கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அசோகமித்திரன் - 18வது அட்சக்கோடு

Saturday, April 28, 2018

சோகமித்திரனின் '18வது அட்சக்கோட்டை' மூன்றாவதோ நான்காவதோ முறையாக இந்த வாரவிறுதியில் வாசித்து முடித்திருந்தேன். சில புனைவுகளை மீண்டும் வாசிப்பதற்கு எனக்கென சில காரணங்கள் இருக்கும். அசோகமித்திரனினது இந்த நாவலை திருப்பத் திரும்ப வாசித்துப் பார்ப்பதற்கு,  அவர் வரலாற்றின் முக்கிய காலகட்டத்தை (நிஸாம் கால செகந்திரபாத்/ஹதராபாத்தின் இறுதிக்காலம்) விவரிப்பதற்கு எவ்வகையான மொழிநடையைத் தேர்ந்தெடுக்கின்றார் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. மொழியை அவ்வளவு கஷ்டப்படுத்தாது அவர் எழுதிச் செல்கின்ற நுட்பங்கள் சிலாகித்துச்  சொல்லவேண்டியவை.

முன்னர் வாசிக்கும்போது கதைக்குள் விழுந்துவிட்டதால் இதனிலிருக்கும் சில அபத்தங்கள் காணாமல் போயிருந்தது. இப்போது தெளிவாகப் புலப்பட்டுமிருந்தன. முஸ்லிம்களை இதில் துலுக்கன்களாகவே எழுதிக்கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, லம்பாடிகள் எனப்படுபவர்களைச் சித்தரிப்பதும் மிக மோசமாக இருக்கின்றது. ரஜாக்கர்களும், முஸ்லிம் மிலிட்டரிக்காரர்களும் ஓடஓட விரட்ட, அதிகம் சித்திரவதைப்படுபவர்களாக, கம்யூனிஸ்டுக்களும்,  லம்பாடிகளுமே இருக்கின்றார்கள் எனச் சொல்லும் அ.மி, 'சாதாரண நாட்களில் லம்பாடிகளை யாரும் மனிதர்களாகக் கூட மதிக்கமாட்டார்கள். அவர்களும் நாய் பன்றி போலக் கண்ட கண்ட இடங்களில் கண்டத்தைத் தின்று கண்ட இடத்தில் படுத்து, கண்ட இடத்தில் மலஜலம் கழித்துப் போவார்கள்' என எழுதிச் செல்கின்றார்.

நிஸாம் அரசு, இந்தியா என்பதோடு இணைய விரும்பாது அதை எதிர்க்க அவர்கள் உருவாக்கும் ரஜாக்கர்கள் போல, அதே காலகட்டத்தில் இந்துக்களும் தெலுங்கானா என்ற அமைப்பை உருவாக்கியிருக்கின்றார்கள். ரஜாக்கர்களுக்கு எதிராக அவர்கள் ஏதோ ஒருவகையில் அணிதிரண்டிருக்கின்றார்கள். இந்திய அரசு தன் இராணுவத்தை உள்ளிறக்கும்வரை, தெலுங்கானாவும் எதிர்த்தரப்பில் இருந்திருக்கின்றது. என்ன சிக்கலென்றால், அ.மி இந்த தெலுங்கானா அமைப்புப் பற்றி இந்த நாவலில் எதுவுமே விரிவாகப் பேசவில்லை என்பதுதான். இன்னும் கவனிக்கவேண்டியது. நிஸாம் அரசில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர். கிட்டத்தட்ட 85% ஆனோர் இந்துக்களாக அப்போது இருந்தார்கள் எனவும் குடிசன மதிப்பீடு சொல்கின்றது.

ந்த நாவலை சரியாக ஆதவன் அடையாளங் கண்டிருக்கின்றார். காந்தியின் கொலை  அங்கிருக்கும் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் பாதிக்காததைக் காணும்போது, தவிர்க்க முடியாமல் தன்னை ஒரு இந்துவாக, வித்தியாசமானவனாக சந்திரசேகரன் உணர்கின்றார் என இந்த நாவலின் இரண்டாம் பதிப்பிற்கு எழுதிய முன்னுரையில் ஆதவன் எழுதுகின்றார். மேலும் " "யார் கொன்றது காந்தியை - ஒருவேளை யாராவது முஸ்லிமா?" என்று நினைத்து அவன் (சந்திரசேகரன்) கொலைவெறி கொள்ளும் கணத்தில், அவனுடைய இளமையின் பேதைமை முழுதும் நீங்கி அவனும் ஒரு துவேஷமுள்ள பெரியவனாகிவிடுகின்றான் "  என்கின்றார் ஆதவன்.

ஒருவகையில் இந்த நாவல் ஒருவன் துவேஷமுள்ள பெரியவனாகிவிட்டான் என்று படிமத்தை முழுதும் தராமல் தவிர்ப்பது அந்த இறுதிக்காட்சி. அதுவுமில்லாவிட்டால் ஒரு துவேசமுள்ள இந்துப் பெரியவனின் கதையாகவே இது சுருங்கியிருக்கும் அபாயம் இருந்திருக்கும்.

நாவலில் சந்திரசேகரன் ஒரு கலவரத்தில் தப்பி ஒரு வீட்டுக்குள் நுழையும்போது, இந்துக்கள்தான் தாக்குதல் நடத்த வந்துவிட்டார்களோ என்று நினைத்து  முஸ்லிம் குடும்பம் தமது பதினாறு/பதினேழு வயதுள்ள பெண்ணை முன்னே அனுப்ப, அந்தப் பெண் தனது குடும்பத்தைக் காப்பாற்ற தன்னை நிர்வாணமாக்கும்போதுதான், "அவள் ஒரு குழந்தை. இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக்கொள்ள ஒரு குழந்தைகூட எவ்வளவு இழிவுபடுத்த வேண்டியிருக்கிறது? அதற்கு அவனும் காரணமாகி விட்டான், இந்தக் கறையை என்று எப்படி அழித்துக்கொள்ள முடியும்? இதை அழித்துக் கொள்ளத்தான் முடியுமா?" என்பதோடு நாவல் முடியும்போதுதான் '18வது அட்சக்கோடு' தவிர்க்கமுடியாத நாவல்களில் ஒன்றாக மாறிவிடுகின்றது.

னால் அதேசமயம் இந்தக் குற்றவுணர்வு புதிதுமல்ல, அசோகமித்திரனுக்கு முன்னர் சதக் ஹஸன் மண்டோ (1912-1955) தன்  பல்வேறு கதைகளினால் நமக்குள் உருவாகியிருக்கின்றார். அசோகமித்திரன் இந்த நாவலை எழுதியது எழுபதுகளில் (வெளியிடப்பட்டது 1977). மண்டோவின் பிரசித்தம் பெற்ற 'Open up' என்ற கதை பற்றி நிறையத்தடவைகள் பேசப்பட்டாயிற்று. கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பஞ்சாப் பெண்ணுக்கு,  தன்னைப் பார்க்க வருகின்றவர் தந்தை என்கின்றவர் என்பதைவிட ஒரு ஆண் வந்திருக்கின்றார் என்பதே மூளையில்  பதிவாவதால், இவரும் பாலியல் வன்புணர்வு செய்யபோகின்றார் என்ற நினைப்பில் உடனேயே தன் ஆடைகளைக் கழற்றி நிர்வாணப்படுத்துவார். அந்தத் துயரம் எப்படி எங்களுக்குள் பதிவாகின்றது என்பதற்கு இப்போது 60/70 வருடங்கள் கழித்து அதை வாசித்தாலும் நம்மைப் பதற வைக்கின்றது. இவ்வாறு நிறையக் கதைகளை மண்டோ எழுதியிருக்கின்றார்.

ஒரு யூதப் பெண் வருகின்ற இன்னொரு கதையில், சர்தாஜி ஒருவருக்கு இந்தப் பெண்ணுக்கு காதல் தொடக்கத்தில் வந்தாலும், அதை இந்தப் பெண் மறுக்கின்றார். கலவரக்காலங்களில் பலரைக் காக்கின்ற பெண்ணாக இவர் மாறுகின்றார். ஒரு சம்பவத்தில் சர்தாஜி மணம் செய்யப்போகின்ற பெண்ணை, முஸ்லிம்களின் ஒரு குழு துரத்திக்கொண்டு வருகின்றது. அவரைக் காப்பாற்றும்பொருட்டு யூதப்பெண் தன் ஆடைகளை அந்தப்பெண்ணுக்குக் கொடுத்து தன்னை நிர்வாணமாக்கின்றார். துரத்தி வந்த முஸ்லிம் குழு இந்த யூதப்பெண்ணின் நிர்வாணம் கண்டு திகைப்பது மட்டுமில்லை, தம்மிடமிருக்கும் துணியை நிர்வாணம் மறைக்கக் கொடுக்கின்றது. அப்போது அவர், 'உங்கள் மதவெறி படிந்திருக்கும் இந்தத்துணியை நான் உடுத்தவே போவதில்லை' என மறுதலிக்கின்றார்.

இதுதான் சதக் ஹசன் மண்டோ. அவர் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என்று எந்த மதவெறி மீதும் பாரபட்சம் எதுவுமின்றி எழுத்தால் கடந்துபோனவர். ஆனால் அசோகமித்திரன் இந்த 18வது அட்சக்கோட்டில் வரும் துவேசமுள்ள பெரியவனிலிருக்கும் வித்தைக் கைவிட மறந்ததாலோ என்னவோ, பின்னாளில் தனக்கான மதத்தாலும், சாதியாலும் தனக்குள் வரும் privilages ஐ பார்க்கவே தயங்கியவர். தயங்கியது மட்டுமில்லாது பிராமணர்கள் தமிழ்நாட்டில் யூதர்களைப் போலக் கஷ்டப்படுகின்றனர் போன்ற பல அபத்தக் கருத்துக்களை தன் முதிர்ச்சியடைந்த காலத்தில் கூடப்பேசியவர் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஆதவன் போன்றோர் குறுகியகால வாழ்க்கையில் தமது சாதியை எள்ளல் செய்த அளவிற்குக் கூட அதற்குள் போய் விமர்சிக்க அ.மி மறந்தவர்.

இதைச் சொல்வதால் அசோகமித்திரன் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டார் என்பதில்லை. அநேகபேர் கவனிக்க மறந்த 'ஒற்றனே' எனக்கு அவர் எழுதிய நாவல்களில் முக்கியமானது. அவரின் எழுத்துக்கள் பிடிக்கும் என்பதாலே அவரைத் திருப்பத் திருப்ப வாசிக்கின்றேன். அவர் எனக்குச் சலிப்பதுமில்லை. அதேபோல அவருக்குள் உள்ளுறைந்து கிடக்கும் இருண்மையான பக்கங்களையும் அவரை விரும்பி வாசிப்பவன் என்பதால் வெளிப்படையாகவே சொல்லவேண்டியும் இருக்கின்றது.

(Apr 08, 2018)

மரம் - ஹெர்மன் ஹெஸ்ஸே

Friday, April 27, 2018

ரு மரம் சொல்கிறது: நம்பிக்கையே எனது பலம். எனது தந்தையர்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, ஒவ்வொரு இலைதுளிர்காலத்திலும் என்னிடமிருந்து வெளிவரும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் குறித்தும் எதுவும் அறியேன். நான் இறுதிவரை இரகசியம் நிறைந்த எனது விதையினாலே வாழ்கிறேன், அதைத் தவிர எது குறித்தும் கவலைப்பட்டதில்லை. கடவுள் எனக்குள்ளேயே இருக்கிறார் என்பதை நான் நம்புகிறேன். என்னுடைய ஊழியம் புனிதமானதெனவும் நம்புகிறேன். இந்த நம்பிக்கையினாலேயே நான் உயிர் வாழ்கிறேன்.
நாம் வாழ்வினால் பலமாகத் தாக்கப்பட்டு எம்மால் அதைத் தாங்க முடியாதபோது, ஒரு மரம் எமக்குச் சிலதைச் சொல்ல விழைகிறது. அப்படியே இரு! அப்படியே இரு! என்னைப் பார், வாழ்க்கை அவ்வளவு இலகுவானதுமல்ல, அதேபோல் அவ்வளவு கடினமானதுமல்ல. இவைகள் உன்னுடைய குழந்தைத்தனமான எண்ணங்கள். உன் ஊடாக கடவுளைப் பேச விடு, அப்போது உனது எண்ணங்கள் அமைதியாக வளரும்.
நீ மிகவும் பதற்றமாய் இருக்கிறாய் எனெனில் உனது பாதைகள் உனது தாயிடமிருந்தும் வீட்டிலிருந்தும் தொலைவிலிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு காலடியும் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் உனது தாயிடமே உன்னை அழைத்துச் செல்கின்றன. வீடு என்பது இங்கேயோ அங்கையோ இல்லை. வீடு என்பது உனக்குள்ளேயே இருக்கிறது அல்லது வீடு என்பதே எங்கேயும் இல்லை.
நூற்றாண்டு கால மரம் - பனாமா
மாலை நேரத்தில் காற்றில் அசையும் மரங்களின் சலசலப்பை நான் கேட்கும்போது. எனது இதயம் அலைவதற்கான காத்திருப்பை எண்ணி விம்முகிறது. ஒருவரால் நீண்டநேரத்திற்கு மரங்களின் மெளனத்தைக் கேட்கமுடியுமென்றால், அந்தக் காத்திருப்பு ஒரு விதையாக மாறுவதையும், அதன் அர்த்தத்தையும் அறியமுடியும். இது ஒரு வாதையிலிருந்து ஒருவர் தப்புகின்ற வழியெனத் தெரிவதுபோல இருந்தாலும், உண்மையில் இது அதுவல்ல. இது வீட்டிற்கான காத்திருப்பு, இது ஒரு தாயின் நினைவுக்கான காத்திருப்பு, ஒரு வாழ்விற்கான புதிய உருவகங்களுக்கான காத்திருப்பு. இது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு பாதையும் வீட்டை நோக்கியே நீள்கின்றன, ஒவ்வொரு காலடியும் ஒரு பிறப்பு, ஒவ்வொரு காலடியும் ஒரு இறப்பு, ஒவ்வொரு கல்லறையும் உனது தாயார்.
ஆக, நாங்கள் எமது குழந்தைத்தனமான எண்ணங்களுக்கு முன் குழப்பமாக நிற்கும்போது, மாலையில் மரங்கள் சலசலக்கின்றன. மரங்களுக்கு நீண்ட எண்ணங்களும், ஆழமான மூச்சிழுப்பும், அமைதியும் இருக்கின்றன. எங்களை விட நீண்ட ஆயுள் அவைகளுக்கு உண்டு. நாங்கள் மரங்களைச் செவிமடுக்காதவரை, அவைகள் எங்களை விட புத்திசாலிகளாகவும் இருக்கின்றன. நாங்கள் மரங்களைக் கேட்கத் தொடங்குபோது, சுருக்கமானதும், எளிதானதும், குழந்தைத்தனமான அவசரமான எமது எண்ணங்கள் எதனோடும் ஒப்பிடாத மகிழ்ச்சியாக மாறுகின்றன.

யாரெனினும் ஒருவர் மரங்களை எப்படி செவிமடுப்பது என்று அறிந்ததன் பிறகு அவர் ஒரு மரம் போல இருக்க வேண்டியதில்லை. அவர் என்னவாக இப்போது இருக்கிறார் என்பதைவிட வேறு எதுவும் அவருக்குத் தேவையில்லை. அதுவே அவரது வீடு. அதுவே அவரது மிகப்பெரும் மகிழ்ச்சி. -ஹெர்மன் ஹேஸே (தமிழில்: டிசே) (Apr 26, 2016)

ஓஷோ - Wild Wild Country

Thursday, April 26, 2018

ஷோ பற்றி கிட்டத்தட்ட 6 மணித்தியாலங்களுக்கு மேலாய் நீளும் Wild Wild Countryஐ, Netflix வெளியிட்ட  அன்றே, நள்ளிரவிற்கப்பாலும் விழித்திருந்து ஆறு பாகங்களையும் ஒரே நாளிலேயே பார்த்து முடித்திருந்தேன். இதில் ஓஷோ அமெரிக்காவில் Oreganனில் பெரும் பரப்பளவில் தனது commune ஐத் தொடங்குவதே முதன்மைப்படுத்தப்படுகின்றது. எந்த பக்கசார்பையும் எடுக்காது இயன்றளவு அன்றையகால (80களின் தொடக்கத்தின்) அங்கேயிருந்த முக்கிய பலரின் நேரடி அனுபவங்களோடு இந்த ஆவணப்படம் இருப்பதால் இதைப் பார்ப்பது சுவாரசியமானது.

ஓஷோ அமெரிக்காவிலிருந்த அதிககாலம் மெளனமாகவே இருந்தவர். எனவே இதில் ஓஷோ பற்றி எதுவும் விரிவாகப் பேசப்படவில்லை. அவரைப் பின் தொடர்ந்து வந்தவர்களைப் பற்றியே இது பெரும்பாலும் பேசுகின்றது. ஓஷோ -5 வருடத்திற்குள்ளாக- அமெரிக்காச் சமூகத்தில் செய்த குறுக்கீடு என்பது நாம் நினைத்தும் பார்க்கமுடியாதது. பல்லாயிரக்கணக்கானவர்கள் அங்கே ஒன்று சேர்வது, பெரும் வளர்ச்சியை செழுமையில்லாத நிலப்பரப்பில் நிகழ்த்துவது, கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவின் சட்டத்தினூடாக தங்களை விஸ்தரிப்பது என்பதையெல்லாம் அங்கு அன்று இருந்தவர்களின் வாக்குமூலங்களினூடாகக் கேட்பது வியப்பைத் தரக்கூடியது.

அதிலொரு ஆஸ்திரேலியாப் பெண், தன் குடும்பத்தோடு ஓஷோவின் மீதான பற்றில் புனே போய் அங்கேதான் தனது வாழ்வு நிறைவெய்யப்போகின்றது என நினைக்கும்போது, ஓஷோ சட்டென்று அமெரிக்காவிற்குப் போகும்போது திகைத்து நிற்கின்றார். ஆனால் அதன்பிறகும் அவர் அமெரிக்காவிற்கு ஓஷோவைப் பின் தொடர்ந்து செல்கின்றார். இதெல்லாம் நடப்பது 70/80களில். அதுமட்டுமில்லாது ஓஷோவின் ஆச்சிரமத்திற்கு தடையூறாக ஒரு அமெரிக்க செனட்டர்(?) இருக்கின்றார் என்பதால், ஓஷோவின் முதன்மைச் சீடரான ஆனந்த் ஷீலாவின் பணிப்புரையின் பேரில் அந்தச் செனட்டரைச் சுட்டுக்கொல்வதுவரை இந்தப்பெண் போகின்றார். மேலும் இறுதிக்கட்டத்தில், ஓஷோவின் வைத்தியர் ஓஷோவைக் கொல்லச் சதி செய்கின்றார் என அவருக்கு விஷ ஊசி கூடப் போட்டிருக்கின்றார் (வைத்தியர் பிறகு தப்புகின்றார்). இவர் பிறகு ஆனந்த ஷீலாவோடு, ஓஷோவை விட்டுத் தப்பிச்செல்லும குழுவில் ஒருவராக  இருந்தவர். இப்போது இந்தவிடயங்களுக்கான தண்டனைகளைப் பெற்று, ஜேர்மனியில் ஒரு உணவகம் நடத்தி வாழ்ந்து  வருகின்றார்.

ந்த ஆவணப்படம், இதுவரை ஆனந்த ஷீலா பற்றி இருக்கும் ஒரு விம்பத்தை உடைக்க முயற்சிக்கின்றது எனலாம். ஓஷோவின் அமெரிக்க communeஐ சிதைத்ததில் முதன்மையானவர் ஷீலாவே என அநேகரால் குற்றஞ்சாட்டப்படுகின்றார் என்பது ஒருபுறமிருந்தாலும், ஓஷோவின் அமெரிக்க வளர்ச்சி ஷீலா இல்லாது இந்தளவிற்கு சாத்தியமாகியிருக்காது என்பதும் உண்மையே. ஷீலா ஒருபோதும் ஓஷோவைத் தனது குருவாகவோ/ஆசிரியராகவோ நினைத்ததில்லை எனக் குறிப்பிடுகின்றார். அவர் அமெரிக்காவில்  commune ஐ நிர்வகித்தது கூட  ஒருவகையான  coroporate முறையில்தான். ஓஷோவோடு இருக்கும்போது எப்படி bold ஆக இருந்தாரோ, இப்போது சுவிற்சலாந்திலிருந்து கதைக்கும்போதும் அதே bold ஆக இருந்தே கதைக்கின்றார்.

சிலவேளைகளில் அவர் சென்ற வழி நமக்குப் பிடிக்காவிட்டாலும் ஓஷோ அடிக்கடி வலியுறுத்தும் தனக்குரிய authentic ஐ கைவிடாது இருப்பவர் என்பவரால் ஷீலாவையும் நாம் விளங்கிக்கொள்ளத்தான் வேண்டும். மேலும், இவர்கள் ஒரு குழுவாக அமெரிக்காவை விட்டுத் தப்பி, ஜெர்மனியில் தலைமறைவாக இருக்கும்போது, பொருளாதார நெருக்கடி வரும்போது, ஆனந்த் ஷீலா ஜேர்மனியில் வரும் vogue(?)ற்கு topless pose ஐ, ஒரு இந்தியப்பெண்ணாக கொடுப்பற்கு எல்லாம் ஒரு 'தில்' இருந்திருக்கவேண்டும். ஒஷோவோடு இருக்கும்போது ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் நேரடியாகவே சிறுபான்மையின சமயத்தை(?) ஏற்றுக்கொள்ளாத அமெரிக்க நிறவாதிகளென குற்றஞ்சாட்டுகின்றார். மேலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பேசுகையிலும், Oregan மக்களைப் பார்த்து, நீங்கள் ஒரு அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் எனவும், உங்களுக்கு உண்மையான சந்தோசம் என்னவென்று எங்களைப் போலத்தெரியாது எனவும் குற்றஞ்சாட்டுகின்றார்.

ந்த ஆவணப்படத்தில் ஒலிக்கும் குரல்களைப் பார்க்கும்போது, அந்தக்காலகட்டத்தில் ஒரு மாற்றத்தை வேண்டிப் போனவர்களையும், உண்மையான விருப்புடன் -அது கனவுலகாகப் பிறகு கலைந்துபோனபோதும்- commune ற்கு உழைத்தவர்களையும் பார்க்கமுடிகின்றது. இப்போது கூட எவரும் தாம் அப்படி வருடங்களை இதற்காய்ச் செலவழித்ததற்காய் கவலைப்படவில்லை என ஓஷோவின் அருகில் இருந்த நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கொள்கின்றனர். அந்த வருடங்கள் தமது பிறகான வாழ்வில் எதையோ மாற்றியிருக்கின்றதெனவும் நம்புகின்றனர்.

ஓஷோவின் மீது விலகல் கொண்ட ஆனந்த் ஷீலா குழுவினர் கூட ஒருபோதும் ஓஷோவிற்கு எதிராக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். இந்த ஆவணப்படத்தில் பேசும் ஷீலா ஓரிடத்தில் கூறுவார்; 'கவனியுங்கள், நான் பிறர் செய்வதைப் போல பணம் கொடுத்து எனது குற்றங்களிலிருந்து தப்பவில்லை. நான் பத்தாண்டுகள் ஜெயிலில் இருந்திருக்கின்றேன். எனவே நான் எனது பொறுப்புக்கூறல்களிலிருந்து தப்பி வந்து இதை இப்போது வெளிப்படையாகப் பேசவில்லை' என்கின்றார்.

ஓஷோவை அறிய விரும்புவர்க்கு இந்த ஆவணப்படம் பெரிதாக எதுவும் உதவப்போவதில்லை. ஆனால் ஓஷோவின் commune ற்கு அமெரிக்காவில் நிகழ்ந்த அசுர வளர்ச்சி, அங்கே பிறகு மூடியதிரையின் பின் நடந்த பல்வேறு விதமான மர்மமான சம்பவங்கள், இவை எதையும் அறியாத உண்மையான ஓஷோ பற்றுதலோடு இருந்த அடிமட்டத்தவர்கள் என ஓஷோவின் ஒருகாலகட்டத்தை அறிய விருப்பமிருப்பவர்களுக்கு இது சுவாரசியமானதாக இருக்கும்.

(Apr 09, 2018)

லாவண்டர்பூ குறிப்புகள்

Monday, April 23, 2018

Unlock

ண்பனாக இருந்தாலும், பிடிக்கவில்லை என்றால் திட்டித்தீர்ப்பதென்ற தீர்மானத்துடனே சென்றிருந்தேன். எனக்குத் தோன்றுவதைச் சொல்லும்போது ஏற்றுக்கொள்வாரோ இல்லையோ, ஆனால் Unlock   நிரு கேட்டுக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கிருந்ததும் ஒரு காரணம். 15 நிமிடங்களுக்குள் உட்பட்டது Unlock என்றாலும், பல்வேறு கதைகளை நேரடியாகவும் (மறைமுகமாகவும்) சொல்லியதோடல்லாது, திரைமொழிக்குரிய அழகியலையும் தவறவிடாது இருந்தது பிடித்திருந்தது.

என்னைப் போன்றவர்களின் குழந்தைப் பருவங்களில் கள்ளன் - பொலிஸ் விளையாடும் முறை ஒழிந்து, நாங்களே செய்த 'துவக்குகளில்' புலியும், ஆமியும் உள்நுழைந்த ஆட்டங்களே ஆடப்பட்டிருக்கின்றன. இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் சன்னங்களைப் பொறுக்குவதும், உலங்குவானூர்திகளில் அன்றையகாலத்தில் அநேகமாய் ஏவப்படும் (50 கலிபர்/90 கலிபர்) கோதுகளைச் சேகரிப்பதும் எங்களின் பொழுதுபோக்காகவே இருந்தது. இந்த அனுபவங்களை 'எனக்கான தெருக்கள்' என்ற ஒரு அனுபவக் கட்டுரையில் எழுதியிருப்பேன். சோமீயும் 'எரியும் நூலகம்' ஆவணப்படத்தை கொழும்பில் திரையிட்டு, நடந்த கலந்துரையாடலில் சிங்கள நண்பர்களுக்கு, வானிலிருந்து ஹெலியால் சுட்டுச் சாவோம் என்பதைவிட, அதன் துப்பாக்கிச்சூடு தணியமுன்னரே யார் சன்னக்கோதுகளை முதலில் பொறுக்குவது என்பதற்காகவே ஓடுவோம் என்று குறிப்பிட்டதும் நினைவில் இருக்கின்றது.

ஒருவர் எமக்கான கதையைச் சொல்லும்போது ஆவல் வந்துவிடுகின்றது. நிரு, எமது கதையை மட்டுமில்லை, எனக்கான பருவத்திற்குரிய கதையையும் சொல்லியபோது இன்னும் நெருக்கமாகிவிட்டிருந்தது. எப்போதும் எவ்வளவு கூறினாலும், எனக்குள் அடங்கமறுக்கும் ஒரு விமர்சனக்குரலை இரண்டாவது முறையாக Unlockஐப் பார்த்தபோது நிதானமடையச் செய்வதற்குரிய எல்லாச் சிறப்பும், இதில் இருந்தது நிறைவாக இருந்தது.

நண்பா, நமது பாடசாலைக் காலத்தில் குடை வாகைமரத்துப் பூக்கள் நிலத்தில் விழமுன்னர் யார் கூடப் பூக்களைப் பிடிக்கிறார்கள் என்பதிலிருந்து, செய்த குழப்படிக்காய் பாடசாலை மைதானத்தில் நெருஞ்சி முள் விலக்கி முட்டுக்காலில் இருந்தப்பட்டதிலிருந்து, நான் கண்ணாடி போட ஆரம்பிக்கும் பருவத்தில் கண்குறைபாட்டை விளங்கிக்கொள்ளாது, என் பொருட்டு நீ எங்கள் வகுப்பாசிரியரிடம் அடிவாங்கியதிலிருந்து, சொல்வதற்கும் காட்சியாக்குவதற்கும் உன்வசம் நிறையக் கதைகள் இருக்கின்றன.

அதை என்றென்றைக்கும் நினைவில் கொள்க.

(Nov 20, 2017)

Jaffna Bakery

Jaffna Bakery என்கின்ற சர்ச்சையில் சிக்கியிருக்கும் குறுநாவலை நேற்று வாசித்து முடித்திருந்தேன். மிக மோசமான நாவலைக் கூட நேரம் செலவளித்து வீணாக உரையாடல் செய்வது, நம் தமிழ்ச்சூழலில் மட்டுமே சாத்தியம். அதன் பேசுபொருளுக்காக மட்டுமில்லை, ஒரு குறுநாவலாக வருவதற்குரிய கட்டிறுக்கமான எந்தவிதமான மொழியைக் கூட அது கொண்டிருக்கவில்லை என்பதால் எளிதாக விலத்தி வரவேண்டிய ஒன்று. பேச்சுமொழியில் கதையைச் சொல்கிறேன் (நான் வட்டாரமொழிக்கு எதிரானவன் அல்ல) என்று தொடங்கி வாசிப்பவருக்குத் தலையிடி கொடுத்தது ஒருபுறமென்றால், இன்னொருபக்கம் அந்தப் பேச்சுமொழிக்குள்ளேயே நிறைய எழுத்துப்பிழைகள்.

தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே இப்போதுதான் சற்று நிதானமாக உரையாடல்களே தொடங்கியிருக்கும் காலகட்டத்தில் வன்மமான இப்படிப்பட்ட பிரதியின் வரவு எதற்கான அரசியல் என்றும் புரியவில்லை. உண்மையான புலிகள் கூட இந்த நாவலில் சொல்வதைப்போல இப்படி அபத்தமான ஒரு காரணத்தைச் சொல்லி முஸ்லிம்களை வடபகுதியில் இருந்து வெளியேற்றினோம் என்று சொன்னதாகக் கூட நானிதுவரை அறிந்ததில்லை.

முஸ்லிம்கள் வெளியேற்றம் மட்டுமில்லை, முஸ்லிம்களை வெளியேற்றுவதில் அதிக கடுமையைக் காட்டுவதாய்ச் சித்தரிக்கப்படும் கிழக்கு மாகாண புலி(கள்), மோசமான செயல்களைச் செய்ததாகச் சொல்லப்படும் சில முஸ்லிம்களை வெளியேற்ற உதவும் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் என்று 'வேண்டுமென்றே' சிலரைத் தேர்ந்தெடுப்பதை முன்வைத்து இந்தப் பிரதியை வாசித்தால் ஒரு இந்துத்துவ மனோநிலை கூட இதில் மேலோங்கி நிற்பது நன்கு விளங்கும்.

எவரும் அவர் பக்க நியாயத்தைச் சொல்வதற்கு சுதந்திரமான வெளி எழுத்திலுண்டு. ஆனால் அந்த நேர்மையைக் கூட இந்தக் குறுநாவலில் காணமுடியாததுதான் துயரமானது.


பிரதி சார்ந்து இப்போது நிகழும் உரையாடல்களைப் பார்க்கும்போது எழும் கேள்வி என்னவென்றால், உண்மையில் முஸ்லிம் வெறுப்பு என்பது புலிகளுடையது மட்டுந்தானா இல்லை தமிழ் முழுச்சமூகத்தின் கருத்துதான் அப்படி திரண்டு எழுந்து வந்ததா என்பது. ஏனெனில் தொடக்க காலங்களில் பல இயக்கங்கள் இருந்தபோது, எல்லா இயக்கங்களுமே முஸ்லிம்கள் மீது ஒடுக்குமுறைகளை ஏவிவிட்டிருக்கின்றன.

இந்திய இராணுவ காலங்களில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் மீது நிகழ்ந்த பல சம்பவங்களை இன்றும் வாசிக்கலாம். புலிகளை மட்டும் காரணமெனச் சொல்லி நீங்கள் X நாங்கள் என்று துவிதங்களுக்குள் தள்ளிவிடுவதன் மூலம் புலிகள் தவிர்த்து பிறர் எல்லோரும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியுமா என்றும் யோசிக்க வேண்டும். இல்லாதுவிட்டால் இந்த வெறுப்பின் ஆழங்களுக்குள் சென்று தீர்வுகளையோ, நம்மைத் திருத்தவோ முடியாதுவிடும் அவலம் வரலாற்றில் மீண்டும் நிகழ்ந்துவிடவும் கூடும்.

(Mar 01 , 2018)

Demons in Paradise

Selective narratives ஐக் கொண்டு, நடந்த மறக்கவோ/மன்னிக்கவோ முடியாத கொலைகளை மட்டும் முன்னிருத்தி, எளிதாக சிங்களப் பேரினவாதம் என்கின்ற meta narrativeஐ பிற்பகுதியில் வேண்டுமென்றே தவிர்த்து, ஒரு அரசியல் படைப்புக்கு முன்நிபந்தனையாக இருக்கக்கூடிய, இன்றிருக்கும் அதிகாரத்திற்கு எதிராக உரையாடலைச் செய்யாத, கிட்டத்தட்ட 20 வருட வரலாற்றை (1989-2009) மறைத்த ஒரு ஆவணப்படமான Demons in Paradiseற்குக் கூட ஒரு தார்மீகமான ஆதரவைக் கொடுக்கும் நிலை இந்தத் திரைப்படத்தைத் திரையிட விடாது குழப்ப வந்தவர்களால் வந்துவிட்டது.

பின்னுக்கு நின்று, இந்தத் திரைப்படத்தில் ஒரு முக்கியபாத்திரமாக வரும் NLFT உறுப்பினரைப் பார்த்து, அவர்களின் வரலாறு தெரியும், இரண்டு நாள்களில் இதையெல்லாம் முன்வைக்கின்றோம் என்ற குழப்பவாதிகள், ஆகக்குறைந்தது படத்தில் வரும் அதே நபர், சந்திரிக்காவின் காலத்தின் சிங்களப்பேரினவாதத்தோடு சேர்ந்து இயங்கவும், பிரச்சாரம் செய்யவும், அவர்கள் வழங்கிய பதவியையும் பெறவும் முடிந்தது எந்தவகையான அறம் எனக் கேட்பதற்கான எளிய வரலாற்று அறிவோ இல்லாதது என்பதுதான் துயரமானது.

புலிகளை அழிப்பதற்கு எந்த எதிரான சக்திகளுடன் இணைந்துக் கொள்ளத் தயாரென்று இந்த ஆவணப்படத்தில் சொல்லப்படுவதைப் போல, அங்கிருந்த அடுத்த தலைமுறைகளுக்கு  இலங்கைப் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, அதற்கு எதிராகப் போராட ஒரு இயக்கமாக (இந்தப் படத்தில் மறைக்கப்பட்ட 1989-2009ல்) புலிகள் இயக்கம் இருந்தது ஒருவகையில் நியாயந்தானே என்று ஒரு கேள்வியைக் கூட கேட்க இந்த 'விசர்' பிடித்த குழப்பவாதிகளுக்கு பொறுமை இல்லை. இதில் வரும் நெறியாளரின் குரலும் புலிகள் அழியவேண்டும் என்பதைத் தெளிவாக முன்வைக்கின்றது என்பதோடு, புலிகள் அழியவேண்டுமென்பதற்காய், அதனோடு எவ்வளவு மக்கள் அழிந்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்கின்ற மிக மோசமான குரலும் வைக்கப்படுவதைக் கவனிக்கவேண்டும்.

நண்பரொருவர், இதில் முக்கிய பாத்திரமாக வருபவரும், நெறியாளரும் வேறு வேறானவர்கள். அதை ஜூட் என்பவரின் படமாகப் பார்க்கவேண்டும் என்று -தனிப்பேச்சில்- குறிப்பிட்டிருந்தார். என்ன சிக்கலென்றால் நெறியாளராக வரும் ஜூட், 'தனது மாமா தன்னுடைய கதாநாயகன்' என்று இந்த ஆவணப்படத்திலேயே கூறுகின்றார். ஆகவே அவரது கதாநாயகனின் வரலாறு என்ன என்று என்னைப் போன்றவர்களும் இப்படி சந்திரிக்கா காலம் உட்பட பல்வேறு இடங்களில்/சந்தர்ப்பங்களில் என்ன செய்தார் அவரது அங்கிள் எனக் கேட்பதற்கும் இடம் இருக்கின்றது என்றே இப்போதும் நம்புகிறேன்.

(Feb 25, 2018)

இலங்கைக் குறிப்புகள் - 06

Thursday, April 12, 2018

சீன் அக்கரைப்பற்றிலிருந்து எனதும், றஷ்மியினதும் நூல் நிகழ்விற்காக கொழும்பு வந்திருந்தார்.  நிகழ்விற்கு அடுத்தநாள் -திங்கள் மாலை- ஊருக்குத் திரும்புவதாக இருந்த அவர் என்னையும் கூட வருகின்றீர்களா எனக்கேட்டார்.  சந்தர்ப்பங்கள் ஒருமுறையே தட்டும் (காதலிற்கு மட்டும் விதிவிலக்குக் கொடுக்கலாம்) என்பதால் சரி என ஹசீனோடு புறப்பட்டு விட்டேன். கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று ஏழெட்டு மணித்தியாலங்கள் நீளும் ஒரு பயணம். நாங்களே இறுதியாக அந்தப் பஸ்ஸிலிருந்து இறங்கினோம். காலைச் சாப்பாட்டை உண்டுவிட்டு, அக்கரைப்பற்றின் பெருந்தெருவில் நடந்துகொண்டிருந்தோம். ஹசீன்  நகரின்  கடந்தகால வரலாற்றை , வெயில் இன்னமும் உடலை வருத்தாத அந்தக் காலையில் கூடவே சொல்லிக்கொண்டு வந்தார்.

சற்று நேரத்தில் றியாஸ் குரானாவும் ஹசீனின் வீட்டுக்கு வந்திருந்தார். றியாஸின் கவிதைகள் எனக்கு எப்போதும் பிடித்தமானவை. கனடாவில் ஒரு நண்பர் றியாஸ் ஏனிப்படி கவிதைகளை எழுதிக் குவிக்கின்றார் என்று விமர்சிப்பார். நானோ கொஞ்சமோ, கூடவோ எப்படி எழுதினாலும் அவை நல்ல கவிதைகளாக வருகின்றதா என்பதைப் பார்ப்பதும்தான் முக்கியம் என்பவன். இன்று புதிதாக எழுத வருகின்ற சிலரில் றியாஸின் பாதிப்பு இருப்பதைப் பார்க்கமுடியும், அந்தளவிற்கு அவரொரு தனித்துவமான  கவிதை மொழியை உருவாக்க முயன்றுகொண்டிருப்பவர். அதேபோல றியாஸ் எழுதும் விமர்சன விடயங்களில் எனக்குச் சிலவேளைகளில் உடன்பாடின்மையும் இருப்பதால் நான் அவ்வப்போது அவர் எழுதுவதைப் பின் தொடர்வதையும் சடுதியாக நிறுத்திவிடுபவனாக இருக்கின்றவன் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நாங்கள் அக்கரைப்பற்றில் சந்தித்தபொழுதில் பர்ஹானின் நேர்காணல் 'ஆக்காட்டி'யில் வெளிவந்து கத்னா விவகாரம் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தது. ஹசீன், றியாஸுக்கும், பர்ஹானுக்கும் நல்ல நண்பர் என்பதால் இரண்டு பக்கமும் சமாதானத்தை ஏற்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எனக்கு இதுகுறித்து பெரிதும் தெரியாததால் அநேகமான பொழுதுகளில் அமைதியாகவே இருந்தேன். எனினும் நானும் ஹசீனும், றியாஸிடம் அவர் வைக்கும் விமர்சனங்களின் தொனியை வேறொருவகையில் வைக்கவேண்டும் என்று வற்புறுத்தியிருந்தோம் என்பதாயும் நினைவிருக்கின்றது.

றியாஸின் விவாத வகையால், அவர் ஏதோ கத்னாவிற்கு எதிரானவர் என்ற விம்பம் வந்துவிட்டாலும், நானறிந்தவகையில் றியாஸூம் அதற்கு எதிரானவராக இருக்கின்றார் என்பதாகவே நினைக்கின்றேன். அதுமட்டுமில்லாது அவர் பள்ளிவாசல்கள் மீதும், பெண்களை ஒதுக்குகின்ற வெளிகளைப் பற்றியதுமான விமர்சனங்களை வெளிப்படையாகவே என்னோடு கதைத்திருந்தார். இந்த கத்னா விடயம் தொடர்பாக நடந்த விவாதத்தில் முஸ்லிம்கள் மூடப்பட்ட சமூகம் என்ற பொதுப்புத்திக்கு எதிராக அங்கே progressive ஆன நிறையப்பேர் இருக்கின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்தியதே ஒரு முக்கிய விடயம் என்று நினைக்கின்றேன். அதுவும் ஷர்மிளா, பாத்திமா மஜீதா, அனார் போன்ற பெண்கள் பலர் எவ்வளவு உறுதியாக இதில் நின்றார்கள், வெளிப்படையாகப் பேசினார்கள் என்பதை இந்த உரையாடலில் நாம் அவதானித்திருக்கமுடியும்.

டுத்தநாள் காலை அக்கரைப்பற்றை உள்ளே சுற்றிப் பார்ப்போம் என ஹசீனும் நானும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டோம். உள் ஒழுங்கைகளால் அக்கரைப்பற்றுக்குள் திரிந்துகொண்டு இருக்கும்போது அது ஏனோ ஒருவகையில் எனக்கு யாழ்ப்பாணத்து கிராம ஒழுங்கைகளை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. எங்களோடு றியாஸூம் இணைந்துகொள்ள ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டுவிட்டு அக்கரைப்பற்றுக் கடற்கரைக்குப் போனோம். காலையானாலும் வெயில் அப்படி எரித்துக்கொண்டிருந்தது.

கரைவலை போட்டுப் பிடித்த மீன்களை  இழுத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அருகில் போய் துடித்துக்கொண்டிருந்த மீன்களைப் பார்த்தோம். இப்படிப் பிடிபடும் மீன்களுக்கு உடனேயே ஏலம் எடுப்பதற்கு கரையில் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். அன்று மாலை மருதமுனைக்கு என்னை றியாஸ் கூட்டிக்கொண்டு நண்பர்களைச் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் அங்கே நின்ற அந்த நாள்களில் இலங்கை பெட்ரோலிய நிறுவனம்(?), ஒரு இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கைக்குள் வருவதை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்திருந்தது. எனவே பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு வந்திருந்தது. ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் இடத்திலும் மக்கள் பெட்ரோலைப் பெறுவதற்கு அல்லாடிக்கொண்டு பெரும் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள்.

அன்றைய மாலை றியாஸோடு மோட்டார்பைக்கிள் ஒரு நெடும்பயணம் செய்து மருதமுனையை அடைந்தோம். தெருவில் இரண்டு புறமும் வயல்கள் சூழ்ந்த இடங்களினூடு பயணிப்பது அழகு. எதிர்க்காற்று முகத்தில் அடித்தாலும், ஹெல்மட் பேசும் வார்த்தைகளை அவ்வப்போது தின்று செமித்திருந்தாலும், றியாஸோடு இலக்கியம் சார்ந்து நிறைய விடயங்களை ஆறுதலாகப் பேசிக்கொண்டு போக இந்தப் பயணம் உதவியிருந்தது.

மருதமுனைக் கடற்கரையில் அம்ரிதா ஏயெம், குர்ஷித்,  மூஷா விஜிலி, டனீஸ்ஹரன் போன்ற நண்பர்கள் காத்துக்கொண்டு நின்றார்கள். அவர்கள் அடிக்கடி இப்படி இந்தக் கடற்கரையில் குழுமி இலக்கியம் பேசிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். சற்று நேரத்தில் அலறியும், அப்தும் ஜமீலும் வந்துசேர்ந்தார்கள். நண்பர்கள் சிலர் தமது நூல்களைத் தந்தார்கள். இதுவரை இவர்கள் எவரையும் சந்திருக்கவில்லை என்பதால் வித்தியாசமாக அனுபவமாக இருந்தது.திரும்பிவரும் வழியில் புதிதாக எழுதும் நம்பிக்கை தரும் படைப்பாளிகள் பற்றி நானும் றியாஸும் கதைத்துக்கொண்டு வந்தோம். சிலரது கவிதைகள் தனியே எழுதும்போது நன்றாகவும், கவிதைத் தொகுப்பாகும்போது அந்த நம்பிக்கையை  தக்க வைத்துக்கொள்ள தத்தளிப்பதையும் றியாஸ் குறிப்பிட்டிருந்தார்.

அன்றிரவு திருக்கோவில் கவியுவனைச் சந்திப்பதாக இருந்தது. எட்டு மணியளவில் எங்களை கவியுவன் தனது காரில் அழைத்துக்கொண்டு சாப்பிடக்கூட்டிச் சென்றார். திருக்கோவில் கவியுவன், ஓட்டமாவடி அறபாத் போன்றவர்கள் என் பதின்மங்களின் ஆதர்சங்கள். அவர்களின் கதைகளைக் கொழும்பில் இருந்தபோது சரிநிகர் பத்திரிகையில் வெளிவந்தபோது வாசித்திருக்கின்றேன்.

வியுவன் ஒரு நெடும் உறங்குநிலைக்குப் போய்விட்டு மீண்டும் வந்திருக்கின்றார். இப்போது புதுப்புதுத்தலைமுறைகள் வந்ததன்பின், அவருக்குத் தனது இடம் எதுவென்பது குறித்த ஒருவகைப் பதற்றம் இருக்கின்றதோ என்பதுபோல அவரோடு கதைக்கும்போது எனக்குத் தோன்றியது. எனினும் அவருக்கான ஓரிடம் என்னைப்போன்றவர்களிடம் எப்போதும் இருக்கும், அது என்றுமே பறிபோய்விடாதெனவே நானிப்போதும் நம்புகிறேன்.

இரவுணவைச் சாப்பிட்டபின், அவர் எங்களைக் கடற்கரைக்குக் கூட்டிச் சென்றிருந்தார். பயங்கரமான இருட்டாக இருந்தது. ஏற்கனவே அந்த இடத்திற்கு வந்திருந்த கவியுவனால் கூட சரியான இடம் தேடி உள்ளே நடப்பது கஷ்டமாயிருந்தது. அருகில் பிள்ளையார் கோயிலோ எதுவோ சற்று வெளிச்சத்தோடு இருந்தது. செல்பேசியின் வெளிச்சத்தைக் கொண்டு பற்றைகளை விலத்தியபடி நடந்துபோனோம். நட்சத்திரங்கள் உமிழ்ந்துகொண்டிருந்த அந்த இரவு வேறுவகையான அழகைத் தனக்குள் கொண்டிருந்தது.  மணலில் அமர்ந்து நாங்கள் கதைத்துக்கொண்டிருந்தபொழுதில் இப்படித்தான் ஒருநாள் தனது சகோதரர் கடற்கரையில் இருந்து இழுத்துக்கொண்டு செல்லப்பட்டு காணாமற்போனார் என்றொரு துயரக் கதையைக் கவியுவன் சொல்லத் தொடங்கினார். நமது முகங்களே தெரியாத இருட்டாயினும், எம் எல்லோரின் முகமும் நிச்சயம் துயரத்தில் இறுகிப்போய்தான் இருக்கும்.

பேரழிவு நம் கண்களின் முன் நடந்தும் கூட,  நாம் இன்னும்  பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கூட, அதற்கும் ஒரு குறிப்பிட்ட காலம் தேவை என்று சமாதானம் சொல்லி ஏற்றுக்கொள்ள முடிகின்றது. எனினும் சக மனிதர்கள் தமது இழப்பினூடாகப் பேசுவதைக் கூட, கேட்கும் பொறுமையற்றவர்களாக,  உடனேயே சரி /பிழை அரசியலை உக்கிரமாகப் பேசுகின்ற பலரைப் பார்க்கின்றபோது இத்தகைய மனோநிலை நம்மிடையே எங்கிருந்து வந்ததென மிகுந்த அச்சமாகவே இருக்கும். ஏன் கொஞ்சமாவது மற்றவர்களின் வலிகளைப் புரிந்துக்கொள்ள முயற்சிக்ககூடாதென இவ்வாறு தமது அரசியல் நிலைப்பாட்டை பொதுவெளியில் நிலைநிறுத்த முயற்சிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் தோன்றும்.

இழப்புக்கள் நம் காலத்தைய பெருஞ்சோகம்.  இலங்கையைச் சேர்ந்த அநேகர் தமது நெருக்கமானவர்களை இந்த யுத்தத்தில் இழந்திருக்கின்றார்கள், பலர் இன்னமும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அலைந்துகொண்டிருக்கின்றார்கள்.  முன்னைய தலைமுறையான எஸ்.பொ, சண்முகம் சிவலிங்கம் போன்றோர் தமது தனயர்களை இழந்ததுபோல, திருக்கோவில் கவியுவன் உள்ளிட்ட பலர் தமது
சகோதர்களையும் இழந்திருக்கின்றார்கள். என்றுமே நிலைத்து நிற்கும் இந்த வடுக்களோடு வாழ்வதும்/வாழ்ந்துகொண்டிருப்பதும் அவ்வளவு எளிதும் அல்ல.

அந்த இரவில் நட்சத்திரங்களைப் பார்த்தும், கடற்கரை காற்றை நுகர்ந்தபடியும், மணலில் கைகளை அளைந்து கொண்டிருந்த
நம் எல்லோருடைய இரவும், பிறகு துயரத்தில் மிதக்கும் ஒரு இரவு போல ஆயிற்று.

சாமந்திப்பூ குறிப்புகள்

Wednesday, April 04, 2018


நான் படித்த பாடசாலையின் கோயில்

தினமும் காலை நேரப் பிரார்த்தனைக்காய் சுடும் வெயிலில் ஒருகாலத்தில் நாங்கள் நின்றிருக்கின்றோம். அதுவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணிக்காவாசகர் பாடிய திருவாசகத்தின் ஒருபகுதியான சிவபுராணத்தை யாரோ ஒருவர் பாட, அதை வரிசையில் நாங்கள் அனைவரும் திருப்பச் சொல்லும்படியான ஒரு கொடும் வழக்கமும் அப்போது இருந்தது. கொடும் வழக்கம் என்பதைச் சிவபுராணத்தைப் பாடியதற்காக அல்ல சொல்லவில்லை, அந்த வெயிலில் எங்களை நெடும்நேரம் நிறுத்தி வைத்திருந்தமைக்காய். அநேகமாய் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாரேனும் ஒரு பெண் மயக்கமாகி கீழே விழுந்து கொண்டிருப்பதும் நிகழ்ந்துகொண்டிருக்கும்.

நான் அப்படி ஒருநாளும் மயக்கமானதில்லை. எனெனில் சிவபுராணத்தில் வரும் "பேராது நின்ற பெருங்கருணைப் போராறே /ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே /ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே /நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே" என்று மாணிக்கவாசகர் பாடியதைப் பெண்பாலாக்கி, எதிர்ப்புறத்து நிற்கும் யாரோ ஒரு பெண்ணை நினைத்து உருகி "இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே" என்றொரு பித்துநிலைக்கு வந்துவிடுவதில் அந்தக் காலத்திலேயே நன்கு நான்  தேர்ச்சி பெற்றிருந்தேன்.

இந்தக் கோயிலோடு தெரியும் கட்டடத்தைத்தான் சிலவருடங்களுக்கு முன் எங்களின் உறவினர் ஒருவர் கட்டுவதற்கு நிதியுதவி செய்தபோது, இதை கே.பத்மநாதன் (கேபி) இராணுவத்தின் துணையோடு கட்டுகின்றார் என்ற ஒரு செய்தி சுடச்சுட அடிபட்டது. நான் படித்தகாலத்தில் இப்போது போலில்லாது ஸ்கோர்போர்ட் கோயிலுக்கு இடப்பக்கத்தில் இருந்தது.

அப்படியே இன்னும் இடதுபக்கத்திற்கு பாடசாலை மதிலேறிக் குதித்தோ அல்லது மதிலேறாமலோ நேரே  போனால் எங்கள்  வீடு வரும்.


ஒழிவுதிவசத்து களி

நீண்டகாலமாய்த் தேடிக்கொண்டிருந்த ஒழிவுதிவசத்து களியை தற்செயலாய் Netflixல் கண்டுபிடித்து நேற்றிரவே பார்த்து முடித்திருந்தேன். தேர்தல் நாளில், காட்டுக்குள் சுற்றுலா செல்லும் ஐந்து நண்பர்களின் மகிழ்ச்சியிற்கான சந்திப்பு, குடியின் நிமித்தம் எப்படி விபரீதமாக மாறுகின்றது என்பது பற்றியது இந்தத்திரைப்படம். உன்னி.ஆரின் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டாலும், இதைப் படமாக்கியபோது திரைக்கதையே உருவாக்கவில்லை என்பதும், நடிகர்கள் தம் இயல்பில் நடிக்கவிடப்பட்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

அந்தவகையில் திரைக்கதையே  இல்லாது பரிட்சித்துப் பார்த்த ஒரு திரைப்படமாகவும் இது முக்கியமடைகின்றது.
அதேசமயம், இந்த உரையாடல்களிடையே வர்க்கம், சாதி, நிறம், ஆண் திமிர் எல்லாம் இயல்பாகக் கொண்டுவரப்படுகின்றது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் (20 லட்சம் இந்திய ரூபாய்) நம்மைச் சலனமடைய வைக்கும் திரைப்படம் எடுக்கலாம் என்பதற்கு சனல் குமார் ஓர் எடுத்துக்காட்டு. இதற்கு முதல் படத்தை (Oraalppokkam, மீனா கந்தசாமி இதில் நடித்திருக்கின்றார்) crowd fundingன் மூலம் எடுத்தவர். இப்போது ஒழிவுதிவசத்து களியிற்குப் பிறகு Sexy Durga என்ற சர்ச்சைக்குரிய படத்தோடு வந்திருக்கின்றார். கோவா திரைப்படவிழாவில், இந்து அடிப்படைவாதிகளால் இது திரையிடமுடியாது என்று ஒரு சர்ச்சையும் ஓடிக்கொண்டிருக்கின்றது.

ஒழிவுதிவசத்து களி பார்த்துக்கொண்டு இருந்தபோது, நண்பர்களாய் நாம் இலக்கிய/அரசியல் பேசும் பொழுதுகளும், காடுகளுக்குள் சுற்றுலா செல்லும் காட்சிகளும் என் கண்முன்னே விரிந்துகொண்டு இருந்தது. இதே போல உக்கிரமாய் (மதுவோம்/மதுவின்றியும்) நாங்களும் சாதி/ வர்க்கம்/தேசியம்/பெண்ணியம் என விவாதித்துக்கொண்டும் பிளவுபட்டும், மாறிமாறி காயப்படுத்திக்கொண்டிருப்பதும் நினைவுக்கு வந்தது.  என்ன, இந்தப்படத்தின் இறுதியில் வரும் ஆபத்தான சூழலுக்கு, நாங்கள் இன்னும்வரவில்லை என்பதை நினைத்துக் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சை விடவேண்டியதுதான்.

(Nov 09, 2017)


விழித்திரு

நான் தமிழகத்தில் பார்த்த ஒரெயொரு 'சூட்டிங்' விழித்திரு திரைப்படம் மட்டுமே. விழித்திரு இரவில் நிகழும் கதையென வாசித்திருந்தாலும், நான் பகலில் (சாய்)தன்ஷிகாவிற்கும், விதார்த்திற்கும் இடையில் நடக்கும் காட்சியைப் பார்த்திருந்தேன். மாலை ஆகிக்கொண்டிருக்கும்போது இரவுப் படப்பிடிப்பிற்காக தம்பி ராமையா வந்து நிற்பதைக் கண்டேன்.

இதெல்லாம் சாத்தியமாகியது நண்பர் ஹசீனால். அவர்தான் புத்தகக் கண்காட்சியில் அலைந்துகொண்டிருந்தபோது என்னைக் கண்டடைந்தார். அதுவரை நாம் சந்தித்ததுமில்லை; பேசியதுமில்லை. சில நட்புக்கள் தற்செயலாய் மலர்ந்தாலும், அவ்வளவு அழகாக இருக்கும். ஹசீனுடனான நட்பு, அவரின் அக்கறைப்பற்று வீட்டில் இந்த வருடத்தொடக்கத்தில் சிலநாட்கள் தங்கிநிற்பதுவரை விரிந்து வளர்ந்துகொண்டேயிருக்கின்றது.

ஹசீனாலேயே மீரா கதிரவனிற்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். அடுத்தடுத்த நாட்களில் அவரின் காரிலேயே இருந்துகொண்டு பல்வேறு விடயங்களை (தமிழ்த்திரைச்சூழலில் பெண் இயக்குநர்கள் நிலை உட்பட) அவரோடு கதைக்க முடிந்தது. அவரது ஆற்காட்(?) தெருவிலிருக்கும் அலுவலகத்திற்கு ஹசீனோடு பலமுறை போயிருக்கின்றேன். மீரா கதிரவன் புத்தகங்களை வாங்கிக்குவிக்கும் ஒரு நல்ல வாசிப்பாளராகவும், அவர் அலுவலகம் எங்கும் புத்தகம் நிறைந்து கிடப்பதையும் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். அந்த அலுவலகத்திலேயே பெருமாள் முருகனின் 'கெட்டவார்த்தைகள் பேசுவோம்' நூலை ஷோபாவில் முடங்கிக்கிடந்தபடி வாசித்துமிருக்கின்றேன்.

மீரா கதிரவன் மட்டுமின்றி அவரோடு இருந்த உதவி இயக்குநர்கள்/நண்பர்கள் எல்லோரும் நிறைய புத்தகங்களை வாசிப்பவர்களாக இருந்ததைப் பார்த்திருக்கின்றேன்.  அவர்களில் இன்னுஞ்சிலர் ஈழப் பிரச்சினை பற்றி ஆழமாக அறிந்து வைத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கின்றேன். இதையேன் குறிப்பிடுகின்றேன் என்றால், எனக்கொரு கருணாநிதியை/உதயசூரியனைத் தன்னுடம்பில் பச்சை குத்தியிருக்கும் ஒரு வெறித்தனமான தி.மு.க. நண்பர் இருக்கின்றார். அவ்வாறு தன்னையொரு திராவிட அரசியலுக்குள் அடையாளங்காண்கின்ற அவருக்கே, இலங்கையில் இருக்கும் தமிழர்களின் வரலாறு என்பதே, ஆங்கிலேயரின் ஆட்சியில் கோப்பி/தேயிலை பயிரிடுவதற்காய்க் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களிடம் இருந்து தொடங்குவதாய் அவர் நினைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி வந்ததால்தான் இதைக் குறிப்பிடுகின்றேன்.

நான் பார்த்த படப்பிடிப்பு தரமணிக்கு அருகில் நடந்துகொண்டிருந்தது. இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் அன்று ஜெயலலிதாவின் படத்துடன் இருந்த  உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு அருகிலிருந்த பெருமரத்தின் கீழே காட்சியாக்கம் நிகழ்ந்துகொண்டிருந்தது. இங்கேதான் இசையமைப்பாளர் சத்யனையும் சந்தித்தேன். இப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்த இன்னொரு மலையாள நண்பருடனும் அறிமுகமாகியிருந்தேன். அவரே நானும் ஹசீனும், கொச்சினுக்குப் போனபோது எங்களுக்கான தங்குமிடத்தை ஒழுங்கு செய்து தந்துமிருந்தார்.

புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு தர்கா பாபா பாடசாலைக்கு அருகிலிருந்த விடுதியில் தங்கியிருந்த நான், பின்னர் திருவண்ணாமலைக்குச் செல்கையில், எனது luggagesஐ எங்கே வைப்பதென யோசித்தபோது, மீரா கதிரவன் தனது அலுவலகத்திலேயே வைத்துவிட்டுப் போகாலமெனச் சொன்னார். அங்கேயே வைத்துமிருந்தேன்.

இன்று, நான் சூட்டிங் பார்த்த அதேபடம் எவ்வளவோ தடைகளுக்குப் பின் வெளியாகின்றது. ஒரு இயக்குநராக எவ்விதப் பெருமையும் கொள்ளாது, ஒரு நல்ல நண்பராக உரையாடி, அரவணைத்துச் செல்கின்ற இந்தப் பண்பு எல்லோருக்கும் வாய்க்காது. யாரென்றே தெரியாது தன்போக்கில் அலைந்துகொண்டிருந்த என்னைப்போன்ற ஒருவனையும் உள்ளிழுத்துக்கொண்ட மீரா கதிரவனின் அன்பு அருமையானது.

(Nov 03, 2017)