ப்ப‌ட்ட‌- பெண் க‌ண‌வ‌னிட‌ம் மீண்டும் போக‌ விரும்புகின்ற‌வ‌ராய் தொட‌க்க‌த்தில் இருக்கின்றார்.

இவ்வாறான‌ நீட்சியில் இரு தோழிக‌ளுக்குமிடையில் ஒரின‌ப்பால் உற‌வு முகிழ்கின்ற‌து. ஆனால் அந்த‌ ஓரின‌ப்பால் உற‌வில் கூட‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் இணைக‌ளுக்குக்கிடையில் வ‌ருவ‌தையே 'நீயும் கூட‌வா' என்று அந்த‌ வ‌ன்முறையால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ பெண் நினைப்ப‌தாய் ப‌ட‌ம் முடிக்க‌ப்ப‌ட்டிருக்கும். அற்புத‌மான‌ ஒளிப்ப‌திவாலும், ஆக‌ அல‌ட்ட‌லில்லாது சூட்சும‌மாய் தோழிக‌ளிடையே வ‌ரும் உற‌வைக் காட்டிய‌ இந்த‌ப்ப‌ட‌ம் குறித்து இதுவ‌ரை ஆக்க‌ப்பூர்வ‌மான‌ உரையாட‌ல்க‌ள‌ நிக‌ழ‌வேயில்லையென்ப‌து ந‌ம் கால‌த்தைய‌ சோக‌ம். ஓரின‌ப்பால் ப‌ற்றிய‌ ச‌ரியான‌ புரிந்துண‌ர்வுக‌க‌ளோ இல்லா ந‌ம் ச‌மூக‌த்தில், லெஸ்பிய‌ன் உற‌வுக‌ளிலும் அதிகார‌ம் நுண்ணிய‌த‌ள‌த்தில் செய‌ற்ப‌டுகின்ற‌து என்ப‌தை இப்போது காட்சிப்ப‌டுத்துவ‌து அவ‌சிய‌மா என்று இப்ப‌ட‌த்தை முன்வைத்து சில‌ கேள்விக‌ள் இருப்பினும், எதையும் எந்த‌க் கால‌த்திலும் எடுக்கும் சுத‌ந்திர‌ம் ஒரு ப‌டைப்பாளிக்கு இருக்கிற‌தென்ப‌தையும் ம‌றுக்க‌முடியாது.

4.
Amiee & Jaguar ப‌ட‌ம் நுட்ப‌மான‌ ப‌ல‌ கேள்விக‌ளைப் பார்வையாள‌ரிடையே முன்வைக்கின்ற‌து. குடும்ப‌ம் என்ற‌ அமைப்பைத் தீவிர‌மாக‌ ந‌ம்பும் ஒருவ‌ருக்கு நான்கு பிள்ளைக‌ளுட‌ன் உள்ள‌ லிலியின் பாத்திர‌ம் உவ‌ப்பாக‌ இருக்க‌ப்போவ‌தில்லை. லிலியிடம் ஒருச‌ம‌ய‌த்தில் இர‌ண்டு தெரிவுக‌ள் இருந்திருக்கின்ற‌ன‌.ச‌மூக‌த்தின் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளுக்கு உட்ப‌ட்டு த‌ன‌க்கு உவ‌ப்பில்லாத‌ வாழ்வை வாழ்வ‌து ஒன்று. த‌ன‌க்குப் பிடித்த‌தொரு வாழ்வை ச‌மூக‌ம் வ‌ரைய‌றுத்த‌ ச‌ட்ட‌க‌ங்க‌ளை உடைத்து வாழ்வ‌து என்ப‌து ம‌ற்றொன்று. இங்கே லிலி த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ ஒரு தெரிவை எடுக்கின்றார். ஆனால் அவ்வாறு தீர்க்க‌மான‌ முடிவுக‌ள் எடுக்க‌முடியாது ஆயிர‌ங்கால‌ ப‌ண்பாட்டுச் சுமை சும‌க்க‌வேண்டிய‌ அவ‌ல‌ம் ப‌ல‌ பெண்க‌ளுக்கு இருக்கிற‌து. த‌ன‌க்கு நெருக்க‌மாக‌வும், த‌ன‌து உட‌ல் சார்ந்த‌ ம‌ர்ம‌ங்க‌ளின் முடிச்சுக்க‌ளை அவிழ்க்க‌ கூடிய‌வ‌ராக‌வும் இன்னொரு பெண்ணே இருக்க‌முடியுமென‌க் க‌ண்டுபிடிக்கின்றார். தான் ந‌ம்பிய‌ காத‌லுக்காய் லிலி க‌டைசிவ‌ரை உண்மையாக‌வே இருக்கின்றார். த‌ன‌து துணை, த‌ங்க‌ளுக்கு எதிரிக‌ளாக‌ க‌ட்டிய‌மைக்க‌ப்ப‌ட்ட‌ யூத‌ர்க‌ளாயிருந்தாலும், அந்த‌த் த‌டைக‌ளை மீறி பெலிசியை ஒரு யூத‌ரென‌ பின்னாட்க‌ளில் தெரிந்தாலும் முழும‌ன‌துட‌ன் ஒரு துணையாக‌ ஏற்றுக்கொள்ள‌த் த‌ய‌ங்க‌வும் இல்லை.

இந்த‌க் க‌தை, ஹிட்ல‌ரின் கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ ஒரு உண்மைக்க‌தையாகும். கிட்ட‌த்த‌ட்ட‌ 50 ஆண்டுக‌ளின்பின் இந்த‌க்க‌தையை எரிக்கா பிஷ‌ர் என்ப‌வ‌ர் நூலாக‌ எழுத‌, பின்ன‌ர் இப்ப‌ட‌மாக‌ எடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. உண்மைக‌ள் எப்போதும் அடியாழ‌ங்க‌ளில் உற‌ங்கிக்கொண்டிருக்காது. ஒருநாள் உண்மைக‌ள் வெளியே வ‌ரும்போது அதிகார‌த்திலிருந்து த‌ம‌க்கான‌ வ‌ர‌லாற்றை எழுதிய‌வ‌ர்க‌ளை மீண்டும் புதைகுழிக‌ளிலிருந்து தோண்டியெடுத்து, கேள்விக‌ளின் க‌ணைக‌ளால் நிர்வாண‌மாக்க‌ப்படுவ‌தும் நிக‌ழ்ந்து கொண்டுதானிருக்கிற‌து.

க‌றுப்பு ‍வெள்ளைப் ப‌ட‌ங்க‌ள்: அச‌ல் லிலி ம‌ற்றும் பெலிசி
(நன்றி: கால‌ம்' , இதழ்-33 )