நேற்று மாலை Jazz & Blues festivalற்குப் போயிருந்தேன். பூங்காவிற்குள் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு திறந்தவெளி அரங்குகளில் பாடகர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் முரே போர்ட்டர் (Murray Porter) பாடிக்கொண்டிருந்தார். 'காதல் அதற்கான வழியைக் கண்டுபிடிக்கும்' என்ற பாடல் ஒருபக்கம் கரையவைக்க, முன்னாள் காதலன்/காதலி/துணைகளுக்காய் பாடுவதாய் முரே சொல்லிப் பாடிய 'அப்படியே போய்விடு, திரும்பிவராதே' (Stay Gone) என்ற பாடல் நமக்குள் ஏதேனும் கோபமிருந்தால் அதையும் வழிந்தோடச் செய்யவைத்தது. முரே போர்ட்டர் பூர்வீகக்குடிகளின் Mohawk tribesஐச் சேர்ந்தவர். காதலை மட்டுமில்லாது 'நெடுஞ்சாலை-16' என்ற பாடலில் நெடுஞ்சாலைகளில் காணாமற்போன பெண்களுக்காகவும், 'இந்த மன்னிப்புப் போதுமா?' என்று நமது அரசு இங்குள்ள பூர்வக்குடிகளுக்குச் செய்த அநியாயங்களுக்கு 'மன்னியுங்கள்' என்று கேட்பது மட்டும் போதுமா என்றும் சில அரசியல்மயமாக்கப்பட்ட பாடல்களையும் உருக்கமாகப் பாடினார்.
பாடல்களுக்கிடையில் பேசும்போது, யாராவது தமது கலையாக்கங்களில் working செய்கின்றோம் என்றால் ஏற்றுக்கொள்ளாதீர்கள். கலை என்பது playing. எம்மை நாம் மறந்து அதில் ஈடுபடுவது. அப்போதே அது அற்புதமான கலையாகின்றது எனவும் சொன்னார். கலையைச் செய்நேர்த்தியோடு ஒருவகை நுட்பமாக யாராலும் செய்துவிடமுடியும், ஆனால் அதை ஒரு விளையாட்டாக, கலை நிகழ்கின்றது என்பதை நாம் அறியாமல் அதை நிகழ்த்திக்காட்டுபவர்களே அரிய கலைஞர்களாக மிஞ்சுகின்றார்கள் என்பது காலம் நமக்குக் கற்றுத்தரும் பாடமாகும்.
அன்பே, என்னுடைய நல்லதொரு பொருள் நீ. உன்னை ஒருபோதும் போக விடப்போவதில்லை. நானொரு முரட்டு மனிதனாக இருந்தேன். எனக்கு இதயம் ஒரு கல்லாக இருந்தது. இப்போது எல்லாம் மாறிவிட்டதென 'Baby you're a good thing' என்ற பாடலை முரே பாடியபோது நாம் உற்சாகத்தின் நிலைக்கு வந்திருந்தோம். நிறையச் சோடிகள் அந்த அழகிய மாலையை நடனமாடி அழகாக்கத் தொடங்கியிருந்தனர்.
இன்று எழுத்துக்கு மட்டுமில்லை, இசை, ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கும் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நம்மால் பொறுமையாக நின்று நிதானித்து இரசிக்கமுடியாமல் இருப்பதாகும். கலை என்பது உடனே எங்களுக்குள் தங்களை உள்ளிழுத்துக்கொள்ளாது. நிறையப் பரிசோதனை செய்யும், பரீட்சித்துப் பார்க்கும், சிலவேளை குழப்பமடையவும் செய்யும். பின்னர்தான் தனது கதவுகளைத் திறந்து உள்ளிழுத்துக்கொள்ளும். முதலில் சாதாரணமாகக் கேட்கத் தொடங்கிய முரேயின் இசையினுள் உள்ளிறங்கியபோது காதலியின் கரம்பற்றி நடப்பது போன்று இதமாய்த் தோன்றியது. மேலே வானத்தில் நிலவும் அரைவாசியாக காலித்தபடி கூடவே நமக்குத் துணையிருந்தது.
நேற்றைய அழகிய மாலைக்கு நன்றி செலுத்த ஞாயிறு காலை சைக்கிளை எடுத்து ஓடத்தொடங்கினேன். மெல்லிய குளிராக இருந்தாலும் உற்சாகமாக சைக்கிளை ஓடமுடிந்தது. இன்றைய காலை நமது தமிழாக்கள் நிதி சேகரிப்பிற்காய் ஏதோ ஒரு வருடாந்த நடைபவனி செய்துவிட்டு, பூங்காவில் Mr Local பாட்டுக்குச் சின்னப்பிள்ளைகளை விட்டு ஆடவைப்பதைப் புன்னகையுடன் கடந்துவந்தபோது முத்துராசா குமாரின் இந்தக் கவிதைதான் நிகழ்வுக்கு வந்தது.
டிஸ்கோ
.........................
இன்று இரவுதான்
கடைசிநாள் மண்டகப்படி
இறுதிப்படையலாக
டிஸ்கோ டான்ஸ் ஆரம்பித்துவிட்டது.
மேடைக்கு அருகிலேயே
சீரியல் பல்பு சாரத்தில் நிற்கிறார்
சங்கிலி கருப்புசாமி.
வீச்சரிவாளில் பல்புகள் எரியாமல் போக
ஆயுதமற்று நிற்கும் கருப்புவினால்
தெருவின் போர்த்திறனுக்கு
இழுக்கென்று குதித்த படைவீரர்கள்
மைக்செட்காரனை வீழ்த்தக் கிளம்புகையில்
ஊமைவிழிகளிலிருந்து ஒலித்த
' ராத்திரி நேரத்துப்பூஜை' பாடலுக்கு
சினம் மறந்து ஆர்ப்பரிக்கத்தொடங்கினர்
நீண்ட காலம் கழித்து வெறுங்கைகளை
சொடக்கு முறித்த சங்கிலி கருப்பு
பாடலுக்கு முரட்டு விசிலாக அடித்தார்.
...............
(Sept, 2019)
0 comments:
Post a Comment