கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்
Showing posts with label ஸென். Show all posts
Showing posts with label ஸென். Show all posts

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 02

Wednesday, August 26, 2026

 

 நாள் - 00

 ஜூலை -22 - புதன்கிழமை


***

விபாஸனா தியானம் வியாழக்கிழமை தொடங்குகின்றது என்றாலும் எம்மை முதல் நாளான புதன்கிழமை வரச் சொல்லியிருந்தார்கள். நாம் எமது விபரங்களைப் பதிவு செய்து எம்மைத் தயார் செய்வதற்கு முதல் நாளே நாம் செல்ல வேண்டியிருந்தது.

நான் இருந்த நகரிலிருந்து நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இந்த விபாஸனா நிலையம் இருந்தது. போகும்போது இன்னும் இரண்டு பேரை என் காரில் ஏற்றிச் சொல்வதாக உறுதியளித்திருந்தேன் (விபாஸானா தொடங்கும் வரை காத்திருக்காமல் எமது meritsஐ  ஜாடிக்குள் முன்னரே சேகரித்தல் எனவும் இதைச் சொல்லிக் கொள்ளலாம்). நாம் விபாஸனாவிற்கு வருகின்றோம் என்று பதிவு செய்யும்போது, உங்கள் வாகனத்தில் வேறு யாரை ஏற்றி வரமுடியுமா (ride) எனக் கேட்பார்கள். 




நான் என் வாகனத்தில் இரண்டு பேரை ஏற்றிக் கொண்டேன். ஒரு பெண் இத்தாலியப் பின்புலத்தைச் சேர்ந்தவர். மற்றவர் மலேசியக்காரர், ஆனால் மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்த சென்ற தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவர்.

ஒருவர் என்னைப் போல தியான வகுப்புக்கும், மற்றவர் எமக்கு உணவு சமைப்பதற்கும் வந்திருந்தார். தியானத்துக்குப் போவதைப் போல, Serving செய்வதும் விபாஸனாவில் மிக முக்கியமானது. இதை இன்னொரு பொழுது விரிவாகப் பார்ப்போம்.

*
இருவரும் விபாஸனாவுக்கு என்னைப் போன்ற புதியவர்கள் அல்ல. ஏற்கனவே விபாஸனா பழகிய அனுபவசாலிகள். ஆகவே அவர்கள் விபாஸனாவுக்கு புதியவனாக வரும் எனக்கு என்ன அறிவுரை சொல்லுவீர்கள் என்று கேட்டேன். அறிவுரை எல்லாம் உனக்குத் தேவையில்லை, நீ வெற்றி வாகை சூடி வருவாய் என்று மட்டும் உற்சாகப்படுத்தினார்கள்.

போர்க்களத்துக்குப் போவதற்கு முன்னரே கால்கள்  எனக்கு நடுங்குகின்றனவே. பத்து நாள் குருஷேத்திரத்தில் இரண்டு நாள் தாக்குப் பிடிப்பேனா, மாமியார் முன் மருகும் மருமகன் போல வெட்கித்து நிற்க, என்னை விபாஸனாவில் இருந்து மூன்று நாளில் 'நீ இன்று போய்  விபாஸனாப் போருக்கு அடுத்துமுறை தயாராகி வா' என்று இராவணனைப் போல அவமானப்படுத்தி அனுப்புவார்களா என்றெல்லாம் என் உள்மனம் கதறுகிறது  என்பதை  எப்படி இவர்களுக்குச் சொல்வது? எனவே என் நடுக்கத்தை வெளிக்காட்டாது காரின் ஸ்டீரியங்கை இறுக்கிப் பிடித்து என்னை நிதானப்படுத்திக் கொண்டேன்.

இத்தாலியன் பெண் கொஞ்சம் இரக்கப்பட்டு, 'உனக்கு பத்தாவது நாளின்போது அந்த அமைதி (noble silence) கலையும்போது உடனே சத்தங்களின் உலகிற்கு வர சிலவேளைகளில் கஷ்டமாக இருக்கும்.  அதற்கு மட்டும் கொஞ்சம் உன்னைத் தயார்ப்படுத்திக் கொள்' என்றார்.

அவர் ஏற்கனவே தத்துவியலில் பிஎச்டி பெற்றிருந்தவர். இப்போது அந்தத் துறையை உதறிவிட்டு Psychoanalysis இல் dissertation எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்றார். இந்தப் பேராசிரியைமார்களுக்கு எல்லாம் என்னைப் போன்ற 'தற்குறி'களின் நிலைமை எங்கே விளங்கப் போகின்றது?

விபாஸனாப் பேச்சு இனி வேண்டாம் என்று நாங்கள் உலக அரசியலைப் பேசி கடைசியில் தமிழ்நாட்டு விஜய் அரசியலுக்கு வந்து சேர்ந்தோம். மலேஷியத் தமிழர் மிகப்பெரிய விஜய் இரசிகர் போல. எனவே பேச்சு சுவாரசியமாகப் போய்க் கொண்டிருந்தது. இத்தாலியப் பெண்ணின் துணைவர் ஈரானைச் சேர்ந்தவர் என்பதால் போகும் வழி முழுவதும் டிரம்புத் தாத்தா மீது அப்படி அன்பைப் பொழிந்தபடி நாம் அனைவரும்  சென்று கொண்டிருந்தோம்.

ஒரு கட்டத்தில் நாங்கள் தியானத்துக்குப் போகின்றோமா இல்லை ஏதேனும் அரசியல் ஊர்வலத்துக்குப் போகின்றோமா என்று சந்தேகம் வந்து அமைதியாகி வெளிச்சூழலை வேடிக்கை பார்த்தபடி விபாஸனா நிலையத்தைப் போய்ச் சேர்ந்தோம்.

இனி நாம் அனைவரும்  இறுதிப் பத்தாம் நாள்தான் காண்போம்/பேசுவோம், அப்படிச் சந்தித்து சேர்ந்து மீண்டும் ஒரே வாகனத்தில் திரும்பிச் செல்வோம் என்று முடிவெடுத்துக் கொண்டு  எங்களிடையே விடைபெறச் செய்தோம்.

*
இத்தாலியன் பெண், பெண்களுக்கான காபினுக்குச் செல்ல, மலேஷியக்காரர் உணவு பரிமாறுபவர்களின் பகுதிக்குப் போக, நான் வேள்விக்குத் தயாராகும் கிடாயைப் போல எனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றேன்.

விபாஸனா நிலையத்துக்கு வந்துவிட்டேன் என்று வீட்டுக்கு அறிவிக்கக்கூட அந்த நிலையத்துக்குள் என் தொலைபேசிக்கு network கிடைக்கவில்லை. கொஞ்சம் ஒதுக்குப்புறமாக காடுகளின் சூழலில் இருந்தாலும் இப்படி விபாஸனாக்காரர்  'அநியாயம்' செய்வார்கள் என்று நினைக்கவில்லை. ஆகவே மீண்டும் காரை எடுத்து ஐந்தாறு கிலோமீற்றர்கள் ஓடி coverage கிடைத்த இடத்தில் வைத்து வீட்டுக்கு சந்திரனுக்கு நீல் ஆம்ஸ்ரோங் காலடி வைத்த சந்தோசத்தைப் போல விபாஸனா நிலையத்துக்கு வந்துவிட்டேன், இனி பத்து நாளுக்கு என் மூச்சு இல்லை பேச்சுக்கூட கேட்காது நிம்மதியாக இருங்கள் என்று அறிவித்தேன்.

பிறகு விபாஸனா நிலையத்துக்குத் திரும்பி வந்து 'போறாளே பொன்னுத்தாயி/ விபாஸனாக் காட்டில் மனச விட்டு/உள்ளூரு பொல்லாப்புக்குக் கட்டுப் பட்டு' என்று கண்ணீர் விடாத குறையாக நிர்வாகத்தினரிடம் என் அலைபேசியைக் கையளித்தேன்.

இனி பத்து நாட்களுக்கு அலைபேசியோடு உறவு முற்றாக இல்லை என்று நினைக்க பரவசமா, நிம்மதியா, பதற்றமா  எது வந்தது என்று சொல்ல முடியாத குழப்ப நிலையில், என்னோடு வேள்விக்கு வந்த மற்றப் பலியாடுகளை அவதானிக்கத் தொடங்கினேன்.

அப்படி ஒருவரோடு கொஞ்ச நேரம் உரையாட முடிந்தது. அவர்தான் எங்கள் குழுவில் வயதில் மூத்தவராக இருந்தார். எழுபதைத் தாண்டியவர். இரண்டாவது முறையாக விபாஸனாவுக்கு வந்திருந்தார். என்னிடம், 'இப்படி விபாஸனாவை சிரத்தையாக தொடர்ச்சியாகச் செய்பவர்களிடம் உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றத்தைக் கண்டீர்கள் என்று கேட்பேன். ஒருவரும் ஒழுங்காக இதற்குப் பதில் சொல்வதில்லை. ஒரு நண்பர் மட்டும், விபாஸனாவுக்கு வந்தபின் தனக்கு மனைவியோடு சண்டை பிடிப்பது குறைந்ததுவிட்டது என்று மட்டும் சொன்னார்' என்றார். அறிமுகமில்லாத மனிதர் முன் எங்கள் மனதை உடனே திறந்து வைத்தால் சிலவேளைகளில் பிறகு ஆபத்தாகிவிடும் என்பதால், 'மனைவியோடு சண்டை பிடிப்பது குறைந்துவிட்டால், அந்த மனிதருக்கு வாழ்வின் சந்தோசம் ஒரு மடங்கும், அவரின் மனைவிக்கு மகிழ்ச்சி இரண்டு மடங்கும் வந்துவிடுமே, அது போதுமே இந்த வாழ்க்கையை ஒருவர் இனிதாகக் கொண்டு செல்ல என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

*

அன்று மாலை  விபாஸனாக்காரர் நிகழ்வுகளுக்கான ஓர் அறிமுகத்தைத் தந்துவிட்டு, இன்றைக்கு உங்களுக்கு கொஞ்சம் மாலையுணவு தருகின்றோம் என்றார்கள். என் மனமோ இயேசு கடைசியாக சாப்பிட்ட 'இறுதி விருந்து' மாதிரி, புத்தரே நீருமா  என்னைக் கைவிடுகின்றீர் என்று  கலங்கியபடி கடைசி இரவுச் சாப்பாட்டை சாப்பிட்டு முடித்தேன்.

ஒவ்வொரு நாளும் விடிகாலை நான்கரை மணிக்கு தியானம் தொடங்கிவிடும். நான்கு மணிக்கு மணியை அடித்து, தூக்கத்திலிருந்து விழிக்க எச்சரிக்கை தருவார்கள் என்றனர். நான் இரவு ஒரு மணி இரண்டு மணியெல்லாம் இயல்பாக விழித்திருக்கக்கூடியவன். ஆனால் என்னால் விடிகாலையில் எவ்வளவு முயற்சித்தாலும் இப்படி எழும்ப முடியாதே, எந்தக் கடந்தகால காதலி என்னை சபித்தாரோ, இப்படி நிலைமை ஆகிவிட்டதே என்று உறைந்து போய் நின்றேன்,

அது மட்டுமில்லை, நாளை காலை அல்ல, இன்றிரவு எட்டுமணியோடே noble silence தொடங்கிவிடும் என்று போன முதல் நாளே வாயிற்கு ஆணியடித்து திகைக்க வைத்தார்கள்.

தூக்குமேடைக்கு வந்துவிட்ட பிறகு, கில்லட்டினால் வெட்டினால் என்ன, தூக்குக்கயிற்றை சுருக்கி இழுத்தால் என்ன, முடிவு ஒன்றுதானே என்று என்னை இந்தப் பலிக்களத்துக்குத் தயார்ப்படுத்தினேன்.

ஆனால் நானே ஆச்சரியப்படுமளவுக்கு இந்த பத்து நாட்களில் ஒருநாள் கூட நான் விடிகாலை நான்கரை மணித் தியானத்துக்குப் போகத் தவறியதில்லை என்று நினைக்க இப்போது வியப்பாய்த்தான் இருக்கின்றது.

ஆக இதெல்லாம் முடியாது என்பதெல்லாம் மனது செய்யும் செப்படி வித்தையே தவிர, சூழல் அவ்வாறு நிர்ப்பந்திக்கும்போது நாம் இயல்பாக அந்தச் சூழல் வேண்டுவதைச் செய்யத் தொடங்கிவிடுவோம் என்று சொல்வது உண்மைதான் போலும்.

இப்படியாக என் விபாஸனா ஆயத்தப்படுத்தல் என்னும் திகில் அனுபவங்கள் தொடங்க, அடுத்த நாள் எப்படி விடியப்போகின்றதென யன்னலுக்கு அப்பால் விரிந்த சிறு காட்டில் எழுந்த வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்டபடி படுக்கையில் வெவ்வேறு கோணங்களில் படுத்து நித்திராதேவியே தயவுசெய்து நேரத்துக்கு வந்து என்னை அணைத்துக் கொள்க என்று மன்றாடிக் கொள்ளத் தொடங்கினேன்.

****

(இன்னும் வரும்)

 

பத்து நாள் விபாஸனா - அனுபவக் குறிப்புகள் - 01

Tuesday, August 25, 2026

 

தியானம் செய்வதை அவ்வப்போது நிகழ்த்திக் கொண்டிருந்தாலும், பத்து நாள் விபாஸனாவிற்குப் போவது என்பது எனக்கு சற்றுப் பயத்தைத் தந்து கொண்டிருந்தது. கடந்தகாலங்களில் சிலமுறை இப்படிப் போக முயன்றபோது எனக்குள் இருந்த தயக்கம்/வேலை நெருக்கடி போன்றவைகளால் அது சாத்தியப்படாமல் போயிருந்தது.

எல்லாவற்றுக்கும் அது நிகழ ஒரு காலம் தேவைப்படுகின்றது என்பது போல, நான் விபாஸனாவுக்குப் போகவும் ஒரு அழைப்பு(calling) தேவையாக இருக்கிறது என்று அமைதியாக இருந்தேன். இங்கே விபாஸனாவுக்குப் போக மூன்று மாதங்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும். அப்படிச் செய்தாலும், பதிவு செய்யும் கொஞ்ச நேரத்துக்குள் இடங்கள் முழுதும் நிரப்பப்பட்டு விடும். 



நான் இம்முறையும் பதிவு செய்தபோது, 'இடங்கள் நிரம்பிவிட்டன, உங்களைக் காத்திருப்போர் பட்டியலில் (waiting list) வைத்திருக்கின்றோம்' என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. சரி, இம்முறையும் எனக்கான 'அழைப்பு' இல்லை என்று அமைதியாகிவிட்டிருந்தேன்.


திடீரென்று விபாஸனா தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன், ஓர் இடம் இருக்கின்றது உங்களுக்கு இணைய விருப்பமா என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. எனது பிறந்தநாள் காலப்பகுதியில் அந்த பத்து நாட்கள் வருவதால், அது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி இந்தப் பிறப்பின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதுக்கு ஏதேனும் விபாஸனா தியானம் ஆறுதலைத் தரக்கூடும் என்று நினைத்தேன்.

ஜூலை 22 - ஓகஸ்ட் 02 வரையும் விபாஸனாவில் இணைந்து கொண்டேன். இப்படி பத்து நாட்கள் போவதை ஓர் ஆனந்தமான நிலை என்று பொய் சொல்லமாட்டேன். ஒருவிதமான பதற்றமும் பரவசமும் கலந்த நிலையில் இருந்தேன் மட்டும் எனத்தான் சொல்ல முடியும்.

இந்தப் பதற்றத்துக்கு ஒரு காரணம் விபாஸானாவின் சில அடிப்படை விதிகள்.

(1) பத்து நாளும் அலைபேசி பாவிக்கக்கூடாது.

சரி அலைபேசி இல்லாவிட்டாலும், புத்தகங்களை வாசித்தோ, ஜேர்னலை எழுதியோ பொழுதை எப்படியேனும் கழித்துவிடக்கூடிய 'ஆசாமி' நான் என்றாலும், அவை எதற்கும் கூட அனுமதி இல்லை. மேலும் எந்தவகையான இசை கேட்டலோ, இசை வாத்தியங்களை இசைப்பதோ முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது. வாசிப்பும் இல்லை, எழுத்தும் இல்லை, இசையும் இல்லை என்றால் என்னைப் போன்றோர் எப்படி ஒரு நாளைக் கழித்துவிட முடியும்?

ஒருவகையில் பார்த்தால், இப்படி வெளியுலகத்தோடு தொடர்பு கொள்வதுதான் தடை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் எப்படியோ எழுபது எண்பது பேர்கள் வருவார்கள், அவர்களோடு கூடிப் பேசி கொஞ்சி விளையாடலாம் என்றால் அடுத்த விதி இப்படி இருந்தது.

(2) பத்து நாட்களும் நீங்கள் எவரோடும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் (Noble Silence).

பேசாமல் மட்டுமில்லை, சைகையில் பேசுவதோ, துண்டுப்பேப்பரில் எழுதி கருத்துக்களைப் பரிமாறுவதற்கோ இங்கே துப்பரவிற்கு இடமில்லை.

அதாவது எண்பது பேர் உலாவுகின்ற இடத்தில் நீங்கள் இருந்தாலும், நீங்கள் உங்கள் தனித்த உலகில்தான் இருக்க வேண்டும். எந்த தொடர்பாடலும் சக தியானிப்பவர்களோடு இந்த பத்து நாட்களில்  வைக்க முடியாது.

*

இந்த இரண்டு கடும் விதிகளை கடவுளே(?) என்று கடைப்பிடித்தாலும் அடுத்த விதிதான் என்னை அதிகம் பயமுறுத்தியது. இந்த மூன்றாம் விதியின் காரணமாக என்னால் ஒருபோதும் பத்துநாட்கள் நின்று தாக்குப் பிடிக்க முடியாது என்றுதான் உள்மனம் சொல்லிக் கொண்டிருந்தது. அது;

(3) மதியம் பன்னிரண்டு மணிக்கு பிறகு எந்த உணவையும் எடுத்துக் கொள்ள முடியாது (காலை மற்றும் மதியம் அவர்கள் தரும் உணவு மட்டும்).

நான் பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் குணமுடைய ஒருவன். குறித்த நேரத்தில் நான் சாப்பிடாவிட்டால் ஏதோ எரிமலையை விழுங்கிய கோபக்காரன் போலத்தான் நடந்து கொள்ளத் தொடங்குவேன். அதுவும் தியானம் இரவு 9 மணி வரை இருக்கும்போது, எப்படி ஒரு மனிதன்  மதியம் பன்னிரண்டு மணிக்குப் பிறகு சாப்பிடாமல் தாக்குப்பிடிப்பான்?

இந்த மூன்றாம் விதியால் புத்தர் என்னை பரிநிர்வாணப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றாரா அல்லது  பட்டினி கிடந்து சாகடிக்கத்தான் மறைமுகமாகத் திட்டமிடுகின்றாரா என்ற யோசனைதான் வந்தது.

இன்னும் வேறு சில விதிகள் இருந்தாலும் இத்தோடு விதிகளை நிறுத்திக் கொள்வோம்.

ஏனெனில் இந்த விதிகள் அனைத்தையும் 10 நாட்கள் தாங்கிப் பிடித்த ஒருவனாகத்தான் நான் இப்போது இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்பதால் மற்ற விதிகள் அனைத்தையும் பஞ்சைப் போல பறந்து போகக்கூடியவை என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும்.

***

(இன்னும் வரும்)

 

பனிக்காலத் தனிமை - 11

Saturday, October 18, 2025

 

மெரிக்காவில் ஸென்னைப் பரவலாக்கிய ஒருவராகிய சூஸிகி ரோஸி சான் பிரான்ஸிற்கோவிற்கு வரும்போது அவருக்கு 55 வயதாகியிருந்தது. சூஸிகி ரோஸியின் குழந்தைப் பருவம் வறுமைக்குள் கழிந்தது. தனது சிறுவயதில் வளர்ந்த தலைமயிரைக் கூட சலூனுக்குச் சென்று வெட்ட முடியாத காரணத்தால், தனது தந்தையார் தனது தலையை நன்றாக மழித்துவிடுவார் என்றும் அதனால் பாடசாலையில் தனது மொட்டைத்தலையை எள்ளல் செய்தபடி சக மாணவர்கள் இருப்பார்கள் எனவும், இதனால் தனது பாடசாலைப் பருவம் மகிழ்ச்சியாக இருந்ததில்லை எனவும் ரோஸி சொல்லியிருக்கின்றார்.

சூஸிகி ரோஸியின் தந்தையார் ஒரு புத்த மடலாயத்திற்குப் பொறுப்பானவராக இருந்தவர் . ஆனால் அன்றைய மெஜி பேரரசர் (Emperor Meiji) பெளத்த மடாலயங்கள் அனைத்தையும் ஷின்டோ (Shinto) மடலாயங்களாக மாற்றி அரசின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்திருந்தார். ஒருவகையில் வேறிடத்தில் இருந்த பெளத்தம் வேண்டாம், ஜப்பானிய பூர்வீக மதங்களுக்குத் திரும்பவேண்டும் என்ற நோக்கில் இப்படி அனைத்தும் ஷின்டோவாக மாற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

சூஸிகி ரோஸி தனது 13 வயதில் தந்தையிடம் அனுமதி கேட்டு இன்னொரு பெளத்த மடலாயத்தில் சென்று சேர்கின்றார். ரோஸி ஆசிரியராக ஸென்னைக் கற்பிக்கும் நிலைக்கு வந்தபோது அவர் அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புகின்றார். அவருக்கு ஜப்பானில் பெளத்தம் அதன் அசலான நிலைமையிலிருந்து மாறிவிட்டதாகத் தோன்றுகின்றது. புதிய நிலப்பரப்பில், பெளத்தம் குறித்து எவ்வித முன்முடிவுகளும் இல்லாத இடத்தில் ஸென்னை கற்பிப்பது சிறந்ததென முடிவு செய்கின்றார்.
ஆனால் ரோஸியின் ஆசிரியர் அவரது இந்த முடிவுக்கு சம்மதிக்கவில்லை.

பின்னர் அவர் தனது ஐம்பதுகளில் (1959இல்) அமெரிக்காவுக்கு ஒரு ஜப்பானிய மடலாயத்துக்கு குருவாக வருகின்றார். அங்கும் அது ஒரு மதகுருவாக இருந்தாலும் அவரது கனவான ஸென்னை அதன் மூலத்தில் சொல்லிக் கொடுப்பது என்பதற்காக காலையிலும் மாலையிலும் 'சடங்குகளுக்கு' வெளியே சொல்லித் தர, பின்னர் சூஸிகி ரோஸி ஒரு முக்கிய ஸென் ஆசிரியராக மாறியது வரலாறு.

சூஸிகி ரோஸி 'ஏன் அமெரிக்காவுக்கு வந்தேன்?' என்று உரையாடியிருக்கின்றார். இத்தனைக்கும் ரோஸி அமெரிக்காவுக்கு வந்து உயிரோடு இருந்த ஆண்டுகள் 12 ஆண்டுகள் மட்டுமே. ஸென் வரலாறுகள் இது ஒரு சொற்பகாலம். ஆனால் ரோஸி தனக்குப் பின் குறிப்பிட்ட மாணவர்களை உருவாக்கியதோடல்லாது, அநேக ஸென் மடலாயங்கள் போல, மாஸ்டர்கள் இறந்துபோக காலத்தில் கரைந்துபோகாது இன்றும் சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி பல நூறு மாணவர்களின் அவர்களின் தலைமுறைகளும் வந்தபடி இருக்கின்றன.

ஒன்றுமே இல்லாது வந்த சூஸிகி ரோஸி அவர் இறந்துபோனபோது மூன்று வெவ்வேறு மடாலயங்களைத் தொடங்குமளவுக்கு அவரது மாணவர்களை வளர்த்துவிட்டிருந்தார். சூஸிகி ரோஸி அமெரிக்கா வந்த இரண்டு வருடங்களில் அவரது மனைவி அமெரிக்காவுக்கு வருகின்றார். சூஸிகி ரோஸி காலையில் மாணவர்களோடு இருந்து தியானம் செய்வது முடிந்தவுடன் உடனேயே மடலாயத்தில் செய்யவேண்டிய வேலைகளுக்காக உடையை மாற்றிவிட்டு அந்நிலத்தில் ஏதாவது செய்யத் தொடங்கிவிடுவார் என்று மனைவி குறிப்பிடுகின்றார்.

அதுபோலவே இரவுணவைச் சாப்பிட்டுவிட்டு தன்னோடு கொஞ்ச நேரப் பொழுதைக் கழியுங்கள் என்றாலும் எனக்கு இந்த அமெரிக்காவில் ஸென்னை பரப்பும் விருப்பம் இருக்கின்றதெனச் சொல்லி வாரம் ஒரு முறை நடக்கும் ஆங்கில தம்ம உரைக்குத் தயாராக தனது அறைக்குச் சென்று விடுவார் எனச் சொல்கின்றார்.

ன்றைய அநேக ஜப்பானிய ஸென் ஆசிரியர்களைப் போல சூஸிகி ரோஸிக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் உரையாற்ற கடும் உழைப்பைக் கொடுத்திருக்கின்றார். சிலவேளைகளில் இப்படி வாரம் முழுதும் தயாரித்த உரையைக் கேட்க, ஆரம்ப காலகட்டத்தில் மூன்று/நான்கு மாணவர்கள்தான் வந்தபடி இருந்திருக்கின்றார்கள். இப்படி கடுமையாக உரையைத் தயார் செய்ததற்கு ஒரு பத்துப்பேர் வந்தால் கூட பரவாயில்லை என்று தான் ரோஸியிடம் கேட்டதாக ரோஸியின் மனைவி குறிப்பிட்டிருக்கின்றார். அதற்கு ரோஸி, ஒருவரா இல்லை ஆயிரம் பேரா , அது எனக்கு பொருட்டில்லை; நான் இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன் எனச் சொல்லியிருக்கின்றார்.

இவ்வாறு தொடர்ச்சியான கடும் உழைப்பில்தான் சூஸிகி ரோஸி தனது மாணவர்களை உருவாக்கியிருந்தார். அதேபோல அவர் நம்பிக்கையீனங்களையும் தனக்குள் உருவாக்காது, அவரின் வாழ்க்கையில் அறிந்த ஸென்னைத் தீவிரமாக நம்பியிருக்கின்றார். அவரது கடைசிக்கால உரையில் கூட ரோஸி, நான் இன்னும் கூட பெளத்தத்தை ஆழ அறிவுப்புலத்தில் வைத்து வாசித்திருக்கலாம், இன்னும் கூட நேரம் தியானத்தில் அமர்ந்திருக்கலாம்; ஆனால் நாளாந்த வேலைகளில் நேரத்தைச் செலவிட்டுவிட்டேன். ஆனால் எனது மாணவர்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது. அவர்கள் என்னை அறிவுப்புலத்திலும் தியானத்திலும் விஞ்சிப்போவார்கள். என் வயதொத்தவர்கள் (60களில் இருப்பவர்கள்) என் மாணவர்களைத்தான் அதிகம் நம்புவோம். நீங்கள் ஏதோ ஒருவகையில் சாதித்துக் காட்டுவீர்கள்' என்றிருக்கின்றார்.

அந்த நம்பிக்கையை வீணடிக்காது அவரின் சிறந்த மாணவர்கள் சிறந்த ஆசிரியர்களாக வெளிவந்திருக்கின்றார்கள். அவர்கள் வெவ்வேறு திசைகளுக்குச் சென்று ஸென்னை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதைவிட நிறையப் புத்தகங்களை ஸென் பற்றியும், அவர்களின் ஆசிரியரான சூஸிகி ரோஸி பற்றியும் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். சூஸிகி ரோஸியின் நேரடி மாணவர்களுக்கே இப்போது 80 வயதுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இந்த 80 வயது ஆசிரியர்களின் அடுத்த தலைமுறை மாணவர்கள் கூட தமது ஆசிரியர்களினூடாக சூஸிகி ரோஸியை நினைவுபடுத்தியபடி இருக்கின்றார்கள். ஒரு நீண்ட தலைமுறை இப்போது சூஸிகி ரோஸிக்கு உருவாகிவிட்டிருக்கின்றது.

சூஸிகி ரோஸியை வாழ்வைப் பார்க்கும் நாங்கள் நம்பும் ஓரு விடயத்தை எவ்வளவு உழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என யோசித்துப் பார்க்கின்றேன். அதுவும் ஈழத்தமிழர்களாகிய நாம் இதை இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்க்கலாம். ஈழத்தில் ஆயுதப்போராட்டம் முடிந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனபின்னும் ஒரு grassroots இயக்கத்தையும் எந்த நம்பிக்கை/அரசியல் சார்ந்தும் நம்மால் வளர்த்தெடுக்க முடியவில்லை.

இத்தனைக்கும் பல்வேறு அரசியல்/ஆன்மீக நம்பிக்கையாளர்கள் புலம்பெயர்ந்த தேசம் உள்ளிட்ட பல இடங்களில் இருக்கின்றார்கள். நாம் எல்லோரையும் ஏன் இப்படி தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் உழைக்கவில்லை என்று கேட்க முடியாது. ஆனால் இவ்வாறு சமூகத்தில் செயற்பாட்டாளர்களாக இருப்பவர்கள் அல்லது சொல்லிக் கொள்பவர்கள் ஏன் ஒரு சிறு காலடியைக் கூட உருப்படியாக வைக்க முடியவில்லை என்று அவரவர்கள் சுயவிமர்சனம் செய்யவேண்டும்.

சூஸிகி ரோஸி 1950களில் அமெரிக்காவுக்கு வரும்போது அவருக்கு எந்தப் பின்புலமும் இல்லை. ஆங்கிலம் கூட ஒழுங்காய்த் தெரியாது. முற்றிலும் புதிய நிலப்பரப்பு மட்டுமில்லை, மனிதர்களும் கூட புதியவர்கள். என்கின்றபோது 12 ஆண்டுகளிலேயே மிகச் சிறந்த மாணவர்களையும், ஸென் மடாலயங்களையும் உருவாக்க முடிந்தது. அதுமட்டுமின்றி அவருக்குப் பின்னும் அது உயிர்வாழும் விதைகளையும் ஊன்ற முடிந்திருக்கின்றது. இத்தனைக்கும் ரோஸி தனது ஸென் உரைகளையும், தியானத்தையும் கற்பித்தபோது வந்த மாணவர்கள் நான்கைந்து பேரே.  

ஸென் என்றோ ஒருநாள் அமெரிக்காவில் பரவும் என்கின்ற அந்த மாபெரும் நம்பிக்கை, தொடக்ககால மாணவர்கள் ஒருசில  என்றாலும் அவர்களை அரவணைத்த விதம் இன்றைக்கு சூஸிகி ரோஸியின் மூலம் ஸென் மாபெரும் ஆலமரமாக வேரை மட்டுமில்லை விழுதுகளையும் விட்டு பரவியிருக்கின்றது.

மே
லும் சூஸிகி ரோஸி  ஒருவருக்கு வயது கூட ஒரு பொருட்டேயல்ல என்று நிரூபித்துமிருக்கின்றார். இன்றைக்கு 80களில் ஆயுதப்போராட்டத்தில் பங்காற்றியவர்கள் உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் முடிந்தபோது பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அனைவரின்முன் நீங்கள் உண்மையிலே தமிழ்ச் சமூகத்திடம்  கொடுக்க உங்களிடம் எதை வைத்திருக்கின்றீர்கள் என்பதையும், உங்களை அதற்காக எவ்வளவு தயார்ப்படுத்தி நிகழ்காலத்தோடு நிற்க முடிகின்றதா என ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் அவை வெறும் வெற்று வார்த்தைகளாக/ வீணான நம்பிக்கைகளாக, தரிசு நிலத்து விதைகளாகவே நீங்கள் விதைக்கும்/பேசும் எதுவும் இருக்கும் என்பதாக அமையும் அவலச்சூழலுக்குள் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை உணரவேண்டும்.

சூஸிகி ரோஸி, அமெரிக்காவிற்கு வந்த புதிதில் அருகிலிருக்கும் கடையில் ரெட்டிஷ்களை சூப்புக்காக வாங்குவாராம். இவர் எப்போதும் பழைய/ வாடிய ரெட்டிஷ்களை வாங்குவதைப் பார்க்கும் கடைக்காரர், புதிதை தேர்ந்தெடுக்கலாமே என்று கேட்பாராம். அதற்கு, புதியதை வாங்க எவரும் வருவார்கள், வாடியதை ஒருவரும் வாங்கமாட்டார்கள் என வாங்கிச் செல்வராம் ரோஸி. அதுபோலவே சூஸிகி ரோஸி தனது கடைசிக்காலத்தில் ஒரு அறுவைச் சிகிச்சையைச் செய்தபின்னும், ஓய்வெடுக்காமல் அவரது தோட்டத்தில் எதையாவது வெட்டிக் கொட்டிக் கொண்டிருப்பாராம். இதைப் பார்த்த அவரது மனைவி, இப்படியே வேலை செய்தால், உங்கள் ஆயுள் சுருங்கிவிடும் என்று கத்துவராம். அதற்கு சூஸிகி, நான் என் ஆயுளைச் சுருக்காமல் விட்டால்,  எனது மாணவர்கள் வளரமாட்டார்கள் (If i dont cut my life short, my students will not grow) என்று பதிலளிப்பாராம்.

சூஸிகி ரோஸியை தொடக்க காலத்தில் நினைவுபடுத்தும் அவரது பலர் மாணவர்கள் அவர் நன்றாகப் புகைப்பவராகவும், வாரவிறுதிகளில் பார்க்கும் ஜப்பானிய Rom-Com திரைப்படங்களுக்கே கண்ணீர் விடுபவராகவும் இருந்தவர் எனக் குறிப்பிடுகின்றனர். ஒரு ஸென் ஆசிரியரை, அதுவும் அமெரிக்காவில் ஸென்னை பரவலாக்கிய ஒரு ஆசிரியரை இப்படி நம்மால் கற்பனை செய்யமுடிகின்றதா? ஆனால் இப்படியெல்லாம் இருந்தபோதும், அவரின் முதன்மை நோக்கான ஸென்னை அமெரிக்க மண்ணில் விதைப்பது என்ற விடயத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாது அவரின் இறுதிக்காலம் வரை முயன்றிருக்கின்றார். அதுவே அவரது ஸென், அதுவே அவரது தம்மம்.

*******

பனிக்காலத் தனிமை - 05

Friday, January 31, 2025

 

 1.

 
கடந்தகாலத்தினதும். எதிர்காலத்தினதும் பொறிகளில் அடிக்கடி அகப்படாதவர் மிகச் சிலரே. அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு, இந்தப் பூமியில் மனிதர்கள் வாழாது, தாவரங்களும், விலங்குகளும் மட்டும் இருந்தால் கடந்தகாலம்/எதிர்காலம் என்பது இருக்குமா? என்று யோசித்துப் பார்க்கலாம். அதாவது 'நேரம்' என்பதை அர்த்தமுள்ள முறையில் பேசமுடியுமா? இப்போது என்ன நேரம் என்றோ அல்லது என்ன திகதி என்றோ பேசுவதற்கு அர்த்தம் ஏதுமிருக்குமா? ஒரு மரத்திடமோ அல்லது ஏதேனும் விலங்கிடமோ, 'என்ன நேரம்?' என்று கேட்டால், அவை இந்த நேரம் என்பது இப்போதுதான் (Now), வேறென்னவாக இருக்கப் போகின்றது? என்றுதானே சொல்லக்கூடுமே தவிர, கடந்தகாலம்/நிகழ்காலத்தை முன்வைத்து காலத்தை நம்மைப்போலக் கணிக்கப் போவதில்லை.

இந்த உலகில் நாம் இயங்குவதற்கு மட்டுமே இந்த மனதும், நேரமும் அவசியமாக இருக்கின்றது. மேலும் நம் மனமானது எம்மைக் கட்டுப்படுத்துவதற்காய் தொடர்ந்து நிகழ்காலத்தை கடந்தகாலத்தோடும், எதிர்காலத்தோடும் தொடர்புபடுத்திக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் நாம் நிகழில் இருக்கமுடியாது எமது அசலான 'மனதை' இழக்கின்றோம். இவ்வாறு நிகழில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருப்பதால்தான் எமது எல்லாக் கடந்தகாலத் துயரங்களும், எதிர்கால ஏக்கங்களும் தொடங்குகின்றன.

ஸென்னில், நீங்கள் பிறப்பதற்கு முன் உங்கள் அசலான முகம் எதுவாக இருந்தது என்று ஆழமான கேள்வியொன்று இருக்கின்றது. இந்தக் கேள்வி நேரடியாகப் பதிலை அறிவற்குக் கேட்கப்படுவதில்லை. காலம்/வெளி என்கின்றவற்றை ஊடறுத்து நம்மை இந்தக் கணத்தில் இருக்க வைப்பதற்காய் நம்மிடம் கேட்கப்படுவது. இவ்வாறு கேட்பதன் மூலம் நாம் தன்னிலை உணர்தலையும் அடையமுடியும் என்று ஸென் கூறுகின்றது. இந்தக் கேள்வியுடன் தமது அசலான முகத்தைத் தேடத் தொடங்கி ஞானமடைந்தவர்களின் எழுநூறுக்கும் மேற்பட்ட கோவன்கள் (Koans) ஸென் மரபில் இருக்கின்றன .

ஒருவர் ஆறுவருடங்களில் பனி மலைகளில் தியானம் இருந்தவர் ஒருநாள் விடிவெள்ளியைப் பார்க்கும்போது ஞானமடைகின்றார். இன்னொருவர் பனியில் உறைந்துபோன கையை வெட்டும்போது ஞானமடைகின்றார். அவரே போதிதர்மரின் சீன மரபில் வரும் ஸானில் இரண்டாம் பரம்பரை ஆசிரியராக இருக்கின்றார். இன்னொருவர் தனது முகத்தின் விம்பத்தை நீரில் பார்க்கும்போது தன்னிலை அடைகின்றார். இவ்வாறு எண்ணற்ற கதைகள் அசல் முகம் எதுவாக பிறப்பதற்கு முன் இருந்தது எனத் தேடியபோது நடந்தவையென ஸென் மரபில் இருக்கின்றன.

எனக்குக் காலத்தை ஒரு நேர்கோட்டில் வைத்துப் பார்க்கும் கற்பனைகள் அடிக்கடி வருவதுண்டு. அதாவது கடந்தகாலத்தில், நிகழ்காலத்தில், எதிர்காலத்தில் தோன்றிய/தோன்றும்/தோன்றபோகும் அனைவரையும் ஒரு நேர்கோட்டுத் தெருவில் நடந்துபோகின்றவர்களாகக் கற்பனை செய்வதுண்டு. கடந்தகாலத்தில் காலமாகிப் போனவர்கள் இப்போதும் நடந்து கொண்டிருப்பார்கள் என்றும், இப்போது நடக்கும் நாங்கள் அவர்களைச் சந்திக்க முடியாவிட்டாலும் அதே பாதையில் நடமாடிக் கொண்டிருப்பதாகவும் நினைப்பதுண்டு.

மேலும் காலம் உறைந்து போகுமா அல்லது காலம் என்னவாகும் என்ற கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சத்திரசிகிச்சைக்காக மயக்கத்தில் ஆழ்த்தியபோது எனக்குள் எழுந்திருந்தது. சில மணித்தியாலங்கள் என்னை மயக்கத்தில் ஆழ்த்தி சத்திரசிகிச்சை செய்தபோது எழுப்பியபோது, அப்போது எனக்குரிய காலம் என்னவாக இருந்தது. எனக்கு அப்போது இந்த உலகத்தில் நிகழ்ந்தது எதுவுமே தெரியாது. அப்போது எனக்குரிய காலம் என்னவாக இருந்தது. அந்த மணித்தியாலங்களில் எனக்கு கடந்தகாலமோ நிகழ்காலமோ, ஏன் நிகழ் என்பது கூட என் மனதுக்கு இருந்திருக்காது. அதை ஒரு 'பற்றற்ற மனோநிலை' எனச் சொல்லலாமா?

சிலவேளைகளில் ஞானமடைந்தவர்கள் இவ்வாறு ஒரு கடந்தகால/எதிர்காலமற்ற ஓர் அந்தரமான வெளியில்தான் தமது நிகழ்காலத்தைத் தரிசிப்பார்களோ என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. நான் மீண்டும் 'மயக்க நிலையில் இருந்து மீள்வேன்' என்பதால் எவ்வித பதற்றமுமில்லாது என் சுயம் உறக்கத்திலிருந்தோ, அப்படித்தான் மரணத்தின்போதும் -இந்த வாழ்வை முழுமையாக ஏக்கங்களோ/ஏமாற்றங்களோ இல்லாது வாழ்ந்துவிட்டுப் போனால் - மரணங்கூட இப்படியான நிம்மதியான நிலையாயிருக்குமோ என்று எண்ணுவதுண்டு.



2.

எனக்குத் தெரிந்த சிலர் அவர்களுக்குத் தமது கடந்தகால வாழ்வு நன்கு தெரியும் என்று சொல்வார்கள். எனது நண்பர் ஒருவர் தான் கடந்த பிறப்பில் ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன் என்று உறுதியாகச் சொல்வார். அவர் எங்கே வண்ணத்துப்பூச்சியைக் கண்டாலும் ஆழமாக அவற்றை இரசிக்கத் தொடங்கி விடுவார். நான் யாரென்றோ, எங்கே இருக்கின்றேன் என்ற பின்புலமோ தெரியாமலே அவர் என்னோடு முதன்முதலாகப் பேசத் தொடங்கியதே, ஒரு வண்ணத்துப்பூச்சியை நான் எடுத்த புகைப்படத்தின் மூலந்தான். 


அவர் கடந்த பிறப்பில் வண்ணத்துப்பூச்சியாக இருந்திருப்பின், என்னுடைய அசல் முகம் அப்போது எதுவாக இருந்திருக்கும்? அதை நான் அவ்வப்போது அவரோடு பழகிய காலங்களில் என்னிடமே கேட்டதுண்டு. அந்தக் நண்பருக்கு வண்ணத்துப்பூச்சி மட்டுமல்ல, அவரின் இளவயதில் இறந்துபோன அம்மா கூட ஒரு மரமாகக் காட்சியளிப்பார். அந்த மரத்தை நானும் நன்கறிவேன். நாங்கள் அதைக் கடந்துசெல்லும்போது அவர் அதனோடு (உள்மனதில்) பேச நிறைய நேரமெடுத்துக் கொள்வார். அந்த மரத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்து கண்ணீர்விடக்கூடியவராகவும் அவ்வளவு நெருக்கமானவராக அதனோடு இருந்திருக்கின்றார்.

எனக்கும் இப்படியான பல 'பைத்தியக்காரத்தனங்கள்' இருப்பதால் அவரை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பின்னர் ஒருநாள் அவரது துணைவரோடும், குழந்தையோடும் நடந்து போனபோது அந்த மரத்தைக் கண்டு நெகிழ்ந்ததைப் பற்றி என்னோடு பகிர்ந்திருந்தார். அவர்களுக்கு அது சற்று வியப்பாக இருந்ததாகவும், அந்த மரத்தை தான் அணைத்துக்கொண்டதைப் புரிந்துகொள்ளக் கடினமாகவும் இருந்தது என்றும் சிரித்தபடி சொன்னார்.

அவரைப் போன்றவர்கள் எளிதில் தியானத்தில் அமிழமுடிவதையும் அவதானித்திருக்கின்றேன். அவரோடு பழகிய காலங்களில் அவருக்கு அறிமுகமான ஒரு தியான நிலையத்துக்கு என்னைக் கூட்டிச் செல்வார் (அதன் பெயர் வேண்டாம்). அவர்கள் கடவுள் என்ற எதையும் அடையாளப்படுத்திச் சொல்வதில்லை. தியானத்தின்போது மெளனமாகச் சுவரைப் பார்த்து இருக்க வேண்டியதுதான். ஆனால் தியானம் முடிந்தபின் வெவ்வேறுவகையான பின்-தியானச் செயற்பாடுகள் இருக்கும். அதில் ஒன்று வட்டமாக சுற்றி நடந்தபடி ஒவ்வொருவரின் முகத்தைப் பார்ப்பது.

சும்மாவே எனக்கு எவரின் கண்களை நேரடியாகப் பார்க்கும் சிக்கல் சிறுவயதுகளில் இருந்தே இருக்கின்றது. அதுவும் அறிமுகமற்ற மனிதர்களின் முகத்தை உற்று சில நொடிகள் பார்ப்பதும் பிறகு நடப்பதும் என்றால் எவ்வளவு கடினமாக இருக்கும்? ஆனால் இந்தப் பயிற்சியின்போது என் நண்பரின் முகத்தை நேரடியாகப் பார்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னையறியாமலே சிரிப்பு வந்துவிடும் (நம்புங்கள் நண்பர்களே, சும்மா பொழுதில் சிரிக்கவே அடம்பிடிப்பவனுக்கு அப்போது சிரிப்பு நிறைய வந்தது). இதையேன் சொல்கின்றேன் என்றால், தியானத்தை விட, தியானத்துக்குப் பிறகான செயற்பாடுகளில் நான் நிகழில் நிறைய இருந்திருக்கின்றேன் என்று குறிப்பிடுவதற்காகத்தான்.



3.

நாம் கடந்தகாலத்தைக் காவிக் கொண்டிருவதால், நிகழ்காலத்தில் இருந்துகொண்டு, எதிர்காலத்தை பற்றித் திட்டமிடுகின்றோம். ஆகவேதான் தேவையற்ற நிறைய விடயங்களைக் கற்பனை செய்து கொள்கின்றோம். ஒருவகையில் நமது கடந்தகாலம் நம்மை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் பாடங்களைக் கற்பிப்பதாக மனம் நினைத்துக் கொள்கின்றது.

எனது ஆசிரியரான தாயிடம் இளவயதில் சென்று இப்போது பிரான்சிலிருக்கும் மடாலயத்தை நடத்தி வருபவர்களில் முதன்மையானவர் Brother Phap Huu. அவர் கனடாவுக்கு தப்பிவந்த வியட்னாமிய அகதிகளின் மகன். நான் இருக்கும் நகரிலேயே வளர்ந்தவர். அவர் தாயிடம் சேரும்போது, தொடக்க காலங்களில் தான் அவ்வளவு விரைவாகவும் நிறையவும் சாப்பிடுவேன் என்று சொல்லியிருக்கின்றார்.

எல்லா ஸென் இடங்களைப் போல, சாப்பிடுவது கூட தாயினுடைய இடத்தில் ஒரு தியானம் போன்றது. அவ்வளவு மெதுவாகவும், அமைதியாகவும் சாப்பிடவேண்டும். இது Phap Huuவை மிகக் கஷ்டப்படுத்துகின்றது. அவர் எவ்வளவு தன்னால் முயன்றபோதும் நிதானமாகச் சாப்பிட முடியவில்லை என்கின்றார். பின்னர் அவர் இதை ஆழமாக யோசித்தபோதுதான், அது தனது பெற்றோரிடமிருந்து வந்ததென்று கண்டுபிடிக்கின்றார். போர்க்காலத்தில் விரைவாகவும், நிறையச் சாப்பிடுவதும் முக்கியமானது. நாளைக்கு உணவிருக்குமா இல்லையா என்பதே பெரிய கேள்வியாக அங்கே இருக்கும். அதுவே தாங்கள் கனடாவுக்கு வந்தபோதும் விரைவாகவும், நிறையச் சாப்பிடுவதற்கும் முக்கிய காரணமாக இருந்தது என்கின்றார். ஒருவகையில் உணவென்பது போரின் மிச்சங்களைக் காவிக் கொண்டிருக்கின்றது; அதைக் கண்டுபிடிக்க தனக்கு நிறைய நாட்கள் எடுத்ததென்கின்றார்.

இவ்வாறு நாம் பல கடந்தகால விடயங்களை அச்சத்தினால் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களாகிய நம்மில் பலர் கையில் சிறு சேமிப்பு கூட இல்லாது போரின் காரணமாகப் புலம்பெயர்ந்துவிட்டு, அந்த அச்சம்/எதிர்காலப் பாதுகாப்புக் காரணங்களுக்காக இப்போது தமது வாழ்நாளையே பணம் சம்பாதிப்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நாட்டில் ஒரளவு உழைப்புடன் எளிய வாழ்வை - நாம் யுத்ததில் இருந்ததைவிட நிம்மதியாக- வாழலாம் என்றாலும் எங்களில் பெரும்பாலானோர்க்கு அது முடிவதில்லை. எங்களில் பலர் நாளைக்கு நாம் எமக்கு விருப்பமான வாழ்வை வாழமுடியும் என்று கனவுகளுடன் இன்றைய பொழுதுகளை தமக்குரியதாக வாழமுடியாது அந்தரப்பட்டு வாழ்ந்து கொண்டு இருப்பதையும் அறிவேன். இன்றில் வாழமுடியாது போனால், நாளை நமக்கு எதனைத்தான் அப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டுவரப் போகின்றது?

ஆகவே நாமெல்லோரும் 'எமது அசலான முகம் நாம் பிறப்பதற்கு முன் எதுவாக இருந்தது?' என்று கேட்டுப் பார்ப்பது நல்லது. அது நம்மை மீண்டும் மீண்டும் நிகழுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். இந்த உடலும் மனமும் இந்தக் கணத்துக்குரியதே. இந்தப் பொழுதில் நாம் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக்கின்றோமா அல்லது நிம்மதியும் சந்தோசமும் நாளை வந்துவிடும் என்று கற்பனை செய்துகொண்டிருக்கின்றோமா அல்லது கடந்தவந்த காலங்கள் பொற்காலமென ஏங்கிக் கொண்டிருக்கின்றோமா என்று நிகழில் நின்று நிதானித்துப் பார்ப்பது அனைவர்க்கும் நன்மை பயக்கக் கூடியது.

***********


(Jan 07, 2025)

பனிக்காலத் தனிமை - 04

Monday, January 27, 2025


1. 


ல வருடங்களுக்கு முன் தியானத்துக்காக ஸென் நிலையம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். காலையில் தியானப்பயிற்சியை ஓர் ஆசிரியர் தந்துகொண்டிருந்தார். ஒரு எண்ணத்துக்கும் இன்னொரு எண்ணத்துக்குமான இடைவெளியைக் கவனிப்பதன் அவசியம் பற்றி அவர் தியான வகுப்பின் பின்னரான கேள்வி-பதிலில் சொல்லிக் கொண்டிருந்தார். இலட்சக்கணக்கில் மின்னல்களாய் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை 'உறையவைத்தால்', எழுதுவதில் விருப்பமிருக்கும் என்னால் எப்படி எழுதமுடியும் என்று அப்போது திகைப்பாக இருந்தது. அதை அவரிடம் கேட்கவும் செய்தேன். ஓரு படைப்பாளி வாசித்து, நினைவில் வைத்து, அலசி ஆராய்ந்து என்று, எண்ணங்களோடுதானே எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கவேண்டும் என்று அப்போது நினைத்தேன்.

நாம் எண்ணம் (thought) என்று நினைக்கும் ஒன்றுக்கு அப்பால் ஆழமான சுயமொன்று (self) இருக்கின்றது. அதை அறிந்துகொள்ளல் அவ்வளவு எளிதுமல்ல. எண்ணங்களின் கூட்டுத்தொகைதான் சுயமென்று தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது.

நமக்குள் எண்ணம் ஒன்று உதிக்கும்போது, நாம் அந்த எண்ணத்தை மட்டும் கவனிப்பதில்லை. அத்துடன் அந்த எண்ணத்தை கவனிக்கும் இன்னொருவராகவும் (watcher) இருப்பதைச் சிலவேளைகளில் பார்த்திருப்போம். இங்கேதான் பிரக்ஞையின் (consciousness) புதிய பரிணாமம் வந்து சேர்கின்றது.

நீங்கள் உங்கள் எண்ணத்தை உற்றுக் கவனிக்கும்போது, பிரக்ஞையின் இருப்பை உணர்ந்திருக்கலாம். பிரக்ஞையானது, எண்ணத்தை விட, இன்னும் ஆழமான ஓரிடத்திலோ அல்லது அதற்கு அப்பாலோ இருக்கும்.

மேலும் கடந்த காலத்துக்கும், எதிர் காலத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் எண்ணங்களே, எங்களை நிகழ்காலத்தில் இருக்க முடியாது செய்கின்றன. ஆனால் இந்த எண்ணம் தோன்றும்போது, நாம் பிரக்ஞையின் இருப்பை அதேகணத்தில் உணர்ந்தால், எண்ணமானது தனது வலுவை இழக்கின்றது.

அப்படி எண்ணமானது வலுவிழக்கும்போது, நமது உளவோட்டத்தில் (mental stream) தொடர்ச்சியில்லாது போகின்றது. அப்போது நாம் முதன்முறையாக மனமில்லாத (no-mind) இடைவெளியை உணர்கின்றோம். முதலில் இந்த இடைவெளி எண்ணங்களிடையே சிறியதாக இருக்கக்கூடும். பின்னர் தியானம் போன்ற பயிற்சிகளின் மூலம் அந்த இடைவெளியை இன்னும் அதிகரித்தும் செல்லலாம். இந்த 'மனமற்ற' இடைவெளியில் நிசப்தமும் அமைதியும் உங்களுக்குள் ஊடுருவதை உணரமுடியும்.

இதை இவ்வாறு வார்த்தைகளில் எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் இதை உணர்வதற்கான அல்லது தெளிவதற்கான பயணம் என்பது நீண்டது.

2.

பு
த்தரின் சூன்யம் என்பது பலவிதங்களில் புரிந்து கொள்ளமுடியும். மேற்கில் ஸென் வந்தபோது வெறுமையும், சூனியமும் ஒன்றைப் போல பல இடங்களில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. சூன்யம் என்பது எதுவோ, ஆனால் நிச்சயம் வெறுமையோ/வெற்றிடமோ அல்ல. புத்தர் ஞானமடைதலை துன்பத்திலிருந்து விடுதலை (no suffering) என்று சொன்னவர். ஆனால் துன்பத்திலிருந்து விடுதலையான பின் அந்த நிலை எப்படியென்று அவர் வெளிப்படையாகச் சொல்லியவரல்ல. அந்த இடத்தில் -புத்தர் எப்படி இறப்பின் பின் என்ன நடக்கும் எனக் கேட்கும்போது அமைதி காத்தாரோ- அப்படியே துன்பத்திலிருந்து விடுதலையடைந்த பின் அது எப்படியிருக்கும் என்பது குறித்தும் அமைதி காத்தவர். அந்த நிலை புத்தரால் விபரிக்க முடியாதது என்றல்ல அர்த்தம்.

துன்பத்திலிருந்து விடுதலை என்பதை என்னவென்பதை நீங்களே உங்கள் இயல்பிலே அறியுங்கள் என்றே அது குறித்துப் பேசாது அமைதி காத்தவர். இல்லாவிட்டால் நாங்கள் எப்படி புத்தரை திருவுருவாக்கி, அவரில் அடையாளங்களையும்/குறியீடுகளையும் சுமத்தி கடவுளாக்கிவிட்டோமோ, அப்படியே 'ஞானமடைதலும்' வெறும் வெற்று வார்த்தைகளுக்குள் எவ்வித அர்த்தமோ/விடுதலையோ தராது சொற்களிலும்/பேச்சிலும் அர்த்தமில்லாது உறைந்து போயிருக்கும்.

இவ்வாறு எண்ணங்களை அவதானிக்கும் ஒரு கவனிப்பாளராக (watcher) மாறி, நமது பிரக்ஞையை அறிவதைப் போல, இன்னொரு விதமாகவும் நாம் இந்த எண்ணங்களிலிருந்து விடுதலை அடையவும் முடியும். அது நாம் தொடர்ந்து நிகழில் இருந்து கொண்டிருப்பது. அப்படி நிகழில் இருக்குந்தோறும் நாம் மனதில் ஒரு இடைவெளியை எண்ணங்களிடையே உருவாக்க முடியும். இதற்கான முக்கிய ஒரு பாதையாக தியானம் இருக்கின்றது. எந்த ஒரு வேலையைச் செய்தாலும் வேறு எந்த எண்ணமும் இல்லாது நிகழிலேயே திருப்ப திருப்ப இருப்பது.

மனமானது நம்மைக் காப்பாற்றும் ஒரு இயந்திரம் எனச் சொல்லலாம். அது மற்ற மனங்களைத் தாக்குவது, தற்காப்புச் செய்வது என்பதோடு (தகவல்களை) பல இடங்களில் இருந்து சேர்த்து, பின்னர் சேமித்து வைத்து அலசி ஆராயச் செய்கின்றது. அது ஒருவகையில் நல்லது, ஆனால் அது சிருஷ்டிகரமானது அல்ல.

எண்ணங்களின் இடைவெளியை காண்பதென்பது, சிந்திப்பதை நிறுத்தி வைப்பது போல் ஆகாதா என்றொரு கேள்வி நமக்குள் எழக்கூடும். எப்படி நான் தியான வகுப்பிற்குப் போனபோது எண்ணங்கள் இல்லாது எழுத முடியுமா என்று எனக்குச் சந்தேகம் வந்ததோ, அது போல உங்களுக்கும் தோன்றலாம். எண்ணமானது நம்மை எப்போதும் ஆக்கிரமித்திருப்பதால்தான் நமக்கு பல பிரச்சினைகள் வருகின்றன. பிரக்ஞையை நாம் உணரும்போது, எண்ணமானது அதன் ஒரு பகுதியாகின்றது.

எண்ணமானது ஒருபோதும் பிரக்ஞையாவது இல்லை ஆனால் பிரக்ஞையின் ஒரு பகுதியாக எண்ணம் மாறக்கூடியது. ஆகவே நாம் விழிப்புடன் இருக்கும்போது, பிரக்ஞையின் மூலம் எண்ணங்களை வேண்டியபோது மட்டும் 'பயன்படுத்தி'க் கொள்ளலாம். மற்ற நேரங்களில் எப்போதும் அலட்டிக் கொண்டிருக்கும் எண்ணங்களை 'சற்று அமைதியாய் இரும் பிள்ளாய்' என ஓரு மூலையில் வைத்துக் கொள்ளலாம்.

இப்படி எழுதுவதெல்லாம் குழப்பமானது என்பதும் எனக்குப் புரிகிறது. அதைவிட புத்தரைக் கடவுளாக்கி வணங்கும் பெளத்தர்களில் பெரும்பாலானோர் கூட, புத்தரைப் போல தங்களால் இந்தப் பிறப்பில் ஞானமடைதல் முடியாது என்றுதான் நம்புகின்றார்கள் எனச் சொல்லப்படுகின்றது. ஒருவகையில் இது புத்தர் கற்பித்தவற்றைக்கு நேரெதிர் திசையில் செல்வதைப் போன்றது.

மதம் என்ற கற்பிதம் மனிதரால் உருவாக்கப்பட்டது என்பதை உணராததால்தான் ஒவ்வொரு மதமும் தானே சிறந்ததெனச் சொல்லி சர்ச்சரவுகளில் ஈடுபடுகின்றது. இவற்றையெல்லாம் கண்டு வெறுத்துத்தான் நீட்ஷே போன்றவர்கள் கடவுள் இறந்துவிட்டார் என்று அறிவித்து புதிய பாதைகளைத் தேட முனைந்திருந்தார்கள்.

எல்லா அசலான கலைஞர்களும், படைப்பாளிகளும், அவர்கள் உணர்ந்தோ அல்லது உணராமலோ இந்த மனதைத்தாண்டிய, மனமில்லாத (no mind) வெற்றிடத்தில் வந்த அமைதியை உணர்ந்திருப்பார்கள். அதுவே அவர்களது சிறந்த படைப்புக்களைச் சிருஷ்டிக்க வைத்திருக்கவும் கூடும். பல எழுத்தாளர்கள் தமது எழுத்துக்கள் தம்மையறியாமல் எழுதிச் சென்றது என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.


உண்மையில் அவர்கள் அந்த சிருஷ்டியில் இருக்கும்போது, எண்ணங்களின் உலகிற்கு அப்பாலான மனமற்ற வெளியில் (no mind) அலைந்திருக்கின்றனர். அதுவே அவர்களின் மாபெரும் படைப்புக்களை உருவாக்க உதவியிருக்கின்றது. மிகச் சிறந்த உதாரணமாக இளையராஜாவிடம் எப்படி இந்த இசையை அமைத்தீர்களென்று பலர் அவரிடம் வியந்து கேட்கும்போது, அவர் சொல்கின்ற பதில் அவர் அந்த 'மனமற்ற வெளி'யில் அலைந்தபோது உருவாக்கிய இசைக்கோர்ப்புகள் என்பதை நாம் எளிதில் உணரமுடியும். அதை ஏதோ ஒருவகையில் அவரும் அனுபவிப்பதால்தான் ஒரு வெளிநாட்டு நிகழ்வொன்றில், நான் நாளை இல்லாமல் போனாலும் என் பாடல்கள் உங்களுக்காக ஒலிக்கும் என்று சொல்லிவிட்டு, சட்டென்று இனி எனக்கு இன்னொரு பிறப்பு இல்லை என்றும் தெளிவாகச் சொல்கின்றார்.

தன்னிலை உணர்தல் (self realization) இந்த வாழ்க்கைக் காலத்தில் நிகழுமா, நிகழாதா என்பதைவிட, அப்படி நம்மை உணரும் சாத்தியம் எப்போதேனும் இருக்கலாமென்ற சுவாரசியத்துடன், இந்தப் பயணத்தைச் செய்து பார்த்தல் எனக்குப் பிடித்தமானது என்பதையும் இந்தக்கணத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.



3.

 
ருவருக்கு முப்பதாவது பிறந்தநாள் வருகின்றது. அதுவரை அவர் மிகுந்த பதகளிப்புடன் வாழ்ந்து வருகின்றார். அத்தோடு அவருக்கு அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணங்களும் வந்து கொண்டிருக்கின்றன. ஒருநாள் காலையில் எழும்பும்போது இந்த வாழ்வின் வெறுமை அவரைத் துரத்தியடிக்கின்றது. அவர் இனி வாழ்வது அர்த்தமில்லை என்று நினைக்கின்றார். அந்நியமாதலின் பெரும் அவஸ்தையை அன்று அவர் உணர்கின்றார்.

'என்னால் இனி ஒருபோதும் என்னுடன் வாழ முடியாது' ('I cannot live with myself any longer') என்கின்ற எண்ணம் திருப்பத் திருப்ப அவரின் மனதில் சொல்லப்படுகின்றது. அப்போது அவருக்குள் எங்கிருந்தோ ஓர் எதிர்பாராத சிந்தனை வருகின்றது. இப்படி ஒரு குரல் சொல்லிக் கொண்டிருந்தால், 'நான் ஒருவரா அல்லது இருவரா? நான் என்னோடு வாழ முடியாது என்று சொன்னால், நிச்சயமாக அது நான் ஒருவரல்ல, இருவர்' என நினைக்கின்றார். 'நான்' (I) மற்றும் 'சுயம்' (Self) இங்கே இருப்பின், யாரோ ஒன்றுதான் அசல் என்று மேலும் யோசிக்கின்றார்.

இந்த 'தன்னிலை உணர்ந்த' அந்தப் பொழுதில் தனது மனது நிறுத்தப்பட்டதை அவர் அவதானிக்கின்றார். 'நான் அவ்வளவு விழிப்புடன் இருந்தேன், எந்த எண்ணமும் எனக்கு அப்போது இருக்கவில்லை' என்கின்றார். அந்த நேரத்தில் ஒரு வித்தியாசமான சக்தி தன்னுடலில் மெதுவாக ஆரம்பித்து வேகமடைவதை அவர் பார்க்கின்றார். அது என்னை மிகவும் அச்சுறுத்தியது. என் உடல் அதிர்வில் நடுநடுங்கத் தொடங்கியது. அப்போது 'ஒன்றையும் எதிர்க்காதே' என்கின்ற வார்த்தைகளைத் திருப்பத் திருப்பக் கேட்டேன், அது யாரோ என் நெஞ்சுக்குள் இருந்து பேசுவதைப் போல இருந்தது. நான் ஒரு பெரும் வெற்றிடத்தால் உறிஞ்சப்படுவதை உணர்ந்தேன். அந்த வெற்றிடமானது வெளியில் இருந்தது அல்ல, எனக்குள் இருந்த வெற்றிடத்தாலேயே நான் இழுக்கப்பட்டேன். சட்டென்று எனது எல்லாப் பயங்களும் இல்லாது போயின. நான் அந்த வெற்றிடத்திற்குள் என்னை விழ அனுமதித்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எந்த நினைவும் தனக்கு இல்லை என்கின்றார்.

பிறகு சுயநினைவு வந்தபோது, நான் பறவைகளின் கீச்சிடலைக் கேட்டேன். ஆனால் அப்படியொரு குரலை நான் இதுவரைக்கும் கேட்டதில்லை. நான் அப்போதும் கண்ணை மூடியபடியே இருந்தேன். எனக்கு ஒரு வைடூழியத்தின் காட்சி தோன்றியது. ஏதோ வைரம் சத்தம் போட்டதுபோல அந்தப் பறவைகளின் குரல் கேட்டது.

அந்த நாளில் மட்டுமில்லை, பிறகு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இப்படியான மனோநிலையில் நானிருந்தேன். எல்லாமே மிகத் துல்லியமாகத் தெரிந்தன, கேட்டன. எந்தத் தொந்தரவுமில்லாது அந்தக் காலங்களில் நான் அமைதியையும், பேரின்பத்தையும் அனுபவித்தேன். அதன்பிறகு அந்த அனுபவம் இல்லாது போயிருக்கலாம் அல்லது அதுவே என் இயல்பான நிலையாக இப்போது மாறியுமிருக்கலாம் என்கின்றார்.

இப்படிச் சொல்கின்றவர் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவ்வளவு மகிழ்ச்சியுடன் பூங்காவின் பெஞ்சுகளில் இருந்து காலத்தைக் கழித்தேன் என்கின்றார். எனக்கு இந்த உலகில் எதுவுமே அப்போது தேவையாக இருக்கவும் இல்லை. அந்த வெறுமனே வேடிக்கை பார்த்த அந்த 2 வருடங்களில், எனக்கு எந்த உறவும் இல்லை, எந்த வேலையும் இல்லை, எந்த வீடும் இல்லை, சமூகம் சொல்லும் எந்த அடையாளமும் எனக்கிருக்கவில்லை, ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தேன்' என்கின்றார்.

தனக்குள் ஏதோ ஒரு வித்தியாசமான மாற்றம் நடந்தது என்பதை அறிந்தபோதும், அது என்னவென்று விளங்கிக்கொள்ள பல வருடங்கள் ஆனது என்றும், அதை தனது ஆன்மீக ஆசிரியர்களும், ஆன்மீகப் பிரதிகளும் பின்னர் விளங்கப்படுத்தின/ர் என்கின்றார். இவ்வாறு சொல்கின்றவரே இன்று முக்கியமான ஒரு ஆன்மீக ஆசிரியராக இருக்கும் Eckhart Tolle. அவர் தற்போது கனடாவின் கிழக்குப் பகுதியான வன்கூவரில் வசித்துக் கொண்டிருக்கின்றார்.

இவர் சொல்லும் அனுபவத்துக்கு நிகரானதை விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமாரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தபோதும் அறிந்திருக்கின்றேன். விசிறி சாமியாருக்கு ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்துவிட்டதென்று அவரை வைத்தியசாலையில் கூட அவரின் குடும்பத்தினர் அனுமதித்திருக்கின்றனர். நம்மைப் போன்றவர்கள் பிறந்த நாடுகளில் 'விழிப்பு' வந்தவுடன் அலைவதைப் போல, மேற்கில் 'தன்னிலை உணர்தல்' நிகழ்ந்தாலும் பரதேசிகளாக அலையமுடியாது. அதனால்தான் இரண்டு வருடமாக பூங்காக்களில் இருந்து இந்த அனுபவத்தை தன்னியல்பிலே எச்கார்ட் அனுபவித்தாரோ தெரியவில்லை.

இது ஒருவரின் அனுபவம். அவரின் பாதையில் அல்லது அவருக்கு சட்டென்று (ஸென் ஆசிரியர்கள் பலருக்கு நிகழ்ந்ததுபோல) தன்னிலை உணர்தல் போல நமக்கும் நடந்துவிடும் என்று நம்பத் தொடங்கினால் அதை போல அபத்தம் இல்லை. இவ்வாறானவர்களின் அனுபவம்/ வாழ்க்கை எல்லாம் நமக்கும் இவை சாத்தியம் என்பதற்காகவே நினைவில் வைத்திருக்கலாமே தவிர, நாம் ஒவ்வொருவரும் நடக்கவேண்டிய பாதை நமக்கு மட்டுமே உரியது. அதனால்தான் புத்தர் துயரங்கள் முடிந்த நிலை எப்படியிருக்கும் என்பது குறித்து எதுவும் பேசாது அமைதி காத்தவர்.

ஒரு எண்ணமும் அதற்கு அடுத்த எண்ணமும் தோன்றும் இடைவெளியைக் கவனிப்பதிலிருந்து எல்லாமே ஆரம்பிக்கின்றது. அப்படி ஒரு எண்ணத்தைக் கவனித்து அனுப்பினாலும், அடுத்த எண்ணம் பின் வீட்டால் நுழையவும் செய்யும். அதையும் 'ஓ.. இது இன்னொரு எண்ணத்தின் சித்து விளையாட்டு' என்று கவனிக்கத் தெரிந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகத் தொடங்கிவிடுவோம், வாழ்க்கை குறித்த தேவையற்ற பயங்களும் குறையத் தொடங்கிவிடும் என நினைப்பதும் இந்த மனம் செய்யும் குறளி வித்தையா அல்லது அதைத்தாண்டிய வேறு எதுவோ?

***************

(எழுத உதவிய நூல் 'The Power of Now')

 

பனிக்காலத் தனிமை - 03

Thursday, January 23, 2025

 

ஸென் மரபை ஒரளவு பின் தொடர்பவர்க்கு அது தனக்கான சில வழிமுறைகளை இறுக்கமாக வைத்திருப்பதை அறிவார்கள். அப்படியிருந்தும் அங்கிருந்து விதிவிலக்கான பலர் தோன்றியிருக்கின்றனர். இதில் ஜப்பானில் தோன்றிய ஸென் துறவியான இக்யூ ஸோயுன் சுவாரசியமான ஒருவர். அவர் அன்றைய ஜப்பானிய அரசனுக்கு முறைதவறிப் பிறந்தவர் எனச் சொல்லப்படுகின்றது. இதனால் அவரின் தாயார் ஸோயுனை ஸென் மடலாயத்தில் அவரின் ஐந்து வயதில் ஒப்படைத்துவிட்டுப் போய்விடுகின்றார்.

ஸோயுன் ஸென் மரபுக்குள் கட்டுப்படாத குழப்படிக்கார ஒருவராக மாறுகின்றார். அவரின் பதின்மங்களில் இந்த மடலாயங்கள் பெண்கள் பற்றியும், உடலுறவு குறித்தும் வைத்திருந்த கருத்துக்களை எதிர்க்கின்றார். மேலும் அன்றைய காலங்களில் இப்படி ஸென் கட்டுக்கோப்பாகவும், அதைப் பின்பற்றுவர்கள் இறுக்கமான பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று சொல்லும் ஸென் ஆசிரியர்களின் சிலர் மடலாயங்களின் கடைகோடியில் இரகசியக் காதலிகளை வைத்து உடல்சார்ந்து உறவில் ஈடுபடுவது ஸோயுனுக்கு உவப்பில்லாது இருக்கின்றது.

ஸோயுனைப் பொருத்தவரை இயல்பான ஸென் வாழ்க்கையென்பது மது, தியானம் மட்டுமின்றி பெண்களோடும், ஆண்களோடும் உடலுறவு என்பதாக இருக்கின்றது. ஸென்னில் எதையும் discriminate செய்யக்கூடாதென்பது அடிப்படையான விதிகளில் ஒன்று. அதையதை அப்படியே பார்ப்பதும், ஏற்றுக்கொள்வதும்தான் ஸென் என்கின்றபோது ஏன் இந்த ஸென் ஆசிரியர்கள் இரட்டை வாழ்க்கையை வாழ்கின்றார்கள் என்று எரிச்சலுற்று ஒரு நாடோடி ஸென் ஆசிரியராக ஸோயுன் பிற்காலத்தில் மாறுகின்றார்.

ஸோயுன் ஞானமடைந்து ஒரு ஸென் ஆசிரியராக ஆனபோது அவரின் சீடர்களான பிக்குகள் மட்டுமில்லை, பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள், கவிஞர்கள், ஓவியர்கள் என்று பலவகைப்பட்டவர்கள் இருந்திருக்கின்றனர்.

இவ்வாறு ஞானமடைவதற்கு முன், அவர் பல்வேறு ஸென் குருக்களிடம் கற்றிருக்கின்றார். கற்கும் இடமெங்கும் முரண்பட்டு வெளியேறும் ஸோயுன் இறுதியின் தனித்து இருக்கும் ஸென் ஆசிரியரான கீனோவிடம் சென்று சேர்கின்றார். கீனோவுக்கு இவர் மட்டுமே ஒரு சீடன். ஸோயுன் இவரோடு இருக்கும்போது ஞானமடைகின்றார்.

குருவோ, இவரைத் தன்னுடைய ஸென் பரம்பரையைக் கொண்டு செல்லவேண்டுமென விரும்புகின்றார். இவரோ ஞானமடைந்ததற்காகக் கொடுத்த தாளை எரித்துவிட்டு மடலாய வாழ்விலிருந்து விடுபட்டு ஒரு நாடோடி ஸென் ஆசிரியராக மாறுகின்றார்.

ஸோயுன் அன்றைய மத்தியகால ஜப்பானுடைய மிகச்சிறந்த புல்லாங்குழல் கலைஞரென மதிப்பிடப்படுகின்றார். அது மட்டுமின்றி ஜப்பானிய தேநீர்க்கலையை மாற்றியமைத்ததோடு, ஒரு கவிஞராக இருந்து பல ஓவியக்கலைஞர்களில் செல்வாக்குச் செலுத்திய ஒருவரெனவும் நினைவு கூரப்படுகின்றார். இவரின் இந்த அலைந்து திரியும் வாழ்க்கை, அவருக்கு 'பைத்தியக்கார மேகம்' (Crazy cloud) என்கின்ற பட்டப்பெயரையும் அவருக்குக் கொடுத்திருந்தது.

ஸோயுன் என்ற பெயரையுடையவர் ஞானமடைந்தபோதே இக்யூ என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கின்றது. இக்யூ என்பதை 'இடைநிறுத்தல்' அல்லது 'அமைதியடைதல்' ( One Pause) என்று அர்த்தம் கொள்ளலாம். இவ்வாறு அலையும் நாடோடியாக இருந்த இக்யூ இதுவரை எவரும் ஸென்னைக் கற்பிக்காத இடங்களுக்குச் செல்வேன் என்று கூறி, பாலியல் தொழில் செய்யப்படும் இடங்களுக்கும், மதுபான விடுதிகளுக்கும் சென்று, அன்றைய காலத்தைய மரபான் ஸென் மடலாயங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தவர்.

அதுமட்டுமின்றி ஸென் மடலாயங்கள் மிக இறுக்கமாகப் பின்பற்றிய பிரமச்சாரியத்தைத் தகர்ந்தெறிந்தவர். கவிதைகள் எழுதும் ஆற்றல் இருந்த இக்யூ அப்படி explicit ஆக உடல் குறித்தும் உடலுறவு குறித்தும் எழுதியிருக்கின்றார்.

'
ஒரு மனிதனின் வேர்' என்கின்ற கவிதை இப்படியாக இருக்கும்.

"
எட்டு அங்குல உறுதி. இது எனது விருப்பமான பொருள்;
நான் இரவில் தனியே இருப்பேன் என்றால், நான் அதை முற்றுமுழுதாக அள்ளிக்கொள்வேன் -
ஒரு அழகான பெண்ணால் நீண்டகாலமாகத் தொடாமல் இது இருக்கின்றது,
என்னுடைய உள்ளாடைக்குள், ஒரு முழுதான பிரபஞ்சம் உள்ளது!"

என்கின்றது அந்தக் கவிதை.

இன்னொரு கவிதையான ' ஒரு பெண்ணின் முயங்கல்' இல்,

'
இதற்கு அசலான வாய் உள்ளது, ஆனால் இருந்தும் பேசமுடியாது
இது மகத்தான வட்டத்தில் மயிர்களால் சூழப்பட்டிருக்கிறது.
ஐம்புல உயிரிகள் முற்றுமுழுதாக இதற்குள் தொலைந்து போவார்கள்
ஆனால் பத்தாயிரம் உலகங்களிலுள்ள அனைத்துப் புத்தர்களினதும் பிறப்பிடமாகவும் இது இருக்கின்றது.'

என்று எழுதியிருக்கின்றார்.

இவ்வாறு உடல்களின் மீது பித்துப்பிடித்திருந்த இக்யூ அவரின் இறுதிக்காலத்தில் மோரி என்கின்ற இளம்பெண்ணின் மீது உக்கிரமான காதல் கொள்கின்றார். மோரியோடு சேர்ந்து வாழ்ந்தே இக்யூ இறுதியில் காலமாகியும் போகின்றார். மோரிக்காக உற்சாகம் ததும்பும் நிறைய காதல் கவிதைகளை இக்யூ எழுதியிருக்கின்றார்.

'
சீமாட்டி மோரிக்கு ஆழ்ந்த செய்ந்நன்றியுடன்"
******
'
மரங்கள் இலைகள் உதிர்க்கையில் நீ எனக்கு ஒரு புதிய வசந்தத்தைக் கொண்டு வந்தாய்.
நீண்ட பசுமைத் துளிர்கள், மலர்ச்சியான பூக்கள், புத்துணர்வான உறுதிமொழி.
மோரி, நான் எப்போதாவது உனக்கான நன்றியை மறப்பேன் என்றால்,
என்றென்றைக்குமாக என்னை நரகத்தில் எரிய விடு.'

ஸென் ஆனது எப்போதும் இயல்பான மனிதராக நம்மை இருக்கச் சொல்லி அடிக்கடி நினைவூட்டுவது. நாங்கள் தவறுகளைச் செயதிருக்கலாம், கோபப்பட்டிருக்கலாம், பதற்றங்களோடு இருந்திருக்கலாம், ஏன் முட்டாள்தனமான செயல்களைச் செய்தும் இருக்கலாம். அதேவேளை ஸென்னைப் பின் தொடர்பவர்களாக இருந்தால், இவற்றையெல்லாம் தியானத்தின்போது நேரடியாகச் சந்தித்து, நாங்கள் இதிலிருந்து விடுபட்டு சுதந்திரத்தையும் பெறமுடியும் என்பதுதான் ஸென்.

ஒருவகையில் இக்யூவின் வாழ்க்கை நமக்கு சித்தர்களின் வாழ்க்கையை நினைவுபடுத்துகின்றது. மரபான முறைமைகளிலிருந்து வெளியேறிய கலகவாதிகளாக மட்டுமின்றி அலைபவர்களாகவும் அவர்களில் பலர் இருந்திருக்கின்றனர். மேலும் பின்னரான காலத்தில் தோன்றிய ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் எப்படி நிறுவனங்களையும், நிறுவனமயப்படுத்துவதையும் விட்டு வெளியேறி நமக்கு ஞானமடையும் பாதைகளைக் காட்டினார்களோ அப்படியே இக்யூவும் மடாலயத்தை விட்டு விலகிய ஒருவராக முன்னொருகாலத்தில் இருந்திருக்கின்றார்.

இக்யூவிடம் நூற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தாலும் அவர்கள் எவரையும் தனது பரம்பரையைப் பின் தொடர வேண்டுமென என முன்னிறுத்தியது இல்லை. இதனால் இக்யூவிற்குப் பின் அவரின் தலைமுறை என்ற சீடர் பரம்பரை ஒன்று வரலாற்றில் இருக்கவில்லை.

இக்யூ காலமாவதற்கு முன்னர், 'எனது மரணத்தின்பின் உங்களில் சிலர் தியானம் செய்வதற்காக காடுகளையும், மலைகளையும் தேடிச் செல்லக்கூடும், மற்றவர்கள் மதுவருந்தியும், பெண்களின் நெருக்கத்தில் மகிழ்ந்து கொள்ளவும் கூடும். இந்த இரண்டு வகையான ஸென்னும் எனக்கு உவப்பானதே, ஆனால் யாரேனும் மதகுருவாக மாறி, 'ஸென் ஒழுக்கமான பாதை' என உளறினால், நான் எவருக்கும் இப்படிச் சொல்ல அனுமதி கொடுக்கவில்லை என்பதோடு, இப்படி யாரேனும் உளறினால் தயவு செய்து அவர்களை உடனே துரத்தி விடுங்கள்' என்று தனது மாணவர்களிடம் சொல்லியிருக்கின்றார்.

வாழும் காலத்தில் மட்டுமில்லை, மரணத்தைக் கூட , ஸென் காலங்காலமாக கற்பித்திருந்தத அதன் சட்டகங்களைத் தாண்டிப் பார்க்கச் சொன்னவர் இக்யூ.

சிலவேளைகளில் 'என்னை நீங்கள் தெருவில் சந்தித்தால் கொன்றுவிடவேண்டும்' எனச் சொன்ன புத்தர், இக்யூவைப் பார்த்து நான் கூறியதைப் புரிந்துகொண்ட ஓர் அசலான ஞானி இவன் என்று அவரை அரவணைத்து இருக்கக்கூடும். மேலும் ஞானமடைந்தவர்கள் ஒருபோதும் மீண்டும் தோன்றுவதில்லை என்பது ஸென் கூறும் எளிய உண்மையல்லவா?

*********

(
எழுத உதவிய நூல்: 'Zen in the age of anxiety')


பனிக்காலத் தனிமை - 02

Thursday, January 16, 2025

 

ரடி பின்னே வைப்பதென்பது ஒரு அடி முன்னே செல்வதற்கானது
**********************

தாவோயிஸத்தில் ஓர் உரையாடல் தாவோவைப் பற்றி ஆசிரியர் மாணவருக்கிடையில் நிகழ்ந்திருக்கும்.

மாணவர்: தாவோ என்றால் என்ன?
ஆசிரியர்: சாதாரண மனமே தாவோ.
மாணவர்: அப்படியெனில், நாங்கள் அதை நோக்கிப் போகவேண்டுமா அல்லது போகத் தேவையில்லையா?
ஆசிரியர்: நீங்கள் அதை நோக்கிச் சென்றீர்களென்றால், அது உங்களை விட்டு விலகிப் போய்விடும்.
மாணவர்: நாங்கள் முயற்சிக்கவே இல்லையென்றால், பிறகு அதுதான் தாவோ என்பதை, எப்படி அறிவது?
என அந்த உரையாடல் மேலும் நீளும்.

இப்படி தாவோவை அறிவதற்கு எதனையோ இலக்காக வைத்து அதை அடையவேண்டும் என்று இந்த மாணவர் கேட்பது போல, நாமும் எமது வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலக்குகளை நிர்ணயம் செய்து அதை அடைய முயன்றிருப்போம்.  அத்துடன், எமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில், நாம் எமக்கான இலக்குகளைத் தயார்ப்படுத்தி, அதற்காக கடுமையாக முயற்சிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்படும்போது, எவ்வித குறிக்கோள்களும் இல்லாது ஒரு வாழ்வை வாழ்வதென்பது மிகுந்த அபத்தமாக அல்லவா தெரியும்?

ஆனால் ஸென் நம்மை மாற்றிச் சிந்திக்கச் சொல்கின்றது. ஒன்றை அடைவதற்காய் நீங்கள் எங்கும் செல்லவேண்டியதில்லை என்று ஒவ்வொருபொழுதும் ஞாபகப்படுத்துகிறது. ஸென்னின் அடிப்படைப் பயிற்சியே நமக்குள்ளே இருக்கும் இடைவெளிகளையும், நமக்கும் மற்றவருக்கும் இருக்கும் இடைவெளிகளையும் குறைப்பதாகும் (It is about closing gaps, the gaps between yourself and your Self, between you and me).

இறுதியில் அந்த தாவோ ஆசிரியர், 'தாவோ ஒருபோதும் எதுவென்று அறிவதையோ அல்லது எதுவென்று அறியாதிருப்பதையோ தனக்குரியதாகக் கொள்வதில்லை' என்கின்றார்.

அப்படியெனில் தாவோ என்பது என்னதான் என்று எமக்கு இப்போது இன்னும் குழப்பம் கூடுகின்றது. இதையிதைச் செய்தால் அல்லது இப்படியிப்படிப் போனால் உங்கள் இலக்குகள் அடையப்பட்டுவிடும் என்றோ அல்லது அறிந்துவிடலாமோ என்றோ தாவோயிஸமோ/ஸென்னோ சொல்வதில்லை.

உங்களால் ஒவ்வொரு கணத்திலும் மூழ்கமுடியுமென்றால், நீங்கள் தேடும் புதையல் இங்கேயே இருக்கின்றது. நீங்கள் இதற்காக எங்கேயும் போகத்தேவையில்லை, உங்களுக்கான பொக்கிஷம் உங்கள் வெறும் காலுக்கு அடியில் இருக்கின்றது என்று ஸென் சொல்லும்.

இது உங்களுக்கு பாவ்லோ கொய்லோ எழுதிய 'இரசவாதி'யை (Alchemist) ஞாபகப்படுத்தலாம். அதாவது 'புதையலை' ஒரு பொருளாக/செல்வமாகக் கொண்டீர்கள் எனில்!

ஸ்பெயினின் ஆண்டலூசியாவில் இருந்து எகிப்துக்கு புதையலைத் தேடிச் செல்லும் சாந்தியாகோ இறுதியில் அந்தப் புதையலை எங்கே கண்டடைகின்றான் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

ஸென் சொல்லும் நாம் தேடும் 'பொக்கிஷம்' பொருளை அடிப்படையானதல்ல என்பது உங்களுக்குப் புரியும். இதையே எனது ஆசிரியான தாய், 'I've arrived, I'm home' என்று நாம் தியானம் செய்கையில் மனம் அலைவுறும் ஒவ்வொரு தருணமும் சொல்லி நம்மை நினைவூட்டிக் கொள்ளச் சொல்வார்.

'நூற்றுக்கணக்கான மலர்கள் வசந்தகாலத்திலும், நிலவு இலையுதிர்காலத்திலும், மென்குளிர் காற்று கோடையிலும், பனி குளிர்காலத்திலும் இருக்கும்போது, உங்கள் மனதை எந்த ஒரு மேகமும் மூடவில்லையெனில், உங்களுக்கு அதுவே மிகச் சிறந்த பருவம்' என்கின்ற ஒரு கவிதை ஸென் பிரதிகளில் இருக்கின்றது.

அதாவது நீங்க எந்த குறிக்கோள்களையோ, அவை அடையும் எல்லைகளையோ உங்களுக்குள் இழுத்து அடைத்து வைத்திருக்கவில்லையெனில், அந்த நாள் மிக நல்ல நாளாக ஆகிவிடுகின்றது.

ஒருநாளில் அதற்கான குறிக்கோள் இல்லாது எப்படி இருப்பது? என்று நீங்கள் கேட்கலாம். அப்படியிருப்பது நமக்கு அச்சமும் ஊட்டக்கூடும். சரி வேண்டுமானால் ஒரு நாளுக்கான இலக்குகளை வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் அதை எப்போதும் காவிக் கொண்டிருக்கத் தேவையில்லை என ஸென் நமக்கு இன்னொருவகையான சுதந்திரத்தைத் தருகிறது. அத்துடன் எந்தவகையான இலக்காயினும் தன்னியல்பிலே நடந்து நிறைவேறிவிடும். நீங்கள் அதை உங்கள் மனதுக்குள் ஒவ்வொரு பொழுதும் திட்டமிட்டுக் கொண்டிருக்கத் தேவையில்லை என்கின்றது.

எங்களில் பலர் காலையில் எழுந்தவுடனேயே, அப்படியே 'வேலைக்குச் செல்லும்' மனநிலைக்குச் சென்றுவிடுவோம். அது அவ்வளவு நல்லதில்லை, உங்களை கொஞ்சம் நிதானமாக்குங்கள் எனச் ஸென் சொல்கிறது. உதாரணத்துக்கு நாங்கள் சில நாட்களோ/வாரங்களோ வேலையிலிருந்து விடுமுறை எடுத்துப் போகும்போது, நாங்கள் விடுமுறை முடிந்து மீள வரும்போது நிறைய வேலை சேர்ந்திருக்குமே, நிறைய மின்னஞ்சல்கள் திறக்கப்படாமல் இருக்குமே, நிறைய முக்கிய தொலைபேசி அழைப்புக்களைத் தவறவிட்டிருப்போமே எனப் பதற்றம் வந்தால், நாம் எங்கோ தவறிழைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று அர்த்தமாகும்.

நாங்கள் ஒவ்வொரு நொடியையும் அதை இழக்கவிடாது வாழ்ந்து கொண்டிருப்போம் என்றால், இப்படி இவற்றைத் 'தவறவிடுகின்றோம்' என்று எண்ணமுடியும்? விடுமுறைக்காகச் சென்றாலும் நாம் வேலை என்கின்ற கடந்தகாலத்திலும், திரும்பி வரும்போது என்னவெல்லாம் செய்ய இருக்கும் என நினைத்து எதிர்காலத்திலும் இருக்கின்றோமோ தவிர நாம் இந்தக் கணத்தில் இல்லை என்றுதானே பொருள். அப்படியெனில் நாம் உண்மையில் விடுமுறையில்தான் போயிருக்கின்றோமா எனக் கேட்க வேண்டியிருக்கும்.

ஸென் எங்கள் மனதுக்கு மட்டுமில்லை, எமது உடலுக்கும் கவனத்தைக் கொடுக்கச் சொல்கின்றது. எமது மனம் தன்னியல்பிலே பல்வேறுபட்ட எண்ணங்களாலும், தேவையற்ற முணுமுணுப்புக்களாலும் நிறைந்திருப்பது. இந்த இரைச்சல் எப்போது அமைதியடைகின்றது அல்லது நம் கவனத்தில் இருந்து இல்லாது போகின்றது? நமக்குப் பிடித்த ஒரு விளையாட்டை விளையாடும்போதோ, ஒரு நடனத்தை ஆடும்போதோ அல்லது ஒரு நல்ல புத்தகத்தையோ வாசிக்கும்போதோ நாம் ஒரு பயிற்சியைச் செய்து பார்க்கலாம். அதாவது நாம் அந்தச் செயற்பாட்டில் இரண்டறக் கலந்திருக்கின்றோமா அல்லது அடுத்து என்ன செய்வது/நிகழும் என்று எம் 'மனம்' சிந்திக்கின்றதா என்று அவதானிக்கலாம். உங்கள் கைகளும், கால்களும் எங்கேயிருக்கின்றன என்று எப்போதும் யோசித்துக் கொண்டா இருக்கின்றீர்கள்? இல்லைத்தானே!

தாவோ அதைத்தான் எளிமையாக, ஆனால் பூடகமாகச் சொல்கிறது. 'சாதாரண மனமே தாவோ' என்கின்றது. அதுவே பாதை. எந்த ஒன்றையும் நீங்கள் அடையவோ, எதனோடும் ஒப்பிடவோ, எவரோடும் போட்டியிடவோ தேவையில்லை என்கின்றது.

இன்னொருவகையில் நீங்கள் உங்கள் அளவில் முழுமையானவர். அந்த முழுமையை நீங்கள் உணர்கின்றபோது நீங்கள் ஞானமடைகின்ற நிலையை அடைகின்றீர்கள். புத்தரும், நீங்கள் யாரென்று அறியாத அளவுக்கு உங்களுக்குள் நிறைய தூசி பெரும்படையாகச் சேர்ந்துவிட்டது, அந்தத் தூசியைத் துடைத்து நீங்கள் யாரென்ற கண்ணாடியைப் பாருங்கள் என்றுதான் சொல்கின்றார்.

நாம் எதையும் அடையவோ அல்லது எதனோடும் போட்டி போடத் தேவையில்லை என்றாலும், நமக்குள்ளிருக்கும் 'பசித்த பேய்கள்' எம்மை எளிதில் விடாது. எங்களை இன்னும் இலக்குகளில் கவனம் குவிக்கவும், வெற்றிகளின் மீது வெறிபிடித்து அலையவும், இதன் நிமித்தம் இன்னும் கடினமாக உழைக்கவும் இந்தப் பேய்கள் உந்தித் தள்ளும். உங்களால் அவ்வளவு இலகுவில் இந்த பசிப்பேய்களிடமிருந்து தப்பிவிடமுடியாது.

அது இன்னும் நிறைய மணித்தியாலங்கள் வேலை செய், நிறையப் பணத்தை ஈட்டு என்று எங்களைத் துரத்தும். அப்படி எல்லாவற்றையும் செய்தால் கூட ஏதோ ஒன்று எமது வாழ்க்கையில் கிடைக்காமல் இருக்கின்றதே என்கின்ற வெறுமையில் நெஞ்சம் அவ்வப்போது எடைகூடிப் போகும்.

ஆகவே கொஞ்சம் உங்களை நிறுத்தி நிதானியுங்கள். பசிப்பேய்களோடு நண்பர்களாகி உரையாடுங்கள். உனக்காக எந்த நேரமும் தீனியிட்டுக் கொண்டிருக்க முடியாது என்று இந்தப் பேய்களை நீங்கள் தியானத்தில் அமரும்போது அழையுங்கள். அவற்றைக் கொஞ்சம் அமைதிப்படுத்துங்கள்.

ஒரு நாள், மேலதிக மணித்தியாலங்கள் வேலை செய்யாமலோ அல்லது அரைநாளில் விடுப்பு எடுத்து நீங்கள் வீடு திரும்பும்போது, உழைக்கும் பணத்தில் கொஞ்சத்தை இழக்கலாம். ஆனால் அதேசமயம் அந்த நேரத்தை உங்களுக்காகவும், உங்களுக்குப் பிரியமானவர்களுடன் செலவழிப்பதாகவும் அமையக்கூடும். ஆகவே ஓரடி பின்னால் எடுத்து வைப்பதென்பது, ஓரடி முன்னே வைப்பதற்காகவும் இருக்கும். பல பொழுதுகளில் எதையோ இழந்துதான் எதையோ பெறவேண்டியிருக்கின்றது. ஆனால் நாம் பெறுபவை நமக்கு அதிகம் நிம்மதியையும், மனநிறைவையும் தந்தால், நமக்கு இழந்தவைகள் ஒரு பொருடாக இருக்கப் போவதில்லையல்லவா.

****************

(எழுத உதவிய நூல்: "The Book of Householder Koans')

 

மழைக்காலத் தனிமை

Thursday, January 02, 2025

 -Rain (Winter) Retreat-


புத்தரைப் பின் தொடர்பவர்க்கு Rain retreat என்ன என்பது தெரிந்திருக்கும். புத்தரின் காலத்தில் மழைக்காலத்தில் மூன்றோ/நான்கோ மாதங்கள் இந்தப் பருவத்தில் ஓரிடத்தில் புத்தரின் சீடர்கள் தங்கச் செய்வார்கள். இந்தக் காலத்தில் வெளியே செல்வது அவ்வளவு எளிதில்லை என்பதால் முற்றுமுழுதாக தியானத்துக்கும், அகத்தை ஆழப்பார்ப்பதற்கும் இந்தப் பொழுதுகளைப் பயன்படுத்துவார்கள். புத்தர் காலத்திலிருந்து இன்றைவரைக்கும் தேரவாத/மகாயான/வஜ்ரவாத என அனைத்துப் பிரிவினரும் ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இந்த மழைக்கால retreatஐ செய்து வருகின்றார்கள்.

மேற்குலகிற்கு பெளத்தம் பரவியபோது இந்த Rain retreat, பனிக்காலத்துக்குரியதாக அநேக இடங்களில் மாறியது. அநேகமாக நவம்பரில் தொடங்கி, பெப்ரவரியில் இந்த 'Rain retreat' நடப்பதுண்டு. புத்த மடாலயத்தில் ஒருவர் நீண்டகாலமாக தங்கி பிக்குவாக மாறியிருந்தால், யாரேனும் அவர்களிடம் எவ்வளவு காலம் இங்கே இருக்கின்றீர்கள் எனக் கேட்டால், அவர்கள் இத்தனை வருடங்களென நேரடியாகச் சொல்வதில்லை, நாம் இத்தனை Rain retreat எடுத்திருக்கின்றோம் எனச் சொல்வதே ஒரு மரபாக இருக்கின்றது. அந்தளவுக்கு புத்தர் சம்பந்தமான இடங்களில் இந்த Rain retreat என்பது முக்கியமாக இருக்கின்றது.

இன்றிலிருந்து கனடா போன்ற நாடுகளில் பனிக்காலம் தொடங்குகின்றது. ஒவ்வொரு பருவமும் மூன்று மாதங்களுக்குரியது என்பதால், பங்குனி இறுதிவரையும் பனிக்காலம் இருக்கும். அதற்குப் பிறகு வருவது வசந்தகாலம்.

இம்முறை பனிக்காலத்தை எனக்குரிய Rain retreat ஆக வாசிப்பிலும்/எழுத்திலும் செய்து பார்க்கலாமென விரும்புகின்றேன். இந்தக் காலத்தில் அதிகம் எனது ஸென் ஆசிரியரான தாயையும், அவரைப் பின்பற்றுவர்களின் பிரதிகளையும் வாசித்து, சுருக்கமாக நேரங்கிடைக்கும்போதெல்லாம் இங்கே பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன்.

இப்படியான ஒரு பனிக்காலத்தில்தான் (தை மாதத்தில்) எனது ஆசிரியரான தாய் இவ்வுலகிலிருந்து இல்லாது போனார். அப்போது எனது ஆசிரியரான தாய் குறித்து எழுதியதை - அவர் குறித்து இதுவரை அறியாதவர்கள் இங்கே சென்று வாசிக்கலாம் (http://djthamilan.blogspot.com/2022/04/thich-nhat-hanh.html ). அவ்வப்போது தாய் பற்றி எழுதுவதைப் பார்த்து, நண்பர் 'அகநாழிகை' வாசுதேவன், தாய் பற்றி விரிவாக எழுதுங்கள், ஒரு நூலாகவே கொண்டு செய்யலாம்' என்று சொன்னதும் நினைவிலுண்டு.



தாய் கற்பித்தவற்றை, எனக்குள் முழுமையாக உள்வாங்கி அந்த அறிதலின் மூலம் ஆழமாகச் செல்ல நிறையக் காலம் எடுக்குமென நினைக்கின்றேன். என்றேனும் ஒருநாள் அவ்வாறு எனக்குள் நிகழும் மாற்றங்களைப் பார்த்து மனம் நிறைந்து, அப்படியான ஒரு நூலை தாய் பற்றி எழுதினால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

ஆக, இனி வரும் மூன்று மாதங்களுக்கு நான் வாசிக்கும் நூல்களிலிருந்து வரும் அறிதல்களிலிருந்து சிறு சிறு விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன்.

தற்சமயம் தாயின் முதன்மையான மாணவரான Brother Phap Hai எழுதிய"Nothing to It: Ten ways to be at home with yourself", Eve Marko & Wendy Nako எழுதிய 'The Book of Householder Koans', Tim Burkett எழுதிய 'Zen in the age of anxiety' ஐயும் சமாந்திரமாக வாசிக்கத் தொடங்கியுள்ளேன். இவற்றில் இருந்து எதையாவது பகிரத் தோன்றினால் இவை பேசுவதன் சாராம்சத்தையோ அல்லது சில பகுதிகளைத் தமிழாக்கவோ செய்வதிலிருந்து எனது மழைக்கால retreat ஐத் தொடங்கலாமென நினைக்கின்றேன்.

புத்தரோடு சம்பந்தப்பட்ட எல்லாமே collectiveவாக ஆனது. என் ஆசிரியரான தாயும் இனியான காலத்தில் collective buddhas தோன்ற வேண்டியது அவசியமென தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தவர். நாங்களும் கூட்டாக உரையாடிக் கொள்ளலாம்.

****************

 

(Dec 21, 2024)

கார்காலக் குறிப்புகள் - 27

Sunday, November 05, 2023


வாழ்க்கையில் கடினப்பட்டுத்தான் ஒவ்வொரு படியும் மேலே ஏற வேண்டியிருக்கிறது. அவ்வாறு ஏறியும் கொஞ்சம் நிதானமாக அதை இரசிக்கவிடாது, இன்னொரு கனவு கிளைத்தெழும் அல்லது திருப்தியின்மை படரும். இவ்வாறு எத்தனங்களால் எத்தனப்படாத‌ ஒரு நிதானமான வாழ்வு எப்போது அமையுமென்று நண்பர்களோடு விவாதிப்பதுண்டு. நண்பரொருவர் ஆறு வருடங்கள் இங்கிலாந்தில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார். அதற்கு முன் இந்தியாவில் சில வருடங்கள் கழித்தவர். அவருக்கு இந்நகர் பெரும் மூச்சடைப்பைத் தருவதாகச் சொன்னார்.

இங்கிலாந்தின் ஒரு புறநகர்ப்பகுதியில் நடந்தோ/சைக்கிளிலோ அவர் வைத்தியராகப் பணிபுரியும் வைத்தியசாலைக்குப் போகையில், அருகிலேயே குதிரையில் பயணித்தபடியும் அயலவர்கள் வருவார்கள் என்று அவர் சொல்லும்போதே அந்நகரின் அழகும், அதன் அமைதியான பின்னணியும் எளிதில் விளங்கியது. பெருநகர் வாழ்வென்பது பெரும்பாலும் நமது நுண்ணுணர்வுகளைக் கொன்றுவிடுகின்றது. மனதுக்குள் கனவுகளுக்குப் பதிலாக ஆயிரமாயிரம் பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்க மனிதர்கள் இன்னுமின்னும் இறுக்கமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

வேலைக்குப் போகும் ரெயில் பயணங்களில் யன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பவர்களையோ, புத்தகங்களை வாசித்தபடி தம்மை மறந்தவர்களையோ இப்போது காண்பது அரிதாகிவிட்டது. புத்துணர்ச்சி தரும் காலை வேளையாயினும் எல்லா முகங்களிலும் எதையோ தொலைந்துவிட்டதான கவலையின் ரேகைகள் ஓடுகின்றன. புன்னகைக்கும் விழிகள் எங்கேனும் தென்படாதா என்ற ஏக்கத்துடன் ரெயில் பயணங்கள் நிறைவடையும்.


ஸென்னை விளங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஸென் ஆசிரியர் எதையாவது சொல்லும் கணத்தில் அதைப் புரிந்துகொள்ளாவிட்டால் அதன் அர்த்தம் எப்போதைக்கும் நழுவிப் போய்விடும் என்பதற்கு ஸென் பல கதைகளை வைத்திருக்கிறது. மறைமுகமாக ஸென் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய மனதை இதனூடு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றது எனச் சொல்லலாம்.

அவ்வாறு கணங்களில் நழுவிப்போகும் அர்த்தங்களைக் கொண்ட ஸென்னை அதன் சுவடுகள் எதுவுமில்லாத மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தும்போது ஸென் ஆசிரியர்கள் கஷ்டப்பட்டிருக்கின்றார்கள். மேற்கிற்கு வந்த ஸென் ஆசிரியர்களில் முக்கியமானவரான ஸூசுகியிடம் ஒருமுறை 'ஏன் நீங்கள் ஸதோரியை (நிர்வாணம்) விளங்கப்படுத்துவதில்லை' எனக் கேட்கப்படுகிறது. அதற்கு ஸூசுகி 'என்னிடம் இருந்தால்தான் அதை விளங்கப்படுத்த முடியும், நிர்வாணம் என்னிடம் இல்லை, ஆகவே அதைப் பற்றிப் பேசுவதில்லை' என்கின்றார்.


ஞானமடைந்துவிட்டஸூசுகி ஏன் இப்படி நிர்வாணமடையவில்லை என்று சொல்கின்றார் என்பது பற்றி ஓஷோ பின்னர் விளங்கப்படுத்துகிறார். ஓஷோ தான் மாற்றமடைதல் (becoming) என்பது பற்றி பல இடங்களில் பேசினாலும் அது தவறான சொல் பிரயோகம் என்கின்றார். ஏதோ ஒன்றுக்காய் மாற்றமடையும் அல்லது உருமாறும் நாம் நம் இயல்பில் இருந்து இல்லாமல் போய்விடுகின்றோம் என்கின்றார். எதுவாகவோ இருக்கின்றோமோ அதுவே நாம். நாம் அதை விலத்தி வேறொன்றாக முயலும்போது நாம் இயல்பற்றவராகி விடுகின்றோம்.

ஒருவர் செல்வந்தராகஅதிகாரம்மிக்கவராக, கல்வி கற்றவராக மாற்றமடைய முடியும் ஆனால் ஒருபோதும் அவை எதுவும் ஒருவரின் இயல்பூக்கங்கள் அல்ல என்கின்றார். அதுபோலவே பரிநிர்வாணமடைந்த எவரும் ஞானத்தை தன்னகத்தை வைத்திருக்க அதுவொன்றும் 'பொருள்'அல்ல என்கின்றார் ஓஷோ. அதனால் ஷூகியிடம் ஏன் நீங்கள் ஞானமடைவதைப் பற்றி பேசுவதில்லை என்று கேட்கப்பட்டபோது 'நான் ஞானமடையவில்லை, அதனால் பேச முடியவில்லை' என்கின்றார்.
ஞானத்தை ஒரு பொருளாக, தன்னிலிருந்து விலத்தி உருமாறுவதாக எண்ணிக்கொள்ளும் கொள்ளும் ஒருவரே தன்னை ஞானமடைந்தவராக முன்வைப்பார்.

ஸூசுகி கூட, 'நான் நிர்வாணமடைந்துவிட்டேன். என்னால் அனுபவங்களினூடாக அதைச் சொல்லமுடியாது. ஆனால் அது எளிதானது' என்று சொல்லியிருக்கமுடியும். அது ஞானமடைந்தவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் ஸுடோ ஆசிரியர்கள் சொல்வது. ஸூசுகி ஞானமடைந்து விட்டவர், எனவே அவர் உண்மையைத்தான் சொல்வார். அதே வேளை தன்முனைப்ப்புக்களால் நிறைந்திருக்கும் மேற்குலத்தவர்க்கு, இப்படிச் சொன்னதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள கடினமாக இருந்திருக்கும் என்கின்றார் ஓஷோ. 


ஞானமடையும்போது முதலில் ஒருவரிடம் இல்லாமற் போவது 'நான்' என்பது. அந்த 'நான்' இல்லாமற் போகும் ஒருவர் பின்னர் 'நான் ஞானமடைந்துவிட்டேன்' என எப்படிச் சொல்லமுடியும். இந்த ஞானம் அடைதல் என்பது ஒரு நீர்த்துளியானது கடலில் போய்ச் சேர்வது போன்றதாகும். அப்படி கடலோடு கடந்துவிட்ட துளி, ‘என்னிடம் கடல் இருக்கின்றதுஎன்று சொல்வது எவ்வளவு அபத்தமாக இருக்கும். அந்தத் துளியே கடல்தான்!

ஆகவேதான் 'நான்' என்பது இல்லாது போய் ஞானமடைந்துவிட்ட ஸூசுகியிடம் 'ஏன் ஞானமடைதல் பற்றி பேசுவதில்லை என்று கேட்கப்படும்போது, நான் ஞானமடையவில்லை' என்று அந்தக் கேள்வியைக் கடந்து போகின்றார். மேலும் ஸென் 'ஞானத்தை அடைதல் அல்லது அதைத் தன்னகத்தே வைத்திருத்தல்' என்பதை தொடர்ந்து நிராகரித்தபடியே வருகிறது.

நான் ஆசிரியராகக் கொள்கின்ற ஸென் மரபில் வந்த திக் தியாட் ஹானும் ஞானமடைந்தவர்தான். ஆனால் அவரிடம் ஞானமடைதல் பற்றியோ அல்லது அதனோடு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கோ வேறு வகையாகத்தான் பதிலளிப்பார். 'இந்த உலகின் மிகப் பெரும் அற்புதம் என்ன‌' என்று அவரிடம் கேட்டால், 'இங்கே இரண்டு கால்களும் நிலத்தில்பட நடப்பதுதான் எனக்குப் பெரும் அற்புதமாக இருக்கிறது' என்று எளிய உதாரணங்களால் நம்மை வழிமறிப்பார். இதென்ன பெரிய அதிசயமா, தாய் நம்மை மடைமாற்றுகின்றார் என்று சலிக்காது, சிறிய விடயங்கள் என்று கடந்துபோகின்றவைகளில் இருக்கும் பேரதிசயத்தைப் பார்க்க நாம் கற்றுக்கொண்டால் நாம் நமக்கான அமைதியையும் மகிழ்ச்சியையும் சிலவேளைகளில் கண்டடையக்கூடும். அதைத்தான் என் ஆசிரியரான தாய் நமக்கு அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

எத்தனங்கள் எதுவுமில்லாது நம் இயல்பிலே இருப்பது எவ்வளவு எளிதானது. ஆனால் எளிதுதான் மிகவும் கடினமாகவும் இந்த உலகில் இருக்கிறது. யேசு தண்ணீரில் நடந்தார் என்பதைவிட அவர் நிலத்தில் பாவப்பட்ட மக்களை இரட்சிப்பதற்காகப் பல்லாயிரம் மைல்களைக் கால்களால் நடந்தார் என்பதுதான் இயேசு செய்த சாதனை. புத்தர் நாற்பதில் ஞானமடைந்துவிட்டு, மேலும் 40 ஆண்டுகள் தான் அடைந்த அனுபவத்தை நமக்குப் போதிப்பதற்காய் இந்த உலகில் வாழ்ந்ததுதான் எனக்குப் பேரதிசயம்.

********

என் எண்ணங்களோடோ இதுவரை பயணித்த உங்களுக்கு மிக்க‌ நன்றி. உங்களுக்குரிய காலையோ அல்லது மாலையோ அல்லது நள்ளிரவோ எதுவாகினும் இனிதாகட்டும்.

இந்தக் குளிர்காலத்தில் எனது ரெயில் பத்திரமாக என்னைக் கொண்டு வந்து இறக்கிவிட்டது. இனி இன்னொருவனாக உருமாறும் எத்தனத்தோடு இந்தப் பெருநகரின் சுழல் வட்டத்துக்குள் செக்கு மாடு போல இழுபடுவேன்.

இதுவரை வாசித்த நீங்கள் கடைசிப் பந்தியையும் வாசித்துவிட்டு நம்மைப் போன்ற ஒருவன் எனச் சலித்துக் கொண்டால், நீங்கள் இன்னும் சின்ன விடயங்களின் பேரதியங்களைத் தவறவிடுகின்ற ஒருவராக இருக்கக்கூடும். கடைசிப் பந்தியை வாசித்துவிட்டும் உங்களின் உற்சாகம் குறையவில்லை என்றால் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்வதற்கு நிறையவுண்டு.

*****

(Oct  16)

 

இந்தப் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்கள்


வடகோவை வரதராஜன்:


எத்தனம்கள் எதுவுமின்றி எம் இயல்பில் இருப்பதுதான் எளிதானது மட்டுமல்ல .மகிழ்வானதும் கூட . எத்தனம்களை செய்யும் போது நாம் போலி முகமூடி அணிகிறோம் . அது எம் முகத்தை உறுத்துகிறது .இயல்பாக இருக்கிறவனுக்கு இந்த உறுத்தல் பெரும் கொடுமை

 

முருகேசு கனகலிங்கம்:


ஓஷோ வைப்பற்றிய குறிப்பிடல்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.ஜென்,தாவோ,சூபி யிசம் பற்றியெல்லாம் அவர் நிறையப் பேசியிருக்கிறார்.இவையெல்லாம் நுண்ணிய மன அனுபவங்கள் தாம்.எவரோடும் விவாதிப்பதற்கு இவைகளில் எதுவுமில்லை.அவ்வாறு (கற்ற)--புரிந்துகொண்ட ஒருவரை சந்திக்க நேர்ந்தால் அவரருகில் மௌனமாக அமர்ந்திருக்கவே என்னால் முடியும்.ஓஷோ வில் எனக்கு குறையுமுண்டு.உலகத்துத் தத்துவஞானங்களையெல்லாம் தேடித் தேடிக் கற்றிருக்கிறார்.ஆனால் தமிழின் பக்கம் அவர் தலை வைத்தும் படுக்கவில்லை.தமிழில் எண்ணற்ற ஞான நூல்கள் உள்ளன. பதினெண் சித்தர்கள், திருமூலர்,திருவள்ளுவர்,தாயுமானவர், பிற்கால ஞானிகள் பலரும் உள்ளனர்.அவை,அவருக்குக் கிட்டாத பொக்கிஷங்கள் என்றே நான் கூறுவேன்.ராமகிருஷ்ணரை,அரவிந்தரை,ரமணரை எல்லாம் தனது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் ஞானச் செல்வம் அவருக்குக் கிட்டவில்லை. நல்லது, நன்றி.

 

சுகிர்தா இனியா:


சக மனிதர்களின் மீது இவ்வளவு வன்மத்தை ஏன் கக்குகிறார்கள்? ஒருவரை ஒருவர் ஏன் பிராண்டிக் கொள்கிறார்கள்? இத்தனை வெறுப்பை சுமந்து கொண்டு அலையும் மனம் எப்படி நிம்மதியாக நித்திரை கொள்கிறது என்றெல்லாம் நேற்று பொதுவாக எண்ணிக் கொண்டிருந்தேன். மனிதர்களிடமிருந்து வெளிப்படும் வன்மம் வாழ்க்கையின் மீது ஒரு அவநம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கிறது. இந்த முகப்புத்தகம் ஒரு இளைப்பாறுதல், ஒரு அடைக்கலம் என்று இங்கே வந்த எனக்கு இப்போதெல்லாம் இதுவும் சராசரி மனிதர்களின் கூடாரமே என்று தோன்றுகிறது. எல்லா இடங்களிலும் போலவே இங்கேயும் மனிதர்கள் அதே சராசரித்தனத்துடன் தான் இருக்கிறார்கள். மனிதநேயமே அசாத்தியம் ஆகிவிட்டதோ என்ற அச்சம் மேவுகிறது. ஒருவர் வெறுப்பைக் கக்கினால் அது சங்கலித் தொடர் போல எல்லோரையும் பற்றிக் கொள்கிறதைக் கண்டு அதிர்ச்சியடைகிறேன். 


மனிதர்கள் தங்களைக் குறித்தே இருக்கிற தங்களுடைய ஆற்றாமையையோ அல்லது தங்களுடைய இயலாமையையோ எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்றால் எதிர்ப்படுபவர்களை எல்லாம் இப்படி ஒரு நிமிண்டல் அப்படி ஒரு நோண்டல். இது அவர்களுக்கு எந்த வித திருப்தியை அளிக்கிறது என்று என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இதையெல்லாம் பார்த்து மனித சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து இங்கே இருந்தும் ஓடிவிடலாம் என்று எண்ணும்போது இந்தக் காலையில் இளங்கோவின் இந்தப் பதிவு ஆறுதலாக இருக்கிறது. வெளி உலகைப் போலவே அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் நமக்கானவர்களை பொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றி இளங்கோ! தொடர்ந்து எழுதுங்கள்.

****************