கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

G-20 ரொறொண்டோவில் நடந்தது என்ன?

Tuesday, June 29, 2010

பதின்மூன்று முட்டாள்க‌ள் மைதான‌த்தில் கிரிக்கெட் விளையாட‌ ப‌தின்மூன்றாயிர‌ம் பேர்க‌ள் அதை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்க‌ள் என்றொரு பெர்னாட் ஷோவின்  ந‌கைச்சுவைத் துணுக்கு ஒன்று இருக்கிற‌து. அதுபோல‌வே G-20 என்ற‌ பெய‌ரில் 20 நாட்டின் த‌லைவ‌ர்க‌ள் சொகுசாக‌ இருந்து க‌தைத்து த‌ங்க‌ளை க‌ட‌வுள‌ரின் அவ‌தார‌மாக‌ 'ஏழை' நாடுக‌ளுக்கு காட்ட‌ ரொறொண்டோவில் கூடினார்க‌ள். எல்லாமே அவ‌ர்க‌ள் நினைத்த‌ப‌டித்தான் ந‌ட‌ந்த‌து... ஜூன் 25ம் திக‌தி வ‌ரைக்கும். க‌ட‌வுள‌ர்க‌ள் என்றால் சும்மாவா? பில்லிய‌ன் டொலர் க‌ண‌க்கில் ($1.24 Billion) பாதுகாப்புக்குச் செல‌வு செய்து, க‌ட‌வுள‌ரின் மாநாட்டுக்கு அர‌ங்குக‌ளைச் சுற்றி வான‌ளாவிய‌ வேலிக‌ளை அடைத்து, அது போதாதென்று காலாட்ப‌டை, க‌வ‌ச‌ந்தாங்கிய‌படை, குதிரைப்ப‌டை, ந‌வீன‌ தொழில்நுட்ப சைக்கிள் ப‌டையென்று ப‌ல்வேறு த‌டுப்புப் ப‌டைக‌ளையும் உருவாக்கியிருந்தார்க‌ள். இதைவிட‌ க‌ண‌க்கில்/க‌வ‌ன‌த்தில் வ‌ராத‌ உள‌வுப்ப‌டை,  பொதுமக்களைப்போல க‌ல‌ந்துவிட்ட‌ உள்ளூர்ப்படை, ஏதும் அச‌ம்பாவித‌ம் ந‌ட‌ந்தால் குருவிக‌ளாய் ம‌னித‌ர்க‌ளைச் சுட்டுத்த‌ள்ள‌ சினைப்ப‌ர் ப‌டை என‌ ந‌க‌ரின் மூலை முட‌க்கு எல்லாம் குமிந்துகிட‌ந்தார்க‌ள் ந‌ம் க‌ட‌வுள‌ரின் பாதுகாவ‌ல‌ர்க‌ள்.

ஆனால் விளையாட்டில்தான் 13பேர் முட்டாள்க‌ள் விளையாட‌ 13000 பேர் வேடிக்கை பார்ப்பார்க‌ள்; G-20 என்ப‌து ப‌ல‌ரின் நாளாந்த‌ வாழ்வையும், அடிப்ப‌டை உரிமைக‌ளையும் ப‌றிக்கும் நிக‌ழ்வ‌ல்ல‌வா? க‌ட‌வுள் என்றாலும் வினையாகிப்போனால் எதிர்வினை செய்து அனைவ‌ருக்குமான‌ சுத‌ந்திர‌த்தை  உறுதிசெய்வ‌தற்கு G20 எதிர்ப்பாள‌ர்கள் (Anti G20) ஒன்று கூடினார்கள். இறுதியாய் தம் விளையாட்டு மைதான‌த்தில் தாமே ஆடி தம் 'வெற்றி'யை உலகுக்கு எடுத்தியம்ப விரும்பிய‌ க‌ட‌வுள‌ரை முற்றாக ம‌ற‌ந்து, அனைவரும் இந்த‌ எதிர்ப்பாள‌ர்க‌ள்/அர‌ச‌விழ்ப்பாள‌ர்க‌ளைப்  ப‌ற்றியே பேச‌த்தொட‌ங்கின‌ர். 'எங்க‌ளுக்கு G20 மாநாடு, விளையாட்டில் ஒலிம்பிக்ஸைப் போல கோலாகலமானதென' அர‌சு வழங்கவிருந்த சலுகைகளை வாங்க‌ ப‌ல்லிளித்துக் கொண்டிருந்த‌ பெருநிறுவனங்களான வ‌ங்கிக‌ளையும் சேத‌ப்ப‌டுத்தி ஒரு செய்தியைச் செப்பிவிட்டுத்தான் ஓய்ந்தார்க‌ள் அர‌ச‌விழ்ப்பாள‌ர்க‌ள்.


ஜூன் 25ற்கு முன்...
G20 மாநாடு ஜூன் 26ல் ரொறொண்டோவில் தொடங்குவதற்கு முன்ன‌ரே ப‌ல்வேறு அமைப்புக்கள் தம் எதிர்ப்பைக் காட்டுவ‌த‌ற்காய் பல ஊர்வ‌ல‌ங்க‌ளை ந‌க‌ரின் முக்கிய‌ப‌குதிக‌ளில் நடத்தத் தொடங்கியிருந்தன.. ஜூன் 24 க‌ன‌டா நாட்டின் பூர்வீக‌க்குடிக‌ள் த‌ம‌து நில‌ங்க‌ள் தொட‌ர்ந்து ஆக்கிர‌மிப்ப‌தையும், G20யின் நிகழ்ச்சி நிரலையும் எதிர்த்து நகரின் முக்கிய வீதிக‌ளில் ஊர்வலமாகச் சென்று ஒன்ராறியோ பாராளும‌ன்ற‌ வளாக‌மான‌ குயின்ஸ் பார்க்கைச் சென்ற‌டைந்த‌ன‌ர். நீங்க‌ள் என்ன‌ செய்தால் என்ன‌ இந்த‌ வீதிக‌ள் எம‌க்குரிய‌ன‌ என்று பொலிஸ் என்ற‌ அதிகார‌ அமைப்பு ம‌றைமுக‌மாய் எல்லோருக்கும் உண‌ர்த்த‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌. சைக்கிள்க‌ளில், குதிரைக‌ளில், த‌ங்க‌ள் அடையாளம் பொறிக்கப்பட்ட கார்களில், ஏன் சாதார‌ண ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும வாகங்களிலென, எங்கும் பொலிஸே நீக்க‌ம‌ற‌ நிறைந்திருந்த‌ன‌ர். போதாதற்கு வானில் வானூர்திகளாகவும் பறந்துகொண்டிருந்தனர். உங்க‌ளால் இப்ப‌டி சும்மா க‌த்த‌வே முடியும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் எங்க‌ள் கைக‌ளில்தான் என்று சொல்லாமற் சொன்னார்கள்.

ஜூன் 25 - ‍ வெள்ளி...

மிக‌ப்பெரிய‌ பேர‌ணியொன்று ப‌ல‌வேறு அமைப்புக்க‌ளினால் அல‌ன் பூங்காவில் (Allan Gardens) பிற்பகல் 2.30 மணியளவில் தொட‌ங்க‌ இருப்ப‌தாய் அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 2000ற்கு மேலான‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்துகொண்டார்க‌ள் (நாங்க‌ளும் க‌ல‌ந்துகொண்டோம்). அன்றுதான் ஒன்றாரியோ பாராளும‌ன்ற‌த்தில் இர‌க‌சிய‌மாக‌ பொலிசுக்கு அதிக‌ அதிகார‌ம் கொடுக்கும் ச‌ட்ட‌மொன்று இய‌ற்ற‌ப்பட்ட‌து பொதுவெளியில் க‌சிய‌த் தொடங்கியது. ஜூன் 2ல் இச்ச‌ட்ட‌ம் இய‌ற்ற‌ப்ப‌ட்டிருக்கிற‌து; அது என்ன‌வெனில் மாநாட்டு அர‌ங்கு வேலிக்கு 5 மீற்ற‌ர் தொலைவுக்கு அப்பாலே ஒருவ‌ர் ந‌ட‌மாட‌முடியும். அப்ப‌டியொருவ‌ர் அதையும் மீறி வ‌ந்தால் அவ‌ரை விசாரிக்க‌வும், அடையாள அட்டை கேட்க‌வும், பொருட்க‌ளைப் ப‌ரிசோதிக்க‌வும் பொலிசுக்கு உரிமையுண்டு. இவ்வாறு செய்ய‌ப்படுவ‌தை ஒருவ‌ர் -தன் தனிமனித அடிப்படை உரிமையை முன்வைத்து- ம‌றுப்பாரானால் அவ‌ரை பொலிஸ் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பும் அதிகாரமுண்டு. ஒரு 22 வ‌ய‌து இளைஞ‌ன் இவ்வாறு த‌ன் அடையாள‌த்தைக் காட்ட‌ ம‌றுத்து கைதுசெய்ய‌ப்ப‌ட்ட‌போதே பொலிஸ் த‌லைவ‌ரால் இச்ச‌ட்ட‌ம் ஏற்க‌ன‌வே இய‌ற்றப்பட்ட‌து குறித்து பொதுவெளியில் தெரிவிக்க‌ப்ப‌டுகிறது. கிட்டத்தட்ட 3 வாரங்களாக இது குறித்து எந்த பொது அறிவிப்பும் வெளியிடாது கள்ள மவுனம் காக்க காசுக்கடவுளரின் பாதுகாவலர்களால் மட்டுமே முடியுமே. க‌ட‌வுள‌ர்க‌ள்தான் ப‌க்த‌ர்க‌ளுக்கு இர‌க‌சிய‌மாய் அருள் பாலிப்பார்க‌ள் என்றால் பொலிஸும் தம் கடவுளரின் கடைவாய்ச் சிரிப்புக்காய் பொதும‌க்க‌ளைப் பலிகொடுக்க இர‌க‌சிய‌மாய் இச்ச‌ட்ட‌த்தை இய‌ற்றியிருந்தார்க‌ள் போலும்!

அல‌ன் பூங்காவில் குழுமியிருந்த‌ ம‌க்க‌ள் ந‌க‌ர‌த்தெருக்க‌ளில் ஊர்வ‌ல‌மாக‌ப் போகத்தொட‌ங்குகின்ற‌ன‌ர். No One Is Illegal என்ற‌ அமைப்பினூடாக‌ நாங்க‌ளும் ந‌ட‌க்க‌த் தொட‌ங்குகின்றோம். பூங்காவில் முற்றுமுழுதாக‌ த‌ங்க‌ளை க‌றுப்பு உடையால் ம‌றைத்த‌ ப‌ல‌ரைக் காண்கிறோம் (எங்க‌ளை ப‌ட‌ம் எடுக்க‌வும் அவ‌ர்க‌ள் அனும‌திக்க‌வில்லை‍ இவ‌ர்க‌ளைப் ப‌ற்றி கீழே சொல்கிறேன்). ஒவ்வொரு அமைப்பும் அர‌சையும் அதிகார‌த்தையும் எதிர்த்துக் கோசம் போடுகின்றன.. "No One Is Illegal, Canada is Illegal" என்கின்ற‌ கோச‌மும் எழுகின்றது. இது நிச்சயம் அதிகார அடிவருடிகளுக்குக் கோபத்தையோ/எரிச்சலையோ ஏற்படுத்தியிருக்கும். புதிதாய் உரிய அனுமதியின்றி வருபவர்களை Illegal Immigrants என்று அடையாளங்குத்தி திருப்பி அனுப்பச் செய்கின்ற அரசு, தன் மூதாதையர்கள் இந்நாட்டின் பூர்வீகக்குடிகளின் நிலங்களை ஆக்கிரமித்து, ஒடுக்கியே தனக்கான அரசை ஸ்தாபித்தபோது, Canada is Illegal என்பதில் எவ்விதத் தவறுமேயில்லைத்தானே. கோச‌ம் எழுப்ப‌ப்ப‌டாத‌போது ராப் பாட‌ல்க‌ளால் அதிகார‌த்தை முக்கிய‌மாய் பொலிசை திட்டுகிற‌/கேலி செய்கிற‌ வ‌ரிகள் மிகப்பெரும் சத்தத்தில் ஓடுகின்ற‌ன‌. கூட்ட‌ம் ந‌கர‌ ந‌க‌ர சைக்கிள் பொலிஸ் இருபுற‌மும் வேலி அடைத்து எங்களைச் சூழ்ந்து வ‌ருகின்ற‌ன‌ர். நாங்க‌ள் போகின்ற‌ வீதிக்கு குறுக்காய் திடீரென‌ ஒரு பொலிஸ் கார் த‌ன் அலார‌த்தை அல‌ற‌விட்டு த‌ன்னைவிடுவென‌ அதிகார‌ம் காட்டுகிற‌து. ஏற்க‌ன‌வே அள‌வுக்க‌திக‌மான‌ பொலிஸின் பிர‌ச‌ன்ன‌த்தாலும் அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ அதிகார‌த்தாலும் எரிச்ச‌லும் கோப‌ம‌டைந்திருந்த ஊர்வலக்குழுக்கள் பொலிஸ் காரைச் சூழ‌த்தொட‌ங்குகின்ற‌து.

இங்கே ஒன்றை நினைவில் கொள்ள‌வேண்டும். ஊர்வ‌ல‌த்தில் வ‌ந்த‌ அரைவாசிக்கும் மேற்ப‌ட்டோர் கையில் க‌ம‌ராக்க‌ள் இருக்கின்ற‌ன‌. மேலும் ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர். எந்த‌ அத்துமீற‌லும் உட‌னே ப‌ட‌மாக்க‌ப்பட்டு அதேவேக‌த்தில் பொதுவெளியில் ப‌ர‌வத் தொட‌ங்கிவிடும். அலாரம‌டித்த‌ பொலிஸ் காரை ஊர்வ‌ல‌க்கார‌க‌ள் சூழ‌ந்த‌தைப் போலவே க‌ம‌ராக்க‌ளும் சூழ‌கின்ற‌ன‌. ப‌ட‌மெடுக்கின்ற‌ன‌. த‌ன் அதிகார‌ம் இனி ஆகாதென்ற‌ நிலையில் பொலிஸ் காரின் அலார‌ம் நிறுத்த‌ப‌ட்டு அமைதியாகின்ற‌து. இந்த‌ தெருக்க‌ள் உங்க‌ளுக்கு ம‌ட்டுமில்லை; நாங்க‌ள் ஊர்வ‌ல‌ம் போகும்போது அது எங்க‌ளுக்கும் சொந்த‌மான‌து என்ப‌தை மறைமுக‌மாக‌ பொலிசுக்குத் தெளிவுப‌டுத்தப்ப‌டுகிற‌து.

இப்ப‌டிக் காரைச் சூழ்ந்து எல்லோரும் நின்றால் ஏதாவது அச‌ம்பாவித‌ம் நிக‌ழ்ந்துவிடக்கூடுமென்ற‌ எச்ச‌ரிக்கையில் சுற்றி நிற்ப‌வ‌ர்க‌ளைத் தொட‌ர்ந்து ந‌ட‌ந்துபோகுமாறு சில‌ பெண்க‌ள் அறிவுறுத்துகிறார்க‌ள். தொட‌ர்ந்து கோஷ‌ங்க‌ள் எழுப்ப‌டுகிற‌து; ஊர்வ‌ல‌ம் ந‌க‌ர‌த்தொட‌ங்குகின்ற‌து. சில‌ நிமிட‌ங்க‌ளில் எங்க‌ளுக்குப் பின்னே கூட்ட‌ம் அல்லோலக‌ல்லோலப்ப‌டுகிற‌து. என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று க‌ம‌ராவுட‌ன் ஓடும்போது பொலிஸ் ஒரு க‌றுப்பின‌ இளைஞ‌னை நில‌த்தோடு சாய்த்து கைதுசெய்கிற‌து. கூட்ட‌ம் கொந்த‌ளிக்க‌த் தொட‌ங்குகிற‌து. அங்கே நிற்கும் பொலிஸைச் சுற்றி ஊர்வ‌ல‌க்கூட்ட‌ம் சுற்றிவ‌ளைக்க‌த் தொட‌ங்குகிற‌து. Let him GO என அவ‌ரை விட‌ச்சொல்லி கூட்ட‌ம் க‌த்துகிற‌து. ப‌ட‌மெடுத்துக்கொண்ட‌வ‌ர்களையும் பொலிஸ் முர‌ட்டுத்த‌ன‌மாய் ந‌ட‌த்துகிற‌து. No One Is Illegal சார்பாக‌ பொலிஸ் அராஜ‌க‌த்திற்கு எதிராக‌ ஏற்கனவே கோச‌ம் எழுப்பிக்கொண்டிருந்த‌ பெண்ணை பொலிஸ் குறிவைத்து தாக்குகிற‌து. அவ‌ருக்கு க‌ண்ணருகில் காய‌ம் ஏற்பட்டு இரத்தம் வடிகிறது.. அந்த‌ இளைஞ‌னை கைதுசெய்வ‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம் என்ன‌வென்று அறியாத‌போதும் அவ‌ர் காது கேளாத‌/ வாய் பேசாத ந‌ப‌ர் என்று அறிந்தோம்.

இவ‌ரை பொலிஸ் ஊர்வ‌ல‌த்தின் இடையே புகுந்து கைது செய்த‌தாக‌சொல்ல‌ப்ப‌டுகிற‌து. இவ்விளைஞன் கைது செய்யப்படும்போது அவர் வாய் பேசமுடியாதவர், தயவு செய்து அவரின் கைகளை இறுக்கக்கட்டினால் அவரால் (சைகையால்) பேசமுடியாது என அவரின் நண்பி கூறியபோதும் பொலிஸ் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறது. அவர் பேசுவதை விளங்கி பொலிசுக்கு தெரிவிக்க தன்னையும் கூட்டிச்செல்க என அவ்விளைஞனின் தோழி கேட்டபோதும் பொலிஸ் மறுக்கிறது. நேற்று அவரின் வழக்கறிஞர் 'இது கிட்டத்தட்ட சாதாரண வாயால் பேசும் ஒருவரை அவரைப் பேசமுடியாது செய்ய duct tape ஒட்டுவதற்கு நிகர்த்த மனித உரிமை மீறல்' எனக் கூறியிருக்கிறார்.

ஊர்வ‌ல‌ம் எங்கே முடியுமென‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளால் கேட்க‌ப்ப‌ட்ட‌போதும் அது செல்லும் வீதிக‌ளோ, முடியும் இட‌மோ தெளிவாக‌க் கூற‌ப்ப‌டாது, இய‌ன்ற‌வை பாதுகாப்பு வேலிக்க‌ருகில் செல்வ‌து என‌ ஊர்வலத்தை வழி நடத்துபவர்களால் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. எனினும் பெருந்தொகையான‌ பொலிஸ் பிர‌ச‌ன்ன‌த்தால் வேலியை நெருங்க‌முடியாது, ஊர்வ‌ல‌ம் மீண்டும் தொட‌ங்கிய‌ இட‌த்திற்கு (அலன் பூங்காவிற்கு) வ‌ருகின்ற‌து. வீட‌ற்ற‌வர்களுக்கு (Homeless People) ஆத‌ர‌வு (Solidarity) கொடுக்கும் வ‌கையாக‌ கூடார‌ங்க‌ள் சிலவற்றை அங்கேயே அமைத்து 40ற்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அவ்விர‌வு அங்கேயே த‌ங்குகின்ற‌ன‌ர்.

( தொடரும்)

8 comments:

Unknown said...

http://www.680news.com/news/local/article/71937--chief-bill-blair-defends-police-g20-actions-displays-weapons-seized

6/29/2010 10:40:00 PM
Unknown said...

கேட்க நினைத்தேன். எழுதிவிட்டீர்கள். ஜூன் இரண்டு மேற்படி சட்டம் இயற்றப்படவில்லை என்கிறார் Bill Blair. வன்முறைக் காட்சிகளைச் செய்திகளில் பார்த்தமோது மைய நோக்கத்தைக் குலைத்துவிட்டார்களே என்று பதறினேன். அந்தப் பதற்றம்தான் கீச்சுக்களாக (உபயம்: இரமணி) வந்தது. பனிமூட்டம் கொஞ்சம் விலகியிருக்கிறது. முழுக்க விலக்குவீர்கள் என்பது நம்பிக்கை

6/29/2010 10:40:00 PM
DJ said...

Please read this one:
Queers confront Blair at police 'pride' celebration
http://g20.torontomobilize.org/node/355

6/29/2010 11:35:00 PM
DJ said...

/. ஜூன் இரண்டு மேற்படி சட்டம் இயற்றப்படவில்லை என்கிறார் Bill Blair./
நீங்கள் எங்கே கேட்டீர்கள்/வாசித்தீர்கள்...?

பிளெயர் அப்படிச் சொன்னாரா? முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பது என்பது இதைத்தானா...!

பிளேயர் சென்ற வியாழனோ/வெள்ளியோ கேள்வி நேரத்தில் கூட ஒப்புக்கொண்டிருந்தாரே?

இந்தாருங்கள் நான் எழுதியதற்கான ஆதாரம்
The law was approved June 2 through an order-in-council, with no debate in the Legislature, after being discussed by the legislation and regulations committee of McGuinty’s cabinet

http://www.thestar.com/news/gta/torontog20summit/article/828974--dalton-mcguinty-bill-blair-defend-quiet-boost-in-arrest-powers

6/29/2010 11:41:00 PM
DJ said...

கீத்,
நான் Black Bloc ன் சில செயல்களை நியாயப்படுத்தப் போவதில்லை. வரும் பதிவுகளில் அவர்கள் பற்றி எழுதுவேன். ஆனால் முட்டாள் பிளேயர் குறிப்பிடுவதைப் போல அவர்களை 'தீவிரவாதிகள்' என ஒருபோதும் அழைக்கப் போவதில்லை.

பிளேயர் பொலிஸ் கைப்பற்றியதாகக் குறிப்பிடும் ஆயுதங்களை விட சாதாரண வன்முறைக்குழுக்களில் இதைவிட 'ஆபத்தானவை' இருக்கும் என்பது சிறுபிள்ளைக்குக் கூடத்தெரியும். தங்கள் செயல்களை நியாயப்படுத்த புதிய புதிய செய்திகளை பொலிஸ் உருவாக்கும். நம்மைப் போன்ற ஒடுக்குமுறை நாடுகளிலிருந்து வருபவர்க்கு இதன் பின்புலங்களும்/கட்டமைக்கப்படும் விதங்களும் தெரியாதா என்ன?

6/29/2010 11:47:00 PM
DJ said...

வெட்க‌மின்றி பொய் சொல்லும் ரொறொண்டோ பொலிஸ்:
http://www.theglobeandmail.com/news/national/toronto/police-admit-deliberately-misleading-public-on-expanded-security-fence-law/article1622864/?cmpid=rss1#article

6/30/2010 09:48:00 AM
meerabharathy said...

நமது போராட்டங்களும் வழி முறைகளும் திசைமாற்றப்படும் நோக்கங்களும் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதவேண்டும் என உணர்கின்றேன்….இதற்கான காரணம் ஜீ20யின் போது நடைபெற்ற சம்பவங்களே…..
ஏனனில் நாம் போராட்டங்கைள முன்னெடுப்பதன் நோக்கம் ஆட்சியாளர்களுக்கு நமது பிரச்சனைகளை முன்வைப்பதும் விளக்குவதுமே…
இன்னுமொரு காரணம் நம் வாழ்வை பாதிக்கும் வகையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஆகும்;;.
ஆனால் ஜீ20 க்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கறுப்புச்சட்டையணிந்து,
அமைப்பொன்றுக்குள் கட்டுப்பட்டு ஒழுக்கமாக செயற்பட முடியாத அனாக்கிஸ்ட் எனும் மனிதர்களின் செயற்பாடுகளினால் போராட்டத்தின் நோக்கங்கள் திசை திருப்பப்பட்டது கவலைக்குரியதே….
ஏனனில் இவர்களின் தன்னியல்பான செயற்பாடுகளினால்….
இறுதியாக நடைபெறுவது என்னவெனில்,
உலகை ஆளும் ஆட்சியாளர்களுக்கும் அடக்கப்பட்ட மனிதர்களுக்கும் இடையாலான முரண்பாடு என்பது திசை திருப்பப்பட்டு…
பொலிஸாருக்கும் அடக்கப்பட்ட மனிதர்களுக்குமான முரண்பாடாக மாற்றமடைந்துள்ளது…
இதுவே பிரதான செய்தியாக இன்று உள்ளது….
இங்கு பொலிஸார் என்பது ஆட்சியாளர்களின் எய்த அம்புகளே….
இந்த அம்புகளை ஆட்சியாளர்களுக்கு எதிராக திசை திருப்ப முடியாதளவிற்கு….
நமது போராட்ட செயற்பாடுகளில் புதிய படைப்பாற்றல்களை புகுத்த முடியாதளவிற்கு வறுமையாக உள்ளோம்….
இது ஒரு புறம் ஆட்சியாளர்களுக்கு சாதமாகன செய்தியாகவும் அவர்களது பாதுகாப்பு செலவுகளை நியாயப்படுத்துவதற்கும் வழி வகுத்துள்ளது….
இதனால் அடிபட்டுப்போனது உரிமைகள் மறுக்கப்பட்ட அடக்கப்பட்ட மனிதர்களின் குரல்களே…..
இது புலம் பெயர் புலி ஆதரவாளர்களின் போராட்ட வழிமுறைகளாலும் தவறான கோ~ங்களாலும் இலங்கையில வாழும் தமிழ்p பேசும் மனிதர்களின் அரசியல் உரிமைகளை வெளிக்கொண்டுவருவதற்கான சந்தர்ப்பத்தை மழுங்கடித்ததைப் போன்றதே என்றால் மிகையல்ல…..
ஏன்னைப்பொருத்தவரை இனிவரும் காலங்களில் போராட்ட செயற்பாடுகள் என்பவை ஆரோக்கியமானவையாக மட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபடுகின்ற ஒவ்வொரு மனிதர்களையும் அடுத்த கட்டத்திற்கு வளர்ப்பதாக இருக்கவேண்டும்….
ஆவ்வாறன ஒரு ஆரோக்கியமான படைப்பாற்றல் கொண்ட போராட்ட வழிமுறை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருக்குமானால் அரசாங்கத்தையும் அதன் பாதுகாப்பு செலவுகளையும் நாம் முட்டாள்தனமான அர்த்தமற்ற செயற்பாடாகவும் வெளியுலகுக்கு காண்பித்திருக்கலாம்…
இன்றைய நமது தேவை அமைப்பாதலும்…. புதிய ஆரோக்கியமான படைப்பாற்றல் கொண்ட போராட்ட அனுமுறையை கண்டுபிடிப்பது என்பதே….
இல்லையெனில் ஜீ20 நடந்தது போன்று ஆட்சியாளர்களின் சதிவலைக்குள்ளே மீள மீள விழ்ந்துகொண்டிருப்போம் என்பது தவிர்க்கமுடியாதது மட்டுமல்ல கவலைக்கிடமானதுமாகும்….

நட்புடன் மீராபாரதி

6/30/2010 05:42:00 PM
அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//பிளெயர் அப்படிச் சொன்னாரா? முழுப்பூசணிக்காய் சோற்றில் மறைப்பது என்பது இதைத்தானா...!//

Well said...

7/05/2010 04:47:00 PM